Skip to Content

04. உன்னைத் தேடி வரும் அன்னை

குழந்தைகளின் உள்ளம் தூய்மையானது. தூய்மையான உள்ளத்தின் பிரார்த்தனையை அன்னை பூரணமாக ஏற்றுக்கொள்கின்றார். தூய்மை முழுமையாக இருந்தால் பூஜைகள், மந்திரங்கள், எதுவும் தேவையில்லை.

ஒரு பெண்மணிக்குக் கடுமையான வயிற்று வலி. அது அவரைப் பன்னிரண்டு ஆண்டு காலமாகப் படாதபாடு படுத்திக்கொண்டிருந்தது. ஒரு நாள் அவருக்கு வலி அதிகமாகிவிட்டது. மருந்துகளுக்கெல்லாம் அது அசைந்து கொடுக்கவில்லை. நிமிடத்திற்கு நிமிடம் வலி அதிகமாகிக்கொண்டே போயிற்று. அவர் புழுவாய்த் துடித்தார். அதிலிருந்து விடுதலை பெற உயிரை மாய்த்துக் கொள்வது எனத் தீர்மானித்தார்.

அந்தத் தீர்மானத்தை எதிர் மறுத்தது அவருடைய குழந்தைப் பாசம். அவருக்கு மூன்று குழந்தைகள். எல்லாரும் சின்னஞ்சிறுசுகள். அவற்றை ஆதரவு இல்லாத நிலைக்கு ஆளாக்கிவிட்டு நிம்மதியாகக் கண்ணை மூட நினைப்பது என்ன நியாயம்? இந்த நியாயங்களை எல்லாம் நினைத்துப் பார்ப்பதற்கு வயிற்று வலி அவரை அதிக நேரம் விட்டால்தானே? வயிற்றுக்குள் இடி இடிக்கிறது; கத்தி ஒன்று சுழன்று சுழன்று வருகிறது. இந்தக் கொடுமையில் இருந்து தப்ப வேண்டும் என்றால், தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை. அவர் தீர்மானித்துவிட்டார்; ‘எல்லாரும் உறங்கிய பிறகு கிணற்றில் விழுந்து உயிரை விட்டுவிட வேண்டும்'.

அவரின் உயிருக்கு உயிரானவர்கள் அவரை விட்டால்தானே? அவருடைய கணவரும், குழந்தைகளும் அவரைச் சூழ்ந்து உட்கார்ந்துகொண்டு, அவர் துடிப்பதைப் பார்த்துத் துயருற்றுக் கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்தார்கள்.

அவருடைய குடும்பத்தினர் அன்னையின் பக்தர்கள். அவர்கள் அனைவருமே அன்னையைப் பலமுறை தரிசித்து ஆசீர்வாதம் பெற்றவர்கள். அவருடைய கணவர் கண்ணீருக்குள் நீந்திச் சென்று அன்னையைப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். அப்பொழுது ‘குழந்தைகளின் தூய்மையான பிரார்த்தனையை அன்னை பூரணமாக ஏற்றுக்கொள்வார்’என்று எங்கேயோ படித்தது அவருக்கு ஞாபகம் வந்தது. கண்களைத் திறந்தார். அவருடைய ஏழு வயதுள்ள இரண்டாவது மகன், தன் தாய் துடிப்பதைக் கண்டு தானும் துடித்துக் கதறிக்கொண்டிருந்தான். அவனுக்கு மற்ற குழந்தைகளைவிட அம்மாவின் மேல் அதிகப் பாசம். தந்தை அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டு, ‘நீ அன்னையைப் பிரார்த்தனை செய்தால் அம்மாவுக்கு வலி நின்று போய்விடும், செய்கிறாயா?’ என்று கேட்டார்.

