Skip to Content

அன்னையின் ஆசிரம வாழ்வில்

அன்னையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய உயர்ந்த அம்சங்களில் முக்கியமான இரண்டைச் சொல்ல வேண்டுமானால், அவர்கள் பகவானிடம் கொண்டிருந்த நன்றியுணர்வு, அவரைச் சரணடைந்த பாங்கு ஆகிய இரண்டையும் பிரதானமாகக் குறிப்பிட வேண்டும்.

நமக்கு நன்றியறிதல் எனில் ஒருவர் செய்த உதவிக்குப் பிரதிபலனாக நாம் உணர்வதை நன்றி என்கிறோம்.

'இறைவன் வாழ்வில் வெளிப்படுவதை',

அன்னை நன்றி என்கிறார். பகவானை அன்னை ஒரு முனிவராகவோ, ரிஷியாகவோ கருதாமல் இறைவனின் ஜோதி உலகுக்கு வரும் வாயிலாகக் கருதினார். அவர் வசிக்கும் வீட்டை அன்னைக்குக் காட்டியவர் இறைவன் திருவுள்ளத்தை வெளிப்படுத்தும் வாயிலாகச்   செயல்பட்டார் எனக் கொண்டார். இதோ இந்த வீட்டில் அரவிந்தர் இருக்கிறார் என்று அந்த வழிப்போக்கர் சொன்ன சொற்கள், அன்னையின் அந்தராத்மாவில் ஒளிப் பொறியாக வந்து, தொட்டு, உள்ளே நுழைந்து, நிரந்தரமாகத் தங்கியதால், நிரந்தரமாக அன்னை அந்த வழிப்போக்கருக்கு நன்றியை மாதம் தவறாமல் செலுத்தினார்.

வழிப்போக்கரின் சொல்லில் இறைவனை அன்னை கண்டார். பகவான் வீட்டினுள் நுழைந்து மாடிக்குப் போய் அவரைக் காணப்படிக்கட்டை நெருங்கும் நேரம், பகவான் எழுந்து படிக்கட்டின் தலைப்புக்கு வந்த பொழுது, அவரைப் பார்த்த கணமே,

'இவரே நான் கண்ட கிருஷ்ணா',

என அறிந்தார். பார்த்த மாத்திரத்தில், சிந்தனை செய்யாமல், தயங்காமல், ஆயத்தமின்றி அறிவதும், அறிந்து செயல்படுவதும் ஆன்மாவின் பாங்கு. ஜீவாத்மா பரமாத்மாவைப் பார்த்து கலந்த நேரம் அது. நூறாண்டாகப் பெய்யாத மழை புதுவையில் அப்பொழுது பெய்தது. மாடிக்குப் போய், கணவரும், பகவானும் மேஜையருகே நாற்காலிகளில் உட்கார்ந்து பேசும்பொழுது, மேல்நாட்டார் வழக்கத்திலேயே இல்லாதது போல் அன்னை தரையில் உட்கார்ந்தார். பகவான் எதிரே அவரால் நாற்காலியில் உட்கார முடியவில்லை. பேச்சு நடக்கும்பொழுது அகண்ட மௌனத்தை அன்னைக்கு பகவான் வழங்கினார். கடைசி வரை தம்மைவிட்டு அம்மௌனம் அகலவில்லை என்று கூறியுள்ளார். பேச்சு முடிந்து எழுந்தவுடன், சாஷ்டாங்கமாக அன்னை பகவானைத் தரையில் விழுந்து வணங்கினார். அப்படியொரு பழக்கம் நம் நாட்டிலிருப்பதாக அன்னை அன்று அறியார்.

சரணாகதி முதிர்ந்து உடலின் ஆழத்திற்குப் போனதை முதலில் அன்னையிடம் கண்டேன்

என்றார் பகவான். அன்று மார்ச் 29, 1914, அன்னை தன் டைரியில், ஆயிரக்கணக்கான ஜீவன்கள் இருளில் மூழ்கியிருந்தாலும் ஸ்ரீஅரவிந்தர் உலகில் இருப்பதால், ஒளிமயமான அவருருவம் நம்மிடையே இருப்பதால் இறைவன் திருவுள்ளம் பூமியில் பூர்த்தியாகும் என்பதில் ஐயமில்லை என எழுதினார்.

ஆசிரம வீடு ஒன்றில் இரு குடும்பங்கள் வசித்தன. மாடி வீட்டுக் குழந்தை மீது கீழ்வீட்டுப் பெண்ணுக்குப் பிரியம். தினமும் குழந்தையோடு வந்து விளையாடுவார். குழந்தைக்கு வயிற்றுப் போக்கு. ஆசிரம டாக்டர் வைத்தியம் செய்கிறார். 10 நாட்களாயின. பலனில்லை. 10-ஆம் நாள் கீழ்வீட்டுப் பெண், குழந்தையைப் பார்க்க வந்தவர் குழந்தை துவண்டு கிடப்பதைக் கண்டு திகைத்து, கண்கள் வருத்தத்தால் நிறைந்துவிட்டதைப் பார்த்து, அவருடனிருந்தவர் நேரே விளையாட்டு மைதானத்திற்குப் போனார். அன்னை அப்பொழுது அங்கிருந்தார். குழந்தையின் நிலைமையை அன்னையிடம் சொன்னார்.

அதே நிமிஷம் குழந்தை துள்ளி எழுந்தான்.

வேறொருவர் டாக்டரிடம் சென்று, அவரை அழைத்து வந்தார். வந்த டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. பத்து நாளாகப் பலிக்காத மருந்து அன்னையிடம் கூறிய அதே நேரம் பலித்தது என்பது டாக்டருக்கு வியப்பாயிற்று.

அன்னைக்குச் செய்தி எட்டியவுடன் பிரச்சினை இதுபோல்

தீருவதே அன்னை தடையின்றி செயல்படுவதாகும்.

மனிதன் அறிவால் செயல்படுகிறான், அன்னைக்கு அறிவு தடை; உணர்வால் செயல்படுகிறான், உணர்வு தடை; பழக்கத்தால் செயல்படுகிறான் அது பெருந்தடை. இவற்றுள் உணர்வின் தடையே மிகச் சிறியது. தடையின்றி ஆன்மாவால் எப்படிச் செயல்படுவது?

குழந்தை அவதிப்படுகிறான், என்ன செய்தால் சரி என்று சிந்தித்தால், அது அறிவால் செயல்படுவதாகும். அவன் வேதனை எனக்குத் தாங்கவில்லை என்றால் உணர்வால் செயல்படுவதாகும். பிரச்சினை என்றால் டாக்டரைக் கூப்பிடுவது பழக்கம் என்றால் உடலால் செயல்படுவதாகும். குழந்தையைப் பார்த்து, 'எனக்கு எதுவுமே தோன்றவில்லை, அன்னை நினைவுதான் வந்தது', என்றால் ஆன்மாவால் செயல்படுவதாகும். அப்படி நடக்கும்பொழுது அன்னைக்கு யாரும் போய்ச் சொல்ல வேண்டியதில்லை. கடிதம் எழுத வேண்டியதில்லை. விழிப்புற்ற ஆன்மா அன்னைக்குச் சொல்லும். பிரச்சினை உடனே தீரும். இயல்பாக வாழ்வின் அஸ்திவாரத்தை அறிவு, உணர்வு, செயலிலிருந்து, ஆன்மாவுக்கு மாற்றுவதை யோகம் எனவும், அம்முறையை, சரணாகதி எனவும் அறிகிறோம்.

அன்னையிடம் கூறியவுடன் குழந்தை எழுந்துவிட்டான் என்பது பலனைப் பெறுவதாகும். இப்பலனை மட்டும் பெறுவதால், ஆன்மாவுக்குப் பலனில்லை. அன்னைக்குச் சக்தியுண்டு என அறிய இது ஒரு சந்தர்ப்பம் ஆகிறது. சத்திய ஜீவிய லோகமாகிய மகர லோகத்திலிருந்து, அன்னை நம்மிடையே வந்து வாழ்வதன் குறிக்கோள் என்ன? நம் குறைகளை டாக்டர் வரும் முன் தீர்க்கவா? இல்லை. அன்னை சக்தி நம்முள் இருப்பதை நாம் அறிவதில்லை. அதை அறிவிக்க கீதையும், வேதமும் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. வேதம் வேத இரகஸ்யமாக இருந்தது. பிறருக்கு இரகஸ்யமாக வைக்கப்பட்டால், அது அனைவருக்கும் இரகஸ்யமாகி விடும் என்பதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. வேத ஞானம் மனிதனை எட்டவில்லை. அதை சாஸ்திரமாகச் சொல்வதில் இதுவரை பலன் ஏற்படவில்லை. அவதாரங்களும் அப்பலனை மனிதனுக்குத்    தரவில்லை. அதைத் தம் வாழ்வு மூலம் நம்முள் எழுப்ப அன்னை நம்மிடையே வாழ்ந்து, நாம் அறியும்படி செயல்படுகிறார். குழந்தை எழுந்தவுடன், நாம் ஆன்மாவால் அன்னையை அழைக்கக் கற்றுக் கொண்டால், அன்னையின் அவதாரம் பூர்த்தியாகும். அதைச் செய்தவருக்கு அன்னை தவறாது தரிசனமளித்துள்ளார்.

பலன் முடிவல்ல. பலனைத் தரும் அன்னையே முடிவு.

கடுந்தவம் புரிந்து பெறும் தெய்வ தரிசனம் ஆன்ம விழிப்போடு அரைக்கணம் அன்னையை நினைத்தால் கிடைக்கிறது என்பதை மனிதனுக்குணர்த்த அன்னை எடுத்த அவதாரம், நம் நினைவால், நினைவின் அடிப்படையில் ஏற்பட்ட செயலால் பூர்த்தியாகிறது. யோக வாழ்வுக்கு அடிப்படை அன்னை நினைவால் எழும் செயலாகும்.

அன்னையை நாம் அறிவோம், ஆனால் அவருடைய சக்தியை அறியோம்.

அன்னையை நாம் மகான்களை வணங்குவது போல் வணங்குகிறோம்.

கோவிலில் கண் மூடி, கை கூப்பித் தொழுவதைப்போல் நாம் அன்னையை வணங்குகிறோம்.

கோவிலைப் பிரதட்சிணம் வருவதுபோல் சமாதியை, ஆசிரமத்தை வலம் வருபவருண்டு.

கீதையைப் பாராயணம் செய்வதுபோல் சாவித்திரியைப் படிக்கிறோம்.

திருவிழாவுக்கு வருவதைப்போல் சமாதிக்கும், தரிசனத்திற்கும் வருகிறோம்.

மந்திரம் உச்சரிக்கப் பிரியப்படுகிறோம்.

'ஓம் நமோ பகவதே' சொல்வது ஆத்ம திருப்தியளிக்கிறது.

தேங்காய் உடைப்பதைப்போல் வத்தி கொளுத்துகிறோம்.

இவையெல்லாம் மகான்களும், கோவில்களும் தரும் பலனைவிட அதிகப் பலன் தரும். எந்தக் கோவிலில் செய்த பிரார்த்தனையும் பலிக்காதபோது, இங்கு பலிக்கும். 'இது கர்மவினை- அனுபவிக்க வேண்டும்', என குருமார்கள், பீடாதிபதிகள், ஜோஸ்யர்கள், மகான்கள், சாமியார்கள், சித்த புருஷர்கள், யோகிகள் சொல்லிய வினையும் தீரும். சிறு வயதிலிருந்து ஜெபம் செய்த பெரிய மந்திரங்களால் பலிக்காதது பலிக்கும்.

ஆனால், இவை எதுவும் அன்னை சக்தியைப் பெற்றுத் தரா, அன்னை சக்தி உலக அளவை விடப் பெரியது, அது நமக்குரியது, பெறுவது சரி, முறை, நல்லது.

1946 முதல் 1948 வரை பஞ்சாப், பீகார், டெல்லி, வங்காளம் ஆகிய இடங்களில் இந்து முஸ்லீம் கலவரத்தால் அழிந்து 50 இலட்சம் பேர்கள் இறந்தனர். பேய் ஆட்டமாடிற்று. அந்த நேரம் கல்கத்தாவில் கடை வியாபாரம் செய்த பக்தர் ஒருவருக்கு அவருடைய வீதியில் கொள்ளை போகிறது என்ற செய்தி வந்தது. உயிருக்கே ஆபத்து என்றபொழுது உடைமையை நினைக்க நேரமில்லை. ஆனாலும் நினைக்காமலிருக்க முடியவில்லை. போலீஸ் போய் இராணுவம் வந்தது, கொள்ளை, சூறை, தீ, கலவரம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அங்கு போய் 'கடை எப்படியிருக்கிறது எனப் பார்க்கலாம்' எனவும் நினைக்க முடியவில்லை. ஒரு வாரம் கழித்துக் கலவரம் அடங்கிய பின், பக்தர் தம் கடைக்குப் போக நினைத்தார். எதிர் வரிசையைக் காணோம். தீயும், கொள்ளையும் பக்கத்துக் கடையோடு நின்றுவிட்டது.

அன்னை அசுர சூறாவளியைத் தடுத்ததுபோல் ஆர்ப்பாட்டத்தைத் தடுத்துவிட்டார்.

தடுத்தது சக்தி. மந்திரமல்ல, ஆசனமல்ல, உடைத்த தேங்காயில்லை, பாராயணமில்லை, சாஷ்டாங்க நமஸ்காரமில்லை.

சக்தியை அழைத்துச் செயல்பட வைத்தது நம்பிக்கையோடு கூடிய பக்தி.

நாம் செய்வனவெல்லாம் மூட நம்பிக்கைக்குரியன, மடச் சாம்பிராணி எனத் தானேப் பட்டம் கட்டிக் கொள்வது, நடைப்பிணமாக ஊர்வலம் வருவது, மூட நம்பிக்கையை வழிபடும் தெய்வமாக ஏற்பது.

'பக்தியும் நம்பிக்கையும் சக்திக்குரியன.'

ரவீந்திரநாத் தாகூர் ஒருவருடைய இசையைக் கேட்டு மெய் மறந்து பாராட்டுகிறார் என்பது வசிஷ்டர் வாயால் 'பிரம்ம ரிஷி' எனப் பட்டம் வாங்குவது. அப்படிப்பட்ட ஒருவரை பகவான் தன் மகன்போல் நடத்தினார். சாதகர்களிடமிருந்து வரும் கடிதத்தை நிறுத்திய பின்னரும் அவருக்கு கடிதம் எழுதும் அனுமதி அளித்தார். அவர் நேருவின் நண்பர். 1934-இல் நேரு பாண்டிக்கு வந்தபொழுது தம் நண்பரைச் சந்திக்க முயன்றபொழுது, ஆசிரமத்தை விட்டு வெளியே போகக் கூடாது என்பதால் அவருக்கு அனுமதியில்லை.

வேறொரு பெண்ணின் இசையையும் ரவீந்திரர் கேட்டு தன் வயமிழப்பார். 12 பெண்களே ஆசிரமத்திலிருந்த காலம் அது. அவர் அன்னையை நாடி ஆசிரமம் வந்தார். ஆசிரமக் கட்டிடத்தில் நுழைந்தவுடன் ஆழ்ந்த மௌனம் அவரை ஈர்த்தது. ஒரு வார்த்தை பேசினாலும் நம் காதிலேயே கரகரப்பாக விழுகிறதே, இந்த இடத்தில் எப்படி வாயைத் திறந்து பேச முடியும் என்று நினைத்தார்.

அன்னையைக் காண்பது ஆத்ம தரிசனம் பெறுவது.

 

அவரைக் காணும் நேரம் காலத்தைக் கடந்த நேரம்,

என்பதை அவர் அன்னையைக் காணும்வரை அறியவில்லை. அன்னையிடம் அப்பெண் பாடகரை அழைத்துச் சென்றனர். புடவை உடுத்து முந்தானையால் தலையை மூடிக் கொண்டு அன்னை உட்கார்ந்திருந்தார். தெய்வீகப் புன்னகை செய்த அன்னையின் பாதங்களில் தலையை வைத்தார். அன்னையின் கரம் தலையை தொட்டவுடன் தலையும், உடலும், ஜீவனும் கரைந்துவிட்டதை அறிந்தார். அன்னையின் ஊடுருவும் பார்வை ஜீவனின் அந்தரங்கங்களை எட்டியது. பக்தர் கூறியதெல்லாம் கேட்ட அன்னை அவர் தலையை இரு கரங்களாலும் எடுத்து முத்தமிட்டார். சாதகரின் கண்கள் நீராலும், உயிர் ஆனந்தத்தாலும் நிரம்பியது.

நவம். 24, 1926

பகவான் ஸ்ரீ அரவிந்தர் உடல் தெய்வலோக சக்தி ஊடுருவிய நாள் இது. இதை சித்தி (Siddhi), பெற்ற நாள் என்றார் அன்னை. அன்றே பகவான் தனிமையை நாடி கடைசிவரை 24 ஆண்டுகள் தனிமையும், மௌனமும் பூண்டிருந்தார். அன்னையை அதுவரை மிரா என்றழைத்த பகவான் அன்றைய தினம் Mother அன்னை என்று குறிப்பிட்டார். தியானத்திற்கு வரச் சொல் என்றவுடன் யாரை அழைப்பது என்ற கேள்விக்கு அனைவரையும் அழைத்து வா, எல்லோரும் வர வேண்டும் என அன்னை உத்தரவு பிறப்பித்தார்.

இருபத்தி நான்கு சாதகர்கள் ஆசிரமத்திலிருந்தார்கள். அனைவரும் தியானத்திற்கு பகவான் உட்காருமிடத்தின் முன் கூடினர். சூழல் பலமாக கனத்தது. ஒளி வெள்ளத்தைப் பலர் கண்டனர். சூழலில் மின்சாரம் ஓடுவதைப் போன்றிருந்தது. கதவின் பின்னால் பகவானும், அன்னையுமிருந்தனர். அன்னை பகவானை முன்னே போகச் சொல்லியபொழுது, பகவான் உத்தரவின் பேரில் அன்னை முன்னே வெளியே வந்தார். அன்னை ஒரு சிறிய ஸ்டூலில் உட்கார்ந்தார்.

பகவான் மரணத்தை வென்றதாகவும், துன்பத்தைத் துடைத்ததாகவும், அனைத்தையும் வென்றதாகவும் சாதகர்கள் பேசினர். பகவான் உடலிலிருந்து ஜோதி பீறிட்டெழுந்ததைக் கண்டனர்.

ஜுரம்

தினமும் அன்னை விளையாட்டு மைதானத்திற்கு வருவதால், எந்த சாதகரும்  அச்சந்தர்ப்பத்தைத் தவறுவதில்லை. ஆசிரம வாழ்வு கடுமையான கட்டுப்பாட்டிற்குட்பட்ட நேரம். அன்னை ஓரிடத்திற்கு சற்று நேரம் வருவார்கள் என்று தெரிந்தால், அங்கு சாதகர்கள் கூடுவார்கள். மேல் நாடுகளில் நமக்கு வருவதுபோல் தலைவலி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு, சீதபேதி போன்ற சிறு தொந்தரவுகளைப் பார்க்க முடியாது. 50ஆம் வயதில், எனக்கு வயிற்றுப் போக்கு என வந்ததேயில்லை. நான் கேள்விப்பட்டதும் இல்லை என்பவர் பலர். குடிநீர் சுத்தமாகயில்லை, சுத்தம், சுகாதார நிலைகள் (hygienic, sanitary conditions) இல்லை என்பதால் எழும் வியாதிகள் இவை. நம் நாட்டில் இவற்றைப் பெருவாரியாகப் பார்க்கலாம். அன்னை இவற்றை தொத்து வியாதி (epidemic) என்கிறார். பகவானிருந்தவரை இது போன்ற சிரமங்கள் எவருக்கும் ஆசிரமத்தில் வந்ததேயில்லை என்கிறார் அன்னை.

ஒரு சாதகிக்கு அதிக ஜுரம். படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலை. ஆனால் அன்னை வரும் இடத்திற்கு எப்படிப் போகாமலிருக்க முடியும் என்று நல்ல ஜுரத்தோடு விளையாட்டு மைதானத்திற்கு வந்தவர் ஓர் ஓரமாக உட்கார்ந்திருந்தார். ஆயிரம் பேர் இருந்தாலும், அவசியமானவர்கள் மீது அன்னை பார்வை படத் தவறுவதில்லை. அன்னை இந்த சாதகியைக் கண்டு அவர் நிலையை உணர்ந்தார். அன்னையின் சட்டம், கோட்பாடு (rules, approaches to life) வாழ்க்கை நெறி என்பவை வேறு. பொதுவாக நமக்குப் புரியாது. ஓர் இடத்தில் அன்னை செய்வதை அடுத்த இடத்தில் நாம் பின்பற்றவும் முடியாது. வியாதி வந்தால் உடல் ஏற்பது பலஹீனம், வலியேற்படுவது வெட்கத்திற்குரியது என்பது அன்னையின் எண்ணம். வியாதியை எதிர்க்க முடியாத உடல், யோகத்தை ஏற்பதெப்படி? மனஉறுதி உடலை வலுப்படுத்தி வியாதியை விலக்கும் என்பதே அன்னை பின்பற்றிய கொள்கை. அச்சாதகியை அன்னை எழுந்து ஓடச் சொன்னார். அவரும் ஓடினார். ஜுரம் போய் விட்டது. ஓட மனம் முடிவு செய்தவுடன் மன உறுதி எழுகிறது. வலிமையான மனஉறுதி முன் வியாதிக்கு வலுவில்லை. அன்னை சொல்வதால் அவர் சக்தி அவர் சொல் மூலம் உடலுள் பாய்ந்து செயல்பட்டது.

எட்டு பெண் குழந்தைகளை அன்னையே தன் நேர்ப்பார்வையில் வளர்த்தார். அவர்கட்கு தலை சீவுவது, டிரஸ் போடுவது போன்றவற்றைச் செய்வார். மத்தியானம் அவர்களுடன் சாப்பிடுவார். அந்தக் குழந்தைகட்கு எல்லாப் பயிற்சிகளையும் அன்னை தானேக் கொடுத்தார். எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது, எப்படி நடக்க வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும் என்று ஒரு தாயார் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தார். பாடம் சொல்லிக் கொடுப்பார். அவர்கள் அன்னையால் வளர்க்கப்பட்டவர்கள். அன்னையின் அச்சில் வார்க்கப்பட்டவர்கள்.

டிசம். 2 ஆசிரமப் பள்ளிக்கு மிக முக்கியமான நாள். டிசம். 1 பகவான் எழுதிய நாடகம்  நடிக்கப்படும். அன்னையே உடனிருந்து அந்த நாடகங்களை இயக்குவது வழக்கம். கட்டுப்பாடு என்பதை எக்காரணத்தை முன்னிட்டும் அன்னை தளர்த்தவே மாட்டார். ஒரு டிசம். 1 டிராமாவில், அன்னை வளர்த்த பெண்களில் ஒருவருக்கு முக்கிய பாத்திரம். 1 மணி நேரம் recitation மேடையில் நின்று ஒரு காவியத்தை மனப்பாடமாகச் சொல்லும் பகுதி அது. அப்பெண்ணிற்கு சில நாள் முன் ஜுரம் வந்து படுக்கையாகி விட்டதால், என்ன செய்யலாம் என்று அன்னையைக் கேட்டனர். வேறு ஒருவருக்கு அப்பாத்திரத்தைத் தரலாமா என்பதற்கு அன்னை மறுப்பு தெரிவித்து விட்டார்.  நவம் 30 வரை அப்பெண்ணின் நிலையில் மாறுதலில்லை. அன்னைத் தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளவில்லை. டிசம். 1 அன்று உத்தரவுக்கு அன்னையிடம் அனைவரும் காத்திருந்தனர். அப்பெண்ணுக்கே உடை அணியச் சொன்னார். அப்பெண்ணால் எழுந்து உட்கார முடியவில்லை. படுக்கையிலேயே மேக்கப் (makeup) போட்டு stretcher-இல் நாடக மேடைக்குக் கொண்டு வந்தனர். அன்னையும் அங்கிருக்கிறார். அவர் நடிக்கும் நேரம் வந்தது. அப்பெண் எழுந்தாள். மேடைக்குப் போனாள். எல்லா வருஷம் போலும் 1 மணி நேரம் மேடையில் தன் பகுதியைக் குறைவற நடித்துப் பூர்த்தி செய்தாள். திரை விழுந்தது.

பார்த்தவர் எவரும் அப்பெண்ணுக்கு ஜுரம் என்று தெரியவில்லை. திரை விழுந்த கணமே பெண் தரையில் துவண்டு விழுந்தாள். மீண்டும் படுக்கைக்கு stretcher-இல் எடுத்துப் போனார்கள். அன்னை உடலின் வியாதியை ஏற்பதேயில்லை. அதை மீறிச் செயல்படுவதே அவர் கட்டுப்பாடு.

தியானத்தில் காணும் காட்சிகள்

எவ்வளவு பக்தி, நம்பிக்கையிருந்தாலும், ஆன்மீக அம்சமிருந்தாலும் சூட்சுமம் இல்லாதவர்க்கு காட்சிகள் (visions) தெரியா. இது குறையன்று. எது இருந்தாலும், இல்லாவிட்டாலும், சூட்சுமமுள்ளவர்க்குக் காட்சிகள் தெரிந்தபடியிருக்கும். அன்பர் கண்ட காட்சிகள், கேட்ட குரல்கள், நுகர்ந்த மணங்கள் இப்படிச்சில.

 • சமாதி மீது ஸ்ரீ அரவிந்தர் பொன்மயமாகச் சயனிப்பது.
 • ஸ்ரீ அரவிந்தர் அறையிலுள்ள போட்டோ உயிர் பெறுவது.
 • வரவேற்பு அறை படத்திலிருந்து பகவான் வெளிவருவது.
 • அன்னை மூதாட்டியாக மலை மீது நடப்பது.
 • சமாதி-மலர்கள் ஒவ்வொன்றிலும் அன்னை உருவம் தெரிவது.
 • மனதால் அன்னை என உச்சரிக்கும் பொழுது தூரத்திலிருந்து அன்னை திரும்பிப் பார்ப்பது.
 • ஆப்பரேஷனில் அன்னை பக்கத்தில் வீற்றிருப்பது.
 • உயிர் பிரியும் நேரத்தில் அன்னையைக் காட்சியில் கண்டு உயிர் பிழைப்பது.

 • ஊருக்குப் புறப்படும் குழந்தையை அன்னை "அனுப்பாதே'' எனக் குரல் தருவது.
 • மரம் நம்மைப் பெயரிட்டு அழைப்பது.
 • தியானத்தில் அன்னை ஒளிமயமாகத் தெரிவது.
 • வானில் பகவானும் அன்னையும் காட்சியளிப்பது.
 • கோபுரம்போல், அன்னை, பகவான் காட்சி தெரிவது.
 • வலியுள்ள இடத்தில் அன்னை உருவம் தெரிவது.

மாணவர்கள் அன்னைக்குக் கடிதம் எழுதுவார்கள். அன்னை பதில் எழுதுவதுண்டு. அப்படி ஒருவர் எழுதியது,

 • தியானம் செய்யும்பொழுது அன்னை சக்தி வருவதாக உணர்கிறேன்.
 • அன்னை இசையின்போது, "சத்திய ஜீவியத்தைப் பெற உன்னைத் தயார் செய்துகொள்'' என்று அன்னையின் குரல் கேட்கிறது.
 • அன்னையை வானில் காண்கிறேன்.
 • தீயசக்திகளிடமிருந்து அன்னை நம்மைக் காப்பாற்றுவதைக் காணமுடிகிறது.
 • அன்னை கறுப்பு சக்திகளுடன் போராடுகிறார்.

அன்னை அவருக்குப் பதிலாக எழுதியது,

 • நீ கண்ட காட்சி உண்மை.
 • தியானம் நிறைந்தால் காட்சி பலிக்கும்.
 • உன் ஜீவன் முழுமை பெறும்.

சாதனையும் ஆயுளும்

எல்லா உண்மையான பிரார்த்தனைகளும் பலிக்கும் என்ற அன்னை, இறைவனின் நோக்கத்திற்கெதிரான பிரார்த்தனைகள் பலிக்கா என்றும் கூறியுள்ளார். வாழ்வின் நோக்கம் காரியம் கூடிவருவது. தொலைந்த பொருளை நாம் தேடும்பொழுதும், அதற்காகப் பிரார்த்திக்கும்பொழுதும் அது கிடைக்க வேண்டும் என்று கருதுகிறோம். கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அன்னை விருப்பம் நிறைவேறட்டும் என்று நாம் பிரார்த்திப்பதில்லை.

உள்ளபடி அப்படிப் பிரார்த்திக்கும்பொழுது, அப்பொருள் உடனே கிடைக்கிறது. கிடைத்தால் மகிழ்வெய்துகிறோம். நாம் உள்ளபடி பிரார்த்தனை செய்தது உண்மை. நம் உண்மையைத் தாண்டி மனம் அது கிடைக்க வேண்டும் என நினைத்ததும் உண்மை. கடைசி கட்டத்திற்கு முன்நிலைவரை (penultimate) அன்னை நம் விருப்பத்தையே பூர்த்திச் செய்வார். அதனால்தான் சுயநலமான பிரார்த்தனைகளும் பலிக்கின்றன. மனித ஜீவனை அன்னை ஜீவாத்மா எனக் கருதுவதால், அதன் சுதந்திரத்தில் அன்னை தலையிடுவதில்லை.

மனித வாழ்வு, அதன் வெற்றிகள், நிறைவுகள், ஆயுள் ஆகியவை சாதாரண மனநிலைக்குரியன. ஆத்மா அதைக் கடந்தது. அன்னையிடம் போய் யோசனை கேட்பவர்கள், 'அன்னை சொல்வதை அப்படியே செய்வோம்' என்றாலும் அவர்கள் மனம் தன் விருப்பம் அதன் மூலம் நிறைவேறும் என எதிர்பார்க்கும். கடைசிக்கட்டம்வரை மனித அபிலாஷையைப் பூர்த்தி செய்யும் அன்னை கடைசி கட்டத்தில் ஆத்மாவின் அபிலாஷையைப் பூர்த்தி செய்கிறார்.

உடல்நிலை சரியில்லை என டாக்டரிடம் போனவர்கள், டாக்டர் சரியில்லை, தென்னிந்தியாவில் வேலூருக்குப் போவோம் என முடிவு செய்து, அன்னையிடம் முடிவைக் கூறினர். அன்னை அவர்கள் முடிவை ஆமோதித்தார்.

ஆப்பரேஷன் நடந்தது. நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. அன்னைக்குச் செய்திகள் வந்தபடியிருந்தன. அன்னை சாப்பிடும்பொழுது ஸ்பூன் கையிலிருந்து கீழே விழுந்தது. ஆஸ்பத்திரியில் அவர் உயிர் பிரிந்தது. புதுவைக்கு உடலை எடுத்து வந்து தகனம் செய்தனர்.

குடும்பம் அவர் பிழைக்க விரும்பியது. அவர் ஆத்மா விரும்பியது வேறு. கடைசி 3 நாளும் அவர் அன்னையை இடைவிடாது அழைத்தார். போன ஜென்மத்தில் புத்தபிக்ஷுவாக இருந்தவர், வாழ்நாள் முழுவதும் செய்யாத சரணாகதியை, கடைசி 3 நாளில் செய்ததாக அன்னை கூறினார். அவர் ஆத்மா சரணடைய விரும்பி அன்னையை வந்தடைந்தது.

 • குடும்பம் விரும்பியது ஆத்மாவின் குரலை மீறி நடக்காது.
 • அன்னையின் அருளை ஆத்மா மட்டுமே பெற்றதால் ஆத்ம நிறைவடைந்தது.
 • கடைசிவரை நாம் நினைப்பதுபோல் நடந்தாலும், கடைசி கட்டம் மாறிவிடுகிறது எனில் கடைசிவரை நாம் சாமானியராக இருக்கிறோம் என்று அர்த்தம்.
 • முதலிலிருந்தே அன்னை விருப்பத்தை மட்டும் நாடும் பக்தன் சாதகனாக மாறுகிறான். அது முழுமையானது என்பதால் அம்முழுமைக்குள் உடலும் அடங்கும்.

தூக்கம்

அயர்ந்து தூங்குபவருண்டு. அன்னை அதை ஜடமாகத் (unconscious sleep) தூங்குவது என்பார்.

லேசான சப்தம் (Light sleepers) கேட்டாலும் எழுபவர்கள், ஆழ்ந்த நித்திரையிலாழ்பவர்கள். இவர்கள் இருவகையினர். மிகவும் ரோஷக்காரர்களாகவும், உஷாரானாவர்களாகவும் இருப்பார்கள். அடுத்த வகையினர் மனதில் ஆழ்ந்த பயம், குற்றவுணர்வுள்ளவர்களாக இருப்பார்கள்.

வயதானவர்களில் பலருக்கும் தூக்கம் வாராது. தேவாரம், பிரபந்தம் மனப்பாடம் செய்து பாடிக்கொண்டிருப்பார்கள். இல்லையெனில் இரவு சிம்மசொப்பனம்தான்.

உடல் தேவையான ஓய்வைத் தானே பெறும். நாம் அதற்காகக் கவலைப்பட வேண்டாம்.

பரீட்சைக்குப் படிப்பவனுக்குத் தூக்கம் வரக்கூடாது. மாணவர்கள் மாத்திரை சாப்பிட்டுக் கண் விழிப்பார்கள். தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கம் வாராதவர்கள் தூங்குவார்கள். அன்னை அவற்றை விஷம் என்கிறார்.

தூக்கம் வரவில்லை எனக் கூறியவர்கட்கு "உனக்கேன் தூக்கம்?'' என அன்னை கேட்டுள்ளார்.

தூக்கமாத்திரை சாப்பிடுபவரை "தூக்கம் வேண்டுமானால் 'பிரார்த்தனையும் தியானமும்' என்பதைப் படி'' என்று கூறியுள்ளார். படித்தவர் நன்கு தூங்கினார். அன்னை முறைகளைத் தூக்கம் வேண்டும் என்பவருக்கும், விழிக்கவேண்டும் என்பவருக்கும் பொதுவாகச் சொன்னால்,

 • தூக்கத்தை அழைத்தால் - "தூக்கம், தூக்கம்'' என அழைத்தால் - தூக்கம் வரும்.
 • சாந்தியை அழைத்தாலும் தூக்கம் வரும்.

 • தூக்கம் வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தாலும் போதும்.
 • பகவான் எழுதியவை, அன்னை புத்தகங்களைத் தூக்கம் வேண்டுமென படித்தால் தூக்கம் வரும்.
 • தூக்கத்தைப் பற்றி அன்னை எழுதியவற்றை ஆராய்ச்சியுடன் படித்து புரிந்துகொண்டால் தூக்கம் பிரச்சினையாக இராது.
 • புருவ மையத்தில் அன்னையை உருவமாகப் பார்த்தல் நலம்.
 • பாடத்தில் ஆர்வம் எழுந்தால், பிரார்த்தனை பலித்து நெடுநேரம் விழித்திருக்கலாம்.
 • வேலையைச் சமர்ப்பணம் செய்து ஈடுபட்டால், களைப்பின்றி இரவு நெடுநேரம் செய்யலாம். முடிந்தபின் உறக்கம் தியானமாக மாறும்.
 • தூக்கம் வேண்டாம், வேண்டும் என்பதைவிட்டு சந்தோஷமாக இருந்தால் உள்ள பிரச்சினை போய்விடும்.
 • தூக்கம் தன்னைத் தானே சரி செய்துகொள்ளும், உடல் தன்னைப் பாதுகாக்கும் என நம்பினால் தூக்கம் பிரச்சினையாக இருக்காது.
 • அன்னையின் இசை (Mother's music) தூக்கம் வாராத நிலையில் உறுதுணை.
 • ஊதுவத்தி, வாராத தூக்கத்தை வரவழைக்கும், வரும் தூக்கத்தைப் படிக்கும் மாணவனுக்கு கலைக்கும்.

