Skip to Content

அன்னையின் ஆன்மீக வாழ்வு

 

இறைவன் எல்லாம்வல்லவன், தன்னிகரில்லாதவன் என்று அனைவரும் பேசுவதை அன்னையால் ஏற்க முடியவில்லை. அத்துடன், அப்படியொருவரிருந்தால் அதை எப்படி அறிவிக்கலாம் என்று அன்னை கருதியதால் தாம் நாத்திகரானதாகக் கூறுகிறார்.

ஒரு துக்க வீட்டிற்கு நாம் போனால், அவ்வீட்டினுள் நுழைந்தவுடன் நம்மிடம் அவ்வளவு நேரமில்லாத துக்கம் நம் உள்ளிருந்து பீறிட்டெழுவதை நாம் காணலாம். அது அவ்வீட்டுத் துக்கம் - அச்சூழலுக்குரியது - நம்முள் நுழைவதாகும். பிறருடைய துக்கம், அதுபோல் அன்னையைத் தவறாது பாதிக்கும் என்கிறார் அன்னை. உடனே இது என் சொந்த வருத்தமன்று, பிறருடையது எனத் தாம் அறிவதாகக் கூறுகிறார்.

அன்னையின் இளவயது அனுபவம்

நம் வாழ்க்கையில், மிக அரிதாகக்   கற்பனையில் தம்மைத் தாமே இழந்த குழந்தைகளைக் காண்கிறோம். இதுபோன்ற சில மனிதரும் உண்டு.ஆயின், காண்பது அரிது. அவர்கள் தமக்குத் தாமேப் பேசிக் கொள்வார்கள்.கூர்ந்து நோக்கினால், உதடு அசைவதைக் காணலாம். அன்னைக்கு இப்பழக்கம் சிறுவயதில் உண்டு. "நானே எனக்குக் கதை சொல்லுவேன்'' என்கிறார்.

தாம் அப்படிச் சிறுவயதில் கருதியதின் உண்மையைப் பின்னர் ஆய்ந்து அறிந்தார். இவை வெறுங் கற்பனையில்லை. நம்மைச் சுற்றியுள்ள சூட்சும உலகில் நுழைய நாம் கற்பனையைப் பயன்படுத்துகிறோம். அவ்வுலகம் அற்புதமானது, இனிமை நிறைந்தது, அழகு பொருந்தியது, சுமூகமான மணம் வாய்ந்தது. முயற்சியால், அங்குப் போக முடியுமானால் அங்கே தங்கலாம், தங்கி நம் கற்பனைத் திறனால் புதியவற்றைச் சிருஷ்டிக்கலாம். அவை பிறகு வாழ்வில் பலிக்கும். சிறு வயது கற்பனைகள் பின்னர் பலிக்கும் என்ற கவிக் கூற்றின் உண்மையிது என அன்னை விளக்குகிறார்.

அப்படி அன்னை கண்ட கனவுகளில் ஒன்று, ஒரு நகரம் நிர்மாணித்து மனிதனுக்கு அன்றாடத் தேவைகளைச் சம்பாதிக்கும் அவசியத்தை விளக்கி, நிம்மதியாக, அவன் இறைவனை நாட வழி செய்வதாகும். அக்கனவுகளே பிற்காலத்தில், அன்னை வாழ்வில், ஆசிரமமாகவும், ஆரோவில்லாகவும் பூர்த்தியாயின.

மனமே உலகை ஆள்கிறது. சத்திய ஜீவியம் படைத்த உலகத்தை இன்று ஆள்வது மனம். இன்று மனிதன் எதை நாடினாலும் அதை அவனால் சாதிக்க முடியும் என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். சத்திய ஜீவன் பிறப்பதும் அதனால் முடியும் என்பதும் பகவான் எழுதியது.

அன்னையின் மேற்கூறிய அனுபவத்தையும், பகவானின் இக்கூற்றையும் அடிப்படையாகக் கொண்டு நான் கடந்த 15 ஆண்டுகளாக எழுதி வருவதின் சுருக்கம்,

 • அன்னை அவதரித்த பின் கர்மம் தன் வலுவை இழந்துவிட்டது.
 • கர்மத்திற்குரிய குணங்களை விடுவதற்கு முன்வருபவர்க்குக் கர்மம் இல்லை.
 • கர்மத்தைக் கரைக்கும் சக்திக்கு அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்ய முடியும்.
 • அதிர்ஷ்டத்தைத் தன் வாழ்வில் மனிதன் உற்பத்தி செய்ய முடிவு செய்தால், அன்னை கூறும் கற்பனை உலகில் அதை உற்பத்தி செய்யும் திறனை 'அன்னை சக்தி ' அளிக்கவல்லது.

5 வயது முதல் 96 வயதுவரை

சிறு வயதிலேயே தம் தலை மீது ஓர் ஒளி சக்தியுடனிருப்பதை அன்னை அறிவார். தியோன் மனைவி அன்னையைப் பார்த்தபொழுது "இவ்வொளி மகுடம்போல் அமைந்துள்ளது. 12 மணிகளாக அது ஜ்வலிக்கிறது. உலகைச் சிருஷ்டித்த மாதாவின் தலை மீதுள்ள மகுடம் இதுவாகும்'' என்றார்.

இந்த ஜோதியே தம்மை வழி நடத்திச் சென்றதாகவும், அந்தச் சக்தியே தம்மைப் பாதுகாத்ததாகவும் அன்னை கூறுகிறார். தாம் செய்யும் எந்தவொரு வேலையையும் இவ்வொளியை அனுசரித்தே செய்ததாகக் கூறுகிறார். தம்மை வழி நடத்திய ஜோதி இதுவே என்கிறார்.

சினிமாவும் சர்க்கஸும்

5 வயதிலிருந்து 7 வயதிற்குள் அன்னை ஒரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். தம் மனதில் தோன்றும் எண்ணங்களை மனக்கண்முன் ஒரு திரையை நிறுவி அதில் சினிமா பார்ப்பதுபோல் அன்னையால் காண முடிந்தது. ஓர் ஆனந்த அனுபவமாக அன்னை இதை அனுபவித்து வந்தார். இதைத் தமக்கு அதிக இன்பத்தைக் கொடுக்கும் அனுபவமாகக் கருதினார், தன் தகப்பனார் சர்க்கஸுக்கு அன்னையை அழைத்தபொழுது, "நான் இங்கு அதிக சந்தோஷத்தை அனுபவிக்கிறேன். சர்க்கஸுக்கு வரவில்லை'' என்று மறுத்துவிட்டார். நண்பர்கள் விளையாட அழைத்தாலும் இதுவே அன்னையின் பதிலாகும்.

தம் அந்தராத்மாவுடன் வாழ்வதிலும், தமக்கே "கதை'' சொல்வதிலும், மனக்கண்முன் "திரைப்படமாக'' உணர்ச்சிகளைக் காண்பதிலும் அன்னை 7 வயதுவரை இருந்துவிட்டதால் A, B, C கூட அவர் கற்றுக்கொள்ளவில்லை. வீட்டில் அனைவரும் இவரை மூளை வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சியற்ற குழந்தை என நினைத்தனர்.

அன்னையின் அண்ணன் இவரைவிட 1½ வயது பெரியவர். பள்ளியிலிருந்து பெரிய படங்களை எடுத்து வருவார். அதன் கீழ் விவரம் எழுதியிருக்கும். அதைக் கண்ட அன்னையால் எழுதியிருப்பதைப் படிக்க முடியவில்லை. அண்ணன், தங்கைக்கு எழுத்துச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். மூன்றாம் நாளே அன்னை, "படிக்க ஆரம்பித்துவிட்டேன்'' என்றார். பல ஆண்டுகளில் பயிலுவதை ஒரு வாரத்தில் அன்னை பயின்றார். பத்து வயதில் பள்ளிக்குப் போய் முதல் மாணவியாக பல பரிசுகள் பெற்றார். பியானோ வாசிக்கவும் கற்றார்.

"அறிவு விரலுக்கு வந்தாலன்றி பியானோ வாசிக்க முடியாது'' என்பது அன்னையின் அபிப்பிராயம். எட்டு வயதில் டென்னிஸ் பயின்றார்.

டென்னிஸ் விளையாடக் கற்றுக் கொள்ளும் பொழுதே டென்னிஸில் சிறந்தவருடனே அன்னை விளையாடப் போவது வழக்கம். எவரும் பயிற்சிக் காலத்தில் ஒருபொழுதும் ஜெயிக்க முடியாதன்றோ? ஆனால் அன்னை நன்றாக ஆடக் கற்றுக் கொண்டார்.

எவரும் அன்னையை அலட்சியப்படுத்துவதோ, மரியாதைக் குறைவாக நடத்துவதோ இல்லை. அன்னை சிறு பெண்ணாக இருக்கும் பொழுது அன்னையையும், மற்றொரு பெண்ணையும் வம்புக்காரப் பையன் ஒருவன் கேலி செய்து தொந்தரவு செய்தபொழுது, கோபம் வேகமாக எழுந்து அபார சக்தி ஒன்று அன்னையை ஆட்கொண்டது. அன்னை அப்பையனைத் தூக்கி எறிந்தார்!

ஓவியர்கட்காக நடத்தும் பள்ளியில் அன்னை சேர்ந்தார். பிரபல ஓவியர் ஒருவரிடம் சித்திரம் பயின்றார். நிதானமும், பக்குவமும் நிறைந்தவர் அன்னை. மற்ற மாணவர்கள் அவரை ஆலோசனை கேட்பதுண்டு. அவர் பார்வைக்கு அனைவரும் உட்படுவர். வகுப்பில் தலைவியாக இருந்த மாணவியை பணியிலிருந்து அநியாயமாக விலக்கியபொழுது அன்னை அதை அநியாயம் எனக் கருதினார். அன்னையால் மாணவத் தலைவி மீண்டும் வகுப்பில் சேர்ந்தார்.

இயற்கையோடு இணைந்த நிலை

பன்னிரண்டு வயதில் அன்னைக்கு ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டன.

பொருள்களோ, மனிதர்களோ தனித்தனியாகப் படைக்கப்படவில்லை. அனைத்தும் ஒன்றே. அனைவரும் ஒரே பொருளாலானவர்கள். அனைவர் உள்ளமும் ஒரே ஜீவியத்தால் நிரப்பப்பட்டவை. அனைவர் மனத்தையும் உந்தும் உறுதி ஒன்றே என்ற ஞானம் அன்னைக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவத்தால் கிடைத்தது.

தம்மைச் சூழ்ந்துள்ள சூழல் உள்ள சக்தியை அன்னை அறிவார். தனியே நடந்துபோய் மரத்தடியில் உட்கார்ந்து தம்மை மறந்த நிலையில் அன்னையிருப்பதுண்டு. அணில், பறவைகள் அன்னை மீது வந்து உட்கார்ந்து உறவாடும். அன்னை நாடிய இடத்து மரங்கள் 1000 ஆண்டுகளாக உயிருடனிருப்பவை. சில மரங்கள் 2000 ஆண்டும் வாழ்ந்தவை எனக் கூறப்படுகிறது. அன்னைக்கு ஓரளவு அவற்றின் பாஷை தெரியும். ஒரு சமயம் ஒரு பெரிய மரம் அவரிடம் வந்து தன்னை வெட்டப் போவதாகவும், அதனின்று தன்னைக் காக்கவேண்டும் எனவும் முறையிட்டது.

பிற்காலத்தில் அதுபோல் தன்னிடம் முறையிட்ட மரங்களை அன்னை காப்பாற்றியுள்ளார்.

சோக மனிதன் Man of sorrows

இரவில் அன்னை உடலைவிட்டு எழுந்து ஆகாயத்தில் பரவியிருந்து மனித ஜீவன்களின் சோகத்தைப் போக்கி மீண்டும் உடலை நாடும்பொழுது தம் இடப்பக்கத்தில் ஒரு வயதான மனிதர் நீண்ட ஊதா அங்கியை அணிந்து உட்கார்ந்திருப்பதையும், தம்மைப் பிரியமாகப் பார்ப்பதையும் கண்டறிந்தார்.

பிற்காலத்தில் இம்மனிதர் சோக மனிதன் எனப்படுவார் என அன்னை அறிந்தார். சாவித்திரியில் இம்மனிதரை வர்ணிக்கும் பகுதியொன்றுண்டு.

"என் வேதனையை அனுபவிக்க இறைவன் உலகத்தைப் படைத்தான்'' என்று அவர் கூறுகிறார்.

பள்ளியில் அன்னை எழுதிய கட்டுரை

15ஆம் வயதில் அன்னையின் ஆசிரியர் "நாளைக்கு  தள்ளிப் போடுவது'' என்ற தலைப்பை மாணவர்கட்குக் கொடுத்து கட்டுரை எழுதச் சொன்னார். "நாளை என்று தள்ளிப்போட்டால், இல்லை என்ற கோட்டையை எட்டலாம்'' என விளக்கமும் கொடுத்திருந்தார் ஆசிரியர்.

அன்னையின் கட்டுரை இது: " வீட்டுப்பாடம் எழுதச் சோம்பேறியான மாணவன் பிறகு செய்யலாம் என முடிவு செய்து தூங்கப் போகிறான். தூங்கி எழுந்தால் தெம்பாக எழுதலாம் என்பது திட்டம். தூக்கத்தில் கனவு வருகிறது. கனவில் ரோடு தெரிகிறது. ரோடு இரண்டாகப் பிரிகிறது. மாணவன் கவர்ச்சியான பாதையை ஆசையோடு மேற்கொள்கிறான். மணம் நிறைந்த தென்றல், இதமான இளஞ் சூரியன் அவனைப் பரவசப்படுத்துகின்றன. உள்ளிருந்து எழும் குரல் "சுலபத்தை நாடாதே'' என எச்சரிக்கிறது. எதிர்காலத்தை நினைத்துப் பார் என்கிறது. கனவின் கதாநாயகன் எச்சரிக்கையைப் புறக்கணிக்கிறான். இன்பத்தை நாடுகிறான். பல கேள்விகளை மனம் எழுப்புகிறது. அப்புறம் பார்க்கலாம் எனத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்கிறான். தன்னையறியாமல் ஓர் ஓடையில் இறங்குகிறான். அது சேரும் சகதியும் நிறைந்த இடம். பேய்க்குரல் எழுகிறது. இருண்ட கோட்டையை அடைகிறான். பயந்து படுக்கையிலிருந்து உருண்டு கீழே விழுந்து விழித்துக் கொள்கிறான். இனி "நாளை'' என்பதையே மறந்துவிடவேண்டும் என முடிவு செய்கிறான்."

சிறு பிராயத்தில் அன்னை எழுதிய கட்டுரை இது. ஆயினும் ஆழ்ந்த கருத்தை வெளியிடுகிறது.

கடவுள் தண்டிப்பாரா?

இன்று நியூயார்க் உலகத்தின் பாஷன் (fashion) தலைநகராக இருப்பதைப் போல் அன்று பாரிஸ் விளங்கியது. அங்கு உயர்குடி மக்கள் பேச்சு, நடை, உடை, பாணி, பழக்கம் போன்றவற்றை அதிக முக்கியமாகக் கருதியவர்கள். உயிர் போலவும் பாதுகாத்தார்கள்.

தர்மகைங்கர்யத்திற்குப் பணம் வசூல் செய்யும் நோக்குடன் ஒரு கண்காட்சி அமைத்தபொழுது அதன் ஒரு பகுதி திறந்தவெளியில் துணிப்பந்தலால் அமைந்தது. நகரப் பெருமக்கள் கூடி, திறந்த வெளியரங்கு மின் விளக்குகளால் ஜொலிப்பதைக் கண்டு வியக்கும் நேரத்தில் மின் பழுதால் கசிவு ஏற்பட்டு (short circuit) தீப்பொறிப் பந்தலைக் கொளுத்தியது. விரலசைவையும் கணக்கிடும் பெருமக்கள் நிலையிழந்து ஆடு மாடுகள் போல அடித்துக்கொண்டு ஓடியதில் ஏராளமான உயிர்ச் சேதமேற்பட்டது.

சவங்கள் அடக்கம் செய்யப்பட்டபொழுது ஒரு பிரமுகர், "இறைவனின் சட்டப்படி நடக்காதவர்கள் இறைவனால் தண்டிக்கப்பட்டார்கள்'' என்று பேசினார்.

இறைவன் தண்டிப்பார் என்ற கருத்தை ஏற்காத அன்னை, அவர் பேச்சை மறுத்தார். ஏற்றுக் கொள்ளவில்லை.

"இறைவன் தண்டிப்பதில்லை. ஒழுங்கு, சுமுகம் குறையுமிடத்தில் ஆபத்து, விபத்துகள் நேரிடும்'' என்பது அன்னையின் கருத்து. பலமுறை இதை வலியுறுத்தி அன்னை எழுதியிருக்கிறார், பேசியிருக்கிறார்.

அன்னையின் முற்பிறப்புகளைப் பற்றி அதிகமாக ஒரு சமயம் பேசியதுண்டு. அப்பொழுது அன்னை சாதகர்களுடைய முற்பிறப்பைப் பற்றியும் பேசினார். பகவான் அதை நிறுத்தும்படிச் சொல்லி விட்டார். அது சமயம் அன்னை,

பூமியில் அது' உற்பத்தியானதிலிருந்து எப்பொழுது ஓர் இழை ஜீவியம் consciousness வெளிப்படும் நிலை இருந்ததோ அப்பொழுதெல்லாம் நான் அங்கிருந்தேன்,

என்று கூறியுள்ளார். அன்பர்கள் அன்னையிடம் வந்தபின் தங்கள் வாழ்வை நினைத்துப் பார்த்தால் எப்பொழுதெல்லாம் ஒரு பெரிய நல்லது நம் வாழ்வில் ஏற்பட்டாலும் அங்கு அன்னை செயல்பட்டார் என அறியலாம். அன்னை வாழ்வில் அதுபோல் இறைவன் தவறாது செயல்பட்ட பல நிகழ்ச்சிகளை நாம் அறிவோம். நம் வாழ்வில் அன்னை அதுபோல் செயல் பட்டவற்றை அறிவது நம்பிக்கை, உணர்வது பக்தி.

அன்னை தம் காட்சி (vision) ஒன்றை விவரித்த பொழுது பல ஆயிரம் ஆண்டுகட்கு முன் அன்னை எகிப்து ராஜகுமாரியாக இருந்தார் எனத் தெரிய வருகிறது.

ஒரு சிறு குழந்தையை அன்னையிடம் கொண்டு வந்தார்கள். ஒரு வயது இருக்கும். குழந்தை அன்னையை ஆர்வமாக நாடியது. தரையில் போட்டபொழுது அன்னையின் கால் கட்டை விரலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. குழந்தையின் செயல் அன்னைக்கு வியப்பூட்டியது. சில நாள் கழித்து அதன் போட்டோவைக் கொண்டுவரச் சொல்லி அன்னை தம் தியானத்தில் அக்குழந்தையின் பூர்வோத்திரத்தை அறிய முற்பட்டார்.