‘செய்கிறேன்’ என்று உடனே பதில் அளித்த பாலகன், கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனையைத் தொடங்கினான். அவனை நேரில் பல முறை அன்னை ஆசீர்வதித்திருக்கின்றார். அத்தகைய பேறு பெற்ற அந்தப் பிஞ்சுக் குழந்தை, அன்னையைத் தீவிரமாகப் பிரார்த்தனை செய்தான். நிமிடங்கள் கரைந்தன, மணிகள் கரைந்தன, காலத்தைக் கடந்து அவன் அன்னையோடு ஒன்றிப்போனான்.

அந்த நேரத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அந்தப் பெண்மணியின் வயிற்று வலி, சிறிது சிறிதாகக் குறைந்துகொண்டே வந்தது. அழுதவர் வதனத்தில் புன்னகை அரும்பியது. அவர் கணவருக்கும், மற்றவர்களுக்கும் ஆறுதல் பிறந்தது.

தன் கடமை முடிந்த களைப்பில் குழந்தை தாயின் மேல் படுத்து உறங்கிப் போனான். வலி குறைந்த நிம்மதியில் தாயும் உறங்கலானார். அந்தக் காட்சியை நோக்கிய கணவரின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக்கின.

மறுநாள் பொழுது விடிந்தது. அந்தப் பெண்மணியின் கணவர் எழுந்திருக்கச் சிறிது நேரமாயிற்று. எழுந்ததும் படுத்திருந்த அவருடைய மனைவியைக் காணவில்லை. பதற்றத்துடன் அவரைத் தேட ஆரம்பித்தார். அவர் சமையற்கட்டில் காப்பி போட்டுக்கொண்டு இருந்தார்.

அவரை நெருங்கி, ‘வயிற்று வலி எப்படி இருக்கிறது?’ என்று கேட்டார் கணவர்.

‘இப்பொழுது எவ்வளவோ தேவலை’ என்றார் மனைவி.

‘நம் இரண்டாவது பையன் அன்னைக்குச் செய்துகொண்ட பிரார்த்தனையால்தான் உனக்கு வயிற்று வலி குறைந்தது’ என்றார் கணவர்.

‘அன்னைக்குப் பிரார்த்தனை செய்துகொண்டால் எவ்வளவு பெரிய நிவாரணம் கிடைக்கிறது!’ என்பதை அப்பொழுதுதான் தெரிந்துகொண்டார் அந்தப் பெண்மணி. அவர் அதுவரை அன்னையைத் தரிசித்ததும், வணங்கியதும், பொதுவாகக் கோயிலுக்குப் போய்வரும், சம்பிரதாய அடிப்படையில் ஏற்பட்டவைதாம். ‘அதற்கும் அப்பால் சென்று அன்னையை உணர்ந்து, நெகிழ்ந்து, கரைந்து பிரார்த்தனை செய்துகொண்டால், தொல்லை கொடுக்கும் வல்வினைகள் யாவும் மறைந்து, அதிசயப்படத்தக்க அளவில் பல நலம் பெருகும்’ என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது அவர் அவருடைய இரண்டாவது மகன் மூலமாக அதை அறிந்துகொண்டதும், அன்னையை ‘சிக்'கெனப் பிடித்துக்கொண்டார். தம் வயிற்று வலி முழுவதுமாக நீங்க வேண்டுமென அன்னையிடம் அல்லும் பகலும் வேண்டினார்.

சில நாள்கள் சென்றன. ஜன்மாந்தரப் பழியாய் வந்து அவரைப் பற்றி, வதைத்துக்கொண்டிருந்த வயிற்று வலி அவரைப் பூரணமாக விடுதலை செய்து விட்டு மறைந்தது.