சரணாகதி

சரணாகதியைப் பயிலும் முறையை யோகநிலை வெளிப்பாடு  நூலில் (Synthesis of Yoga)   சமர்ப்பணம் (Consecration) என்ற அத்தியாயத்தில் விளக்கமாக எழுதியுள்ளார். அதன் சுருக்கம்,

 1. அழைப்பிருந்தால் யோகத்தை ஏற்கலாம்.
 1. All inclusive concentration எல்லாக் கரணங்களும் ஒருமுகப்படும் (concentrate) சமர்ப்பணத்தை ஏற்க வேண்டும்.
 2. ஒருமுகப்படுவது சரியானால், wide massive opening ஜீவன்அகன்று விரிந்து இறைவனை நோக்கி விழிப்புறும்.
 3. நினைவு, உணர்வு, செயல் இனி உள்ளே விழிப்புற்ற இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்.
 1. சமர்ப்பணம் பூர்த்தியானால் ஜீவாத்மா சித்திக்கும்.
 1. அடுத்த நிலையில் பிரபஞ்சத்தின் ஆத்மா சித்திக்கும்.
 1. முடிவில் பரமாத்மா சித்திக்கும்.

இப்பயிற்சியைப் பெற ஞானம் தேவையில்லை. ஞானம் உதவும், ஆனால் அவசியமில்லை. சமர்ப்பணம் ஓர் உதாரணம். எல்லா யோகப் பயிற்சிகளையும் இந்நூலில் இதுபோல் விளக்கமாகக் கூறுகிறார்.

எனக்கு ஞானம் ஏற்காது, பயிற்சி முடியாது என்று கூறும் பக்குவமான ஆத்மாவும் உண்டு. அவர்கட்கும் பயன்படுவது சாவித்திரி. ஞானத்தைப் பெறும் அறிவோ, பயிற்சியைப் பெறும் நெறியோ இல்லாவிட்டாலும் ஆத்மா பக்குவமாக உள்ளவர் உண்டு. சாவித்திரியில் Surrender is the only strength என்கிறார். சாவித்திரி ஆன்ம விழிப்பை அளிக்கிறது. இந்தச் சொல் நம்முள்ளே சென்று விழிப்பான ஆத்மாவைச் சரணம் செய்யச் சொல்கிறது. சரணாகதி பூர்த்தியாகிறது. யோகம் சித்திக்கிறது. சித்தி பெற்றவர் தெளிவில்லாதவராக இருப்பதால் மற்றவர் அதிசயப்படுகிறார்கள். அவர், "எனக்கு ஒன்றும் தெரியாது. ஒரு நாள் சாவித்திரியில் A vast surrender is his only strength என்று படித்தேன். அது ஆழமாகப் பதிந்துவிட்டது. அதன் பிறகு எனக்கு சரணாகதி சித்தியாயிற்று. இனி எனக்கு ஒன்றுமில்லை. எல்லாம் அவன் பாரம்'' என்கிறார். அதுவும் புரியாத நிலையில் உள்ளவரும் உண்டு.

எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அன்னையை ஏற்றுக்கொண்ட பின் சரணாகதியையும் ஏற்றுக் கொண்டேன். பகவான் சொல்வதெல்லாம் எனக்குப் பலிக்கிறது. எப்படி என்று தெரியாது என்றும் கூறுவதுண்டு. Life Divine கொடுப்பது ஞானம், சாவித்திரி அளிப்பது சித்தி, synthesis பயிற்சி வேண்டியவர்க்குரியது.

நம்மால் இதன் பலனை - ஞானம், பயிற்சி, சித்தி - பெற முடியுமா? என்றால் பெறலாம். வாழ்க்கை விளக்கம் பெற, வாழ்வு யோக வாழ்வாக, வாழ்வு வளம் பெற இதைப் பயன்படுத்தலாம். அதற்கு முன் ஒரு நிபந்தனையுண்டு. நிபந்தனையைப் பூர்த்தி செய்தால் ஆரம்பிக்கலாம், பலிக்கும்.

நாம் அறிந்த அளவில் மனம் தூய்மைக இருந்தால் வாழ்வு பலிக்கும். அதைக் கடந்தும் மனம் தூய்மையானால் யோகம் பலிக்கும்.

அன்னை மனச்சாட்சியைப் பொன் விலங்கு என்கிறார். வாழ்வில் வளம் பெற மனச்சாட்சி போதும். அதைக் கடக்க வேண்டுமானால் அது தடை.

வாழ்வில் நமக்கு இரு பலன்கள் உண்டு

1. பிரச்சினை தீர்வது, 2. வாய்ப்பு பலிப்பது.

எனக்கு 38 வயதாயிற்று. திருமணமாகவில்லை என்பது ஒரு பிரச்சினை. என் வயதையோ, வசதியையோ, அனுபவத்தையோ நம்பாமல் அவற்றை விட்டகன்று, நான் எதையும் கருதவில்லை. அன்னையை மட்டும் நம்புகிறேன் என்றால் அவருக்கு ஒரு வாரத்தில் நிச்சயமாகும். அப்படி ஒருவருக்கு ஆயிற்று.

நான் சம்பளம் ரூ. 350 பெறுகிறேன். வயது 30. வீட்டில் எவருக்கும் எனக்குத் திருமணம் செய்ய விருப்பமில்லை. என் நிலை, வயது, வீட்டு நிலையை மனதால் ஒதுக்கி, அன்னையை மட்டும் நம்பினேன். 60,000ரூபாய் சம்பளம் பெறுபவர் என்னைத் திருமணம் செய்துகொண்டு, இதுபோன்ற பெண் கிடைத்ததற்கு நான் பாக்கியம் செய்திருக்கவேண்டும் என்றார் என்பது அடுத்த அனுபவம். இது பிரச்சினை தீர்ந்து வாய்ப்பு உடன் வந்ததாகும்.

Life Divineஇல் முதல் 288 பக்கத்துடன் முதல் பாகம் முடிகிறது. அதிலிருந்த 150 கருத்துகளை எடுத்துப் போட்டிருக்கிறேன். அவற்றுள் 60 கருத்துகளுக்கு விளக்கம் எழுதி நூலாக வெளியிட்டிருக்கிறேன். அவற்றுள் எந்த ஒரு கருத்தும் பயன் தரும். மனம் ஜடத்தை ஆள்கிறது என்ற கருத்தை எப்படி தன் பாக்டரி பிரச்சினை தீர்வதற்குப் பயன்படுத்தினேன் என்றொருவர் தம் அனுபவத்தை நீண்ட விளக்கமாக 3 பக்கம் எழுதியதை அன்பர் கடிதம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன்.

அன்னையை நன்குணர்ந்தவர்கள் நடக்க முடியாதது என்று ஒன்றில்லை என்பதை அனுபவத்தில் பல சமயங்களில் கண்டுள்ளனர். ஓர் அடி தூரத்தில் பஸ் வந்தபின் தான் ஆகாயத்திலெழுந்து அகன்றது ஒரு நிகழ்ச்சி. கால் குத்திய பின் மறைந்தது மற்றொன்று. முதலாளி மேல் பொய் கேஸ் கொடுத்த 20 பேர்கள் தாமே - பிரார்த்தனையால் - மனம் மாறி முதலாளிக்குச் சாதகமாக வாக்குமூலம் கொடுத்தார்கள். அரெஸ்ட் வாரண்ட் போட்ட முதலமைச்சர் மனம் மாறியதுடன் வேண்டியவரானது ஒரு நிகழ்ச்சி.

இடுப்பில் ஒரு பெரிய கட்டி வந்தது. அது உள்ள இடம் அவரை எந்த நிலையிலும் உட்கார அனுமதிக்கவில்லை. இரவு படுக்கப் போகுமுன் மனத்துள் அன்னையிடம் சொன்னார். சமீபத்தில் தரிசனம் வருவதால் கட்டி தரிசனத்திற்குப் போவதைத் தடுத்துவிடும் என்ற பயம் அவருக்கு. காலையில் எழுந்து பார்த்தால் சங்கடமான இடத்திலிருந்து கட்டி வலியில்லாமல் நகர்ந்துள்ளது. மறுநாள் கட்டி உடைந்து, காயம் எளிதில் குணமாயிற்று. எப்படி இது நடக்க முடியும்? என்று ஆச்சரியப்பட்டு அன்னையிடம் கேட்டபொழுது, "எதுவும் நடக்கும். மனம் குறுக்கிடாமருந்தால் எதுவும் நடக்கும். உன் உடல் என் சக்தியை எளிதில் (receives) பெறுகிறது'' என்றார்.

பாரிஸில் அன்னையை ஓர் (artist) ஓவியராகவே அறிவார்கள். ஒரு ஸ்டூடியோவை விட்டு வெளியே வரும் பொழுது, எரி விண்கற்கள் விழுவதை அன்னை கண்டார். கண்டவுடன், என் ஜீவன் முழுவதும் இறைவனுக்கே உரியதாக வேண்டும் என இறைவனை வேண்டினார். எரி விண்கற்கள் சில வினாடிகளில் மறைந்துவிடும். அவற்றைக் கண்டு, மறைவதன் முன் மனதிலுள்ள விருப்பத்தைச் சொல் வடிவமாக்கினால், அது ஓர் ஆண்டில் பலித்துவிடும் என்ற நம்பிக்கையுண்டு.

புதுவை வந்த பிறகு இசை, ஓவியம் போன்றவை அன்னைக்குப் பின்னணியில் சென்றன. 1970க்குப் பிறகு, அன்னை தம் திருவுருமாற்றத்தைக் குறிப்பிடும்பொழுது, "நான் சாப்பிட, எழுத, பேச, பார்க்க மறந்துவிட்டேன். அத்திறமைகளைத் திருவுரு மாறிய உடல் மீண்டும் புதியதாய் கற்றுக் கொள்கிறது'' என்கிறார். கண்ணை மூடிக் கொண்டால் எனக்குப் பார்வை தெளிவாக இருக்கிறது என்கிறார்.

அன்னை எழுதிய படங்கள், வரைந்த பென்சில் ஓவியங்கள் ஏராளமானவை. அவற்றைக் கண்காட்சியாகவும், சில சமயங்களில் வைப்பதுண்டு. ஆசிரமம் ஆரம்பித்த வருஷங்களில் தினமும் காலையில் அன்னை படம் எழுதுவது, வரைவதுண்டு. ஒரு சமயம் அவருடனிருந்த சாதகர் சம்பக்லால்

படத்தை கண்ணை மூடிக் கொண்டு அன்னை வரைந்தார்.

பென்சில் தானே நகர்ந்தது. படம் அற்புதமாக எழுதப்பட்டிருந்தது. தம்முடனிருந்த சாதகியின் படத்தையும், அதுபோல் வரைந்தார். தம் படத்தை இரு முறை (self portrait) அன்னை வரைந்துள்ளார். அதே சமயத்தில் அன்னை வரைந்த பகவான் படத்திற்கு இணையாக அவற்றுள் ஒன்று அமைந்தது. வேறொரு சாதகர் தூங்குவதை ஓவியமாக எழுதியுள்ளார். பகவான் படத்தை oil portrait ஆக வரையும்படி அன்னையைக் கேட்டுக் கொண்டது ஏனோ நிறைவேறவில்லை.

பகவான் வரைபடம் உயர்வாக அமைந்தது. நெற்றியின் அமைப்பு இவரே பகவான், "புருஷன்'' எனும்படி அமைந்தது.

வடநாட்டுச் செல்வர் ஒருவர் ஜாதகம் பார்த்தபொழுது அவர் குரு தென்னாட்டிலிருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைத் தேடிக் கொண்டிருக்கும்பொழுது, ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டு வந்தார். அவர் தம்மால், இறந்தவர் உடம்பில் புகுந்து, நடக்க முடியும் என்று கூறி நிரூபித்தார். உடலை விட்டுப்போய் வேறொரு உடலில் புகுவது occultism எனப்படும். பாரிசில் அன்னை occultism பயிற்றுவிப்பவர்களைக் கண்டு, அவர்களுடன் ஆப்பிரிக்கா சென்று சில மாதங்கள் தங்கியிருந்து திரும்பும்பொழுது, கப்பலில் அன்னையும், அவர் குருவும் இருந்தார்கள். கடல் அமைதி இழந்து கொந்தளிக்க ஆரம்பித்தது. மாலுமிகள், அவர்களுடைய கேப்டன் ஆகியவர்கட்குக் கடல் நிலைமை தெரியும். பிரயாணிகளைப்போல் காற்றடித்தவுடன் பயப்பட மாட்டார்கள். கடலையும், காற்றையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், அவற்றின் போக்கை அறிவதால், அமைதியாக இருப்பார்கள். அன்று பிரயாணிகளைப் போலவே, மாலுமிகளும் நிலை இழந்தனர். கேப்டனுக்கு நிலைமை கட்டுக்கடங்காது என்று புரிந்தது. கலங்கிய நேரம்.

அன்னையின் குரு, அவரை அழைத்து, போய் நிலைமையைச் சீர் செய் என்றார். அன்னை ஆணையை ஏற்று, அவர் cabin அறைக்குப் போய் கட்டிலில் படுத்து, தாம் குருவிடம் கற்ற வித்தையைப் பயின்று உடலை விட்டு வெளிவந்தார்.

அவரது சூட்சும உடல் கப்பலுக்கு மேலே சென்று நின்றது. கப்பலைச் சுற்றி சிறு சிறு (vital beings) ஜீவன்கள் கும்மாளம் அடிப்பதைக் கண்டார். அந்தத் தேவதைகளுக்குக் கப்பலை ஆட்டிக் கவிழ்ப்பதில் ஆனந்தம். அமர்க்களம் செய்ததைப் பார்த்து, அவற்றை இனிமையாக அழைத்து சுமார் அரை மணி நேரம் பேசினார். ஒரு வழியாக அவை சமாதானமடைந்தன. நிரபராதியான பிரயாணிகளைக் கடலில் அமிழ்த்துவது நியாயமா? என அன்னை அத்தேவதைகளுடன் வாதாடினார். வென்றார். கடல் கொந்தளிப்பு அடங்கியது. ஆபத்து விலகியது.

அரபு நாட்டு வியாபாரி ஒருவர் அன்னையின் குருவைப் பார்க்க வருவதுண்டு. ஒரு சமயம் அவர் அத்துமீறிப் பேசலானார். தாம் பணம் பெற்றவன் என்ற கர்வத்துடன் பேச்செழுந்தது. அடுத்த முறை அவர் வருமுன் ஒரு பெரிய மேஜை, 8 கால்களுடையது, அவரை வரவேற்கக் காத்திருந்தது. அது கனத்த மேஜை. அன்னை, குருவின் மனைவி இருவரும் ஒரு புறம் அமர்ந்திருந்தனர். அரபு வியாபாரி வந்தார். பழைய பாணியில் குருவிடம் பேச ஆரம்பித்தார். குருவின் மனைவி இம்முறை அவருக்குப் பாடம் கற்பிக்க விரும்பினார். அவருடைய சக்தி பெரியது.

அன்னையைத் திரும்பிப் பார்த்தார். எதுவும் சொல்லவில்லை. திடீரென ஒரு பயங்கரக் குரல் வியாபாரியிடமிருந்து எழுந்தது. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. திகைப்படைந்தார். பீதியுற்றார். மேஜை தானே நகர்வதைக் கண்டார். அவரால் நம்ப முடியவில்லை. மேஜை சற்று அசைந்தாடியது. பிறகு வேகமாக வியாபாரியை நோக்கிச் சென்று அவரைத் தாக்கியது. பீதியுற்ற வியாபாரி எழுந்து ஓடினார். அதன் பிறகு அவர் திரும்பி வரவேயில்லை.

இரவில் அன்னை வேறு உலகங்கட்குச் செல்வார். சூட்சும லோகத்தில் போய், பகவானை சந்திப்பார். சாதகர்களைச் சூட்சுமமாகத் தூங்கும்பொழுது போய்ப் பார்ப்பார். இவை சூட்சுமமானவர்களுக்குத் தெரியமே தவிர, மற்றவர்கட்குத் தெரியாது. தாம் உபயோகப்படுத்திய கொசு வலையை ஒரு சாதகருக்கு அன்னை கொடுத்தார். அவர் தூங்கும்பொழுது அக்கொசு வலையில் தம் சூட்சும ஜீவியம் (subtle consciousness) இருப்பதைக் கண்டார்.

ஒருவர் இரவில் அன்னை தம்மிடம் வருவதைக் கண்டு பூரிப்படைந்தார். அடுத்த நிமிஷம் வேறொருவர் வீட்டிற்குப் போய் அவர் கட்டில் அன்னை உட்காருவதைக் கண்டு, அடுத்த நாள் அவரிடம் போய்ச் சொன்னார். "இன்று எனக்குப் பிறந்த நாள். நேற்று படுக்கை விசேஷமாக இருந்தது தெரியும். அன்னையை நான் காணவில்லை'' என்றார் பிறந்தநாளுக்குரியவர்.

அன்னையின் சட்டங்களில் ஒன்று வெகு ஜாக்கிரதையாக இருப்பது. முன்கூட்டியே தவறு நடக்கும் சந்தர்ப்பங்களை அன்னை விலக்குவார். அதனால்தான் மோட்டார் பைக்கை அன்னை அனுமதிப்பதே இல்லை. நிலைமையை, தாமே பிற்காலத்தில் மாற்றிக் கொண்டவர்கள் தங்களுக்கே காலத்திற்குரிய சமாதானத்தைச் சொல்லிக் கொண்டார்கள். கத்தி, பிளேடு, கூர்மையான பொருள்களை அன்னை குழந்தைகளிடம் அனுமதிப்பதேயில்லை. முன் ஜாக்கிரதை என்பது அன்னைக்கு முக்கியம்.

ஆசிரமத்தில் சேர்ந்த ஒருவர் தாம் பிரியப்பட்டு வெளிநாட்டில் வாங்கிய ரிவால்வரைப் பற்றி அன்னையிடம் கூறியபொழுது, பீச்சின் தென்கோடிக்குப் போய் அதைக் கடலில் வீசி விடு என்று அறிவுரை கூறினார்.

இன்னும்,

எந்த பாஷையில் பேசினாலும், அன்னை புரிந்து கொள்ள முயன்றால், அன்னைக்குப் புரியும். ஒரு சமயம் தமிழில் ஒரு வார்த்தை அன்னையே பேசினார். குழந்தைகள் அன்னை முன்னிலையில் பலவிதமாக இருப்பார்கள். சிறு குழந்தையை அன்னையின் காலடியில் கிடத்திய பொழுது அது, அவர் கால்கட்டை விரலைப் பற்றிக் கொண்டு விடமறுத்தபொழுது, அன்னை அக்குழந்தையின் போட்டோவை வாங்கி அதன் மூலம் குழந்தையின் முற்பிறவியைக் காண முயன்றபொழுது, எகிப்தில் இக்குழந்தை வாழ்ந்ததாகவும், தாம் எகிப்து ராணியாக இருந்தபொழுது தம்மை அறியும் என்று கண்டார்.

ஒரு வயதுக் குழந்தை பிறந்த நாள் ஆசீர்வாதத்திற்கு வந்த பொழுது, அன்னை ஒரு பை சாக்கலேட் கொடுத்தார். குழந்தை தமிழில், "இன்னும்'' என்றபொழுது அடுத்த பை சாக்கலேட் கொடுத்தார். குழந்தை, "இன்னும்'' என்று மறுபடியும் கூறியது. நீயே போய் எடுத்துக் கொள் என்றார் அன்னை. குழந்தை ஷெல்பிற்குப் போய் மேலும் ஒரு பாக்கட் எடுத்துக் கொண்டது.

காலேஜ் ஆசிரியை, தன் குழந்தையை ஆசீர்வாதத்திற்கு கொண்டு வந்தபொழுது, குழந்தை அன்னையிடம் அளவுகடந்த பிரியம் காட்டியது. கவனித்து, அன்னை, ஆசிரமச் சாதகர் இக்குழந்தையாகப் பிறந்துள்ளார் என்று கூறி தாயையும் மகனையும் ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார். அவர்களுடன் வந்த தகப்பனாரும் ஆசிரமத்தில் சேர்ந்து சில மாதங்களில் வெறுப்பு கொண்டு வெளியேறி விட்டார்.

ஐரோப்பிய சிஷ்யர்கள்

ஒரு புது இடம், ஸ்தாபனம், கட்சி, மதம் ஏற்பட்டால் அதை எப்படிப் புரிந்து கொள்வது? அதன் தத்துவம் என்ன? கொள்கைகள் எவை? எந்தக் கோட்பாடுகளைப் பின்பற்றுகின்றனர்? என்றறிந்து அவை நமக்கு ஏற்புடையவையாக இருந்தால் நாம் ஏற்க வேண்டும்.

அதுபோல் நாம் செயல்படுவதில்லை. நம்மூரில் அங்கு யாராவது சேர்ந்திருக்கிறார்களா? அவர் யார்? அவர் நல்லவரா? அவர் அந்தஸ்து என்ன? அவரே சேர்ந்தால் நாமும் சேரலாம் என்று நினைக்கிறோம்.

1914இல் அன்னையும், அவர் கணவரும் ஸ்ரீஅரவிந்தரைச் சந்திக்க, அவரிடம் வந்தபொழுது,

இரு ஐரோப்பியர்கள், பிரான்சு நாட்டிலிருந்து வந்தவர்கள், சமூகத்தின் உச்சகட்டத்திலுள்ளவர்கள் ஸ்ரீ அரவிந்தரின் சிஷ்யர்களாகிவிட்டனர்,

என்ற செய்தி புதுவையிலும், சென்னையிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. சுப்ரமணிய பாரதியும், அவருடனிருந்த மற்ற தேசீயத் தலைவர்களும் இந்நிகழ்ச்சியை முக்கியமாகக் கவனித்தனர். நாட்டில் ஏற்பட்ட பரபரப்புக்கு அவர்களும் ஆளானார்கள். ஸ்ரீஅரவிந்த ஆசிரமத்திலிருந்து ஒருவர் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று மகாத்மா காந்தியைச் சந்தித்தார். இவர் குஜராத்தி, காந்தியின் சீடர். ஏற்கனவே, காந்தி ஆசிரமத்திலிருந்தவர். மகாத்மா முதலாகக் கேட்ட கேள்வி,

குஜராத்திருந்து எத்தனை பேர் அங்கிருக்கிறார்கள்? அவர்கள் எல்லாம் யார்?

என்பது. நம்மூர்க்காரர் யார் இருக்கின்றார்கள், எத்தனை பேரிருக்கின்றார்கள் என்பதிலிருந்து நாம் அந்த ஸ்தாபனத்தைக் கணக்கிட முயல்வது இயல்பு. ஐரோப்பியர் இருவர் பகவானுக்குச் சிஷ்யர்களாகி விட்டனர் என்பது நம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்துவது இயற்கை.

பால்பிரண்டன் என்ற ஆங்கிலேயர் திருவண்ணாமலை வந்து ரமண மஹரிஷியைச் சந்தித்து, அங்கே தங்கிய பின்னரே, ரமணர் பிரபலமானார். Paul Brunton பத்திரிகை நிருபர். அவருக்கு ஆன்ம விசாரம் உண்டு. தொழிலை விட்டு இமயமலையை அடைந்து பல மகான்களைப் பற்றிக் கேள்விப்பட்டு தாம் குருவாக எவரையாவது ஏற்கமுடியுமா? என நினைத்தபொழுது எவரும் அவருக்குத் திருப்தி தரவில்லை. தென்னிந்தியாவில் பயணம் செய்தபொழுது, காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரியாரைக் கண்டவுடன், இவரே தமக்குரிய குரு என மனதில் முடிவு செய்து தம்மை ஏற்கும்படிக் கேட்டுக் கொண்டார். "உங்களுக்கு குருவாக இருக்கும் தகுதியுள்ளவர் இருவர். ஒருவர் மோனத்தில் புதுவையிலிருப்பதால், அவர் உங்களை சந்திக்க முடியாது. ஏற்க மாட்டார். அடுத்தவர் ரமண மகரிஷி. அவரைப் போய் விசாரிப்பது நல்லது'' என்று உபதேசம் செய்தார். பால் பதிலாக, "நான் நூற்றுக்கணக்கானவர்களைப் பார்த்துவிட்டேன். எனக்குத் திருப்தி இல்லாவிட்டால் திரும்பி வருவேன். என்னை அவசியம் ஏற்க வேண்டும்'' என்றார். "அந்த சந்தர்ப்பம் - திருப்தியில்லை என்ற சந்தர்ப்பம் - எழாது'' என்றார் சங்கராச்சாரியார். பால் ரமணருடன் இறுதிவரை தங்கியிருந்தார்.

நம்பிக்கை

நம்பிக்கை இலட்சியமாக, அன்னை சொல்வதை அப்பட்டமான உண்மை என எடுத்துக் கொள்ள வேண்டும் என நாம் பலமுறை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நடைமுறையில் நாம் அதுபோல் இருப்பதில்லை.

தவறிய பின், விழுவதற்கு முன் என்னைக் கூப்பிட்டால் காப்பாற்றுவேன் என்ற அன்னை சொல்லை நடைமுறையில் நம்ப முழு நம்பிக்கை வேண்டும். பஸ்ஸுக்கு அடியில் விழுந்து விட்டவருடைய அம்மா என்ற அலறல் என்ன செய்யும்? டயர் 1 அங்குலத்திற்கப்பால் நின்றது. உயிர் பிழைத்தார். பிளாட்பாரத்தில் நின்றவர் மீது மோதிய கார் அடியில் அவர் போன பின் இழுத்துப் போடும்பொழுது மகள் அருகில் நின்று எழுப்பிய அபயக்குரல் அன்னைக்குக் கேட்டது. குரலை எழுப்பியவரால் தாயார் சிறு காயங்களுடன் எழுந்து நடப்பதைக் கண்டும் நம்ப முடியவில்லை.

தொலைந்த பர்ஸ், ஆட்டோ டிரைவர் திரும்ப தம்மைத் தேடி வந்து கொடுத்த தொலைந்த பொருள், பல வருஷமாக இருந்த வீக்கமும், அரிப்பும் மனமுருக செய்த பிரார்த்தனையால் மறு நாள் காலையில் மறைந்தது போன்ற நிகழ்ச்சிகளை அநேக பக்தர்கள் கண்டிருக்கிறார்கள். ஆபத்தில் எழும் குரல் ஆழத்திலிருந்து எழுவதால் தவறாது அன்னைக்குக் கேட்கும். நடந்த பிறகும் நமக்குப் புரியாது, நம்பிக்கை முழுமையாவதில்லை.

புதுவைக்கு, தரிசனத்திற்கு வந்து திரும்புபவர் ரயில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். இவர் எப்பொழுதும் கையில் Water bottle கொண்டு வருவார். குளிர்ந்த நீரை விரும்பிப் பருகும் அன்பர் அவர். நீர் காற்றில் குளிர வேண்டும் என்று ஜன்னலுக்கு வெளியே பாட்டிலை தொங்கவிடுவது அவர் பழக்கம். திடீரென பாட்டில் விழுந்தது. தண்ணீர்பாட்டிலுக்காக என்ன செய்யலாம்? எதுவும் செய்ய முடியாது. அம்மா, என் தண்ணீர் போய்விட்டதே என தீனமாகக் குரல் எழுப்பினார். ரயில் வேகம் குறைந்து மெதுவாகப் போக ஆரம்பித்தது! அன்னைக்கு என் குரல் கேட்டுவிட்டாற்போருக்கிறது என்று ஆச்சரியப்பட்டார். ஆனால் என்ன செய்யமுடியும்? பெண் பிரயாணி. ஆணாக இருந்தாலும் இறங்கி எடுக்க எல்லோராலும் முடியுமா? யாரோ ஒரு சிறுவன் விழுந்த பாட்டிலை எடுத்து ஓடி வந்து அவரிடம் கொடுத்தான். அப்பொழுதுதான் அன்னையின் சொல் அப்பட்டமான உண்மை என அவர் அறிந்தார்.

எழ வேண்டிய இடத்திலிருந்து குரல் எழுந்தால், தவறாது அன்னையின் காதில் விழும். நடக்குமா? என்ற கேள்வியில்லை. பெரிய விஷயம், ஆபத்து, நடக்க முடியாதது, நடக்கவே முடியாதது என்ற விஷயங்களிலும் நடக்கும் என்பதை அன்பர்கள் கண்டுள்ளனர். கண்டதுடன் விஷயம் நின்றுவிடுகிறது.

இதுவே அன்னை எப்பொழுதும் செயல்படும் வகை என மனம் அறிவதில்லை.

இனி எல்லாக் காரியங்களும் இப்படியே நடக்க முயலவேண்டும் என்று நினைப்பதில்லை.

இனி என் வாழ்வின் அமைப்பை இந்த அடிப்படையிலேயே நடத்தவேண்டும் என்று தோன்றினால் அது ஞானோதயம்.

அழைப்பு

அழைப்பு அன்னை காதில் விழத் தவறுவதில்லை. ஓடும் ரயிலிருந்து விழுந்த தண்ணீர்ப் பாட்டிலுக்கானாலும், காருக்கடியில் கிடந்த உயிரைக் காப்பாற்ற வேண்டுமானாலும் அழைப்பு அன்னை காதில் விழும். அவர் சூழலை எட்டிவிட்டால் சூழலே பதில் சொல்லும். லால்பகதூர் சாஸ்திரி உயிர் பிரியும் தருணத்தில் எழுப்பிய அன்னைக்குக் கேட்டது. தரிசன வரிசையில் நின்று கொண்டிருந்த 9 வயதுப் பெண் மனதால் அன்னையை அழைத்தபொழுது வெகுதூரத்திலிருந்த அன்னை திரும்பிப் பார்த்தார்.

முதல் தேதி அன்னையைச் சந்திக்கும் நிர்வாகச் சாதகர்கள் அந்த மாதம் அவர்கள் டிபார்ட்மெண்ட்டில் யார் யாருக்குப் பிறந்த நாள் வருகிறதோ, அதைத் தனிதனியாக கார்டில் குறித்துத் தருவார்கள். அன்னை அந்தக் கார்டுகளில் தாம் பிறந்தநாளன்று சாதகரைச் சந்திக்கும் நேரத்தை கார்டில் குறித்து மறுநாள் கொடுப்பார்கள். பார்க்கச் சம்மதிக்காதவர் கார்டுகள் திரும்பக் கையெழுத்தில்லாமல் வரும்.

நான் என் நண்பர் ஒருவரை அவர் பிறந்த நாளன்று அன்னையைத் தரிசிக்க அனுப்ப விரும்பினேன். அது நிறைவேற வேண்டுமானால், அந்நினைவினுள் பக்தி இருக்க வேண்டும். அன்னையை பிறந்த நாளன்று தரிசிக்க முடியும் என்பது என் நண்பருக்குத் தெரியாது. நான் அதற்காக அவரைத் தயார் செய்ய விரும்புவதும் அவர் அறியாதவை. உங்களால் 72 மணி நேரம் இடைவிடாமல் அன்னையை மனதால் அழைக்க முடியுமா? என்று அவரைக் கேட்டபொழுது அவர் அதற்கு ஒத்துக் கொண்டார். அந்த 72 மணி நேரமும் அந்த வாரம் புதன்கிழமை 7.30 மணிக்கு முடிகிறது. புதன்கிழமை நான் சமாதிக்கு வந்து என் தியானம், வேலை ஆகியவற்றை முடித்துக் கொண்டு 7 மணிக்கு நான் வழக்கமாகச் சந்திக்கும் சாதகரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்படும்பொழுது, உங்கள் நண்பர் பெயரென்ன? அவரை நான் அன்னையிடம் அவர் பிறந்த நாளன்று அழைத்துப் போக விரும்புகிறேன். அவர் பிறந்த நாள் எப்பொழுது? என்று கேட்டார். அதற்கு முன் இந்தச் சாதகரை 5 வருஷமாக எனக்குத் தெரியும். வாரம் இரு முறை நான் இவரை சந்திப்பதுண்டு. நான் Synthesis of Yoga படிக்கும்பொழுது அதில் எழும் ஐயங்களை விளக்க ஏற்றுக்கொண்டவர். இந்த 5 வருஷமாக என்னிடம் அன்னையைத் தரிசிக்க முடியும் என்றோ, பிறந்த நாள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாகவோ சொல்லவில்லை. நண்பரின் இடைவிடாத அழைப்பு முடிய ½ மணிக்கு முன் அவர் அழைப்பு இந்தச் சாதகரைப் பேச வைத்தது. அம்மாதம் முதல் தேதி இந்தச் சாதகர் அன்னையிடம் 15, 20 பிறந்த நாள் தரிசன விண்ணப்பக் கார்டுகளை நீட்டியபொழுது, அன்னை அவற்றைக் கையில் வாங்காமல், சாதகர் கையிலுள்ள கார்டுகளை விரலால் நகர்த்தினார். ஒரு கார்டை எடுத்தார். மாலை 3.30 என்று எழுதினார். இது என் நண்பர் கார்டு. அழைப்பு அன்னை காதில் விழுந்தது. அது மட்டுமன்று, என்னை 5 வருஷமாக அழைக்காத சாதகரைப் பேச வைத்தது.

பக்தியுடன், அன்னையை அழைத்தாலும், அவர் படம் வாங்க நினைத்தாலும், ஒரு புத்தகம் படிக்க விரும்பினாலும், சேவை செய்ய முன் வந்தாலும், ஆசிரமம் வர விரும்பினாலும், சமூகமோ, வீடோ, சூழ்நிலையோ, வக்ரமான மனிதர்களோ, தீயசக்திகளோ, அதைத் தடை செய்ய முடியாது.

கல்லூரி ஆசிரியர் தம் பாடச் சம்பந்தமாக லைப்ரரியில் புத்தகங்களைப் புரட்டியபொழுது ஸ்ரீ அரவிந்தர் புத்தகம் தென்பட்டது. அவர் ஒரு கட்டுரையில் ஸ்ரீ அரவிந்தர் (quotation) எழுதினவற்றைப் பார்த்து, மூலத்தைத் தேடினார். ஸ்ரீ அரவிந்தர் எழுதிய ஒரு பாராவே அவருக்கு (powerful) சக்தி வாய்ந்ததாகத் தோன்றியது. படிக்க முயன்றார். இதன் பலனாக ஆசிரமம் வந்தார். வரவேற்பில் பகவான் படத்தின் முன் நின்றவர் கண்களில் ஊறிய நீர் வடியவில்லை.

கடையில் வாங்கிவந்த பொட்டலம் மடித்த பேப்பர் மூலமாக 1927இல் ஒருவர் வந்தார். ரயிலில் போய்க் கொண்டிருந்தபொழுது மற்றவர் பேசியது காதில் விழுந்ததால், தம் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சேமிப்பை - ரூபாய் 1 - ஒரு விவசாயி எடுத்து அன்னைக்கு அனுப்பினார்.

