Skip to Content

03. அன்னையின் வழியில் அன்றாட வாழ்க்கை

‘வாழ்க்கை’ என்றால் நல்லது, கெட்டது என்ற இரண்டும் உண்டு. சில சமயங்களில் வெற்றியையும், பல சமயங்களில் தோல்வியையும் அளிப்பது வாழ்க்கை. நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பதைப்போல வாழ்க்கையிலும் இரு பக்கங்கள் உண்டு. ‘செல்வம் சகடக்கால் போல வரும்’ என்றும், ‘யானைக்கும் அடி சறுக்கும்’என்றும் கூறும் வாழ்வியல் உண்மைகளை, உலகத்தின் எல்லா நாடுகளும், மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

வாழ்க்கையில் ஒரு வெற்றியைப் பெற மனிதன் கடுமையாகப் போராட வேண்டியிருக்கின்றது. போராட்டம் நிறைந்ததே வாழ்க்கை. போராட்டம் நிறைந்தது என்றாலும், அதன் முடிவு எப்படி இருக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. போராட உரிமையுள்ள மனிதனுக்கு, முடிவை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. முடிவு, அவன் முயற்சியையும், திறனையும், உழைப்பையும் பொருத்ததன்று; அதிர்ஷ்டத்தைப் பொருத்தது. அது அவன் கையில் இல்லை. உலகில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கின்ற மனிதன், உணர்ந்து தெளிந்த உண்மை இதுவாகும்.

அன்னை மேற்சொன்ன கூற்றுகளில் உள்ள உண்மையை ஒப்புக் கொள்கின்றார். ஆனால், ‘அது அப்படித்தான் இருக்க வேண்டும்’ என்ற நிர்ப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார். அவருடைய விளக்கமும், அன்பர்களுக்கு அவர் அளிக்கும் அனுபவமும் வேறு.

பொய்ம்மையான காயத்தை (உடல்) உதறித் தள்ளி, மாயையான வாழ்க்கையைத் துறந்து, உண்மையின் சொரூபமான தெய்வத்தையும், மோட்சத்தையும் நாடுகின்றான் தபஸ்வி. இதுவே நம் மரபு. ஸ்ரீ அரவிந்தர் இதை மாற்றிக் கூறுகின்றார். அதாவது, ‘காயம் பொய்யானதன்று. அதன் அடிப்படை பொய்யால் அமைக்கப்பட்டதன்று. வாழ்க்கை பொய் இல்லை. அதன் அஸ்திவாரங்கள் பொய்யின் பிறப்பிடம் இல்லை. இன்றுள்ள நிலையில் காயமும், வாழ்வும் பொய்யின் பிடியில் இருப்பதே உண்மை. வாழ்வு பெரியது. காயம் புனிதமானது. அவற்றைப் பொய்யின் சூழலிலிருந்து விடுதலை செய்தால், மனித வாழ்க்கை தெய்வீக வாழ்க்கையாக மாறும். காயம் தெய்வச் சக்தியின் கருவியாக அமையும்’ என்று கூறுகின்றார் ஸ்ரீ அரவிந்தர்.

அந்த மாற்றத்தை உலகில் கொணர அவர் நாடும் சக்தி, தெய்வங்கள் உறையும் உலகத்திற்கும் அப்பால் உள்ள விஞ்ஞான லோகத்தில் இருக்கின்றது. அந்தச் சக்தியில் (Supramental force) பொய்யின் சாயல் இம்மியளவுகூட இல்லை. அது தெய்வச் சத்தியத்தின் பிறப்பிடமும், உறைவிடமும் ஆகும். அந்தச் சக்தியில் ‘முன்னேற்றம்’ என்பது, பொய்யிலிருந்து மெய்க்குப் போவதில்லை. சிறிய உண்மையிலிருந்து பெரிய உண்மைக்குப் போவதே ‘முன்னேற்றம்’ எனப்படும். அந்த உலகில் இந்த உலகில் இருப்பதைப் போல ‘நல்லது', ‘கெட்டது’ என்பன, ‘வெற்றி', ‘தோல்வி’ என்பன அங்கில்லை. ‘சிறிய வெற்றி', ‘பெரிய வெற்றி’ என்பன மட்டுமே அங்குண்டு.