நாட்டுக்கோட்டைச் செட்டியார் ஒருவர் சென்னையில் திரைப்பட விநியோகத் தொழில் செய்துவந்தார். மைசூரில் அவருக்கு சிறிய எஸ்டேட் ஒன்றிருந்தது. அந்த நிலையில் ஓர் அன்னை பக்தரிடமிருந்து ஒரு பெரிய காப்பி எஸ்டேட் வாங்கினார். அதற்குப் பிறகு அவர் தம்முடைய சிறிய காப்பி எஸ்டேட்டை விற்றுவிடத் தீர்மானித்தார். ஆனால் அவர் அதை விலை கூறி விற்கவோ அல்லது குறைந்த விலைக்கு விற்கவோ தயாராக இல்லை. தம் அந்தஸ்தை நிலைநாட்டும் அளவில் அந்தப் பேரம் அமைய வேண்டும் என்று விரும்பினார். அரசல்புரசலாக அந்தச் செய்தியை தம்முடைய வட்டாரத்தில் தெரிவித்துவிட்டு, ‘எனக்கு அதை விற்க வேண்டிய அவசியம் இல்லையாக்கும்!’ என்ற பாவனையோடு இருந்தார் செட்டியார்.

அந்தக் காப்பி எஸ்டேட் அன்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒன்றேகால் இலட்சம் ரூபாய் பெறும். அதை வாங்குவதற்குப் பல பெரிய புள்ளிகள் வட்டமிட்டனர். அப்பொழுதெல்லாம் அவர் தம் எஸ்டேட்டின் சிறப்பை மணிக்கணக்கில் விவரித்துவிட்டு, ‘எஸ்டேட்டை விற்க வேண்டிய அவசியமோ அல்லது நெருக்கடியோ எனக்கில்லை. ஆனால் நண்பரான நீங்கள் கேட்கிறீர்கள், கொடுக்கிறேன். இரண்டு இலட்சம் விலை கொடுக்கிறீர்களா?’ என்று கேட்டார்.

ஆர்வத்துடன் அதை விலைக்கு வாங்க வந்தவர்கள், அவர் கூறிய விலையைக் கேட்டதும் பின்வாங்கிச் சென்றுவிடுவார்கள்.

செட்டியார் அந்தப் பேரத்தை, தம் அந்தஸ்தை நிலைநாட்டும் பிடிவாதத்துடன் நடத்திக்கொண்டு இருந்ததால், எஸ்டேட்டை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை.

அந்நிலையில் ஒரு நாள் செட்டியார் தம் நண்பர் ஒருவருடன் வந்து அன்னையைத் தரிசித்தார். நெஞ்ச நெகிழ்வுடன் வணங்கினார். ‘நமக்கு இனி என்ன தேவை? வாழ்க்கைக்குத் தேவையான எல்லாம் இருக்கின்றன. எதுவும் தேவை இல்லை. அன்னையின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தால் போதும்’ என்று கூறிவிட்டுப் போனார்.

அடுத்த வாரம் அவருடைய எஸ்டேட்டை ஒருவர் மூன்று இலட்சத்திற்குக் கேட்டார். மறுபேச்சு இல்லாமல் செட்டியார் உடனே விற்றுவிட்டார்.

அன்னை கேட்காமலேயே கொடுப்பவர்; கேட்டதற்கு அதிகமாகவும் கொடுப்பவர். செட்டியார் கேட்கவில்லை. ஆனாலும் ஒன்றேகால் இலட்சமே பெறுமானம் உள்ள அவருடைய எஸ்டேட்டுக்கு மூன்று இலட்சம் கிடைக்கச் செய்தார் அன்னை.

வாழ்க்கை ஒரு போர்க்களம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான போராட்டம். இறைவன் ஒரு பக்தனை ஆட்கொள்ளும்பொழுது அவனுக்குப் பலவிதமான சோதனைகளைக் கொடுத்து, அவனைப் புடம்போடுவது வழக்கம். குடும்பத்தில் திடீர் மரணம், திடீர் வீழ்ச்சி போன்றவை வந்தால், ‘கடவுள் சோதனை செய்கிறார்’என்கின்றோம். ஒரு பக்தனை இறைவன் அழைத்துக் கொள்ள முன்வரும்பொழுது அவனுக்குப் பல சோதனைகள் ஏற்படும். மனைவி, மக்கள், வீடு, சொத்து போன்றவற்றை அவனிடமிருந்து அப்புறப்படுத்தி, நிலையாமையைச் சுட்டிக்காட்டி, சோதனைச் சூறாவளியை எழுப்புவான் இறைவன்.