கப்பற்படையிலுள்ளவர் ஸ்ரீ அரவிந்தர் பற்றிக் கேள்விப்பட்டார். கேள்விப்பட்ட விஷயம் அவரை ஆசிரமம் கொண்டு வந்து சேர்த்தது.

பகவான் எழுதிய புத்தகம் ஒன்றைப் படிக்க விரும்பி, காரியதரிசியிடம் சென்றார். அவர் தம் உதவியாளரிடம் அனுப்பினார். கடற்படை வீரர் ஒரு புத்தகம் வாங்கினார். அன்னையிடம் அனுப்பி அதை ஆசீர்வாதம் செய்யமுடியுமா எனக் கேட்டார். அந்தச் சாதகர் அப்புத்தகத்தை அன்னையிடம் எடுத்துப் போய் அன்னையின் ஆசி பெற்று வந்தார்.

வந்தவர் Life Divine, Synthesis of Yoga, வேறு சில புத்தகங்களையும் வீரரிடம் கொடுத்தார். தாம் வாங்கிய புத்தகமும் ஆசிபெற்று திரும்பி வந்தது. அத்தனைப் புத்தகங்களை வாங்க வந்தவர் நினைக்கவில்லை. அதற்குரிய பணமும் அவரிடம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தம் தயக்கத்தை வெளியிட்டார்.

"இப்புத்தகங்களை அன்னை உங்களுக்குப் பரிசாக அனுப்பியுள்ளார்''

என்று வந்தவர் சொல்யதைக் கடற்படை வீரர் கேட்டுக் கொண்டார். அது காதில் நுழையவில்லை. திகைத்து நின்றார். அன்னையிடம் ஒரு பொருள் போனவுடன் அதை அனுப்பியவர் மனநிலை, ஆன்ம விழிப்பு அவருக்குத் தெரியும். எந்த அளவுக்கு விழிப்புள்ளதோ அந்த அளவுக்கு அருளைப் பொருளாக அன்னை அனுப்புவார். அன்னை அனுப்பும் பொருள் அருளைத் தாங்கி வருவது அருளேயாகும். அவ்வீரர் அத்தனைப் புத்தகங்களிலுள்ள ஆன்மீக ஞானத்தைப் பெறவல்லவர் என அறிந்து அன்னை அனுப்பியிருப்பதால், அவருடைய முயற்சிக்கு அன்னையின் ஆசியும், அனுக்கிரஹமும் உண்டு. திகைப்பு என நாம் அறிவது ஆன்மா விழித்து அருளைப் பெறும்பொழுது, மனம் சொல்லற்று, உடல் செயலற்றுப் போவதாகும்.

ஆன்ம விழிப்பு நமக்குத் திகைப்பாகத் தெரிகிறது.

பகவான் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் பெற்ற அத்தனை ஆன்மீகப் பேறுகளும் அவர்களை வணங்குபவர்கட்கும் உண்டு என்பதை அவர்கள் சொல்லியிருந்தாலும், நம்புவது சிரமமாக இருக்கிறது.

அவர்கட்கு நிரந்தர சித்தியாகக் கிடைத்தது பக்தர்கட்கு ஒரு முக்கிய நேரத்தில் (one time experience) அனுபவமாகக் கிடைக்கும். பாரிசில் அன்னையைப் பஸ் முன்னிருந்து தூக்கி எறிந்து காப்பாற்றியது போலவே சென்னையில் கல்லூரி பிரின்ஸ்பாலை அரை அடி முன்வந்த பஸ்ஸிலிருந்து காப்பாற்ற அதே சக்தி தூக்கிக் கருங்கல் குவியல் மீது போட்டது. அதே அனுபவம் பெங்களூரில் ஒருவருக்கேற்பட்டது.

டீ வேண்டும் என்று நினைத்தபொழுது, பகவான் முன் சுவரில் 3.42 என எழுத்துத் தெரிந்தது. டீ 3.42க்கு வந்தது. அது அவருக்கு நடக்கும், நமக்கு நடக்குமா என்ற கேள்விக்கு அன்னையிடம் இடமில்லை.

தவமிருந்து வரம் பெற்றுப் பெறும் சக்திகளை, ஆன்மாவில் அன்னையுடன் ஒன்றிய நேரம் பிரார்த்தனையின்றி நமக்கு அளிப்பதே அன்னையின் சிறப்பு. ஆன்ம விழிப்பு தியானத்தில் ஏற்படவேண்டும். அது ஏற்படுவதில்லை. ஆபத்து, வேதனை வந்தபொழுது, மனமும், உணர்வும் விலகி ஆன்மா முன் வருகிறது.

பெண் பார்க்க வருகிறார்கள் என்பது பெண்வீட்டாருக்கு tension படபடப்புக் கொடுக்கும் நேரம். பெண்ணுக்கும் அதே நிலை. வருபவர்கள் குறிப்பிட்ட நாளில் வந்துவிட்டால் விசேஷம். அதுபோல் அநேகர் செயல்படுவதில்லை. அதற்கு பலியானப் பெண் ஒருத்தி.

வேதனை அதிகமானால் எதுவும் வேண்டாம் எனத் தோன்றும். விரக்தி உச்சகட்டத்திற்குப் போன அன்று (03-07-96) அவர்கள் வருகிறார்கள் என சுவரில் எழுத்துத் தெரிந்தது. மனம் பூரித்தது.

சுவர் கூறியபடி அவர்களும் வந்தனர். திருமணம் கூடியது. பக்தி மிக்க நேரம் பலன் வருதல்போல், பயம் அதிகமாகிப் பலன் வருவதும் உண்டு. பயம் அன்னையை அணுகவிடாது. ஆனால் அதே பயம் அளவைக் கடந்து சென்றால், அன்னை செயல்படுவார். அந்தச் சட்டம் மற்ற எல்லாக் குணங்களுக்கும் உண்டு. எதுவும் அளவு மீறிப்போனால் அதன் குணம் மாறிவிடும். பயம் அளவுகடந்து போனால், அது மாறித் தைரியம் வந்து அவன் எதிர்ப்பதும் உண்டு. தைரியம் பயத்திற்குத் தெய்வத்தின் உருவம். பக்தர்கட்கு அன்னையே அங்கு வெளிப்படுவார்.

ஒரு ஆபீசர் ஆசிரமம் வந்து பார்த்தபின், தம் குடும்பத்துடன் இங்கு வந்து சேர தீவிர முயற்சி செய்து, தாமும் தம் மனைவியும் தங்கள் வேலைகளை ராஜினாமா செய்துவிட்டு இரு குழந்தைகளுடன் இங்கு வந்து சேர்ந்தார். அவர்களைப் பார்த்தபின் அன்னை அச்சிறு குழந்தையின் போட்டோவைக் கேட்டு வாங்கி, கவனித்து, அது யார் எனக் கூறினார். ஆசிரமச் சாதகர் ஒருவர் சில ஆண்டுகட்கு முன் காலமானார். அவரே அக்குழந்தை என்று அன்னை கூறினார். தகப்பானர் 3 மாதத்தில் மனம் வெறுத்துப் போய்விட்டார். தாயார் ஆசிரம உறுப்பினரானார். பெரிய பெண் குழந்தையும் அதுபோலாயிற்று. அந்தச் சிறு குழந்தையின் ஆத்மா அன்னையை வந்தடைய அவ்வளவு பேரும் வந்தனர் என அன்னை கூறினார்.

அன்னை யார் மீது அக்கறை காட்டுவார், எந்தப் பொருள் மீது அக்கறை செலுத்துவார், ஏன் அப்படிச் செய்கிறார் என்பது பெரும்பாலும் புரியாத புதிராகவே கடைசிவரை இருந்தது.

தம் பிறந்த நாளன்று அன்னைக்குப் பரிசாக வெல்வெட் மெத்தையும், உயர்ந்த சென்ட்டும் எடுத்துக் கொண்டு தம் குழந்தையுடன் தரிசனத்திற்கு வந்தார். அன்னை பரிசுகளைப் பெற்றுக் கொண்டார். குழந்தையை நோக்கி எனக்கென்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று அன்னை கேட்ட பொழுது, குழந்தை சிறு சென்ட் பாட்டில்களை தன் மூடிய கைகளை விரித்துக் காட்டியது.

பேரார்வத்துடன் அன்னை குழந்தையைப் பாராட்டினார். அவை என்ன சென்ட், எங்கு செய்யப்படுகின்றன, அக்கம்பனியின் வரலாறென்ன என்றெல்லாம் குழந்தைக்கு விவரித்தார். குழந்தையை வருடிக் கொடுத்தார். அன்னையின் இனிமை தகப்பனாரைத் திகைக்கச் செய்தது.

தாம் கொண்டுவந்தவையோ, தாமோ அன்னையைக் கவரவில்லை. ஏன் இந்த சின்ன பாட்டில்களை அன்னை அப்படிப் பாராட்டுகிறார் என அவர் வியந்தார். அன்னை பாராட்டியது அந்த சென்ட் பாட்டில்களில்லை, குழந்தையுடைய ஆத்மாவின் ஆர்வத்தையே என நாம் அறியவேண்டும்.

அன்றே குழந்தை கொண்டுவந்த பாட்டில்களை எல்லாம் திறந்து பார்த்தார். அன்னை அவற்றை வெகுவாக ரசித்திருக்கவேண்டும். அன்றே ஓர் டிரஸ்டி கடைத்தெருவுக்குப் போய் அதுபோன்று கிடைக்கும் பாட்டில்களை எல்லாம் வாங்கி வந்தார்.

அன்னையிடம் ஒரு பொருள் போனால், உலகமே அப்பொருளை நாடும். நாம் அன்னைக்கு ஒரு மலர் சமர்ப்பித்தால், ஏதும் அறியாத பலரும் அம்மலரை நாடுவார்கள். மல்லிகை மலரை தினமும் சமாதிக்கு ஒருவர் சமர்ப்பித்தார். மல்கையை அதிகமாகப் பயிரிட ஆரம்பித்தனர். அன்னையின் எஸ்டேட்டுக்கு 15 வருஷமாக வாராத கரண்ட் கனக்ஷனை ஒரு இன்ஜினீயர் பெற்றுக் கொடுத்தார். அதன்பின் புதியதாய் 500 கனக்ஷன் அவர் அவ்வாண்டு கொடுக்க வேண்டியதாயிற்று. தமிழ்நாட்டில் எந்த ஒரு கிராமமும் மின்சாரமில்லாமலிருக்கக் கூடாது எனச் சட்டம் வந்துவிட்டது. இவையெல்லம் தாமே நடந்தவை.

அக்குழந்தை கொடுத்த சென்ட்டை அன்னையே நேரடியாக ஒருவரை அனுப்பிப் பெற்றிருக்கிறார் எனில், அக்குழந்தையின் aspiration ஆர்வம் மிகப் பெரியது.

ஜுரம்

நமக்குப் பிரச்சினைகள் வந்தால் அவை தீரவேண்டும் என நினைக்கின்றோம். மனம் ஓர் அறிவு பெற வேண்டும். உணர்வு ஒரு பக்குவம் பெறவேண்டும், உடலுக்கு ஒரு நல்ல பழக்கம் வேண்டும் என்றபொழுது, இக்குறைகள் புறநிகழ்ச்சிகளில் பிரச்சினைகளாக வெளிப்படுகின்றன.

சுத்தமான தண்ணீரைச் சாப்பிட்டால் நல்லது. அசுத்தமான குடிநீர் வயிற்றுப்போக்கைத் தரும். வயிற்றுப் போக்கு வந்தால் நாம் டாக்டரிடம் போய் மாத்திரை சாப்பிடுகிறோம். ஒவ்வொரு முறையும் டாக்டர் water infection நீர் சுத்தமாயில்லை என்பார். நாம் அதைப் பொருட்படுத்துவதில்லை.

சுத்தமான குடிநீர் சாப்பிடுபவனுக்கும் வயிற்றுப் போக்கு வருகிறது. பிறர் மனம் புண்படும்படிப் பேசுபவன் அவன் எனில், அவன் பேச்சு அடுத்தவர் வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறது. அவனைக் கண்டாலே பேசியவனுக்கு வயிற்றைக் கலக்குகிறது. பிறகு அது வயிற்றுப்போக்காக மாறுகிறது எனில், அவனுக்கு வயிற்றுப் போக்கு, "பிறர் வயிற்றெரிச்சலைக் கிளப்பாதே'' என்கிறது. நாம் அதை அறிய முடிவதேயில்லை. மாத்திரை சாப்பிடுகிறோம். Infection தொற்றுவியாதி என நினைக்கிறோம். காரணத்தை அறியாமல் காரியத்தைப் பார்க்கிறோம், அது முடிவற்றதாகிறது.

அன்னைச் சூழலில் வளர்பவர்கள், அவர் பார்வையில், ஆளுகையிருப்பவருக்குச் சுத்தமான குடிநீர் உண்டு. அவருக்கு வயிற்றுப்போக்கு வர வழியில்லை. பிறர் மனம் புண்படப் பேசுபவரானால், எவரைத் தேடிப் போய் திட்ட நினைக்குமோ, சூழல் அவரை இவர் பார்வையிலிருந்து விலக்குகிறது. வந்து மெனக்கெட்டு, வேண்டுமென்றே அவ்வெண்ணத்தைப் பாராட்டினால், எவராவது வந்து இவரைத் திட்டுவார். இது போன்ற நிகழ்ச்சிகளைக் கேட்டால் அன்னை, "வேண்டுமென்றே செய்வது நம்மையே பாதிக்கும்'' என்கிறார்.

ஆசிரமப் பள்ளியில் படிக்கும் சிறுவனுக்கு மாதந்தோறும் ஜுரம் வருகிறது. இவன் அன்னை ஸ்தாபனத்தில், அன்னைச் சூழலில், அன்னையின் பாதுகாப்பில் வளர்கிறான். எதுவும் வர வழியில்லை. ஆனால் மாதம்தோறும் வருகிறது. ஒரு மாதம் அன்னையிடம் போய் சிறுவனுக்கு ஜுரம் என்றார் தகப்பனார். அன்னை எவருக்கும் புத்திமதி சொல்வதில்லை. சிறுவனும், பெற்றோர்கள் என்ன செய்தார்கள் எனக் கேட்பதில்லை. தாங்கள் செய்யவேண்டியவற்றைச் செய்திருந்தால் ஜுரம் வாராது. அப்படி வந்தவுடன் தவற்றை விலக்கியிருந்தால் அடுத்தமுறை வாராது. ஒவ்வொரு மாதமும் வருகிறது. ஒவ்வொரு மாதமும் தகப்பனார் அன்னையிடம் போய்க் கூறுகிறார்.

அன்னையின் சக்தியும், நேரமும் இதுபோன்ற காரியங்களால் விரயமாகும். அன்னை பையனை டாக்டரிடம் அழைத்துப் போகவும் என்று கூறினார். பெற்றோர் ஜுரம் வந்தவுடன், அன்னையை "அழைத்திருந்தால்'' ஜுரம் போகும், முன்கூட்டிச் செய்ய வேண்டியவற்றைச் செய்திருக்கலாம். அவர்கள் கடமையைச் செய்யாமல் அன்னையிடம் வந்தால் டாக்டரிடம் போ என்கிறார்.

யார் சரியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவற்றைக் கடந்து அன்னையின் கருணை செயல்படுகிறது. பையனுடைய ஆத்மா அன்னைக்கு அமைதியாகக் குரல் தருகிறது. அது அன்னைக்குக் கேட்கிறது. அவனுக்குத் திடீரென ஜுரம் வருகிறது. திடீரெனப் போகிறது என்றார் அன்னை. அவர் கேட்ட குரலுக்கு அவர் தரும் பதில் இதுவே. அதிலிருந்து ஜுரம் வருவதில்லை. நாம் conscious ஆக இல்லாதபொழுது அன்னை நம்மை நோக்கி வந்து நம்மை Conscious ஆகச் செய்யும் வழி இது.

சிகரெட் பிடிப்பது

மது, புகை, அரசியல், தாம்பத்யம் கூடாது என்பது அன்னை தன்னிடம் வந்து யோகத்தை நாடுபவர்கட்கு விதித்தது. பக்தர்கள் குடும்ப வாழ்விலிருப்பதால் இந்த கடைசி நிபந்தனையை அவர்கள் தீவிரமாகப் பின்பற்றுவது என்பதை எதிர்பார்க்க முடியாது.

அரசியல் பொய்யால் வளர்வதால் அன்னை தம் சாதகர்கள் நேரடியாக அரசியலில் பங்கு கொள்ள அனுமதிக்கவில்லை. என்றாலும் ஏராளமான அரசியல்வாதிகள் அன்னையிடம் வந்து ஆசி பெற்றுச் சென்றுள்ளனர்.

மதுவும், புகையும் மனஉறுதியைப் பாழ்படுத்துபவை. யோகம் மனஉறுதியை அதிகப்படுத்தி, அதன் மூலம் ஆத்ம உறுதியை (spiritual will) உயர்த்தி, ஜடத்தை ஆள முயல்வதாகும். மனிதன் தன் தேவைகளுக்காக உழைத்து, தேவைகளை நாடிப் பெறுவது மனித வாழ்வு. யோகத்தை மேற்கொண்ட பின்னும் இதுவே சட்டம் என்றாலும், ஓரளவு தானே அவன் தேவை அவனை நாடி வருவதைக் காணலாம். அந்த அளவுக்கு அவன் மனம் உறுதியுள்ளது எனலாம்.

மது அருந்தினால், மீண்டும் அருந்தச் சொல்லும், அதை மனம் மீற முடியாது என்பதால் மனம் அந்த அளவுக்கு உறுதியை இழந்து விட்டது. நாளாக நாளாக மனஉறுதி குறைந்துகொண்டே வரும்.

புகையை slow poison மெதுவாக நம்மை அரிக்கும் விஷம் என்கிறார் அன்னை. பக்தர்களாக அன்னையை ஏற்றபின் இது போன்ற பழக்கமுள்ளவர்கள் தானே அப்பழக்கம் மறந்து விடுவதைக் காண்கிறார்கள்.

அன்னை சக்தி எந்த அளவு பரவுகிறது எனில், பக்தர்களுடன் வேறு வகையில் தொடர்பு கொள்ளும் பீப்பாய் குடியன் என்று பெயர் வாங்கியவரும், chain smoker இடைவிடாது சிகரெட் பிடிப்பவர் என்பவரும் அவற்றை நெடுநாள் தாமே விட்டு விடுகிறார்கள்.

மனித சுபாவம் எல்லா நிலைகளிலும் இருப்பதால் அன்னையின் அருளும் எல்லா நிலைகளிலும் இருக்கின்றது. அன்னை சொல்வதை அப்படியே ஏற்பவர்கள் சிலர், மனம் ஏற்காவிட்டாலும் செயலில் ஏற்பவர்கள் சிலர், ஏற்காதவர்கள், எதிராக நடப்பவர்கள், அதை அன்னையிடமே sincere உண்மையாகக் கூறுபவர்கள் என சுபாவம் எல்லா நிலைகளிலும் செயல்படுகிறது. அவரவர்கேற்ப அன்னை அனைவருக்கும் அருள் செய்கிறார்.

புகையை விட முடியாதவரை மனைவி கடிந்து கொண்டாள். விடப்பிரியப்பட்டாலும், முடியவில்லை என்றால் என்ன செய்வது, எல்லாவற்றிற்கும் அன்னையே கதி, அன்னையே துணை என அன்னைக்கே பிரார்த்திக்கலாம். ஒருவர் அன்னையிடம் போய் தம் இயலாமையைக் கூறுகிறார். இது நல்லதன்று என அன்னை பதில் கூறுகிறார்.

அன்னையிடம் கூறியதில் மனப்பாரம் இறங்கியது. ஆனால் சுபாவம் இனி புகையைத் தொடரலாம் எனக் கூறுகிறது. மனைவி கடிந்துகொண்டு அன்னையிடம் சொல்லிய பின்னும் இதைத் தொடரலாமா என்று கேட்ட பின்னும் மீதியிருந்தவற்றைப் புகைத்துவிட்டு அத்துடன் மறந்துவிடுகிறார்.

அன்னையின் அருள் அவருக்குப் புகையை விடும் சக்தியை அளித்தது. என்றாலும் சுபாவம் போட்டி போட்டது. போட்டுத் தோற்றது.

அன்பர்கள் அன்னையிடம் வந்தபின் பெறும் அனுபவங்கள் பல. சில அவர்கட்குச் சந்தோஷம் கொடுக்கும். பல புரியா. அனுபவம், நாம் unconscious கண் மூடியாக இருக்கும்பொழுது - பின்னணியிலிருக்கும், என்ன என்ற விபரம் தெரியாது - நல்லாயிருக்கு, என்போம்.

அன்னை அறையைச் சுத்தம் செய்ய பலருக்கு அனுமதியுண்டு. ஸ்ரீ அரவிந்தர் அறைக்கும் அதுபோல் பலர் உண்டு. சம்பக்லால் வெளியே போனபின் அவர் தம்பி பான்ஸிதார் ஸ்ரீ அரவிந்தர் அறையில் அன்பர்களை அழைத்துச் செல்வார். பிரம்மசாரிகளுக்கு அடையாளமாகச் சில ஆசிரமங்களில் நீண்ட அங்கியுண்டு. அது போன்ற அங்கியும் Skull cap தலைமுழுவதும் மூடிய குல்லாயும் வெள்ளைநிறத்தில் அணிந்தவர் ஒருவர் ஸ்ரீ அரவிந்தர் அறைக்கு வெளியேயுள்ள இரண்டு தாழ்வாரங்களையும் துடைப்பார். பான்ஸிதார் ஒரு வாரம் வெளியே போக வேண்டி அவர் பொறுப்பை இவரிடம் ஒரு வாரம் அளித்திருந்தார். தினமும் பகவான் அறைக்குச் செல்லும்பொழுது இவர் முகம் one degree ஓரிழை அதிகமாகப் பொன் நிறமானதை நான் கவனித்தேன். என்னுடன் தினமும் வருபவர், "எத்தனை வருஷமாக இதே அறையில் அடுத்த வராந்தாவில் சேவை செய்கிறார். இந்த ஒரு வாரம் பகவான் அறைக்கே வந்தது என்ன பெரிய மாறுதல். His face looks as if it is gold plated. தங்கத்தகடாக முகம் மாறிவிட்டதே'' என்றார்.

அன்னை அறை என்பது 3, 4 இடங்கள். அதிலோர் இடத்தை வாரம் ஒரு நாள் சுத்தம் செய்பவர், "நான் தியானம் செய்யும்பொழுது என் உடல் ஐஸ்போலச் சில்லிட்டு விடுகிறது. நெஞ்சில் தங்கநிற ஊற்றாக ஒளி புறப்படுகிறது'' என்றார்.

அன்னை விளையாட்டு மைதானத்திலிருக்கும்பொழுது, தம் கடமைகளை முடித்த ஒருவர் மரத்தடியில் உட்கார்ந்து கண்ணை மூடினார். பொன்நிற முத்துகள் பொல பொல என உதிர்ந்தன. கண்ணைத் திறந்தால் மறையும், மூடினால் தெரியும். இவருடைய ஜாதகப்படி ஆயுள் முடிந்துவிட்டது. ஏனோ அன்னையிடம் இவர் அதைக் கூறவில்லை. ஆனால் ஜாதகம் விலக வேண்டுமென்ற அவா. அன்னை முன்வரும் சந்தர்ப்பம் வந்தபொழுது அதை ஏதாவது ஒரு வகையாகச் சொல்ல வேண்டும் என்ற விருப்பம், இலட்சியம் பூர்த்தியாவதை நான் காணமுடியுமா? என்று கேட்பார். நிச்சயமாக முடியும். உன் ஜாதகத்தை கடலில் போடு என்று அன்னை கூறியவுடன் அவருக்குப் புரிந்தது.

நாம் செய்யாத பிரார்த்தனைக்கு அன்னை பலன் தருவதுபோல், செய்ய மறுக்கும் பிரார்த்தனைக்கும் பலன் தருகிறார். நமக்கு எது பிரச்சினை என்றே தெரியாத நிலையிலும் அன்னை நம்மை ஆன்மிக அனுபவமாக வந்தடைகிறார். முடிந்த ஆயுள் வளரவேண்டும் என்பதற்காக அன்னை இவருக்குப் பொன் முத்துகளைக் காட்சியாகக் கொடுத்தார் என்பதை முதலில் இவர் அறியவில்லை.

நம்மைச் சேர்ந்தவர்கள் பழைய நிகழ்ச்சிகளைச் சொல்லும் சமயம் எப்படி நமக்கு ஆபத்து உருவாயிற்று, எப்படி அது விலகியது என்பதை சில நேரங்களில் அறியலாம். ஆபத்து வந்ததே நமக்குத் தெரியாத நேரம் அன்னை செயல்பட்டு அதை விலக்கியதையும் நாம் அறியும் சந்தர்ப்பம் வரும். எத்தனை தரம் அன்னை செயல்படுவதைக் கண்டாலும், மனம் மீண்டும் மீண்டும் மனிதர்களையும், மருந்தையும், சட்டத்தையும், பணத்தையும் நம்பும். அன்னை நினைவு வரவில்லை என்றும் தெரியாது.

அன்னை முதல் நினைவு வருவது நம்பிக்கைக்குஅடையாளம்.

இப்பொழுதல்லாம் சென்னை வசதிகள் பாண்டியில் கிடைக்கின்றன. வெளிநாட்டு வசதிகளும் சில நம் நாட்டில் கிடைக்கின்றன. அந்த நாளில் மருந்து வாங்க சென்னை போக வேண்டும். கண்ணாடி போட இந்த ஜில்லாவில் பெரும்பாலும் சென்னைக்கும், மற்றவர்கள் பாண்டிக்கும் போவார்கள். ஆபரேஷன் என்றால் சென்னை பெரிய ஆஸ்பத்திரிக்கு போகும் நாள் அது.

குழந்தைகளை ஆசிரமப்பள்ளியில் சேர்த்துவிட்டு இங்கேயே தாயார் அவர்களுடனிருக்கிறார். தகப்பனார் சொந்த ஊரிலிருக்கிறார். உடல் நலம் குன்றியவுடன் ஆசிரம டாக்டரிடம் கொண்டு போனார்கள். இது ஆப்பரேஷன் செய்ய வேண்டியது என்றார். சென்னைக்குச் செல்வதாக முடிவெடுத்து, கணவனுக்கு தந்தி கொடுக்கச் சொன்னார். செய்தி அன்னைக்குப் போயிற்று.

கணவன் என்ன டாக்டரா? அவர் செய்யக் கூடியது என்ன? ஏன் அவருக்குச் சொல்ல வேண்டும். நானிருப்பது உங்களுக்கெல்லாம் தெரியவில்லை. என்மீது உங்களுக்கு நம்பிக்கையில்லை. நான் கவனித்துக் கொள்ளமாட்டேனா? என்று அன்னை கேட்டார். பெரிய ஆஸ்பத்திரியில் ஆசிரமவாசியின் மகன் வேலை செய்கிறார். அன்னை அவரை அழைத்துப் பார்க்கச் சொன்னார். புதுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். மருந்து கொடுத்தார்கள். சற்று குணம் தெரிந்தது. பிறகு பூரணமாகக் குணமாய்விட்டது.

அன்னையின் காலடியிலேயே இருந்தாலும் நம்பிக்கை எழுவது சுலபமன்று. ஒரு பிரச்சினை என்றவுடன் மனம் அன்னையை நினைப்பது முடிவான பக்தி, கடைசி நிலை நம்பிக்கை. அதுபோல் நினைத்தபிறகு அன்னை செயல்படுவதைப் பார்க்க அற்புதமாக இருக்கும்.

மனிதன் ஜோஸ்யம், மருந்து, அம்மன் குறியை மட்டும் நம்புவதில்லை.

தெய்வம் தவிர மற்றெல்லாவற்றிலும் மனிதனுக்கு நம்பிக்கையுண்டு என்றால்

மிகையாகாது. 30 வருஷமாக உள்ள ஒரு பிரச்சனையை மனதில் இன்று கொண்டு வந்து, இது சம்பந்தமாக அன்னையை முதன்மையாக நினைக்கப் போகிறேன் என முடிவு செய்தால், அது முதுகு வலியானாலும், குதர்க்கமான மருமகளானாலும் 3 தலைமுறைக்கு முன் கொடுத்த பணமானாலும், 7 வருஷத்திற்கு முன் இழந்த வேலையானாலும், பாக்கியாகவுள்ள 8 லட்சச் சீதனமானாலும், அன்னையை முன் நிறுத்திய பின் விஷயம் பூர்த்தியாகும். மாதக்கணக்காக தள்ளிப் போகாது. மணிக்கணக்கில் முடியும், தவறினால் நாள் கணக்கில் பூர்த்தியாகும் என்பதைக் காண்பதே ஓர் அற்புத அனுபவம்.

ஒருவருக்கு 4 பிள்ளைகள். 4வது பிள்ளைக்கு 15 வயதாகி விட்டது. உங்களுக்கு எத்தனைப் பிள்ளைகள் என்று பேச்சு வரும் பொழுதெல்லாம் எனக்கு 5 குழந்தைகள் என்பார் பிறகு திருத்திப் பேசுவார். அந்த ஐந்தாவது பிள்ளையும் பிறந்தது. வாய்தவறி அன்னைச் சூழலில் சொல் எழும்பொழுது அது எதிர்காலத்தில் நடைபெறப் போவதைக் குறிக்கும் என்பதை அன்பர்கள் கண்டதுண்டு.

வடதுருவத்தில் வளரும் செடிகள் அன்னை ஆரோவில்லில் நடச் சொன்னார். வியப்போடு அவரை எப்படி என்று கேட்டபொழுது ஆரோவில்ல், பனி (snow) வடதுருவம்போல் பெய்யும் என்று கூறினார்.

மனத்துள் அன்னை ஸ்ரீ அரவிந்தரை அழைத்துப் பேசுவதுண்டு. 1950க்குப் பின் அன்னை அப்படிப் பேசினார். 1959க்குப் பின் ஸ்ரீ அரவிந்தர் பதில் கூறுவதுடன் நேரில் வந்து பேசுவது போலவும் அன்னையிடம் பேசினார்.

சில கேள்விகட்கு ஆங்கிலத்தில் பதில் சொல்வார். ஓரிரு சமயங்களில் தாம் சொல்வதை எழுதிக் கொள்ளச் சொல்வார். சில சமயங்களில் பதில் சொல்லமாட்டார்.

சாவித்திரியின் பகுதிகளை அன்னை வாசிப்பதை ரிகார்ட் செய்துள்ளனர். The Mother என்ற நூலையும் அன்னையின் குரல் கேட்கலாம். அன்னையின் music இசை ஏராளமாக ரிகார்ட் ஆகியுள்ளன. அவை உடல் வியாதியிருந்தால் குணப்படுத்தும். சூழலைத் தூய்மைப்படுத்தி, உயர்த்தும், தியானம் கொடுக்கும், அமைதி ஏற்படுத்தும். அன்னையின் இசை என்பதால் அன்னைக்குரிய சக்திகள் அனைத்தும் அதற்குண்டு.

இந்த ரிகார்ட்டிங் எடுக்கும்பொழுது அன்னை வழக்கமாக concentrated மிகவும் உன்னிப்பாக இருப்பார். தவறு என்பதே அறியாதது அன்னை செயல். ஒருமுறை இது போன்ற ரிகார்டிங்கில் Forever love, O beautiful slave of God என்ற வரியை அன்னை தம்மையறியாமல் மாற்றி, Forever love, O powerful slave of God என்று படித்தார்.

எப்படி இந்த மாறுதல் வந்தது? என அன்னை மனத்துள் பகவானைக் கேட்டார்.

"நீ வாசித்தது எதிர்காலத்திற்குரிய உண்மை'' என்று பகவான் அன்னைக்குப் பதில் சொன்னார்.

அன்னையின் பாதுகாப்பு

Protection பாதுகாப்பு என்ற மலர் செய்தவையெல்லாம் சேர்த்து எழுதினால் ஒரு புத்தகம் எழுதலாம். சமாதியை விட்டு வெளியில் போகும்பொழுது முகம் தெரியாதவர் கொடுத்த 1 பாதுகாப்பு மலர், கொடைக்கானல் ரோட்டில் உருண்டுவந்த பாறையிலிருந்து தன்னைக் காப்பாற்றும், மதம்பிடித்து ஓடிய யானையிடமிருந்து காரைக் காப்பாற்றும், எதிரில் வந்த புலியை மனம் மாறிப் போகச் சொல்லும் என்று அவர் எனக்குக் கடிதம் எழுதும்வரை நினைக்க தெரியவில்லை.

அன்னையின் சூழல் பாதுகாப்பு அளிக்கிறது.

 

அன்னையை அழைத்தால் அழைப்பு அவரை அறியாமல் பாதுகாப்புத் தருகிறது.

அன்னையே, நான் வருகிறேன், பாதுகாக்கின்றேன் என்று பாதுகாப்பளிக்கிறார்.

புதுவைக் கடலோரத்தில் மாணவர்கள் கடலில் நீந்தும்பொழுது அன்னை ஓரிடத்தைக் குறிப்பிட்டு, இதனுள் என் பாதுகாப்புண்டு என்கிறார். அந்த இடத்தில் பாதுகாப்பு நிரந்தரமாக இருக்கிறது.

அன்னை மருந்து சாப்பிடக்கூடாது என்கிறார். சில சமயங்களில் மருந்து அவசியமாய்ச் சாப்பிடவேண்டும் என்கிறார். ஆப்பரேஷனைத் தவிர்க்கச் சொல்கிறார். சில சமயங்களில் ஆப்பரேஷன் செய்து கொள் என்கிறார். நான் வந்து காப்பாற்றுவேன் என்றும் கூறியிருக்கிறார். அன்னை வருவது நமக்குத் தெரிவதும் உண்டு. தெரியாமலிருப்பதும் உண்டு.

காஷ்மீருக்குப் பனிநாளில் அமர்நாத்திற்குச் சென்றவர் திரும்ப வந்து "அன்னையிடம் அங்கு அதிகக் குளிர்'' என்றார். ஆமாம், ரொம்பவும் உடல் குளிரால் நடுங்கியது. நான் உங்களோடு அங்கேயிருந்தேன் என்றும் கூறியுள்ளார். சாதகர் ஒருவருக்கு வயிற்றுவலிக்காக ஆப்பரேஷன் செய்ய முடிவுசெய்து அன்னையிடம் கூறியபொழுது, அன்னை மறுத்துவிட்டார். பிறகு டாக்டர் ரிப்போர்ட் எல்லாவற்றையும் அன்னையே வாங்கிப் படித்துவிட்டு, சரி ஆப்பரேஷன் செய்யலாம், நான் உடனிருந்து பாதுகாக்கிறேன் என்றார்.

ஆப்பரேஷன் தியேட்டரில் சாதகர் அன்னை தம் அருகில் நிற்பதைக் கண்டார். ஆப்பரேஷன் முடிந்து அன்னையிடம் வந்து விவரம் கூறியபொழுது, ஆமாம், எனக்குத் தெரியும். நான் அங்கிருந்தேன் என்றார்.

