Skip to Content

17. வீடும் விடிவும்

அந்த அன்பர் அரக்கோணத்தைச் சேர்ந்தவர். அவர் அரக்கோணத்தின் அருகில் உள்ள சிற்றூரில் அஞ்சல் அலுவலகம் ஒன்றில் துணை அலுவலராகப் பணியாற்றி வருகிறார். அவருக்குத் திருமணமாகிவிட்டது. அவர் மனைவி ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அன்பரின் சொந்த வீட்டில் அவரும், அவர் மனைவியும், குழந்தைகளும், அவர் தாயாரும், தங்கைகளும் ஒன்றாக வசித்து வந்தார்கள்.

அவருடைய வீடு வீடாக இல்லை. வீட்டில் கடந்த பல வருடங்களாக எப்பொழுதும் சண்டையும், சச்சரவுமாக இருந்தன. அவரின் மனைவிக்கும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் ஓயாத சண்டை. அது இரவு, பகலாக நீடித்தது. நேரம், காலம் இல்லாமல் வீடு கூச்சலும், குழப்பமுமாகக் கொந்தளித்தது. மருமகளுக்கும், மற்றவர்களுக்கும் உண்டாகும் சண்டை இறுதியில் கணவன்-மனைவி சண்டையாக மாறிவிடும்.

அந்த அன்பருக்குத் தம் தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டிய கடமை இருந்தது. ஆனால் அவர் மனைவிக்கோ அதில் உடன்பாடு இல்லை. இது பற்றியும், இன்னும் பல சச்சரவுகள் காரணமாகவும் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்த அந்த அம்மையார், கணவரையும், குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து சென்று, தம் தாய் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார்.

அன்பருக்கு வாழ்க்கை ஒரு பிரச்சனையாகிவிட்டதைப் போல அவருடைய சொந்த வீடும் ஒரு பெரும் பிரச்சனையாக இருந்தது. இருபத்தைந்து, இருபத்தாறு வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட அந்த ஓட்டு வீடு, இப்போது அநேகமாக ஓட்டை வீடுதான். வீடு அங்கும், இங்குமாக இடிந்து விழ ஆரம்பித்துவிட்டது. ‘மேலும் இடிந்து, வீடு மோசமான நிலைக்குப் போய்விட்டால் அதைச் செப்பனிட நிறையச் செலவாகும்’ என்று நினைத்த அன்பர், வீட்டைச் செப்பனிட முயன்றார். அவரிடம் இதற்காக பணம் இருந்தது. ஆனால் அதைச் செய்ய முடியாத அளவுக்கு எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்பட்டு, அவர் கையிலிருந்த பணம் முழுதும் கர்ப்பூரமாகக் கரைந்துவிட்டது. வீடோ மேலும் மேலும் மோசமாகப் பழுதாகிக்கொண்டு வந்தது. அதே சமயத்தில் அவருடைய உடல் ஆரோக்கியமும் கோளாறாகியது.

எல்லா வகைகளிலும் பாதிக்கப்பட்ட அந்த அன்பர், தம் மனைவியைத் தம்மோடு வாழ்விக்க வகை செய்யுமாறு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதனால் ஆத்திரமூட்டும் அசம்பாவிதங்கள் சில ஏற்பட்டன. அவர் மனைவி பிரிந்து சென்ற பிறகுகூட வீட்டில் சண்டைகளும், சச்சரவுகளும் குறையவில்லை. சாதாரண விஷயங்கள்கூடப் பெரிய சிக்கல்களாக மாறி, வீடே போர்க்களமாகிக் கொண்டிருந்தது.

