Skip to Content

20. ஆங்கிலப் பரீட்சை

நான் பள்ளியில் ஆசிரியராக இருந்து, அதை விட்டுவிட்டு விவசாயத்தையும், அன்னையின் சேவையையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. நான் ஆசிரியப் பணியைச் செய்த கடைசி நேர அனுபவத்தில், அன்னையின் அருள் ஓர் ஆர்வமுள்ள மாணவனின் வாழ்வில் வெளிப்பட்டதை இப்பொழுது கூறுகின்றேன்.

அது ஆண்டு இறுதி. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு பரீட்சைக்கு முன் படிப்பதற்காக விடுமுறை விடப்பட்டிருந்தது. ஒரு நாள் மாலை பள்ளி முடிந்து எல்லாரும் போன பிறகும், நான் மற்றோர் ஆசிரியரிடம் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அந்த ஆசிரியர் ஒரு பெரிய நிலச்சுவான்தார். என்னுடன் ஆசிரமத்துக்கு வந்து போய்க்கொண்டிருக்கும் அன்னையின் பக்தர். பழம்பெருந் தேசிய இயக்கத்தில் உள்ள பிடிப்பால் காந்தி ஆசிரமம் நடத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர்; காங்கிரஸ்வாதி. ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்த நாங்கள், நேரம் போனதே தெரியாமல் பேசிக்கொண்டு இருந்துவிட்டோம்.

அப்பொழுது தூரத்தில் எங்களுக்காக யாரோ ஒரு மாணவன் காத்திருப்பதாகத் தெரிந்தது. அவன் எங்களில் யாருக்காகக் காத்திருக்கிறான் என்று தெரியவில்லை. அவன் அப்படி நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்தான். நாங்கள் எழுந்து போய்ப் பார்த்தோம். எனக்காக ஓர் எஸ்.எஸ்.எல்.சி. மாணவன் காத்துக்கொண்டிருந்தான்.

நான் சற்றுத் தொலைவில் நின்றுகொண்டு, நான் தென்னந்தோப்புக்குப் போக இருப்பதாகவும், நாளை வந்து சந்திக்கும்படியும் அவனிடம் கூறினேன். அவன் ஏதும் பேசவில்லை; போகவும் இல்லை; நின்றுகொண்டே இருந்தான். ‘என்னிடம் உடனே தெரிவிக்க வேண்டிய விஷயம் ஏதேனும் இருக்குமோ? அவன் அதைத் தெரிவிக்க இயலாது திணறிக்கொண்டு நிற்கிறானோ?’ என்று எண்ணிக்கொண்டே, மேலும் நடந்து போய் அவனை நெருங்கினேன்.

அவன் முகத்தில் உணர்ச்சிப்பெருக்கு. என்னை அருகே பார்த்ததும் மரியாதை காரணமாக நெளிந்தான். ‘பேப்பர் வந்துவிட்டது’ என்கிறான். கொஞ்சம் நிறுத்தி, ‘நல்ல மார்க் கிடைத்திருக்கிறது’ என்கிறான். பிறகு பேச முடியாமல் திணறுகிறான். பரவசத்திற்கும் சரி, வெள்ளத்திற்கும் சரி, நிதானம் இருப்பதில்லை; இரண்டுமே பாய்ந்துகொண்டு வரும். அப்படிப்பட்ட நிலையில் இருந்த அவனுக்கு அப்பொழுது ஓர் அணை போட நினைத்து, ‘வீட்டுக்கு வா; பேசலாம். நீ முன்னால் போ. நான் பின்னால் வருகிறேன்’ என்று கூறி அவனை அனுப்பிவிட்டு, நண்பரிடம் விடை பெற்றுக்கொண்டு, நான் வீட்டுக்குப் புறப்பட்டேன். அவன் எனக்கு முன்னால் போய்க் காத்துக்கொண்டிருந்தான். அவன் முகம் பிரகாசமாக இருந்தது. ஏதோ கூறுவதற்கு அவன் உதடுகள் துடித்தன; கண்கள் கலங்கியிருந்தன. ‘என்ன விஷயம்? என்ன மார்க்?’ என்று கேட்டேன். அவன் பதிலிறுக்காமல் தன் பையில் பேப்பரைத் தேட ஆரம்பித்தான். நான் உள்ளே சென்று கை, கால்களைச் சுத்தம் செய்துகொண்டு, காப்பி சாப்பிட்டுவிட்டு, வீட்டின் முன் பகுதியில் இருக்கும் அறைக்கு வந்தேன். அவன் மலர்ந்த முகத்துடன் ஆங்கிலப் பேப்பரை என்னிடம் கொடுத்தான்.