ஸ்ரீ அரவிந்தர் அறையில் பலர் கூடி அவரவர் வேலையைச் செய்து கொண்டிருந்தபொழுது, ஸ்ரீ அரவிந்தர், ரிஷபசந்த் என்ன செய்கிறார்? என்று பார்க்கிறேன் என்றார். ரிஷபசந்த் அவர் வீட்டிலிருக்கிறார். ஆனால் பகவானுக்கு அவர் செய்வது தெரிகிறது.

சூட்சுமப் பார்வையிருந்தாலும் எல்லா நேரமும் அதை அவர்கள் பயன்படுத்துவதில்லை. தேவையான சமயங்களில் பயன்படுத்துவதே வழக்கம். சூட்சுமப்பார்வை உள்ளவர் அன்னையைத் தரிசிக்க விரும்பினால், தங்கள் மனதில் அன்னையின் உருவத்தை கற்பனை செய்து, கற்பனையை ஸ்தூலத்திலிருந்து (gross body) சூட்சுமத்திற்கு நகர்த்தினால் அன்னை தரிசனம் கிடைக்கும். பகவானை இதுபோல் கண்டவர் தம் concentration மனதை மேலும் சற்று ஆழப்படுத்திய பொழுது பகவான் உருவம் மாறியது. யார் எனப் புரியவில்லை. எழுந்து லைப்ரரிக்குப் போனார், தற்செயலாக என்சைக்ளோப்பீடியாவைப் புரட்டினால் அவர் கண்ட அதே உருவம் தெரிந்தது. அது லியனார்டோவின் படம், அது பகவானின் முன்ஜன்மம்.

இது கலியுகம். மனிதனுக்குச் சூட்சுமப் பார்வை சென்ற யுகங்களிலிருந்தது; இப்பொழுதில்லை. அன்னையைத் தரிசித்தவர், "இவர் பிரெஞ்சுக்காரர், விலையுர்ந்த உடை உடுத்தியிருக்கிறார், லிப்ஸ்டிக் போட்டிருக்கிறார்'', என்றவர் அநேகர். பகவான் ஸ்ரீ அரவிந்தர் "முதல் முறை அன்னையைப் பார்த்ததும் அவர் தெய்வம் என உணர்பவருக்கு ஆன்மா விழிப்பாக இருக்கிறது'' என்று கூறியிருக்கிறார்.

அன்னையின் தெய்வீகம் தெரிவதில்லை. அவர் கொடுக்கும் பிளசிங்பாக்கட்டின் சக்தியை நாம் அறிவதில்லை. ஒவ்வொரு முறை காணிக்கை அனுப்பும்பொழுதும் எனக்கு ஒரு பிளசிங் பாக்கட் வருகிறது. இது ஏராளமாகச் சேர்ந்துவிட்டது. நான் இதை என்ன செய்ய? இனி அனுப்பாதீர்கள்? என்று கூறியவர் பலர். அன்னை சாதகர் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்த சமயத்தில் அவர் கொடுத்த பிளசிங்பாக்கட்டை எங்கெல்லாமோ கண்டு வருத்தப்பட்டு, அதன் மகிமையை நீங்கள் அறியவில்லை என்றார்.

சென்னையிலிருந்து வடநாடு சென்ற ஆபீசர் ஒருவர் அன்னை பக்தர். அங்கு அவர் குடியிருந்த இடத்தில் எவரும் அவரைக் கண்டு கொள்வதில்லை. அன்னை பக்தர்களுக்குப் புதிய இடத்தில் இரண்டு விதமான அனுபவங்கள் உண்டு. ஒன்று போகுமிடமெல்லாம் நம்மை நெடுநாள் தெரிந்தவர்கள்போல் அன்பாகவும், மரியாதையோடும் நடத்துவார்கள். நம் அந்தஸ்திற்குரிய மரியாதையைவிட அதிகமான மரியாதை கிடைக்கும். அடுத்தது எவரும் நம்மைத் திரும்பிப் பார்க்கமாட்டார்கள். அன்னையின் மகிமையை ஏதோ ஒரு வகையாக அறிபவர்கள் அதிக அன்பு செலுத்துவார்கள். அறியவே முடியாதவர்கள் பாராமுகமாக இருப்பார்கள்.

இந்த ஆபீசருக்குக் குழந்தைகள் மீது பிரியம். எல்லாக் குழந்தைகளும் அவரைச் சூழ்ந்து கொள்வார்கள். அன்னை படத்தைப் பார்த்து யார் அது எனக் கேட்பார்கள்.

அவற்றுள் 2 வயதுக் குழந்தைக்கு உடல்நிலை மோசமாகி ஆஸ்பத்திரியிலிருக்கும்பொழுது அவர் தகப்பனார் இவரிடம் ஓடி வந்தார். குழந்தையை வந்து பார்க்கும்படி அழைத்தார். ஒரு பிளசிங் பாக்கெட்டுடன் வேகமாகப் போனார். I.C.U.இல் குழந்தை பிரக்ஞையற்று கிடந்தது. நர்சிடம் பிளசிங்பாக்கெட்டைத் தலையணை அடியில் வைக்கும்படிக் கேட்டார். அவர் மறுத்துவிட்டார்; டாக்டரிடம் சென்றார். அவர் அன்னை பக்தர். டாக்டர் நர்சை அழைத்து இவரைக் குழந்தையிடம் அழைத்துப் போ என்றார். குழந்தை கண்திறந்து பார்த்தாள். ஆபத்தான நிலையைக் கடந்துவிட்டாள் குழந்தை என்று பார்த்த நர்ஸ் ஆச்சரியமாகக் கூவினாள். குழந்தை பிழைத்துக் கொண்டாள் என கூச்சட்டு நர்ஸ் ஆரவாரப்படுத்தினாள்.

பிளசிங்பாக்கெட் செய்தவற்றையெல்லாம் சேர்த்து ஒரு நூலாக எழுதினால் அது அன்னையின் ஆன்மீக மகிமையை வர்ணிப்பதாக அமையும்.

பிரசாதம்

வாழ்க்கையில் நல்லதுண்டு; ஏற்றுக்கொள்கிறோம், கெட்டதுண்டு. விலக்குகிறோம். நல்லதும் கெட்டதும் கலந்திருந்தால் மனம் குழப்பமடைகிறது. நல்லதற்காகக் கெட்டதை அனுபவிப்பவர் சிலர்; கெட்டதால் நல்லதை விட்டுவிடுபவர் பலர். நல்லது ஒரு பகுதி. கெட்டது அடுத்த பகுதி. நல்லதும் கெட்டதும் சேர்ந்ததே முழுமை,

கெட்டதை நல்லதாக அறிந்து இரண்டையும் ஏற்பதே முழுமை.

கெட்டதை நல்லதாக மாற்றுவது அன்னை சக்தி. அதைச் செய்ய உதவுவது சமர்ப்பணம், சமர்ப்பணத்தின் அடிப்படை நம்பிக்கை. சமாதிக்குப் போனால் மயக்கம் வருகிறது. எப்படிப்பட்ட மயக்கத்தையும் அழிக்கும் சமாதிக்குப் போனால் மயக்கம் வந்தால் என்ன செய்வது? சமாதிக்கு அடிக்கடி போவதால், அங்கு அதிக நேரம் இருப்பதால் பெறும் ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கும் தீய சக்தி மயக்கத்தை அளிக்கிறது. அன்னையை இடைவிடாது அழைத்தால் மயக்கம் நீங்குகிறது. ஒரு சக்தியால் அல்லது ஒருவரால் மயக்கம் வருகிறது எனில் நம்முள் மயக்கத்தை ஏற்படுத்த ஒன்றிருக்கவேண்டும். அதைக் கண்டு விலக்கினால் மயக்கம் வருவதில்லை, அன்னையின் முறைகள் பல

 1. கெட்டது கலந்திருப்பதால் அதனுடன் சேர்ந்து வரும் நல்லதை அதற்காக விலக்குவது எளிய முறை.
 1. அன்னையைத் தீவிரமாக அழைத்து, கெட்டதை அழிப்பது சிறந்தது.

 1. கெட்டதை ஏற்பது நம்முள் எது என அறிந்து விலக்குவது அதனினும் சிறந்தது. இதனால் கெட்டதே நல்லதாக மாறும்.

ஒரு சாதகருக்குத் தினமும் அன்னையிடமிருந்து பிரசாதம் வரும். அவர் நண்பர் அப்பிரசாதம் பெறுவதற்காகத் தினமும் அவரிடம் வருவார். வருபவரிடம் சாதகர் பிரசாதத்துடன் வீண்வம்பு பேசுவார். பிரசாதமும் வம்புப்பேச்சும் கலந்திருப்பதால் என்ன செய்வது என்று குழப்பம். அந்த நாளில் அன்னை ஆசிரமக்கட்டிடடத்துள் பல இடங்களுக்கும் வருவார். எந்த இடத்திற்கு எந்த நேரம் வருவார் என்று அனைவரும் அறிவார்கள். குழப்ப மேலீட்டில் அன்னைக்குக் கடிதம் எழுதினார்; அன்னையிடம் கொடுக்கும்பொழுது தனியே பார்த்தால் நல்லது என நினைத்தார், பிரார்த்தனை செய்தார், உடனிருந்தவர் (வம்பு பேசுபவர்) உடனே வேறெங்கோ போய்விட்டார், அன்னையைக் கண்டதும் கடிதத்தை நீட்டினார், கடிதத்தைக் கையில் வாங்கிய அன்னை, பிரித்துப் படிக்காமல்

"பிரசாதம் பெற இனி அங்குப் போக வேண்டாம்''

என்றார். தம் மனதிலிருந்த கேள்விக்கு அன்னை பதில் சொல்லியதும், வம்புப் பேச்சை விலக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியதும், கடிதம் எழுதியவருக்கு வியப்பூட்டியது.

ஸ்தாபனத்தின் ஜீவன்

விவசாயி அறுவடை செய்தால் முதலில் குலதெய்வத்திற்குப் பொங்கலிடுவான். வேலைக்குப் போனால் முதல் சம்பளத்தைக் காணிக்கையாக்குவது நம் மரபு. அன்னைக்கு அது போன்ற காணிக்கை முதல் அறுவடை, முதல் பழுத்த பழம், முதற் சம்பளம் மிக முக்கியமானது. முழுமனதோடு கொடுக்கும் காணிக்கை முழுச்சம்பளமானாலும் அன்னை, பக்தனை சேவைக்கு அழைத்து அதையே கடைசிச் சம்பளமாக்கிய நிகழ்ச்சியும் உண்டு.

அன்னை ஆசிரமத்திற்கு நிர்வாகத் தலைவியாக மட்டும் இல்லை, பொறுப்புள்ள நிர்வாகியாக எல்லாவற்றையும் நேரிலே தாமே கவனிக்கும் தலைவியாக மட்டுமில்லாமல், எல்லா நடவடிக்கைகட்கும் தாமே ஆன்மீகப் பொறுப்பை (conscious responsibility) ஏற்றுக் கொண்டார். ஆசிரமம் வந்த ஒருவர் தம் brief case கைப் பெட்டிச் சாவியைத் தொலைத்துவிட்டு, யாராவது பூட்டை உடைத்துத் தருவார்களா என்று ஆசிரமம் ஒர்க் ஷாப்புக்குப் போனபொழுது அங்கு வேலை செய்பவர் அன்னை அனுமதி வேண்டும் என்று அவரைத் திகைக்க வைத்தார். "பூட்டை உடைக்கக்கூடாது, புது சாவி - இரண்டு சாவி - செய்து கொடு'' என அன்னை உத்தரவிட்டார். ஜடப் பொருளானாலும் ஆசிரமச் சூழலில் வந்த பூட்டுக்கு அன்னையின் பாதுகாப்பு உண்டு.

12 கோழிகளை வளர்க்க அனுமதித்த அன்னை, "தினமும் முதல் முட்டையை என்னிடம் அனுப்பு'' என்று சொல்லியிருந்தார். தினமும் 11 மணிக்கு முட்டை வரும். முதல் முட்டை அன்னையை அடைந்தால் எல்லா முட்டைகட்கும், கோழிகட்கும், கோழிப்பண்ணைக்கும் அன்னை அருள் அதன் மூலமாகப் போய்ச் சேரும்.

பட்டுப் போன மாமரம், கோடாரி பொருத்தப்பட்ட ஆலமரம், குவிக்கப்பட்ட தென்னை மட்டைகள், பிரார்த்தனை செய்யாது வயிற்று வலியால் வேதனைப்படுபவர், கடலில் நீந்தும் குழந்தைகள், கடலால் அடித்துச் செல்லப்படும் மதில், பாண்டியிலிருந்து புறப்படும் கப்பல் என தம் சூழல் வந்த அனைத்துடனும் தொடர்பு கொண்டவர் அன்னை. 150 பேர் இருக்கும்வரை என்னையறியாமல் எவரும் சிந்திக்கவும் முடியாது என்றார். ஒரு நாள் காலை 11 மணிக்கு வேறு வேலையாக இருந்த அன்னை வேலையை நிறுத்திவிட்டு

"மணி 11. முட்டை இன்னும் வரவில்லை''

என்றார். ஸ்தாபனத்துடன் ஜீவனுள்ள தொடர்பு கொண்டவர் அன்னை. இன்றும் நாம் நம் வாழ்வை அவருக்கு அர்ப்பணித்தபின் அன்னையின் பொறுப்பை நம் அன்றாட வாழ்வில் காணலாம்.

அன்னையின் திருநாமம்

தாயார் தன்னை விட்டுவிட்டு ஊருக்குப் போய்விட்டார் என்பதால் அழ ஆரம்பித்த சிறுகுழந்தை சாக்கலேட், பொம்மை, ஐஸ்கிரீம் ஆகியவற்றைத் திரும்பிப்பார்க்காமல் அழ ஆரம்பித்து மணிக்கணக்காய் அழுவதை எவராலும் சமாளிக்க முடியாமல் பசியால் வாடும் குழந்தையைப் பார்க்க முடியாமலிருக்கும்பொழுது, அங்கு வந்த இளைஞன் குழந்தையைக் கண்டு பரிதாபப்பட்டான். ஆறுதல் சொல்ல முனைந்தால் அதிகமாக அழுகிறது குழந்தை. எதுவும் செய்யமுடியாத நேரம் ஒதுக்குப்புறமாய் உட்கார்ந்து Mother, Mother, Mother என்று தீவிரமாய் சொன்னபொழுது குழந்தை களைத்துத் தூங்கிவிட்டது. அன்னையின் திருவுருவத்தைப் புருவமத்தியிலும், குழந்தை நெஞ்சிலும் உருவகப்படுத்தும்பொழுது குழந்தையின் முகம் தெளிவடைந்தது. தூங்கி எழுந்த குழந்தை சிணுங்கியது. சாப்பிட மறுத்தபொழுது, இளைஞன் குழந்தையே Mother என்று சொல்வதாகக் கற்பனை செய்தான். சாப்பிட ஆரம்பித்தது. சாப்பாட்டை அன்னையாக நினைத்தான். குழந்தை வழக்கம்போல் சாப்பிட்டது. குழந்தையை அன்னையின் மடியில் கிடப்பதாக நினைத்தான். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு விளையாட ஓடி வந்தது. இதுபோன்ற அனுபவம் பலருடையது.

யோகத்தை மேற்கொள்பவர்கட்குப் பல்வேறு காரணங்களால் மனநிலை கலைந்து சித்தப் பிரமையடைவதுண்டு - பிறர் பைத்தியம் என்று கருதுவதுபோல் நடப்பதுண்டு. அன்னை அவர்களை ஒன்றும் செய்யாதே என்பார். அவர்கள் எல்லா இடங்களுக்கும் போய் இஷ்டப்படி நடப்பார்கள். அதுபோன்று ஒருவருக்கு ஒரு சாதகியின் மீது குறி. நிலையழிந்த பெண், இந்த சாதகியைக் கண்டால் திட்டுவதும், காரித்துப்புவதும், கல்லால் அடிப்பதும் பயங்கரமானபொழுது சாதகி அன்னையிடம் முறையிட்டார். "என் பெயரைச் சொல் என்றார்'' அன்னை. அடுத்தமுறை தாக்குதலுக்குள்ளானபோது, அவதிப்பட்டு மீண்டும் அன்னையிடம் முறையிட்டார். என் பெயரைச் சொன்னாயா? என்றார். முடியவில்லை எனப் பதில் வந்தது. வாயால் M-O-T-H-E-R என்று முனைந்து சொல் என்றார் அன்னை.

அடுத்த தாக்குதல் போது, தாக்குதல்தான் நினைவு வருகிறது. பயம் எழுகிறது. அன்னை பெயரைச் சொல்ல முடியவில்லை. முனைந்து வெற்றி பெற்றார். தம்மை நோக்கி வந்தவர், தம்மிடம் வாராமல் மாறிப் போவது சாதகிக்கு வியப்பான அனுபவம்.

அதன்பிறகு சாதகியை நோக்கி அவர் வருவதேயில்லை. அன்னையின் நாமம் சக்தி வாய்ந்தது. அதை உச்சரிக்கவும் மனோ சக்தி தேவை.

நாம் அன்னைக்குரியவர்

தற்கொலை செய்துகொள்ள ஒருவருக்கு உரிமையில்லை! அது உன் உயிரானாலும், அந்த உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை உனக்கில்லை எனச் சட்டம் கூறுகிறது.

ஒரு பக்தருக்குச் செல்வம் பெருகியது. தான தர்மங்கள் செய்தார். அவை ஏராளமாக வளர்ந்தன. அவர் தர்மம் செய்வதை ஒருவர் அன்னையிடம் புகழ்ந்து பேசினார். அதெல்லாம் என் பணம். எப்படி கொடுக்கலாம்? என்று அன்னை கேட்டார். நாம் எதையும் நம் பொருள் என்கிறோம். நம்மிடம் உள்ளவை எல்லாம் அன்னையின் பொருள்கள். உரிமையுடையவர் அன்னையே என நமக்குத் தோன்றுவதே இல்லை.

ஆன்மாவால் அன்னைக்கேயுரியவரானபின் தம் மனைவி மக்களை, உத்தியோகத்தை, சொத்துகளை அன்னைக்கே உரியவை எனக் கருதாத பக்தர் மனைவி மரணத்தின் வாயிலுக்கு வந்தார், பிரார்த்தனையால் பிழைத்தார். மகன் தொலைந்து போனான், பிரார்த்தனையால் கிடைத்தான். வேலை போயிற்று, பிரார்த்தனையால் வந்தது. சொத்துகள் போயின, பிரார்த்தனையால் கிடைத்தன. இவற்றை 10, 20 வருஷம் அனுபவித்தபின் அவர் உயிர் போயிற்று. பிரார்த்தனை காப்பாற்றியது. அத்தனை வருஷம் கழித்து "என் மனைவி, மக்கள், சொத்து, வேலை ஆகியவற்றை அன்னை எடுத்துக் கொண்டு மீண்டும் தம்முடையதாக எனக்குத் திருப்பிக் கொடுத்தார்'' என்றார்.

ஆசிரமத்தில் ஒருவர் தம் குழந்தைகளை கம்பால் அடித்ததை அன்னையிடம் கூறியபொழுது, அன்னை அவரை அழைத்து, குழந்தைகளை அடிக்கக் கூடாது. அவை உன் குழந்தைகளில்லை. என் குழந்தைகள். பொறுப்பாகக் கவனிக்க உன்னிடம் கொடுத்திருக்கிறேன் என்றார்.

ஆசிரமத்துக் குழந்தைகள் நாங்கள் அன்னையின் குழந்தைகள் எனச் சந்தோஷமாகச் சொல்வதைக் காணலாம். அன்னை ஜடமான பொருள்களைக் கவனமாகப் பார்க்கச் சொல்கிறார். சொந்தக் குழந்தைகளை அன்பாக நம்மால் வளர்க்க முடிவதில்லை.

அன்னை போற்றும் முயற்சி

நாம் நோய் வந்துவிட்டது என்கிறோம். அன்னை, "நோயை நாம் அனுமதித்துவிட்டோம்'' என்கிறார். வயால் அழுபவன் கோழை. வலியைப் பொறுத்துக் கொள்பவன் மனிதன். சாவைக் கண்டு பயப்படுதல், வலிபொறுக்காமல் அழுவது, போன்றவற்றை அன்னை என்றுமே ஆதரித்ததில்லை. கஷ்டம் வந்த காலத்தில் வீரமாகப் போராடுவதை அன்னை போற்றிப் புகழ்வதுடன், அருளை அபரிமிதமாகப் பொழிவார். பென்சிலின் ஷாக் வந்து இதயம் நின்ற பிறகு நான் சாகமாட்டேன் என மரணத்தோடு போராடியவரின் கதையை அன்னை புகழ்ந்ததுடன் அவரைப் பிழைக்கச் செய்தது Supremental power சத்தியஜீவியசக்தி என்றார். இதுபோன்று ஒரு சக்தியுண்டு, அன்னை என்றொருவர் உலகில் வாழ்கிறார் என்று அறியாமல் வீரமாகப் போராடும் மனப்பாங்கு உள்ளவருக்கும் அருள் செய்வது அன்னை சக்தி.

ஆசிரம விளையாட்டு மைதானத்தில் மல்யுத்தம் பயின்றபொழுது ஒருவர் அடுத்தவரை பயங்கரமாகத் தாக்கியதால் அவர் விழுந்து கழுத்தெலும்பு முறிந்துவிட்டது. டாக்டர் அருகிலேயே இருந்ததால் உடன்வந்து முறிந்த எலும்பைச் சரிசெய்ய முயன்றார், முடியவில்லை. அத்துடன் இது போன்ற எலும்பு முறிவை நான் கண்டதில்லை. சென்னைக்கு specialist இடம் அழைத்துப் போ என்றார். இந்த எலும்பு முறிவைச் சரிசெய்யும் திறமையுள்ள டாக்டர் சென்னையில் இல்லை. போரில் சிக்கலான முறிவுகளைச் சிகிச்சை செய்த ஒருவர் இருப்பதை அறிந்து அவரிடம் சென்றார்கள்.

கழுத்துக்குக் கீழே உணர்ச்சியில்லை. 1 மாதம் காலம் traction கட்டிய கட்டுக்குள் அடிபட்டவரை வைத்தனர். சிறுநீர் கழிக்கவும் அவரால் முடியாது. ஒவ்வொரு முறையும் டாக்டர் உதவி தேவை. அந்த டாக்டரும் "இதுபோன்ற complex fracture முறிவை நான் பார்த்ததில்லை'' என்றார். குணமானால், நெடுநாளில் குணமாகும் என்பதே அவருடைய அபிப்பிராயம். ஆனால் அடிபட்டவர் வெகு விரைவில் குணமாகிக் கொண்டு வந்தார். டாக்டருக்கு எதுவும் புரியவில்லை. "இதெல்லாம் நான் அறியேன் என்றார். ஏதோ சக்தி வேலை செய்கிறது. நான் அறிந்த மருத்துவத்தில் இவை இல்லை'' என்றார்.

1 மாதத்தில் அவரைப் புதுவைக்கு அழைத்து வந்தனர். வயது 20உம் ஆகவில்லை. கழுத்தில் மாவுக்கட்டு. உடலில் உணர்வில்லை. 6 மாதத்தில் உட்கார முயலலாம் என்றனர் டாக்டர்கள்.

பாண்டிச்சேரி வந்ததிலிருந்து அன்னையைப் பார்க்க வேண்டும் எனப் பையன் சொல்லிக் கொண்டேயிருந்தான். அன்னை வந்தார். அடிபட்டவன் பூரித்து போனான். அன்னை புறப்பட்டபொழுது மீண்டும் எப்பொழுது வருவீர்கள் எனக் கேட்டான். உடல் முன்னேற்றமிருந்தால் வருவேன் என்றார் அன்னை.

அன்னை வருவது உடல் குணமாவதைவிட முக்கியமாகிவிட்டது. அன்னை வர வேண்டுமெனப் பையன் உட்கார முயன்றான். 6 மாதமாகும் என்று டாக்டர் சொல்லியபின் பகீரதப்பிரயத்தனம் செய்த பையனுக்கு அன்னை கங்கையாக அருளைப் பொழிந்தார். சில நாட்களில் பையனால் கொஞ்ச நேரம் உட்கார முடிந்தது.' அன்னை தாம் சொன்னபடி வந்தார். உன்னால் சாப்பிட முடியும்பொழுது வருகிறேன் என்றார்.

உடல் உணர்வில்லை. விரல்கள் கூடவில்லை. எதையும் பிடிக்க முடியாது. இந்த நிலையில் பையன் முயன்றான். உடலால் முயன்றதை விட மனதாலும், மனத்தின் உறுதியாலும், ஆன்ம விழிப்பாலும் முயன்றான். அம்முயற்சி தெய்வீகமானது. அது அருளை அஸ்திவாரத்திலிருந்து எழுப்புவது. ஒரு நிமிஷம் விடாமல் முயன்றவன், முயற்சியின் திருவுருவமானான். ஒரு ஸ்பூன் சாப்பிட முடிந்தது. அன்னை வந்தார். நீ நடக்கும்பொழுது மீண்டும் வருகிறேன் என்றார்.

பெருமுயற்சியால் ஓரிரு அடி எடுத்து வைத்தான். அன்னை வந்தார். இனி நான் வரமாட்டேன் என்றார். நீ என்னை வந்து பார் என்றார். எப்படி முடியும் என்று அன்னையை ஆச்சரியமாகக் கேட்டான். உன்னால் நடக்க முடியும், என்னை டென்னீஸ் மைதானத்தில் வந்து பார் என்றார்.

புதுவை வந்த ஒரு மாதத்தில் பையன் ஓடினான். டென்னீஸ் விளையாடும்பொழுது அன்னை அவனை அருகில் பயிற்சி பெறவும், ஓடவும் சொன்னார்.

உடலால் செய்யும் முயற்சிக்குப் பலன் அதிகம். உணர்வால் முயல்வது கடினம். அதிகப் பலனுண்டு. மனம் முயல்வது என்பது வைராக்கியம், உறுதி. அன்னையின் அருளை அதிகமாகப் பெறுபவை அவை. ஆன்மாவின் முயற்சி என்பது பொறுமை, நிதானம். அதுவே மனிதன் அறிந்த நிலைகளில் முடிவானது. அன்னை இங்கிருந்து ஆரம்பிக்கின்றார்.

ஆன்மாவின் பொறுமையுடன் மனம் உறுதி பூண்டது அடுத்த கட்டம். ஆன்மாவின் பொறுமையுடன், மன உறுதியால் உணர்வைச் செயல்படுத்துவது அடுத்தது. பொறுமை, நிதானம், மன உறுதி, உணர்வின் முயற்சியோடு உடல் செயல்படுவது கடைசி நிலை. இவ்வாலிபனுக்கு நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. எல்லாவித மனித ஒத்தாசையும், டாக்டர் உதவியும் அருளால் கிடைத்தன. அன்னையின் அருள் பூரணமாகச் செயல்பட்டது. அவனுடைய உறுதி, முயற்சி, அருளைக் கடைசிக் கட்டத்தில் செயல்படச் செய்தது. அன்னை சொல் பலிக்கும். நம்பிக்கை தவறாது. அருள் அழைக்காமல் செயல்படும் என்பதற்கெல்லாம் இந்நிகழ்ச்சி உதாரணம்.

மேடம் அலெக்ஸாண்டர்

இவர் அன்னையின் நண்பர். இந்தியாவில் அக்கறை கொண்டவர். Occult forces சூட்சுமச் சக்திகளின் செயல்களை அறிபவர். அவர் அலமாரியில் பொருள்கள் திடீரென்று மறைவதும், சில நாள் கழித்து மீண்டும் வருவதுமுண்டு. அன்னை புதுவை வந்து பிரான்ஸ் திரும்பிய பின் இவரிடம் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிச் சொல்யிருக்கிறார். இந்திய வைஸ்ராயைப் பார்த்து புதுவை வர ஏற்பாடுகள் செய்து புதுவையில் ஸ்ரீஅரவிந்தரைச் சந்தித்தார். அப்படியிருந்தும் சென்னை போலீஸ் அவரை விட்டு வைக்கவில்லை. புதுவையில் என்ன செய்தீர்கள் என்று அவரைச் சென்னையில் கண்டு போலீஸ் அதிகாரிகள் கேட்டனர்.

பகவானைக் கண்டு பேசியவர் அவருடைய அறிவின் ஆழத்தைக் கண்டு வியந்தார். அதைவிட ஸ்ரீ அரவிந்தருக்கு உடன் உள்ளவர் மீதுள்ள கட்டுப்பாடு அவரால் நம்பமுடியவில்லை. தத்துவம் பேசியபின் ஸ்ரீ அரவிந்தரிடம் "என் சொந்த விஷயம் பேசவேண்டும்'' என நினைத்தார். ஆனால் அதை வெளியிடுமுன் ஸ்ரீ அரவிந்தர் ஆணையிட்டதுபோல் அங்கிருந்த 4 சாதகர்களும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு வெளியேறினர். அம்மையாருக்கு அது ஆச்சரியம்.

இவர் இமயமலைச் சாரலில் ஓர் ஆசிரமம் போன்ற நிறுவனம் ஏற்படுத்தினார். முதலில் அந்த ஊருக்குப் போனதும், காட்டினுள் சென்று தியானம் செய்ய விருப்பப்பட்டார். புலி உள்ள இடம் அது என்றார்கள். அவர் காதில் விழவில்லை. காட்டுக்குப் போனார். தியானம் செய்தார். கண் திறந்தபொழுது புலி வருவதைக் கண்டார். ஆனால் அவர் பொருட்படுத்தவில்லை. மீண்டும் கண்ணை மூடினார். வெகுநேரம் கழித்துத் திறந்தபொழுது அங்குப் புலியில்லை.

1965இல் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஆசிரமத்திற்குச் சிரமம் வந்தபொழுது மேடம் அன்னைக்குக் கடிதம் எழுதி நிலைமை எப்படியிருக்கிறது என்று விசாரித்தார்.

அன்னையின் நண்பர்கள் அவரை ஓவியராகவே அறிவார்கள். ஜப்பானில் அன்னைக்கு வேண்டியவர்கள் பலரிருந்தனர். அவர்களுடன் தாகூர் அங்கு வந்திருந்தபொழுது போட்டோ எடுத்துக் கொண்டார்.

அதன் பிரதியை ஒருவர் அன்னைக்குக் கொண்டுவந்த பொழுது 50 ஆண்டுக்குப் பின்னால், என்னிடம் அது உள்ளது என போட்டோவைத் தேடிக் காண்பித்தார்.

வக்கிரபுத்தி

கல்யாணத்திற்கு முதல்நாள் இந்தக் கல்யாணம் நின்றுவிட்டால் தேவலை என்று கூறும் பெண்ணையோ, பிள்ளையோ பற்றி நாம் என்ன சொல்வது? வக்கிரபுத்தி என்றுதான் கூறவேண்டும். நல்ல சொல்லை ஆயிரம் முறை சொன்னாலும் பலிப்பதில்லை. கெட்ட சொல்லை ஒரு தரம் சொன்னாலும் பலிக்கும். "தினமும் மனைவியுடன் சண்டை போட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது'' என்றவர் இரு ஆண்டுக்குப் பின் மணந்து, தம் சொற்கள் பலித்ததைக் கண்டார். ஒருவருக்குச் சூன்யம் வைத்துவிட்டார்கள். அவருக்கு மாடியிலிருந்து குதிக்கத் தோன்றியது, எலக்ட்ரிக் பிளக்கில் கை வைக்கத் தோன்றும், சூன்யம் இல்லாதபொழுது அதுபோல் தோன்றும் மனிதருண்டு.

ஆப்பரேஷன் செய்துகொள்ள ஆசைப்படுவார் என்று நம்பமுடியவில்லை. பலருக்கு இந்த ஆசையுண்டாம். அதுபோல் ஒரு சிறுபெண்ணுக்கு நீண்டநாளாக ஆசை. ஒரு சமயம் அடிபட்டு எலும்பு முறிந்தது. ஆசை பூர்த்தியாகப் போகிறது என்று குழந்தைக்குச் சந்தோஷம்.

அன்னையை உத்தரவு கேட்டார். அன்னை சம்மதம் தெரிவித்ததுடன் தினமும் ஒரு ரோஜா கொடுத்தனுப்பினார். வாழ்க்கை மனித அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் விதம் வேறு. அன்னை மனிதர் விருப்பங்களைப் பூர்த்தி செய்வது வேறு. பரீட்சைக்கு படிக்கவில்லை என்பவருக்குப் படுக்கையாகும் வியாதி வந்து பரீட்சைக்குப் போக முடிவதில்லை என்றால் அவர் விருப்பத்தை வாழ்க்கை இவ்விதமாகப் பூர்த்தி செய்தது என்கிறோம். குழந்தை என்றாலே பிடிக்காதவருக்குக் குழந்தை பிறக்காமல் போவதுண்டு. பிறந்தால் அது குழந்தை செய்த பாவம்.

வருஷக்கணக்காக எந்த வேலையும் செய்யாதவர், 10 வருஷ சுகத்திற்குப்பின் என்னால் ஆளில்லாமல் முடியாது. எனக்கு வேலை செய்ய ஓர் ஆள் வேண்டும் என்று கேட்டார். நான்கு ஆண்டுகட்குப் பின் அன்னை அவர் கோரிக்கையை நிறைவேற்றினார். வேறிடம் போன பின் வாரம் ஒரு நாள் பாத்திரம் தேய்க்க வேண்டும், ஒரு நாள் சமையல் செய்யவேண்டும் என்ற நிபந்தனையுள்ள ஸ்தாபனம் அது. அவர் கேட்டதை அன்னை இதுபோல் பூர்த்திசெய்தார்.

ஆப்பரேஷன் செய்துகொள்ள இக்குழந்தைக்கு அன்னை அனுமதியளித்தார். சிறு குழந்தை என்பதால் பெற்றோர் ஆப்பரேஷனுக்குச் சம்மதம் தெரிவித்துக் கையெழுத்துப் போடவேண்டும். பெற்றோர் நேரத்தில் வாராததால், ஆப்பரேஷன் தள்ளிப்போயிற்று. முறிந்த எலும்பை சோதனை செய்ததில், அது கூடிவர ஆரம்பித்திருந்ததால் டாக்டர்கள் ஆப்பரேஷன் கூடாது என முடிவு செய்தனர்.

அன்னை அனுதினமும் அனுப்பிய ரோஜா, எலும்பு முறிவை குணப்படுத்தியது. குழந்தையின் ஆப்பரேஷன் ஆசை தியேட்டருக்குப் போகும் அளவு பலித்தது! அன்னைக்கு விருப்பமில்லாததால், ஆப்பரேஷன் நடைபெறவில்லை. அன்னை கூடாது என்றதை செய்பவர்கள் பலர். அன்னை கூறிய எல்லையைக் கடந்தவுடன், பணம் வாராது, ஆள் கிடைக்காது, எதுவும் கூடி வாராது, மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பதைப்போல் முயல வேண்டியிருக்கும்.

கொள்ளிவாய்ப் பிசாசு

கொல்லையில் வேலை செய்பவர்கள் மாலை வேளைகளில் கொள்ளிவாய்ப் பிசாசைக் கண்டேன் என அலறிப்புடைத்துக் கொண்டு வந்து, அதன் பிறகு அங்கு வேலை செய்ய வருவதில்லை.

கல்லூரி மாணவர் இரவில் எழுந்து உட்கார்ந்து நாய்போல், நரி போல் ஊளையிடுகிறார்.