அன்னையின் வழி அதுவன்று. அன்னையின் யோகத்தில் அத்தகைய சோதனைகள் இல்லை. பொருள் நஷ்டம், மனக் கஷ்டம் போன்றவற்றைத் தரக் கூடிய சோதனைகளை அன்னை கொடுப்பதில்லை. பொருள் மீதுள்ள பற்றையும், மற்றவர் மீதுள்ள பாசத்தையும் விலக்கவே அன்னை தம் பக்தனுக்குச் சந்தர்ப்பம் அளிக்கின்றார்.

அன்னை இந்த யோக மார்க்கத்தை ‘sunlit path’(ஒளிமயமான பாதை) என்றார். தொடக்கத்திலேயே ஆன்மாவின் பாதையை ஏற்றுக்கொள்ளச் சொல்லுகின்றார். பொய்தான் கவலைகளுக்கு அஸ்திவாரம். பொய்யை விட்டு, மெய்யைக் கடைப்பிடிக்கச் சொல்கின்றார். அப்படிச் செய்தால் சோதனைகள் இல்லை. யோக மார்க்கம் ஒளிமயமான சத்திய மார்க்கமாக அமைந்துவரும். அதன் வழியே அன்னை, பக்தனை நடத்திச் செல்கின்றார். அச்சமயங்களில் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் பக்தர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து காட்சி தருவார்கள்.

யோக மார்க்கத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பக்தர், தம் வீட்டில் நண்பர் ஒருவரிடம் அது பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென சுவரில் ஸ்ரீ அரவிந்தரின் உருவம் பொன்னொளியுடன் காட்சி அளித்தது. உடனே பக்தர் எழுந்தோடி அதை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

ஆசிரமப் பள்ளியில் பயின்ற ஒரு பன்னிரண்டு வயதுக் குழந்தை, தினமும் சமாதிக்குச் சென்று வணங்குவது வழக்கம். அந்தக் குழந்தை ஒரு நாள் சமாதியில் வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு பூவிலும் அன்னையின் உருவத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப்போனாள்.

ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் தமது யோக மார்க்கத்தில் செல்லும் பக்தர்களை ஆசீர்வாதம் செய்வதற்காக சூட்சும வடிவில் தோன்றிக் காட்சி தரும் இவ்வாறான நிகழ்ச்சிகள் ஏராளமாக இருக்கின்றன.

இராகு காலம், எமகண்டம் போன்ற விஷ வேளைகளுக்குக் கடுமையான குணம் உண்டு. ஒரு வியாழக்கிழமை காலை 6 மணிக்கு ஓர் என்ஜினீயர் மயிலம் முருகன் கோவிலுக்குத் தம் குடும்பத்துடன் ஒரு குதிரை வண்டியில் புறப்பட்டுச் சென்றார். புறப்படும் சமயத்தில், ‘நல்ல கொழுத்த எமகண்டத்தில் புறப்படுகிறீர்களே!’ என்று எச்சரித்தார் அவருடைய நண்பர் ஒருவர். ‘நான் முருகனைத் தரிசிக்கப் போகிறேன். எமகண்டம் என்னை என்ன செய்யும்?’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டுவிட்டார் அவர்.

போகும் வழியில் அவர் சென்ற குதிரை வண்டியும் ஒரு லாரியும் மோதிக் கொண்டு, அவர் உயிரைப் பறித்துவிட்டன. எமகண்டத்திற்கு அந்தக் கடுமையும், கொடுமையும் உண்டு.

