Skip to Content

02. சத்திய ஜீவியம்

பாரதப் போரை ‘தர்ம யுத்தம்’ என்போம். கிருஷ்ண பரமாத்மா உலகில் அவதாரம் எடுத்து, துஷ்டர்களைத் தண்டித்து, சிஷ்ட பரிபாலனம் செய்து, 18 நாள்கள் யுத்தம் நடத்தி, தர்மத்தை உலகில் நிலைநாட்டினார்.

தெய்வங்கள் வானுலகில் சத்திய வாழ்க்கை நடத்தலாம். ஆனால் அவர்கள் பூவுலகில் அவதரித்து வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர்களின் இயல்பான சத்தியத்தின் மாற்று சற்று குறைந்தேபோகும். பொன்னால் ஆபரணம் செய்ய வேண்டுமானால், அதில் பொடி சேர்க்க வேண்டியது அவசியமாகின்றது. அதே போல தர்ம யுத்தத்தில் வெற்றி காண்பதற்கு, தர்மத்தின் மாற்றைச் சற்று குறைத்து, வாழ்க்கைக்கே சொந்தமான பொய்யை அதில் பொடியாகக் கலந்தால்தான் வெற்றி கிட்டும். பரமாத்மாவே தர்மபுத்திரரைப் பொய்யுரைக்குமாறு செய்தார். சூரியன் அஸ்தமனமானதாக ஒரு பொய் நிகழ்ச்சியை உருவாக்கினார். போர் தர்மத்திற்கு மாறாக, துரியோதனனைத் தொடையில் அடித்து வீழ்த்துமாறும் கூறினார். ‘பொய் என்பது வாழ்க்கையில் சிருஷ்டியினால் ஏற்பட்ட முத்திரை. அவதாரப்புருஷனும் அந்த விதிக்கு உட்பட்டேயாக வேண்டும்’ என்பது மகாபாரதத்தின் படிப்பினை.

அன்னையின் யோகத்தில் வாழ்க்கை புறக்கணிக்கப்படுவதில்லை. அன்னை வாழ்க்கையில் படிந்திருக்கும் பொய்யின் சுவட்டை அறிந்து, அதை ஏற்றுக்கொண்டு செயல்படுகின்றார். அதனால்தான் அவர் அந்தப் பொய்யைக் கரைக்க முனைகின்றார். ‘வாழ்வு’ என்பது ஜீவியம். ஜீவியத்தை முழுவதும் சத்திய ஜீவியமாக்க அன்னை விழைகின்றார். அவரின் விழைவை விளைச்சலாக்கிக் காட்டுவதற்கு நாம் முதலாகவும், முடிவாகவும் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம் வாழ்க்கையில் திரையாக விழுந்து கிடக்கும் பொய்யை நாம் முழுதுமாக விலக்கிவிட வேண்டும். இதைச் செய்வது கடினம். செய்துவிட்டாலோ அன்னை சிறப்பாகச் செயல்பட்டுச் சாதனைகளை நமக்குப் பரிசாக அளிக்கின்றார்.

யோக இலட்சியக் கண்ணோட்டத்தை விடுத்து, சாதாரண மனித வாழ்வின் நோக்கில் அன்னை வழியில் அமைந்த வாழ்க்கையைப் பார்த்தோமானால், அது சிறப்பு மிக்க, வளம் நிறைந்த, உயர்வு பொருந்திய, ஒளிமிகுந்த வாழ்க்கையாகத் தோன்றும். கார்ப்பொரேஷன் பள்ளிக்கும், கான்வென்ட்டுக்கும் உள்ள வேறுபாடு போன்றது அது. பசுமைப் புரட்சிக்கு முன்பு செங்கற்பட்டு சிறுமணியை எருவிட்டுப் பயிர் செய்தான் விவசாயி. இன்று அவன் I.R.20ஐ ரசாயன உரமிட்டுப் பயிரிடுகின்றான். மாற்றம் குறிப்பிடத்தக்கது.

அந்தக் காலத்தில் ஆயிரம் வேலிக்குச் சொந்தக்காரரான பெரிய மிராசுதாரும் வெள்ளிப் பிடியிட்ட பெட்டி வண்டியில்தான் போக வேண்டும். இந்தக் காலத்தில் அதே வாகனம் மாற்றம் அடைந்து மாருதி காராகவும், மற்றவையுமாகி இருக்கின்றன. தர வேறுபாட்டால் கான்வென்ட் படிப்பு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கின்றது. அதே போல விஞ்ஞான வளர்ச்சியால் விவசாயமும், வாகனமும் மாறிப் பொலிவு பெற்றுள்ளன.