இது சம்பந்தமாக அவர் காட்சியாகக் கண்டது

அன்னை அரண்மனை போன்ற பிரம்மாண்டமான கட்டிடத்திலிருக்கிறார். அற்புதமான சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. ஒரு குழந்தை சாக்கடையில் விளையாடிக் கொண்டிருக்கிறது. குழந்தைக்கு உடையில்லை. குழந்தையைக் கவனிப்பவரிடம் அன்னை கோபமாகப் பேசுகிறார். அவர், "குழந்தைக்கு இது பிடிக்கிறது'' என்கிறார். அது அன்னையின் குழந்தை.

சமீபத்தில் அன்னையிடம் வந்த அந்தக் குழந்தை,  தான் காட்சியில் எகிப்தில் கண்ட குழந்தை என அன்னை தெரிந்துகொண்டார்.

ஸ்ரீ அரவிந்தர் எழுதிய நூல்களைப் படித்த வடநாட்டினர் சிலர், இவற்றைக் கடவுள்தான் எழுதியிருக்க முடியும் என்று முடிவு செய்து வடநாட்டிலிருந்து புறப்பட்டு பகவானைத் தரிசனம் செய்ய வந்தனர். வழியில் இரயிலில் ஒரு குழந்தைக்கு ஜுரம், வாந்தி போன்ற தொந்தரவுகள் எழுந்தன. திரும்பப் போகலாம் எனவும் நினைத்தனர். சிறுமி சற்று தெளிந்துவிட்டதால் சிரமத்துடன் புதுவை வந்து சேர்ந்தனர். எனினும் குழந்தை தெம்பேயில்லாமலிருந்ததால், அறையிலேயே குழந்தையை விட்டுவிட்டு மற்ற மூவரும் அன்னையைத் தரிசிக்கப் போனார்கள். மனம் மட்டும் ஒரு கேள்வியை எழுப்பியபடியிருந்தது. அன்னைக்கு எழுதி 4 பேருக்கு அனுமதி பெற்றோம். இப்பொழுது மூன்று பேர் போகிறோம். அன்னை கொடுத்த அனுமதிக்கு என்ன பொருள்? தெய்வமும் தவறு செய்யுமா? என்ற கேள்விகள் எழுந்தன.

தரிசனம் முடிந்தது. அனைவரும் அறைக்குத் திரும்பினர். சிறுமியிடம் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தனர். அவள், "எனக்குத் தெரியும். நான் அன்னையைத் தரிசித்தேன்'' என்று கூறி அன்னை முன்னிலையில் நடந்ததை விவரமாகக் கூறினாள். அவள் முகம் பிரகாசமாக இருந்தது. ஜுரமில்லை, தெம்பாகப் பேசினாள். அவள் கூறிய விவரங்கள் அனைத்தும் உண்மை. பெற்றோருக்குப் புரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து,

"அன்னை நான்கு பேருக்கு அனுமதி கொடுத்தார். நாம் போனது மூன்று பேர். என்றாலும் நான்கு பேருக்கும் தரிசனம் கொடுத்துள்ளார்'' என அறிந்தனர்.

பிறப்பு

எகிப்திலிருந்து மாரிஸ் அல்பாசா என்பவரும் அவர் மனைவி மட்டில்டா அல்பாசா என்பவரும் பாரிஸ் வந்து தங்கினர். வந்த ஒரு வருஷ காலத்தில் அவர்கட்குப் பிறந்த பெண் குழந்தைக்கு மிரா Mirra எனப் பெயரிட்டனர். மாரிஸ் துருக்கியில் பாங்க் நடத்தியவர். மட்டில்டா எகிப்தில் பாங்க் நடத்திய குடும்பத்தில் பிறந்தவர். இவர்கள் அன்னையின் பெற்றோர்கள். அன்னையின் தாயார் எகிப்து ராஜ வம்சத்துடன் தொடர்புள்ளவராகக் கருதப்படுகிறார்.

அன்னை பிறந்த நேரம் காலை 10.15

நாள் பிப்ரவரி 21, 1878

அன்னையின் சிறுபிராயம் மற்ற குழந்தைகளினின்றும் மாறுபட்டதாகும். அதிகமாகப் பேசுவதில்லை. சாப்பாட்டை வலிய ஊட்டுவது அன்னைக்குப் பிடிக்காது. "குழந்தைகட்கு என்ன சாப்பிடவேண்டும், எவ்வளவு சாப்பிடவேண்டும்'' என்று தெரியும் எனப் பிற்காலத்தில் அன்னை கூறியுள்ளார்.

மெத்தையிட்டுத்  தைத்த நாற்காலி அன்னைக்காக ஒன்று இருக்கிறது. சிறு வயதில் தம் நாற்காயில் உட்கார்ந்து அன்னை தியானம் செய்வார். ஜோதி, மழையாக தம் தலைமீது பொழிவதையும், அது தலையினுள் ஒரு புரட்சி செய்வதையும் அன்னை காண்பதுண்டு.

தம் தாயார் தம்மை ஒரு நாள் திட்டும்பொழுது உலகத்துப் பொய்யெல்லாம் சேர்ந்து உலகத்துத் துன்பத்துடன் கலந்து தம்மைத் தாக்குவதாக அன்னை உணர்ந்து கண்ணீர் பெருக்கினார். "உலகம் தன்னைத் துன்பத்திலிருந்து மீட்க என் உதவியை நாடுகிறது'' என்று தாயாரிடம் அன்னை கூறினார்.

அன்னை எழுதிய கடிதம்

முதல் உலக யுத்தம் வந்தபொழுது அன்னையும் அவர் கணவரும் இந்தியாவிலிருந்து பிரான்சு திரும்பினார்கள். அன்னை பிரான்சின் தென் பகுதியிலுள்ள லூனல் என்ற ஊரில் தங்கியிருந்தார்.

இந்தியாவில் ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்த அன்னை, "நான் தெய்வீக அன்பின் திருவுருவமான ஸ்ரீ அரவிந்தர் முன் நின்றபொழுது, என் ஆன்மா அவரைச் சரணடைந்தது'' என்று கருதினார். பிரான்சுக்குத் திரும்பவேண்டும் என்றால், எப்படி பகவானை விட்டு தம் ஆன்மா பிரியும், பிரிந்து உயிர் வாழ முடியாதே என பேதலித்தவர், தம் ஆன்மாவை அவர் காலடியில் வைத்துவிட்டு பிரான்சு திரும்பினார். ஆத்மாயில்லாமல் நடைப் பிணம் போலிருந்தேன் என்றார். அந்நிலையில் அவருடல் அடிக்கடி நோய்வாய்ப்படுவதுண்டு.

அன்னையை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டவர் அடிக்கடி ஆசிரமம் வருவார். மனம் நிறைந்தது. ஒரு சமயம் சமாதியருகில் 10 நாளிருக்கும் வாய்ப்பு எழுந்தது. அதன் முக்கியத்துவத்தை அவர் அறியவில்லை; ஆனால் அச்சந்தோஷத்தை மனம் திளைத்து அனுபவித்தார். அளவு கடந்து மனநிறைவு பெற்றார். வீடு திரும்பினார். உடல் நோய்வாய்ப்பட்டது. அவரால் சமாதியைவிட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை என்று புரிந்தது. "I miss it very much''. இது அன்பர்கள் அனுபவம். அன்னை பிரான்சுக்குப் போனபொழுது அந்தப் பிரிவை அனுபவித்தார்.

உடல் நோய்வாய்ப்பட்டபொழுது டாக்டர் வந்தார். அவர் மருந்திற்கு எதுவும் பிடிபடவில்லை. அத்துடன் இனி நம்பிக்கையில்லை என்று கூறிவிட்டுப் போய்விட்டார். அன்னை ஸ்ரீ அரவிந்தருக்குக் கடிதம் எழுதினார். கடிதம் எழுதியவுடன் உடல் தேறிவிட்டது. வியாதி போய்விட்டது. ஆனால் வலிமை வர நாளாயிற்று.

அன்பர்கள் ஆசிரமத்திற்குக் கடிதம் எழுதினால் கடிதம் வந்து சேர்ந்தவுடன், பதிலாகப் பிரசாதம் வந்தவுடன், சில சமயங்களில் கடிதம் எழுதி தபால் சேர்த்தவுடன் தங்கள் பிரச்சினை தீர்ந்ததாக எழுதுகிறார்கள். ஆசிரமச் சூழலுடன் ஆத்மா தொடர்புகொண்டவுடன் சக்தி வேலை செய்கிறது. பிரச்சினை தீருகிறது. இது அனுபவம்.

அந்நிலையிலும் அன்னை தம் தெய்வீகப் பணியைத் தொடர்ந்தார். உலகில் எவராவது தெய்வத்தை அழைத்தால், அது அன்னை காதில் விழும். அன்னை "பதிலனுப்புவார்''. பிரச்சினை தீரும்.

"உலகின் பல பாகங்களினின்றும் குரல் கேட்டபடியிருக்கும். என்னை வந்தடைந்தவுடன் என் பதில் எழுந்து அவர்களை அடையும்.''

"எதுவும் வேலையை நிறுத்தமுடியாது எனக் கண்டேன். உடலின்றியும் வேலை தொடர்ந்தது''.

"இரண்டாம் யுத்தத்தின்பொழுது அபயக்குரல்கள் அதிகமாக என்னை அதுபோல் வந்தடைந்தன''.

"நான் நலிவுற்றுள்ளபொழுது, மரணத்தின் பிடியிலிருந்து மயிரிழையில் தப்பியபொழுது ஆன்மீகச் சக்தி செயல்பட்டு அபயக்குரலுக்குப் பதிலனுப்புவதைக் கண்டேன்''.

"பிரான்சிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் குரல்கள் கேட்டன''.

"சக்தி எந்த அளவு செயல்படமுடியும் என்ற சோதனையை உலகின் பல பாகங்களிலும் செய்தேன்''.

அன்னை உலகெங்கும் பரவியுள்ள ஆன்மீகச் சக்தி.

அன்னையைச் சக்தியாக அறிதல்:

அன்னையை அழைத்து நம் குரல் அவர் காதில் விழுந்து, அவர் பதில் நம் ஆன்மாவை அடைவதைக் கண்ட பக்தருக்கு அன்னை சக்தி தம் வாழ்வில் செயல்படுவதைக் கண்டார்.

 • ஜாதகத்தை நம்புவதற்குப் பதிலாக, பெரிய சிபாரிசை நாடுவதற்குப் பதிலாக, வாரப் பலனை ஆர்வமாகப் படிப்பதற்குப் பதிலாக, ஜீவனின் ஆழத்திலிருந்து அன்னையை அழைத்து பதில் பெற்றால், அத்தொடர்பை நிரந்தரமாக்கிக் கொண்டால், அவர் வாழ்வில் கூப்பிட்ட குரலுக்கு அன்னை சக்தி தவறாது செயல்படுவதைக் காணலாம்.
 • வாழ்வில் தீராத முக்கிய பிரச்சினையை ஒரு முறை இதுபோல் தீர்த்துக்கொண்டவருக்கு அதன்பின், அன்னை சக்தி தவறாது பலிக்கும்.
 • வாழ்வில் முக்கிய வாய்ப்பை இதுபோல் பூர்த்தி செய்தவருக்கு எதிர்காலத்தில் எந்த வாய்ப்பையும் தவறாது பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
 • ஓடும் ரயில் நிற்பது, காலில் உள்ள பின் (pin) மறைவது போன்ற நிகழ்ச்சிகள் அன்பர் வாழ்வில் அன்றாட நிகழ்ச்சிகளாகும்.

 • மனதால் இந்தச் சக்தியை நாடமுடியும் என்றபின் ஜீவன் இச்சக்தியை ஏற்குமானால், ஜீவன் இக்குரலை எழுப்பச் சம்மதப்பட்டால் 18 ஆண்டுகளில் ரூ1 கோடி கம்பெனி , ரூ1200 கோடியானதைப் போன்ற சாதனையை அவரால் செய்யமுடியும்.
 • ஜீவன் குரல் எழுப்பினால் அவர் வாழ்வு பூலோகச் சுவர்க்கமாகும்.
 • ஜீவன் குரல் எழுப்பியபின் அவர் யோகத்தை நாடினால், அவர் பகவான் கேட்ட 100 பேரில் ஒருவராவார்.
 • "உன்னைப் போன்ற ஒருவருக்காக நான் காத்திருக்கிறேன்'' என்று அன்னை அநேகம் பேரிடம் கூறியுள்ளார்கள். அந்த அம்சமுள்ளவர்கள் பொதுவாக அவ்வாய்ப்பைப் பூர்த்தி செய்துகொள்வதில்லை. அவர் ஜீவன் இக்குரலை எழுப்பினால் அவர் அன்னை எதிர்பார்ப்பதைப் பூர்த்தி செய்வார்.

ஜப்பான் வாசம்

Dr. ஷு மெய் என்பவர் ஜென் மதத்தைப் பின்பற்றுபவர். இந்தியா சுதந்திரம் அடையவேண்டும் என்ற கொள்கையுடையவர். அவருடன் அன்னை ஜப்பானில் 1916இல் ஓராண்டு தங்கியிருந்தார்.

"தினமும் 7 மணி நேரம் நான் ஷு மெய்யுடன் தியானம் செய்தேன்", என்கிறார் அன்னை.

"ஜப்பானிய பெண்களுக்கு'' என்ற தலைப்பில் அன்னை ஒரு சொற்பொழிவாற்றினார்.

லியோ டால்ஸ்டாய் உலகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர். War & Peace "போரும் சமாதானமும்'' என்ற நாவலை எழுதியவர். மகாத்மா காந்தி அவரைக் குருவாக ஏற்று தாம் நடத்திய பண்ணைக்கு டால்ஸ்டாய் பண்ணை எனப் பெயரிட்டார். டால்ஸ்டாய் ஒரு கவுண்ட் (count) பெருநிலம் பெற்ற அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தம் சொத்தை நிர்வாகம் செய்ய ஆரம்பித்தவுடன் ஏழை எளியவருக்குப் பரிந்து 'எவரும் தம் அரண்மனையில் வசிக்கலாம்', என்றார். விலையுயர்ந்த பொருள்களுள்ள அவ்வரண்மனை அறைகளில் ஏழைகள் படுத்துறங்குவது வழக்கமாயிற்று. உலகம் ஒன்றுபடவேண்டும், ஒரே மாதிரியான உடை உடுக்கவேண்டும், ஒரே மொழியைப் பேசவேண்டும், ஒரே மாதிரியான வாழ்வை (life style) மேற்கொள்ள வேண்டுமென்ற இயக்கத்தை மேற்கொண்ட அவர் பிள்ளைகள், அச்சமயம் ஜப்பான் வந்திருந்தார்கள். அன்னை, அவர்களைச் சந்தித்தார். ஒருமைப்பாடு புறத்தோற்றத்தால் ஏற்படாது என அவர்கட்கு அன்னை விளக்கினார்.

ரவீந்திரநாத் டாகூர் அப்பொழுது நோபல் பரிசு பெற்றிருந்தார். பெற்றபின் உலகப் பயணத்தை மேற்கொண்டு ஐன்ஸ்டீன் போன்றவர்களைச் சந்தித்தார். அவரும் அப்பொழுது ஜப்பான் வந்திருந்தார். தாம் ஆரம்பிக்க இருக்கும் விஸ்வபாரதியில் அன்னையை வந்து உதவி செய்யும்படிக் கேட்டார். அன்னை இசையவில்லை. தாகூரும், அன்னையும், மற்றவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்கள். ஜப்பானில் உள்ள மிகப் பெரிய புத்தர் சிலைக்கு தெய்புட்ஸு எனப் பெயர். அதனடியில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர்.

தாகூர் ஸ்ரீ அரவிந்தரைப் பிற்காலத்தில் சந்தித்து "உலகம் உங்கள் உத்தரவுக்காகக் காத்துள்ளது'' என்றார். அப்பொழுது - 1933இல் - அன்னை ஸ்ரீ அரவிந்தருடன் இருந்தார். யோகத்தின் பலனாக அன்னையின் உடல் கருத்திருந்தது. தாகூருக்கு அன்னையை அடையாளம் தெரியவில்லை. ஸ்ரீ அரவிந்தருடனிருந்தது யார் என மற்றவர்களைக் கேட்டு அன்னை என அறிந்து தாகூர் வியப்படைந்தார்.

ஜப்பானில் தாகூரும் அன்னையும் "ஆர்யா'' பத்திரிகையைப் பற்றி பேசினர். "ஆர்யாவில் ஸ்ரீ அரவிந்தர் எழுதியவை நடைமுறைக்கு ஒத்து வராது'' என்று அன்னையிடம் தாகூர் கூறினார். புதுவையில் பிறகு ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்தார். "I bow down to Sri Aurobindo" "நான் ஸ்ரீ அரவிந்தருக்குத் தலை வணங்குகிறேன்'' எனவும் தாகூர் ஒரு சமயம் கூறியுள்ளார்.

சூட்சும உலகத்தில் அன்னை எழுதுவது

வாயால் பேசும் முன் அவ்வெண்ணங்கள் மனதில் கருத்தாய் உதிக்கின்றன. பத்திரிகையில் வரும் செய்திகளை அச்சடிக்கும் முன் அவை நிகழ்ச்சிகளாக நடக்கின்றன. நாம் காணும் போட்டோ நெகட்டிவாக இருந்தது. ஒரு செயல் நடக்கும் முன் முந்தைய நிலையில் அவை இதுபோன்று உருவாகின்றன.

உலகில் நடப்பவை எல்லாம் முதலில் சூட்சும உலகில் உற்பத்தியானபின் வெளிப்படுகின்றன. நாம் வாழும் உலகில் மோட்சத்தின் வாயில் நின்ற விவேகானந்தர் அதை மறுத்தார். மோட்சத்தை ஏற்றிருந்தால் அவர் பூவுலகை விட்டகன்றதுபோல, சூட்சும உலகையும் விட்டகன்று இறைவனை அடைந்திருப்பார். அவர் உலகம் ஒளிமயமாகும் வரை தம் ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்ற முடிவு செய்தவர். அதனால் சூட்சும உலகில் தங்கியிருந்தார். அப்படியிருந்த பொழுது ஸ்ரீ அரவிந்தரை ஜெயிலில் "சந்தித்து'' கீதோபதேசம் செய்து சத்தியஜீவியத்தை நாடும்படி வழி நடத்தினார்.

பகவான் 1950இல் சமாதியானார். 1959இல் அன்னை முதலில் பகவானை சூட்சும உலகில் சந்தித்தார். அதன்பின் தினமும் அவரைச் "சந்தித்தார்''. இரவில் அன்னை சூட்சும உலகிற்குப் போவதுண்டு. அங்கு சாதகர்கள் சந்திப்பதுண்டு. "இவர்கள் சூட்சும உலகிலும் சண்டை போடுகிறார்கள்!'' என அன்னை கூறியதுண்டு!

இந்த உலகை அன்னை விளக்குகிறார்.