இன்னொருவர் சகுனங்களில் நம்பிக்கை இல்லாதவர். வெளியில் நெருப்பாகக் கொளுத்திய சித்திரை மாதத்து நாள் ஒன்றில் அவர் வீட்டில் நெல் அவித்தார்கள். அவர் வேண்டும் என்றே இராகு காலம் பார்த்து நெல்லைக் காயப்போடச் சொன்னார். அவர் மனைவி, ‘இராகு காலம் போகட்டுமே, பிறகு நெல்லைக் காயப்போடலாம்’என்றார். ‘இராகு காலத்திற்குக் கொம்பா இருக்கிறது? குருட்டு நம்பிக்கையைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, பேசாமல் நெல்லைக் காயப்போடு’என்று அதட்டினார் கணவர். சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கையுள்ள அவர் மனைவிக்கு அவர் கருத்தில் உடன்பாடில்லை. என்றாலும் கணவரின் கூற்றை மறுதலிக்க முடியாமல், மொட்டைமாடியில் நெல்லைக் காயப் போட்டார்.

அந்தச் சமயத்தில் ‘சுள்'ளென்று வெயில் அடித்தது. மழை வருவதற்கான அறிகுறி சிறிதுகூட இல்லை. அந்த அளவுக்கு நிர்மலமாக இருந்த வானத்தில் திடீரென்று மேகக்கூட்டம் திரண்டது. சற்று நேரத்திற்குள் மழை ‘கொட்டு, கொட்டு’ என்று கொட்டித் தீர்த்துவிட்டது. அதனால் மொட்டைமாடியில் காயப் போட்ட நெல் நனைந்து வீணாகிப்போனதுடன், அதை அள்ளுவதற்காக மழையில் நனைந்த அந்த மனிதருக்கும் கடுமையான ஜுரம் வந்துவிட்டது.

நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ, இராகு காலமும், எமகண்டமும் அதனதன் தீமையைச் செய்யத் தவறுவதில்லை. ‘அன்னையை ஏற்றுக் கொண்டவர்கள் இதைக் கருதலாமா?’என்று கேட்டால், ‘கருத வேண்டியது இல்லை’என்பதுதான் அதற்கான பதில். அதாவது அன்னையிடம் தீவிரமான நம்பிக்கையுள்ள பக்தர்களுக்கு இராகு காலமும், எமகண்டமும் சேவை செய்யும். ஆனால் அவை தம் குணத்திற்கு ஏற்பவே அந்தச் சேவையைச் செய்யும். அதாவது, அவை இரண்டும் தம் இயல்பான கெடுக்கும் குணத்தை இழந்துவிட மாட்டா. ஆனால் நம்மிடம் எந்தக் கெட்ட விஷயத்தை நீக்க வேண்டுமோ, அதை நீக்க மட்டுமே அவை தம் சக்தியை உபயோகப்படுத்தும்.

சாதாரணமானவர்களுக்கு அந்த இரண்டும் துன்ப நிகழ்ச்சிகளை விளைவிக்கும். அன்னையின் அன்பர்களுக்கு அவை துன்பத்தை தரும் குணங்களை விலக்கும். இப்பொழுது இரண்டுக்கும் உள்ள வேறுபாடு நன்கு புரியும் என்று நினைக்கின்றேன்.

அதற்கு ஒரு நிகழ்ச்சியைச் சான்றாகக் கூறலாம். நில வள வங்கியின் அதிகாரி ஒருவர், அன்னையின் பக்தர் ஒருவருக்கு நண்பர். அன்னையின் பக்தர் ஒரு பெரிய விவசாயி. அவர் தம் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக நிலவள வங்கியில் இருபத்தையாயிரம் ரூபாயைக் கடனாக வாங்கிக் கொடுக்கும்படி அந்த அதிகாரி நண்பரிடம் கேட்டுக்கொண்டார். அவரும் மகிழ்ச்சியுடன் அந்த அன்பரிடம் ஒரு விண்ணப்பத்தை எழுதிக் கையெழுத்திடும் பொழுது சரியான இராகு காலம். பிறகு அதிகாரி அவரை வங்கியின் செயலாளரிடம் அழைத்துக்கொண்டு போய் அறிமுகப்படுத்தி வைத்து, விண்ணப்பத்தைக் கொடுத்தார். செயலாளர் வேண்டாத கேள்விகளை எல்லாம் கேட்டு, அந்த அன்பரையும், அவரை அழைத்துக்கொண்டுபோன அதிகாரியையும் வெறுப்படைய வைத்தார். ‘விட்டால் போதும்’ என்ற எண்ணத்தில் இருவரும் எழுந்து வந்துவிட்டார்கள்.