சத்தியத்தின் சிறப்பால் அன்னை வழி அமைந்த வாழ்வு, மனித வாழ்வில் அது போன்றதொரு பெரிய மாறுதலுடன் விளங்குகின்றது. அத்தகைய மேலான வாழ்வை நாம் ஒவ்வொருவரும் பெற முடியும். அதற்காகச் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதாவது சத்தியத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பொதுவாக ‘சத்தியம்’ என்றால் உண்மை. நான் சொல்வதை, ‘பொய் சொல்லக்கூடாது’ என்று யாரும் புரிந்துகொள்வார்கள். அது உண்மைதான். என்றாலும் அது உண்மையின் ஒரு பகுதியே.

இக்கட்டுரையில் நான் ஒரு கருத்தை விளக்க முற்படுகிறேன். ‘சத்தியத்தின் சாயல் எந்த ரூபத்தில் இருந்தாலும், அதைக் கண்டவுடன் அன்னையின் சக்தி விரைந்து செயல்படுகின்றது’ என்பதே அக்கருத்து. ‘சத்தியம்’ என்பது பெரிய இலட்சியம். அதன் கூறுகள்: நம்பிக்கை, நல்லெண்ணம், சேவை, சீரிய வழிபாடு, தெளிந்த அறிவு, சிறந்த உழைப்பு, தெய்வ தரிசனம், ஆர்வம், முறைமை (Faith, Goodwill,Service, Right Attitude, Clarity, Hardwork, Darshan, Enthusiasm, Systems) என்பனவாகும்.

பல கட்டுரைகளில் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளைச் சான்றாக வைத்து மேற்கூறிய கருத்தைப் புரிய வைக்க முயல்கிறேன்.

சைக்கிள் அடிக்கடி தொலைகின்றது. தொலைந்தால் கிடைப்பதில்லை. நூற்றுக்கு ஒன்று கிடைப்பதே அபூர்வம். அப்படிக் கிடைத்தாலும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று அலைந்து திரிந்து அல்லாட வேண்டியிருக்கின்றது. இது நடப்பியல் உண்மை.

சுவாமிநாதன் என்பவர், என் மகனுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆசிரமத்திற்குச் சென்றார். அதை வாசலில் பூட்டி வைத்துவிட்டு, ஆசிரமத்திற்குச் சென்று ஸ்ரீ அரவிந்தர்-அன்னை சமாதியைத் தரிசித்துவிட்டு வெளியில் வந்து பார்த்தால், சைக்கிளைக் காணவில்லை. சுவாமிநாதன் அதிர்ச்சியும், பரபரப்பும் அடைந்து தவிப்பதாக எனக்குச் செய்தி வந்தது. நான் அது பற்றிய விவரங்களை எல்லாம் முழுவதுமாகக் கேட்டு அறிந்த பிறகு, ‘சுவாமிநாதனை அமைதியாக இருக்கச் சொல்’ என்று கூறி அனுப்பினேன்.

இத்தகைய சந்தர்ப்பங்களில் யாருக்கும் அமைதி வருவதில்லை; வருவது கடினம். வந்துவிட்டால் அது யோகம். சுவாமிநாதனும் நான் விடுத்த அறிவுரையை ஏற்று அமைதி அடையவில்லை. இரண்டு தடவை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ப் புகார் கொடுக்க முயன்றார். ஏனோ கொடுக்காமல் திரும்பினார்; குழம்பினார்; புயலில் சிக்கிய படகுபோல அலைக்கழிந்தார்.

அவர் படும்பாட்டை நான் அறிந்தேன். மீண்டும் நான், ‘சுவாமிநாதன் தங்கமான பிள்ளை. நல்லெண்ணம் மிக்கவர். சைக்கிளைப் பத்திரமாகப் பூட்டி வைத்திருக்கின்றார். பிறகு சமாதிக்குப் போயிருக்கின்றார். அதற்குச் சற்று முன்னதாக, சேவையாக அன்னை பற்றிய இரண்டு புத்தகங்களை விற்று இருக்கின்றார். சுவாமிநாதன் கையால் பொருள்கள் தொலையா. அதுவும் நம்முடைய சைக்கிள் நிச்சயமாகத் தொலையாது. இப்பொழுது ஒன்றுதான் முக்கியம்; சுவாமிநாதன் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும்’ என்று அவருக்குச் செய்தி அனுப்பினேன்.

பிறகு அவர் முயன்றிருக்கிறார். முயற்சி அளவிலேயே பலன் கிடைத்து விட்டது!

மறுநாள் காலையில் சைக்கிளை எடுத்தவர்-பூட்டைத் திறந்து எடுத்தவர்-ஒரு போலீஸ் ஸ்டேஷனில் அந்தச் சைக்கிளைக் கொண்டுவந்து ஒப்படைத்து, ஏதோ ஒரு விளக்கமும் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

முதல் நாள் இரவு 7 மணிக்கு காணாமல்போன சைக்கிள், மறுநாள் காலை 10 மணிக்கெல்லாம் தன்னாலேயே வீடு வந்து சேர்ந்துவிட்டது!

