Skip to Content

02. மந்திர ஜபம்

மந்திர ஜபம்

இறைவனை அடைய மேற்கொள்ளும் முயற்சிக்கு நிஷ்டை, தியானம், மந்திரம், ஜபம் ஆகியன உறுதுணையானவை. பகவான் ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம், நம் யோக மரபிலிருந்து மாறுபட்டது. எனினும், ‘யோகம்’ என்ற அளவில், மரபையே அஸ்திவாரமாகக் கொண்டது. ‘யோகங்களுக்கெல்லாம் மந்திரம் அவசியம்’ என்றாலும், சில யோக மார்க்கங்களுக்கு மந்திர உபாசனை ஜீவன் போன்றது. பக்தி மார்க்கங்களிலும், கர்ம யோகத்திலும் மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும், அவற்றில் தந்திர மார்க்கத்தைப் போல் மந்திரத்திற்கு முதலிடம் கொடுக்கப்படுவதில்லை.

‘ஓம்’ என்பதைப் ‘பிரணவ மந்திரம்’ என்பார்கள். பரம்பொருள் தன்னிலையிலிருந்து சிருஷ்டியை நோக்கி வந்து சப்த வடிவமாக மாறுவதை, ‘சப்த பிரம்மம்’ என்பார்கள். அது மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, சப்தமாக மாறும். முதல் கட்டத்தில் எழுப்பும் ஓசை ‘ஓம்’ என்று அழைக்கப்படுகிறது.

மந்திரங்கள் சக்தி வாய்ந்தவை. விஷக் கடியிலிருந்து, இந்தியா விடுதலை பெற்றது வரை மந்திர சக்தி பயன்படுத்தப்படுகின்றன. (ஸ்ரீ அரவிந்தர் இந்திய விடுதலைக்காக மந்திர சக்தியைப் பயன்படுத்தினார்). பாம்பால் தீண்டப்பட்ட ஒருவனைத் தரையில் கிடத்தி, அவனைச் சுற்றி வட்டமிட்டு விட்டு, ஒரு செப்புக் காலணாவை (1947-க்கு முன்) மேலே சுண்டி விட்டார் ஒரு மந்திரவாதி. அந்தக் காலணா கீழே விழவில்லை. எங்கேயோ மறைந்து போய்விட்டது. மந்திரவாதி மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கினார். சிறிது நேரத்தில் ஒரு நாகம் தன் தலையில் செப்புக் காலணாவை ஏந்திக் கொண்டு கடிப்பட்டவனை நோக்கி வேகமாக வந்து கடிவாயில் வாயை வைத்து விஷத்தை உறிஞ்சி எடுத்து விட்டு ஓடி மறைந்தது. அப்பொழுது அதன் தலையில் இருந்த காலணா விழுந்து உருண்டது. அடுத்த கணமே கடிபட்டவன் உறக்கத்தில் இருந்து விழித்தவனைப் போல எழுந்து உட்கார்ந்தான். மந்திரத்திற்கு அத்தகைய சக்தி உண்டு.

நம் மனத்தில் இரு பாகங்கள் உண்டு. ஒன்று நாம் அறிந்து செயல்படுவது. மற்றொன்று நாம் அறியாமல் இடையறாது செயல்பட்டுக்கொண்டு இருப்பது. இதை ஆங்கிலத்தில் ‘Subliminal mind’ என்பார்கள். இதுவே மந்திர சக்தி உறையும் இடமாகும். இது மனத்தின் சக்தி வாய்ந்த பகுதியாகும். நாம் கவனிக்காவிட்டாலும், தானே இயங்கி நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் பதிவு செய்து கொள்ளும் திறன் உடையது மனத்தின் இந்தப் பகுதி.

ஒரு கிரேக்கப் பேராசிரியர் நாள் தோறும் இலக்கியங்களை வாய்விட்டுப் படிப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். படிப்பறிவு இல்லாத அவருடைய வேலைக்காரி அப்பொழுதெல்லாம் அங்கு வேலை செய்வது வழக்கம். அவளுக்கு ஒரு தடவை ஜன்னி கண்ட பொழுது, பேராசிரியர் வாய்விட்டுப் படித்த நீண்ட இலக்கியப் பகுதிகளை எல்லாம் அவள் பாட்டுக்கு ‘மளமள’ வென்று சொல்ல ஆரம்பித்து விட்டாள்! அவளால் அது எப்படி முடிந்தது? உண்மையில் அவளுடைய அறிவோ, ஆற்றலோ அதற்குக் காரணம் இல்லை. அவளை அறியாமலே செயல்பட்டுக்கொண்டு இருக்கும் அவளுடைய மனத்தின் மற்றொரு பகுதி, பேராசிரியர் வாய்விட்டுப் படித்ததை எல்லாம் பதிவு செய்து கொண்டு, அவளுக்கு ஜன்னி கண்ட நேரத்தில் அதை ஒலி பரப்பி விட்டது!