அந்தச் சக்தியை உலகுக்குக் கொண்டுவந்து செயல்படச் செய்வதே யோகம். அன்னையை ஏற்றுக்கொண்ட அன்னையின் அன்பர்கள் அந்தச் சக்தியை (Supramental force) தமது வாழ்வில் செயல்பட அனுமதித்து வாழ்க்கையை நடத்தினால், அதுவே ‘யோக வாழ்க்கை’ எனப்படும். அந்தச் சக்தியை (Supramental force) அன்னை நமக்கு அளிப்பதால், அதுவே அன்னையின் சக்தியாகவும் (Mother's Force) அமைகின்றது.

நம் மரபு வழியிலான யோகத்தின் அடிப்படை, பிறப்பிலிருந்து விடுதலை அடைவது. ஸ்ரீ அரவிந்தரின் யோக இலட்சியம், பொய்யிலிருந்து பிறப்பை விடுவிப்பது.

இந்த இலட்சியத்தை ஏற்றுக்கொண்டால், போராட்டம் நிறைந்த நம் வாழ்வு, முயற்சி நிரம்பியதாக மாறுகின்றது. விடா முயற்சியே வெற்றிக்கு வித்து. அன்னையின் இலட்சியத்தை ஏற்றுக்கொண்ட பிறகு வாழ்க்கையின் வழக்கமான அமைப்பை அவர் மாற்றிவிடுகின்றார். போராட்டத்தையும், அதனால் கிடைக்கக்கூடிய அவ்வப்பொழுதைய வெற்றி, தோல்விகளையும் களைந்து விடுகின்றார். அதற்குப் பதிலாக, முயற்சியை முழுவதுமாக நிரப்பிவிடுகின்றார். ‘முயற்சிக்குப் பலன் வெற்றியா? தோல்வியா?’ என்பதை மாற்றி, ‘சிறிய வெற்றியா? பெரிய வெற்றியா?’ என்ற ஏற்றத்தை அமைக்கின்றார். அதற்குப் பின் தோல்வி, நிரந்தரமாகத் தோல்வி அடைகின்றது.

‘இது எப்படி முடியும்? வாழ்க்கைக்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத ஒன்றாக இருக்கின்றதே!’ என்று நினைக்கத் தோன்றலாம். உலக வாழ்க்கை பிறப்பிலிருந்து தொடங்கி இறப்பில் முடிகின்றது. இதில் இறப்பை இறக்கச் செய்ய அவதாரம் எடுத்தவர் அன்னை. அத்தகைய அளப்பரிய சக்தி படைத்த அன்னை, தோல்விக்குத் தோல்வி அளிப்பதில் ஆச்சரியம் இல்லை.

வாழ்க்கையில் ஒரு சிறு அளவில் இது போன்ற நிலைக்கு உதாரணம் இல்லாமல் இல்லை. எல்லாரும் தேர்வு எழுதுகின்றார்கள். ஆனால் எல்லாருமே வெற்றி பெறுவதில்லை. பலர் தோற்றுப்போகின்றார்கள். பொதுவாகத் தேர்வில் வெற்றி, தோல்வி என்ற இரண்டு நிலைகள் உண்டு.

அது 1945ஆம் ஆண்டு. புனித ஜோஸப் கல்லூரியின் கல்வித் தரம் சிறப்பானது. அங்கு பி.எஸ்.ஸி. வகுப்பில் 60 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அந்த வகுப்புக்குப் பாடம் எடுக்கும் பேராசிரியர் ஒருவர், புதிய வகுப்பு ஆரம்பமாகும் நாளன்று, ‘40 I class, 20 II class, no third class, no failure என்பதே இந்தக் கல்லூரியின் நடைமுறையாக இருந்துவருகிறது. நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்பார்.

அந்தக் கல்லூரியில் failure கிடையாது, III class கிடையாது. II class வாங்குவதே failure எனக் கருதப்படுகின்றது. அது தேர்வுக்கு பாஸ், பெயில் என்ற இரண்டும் உண்டு என்ற உண்மையை மாற்றி, மூன்றாவதாக ஒரு நிலையைத் தோற்றுவிக்கின்றது.