அன்பர் அந்தச் சூழலிலிருந்து விலகி இருக்க விரும்பியோ என்னவோ, தாம் பணிபுரிந்து வந்த சிற்றூரில் தம் அலுவலகத்தின் அருகே ஒரு சிறு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அவர் குடும்ப விவரங்களை முன்னிட்டோ அல்லது உடல்நலக் குறைவால் ஓய்வு எடுக்க விரும்பியோ தம் சொந்த வீட்டுக்கு எப்பொழுதேனும் செல்வார். அவர் அங்கே சென்ற அரை மணி நேரத்துக்குள் ஏதாவது நடக்க, அது பெரிய சண்டையாக உருவெடுக்கும். அதனால் அவர் உடனே வீட்டை விட்டு வெளியேறி வேறு எங்கேனும் அமைதியைத் தேடிப் போக வேண்டியதாகிவிடும்.

நீண்ட காலமாக இதே நிலைதான். அவருக்குச் சொந்த வீட்டில் நிம்மதியாக ஒரு மணி நேரம்கூட இருக்க முடிவதில்லை. ‘வீட்டுக்குப் போக வேண்டும்’ என்று நினைத்தாலே அவர் மனத்தில் திகிலும், பீதியும் ஏற்பட்டுவிடும். பாசத்துக்கும், அன்புக்கும், ஆனந்தத்துக்கும், அமைதிக்கும் உறைவிடமாக இருக்க வேண்டிய வீடு களையிழந்து, பொலிவிழந்து, சுடுகாடு போலக் காட்சி அளித்தது.

இவ்வாறாக அவர் மட்டுமன்றி, அவர் வீட்டிலுள்ள அனைவருமே அமைதியை விரும்பினார்கள்; சண்டையை வெறுத்தார்கள். ஆனால் என்ன காரணத்தாலோ அவர்களால் சண்டை போட்டுக்கொள்ளத்தான் முடிந்ததே தவிர, அமைதியைக் காக்க முடியவில்லை. சண்டை போட்டுக்கொள்வதுகூட ஓர் அற்பமான நிம்மதிக்குத்தான் என்பது நியதி. ஆனால், சண்டை போட்டுக் களைத்த பிறகுகூட அவர்களுக்கு நிம்மதி ஏற்படுவதில்லை. இரவில் உறங்கும்போதும் பலவிதமான பயங்கரக் கனவுகள் ஏற்பட்டுத் தூங்க முடியாமல் துன்பத்தை அநுபவித்து வந்தார்கள்.

அந்த அன்பரின் தாயார், ‘இந்த வீட்டில் ஏதோ கோளாறு இருக்கிறது’ என்ற முடிவுக்கு வந்தார். மந்திரம், தந்திரம், யந்திரம் முதலியவற்றில் தேர்ந்தவர்களான மந்திரவாதிகளையும், குறிகாரர்களையும் அணுகி ஆலோசனை கேட்டார். ‘வீட்டில் உங்களுக்கு வேண்டாதவர்களால் பல வருடங்களுக்கு முன் ஏவல், செய்வினை முதலியவை செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தாதவரையில் வீட்டில் உள்ளவர்கள் அமைதியின்றிப் பல பயங்கர அல்லல்களை அநுபவிக்க நேரிடும்’ என்று அவர்கள் கூறினார்கள்.

அதற்குப் பிறகு அந்த வீட்டுக்கு ஏற்பட்டிருந்த இடரை நீக்குவதற்கு அவர்கள் எத்தனையோ முயன்றும், எதுவும் பலன் அளிக்கவில்லை. ஆனாலும் அவர்களால் அந்த வீட்டை விட்டுச் செல்ல முடியவில்லை; தொடர்ந்து வசிக்கவும் முடியவில்லை. ‘நரக வேதனை’ என்பார்களே, அப்படிப்பட்டதொரு கொடிய வேதனையை அவர்கள் அநுபவித்து வந்தார்கள்.

