Skip to Content

16. வாய்ப்பும் வேதனையும்

அன்பர்கள் இவ்வாறு அடிக்கடி கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்: ‘நான் அன்னையிடம் எதைப் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டாலும், அது கிடைத்துவிடுகிறது. வேறு சில சமயங்களில் நான் கேட்டது கிடைக்கக் காலதாமதமும் ஆகிறது. இவற்றைத் தவிர எனக்கு வேறோர் அநுபவமும் ஏற்பட்டிருக்கிறது. நான் கோராத அல்லது நினைத்துக்கூடப் பார்க்காத சிலவற்றையும் அன்னை எனக்கு வழங்கியுள்ளார்'.

மேலும் அவர்கள், ‘எதிர்பாராதவிதமாக அவ்வாறு அதிர்ஷ்டம் வந்தவுடன் நான் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தேன். ஆனால் அந்த அதிர்ஷ்டத்தின் பலனை அனுபவிப்பதற்கு முன்னால் ஒன்றன் பின் ஒன்றாகப் பல சிக்கல்கள் ஏற்பட்டன. ‘வாராது போல் வந்த அந்த அதிர்ஷ்டம் நமக்குப் பயன் தாராமல் மறைந்துவிடுமோ?’என்று மனம் கலங்கினேன். அன்னையிடம் வேண்டிக்கொண்டேன். வந்த சிக்கல்கள் மறைந்தன. ஆனால் வேறு புதிய சிக்கல்கள் தோன்றின. மறுபடியும் அன்னையிடம் வேண்டினேன். புதிதாய் வந்த புதிய சிக்கல்களும் மறைந்தன. ஆனால் சிறிதும் எதிர்பாராமல் வந்த அதிர்ஷ்டத்தைப் பதற்றம் இல்லாமல் என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகையால் சிக்கல்கள் வருவதும், போவதுமாக இருக்கின்றன. வர வேண்டிய பலன் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றது.

அதனால் ஏற்படுகிற வேதனையும், சலிப்பும் என்னை ஒரு நிலையில் இருக்க விடுவதில்லை. ‘அதிர்ஷ்டமும் வேண்டாம்; அது கொண்டு வருகின்ற பயனை அடைவதற்கு முடியாமல் அல்லலும் பட வேண்டாம்’ என்ற விரக்தி நிலைக்கு நான் ஆட்பட்டிருக்கிறேன்’ என்றும் அவர்கள் வருந்திக் கூறி இருக்கின்றார்கள்.

இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்கள் மட்டுமல்லர், மற்ற அன்பர்களும் ‘செய்ய வேண்டியது என்ன? தேடி வந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்தினால் சிறப்பான பலனை அடையலாம்?’ என்பனவற்றை இந்தக் கட்டுரையில் குறிப்பிட விரும்புகின்றேன்.

அதற்கு முன்னால் சில அன்பர்களின் அநுபவங்களை இங்கே பார்ப்போம்.

இது ஓர் அமெரிக்க அன்பரின் அநுபவம்.

‘ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்கு வர வேண்டும் என்ற நோக்கோடு நான் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுப் புதுச்சேரிக்கு வந்தேன். அன்னை எழுதியுள்ள பல நூல்களை நான் படித்திருக்கிறேன். அதன் மூலம் எனக்கு அன்னையிடம் ஒரு விதமான ஈடுபாடு ஏற்பட்டது. அந்த நிலையில் ஆசிரமத்திற்கு வந்து சமாதியைத் தரிசித்தபின், இதுவரை நான் அறிந்திராத வகையில் என் உள்ளத்தில் ஓர் ஆழ்ந்த அமைதி குடிகொண்டு, ஓர் உயர்ந்த நிலைக்கு என்னைக் கொண்டு சென்றது. மணிக்கணக்கில் சமாதியின் அருகிலிருந்த அந்த அற்புதமான அமைதியைத் துய்க்க வேண்டும் போல் தோன்றியது. சாதாரணமாக என்னிடத்தில் உள்ள பதற்றமும், குழப்பமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, பிறகு முற்றும் மறைந்து போய்விடுகின்றன. மனத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்து ததும்புகின்றன.

அங்கு, ஒரு நாள், என் நண்பர் ஒருவரிடம் பேச்சுவாக்கில் என் இடுப்பில் இருந்துவரும் ஒரு நெடுநாளைய வலியைப் பற்றித் தெரிவித்தேன். அதற்கு அவர், ‘இந்த வலி நீங்க வேண்டும் என்று நீங்கள் ஏன் அன்னைக்குப் பிரார்த்தனை செய்துகொள்ளக்கூடாது?’ என்று கேட்டார். ‘இந்த வலி போக வேண்டும்’ என்று அன்னைக்குப் பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும் என்பது, அவர் அதைப் பற்றிச் சொன்ன பிறகே எனக்குத் தோன்றியது. அடுத்த தடவை சமாதி தரிசனத்துக்குச் செல்லும்பொழுது வலியைப் போக்குமாறு அன்னையைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.

நான் பல வருடங்களுக்கு முன்னால் என்னுடைய காரின் பின் பக்கத்தில் இருந்த ஒரு மிகப்பெரிய பளுவான மூட்டையைக் கீழே இறக்கியபொழுது என் முதுகுத் தண்டுவடத்தில் ஒரு பிறழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. வலியால் துடித்தேன். வைத்தியர்களிடம் ஓடினேன். அவர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, அதைச் சரி செய்து, அதனால் ஏற்படும் வலியை முழுதுமாகப் போக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.

