Skip to Content

09. சேவையின் பெருமை

அந்த அன்பர் எனக்கு அப்பொழுதுதான் அறிமுகமானார். ஆனால் நீண்ட நாள்களாகப் பழகியவரைப் போல இனிமையாகப் பேசினார். அவருக்குக் கம்பீரமான தோற்றம்; தெளிவும், அமைதியும் நிறைந்த முகம். இறுதியில், ‘நான் ஒரு காரோட்டி’ என்று பேச்சை முடித்தார் அவர்.

அவர் கூற்றை நம்புவது எனக்குச் சிறிது கடினமாக இருந்தது. அவருடைய தோற்றமும், பேச்சும் ஒரு டிரைவருக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. ஒரு பெரிய மனிதத்தனம் அவர் முகத்தில் நிலவிக்கொண்டிருந்தது. எனக்குக் குழப்பம். அவரைப் பற்றிய என் நோக்குக்கும், அவருடைய வாக்குக்கும் உள்ள வேறுபாட்டிற்கு என்ன காரணம்?

அதைத் தொடர்ந்து அந்த அன்பர் என் குழப்பத்தைத் தெளிவிப்பதைப் போலச் சில செய்திகளைக் கூறினார். அவர் சீரும், செல்வமும் நிறைந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு ஏராளமான நிலங்களும், வீடுகளும், இரண்டு லாரிகளும் இருந்தன. அவருடைய வாழ்க்கையில் திடீரென்று சோதனைப்புயல் சுழன்று அடித்தது. அந்தப் புயல் அவருடைய நிலங்களை, வீடுகளை, லாரிகளை அடித்துக்கொண்டு போய்விட்டது. அதில் மிஞ்சியது ஒரேயொரு வீடுதான். இப்பொழுது அந்த வீட்டில் அவர் குடும்பமும், அவர் சகோதரரின் குடும்பமும் வசிக்கின்றன. வயிற்றுப்பாட்டிற்கு இப்பொழுது அவர் டிரைவராகப் பணிபுரிந்து வருகின்றார்.

அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனையை அறிந்தபொழுது என் மனம் வருந்தியது. இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவதற்கு ஏதேனும் ஒரு வழியை நான் அவருக்குக் கூற முடியுமா? அது பற்றி நான் தீவிரமாகச் சிந்தித்தேன். அவர் அதைப் புரிந்துகொள்ளாமல் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தார். ஆனாலும் அவர் பேசியவற்றுள் ஒரு முக்கியமான செய்தி கிடைத்தது. அது: அவர் பல ஆண்டுகளாக டிரைவராகப் பணியாற்றுவது ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில்.

அது ஒன்றே போதும், அவர் இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவதற்கு. ஆனால் அது பற்றி அவர் என்ன நினைக்கிறார்? அவர் விசேஷமாக ஒன்று நினைக்கவில்லை. ‘வறிய நிலையில் தமக்கு வேலை கொடுத்த நிறுவனம்’ என்ற அளவில்தான் ஆசிரமத்தைப் பற்றி அவர் நினைத்தார். ‘ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் உன்னதமானவர்கள்’ என்பதையும், ‘அவர்களுடைய அருட்சக்தி மலைபோல வந்த இன்னல்களையும் பனிபோல் மறையச் செய்யும்’ என்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால், ‘அவர்கள் பெரியவர்கள், மரியாதைக்கு உரியவர்கள்’என்பதை மட்டும் அவர் தெரிந்து வைத்திருந்தாரே தவிர, தம் பணியினால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பலனைப் பற்றி ஏதும் தெரிந்து இருக்கவில்லை. தாம் டிரைவராக இருந்தாலும், அப்பணி தமக்கு அன்னை-ஸ்ரீ அரவிந்தரின் அருளையும், அரவணைப்பையும் பெற்றுத் தருகின்றது என்பதை அவர் உணரவில்லை. அதனால் அவர் இதுவரை பெற்ற அனுக்கிரகம் ஆன்மாவில்தான் தங்கி இருந்ததே தவிர, அது அவருடைய வாழ்க்கையில் பொருட்செல்வமாகப் பலன் கொடுக்கவில்லை.