'சைக்கிள் எப்படித் தொலைந்தது?’ என்ற ஆராய்ச்சியை விலக்கி, ‘எப்படிக் கிடைத்தது?’ என்று பார்த்தால், அதன் உள்ளீடு நன்கு புலன் ஆகும். அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட அனைத்தும் தூய்மையானவை. சுவாமிநாதன் சைக்கிளை வைத்த இடம் ஆசிரமத்தின் வாசல்; அவர் சென்றது சமாதி தரிசனத்திற்கு; சைக்கிளை அலட்சியப்படுத்தாமல் கவனமாகப் பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்; அதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகச் சேவை உணர்வோடு அன்னையின் இரண்டு புத்தகங்களை விற்றிருக்கின்றார்; அவர் இயல்பில் நல்லவர்; நம்மிடம் நல்ல ஈடுபாடு உடையவர்; இத்தனையும் நிறைந்த ஒருவருடைய பொருள் பறிபோகாது. சுவாமிநாதன் விஷயத்திலும் பறிபோகவில்லை. அது தன்னாலேயே வீடு வந்து சேர்ந்துவிட்டது.

இவை எல்லாம் சுவாமிநாதனுக்குத் தெரிய நியாயம் இல்லை. ‘கவலை’ என்ற மத்து, ‘மனம்’ என்ற தயிரைக் கடையும்பொழுது, குழப்பம்தான் குமுறி வெடிக்கும். சுவாமிநாதனும் அந்தக் குழப்பத்தில் சிக்கி, இரண்டு முறை புகார் கொடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அது தேவை இல்லை. நல்லெண்ணம், பொறுப்பு, சேவை நிறைந்த இடங்களில் அன்னையால் விரைந்து செயல்பட முடிகின்றது.

‘27,000 ரூபாய்க்கு நீண்ட காலமாக விற்க முடியாத நிலத்தை, சமாதி தரிசனம் செய்த பிறகு ரூ.81,000க்கு விற்க ஏற்பாடாகியது. சம்பந்தப்பட்டவரின் கோபத்தால் அந்த ஏற்பாடு தடைப்பட்டது. மீண்டும் அவர் சமாதி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தபொழுது, ‘வேண்டாம்’ என்று கையை உதறிக்கொண்டு போனவரே நிலத்தை வாங்குவதற்காகக் காத்துக்கொண்டு இருந்தார்’ என்ற ஒரு நிகழ்ச்சியை நான் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு.

அந்த நிலத்துக்குச் சொந்தக்காரர் அன்னையின் பக்தர் அல்லர். அவர் தரிசனத்திற்குத் தற்செயலாக வந்தவரே தவிர, பக்தியோடு வந்தவரல்லர். 81,000 ரூபாய் ஏற்பாடு கை நழுவிப் போன பிறகு, ‘27,000 ரூபாய் கிடைத்தாலே போதும்’ என்று இறங்கிவந்து, என்னிடம் அந்த நிலத்தை விற்றுத் தரும்படிக் கேட்டார். ‘81,000 ரூபாய்க்கு ஒரு பைசா குறையாமல் உங்களுக்குக் கிடைக்கும். அது சமாதி தரிசனம் நிர்ணயித்த விலை. ஏன் தவறியது எனத் தெரியவில்லை. மீண்டும் சமாதி தரிசனம் செய்யுங்கள். அந்த விலைக்கே நிலம் விற்பனையாகும்’ என்றேன் நான்.

தன் தவற்றை உணர்ந்தார். முழுநம்பிக்கையுடன் சென்று சமாதி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியபொழுது, பேச்சை முறித்துக்கொண்டு போனவரே 81,000 ரூபாய்க்கு நிலத்தை வாங்கக் காத்துக்கொண்டிருந்தார்!

‘27,000க்கு விற்றாலே போதும்’ என்ற நிலைக்கு இறங்கிவந்துவிட்ட அவர், தரிசனத்தின் மகிமையால் உச்சபட்ச ஆதாயத்தை அடைந்தார். இந்தத் தரிசனம் மகிமையைத் தேடித் தந்தது எப்பொழுது? அவர் முழுமையாக நம்பிக்கை கொண்டபொழுது, அவர் நம்பிக்கையுடன் சென்றபொழுது, பிரச்சனை மறைந்து, பெரிய லாபம் கிடைத்தது.

அன்னையின் பக்தர் அல்லாத ஒருவர் நம்பிக்கை கொள்ளும்பொழுது, அந்த நம்பிக்கையின் மூலம் அன்னை செயல்பட முடிகின்றது. நம்பிக்கை - அதுவும் தெய்வ நம்பிக்கை - வாழ்க்கையில் சத்தியத்தின் மணிச்சுடராகும்.