 • அங்கு ஜன்னல், கதவு, சுவரில்லை.
 • எழுத ஆரம்பித்தால் கையில் பேனா வருகிறது.
 • எழுதினால் எழுத்தின் அடியில் பேப்பர் இருக்கிறது என்று சொல்கிறார்.

சூட்சும உலகில் பகவானைக் கண்டபொழுது ஒருமுறை அவருக்கு டிபன் வழங்குகிறார். இன்னொரு முறை பகவான் கார் ஓட்டுகிறார். ஒரு சமயம் அன்னையின் புடவையை உடுத்துக்கொண்டிருப்பதை அன்னை வினோதமாகப் பார்த்தபொழுது "ஏன், நான் புடவை கட்டியிருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா?'' எனக் கேட்டார். இடுப்பெல்லாம் கட்டுடன் பகவானை அங்கு அன்னை கண்டு ஏன் அப்படி என்று வினவியபொழுது "நான் எழுதிய எல்லாவற்றையும் திருத்துகிறார்களாம்'' என்று பகவான் பதிலளித்தார்.

சாதகர்கள் சூட்சும உடலிலிருந்து ஸ்தூல உடலுக்கு வந்து எழுந்தபின் சூட்சுமத்தில் நடந்ததை மறந்துவிடுகிறார்கள். அன்னை அப்படிப்பட்டவரைச் சந்திக்கும்பொழுது "நான் உங்களைச் சூட்சுமத்தில் சந்தித்தேன்'' என்று கூறுவதுண்டு. கேட்பவருக்ககோப் புரியாத புதிர். அன்னைக்கு அன்றாட அனுபவம்.

சூட்சுமத்தில் ஒரு காரியத்தை இன்று உற்பத்தி செய்துவிட்டால் தானே அது பிறகு நனவுலகத்தில் தன்னைப் பூர்த்தி செய்துகொள்ளும் திறனுடையது.

சாதகர்களால் அன்னை பெற்ற அனுபவம்!

ஒரு காரியத்தைச் செய்தால் அது அனுபவம் தருகிறது. பிறர் பெற்ற அனுபவத்தால் பயனடைய விவேகம் வேண்டும். ஒருமுறை தவறு செய்துவிட்டால் அந்த அனுபவம், அடுத்த தவறைத் தடுக்கிறது என்பது போன்று பல்வேறு அனுபவங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அன்னையிடம் ஆசி பெற, சாதகர்கள் போகிறார்கள். அவர்களால் அன்னை என்ன அனுபவம் பெறமுடியும்?

பூரணயோக அடிப்படைகளில் ஒன்று, புற நிகழ்ச்சிகள் அகவுணர்வின் பிரதிபலிப்பாகும். நம் உள்ளத்தில் ஏதோ ஒரு வகையில் இல்லாதது, நமக்கு ஏதோ ஒரு பயன் தராதது, நம் சுபாவத்தோடு தொடர்பில்லாதது, நம்மை நாடி வாராது என்று இவ்வடிப்படையை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்பது அன்னை வாழ்ந்த வாழ்வு நமக்குக் கூறுகிறது.

நம்மிடம் ஒருவர் கோபப்பட்டால், என் சுபாவத்தில் கோபமிருப்பதால் இவர் என்னிடம் கோபப்படுகிறார் என்று அறிகிறோம். நம் சுபாவத்தைக் கோபத்திலிருந்து மீட்க முயன்று வெற்றி கிட்டும் நேரம் ஒருவர் நம்மீது கோபப்பட்டால், இன்னும் கோபத்தின் சுவடு நம்மிடமுள்ளது என அறியலாம். நாம் கோபத்தை முழுவதும் வென்றபின், எக்காரணத்தை முன்னிட்டும் கோபம் வருவதில்லை என்றபின் கோபக்காரர்கள் பலர் நம்மிடம் வந்து கோபத்தால் ஏற்பட்ட விளைவுகளைச் சொன்னால் எப்படிப் புரிந்துகொள்வது! நாம் கோபத்தை வென்றதால், கோபக்காரர்கள் தம் கோபம் அழிய நம்மை நாடுகிறார்கள் என்று பொருள்.

கோபத்தை வென்றவர்க்கு அவசரமிருக்கும். அவசரத்தின்மூலம் ஏற்கனவே அழிந்துபோன கோபம் தலைதூக்கும். அதனால் வரும் நிகழ்ச்சியைச் சோதனை செய்தால் அவசரக்காரர் கொண்டுவரும் செய்தி மறைமுகமாக நம் கோபத்தைத் தொடும் எனத் தெரிகிறது.

அப்படியானால் மேலும் 'உள்ளே வேலையிருக்கிறது'. அன்னையின் கருத்துக்களான இவற்றை எல்லாம் பக்தர்கள் எப்படி புரிந்து கொள்வது?

1962க்குப் பின் அன்னை அறையைவிட்டு வெளியே போக முடியாத உடல்நிலை. அப்பொழுது அர்த்தமற்ற சிலர், அவசியமில்லாத பல கேள்விகளை அன்னையிடம் எழுப்பி நெடுநேரம் பேசுவதுண்டு. "ஏன் இந்த அறிவற்ற கேள்விகளை அத்தனை நேரம் கேட்டுப் பதில் சொல்கிறீர்கள்?'' என உடனுள்ளவர்கள் கேட்பதுண்டு. "அவற்றிற்கெல்லாம் அர்த்தமுண்டு, அர்த்தபுஷ்டியான கருத்துண்டு. அவை எனக்குத் தேவையான அனுபவத்தைத் தருகின்றன. அதனால்தான் என்னை நாடி வருகின்றன. நான் அவற்றை மறுக்கக்கூடாது. மறுத்தால் நான் பெறவேண்டிய அனுபவத்தை இழப்பேன்", என்பார் அன்னை.

'அவர்களைத் திருத்தக் கூடாதா?' என்று ஒரு கேள்வி.

அன்னை பதில்:

திருத்த நினைப்பது தவறு. வருவதை அப்படியே பெறவேண்டும். திருத்துவது எனில் நாம் ஒன்றைச் செய்ய முயல்கிறோம் எனப் பொருள். எதையும் செய்ய நினைப்பது பாதையிலிருந்து விலகுவதாகும். பாதை நேரானது. மடத்தனமாகப் பேசுவதை ஏன் கேட்டுக் கொள்கிறீர்கள்? என்பார்கள். "அதில் நான் அறிய வேண்டியவையுண்டு. இவரிடம் நான் எப்படி நேராக நடப்பது என்பதை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் இது'' என்பார்.

எல்லாம் இறைவன் செயல். திருத்த முயன்றால் நாம் இறைவனின் செயலைத் திருத்த முயல்கிறோம். திருத்த முனையாமலிருக்கப் பயிலும் அனுபவம் இது என்பது அன்னையின் விளக்கம். நாம் இதைக் கடைப்பிடிக்க முயன்றால், பைத்தியம் பிடித்துவிடும் என்பது உண்மை. முயன்றால் அன்னை சூழல் அதிகமாகும், அன்னையை அதிகம் புரிந்துகொள்ளலாம், மேலும் ஏற்றுக் கொள்ள முடியும் என்பது பெரிய உண்மை.

அன்னையின் நோக்கம் அருளின் நோக்கம்.

சாதகியின் நெற்றியில் ஸ்ரீ அரவிந்தர் அடையாளம் (symbol)

பக்தர்கள் கடைசி நேரத்தில் எங்கிருந்தாலும், புதுவையில் அல்லது வெளியூரில் அன்னையை நினைத்தால், அன்னைக்கு அவர் குரல் கேட்கும். அன்னையை விழையும் ஆத்மா அவரை அடைந்து அவர் நெஞ்சில் நிரந்தரமாக உறையும். "அதுபோல் என் நெஞ்சில் ஒரு பெரிய கூட்டமேயிருக்கிறது'' என்கிறார்.

ஒரு வேலையாகப் போகும்பொழுது அன்பர்கள் அங்கிருந்தால், உதவி கிடைக்கும் என்பது நிச்சயம். பல ஆண்டுகள் ஆகும் என ஆபீஸில் சொன்ன வேலை அதுபோல் சில மணி நேரத்தில் முடிந்தது.

இந்த வேலை கூடி வருமா என ஐயப்படும் பொழுது மனக்கண்முன் அன்னை உருவம் தெரிந்தால், அவ்வேலை தடையேதுமின்றி கூடிவரும்.

அன்னை சம்பந்தபட்ட பொருளுடன் ஒருவர் தற்செயலாய்த் தொடர்புகொள்ள நேரிட்டால் அது அன்னையின் அழைப்பு என அறியலாம். புத்தகக் கடையில் புத்தகத்தை எடுத்துப் பார்த்தவர் மடியில் வேறொரு புத்தகம் விழுந்தது. அது அன்னை பற்றியது. அவர் ஆசிரமம் வந்தார். 'சொந்த ஊருக்குப் போகட்டுமா?' என்று அவர் அன்னையைக் கேட்டபொழுது "இதுவே உன் சொந்த ஊர்'' என அன்னை பதிலளித்தார்.

தொந்தரவு வந்தபொழுது "அன்னை'' என்ற சொல் பாதுகாப்பு என நாம் அறிவோம்.

ஒரு சாதகி இறந்தபொழுது அவர் ஆத்மா அன்னை முன் வந்து நின்றது. சாதகியின் புருவ மையத்தில் அன்னை ஸ்ரீ அரவிந்தர் சிம்பலைக் கண்டார். அந்நேரம் சூட்சும உலகில் பகவான் குரல், "இதிலிருந்து - ஆசிரமத்தில், புதுவையில் - இங்கு இறப்பவருக்கு என் நிபந்தனையற்ற பாதுகாப்பு நிச்சயமாக உண்டு'' என்று கேட்டது.

மூச்சு நின்ற பிறகு டாக்டர் வந்து எல்லாம் முடிந்துவிட்டது என்ற சமயம் ஸ்ரீ அரவிந்தர்- சிம்பலைப் புருவமையத்தில் வைத்தபொழுது மீண்டும் மூச்சு வந்து உயிர் திரும்பியது.

அன்னையின் சாந்தி அழைப்பை ஏற்று உள்ளே நுழைந்தால், வியாதி தீரும் என்று பொருள்.

அன்னையின் ஒளி தெரிந்தால், இதுவரை புரியாதது புரியும், தீராத சிக்கல் அவிழும் எனப் பொருள்.

பிப்  29, 1956-இல் சத்தியஜீவிய சக்தி உலகில் வந்தபின் அன்னை,

"இப்பொழுதிலிருந்து பிப்ருவரி 29, இறைவனின் திருநாளாகும்''

என்று பிரகடனப்படுத்தினார். பகவான் 1959, மே மாதத்தில்  மேற்சொன்ன நிபந்தனையற்ற பாதுகாப்பைப் பிரகடனப்படுத்தினார்.

தவம் பலித்தது

ஸ்ரீ அரவிந்தர் தவம் பலித்து, 1956-இல் சத்தியஜீவிய சக்தி புவியில் இறங்கித் தங்கியது. ஒருவருக்குத் தவம் பலிக்க அவர் தவம் செய்யவேண்டும். ஒருவர் தவப்பலன் அடுத்தவருக்கில்லை. ஆனால் ஸ்ரீ அரவிந்தர் "ஒருவர் பெற்ற தவப்பலனால் உலகம் உய்யும்'' என்று கூறியிருந்தார். 1950-இல் அவர் யோகம் அவருக்குப் பலித்தது. 1956-இல் சூட்சும உலகில் ஸ்ரீ அரவிந்தருடைய யோகம் பூமிக்கே பலித்தது.

1958இல் அன்னை கூறுகிறார்

இன்று உலகில் வாழ்வது அதிர்ஷ்டம். சத்திய ஜீவியச் சக்தி புவியில் பரவியுள்ளது. உலகமாந்தர் அனைவரும் அதைப் பெறுகின்றனர். மனிதன் விடும் மூச்சு வழியாக அச்சக்தி அவனுள்ளே சென்றபடியிருக்கிறது. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சத்திய ஜீவிய அருள் (Supramental Grace) மனிதனுள் சென்று செயல்படுகிறது. அதைப் பெற மனிதன் முயன்றால் பெரும் பலனுண்டு.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்தவனுக்குக் கிராமத்திலில்லாத நகரத்து வசதிகள் அனைத்தும் பயன்படுகின்றன. பார்க், பஸ் வசதி, எலக்ட்டிரிக் ரயில், காஸ் அடுப்பு, மின்சாரம், ரோடு வசதி, குடிநீர் சப்ளை என பல்வேறு வசதிகளை அவனை அறியாமல் பெறுவதுபோல் சத்தியஜீவிய அருள் மனித வாழ்வில் செயல்படுகிறது. 1962-க்குப் பின் பிறந்த குழந்தைகள் சத்திய ஜீவியத்தை அதிகமாகப் பெறும் தகுதியுடையன என அன்னை கூறுகிறார்.

நகரத்திற்கு வந்தவன் பாங்கில் தன் பணத்தை பத்திரமாக வைக்கலாம், நல்ல பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கலாம், உயர்ந்த பொருள்களை உள்ளூரிலேயே வாங்கலாம், உயர்ந்த உணவுப் பொருள்களை எளிதில் பெற்று அனுபவிக்கலாம். பொழுதுபோக்கு தயாராயுள்ளது. சுகாதாரம், போலீஸ், பாதுகாப்பு, கல்வி, கடைத்தெரு ஆகியவை உயர்ந்த தரத்தில் நகரவாசிக்குக் கிடைக்கும். அதற்கு அவன் தகுதி பெற்று முயலவேண்டும்.

வீடு கட்ட அந்நகரவாசி முயன்றால் அது பலிக்கும். மனிதன் கிராமவாசி போலிருக்கிறான். அன்னை பெருநகரத்தின் உயர்ந்த வசதிகளை வழங்குகிறார். அவனை அறியாமல் பெறுவது அதிகம். தகுதி பெற்று முயன்றால் அனைத்தும் பெறலாம்.

புற்றீசல், வார்த்தை பலிக்கும்

அன்பர்கள் வாய் தவறிச் சொல்பவை உண்மையாவதைக் காணலாம். இங்க் போடுவதற்காக எடுத்து வைத்த பேனாவை, இங்க் தீர்ந்ததையறியாமல் அங்கு வந்த பக்தர் எடுத்து எழுதினால், அது ஒரு பக்கம் எழுதும்.

ஞாயிற்றுக்கிழமையைச் சனிக்கிழமை என்று தவறாக நினைத்து போஸ்ட்டாபீஸ் போன பக்தர் அங்கு ஸ்டாம்பு வாங்கியபின் அது ஞாயிறு - ஒரு சிறப்புச்  சோதனைக்காக அன்று ஆபீஸ் திறக்கப்பட்டது என்று அறிந்தார்.

அன்னை சொல் பலிக்கும்.
அன்னை எண்ணம் பலிக்கும்.
அன்னையை ஆழ்ந்து நினைப்பவர் சொல் பலிக்கும்.

இதுபோல் கடைசி பஸ் போனபிறகும், ஸ்பெஷல் பஸ் வந்தது-- கூட்டத்திற்கு முடிந்தபின் தாமதமாகப் போனவர், ஏதோ காரணத்தால் கூட்டத்தைத் தள்ளிப்போட்டு ஆரம்பித்ததை அறிந்தது--ஞாயிறு அன்றும் தபால் வந்தது--போன்ற நிகழ்ச்சிகள் அன்னை பக்தர்கள் வாழ்விலுண்டு.

சில சமயம், மழை நாட்களில் ஈசல் கிளம்பி வீடு முழுவதும் நிரம்பும் நாட்களுண்டு. சாப்பிட உட்காரும் நேரமானால் சிரமம். அன்னை பூக்களை அதிகம் விரும்புவார். பூ வந்தால் உடனே எறும்பு வருகிறது அப்புறப்படுத்தி விடுவார்கள்.

மேல் நாடுகளில், ஈ, எறும்பு, கொசு, வீடுகளில் பார்க்கவே முடியாது. அன்னை பாண்டியில் அவற்றால் பட்ட துன்பம் அதிகம். அதுபோன்ற நாள் ஒன்று. அன்னை சாப்பிடும் நேரம் ஈசல் ஏராளமாக அறையுள் நிரம்பியது.

"இத்தனைப் பூச்சிகள் பறந்தால் நான் எப்படிச் சாப்பிட முடியும்?''

என்றார் அன்னை. அதே கணத்தில் அத்தனை ஈசல்களும் மாயமாய் மறைந்துவிட்டன.

தவறாமல் பலிப்பது அன்னை சொல்.

அன்னையை ஏற்றவர் செயல் தவறாமல் ஜெயிக்கும்.

அவர் சொல்லும், அன்னை சொல்போல் பலிப்பதுண்டு.

சப்தம் பிரம்மம். சப்தம் அன்னையை வெளிப்படுத்தினால் பிரம்மம் செயலில் வெளிப்படும்.

நல்லாசிரியர்

ஆசிரமப் பள்ளியில் மாணவர்கள் தங்கள் பாடங்களைத் தாங்களே தேர்ந்தெடுப்பதுடன், ஆசிரியர்களையும் அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்.

 • ஒரு நல்ல ஆசிரியராக ஒருவர் ஞானியாக இருக்கவேண்டும்.
 • உயர்ந்த ஆசிரியராக அவர் யோகியாக இருக்கவேண்டும்.

 • ஒருவர் யோகத்தைப் பூர்த்தி செய்யவே அவரை நான் ஆசிரியராக ஆசிரமப் பள்ளியில் நியமிக்கிறேன்.
 • சுயக்கட்டுப்பாடுள்ளவரே, கட்டுப்படாத மாணவனைக் கட்டுப்படுத்த முடியும்.
 • ஆசிரியராக இருப்பது அருளைப் பெறும் வாய்ப்பு என்பவை அன்னை கூறியவை. பாடத்தை மட்டும் போதிப்பவர் உபாத்தியாயர். மாணவனின் சுபாவத்தை உயர்த்துபவர் ஆச்சாரியர். ஞானக் கண்ணைத் திறப்பவர் குரு. இவர் மூவரும் ஒரே தொழிலை மூன்று நிலைகளில் பூர்த்தி செய்பவர்.

தெரியாத விஷய ஞானத்தை உபாத்தியாயர் அளித்தால், தெரியாத பழக்கத்தை ஆச்சார்யன் கூறினால், இல்லாத ஆத்ம ஞானத்தை குரு அளிக்கிறார். அன்னை என்ன செய்கிறார்?

கனடாவின் தலைநகர் குயூபெக்கா, டொராண்டோவா என்று தெரியாதபொழுது எப்படி அதை அறிவது எனத் திகைத்தவர், அன்னையை நினைத்து, அருகிலிருந்த புத்தகத்தைத் தற்செயலாய் எடுத்துப் பிரித்தார். அப்பக்கத்தில் கனடாவின் தலைநகர் குயூபெக் என இருந்தது. இது உபாத்தியாயராக அன்னை செயல்படுவதாகும்.