அன்னைக்கு நேரடியாகவோ அல்லது வேறு விதமாகவோ சேவை செய்கின்றவர், வாழ்க்கையில் அபரிமிதமான உயர்வைத் தொடர்ந்து அடைவதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். ‘அன்னைக்குப் பணி செய்கின்றோம்’ என்பதை அறியாமலே பணி செய்கின்றவர்களும் வாழ்க்கையில் உயர்ந்த சிறப்பை அடைகின்றார்கள். அன்னையோடு சம்பந்தப்பட்ட நபருக்குச் சேவை செய்தாலும், அன்னையின் அருள் அவர்களிடம் போய்ச் சேர்கின்றது.

ஆசிரமத்தில் ஏறக்குறைய 50 பிரிவுகள் இயங்கி வருகின்றன. பாண்டிச்சேரியில் உள்ள சுமார் 400 வீடுகளில் சாதகர்கள் வசித்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் சேவை செய்யும் சந்தர்ப்பம் பலருக்குக் கிடைக்கின்றது. அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அன்னையின் அனுக்கிரகம் கிடைத்து விடுகின்றது. ஆசிரமத்தோடு தொடர்பு கொண்டு பல வருடங்களாகியும்கூட எனக்கு இந்த உண்மை தெரியாமல் இருந்தது. பிறகுதான் எனக்கு இந்த உண்மை தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

இங்கே சில அனுபவங்களை உதாரணமாகக் கூறலாம். எங்களுடைய தோப்புக்கு வேலை செய்ய வந்த பலருக்கு, பாண்டிச்சேரியில் உள்ள ஆசிரமத்தைப் பற்றித் தெரியாது. ஆனாலும் அவர்கள் இருண்ட முகம் பிரகாசம் அடைவதையும், வறுமையையே வாழ்க்கையாகக் கொண்டிருந்த அவர்கள், பல நன்மைகள் பெறுவதையும், அரசாங்க வங்கிகள் அவர்களைத் தேடி வந்து கடன் உதவி செய்து எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், அடுத்து அடுத்துப் பார்க்க முடிந்தது. திடீரென்று அவர்களுடைய வருமானம் நான்கைந்து மடங்குகளாக அதிகமாகிவிட்டது.

என்ஜினீயரிங் பட்டம் பெற்ற ஒருவர், ஆழ்கிணறு தோண்டும் கருவி ஒன்றை வங்கியில் கடன் பெற்று, பெருந்தொகைக்கு வாங்கிவிட்டார். ஆனால் அதை வாடகைக்கு எடுக்க யாரும் முன்வரவில்லை. அவருக்கு ஒரே கவலை; மனச்சோர்வு. அந்த நிலையிலும் அவர் எங்களோடு தொடர்பு கொண்டு, எங்களுக்கு ஓர் ஆழ்கிணற்றைத் தோண்டிக் கொடுத்தார்.

ஓர் ஆண்டு சென்றது. நான் அவரையும், அவருக்குக் கடன் கொடுத்த வங்கியின் அதிகாரியையும் ஒருசேரச் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது நான் அவரிடம், ‘உங்கள் தொழில் எப்படி நடக்கிறது?’ என்று கேட்டேன். அதற்கு வங்கி அதிகாரி பதில் கூறினார்: ‘அப்பொழுது இவருடைய ஆழ்கிணறு தோண்டும் கருவிக்கு ஒரு நிமிடம்கூட ஓய்வு இல்லை. 10 மாதங்களுக்குக் கட்ட வேண்டிய தவணைத் தொகையை நாலே மாதங்களில் கட்டிவிட்டார்!’