1949இல் எம்.ஏ. முதல் வகுப்பில் தேறிய ஓர் இளைஞர், அச்சகம் ஒன்றில் வேலை செய்தார். வேலையில் பிடிப்பும் இல்லை; வருமானமும் இல்லை. ‘ஆசிரமத்தில் சேவை செய்தால் வாழ்வில் உயர்வு கிடைக்கும்’ என்பதை ஒரு நண்பர் மூலம் அறிந்து, வேலையை விட்டுவிட்டு ஆசிரமத்திற்கு வந்து ஆறு மாதக் காலம் உணவுப் பகுதியில் சேவை செய்தார். அச்சமயம் பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு வேலைக்கு விண்ணப்பித்தார். 250 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. அந்தக் காலத்தில் ஒரு டெபுடி கலெக்டருக்குக் கிடைக்கக்கூடிய சம்பளம் அது. அவர் அந்த நிறுவனத்தில் வளர்ந்து, வளர்ந்து உச்சக்கட்டத்திற்கு உயர்ந்து, 10,000 ரூபாய் சம்பளத்தில் ஓய்வு பெற்றார். அது சேவையின் மகத்துவம்.

அவருடன் பட்டப்படிப்புப் பெற்ற வேறு யாருமே அவர் அளவுக்கு வாழ்க்கையில் உயரவில்லை. அவர்களுள் ஒருவர் போஸ்ட்மாஸ்டராகவும், மற்றொருவர் ஒரு பெரிய புத்தகக் கடையில் ஸ்டால் சூப்பரின்டென்டாகவுமே ஓய்வு பெற்றனர்.

அந்த அன்பர் செய்தது சேவை. அச்சக வேலையைத் துறந்துவிட்டு வந்து ஆசிரமத்தில் சேவை செய்தார். வேலையைத் துறப்பதும், வருமானத்தை இழப்பதும் மனித வாழ்வில் பெரிய செயல்கள். அவர் அந்தப் பெருஞ்செயல்களை, சேவையைக் கருதி மிகஎளிதாகச் செய்தார். அவருடைய சேவை சிறப்பானது. சேவையை ஏற்றுக்கொண்ட அவரின் மனப்பான்மை அரியது. அவை நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்டவை. அறிவில் சேவையைப் பற்றிய தெளிவும், அதன் பலனில் நம்பிக்கையும், நம்பிக்கையின் காரணமாக இருந்த வேலையை விட்டுவிட்ட மனத்திண்மையும் சேவையுடன் சேர்ந்துகொண்டதால், ஆறு மாத சேவை முப்பது ஆண்டுகளுக்குப் பலன் கொடுத்தது.

1972இல் வேலை தேடி வந்த ஓர் இளைஞரை, ஆசிரம வெளியீடு ஒன்றை விற்றுச் சேவை செய்யுமாறு கூறினேன். ‘10 பிரதிகளை விற்றாலே பலன் இருக்கும்’ என்றேன். மூன்று பிரதிகளை விற்றவுடனேயே அவருக்கு நல்லதொரு வேலை கிடைத்துவிட்டது. வேலை கிடைக்க வேண்டியே புத்தக விற்பனையாகிய சேவையை அவர் ஏற்றுக்கொண்டார். ‘விற்பது எத்தனை சிரமம்?’ என்பதை எடுத்த எடுப்பிலேயே அவர் புரிந்துகொண்டார். பொழுதைப் போக்குவதற்காகவே படிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு மத்தியில், தெய்வம், சத்தியம், ஒழுங்கு என்று அறவெறி வகுப்பு நடத்தும் நல்ல நூல்கள் எப்படி விற்பனையாகும்? அவர் புத்தகத்தை நீட்டினாலே எல்லாரும் ஓட ஆரம்பித்து விட்டார்கள். இருந்தாலும் அவர் முயற்சியை விடவில்லை. தோல்வியிலும் துவளாத அவருடைய முயற்சி அற்புதமானது. ‘வேலை கிடைக்க வேண்டும்’ என்பதற்காக சேவையை மேற்கொண்ட அவர், பிறகு வேலையையே மறந்துவிட்டு, புத்தக விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுவிட்டார். அவருடைய ஈடுபாடு புனிதமானது. அதன் காரணமாக அவருக்கு விரைவிலேயே ஒரு வேலை கிடைத்துவிட்டது. எனினும், சேவையை அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் நூற்றுக்கும் அதிகமான பிரதிகளை விற்று மகிழ்ந்தார்.

பலன் கருதித்தான் அவர் சேவையைத் தொடங்கினார் என்றாலும், பலன் கருதாது செய்தார். அது பவித்திரமான சேவையாகின்றது. அதனுடன் உயர்ந்த முயற்சியும் சேர்ந்துகொள்கின்றது. சேவையும், முயற்சியும் உள்ள இடத்தில் ஆர்வம் தானாக வருகின்றது. இவற்றில் ஒன்று இருந்தாலும் அன்னையால் விரைந்து செயல்பட முடியும். அந்த இளைஞரிடம் அத்தனையும் சேர்ந்து அமைந்திருந்தன.