நான் 1960இல் மாயவரம் நேஷனல் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரைச் சந்தித்தேன். அப்போது அவர், ‘இப்பொழுதெல்லாம் எஸ்.எஸ்.எல்.ஸி.யில் நூற்றுக்கு நூறு பாஸ் செய்த பள்ளிகளின் பெயர் செய்தித்தாள்களில் வருகிறது. எங்கள் பள்ளியில் தொன்றுதொட்டு நூற்றுக்கு நூறு என்ற விகிதத்தில்தான் மாணவர்கள் தேர்வு பெறுகிறார்கள். இதுவரை எந்த மாணவனும் எஸ்.எஸ்.எல்.ஸி.யில் ஃபெயிலானதே இல்லை’ என்றார். நான் ஒரு சமயம் ஓர் அமெரிக்கரோடு உரையாடிக்கொண்டிருந்த பொழுது, ‘எங்கள் நாட்டில் ஆண்டுதோறும் வறுமைக்கோட்டிற்குக் கீழே எத்தனை சதம் மக்கள் இருக்கின்றார்கள் என்று நாங்கள் கணக்கு எடுக்கின்றோம்’ என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, ‘எங்கள் நாட்டில் ஆண்டுதோறும் கோடீஸ்வரர் பட்டியலில் புதிதாக எத்தனை பேர் சேர்ந்து இருக்கிறார்கள் என்று நாங்கள் கணக்கு எடுக்கின்றோம்!’என்றார்.

அமெரிக்காவில் குறைந்தபட்சத் தினக்கூலி 26 டாலர்கள். நம் இந்தியக் கணக்குப்படி 350 ரூபாய்!

நம் நாட்டில் திவாலான ஒருவனுடைய சொத்தை எல்லாம் கடன்காரர்கள் பறிமுதல் செய்வார்கள். அவன் நடுத்தெருவில் நிற்பான். ஐரோப்பாவிலும் சட்டம் அப்படியே. அமெரிக்காவில் வாழ்க்கை வளம் மிகஅதிகமாக இருக்கின்றது. வளத்தின் காரணமாக, அங்கு திவாலான மனிதர்களையும் ‘மனிதன்’ என்ற அளவில் கருதி, சில சலுகைகளை அளிக்கின்றார்கள். திவாலான ஒருவனுடைய சொத்துகளை எல்லாம் கடன்காரர்கள் எடுத்துக்கொள்ளச் சட்டம் உண்டு. ஆனால் அவனுடைய வீடு, கார், இன்ஷ்யூரன்ஸ் ஆகியவற்றை அவர்கள் தொட முடியாது. அந்த நாட்டின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதால், திவாலானவனுக்கும் வீடு, கார், இன்ஷ்யூரன்ஸ் ஆகியவை அவசியம் என்று சட்டம் கருதுகின்றது. அந்நாட்டில் வளம் வானளாவ உயர்ந்திருப்பதால், நம் நாட்டில் செல்வர்களுக்குள்ள நிலை, அங்கு திவாலானவர்களுக்கு உண்டு. நாம் அறிந்துள்ள வாழ்க்கைக்கும், அன்னையை ஏற்றுக்கொண்ட பிறகு நாம் சந்திக்கும் வாழ்க்கைக்கும் அது போன்றதொரு வேறுபாடு உண்டு.

கே.எம். முன்ஷி பல்வேறு உயர் பதவிகளை வகித்த பின்னர், பாரதிய வித்யா பவனை நிறுவினார். அவர் ஸ்ரீ அரவிந்தரின் மாணவர். பரோடா கல்லூரி ஒன்றில் பணியாற்றியபொழுது, முன்ஷி அவரிடம் பயின்றவர். அவர் முதல் முதலாக அன்னையைத் தரிசனம் செய்தபிறகு, ‘Mother emphasises prosperity, not austerity’(‘அன்னை தம் யோகத்தில் கடுமையான விரதங்களுக்குப் பதிலாக, வளம் நிறைந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிப்பது சிறப்பானது’) என்று கூறினார்.

‘Austerity’ என்றால் விரதம், உபவாசம், உறங்காமை, நெருப்பு மிதித்தல் போன்றவை; கடுமை நிறைந்தவை. அன்னை அவற்றைத் தம் யோகத்தின் பகுதிகளாகக் கொள்ளவில்லை. கலகலப்பு, மகிழ்ச்சி, ஆர்வமிகு செயல் போன்ற அம்சங்களையே அவர் வலியுறுத்தியுள்ளார். ‘பூரண யோகத்தைப் பயில்வதற்குக்கூடக் கடுமையான விரதங்கள் தேவையில்லை. மன வளம்தான் தேவை’என்னும்போது, பக்தியால் அன்னையை வாழ்வில் ஏற்றுக் கொண்டவனுக்குக் கடுமையோ, கடுமையான அனுஷ்டானங்களோ எதற்குத் தேவை? தேவையே இல்லை. ஆனால் வேறு சில தேவைப்படுகின்றன. அவை: கட்டுப்பாடு, தன்னைத் தானே நெறிப்படுத்திக்கொள்ளும் பண்பு, பக்குவம்.