டிசம்பர் இறுதியில் இதே மாணவன் என்னிடம் வந்து ஆங்கிலம் பயிற்றுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். எங்கள் பள்ளியில் பிப்ரவரி கடைசி வாரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார் செய்வதற்காக, எல்லாப் பாடங்களிலும் Preparatory Examination நடத்துவார்கள். ஆகவே, பிப்ரவரி 15க்கு மேல் மாணவர்களை அந்தத் தேர்வுக்கும், அதற்குப் பின் வரும் பொதுத் தேர்வுக்கும் தயார் செய்ய ஆரம்பிப்பதால், அவர்களைப் பொருத்தவரை பள்ளியும், பாடம் கற்பதும் முடிந்து விடும். அவன் மிகக் காலதாமதமாக என்னை அணுகியிருந்தான். டிசம்பர் முடியப் போகின்றது. இடையில் இருக்கும் 45 நாள்களுக்குள் முறையாகக் கற்பிப்பதென்பது இயலாத காரியம்.

நான் அதைச் சொல்ல இருந்தேன். அவன் அதைப் புரிந்துகொண்டது போல முந்திக்கொண்டான். ‘சார், நான் ஆங்கிலத்தைத் தவிர மற்ற எல்லாப் பாடங்களிலும் முதல் அல்லது இரண்டாவதாக வருவேன். ஆங்கிலத்தில் இதுவரைக்கும் எனக்குப் பாஸ் மார்க் கிடைத்ததில்லை. நான் மற்ற பாடங்களில் எடுக்கும் அதிக மதிப்பெண்கள் காரணமாக இதுவரை நான் பாஸ் செய்தேன். இது எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலத்தில் 35 மதிப்பெண்கள் வாங்கவில்லை என்றால், பாஸாக முடியாது. ஆங்கிலத்தைப் பொருத்தவரை மனப்பாடம் செய்வதும் சிரமமாக இருக்கிறது. இலக்கணம் வரை நீங்கள் கற்றுக்கொடுத்து, நான் வாங்கும் மதிப்பெண்களைவிட 10, 15 மதிப்பெண்களை அதிகமாக வாங்க உதவினால் பாஸ் செய்துவிடுவேன்’ என்றான்.

அவனுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் போதுமான அவகாசம் இல்லை. ஆண்டுத் தொடக்கத்தில் அவன் இவ்வாறு கேட்டிருந்தால் முயன்று பார்த்திருக்கலாம். இலக்கணம்தான் பாடத்தைவிடக் கடினம். அவனுக்கு மனப்பாடமே வராத நிலையில், நான் ஊசி முனையில் ஒட்டகத்தைத் திணிப்பது எப்படி? அதுவும் தேர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில்! அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ‘நீ எத்தனை மதிப்பெண்கள் பெற்றாய்?’ என்றேன். பதில் தயக்கமாக வந்ததே தவிர, மதிப்பெண்கள் என்னவென்று சொல்லவில்லை அவன். கூறுவதற்குக் கூச்சப்படுகிறான். அந்த அளவுக்கு அவன் மிகக்குறைந்த மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

‘இவனுக்கு நான் உதவ முடியாதே’ என்று சங்கடப்பட்டேன். என்றாலும் அதைச் சொல்லத் தயக்கமாக இருந்தது. என் தவிப்பையும், தயக்கத்தையும் உணர்ந்தவன் போல, தன் நிலையை அவன் உருக்கத்தோடு விவரித்தான். அதிலிருந்து எனக்குப் பல செய்திகள் கிடைத்தன: அவனுடைய வகுப்பு ஆசிரியர் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை; வெளியூரிலிருந்து தினமும் சைக்கிளில் 9 மைல் வந்து போகின்றான்; அவனுடைய குடும்பத்தில் பள்ளியின் வாசலை மிதித்த முதல் நபர் அவன்தான்; எல்லாப் பாடங்களையும் படிப்பதற்கு அவன் எவ்வளவு நேரம் செலவழிக்கின்றானோ, அவ்வளவு நேரத்தை ஆங்கிலப் பாடத்திற்காக மட்டும் செலவிடுகின்றான், என்றாலும் அவனால் பாஸ் செய்ய முடியவில்லை.

