Skip to Content

01. தியானம்

தியானம்

‘புலன்களை அவித்து, மனத்தை ஒரு நிலைப்படுத்தி ஆத்மாவில் லயிப்பதே தியானம்’ எனச் சொல்லப்படுவதுண்டு. யோக சித்திக்குத் தியானம் ஒரு கருவியே என்றாலும், அந்தக் கருவியைக் கை வரச் செய்வது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கான பயிற்சிகள் பல. அவை சித்திப்பதற்காகும் காலமும் மிக நீண்டது. இவை காரணமாக, ‘தியானமே யோகம்’ என்று கருதும் ஒரு நிலை எழுவதும் இயற்கையே.

இருவர் தவம் செய்யக் கருதி ஒரு முனிவரை அணுகி, தங்கள் நோக்கத்தைக் கூறி உதவுமாறு வேண்டினர். இருபத்தைந்து ஆண்டு காலம் பிரம்மச்சரிய விரதத்தை அனுஷ்டித்த பிறகு தம்மை வந்து சந்திக்கும்படி பணித்தார் முனிவர். அவர்களும் அப்படியே இருபத்தைந்து ஆண்டு காலம் பிரம்மச்சரிய விரதத்தைக் கடுமையாகக் கடைப்பிடித்த பின்னர், முனிவரைச் சந்தித்துத் தங்கள் சாதனையைக் கூறினார்கள்.

முனிவர் கட்டை விரலால் தன் மார்பைச் சுட்டிக்காட்டினார். அது ஒருவனுக்கு ஞானோபதேசமாகத் தோன்றியது. ‘அனைத்துக்கும் மூலமாக இருப்பது உடல். எனவே முனிவர் உடலைப் பேணி வாழச் சொல்கிறார்’ என உணர்ந்து, திருப்தியுடன் சென்றான் அவன். மற்றொருவன் குதர்க்கப் பேர்வழி. ‘‘உடல் அழியக் கூடியது. அதைப் பேணுவதும், பெரிது படுத்துவதும் அறிவீனம் அல்லவா?’’ என்று ஐயத்துடன் கேட்டான் அவன். ‘‘குருவின் கட்டளையை ஏற்கும் பக்குவம் உனக்கு இன்னும் வரவில்லை. நீ மேலும் ஓர் இருபத்தைந்து ஆண்டு காலம் பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்த பிறகு மறுபடியும் வா!’’ என்று கூறி அவனை அனுப்பி விட்டார் முனிவர்.

அவன் மேலும் இருபத்தைந்து ஆண்டு காலம் கழித்துப் பக்குவப்பட்டுத் திரும்பி வந்தால், முனிவரும் அவனைச் சீடனாக ஏற்றுக்கொண்டால், அதற்கப்புறம் அவன் பெற வேண்டிய தொடக்க காலப் பயிற்சிகளில் தியானம் ஒன்றாக இருக்கும். அதிலிருந்து அவனுக்கு யோகம் சித்தியாகப் பல்லாண்டு காலம் ஆகலாம்.

அத்தகைய யோக பலனை ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் தங்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட அன்பர்களுக்கு, ஆரம்பத்திலேயே அளித்து விடுகின்றார்கள். ஸ்ரீ அரவிந்தாசிரமத்திலும், அதைச் சார்ந்த இடங்களிலும் தியானம் இயல்பாக அமைந்திருக்கின்றது. அங்கு வருபவர்கள் தியானத்தை அவாவினால், பெரிய முயற்சிகள் ஏதுமின்றிச் சுலபமாகவும், முழுமையாகவும் கிடைக்கின்றது.

நாற்பது வயதான ஆசிரியை ஒருவருக்குக் கண்ணில் கடுமையான கோளாறு. கோளாறு இன்று நேற்று வந்ததல்ல; அவருடைய முப்பதாவது வயதிலேயே வந்துவிட்டது. டாக்டர் அவரை அறுவைசிகிச்சை செய்து கொள்ளும்படி கூறினார். அவருக்கு அறுவை செய்து கொள்ள விருப்பம் இல்லை. ஒத்திப்போட்டுக்கொண்டே வந்தார். அவர் நாற்பது வயதை நெருங்கியபோது இனி ஒத்திப்போட இயலாத அளவுக்கு வியாதி முற்றிவிட்டது. அறுவைச் சிகிச்சையை உடனடியாகச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். டாக்டரைச் சந்தித்தார். அறுவைச் சிகிச்சை செய்ய ஒரு நாள் குறிக்கப்பட்டது.