மேலெழுந்தவாரியாகப் பார்த்தாலோ, ‘அன்னையை ஏற்றுக்கொண்ட பிறகு வாழ்க்கையில் கடுமை இருக்காது; எல்லாச் சிறப்புகளும் இருக்கும்’ என்பதை வேறு மாதிரியாகப் புரிந்துகொண்டாலோ, அது ஒரு தவறான கருத்தைத் தோற்றுவிக்கும். அதாவது, ‘நான் அன்னையை ஏற்றுக்கொண்டேன். இனி எனக்கு எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை. நான் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்கலாம். நான் ஒரு சுதந்திரப் பறவை’ என்று விளக்கம் கொடுக்கத் தோன்றும்.

அன்னை வழி இது. இவ்வழியில் சென்றால், மனம் வாழ்க்கையில் உள்ள எல்லா ‘ருசி'களையும் நாடும்; ‘குஷி’யாக இருக்க நினைக்கும். அந்த நினைவை ‘சரி’ எனத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தும் மனம். ‘அதுவே அன்னை வழி’ என்று அடித்துக் கூறும் அறிவு. பிறகு வாழ்க்கைப் படியைத் தாண்டிச் சென்று, பாவங்களில் நடமாடி, பாதாளத்தில் விழும். பொதுவாக இக்குணங்களும், குறைகளும் தவறானவை. அவற்றை அன்னையின் பெயரால் செய்கின்றபொழுது மிகப்பெரிய தவறுகளாகிவிடுகின்றன. அதாவது குற்றங்களாகிவிடுகின்றன.

கூர்ந்து நோக்கும்பொழுது அன்னை வழியில் மன வளத்தையும், வாழ்க்கை வளத்தையும் பெறுவதற்கு மகிழ்ச்சியையும், கலகலப்பையும், ஆர்வமிக்க செயலையும் பின்பற்றுதல் மிக எளிமையானவையாகத் தோன்றலாம். ஆனால் அவை விரதம், உபவாசம், உறங்காமை, நெருப்பு மிதித்தல் போன்றவற்றைவிடக் கடுமையானவை. ‘மனத்தில் கடுமையான கட்டுப்பாட்டை இயல்பாக ஏற்றுக்கொண்டவர்களுக்கே நிரந்தரமான கலகலப்புண்டு’ என்பதை வாழ்க்கையில் அனுபவம் உள்ளவர்கள் அறிவார்கள். ஒருவனுக்குப் பின்னால் அவனைப் பற்றிக் கேவலமாகப் பேசி, வாழ்க்கையில் ருசியை அனுபவிப்பவர்கள் இருக்கிறார்கள். பிறரைப் பற்றிக் குறைவாகப் பேசுவதைக் குறையாக நினைப்பவர்கள் உண்டு. புரளியை ரசமாகப் பேசுபவர்கள் மன நிம்மதியுடன் வாழ்வதில்லை. வீண் புரளியில் ஆசை இல்லாதவர்களுக்கு மன நிம்மதி கெடுவது இல்லை. ஒரு கெட்ட செய்தியை ஒரே நாளில் நாற்பது பேரிடம் சொல்ஆனந்திப்பவர்கள், அந்தப் பழக்கத்தை விட்டுவிட முயன்றால், அது உபவாசத்தைவிடக் கடுமையானதாக இருக்கும். விரதங்களின் கடுமை, அதன் முன்னால் தோற்றுப்போகும். மனக் கட்டுப்பாட்டில் வரும் பக்குவம் இது. ‘மனத்தைக் கட்டுப்படுத்தி மன வளத்தைப் பெருக்கினால், வாழ்க்கையின் வளம் பெருகுகிறது’ என்பதே அன்னை வழியின் சிறப்பாகும்.