கெட்ட சுபாவமுள்ளவன் முக்கிய நேரங்களில் அசம்பாவிதமாகப் பேசி காரியத்தைக் கெடுப்பவன். அடுத்த முக்கிய நேரத்தில் அவன் அன்னையை அழைப்பதை மேற்கொண்டு பேசியபொழுது அழகான சொற்கள் வெளிவந்தன. காரியம் பூர்த்தியாயிற்று. அனைவரும் பாராட்டினர். அன்னை ஆச்சாரியனாகச் செயல்படுவது இது.

ஒவ்வொரு செயலைச் செய்யும்பொழுதும், அச்செயல் நம்மை மனிதராகச் செய்யலாம், அல்லது தெய்வமாக்கலாம். அன்னையை முன்வைத்துச் செய்யும் எச்செயலும் மனிதனை அவ்விஷயத்தில் தெய்வமாக்கும். குருவாக அன்னை செயல்படுகிறார்.

"நான் எப்பொழுதும் மறுத்துப் பேசுவேன். ஒரு முக்கிய காரியத்தில் நான் மறுக்கவில்லை. அதனால் இன்று இவ்வுயர் பதவியிலுள்ளேன். ஏன் அப்படிச் செய்தேன் என்று இன்றும் தெரியவில்லை?'' என்ற அன்பர் அன்னை தம்மை வழிநடத்திச் செல்லும் மானசீக குரு என்று அறியார்.

துள்ளி எழும் அன்னை

நாற்காயில் உட்கார்ந்திருக்கும் அன்னை சிறு வயதில் எழவேண்டிய பொழுது துள்ளி எழுவார். அவர் நண்பர்கள் அதை ஆச்சரியமாகக் கவனிப்பார்கள். அன்னை வெளியில் போய்க்கொண்டிருந்த பொழுது பால்ப்  பண்ணை, தோட்டம் போன்ற இடங்களில் விரைவாக நடப்பார். அவருடன் உள்ள சாதகர்கள் அவரைவிட 20, 25 வயது குறைவாக இருந்தாலும் பின்தங்கி விடுவார்கள், பல நேரங்களில் ஓடிப் பிடிக்கவேண்டிய நிலை. 

நரசிம்மராவ் பிரேசில் போயிருந்தபொழுது அந்நாட்டுச் சிப்பாய்கள் அவருக்கு மெய்க்காப்பாளராக இருந்தார்கள். 70 வயதான பிரதமருடன் அவர்களால் நடந்து ஈடுகொடுக்க முடியவில்லை. நம் ஆபீசர்களைப் பார்த்து, "உங்கள் பிரதமரைக் கொஞ்சம் மெதுவாக நடக்கச் சொல்லுங்கள்'' என்றனர். பொதுவாக ஆரோக்கியமுள்ளவருண்டு. பதவியிருக்கும்பொழுது வேலை அதிகமாக இருந்தாலும், பதவி தெம்பைக் கொடுக்கும். ராஜீவ் இறந்த அன்று பிரதமர் ஒரிசாவிலிருந்தார். அவர் வேலை நள்ளிரவாகியும் முடியவில்லை. அதற்குள் ராஜீவ் மரணம் அவருக்குச் செய்தியாகக் கிடைத்தது. அது சம்பந்தமாக எல்லா உத்தரவுகளையும் கொடுத்து முடிக்க காலை 5 மணியாயிற்று. மறுநாள் அதனால் அதிக நேரம் தூங்க முடியாது.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுபவர்கள் பகல் முழுவதும் பிரயாணம், கூட்டம், கமிட்டி வேலை, பேச்சு போன்றவற்றில் மூழ்கி விடுவார்கள். வேலை இரவிலும் தொடரும். தேர்தலுக்கு முன் அவர்கள் தினமும் சில மணி நேரமே தூங்கமுடியும். ஆனால் தெம்பாக வேலை செய்வார்கள். தேர்தல் முடிந்த மறுநாள் தோற்ற வேட்பாளர்களால் எழுந்திருக்க முடியாது. ஜெயித்தவருக்கும் முன்போல தெம்பிருக்காது. பதவி உற்சாகம், தெம்பைத் தரும்.

 • உடல் உழைப்பு உடலுக்கு உரத்தை அளிக்கும், அதனால் வரும் தெம்பு உடலால் மட்டும் உழைக்க உதவும்.
 • உணர்வு நிறைந்தவனுக்கு அதைவிடத் தெம்பு அதிகம். அது பல மடங்கு அதிகம். அது உயர்ந்த தெம்பு.
 • அறிவால் வேலை செய்பவனுக்குள்ள தெம்பு அதனினும் உயர்ந்தது.

ஆன்ம விழிப்புள்ளவர் பெறுவது தலைசிறந்த சக்தி, அதற்கு முடிவில்லை. அன்னை அவதாரப் புருஷர். அவருக்கு அளவில்லாத தெம்பிருந்தது.

மகான்களுக்கு நோய் வருவது சொற்பம். அவர்கள் பெறும் தெம்பு தவத்தால் பெறுவது. தவம் அக்னி, உலகை உற்பத்தி செய்த சக்தி அக்னி. தினமும் தியானம் செய்யும் வழக்கமுள்ளவர்கள் ஆபீசில் அதிகச் சுறுசுறுப்பாய் வேலை செய்வதைக் காணலாம்.

தியானத்தின் போது ஆத்மசக்தி உடலில் பாய்வது தெரியும். பகவான் பகலெல்லாம் வேலை செய்வார். இரவெல்லாம் எழுதுவார். இரவு 12 மணிக்கு மேல் குளித்துச் சாப்பிடும் நாட்களுண்டு. 2½ மணிக்கு எழுந்து மேலும் 6 மணிவரை எழுதுவார்.

பக்தர் ஒருவரை உடன் வேலை செய்பவர் பார்க்க வந்தார். ஆபீஸ் முடிந்தபின் பக்தர் 10 பேரைச் சேர்த்து வேலை செய்துகொண்டிருந்தார். ஆபீஸ் போகுமுன்னும், அதேபோன்று வேலை. இது தவிர அவருக்குத் தினமும் நேரில் போய்ப் பார்க்கும் சொத்துக்கள் இரண்டிருந்தன. வந்தவர், பக்தர் மாலையிலும் சுறுசுறுப்பாக இருப்பதைப் பார்த்து, "நாங்கள் ஆபீஸ் வேலையை மலையாகக் கருதுகிறோம். நீங்கள் அதைச் சுண்டைக்காயாக மாற்றிவிட்டு காலையிலும், மாலையிலும், வேறு இடங்களிலும் வேலை வைத்திருக்கிறீர்கள். ஆசிரமத்தில் அடிக்கடி நான் உங்களைப் பார்க்கிறேனே, எப்படி இதெல்லாம் முடிகிறது?'' என்று கேட்பார்.

ஆன்மீகம் தெம்பு நிறைந்தது.
அது நிறைந்தால் உடல் துள்ளும்.
 
 
 

Feb 29, 1956 - சத்திய ஜீவியம் உலகில் பிறந்த நாள்

அரசன் ஆண்டபொழுது, அரசனுக்குச் சேவை செய்வதே மற்றவர் கடமை. அரசனாக வேண்டும் என நினைப்பதும் இராஜத்துரோகம். ஜனநாயகம் ஒவ்வொருவரும் அரசனாகும் உரிமையை அளித்து, அவ்வுரிமையை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி வருவதால் தச்சனுடைய மகன் போலந்தில் ஜனாதிபதியானார், பேப்பர் போட்ட பையன் அமெரிக்க ஜனாதிபதியானார், கிராமத்தில் பிறந்த வசதியற்றவர் இந்தியப் பிரதமரானார்.

வேதம், உபநிஷதம், கீதை, புராணம், இதிகாசம், மதம், தவம், மகான்கள், ரிஷிகள், அவதாரப் புருஷர்கள் அனைவரும் கூறியது,

மனிதன் பிறப்பிலிருந்து விடுதலை பெற்று மோட்சம் அடையவேண்டும், இறைவனின் திருவடிகளில் சேரவேண்டும்.

ஸ்ரீ அரவிந்தம் கூறுவது:

"மனிதன் பொய்யிலிருந்து விடுபட்டு மெய்யை அடைவதால் வாழ்விலிருந்து உயர்ந்து இறைவனாக முடியும், அதுவும் 30,000 ஆண்டுகளில் நடப்பதை 30 ஆண்டுகளில் நடத்தமுடியும்'' என்பதாகும்.

அதை சாதிக்கும் சக்தியான சத்திய ஜீவியத்தை உலகுக்குக் கொண்டுவர ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் யோகம் செய்தனர்.

1956 பிப் 29இல் அச்சக்தி உலகுக்கு வந்தது.

வந்து இறங்கியதை உலகில் மூன்று பேரே உணர்ந்தனர். அவருள் ஒருவர் ஆப்பிரிக்காவில்  இருக்கிறார் என்றார் அன்னை. விளையாட்டு மைதானத் தியானத்தில் அச்சக்தி இறங்கியபொழுது அன்னை தியானத்திலிருந்தார். கண் திறந்தால் அனைவரும் அச்சக்தியை தாங்கமுடியாமல் தரையில் விழுந்திருப்பார்கள் என நினைத்துக் கண் திறந்தார். எவரும் எதுவுமறியாமல் அமைதியாக உட்கார்ந்திருந்ததைக் கண்டு ஏமாற்றமடைந்தார்.

ஒவ்வொரு பிப் 29 அன்றும் அச்சக்தி புவியில் இறங்குவதை நாம் இன்றும் அறியமுடிவதில்லை.அன்னை நம்மை கண்மூடியாக (unconscious) இருப்பதாகக் கூறுகிறார். நமக்கு அது தெரிவதில்லை.

ஆப்பிரிக்காவில் ஒருவர் தாம் கண்டதை, "திடீரென வானத்தில் வெண்மை செறிந்த சக்தி அலைகளைக் கண்டேன். இது ஏதோ ஆன்மீகச் சக்தி என உணர்ந்தேன். சில நாள் கழித்து ஆசிரமத்துக் கடிதம் கண்டு விவரமறிந்தேன்'' என்கிறார்.

இரண்டு வகைகளில் நாம் கண்மூடிகளாக இருக்கலாம். பெற்றோர் சம்பாதிக்கப்  பட்ட கஷ்டத்தை அறியவே முடியாத பிள்ளைகளைப் போலும் இருக்கலாம். நேருவும் இந்திராவும் ஆறு ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் அளவு கடந்த சேவையைச் செய்தபின் தாங்கள் எதுவும் செய்யவில்லை என நினைத்தனர். ஏனெனில் இனி செய்ய வேண்டியவை எவ்வளவு என நினைத்ததால், தங்கள் குறையை மட்டும் உணர்ந்தனர், தாங்கள் செய்ததை அறியவில்லை. இலட்சியத்தால் அவர்கள் கண்மூடியாக இருந்தார்கள்.

அன்னை உலகில் அவதாரம் எடுத்தததால், லோகமாதா (அன்னை லோகமாதாவின் ஓர் அம்சம்)- சூட்சுமமாக ஆசிரமத்திற்கு வந்து அன்னையின் நோக்கத்தைப் பூர்த்தி செய்ய முனைந்தார். நமக்கு அன்னையையும் தெரியவில்லை. லோகமாதாவையும் தெரியவில்லை. பாராமுகமாக இருந்தால் லோகமாதா திரும்பிப் போய்விடுவார் என்று 1946-இல் அன்னை கூறினார். அவர் போய்- விட்டதாகவும் பின்னர் கூறினார்.

சத்திய ஜீவியம் வந்த பொழுது அன்னை விளையாட்டு மைதானத்தில் தியானத்திலிருந்தார். முதலில் அதன் குரல் பிரெஞ்சில் கேட்டது. பிறகு ஆங்கிலத்தில் கேட்டது. பகவான் குரலானால் அது ஆங்கிலத்தில் கேட்கும் என்கிறார் அன்னை. "நேரம் வந்துவிட்டது'' என்றது குரல்.

பொன் கதவைத் திறக்க அன்னை பொன் சுத்தியால் அதை உடைத்தார்.

நாம் செய்யும் வேலைகள் பெயரளவில் கூடி வந்தாலும், நாம் அதற்காக என்ன செய்தோம் என்று அறியமுடியாத நிலையுண்டு.

நம்மை விலக்கி, சக்தியை (Force) அனுமதித்தால் தியானத்தில் சக்தி உள்ளிறங்கி உடலில் பாய்வது தெரியும். மேலும் மேலும் நம்மை விலக்கினால் சக்தி அதிகரிக்கும்.

சக்தியை உணர்பவன் சித்தி பெற்ற சாதகன்.

சக்தியை உணராதவன் தன் வேலை 24 மடங்கிலிருந்து, 12,000 மடங்காகப் பெருகிப் பலன் தருவதைக் காண்பான்.

பலன் பெறுதல் அருள் பெறுதலாகும். அதைப் பெற்றால் நூறு பேரில் ஒருவராகலாம். சக்தியை உணர்ந்தால், யோகம் சித்திக்கும். பலன் பெற்றவர் பலர் அதை அறிவதில்லை. அறிந்தாலும், யோகம் சித்திக்கும் என்பது அன்னையின் பேரருள், பூவுலகில் மனித வாழ்வில் வெளிப்படுவதாகும்.

அடம் பிடிக்கும் அன்பு

ஆசிரமத்திலுள்ளவரின் தாயார், ஊரிலிருந்து வந்திருந்தார். அன்னையைத் தரிசிக்க அனுமதி பெற்றார். அன்று தரிசன தினம். அன்னைக்குப்பின் தரிசனம் என்பது ஆசிரமத் தியானம் (காலை 6.00 முதல் 6.30 மணிவரை), பகவான் அறையைத் தரிசிப்பது. அன்னை பிறந்த நாளானால் அன்னையின் அறையைத் தரிசிப்பது. பிப்  29  சத்திய ஜீவிய நாளானால் (Supramental day) அன்னை, பகவான் அறைகளைத் தரிசிப்பது. 1962வரை தரிசன நாட்களில் பக்தர்கள் வரிசையாக அன்னை முன் சென்று தரிசிப்பார்கள். சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்ய அனுமதிக்க நேரமில்லை என்பதால் அனுமதியில்லை. காலையில் 6.15-க்கு அன்னை பால்கனி தரிசனம் தருவது 1962 வரை இருந்தது. 1962-இல் அன்னை அதை நிறுத்திவிட்டார். 1963-இல் மீண்டும் தரிசனம் தர ஆரம்பித்த பொழுது மாலை 5.30 மணிக்கு terrace ஆசிரமத்தின் கிழக்குப் பகுதியில் இரண்டாம் மாடியிலுள்ள பால்கனியில் வந்து 1973 ஆகஸ்ட்டு வரை தரிசனம் தந்தார். பிறந்த நாளைக்கு அனுமதியுள்ளவர்கள் அன்னையைத் தனியே அவர் அறையில் தரிசிப்பார்கள்.

தம் தாயாருடன் ஆசிரமவாசி வரிசையில் நின்றார். தாயார் அன்னை முன் வந்தவுடன் பரவசப்பட்டுவிட்டார். வெளியில் வந்த பிறகு மகனை நோக்கி, "நான் அன்னை முன்பு 15 நிமிஷம் உட்காரவேண்டும்'' என்றார். மகனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. அன்னை அறைக்கு வெளியே வந்த தாயார் அங்கேயே உட்கார்ந்துவிட்டார். எழும்பவும் மறுத்தார். உண்ணா விரதமிருக்கிறேன் என்றுரைத்தார். மகன் இங்கேயே இருப்பதால் 15 நிமிஷ "தரிசனம்'' என்பது, நடக்காத காரியம் என்றறிவார். தாயார் தாம் உணர்ந்த பரவசத்தை நினைத்து, அதையே மேலும் விரும்பி, பிடிவாதம் செய்தார். இக்கட்டான நிலைமை. ஒருவாராகத் தாயாரை மகன் வீட்டிற்கு அழைத்துப் போனார். தாயார் ஊருக்குத் திரும்பினார்.

வீடு நம் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. நம்மால் பெறமுடியாத சௌகரியங்களை வீடு பெற்றுத் தருகிறது. அடம்பிடிக்கும் குழந்தை, படிக்காத மகள், சம்பாதிக்காத கணவன், வாயாடி மனைவி ஆகியோருக்கும் வீடு தன் சௌகரியங்களை மறுப்பதில்லை.

அன்னை கருணையே உருவான ஆன்மீக இல்லம்.

புத்திசாலிக்கு மேதாவிலாசத்தையும், சுமூகமானவர்க்கு அதிர்ஷ்டமாகச் செல்வத்தையும் தரும் அன்னை, அடம்பிடிப்பவருக்கும் அவர் ஆசையை அதற்குரிய நேரம் வரும்பொழுது பூர்த்தி செய்கிறார். அறிவு ஏற்பதை உடல் ஏற்க முடியாவிட்டால் அடம் உற்பத்தியாகிறது. மூளை வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, மன வளர்ச்சி என்பவற்றை நாம் அறிவோம். ஜீவனுக்கு வளர்ச்சியுண்டு. உடலும், உணர்வும், அறிவும் ஒருசேர வளர்வது ஜீவனின் வளர்ச்சி. அறிவு வளர்ந்து அது ஏற்பதைச் செயல் - உடல் - ஏற்க முடியாவிட்டால் அடம் உற்பத்தியாகிறது. வாழ்வில் அடம்பிடிப்பவர்கள் நாளடைவில் அதை மறந்துவிடுவார்கள். காலம் அதைச் செய்யும். அடம்பிடித்துச் சாதிப்பவர்கள் குறைவு. அறிவே இல்லாதவர்க்கு, அடம்பிடித்தால் சாதிக்க முடியும். ஆயின், அது குறைவு. அன்னை முறை வேறு.

சொந்த ஊருக்குப் போன தாயார், அடுத்த தரிசனத்திற்கு வந்தார். அன்னை முன் வரிசையில் வந்தார். சற்று தூரத்திலுள்ள பொழுது அன்னை ஒருவரிடம் பேச ஆரம்பித்து 15 நிமிஷம் பேசினார். தாயார் அப்பதினைந்து நிமிஷமும் அன்னையைத் தரிசனம் செய்ய முடிந்தது. அவர் அபிலாஷை பூர்த்தியாயிற்று.

அடம்பிடிக்கும் குழந்தையை தாய் அணைப்பதுபோல் அடம்பிடித்த உடன் விருப்பத்தை அன்னை பூர்த்தி செய்கிறார்.

தோற்றமும் அம்சமும்

எந்தத் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்தாலும் அதன்மூலம் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வது அன்னையே என்று அவர் கூறுகிறார்.