ஒரு கோடி ரூபாயை இழந்து திவாலான அமெரிக்கர் ஒருவர், அன்னைக்குக் காணிக்கை செலுத்தி, இழந்ததைப் போல இரண்டரை மடங்கு பெற்றார். அவருக்கு ஆரம்பத்தில் அன்னையின் மீது நம்பிக்கை இல்லை. அதோடு அவருடைய தம்பி ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டதால், அவருக்கு ஆசிரமத்தின் மீது வெறுப்பு. அப்படிப்பட்டவர் விஷயத்தில் எப்படி அன்னையின் அருள் பேரளவில் விரைந்து செயல்பட முடிந்தது?

ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவன் எதையாவது பற்றிக்கொண்டு கரை சேரத் துடிப்பான். அதே போல அந்த அமெரிக்கருக்கும், ‘எதையாவது பற்றிக்கொண்டு கஷ்டத்திலிருந்து கரை சேர்ந்தால் போதும்’ என்ற நிலை. அன்னையின் அருள் தம்மைக் கரை சேர்க்கும் என்று நம்பத் தொடங்கினார். ‘அன்னைக்குக் காணிக்கையாக 10 டாலர்களை அனுப்புங்கள்’ என்று எழுதினால், 20 டாலர் அனுப்பினார். ‘நீங்கள் குறித்து அனுப்பிய எல்லா வழி முறைகளையும் முழுமையாகப் பின்பற்றுகிறேன்’ என்று எழுதினார்.

வாதப் பிரதிவாதங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இது பெரிய மன மாற்றம். மனத்தை மாற்ற எடுக்கும் முயற்சி, மனித வாழ்வில் பெரு முயற்சி. அது ஓயாது உழலும் உணர்வால் செய்யும் முயற்சி என்பதால், உடலால் செய்யும் உழைப்பைவிட உயர்ந்தது. அந்த அமெரிக்கர் சொல்லியவண்ணம் செய்தார். சுத்தம், ஒழுங்கு, தணிந்த பேச்சு, நிதானம் போன்ற அன்னையின் எல்லா முறைகளையும் அவரும், அவர் மனைவியும், அவருடைய இரு குழந்தைகளும் கடைப்பிடித்தார்கள். அன்னையை முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள்.

அவருடைய பெற்றோர் மிகவும் பிடிவாதக்காரர்கள். ஆசிரமத்தில் இருந்த தம் இளைய மகனைப் பார்க்க வந்துவிட்டு அமெரிக்கா திரும்பியபொழுதெல்லாம் தந்தைக்கு 40 இலட்சம், 4 கோடி என்றெல்லாம் வர இருந்த சமயங்களிலும், 30 கோடிக்கு ஒரு மிகப்பெரிய ஆர்டர் கிடைத்த சமயத்திலும், ‘அன்னைக்கு காணிக்கை அனுப்புங்கள்’என்று அவருடைய இளைய மகன் வேண்ட, ‘எனக்கு வருவதெல்லாம் என் உழைப்பால் வருகிறதே தவிர, அன்னையால் வரவில்லை’ என்று காணிக்கை அனுப்ப மறுக்க, வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தையும் அடித்துக்கொண்டு போனதுபோல, வர வேண்டிய பெரிய பணத்துடன், இருந்த பணமும் சேர்ந்து போக, ‘அன்னை காப்பாற்றினால்தான் உண்டு’ என்ற நம்பிக்கையும், சரணாகதியும் ஊற்றுக்கண் போலப் பெருக, மனத்தை மாற்றிக் கொண்டு, தம் பெரிய மகனோடு சேர்ந்து, தம் பங்காக 100 டாலரை அன்னைக்குக் காணிக்கையாக அனுப்பினார்.

அவர் முன்னால் செய்தது பிடிவாதம்; பின்னால் செய்தது சரணாகதி. பிடிவாதத்தை விட்டது சிறந்த மனப்பான்மை. தாய், தந்தை, மகன், மருமகள், பேரக் குழந்தைகள் என்று குடும்பத்தோடு அன்னையைச் சரணாகதி அடைந்தது மிகப்பெரிய மாற்றம். இவ்வாறு குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக்கொள்வதால் ஏற்படும் பலனை, செய்து பார்த்தால்தான் உணர முடியும். மேலும் அவர்கள் அன்னையை மட்டுமே வழிபடவும் முடிவு செய்தனர். அதன் காரணமாகத்தான் அன்னையால் பூரணமாகவும், விரைவாகவும் செயல்பட முடிந்தது.