எங்கள் சொந்த வீட்டில் குடியிருக்க முடியவில்லை. இரண்டு நாளாகக் கூச்சலும் குழப்பமும் ஏற்படுகிறது என்பதால் வீட்டை விட்டு வெளியேறினோம். பல வருஷமாக நாங்கள் திரும்பிப் போக முடியவில்லை என்பது புகார்.

எந்த டாக்டருக்கும் பிடிபடாத வயிற்றுவலி 8 வருஷமாக இருக்கிறது. வீட்டில் தகடு இருப்பதாகக் கூறுகிறார்கள்.

எந்த நல்ல செய்தி வந்தாலும் உள்ளேயிருந்து ஏதோ ஒன்று சிரிக்கிறது. அத்துடன் விஷயம் கெட்டுப் போகிறது.

இரண்டு மணி நேரத்திற்கு மேல் தூங்க முடிவதில்லை. கெட்ட சொப்பனம் வருகிறது. அதன்பின் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டியிருக்கிறது.

கணவன் இறந்தார் என்பதைச் சொல்லும்பொழுதும் உள்ளிருந்து சிரிப்பு வாய்வரைவந்து சிரித்தே விடுகிறது.

என்னைக் கூட்டிலிருந்து விலக்கிவிடுங்கள். நானிருக்கும்வரை கம்பனி உருப்படாது. எந்த நல்லது வந்தாலும் அதற்காக நாம் மெனக்கெட்டு, செலவு செய்யும்வரை நான் பார்த்துக் கொண்டிருப்பேன். இனி வரவு வேண்டும் என்ற சமயம் அதைத் தடுக்கவேண்டும் என்று உள்ளிருந்து குரல் எழும். அது தடைப்பட்டுவிடும். நான் இனி இங்கு இருக்கக்கூடாது.

அன்னை படத்தைக் கொல்லையைச் சுற்றி எடுத்துப் போன பின் கொள்ளிவாய்ப்பிசாசு போய்விட்டது. Blessing packet ஊளையைத் தடுத்து நிறுத்தியது. வீட்டில் உள்ள தகடு பிரார்த்தனையால் அகன்றது. டாக்டருக்குப் பிடிபடாத வியாதியைக் கொடுத்த நல்லவர் மனம் மாறியபின் வயிற்றுவலி போய்விட்டது. உள்ளே சிரிப்பதை அகற்ற வேண்டும் என்ற பிரார்த்தனை ஒருவருக்கு 2 வருஷத்திலும், அடுத்தவருக்கு உடனேயும் பலித்தது. சாமந்திப் பூ கெட்ட சொப்பனம் போகும் அளவுக்குத் தெம்பு கொடுத்தது. உள்ளதைப் பேசியவரை விட்டு தீய சக்தி கொஞ்சம் கொஞ்சமாக அகன்றது.

இப்படிப்பட்டவர்கள் திருவுருமாற்றம் அடைய என்னிடம் வருகிறார்கள் என்று அன்னை கூறுகிறார்.

அன்னை பேரால் சொல்கிறேன் வெளியே போ என இந்தச் சக்திகளிடம் கூறினால் அவை எழுந்து வெளியே போவது தெரியும். தெரியாவிட்டால், போய்விட்ட பிறகு தெரியும்.

புகைப் பிடித்தல்

யோகத்தை ஏற்க அன்னை நாம் விலக்க வேண்டும் என்று கூறுபவை 4.

1. அரசியல் 2. தாம்பத்ய உறவு 3. புகைப்பிடிப்பது 4. மது.

பொதுவாக அன்னையை நாடி வருபவர்களில் 90% மேல் புகைப் பிடிப்பதில்லை. அதனால் அவர்கட்குச் சிரமம் இருப்பதில்லை.

முதல் முறை ஆசிரமம் வந்து போனவுடன் நம்மையறியாமல் பல மாறுதல்கள் ஏற்படும். பேச்சு அளவு கடந்து குறையும். கோபம் மறையும் அல்லது அதிகமாகும். புகைப் பழக்கமிருந்தால் மறைந்து போகும்.

தினமும் போடும் சண்டை நம் வீட்டை விட்டே போய்விடும். நம்மையறியாமல் சுத்தம் அதிகரிக்கும். இருவர் என்னிடம் வந்து இன்று எனக்கு 30 வயது பூர்த்தியாகிறது. பொய் சொல்வதை நிறுத்த விரும்புகிறேன் என்றனர்.

ஸ்ரீ அரவிந்தர் சுருட்டு புகைப்பார். அன்னை ஒரு முறை புகை முகத்தில் பட்டவுடன் முகத்தைச் சுளித்தார். ஓகோ, இப்புகை பிடிக்கவில்லையா? என்றவர் அதன்பின் சுருட்டை விட்டுவிட்டார்.

சாக்கலேட், ஐஸ்கிரீம், சூயிங்கம் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுபவர் விட முடிவதில்லை. அவர்கள் விதம், பாணி பல.

1925இல் சிகரெட் பழகியவருக்கு அன்னையைப் பார்க்க விருப்பம் ஏற்பட்ட பின் சிகரட் தடை என அறிந்தார். அவர் ஊருக்கு வந்த ஆசிரமவாசி புகைபிடிப்பவர்கள் ஆசிரமத்தினுள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.

பத்து வருஷப் பழக்கத்தை விட முடியாமல் திணறியவர் ஒருநாள் அதிகமாகச் சிகரட் புகைத்துவிட்டு அன்னை படத்திற்கு வணங்கி, இப்பழக்கம் அடியோடு போக அனுக்கிரஹம் செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.

மறுநாளிலிருந்து அவருக்கு சிகரட் நினைவே வரவில்லை. பிறகு ஆசிரமம் வந்தபொழுது அன்னை சட்டத்தைக் கேள்விப்பட்டார். ஆசிரமவாசிகள் சிகரட் பிடிக்கக் கூடாது என்பதை அந்த சாதகர் சிகரட் பிடிப்பவர்கள் ஆசிரமத்திற்குப் போகக்கூடாது என்று தவறுதலாகச் சொல்லியதில் தாம் பெரிய முயற்சி செய்து அதிலிருந்து விடுதலை பெற்றேன் என்றார்.

ஈஸனோபீலியா

நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதி. ஆஸ்த்மா, T.B. போல் தொந்தரவு செய்யாது. ஆனால் எளிதில் குணமாகாது. 2½% தான் அதற்கு லிமிட். அதற்கு மேல் போனால் மூச்சடைக்கும். தூங்க முடியாது. சிரமமம் கொடுக்கும்.

ஒரு பக்தருக்கு 2½% இருக்க வேண்டியது 65% ஆகி, படுத்த படுக்கையாகிவிட்டார். தூங்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. மூச்சுவிட முடியவில்லை. வேதனை. படுக்கவும் முடியவில்லை. வைத்தியம் நடக்கிறது. உடல் மெலிந்துவிட்டது. எழுந்து நிற்க முடியவில்லை. நடந்து பாத்ரூம் போவது நினைக்கவும் முடியாத ஒன்று; ஆறு மாதமாவது ஆகும் என்பது டாக்டர்கள் அபிப்பிராயம்.

அறையில் அன்னை படம் மாட்டியிருக்கிறது. அன்னையிடம் வேண்டாத நேரமில்லை. பலன் இல்லை. ஒரு நாள் கண்ணீர்விட்டு உருகி வேதனையுடன், என் விதவைத் தாய்க்கு நான் ஒரே மகன், நான் படும் வேதனை அதிகம்; என் தாயின் துயரம் அதிகம். ஏன் என்னை இப்படியே வைத்திருக்கிறீர்கள்? குணப்படுத்தக்கூடாதா? என்று அன்னையைக் கேட்டார்.

அன்று தூங்கிவிட்டார். கனவில் தான் ஆசிரமத் தியான மண்டபத்திலிருப்பதாகக் கண்டார். அன்னை படிக்கட்டில் இறங்கி வருகிறார். அவரைக் கட்டி அணைத்துக் கொள்கிறார். ஆனந்த பரவசத்தில் தம்மை மறந்தார். அன்னை மறைந்தார். ஏன் என்னைவிட்டுப் போனீர்கள் என அழுதார். கனவு கலைந்தது, எழுந்தார். பாத்ரூம் போக நினைத்தார். மனைவியை எழுப்பலாமா என்ற நினைவு வந்தவுடன், நடந்து பார்ப்போம் என நடந்தார். முகம் அலம்பினார், திரும்பி வந்து படுத்துத் தூங்கிவிட்டார், காலையில் மனைவி எழுப்பினார். நான் பிடித்துக் கொள்கிறேன். நடந்து வாருங்கள் என்றார். தாம் எழுந்து நடந்ததைச் சொல்லவே மனைவியால் நம்ப முடியவில்லை. டாக்டரை அழைத்தார்.

டாக்டரிடமும் அதையே சொன்னார். நடந்தது உண்மையானால் நடங்கள் பார்க்கலாம் என்றார். நடந்தார். இந்த நிலையில் எப்படி நடக்க முடிகிறது என்றார். தாம் கண்ட சொப்பனத்தை டாக்டரிடம் சொன்னார்.

டாக்டர் படத்தை வணங்கினார்.

அது தெய்வசக்தி.

இந்நிலையிலுள்ள ஒருவரை நடக்க வைப்பது தெய்வசக்தியே; என்றார் டாக்டர். மனம் மருந்தையும், டாக்டரையும் நம்பும்வரை பலனில்லை.

அன்னையை மட்டும் நம்பியவுடன் பலன் வந்தது.

மனம் மருந்தைவிட்டு அன்னையை நாடியவுடன், தீராத வியாதி தீர்கிறது.

பிரார்த்தனையும் தியானமும்

அன்னை எழுதியவற்றுள் முக்கிய நூலாகும். தினமும் டைரியில் எழுதியவை இவை. 1912இல் ஆரம்பித்து இடைவெளிவிட்டு எழுதப்பட்டன. பகவானைப் பார்த்த மறுநாள் அன்னை எழுதியது.

"உலகில் அந்தகாரத்தில் ஆயிரம் பேரிருந்தாலும்

 

கவலையில்லை. நேற்று நான் கண்டவர் இருக்கும்வரை

 

சத்தியம் ஜெயிக்கும் என்பது உறுதி''.

வேறோர் இடத்தில், மனிதனுக்காக அன்புடன் நான் செய்த சமையலை அவன் மறுத்ததால் இறைவனுக்கு அதை அளித்தேன் என்று எழுதியுள்ளார்.

உடலுக்குள் உடல் என்பது யோகத்தில் சூட்சுமப் பகுதியைப் போன்றது. உடலிலிருந்து வெளிவந்து, அவ்வுடலிலிருந்தும் மீண்டும் வெளிவருவது என்பவை யோகம். அதுபோல் 12 முறை செய்ததை அன்னை இங்கு குறிக்கிறார். சூரியனும், சந்திரனும் அவருடலில் தெரிவதை விவரிக்கின்றார்.

புதுவைக்கு வந்த பின்னும் எழுதினார். அதுபோல் அவர் எழுதியவை 5 volumes. எழுதியவுடன் முதலில் படிப்பது ஸ்ரீ அரவிந்தர். அவர் எழுதியவை பிரெஞ்சு மொழியில். பகவானுக்குப் பிரெஞ்சில் அதிகப் பயிற்சியும், பிரியமும் உண்டு. அன்னை எழுதியவற்றில் பல பகுதிகளை, பகவான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். மற்றவற்றைப் பிரசுரம் செய்யும்படி அன்னையிடம் கூறினார்.

பகவான் சொன்னபடியே அன்னை செய்தார். Prayers and Meditations என்ற தலைப்பில் அவர் டைரி வெளியாயிற்று. அத்துடன் வேறொன்றும் அன்னை செய்தார். பிரசுரத்திற்கு எடுத்துக் கொண்டவை ஒரு பகுதியே. பிரசுரத்திற்காக அன்னை அனுப்பாத பகுதிகளை அன்னை எரித்துவிட்டார். நம்மால் இன்று நினைத்தும் பார்க்கமுடியாத நிகழ்ச்சி அது. அன்னை தம்மை விலக்கிக் கொண்டு செயல்படுவதற்கு இது பெரிய உதாரணம்.

பகவான் எழுதப் பிரியப்பட்டது சாவித்திரி காவியம் மட்டும். மீதி அவர் எழுதியவை எல்லாம் அவரே விருப்பப்பட்டு எழுதியவை அல்ல. பல்கலைக் கழகப் பேராசிரியராக இருக்க, ஏராளமான புத்தகங்களைப் படித்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களை scholar அதிகம் படித்தவர்கள் என்பார்கள். thinker சிந்தனையாளராக இருக்க வேண்டும் என்பது scholarக்கு அவசியமில்லை. சிந்தனையாளரைக் கடந்த நிலை தத்துவஞானி original thinker என்பது. பகவான் அதைக் கடந்த நிலையில் இருந்தவர். ரோமாபுரி சரித்திரத்தை எழுத நினைத்தாராம். அதற்கு ஏராளமாகப் படிக்க வேண்டும் என்பதால்

அதை அவர் செய்யவில்லை. தத்துவ ஞானியைக் கடந்த நிலை poet கவிஞனுடையது. யோகி அதையும் கடந்த நிலை. தம்மை ஒரு கவிஞராகவே பகவான் கருதினார். இந்தியாவுக்கு வரும் முன் சாவித்திரி எழுத வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதிலிருந்தது. அதை முதல் எழுதிய போது 14 வரிகளில் காவியம் முடிந்துவிட்டது. sonet என்ற செய்யுள் இலக்கியநெறி 14 வரிகளில் அமைவது. முடிவாக சாவித்திரி 12 புத்தகங்களாகவும், 23,814 வரிகளாகவும் முடிந்தது.

"சூட்சும ஞானமும், ஆன்மீக அனுபவமும் உள்ளவரே 'சாவித்திரியை' விளக்க முடியும். யாரும் அதைச் செய்ய முடியாது. நான் ஒரு நாள் அதைச் செய்ய விரும்புகிறேன்'' என்று அன்னை கூறினார்.

சாவித்திரியைப் படித்துவிட்டு, "இது நான் நேற்று பெற்ற அனுபவம்'' என்றார் அன்னை. அன்னை முதல்நாள் பெற்ற அனுபவத்தை, பகவான் அடுத்த நாளில் எழுதியது சாவித்திரி.

வெகு நாள்வரை பகவான் தாமே அதை எழுதினார். பார்வை மங்கிய பின் தாம் சொல்வதை எழுத ஒருவரை நியமித்தார். 1950இல் ஜுன் மாத அளவில் பகவான் சாவித்திரியை உடனே முடிக்க வேண்டும் என்று அவசரப்பட்டதை, டிசம்பரில் அவருடைய முடிவின் முன்னோடியாகக் கருதுகிறார்கள்.

1946வரை சாவித்திரியை, பகவான் தவிர யாரும் பார்க்கவில்லை. ஆசிரமக் கவி ஒருவருக்கு மட்டுமே அது தெரியும். ஏன் அத்தனை வருஷமாக யார் கண்ணிலும் படாமல் வைத்திருந்தார். யாருக்கும் தெரியக்கூடாது என்று பெருமுயற்சி எடுத்தார் என்பதை அவர் கூறவில்லை.

அன்னை சாவித்திரியைப் படித்து ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள். அந்த ரிகார்டிங் செய்ய ஆங்கில உச்சரிப்புச் சரியாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு சொல்லின் உச்சரிப்பையும் டிக்ஷனரியைப் பார்த்து அறிய தாம் பெருமுயற்சி செய்ததை விவரித்துள்ளார்.

ஷேக்ஸ்பியர் சகஸ்ரதளத்திற்கு கீழ் உற்பத்தியானது, வேதம் சகஸ்ரதளத்திற்கு மேலிருந்து எழுதியது என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். சகஸ்ரதளம் என்பது மனிதனுடைய உச்சி நிலை. அந்நிலையைக் கடந்தது முனிவர் நிலை. சாவித்திரியை overmind தெய்வ நிலையிலிருந்து கூடியவரை எழுத முயன்றேன் என்கிறார். எவ்வளவு வரிகளை overmind கொண்டு போக முடியுமோ அவ்வளவையும் மாற்றி எழுதியதாகச் சொல்கிறார்.

வேதம் உற்பத்தியான இடத்தைவிட 3 நிலை உயர்ந்தது சாவித்திரி உற்பத்தியான இடம் என்பதே நாம் அறிய வேண்டியது. அளவு கடந்த மந்திரச் சக்தி சாவித்திரிக்கு இருப்பது அது பெரும்பாலும் overmind poetry என்பதால்தான்.

ஞானம், யோகம், சித்தி

வறட்சியான கிராமத்தை வளமான இடமாக்க முனைந்தார் ஒரு சிப்பாய். மழை நீர் ஓடுவதைத் தடுக்க, கரை கட்டினால் கிணற்றில் நீர் மட்டம் ஏறும், பிறகு மோட்டார் போடலாம் என்பதைக் காதால் கேட்டு, மனதால் புரிந்து செயல்பட்டு மகாராஷ்டிராவில் அந்தக் கிராமத்தை அவர் வளமாக்கினார், ஞானத்தால் பலன் பெற்றார் இவர்.

ஒரு நகைக்கடை வளமாகச் சம்பாதிப்பதைப் பார்த்து ஜவுளிக்கடை, மளிகைக்கடை, ஷாப், பேப்பர் கடை எல்லாம் நகைக் கடைகளாக மாறின. இது போட்டி. இவர்களுக்கு ஞானம் பயன்படாது. அறிவால் விளங்கிக் கொள்ளாமல் அனுபவத்தால் அறிபவர் இவர்.

எல்லோரும் கரும்பு போட்டுப் பலனடைகிறார்கள், நீ மட்டும் ஏன் சும்மா இருக்கிறாய் என்றால் யார் இதெல்லாம் செய்வது என்பவருண்டு. அவருக்கு ஒரு கூட்டாளி, பங்காளி வந்து தாமே அவர் நிலத்தில் கரும்பு போட்டுப் பலன் பெற்றுக் கொடுப்பதும் உண்டு. அது பலனையே நேராகப் பெறுவதாகும். பங்காளி போனால் கரும்பும் போய்விடும்.

தத்துவம் தெரிந்து அதை யோகப் பயிற்சியாக்கிச் சித்தி பெறுபவர் அபூர்வம். Life Divine இந்தத் தத்துவத்தைக் கூறுகிறது.

பிறரைக் கண்டு போட்டி போட்டு பலன் அடைபவர் ஏராளம். அவர்கட்குப் பயிற்சி வேண்டும். அப்பயிற்சியைக் கொடுப்பது Synthesis of Yoga

யாரோ வந்தார்கள், என் வேலையைச் செய்தார்கள் நான் பலன் பெற்றேன் என்பவர் மற்றவர். சாவித்திரி தத்துவத்தையும், பயிற்சியையும் பலனாக மாற்றிக் கொடுக்கிறது. புரிந்தாலும், புரியாவிட்டாலும் பலன் தரும் யோக நூல் சாவித்திரி.

கடவுளைக் காட்டு நம்புகிறேன் என்ற நாத்திகவாதம் ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது. இந்தக் குதர்க்கவாதிகட்குக் குதர்க்கமாக சொல்லிய பதில் ஏராளம். அவை எல்லாம் வாதம் ஜெயிக்க உதவியது. மனம் மாறவோ, ஞானம் பெறவோ உதவவில்லை.

பகவானும் இவர்கட்குப் பதில் கூறுகிறார் அறிவுக்குப் புலப்படவில்லை எனில், இல்லை என்று கூற முடியாதன்றோ? கண்ணால் கண்டதை மட்டும் நம்புவேன் என்றால் டெல்லிக்கு போகாதவர்கள் டெல்லியில்லை என்று கூற முடியுமா? அறிவுக்கு எட்டாதது அறிய அறிவின் பிறப்பிடமாகிய ஜீவியத்திற்குப் போனால் புலப்படும் என்று விளக்கம் எழுதுகிறார். ஞானத்தைத் தேடுபவர்க்கு இது தெளிவை அளிக்கக் கூடும்.

வேதம் விளக்காதது, உபநிஷதம் கேட்காதே என்று கூறுகிறது, கீதை சொல்லாமல் விட்டது, புத்தர் எனக்குத் தேவையில்லை என்றது, சங்கரருடைய மாயை, ஏன் ஏசு சிலுவையில் அறையப்பட்டார் என்று அன்று முதல் இன்றுவரை எழுந்த தத்துவங்களுக்கு ஞானம் உதயமாகும் அளவில் LIfe Divine விளக்கம் அளிக்கிறது. ஆனால் ஞானம் யோகமாகாது.

யோகத்தை LIfe Divineஇல் எழுதவில்லை.

யோகம் என்பதை எப்படிப் பயில வேண்டும் என்பதை தன் Synthesis of Yoga என்ற நூலில் பகவான் பயிற்சியாகக் கூறுகிறார்.

சரணாகதியே பகவானுடைய கருவி, கீதை சொல்லும் சரணாகதி மோட்சமடைய, பகவான் சொல்லும் சரணாகதி திருவுருமாற்றமடைய. இதை Life Divineஇல் எடுத்து விளக்க அவர் முயலவில்லை. சரணாகதியே தத்துவம் என்று மட்டும் கூறுகிறார்.

சத்தியஜீவியம் (Supramental Being)

"நான் சத்தியஜீவியத்துள் கொல்லைப்புறமாக நுழைந்தேன். அன்னை தெரு வாசல் வழியாக உள்ளே வந்தார்'' என்றார் பகவான்.

ஆப்பிரிக்காவில் தியோனோடிருக்கும்பொழுதே அன்னை சத்திய ஜீவனைக் கண்டார். தியோனைக் கண்டபொழுது இவர் தாம் குருவாக வேண்டிய "கிருஷ்ணா'' என்ற ஐயம் அன்னைக்கிருந்தது. "தியோனுக்கும், ஸ்ரீ அரவிந்தருக்கும் சாயல் ஒன்றாக இருந்தது'' என்றும் அன்னை கூறுகிறார்.

"தியோன் அன்னைக்குக் குரு என்பது உண்மை. ஆனால் சூட்சும சக்திகளைப் பயிற்றுவிக்கும் குரு. அதுவும் அவர் மனைவிக்கே அதிகமாகத் தெரியும். தியோனுக்கு இலட்சியம் புரியவில்லை. புரிந்தவற்றைத் தலைகீழே புரிந்து கொண்டுள்ளார்'' என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

சத்தியஜீவியத்திற்கு முக்கிய அடையாளம் நினைவும், செயலும் இணைந்திருப்பதே. நாம் ஒன்றை அறிந்து, பின்னர் அதை செயல்படுத்துவது மனத்தின் இயல்பு. நாம் ஒன்றை அறிந்தவுடன் பலிப்பது சத்தியஜீவியம். நாம் அதை,

வார்த்தை பலிக்கிறது,

நினைப்பது நடக்கிறது,

என்கிறோம். அன்னை முதலில் ஸ்ரீ அரவிந்தரைக் கண்டபொழுது இப்பிரச்சினையை எழுப்புகிறார். சத்தியஜீவியத்தில் உள்ளவை எதிர்காலத்தில் நடக்க வேண்டியவற்றைக் கண்டு அன்னை ஸ்ரீ அரவிந்தரிடம் கூறுகிறார். ஸ்ரீ அரவிந்தரிடம் கூறியவுடன் எதிர்காலத்தில் நடக்க வேண்டியவை அப்பொழுதே நடக்க ஆரம்பிக்கின்றன. அதுவே சத்தியஜீவியத்தின் முத்திரை.

நம் அனுபவம், அறிவு ஏற்கும் வாய்ப்பு எவ்வளவு பெரியதானாலும், எவ்வளவு நம்மால் நம்ப முடியாவிட்டாலும், அவை நம் அறிவுக்கும், அனுபவத்திற்கும் பொருந்தும் - உதாரணமாக வருமானம் 10 மடங்கு பெருகும் - என்பதை எடுத்து, நம்மை விலக்கி, அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், அது பலிக்க ஆரம்பிப்பதை நடைமுறையில் காணலாம். நமக்குச் சத்தியஜீவியம் என்பது நேர்மையாக, நம் வருமானம் அளவுகடந்து பெருகுவதாகும். நாம் செய்யவேண்டியது,

 • மனம் தூய்மையாக இருக்க வேண்டும்,
 • கேட்பதை அனுபவம் ஏற்க வேண்டும்,

 • நம்பிக்கை மற்ற எதிலிருந்தும் மாறி அன்னையில் மட்டுமிருக்க வேண்டும்,
 • அந்நம்பிக்கை சந்தோஷம் கொடுக்கும் நேரம் விஷயம் பலிக்கும்,
 • அதுவும் பலனைவிட அன்னை முக்கியமானால் அளவுகடந்து பலித்து நின்று நிலைத்துப் பெருகும்.

முரடன்

அன்னை ஆசீர்வதிக்கும்பொழுது with my blessings என்று எழுதுவார்கள். With my love and blessings எனவும் எழுதுவதுண்டு. நகரத்தில் நடமாடும் நமக்கு அன்னையின் பாதுகாப்பு முக்கியம். Gasஐ மூடாமல் விபத்து ஏற்படுவது, பிரேக்கில்லாமல் மோட்டார் பைக் விழுவது, மலைப்பகுதியில் போகும்பொழுது பாறை உருண்டு வருவது, டிராபிக்கில் மோதவரும் லாரி, சக்கரம் கழண்டு ஓடுவது போன்ற விபத்துகளிலிருந்து அன்பர்கள் தப்பியதை எனக்கு எழுதுகிறார்கள்.

விபத்தினின்று பாதுகாப்பை அன்னை நாம் கேட்காமலேயே அளிக்கிறார். முனைந்து விதிமுறைகளைப் புறக்கணித்தவரும் தப்பியது உண்டு. தரிசனத்திற்கு வர ஏற்பாடு செய்த பஸ்ஸை மாற்றி முதலாளி அனுப்புகிறார். இது வெகுதூரம் போன வண்டி நேரடியாக ஜனவரி முதல் தேதிக்கு வருகிறது. டிரைவர் குடித்துவிட்டு ஓட்டுகிறான். எப்படி அன்பர்கள் இந்த வண்டியை ஏற்கலாம்? இரவில் பஸ் குறுக்கும் நெடுக்குமாக ஓடும்பொழுது பஸ் நிறைய அன்பர்கள் அதை ஏற்பது தவறன்றோ? எதிரில் வரும் கார், பஸ்ஸின் நிலையைப் பார்த்து பயந்து, பஸ்ஸை நிறுத்த முடியாது எனக் கண்டு, காரை ரோட்டில் குறுக்கே நிறுத்தி பஸ்ஸை நிறுத்தி, இது ஆபத்து என்று எச்சரிக்கை செய்த பின்னும் அதில் பிரயாணம் செய்வது சரியா? அந்த பஸ் உருண்டு அனைவரும் அடிபட்டனர். பஸ்ஸிலிருந்த நிலையைக் கண்டவர்கள், சிறு காயங்களுடன் அன்பர்கள் தப்பித்ததை நம்ப முடியவில்லை என்றனர். அன்பர்கள் வாழ்விலில்லாதது. முறைகளை அலட்சியமாக மீறவே கூடாது.

வடநாட்டில் காட்டுவழியாக மோட்டார் பைக்கில் ஒரு இளைஞனும், அவன் பின் ஒரு பெண்ணும் சென்றனர். ரோடு ஒரு கிராமத்தைக் கடக்க வேண்டும். கொலைக்கும், கற்பழிப்புக்கும் பேர் போன இடம். நான்கைந்து பேர் ரோட்டில் கூடி மோட்டார் பைக்கை நிறுத்தினர். ஆண் மகனுக்கு தைரியமில்லை. தைரியமிருந்தாலும் 5 பேருடன் எப்படிச் சமாளிப்பான்? முகத்தை மூடி அழ ஆரம்பித்துவிட்டான். நினைவுக்கு வந்த தெய்வங்களை அழைத்தான்.

முரடர்கள் அப்பெண்ணை அழைத்தனர். அவள் அன்னையை அறிவாள். மனதில் அன்னையை தீவிரமாக அழைத்துக் கொண்டிருக்கும்பொழுது ஒருவன் அவளைப்பற்றி இழுத்தான். அவளுக்குப் பயம் எழுந்து அடங்கியது. நானும் உன் உடன் பிறந்தவளில்லையா, என்னைத் தொந்தரவு செய்வது நியாயமா? என நிதானமாக அவள் கேட்கும்பொழுது, எனக்குச் சகோதரியில்லை என்ற பதிலுடன் வேகமாக இழுத்தான். மேலும் தீவிரமாக அன்னையை அழைத்தாள். என்ன நினைத்தானோ, தெரியவில்லை. சரி, போ, இனி இந்தப் பக்கம் வாராதே என்றான். முரடன் மனம் மாறி, கையில் கிடைத்ததை வலிய விட்டுக்கொடுப்பது அன்னை முத்திரையாகும். With my protection என்று அன்னை எழுதாத ஆசீர்வாதம் அனைவருக்கும் உண்டு.

கோயிலுக்குப் போய் வந்த பஸ், குடிகார டிரைவர் போன்ற ஆபத்தான விஷயங்களை அன்பர்கள் எச்சரிக்கையுடன் விலக்க வேண்டும்.

ஓம்

சச்சிதானந்தத்தின் சத்புருஷனை பிரம்மம், புருஷன், ஈஸ்வரன் என மூன்றாகப் பிரித்துக் கூறுகிறார் ஸ்ரீ அரவிந்தர். ஈஸ்வரன் சிருஷ்டிக்குரியவன். கர்மயோகத்தால் அடையக் கூடியவன். அவனுக்குரியவள் சக்தி.

புருஷன் சாட்சியாக இருப்பவன். சாட்சி புருஷன் எனப்படுபவன். பக்திக்குரியவன். இவனது உயர்ந்த நிலை புருஷோத்தமனாகும். புருஷோத்தமன் பிரம்மத்தைத் தன்னுட் கொண்டவன். புருஷனுக்குரியவள் பிரகிருதி.

பிரம்மம் ஞானத்திற்குரியது. க்ஷரப்பிரம்மம், அக்ஷரபிரம்மம் எனும் இரு நிலைகளில் உள்ளது. அக்ஷரபிரம்மம் க்ஷரபிரம்மத்தைத் தன்னுட்கொண்டது. அவ்வக்ஷரபிரம்மத்தையும் புருஷோத்தமன் தன்னுட் கொண்டவன்.

க்ஷரபிரம்மம் உலகம். அக்ஷரபிரம்மம் உலகத்தைக் கடந்தது. அக்ஷர பிரம்மம் க்ஷரபிரம்மமாகும்பொழுது சிருஷ்டி எழுகிறது. அது முதலில் சப்தமாக எழுவதால் அதை சப்தப் பிரம்மம் என்பர்.

ஓம் என்ற பிரணவ மந்திரம் எழும் இடம் அதுவே.

மந்திரத்தை வாயால் உச்சரிக்கலாம். அதன் பலன் மிகக் குறைவு. சொல்லைப் புறக்கணித்து, உள்ளே சென்று ஜீவனைத் தொட்டு, ஜீவன் மந்திரத்தை உச்சரிப்பதே உரிய பலனைத் தரும். அப்படிச் செய்யும் பொழுது 4 நிலைகளில் பலன் ஏற்படுகிறது. நான்காம் நிலையைத் துரிய நிலை எனும் சச்சிதானந்தம் எனக் கூறுவர். விடுதலை எனும் மோட்சத்தைத் தரும் ஆன்மீகப் பயிற்சி இது. பூரணயோகத்தில் ஓம் இதுபோல் பயன்படுத்தப்பட்டால், அது சச்சிதானந்தத்தை அடையாமல் Cosmic consciouness பிரபஞ்சத்தின் ஜீவியத்திற்கு நம்மை அழைத்துப் போகும் என்கிறார் பகவான். பூரணயோகத்திற்கு மந்திரம் இல்லை. அன்னை, ஸ்ரீ அரவிந்தர் என்பவையே மந்திரங்கள். அவற்றை ஓம் உச்சரிப்பதுபோல் உச்சரித்தால் பயிற்சி,

ஈஸ்வரனுடைய சக்தியிடம் கொண்டு செல்லும்.

பாரிசில் அன்னையும் நண்பர்களும் கூடிய இடத்தில் ஒருவர் ஓம் என்ற மந்திரத்தை உச்சரிக்கும்பொழுது அறை முழுவதும் force சக்தியால் நிரம்பியது என்கிறார் அன்னை. ஓம் உயர்ந்த மந்திரம். முடிவில் மோட்சம் தரவல்லது.

Mother, அன்னை என்ற மந்திரம் அன்னையிடம் நம்மை அழைத்துச் சென்று சிருஷ்டியில் பங்கு கொள்ளச் செய்யும். சிருஷ்டியில் பங்கு கொள்வது இறைவனாகும் பாதையாகும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு என்பது இரு வகைப்படும். ஒன்று security, அடுத்தது protection. இருப்பது போகாமலிருக்கவும், பய உணர்வு எழாமலிருப்பதும் security, ஆபத்திலிருந்து காப்பாற்றுவது protection. இரண்டிலும் அன்னையின் security, அன்னையின் protection உண்டு. எந்த விஷயமும் அன்னையிடம் வந்தால் அது அன்னை விஷயமாகிவிடும்.

ஆசிரமத்திற்கும் போகும் பெற்றோர் குழந்தைகளை வளர்ந்தவர்கள் என்பதால் பாட்டியிடம் விட்டுவிட்டுப் போவார்கள். பாட்டியுமில்லாவிட்டால், ஆபீஸ் பியூனிடம் ஒப்படைப்பார்கள். அதுவும் இல்லாத நேரம் அன்னை பார்த்துக்கொள்வார் என ஒரு சமயம் வீட்டில் விட்டுவிட்டுப் போனார்கள்.

பாதுகாப்பு வேண்டிய குழந்தைகள் பூஜை அறையில் தூங்கினார்கள். ஒரு நாள் வந்த உறவினர்கள் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போகும்பொழுது இரவில் திருடன் வந்தால் என்ன செய்வீர்கள்? நாங்கள் துணைக்குப் படுத்துக்கொள்கிறோம் என்றபொழுது அன்னையிருக்கும்பொழுது பயமில்லை என குழந்தைகள் துணையை மறுத்தனர்.

நடுநிசியில் எழுந்த பெண் யாரோ மெதுவாக நடப்பதை அறிந்தாள். திருட்டு பயம் பற்றி பேசியது நினைவு வந்தது. பயம் கவ்வியது. விளக்கைப் போடலாமா என யோசனை செய்தபொழுது, இது அன்னையுள்ள இடம், எப்படித் திருடன் வரமுடியும் என்று மனத்தின் அடுத்த பகுதி கூறியது.

மனம் பயப்படக் கூடியது. உணர்வில் தைரியமுள்ளவர்கள் திருடன் எங்கு வருகிறான் எனப் போய்ப் பார்ப்பார்கள். பெண் குழந்தைக்கு அப்படி முடியாதன்றோ? மனத்தைக் கடந்த ஆன்மாவில் விழிப்பிருந்தால் பயமும் எழாது, மனத்தின் தவறான போக்குக்கும் இடமிருக்காது.

சைத்திய புருஷன் என்ற ஆன்மா எப்பொழுதும் விழிப்புடையது. எந்நேரமும் அது அன்னையை நோக்கித் திரும்பக்கூடியது. மனத்தைப்போல் முடியுமா? முடியாதா? என ஐயப்படக் கூடியதில்லை.