இந்நிலையில் தபால், தந்தி ஊழியர்கள் மாநாடு ஒன்று கடலூரில் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக அந்த அன்பரும் அங்கே போயிருந்தார். மாநாடு முடிந்த பிறகு அவரும், அவர் நண்பர் ஒருவரும் சுற்றிப் பார்ப்பதற்காகப் புதுச்சேரிக்குச் சென்றார்கள். அவர்கள் அங்குள்ள கடற்கரையில் நின்று பேசிக்கொண்டு இருந்தபோது, முன்பின் தெரியாத ஒருவர் அவர்களிடம் வந்து, அருகிலேயே ஸ்ரீ அரவிந்தாசிரமம் இருப்பதாகவும், புதுச்சேரியில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடம் அந்த ஆசிரமம் என்றும் கூறிச் சென்றார். அவர்களும் உடனே, ஆசிரமத்துக்குச் சென்று ஸ்ரீ அரவிந்தர், அன்னை சமாதியைத் தரிசனம் செய்தனர்.

அப்போது சமாதியில் நிலவிய அமைதியும், சமாதியைச் சுற்றி இருந்த மலர்களின் மணமும் அந்த அன்பரின் மனத்தை ஈர்த்தன. ஒரு புதிய அநுபவத்தாலும், அமைதியாலும் அவர் மனம் பூரித்துப்போயிற்று. அவர் ஊருக்குத் திரும்பிய பிறகும்கூட அவர் மனம் சமாதியில் நிலவிய திவ்யச் சூழ்நிலையில் லயித்திருந்தது. அதற்குப் பிறகு அவர் எங்கே சென்றாலும் அந்த ஆனந்தச் சூழ்நிலை அவர் அருகில் இருந்துகொண்டே இருந்தது. அவருடைய வீட்டிலும் அந்தச் சூழ்நிலை நிலவத் தொடங்கியது.

இரண்டொரு நாள்களில் அவரைத் தேடி நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். வந்தவர் நறுமணம் நிறைந்த ஓர் ஊதுபத்திக்கட்டை அவரிடம் கொடுத்தார். அவை ஸ்ரீ அரவிந்தராசிரமத்தில் உபயோகப்படுத்தும் ஊதுபத்திகள். அதிலிருந்து வந்த நறுமணம், ஆசிரமத்தில் நிலவும் சூழ்நிலையையே அவர் வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டதுபோல் இருந்தது. சற்றும் எதிர்பாராத வகையில் அந்த ஊதுவர்த்திக்கட்டு அவரிடம் வந்து சேர்ந்தது. சமாதியைத் தரிசித்த பிறகு அந்தச் சூழ்நிலை அவர் அருகில் இருந்து வந்ததை உறுதிப்படுத்துவதுபோல அமைந்தது அந்த ஊதுவர்த்திக்கட்டின் வருகை.

சில நாள்களில் அந்த வர்த்திகள் தீர்ந்துபோயின. அந்த வர்த்தி அவர் வசித்த ஊரில் கிடைக்காது என்பதால், அதை வாங்குவதற்கு அவர் புதுச்சேரிக்குத்தான் போயாக வேண்டும். போகவும் நினைத்தார். ஆனால், போக முடியாதபடி பல வேலைகள் குறுக்கிட்டன. இந்த நிலையில் முன்பு வந்த அதே நண்பர் மீண்டும் வந்து, புதுச்சேரியிலிருந்து வாங்கி வந்ததாகக் கூறி, மற்றும் ஓர் ஊதுவர்த்திக்கட்டை அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அன்னையே அதைத் தமக்கு அனுப்பி வைத்தது போல எண்ணினார்.

புதுச்சேரியில் ஸ்ரீ அரவிந்தர், அன்னை சமாதியைத் தரிசித்தபோது அந்த அன்பர் எந்தவிதப் பிரார்த்தனையும் செய்துகொள்ளவில்லை. ‘பெரியவர்கள் அடக்கமாகியுள்ள இடம், புனிதமான இடம். அதனைத் தரிசித்தால் புண்ணியம்’ என்று நினைத்துத்தான் அவர் சமாதிக்குச் சென்றார்; வணங்கினார். அதற்குப் பிறகு தம் மனத்திலும், வாழ்விலும், வீட்டிலும் நல்ல மாறுதல்கள் ஏற்பட்டு வருவதை உணர்ந்தார். குழம்பிய அவர் மனம் தெளிவடையத் தொடங்கியது. சுடுகாடு போலக் காட்சி அளித்த வீடு, கொஞ்சம் கொஞ்சமாக உயிர்ப்படைய ஆரம்பித்தது. நீதிமன்றத்தில் இருந்த வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்பட்டது.