பெருந்தன்மையைப் பற்றியும், அதற்கு எதிரான ‘சின்ன புத்தி'யைப் பற்றியும் நாம் அறிவோம். சின்ன புத்தியில் கெட்ட புத்தியும் உண்டு; நல்ல புத்தியும் உண்டு. கோள் சொல்லுதல் கெட்ட புத்தியாகும். ஒருவருடன் பழகும்போது அவருடைய குறைகளை மட்டும் கவனிப்பது கெட்ட புத்தி இல்லை என்றாலும், மட்ட புத்தியாகும். சிறியவை, மட்டமானவை, தவறானவை என்பனவற்றை முழுவதும் தவிர்த்து, பெரியவை, உயர்ந்தவை, சரியானவை என்பனவற்றை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க முயல்வதை, நாம் ‘பெருந்தன்மை’ என்கிறோம். அன்னையின் வழிக்குப் பெருந்தன்மை அஸ்திவாரம்; சிறிய புத்தி விதி விலக்கு.

‘நான் அன்னை வழியை விரும்புகின்றேன். அதைக் கடைப்பிடிக்க விழைகின்றேன். முழுமையாக அதை என் மனம் ஏற்றுக்கொள்கின்றது. நான் எதை எல்லாம் தவறாமல் செய்ய வேண்டும்? அவ்வழிக்குரிய இன்றியமையாத பாதைகள் எவை? தவிர்க்க முடியாதவை எவை? எவற்றை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும்? யோகம் செய்யும் சாதகராக என்னைக் கருதாமல், வாழ்க்கை விளக்கம் பெற அன்னையை ஏற்றுக்கொண்ட அன்பராகக் கருதி, ஐயம் திரிபற எனக்கு உணர்த்த வேண்டும்’என ஒருவர் கேட்டால், அவருக்குத் தேவையான பதிலைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் கீழே தருகிறேன்.

சுருக்கம்: உடலால் உழைப்பும், மனத்தால் நேர்மையும், அறிவால் தெளிவும், மனச்சாட்சியால் சிறப்பும், பழக்கத்தால் பக்குவமும், உணர்வால் நெகிழ்ந்த பக்தியும் உடையது அன்னை வழி.

விளக்கம்: செய்ய வேண்டியவற்றை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம். அவை, (1) உடலால் செய்யப்பட வேண்டியவை, (2) உணர்வால் செய்யப்படுபவை, (3) அறிவால் செய்யக்கூடியவை. உடலுக்கு முக்கியமானது செயல். அது சுறுசுறுப்பானதாக இருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் காலம் தாழ்த்தாமல் விரைவாகச் (அவசரமின்றி) செய்தல் உடலால் செய்யப்பட வேண்டியதாகும். அதுவே திறமை நிறைந்ததானால், சிறப்புள்ளதாகும். அத்திறமையும், சுறுசுறுப்பும் கடமைகளை ஆற்றும்போது அறிவுக்குகந்த இலட்சியங்களைக் கடைப்பிடித்தால், உடலால் செய்யப்பட வேண்டிய அனைத்தும் செய்யப்பட்டதாகக் கருதலாம்.

உணர்வின் பங்கை முழுமையாகச் சொல்வதாக இருந்தால் ஒன்றைச் சொல்லலாம். மற்றவர்களுடன் பழகும்போது அவர்கள் மனம் நிறையும்படிப் பழக முடிந்தால், உணர்வால் தன் பங்கை நிறைவேற்றிவிட்டதாகக் கருதலாம். எந்த ஒரு காரியத்தையும் மேற்கொள்ளும் முன்பு தன் நோக்கில் அதைச் செய்யாமல், அதோடு தொடர்புடையவர்களின் நோக்கில் அதைச் செய்ய முற்படுதல் நல்லது. பொதுவாக ஒருவர் ஒரு சிறந்த காரியத்தை நல்நோக்கத்தோடும், ஆர்வத்தோடும் செய்ய முற்படும்பொழுது அது பலருக்கு இடையூறாக இருக்கும். அத்தகைய இடையூறுகளை நினைவுகூர்ந்து, அதற்கு ஏற்ப தன் ஆர்வத்தின் பாதையை அமைத்துக்கொள்வது சிறந்ததோர் உணர்வாகும்.

எனக்குத் தெரிந்த ஓர் என்ஜினீயர்; அவருடைய மகனும் என்ஜினீயர் பட்டத்தைப் பெற்றான். அவன் நீண்ட காலமாகப் பழகி வந்த ஒரு குடும்பத்தில் பிறந்த மூத்த பெண்ணை விரும்பினான். அவளின் தந்தை காலமாகிவிட்டார். அது வசதி அதிகம் இல்லாத நடுத்தரக் குடும்பம். அவளுக்குத் தம்பிகள் என்றும், தங்கைகள் என்றும் நிறையப் பேர் இருந்தார்கள். எனவே, அவள் வேலைக்குப் போனால்தான் குடும்பச் சக்கரம் சுழலும் என்ற நிலை. அவள் ஒரு பட்டதாரி. வலைவீசித் தேடியதில் ஆசிரியை வேலை கிடைத்தது. அவள் வேலைக்குப் போய் வந்துகொண்டு இருந்தபொழுது அவள் மனம் அவனை நாடிப் போய்க்கொண்டு இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்து உருகிக்கொண்டு இருந்தாலும், அவர்கள் அதைப் பற்றி வாய் திறந்து பேசியதே இல்லை.