சைத்திய புருஷன் தெளிவுள்ளது, விழிப்புள்ளது. அன்னையை மறக்கமுடியாதது.

இப்பெண் குழந்தைக்கு எப்படித் திருடன் இப்புனித அறையுள் வரமுடியும் என்று தோன்றிய எண்ணம் ஆன்மாவில் எழுந்த எண்ணம். அவ்வெண்ணம் எழுந்தவுடன் அன்னை அங்கு வந்தார். Surrender rose ரோஜாவின் மணம் அதிகமாக எழுந்தது. கூடை கூடையாக ரோஜா இருப்பதைப்போல் மணம் அறையையும், வீட்டையும் நிறைத்தது. அது அன்னையின் வருகை.

மனம் அவளுக்கு அமைதியடைந்தது.

காலடி சப்தம் மறைய ஆரம்பித்தது.

ரோஜா வாசனையும் மறைந்தது.

வத்தி கொளுத்தி பெண் அன்னைக்கு நமஸ்காரம் செய்தாள். அன்னை கொடுப்பது security திருடர்களைப் பற்றிப் பேசினால் security மாறி பாதுகாப்பு கிடைக்கிறது.

கட்டுப்பாடு

சென்னை YMCA உடற்பயிற்சிக் கல்லூரியில் Buck என்றொரு பிரின்சிபாலிருந்தார். இவர்தான் இக்கல்லூரியை ஸ்தாபித்தவர். காலை 6.00 மணிக்கு உடற்பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகும். மாணவர்கள் வரிசையில் சரியாக 6.00 மணிக்கு வந்து நிற்பார்கள். அதன்பின் வருபவர்கள் மைதானத்தை இருமுறை சுற்றி ஓடிவந்து சேரவேண்டும். ஒரு மாணவன் 6.01க்கு வந்தான். அதை பிரின்சிபல் லேட்டாகக் கருதமாட்டார் என நினைத்தான். அவனை இருமுறை ஓடச்சொன்னார் Buck. அத்துடன், 6.01 is not 6.00 என்றும் கூறுவார்.

இன்று games rules என நாம் வழங்குவது Buck rules எனப்படும். ஆசிரமத்தில் 44 ஆண்டுகளிருந்த பிரெஞ்சுக்காரருக்கு அன்னை பவித்ரா (தூய்மை) எனப் பெயரிட்டார். இவரே ஆசிரமப் பள்ளியை ஸ்தாபனம் செய்தவர். கட்டுப்பாடு மிகுந்தவர். இவர் வாழ்வின் நிகழ்ச்சிகளில் பல வெளி வந்ததுள்ளன. பவித்ரா ஆசிரமத்தில் சேரமுடிவெடுக்கும்வரை தினமும் ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்து உரையாடுவதை முன்பே வெளியிட்டோம்.

சிறுவயதில் பிரான்சிலிருக்கும்பொழுது இவருக்கு ஒரு பெண் மீது பிரியம், அவர்கள் எப்பொழுது சந்திப்பது என நேரம் குறிக்கப்படும். அவள் தாமதமாக வந்தால் பவித்ரா காத்திருக்கமாட்டார். எழுந்து போய்விடுவார். அல்லது கணக்குப்போட ஆரம்பித்துவிடுவார். தாமதமாக வந்ததால் அப்பெண்ணைச் சந்திக்க மறுப்பார்!

பிரான்சில் ஈகோல் பாலிடெக்னிக் என்றொரு கல்வி நிறுவனம் உண்டு. இது பிரபலமானது. இங்குச் சிறந்த மாணவர்களை மட்டும் சேர்ப்பார்கள். இன்று நாட்டில் எந்தத் துறையில் முதன்மையாக இருப்பவரும், இங்குப் படித்தவராக இருப்பார்கள். இங்குச் சேர்ந்துவிட்டால், இனி எதிர்காலத் தலைவன் என்பது உறுதி. நம் நாட்டில் டேராடூனில் உள்ள இராணுவப் பள்ளியில் ராஜீவ் காந்தி படித்தார். அந்தப் பள்ளிக்கு அதுபோன்ற பிரபலம் நம் நாட்டிலுண்டு. பவித்திரா அப்பாலிடெக்னிக்கில் படித்தவர்.

11ஆம் வயதில் தகப்பனார் இவருக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். அத்துடன் ஒரு ஸ்பானரும் தந்தார். சிறுவன் ஆர்வமாக எல்லா மறைகளையும் திருகினான். மறைகள் ஒவ்வொன்றாய் வெளியில் விழுந்தன. சீக்கிரம் சைக்கிள் அக்கு வேறு, ஆணி வேறாகிவிட்டது. இது 1905ஆம் ஆண்டு, மன்னிக்கமுடியாத குற்றம். அந்த நாட்களில் இந்தியாவுக்குச் சைக்கிள் வந்துவிட்டதா எனத் தெரியவில்லை. எந்தத் தகப்பனாரும் மன்னிக்கமுடியாத குற்றம். பையன் ஆர்வத்தால் செய்துவிட்டான், தகப்பனார் வந்து பார்த்தார். மீண்டும் சைக்கிளை பூட்டு என்றார். வீட்டில் குழாயை எடுத்துவிட்டால், போடமுடியாமல் தவிப்பவர்கட்குப் பவித்திராவின் தகப்பனார் சொல்லியதன் அர்த்தம் புரியும். சிறுவன் ஓரு சைக்கிள் கடைக்குப் போய் சைக்கிளைப் பூட்டுவதாகவும், தண்டனையாகத் தன் pocket பணத்திலிருந்து பணம் தருவதாகவும் கூறியதைத் தகப்பனார் மறுத்து, அவிழ்த்ததைப் பூட்டவேண்டும் என உத்தரவிட்டார்.

21 நாள் போராடி 11 வயது சிறுவன் சைக்கிளைப் பூட்டிவிட்டான். சைக்கிள் சம்பந்தமான எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டான். இளம் வயதில் கற்றுக்கொடுத்த கட்டுப்பாடு, அன்னையுடன் 44 வருஷமிருந்த பாக்கியத்தை பெற்றுத் தந்தது.

செருப்பு விற்றது

நம் நாட்டில் உயர்ந்த குணங்களைக் காண்கிறோம். பிறநாட்டில் மிக உயர்ந்த குணங்களைக் கேள்விப்படுகிறோம். பணம், வாக்கு, பெண்ணின் நடத்தை, குழந்தைகளின் நம்பிக்கை ஆகியவற்றில் மனிதனின் உயர்ந்த குணம் வெளிப்படுகிறது.

மேல்நாட்டு மக்களிடம் கேள்விப்படும் ஏராளமான நல்ல குணங்களுக்கும் மேலாக அவர்கள் அறிவை அன்னை குறிப்பிட்டுப் பேசுகிறார். ஸ்ரீ அரவிந்தர் அவர்கள் திறமையைப் பற்றிப் பேசுகிறார். அத்துடன் அன்னை இந்தியர் ஆன்மஓளியைப் பற்றியும் கூறுகிறார். பவித்ரா ஜப்பானிலிருந்த சமயம் நடந்த ஒரு நிகழ்ச்சியை அவர் வரலாறு கூறுகிறது.

 • ஒருவருக்கு சிரமம் வந்தால் குடும்பத்தாரும், நண்பரும் உதவுவது பெருந்தன்மை என்று நாம் கருதிச் செய்கிறோம்.
 • மேல்நாட்டார் அவ்வுதவியைப் பெறுவது மரியாதை குறைவு எனப் பெற மறுக்கின்றனர். கொடுக்க முயல்வது புண்படுத்துவதாகும் எனப் பிறர் நினைக்கின்றனர்.
 • ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தி வை என்பது நாம்.
 • பொய் சொல்லிவிட்டால் தன்மானம் போய்விட்டது என்பது ஐரோப்பியர்.
 • Force சக்தியை அனுப்பினால் மேல்நாட்டார் பெற்று தம் செயலை அளவுகடந்து உயர்த்துகிறார்கள் என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.
 • இந்தியர்கட்குத் தம் சக்தியை அனுப்பினால் மயக்கம் போட்டு விழுந்தவன் தெளிந்ததைப்போல் எழுந்து கொஞ்ச நாளில் மீண்டும் விழுந்துவிடுகிறான். சக்தியைப் பெற்றுப் பலனடையும் திறமை நம்மவர்க்கில்லை என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.
 • ஆங்கிலேயர் எத்தனை வருஷம் பார்த்தாலும் அறிமுகப்படுத்தாவிட்டால் பேசமாட்டார்கள்.
 • நாம் பஸ்ஸில் போகும்பொழுது எதிரிலுள்ளவரிடம் பேச ஆரம்பித்துவிடுகிறோம்.
 • இந்தியர் உடல் ஜோதியுள்ளது. தெரிந்ததை எடுத்துச் சொல்லும் அறிவுக்குரிய திறமையில்லை என்கிறார் அன்னை.

 • மேல்நாட்டாருக்கு அவ்வறிவு ஏராளமாக உள்ளது. எடுத்துச் சொல்ல உள்ளே எதுவும் இல்லை எனவும் கூறுகிறார்.

ஜப்பானில் மலை ஏறும்பொழுது சாதாரண செருப்பைக் கழற்றிவிட்டு, வைக்கோலாலான செருப்பைப் போட்டுக்கொள்வது சௌகரியம் என்று பொழுதுபோக்குக்காக மலை ஏறுபவர்கள் செய்வது வழக்கம். வைக்கோலால் செய்யப்பட்டது என்பதால் கொஞ்ச தூரம் நடந்தாலும் செருப்பு தேய்ந்துவிடும். அதனால் புதிய செருப்புகள் தேவைப்படும். மலையிடுக்குகளில் சில மைல்கட்கொரு முறை பல செருப்புகளை வைத்து, அதன் விலையை அதன்மீது எழுதியிருப்பார்கள். செருப்பு தேவைப்பட்டவர்கள் எடுத்துக்கொண்டு, விலையை அதனருகில் வைத்துவிடுவார்கள். செருப்பை வைத்தவர் வந்து எடுத்துக்கொள்வார். இது நம் நாட்டில் முடியுமா?

இந்தியருடல் அளவு கடந்த ஆன்மீக ஒளியுண்டு. மனத்திறமை இல்லை. செயலில் உண்மையில்லை. இரண்டும் இருந்தால், ஒளி வெளிவந்து வாழ்வைப் பொலிவுபடுத்தும். உள்ளொளியில்லாத அமெரிக்கர் புறமுயற்சியால் சிகரத்தை எட்டியுள்ளனர்.

செயலை முடிக்கும் திறமை, சுயகௌரவம், நாணயம், வாய்மை நம் வாழ்வில் நிறைந்திருந்தால், அன்னை பக்தராகவுமிருந்தால், அவர் வாழ்வு அமெரிக்கர் வாழ்வைவிட உயர்ந்து விளங்கும்.

ஜப்பான் நாட்டில் நாணயம் பெயர்போனது. பவித்ரா ஜப்பானில் தாம் கண்டதாகக் கூறிய நிகழ்ச்சி மேற்சொன்னதாகும்.

விமானப் பயணம்

பஸ்ஸில் பர்ஸைத் தொலைத்ததை அறியாமல் பஸ்ஸைவிட்டு இறங்கியவர் செய்வதறியாமல் அன்னையைக் கூப்பிட்டபொழுது ஸ்டாப்பிங் இல்லாத இடத்தில் பஸ் நின்றது. பின்னால் நடந்து வந்தவர் ஏறி பர்ஸை எடுத்துக்கொண்டார்.

துறைமுகத்திலிருந்து போன கப்பல் திரும்பிவந்து லேட்டாக வந்த அன்பரை ஏற்றது, ஏர்போர்ட்டில் விஸாவை வைத்துவிட்டு விமானத்தில் ஏறியவர் அபயக்குரலுக்குப் பதிலாக விமானம் திரும்பி வந்ததும் அன்பர்கள் அனுபவம்.

1962இல் அன்னை உடல்நலம் குன்றியதால் பிப்ரவரி, ஏப்ரல், ஆகஸ்ட் தரிசனம் தரவில்லை. பம்பாய் அன்பர் ஒருவரிடம் அன்னை அதிக ஈடுபாடாக இருந்து அவரைத் தம்முடையவர் என்பார்.

நவம்பர் தரிசனத்தின்போது அவருக்கு அன்னை அழைப்பு மனதை நிரப்பியதால், கணவரிடம், நான் போகவேண்டும், அன்னை என்னை அழைக்கிறார் என்று கூறினார். சென்ற ஆண்டு நவம்பரில் உங்கள் திருவடியிலிருந்தபொழுது இடையே ஒரு வருஷ இடைவெளிவரும் என நான் நினைக்கவில்லை. தரிசனம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் பாண்டிக்கு வரவேண்டும் என அன்னைக்கு எழுதினார்.

விமானத்தில் பயணம் செய்ய தாமும், கணவரும் டிக்கட் வாங்கினார்கள். சீனா போர் வந்தது. போர் முன்னணிக்கு விமானங்கள் தேவைப்படுவதால், உள்நாட்டில் வேலை செய்த விமானங்கள் அங்கு போயின. டிராவல் ஏஜெண்ட், அன்பரை போனில் கூப்பிட்டு விவரம் கூறி, ஆபீசுக்கு வந்து டிக்கட்டுக்குரிய பணத்தைத் திருப்பிப் பெறுமாறு கூறினார்.

விமானம், போர், தடை எல்லாம் அன்பர் மனதில் இல்லை. மனத்தில் அன்னையிருந்தார். அன்னையின் அழைப்பை மனம் உணர்ந்தது. இனி என் செய்வது, ரயிலில் கூட்டம் ஏராளமாக இருக்கும். கப்பலில் போகலாம் என்று அவருக்குத் தோன்றியது.

டிராவல்ஸ்க்கு சென்று டிக்கட் பணத்தைத் திருப்பிப் பெறப்போனவர் வரிசையில் கடைசியிலிருந்தார். "சென்னைக்கு விமானத்தில் ஓரிடம் உள்ளது, வேண்டுமா?'' என்ற குரல் திடுக்கிடச் செய்தது. அதை வாங்கிக்கொண்டவருக்கு, அடுத்த நாள் இன்னொரு டிக்கட்டும் கிடைத்தது.

அன்பர் அன்னைக்குத் தந்திமூலம் தம் வருகையைத் தெரிவித்தார். தரிசனங்களை நிறுத்திவைத்த அன்னை பக்தர்களைப் பார்ப்பதையும் இம்மாதங்களில் நிறுத்தியிருந்தார்.

பம்பாய் அன்பர் டிக்கட் கான்சலானபொழுது அன்னைக்குத் தபால்மூலம் விபரம் தெரிவித்தார். "இங்கு நீ வந்திருந்தால், நான் உன்னைப் பார்க்காமல் அனுப்பியிருக்கமாட்டேன்'' என அன்னை பதில் எழுதினார்.

ஸ்ரீ அரவிந்தருடைய படத்துடன், தம் படத்தையும் கடிதத்துடன் இணைத்து, கடிதத்தைப் பதிவுத் தபாலில் அனுப்ப ஏற்பாடு செய்தார் அன்னை. கடிதத்தைக் கொடுத்துப் பதிவு செய்து அனுப்பு என மீண்டும் வற்புறுத்தினார்.

கடிதத்தை அனுப்புமுன் அவர் வருவதாகத் தந்தி வந்தது. "அப்படியானால் நானே நேரில் கையில் கொடுத்துவிடுகிறேன்'' என அன்னை தபாலை பெற்றுக்கொண்டார்.

தெம்பு தரும் அருள்

மகனை இழந்தவர் உடல் நலம் இழந்தார், ஒடுங்கிப் போனார். மருந்தும், மாத்திரையும் உயிரை உடலில் வைத்திருந்தன. இவர் அன்னை பக்தரில்லை. இவர் பிள்ளைகள் பக்தர்கள். எழுந்து நடக்க முடியாது. இருபக்கமும் இருவர் பிடித்துக்கொண்டு நடக்கும் நிலையில் அவருக்கு அன்னை தரிசனம் செய்ய ஆவல் எழுந்தது. அவரை புதுவைக்கு அழைத்து வந்தனர். சுமார் 1500 மைல் பயணம். கார், ரயில், விமானப் பயணங்கள்.

அன்னை தினமும் விளையாட்டு மைதானம் வரும் நாட்கள். இப்பெண்மணியை அன்னையிடம் அழைத்து வந்தனர். அன்னை ஆன்மாவுடன் தொடர்புகொள்ள கண்களை உற்றுநோக்குவார். இப்பெண்ணின் கண்களை நெடுநேரம் உற்றுநோக்கினார். ஒரு பிரசாத பாக்கெட்டைக் கொடுத்தார். இருவர் பிடித்து அன்னையிடம் அழைத்துவந்த நிலை மாறியது. உடலில் புதுத் தெம்பு வந்தது. பிடிக்கவேண்டிய அவசியம் இனி இல்லை. மைதானத்திலிருந்து நடந்து ஆசிரமம் வர அவரால் முடிந்தது. சாப்பாட்டு அறைக்கும் நடந்து வந்தார். மறுநாள் பால்கனி தரிசனத்திற்கு காலையில் நடந்தே வந்தார். ஏராளமாகச் சாப்பிட்ட மருந்துகளை நிறுத்தினார்.

அன்னை சமாதியானபின் அருளின் சக்தி

அன்னை இருந்தபொழுது நடந்தவற்றைக் கேள்வியுற்றால், இன்று அன்னையில்லையே, இப்பொழுது எப்படி அந்தச் சக்தி இருக்கும் என நினைப்பது இயல்பு.

ஒரு தலைவர் உயிரோடு இருந்தபொழுதிருந்த செல்வாக்கு அவருக்குப் பின்னிருப்பதில்லை. ஏனெனில் அது அவருடைய சொந்தச் செல்வாக்கு. அன்னையின் அருள் அன்னையின் சொந்தத் திறன் என்பதுடன் அது அருளின் திறனும் ஆகும். (It is a personal and impersonal force). பக்தர்கள், அன்பர்கள், சாதகர்கள் அன்னையிருக்கும்பொழுது அவரை அறிந்தவர்கள், உடனிருந்தவர்கட்கு அவருக்குப்பின் ஓர் அனுபவம் உண்டு. அன்னையிருந்தபொழுது 1 மணி நேரப் பிரார்த்தனையால் பலித்த பிரார்த்தனை இன்று அதைவிடக் குறைந்த நேரத்தில் பலிக்கின்றது என்ற அனுபவம் உண்டு.

அன்னை சமாதியானபின் அவர் அருள் சூட்சும உலகில் தொடர்ந்து வளர்கிறது.

இந்திராகாந்தி அன்னையைக் கண்டு 250 பார்லிமெண்ட் சீட் வேண்டும் என்றார், 350 கிடைத்தது. மீண்டும் 1977இல் தோற்றார். 1980இல் ஒரு பக்தர் இந்திரா ஜெயிக்கவேண்டும் எனக் கங்கணம் கட்டியதன் விளைவாக இந்திரா ஜெயித்தார். 2/3 மெஜாரிட்டி கிடைத்தது. அன்று அன்னைமட்டும் பெற்றிருந்த திறன் இன்று அத்தனை பக்தர்கட்கும் உள்ளது.

1975இல் blood கான்சர் வந்த 19 வயது பையனை, சமாதிக்கு அழைத்துவர நாற்காயில் உட்காரவைத்து பஸ் ஏற்றி அழைத்து வந்தனர். இறக்க பஸ் ஸ்டாண்டில் தகப்பனார் நாற்காலி தேடியவர் வருமுன் பையன் நடந்துவந்தான். அன்று சுமார் 1 மைல் நடந்தான்.

அன்னை தாம் மட்டும் வழங்கிய அருள் இன்று அவர் atmosphere சூழலுக்கேயுள்ளது.

பத்து ஆண்டுகட்கு முன் வந்த பக்தர்கள் இன்று அன்னை அருள் அதிக சக்தியுடன் செயல்படுவதைக் காணலாம்.

அன்னையின் சட்டம்

அன்னை தாம் இயற்றும் சட்டங்களைத் தவறாது பின்பற்றுபவர். அதை மீற அனுமதிப்பதில்லை. ஆன்மா அச்சட்டங்களை மீறினால் அதை அன்புடன் அன்னை வரவேற்பார். மனித எண்ணமும், தெய்வச் சிந்தனையும் மாறுபடும் நேரம் அருள் செயல்படும் நேரம். நாகலிங்கப் பூவை நான் 1968, 1969 வரை பார்த்ததில்லை. எனக்கு மலர்களில் நாட்டமேயிருந்ததில்லை. மேற்சொன்ன ஆண்டுகளில் ஒரு சமயம் அன்னை தமக்கு நாகலிங்கப் பூ வேண்டும் எனவும், அதைக் கடலூரிலிருந்து நான் கொண்டுவரவேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார். காலை 8 மணிக்கு அன்னையிடம் செல்பவர் எடுத்துச்செல்ல, நான் அதற்குமுன் பாண்டிக்கு வந்து சேரவேண்டும். அப்பொழுதெல்லாம் பஸ் இப்பொழுதுபோல இல்லை, 1 மணிக்கு 1 பஸ் போகும். கூட்டமான நேரங்களில் 2, 3 பஸ் போகும். ஒரு பஸ்ஸைத் தவறவிட்டுவிட்டால், மலர் அன்னைக்குப் போய் சேர்வது நிலையில்லை. அடையாளத்திற்கு எனக்கு ஒரு மலரும் கொடுத்தார் செய்தியைச் சொன்னவர். இம்மலரைத் தேடிக் கண்டுபிடிக்கப் பெரிய பாடுபட்டு எங்குமில்லை என்று செய்தி வந்தது. அதன்பின் சிவனுக்கு உரிய மலர் என்பதால் சிவன் கோயிலில் பார்க்கலாம் என்று போனபொழுது அங்கு ஒரு மரம் இருந்தது. இதன் பெயர் Prosperity என்று அப்பொழுது கேள்விப்பட்டேன். தினமும் அன்னைக்கு இம்மலரைக் கொண்டுவரும்பொழுது ஒரு நாள் இளஞ்சிவப்பு மலர் வந்தது. எடுத்துச்செல்லும் சாதகர் அது நன்றாக இல்லை, சிவப்பு மலரே வேண்டும் என்றார். சிவப்பு மலர் இல்லை, இளம் சிவப்பு மலர்தானிருக்கிறது என்பது நிலை. அன்னையிடம் விஷயம் போயிற்று, எனக்கு இளஞ்சிவப்பு நாகலிங்கமலர்தான் வேண்டும். அது தன்னலமற்ற செல்வமாகும். சிவப்பு மலர் சுயநலமான வளமாகும் என்று அன்னை கூறினார்.

அந்த நாளில் ஆசிரமத்திற்கு வர ஒரு சட்டம் உண்டு. முதலில் கட்டாயமாகக் கடிதம் எழுதி பதில் பெறவேண்டும். பல சமயங்களில் பதில் வாராது. வந்தால் வாராதே என வரும். அதனால் கடிதம் எழுதாமல் நேரடியாக வந்தால் அன்னையிடம் எவரும் செய்தி எடுத்துப் போகமாட்டார்கள். அது அன்னைக்குப் பிடிக்காத விஷயம் என்பதால், எவரும் அன்னையிடம் அதைக் கொண்டு போக மறுப்பார்கள்.

தன் மாமன் ஆசிரமத்திலிருப்பதால் ஆசிரமம் வர விரும்பிய இளைஞன் முறைப்படி ஆசிரமத்திற்குக் கடிதம் எழுதி அனுமதி கேட்டான். கடிதத்தைப் பாராட்டிப் பதில் வந்தது. அத்துடன் உள்ளூர் ஆசிரமச் சென்டருக்கு அடிக்கடி போகும்படியும் கூறியது கடிதம். சில ஆண்டுகள் கழித்து எதுவும் எழுதாமல் நேரே 20 வயது இளைஞன் ஆசிரமத்திற்கு வந்து நின்றான். "ஏன் கடிதம் எழுதாமல் வந்தாய்?'' என்று கடுமையாகப் பதில் வந்தது.

"தயவுசெய்து அன்னையிடம் கூறுங்கள். அவர் போகச் சொன்னால் நான் திரும்பப் போகிறேன்'' என்றான் மாணவன்.

அன்னை அவரை இருக்கச் சொல்லி வேலையும் கொடுத்தார். மீண்டும் அவன் திரும்பப் போகவே இல்லை.

அவசரமாக வந்தால் நிராகரிக்கும் அன்னை, ஆர்வமாக வந்தால் தம் சட்டத்தை மீறி ஏற்பார். ஆன்மாவின் ஆர்வம் அன்னைக்குரியது.

அன்னை தரிசனம்

திடீரென பக்தர்கள் வீட்டில் அன்னையைப் பற்றிப் பேசுவதும், அருளின் சூழல் செறிந்து தெரிவதும் உண்டு. அன்னை ஒருவரைப் பற்றிப் பேசினால் பக்தர்கள் வாழ்வில் அது நடைபெறும். அன்னையின் தரிசனம் பெற ஒரு விண்ணப்பம் அனுப்புதல் வழக்கம். அதை, தரிசனம் விழைபவர்கள் எழுதுவதில்லை. எடுத்துப்போகும் சாதகர் எழுதுவது வழக்கம்.

அப்படி எடுத்துப் போகும்பொழுது அன்னை என்ன நிலையிருக்கிறார் என்பது பக்தரின் ஆன்மநிலையைப் பிரதிபலிக்கும். ஒரு பக்தர் 72 மணி நேரம் வேலையினூடே அன்னையை அழைத்தார். அவரை அறியாமல் ஒரு சாதகர் பக்தரின் பிறந்த தினமான 25ஆம் தேதியன்று அவர் தரிசனம் பெற, ஒன்றாம் தேதி அன்னையிடம், இவர் விண்ணப்பத்துடன் மற்றும் 10 சேர்த்து கொடுத்ததைக் கையில் வாங்காமல், சாதகர் கையிலுள்ள விண்ணப்பங்களை தள்ளிக்கொண்டுவந்து ஒன்றை மட்டும் எடுத்து கையெழுத்திட்டார். அது அன்னையின் பெயரை 72 மணிநேரமாகச் சொல்லிக் கொண்டிருந்ததன் பலனாகும்.

வடநாட்டுப் பக்தர் ஆசிரமம் வந்தார். ரோட்டில் போய்க்கொண்டிருக்கும்பொழுது தாம் அன்னையைத் தரிசிக்கப் போவதாகவும், சில நாள் தங்கப்போவதாகவும் தம் நண்பருடன் பேசிக்கொண்டு ரோட்டில் போனார். பின்னால் வந்த சாதகர், "நீங்கள் பேசியதை நான் கேட்டுக் கொண்டு வந்தேன். என் வீட்டுக்கு வாருங்கள். நானே விண்ணப்பத்தை எடுத்துப்போகிறேன்'' என்றார். பக்தருக்கு முதலில் சந்தேகம். அடுத்த நாள் அதே சாதகர் அன்னையிடம் விண்ணப்பத்தை எடுத்துப் போனார். அன்னை நிஷ்டையிலிருந்ததால், மேஜை மீது விண்ணப்பத்தை வைத்துவிட்டு வந்துவிட்டார். பக்தர் சாப்பாட்டு அறையில் சாப்பிட்டுவிட்டு, சமாதிக்கு வந்தார். சமாதியில் தியானத்தில் உட்கார்ந்தார்.

சமாதியில் அவருக்கு ஓர் ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது.

 • சமாதி திறந்து, ஸ்ரீ அரவிந்தர் வெளியே வந்தார்.
 • பக்தர் தலையில் கையைவைத்து பக்தர் தியானம் கலையும்வரை ஸ்ரீ அரவிந்தர் அதை எடுக்கவில்லை.

அன்னையிடம் அனுமதி பெற்ற சாதகர் தியானத்திலிருந்து எழுவார் என பலமுறை வந்து பார்த்துவிட்டுப் போனார். பக்தர், "இதுபோன்ற சக்திவாய்ந்த தியானத்தை நான் அனுபவித்ததேயில்லை'' எனச் சாதகரிடம் கூறினார்.

 • அன்னையிடம் விண்ணப்பம் வரும்பொழுது தியானத்திலிருந்ததால் பக்தருக்கு ஆன்மீக அனுபவம் தியானத்தில் கிடைத்தது.

பக்தர் மனநிலையை அன்னையும், அன்னை மனநிலையை பக்தரும் பிரதிபலிப்பது ஆன்மீக உறவாகும்.

ஆப்பரேஷன்

நாம் அன்னையின் ஓர் அம்சத்தை அறிவோம். ஸ்தூல உலகிலும், சூட்சும உலகிலும், காரண லோகத்திலும் அன்னை மனம், உணர்வு, உடல், ஆன்மா ஆகிய எல்லா நிலைகளிலும் நேரத்திற்கேற்றவாறு செயல்படுகிறார். நாம் பொதுவாக அன்னையைத் தெய்வமாக மட்டும் காண்கிறோம், அதுவும் பிரார்த்தனையைப் பூர்த்திசெய்யும் தெய்வமாகக் காண்கிறோம்.

 • கம்பளியின் குரல் கேட்டு நிற்கும்பொழுது அவர் சூட்சும கரணங்கள் செயல்படுகின்றன.

 • விநாயகர் அன்னை முன் வரும்பொழுது அன்னை தெய்வலோகத்தில் (overmind) இருக்கிறார்.
 • கருநாகம் அன்னையை நாடிவரும்பொழுது, விஷஜந்துவின் வித்தான சத்தியம் அன்னையை அறிந்து வணங்க வருகிறது. அந்நேரம் அன்னை லோகமாதா.
 • முருகன், அம்மன், சிவன் ஆகியவரை வழிபடுபவர் பிரார்த்திக்கும்பொழுது அவர்கள் நம்பிக்கையான உணர்வு மண்டலத்திலிருந்து (vital world) அருள் புரிகிறார்.
 • பால்கனியில் நின்று தரிசனம் தரும்பொழுது ஸ்ரீ அரவிந்தரின் சக்தியாக இருக்கிறார்.
 • அன்னையை அறியாதவர் அபயக்குரலுக்கு பதில் கூறும்பொழுது Supramental force சத்தியஜீவியமாக இருக்கிறார்.

இத்தனையும் எப்பொழுதும் சேர்ந்ததே அன்னை என நாம் அறிவது அன்னை ஞானமாகும்.

குளோரபாரம் கொடுத்து ஆப்பரேஷன் செய்யும் நாளில் டான்சில் ஆப்பரேஷனுக்கு முன் 3 இன்ஜெக்ஷன் போட்டார்கள். இன்ஜெக்ஷன் வலி அதிகம். பையன் மயக்கமடைந்துவிட்டான். மயக்கம் போட்டபின் ஆப்பரேஷன் செய்யமுடியாது.

மயக்கத்தின்போது அன்னை தம் இருகைகளாலும் அவன் தலையைப் பிடித்துக்கொண்டிருந்ததை அவன் "கண்டான்''. அவன் தலை அன்னை மடியிலிருந்தது.

டாக்டர்கள் அவன் மயக்கமாக இருக்கிறான் என்றபொழுது அவன் அன்னையைக் காணும் அளவுக்கு உள்ளே விழிப்புடனிருக்கிறான்! மயக்கம் தெளிந்து ஆப்பரேஷன் நடந்தது.

வீட்டிற்கு எடுத்துப் போனபின், படுக்க வைத்தார்கள். அன்னை தம் மடியிலிருந்து அவனை விடுவித்ததைக் "கண்டான்''. அதன்பிறகு அன்னை மறைந்தார்.

நாம் அழைத்து அன்னை வருவது நம் நம்பிக்கையால் நடப்பது. நாம் அழைக்காமல் அன்னை வருவது அருள். அருளின் செயல் 100%, நம்பிக்கை 99% பலிக்கும். நம்மை அறியாமல் அன்னை மற்றவர்கள் மூலமாகச் செயல்படுவது அருட்சூழலின் செயலாகும்.

பால்கனி தரிசனம்

ரிஷிகள் மனிதனை ஜீவாத்மா என்றனர். எனவே தவம் செய்து ஜீவாத்மாவை வாழ்விலும், பிறவியிலுமிருந்து பிரித்து பரமாத்மாவிடம் சேர்த்து முக்தி பெற்றனர். ஸ்ரீ அரவிந்தம் ஜீவாத்மாவே பரமாத்மா என்று கூறி, சரணாகதியால் ஜீவாத்மா பூவுலகிலேயே பரமாத்மாவாகி, இறைவனின் திருவுள்ளம் பூர்த்தி பெற முயல்கிறது.

இதை மனிதனுக்குச் சாதித்து தர அவதாரமெடுத்தவர் அன்னை. அன்னையை அறிவது பாக்கியம். ஏற்பது அதிர்ஷ்டம். அன்னைக்கேயுரியவராவது யோகசித்தி. பொதுவாக அறிவதற்கும் ஏற்பதற்கும் இடையே பல ஆண்டுகளிருப்பதுண்டு. ஏற்பதைக் கடப்பது அரிது.

1936இல் ஸ்ரீ அரவிந்தர் வரலாற்றைப் படித்தவர், அந்நூலிலுள்ள ஸ்ரீ அரவிந்தர் படத்தால் காந்தம்போல் கவரப்பட்டு தாம் ஆசிரமம் வரவிரும்புவதாக ஒரு கார்டு எழுதினார், பதிலில்லை.

அன்னையும் சமாதியானபின் அவர் முதன்முதலாக ஆசிரமம் வந்தார். 40 வருஷத்திற்குமுன் விழித்த ஆத்மா தம் விழிப்பின் பலனை ஒரு மாதம் புதுவையிலிருந்து அனுபவித்தார். அவர் ஆத்மா நிறைவுற்றது. ஊர் திரும்பினார்.

 • வந்தவர் சமாதிக்குப் போனவுடன் 3 மணி நேரமாகியும் தியானம் கலையவில்லை எனக் கண்டார்.
 • புதுவையும், ஆசிரமமும், புண்ணிய பூமி, புனித ஸ்தலம் என்பதை அவர் நாடி நரம்புகள் சொல்லாலும், சுவையாலும், ஸ்பர்சத்தாலும் உணர்த்தின.
 • பால்கனியில் அன்னை தரிசனம் தந்ததாகக் கேள்விப்பட்டார். புதுவை வீதிகளில் அவர் நடமாடும்பொழுது தெருக்களில் அன்னை "பால்கனி தரிசனம்'' தருவதைக் "கண்டார்''.
 • எல்லா இடங்களிலும் அவர் கண்டது அன்னை தரிசனமே.
 • புதுவையிலிருந்த 1 மாதமும் சமாதியில் பல மணி நேரம் தியானத்திலாழ்ந்து தன்னை மறந்து, ஆத்மாவை நிரப்பினார்.
 • ஊர் திரும்பியபின் இதுவரை சென்ற மற்ற தலங்களையும், ஆசிரமங்களையும் மறந்துவிட்டார்.
 • டெல்லி ஆசிரமத்தில் தினமும் பல மணி செலவிட்டார்.
 • இன்று தம்மூரில் உள்ள ஆசிரமச் சென்டரில் தங்கியுள்ளார்.