பகவானும், அன்னையும் தரிசனம் தரும் நாட்களில் ஒரு குடும்பம் தரிசனத்திற்கு வந்தது. மனைவி கர்ப்பமாக இருந்தார். கர்ப்பினிகளை அன்னை ஏழு மாதம்வரை அனுமதிப்பதில்லை. குழந்தை உருப்பெறும் முன் தரிசனத்திற்கு வந்தால் சூழலின் கனம் தவறான உருவத்தை அளிக்கும் (The child will have a bad formation) என்பதால் ஏழு மாதமான பின்னரே அன்னை அனுமதி தருவார். குழந்தை பிறந்தபின் நான்கு வருஷம்வரை, தரிசனத்திற்கு அன்னை அனுமதிப்பதில்லை. காரணம் அதுவே. இரண்டு வயது குழந்தை மாத்ரு மந்திருக்கு வந்தபொழுது வீல் என அழ ஆரம்பித்தது. காரணம் தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து ஒருவர் இந்தச் சட்டத்தை நினைவுபடுத்தினார். குடும்பம் மாத்ரு மந்திரை விட்டகன்று கொஞ்ச தூரம் போனவுடன் குழந்தையின் அழுகை நின்றது.

சுபத்திரை வயிற்றிலுள்ள அபிமன்யூ கிருஷ்ண பரமாத்மாவின் மந்திரத்தைக் கேட்டுக் கொண்டதுபோல், தரிசனத்திற்கு வந்த கர்ப்பிணியின் வயிற்றிலுள்ள குழந்தையும் பகவான் ஆசியைப் பெற்றது. இத்தொடர்பு பிற்காலத்தில் அக்குழந்தையை அன்னையிடம் கொண்டு சேர்க்கும்.

பெண் குழந்தை பிறந்தது. உள்ளூர் கான்வென்டில் பெண் படித்தாள். ஆன்மீகம் எனில் விரதம், பட்டினி, எளிமை, வறுமை என்ற சூழல். கான்வெண்ட் அவளுடைய மனநிலையைத் தயார் செய்தது. வயதானபின் குடும்பத்தாரோடு மீண்டும் தரிசனத்திற்கு வந்தபொழுது அன்னையின் உடை விலையுயர்ந்ததாக இருப்பதைக் கண்ட அவளுக்கு மனம் அதை ஏற்கவில்லை. தரிசனச் சமயத்தில் அன்னையின் பாதங்களில் தலையை வைத்து நமஸ்காரம் செய்தாள். தலையில் கைவைத்து அன்னை ஆசீர்வாதம் செய்வதை அவள் அறிவாளாதலால், அதை எதிர்பார்த்தாள். ஏனோ, அது நடைபெறவில்லை. எழுந்து உட்கார்ந்தாள். அன்னை அவள் கண்களை உற்று நோக்கினார். வேறு உலகத்திற்குப் போனது போலிருந்தது அவளுக்கு. பின்னால் பக்தர்கள் நிற்பதால், அன்னை பார்வை அகற்றும்முன் அவள் எழுந்துவிட்டாள். 'ஏன் அன்னை பார்வையை அகற்றுமுன் எழுந்திருக்கிறாய்?' என்று பின்னாலிருந்தவர்கள் கேட்டார்கள். ஊருக்குத் திரும்பிய போது  பள்ளியில் விசேஷம். அது கிருஸ்துவப் பண்டிகை. பேர் போனது. பண்டிகையன்று செய்யும் பிரார்த்தனை பலிக்கும் என்பது நம்பிக்கை. பெற்றோர்கள் அவளைத் திருமணத்திற்காக வேண்டிக்கொள்ளச் சொன்னார்கள். அவள் பண்டிகையிலிருக்கும்பொழுது மனம் திருமணத்தை நாடவில்லை. தனக்குத் தெய்வம் வேண்டும் எனத் தோன்றியது. அதையே கேட்டாள்.

மீண்டுமொரு தரிசனத்திற்கு அவர்கள் குடும்பத்துடன் வந்தார்கள். தரிசனத்திற்காக அன்னை அறைக்கு வெளியில் நின்றபொழுது சம்பக்லால் வந்து இவள் பெயரைக் கூப்பிட்டு யார் அது எனக் கேட்டார். எல்லோருடைய தரிசனமும் முடிந்தபின் அன்னை உன்னைக் கடைசியில் வரச் சொல்கிறார் என்றார். அதேபோல் கடைசியில் சென்றார். தரிசனம் ஆத்ம திருப்தி அளித்தது. அன்று மாலை தூங்கும்பொழுது அவள் உயிர் உடலை விட்டெழுந்து அன்னை அறைக்குப் போயிற்று. அன்னையைச் சந்தித்து "என்னை விட்டகலக் கூடாது'' என்று வேண்டியது. அன்னை அவள் கேட்ட வரத்தை அளித்தார்.

அவள் பிரார்த்தனை செய்தது கிருஸ்துவப் பண்டிகையில்- பூர்த்தி செய்தது அன்னையின் அறையில்.

செய்யாத பிரார்த்தனை

பிரார்த்தனை செய்து அடுத்த மாதம் அது பூர்த்தியாகிறது. மற்ற பிரார்த்தனை அன்று மாலையே பூர்த்தியாகிறது என்பதை நாம் காண்கிறோம். அன்னையைப் பொறுத்தவரை நேரம் தேவையில்லை என்றாலும், இதுபோல் நடப்பதைக் காண்கிறோம். காரணங்கள் பலவகையின.

அரைகுறை நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் நாள் கழித்துப் பலிக்கும். இந்தப் பிரார்த்தனை பலிக்காது எனத் தெரியும், இருந்தாலும் பிரார்த்தனை செய்து வைப்போம் என்ற மனநிலையும் அதற்குக் காரணம். சில சமயங்களில் மனம் தீவிரமாக வேறு முக்கியமான விஷயங்களில் ஈடுபட்டிருந்தாலும், அது சமயம் செய்யும் பிரார்த்தனை உடனே பலிக்காது. படிக்க பயமுள்ள மாணவனுக்குக் காலேஜில் சேர ஆசையுமிருந்து பிரார்த்தனை செய்தால், பயமும் ஆசையும் போராடுவதால், பலன் தள்ளிப் போகும்.

விஷயம் புதியதாக இருந்தால் நமக்கு விபரம் தெரியாது. அந்நேரம் செய்யும் பிரார்த்தனைக்கு மனத்தில் தடையிருக்காது. அது அன்றே பலிக்கும். வேறு காரணமாக அன்னையைத் தீவிரமாகச் சில நாட்கள் நினைக்கவேண்டியிருக்கும். அந்த நேரம் எழும் பிரார்த்தனை, இந்தத் தீவிர நினைவின் ஆதரவால் உடனே பலிப்பதுண்டு.

இவற்றைக் கடந்த நிலையில் சில பலன்கள் உள்ளன.

 • காருக்கு அடியில் மாட்டிக்கொண்ட பெண் அம்மா என அலறி, காயம்படாமல் எழுந்துவந்தார்.
 • கால் குத்தியிருந்த இரும்புப் பின் தானே மறைந்தது.
 • ஓடும் ரயில் நின்றது.
 • தொலைந்துபோன பர்ஸ் மூன்று நாள் கழித்துப் பலமுறை தேடிய இடத்திலேயே கிடைத்தது.
 • தொலைந்த வைரமோதிரம் பலமுறை தேடிய மேஜை மீதே  மூன்றாம் நாள் கிடைத்தது.
 • மோத வந்த பஸ்ஸின் முன் விழுந்தவரை ஒரு சக்தி தூக்கி அப்புறப்படுத்தியது.

இவை போன்ற நிகழ்ச்சிகள் அதிகமில்லை. ஆனால் அன்பர்கள் அனுபவத்தில் உண்டு.

தரிசனத்திற்கு வந்து திரும்பும் பக்தர் கூடூர் ரயில்வே ஸ்டேஷனில் டீ சாப்பிட இறங்கியபொழுது ரயில் நகரவே ஓடி ஏறியபொழுது வேஷ்டி சிக்கி ரயிலடியில் விழுந்தார். அவர் பிரார்த்தனை செய்யும் நிலையில் இல்லை. அப்படியே அவரை ஆகாயத்தில் தூக்கி ரயினுள் போட்டது ஒரு சக்தி.

அன்னை, செய்யாத பிரார்த்தனையை இதுபோல் பூர்த்தி செய்வதுண்டு. உடல் தன்னை மறந்த நேரம் அன்னையைத் தன்னை அறியாமல் நினைவுகூர்வதால் இது நடக்கிறது. மனம் உண்மையாக இருந்தது என்பதுபோல் உடல் அன்னைக்கு உண்மையாக இருந்ததால் பிரார்த்தனை செய்யாமல் அன்னை செயல்படுகிறார்.

சோகம், ஏமாற்றம்

அன்னை பெயரில் பலர் பள்ளிகள் நடத்துகிறார்கள். ஒருவர் ஆசிரமம் நடத்துகிறார். இங்கு ஏற்படும் பிரச்சினைகள் அதிகம். அன்னை முறையைப் பின்பற்றினால் பிரச்சினைகள் இருக்கா. அன்னையை வணங்கினாலும், அவர் முறைகளைப் பின்பற்றுவது கடினம்.

அப்படிப்பட்டவர் ஒருவர் ஆசிரமம் வந்து அன்னையைச் சந்தித்துப் பேசினார். "என் வாழ்வு சோகம் நிறைந்தது. ஒரே ஏமாற்றம், வெறுப்பும், விரக்தியும் அதிகம், எரிச்சல் வருகிறது'' என்று தம் நிலையை விளக்கினார்! இதுபோல் அன்னையிடம் முறையிடுபவர்கள் பலர்.

பதிலுக்கு அன்னை, "என் அகராதியில் சோகம், ஏமாற்றம், வெறுப்பு, விரக்தி, எரிச்சல் போன்ற வார்த்தைகள் இல்லை. சந்தோஷம், திருப்தி, அன்பு, நிறைவு, சுமுகம் போன்ற சொற்கள் ஏராளமாக உண்டு'' என்று கூறியதுடன் பதிலுக்கு அவற்றைப் போக்க ஒரு முறையையும் விளக்கினார்.

பெரிய அமெரிக்கக்  கம்பனியில் வேலை போய் மனைவி விவாகரத்து செய்யும் நிலையில் மார்க் என்பவர் சோர்ந்து சுருண்டுபோய் உட்கார்ந்திருந்தபொழுது இந்தியாவுக்குப் போய்த் திரும்பிய அவர் நண்பர் வந்து ஆசிரமத்தைப் பற்றியும், அன்னையைப் பற்றியும் பேச ஆரம்பித்தார். மார்க் நிமிர்ந்து உட்கார்ந்தார். பல நாட்களுக்குப்பின் லேசாகச் சிரித்தார், "யார் இந்த மதர் (Mother)? நீங்கள் பேச ஆரம்பித்தபின் என் நெஞ்சம் நிறைகிறது. தெம்பு வருகிறது. சந்தோஷமாக இருக்கிறது. மேலும் பேசுங்கள். நான் இந்தியாவுக்குப் போகட்டுமா? ஆசிரமத்தின் விலாசம் கொடுங்கள்'' என்று பத்து நிமிடத்தில் தம் சோகத்தை விட்டு வெளிவந்தார்.

அன்னையை நினைத்தால் சோகம் கரையும்.

அவர் பெயரைச் சொன்னால் ஏமாற்றம் போகும்.

அவரை அழைத்தால் சந்தோஷம் வரும்.

அன்னை வந்தவரிடம் இவற்றையெல்லாம் சொல்லவில்லை. அவர் சொன்னது பின்வருமாறு

கடலைப் பார். எப்படி அகன்று பரந்துள்ளது!

மொட்டைமாடிக்குப் போய் வானத்தை நிமிர்ந்து பார். எத்தனை ஆயிரம் நட்சத்திரங்கள் தெரிகின்றன!

பால்-வெளியைப்  (Milky Way) பார்த்திருக்கிறாயா? அதனுள் எவ்வளவு நட்சத்திரங்கள் உள.

எவ்வளவு பெரிய பிரபஞ்சம் இது?

இது அனந்தம், infinity. ஏன் மனம் குறுகலாகவேண்டும்?

இவற்றைப் படைத்தவனுடன் நாம் ஐக்கியமாக வேண்டுமன்றோ?

அப்படிச் செய்தால் மனம் எப்படிச் சிறியதாக இருக்கமுடியும்?

சோகம், விரக்தி, ஏமாற்றம், வெறுப்பு, சிறிய மனத்திற்குரியது.

இதற்கு எதிரானவை பெரிய மனத்திற்குரியவை.

மனம் விசாலமடைய முயல்வது சரி.

விசாலமடைந்த பிறகு உன் கஷ்டம் தீரும்,

என்று அறிவுரை கூறினார்.

ராமனும் சீதையும்

அன்னையைச் சக்தியாக அறிந்து அவர் யோகத்தை ஏற்று, அவர் விரும்பியபடி யோகப் பாதையில் வந்து பூரணயோகச் சாதகராக வருவது சிரமம். அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் பலிக்கும், இதுவரை பலிக்காத பிரார்த்தனைகளும் அற்புதமாகப் பலிக்கும் என்பதை அறிந்தவர்களும் சிலரே.

உலகத்தை ஒரே நாளில் சத்திய ஜீவியமாக்கும் சக்தி அன்னைக்குண்டா எனக் கேட்ட சாதகருக்கு, பகவான் சுருக்கமாக ஆம் என்று கூறினார். அன்னை வந்த ஆரம்பத்தில் அதிசயம்-Miracles- எனப்படும் யோக அனுபவங்களை அன்னை சாதகருக்கு அளித்து வந்தார். அப்பொழுதுதான் கடல்தேவதையுடன் பேசினார். பகவான் அன்னையை அது போன்றவற்றை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதன்பிறகு ஓரிரு செயல்கள் தற்செயல்களாக அப்படி நடந்துள்ளன. மிகப்பெரிய ஆச்சரியம், அற்புதம் போன்ற காரியங்களையும் பிறகு அன்னை அறிவுக்கு விளங்குமாறு, இயற்கை நியதிகளை ஒட்டிச் செய்துள்ளார்.

ஆசிரமம் வந்த வடநாட்டார் அன்னையைக் கண்டு பிரமித்தனர். வீடு திரும்பியதும் பக்கத்து வீட்டில் 10 வயதுவரை நடக்கமுடியாத பையனுக்கு அன்னையைப் பற்றிச் சொன்னார்கள். மூளை வளர்ச்சியில்லாதவன். ஒரே பிள்ளை. ஆசிர்வாத மலரினை-Blessing packet- பையனிடம் கொடுத்தனர். இதுவரை படுக்கையாக இருந்த பையன் அன்று எழுந்து நின்றான்! பெற்றோருக்கு மகன் இனி மனிதனாவான், நடப்பான், படிப்பான் என நம்பிக்கை வந்துவிட்டது. அது நடக்கவில்லை. அத்துடன் அவன் இறந்துவிட்டான்.

ஒரே பிள்ளை இறந்த சோகத்தால் தாய்க்குச் சித்தபிரமை வந்தது. அவரை ஆசிரமம் கொண்டுவந்து ஒரு மாதம் வைத்திருந்தனர். மீண்டும் வீட்டுக்குப் போனார்கள். 10 வருஷமாகக் கருத்தரிக்காத பெண் கருவுற்றாள். இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அன்னை அக்குழந்தைகளுக்கு ராமன், சீதை எனப் பெயரிட்டார்.

பகவான் இரண்டாம் உலக யுத்தத்தை அன்னையின் யுத்தம் என்பார். இரண்டாம் உலக யுத்தத்தை பகவான் நடத்தினார். தம் யோக சக்தியால் அதை வென்றார். அதைப் பற்றி வெகுநாள்வரை குறிப்பிடவில்லை.

ஏராளமான பிரிட்டிஷ் துருப்புகள் டங்கர்க் என்ற இடத்தில் ஆபத்தான நிலையில் மாட்டிக்கொண்டபொழுது, மூடுபனி துருப்புகள் மேல் கவிழ்ந்தது. துருப்புகள் தப்பி விட்டன. அதைப்பற்றிப் பேச்சு எழுந்த பொழுது பகவான் ஒன்றும் அறியாதவர்போல் 'மாயமாய்ப் பனி வந்து உதவியது' எனக் கூறினார். தாம் துருப்புகளைக் காப்பாற்றியதாகக் கூறவில்லை. தூய்மையான நம்பிக்கையால் பக்தர்களுக்கு இன்றும் ஆச்சரியமான பலன்கள் கிடைக்கின்றன. இன்று கிடைக்கும் பலன் அதிகமானது. காலில் 20 நாட்களிருந்த சிறுஊசி- pin- மாயமாய் மறைந்தது போல பல காரியங்கள் நடக்கின்றன.

பலன் கருதித் தேடுபவர்கட்கு இது அதிகமாகக் கிடைப்பதில்லை. விவரம் தெரியாதவர்களுக்கு ஏதோ ஒரு சமயம் நிச்சயம் கிடைக்கிறது. அன்னையை அன்னைக்காக ஏற்க விழைபவர், அன்னையின் திருவடிகள், தங்கள் தலைமீது கற்பனையாகப் பட்டவுடன் புளகாங்கிதமடைபவர்கள், அன்னையைப் பக்தியால் நெருங்க விழைபவர், தங்களுக்குத் தீராத பிரச்சினைகளான - கால் ஊனம், 20 வருஷத்திற்கு முன் தொலைந்த நிலப்பத்திரம், பிறவியிலேயே பார்வையில்லாத கண் - போன்றவை இருந்தால், பலனுக்காக இல்லாமல் பக்திக்காக அவை தீரப் பிரார்த்தித்தால், அவை ஆச்சரியமாகத் தீருவதைக் காணலாம். அதைச் சோதனையாகச் செய்வதைவிட பக்தியாகச் செய்வது மேல். பலன் கால் ஊனம் நீங்கி நடப்பதன்று, அன்னையை ஆத்மாவில் நெருங்கி வருவதாகும்.

அதுபோன்ற பலன் பெற்ற - பலிக்கும் பிரார்த்தனைகள் பலவற்றைக் கவனித்தால் எல்லாப் பிரார்த்தனைகளும் பிறவிக் குருடனுக்குப் பார்வை வந்தது போலவே பலிப்பது அவருக்குப் புரியும். பலனைவிட -  புரிவதைவிட, அன்னையை ஆத்மா அறிவது முக்கியம் என்ற மனநிலைக்கு அது உண்டு.

உடலைவிட்டு வெளியே போவது

"நான் தூங்கும்பொழுது சில சமயங்களில் என்னுடலை நானே பார்ப்பதுண்டு,'' என்று கூறுபவர்கள் உண்டு. அவர்கள் உடலை விட்டு வெளியே போகும் திறனுடையவர்கள்.

இறந்த பிறகு நடக்கும் கரும காரியங்கள் ஆத்மா சாந்தியடையச் செய்யப்படுபவை என நாம் கூறுகிறோம். ஆவி சாந்தப்படுவதற்காகச் செய்யப்படும் சாங்கியங்கள் அவை. ஆவி வேறு, ஆத்மா வேறு. ஆத்மாவுக்கு சாங்கியங்கள் தேவையில்லை. சாங்கியங்களைக் கடந்தது ஆத்மா.

யோகத்தை மேற்கொண்டபின் உடலைவிட்டு வெளிவரும் திறமையுள்ளவர்கள், அதை யோகானுபவம் என நினைப்பார்கள். ஒரு சாதகருக்கு அப்பழக்கம் உண்டு. அன்னைக்கு எழுதினார். "இனி அதுபோல் செய்யக்கூடாது,'' என அன்னை கூறினார்.