ஆண்டுகள் பல உருண்டோடின. அவன் ஒரு நாள் துணிந்து அவளிடம் பேசி, ‘உன் முடிவைக் கூறு’என்று கேட்டான். அவள் அவசரப்படாமல் நிதானமாகச் சிந்தித்துவிட்டுக் கேட்டாள்: ‘தனக்காக வாழ்கிற வாழ்க்கையை விட மற்றவர்களுக்காக வாழ்கிற வாழ்க்கையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’

‘அது உயர்ந்த வாழ்க்கை’ என்றான் அவன.

‘நான் அப்படிப்பட்டதொரு வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டிய நிலையில் இருக்கிறேன். எங்கள் குடும்பம் என்னையே முழுதுமாக நம்பி இருக்கிறது. என் தம்பி, தங்கைகளுக்கு என்னுடைய உதவி இன்னும் பல ஆண்டுகளுக்குத் தேவையாக இருக்கிறது. இந்த நிலையில் நான் என் விருப்பத்தை விட்டுக் கொடுத்தால்தான் அவர்கள் வாழ முடியும். அவர்கள் வாழ்வதற்காக நான் வாழாமல்போவதைத்தான் நீங்களும் விரும்புவீர்கள்’ என்று தன் முடிவைத் தெரிவித்தாள் அவள்.

அவள் தியாகம் உயர்ந்த மனநிலையைக் காட்டுகிறது.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், ‘இதைவிடத் தெளிவாகவும், சிறப்பாகவும் செய்ய முடியுமா?’ என்று சிந்தித்து, சிறப்பான ஒன்று தோன்றுமேயானால், அதைப் பின்பற்றுவதே அறிவின் கடமை.

ஒரு போலீஸ்காரர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, வயிற்றுப் பிழைப்புக்காக வாட்ச்மேன் வேலை பார்த்துவந்தார். அவருடைய மகன் எஸ்.எஸ்.எல்.ஸி.யில் தேர்வு பெற்றான். புத்திசாலிப் பையன். இன்னும் நிறையப் படிக்க வேண்டியவன். ஆனால் அதற்கான வசதியில்லை. அவனை வேலைக்கு அனுப்ப முயன்றார்கள். அந்தப் பையனின் சகோதரி கணவர் ஒரு கடை வியாபாரி. கடையைச் சிறிதாகத் தொடங்கினார். இப்பொழுது வசதி பெருகி விட்டது. அவரும் தம் மைத்துனனுக்கு வேலை தேடிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அவர் தம் மைத்துனன் படித்த பள்ளிக்குச் சென்று அவனுக்காக ஒரு சிறப்புச் சான்றிதழ் கேட்டார். அதற்கு ஆசிரியர், ‘உங்கள் மைத்துனன் நல்ல புத்திசாலி. அவனை பாலிடெக்னிக்கில் சேர்த்தால், நிச்சயம் உதவித் தொகை கிடைக்கும். அதுவரை தேவைப்படும் உதவியை நீங்கள் செய்தால், எதிர்காலத்தில் அவன் ஒரு பெரிய வேலைக்குப் போகலாம். அல்லது ஒரு தொழிலையேகூடத் தொடங்கலாம்’ என்றார்.

அவர் ஆசிரியரின் கருத்தை ஏற்று, தம் மைத்துனனை மேலும் படிக்க வைத்தார். அவனும் வெற்றிகரமாகத் தன் படிப்பை முடித்துவிட்டு, சொந்தத்தில் ஒரு தொழிலைத் தொடங்கினான். அவன் அதற்குப் பிறகு ஓராண்டு சென்று அந்த ஆசிரியரை சந்தித்து, ‘நீங்கள் என் மாமனின் மனத்தை மாற்றி என் வாழ்க்கையைத் திருப்பிவிட்டதால், இன்று நான் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன்’ என்று கூறி, அவருக்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.