ஆசிரியைக்கு அறுவைச்சிகிச்சை நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற கவலை; ‘கண் பார்வை சரியாகவேண்டுமே’ என்ற தவிப்பு. இரண்டையும் சுமந்து கொண்டு ஆசிரமத்திற்கு வந்தார். சமாதியைத் தரிசித்தார். அவருக்கு நெஞ்சில் இருந்த சுமை குறைந்த மாதிரி இருந்தது. அவர் அங்கு பிரார்த்தனை செய்யத்தான் வந்தார். தியானம் செய்ய வரவில்லை. அங்குள்ள அமைதியான சூழ்நிலையில் தியானம் கலந்திருக்கின்றது. அது அவருக்குத் தெரியாது. ஆனால் மற்றொன்று புரிந்தது. திடீரென்று தன்னில் தான் ஒடுங்கிப் போவதையும், பிறகு அந்த ‘தானும்’ இல்லாமல் போவதையும், அன்னையின் அருட்சக்தி தன் நெஞ்சமெல்லாம் ஒளி வெள்ளமாகப் பரவி வருவதையும் உணர்ந்தார். அதற்குப் பிறகு அந்த உணர்வும் இல்லை; அவரும் இல்லை.

நீண்ட நேரத்திற்குப் பிறகு அவர் விடுபட்டார் - எல்லாத் துன்பங்களில் இருந்தும். கண்களைத் திறந்தார். தனக்கு ஒரு வழி திறக்கப்பட்டு விட்டதை உணர்வில் கண்டார்.

இந்த எதுவும் அவர் விருப்பத்தோடு நடக்கவில்லை. ‘தியானம் செய்ய வேண்டும்’ என்றுகூட அவர் சிந்திக்கவில்லை. தியானம் கலந்திருக்கின்ற அந்தச் சூழ்நிலை அவரைத் தன் வயப்படுத்தி, தியானத்தைக் கூட்டி வைத்துவிட்டது.

ஒவ்வொரு தலத்திற்கும் ஒரு சிறப்புண்டு. ஸ்ரீ அரவிந்தாசிரமச் சூழலுக்கு தியானம் ஒரு தனிச்சிறப்பு. அது எங்கும் காணக் கிடைக்காத பெரும் சிறப்பு.

அவர் ஆசிரமத்திற்குப் போய் வந்தபிறகு டாக்டரைச் சந்தித்தார். அறுவைச் சிகிச்சைக்கு முன்பு ஒரு பரிசோதனை உண்டு. அந்தப் பரிசோதனையில் அறுவை செய்ய வேண்டிய அபாயக் கட்டத்தில் அவர் கண் இல்லை என்று தெரிந்தது. ‘‘இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது?’’ என்று வியப்புடன் கேட்டார் டாக்டர்.

‘‘சமாதி தரிசனத்தாலும் தியானத்தாலும் ஏற்பட்டது’’ என்றார் ஆசிரியை.

ஜீவாத்மா பிறவிச் சூழலிலிருந்து விடுபட்டு பரமாத்மாவை அடைவதை மோட்சம் என்பார்கள். ஜீவாத்மா மனத்தில் மனோமய புருஷனாகவும், நாடியில் பிராணமய புருஷனாகவும், உடலில் அன்னமய புருஷனாகவும் உறைகின்றது. தியானத்தின் சிறப்பால் பிரகிருதியின் பிடியில் உள்ள புருஷனைப் பிரித்து, அதன் மூலம் ஜீவாத்மாவுக்கு விடுதலை அளித்து, மோட்சத்தில் கொண்டு சேர்ப்பது யோக மார்க்கம். அத்தகைய ஆற்றல் படைத்த தியானத்தைச் சாதகர்கள் நாடுவதும், கூடுவதும் இயல்பே.