கடன் முயற்சி தோல்விதான். இராகு காலத்தில் அவர் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட்டதன் விளைவுதான் அது என்றாலும், அவர் அன்னையின் பக்தர் அல்லவா? விஷத்தைக் கக்குவதைப் போல அமைந்த விளைவு, எதிர்பாராத நன்மை ஒன்றுக்கு விதைத்த விதையாக மாறிவிட்டது. பக்தரின் நேர்மையையும், அவருடைய விவசாய முக்கியத்துவத்தையும் கேள்விப்பட்ட இந்தியன் வங்கி, அவருக்கு இரண்டு இலட்ச ரூபாய் கொடுக்க முன்வந்து, அவருடைய சொத்துப் பத்திரங்களை அவசரமாகக் கோரியது. நிலவள வங்கி கடன் கொடுக்க முன்வந்திருந்தால், அவருடைய சொத்துப் பத்திரங்கள் அங்கே அடமானமாக வைக்கப்பட்டிருக்கும். இராகு காலம் நிலவள வங்கிச் செயலாளர் மூலம் கொடுத்த தொந்தரவால் கடன் பெறும் வழி அடைபட்டு, அதன் காரணமாகச் சொத்துப் பத்திரம் அவரிடமே தங்கி இருந்தது. எனவே அவர் பத்திரத்தை உடனே இந்தியன் வங்கியில் சமர்ப்பித்து, ஒரு பெரிய தொகையைப் பெற்று, விவசாயத்தைப் பெரிய அளவில் அபிவிருத்தி செய்ய முடிந்தது.

இராகு காலத்தில் ஏற்பட்ட தடை, பிறகு நன்மையாக மாறி நடைபோட்ட அபூர்வ நிகழ்ச்சிகள், அன்னையின் பக்தர்கள் வாழ்வில் ஏராளமாக நிகழ்ந்தது உண்டு.

காலத்திற்கும் காலம் வகுப்பவர் அன்னை.

‘அவ்வளவுதான், அது முடிந்துவிட்டது. அதற்கு மாற்று வழியே இல்லை’ என்ற நிலையில், ஒருவர் என்ன செய்ய முடியும்? பரீட்சையில் தவறிவிட்டதாக ஒரு செய்தி வந்த பிறகு, அதற்கு மாற்று ஏது? ஆனால் அன்னையின் பக்தர்களுக்கு மட்டும் மாற்று வழி எப்பொழுதும் இருக்கிறது. அந்த மாதிரிச் செய்தி வந்தவுடன் இடிந்துபோய் உட்கார்ந்துவிடாமல், தீவிரமான நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்யக்கூடிய பக்தர்களின் வாழ்வில் அன்னை செயல்படுகிறார். அன்னை ஏதாவது ஒரு வழியில் செயல்பட்டு விஷயத்தை மாற்றிவிடுவார். பரீட்சையில் தேர்வு பெறாதவர், தேர்வு பெற்றுவிட்டதாகப் பிறகு ஒரு செய்தி வந்து சம்பந்தப்பட்டவரைத் திக்குமுக்காடவைக்கும்.