70 வயதுக்கும் மேலான வீர சைவப் பிரம்மச்சாரியான ஒருவர் நீரூற்றுக் கண்டுபிடிப்பு நிபுணர். அன்னையின் பக்தரான பின்பு, தாமே வலிய முன் வந்து ஆரோவில் நகரில் 18 இடங்களில் நீரூற்றைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டு அன்னையைத் தரிசிக்க வந்தார். அப்பொழுது அவர், ‘காணிக்கை தேவையில்லை; ஆசீர்வாதம் மட்டுமே வேண்டும்’ என்று கூறிவிட்டுக் கடலூருக்குத் திரும்பினார். பிறகு ஒரு வருடத்திற்குள் அவருடைய தொழில் 30 ஆண்டுகளில் செய்த அளவுக்குப் பெருகியது. ஆனால் வருமானம் மட்டும் பெருகவில்லை. எலலாம் நிலுவையாக நின்றன. அவர் அதை என்னிடம் கூறி வருத்தப்பட்டார். அப்பொழுது நான், ‘நீங்கள் ‘அன்னைக்குக் காணிக்கை தேவை இல்லை; ஆசீர்வாதம் மட்டும் போதும்’ என்றீர்கள். அதனால் உங்களுக்கு அன்னையின் ஆசீர்வாதம் கிடைத்தது. அதனால் தொழில் பெருகியது. செய்த தொழிலில் பணமும் கிடைக்க வேண்டுமானால் நீங்கள் அன்னைக்குக் காணிக்கையும் செலுத்தி இருக்க வேண்டும்’ என்றேன்.

அவர் தம் தவற்றை உணர்ந்தார். மாதம் ஒன்றுக்கு 30 ரூபாய் மட்டுமே செலவிட்டு வாழ்க்கையைச் சிக்கனமாக ஓட்டிக்கொண்டிருந்த அவர், நூறு ரூபாயைக் காணிக்கையாக அனுப்பினார். அவருக்கு வர வேண்டிய பெருந் தொகை முழுவதும் உடனே வந்துவிட்டது. ஏதோ மந்திர சக்தியைப் போல அது வேலை செய்தது. அந்தப் பெருமாற்றம் எப்படி நிகழ்ந்தது?

ஒரு நீரூற்றைக் கண்டுபிடிக்க ரூ.50 வாங்கும் அவர், அன்னையின் நகரான ஆரோவில்லுக்குச் சேவையாக 18 நீரூற்றுகளைக் கண்டுபிடித்துக் கொடுத்தார். இது மாபெருஞ்சேவை. யாராலும் தூண்டப்படாமல் தாமே முன்வந்து அந்தச் சேவையைச் செய்தார். அந்தச் சேவைக்குப் பெரும்பலன் உண்டு. அன்னையை முதன்முதலில் தரிசிக்க வந்தபொழுது, ‘இங்கே என்ன முறை?’ என்று கேட்டார். ‘ஆத்மீகப் பலனுக்கு மலரும், வாழ்க்கை வளத்திற்குக் காணிக்கையும் செலுத்துவது முறை’ என்றேன்.

‘காணிக்கை தேவை இல்லை’ என்று கூறிவிட்டு, அன்னைக்கு மலர்ச் சமர்ப்பணம் செய்துவிட்டுத் திரும்பிய அவர் முகத்தில் தெய்வீக தேஜஸ் ஜ்வலித்தது. கடுமையான அவர் குரல் கடுமையை இழந்திருந்தது. படபடப்பான அவர் சுபாவம் பதப்பட்டிருந்தது. அமைதியை அறியாத அவர் மனம் அமைதியால் சூழப்பட்டது. சமாதியை வாரந்தோறும் வந்து வழிபட்டார். அவர் சமர்ப்பித்த மலர்க் காணிக்கை ஆத்மாவை மலரச் செய்தது. ஒவ்வொரு முறையும் சமாதியைத் தரிசித்த பிறகு ஆர்டர்கள் வந்து குவிந்தன. ஆனால் பணம் மட்டும் வரப் பல்லாயிரம் தடைகள் இருந்தன. அவருடைய குறையை எடுத்துக் காட்டியவுடன் மனத்தை மாற்றிக்கொண்டார். ‘நான் பேசினால் மற்றவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டுமே தவிர, எதிர்த்துப் பேசக்கூடாது’ என்ற சுபாவம் உள்ள அவர், மனத்தை மாற்றிக்கொண்டது பெரிய விஷயம். தம் சேவையாலும், பிரம்மச்சரியத்தாலும், தரிசனத்தாலும் விளக்கம் பெற்றவர், குதர்க்கப் புத்தியால் ‘காணிக்கை தேவையில்லை’ என்றார். சேவையின் காரணமாகத் தொழில் பெருகியது. அவர் சொல் பலித்தது. ஆனால் பணம் வர மறுத்தது. அதற்குத் தன் புத்தி தடையாக இருந்ததை உணர்ந்து மாறினார். சேவையுடன் கூடிய மனம் பிரவாகமாக வந்தது. சேவைக்கு மகத்துவம் உண்டு; காணிக்கைக்குப் பொருள் உண்டு.

ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளரைச் சந்தித்து, அந்நிறுவனத்தின் வளர்ச்சி குறித்துப் பேசினார் என் நண்பர். அது நம் நாட்டின் மிகப்புகழ் பெற்ற நிறுவனம். அது 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரவுலிசெலவு செய்யக்கூடியது. அந்நிறுவனத்தின் உரிமையாளரை ‘Businessman of the Year’ என்று அந்த வருடம் தேர்ந்தெடுத்திருந்தனர். அந்நிறுவனத்தை எப்படி மேலும் சிறப்புறச் செய்யலாம் என்பது பற்றி என் நண்பர் விளக்கியதைக் கவனமாகக் கேட்ட பிறகு, ‘நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. இங்குள்ள நிலவரத்தை நேரில் பார்க்காமலே உங்களால் எப்படி இவ்வளவு தெளிவாகச் சொல்ல முடிகிறது?’ என்று வியந்த உரிமையாளர், ‘எங்கள் நிறுவனத்தை study செய்து ஒரு ரிப்போர்ட் கொடுத்து உதவுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்.

நண்பரும், நானும் சேர்ந்து ரிப்போர்ட் தயார் செய்தோம். ரிப்போர்ட்டில் குறிக்கப்பட்ட அத்தனை யோசனைகளும் அன்னையின் முறையை அடிப்படையாகக் கொண்டவை. பொதுவாக அன்னையின் முறைகளை முழுமையாகப் பின்பற்றினால், 12 மாதங்களில் வருமானம் இரண்டு மடங்காகப் பெருகும். ‘சிறப்பாக அவற்றைப் பின்பற்றினால் ஒவ்வோர் ஆண்டும் வருமானம் இரட்டிப்பாகக் கூடும்’ என்பது எங்கள் அனுபவம். ‘அவையெல்லாம் அந்த மிகப்பெரிய நிறுவனத்திற்குப் பொருந்துமா?’ என்ற ஐயமும் கூடவே எழுந்தது. அதனால் எங்கள் ரிப்போர்ட்டில் அதை வலியுறுத்திக் குறிப்பிடாமல், பொதுவான 4 கருத்துகளையும், குறிப்பாக 120 யோசனைகளையும் மட்டுமே தெரிவித்து இருந்தோம்.

உரிமையாளர் ரிப்போர்ட்டைப் பெரிதும் விரும்பினார். ‘ரிப்போர்ட்டில் காணப்படும் யோசனைகளைப் பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்’ என்று ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருந்தோம்.

அந்த நிறுவனத்தின் வருடாந்திரக் கணக்கை ஒவ்வோர் ஆண்டும் ஜூனில் முடிப்பார்கள். நாங்கள் ரிப்போர்ட் கொடுத்த ஓராண்டுக்குப் பிறகு ஜூன் மாதம் வரவு-செலவுக் கணக்கை எடுத்துப் பார்த்தார்கள். வரவு-செலவு 440 கோடியிலிருந்து 600 கோடியைத் தாண்டிவிட்டிருந்தது. நிகர லாபம் 20 கோடியிலிருந்து 60 கோடியாக உயர்ந்துவிட்டது. இரு மடங்குகளுக்கும் மேலான பலனை அளித்தது அன்னை முறை. அதற்குக் காரணம் என்ன?

அந்த நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்கள் தரத்திற்குப் பெயர் போனவை. உற்பத்தி செய்யும் இடத்தில் காணப்படும் சுறுசுறுப்பு வியப்புக்குரியது. அதன் உரிமையாளர் அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகப் பட்டதாரி. ஏராளமான சிஸ்டங்களைக் கையாள்கின்றார். மேலும் புதிய முறைகள் இருந்தால், அவற்றை ஆர்வத்துடன் பின்பற்றத் தயாராக இருக்கின்றார். எல்லாவற்றுக்கும் மேலாக அவார்டு வாங்கிய பிறகும் மற்றவர்களிடமிருந்து புதியனவற்றைக் கற்றுக்கொள்ள விழையும் மனப்பான்மை இருக்கின்றது. அது அடக்கத்தின் சிகரம் போன்றது. தரம், இலட்சியம், system, சுறுசுறுப்பு, அடக்கம் போன்ற உயர்ந்த அம்சங்கள், அன்னையின் சக்தி பெரிய அளவில் செயல்படத் துணையாக நின்றன.