‘முடியாது’ என்று சொல்லப்போவதாக முடிவுகட்டிவிட்ட அவன், மளமளவென்று கண்ணீர் விட்டான். அந்தக் கண்ணீர் அவன் கன்னத்தை நனைத்ததைவிட, என் நெஞ்சத்தை நனைத்ததே அதிகம். இரும்புக்கடலையை விழுங்கத் தயாராகி, அவனை ஏறிட்டுப் பார்த்தேன். ‘எதுவும் திட்டமிட்டுச் செய்ய முடியாத நிலையில், ஒரு மிகப்பெரிய வேலையைக் குறுகிய காலத்தில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய். உன் எண்ணத்திற்கு ஆண்டவன் துணை நிற்கட்டும்’ என்று கூறி, நான் அவனை ஏற்றுக்கொண்டேன்.

நான் மறுநாள் மற்ற மாணவர்களுக்குப் பாடம் நடத்தியபொழுது, அவனால் அதில் சரிவரக் கலந்துகொள்ள முடியவில்லை. அவர்களெல்லாம் இலக்கணப் படிப்பை முடித்துவிட்டார்கள். அதனால்தான் அவர்களுக்குச் சமமாக அவனால் கலந்துகொள்ள முடியவில்லை. எல்லா மாணவர்களையும் அனுப்பிவிட்டு அவனைச் சிறிது சோதனை செய்தேன். ஒன்றிலும் அவன் உருப்படியாக இல்லை. ஆக, ‘அவனை நான் ஏற்றுக்கொண்டது எனக்கு ஏற்பட்டிருக்கும் மிகக்கடுமையான சோதனை’ என்பது புரிந்தது.

அதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் விடுப்புக் கடிதம்கூட எழுதத் தெரியாத ஒருவருக்கு, பிரைவேட்டாக பி.ஏ. தேர்வு எழுத ஆங்கிலம் மட்டும் கற்றுத் தந்தேன். என் நண்பர்களுக்கு அது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது. ‘கறுப்பு நாயை நீங்கள் வெள்ளை நாயாக்கப் பாடுபடுகிறீர்கள். முடிகிற காரியமா அது?’ என்றெல்லாம் ஏளனம் செய்தார்கள். அது எனக்கு ஒரு சவாலாக அமைந்தது. இரவு, பகலாக முயன்றேன். முடிவில் கறுப்பு நாய் வெள்ளை நாயாகிவிட்டது! என் மாணவர் பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார்.

அத்தகைய சவால் ஒன்றை மீண்டும் நான் ஏற்றுக்கொண்டிருக்கின்றேன். அதாவது, ஆங்கில இலக்கணம் தெரியாதவனைத் தேர்வில் வெற்றி பெறச் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருக்கின்றேன். அது நிறைவேறுவதற்குப் போதுமான நாள்கள் இல்லை. மழுங்குணி மாங்கொட்டையாக இருந்த மாணவனை, மந்திரவாதியின் மாமரத்தைப் போல வளர்த்துக் காட்ட வேண்டும். நான் தயார்; ஆனால் அவன் தயாராக இல்லை. ஆங்கிலம் வாராத மாணவர்கள் நெட்டுருப் போட்டு மனப்பாடம் செய்து சமாளித்துக்கொள்வார்கள். இந்த மாணவனுக்கு மனப்பாடமும் வரவில்லை. மேற்கொண்டு என் சிந்தனைக்கு எந்த வழியும் புலப்படவில்லை. அன்னையைத்தான் நினைத்துக்கொண்டேன். ‘ஆங்கிலத்திற்கும் அன்னைக்கும் எப்படித் தொடர்பு ஏற்படுத்தலாம்?’ என்பது எனக்குப் புரியவில்லை.

மாணவனை மறுக்க முடியாததால் ஏற்பட்ட கஷ்டம், என்னைப் பிரார்த்தனையை நோக்கிச் செலுத்திற்று. ‘உன்னால் முடிந்ததை எல்லாம் செய்து முடித்தால், மீதியை அன்னை செய்வார்’என்ற பொன்மொழி என் நினைவுக்கு வந்தது. ‘உன்னால் முடிந்ததை எல்லாம் செய்து முடி’ என்று பையனிடம் எப்படிச் சொல்ல முடியும்? என்னால் ஏதாவது முடிந்தால், அதைச் செய்யலாம். அந்தப் பையனுக்காக நான் என்ன செய்யலாம்? கற்றுத் தரலாம். ஆனால் கற்க முடியாதே! பிறகு என்னதான் செய்வது? ஒன்றும் தோன்றவில்லை. அப்பொழுது, ‘மற்றவர் கண்ணோட்டத்தில் பிரச்சனையைப் பார்த்தால், சிக்கல் அவிழும்’ என்று அன்னை கூறியது நினைவுக்கு வந்தது.