அந்த அன்பரின் நண்பர் ஒரு வழக்குரைஞர். அவர் அன்பரின் மனைவியின் வீட்டுக்கும் வேண்டியவர். அதாவது அவர் அந்த இரண்டு குடும்பங்களுக்கும் பொதுவான நண்பர். எதிர்பாராதவிதமாக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியினால் அந்த அன்பருக்கும், அவர் மனைவிக்கும் சமாதானம் ஏற்பட்டு, வழக்கை நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெறுவதற்கும் ஏற்பாடாகியது. இந்த மாற்றத்தால் அவருக்கு இருந்துவந்த ஒரு பெரிய சிக்கல் நீங்கியது.

அவருடைய வீட்டின் சூழ்நிலை ஓரளவு மாறி இருந்தாலும், பழைய சண்டைகளும், சச்சரவுகளும் முழுதும் நீங்கியபாடாக இல்லை. அன்னையின் பெருமைகளை அவர் அறியாதவராக இருந்ததால், அவரைத் தேடி வந்த அருள் முழுதுமாகச் செயல்பட்டு, அவருடைய துன்பங்களை எல்லாம் முடிவுக்குக் கொண்டுவருவதில் தாமதம் இருந்துவந்தது.

அந்த அன்பரின் ஊரில் ஹநுமார் உபாசகியான ஒரு பெண்மணி இருந்தார். அன்பரின் தாயார் அந்தப் பெண்மணியை அணுகி, தம் வீட்டில் உள்ள சிக்கல்களைப் போக்குவதற்கு ஏதாவது வழி சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ‘என்னால் அது முடியாது’ என்று அப்போது கூறிவிட்ட அந்த ஹநுமார் உபாசகி, இரண்டு நாள்களுக்குப் பிறகு அன்பரின் வீட்டு வாசற்படியில் தாமாகவே வந்து நின்றுகொண்டிருந்தார். அச்சமயம் அவரிடம் ஹநுமார் ஆவேசப்பட்டிருந்தார். வீட்டில் உள்ளவர்கள், ‘ஹநுமார் என்ன சொல்லப் போகிறாரோ?’ என்ற பரபரப்போடும், பக்தியோடும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.

‘இந்த வீட்டில் செய்வினை செய்யப்பட்டிருக்கிறது. அதை என்னால் அகற்ற முடியாது. உடனடியாக இந்த வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்குப் போய்விடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும்’ என்று எச்சரிக்கை செய்துவிட்டு மலை ஏறினார் ‘அஞ்சனை புதல்வர்'.

அதைக் கேட்டுக் கலக்கமும், கலவரமும் அடைந்த அவர்கள், உடனே வீட்டைக் காலி செய்துவிட்டு அதே ஊரிலுள்ள வேறொரு வீட்டுக்குக் குடி போய்விட்டார்கள். ஆனால் குடிபோன வீட்டிலும் அவர்களால் தொடர்ந்து வசிக்க முடியவில்லை. வீட்டின் சொந்தக்காரர் வீட்டைக் காலி செய்யும்படி அவர்களைத் துளைத்தெடுத்தார். அதனால் அவர்கள் திரும்பவும் சொந்த வீட்டுக்கே குடிபோக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