சர்க்கரை ஆலை ஒன்றில் சேரும் ஒருவிதமான கழிவுப்பொருளைக் குத்தகைக்கு எடுத்திருந்தார் ஒருவர். அந்தக் கழிவுப்பொருளுக்கு ‘அழுக்கு’ என்று பெயர். அது விவசாயத்திற்கு எருவாகப் பயன்படக்கூடியது. எங்களுக்கு அந்த அழுக்கைப் பெரிய அளவில் வினியோகித்து வந்தார் அவர். ‘இந்த தொழில் அபாயகரமானது. தடுமாறி விழுந்தால் தலையே போய்விடும்’என்று அவர் என்னிடம் கூறுவார்.

அவர் அப்படிக் கூறியதற்குக் காரணம் உண்டு. மற்ற தொழில்களைப் போல் ‘சரக்கைக் கொடுத்தோம்; பணத்தை வாங்கினோம்’ என்ற நிலை, அவருடைய தொழிலில் இல்லை. முதலில் விவசாயிகளுக்குச் சரக்கைக் கொடுத்துவிட்டு, அறுவடை காலத்திற்குப் பின்புதான் கடனை வசூலிக்க வேண்டும். அதற்கு அவர் தயாராகவே இருந்தார். ஆனால் பல விவசாயிகள் கடனைக் கொடுக்கத் தயாராக இருப்பதில்லை.

பல ஆண்டுகளாக ஆலை அழுக்கை விற்கும் அவரிடம் பணம் சேரவில்லை. விவசாயிகள் எழுதிக் கொடுத்த பிராமிசரி நோட்டுகள்தாம் ஏராளமாகச் சேர்ந்துபோயிருந்தன. இந்த நிலையில் ஆலை அழுக்கை விற்பதற்காக எங்களிடம் வந்து சேர்ந்தார்.

வழக்கம்போல அவர் அறுவடை முடிந்ததும் பணத்தைப் பெற வந்து இருந்தார். அப்பொழுது அவர் உற்சாகமாகக் காணப்பட்டார். ‘இந்த வருடம் எனக்கு அதிர்ஷ்டமான வருடம். 17 ஆண்டுகளாக வசூலாகாமல் இருந்த கடன்கள் எல்லாம் பாக்கி இல்லாமல் வசூலாகிவிட்டன. இந்த வருடப் பிற்பகுதியில் ஆலை அழுக்கை எல்லாம் ரொக்கத்திற்குத்தான் விற்றேன். இப்பொழுது ‘கடன் வியாபாரம்’ என்பதே இல்லை. சரக்கை லோடு செய்து கொண்டு வருவதற்குச் சொந்தத்தில் ஒரு லாரி வாங்கிவிட்டேன். இன்னும் சில மாதங்களில் இரண்டாவது லாரி ஒன்றையும் வாங்கப்போகிறேன்’ என்று தம் தொழில் முன்னேற்றத்தைப் பற்றிப் பரவசத்துடன் விவரித்தார் அவர்.

எங்கள் தோப்பை நிர்வகித்துக்கொண்டு இருந்தார் ஒருவர். அவருக்கு ஆசிரமத்தைப் பற்றியோ, அன்னையைப் பற்றியோ அறிந்துகொள்வதில் சிறிதுகூட ஆர்வம் இல்லை. ஆனாலும் தோப்பு வேலைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனிப்பார். அவருக்குக் கொஞ்சம் புன்செய் நிலம் இருந்தது. அவர் அதில் கிணறு தோண்டினார். ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. ஏனென்றால் அதில் நீரூற்று இல்லை. அதனால் கிணறு எடுக்கும் முயற்சியைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே விட்டுவிட்டாலும்கூட, அந்த எண்ணத்தை அவர் கைவிடவில்லை.