கிரகஸ்தனுடைய இயலாமையை அறிந்தவர் அன்னை. அதனால் அவன் பிரார்த்தனை செய்வதற்கு முன்னாலேயே அவனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து விடுகின்றார் அவர். சாதகனைப் பற்றிய விஷயம் சற்று வேறுபட்டது. அவன் சங்கற்பம் செய்து கொள்ளும் பொழுதே, அதன் பலனை முழுதுமாகக் கொடுத்து விடுகின்றார் அன்னை. அதாவது, அவன் தீர்மானத்தில் அடுத்த செயலாகப் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே தியானத்தைக் கூடிவரச் செய்கின்றார் அன்னை. இறைவனைத் தேடி மனிதன் செல்லும் உலக இயல்புக்கு மாறாக, மனிதனைத் தேடி வரும் இறை அவதாரமாக அன்னையின் இலட்சியம் அமைந்துள்ளதால், அவரிடம் அத்தகையச் சிறப்பு நிறைந்து இருக்கின்றது. சாதகனுடைய மனம் தியானத்தை நாடினால், தியானம் அவனை ஆட்கொள்கிறது. தானே வந்து சாதகனை ஆட்கொள்ளும் தியானம், மீண்டும் மீண்டும் தானே வந்து அவனை ஆட்கொண்டு தன் சிறப்பை உணர்த்துகின்றது.

தியானத்தில் பல வகைகள் உண்டு. அவற்றில் மிக உயர்வாகக் கருதப்படுவது தானே வரும் தியானம். அவ்வாறு தானே வரும் தியானம், பொதுவாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருவது வழக்கம். நாமே தேடிப் பெறும் தியானங்களும் உண்டு. ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் எழுதியவற்றைப் படித்தால் தியானம் அமையும். தியானத்தைப் பெறுவதற்கு அவர்களுடைய நூல்களைப் பயில்வது ஒரு முறை. இறைவன் மீது பக்தி பெருகி உணர்ச்சி மயமானவுடன், அவ்வுணர்ச்சிப் பெருக்கு தியானமாக மாறி நிலைப்பது மற்றொரு வகை. ஈடுபாடு மிகுந்த சேவையும் தியானத்தைத் தோற்றுவிக்கும். அதே போல நாம ஸ்மரணையும் தியானத்தைக் கூட்டுவிக்கும். மந்திர ஜபத்திற்கும் அத்திறன் உண்டு.

தியானத்தின் நிலைகள் பல. புலன்களை விட்டுப் பிரிந்து தன்னுள் லயிப்பது முதற்கட்டம். உள்ளே லயித்த மனம் விழிப்படைந்து, தெளிந்த திறத்துடன் புற உலகைப் புறக்கணித்து, சிந்தையில் ஆழ்வது முதற் கட்டத்தின் ஒரு நிலை. அதற்கு அடுத்த கட்டமாக மனித சிருஷ்டியின் உயர் சிறப்பை உணர்த்துவது ஒரு நிலை. அவற்றுக்கெல்லாம் சிகரமாக இருப்பது துரிய நிலை.

பொதுவாக, யோக மார்க்கத்தில் தியானம் சமாதி நிலைக்குக் கொண்டு செல்லும். சமாதி நிலையில் பல வகைகள் உண்டு. அவற்றுள் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேறுபாடு (விகல்பம்) அழிந்து போவதால் ஏற்படும் சமாதி நிலையே - நிர்விகல்பச் சமாதி நிலையே - தலை சிறந்ததாகும்.

ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம் இவ்விஷயத்தில் மாறுபட்டது. அது சமாதி நிலையை நாடுவதில்லை. தியானத்தின் சிறப்பைப் பூரணமாக உணர்ந்து ஏற்றுக்கொண்டாலும், அங்கு தியானத்திற்கு முதல் இடம் கொடுக்கப்படுவதில்லை. ‘இறைவனை அடைய வேண்டும்’ என்ற ஆர்வத்திற்கே அங்கு முதலிடம். இடையறாத இறையுணர்வு, இறை நினைவு, இறைவனை நினைத்து செயல்படும் தன்மை, ‘தான்’ என்னும் உணர்வை நீக்கி, தான் இறைவனின் கருவி என்று உணரும் மனப்பான்மை ஆகியவையே அங்கு தியானத்தைவிட உயர்ந்த இடத்தைப் பெறுகின்றன.