அந்தக் கட்டத்தில் ‘அமுதசுரபி'யில் வந்துகொண்டிருக்கும் அன்னையைப் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு அந்த அன்பருக்கு ஏற்பட்டது. அவற்றின் மூலம் அன்னையின் அருள் எல்லா இடர்களையும் நீக்கவல்லது என்பதை உணர்ந்த அவர், இரண்டாவது தடவையாக ஆசிரமத்துக்குச் சென்று அன்னை, ஸ்ரீ அரவிந்தர் சமாதியை வணங்கி, தமக்கும், தம் குடும்பத்துக்கும் நேர்ந்துள்ள துன்பங்களை எல்லாம் நீக்கி அருள் செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டார். அன்னையின் திருவுருவப்படங்களை வாங்கி வந்து வீட்டில் வைத்து அவரும், அவருடைய குடும்பத்தினரும் வணங்கி வந்தனர்.

சமாதியைத் தரிசித்துவிட்டுத் திரும்பிய பிறகு அவர் மனம் முன்னிலும் அதிகமாக அமைதியடைந்தது. ‘அன்னையின் அருள் நமக்குத் துணை செய்து எல்லா இடர்களையும் அழிக்கும்’ என்ற நம்பிக்கையும், தைரியமும் அவர் உள்ளத்தில் முளைவிட்டன. ஒரு புதிய தெம்பும், புத்துணர்ச்சியும் தமக்குள்ளிருந்து வெளிப்படுவதை அவர் உணர்ந்தார். ‘அன்னையின் அருள் துணை இருக்கும் போது எந்தத் துன்பமும் என்னையும், என் குடும்பத்தினரையும் அணுகாது’ என்ற உறுதியோடு தம் சொந்த வீட்டுக்கே குடும்பத்தை அழைத்துச் சென்று விட்டார்.

வீட்டில் அவரும், மற்றவர்களும் அன்னையின் படத்தை மட்டும் வைத்துத் தினமும் வணங்கி வந்தார்கள். அதற்குப் பிறகு வீட்டில் சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதில்லை. அவருக்கும், அவர் மனைவிக்கும் சுமுகமான உறவு ஏற்பட்டது. ‘உங்கள் தங்கைகளுக்கு வயதாகிக்கொண்டு போவதை நீங்கள் மறந்து விட்டீர்களா? விரைவில் அவர்களுக்குத் திருமணத்தை முடித்து வையுங்கள்’ என்று அவருடைய மனைவி தூண்டும் அளவுக்கு நிலைமை முற்றிலும் மாறிவிட்டிருந்தது.

அந்த அன்பரின் உடலை வாட்டிக்கொண்டிருந்த நோய்கள் அவரிடம் இருந்து தன்னாலேயே விடை பெற்றுக்கொண்டு போயின. ஒரு காலத்தில் ஒரு மணி நேரம்கூடத் தங்க முடியாமல் வீட்டைவிட்டு ஓடிக்கொண்டிருந்த அவர், இப்போது வீட்டில் இருக்கும்போது பரிபூரணமான அமைதியை அநுபவித்தார். உறக்கமே ஒரு பகையாகி வேதனைப்பட்ட அந்தக் குடும்பத்தினர், இப்போது அமைதியாக உறங்கினார்கள். ‘இத்தனை அபூர்வ மாற்றங்களும் அன்னையின் திருவருளால்தான் ஏற்பட்டிருக்கின்றன’என்பதை அந்த அன்பரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் உணர்ந்தார்கள். இந்த அதிசய மாற்றத்தைக் கண்டு அந்த ஊர் மக்களே ஆச்சரியப்பட்டார்கள். இரண்டு பேர் சந்தித்தால் அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுதலைப் பற்றியே முக்கியமாகப் பேசும் அளவுக்கு அந்த நிகழ்ச்சி அமைந்துவிட்டிருந்தது.