எங்கள் தோப்புக்கு அவர் வேலைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரு நாள் என்னிடம் முகமலர்ச்சியோடு வந்தார். ‘தோண்டிய கிணற்றை இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தோண்டிப் பார்த்தால் நீரூற்றுத் தென்படாதா என்ற ஆதங்கத்தோடு மீண்டும் முயற்சியைத் தொடர்ந்து, கொஞ்சம் ஆழமாகக் கிணற்றைத் தோண்டினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. ஒரு பெரிய நீரூற்றுக் கிடைத்துவிட்டது. ‘கிடைக்குமா?’ என்று வாழ்நாள் முழுவதும் காத்துக்கொண்டிருந்த மகத்தான ஒன்று, கிடைத்தே விட்டது! ஒரு தடவை நீங்கள் அங்கு வந்து, அந்த நிலத்தடிக் கங்கையைப் பார்க்க வேண்டும்’என்று வேண்டினார் அவர்.

விவசாய வரி அதிகாரி ஒருவர் எங்களுடைய நிலத்திற்கு ரூ.2,000 வரி விதித்திருந்தார். அந்த வரியைக் கட்டுவதற்காக சாதகர் ஒருவர் விவசாய வரி அலுவலகத்திற்குப் போயிருந்தார். அப்பொழுது அந்த அதிகாரி, ‘உங்களுடைய நிறுவனம் பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ளது. உங்களிடம் வரி வசூலிப்பதே சரி இல்லை. ஆனாலும் என்னுடைய கடமை வசூல் செய்தே ஆக வேண்டும். ஆகவே வரியை விதித்துவிட்டேன். இருந்தாலும், உங்களைப் போன்றவர்களுக்கு ஏதேனும் விதிவிலக்கு இருக்குமா என்று சட்டப் புத்தகத்தில் நுணுகித் தேடினேன். நேற்று, உங்களைப் போன்றவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கும் சட்டத்தைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டேன். அந்தச் சட்டப்படி வரி கட்ட வேண்டியதில்லை’ என்று கூறி, சாதகரை அனுப்பி வைத்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு விவசாய வரி அலுவலகத்திலிருந்து ஒருவர் வந்திருந்தார். அப்பொழுது அந்த அதிகாரியைப் பற்றி நல்ல செய்தி ஒன்று கிடைத்தது. அவர், தமக்கு வயதாகிவிட்டபடியால் ‘இனிப் பதவி உயர்வு கிடைக்க வழியே இல்லை’ என்று சோர்ந்து போயிருந்தார். அந்த நிலையில், ‘அவர் டெபுடி கலெக்டராகப் பதவி உயர்வு பெற்று, வேறோர் ஊருக்கு மாற்றலாகிப் போய்விட்டார்’ என்பதே அந்தச் செய்தி.

ஒரு வங்கியில் மானேஜராக இருந்த ஒருவர், எங்களுடைய கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களில் மிகவும் ஆர்வம் காட்டினார். தம்மால் முடிந்த உதவிகளை எல்லாம் தாராளமாகச் செய்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு மூன்றே வருடங்களில் மூன்று பதவி உயர்வுகள் கிடைத்தன. சாதாரணமாக, ‘பதவி உயர்வு’ என்பது மூன்று வருடங்களுக்கு ஒரு தடவைதான் கிடைக்கும்.

இனி ஆசிரமத்தில் டிரைவராக இருந்துவரும் அன்பரின் கதைக்கு வருவோம். ‘நீங்கள் இழந்துவிட்ட செல்வத்தைப் பெற முயன்றால், அம்முயற்சி வெற்றிகரமாக முடியும்’ என்று அவரிடம் கூறினேன் நான்.

‘நஷ்டம் ஏற்பட்டு நான் லாரிகளை விற்ற பிறகு மீண்டும் லாரி சர்வீஸைத் தொடங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக எவ்வளவோ முயன்று பார்த்து விட்டேன். ஆனால் எதுவும் கூடிவரவில்லை. ஒவ்வொரு தடவையும் முயற்சி பலன் அளிக்காதது மட்டுமில்லை; மேற்கொண்டு முயற்சியில் இறங்க முடியாதபடி நிலைமையும் மோசமாகிவிட்டது’ என்றார் அவர்.