பாரிசில் ஒரு சமயம் டின்னரில் கலந்து கொண்ட அன்னை, 'இங்கு புழுக்கமாக இருக்கிறது, நான் காற்றுக்காக வெளியே போகவேண்டும்,' என நினைத்தார். அடுத்த நிமிஷம் திறந்த வெளியிலிருந்தார். அவர் நினைவு பலித்தது. அவர் உடல் மயக்கமாக விழுந்தது. இது சரியில்லை எனத் தோன்றி தம் உடலைக் கடிந்துகொண்டு மீண்டும் நினைவு பெற்றெழுந்தார்.

இதுபோல் உடலைவிட்டுப் போவது ஆத்மா இல்லை. ஆத்மாவை மனிதன் அறியமாட்டான். இது சூட்சுமச் சரீரம் (subtle physical),  ஆவியும் (subtle vital) வெளியே போவதுண்டு. இதற்கும் யோகத்திற்கும் சம்பந்தமில்லை எனக் கூறினார்.

வெளியே போனபின் உடலுக்கும் ஆவிக்கும் இடையே ஒரு மெல்லிய தொடர்புண்டு. அது துண்டிக்கப்படக் கூடாது. அது அறுந்துவிட்டால் மீண்டும் உடலுக்குள் நுழைய முடியாது. உயிர் பிரிந்துவிடும்.ஆவி வெளியே போனால் தானே திரும்பும். உடலை யாராவது அசைத்தால், பிடித்து ஆட்டினால் உயிர் திரும்ப முடியாது, என அன்னை எச்சரிக்கிறார். இப்படிப்பட்டவர் தனியே தூங்குவது நல்லது.

ஆப்பிரிக்காவுக்குப் போய் குரு தியோன் மனைவியிடம் உடலை விட்டு வெளியே வரும் கலையை அன்னை அறிந்தார். உடலைவிட்டு வெளியே வந்தபின் அவ்வுடலை விட்டு மீண்டும் வெளிவருவதும் உண்டு. அதுபோன்று அன்னை 12 முறை சூட்சும உடலை விட்டு வெளிவந்தார். அப்படி வந்தபொழுது தலைக்கு மேல் சூரியனையும் அதற்கு மேல் சந்திரனையும் கண்டார்.

தியானத்தின் போது உடலில் சக்தி நுழைவதைக் காணலாம். சில சமயங்களில் உடல் நடுங்கும். பல சமயங்களில் மரத்துப் போகும். சில நிமிஷம் அசையாமலிருந்தால் மீண்டும் சரியாகிவிடும். தியானத்தின் போது உடலைவிட்டு வெளியே போவதும் உண்டு. அது அரிது.

இருவர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அது கிராமம் சாலை ஒரு மைல் தூரத்திலுள்ளது. பஸ் ஓடுகின்ற ஒலி கேட்பது நின்றது. ஒருவர் அடுத்தவரிடம் உங்கள் மதுரை நண்பர் பஸ்ஸில் வந்து இறங்குகிறார் என்றார். கேட்டவர் நம்பாமல் சிரித்தார். கொஞ்ச நாழிகை கழித்து நண்பர் வந்தார். சிரித்தவருக்கு ஆச்சரியம். எப்படிச் சொன்னீர்கள் எனக் கேட்டார். பஸ்ஸிருந்து அவர் இறங்குவதைப் பார்த்தேன் என்றார்.

ஸ்ரீ அரவிந்தர் அறையில் இருக்கும் பொழுது ஒரு சாதகர் அவரிடம் வந்தார். ஸ்ரீ அரவிந்தர் "நான் ரிஷபசந்த் என்ன செய்கிறார் என்று பார்த்தேன்'' என்றார். ரிஷபசந்த் அவர் வீட்டிலிருக்கும்பொழுது பகவான் தம் அறையிருந்து ரிஷபசந்த்தைப் பார்க்கிறார். இது மனதைவிட்டு வெளியே போவதாகும். மனம் சூட்சுமமாக உள்ளவர்கள், தங்களுக்கு அதிக அக்கறையுள்ள மனிதர்களை நினைத்தால், அவர்கள் பேசுவதைக் கேட்க முடியும். நினைப்பதை அறிய முடியும், சமயத்தில் பார்க்க முடியும். மனம் தன் இருக்கையிலிருந்து எழுந்து சூட்சுமமாக வெளியே சென்று செயல்படும். அன்னை பக்தர்களில் சூட்சும மனம் பெற்றவர்களுக்கு இது பலிக்கும். பொதுவாகக் கிராமப்புறங்களில் உள்ளவர்க்கும், பெண்களுக்கும், பள்ளிக்கூடம் போகாதவர்க்கும் இந்தத் திறமை இருப்பதுண்டு. யோகத்தை அவர்கள் மேற்கொண்டால், இத்திறன் யோகத்திற்கு உதவும்.

சீட்டாட்டம்

சீட்டு ஆடுதல் நம் நாட்டில் ஆடவர்க்கு மட்டும் உரியது. அதுவும் சூது எனக் கருதப்படும். மேல்நாடுகளில் சீட்டு என்பது விளையாட்டு. ஆடவரும், பெண்களும் எங்கும் சமமாகக் கலந்துகொள்வது போல் சீட்டிலும் கலந்துகொள்வார்கள்.

சாப்பிடும்பொழுதும், மற்ற நேரம் தாகம் எடுத்தாலும் நாம் தண்ணீர் குடிக்கிறோம். இந்தியத் தொழிலதிபர் ஜெர்மனிக்குப் போனபொழுது ஹோட்டலில் தண்ணீர் கேட்டார். அவனுக்குப் புரியவில்லை. எதற்காகக் கேட்கிறீர்கள் என்றான். குடிக்க என்றார். அவர் கேட்டதை வியப்பாகப் பார்த்தவன் போய் டம்ளரில் ஓர் அங்குலம் தண்ணீர் கொண்டுவந்தான். அங்குத் தண்ணீர் சாப்பிடும் பழக்கமில்லை. ஜெர்மனியில் பீர் சாப்பிடுவார்கள், பிரான்சில் ஒயின் சாப்பிடுவார்கள், ரஷ்யாவில் வோட்கா சாப்பிடுவார்கள். அதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசமில்லை. நம்மைப்போல் தண்ணீர் சாப்பிடும் பழக்கம் அங்கில்லை. இவற்றை மது என அவர்கள் கருதுவதில்லை. பானம் என எடுத்துக்கொள்கிறார்கள்.

ஒரு சமயம் பலர் சீட்டாடிக்கொண்டிருந்தனர். ஒருவர் அதிகமாக நஷ்டப்பட்டார். அன்னை ஆட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அன்னையைப் பலரும் ஆட்டத்தில் கலந்துகொள்ளும்படியும், இழந்தவர் இடத்தை ஏற்று அவர் நஷ்டத்தை ஈடு கட்டும்படியும் கேட்டுக் கொண்டனர்.

"நான் வந்தால் உங்களிடம் உள்ள எல்லாப் பணமும் பறி போகும்'' என்று அன்னை கூறியதைக் கேட்டு அனைவரும் கேலியாக வாய்விட்டுச் சிரித்தனர்.

அன்னை ஆட்டத்தில் கலந்துகொண்டார். மற்றவர் கைகளில் உள்ள எல்லாச் சீட்டுகளும் அவர்கள் பார்ப்பதுபோலவே அன்னைக்கும் தெரிகின்றன. அன்னை கூறியதுபோல் அன்னை தொடர்ந்து ஜெயித்தார். எல்லோருடைய பணமும் இவர் கைக்கு வந்தது. மற்றவர்கட்கு ஒன்றும் புரியவில்லை.

"போதும், போதும், நிறுத்துங்கள்'',

என்று அனைவரும் கூக்குரலிட்டனர். சற்றுமுன் கேலியாகப் பேசியது மறந்துவிட்டது.

 • அன்னைக்குச் சூட்சுமப் பார்வையுண்டு.
 • பிறர் கையிலுள்ள சீட்டின் மறுபுறம் தெரியும்.
 • பிறர் மனதிலுள்ள எண்ணங்கள் தெரியும்.
 • ஜடப்பொருள்களின் உணர்வை அன்னை அறிவார்.
 • ஜடப்பொருள்களின் குரல் அன்னைக்குக் கேட்கும்.
 • விலங்குகளின் எண்ணங்களுக்கு அன்னை பதில் சொல்லும் பழக்கம் உண்டு.
 • ஆபத்து நேரத்தில் மரம், செடி, கொடிகள் அன்னையிடம் வந்து முறையிடுவதுண்டு.
 • தெய்வங்களும் தங்கள் குறைகளை அன்னையிடம் வந்து குறைப்பட்டுக் கூறுவதுண்டு.

பயம்

அன்னையிடம் வந்தபின் நம்மிடமிருந்து துன்புறுத்திய குறைகள் கரைந்துபோகும். சிறு அளவிலுள்ள நல்லது அதிகமாக வளரும். இதற்கு மாறானதும் உண்மை.

தன் வேலைக்காரனைக் கண்டு பயப்படும் மேனேஜர், யார் போனில் கூப்பிட்டாலும் பதில் சொல்லப் பயந்து ஒளியும் பெண், போன்ற நிலை மாறி திறமையாகப் பல பேரை வைத்து வேலை செய்த அனுபவம் உண்டு.

சிறு வயதில் பேய்க்கதைகளைக் கேட்டுப் பயந்து பயமே உருவான பெண், பக்தருடன் உட்கார்ந்து அவர் கையைப் பிடித்துக்கொண்ட நேரம் "நான் எங்கோ போய்விட்டேன். பயம் போன இடம் தெரியவில்லை'' என்றார். எருக்கம் பூ தைரியத்தைக் குறிக்கும் எனக் கேள்விப்பட்ட பக்தர், எருக்கம் பூவை எடுத்துப் பையில் வைத்துக்கொண்டவுடன், பயம் அதிகமானதைக் கண்டு பீதியடைந்து, விவரம் தெரிந்தவரைப் போய்க் கேட்டார். "எருக்கம் பூவை அன்னை படத்திற்கு முன் வைத்திருந்து, அடுத்த நாள் எடுத்து வைத்துக்கொண்டு பாருங்கள்'' என்றார். அப்படிச் செய்த பொழுது பூ தைரியத்தைக் கொடுத்தது, பயத்தை அழித்தது. எருக்கம் பூ தைரியம் என்றாலும், தைரியத்தைப் பெற தெம்பில்லாதவருக்கு அது பயத்தைக் கொடுக்கிறது. ரிவால்வர் நமக்குத் தைரியமளிக்கும். முழு பயந்தாங்கொள்ளியிடம் தற்காப்புக்காக ரிவால்வரைக் கொடுத்தால், ரிவால்வரே அவருக்குப் பயத்தை எழுப்பும்.

ஜப்பானிய கட்டிடக்கலையைப் பின்பற்றி ஆசிரமத்தில் கோல்கொண்டா என ஒரு கட்டிடம் உண்டு. அது இங்குள்ள விடுதிகளில் மிக உயர்ந்தது. அங்கு ஒரு பக்தர் வந்து தங்கினார். இவ்விடம் அமைதிக்குப் பேர் போனது. இரண்டு மணிக்கு ஒரு முறை அலறும் பேய் பிடித்த பெண் இங்கு வந்து தங்கிய பொழுது பகலெல்லாம் அலறவில்லை. இரவு ஒரு முறை அலறினார். இவ்விடுதியிலுள்ள அமைதி அதிகம்.

ஆனால் இப்புதிய பக்தருக்கு இரவு சிம்ம சொப்பனமாக இருந்தது. ஓர் இரவு கனவில் சிங்கம் தம் மார்பு மீது வந்து உட்கார்ந்ததைக் கண்டார். அன்னையிடம் கூறினார். அடுத்த நாள் ஸ்ரீ அரவிந்தர் சிவந்த உடையணிந்து கனவில் தோன்றி நீங்கள் இறந்து விடுவீர்கள் என்றார்.

தொடர்ந்து பயங்கரக் கனவுகள் வருவதைக் கண்டு பயந்து அன்னையிடம் முறையிட்டார். பேசும் பொழுது அவருக்கு நிலையில்லை. அன்னையிடம் பேசுகிறோம் என்ற அமைதியுமில்லை. ஆரவாரமாகப் பேசி முடித்தார்.

இப்படிப் பயப்படுகின்றவர்கள் இந்த யோகத்திற்கு விலக்கு என்றார் அன்னை. விஞ்ஞானத்தைப் பற்றியும், யோகத்தில் அது போன்ற சோதனைகள் செய்ய முடியுமா என்ற கேள்விக்குப் பதிலாக ஸ்ரீ அரவிந்தர், "யோகத்தில் சோதனையை நம்மீது செய்யவேண்டும். எல்லாவிதமான ஆபத்தும் உண்டு. சித்தசுவாதீனம் போவது சகஜம். உயிரும் போகும். இந்த ஆபத்தை எல்லாம் பொருட்படுத்தாதவர்க்கே யோகத்தில் சோதனையை மேற்கொள்ள முடியும்'' என்று கூறுகிறார்.

பேராசிரியர் பெற்ற வேலை

சாதகர்கள் கர்மயோகம் செய்யவேண்டி பல்வேறு துறைகளை அன்னை ஏற்படுத்தினார். அன்னை அவர்களுக்குக் கொடுக்கும் வேலை அவர்கள் சுபாவத்தைத் திருவுருமாற்றம் செய்யுமாறு அமையும். பொறுமையில்லாதவருக்கு அன்னை கொடுக்கும் வேலை ஜெனரேட்டரின் அருகில் உட்கார்வது போலிருக்கும். கரண்ட் எப்பொழுதோ ஒரு சமயம் தவறுகிறது. அந்தச் சாதகர் ஜெனரேட்டர் பக்கத்திலுள்ள ஸ்டூல் எப்பொழுதும் இருப்பதாக ஏற்பாடு. யாருடைய பொறுமையையும் அது சோதனை செய்யும்.

எந்த வேலையையும் சரியாகச் செய்யாதவருக்கு எழுத்துப் பிழைகளைக் (proof reading) காணும் வேலை அமையும். எல்லா வேலைகளையும் சிறப்பாகச் செய்பவருக்கும் முடியாத வேலை அது.

வேலையைச் சேவையாக செய்வது ஒரு நிலை. வேலையைக் கர்மயோகமாகச் செய்வது அடுத்த நிலை. அதனால் உயர்ந்த வேலை, தாழ்ந்த வேலை என்ற பாகுபாடு அடிப்படையில் இல்லை.

ஹைக்கோர்ட் நீதிபதி விடுமுறைக்கு ஆசிரமம் வந்திருந்தார். அவருக்கு, வாயிலில் வருபவர்களை வரவேற்கும் வேலை அமைந்தது. "உ.பி."- இல் ஒரு சாமியார். அவர் ஒரிசா வந்தார். அம்மாநிலம் முழுவதும் அவர் பக்தர்களானார்கள். அவர் ஆசிரமம் வந்தார். சாப்பாட்டு அறையில் பாத்திரம் தேய்க்கும் வேலையை அன்னை அவருக்கு அளித்தார். தரிசன நாட்களில் அவர் வேலை செய்யும் பொழுது அம்மாநிலப் பக்தர்கள் வரிசையாக வந்து அவரை நமஸ்கரிப்பார்கள்.

சமையலறைப் பொறுப்பை ஏற்றவர் பொருளாதாரப் பேராசிரியர். ஆசிரமப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் சாப்பாட்டு அறையில் தட்டு கழுவும் பகுதிக்குப் பொறுப்பாக இருக்கிறார்.

வேலை தெய்வம். அதைச் செய்யும் பொழுது செய்பவரின் கைகள் அன்னையின் கையாக மாறுவதுண்டு. வேலை நடக்கும் இடத்தில் தியானத்தின் போதுள்ள சூழல் இருக்கும். பாக்டரியில் பவித்திரமாக வேலை செய்தவருக்கு மெஷின் அருகில் பொன்னிறமாக ஸ்ரீ அரவிந்தர் காட்சி அளித்தார்.

ஆசிரமத்தில் சேர்ந்தவர் தாம் முன்பு செய்த வேலையே இங்கும் வேண்டும் என்பவருண்டு. அது தவிர வேறெதாவது வேண்டும் என்பவருண்டு. இரண்டிற்கும் இடமில்லை.

அமையும் வேலை, அன்னை அளிப்பது.

அதுவே திருவுருமாற்றத்திற்கு உதவும்.

தத்துவப் பேராசிரியர் ஆசிரமத்தில் சேர்ந்தார். சாப்பாட்டறையில் தட்டு, கிண்ணம் அலம்பும் இடத்தில் வேலை கொடுத்தார்கள். அவருக்குப் பிடிக்கவில்லை. மாலை விளையாட்டு மைதானத்தில் அன்னையைப் பார்த்துத் தமக்கு எங்கு வேலை எனக் கேட்டார்.

'டைனிங் ரூமில் வாஷிங் பகுதியில் போய் வேலை செய்யவும்,'

என்றார். தாம் பேராசிரியர். இந்த வேலை பாத்திரம் கழுவுவது என அவர் ஏமாற்றமடைந்தார். ஆசிரமத்தின் அடிப்படையை நன்குணர்ந்தால் இந்த  ஏமாற்றமிருக்காது.

பிரமாதம்

தெய்வத்தின் கருணையை மனிதன் வியந்ததுண்டு. மனிதனின் பக்தியைத் தெய்வம் வியந்ததும் உண்டு. ஏழை விவசாயி அனுப்பிய ஒரு ரூபாய் காணிக்கையைப் பெற்ற அன்னை "இப்படிப்பட்ட பக்திக்குத் தெய்வம் என்ன கைம்மாறு செய்யமுடியும்?'' என உணர்ச்சிப் பெருக்கால் பேசியதும் உண்டு.

நெடுநாளாக அன்னையோடு தொடர்புள்ள பெண் ஒருவர் ஆசிரமம் வர இயலவில்லை. வரமுடிவெடுத்தபின் அவருடைய 11 வயதுப் பெண் அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்து தானும் வரவேண்டுமென்று சாதித்தாள். தாயும் பெண்ணும் வந்தனர். அன்னை, ஆசிரமத்திலிருந்து கார் அனுப்பி விமான நிலையத்திலிருந்து அவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்தார்.

வந்தபின் முதற்காரியமாக தரிசனத்திற்கு விண்ணப்பித்தார். அன்னை அனுமதி அளித்தார். தாயும் குழந்தையும் தரிசனம் பெற்றனர். அன்னை குழந்தையைக் கண்டு பிரமித்து, ஓஹோ, ஆஹா, பிரமாதம், சபாஷ், என்று நாம் கூறுவதுபோல் பிரெஞ்சு மொழியில் மெல்லிய குரலில் தம் ஆச்சரியத்தை வெளியிட்டார். பக்தர்கள் தெய்வ தரிசனத்திற்கு வந்தனர்.