நாம் செல்லும் பாதையைவிடச் சிறந்த பாதை ஒன்று தெரியுமானால், அதை ஏற்றுக்கொள்ளுதல்தான் அறிவின் கடமை.

‘எவற்றைச் செய்ய வேண்டும்?’ என்ற விளக்கத்தைவிட, ‘எவற்றைச் செய்யக்கூடாது?’ என்ற விளக்கம் மிகப்பயனுடையது. சோம்பேறித்தனத்தை வளர்க்கும் செயல்களையும், ஆடம்பரமான காரியங்களையும், பிறர் மனம் புண்படும்படியான செயல்களையும், ‘அறிவில்லாத செயல்’ என்ற அழுகல் கணக்கில் வரும் செயல்களையும் அறவே புறக்கணித்தல் அவசியம்.

என் அனுபவத்தில் பார்த்த பல விஷயங்களைக் கூறி, அவற்றைச் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

35,000 ரூபாய் ஆண்டு வருமானம் வர வேண்டிய ஓர் எஸ்டேட்டை, 65,000 ரூபாய் வரை செலவு செய்த பிறகும் ஒரு தன்வந்தரால் இலாப நிலைக்குக் கொண்டுவர முடியவில்லை. அந்த நிலையில் அவர் அதை விற்க முற்படுகிறார் என்று தெரிந்தால், எவ்வளவு பெரிய தனவந்தராக இருப்பினும் அதை வாங்கக்கூடாது. அதில் எங்கேயோ கோளாறு இருக்கின்றது. அந்தக் கோளாறு தெரியாமல் வாங்கிவிட்டு, பிறகு திணறக்கூடாது. இது அறிவுக்குப் புறம்பான செயல். மேலும் இது பெருமைக்கு ஆசைப்பட்டுச் சிறுமையை விலை கொடுத்து வாங்குவதாகும்.

ஒரு பிஎச்.டி. பட்டதாரிக்கு அந்தக் காலத்தில் 700 ரூபாய் மாத வருமானம். அவர் வாழ்க்கையில் அகலக் கால் வைத்து, ஆடம்பரமாகச் செலவு செய்து, 30,000 ரூபாய் கடனாளியாகிவிட்டார். அந்த நிலையில் அவர் திருந்துவதாக நினைத்துக்கொண்டு, ‘இனிமேல் மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்வதில்லை’என்று தீர்மானித்தார். அப்பொழுதும் அவர் திருந்தவில்லை. வருமானத்திற்கு மேல் செலவைப் பெருக்கிக்கொள்வதும், கண்களை மூடிக்கொண்டு கடன் வாங்கி, பிறகு விழி பிதுங்கி நிற்பதும் அறிவற்ற செயலின் சிகரங்களாகும்.

‘பத்தாயிரம் ரூபாய் சொத்து இல்லாத ஒருவர் பத்து லட்சம் கடன் வாங்கி இருக்கின்றார்’ என்ற வதந்தி உன்னை வந்து சேர்ந்தால், அதை அப்படியே நம்பி ஊரெல்லாம் பரப்புவது அறிவுக்குப் பொருத்தம் இல்லாத, அர்த்தமற்ற செயலாகும்.

‘மற்றவர்களுடைய உழைப்பின் பலன் தனக்கு வரும்’என்று கணக்குப் போட்டு, அதன் போக்கில் வேலை செய்தால், அவர்களுடைய உழைப்பின் பலன் அவர்களை நாடித்தான் போகும். உன் அறிவீனத்தின் பலன் மட்டுமே உன்னைத் தேடி வரும்.

உன்னுடைய கடமைகளை மற்றவர்கள் நிறைவேற்றும் வகையில் நீ வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், கடமைகள் நிறைவேறா; கடன்களே நிறையச் சேரும்.

‘வாழ்க்கையில் எந்த ஒரு செயலும் முழுமையானது’ என்ற அறிவு இல்லாமல், பணி செய்யும் இடங்களில் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்துவிட்டு, சுயநலம் காரணமாகத் தன் வீட்டுக் காரியங்களை மட்டும் பொறுப்போடு செய்து, அதற்குரிய பலனை எதிர்பார்த்தால், வேலை செய்யும் இடங்களில் செய்த தவறுகளுக்கு இங்கே தண்டனைதான் கிடைக்கும்; பலன் கிடைக்காது.