எதிர்காலத்தைப் பற்றி அவருக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. எதையும் நிகழ்த்தவல்ல ஓர் ஆன்மீகப் பின்னணி தனக்கு இக்கின்றது என்பதை அவர் உணரவில்லை. நானும் உணர்த்த விரும்பவில்லை. என்றாலும், ‘இன்னும் ஒரு முறை நம்பிக்கையோடு முயன்று பாருங்கள். ‘வெற்றி பெறுவோமா, மாட்டோமா?’ என்ற சந்தேகம் கூடாது. ‘வெற்றி பெறுவோம்’என்ற உறுதியோடு முயலுங்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும்’ என்று அவரை ஊக்கினேன்.

ஆரம்பத்தில் என் பேச்சில் அவருக்கு அக்கறை ஏற்படவில்லை. பத்து நிமிடங்கள் அதையே நான் வலியுறுத்திக் கூறியதற்குப் பிறகு அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆனாலும் நம்பிக்கை ஏற்படவில்லை. 10, 12 நாள்கள் சென்றன. நான் ஆசிரமத்தின் நுழைவாயிலை அணுகிக்கொண்டிருந்தேன். அப்பொழுது வேகமாக ஓடி வந்த ஒருவர், வழிமறிப்பது போல என் எதிரே நின்றார். வேறு ஏதோ சிந்தனையில் இருந்த நான், அந்தக் குறுக்கீட்டில் கலைந்தேன்; ஏறிட்டேன். எதிரே நின்றுகொண்டிருந்தார் அந்த டிரைவர். அவர் என்னவோ சொல்ல அத்தனை வேகத்தோடு வந்திருக்கிறார், சொல்லட்டும்; ஆனால் பாதையில் எதற்கு? நான் ஓரமாக ஒதுங்கினேன்.

அவர் என்னை நெருங்கினார். ‘நீங்கள் போன வாரம்தான் நம்பிக்கையோடு முயற்சி செய்யச் சொன்னீர்கள். நம்பிக்கையோடு முயற்சி செய்தேன். முயற்சி கைகூடிவிட்டது. அது பெரிய அதிசயம். நீங்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்யச் சொன்னதை என் சகோதரரிடம் கூறினேன். ஆனால் அவருக்கு நம்பிக்கையும், எழுச்சியும் ஏற்படவில்லை. அச்சமயம் தம்முடைய லாரியை விலைக்கு எடுத்துக்கொள்ளும்படி ஒருவர் வலிய வந்து அவரிடம் கேட்டுக்கொண்டார். அதற்கான நிபந்தனைகள் சாதகமாகவே இருந்தன. விற்பனைக்காக வந்தவர் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்; நாணயமானவர். லாரியின் மீது கடன் வாங்கி இருந்தார். கடனைத் தவணை முறையில் சிறுகச் சிறுகச் செலுத்தினால் போதும். இப்பொழுது ரொக்கமாகக் கொடுக்க வேண்டிய தொகை கொஞ்சம்தான். பேரம் சுலபமாக முடிந்தது. லாரி எங்கள் கைக்கு மாறியது. உடனே லாரி சர்வீஸைத் தொடங்கிவிட்டோம். இதைச் சொல்வதற்காக நான் உங்களை மூன்று நாள்களாகத் தேடினேன். நீங்கள் இன்றுதான் கிடைத்தீர்கள்’என்று நன்றிப் பார்வையுடன் கூறி முடித்தார் அவர்.

அதற்குப் பிறகு ஒரே வருடம்தான். அவர்களுடைய குடும்பம் பழைய செழிப்பான நிலையை நோக்கி உயர்ந்துவிட்டது. மேலும் இரண்டு லாரிகள் சொந்தமாகிவிட்டன. மொத்த வியாபாரம் ஒன்றும் இப்பொழுது அவர்கள் கைகளில் இருக்கின்றது.

சேவையின் மகிமை, க்ஷேமத்தின் சீர்மை.

*****



book | by Dr. Radut