‘நாம் செய்யும் செயல்கள் எல்லாம் அவன் செயல்கள்’ என உணர்ந்து, அர்ப்பணித்துச் செய்யும் செயலுக்கே தலையாய இடத்தை பூரண யோகத்தில் அளிக்கின்றார் அன்னை.

இயற்கையாகிய பிரகிருதியும், இறைவனாகிய புருஷனும் ஒருவரோடு ஒருவர் பின்னிக் கொண்டு இருக்கின்றனர். இயற்கையின் பிடியிலிருந்து இறைவனைப் பிரிப்பதையே பெரிய யோக முயற்சியாக எண்ணி அதை மேற்கொள்கின்றனர் தவசிகள். பிரிந்த பிறகு கிடைக்கும் பலன் மோட்சம். இதுவே யோக மார்க்கங்களின் குறிக்கோள்.

பரிபூரண யோகத்தில் மோட்சம் குறிக்கோள் இல்லை. இயற்கையும், இறைவனும் புருஷப்பிரகிருதிகளாகப் பின்னிக் கொண்டிருப்பது ஒரு நிலையானால், மற்றொரு நிலையில் இயற்கை சக்தியாகவும், இறைவன் ஈஸ்வரனாகவும் (அதாவது ஈஸ்வரசக்தியாக) இருக்கின்றார்கள். புருஷனைப் பிரகிருதியின் பிடியிலிருந்து பிரித்தால், யோகிக்கு மோட்சம் கிடைக்கின்றது. ஈஸ்வரனைச் சக்தியிலிருந்து பிரித்து யோக சித்தி பெற்றால், வாழ்வில் யோகி சக்தியின் கருவியாக மாறி, அதன் மூலம் இறைவனின் திருவுள்ளம் பூவுலக வாழ்வில் பூர்த்தி பெற உதவுகின்றான்.

அத்தகைய யோக வாழ்க்கையாக சாதகனின் வாழ்க்கை மாறுவதற்கு, அவன் மேற்கொள்ள வேண்டிய வழி முறைகளை அன்னை நமக்கு அளித்திருக்கின்றார். அவற்றில் சில:

  1. அறிவை நம்பாதே. அறிவைப் புறக்கணித்து ஆன்மாவை நம்பிச் செயல்படு.
  2. செய்யும் காரியங்களில் உடலுக்குச் சுகம் தேடாதே.
  3. தனக்குப் பிடித்த காரியங்களையே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விட்டு, தனக்கேற்பட்டு இருக்கும் வேலையில் முழு ஆர்வத்தை வெளிப்படுத்தி அக்கறையாகச் செயல்படு.
  4. ஒருவரை உன்னால் திருத்த முடியாது போனால், அவரைப் பற்றிக் குறை கூறாதே. அவரைப் பற்றிக் குறையாக மனத்தில் நினைக்காதே.
  5. ‘புற நிகழ்ச்சிகள் உன் அக உணர்வைப் பிரதிபலிக்கின்றன’ என்பதைத் தெரிந்து கொள்.
  6. கணந்தோறும் ஒவ்வொரு செயலிலும் எந்த அளவுக்கு இறைவனை நோக்கி உன்னால் செல்ல முடியுமோ, அந்த அளவை எட்டுவதற்கு முழுமையாக முயற்சி செய்.
  7. பேசுவதற்கு முன்னாலும், செயலில் ஈடுபடுவதற்கு முன்னாலும், உண்பதற்கு முன்னாலும், உறங்குவதற்கு முன்னாலும் இறைவனை நினைந்து அர்ப்பணித்து விட்டுச் செயல்படு.

மேற்கூறியவாறு சாதகன் செயல்பட்டால், அவன் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் அவனுக்குத் தியானத்தின் தகுதியை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. ‘தியானம்’ என்ற ஒன்று அவனுக்குத் தனியாகத் தேவை இல்லை. அவனுடைய இயல்பான மன நிலை, தியான நிலையாக மாறும்.

அதுவே மனித வாழ்வு, தெய்விக வாழ்வாக மாறுவதற்குரிய அடிப்படையாகும்.

**********book | by Dr. Radut