ராஜன்பாபு ராஷ்டிரபதியாக இருந்த பொழுது அவரிடம் சம்ஸ்கிருதம் அறியாத ஒரு சமையற்காரரை அழைத்து வந்து சம்ஸ்கிருதத்தில் சில உயர்ந்த, கடினமான பகுதிகளைப் பற்றிக் கேட்கச் சொன்னார்கள். அதே போல ராஷ்டிரபதி அவரைக் கேட்க, அவர் ஒரு மகா பண்டிதரைப் போல சம்ஸ்கிருதத்திலேயே சிறப்பாகப் பதில் அளித்தார். அவருக்கு அது எப்படிச் சாத்தியமாயிற்று? அவர் யோக சித்தி பெற்ற ஓர் ஆந்திர பண்டிதரிடம் சமையற்காரராக இருந்தார். அப்பொழுது அந்தப் பண்டிதரின் பாண்டித்தியம் அவரை அறியாமலேயே அவரிடம் வந்து குடி புகுந்து விட்டது. மந்திர சக்தி உறையும் இடத்திற்குள்ள மகத்துவம் அது.

குரு சிஷ்யனுக்குச் செய்யும் அனுக்கிரகம் இப்பகுதியிலிருந்தே வருகின்றது. அதனால்தான் குரு தன் சிஷ்யனுக்கு எதையும் கொடுக்க முடிகின்றது. மேலும் சிஷ்யனுக்குள்ள பாவம் சரியாக இருந்தால், குருவை அறியாமலே அனுக்கிரகம் அவனை வந்து அடைகின்றது. அதற்கு இந்த சக்தியே காரணம்.

‘சுயமாக தம்முள்ளிருந்து உதயமாகும் எந்த ஆர்வத்திற்கும் மந்திர சக்தியுண்டு’ என்று கூறுகின்றார் அன்னை. ‘எப்பொருளை மனிதன் முழு ஆர்வத்துடன் நாடுகின்றானோ, அவன் அதுவாகவே மாறி விடுகின்றான்’ என்கிறது ‘கீதை’. அந்தப் பேராற்றல் உறையும் இடமும், மந்திர சக்தி உறையும் இடமும் ஒன்றே.

1920-ஆம் ஆண்டு வாக்கில் எஸ். துரைசாமி என்ற ஒரு பிரபல வழக்கறிஞர் ஸ்ரீ அரவிந்தரிடம் வந்து சேர்ந்து, பூரண யோகத்தை மேற்கொண்டு சாதகரானார். அவர் தன் பிள்ளைக்கு உபநயனம் செய்ய இருந்த சமயத்தில் ஸ்ரீ அரவிந்தரை அணுகி, தனக்கு ஒரு மந்திரத்தை உபதேசிக்கும்படி வேண்டினார். ஸ்ரீ அரவிந்தர் விஸ்வாமித்திர காயத்திரியைப் போல ஒரு புதிய காயத்திரியை எழுதிக் கொடுத்தார். அதுவே இன்று ‘ஸ்ரீ அரவிந்த காயத்ரி’ என வழங்கப்படுகின்றது.

ஸ்ரீ அரவிந்தர் தன்னைத் தேடி வந்து மந்திரம் கேட்பவர்களுக்கு, மந்திரங்களை வழங்கி இருக்கின்றார். வேறு சிலரிடம் அவர், ‘இந்த யோகத்திற்கு மந்திரம் தேவை இல்லை’ எனவும் தெரிவித்திருக்கின்றார். ‘ஸ்ரீ அரவிந்தரின் நாமங்களே மந்திரங்கள்’ என்கின்றார் அன்னை.