மேலதிகாரிகளுக்கு ஆத்திரமூட்டும் காரியங்களை ஏராளமாகச் செய்து, இயக்குநருக்கு எதிரியான ஒருவரைத் தலைமை ஏற்க வைத்து விழாக் கொண்டாடினால், அதன் பின்விளைவாக ஒருவருக்கு வேலை போகின்றது. 5 ஆண்டுகளாக வேலை தேடியும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அவருக்கு அதற்கான காரணத்தை உணர முடியவில்லை. ‘எனக்கு ஏன் இந்த நிலை?’ என்று பொருமுகின்றார். அவர் செய்த தவற்றுக்குத்தான் அந்த நிலை. கையிலே பணம் இல்லை. ஆனால் மனத்தில், ‘சொந்தத்தில் எப்படியாவது ஒரு வீடு கட்டிவிட வேண்டும்’ என்று ஆசை துடிக்கின்றது. கடன் வாங்கி மனை வாங்குகின்றார். பிறகு வாங்கிய கடனுக்குத் தம் சம்பளத்தை வாங்கி, வட்டியாகக் கட்டுகின்றார். வாழ்க்கையை ஓட்ட அவருக்கு விழி பிதுங்கிப் போகின்றது. பிறகு அவர் எந்தப் பிறவியில் வீட்டைக் கட்டி முடிக்கப்போகின்றார்? இது போன்ற அர்த்தமற்ற ஆசைகளை அடிப்படையாகக் கொண்ட காரியங்களைச் செய்தல் கூடாது.

ஒவ்வொருவருடைய வாழ்விலும் நல்லெண்ணம் கொண்டு செயல்படக்கூடிய ஒரு நல்ல ஆத்மா இருக்கும். அந்த ஆத்மாவிடமே தம் பெருமையைப் பறைசாற்றிக்கொள்ளும் குணம் பலரிடம் உண்டு. அவர்கள் ஒன்றை உணர வேண்டும். அந்தக் குணத்தால் அந்த ஆத்மாவிடம் இருந்து மட்டுமே கிடைத்துக்கொண்டு இருக்கும் ஒரேயொரு சௌகரியத்தையும் இழக்க நேரும்.

‘தனக்குக் கீழேயுள்ளவர்கள், தன் பொறுப்பை நிறைவேற்றுவார்கள்’ என எதிர்பார்த்தாலும், ‘அது நடக்காது; நாளைக்கே தன் பதவி அவர்களுக்குப் போய்விடும்’ என உணர முடியாத நிலை, அவல நிலையாகும்.

‘மாமனாரோ, மற்றவர்களோ சம்பாதித்த சொத்தை, தான் அனுபவிக்கலாம்’ என்னும் வகையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், ‘முதலில் ஓரளவு சௌகரியமாக இருக்குமே தவிர, பின்னால் எல்லா விஷயங்களும் பிரச்சனையாக மாறிவிடும்’என்பதை பலர் உணர்வதில்லை. உணர்ந்தால் உபத்திரவம் இல்லை.

அன்னையைத் தெய்வமாக உணர்ந்து, ஏற்றுக்கொள்ளுதல் ஆத்மாவுக்குச் சிறப்பு. அன்னையின் முறைகளை உணர்ந்து, வாழ்வில் கடைப்பிடித்தால், வாழ்க்கையில் நிச்சயம் தோல்வி இருக்காது. நம் முயற்சியின் அளவுக்கு ஏற்ப வெற்றியின் அளவுகளும் இருக்கும். அளவுகள் கூடலாம், குறையலாம்; ஆனால் இந்த உலகத்திலிருந்து கிடைக்கும் மற்ற எல்லாவற்றையும் விட அவை மகோன்னதங்களாக இருக்கும்.

அன்னைக்குக் கடுமையான நோன்புகள் தேவையில்லை. ஆனால் பக்குவமான, கண்ணியமான கட்டுப்பாடு தேவை. கட்டுப்படாமல் ஓடும் நீர் கட்டாறு ஆகின்றது. கட்டுப்படுகின்ற நீர் மின்சாரம் ஆகின்றது. காட்டாறாக ஓடுகின்ற நம்மை மின்சாரமாக ஒளி பெற வழிகாட்டுகின்றார் அன்னை. இதை உய்த்து உணர்ந்து, நிதானமாகப் பக்குவத்தை மேற்கொண்டால், நம் அன்றாட வாழ்வு அன்னை வழியில் ஆத்மிகச் சிறப்பு நிறைந்த யோக வாழ்வாக மாறும்.

*****



book | by Dr. Radut