மனத்தில் தெம்பும், துணிவும் தோன்ற, வீட்டில் அமைதி நிலவ, ‘உயிருக்கு இனி ஆபத்து ஏற்படாது’ என்ற நம்பிக்கை பிறக்க, அந்த வீட்டு மனிதர்கள் கலகலப்பானவர்களாக மாறியிருந்தார்கள். ‘வீட்டைச் செப்பனிட இதுவே சரியான தருணம்’என்று நினைத்தார் அந்த அன்பர். ஆனால் அவர் கையில் போதிய பொருள் வசதி இல்லை. அது மட்டுமன்று, ‘பழைய வீட்டில் கை வைத்தால் எந்த அளவில் செலவாகுமோ’என்ற தயக்கமும் அவருக்கு இருந்தது. அதோடு மழைக் காலமும் நெருங்கி வந்துகொண்டிருந்தது. ‘வீட்டைப் பிரித்துப் போட்டிருக்கும்போது மழை வந்துவிட்டால் அரைகுறை வீடும் முற்றிலும் பாழாகி விடுமோ?’ என்ற அச்சமும் அவரை ஆட்டிப்படைத்தது.

என்றாலும், அன்னையின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, கையில் இருந்த பணத்தைக் கொண்டு வீட்டைச் செப்பனிடுவதில் ஈடுபட்டார் அவர். கையில் இருக்கும் பணம் தீரும்போது எங்கிருந்தாவது மேற்கொண்டு பணம் வந்துவிடும். ஆரம்பித்த வேலை ஒரு நாள்கூடத் தடைப்படாமல் நடந்து முடிந்துவிட்டது. வீட்டைக் கட்டி முடித்த மறுநாள்தான் மழை பெய்யத் தொடங்கியது. ‘அனைத்தும் அன்னையின் அருளே!’ என்பதை மேலும் நன்கு உணர்ந்தார் அவர்.

வீட்டைச் செப்பனிட்டுக்கொண்டிருந்தபோது சில இடங்களில் மண்ணைத் தோண்டி அப்புறப்படுத்த வேண்டி இருந்தது. எதிர்பாராதவிதமாக அந்த இடங்களில் ஏவல், செய்வினை போன்றவற்றுக்காக உபயோகப்படுத்தப்பட்ட பல பொருள்கள் கண்களில் தென்பட்டன. அவர் அவற்றை எல்லாம் எடுத்து அப்புறப்படுத்தினார்.

அதுவரை மந்திரவாதிகள் போன்ற பலர் முயன்றும் நடைபெறாத ஒரு காரியம், அன்னையின் அருளால் மிகச்சுலபமாக நடந்துவிட்டதை நினைத்து அந்த அன்பரும், அவர் வீட்டாரும், அக்கம்பக்கத்தவர்களும் வியப்படைந்தார்கள். இப்போது வீடு களைகட்டிவிட்டது. கலகலப்பும், ஆனந்தமும், அமைதியும் அங்கு நிலவத் தொடங்கின.

அந்த அன்பரின் எதிர் வீட்டில் வாழ்ந்து வந்த வயதான ஓர் அன்பர், திடீரென்று இரவு நேரங்களில் ஊளையிட்டு ஓலமிட ஆரம்பித்துவிட்டார். ‘அவருக்குப் பேய் பிடித்திருக்கிறது. அதனால்தான் அவர் நரியைப்போல ஊளை இடுகிறார்’ என்று எல்லாரும் பேசிக்கொண்டார்கள். ஒவ்வொரு நாள் இரவும் அந்த முதியவர் ஊளையிடுவதும், ஓலமிடுவதும் தொடர்ந்து வந்தன. மந்திரவாதிகள் பலர் வந்து அவருக்குக் கயிறு கட்டினர்; தாயத்துகளைக் கட்டினர். ஆனாலும் அந்தப் பேய், அவரை விட்டு விலகிப் போகவில்லை. இரவாகிவிட்டால் ஒரே ஊளைதான்; ஓலந்தான்.

அந்த முதியவர் படும் பாட்டைப் பார்த்து இரங்கிய அன்னையின் பக்தர், அன்னையின் படத்தில் சூட்டியிருந்த சில பூக்களை எடுத்துக்கொண்டு போய் அவரிடம் கொடுத்தார். அவர் முதியவரின் வீட்டுக்குச் சென்றவுடனேயே பேயின் ஆட்டங்களும், கூச்சல்களும் குறைந்து நின்றுவிட்டன. அவரும் வழக்கம் போல நிதானமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.