1936இல் வரலாறும், திருவுருவப்படமும் தீட்சை அளித்தன. இரண்டாம் முறை சமாதி தரிசனம் தீட்சைக்குச் சித்தியளித்தது. அடிக்கடி அவர் சமாதிக்கு வருவது அவர் "யோகத்''தின் சிறப்பான தருணங்களாகும்.

மகிழம்பூ

அன்னைக்கு மலர் எடுத்து வந்த குழந்தைகள் அன்னை வர நேரமாகும் என்பதால், மலர்களை வைத்துவிட்டுப் போய்விட்டனர். மறுநாள் அக்குழந்தைகளை அன்னை கண்டபொழுது ரிஷிகளும், தெய்வங்களும் எனக்காக காத்திருக்கும்பொழுது, உங்களுக்கு அவசரமா எனக் கேட்டார்.

மகிழம்பூவிற்கு அன்னை பொறுமை எனப் பெயரிட்டுள்ளார். இம்மலர்களை அன்னை கையால் பெறுவது அம்மலரின் சக்தியை அதிகரிக்கும். 1958க்கு முன் அன்னை டென்னீஸ் மைதானம், சாதகர்கள் வீடுகள், தியான மண்டபம், ஆசிரமத் தொழிற்கூடங்களுக்கு வருவதுண்டு. அது சமயம் நேரம் அறிந்து சாதகர்கள் தரிசனம் பெறுவதுண்டு. அந்நேரம் சாதகர்கட்கு வேலை நேரமானால், வேலை தரிசனத்தைவிட முக்கியம் என்பது அன்னை சட்டம்.

தினமும் காலை 9½ மணிக்கு அன்னை மாடியிலிருந்து கீழே வரும்பொழுது சாதகர்களில் சிலர் தியான மண்டபத்திலிருந்து தரிசனம் பெறுவர். அதற்கு யாரெல்லாம் வரலாம் என அன்னை முன்கூட்டி அனுமதி வழங்கியுள்ளார்.

ஒரு நாள் காலையில் அன்னை 9½க்கு வரத் தாமதமாயிற்று. அனுமதிபெற்ற சாதகர் தம் வேலைக்குப் போகும் நேரமாய்விட்டது. தரிசனத்தைவிட முடியவில்லை. வேலைக்குத் தாமதமாக்க முடியாது. சாதகி தவித்தார். "ஏன் தாமதம் செய்கிறீர்கள் அன்னையே, உடனே வாருங்கள்'' என மனத்தால் அழைக்க ஆரம்பித்தார்.

அடுத்த நிமிஷம் அன்னை இறங்கி வந்தார். நேரே இந்த சாதகியிடம் சென்றார். "உனக்குப் பொறுமை வேண்டும். நான் தர விரும்புகிறேன்'' என்று கூறி கை நிறைய மகிழம்பூவை அப்பெண்ணுக்கு அளித்தார்.

இதுபோன்ற இக்கட்டான நிலையே அன்னையிடம் நம் முடிவை விடுவதற்கு சரியான நேரம். மனம் ஒருபுறமாக முடிவெடுக்க வல்லது. இருந்து அன்னையைத் தரிசிக்கலாம். அல்லது வேலைக்குப் போகலாம். இரண்டுக்கும் பொதுவான முடிவை மனம் அறியவல்லதன்று. மனம் தன் முடிவை விட்டுக்கொடுத்தால், அன்னை தம் முடிவை செயல்படுத்துவார். இக்கட்டான நிலையில்,

தவிப்பதற்குப் பதிலாக, மனத்தை விலக்கி முடிவை அன்னையிடம் விடுவதை அன்னை sincereity உண்மை எனக் கூறுகிறார்.

கனவில் கண்ட புடவை

கனவுகள் பல வகையின

 • பகலில் நடந்தவை கனவாக இரவில் வருவது.
 • மனத்தின் ஆழத்தில் பதிந்தவை வேறு ரூபமாகக் கனவாக எழுவது.
 • நம் சொந்த எண்ணங்கள் தலைகீழாக மாறி கனவாவது.
 • கற்பனைக் கோட்டை கனவில் உருவாவது. இந்தக் கனவுகட்கு அர்த்தமில்லை. இப்படிப்பட்டவர்களை நாம் கனவுலக சஞ்சாரிகள் என்கிறோம்.

அடுத்த வகை கனவுகள்

 • எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டும் கனவுகள். சில சமயங்களில் இவை பலிக்கும்.
 • ஆழ்ந்த அபிலாஷைகள் பூர்த்தியாகுமுன், கனவாக வரும். இவை பெரும்பாலும் பலிக்கும்.
 • தெய்வ அனுக்கிரஹம், குருவின் ஆசி கனவில் தோன்றுவது. இவை ஒன்றிரண்டு தவிர மற்றவை அனைத்தும் பலிக்கும்.

 • பக்திமான்கட்கும், மகான்கட்கும் எதிர்காலத்தை உணர்த்தும் கனவுகள். இவை தவறாது பலிக்கும். நாம் விலகிப் போனாலும் நம்மை விடாது.

அடுத்த மாநிலத்தில் வசித்த பக்தை ஒருவர் கனவில் தாம் அன்னையைத் தரிசிப்பதைக் கண்டார். தம் குடும்பத்துடன் அன்னையைத் தரிசிப்பதாகவும், அன்னை அழகான சில்க் புடவை அணிந்திருப்பதாகவும் கண்டார். கனவில் கண்ட அதே புடவையை வாங்கி அன்னைக்குக் காணிக்கையாக்க முடிவு செய்தார்.

கடைக்குப் போய் அதே புடவையைத் தேடினார். கிடைக்கவில்லை. வேறு கடையில் அதே டிஸைன் உள்ள புடவை கிடைத்தது. வாங்கிக்கொண்டார். தரிசனத்திற்கு அனுமதி வேண்டி எழுதிப் பெற்றார். தரிசனம் தம் குடும்பத்துடன் பெறப்போகும்பொழுது, தாம் கனவில் கண்ட இதர உறவினர்களும் தற்செயலாய் ஆசிரமம் வந்துள்ளதைக் கண்டார். அவர்களும் தரிசன அனுமதி பெற்று, இக்குடும்பத்துடன் அன்னையிடம் வந்தது, இவருக்குக் கனவின் உண்மை புரிந்தது.

 • கனவுக்கு உண்மையில்லை. அதை நம்புவது அறிவீனம்.
 • கனவுக்கு உண்மையுண்டு. அதை நம்பிச் செயல்பட்டால் கனவில் கண்டது அத்தனையும் பலிக்கும்.
 • முதலில் கூறியது வாழ்வுக்குரிய கனவுகள். இரண்டாவது உண்மையுள்ள கனவுகள்.
 • கனவு உள்பட அனைத்தும் அன்னை விஷயத்தில் முழு உண்மை.

பிழை

தெய்வம் தன் கையால் பிழை செய்து அறியாதோ? என நாம் நினைப்பதுண்டு. அப்படி நிகழும் பிழையில் எதிர்காலத்திற்குரிய செய்தி ஒன்றிருக்கும் என்பது ஆன்மீக உண்மை.

Gary என்பவர் பிறந்தநாள் கார்டு பெறும்பொழுது அன்னை அங்கு Garry என எழுதியிருப்பதைக் கண்டு, அதுமுதல் தன் பெயரை மாற்றி Garry என அமைத்துக்கொண்டார்.

September 10 பிறந்தநாள் உள்ளவர்க்கு அன்னை அனுப்பிய கார்டில் November 10 என எழுதியிருந்தது. கை தவறி எழுதினீர்களோ என அவர் அன்னைக்கு எழுதிக் கேட்க விழைந்தார். ஆனால் கார்டு பெற்ற நாள் முதல் உள்ளே பல புதியவை நிகழ்வதைக் கண்டார். அவற்றுள் முதன்மையானது சந்தோஷம் துளிர்விட்டதாகும்.

உடல் சூட்சுமமாக உள்ளவர்க்கு அன்னையின் ஆசி, அனுக்கிரஹம் உடலையே எட்டி அணுவில் வெளிப்படும். அன்னையின் தரிசனம் அதுபோன்றவர் உடலை முழுவதும் கரைத்ததுண்டு.

September 10 முதல் November 10வரை உள்ளே ஆன்மீக எழுச்சி ஏற்படுவதை பக்தரால் உணரமுடிந்தது. அது மென்மையாக இருந்தது. நாளுக்கு நாள் வளர்ந்தது.

இதற்கிடையில் ஐயத்தை அன்னையிடமே எழுதிக் கேட்டார். அன்னை நவம்பர் 10 என்பதை கோடிட்டு வலியுறுத்தி, மார்ஜினில் X குறியிட்டு நவம்பர் 10இன் சிறப்பை எழுத்தால் விளக்காமல், செயலால் சுட்டிக்காட்டியிருந்தார்.

இக்கடிதம் அவரை மேலும் உடலில் விழிப்படையச் செய்தது. தன் அறைக்குப் போய் அமைதியாக உட்கார்ந்தபொழுது அன்னையின் அமைதி உடலெல்லாம் பரவி அணுக்களை அடைந்து, அவற்றை விழிக்கச் செய்து, ஸ்தூல உடல் கரைவதைக் கண்டார். ஸ்தூல உடல் இவ்வனுபவத்தால் ஒளி பெற்றது.

"எதுவும் தற்செயலாக நடப்பதில்லை. நடப்பவற்றிற்கெல்லாம் காரணம் உண்டு. பெற்ற ஆன்மீக அனுபவத்தை உடலில் இருத்தி புது வாழ்வு பெறுதல் சரி'' என்று அன்னை தம் பதிலைக் கூறியிருந்தார்.

 • நம் பிரார்த்தனை பலித்தால் அது அருள் என்கிறோம்.
 • பிரார்த்தனை தவறினால் அதுவும் அருளல்லவா?
 • அம்மனநிலை அன்னைக்குரிய மனநிலை.
 • தெய்வம் தவறு செய்யுமா எனக் கேட்பதைவிட, தெய்வம் செய்த தவற்றில் உள்ள சத்தியம் எது, அதன்மூலம் என் ஆன்மாவுக்குரிய செய்தி என அறிவது

ஆன்மீக விழிப்புணர்வாகும்

கடிதம், தந்தி, விலாசம்

அன்னைக்கு கடிதம் எழுதினேன், போய்ச் சேரவில்லை, பதில் வரவில்லை என்பது அரிபொருளான குறை. மனம் அன்னையிடம் லயித்திருந்தால், கடிதம் தானே போய்ச் சேரும். அதில் ஐயமேயில்லை. ஆனால் கடிதத்தில் விலாசத்தை விவரமாக எழுதவேண்டும். அத்துடன் அதை ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பவேண்டும் என்ற விதிமுறைகளை அன்னை கடைப்பிடித்திருக்கிறார், சாதகர்கட்கு வலியுறுத்தியுள்ளார். அன்னை சட்டம் செயல்படும் இடங்களில் முரணான இரு விஷயங்களிருக்கும்.

 • விலாசம் விவரமாகத் தெளிவாக எழுதப்பட்டு, தபால் ரிஜிஸ்டர் செய்யப்படவேண்டும்.
 • விலாசம் முழுமையாக இல்லாவிட்டாலும் மனம் நிறைவாக இருந்தால் கடிதம் போய்ச் சேரும்.

இரண்டாம் நிபந்தனையை முழுமையாக மனதால் ஏற்று, செயலில் முதல் நிபந்தனையைப் பூர்த்திசெய்தல் பக்தனுக்குரிய பாங்கு. சில அனுபவங்கள்,

 • என் விலாசத்தை விவரமாக எழுதி, முடிவாகப் பாண்டிச்சேரி என்பதற்குப் பதிலாகச் சென்னை என எழுதப்பட்ட கடிதம், மறுநாளே சென்னையிலிருந்து வந்தது.
 • அன்பருக்கு centre விலாசத்திற்கு எழுதிய கடிதம் கிடைக்கவில்லை. போஸ்ட்டாபீஸிலும் போய்த் தேடிக் கிடைக்கவில்லை.
 • முக்கியமான கடிதத்தை அன்பர் கொடுத்த விலாசத்திற்கு அனுப்பியது கிடைக்கவில்லை. அன்பர் "என் விலாசத்தின் பகுதியை மட்டும் எழுதினேன்'' என்றார்.
 • பெயரும், பாண்டிச்சேரி எனவும் எழுதப்பட்ட கடிதங்கள் சில அன்பர்கட்குத் தாமதமாகக் கிடைத்துள்ளன.

ஒரிசாவிலிருந்து அன்னை தரிசனம் வேண்டி கடிதம் எழுதியவருக்கு அன்னை அனுமதி அளித்தார். அதைத் தந்திமூலம் அனுப்பியவர், அன்பர் பெயரையும், அவர் கிராமத்துப் பெயரையும் எழுதி அனுப்பினார். அதே பெயருள்ள கிராமம் ஒரிசாவில் மூன்றுள்ளன. ஆனால் தந்தி எப்படியோ அன்பரை அடைந்துவிட்டது. தரிசனம் பெற உதவியது.

அன்னையுள்ள இடத்தில் மனம் நிறையும்.

மனம் நிறைவான இடத்தில் அன்னை இருப்பார்.

மனம் நிறைந்து அன்னையை அழைத்து செயலைப் பூரணமாகச் செய்தால் தோல்விக்கு வழியுண்டா? அவ்வாழ்வுக்கு அதிர்ஷ்டம் எனப் பெயர்.

சூட்சுமச் சூழல்

நாம் பிரார்த்தனை செய்யும்பொழுது பலன் தெரிகிறது. அத்துடன் சூழல் பிரகாசமாவதையும் காணலாம். இச்சூழலில் அதற்குரிய தெய்வங்கள் பல சமயங்களில் வரும். சூட்சுமப் பார்வையுள்ளவர்க்கு அத்தெய்வங்களோ, தேவதைகளோ தெரியும்.

பல வருஷம் கருத்தரிக்காதவர் கனவில் வெண்மையான தெய்வம் தோன்றியது. அவர் கருத்தரித்தார். சில ஆண்டுகட்குப்பின் இவர் ஸ்ரீ அரவிந்தர் படத்தைக் கண்டபொழுது கனவில் கண்ட தெய்வம் அதுவே என உணர்ந்தார். நல்ல தேவதைகள் சூழலில் உள்ளன. அன்னை ஒருவருக்கு அனுக்கிரஹம் செய்யும்பொழுது இவர் மூலமாகச் செய்வதுண்டு, நேரடியாகவும் செய்வதுண்டு. ஆபத்து, கஷ்டம் வரும்பொழுது சூழல் கறுத்துப்போகும். அதுசமயம் கறுப்பான சூழலுக்குரிய தேவதைகள் வந்து செயல்படும். அன்னையின் அருள் நம்மை நாடி வரும்பொழுது நல்ல தேவதைகள் முன்வந்து அவ்வருளைத் தங்கள் மூலம் கொடுக்கும்படியும் அன்னையைக் கேட்பதுண்டு.

மேல்நாட்டார் இவ்வுலகங்களை நம்புவதில்லை. நம் நாட்டிலும் படித்தவர்கள் இவற்றைக் கருதுவதில்லை. அறியாமையை 7 நிலைகளாக ஸ்ரீ அரவிந்தர் பிரித்து அதில் நம் நிலையை psychological Ignorance உணர்ச்சியின் அறியாமை என்கிறார். நம்முள்ளும், சூழ்ந்தும் உள்ள ஆவி உலகம், தெய்வலோகம், தேவதை உலகங்களை அறியமுடியாதது இவ்வறியாமையாகும். மாதச் சம்பளம் பெற்றவர் 2 ஆண்டுகளில் 8 லட்சம் சம்பாதித்தார். இவர் சூழலில் லக்ஷ்மி இருக்கிறது. இவருடன் தொடர்புள்ளவர்கட்கு அதன் கடாட்சம் உள்ளது என்பது சூட்சுமமானவர்க்கே தெரியும்.

விளையாட்டு மைதானத்தில் அன்னை தியானம் நடத்தினார். மேகம் இருண்டு வந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. தியானம் முடிந்தவுடன், மழை கொட்டியது. ஒரு சாதகரின் தியானத்தில் திடீரென பிரகாசம் தோன்றியது. அங்கு ஒரு தெய்வம் போன்ற உருவம் கதாயுதத்துடன் வந்தது. தியானம் முடியும்வரை இருந்து பின் போய்விட்டது.

அச்சாதகர் தியானம் முடிந்தவுடன் அன்னையிடம் தாம் கண்டதைக் கூறி விளக்கம் கேட்டார். அன்னை, "அத்தெய்வம் இந்திரன், மழைக்குரிய தெய்வம்'' என்றார்.

தியானத்தின்போது மழை வரக்கூடாது எனப் பலரும் பிரார்த்தனை செய்ததால் இந்திரன் வந்து தியானம் முடியும்வரை மழையை நிறுத்தி அன்னைக்குச் சேவை செய்கிறான்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் அன்பர்கள் வாழ்வில் அடிக்கடி நடக்கின்றது. சூட்சுமப்பார்வை உள்ளவர்கள் மட்டும் அதைக் காண்கிறார்கள். வெளியில் சொல்ல பலர் கூச்சப்பட்டுக்கொண்டு சொல்வதில்லை. சிலர் எழுதுகிறார்கள், மற்றவர்களிடம் கூறுகிறார்கள்.

தேள் கொடுக்கு

பணத்தையோ, பொருள்களையோ பத்திரமாக வைக்கத் தெரியாதவர்கட்கு அவை தொலையும், கிடைக்காது. அவர்கட்கு கவனம் வரும்வரை பொருள்கள் தொலைந்தபடியிருக்கும். தொலைவது நிற்காது. இவர்களால் பிரார்த்தனை செய்யமுடியாது, செய்தால் பலிக்காது.

நாமறிய முடியாத இடங்களில் உள்ள ஆபத்தை தாமே வலியவந்து விலக்கும் அன்னை, பொறுப்பற்றவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை விலக்க முன்வருவதில்லை.

கைச்செலவுக்கு 1500 ரூபாய் பணம் பெற்ற பையன் மேஜைமீது அதை வைத்துவிட்டு மறந்துபோய் மாலையில் வந்து பணம் அங்கேயே இருப்பதைக் காண்கிறான். அவன் தவற்றை உணர்வதில்லை. அடுத்தமுறை அதேபோல் பணத்தை வாங்கி, பனியனுள் வைத்துக்கொண்டு போகிறான். பாதிப்பணம் நழுவி விழுவதைக் காணமுடிவதில்லை. இவை பொறுப்பற்ற குணம், திறமையில்லாத பழக்கம், அலட்சியம்.

இவன் பர்ஸில் 1200 ரூபாயும், வாட்சும் எங்கேயோ வைத்துவிட்டு எப்படிப் போயிற்று என்று புலம்புகிறான். "பொறுப்பற்ற உனக்குப் புலம்பும் உரிமையில்லை'' என உடனுள்ள நண்பர்கள் கூறுகிறார்கள். வீடு பெருக்கும் பையன்தான் திருடியதாக நினைக்கிறான். அதைக் கேட்டவர், "உனக்குத் திறமையில்லை, பொறுப்பில்லை, அதனால் எவர்மீதும் குறை கூற உரிமையில்லை'' என்று கூறியது அவன் எரிச்சலைக் கிளப்பியது.

அவனே யோசனை செய்து பார்த்தபொழுது இதுவரை பலமுறை பல பொருள்கள் தொலைந்துள்ளன. சிலவற்றை வேலைக்காரர்கள் பார்த்து எடுத்துவந்து கொடுத்தனர். மற்றவை தொலைந்தபொழுது வேலைக்காரனிடம் சண்டை போட்டதுதான் மிச்சம். இதுவரை அதுபோல் தொலைந்தவை கிடைத்ததில்லையே என நினைக்கிறான்.

மனத்துடன் பெரும் போராட்டம் நடத்தி சிறு வெற்றிகண்டு இனி பொறுப்பாக இருக்க நினைக்கிறான். அத்துடன் அது தம்மால் முடியாதது எனவும் தெரிகிறது. அன்று மாலை வாட்ச் ஏற்கனவே பலமுறை தேடிப் பார்த்த இடத்தில் இருந்து கிடைத்தது. இந்த அரைகுறை தீர்மானத்திற்கே இப்பலன் என்றால் முழுத் தீர்மானம் தேவை என நினைக்கிறான். வேலைக்காரனை அழைத்து "பர்ஸ் உன்னிடமிருக்கிறது, பேசாமல் கொண்டு வா'' என்றான். அன்று மாலை வேலைக்காரனின் தாயார் பர்ஸையும், பணத்தையும் கொண்டுவந்து கொடுத்து மன்னிப்புக் கேட்டாள்.

நம் மனம் மாறாதவரை அன்னைக்கு நம் குரல் எட்டாது.

அவசரமாகச் செருப்புப் போடப்போனபொழுது செருப்பில் ஏதோ ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு, வேலைக்காரனை அழைத்து செருப்பைத் துடைக்கச் சொன்னான். ஒட்டிக்கொண்டிருந்தது உயிருள்ள தேள்கொடுக்கு.

நாமறிய முடியாத ஆபத்தையும் அருள் வலிய வந்து விலக்கும். நாமே விலக்கக்கூடிய தவற்றை விலக்காதவரை அருள் சிலையாக இருந்து பதில் சொல்ல மறுக்கும்.

புதிய தலைமுறை

மேல் உலகில் ஒளிமயமான தேவதைகள் உலகில் வந்து பிறக்கத் தயாராக இருக்கின்றன. தடைகளைத் தகர்த்து, விதியை வென்று, சொல்லுக்கப்பாற்பட்ட சொல்லைத் தாங்கி, மரணமான வாழ்வுக்கு நித்தியம் அளிக்க, காயத்தைக் கடந்த தெய்வப்பிறவிகள் காலத்தின் விதிவழியே இறங்கிவந்து, ஆன்மாவின் அற்புதத்தைத் தாயின் கருவில் சேர்க்க, தயாராக இருக்கின்றனர் என்ற பொருள்படும் சாவித்திரியின் வரிகள் உள்ளன.

தாய்மை என்பது மகளிருக்குச் சிறப்பான நேரம். பிரசவ வேதனை என்பதை நாம் ஏற்கிறோம். ஆனால் ஒரு மருத்துவ ஆராய்ச்சியின்படி பிரசவத்தில் வலியில்லை, மனம் பயந்து வலியை உற்பத்தி செய்கிறது எனக்கூறி அதன்படி கர்ப்பவதிகட்கு முதலிலிருந்து தகுந்த பழக்கங்களையும், பயிற்சிகளையும் அளித்து பிரசவம் வலியில்லாத சுகப்பிரசவமாகும் என நிரூபித்தது.

பெண் கருவுரும் நேரம் பெண்மை நிறையும் தருணம். அவள் மனம் உடலுணர்வால் நிறைந்து வழிந்தால் நிச்சயம் அதே நேரம் கருவுருவாள் என்பது தத்துவம். அது உடல் பெறும் பூரணம். குழந்தை வயிற்றில் 3 மாதமானபின் ஆத்மா அங்கு வந்து தங்குகிறது. கரு முதலில் உடலாகவும், பிறகு உயிராகவும், 3ஆம் மாதம் ஆன்மாவாகவும் மாறி குழந்தையாகிறது.

சாவித்திரியில் கூறிய தெய்வங்கள், தேவதைகள், மகளிர் வயிற்றில் உதிக்க விரும்புகின்றன. தங்கள் தெய்வத்தன்மைக்கேற்ப அதைப் போற்றும் கருவை அவை தேடுகின்றன. "என் பக்தர்கள் அதுபோன்ற தெய்வக் கருவைப்பெற விரும்பினால், அதற்குரிய பக்தியும் பவித்திரமும், ஆர்வமும் கொண்டால், அவர்கள் வயிற்றில் அத்தேவதை கருவுறும்'' என அன்னை கூறுகிறார்.

 • தாய்மை அடைந்த நேரம் பெண் மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பது அவசியம்.
 • அவள் மனம் தூய்மையால் நிரம்பினால் தூய்மையான தெய்வம் கருவை வந்தடையும்.
 • வலிமையால் வழிந்தோடினால் வலிமையான தெய்வம் பிறக்கும்.

அன்னை அவதரித்தபின், அவரை வழிபடுவோர்க்கு அன்னை அளித்த வரங்கள் அனந்தம்; அவற்றுள் தெய்வப்பிறவிக்குரிய உரிமை, வாய்ப்பு உயர்ந்தது.

மனம் உயர்ந்தால் தெய்வ நிலையை அடையும்.

கண்ணைப் பொத்தி விளையாடுவது

அன்னை அவதாரமாக நம்மிடையே வாழ்ந்தவர். என்றாலும் தாயாகவும், தயாபரியாகவும், நம்மைப்போன்று நம்முடன் கலந்தும், சிறு குழந்தைகளைப் போலவும் அவர் நடந்துகொண்ட சம்பவங்கள் ஏராளம். ஏற்கனவே எழுதிய நிகழ்ச்சிகளில் அவை வெளிப்படுவதை நினைவுபடுத்த கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறேன்.

Pant போட்டு வரும் கிருஸ்த்துவ அன்பர் ஒருவர் தினமும் அன்னையைப் பலமுறை சந்திப்பவர். ஒரு நாள் அவர் பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு வந்தார். நிமிர்ந்து பார்ப்பதற்குமுன் அது புடவை போலிருக்கும். அவர் உள்ளே நுழைந்தவுடன் அன்னை,

"யார் இந்த பெண்மணி புடவை கட்டிக்கொண்டு வருகிறார் எனப் பார்த்தேன். இது நீங்களா, எனக்குத் தெரியவில்லையே'' என்று கேலியாகக் கேட்டார்.

ஒரு கேள்வியைக் கேட்ட சாதகர் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என்று அன்னையிடம் கேட்டார். அன்னைக்கு பகவான் ஸ்ரீ அரவிந்தர் மௌனம் அளித்தபின் அன்னை சிந்தனை செய்வதில்லை. சிந்திக்கும் திறனையே மௌனம் அழித்துவிட்டது. கேள்வி கேட்டால், அன்னை மனதில் பதில் சிந்திக்காமல் உதிக்கும். இது அன்னையை அறியாதவர்க்குத் தெரியாது. சாதகர்கட்குத் தெரியாமலிருக்கும் என்பதை நம்பமுடியாது. கேள்வி கேட்டவரை அன்னை தலையைக் குனியும்படிச் சொன்னார். குனிந்தவுடன் தலையில் ஒரு குட்டு வைத்தார்.

"நான் சிந்திப்பதை இழந்துவிட்டேன் என உங்களுக்குத் தெரியாதா?'' எனக் கேட்டார்.

சமாதிக்கு மேல்புறம் வடக்குப் பக்கமாக அன்னை கார் நிற்கும். காருக்கும் சமாதிக்கும் இடையில் ஒரு பெஞ்ச் இருப்பது வழக்கம். அன்பர்கள் அதைக் கண்டிருப்பார்கள். அங்குள்ள அறை ஆசிரமப்பள்ளியின் ரிஜிஸ்டார் அறை. பவித்திரா டைரக்டராக இருந்தபொழுது அது அவர் ஆபீசாக இருந்தது. பவித்திராவின் எதிரில் ஒரு சாதகி உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தார். திடீரென பவித்திராவின் முகக்குறி மாறியதை பெண் கண்ணுற்றாள். தம் தலையை இரு கைகளாலும் ஒருவர் பற்றுவதைக் கண்டார். ஆபீசினுள் அதுபோல் தம்மோடு யார் கண்ணைப் பொத்தி விளையாடுவார் என நினைக்குமுன் அது அன்னை என்பதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டார். அவர் உட்கார்ந்திருந்தவகையில் எழுந்திக்க முடியவில்லை. உடல் மேஜையின் அடியில் இருந்தது. பல நிமிஷம் அன்னை கையை எடுக்கவில்லை!

அன்னை தலையை விடுவித்தவுடன் சாதகி எழுந்து அன்னை காலில் விழுந்து வணங்கினார்.

நினைவும் கருணையும்

அருள் செயல்படுவதற்குப் பல்வேறு அடையாளங்களுண்டு. வழக்கத்திற்கு மாறாக நடக்கும் செயல்கள் அப்படிப்பட்டவை. வழக்கமாக வரும் தபால்காரர் 11.30க்கு நம் வீட்டிற்கு வருவார் எனில் ஒருநாள் 8 மணிக்குத் தபால் வரும். அன்னை செயல்படும்பொழுது அதுபோல் நிகழ்ச்சிகள் மாறும்.

Ordinary telegram வழக்கமாக 5 மணிக்கு மேல் எடுப்பதில்லை. லீவு நாட்களில் express telegram மட்டுமே அனுப்பமுடியும். ஒரு நாள் போஸ்ட்டாபீஸ் லீவு. அதனால் தந்தியை அவசரத்தந்தியாக எழுதி 4.30 மணிக்கு எடுத்துப்போனால், "4 முதல் 5 வரை சாதாரண தந்தியை ஏற்றுக்கொள்வோம்'' என நோட்டீஸ் கூறுவது அருள் செயல்படும் நிகழ்ச்சி. அன்று அனுப்பும் தந்திக்கு அற்புதமான பதில் வரும்.

அன்னை ஒரு முடிவுக்கு வரும்பொழுது அன்பர்கள் அவர் முடிவை மாற்றிக்கொள்ளும்படிக் கேட்பதுண்டு. கேட்பவர் பிடிவாதக்காரரானால், அவர் பிடிவாதத்தைத் தாம் ஏற்பதால் அவருடைய சாதனை முன்னேறும் எனில் தம் முடிவை மாற்றிக்கொள்வார். இல்லை எனில் காதிலேயே வாங்கிக்கொள்ள மாட்டார். அதுபோன்று கேட்ட சாதகருக்கு, "நான் ஓர் முடிவுக்கு வருமுன் எல்லாக் கோணங்களிலும் அதைக் கருதியே முடிவு செய்வதால் அது மாற்றக்கூடியதில்லை'' என்றார்.

1963இல் ஓர் அன்பர் தம் குடும்பச் சொத்தான 10 லட்சம் பெறும் சொத்தில் தமக்கு வரவேண்டிய பாதியை அன்னைக்குக் காணிக்கையாக்குவதாக எழுதினார். அக்கடிதத்தைப் பார்த்த முக்கியஸ்தர்கள் அனைவரும் சந்தோஷப்பட்டு அன்னையிடம் எடுத்துப் போனார்கள். அன்னை "எனக்கு வேண்டியதில்லை'' என்றார். ஒவ்வொருவராக அன்பரின் பெருமையை எடுத்துக் கூறினர். ஒவ்வொரு முறையும் வேண்டாம் என அன்னை பலமாகத் தலையாட்டினார். அக்கடிதத்தின்மீது கறுப்பு படிந்திருந்ததாகச் சொன்னார். அந்தச் சொத்து நல்ல முறையில் சம்பாதிக்கப்பட்டதன்று.

பால்கனி தரிசனம் 6.15 முதல் 6.30வரை. காலை 9 மணிக்கு ஒரு நாள் தாயும் மகளும் அத்தெரு வழியாக வந்தனர். அன்னை பால்கனியிலிருப்பதைக் கண்டு நமஸ்காரம் செய்தனர். வெகுதூரத்திலிருந்ததால், தங்கள் நமஸ்காரத்தை அன்னை கண்டுகொண்டாரா எனவும் அறியார்கள். அப்பெண் ஆசிரமப் பள்ளி மாணவி. அடிக்கடி நோய் வருவதால் அன்னை அவளை ஊருக்குப் போகச் சொன்னார். அன்னையின் முடிவை மாற்றவேண்டி தாய் அன்னைக்குச் செய்தி அனுப்பிவிட்டு ஆசிரமம் வந்தபொழுது தரிசனம் கிடைத்தது நல்ல சகுனம் என்று வந்தனர்.

சாதகர் இச்செய்தியை அன்னையிடம் கூறியபொழுது, "ஆம், நான் காலையில் அவர்களைக் கண்டேன். அப்பெண் போகவேண்டும்'' என்றார். அவ்வளவு தூரத்தில் தங்களை அன்னை அடையாளம் கண்டுகொண்டது பாக்கியம் என்றறிந்து அன்னை கட்டளையை அருளாக அவர்கள் ஏற்றனர்.

அன்னையும் வழிபாடும்

சமாதியைச் சுற்றி அடிப்பிரதட்சிணம் செய்பவர்கள், சமாதியை வலம் வருபவர்கள், அங்கு தோப்புக்கரணம் போடுபவர்கள் உண்டு. இது புதியதாக வருபவர்கள் செய்வது. நெடுநாளைய பக்தர்களும் ஓரிருவர் இதைச் செய்ததுண்டு. தொடர்ந்தும் செய்வதுண்டு. நாம் ஸ்ரீ அரவிந்தர் அறையில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம்.

ஜீவன் விழித்துச் செய்யும் நமஸ்காரம் நம்முள்ளே சக்தியைச் செலுத்தும்.

அவ்வுணர்வு நமஸ்காரம் செய்யாதபொழுதும், சமாதியில், அன்னை ஸ்ரீ அரவிந்தர் அறையில், தியானத்தின்பொழுது, மனம் அன்னையை நினைத்து நெகிழ்ந்தபொழுது வருவதை நாம் அறிவோம். அவ்வுணர்வோடு செய்யும் நமஸ்காரம் ஜீவனுள்ளது. அது இல்லாத நேரம் செய்வது சடங்கு, சம்பிரதாயம், ஜீவனற்றது. "நமஸ்காரம் செய்யாவிட்டால், ஒன்றுமே இல்லை'' என்று நினைக்கிறோம். இது வழிபாடு. இப்படிச் செய்யும் நமஸ்காரங்கள் நம்மை அன்னையை விட்டகலச் செய்யும். எப்படியிருந்தாலும் அனைவரும் உளமார, உண்மையாக நாம் இதை மனதால் நாடுகிறோம்.

அர்த்தமற்றதானாலும், நம் மனம் ஆழ்ந்து விரும்பினால் அன்னை அதைப் பூர்த்தி செய்வார். நம் சுயநலமான ஆசைகளை அன்னை தவறாது பூர்த்தி செய்கிறார். அதனால் சுயநலம் நல்லது என்று நினைக்கமுடியுமா? ஓர் அன்பர், "நான் தவறான பிரார்த்தனையைச் செய்தேன். அன்னை அதை எனக்குக் கொடுத்துவிட்டார். ஏன் அன்னை இப்படிச் செய்கிறார் என எனக்குப் புரியவில்லை'' என்றார். நாமுள்ள நிலையை அன்னை ஏற்கிறார். நாம் மாறவேண்டும் என விளக்குகிறார். வற்புறுத்துவதில்லை. நாம் எப்படி விரும்புகிறோமோ அதை அன்னை ஏற்கிறார்.

புதுவையில் அன்பர் மாநாடுகள் அடிக்கடி நடப்பது வழக்கம். அங்கு வரும் பிரதிநிதிகளை அன்னையிடம் அனுப்புவார்கள். அவர்கள் வரிசையாக அன்னை முன் வந்து வணங்குவார்கள். தரையில் விழுந்து நமஸ்காரம் செய்ய அனுமதியில்லை. நேரம் இல்லாத காரணத்தால் அதுபோல் நடப்பதுண்டு. அன்னை உடல்நலம் குன்றிய நேரம். வயது 95. அவ்வரிசையில் வந்தவர் ஒருவருக்கு அன்னையை நேரில் தரிசிக்க வேண்டும், நமஸ்கரிக்க வேண்டும் என்ற அவா. முதன்முறையாக ஆசிரமம் வந்துள்ளார். தரிசனம் கிடைத்தது. நமஸ்காரம் செய்யும் விருப்பம் பூர்த்தியாகவில்லை, என்றாலும் அவர் மனம் துடித்தது. ஒவ்வொருவருக்கும் அன்னை blessing packet கொடுத்தார். இந்த பக்தர் வந்தபொழுது அன்னையால் blessing packet கட்டிருந்து ஒரு packetஐ எடுக்கச் சிரமப்பட்டார். அதனால் சற்று தாமதமாயிற்று. அன்னையால் ஒரு பாக்கெட்டை எடுக்க முடியவில்லை.