தெய்வம் மனித ஆர்வத்தைக் கண்டு பிரமித்தது.

தாய்க்கும், குழந்தைக்கும் அன்னையின் சொல் காதில் விழவில்லை. விழுந்திருந்தாலும் புரிந்திருக்காது.அன்னை அறையிலிருந்தவர் குழந்தையிடம் அன்னையின் திகைப்பை விளக்கினார். அன்னை கூறிய சொல்லைச் சொன்னார். அச்சொல்லின் முழு முக்கியத்துவத்தை அறிய குழந்தை பிரெஞ்சு கற்றுக்கொண்டாள்.

அன்னையைக் கண்ட கருநாகம் விரைந்து வந்து படமெடுத்து, தலையால் தரையில் அடித்து வணக்கம் செலுத்தியபொழுது அன்னை அதன் அழகைக் கண்டு வியந்தார். 7, 8 மைல் தூரத்திலிருந்து அன்பின் ஆர்வம் தழலாக எழுவதை டென்னீஸ் ஆடும்பொழுது கேட்ட அன்னை, அவ்விடத்தை நோக்கிப் போய் தன்னை நோக்கி வந்த வயதான பெண்மணியைச் சந்தித்து அவர் பக்தியைப் பூர்த்தி செய்தார். "உங்களைப் பார்க்கவே இந்த ஜன்மம் காத்திருந்தது. இனி எப்பொழுது போனாலும் கவலையில்லை'' என அப்பெண் அன்னையிடம் தமிழில் கூறியதை அன்னை மொழிபெயர்ப்பின்றி புரிந்துகொள்ளும் அளவிற்கு அவ்வாத்மாவோடு ஒன்றிப் போனார்.

பூஜை, ஸ்தோத்திரம், ஸ்லோகம் மூலம் நாம் "பக்தி''யைக் காண்கிறோம். ஆரோவில் ஆலமரம், சாப்பாட்டு ரூம் மாமரம், அடைத்து வைக்கப்பட்ட தென்னைமட்டை, தரையில் விரிக்கப்பட்ட கம்பளம், உயிர் பிரியும் நேரத்தில் பூனை எழுப்பிய குரல், பக்தர் வீட்டு மயிலின் பக்தி, பிஸ்கெட்டை நாடிவரும் காக்கை, தியானத்திற்கு வந்த ரிஷிகள், தெய்வங்கள், புறப்படும் கப்பல் எழுப்பிய ஓங்காரம் ஆகியவற்றுள்ளும் அன்னை பக்தியின் சிறப்பைக் கண்டு போற்றி அருள்பாலித்துள்ளார்.

இக்குழந்தையின் பக்தியே தாயாரை ஆசிரமம் அழைத்து வந்தது, என்ற உண்மை அன்னை மட்டும் அறியும் ஆன்மீக உண்மை.

நம்பிக்கை தீர்ந்தது, நன்றி பிறக்கவில்லை

1930 வாக்கில் ஆசிரமத்தில் 150 சாதகர்களிருந்தனர். அன்னை அதுவரை தாமே சமையல் செய்து பரிமாறினார்கள். "சாதகர்கள் என்னை அறியாமல் எதையும் செய்யமுடியாது. அவர்கள் நினைவையும் என் பிடிக்குள் வைத்திருந்தேன்'' என்றார். தினமும் சூப் செய்வார்கள். அன்னை அனைவருக்கும் தாமே சூப் வழங்குவார். வழங்கும் முன் தாம் சூப்பை சுவைத்துப்பார்த்துவிட்டு, சாதகருக்குக் கொடுப்பார். இது நடந்துவரும்பொழுது அன்னையின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஸ்ரீ அரவிந்தர் சூப் வழங்குவதை நிறுத்தும்படிச் சொன்னார்.

மனித வாழ்வில் தெய்வம் செயல்படும் வகைகள் பல. உணவைப் பகிர்ந்து கொள்வதன்மூலம் உணர்ச்சியில் தெய்வம் கலந்துகொள்கிறது. தெய்வம் செய்த முயற்சி தெய்வத்தைப்  பாதித்தது. மனிதன் பயன் பெறவில்லை. இன்னிலையை விவரிக்கும்படி நம்பிக்கை தீர்ந்தது, நன்றி இன்னும் பிறக்கவில்லை என்ற விளக்கம் எழுந்தது.

இறைவன் ஜடமானான், ஜோதி இருளாயிற்று, ஞானம் அஞ்ஞானமாயிற்று என்பது தத்துவம். ஜடமாகவும், இருளாகவும், அஞ்ஞானமாகவும் உள்ள இறைவன் வெளிவந்து சத்தியமாகவும், ஜோதியாகவும், ஞானமாகவும் மாறுவது பரிணாமம்.

அதே தத்துவம் மனிதனுக்குப் பயன்படும். வறுமையாகவும், பொய்யாகவும், துன்பமாகவும் இன்று இறைவன் வாழ்வில் இருக்கிறான். அதிர்ஷ்டமாகவும், சத்தியமாகவும், இன்பமாகவும் வாழ்வில் மாற அவன் முனைகிறான்.

இறைவன் மாற முயலும்பொழுது மனிதன்மூலம் செயல்படுகிறான். அம்மனிதனுக்கு உதவியாக வந்தது அன்னையின் அவதாரம்.

 • நம்பிக்கையால் செயல்படும் மனிதனின் நம்பிக்கை தீர்ந்தது.

 • நன்றியறிதலால் செயல்படக்கூடிய மனிதனுக்கு அது பிறக்கவில்லை.

அன்னையின் அவதாரம் அவனிழந்த நம்பிக்கையை அளித்து, இல்லாத நன்றியறிதலைப் பிறப்பித்து வறுமையை அதிர்ஷ்டமாக்க வந்தது.

தாங்கமுடியாத தலைவலி, மாத்திரை, பிளசிங்பாக்கெட், சமாதி தியானம், ஸ்ரீ அரவிந்தர் அறையில் தியானம், சமாதி புஷ்பம், அன்னை அறைகளுக்கு, இரு நாட்களாக அசையாதபொழுது

நம்பிக்கை தீர்ந்து விடுகிறது.

புதுவைக்கே அழைத்து வந்து, சேவையில் அணைத்து, மனத்துள் நிம்மதியாகப் பிறந்து, வாழ்வில் புத்தொளியைப் பிறப்பித்து, புது வாழ்வு அளித்ததற்கு ஆன்மாவில் இன்னும்

நன்றி பிறக்கவில்லை.

நம்பிக்கையும் போய், நன்றியும் பிறக்காத நிலையில் அருள் செயல்படுகிறது. அன்னை அருளாக மீண்டும் சமாதி புஷ்பமாக, கருணையாக வந்து தலையிலிருந்து வலியைப் பிய்த்து ஏற்கிறார்.

தலைவலி 5 - 7 நிமிஷத்தில் மறைகிறது.

அன்னை அன்பர் வாழ்வில் அனுதினமும் இதைத் தவறாது செய்கிறார். சாதகர் வாழ்வில் 1930இல் சூப் வழங்கி செயல்பட்ட கருணை, இன்று அன்பர்கட்குச் சூழலாக இருந்து பதிலளிக்கிறது. நம்பிக்கைத் தீரலாம்.

நன்றி பிறக்காமலிருக்கலாம்.

அன்னை தவறுவதில்லை, தவறுவதேயில்லை.

சூட்சும உலகில் கையெழுத்து

மாக்ஸ் தியோன் என்பவர் போலந்து நாட்டு யூதர். தியோன் என்றால் கடவுள் எனப் பொருள். நாம் சாமி எனவும், சாமியார் எனவும் கூறுவதுபோல் தியோன் என்ற சொல் வழங்கும். அதுவே அவருக்குப் பெயராக விளங்கியது. தம் பெயர் என்ன, எந்த ஊரைச் சார்ந்தவர் என அவர் யாரிடமும் சொல்லியதில்லை. அவர் மனைவி பெயர் அல்மா. அவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். சூட்சுமப் பயிற்சி பெற்றவர் அல்மா. அல்ஜீரியாவில் டிலெம்சன் என்ற ஊரில் இவர்கள் வசித்து வந்தனர்.

28-ஆம் வயதில் அன்னை முதன்முறையாக பாரிஸை விட்டுப் புறப்பட்டு தியோன் உள்ள ஊருக்குச் சென்று அவர்களுடன் கொஞ்சநாள் தங்கியிருந்தார். சூட்சுமம் என்பதை நம் நாட்டில் கூடுவிட்டுக் கூடு பாய்வது என்பார்கள். உடலைவிட்டுப் போய் ஆவி உலகங்களில் சஞ்சாரம் செய்து, அங்கே சித்து விளையாடும் சாத்திரம் அது.

அல்மா அன்னைக்குப் பயிற்சி அளித்தார். உடலைச் சமாதி நிலைக்குக் கொண்டு வந்து, உடலைவிட்டு வெளிவருவதும், பல்வேறு நிலைகளில் வெளிவந்து பல்வேறு உலகங்களை அடைவதும் பயிற்சியாகும். உடலைச் சமாதியாக்குவதையும், உடலைவிட்டு வெளிவருவதையும் அன்னை எளிதில் பயின்றார்.

ஒரு சமயம் டிலெம்சன்னிலிருந்து அன்னை தம் உடலைவிட்டு வெளிவந்து பாரிசை அடைந்தார். உடல் தியோன் வீட்டிலிருக்கிறது. உயிர் பாரிசுக்கு வந்துவிட்டது. தம் நண்பர்கள் பலருள்ள இடத்தை அடைந்தார். தாமிருப்பதை அவர்கள் உணரும் வகையாகப் பல காரியங்களைச் செய்தார். அன்னை வந்திருப்பதை அங்குள்ள அனைவரும் சூட்சுமமாக அறிந்தனர். ஒரு பென்சிலை எடுத்தார், சில வார்த்தைகள் எழுதினார்.

பென்சில் தானாக எழுந்து, எழுதுவதை அங்கு குழுமியுள்ளவர் கண்டனர் போலும்!

மற்றொரு சமயம் இதேபோல், (அதாவது உடலை அல்ஜீரியாவில் விட்டுவிட்டு, உயிர் மட்டும் பாரிஸ் வந்து) ரயில் ஏறி, இறங்கினார். அங்கு நடப்பவற்றைக் கண்டார். எவரும் அன்னையைக் காணவில்லை! ஆன்மீக வாழ்வில் சூட்சுமம் கலந்திருப்பதுண்டு. ஆனால் ரிஷிகள் சூட்சும வேலைகளை இரண்டாம் பட்சமாகக் கருதுவார்கள். அன்னை இப்பயிற்சிகளை எல்லாம் பெற்ற பிறகும், அவற்றை முக்கியமாகக் கருதவோ, பயன்படுத்தவோ இல்லை. கல்லூரி மாணவன் கிரிக்கெட் விளையாடினால், கிரிக்கெட் பரீட்சைக்கு உதவாது. அதுபோல் ஆன்மீகப் பாதையில் சூட்சும வேலைகள் கிளையாகும். முக்கிய இடம் அதற்கில்லை.

பிற்காலத்திலும் அன்னை தாம் பெற்ற பயிற்சியைப் பயன்படுத்தவில்லை. ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு வித்தையைக் கற்றோம், அது நமக்கு முதன்மையானதன்று என விட்டுவிட்டார்.

கடுமையின் இனிமை

ஸ்ரீ அரவிந்தர் புதுவை வந்த பிறகு "பெரும் புரட்சி''யை அவரை அறிந்தவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது அரசியல் புரட்சி. பகவான் மேற்கொண்டது ஆன்மீகப் புரட்சி. கராச்சி, பலுஜிஸ்தான் போன்ற இடங்களிலிருந்து அவரைத் தரிசிக்க வந்தவர்கள், அது முடியாது என்று கண்டு, அவர் தங்கியுள்ள மேல்மாடி ஜன்னல்வரை சுவரில் ஏறி எட்டிப் பார்த்தனர். இவையெல்லாம் தவிர்க்கப்படவேண்டியவை என பகவான் இந்து பத்திரிகை மூலம் அவர் பக்தர்கட்கு வேண்டுகோள் விடுத்தார். இவையெல்லாம் 1910 முதல் 1920வரை.

1926-இல் நவம்பர் மாதம் பகவான் எவரிடமும் எதுவும் முன்கூட்டிச் சொல்லாமல், அன்னையிடமும் அறிவிக்காமல், "நான் தனிமையை நாடுகிறேன். இனி அன்னை எல்லாப் பொறுப்பையும் ஏற்பார்'' என்று பிரகடனப்படுத்திய பொழுதுதான் அன்னையே அவர் முடிவை அறிந்தார்.

புதுவைக்குப் பகவான் வந்தபொழுது புரட்சியை எதிர்பார்த்தவர்கள் பகவான் தனிமையை நாடியபொழுது பெரிய ஆன்மீகப் புரட்சியை எதிர்பார்த்தனர்.

பகவான் தங்கமயமாக மாறுவார்

என்று எதிர்பார்த்தனர். சத்தியஜீவியம் பலிக்கும் என நினைத்தனர். ஆசிரமத்திலிருப்பது பெரும்பாக்கியம் என உணர்ந்தனர். அந்த ஆண்டு முடிவிலிருந்து நவம்பர்வரை நாளுக்கு நாள் பக்தர்கள் நெஞ்சம் மேலும் மேலும் நிறைந்தது. சூழல் தினமும் ஒரு படி கனத்தது. நவம்பர் வந்தது. வழக்கமான தியானம் 4½ மணிக்கு நடப்பது தள்ளித் தள்ளிப் போயிற்று, 6, 7 என நள்ளிரவுக்கும் போயிற்று. இவையெல்லாம் ஏதோ ஒரு பெரிய விஷயத்திற்காக என அனைவரும் அறிந்தனர்.

எதிர்பார்த்த சத்திய ஜீவியம் அவருள் பலித்தது. அவருடல் தங்கமேனியாக மாறியது.

ஜெயதேவ் என்பவர் நவம்பர் தரிசனத்தில் பகவான் முன்வந்து "பிரபோ, சிறிது நாளாக சாந்தியும், ஆனந்தமும் என்னுள் வளர்கிறது'' என்றார். பகவான் புன்னகையுடன், "உங்களால் அதை உணரமுடிகிறதா?'' எனக் கேட்டார். "நான் மட்டுமன்று, எல்லாச் சாதகர்களும் அதை உணருகிறார்கள்'' என்றார். "மனம் ஆனந்தத்தால் துள்ளுகிறது'' எனவும் குறிப்பிட்டார். கடுமையான தவம் இனிமையான ஆனந்தப் பெருக்கை ஏற்படுத்துகிறது.

"பொறு, இது மேன்மேலும் அதிகரிக்கும்''

என்று பகவான் தரிசனத்தில் பதிலிறுத்தார்.

சூட்கேஸ்

ஆசிரமம் இன்றுள்ளதுபோல் பெரிய ஸ்தாபனமாக அன்றில்லை.ஆனால் ஆசிரம வேலைகளுக்காக அன்னை சொந்தமாக ஓர் ஒர்க்ஷாப் வைத்திருந்தார். அங்கு, சாதகர்கள் வேலை செய்தனர். பகவானும் அன்னையும் தரிசனம் தரும் நாட்களில் வெளியிலிருந்து வருபவர்கள் பகவானை ஒரு மகானைத் தரிசிப்பதுபோல் தரிசிக்க வருவதுதான் அதிகம். அவருடைய புத்தகங்களைப் பயின்றவர்கள், கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்கள் வெளியிலிருந்து வருபவர்களில் குறைவு.

அதுபோல் வந்த பக்தர் ஒருவர் தம் சூட்கேஸ் சாவியைத் தொலைத்துவிட்டார். வந்தவர் ஓர் ஆசிரமச் சாதகருடன் தங்கினார். 25 பைசா விலையுள்ள பூட்டு போட்டு பூட்டியிருந்தார். பூட்டை உடைக்க ஓரிடம் தேடினார். சாதகர், ஆசிரம ஒர்க்ஷாப்புக்கு வந்தவரை அழைத்துப் போனார். அங்கு வேலை செய்யும் சாதகரிடம் பூட்டையும், தொலைந்துபோன சாவியையும் பற்றிச் சொல்லி, பூட்டை உடைத்துவிடும்படிக் கேட்டார்.

"சாதகர்கள் எண்ணிக்கை 150வரை இருந்தபொழுது, நான் அவர்கள் செயல்களையும் எண்ணங்களையும் என் கையில் வைத்திருந்தேன்'' என்று அன்னை ஒருமுறை சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட இடத்தில் எந்தக் காரியத்தை அன்னையின் உத்தரவு இல்லாமல் செய்வார்கள்? வந்தவருக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? சாதகர் தாம் அன்னையிடம் உத்தரவு பெறவேண்டுமென்றது வந்தவருக்கு விந்தையாயிருந்தது. 

பெட்டியை ஆசிரமக் காரியதரிசியிடம் எடுத்துப் போனார்கள். நடந்ததைச் சொன்னார்கள். அவர் சற்றுப் பொறுத்து வரும்படிச் சொன்னார். இடை நேரத்தில் காரியதரிசி அன்னை உத்தரவைப் பெற்று ஒர்க்ஷாப்புக்குச் சொல்லி அனுப்பினார்.

வந்தவர் இவ்விந்தை மனிதர்களை வேடிக்கையாகவும், மரியாதை உணர்வோடும் பார்த்து, ஒரு பூட்டை உடைக்க இத்தனை சாங்கியமா? என நினைக்கும்பொழுது ஒர்க்ஷாப் சாதகர் சாவிக்கொத்து ஒன்றைக் கொணர்ந்து பூட்டைத் திறக்க முயன்று, ஓரளவு பொருத்தமாக, சாவியை எடுத்து ராவினார்.

பொருள்களுக்கும் ஜீவன் உண்டு என்ற அன்னை, பூட்டை உடைக்க அனுமதிக்கவில்லை. பூட்டை உடைத்து எடுப்பது வன்முறை என்பது அன்னையின் கொள்கை. வந்தவர் ஒருபக்கம் அவசரப்பட்டாலும், மற்றொருபுறம் ஆச்சரியத்துடன் பொறுமையை கஷ்டப்பட்டுக் கடைபிடித்தபொழுது, சாவி பூட்டைத் திறந்தது. அவர் புறப்பட்டார்.

"எனக்கு இரண்டு சாவிகள் செய்ய உத்தரவு'' என்று கூறிய சாதகர் அடுத்த சாவியை தயார் செய்ய முனைந்தபொழுது, வந்தவர் பொறுமையை இழந்தார்.

 • பூட்டு போன்றவற்றை உடைக்கக் கூடாது.
 • இரண்டு சாவி இருப்பது நல்லது.

என்று உத்தரவிட்ட அன்னை, சாவியைத் தொலைப்பதுகண்மூடித்தனம் (unconsciousness)  என்பதை வந்தவருக்குச் சொல்லவில்லை. வந்தவருக்கு, நடந்தவற்றையெல்லாம் பார்த்து அது புரிந்திருக்குமா எனத் தெரியவில்லை.