அதைப் போலப் பல இரவுகள் அந்த முதியவர் கூச்சல் போடும்போது எல்லாம் அன்னையின் பக்தர் அங்கே சென்று சிறிது நேரம் இருப்பார். அவர் அங்கே சென்றவுடன் பேயின் சேட்டைகள் நின்றுவிடும். முதியவரும் வழக்கம் போல நிதானமாகப் பேசிக்கொண்டிருப்பார்.

அன்னையின் பக்தரைக் கண்டவுடன் அந்தப் பேய் ஓடி ஒளிந்து கொள்வதைப் பார்த்த மற்றவர்கள், ‘அன்னையின் அருள் எத்தகைய வல்லமை உடையது!’ என்பதை உணர்ந்தனர். ‘அன்னையை வணங்கும் பக்தருக்கே இவ்வளவு மகிமை இருக்குமானால் அன்னையின் மகிமை எவ்வளவு உயர்ந்ததாக இருக்க வேண்டும்!’ என்று எண்ணி வியந்தனர்.

அன்னையின் பக்தருக்குப் பேயோட்டுகின்ற மந்திர முறைகள் எதிலும் பயிற்சியில்லை. ஆனாலும், ‘அன்னையின் அருளைத் துணையாகக் கொண்டு அந்தப் பேயைக் கட்டுப்படுத்திவிடலாம்’ என்ற நம்பிக்கையோடு முயன்றார். அவர் முயற்சி வென்றது.

ஒரு முறை அந்த அன்பர் என்னைச் சந்திக்க நேரிட்டது. அப்போது, ‘அன்னை, ஸ்ரீ அரவிந்தர் சமாதியை முதல் முதலாக நான் தரிசித்ததிலிருந்து என் சொந்த வாழ்க்கையிலும், என் குடும்ப வாழ்க்கையிலும் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட ஆரம்பித்தது. அன்னையின் திருவுருவப்படத்தை வைத்து நான் வணங்க ஆரம்பித்தபின், ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி வார்த்தைகளால் கூறி விவரிக்க முடியாது.

என்னைப் பொருத்தவரையில் எந்தத் தெய்வமும், எந்த வழிபாடும், எந்த மனிதரும் செய்ய முடியாத ஒரு பெரிய நன்மையை அன்னையின் அருள் எங்களுக்குக் கூட்டிவைத்துவிட்டது. நான் இப்போது ஒரு புதிய மனிதனாகி விட்டேன். அமைதிக்கும், ஆனந்தத்துக்கும் அந்நியர்களாக இருந்த நாங்கள், அன்னையின் அருளால் இப்போது அவற்றுக்குச் சொந்தக்காரர்களாகிவிட்டோம். கல்லுக்கும், புல்லுக்கும்கூடக் கருணை காட்டிக் கடைத்தேற்றுகிற அன்னையின் மகிமையை என்னவென்று சொல்வேன்!’ என்று அவர் குரல் தழுதழுக்கக் கூறியதைக் கேட்டபோது, என் மெய்யெல்லாம் சிலிர்த்துவிட்டது.

நவம்பர் 17ஆம் தேதி, ஸ்ரீ அன்னை மகாசமாதி அடைந்த திருநாளாகும். அன்று ஆசிரமத்தில் சமாதியைச் சுற்றிச் சாதகர்கள் கூடி அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். அன்று அந்த அரக்கோணம் அன்பர், சமாதியின் அருகில் அமர்ந்து தியானத்தில் மூழ்கி இருந்தார். அவருடைய முகம் அமைதியில் ஆழ்ந்து பிரகாசமாக விளங்கிக்கொண்டிருந்தது என்று எனக்கு செய்தி வந்தது.

*****



book | by Dr. Radut