அவ்விடைவெளியில் அன்பர் தரையில் விழுந்து நமஸ்கரித்தார்.

அன்னை தன் சட்டத்தை மீறி அன்பர் அபிலாஷையைப் பூர்த்தி செய்த நிகழ்ச்சி இது.

இறுதிச் சடங்குகள்

நம் ஜீவனில் உள்ளது ஆத்மா, உடல் உள்ளது ஆவி. இறுதிச் சடங்குகள் ஆத்மாவின் சாந்திக்காக என்று நாம் நினைக்கிறோம். ஆத்மா எந்த நேரமும் சாந்தமாகவேயுள்ளது. சாந்தம் தவிர வேறெதையும் ஆத்மா அறியாது. ஆவி என்பதை யோக பாஷையில் vital being என்பார்கள். இறந்தவர் கனவில் வருவது, இறந்தவர் வீட்டில் அவருருவம் உலவுவது போன்றவற்றை மேற்கொள்வது ஆவி.

 • நல்லவர், கெட்டவருடைய ஆத்மா நல்லதாகவேயிருக்கும்.
 • நல்லவர், கெட்டவருடைய ஆவி கடுமையாகவே இருக்கும்.

மரத்தில் தூக்குப் போட்டுக்கொண்டவன் மரத்தடியில் தூங்குபவர்களை மிரட்டுகிறான் என்பது ஆவி, ஆத்மா இல்லை. ஆத்மா மிரட்டாது, ஆவி மிரட்டாமலிருக்காது.

ஒருவர் இறந்த பிறகு அவர் ஆவி அவர் உறவினரைத் தொந்தரவு செய்யாமலிருப்பதற்காகவே ஈமக்கடன் ஏற்பட்டது. ஒருவன் ஆபீஸ் முடிந்தவுடன் அங்கேயே தூக்குப் போட்டுக்கொண்டான். மறுநாளிலிருந்து அங்கு வேலை செய்பவர்களை அவன் ஆவி மிரட்டிக்கொண்டேயிருந்தது. கம்பனியில் ஒரு மந்திரவாதியை அழைத்து பரிகாரம் செய்யச் சொன்னார்கள். அன்றே அந்த பயம் விலகியது.

யோகத்தை மேற்கொள்பவர்கட்கு ஈமச் சடங்குகளில்லை. அதுவும் அன்னையை ஆழ்ந்து ஏற்பவருக்கு உயிர் பிரிந்த பிறகு அவர் ஆவி பிறருக்குத் தொந்தரவு தாராது. அவர் ஆவி, ஆத்மாவுடன் கலந்துவிடுவதால் ஈமக்கிரியைக்கு இடமில்லை. சாதகர் உயிர் பிரிந்தால், அவருடலுள்ள இடத்தை சுற்றி அளவு கடந்த ஆன்மீக அமைதியைக் காணலாம். அவருக்கு 12ஆம் நாள், 16ஆம் நாள் காரியம் செய்வது சரியில்லை, சாதகர்கள் உடலை எரிக்கக்கூடாது,

புதைக்கவேண்டும் என அன்னை கூறியிருக்கிறார். ஆழ்ந்த பக்தர்கட்கும் அதுவே சட்டம். இவ்விஷயத்தில் எவரும் அன்னை கூறுவதை ஏற்பதில்லை என்பதால், அன்னை தலையிடுவதில்லை. அவரவர் இஷ்டத்திற்கே விட்டுவிடுவார்.

1930ஆம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தரை ஏற்று உயர்ந்த சாதகர் என ஆசிரமத்தாரிடம் பெயர் பெற்றவர் தாமிறந்தபொழுது தம்மைத் தகனம் செய்யும்படியும், அஸ்தியைக் கங்கையில் கரைக்கும்படியும் கூறினார்.

ஆசாரக் குடும்பத்துத் தெலுங்கர் அன்னையிருக்கும்பொழுது காலமானார். அவருடைய சகோதரர் அன்னையிடம் வந்து, "நான் எங்கள் ஆசாரப்படி இறுதிச் சடங்குகளைச் செய்ய விரும்புகிறேன்'' என்றார்.

"அவர் எது வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். எனக்கு அதைப்பற்றி அக்கரையில்லை. சாதகர் ஆத்மா 1 வாரம் முன்னதாக உடலைவிட்டுப் பிரிந்துவிட்டது. சென்ற ஜன்மத்தில் இவர் யோகியாக இருந்தவர்'' என அன்னை கூறினார்.

பொதுவாக ஆத்மா உயிர் பிரியும் முன், சில நாட்களுக்கு முன் உடலைவிட்டுப் பிரியும். ஆத்மா கருத்தரிக்கும்பொழுது கூடவே வருவதில்லை. 3, 4 மாதம் கழித்தும் உடலில் புகுவதுண்டு, 10, 15 வயதிலும் உள்ளே வரும். ஆவி உயிர் பிரிந்தபின் 7 நாட்கள் உடலிலேயே இருக்கும்.

விபத்து

திருமணமாகி கோவாவிற்கு honeymoonக்குச் போகின்றவர்கள் அன்னைக்கு எழுதி பிரசாதம் கேட்டார்கள். இருவருக்கும் இரண்டு பிரசாதங்கள் வந்தன. தங்கள் பர்ஸில் அவற்றை வைத்துக்கொண்டு பிரயாணமானார்கள். 

பக்தர்கள் பல வகையினர்!

 • அன்னையை நினைக்க சந்தோஷப்பட்டு இடைவிடாமல் நினைப்பவர்கள். இவர்களுக்கு இந்நினைவே பாதுகாப்பு. இவர்கட்கு பாதுகாப்பு தேவையில்லை. இவர்கள் உள்ள இடத்தில் இவர்கள் மற்றவர்கட்குப் பாதுகாப்பு.
 • அன்னை பக்தரானாலும், மனம் கேளிக்கை, வேடிக்கைகளில் எளிதில் பாய்ந்து தன்நிலை இழப்பவர்கள். இவர்கட்கு protection flower பாதுகாப்பு மலர், பிளசிங் பாக்கெட் அவசியம். இருந்தால் பாதுகாப்பு நிச்சயம்.
 • அன்பரானாலும் ஆபத்து வந்த பிறகே அன்னையை அழைக்கும் பாங்குடையவர்கள் உண்டு. ஆபத்துச் சமயத்தில் குரல் அடி வயிற்றிலிருந்து எழும். அக்குரல் தவறாது அன்னைக்குக் கேட்கும், க்ஷணத்தில் பாதுகாப்பு வரும்.

கூட்டமான பஸ்ஸில் எட்டி கம்பியைப் பிடித்துக்கொண்டு தாவும் மனிதன் தன்னை அன்னை பக்தன் என்பதை மறந்து செயல்படுபவன். பஸ் நகர்ந்தது. தரையில் விழுந்து முன் சக்கரம், பின் சக்கரங்கட்கு இடையே அவர் தரையில் வீழ்ந்தபொழுது, "அம்மா, இதுவே என் கடைசிப் பிரார்த்தனை'' என வீறிட்டலறினார். ஆச்சரியவசமாக பின்சக்கரம் தடம்புரண்டு அகன்றது. மார்புமேல் ஏறவேண்டிய சக்கரம் குதிகால் மேல் ஏறியது. மனிதன் உயிர் பிழைத்துக்கொண்டான்.

மன உணர்ச்சி தாழ்ந்திறங்கும்பொழுது விபத்து ஏற்படுகிறது என அன்னை கூறுகிறார்.

 • பஸ் நிறைய அன்பர்கள் ஆசிரமம் வரும்பொழுது டிரைவர் குடித்துவிட்டுத் தாறுமாறாக ஓட்டுவதைப் பலர் எச்சரித்ததையும் கண்டுகொள்ளாமல் வந்தனர். பஸ் புரண்டு விழுந்தது. எவருக்கும் உயிர்ச் சேதமில்லை. இது அன்பர்கள்செய்யக்கூடாதது. எனினும் அன்னையின் பாதுகாப்பு இருந்தது.
 • அன்பர் ஹைகோர்ட்டுக்குக் கேஸ் விஷயமாகப் போகும்பொழுது பஸ்ஸில் முன் சக்கரம் கழண்டு உருண்டோடியது. அன்பர் அன்னையைத் தீவிரமாக அழைத்தார். சக்கரம் கழண்டு போனால் வருவது பெரிய ஆபத்து என அவர் அறிவார். பஸ் ஓடி ஒரு மரத்தில் மோதி காயமோ, சேதமோ இல்லை, அனைவரும் தப்பினர்.

விபத்துக்கள் பலவகையின. அன்பர்கள் நெறியாக இருந்தால் விபத்துகள் அவர்கட்கு விலக்கு. எல்லோருக்கும் அன்னை பாதுகாப்பு வழங்குகிறார். விபத்துகள் பல வகையின என்பதுபோல், அவற்றிருந்து தப்புவதும் பல வகையின.

கோவா தம்பதிகள் போன பஸ் கோரமான விபத்திற்குள்ளாயிற்று. உயிர்ச்சேதம் அதிகம். காயம் படாதவரில்லை.

அன்பர்கள் இருவரும் காயமில்லாமல் தப்பினர்.

அன்னைக்குத் தந்திமூலம் செய்தியையும், நன்றியையும் தெரிவித்தனர்.

தந்தியைக் கண்ட ஆசிரமக் காரியதரிசி "இப்பொழுது இது சர்வ சாதாரணமாகிவிட்டது'' என்றார்.

மது

பழக்கம் என்று ஏற்பட்டுவிட்டால் மாற்றுவது சிரமம். 1937இல் மதுவிலக்கு ஏற்பட்டது. 1972இல் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டது. 1937க்குப்பின் வந்த தலைமுறைகள் '47, '57, '67, '72-இல் மதுவை அறியாதவர்கள். 72இல் கள்ளுக்கடைகள் ஆரம்பித்து பல ஊர்களில் வியாபாரமில்லாமல் மூடினர்.

 • குடிக்கும் பழக்கம், விடமுடியாது.
 • குடிக்காமலிருக்கும் பழக்கமும் மாற்ற முடியாது.

நம் வாழ்வே பழக்கங்களாலானது. குடிப்பது கெட்ட பழக்கம். படிப்பது நல்ல பழக்கம். தினமும் ஓரிரு மணி நேரம் படித்துவிட்டு தூங்கும் பழக்கமிருந்தால், படிக்காமல் தூங்கமுடியாது. படிப்பதும் பழக்கமாகும்.

கெட்டதை விடுவது சிரமம் என நாம் அறிவோம். நல்லதை விடுவது சிரமம் என அறியோம். நல்லதோ, கெட்டதோ, ஏற்பட்ட பழக்கத்தை விடுதல் சிரமம்.

அன்னைக்கும், பூரணயோகத்திற்கும் எந்த பழக்கமும் எதிரி, ஒத்து வாராது.

அன்னையை அறிந்து ஏற்றுக்கொண்டு அவருடைய ஆன்மீகப் பெருமையை உணர்ந்தவர்கள் பெற்ற அனுபவங்களில் சில,

 • கோபம் ஆரம்பத்தில் மிகுதியாகி, பிறகு குறைந்தது.
 • தோல் வியாதியால் சிரமப்பட்டவர் அவ்வியாதி தானே மறைவதைக் கண்டார்.
 • ஞாபக சக்தி அதிகமாவது.
 • அறிவுத் திறன் அதிகமாவது.
 • 15 நிமிடத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழித்த 80 வயதானவருக்கு அது அளவுகடந்து குறைந்தது.
 • புகைப்பழக்கம் மறந்து போனது.

கஸ்டம்ஸ் இலாகாவில் வேலை செய்பவர்கள் கடத்தல் பொருள்களை பிடிப்பார்கள். மது முக்கிய கடத்தல் பொருள். அதனால் அந்த இலாக்காவில் மது தாராளமாகக் கிடைக்கும். பெரும்பாலோர் அப்பழக்கம் உடையவராக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஓர் ஆபீசர் மது இல்லாமலிருக்க முடியாது என்பார்.

மனைவியுடன் ஆசிரமம் வந்தார். 7½ மணிக்கு தியானத்திற்கு வந்தார். மனம் எப்பொழுது வெளியே போகலாம், எந்த மதுக்கடைக்குப் போகலாம் என்று தியானத்தின்போது அவருடன் பேசிக்கொண்டிருந்தது. அவர் மனைவி அதை அறிவார். தியானம் முடிந்தவுடன் அவர் மனைவியிடம் இனி மது அருந்துவதில்லை என்றார். மனைவி அதைப் பொருட்படுத்தவில்லை.

அதன்பிறகு அவர் மதுவைத் தொடவில்லை.

ஹார்லிக்ஸ்

குழந்தை நலிந்து போகிறான் எனத் தாயார் அன்னைக்கு எழுதிய கடிதத்தின் பேரில் ஸ்ரீ அரவிந்தர் ஹார்லிக்ஸ் கொடுக்கச் சொன்னார். அந்தக் குழந்தை அதையும் சாப்பிடவில்லை.

எதுவும் முடியாத நேரம் தெய்வம் செயல்படும் என்பது இந்த குழந்தை விஷயத்தில் பலித்து அன்னை "குழந்தையை எடுத்து வா, நானே பால் புகட்டுகிறேன்'' என்றார். குழந்தை தெளியும்வரை அதைத் தொடர்ந்து செய்தார்.

எதை நாம் சிரமம் எனக் கருதுகிறோமோ அதை சரியாகப் பயன்படுத்தினால் அந்நிகழ்ச்சி தெய்வத்தை அடைய உதவும் என்பது இவ்விஷயத்தில் உண்மை.

இந்தக் குழந்தைக்கு ஒரு வினோதமான எண்ணம். தினமும் தனக்கொரு புதுப் பெயரிட்டுக்கொண்டு இன்று என் பெயர் இது என சொல்வதில் அதற்கொரு பிரியம்.

நாம் பெயரிடுவதை முக்கியமாகக் கருதினாலும், ஊரில் பிரபலமான பெயரையே குழந்தைக்குச் சூட்டுகிறோம்.

ஜாதகம், நட்சத்திரப்படி நாமம் சூட்டுவது ஒரு காலத்தில் வழக்கமாக இருந்தது. குருவைக் கேட்டுப் பெயர் வைப்பது சிஷ்யர்களுக்கு வழக்கம். பாட்டனார் பெயரை பேரனுக்கு வைப்பதால் அவனுக்குப் பேரன் - பெயரைத் தாங்கி வருபவன் - என்று வழங்குகிறது.

லட்சியக் கணவர் குழந்தைக்கு விவேகானந்தன், பெண்ணுக்கு சங்கமித்திரை என்று பெயரிட்டார். மனைவி அக்குழந்தைகளை பாபு, ராணி எனக் கூப்பிட்டார்.

குரு பெயரிட்டபின், பேஷனை ஒட்டி பெயரோடு ஸ்ரீ சேர்த்து வைத்தார் ஒருவர். சைதன்யம் என்பது உன்னதமான பெயர். குரு அப்பெயரைச் சூட்டியபின் அவர் வீட்டார் "சைத்தான்'' எனக் கேலி செய்தனர்.

தினமும் ஒரு பெயர் வைத்துக்கொள்ளும் குழந்தையை மற்றவர்கள் அன்னையைப் பெயர் வைக்கச் சொல் என்றனர். குழந்தை அன்னையைக் கேட்டாள். "நான் பெயரிட்டால் நீ அதை மாற்றாமலிருப்பாயா?'' என்று கேட்டு அன்னை கௌரி எனப் பெயரிட்டார்.

கௌரி என்றால் அழகு எனப் பொருள். அன்னை அதற்கு அக அழகு என விளக்கம் தந்தார்.

வயதானவர்

4 ½ மணிக்கு ஆசிரம வாயில் திறக்கும்பொழுது 5, 6 பேர் உள்ளே நுழையக் காத்திருப்பார்கள். அவர்களில் ஒரு வயதானவர், நடக்கவே சிரமப்பட்டுக்கொண்டு உள்ளே நுழைவார். நீல கால்சட்டையும், தோளில் புரளும் நீண்ட முடியுடன் அவர் உள்ளே தியான மண்டபம் வந்து கதவு, ஜன்னல், படங்களைத் துடைப்பார். இந்த வயதில் இவர் இதைச் செய்யவேண்டுமா என நினைக்கத் தோன்றும்.

இவர் ஆசிரமத்தில் சேர்ந்தவுடன் அன்னை இவருக்குக் கொடுத்த வேலையிது. அன்னை வெளியில் போகும் நாட்கள் அவை. மாடியிலிருந்து அன்னை இறங்கி வரும்பொழுது - டென்னீஸ் விளையாடப் போகும்பொழுது - ஆசிரமக் கட்டிடத்தில் வேலை செய்யும் சாதகர்கள் ஓடி வந்து அன்னையைத் தரிசனம் செய்வார்கள்.

சில சமயங்களில் யாரெல்லாம் வருவது என அன்னை முன்கூட்டியே அனுமதி அளித்திருப்பது வழக்கம். அன்னைக்கு

வேலை தெய்வம்,

கடமை தெய்வம்,

ஒழுங்கு தெய்வம்.

தரிசன நாட்களில் வெளியூரில் வேலையிருந்தால் அன்னை அவர்களிடம் தரிசனம் முடித்துவிட்டுப் போகலாம் என்று கூறமாட்டார்கள். வெளியூருக்கு அனுப்பிவிடுவார்கள். அன்னை உத்தரவை ஏற்பவர்கட்கு போகும் இடத்தில் "தரிசனம்'' கிடைக்கும். அன்னையின் கோட்பாடுகளை ஏற்க விரும்புவர்கட்குத் தலையாய கடமை வேலைக்கு முதலிடம் தருவது.

கொல்லையில் அறுவடையை மற்றவரிடம் ஒப்படைத்துவிட்டு தரிசனத்திற்கு வருவதைவிட, அறுவடையை முக்கியமாகக் கவனிப்பவருக்கு அன்னை அறுவடையில் "தரிசனம்'' தருவது வழக்கம்.

மேற்சொன்ன வயதானவர், இளைஞராக இருந்த நாளில் ஒரு நாள் அவர் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது வேலையைப் போட்டுவிட்டு தியான மண்டப மாடிப்படிக்கருகில் அன்னை வருவதை அறிந்து வந்து காத்திருந்தார்.

அன்னை இறங்கி வந்தபொழுது இவரைப் பார்த்து "ஏன் இங்கு வந்தாய்?'' எனக் கேட்டார்.

"தரிசனம் பெற வந்தேன்'' என சந்தோஷமாகப் பதிலுரைத்தார்.

"வேலை முக்கியம். அதை விட்டுவிட்டு இங்கு வரக்கூடாது. போய் வேலையைச் செய்'' என்றார் அன்னை.

அன்னை அன்று இட்ட கட்டளையை வயதான காலத்திலும் நடக்கமுடியாதபொழுதும் இந்தச் சாதகர் நிறைவேற்ற காலை 4½ மணிக்கு ஆசிரமவாயிலில் வந்து நிற்பது வழக்கம்.

குறை கண்டுபிடித்தல்

காவியுடுத்து, தாடி முடியுடன், கமண்டலத்துடன் யோகிகள் நடமாடுவார்கள் என்று நினைத்துக்கொண்டு ஆசிரமம் வருபவர்கள் ஏமாற்றமடைவார்கள். எதுவும் புரிவதில்லை. Modern ashram இக்காலத்து ஆசிரமமாக இருக்கிறதே என வியப்படைவார்கள். வெறுப்படைபவரும் உண்டு.

கவர்னர் K.M. முன்ஷி ஸ்ரீ அரவிந்தருடைய மாணவர். அவர் வந்தபொழுது அன்னை லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டிருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தரிசனம் செய்தபின் அவர் அவதாரச் சிறப்பை அறிந்து "அன்னை லிப்ஸ்டிக் போடாமல் காவியுடுத்தால், இந்தியா அவர் காலடியிலிருக்கும்'' என்றார்.

ஒருவருடைய குறையை நாம் காணும்பொழுது நம் நோக்கில் அவர் வாழ்வைக் காண்கிறோம். அவர் நோக்கில் அவரை அறிய முயன்றால் நமக்குக் குறையாகத் தெரிவது குறையாக இருக்காது.

இங்கு வந்து தங்கி யோக வாழ்வைச் சாதகர்கள் நடத்துவதைக் கண்டவர்கள்,

"நான் இதை ஆசிரமம் என நினைத்தேன். அது தவறு, நான் போகிறேன்'',

"இவர்கள் சொல்வனவெல்லாம் நமக்கு விளங்காது. எனக்குத் தாங்கவில்லை. எனக்கு இது வேண்டாம்'',

என்பன போன்ற பல விமர்சனங்களைக் கூறியவர்கள் அநேகர். வேறு சிலர் கேலி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

எதையும் ஹாஸ்யமாக மாற்றி, கேலியாகப் பேசும் ஒருவர் ஆசிரமம் வந்தார். அவர் திறமைக்கு ஏராளமான வாய்ப்பு கிடைத்தது. வாய் ஓயாமல் கேலி செய்தார். அன்னையை தரிசிக்க அவர் அறை எதிரில் காத்திருந்தபொழுது உள்ளே போகும்வரை கேலி செய்வதை நிறுத்தவில்லை.

 • உள்ளே போய் தரிசனம் முடித்து வெளியில் வந்தபின் அவர் கேலி செய்யவில்லை.
 • அவர் பேசவுமில்லை.
 • ஊருக்குப் போய், "நான் ஏன் ஆசிரமம் வந்தேன் என இப்பொழுது புரிந்துகொண்டேன்'' என எழுதினார். 

அன்னை சட்டப்படி,

 • நாம் பிறரில் உண்டு எனக் காணும் குறை நம் குறையே ஆகும்.
 • ஆசிரமம் வருவது புண்ணியம். நாம் திருவுருமாறவே இங்கு வருகிறோம். நம்மில் உள்ள குறை மாறி நிறைவாகவே இங்கு வருகிறோம்.
 • அப்பெண் - வாய் ஓயாமல் கேலியாகப் பேசியவள் - அக்குறையைப் போக்கிக்கொள்ளவே தாம் ஆசிரமம் வந்ததை உணர்ந்துவிட்டாள்.

அன்னையின் இதயம் ஆத்மாவின் உறைவிடம்

சாதகர்கள் காலமானபின் அன்னை இதயத்துள் வாசம் செய்வதாகக் கூறிய அன்னை "அங்கு ஒரு கூட்டமேயிருக்கிறது'' என்று கூறுகிறார்.

யோகம் முதிர்ச்சியடையும்பொழுது தூரத்து விஷயங்கள் கண்களில் காட்சியாகத் தெரியும். அந்தராத்மா குரல் எழுப்பும். ஒரு சமயம் ஸ்ரீ அரவிந்தர் தம் அறையிலிருந்தபொழுது வேறு சில சாதகர்களுமிருந்தனர். ஒருவரை நோக்கி ஸ்ரீ அரவிந்தர் "நான் ரிஷபசந்த் என்ன செய்கிறார் அவர் வீட்டில் எனப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்'' என்றார். ஸ்ரீ அரவிந்தருடைய பார்வை ஊடுருவிச் செல்கிறது.

பொதுவாக நாம் ஒரு விஷயத்தை அன்னையிடம் கேட்க விரும்பிச் சென்றால், அன்னையே அவ்விஷயத்தை ஆரம்பித்துப் பேசுவார். நம் மனத்திலுள்ள எண்ணங்களை அறிந்து அதற்குரிய பதில் தருவது அன்னையின் வழக்கம்.

நமக்குத் தேவை என்று ஏற்பட்டால் நாம் தேவையைப் பூர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்கிறோம். அன்னையுடன் மனதாலோ, நேரடியாகவோ, நமக்குத் தொடர்பிருந்தால், அத்தேவைகள் தாமே பூர்த்தியாகும்.

சூழலிலுள்ள அன்னை நம் தேவையை அறிந்து நாம் கேட்காமல் பூர்த்தி செய்வது அன்னைக்குரிய பாணி.

அடிக்கடி ஆசிரமம் வரும் பக்தர் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் தியானத்தில் கலந்துகொண்டு 8 மணிக்கு வெளியே வந்தால், அவர் ஊருக்குச் செல்லும் கடைசி பஸ்ஸைப் பிடிக்க முடியாது எனக் கண்டார். கடைசி பஸ் 8 மணிக்குப் புறப்படும் எனில் அது 7.35, 7.50க்கு நிறைந்தாலும் புறப்பட்டுவிடும். 8.00 மணிக்குத் தியானம் முடிந்து பஸ் ஸ்டாண்டுக்குப் போக 8.15 ஆகும். எனவே தியானம் நடக்கும் நாட்களில் ஆசிரம விடுதிகளில் தங்க விரும்பினார். அதற்கான அனுமதியைப் பெற்றார். அடுத்த வியாழக்கிழமை வரும்பொழுது பஸ்ஸில் அன்று முதல் 9.00 மணிக்குக் கடைசி பஸ் ஒன்று புதியதாகப் போகும் என்று கேள்விப்பட்டார். ஆசிரம விடுதியில் தங்கும் அவசியம் அவருக்கு ஏற்படவில்லை.

ஒரு பிரபலமான இன்ஜீனியர். அவர் ஒரு அணைக்கட்டில் சீப் இன்ஜீனியராக வேலை செய்தார். தாமோதர் பள்ளத்தாக்கு அணை அது. முக்கியமான இடத்தில் அணை விரிசல் விட்டது எனத் தெரிந்து பல ஏற்பாடுகள் நடக்கும்பொழுது அவர் அன்னையிடம் கூறினார். ஓர் கல்லை அன்னை எடுத்துக் கையில் கொடுத்து "இதை விரிசல் உள்ள இடத்தில் போடவும்'' என்றார். இன்ஜீனியர்கள் செய்த முயற்சி பலன் தந்தது.

அவர் மனைவி இறந்து போனார். அன்னை அவர் வீட்டிற்குப் போய் அவரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். "நான் என் மனைவியை உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்'' என்றார் இன்ஜீனியர். 

அன்னை "என்னிடமில்லை. என்னுள் அவரை ஏற்கிறேன். என்னுள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். பிரபஞ்சமே என்னுள்ளே இருக்கின்றது'' என்றார்.

ஆத்மாவின் அபயக்குரல் அன்னைக்குக் கேட்கும்

ஆசிரமத்தில் சேர்ந்து நெடுநாளானபின் மானேஜர் சொல்லும் கோள், செய்யும் கொடுமைகளைப் பொறுக்கமுடியாமல் இரவெல்லாம் மனம் வெதும்பி காலை 4 மணிக்கு இந்த இடத்தைவிட்டுப் போய்விடுவது என்று முடிவு செய்த சாதகரின் கண்முன் அன்னை தோன்றி, "எனக்கு நீ வேண்டும், போகக்கூடாது'' என்று தத்ரூபமாகக் காட்சியளித்ததும், கொஞ்ச நேரத்தில் மானேஜர் வந்து மன்னிப்பு கேட்டதும் வாசகர்கள் அறிந்தது. 90 வயது தாண்டி வாழ்ந்து ஆசிரமத்திலேயே தம் வாழ்நாளை அவர் முடித்துக்கொண்டார்.

வாழ்க்கையில் உள்ள அநியாயங்களும் கொடுமைகளும் அன்னையை அறிந்தவுடன் மறைந்துவிடும். யோகத்தை ஏற்றால் அவை அளவுகடந்து பெருகும். கொடுமை, அன்பின் மறுபுறம், அநியாயம், ஆண்டவனின் நியாயம் என்ற ஞானம் உதயமாவது யோகம்.

 • எல்லா உண்மையான பிரார்த்தனைகளும் தவறாது அன்னையின் காதில் விழும்.
 • பக்தன் ஆபத்து வந்தபொழுது ஆழ்ந்து பிரார்த்திக்கிறான்.
 • யோகி, அனுதினமும் ஆழ்ந்த பிரார்த்தனையை மேற்கொள்ளவேண்டும்.
 • பிரார்த்திக்கத் தவறினால் பிரார்த்திக்க வேண்டிய சந்தர்ப்பம் எழும்.

 • நாம் அதைத் துர்அதிர்ஷ்டம் என்கிறோம். ஸ்ரீ அரவிந்தர் அதை அதிர்ஷ்டம் என்கிறார்.

பிரச்சினை எழுந்தபொழுது ஆழ்ந்து அன்னையை அழைப்பவன் பக்தன். பிரச்சினையே இல்லாதபொழுது அன்னையை ஆழ்ந்து அழைப்பதில் இன்பம் காண்பவன் பூரண யோகி. மனம் இக்கட்டங்களைத் தாண்டினால் நமக்கு Life Divine புரியும். உலகில் புரியாத விஷயமிருக்காது. உணர்ச்சி இக்கட்டங்களைத் தாண்டினால் நம் காரியங்கள் எதுவும் நமக்குக் கட்டுப்படும். நம்மால் முடியாதது என்று நம் வாழ்வில் எதுவுமிருக்காது. உடல் இக்கட்டங்களுக்கு வாராது. ஸ்ரீ அரவிந்தர் உடல் இக்கட்டத்திற்கு வந்தபொழுது அக்னி உள்ளிருந்து எழுந்து அவர் உடலை இடையறாது எரித்தது. ஆனந்தசொரூபனாக அதையும் தாண்டவேண்டும். அன்னை அதையும் தாண்டி வந்து நரக வேதனையை அனுபவித்தார். பூரண யோகம் பூர்த்தியாக அக்கட்டத்தையும் தாண்டவேண்டும்.

இடைவிடாது அன்னையை அழைக்க மனம் விழையும் நிலை வாழ்வில் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்பதுடன் நான் நிறுத்திக்கொள்வது வழக்கம்.

அதற்கு முந்தைய கட்டத்திற்குரிய நிகழ்ச்சி ஒன்று

விளையாட்டு மைதானத்தில் அன்னைக்கு பாத்ரூம் கட்ட அஸ்திவாரம் போடுகிறார்கள். கட்டட வேலைப் பகுதித் தலைவர் அன்னையைச் சந்தித்து உத்தரவு பெறுவது வழக்கம். வேலையைப் பார்வையிடுவது ஒரு சாதகர் பொறுப்பு. அஸ்திவாரம் முடிந்த இரவு வானம் இருண்டு பெருமழை வருகிறது. சாதகருக்குப் பயமும் குழப்பமும் வந்து, தாம் செய்த வேலையில் குறை வந்தால் அது தம் குறையாகுமே எனப் படுக்கையில் இருந்து ஆழ்ந்து அன்னையை அழைத்து, அஸ்திவாரத்தைக் காப்பாற்றும்படிப் பிரார்த்திக்கின்றார். அன்னை தத்ரூபமாகக் காட்சியளிக்கிறார். கதவைத் திறந்து வெளியில் வந்து பார்த்தால் திரண்ட மேகக்கூட்டம் கலைந்து வானம் நிர்மலமாக இருக்கிறது.

மறுநாள் காலையில் அன்னை தலைவரிடம் அஸ்திவாரத்தைப் பற்றிக் கேட்டார். தலைவர் சாதகரை விசாரித்தபொழுது சாதகர் தம் பிரார்த்தனையையும், காட்சியையும் பற்றிச் சொன்னார். தலைவர் மீண்டும் அன்னையை சந்தித்து, சாதகர் சொல்லியதை விவரித்து இது உண்மையா எனக் கேட்டதற்கு அன்னை "ஆமாம்'' என்று பதிலுரைத்தார்!

இரவல் நகை

கண் எதிரில் உள்ளது ஒளியால் மறைவதும், உள்ளது தெரியாததும் அன்னையின் அற்புதங்கள். ஸ்ரீ அரவிந்தர் படமும், நேரில் ஸ்ரீ அரவிந்த தரிசனமும், அவர்கள் ஜோதியில் மறைந்ததையும் ஏற்கனவே கண்டோம். பயங்கர விபத்தில் அன்பர்கள் மட்டும் காயம்கூடப்படாமல் தப்பித்ததையும் கண்டோம்.

அற்புதங்களின் வகைகள் அன்னையிடம் பல.

 • அக்னி நட்சத்திரத்தில் அன்பருக்காகப் பெருமழை பெய்தது.
 • படுக்கையில் அன்னையிடம் முறையிட்டது, அன்னைக்கு அவர் அறையில் கேட்டது.
 • நாம் மனதில் நினைத்து வாயால் கேட்காத கேள்விக்கு அன்னை பதில் கூறுவது.
 • நம்பிக்கையேயில்லாதவர் வாழ்வில் அவர் அவநம்பிக்கையை மீறி அடுத்தவர் பிரார்த்தனை அற்புதமாகப் பலிப்பது.

 • எதையும் பலமுறை செய்யவேண்டிய இராசியுடையவர், அனைவரும் பலமுறை முயல்வதை முதன் முயற்சியிலேயே பெரும்பலன் பெறுவது.
 • எதிரி மனம் மாறி நமக்குச் சாதகமாக செயல்படுவது.
 • சுமார் 2000 பிரசாதங்கள் பலன் தராதபொழுது அன்னைக்கு அனுப்பிய காணிக்கை பலிப்பது.

பெரிய இடத்துத் திருமணத்திற்கு விலையுயர்ந்த நகையை இரவல் வாங்கி அணிந்துகொண்டு போன அன்பர் பயங்கரத்தைக் கண்டார். பயங்கரவாதிகள் வீட்டில் நுழைந்து மெயின் ஸ்விட்சை நிறுத்திவிட்டு torch lightகளுடன், துப்பாக்கியுடன் நகையைக் கேட்டு மிரட்டினர்.

பெண்களைச் சுவரோரம் வரிசையாக நிற்கவைத்து டார்ச் வெளிச்சத்தில் நகைகளைத் தரும்படி உத்தரவிட்டனர். அனைவரும் உயிருக்குப் பயந்து கொடுத்தனர். அன்பர் கழுத்தில் விலையுயர்ந்த இரவல் நகை. எட்டு வயதுக் குழந்தை நடுங்குகிறது. "அன்னையைக் கூப்பிடு, பயப்படாதே, ஒன்றும் நடக்காது'' என மகளுக்கு கூறிவிட்டு அன்னையைத் தீவிரமாக அழைத்தவண்ணம் நிற்கும்பொழுது டார்ச் இவர்மீது பட்டது. பயங்கரவாதிகள் அன்பரிடம் சோதனை செய்தனர். "இங்கு ஒன்றுமில்லையே'' என்று கூறி நகர்ந்தனர்.

திருமணத்தில் அனைவரும் நகைகளைப் பறிகொடுத்தபொழுது நீங்கள் மட்டும் எப்படித் தப்பினீர்கள் என அனைவரும் கேட்டபொழுது,

"ஸ்ரீ அன்னையை அழைத்தேன், காப்பாற்றினார்'' என்று பதில் கூறினார்.

***book | by Dr. Radut