‘விஷயம் முடிந்துவிட்டது’ என்ற நிலையில் பிரார்த்தனை செய்வதற்கு அதிக நம்பிக்கை வேண்டும். அத்தகையவர்கள் பின்னால் செய்யப்போகும் பிரார்த்தனைக்காக, அன்னை முன்கூட்டியே பல சந்தர்ப்பங்களைத் தயார் செய்து வைத்திருப்பது பல அன்பர்களின் அனுபவம். ஒரு பக்தருக்கு அவருடைய சகோதரியின் கணவர் இறந்துவிட்டதாகத் தந்தி வந்தது. ‘அப்படி இருக்காது; இருக்க முடியாது!’ என்று நினைத்த அவர், அன்னையைப் பிரார்த்தனை செய்து கொண்டு ஊருக்குப் போய்ப் பார்த்தால், அவருடைய சகோதரியின் கணவரே அவரை வரவேற்றார். பிறகு மெதுவாக விசாரித்தபொழுது, அவரிடத்தில் கோபம் கொண்ட ஒருவர் கொடுத்த பொய்த் தந்தி அது என்பது தெரியவந்தது.

‘அன்னையை ஏற்றுக்கொள்வது’ என்பதற்குப் பல கட்டங்கள் இருக்கின்றன. அன்னையைத் தெய்வமாக அறிந்து, அவரது தெய்வீக சக்தியின் பல அம்சங்களையும் விளக்கமாகப் புரிந்துகொண்டு, அவற்றின் உட்கருத்தைத் துய்த்துணர்ந்து, ஆத்மாவில் அன்னையின் உருவத்தைப் பிரதிஷ்டை செய்து, வாழ்க்கையையும், அறிவையும், உடலையும் பூரணமாக அர்ப்பணம் செய்து வழிபடுதல் என்பது உயர்ந்த வழிபாடாகும். இந்த வழிபாட்டுக்கு உரிய ஒரே கருவி நினைவு.

நினைவே வழிபாடு.
நெஞ்சே ஆலயம்.
வேறு பூஜை, புனஸ்காரங்கள் இல்லை.
அன்னை வழிபாட்டில் சடங்குகளுக்கு இடம் இல்லை.

ஒரு சாதாரண மனிதனின் புலம்பல் இது: ‘நான் பெரும்பாலோரைப் போல ஓர் எளிய மனிதன். என் வாழ்க்கை ஒரே போராட்டமாக அமைந்து உள்ளது. யோகத்தை மேற்கொள்ளலாம் என்றால், யோக வாழ்க்கை சோதனைகள் நிறைந்தது. ஒரு நாள் போவது ஒரு யுகமாக இருக்கிறது. குடும்ப வாழ்க்கையே எனக்கு யோகமாகப்படுகிறது. என்னைச் சுற்றி இருப்பவர்கள் எதற்கும் அஞ்சாது பொய் சொல்கின்றார்கள். ‘மற்றவர்களை மோசம் செய்யத் தயங்கமாட்டேன்’ என்கிறார்கள். அவர்களைப் போலவே என்னாலும் பொய் பேசாமலும், மோசம் செய்யாமலும் இருக்க முடியவில்லை. ஜோதிடர், ‘நேரம் சரி இல்லை. நல்ல நேரம் இன்னும் வரவில்லை’ என்கின்றார். நிகழ்ச்சிகள் விரைந்து செல்கின்றன. நான் முயற்சி எடுப்பதற்குள் அந்த விஷயம் முடிந்துவிடுகின்றது.

பிரார்த்தனை செய்ய என் மனம் தயாராகும்பொழுது விஷயங்கள் வேகமாக என்னைக் கடந்து சென்றுவிடுகின்றன. ஸ்ரீ அரவிந்தரோ அவதாரப் புருஷர்; அன்னையோ பராசக்தி; அவர்கள் வாழ்வில் நடந்தவை எல்லாம் என் போன்ற சாமானியனுக்கு எப்படிப் பொருந்தும்? அன்னையின் கருணா கடாட்சத்தை நான் எப்படிப் பெற முடியும்? என் போன்ற சாமானியருக்கு அன்னை எப்படித் தம் தெய்வாம்சத்தை உணர்த்துகின்றார்? நான் மரக் கட்டையைப் போல ஜடமாக இருக்கின்றேன். என் மீது அன்னையின் பார்வை எப்படி விழும் என்பதைச் சற்று விளக்கினால் தேவலை'.