அதன் மூலம் ஒன்று புரிந்தது. நான் அவனாக வேண்டும். அந்நிலையில் நின்று பார்த்தபொழுது புதிர் புரிந்தது. ‘அவனுக்குப் பாடத்தைத் திணிக்க முயல்வது பாறையைக் கிளறி விவசாயம் செய்வதைப் போன்றது. எனவே, அந்த முயற்சியை விட்டுவிட்டு, அவனுக்கு மனப்பாடம் கூடிவர உதவி புரியலாம்’ என்றெண்ணி, ‘சொந்தமாக ஓரளவு ஆங்கிலம் எழுதக் கற்றுக்கொண்டால், மனப்பாடம் செய்வதில் உள்ள சிரமம் குறையும்’என்று அவனிடம் கூறினேன். ‘எங்கள் வகுப்பில் முதல் மாணவன் உள்பட, அனைவரும் ஒரு வரிகூடச் சொந்தமாக எழுதத் தெரியாமல் இருக்கும்போது என்னால் அது முடியுமா?’ என்று கேட்டான் அவன். ‘அது மனப்பாடத்திற்கு மிகவும் உதவி செய்யும்’ என்று பல சான்றுகளுடன் நான் எடுத்துக் கூற, அவன் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டான்.

எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் அமைந்த எளிய வாக்கியம் ஒன்றை அவனுக்குக் கற்றுக் கொடுத்து, ‘இதே போல நூறு வாக்கியங்களை எழுதினால் நல்லது. அது போலவே 10, 12 முக்கியமான அமைப்புகளைக் கற்றுக் கொள்ளலாம்’ என்றேன். அவன் தெரிந்துகொண்டான் என்றாலும், புரிந்து கொள்ளவில்லை. அவன் எழுதிய வாக்கியங்களில் நான் சொல்லிய மூன்றும் (எழுவாய், பயனிலை, செயப்படு பொருள்) இருந்தாலும், மற்றவை எல்லாம் தவறாகவும், குளறுபடியாகவும் இருந்தன. இந்தக் குறைகள் நீங்க வேண்டுமானால் பயிற்சி அவசியம்.

‘சரியோ, தவறோ, இன்னும் 100 எழுது’ என்றேன். காலை 9 மணிக்கு எழுதத் தொடங்கினான். பகல் 12 மணிக்கு 100 எழுதி முடித்தான். படித்துப் பார்த்தால் அத்தனையும் பிழைகள் என்றாலும், நான் அவனைக் கோபித்துக் கொள்ளவில்லை. அவனை மேலும் தொடருமாறு பணித்தேன். அவன் வீட்டுக்குப் போகவில்லை. முளை அடித்தது போல உட்கார்ந்து மாலை 5 மணிக்கெல்லாம் 500 வாக்கியங்களை எழுதிவிட்டான். என் அன்றைய 17 ஆண்டு சர்வீஸில் அது போன்ற ஓர் ஆர்வத்தை மாணவரிடையே நான் கண்டதில்லை. 500இல் எதுவுமே சரி இல்லை என்றாலும், பாதகம் இல்லை.

அவனுடைய ஆர்வம் அளவிடற்கரியது. இந்த ஆர்வத்தைப் பயிர் செய்து, பயன்மிக்கதாக விளைய வைக்க ஆசிரியப் பயிற்சி முறைகளிலோ, மொழி-இலக்கண ஆராய்ச்சிகளிலோ இதுவரை ஒரு திட்டமும் அமைக்கப் படவில்லை. கல்வியின் அடிப்படையை இங்கிருந்துதான் தொடங்க வேண்டுமே தவிர, அரிச்சுவடியில் அன்று. திட்டம் இருக்கட்டும், அந்தப் பையனின் ஆர்வத்திற்கு அன்னை துணை செய்வார்; அவன் பாஸ் செய்துவிடுவான் என்று நான் நம்பினேன். எப்படி என்பது எனக்கு விளங்கவில்லை. எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது; விளக்கம் தெரியவில்லை; அது தேவையும் இல்லை.