‘சத்தியம்’ என்பது அஞ்ஞானக் கலப்பு இல்லாமல் உறையும் உலகம் (Supramental world). தெய்வலோகத்திற்கும் மேலேயுள்ள உலகம் ‘விஞ்ஞான லோகம்’ எனப்படும். அந்த உலகத்தின் சக்தியை அன்னை நம் வாழ்வில் செயல்படச் செய்கின்றார். அதன் விளைவுகள் அற்பு, சொற்பமாக இரா. பெரிய மாற்றங்களாகவும், ஏற்றங்களாகவும் இருக்கும் என்பதை, மேற்கூறிய சான்றுகள் தெளிவாகச் சொல்கின்றன.

உலகத்திற்குப் புதிதாகக் கிடைத்துள்ள தெய்வீகச் சக்தி அது. உலகம் பொய்ம்மையால் நிறைந்ததானாலும், அதன் ஆத்மீக அடிப்படையான சத்தியத்தையும், அதன் வடிவங்களான விசுவாசம், நம்பிக்கை, முயற்சி, விடா முயற்சி, தெய்வ நம்பிக்கை, பக்தியுடன் கூடிய ஆர்வம், நேர்மை, அடக்கம் போன்ற அம்சங்களையும் கடைப்பிடித்தால், அன்னையின் சக்தி நம் வாழ்வில் சிறப்பாக வெளிப்பட முடியும்.

இந்தப் பெரிய இலட்சியங்களை நடைமுறை வாழ்வில் நாம் எந்த உருவில் சந்திக்கின்றோம்? அவற்றுக்கு மாறானவை எவை? அறிவால் செயல்படுபவன் வாழ்வில் காணும் அம்சங்கள் என்ன? உடல் உழைப்பு நிறைந்த இடத்தில் என்ன காணப்படுகின்றது? மற்றவர்களுடன் பழகும்பொழுது இந்தத் தெய்வீகச் சத்தியம் எந்த உருவில் நம்முள் வருகின்றது? - இவைதாம் ஓர் எளிய மனிதன் அறிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள். ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் எழுதியுள்ளவற்றிலிருந்து தொகுத்து மனம், வாழ்வு, உடலுக்குப் பொருத்தமான சத்திய வடிவங்களையும், அவற்றை ஒட்டிய அடைப்புக்குள் அவற்றிற்கு எதிரான பொய்யின் உருவங்களையும் கீழே தருகின்றேன்.

உழைப்பு நிறைந்த வாழ்வில் காணப்படுபவை: (1) சுறுசுறுப்பு (சோம்பேறித்தனம்), (2) தூய்மை (அழுக்கு), (3) அமைதி (மந்தம்), (4) நம்பிக்கை (சந்தேகம்), (5) உழைப்புக்கு வேண்டிய சக்தி (உறக்கம்), (6) ஒழுங்கு முறை (ஒழுங்கீனம்), (7) நேரத்தோடு செயல்படுதல் (கால தாமதம்), (8) அறிவு (மடமை), (9) செயலின் தெளிவு (குழப்பம்), (10) மற்றவரை அனுசரித்தல் (பிடிவாதம்), (11) மாற்றிக்கொள்ள முன்வருதல் (மாற்றத்தை மறுக்கும் குணம்), (12) பெருந்தன்மை (இழிகுணம்), (13) முறைகள் - systems (திட்டமின்றிச் செயல்படுதல்).

வாழ்வில் முக்கியமான அம்சங்கள்: (1) தன்னலமற்ற தன்மை (சுயநலம்), (2) அடக்கம் (கர்வம்), (3) பொறுமை (கோபம்), (4) அவா அடக்குதல் (பேராசை), (5) நிதானம் (வேகம்), (6) நல்லுணர்வு (கிளர்ச்சி), (7) தாமாக வருவனவற்றை மட்டுமே ஏற்றுக்கொள்ளுதல் (வலிந்து கேட்டுப் பெறுவது), (8) பணிவு (செருக்கு), (9) இனிமையாகப் பழகுதல் (பிறர் மனத்தைப் புண்படுத்துதல்), (10) மகிழ்ச்சி (சலிப்பு, விரக்தி), (11) நல்ல எண்ணம் (கெட்ட எண்ணம்).

அறிவுக்குப் பொருத்தமானவை: (1) பிறர் நோக்கைப் புரிந்துகொள்ள முயல்வது (தன் கருத்தை வலியுறுத்துவது), (2)அறிவில் தெளிவு (மனக் குழப்பம்), (3) உயர்ந்த புத்தி (மந்த புத்தி), (4) புதிய கருத்தை ஏற்றுக்கொள்ளும் பரந்த மனப்பான்மை (குறுகிய நோக்கம்), (5) நினைவாற்றல் (மறதி), (6) சீரிய சிந்தனை (சிறிய சிந்தனை).

பொய்களை விலக்கும்போது மனத்தின் இருள் மறைகின்றது; சத்தியத்தின் வெளிச்சம் பரவுகின்றது. இந்த வெளிச்சமே அன்னையின் அருள் வெளிப்பாட்டுக்கு வைகறையாக அமைகின்றது.

*****



book | by Dr. Radut