தம்மிடம் வந்த பொருள்கட்கும் அருள் செய்யும் அன்னை, அதைத் தம் சொந்த பொருள்போல் கவனித்தும், பிறர் குறையைச் சுட்டிக்காட்ட முற்படவில்லை.

மல்லிகை மாலை

ஜட்ஜ் ஒருவர் தமிழ்நாட்டுச் சுவாமியாரைப் பார்க்கப் போனார். ஜட்ஜுக்கு சுவாமியார் மீது மரியாதையுண்டு, நம்பிக்கையில்லை. சுவாமியாருக்கு அது தெரிந்ததால், சூட்சுமச் சக்திகளால் தம்மால் எதையும் செய்யமுடியும் என்பதை ஜட்ஜுக்கு விளக்க நினைத்து,

"உலகில் எந்த இடத்திருந்து ஒரு பொருள் வேண்டுமானாலும், அதை வரவழைக்கலாம். அப்படி ஒன்றைச் சொல்லவும்'' என்றார்.

"நியுயார்க் டைம்ஸ் இன்றைய இதழ் அப்படிக் கிடைக்குமா?'' என்றார் ஜட்ஜ்.

அன்றிரவு ஜட்ஜ் தூங்கிக்கொண்டிருந்தபொழுது கதவு மீது படாரென்ற சப்தம், எழுந்து திறந்தார். நியூயார்க் டைம்ஸ் அன்றைய இதழ்! மெஷினிலிருந்து எடுத்ததுபோல் ஈரமாக இருந்தது. அச்சடிக்கப்பட்ட இங்க் காயவுமில்லை.

சூட்சும உலகில் இதுபோல் செயல்பட ரிஷிகளால் முடியும். மந்திரவாதிகளாலும் முடியும். ரிஷிகள் செயல்படுவது கல்லூரியில் மாணவன் மார்க் பெற்று இடம் பெறுவதுபோல். மந்திரவாதிகள் செய்வது, கிளார்க் எவனுக்காவது உரிமை உள்ள இடத்தை மாற்றி அதில் நம் பெயரைப் போட்டு, இடம் பெற்றுத் தருவது போலாகும்.

பக்தருடைய மனநிலை அவருக்கேற்ற குருவிடம் கொண்டுவிடும். அல்ஜீரியாவில் அன்னை மேடம் தியான் உடன் சூட்சுமப் பயிற்சி எடுத்தபொழுது, அப்படி நடந்தவை பல. 

ஒரு நாள் தம் அறையைப் பூட்டிவிட்டு மேடம் தியான் வீட்டுக்குப் போய் பயிற்சியை முடித்துவிட்டு, தம் அறைக்கு வந்தார். திறந்து உள்ளே போனார். மேடம் தியான் தாம் அன்னைக்குப் பயிற்சி அளிக்கும்பொழுது, சூட்சுமமாக அறையைவிட்டு வெளியே போய் மலர் கொய்து, மாலை தொடுத்து, பூட்டியிருந்த அன்னை அறையில் நுழைந்து, அதை அன்னையின் தலையணை மீது வைத்திருந்தார்!

அன்னை பயிற்சி பெற்ற பொழுது, பலனாக மல்லிகை மாலையையும் பெற்றார். அன்னை அல்ஜீரியாவிலிருந்தபொழுது, பனி அரசன் மேடம் தியானைத் தேடி வந்ததும், மேடம் வயிற்றின் மீது வைத்த பழம் சுருங்கி தன் சத்தையெல்லாம் அவருடல் சேர்த்ததும், தவறாகப் பேசிய வியாபாரி மீது மேஜை தானே நகர்ந்து போர் தொடுத்ததும், மேடத்தின் செருப்பு அவர் இச்சைக்குட்பட்டு அவர் காலில் வந்து சேர்ந்ததும், ஆகியவற்றை வாசகர்கள் ஏற்கனவே அறிவார்கள்.

விலங்குகளின் ஆன்மா

தரிசன சமயங்களில் அன்னை வானை நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பார். பால்கனியில் வந்தவுடன் கூடியுள்ள சாதகர்களைப் பார்ப்பார். அநேகமாக அனைவரையும் அன்னை பார்த்துவிடுவார். அன்னையின் பார்வை சாதகர் மீது பட்டவுடன் நெஞ்சும், ஆன்மாவும் நிறைவதை அறியலாம். அக்கௌண்ட்டண்ட் ஜெனரல் ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்த பக்தர் ஒருவர் தினமும் பால்கனி தரிசனத்திற்கு வருவார். ஆபீஸ் வேலையாக சில நாள் வெளியில் போய்விடுவார். மறுநாள் வரும்பொழுது "ஒரு நாள் பால்கனி தரிசனத்திற்கு வராவிட்டால், ஏதோ இழந்தது போலிருக்கிறது'' என்றார். புதுவையை விட்டு மாற்றலானபின் அவர் ஒரு தரிசனத்திற்கும் வரவேயில்லை. அவர் ஆத்மநிறைவு அடைந்துவிட்டார் போலும்.

ஒரு சமயம் வண்ணான் ஒரு கழுதையையும், ஒரு குட்டியையும் அவ்வழியாக அழைத்துக் கொண்டு போனபொழுது, அன்னை பால்கனியிலிருந்தார். அக்குட்டி நின்று நிமிர்ந்து அன்னையைப் பார்த்தது, வெகு நேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தது.அன்னை அதை கவனித்தார். விலங்குகளிலும் சில சமயம் ஆன்மா இருப்பதுண்டு. வயதான மரங்களில் 100 ஆண்டைத் தாண்டிவிட்டால் ஆன்மா உற்பத்தியாகும் என்கிறார் அன்னை. அதே காரணத்தால் மலைச்சாரல் தவத்திற்கு சிறந்த இடமாகிறது.

"கழுதைக் குட்டி என்னிடம் வர விரும்புகிறது. அதை வாங்கி வரவேண்டும்'' என அன்னை உத்தரவிட்டார். அதை வாங்கினார்கள். தியான மண்டபத்திற்கு கிழக்குப் பக்கமுள்ள வாயில் அருகில் குட்டியைக் கொண்டுவந்தார்கள். அன்னை குட்டியைத் தட்டிக் கொடுத்தார், தடவிக் கொடுத்தார். அதன் பக்தியார்வத்தை ஏற்றுப் போற்றினார். அதைக் கண்ட சாதகர்கள் "நம்மை எல்லாம் அன்னை இப்படிப் பாராட்டுவதில்லையே'' என்று குறைபட்டனர்.

அதன்பின் பல சமயம் பால்கனி தரிசனத்திற்குக் கழுதைக் குட்டியை அழைத்து வந்தனர். பால் பண்ணையில் அது வளர்ந்தது. அதற்கு ஏதேனும் வேலை கொடுக்க முயன்றால் பிடிவாதமாக மறுத்துவிடும்.

ஆசிரமத்தில் வேலையைப் பொருத்தவரை அன்னை மிகக் கண்டிப்பாக இருப்பார். வேலையில் தரம் உயர்ந்ததாக இருக்கவேண்டும் என வற்புறுத்துவார். ஆனால் சாதகர்களைக் கண்டிப்பதில்லை. பூரண சுதந்திரம் உண்டு. தாமே முன்வந்து கடினமாக உழைக்கவேண்டும் என எதிர்பார்ப்பார். 

தியானத்தில் - force - சக்தி உள்ளே நுழைந்தபின் நிற்பதும் கடினம். உடல் சக்தியால் நிறைந்து ஜீவன் பூரணமாவதால் அதை கிரகித்துக்கொள்ளும் வரை தடுமாறும். நடப்பதும் சிரமம். அன்னையை தரிசிப்பவர் பலர் நேரடியாகப் போய்ப் படுத்துவிடுவதுண்டு. சக்தியுள்ளே போனால் ஜீவன் நிறைவதால் வேலை செய்வது கடினம். சக்தியெல்லாம் கிரகிக்கப்பட்டவுடன், அளவுகடந்த தெம்பு வரும். அப்பொழுது வேலைச் சிறப்பாக இருக்கும். அவ்வேலை அன்னை சக்தியை வெளிப்படுத்தும். இக்காரணத்தால் சாதகர்கட்கு காலை நேரத்தில் வேலை செய்வது சிரமம். அன்னையின் சுதந்திரத்தைப் பயன்படுத்தி சோம்பேறியாக இருப்பது வேறு. சாதகர்கள் வேலை செய்வது குறைவு என அனைவரும் பரவலாக அறிவார்கள். "இங்கு 2 அல்லது 3 மணி நேரம்தான் வேலை செய்வார்கள்'' என்று சொல்லும்படி நடைமுறை ஏற்பட்டது. அன்னையோ, பகவானோ அதைக் கண்டித்ததில்லை.

அன்னை கழுதைக்குட்டியைப் பற்றி பகவானிடம் எல்லா விவரங்களையும் கூறி "வேலை மட்டும் செய்ய மறுக்கிறது'' என்றார்.

பகவான் "அது நம் சாதகர் போலிருக்கிறது'' என்றார்.

ஓவியர் பெற்ற "வெற்றி''

அன்னை சிறந்த ஓவியர். "நான் உலகில் எதுவாக வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம். ஆனால் எனக்கு அந்த ஆசைகளில்லை'' என்று அன்னை கூறுகிறார். உலகில் தலைசிறந்த ஓவியராகும் தகுதி அன்னைக்கிருந்தது. அவர் அதைப் பாராட்டவில்லை. அவர் முக்கியமாகக் கருதியது ஆன்மீக வளர்ச்சி.

பாரிசில் அன்னைக்கு எல்லா ஓவியர்களையும் தெரியும். அவர்கள் சங்கத்து உறுப்பினராகவும் இருந்துள்ளார். அப்படிப்பட்ட சங்கம் மூலம் தானறிந்த ஓவியர் அனுபவத்தை அன்னை விவரித்துள்ளார்.

இவர் சிறப்பான ஓவியர். கலை எப்பொழுதும் வருமானம் கொடுத்ததில்லை. கலைஞர்கள், அறிஞர்கள் வறுமை உலகப் பிரசித்தி பெற்றது.காளமேகப் புலவர் போன்றவர்கள் சாப்பாட்டிற்குப் பட்ட கஷ்டம் வரலாறாகும்.இவ்வோவியரும் திறமையிருந்தும், போதிய வருமானமில்லாதவர்.

படங்களை வாங்கும் வியாபாரி ஒருவர் இவரைத் தேடி வந்தார். தன் சிறந்த படைப்புகளைக் காட்டினார் ஓவியர். வியாபாரிக்குத் திருப்தியில்லை. ஓவியருடைய அறையை மூலை முடுக்கெல்லாம் சோதனை செய்தார் வியாபாரி. சட்டென ஒரு துணியைக் (canvas) கண்டார். அது அவர் கவனத்தை ஈர்த்தது. அது சிறப்பானது எனக் கருதினார். "இது மிக நன்றாக இருக்கிறது. இதுபோன்று பலவற்றைச் செய்து தரமுடியுமா? நான் வாங்கிக்கொள்கிறேன்'' என்றார். ஓவியருக்குப் பலத்த ஏமாற்றம். எதையோ வாங்கப் போகிறார் வியாபாரி என்பதில் சந்தோஷம். அது வெறும் துணி (canvas), பிரஷ்ஷை அதில் துடைப்பார்கள். அதனால் canvas முழுவதும் வெவ்வேறு வண்ணமாகக் காட்சியளித்தது. அது வியாபாரிக்கு அழகாகப்பட்டது. விலை கொடுத்து வாங்கப் பிரியப்பட்டார். மேலும் ஆர்டர் கொடுத்தார்.

வெள்ளைக்கார கலெக்டரை சங்கீதக்கச்சேரிக்கு அழைத்தனர். சிறந்த வித்துவானுக்குப் பரிசு கொடுக்கும்படி கேட்டனர். பாடகர் மையமானவர். நாதஸ்வர வித்வான் அவர். அவருக்கெனப் பக்க வாத்தியங்களான தவில், தாளம், ஒத்து உண்டு. கச்சேரி முடிந்தது. கலெக்டர் தன் பரிசை ஒத்து ஊதுபவனுக்குக் கொடுத்தார். கச்சேரி கலைந்தபின் கலெக்டரின் நண்பர்கள் எப்படி அவர் பரிசை நிர்ணயித்தார் எனக் கேட்டார்கள். "எல்லோரும் இடைவெளி விட்டு வாசித்தார்கள். இவர்தான் - ஒத்து ஊதுபவர் - இடைவிடாமல் வாசித்தார். அதனால் இவருக்குப் பரிசு கொடுத்தேன்'' என்றார்.

மற்றவர்கள் வாசிப்பில் உள்ள அபஸ்வரம் மறைவதற்காக ஒத்து ஊதுபவரை ஏற்பாடு செய்வது வழக்கம். கலெக்டர் முடிவு அது. பல சிறந்த ஓவியங்களை எழுதியவர் வியாபாரியின் செலக்ஷனைக் கண்டு ஏமாந்து போனார். ஓவியத்திற்கு உலகம் அளித்த நிலை அதுவே. அந்நிலையை, பரிதாப உணர்வோடு அன்னை விளக்குகிறார்.

ஆசிரமத்திற்கு வருபவர்கள் அங்குள்ள சூழலின் முக்கியத்துவத்தைவிட மற்ற சிறு விஷயங்களைப் பாராட்டும்பொழுது அன்னை மனம் வருந்தி இதுபோல் பேசுவதுண்டு.

சாப்பாட்டு அறையிலுள்ள தாழ்ந்த சிறுமேஜைகள்

குழந்தைகளுக்குக் காது குத்த வேண்டுமானால் நாம் காது குத்துவதில்லை. அதை ஒரு விழாவாகக் கொண்டாடுகிறோம். அதுபோல் நாம் விழாக் கொண்டாடுவது பல. வருஷம் முடிவில் கல்லூரி மாணவர்கள் பிரிந்து போவதற்கு முன் அது ஒரு விழா ஆகிறது. ஜப்பானில் அன்றாடம் டீ சாப்பிடுவது அது போல் ஒருவிழாவாகக் கொண்டாடப்படும். அதற்கு 'தேநீர் விழா' எனப் பெயர்!

அதற்குப் பயன்படும் பாய்கள் சிறியனவாகவும், படம் வரையப்பட்டதாகவுமிருக்கும். அங்குள்ள மேஜைகள் தாழ்ந்த சிறு மேஜைகள். அன்னை ஜப்பானில் சில ஆண்டுகள் தங்கியிருந்தார். ஜப்பானியப் பண்பை மிகவும் போற்றியவர் அன்னை. ஆசிரமத்தில் சாப்பாட்டு அறையிலுள்ள தாழ்ந்த சிறுமேஜைகள் அன்னை ஜப்பானில் கண்டவற்றைப்போல் இங்கு அமைத்ததாக இருக்கலாம் என அன்னை வரலாற்றை எழுதியவர் கருதுகிறார்.

ஜப்பானுடன் அன்னைக்கு நெருங்கிய உறவுண்டு. இரண்டாம் உலகயுத்தத்தின்பொழுது ஜப்பான் பாண்டிச்சேரி  மீது குண்டு வீசுவதில்லை எனக் கூறியது. ஸ்ரீ அரவிந்தரிருப்பதால் - அன்னைக்காக ஜப்பான் எடுத்த முடிவு அது. 

சுமார் 40, 50 ஆண்டுகளுக்குப்பின் கல்கத்தாவிலிருந்து வந்த பக்தர்கள் அன்னை ஜப்பானில் எடுத்த போட்டோவைக் காட்டி அதில் தாகூர் இருப்பதையும் கூறினார்கள். அன்னைக்கு ஜப்பான் எவ்வளவு முக்கியம் என்று அவர்கட்கு தெரியாது. அப்பொழுது எடுத்த போட்டோவை அன்னை பத்திரமாக வைத்திருந்தார். அத்துடன் வைத்த இடத்தை நினைவும் வைத்திருந்தார். அதை எடுத்து வந்தவர்களிடம் காட்டினார். பகவானை 10 மாதம் சந்தித்தபின் அவரைவிட்டுப் பிரிவது அன்னைக்கு வேதனையாயிருந்தது. அந்த நாட்களில் பெரும் பகுதியை ஜப்பானில் கழித்தார். அங்கு அவர் கண்ட தாழ்ந்த மேஜைகளை இங்கு சாப்பாட்டு அறையில் ஏற்படுத்தினார்.

சாப்பாட்டு அறை சிறு மேஜைகள் அன்னையின் ஜப்பான் வாசத்தின் நினைவுச் சின்னங்களாகும்.

நாம் இன்று பொன்போல் போற்றும் பல விஷயங்கள் நம்முடையதல்ல. வெளிநாட்டிலிருந்து வந்து நம் வாழ்வின் பகுதிகளானவை. அவற்றுள் சில

 • சைவம் என்பது தமிழ் மக்களுக்கு உயிரானது. திருநெல்வேலி வெள்ளாளர்கள் தங்களை சைவப்பிள்ளைமார் என்பார்கள். சைவம் தமிழ்நாட்டிற்குரியதல்ல. புத்தம் வடநாட்டில் ஆரம்பித்தது. சமணம் தமிழ்நாட்டில் பரவியபொழுது தமிழர் ஏற்றுக்கொண்டது. ஆரியர்கட்கு சைவம் உரியதல்ல. ஆரியர் வருமுன் தமிழ்நாட்டு கேளிக்கைகளில் முதலிடம் பெறுவது இறைச்சி.
 • மிளகாய் இல்லாமல் சமையலில்லை. நமக்கு உரியது மிளகுதான். அதுவும் தமிழ்நாட்டில் கேரளப்பகுதியில் பயிராவது. சில்லி என்ற தென் அமெரிக்க நாட்டிலிருந்து மிளகாய் வந்தது. அதனால் அதற்கு ஆங்கிலத்தில் சில்லி எனப் பெயர். நாமறிந்த காரம் மிளகு. அதனால் இதைப் பார்த்த தமிழர் அதை மிளகு போன்ற காய் என்று நினைத்து மிளகு + காய் = மிளகாய் என்றனர்.

 • ரவிக்கை ஆங்கிலேயர் மூலமும், மேலாடை 12-ஆம் நூற்றாண்டில் முஸ்லீம் வந்து பெண்கள் மேலாடை தரிக்கவேண்டும் என வற்புறுத்தியதாலும், சப்பாத்தி, லட்டு, ஆகியவை வடநாட்டிலிருந்தும், டீ சைனாவிலிருந்தும், பஞ்சகச்சம் வடநாட்டிலிருந்தும், கிராப்பும், பேண்ட்டும் மேல்நாட்டிலிருந்தும் வந்தது. நாம் அவற்றை விரும்பி ஏற்றுப் போற்றுகிறோம்.

சாப்பாட்டு அறை சிறு மேஜைகள் அன்னை ஜப்பானிலிருந்து கொணர்ந்தவை. அன்னை பக்தர்களிடம் அது பரவியுள்ளது.

***book | by Dr. Radut