நான் அவனுக்கு முழு மனத்துடன் பாடம் சொல்லிக் கொடுத்தேன். காலையில் அவனுக்குப் பாடத்தை முடித்துவிட்டு, நான் பாண்டிச்சேரிக்குப் போய் மாலையில் திரும்பும் வரை அவன் எழுதிக்கொண்டிருப்பான். நான் திரும்பி வந்து அவன் எழுதியதை எல்லாம் வாங்கித் திருத்திக் கொடுப்பேன். அவன், திருத்தங்களை எல்லாம் திருத்தி எழுதிக் காண்பித்த பிறகே வீட்டுக்குப் புறப்பட்டுப் போவான். 3, 4 நாள்களுக்குள் ஒன்றிரண்டு வாக்கிய அமைப்புகள் பெரும்பாலும் அவனுக்குப் பிடிபட்டுவிட்டன. ‘தனக்குச் சரியாக எழுத வருகின்றது’ என்ற நம்பிக்கை அவனுடைய ஆர்வத்தை உந்துசக்தியாக ஊக்கி உயர்த்தியது.

டிசம்பர் 25இல் தொடங்கி ஜனவரி 17இல் பள்ளி திறப்பதற்குள் முக்கியமான 10, 12 வாக்கிய அமைப்புகளைக் கற்றுக்கொண்டுவிட்டான். அதை மேலும் வளர்ப்பதற்காக அவனுடைய பாடப் புத்தகத்தில் உள்ள ஒரு கதையைச் சொந்தமாக எழுதக் கற்றுக்கொடுத்தேன். ஒருவாறு கருத்து விளங்கும் அளவுக்கு அதை எழுதி முடித்துவிட்டான். அது எலி, புலியைப் பிடித்ததற்கு ஒப்பாகும். சாதனை என்ற அளவிலே அவனுக்குச் சந்தோஷம்; எனக்குப் பரம திருப்தி.

இதெல்லாம் பரீட்சையில் மதிப்பெண்கள் வாங்க உதவா. ஆனால் தூண்டுதலாக அமையும்; அமைந்தது. இந்த முன்னேற்றத்தால் அவனுக்கு இலக்கணமும் பிடிபட்டது. மற்றொரு மாணவனிடம் இருந்த நோட்டை அவனிடம் கொடுத்து, பழைய இலக்கணப் பாடங்களைப் படித்துப் பார்க்கச் சொன்னேன். அவன் எழுத்துகளில் சிறு சிறு பிழைகள் இருந்தன என்றாலும், கருத்து சரியாக இருந்தது. இருபதே நாள்களில் அவனிடம் காணப்பட்ட முன்னேற்றம் அரியது. இப்பொழுது அவனுக்கு இலக்கணக் குறிப்புகள் புரிந்தமையால், பாடப் புத்தகம் முழுவதிலுமிருந்து பல வாக்கியங்களை எடுத்து இலக்கணப் பயிற்சி கொடுத்தேன். மேலும் சில நாள்களுக்குப் பிறகு பிழைகள் குறைந்து, விலகி விட்டன. பாடப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு பாடத்தையும் தன் சொந்த ஆங்கில நடையில் எழுதிப் பார்க்கும் அளவுக்கு அவன் முன்னேறிவிட்டான். இப்பொழுது அவனுக்குத் தேர்வு, கொட்டும் தேள் அன்று; சுவையூறும் தேன்.

அன்னை அவனுக்கு அனுக்கிரகம் செய்ததை நினைக்கும்போதும், அந்த மாணவன் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியை நினைக்கும்போதும் நான் இன்னும் நெகிழ்ந்துபோகின்றேன்.

பிப்ரவரி கடைசி வாரத்தில் Preparatory Examination வந்தது. அதாவது பயிற்சிக்கான தேர்வு. ‘அந்தத் தேர்வில் நீ மனப்பாடம் செய்து எழுதாமல், சொந்தமாகவே ஆங்கிலக் கட்டுரைகளை எழுத வேண்டும்’என்று நான் கூறியபொழுது, அவன் பயந்துபோனான். ‘வீட்டில் எழுதிப் பார்க்கலாம். ஆனால் தேர்வில் எழுதப் பயமாக இருக்கிறது’என்றான். ‘எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் நீ மனப்பாடம் செய்து எழுது. இது நம் பள்ளித் தேர்வுதானே? பயம் இல்லாமல் சொந்தமாக எழுது’என்று கூறி, அதற்கு அவனைச் சம்மதிக்க வைத்தேன். அந்த மாணவன் என்னிடம் தேர்வு விடைத்தாளைக் கொடுத்த பொழுது, அந்த இரண்டு மாத அனுபவங்கள் என் மனத்தில் ஒரு கணம் தோன்றி மறைந்தன.