ஸ்ரீ அரவிந்தர், அன்னை எழுதிய எழுத்துக்கு - ஒவ்வொரு சொல்லுக்கும் - மந்திர சக்தி உண்டு.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆந்திர அரசில் செயலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவர், தீடீரென்று பாரிச வாயுவால் தாக்குண்டு படுத்த படுக்கையானார். உயிருள்ள கட்டையாகக் கிடந்த அவர், ஸ்ரீ அரவிந்தரைப் பற்றியும், அவருடைய எழுத்தின் மகிமையைப் பற்றியும் கேள்விப்பட்டு, ‘Life Divine’ என்ற நூலை வாங்கி வரச் செய்து, கல்லூரியில் பயிலும் தன் மகனை தன் அருகில் அமர்ந்து தினமும் வாய்விட்டு இருபது பக்கங்கள் வரை படிக்கச் சொல்லிக் கேட்டார். அதற்குப் பதினைந்தாவது நாள் அசைவற்ற அவருடைய உடலில் அசைவு ஏற்பட்டது. இருபதாவது நாள் அவர் முழு நலமும் பெற்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்து விட்டார்! சக்தி வாய்ந்த மருந்துகளுக்கெல்லாம் அசைந்து கொடுக்காத தந்தையின் பாரிச வாயு, ஸ்ரீ அரவிந்தரின் நூலில் சில பக்கங்களைப் படிக்கக் கேட்ட மாத்திரத்திலேயே நீங்கி விட்டதை எண்ணி வியந்த மகன், ஸ்ரீ அரவிந்தரின் எல்லா நூல்களையும் படிக்க முடிவு செய்தார். படித்தும் முடித்தார்.

அன்னையிடம் பலர் மந்திரம் எழுதிக் கொடுக்கும்படி கேட்டதுண்டு. அவர் பல முறை மந்திரங்களை எழுதியும் கொடுத்திருக்கின்றார். ஒரு சாதகர் இனம் தெரியாத யாரோ ஒருவர் தன்னை இம்சிப்பதாகவும், அதிலிருந்து தன்னை விடுவிக்கும்படியும் அன்னையிடம் வேண்டினார். ‘பகவான் ஸ்ரீ அரவிந்தருக்காக இந்த இம்சை என்னை விட்டுப் போக வேண்டும்’ என்ற பொருளில் (For the sake of Sri Aurobindo, may this trouble leave me) ஒரு மந்திரத்தை எழுதிக்கொடுத்து அவருக்கு இம்சையிலிருந்து விடுதலை அளித்தார் அன்னை.

மந்திரத்தை ஜபிக்கும் பொழுது மனம் ஒரு நிலையில் இருந்தால், மந்திரத்தின் முழுப் பலனும் கிடைக்கும். மனத்தின் நிலையைப் பொறுத்திருப்பது போலவே, மந்திரத்தின் பலன், ஜபிப்பவரின் மன நிலைக்கு ஏற்ப அமையும், ராமானுஜரின் குரு யாதவப் பிரகாசர், பிரம்ம ராக்ஷஸால் பீடிக்கப்பட்ட ஒரு பெண்ணை, அதனிடமிருந்து விடுதலை செய்வதற்காக மந்திர ஜபம் செய்தார். ஆனால் பலன் கிடைக்கவில்லை. அதே மந்திரத்தை ராமானுஜர் ஜபித்தவுடன், பிரம்ம ராக்ஷஸ் அப்பெண்ணை விட்டு விலகியது. மந்திரத்தின் பலன் மனத்தின் பவித்திரத்தையும் பொறுத்தது.

மந்திரங்களுக்கு ஜீவியம் உண்டு; ஜீவனும் உண்டு. ஒரு மந்திரத்தை ஜபத்திற்கு எடுத்துக்கொண்ட பிறகு அதனுடன் நமக்கு ஓர் உறவு ஏற்படுகிறது. நாளாக நாளாக அந்த உறவு வளர்கின்றது. நாம் அதை மறந்தாலும், அது நம்மை மறக்காத நிலை ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஏற்பட்டு விடுகின்றது. அதற்கு அமெரிக்கரான ராபர்ட்டின் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றை உதாரணமாகக் கொள்ளலாம்.