‘அன்னையை நினைத்த பிறகு நீ சாமானிய மனிதன் இல்லை. நீ அன்னையின் ஒளியை உன்னில் சுமந்து நிற்கின்றாய். ஒளியை உள்வாங்கிக் கொண்டு இருக்கின்ற உனக்கு நெகிழ்ந்த பக்தி ஏற்படும்பொழுது ஸ்ரீ அரவிந்தர் சூட்சும உலகில் காட்சி தர, சுவரில் தோன்றுகின்றார். தூய்மையான மனத்துடன் சமாதிக்குத் தியானம் செய்யச் சென்றால், ஒவ்வொரு மலரிலும் அன்னை காட்சி அளிக்கின்றார். உனக்குத் தேவையானவற்றை நீ கேட்காமலேயே அன்னை கொடுக்கின்றார். உனக்குத் கேட்கத் தெரியாதவற்றையும் அன்னை கருணையோடு வழங்குகின்றார். ஒன்றேகால் இலட்சம் ரூபாய் பெறுமானம் உள்ள காப்பித் தோட்டத்தை, அன்னை ரூபாய் மூன்று இலட்சத்திற்கு விலை போகச் செய்கின்றார். உன்னுடைய காரியங்கள் கெட்டுப்போன பிறகே உனக்குத் தெரியும்பொழுது, அந்த நிலையிலும்கூட நீ அன்னையின் மீது முழு நம்பிக்கை கொள்வதால், முன்கூட்டியே அந்தக் காரியத்தை நல்ல விதமாகப் பூர்த்தி செய்ய வேண்டிய சூழ்நிலையை அவர் தோற்றுவிக்கின்றார். போராட்டம் நிறைந்த உன் அவல வாழ்க்கையை ஒளிமயமான பாதையில் திருப்பிச் செலுத்துகின்றார். ‘நேரம் வரவில்லை’என்று ஜோதிடர் உன் நம்பிக்கைக் கதவை அடைத்துச் சாத்திய நிலையில், ‘நேரம் வந்துவிட்டது’ என்று கூறுமாப்போலே நிலவரத்தைத் தலைகீழாக மாற்றி, உனக்கு சாதகக் கதவைத் திறந்துவிட்டு, உன் வாழ்க்கையில் ஒளி ஏற்றுகிறார். இராகு காலத்தையும், எமகண்டத்தையும் உனக்குச் சேவை செய்ய, அன்னை அவற்றுக்கு உத்தரவிடுகின்றார். நீ எதிர்நோக்கி இருக்கும் சோதனைகளை, சாதனைகளின் வெற்றி வாய்ப்பாக மாற்றி அருள்கின்றார். யோகத்திற்கும், இறைவனை அடைவதற்கும் சோதனை தேவை இல்லை எனப் புதிய மார்க்கத்தைக் காட்டுகின்றார். உயிரை மாய்த்துக் கொள்வதென்று முடிவுக்கு நீ தள்ளப்பட்ட நிலையில், உன்னைக் காப்பாற்றுவதற்காக வலிய வந்து அருள்பாலிக்கின்றார். அன்பனே, அன்னை உன்னைத் தேடி வருகின்றார். அவரை நீ பூரணமாக ஏற்றுக்கொள். அவரது அருளொளியில் திளைத்து, அன்பெனும் பிடிக்குள் அடங்கி, வாழ்வை ஒளிமயமாக மாற்றிக்கொள். வாழ்வு வருகின்றது, பெற்றுக் கொள்; வளம் வருகின்றது, வாங்கிக்கொள்'.

இதுதான் நான் அந்தச் சாமானியனுக்கு அளிக்கும் சாரமான பதில்.

*****



book | by Dr. Radut