விடைத்தாளில் மதிப்பெண்களைப் பார்த்தேன். 66 என்றிருந்தது. என்னால் நம்ப முடியவில்லை. பிரமிப்புடன் அவனைப் பார்த்தேன். அவன், ‘அதில்லை சார், விசேஷம்’ என்றான். ‘அதற்கு மேலும்கூட ஒரு விசேஷம் இருக்குமா; என்ன விசேஷம்?’ என்று கேட்டேன்.

‘ஆங்கில ஆசிரியர் வகுப்பிற்கு வந்து என் பெயரை அழைத்து, ‘யாரது?’ என்று கேட்டார். கடைசி பெஞ்சிலிருந்த நான் எழுந்து நின்றேன். ‘நீதானா அது?.... நீ இந்த வகுப்பு மாணவனா?’ என்று கேட்டார் அவர். ‘ஆம்’ என்றேன் நான். ‘இந்த வகுப்பில் நீ நடுவில் வந்து சேர்ந்தாயா?’ என்று கேட்டுவிட்டு என்னை மேலும், கீழுமாகப் பார்த்தார். ‘நான் இந்தப் பள்ளியில் 6 வருடங்களாகப் படிக்கிறேன். சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் நீங்கள் எனக்குப் பாடம் எடுக்கின்றீர்கள்’ என்றேன்.

ஆனாலும் அவருக்கு என்னைத் தெரியவில்லை. ‘நீ ஆங்கிலப் பேப்பரில் என்ன செய்தாய்? எப்படி எழுதினாய்? யார் கொடுத்த நோட்ஸ்?’என்று கேட்டார். ‘நான் சொந்தமாக எழுதினேன்’ என்றேன். அவருக்குப் புரியவில்லை. வகுப்பில் யாரும் என் பேச்சை நம்பவில்லை. ஆசிரியர் என்னை இமைக்காது பார்த்துக்கொண்டே, ‘நான் நேற்று எல்லாப் பேப்பர்களையும் திருத்தி முடித்த பிறகு சாப்பிட உட்கார்ந்தேன். என் மகன் நான் திருத்தி வைத்த ஒவ்வொரு தாளையும் எடுத்து மொத்த மதிப்பெண்களையும் கூட்டி முடித்தான். முதல் மதிப்பெண் யாருக்கு? என்று கேட்டேன். உன் பெயரைச் சொன்னான். உன்னை எனக்கு யார் என்று தெரியவில்லை. வழக்கமாக ராமச்சந்திரன்தான் முதல் மதிப்பெண் வாங்குவான். அவனுடைய மதிப்பெண் என்ன என்று பார்த்தால், 64ஆக இருந்தது. முதல் இடத்தில் இருந்தவனைக் கீழே பிடித்துத் தள்ளிய மாணவன் யார் என்று தெரிந்துகொள்ளப் பரபரத்தேன். கையலம்பிவிட்டு வந்து உன் விடைத்தாளைப் பார்த்தேன். நான் அதில் மதிப்பெண்களைப் பாரபட்சம் இல்லாமல் சரியாகப் போட்டிருக்கிறேன். மதிப்பெண்களைக் கூட்டிய என் மகனும் சரியாகவே போட்டிருக்கிறான். நீ நன்றாகவே எழுதி இருக்கிறாய். உனக்கு எனது பாராட்டுகள்’ என்றார். அதைக் கேட்டதும் வகுப்பில் அதிர்ச்சி; எனக்குப் பேரதிர்ச்சி! 5ஆம் வகுப்பிலிருந்து ராமச்சந்திரன்தான் முதல் மாணவனாக விளங்கிவந்தான். நான் அவனையும் மிஞ்சி, 66 மதிப்பெண்கள் பெற்றது மிகப்பெரிய அதிசயம். என்னால் அதைத் தாங்க முடியவில்லை’ என்று தொண்டை கரகரக்க, கண்கள் கலங்கக் கூறி முடித்தான் அந்த மாணவன்.

அந்த மாணவன் பாஸ் செய்ததற்காக விழாக் கொண்டாடலாம். ஏனென்றால் முயற்சி திருவினையாக்கிய நிகழ்ச்சி அது. அவனுடைய பேரார்வத்தைப் போற்றி அன்னை, ராமச்சந்திரனையும் தாண்டி அழைத்துச் சென்றார்கள். அன்னையின் அற்புதங்கள் ஒவ்வொன்றும் அப்படிப்பட்டவை.

*****



book | by Dr. Radut