ராபர்ட் ஆசிரமத்திற்குத் திட்டமிட்டு வரவில்லை. தற்செயலாக வந்தார். வந்தவரை அன்னையின் அருள் ஆகர்ஷித்தது. பிறகு அவர் போகவில்லை. அன்னையையும், யோகத்தையும் பூரணமாக ஏற்றுக்கொண்டு ஆசிரமத்திலேயே தங்கி விட்டார். அவர் தீவிர ஈடுபாட்டால் வியக்கத்தக்க யோக பலன்களை விரைவிலேயே அடைந்தார். பல யோக சாதனைகளைச் செய்தார். அதனால் எப்பொழுதும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஒன்றரை ஆண்டு காலத்திலேயே ஓராயிரம் ஆண்டுகாலச் சாதனைகளைச் சந்தித்த அவருக்கு, திடீரென்று என்ன தோன்றிற்றோ தெரியவில்லை! ‘‘எனக்கு யோகம் வேண்டாம். வாழ்க்கைதான் வேண்டும்’’ என்று கூறிவிட்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். என்றாலும் அவரால் வாழ்க்கையில் முழுதுமாக ஒட்ட முடியவில்லை. அடிக்கடி அவர் பாண்டிச்சேரிக்கும் அமெரிக்காவுக்குமாக அலைக்கழிந்து கொண்டு இருந்தார்.

ஒரு நாள் ராபர்ட் கடலில் நீந்திக்கொண்டு இருந்தார். அப்பொழுது அவர் சற்று தூரத்தில் ஒரு பிரெஞ்சுக்காரர் நீருக்குள் மூழ்குவதைக் கண்டார். ராபர்ட் கடலில் மூழ்குபவர்களை மீட்பதில் சிறப்புப் பயிற்சி பெற்றவர் (life saving training). அவர் விரைந்து சென்று பிரெஞ்சுக்காரரை மீட்க முயன்றார். பிரெஞ்சுக்காரரோ அவரைத் தன் இரு கைகளாலும் சேர்த்து முண்ட முடியாதபடி அணைத்துக் கொண்டார். இப்பொழுது காப்பாற்றப் போனவரின் உயிருக்கே ஆபத்து! மரணம் கண்களுக்குத் தெரிந்தது. இனித்தப்பிக்க வழி இல்லை. பெற்ற பயிற்சியாலும் பலன் இல்லை.

அப்பொழுது ராபர்ட்டின் மனத்துள்ளிருந்து ஆரம்ப நாட்களில் அவர் தீவிரமாக ஜபித்த மந்திரம் MOTHER என்ற மந்திரம் - தானே ஜபிக்க ஆரம்பித்தது. ‘Mother’ என்று ஒரு தடவை சொன்னவுடன், பிரெஞ்சுக்காரர் பிடியைத் தளர்த்தி அவரை விடுதலை செய்தார். அதற்குப் பிறகு அவர் தன்னையும் காப்பாற்றிக் கொண்டு பிரெஞ்சுக்காரரையும் காப்பாற்றினார்.

அன்னை ஸ்ரீ அரவிந்தரை ‘பிரபோ’ (My lord) என்றே அழைப்பார். ‘என்னுள்ளிருந்து சுயமாக எழும் சொல் அதுவே’ என்று கூறுகின்றார் அன்னை. அதையே அன்னை தன் மந்திரமாகக் கருதுகின்றார்.

உலகத்துக்குப் பிரளயம் வருவதைப் போல, பூரண யோகிக்குள் உலகப் பிரளயத்தின் பிரதிபலிப்பாகக் கொந்தளிப்பு ஏற்படுவதுண்டு. மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரளயங்களுக்கோ கணக்கு வழக்கே இல்லை. அப்படிப்பட்ட சமயங்களில் மனம் நொறுங்கிப் போகும். வாழ்க்கையே வாளாக மாறிப் போர் தொடுக்கும். மீளவும் முடியாமல், மாளவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போலத் துடிக்கும் அந்த நேரத்தில், அன்னை மிகவும் விரும்பிப் பயன்படுத்திய மந்திரத்தை ஜபித்தால், தொல்லைகள் எல்லாம் இல்லைகளாகி மறைந்து போகும்.

அந்த மந்திரம், ‘‘ஓம் நமோ பகவதே’’ என்பதாகும்.

ஸ்ரீ அரவிந்தர் அருளிய மற்றொரு மந்திரம், ‘‘ஓம் ஆனந்தமயீ சைதன்யமயீ சத்யமயீ பரமே’’ என்பதாகும். இதற்கு ‘சச்சிதானந்த மந்திரம்’ என்று பெயர்.

‘‘ஓம் தத் சவித்துர் வரம் ரூபம் ஜோதிஹ் பரஸ்ய
தீ மஹி யந்யஹ் சத்யேன தீபயேத்’’

என்பது ஸ்ரீ அரவிந்தர் அருளிய காயத்ரி மந்திரமாகும்.

*********



book | by Dr. Radut