நான் வேறு வழியில்லாமல் அந்த வலியோடு இரவு, பகலாக என் நாள்களைக் கழிக்க வேண்டியதாயிற்று. இப்பொழுது அந்த வலி ஓரளவு குறைந்திருந்தாலும், அது முற்றிலும் என்னை விட்டுப் போவதாக இல்லை. அல்லும், பகலும் சித்திரவதைப்படுத்தும் இப்படிப்பட்ட ஒரு வலி, என்னுடைய விரோதிக்குக்கூட வரக்கூடாது.

நான் அடுத்த தடவை சமாதிக்குச் சென்றபோது சிறிது நேரம் தியானம் செய்தேன். பிறகு, ‘என்னை வருத்தும் வலி நீங்க வேண்டும்’ என்று அன்னையிடம் பிரார்த்தனை செய்துகொண்டேன். அப்போது என் மனம் மிக ஆழமாக எங்கோயோ ஓர் இடத்தில் சென்று பதிந்துவிட்டது. நீண்ட நேரத்துக்குப் பிறகு, நான் லயிப்பில் இருந்து விடுபட்டு என் இருப்பிடத்துக்குச் சென்றேன்.

மறுநாள் என்னைச் சந்திப்பதற்கு அந்த நண்பர் வந்தார். இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் பேச்சு எனக்கிருந்த வலியைப் பற்றிய பிரச்சினைக்குத் திரும்பியது. நான் அப்போதுதான் அந்த வலி என்னை விட்டுப் போய்விட்டதை உணர்ந்தேன். என்னைப் பல ஆண்டுகளாக வாட்டி, வதைத்த அந்த வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. என்னையே என்னால் நம்ப முடியவில்லை. உண்மையில், அந்த வலி என்னை விட்டுப் போனதை நான் எப்படி உணராமல் ஒரு நாள் முழுதும் இருந்தேன்?

உண்மையில் யாருமே நம்ப முடியாத ஒரு நிகழ்ச்சி அது. அன்னை எனக்கு அளித்த மகத்தான பரிசு அது. என் மனத்தில் பலவிதமான உணர்வுகள் பொங்கிப் பெருக்கெடுத்தன. இப்போது வலி நீங்கிவிட்டது. முன்பு ‘செய்ய முடியாது’ என்ற எண்ணத்தில் ஒதுக்கி வைத்த காரியங்களை இனி எளிதாகச் செய்யலாம்.

என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்குக்கூட இது போன்ற ஒரு வலி இருந்து வருகின்றது. அவரிடம் என் வலி போய்விட்டதைக் கூற வேண்டும். இதைப் பற்றி என் தந்தைக்கு எழுத வேண்டும். ஆனால், ‘அன்னையின் அருளால் வலி மறைந்துவிட்டது’ என்று சொன்னால், அமெரிக்காவில் உள்ளவர்கள் எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைப்பார்கள் என்றெல்லாம் நினைவுகள் ஓடின.

இரண்டு நாள்கள் சென்றன. அந்த வலி மறுபடியும் வந்துவிட்டது. உடனே நான் அன்னையைப் பிரார்த்தித்துக்கொண்டேன். வலி நீங்கியது. என்றாலும் வலி முன்பு போல முழுதுமாகப் போகவில்லை. கிடைத்த இந்த முழு விடுதலை நிலைக்காமல் போய்விட்டதே, அதற்கு என்ன காரணம்? அது புரியவில்லை. ஆனால் வேறொன்று புரிந்தது: ‘வேண்டாத எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால்தான் அன்னை எனக்கு அளித்த அந்த நிவாரணத்தை நான் நழுவவிட்டுவிட்டேன்’ என்பது. இனி என்ன செய்வேன்? இழந்ததைப் பெறவும் முடியவில்லை; ‘போனது போகட்டும்’ என்று விடவும் முடியவில்லை. ‘கிடைத்த ஆரோக்கியத்தை நிரந்தரமாகக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?’ என்பது எனக்குப் புரியவில்லை'.

அது அந்த அமெரிக்கரின் அநுபவம் மட்டுமில்லை; அவஸ்தையும்கூட.

மற்றொன்று, ஓர் ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரியின் அநுபவம். அவரே கூறுகின்றார்:

‘நான் அரசாங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின்பு எனக்கு மாதா மாதம் ரூபாய் 45 பென்ஷனாகக் கிடைத்து வந்தது. அது குடும்பச் செலவுக்குப் போதுமானதாக இல்லை. மேலும் நான் ஓய்வு பெற்றாலும் ஓய்ந்து உட்கார்ந்து இருக்க விரும்பவில்லை. அதனால் சவுக்கு விறகு வியாபாரத்தை ஆரம்பித்தேன். அது எனக்குக் கைகொடுத்தது. பதினைந்து வருடங்களுக்கும் அதிகமாகத் தொடர்ந்து செய்துகொண்டு வரும் அந்தத் தொழிலில் கிடைத்த வருவாயைக் கொண்டு 27 ஏக்கர் நிலத்தை வாங்கிச் சவுக்கை சாகுபடி செய்து வந்தேன். அதைத் தவிர எனக்குக் கொஞ்சம் சொத்தும் உள்ளது.

எனக்கு 78 வயதாகிறது. ஆகவே வியாபாரத்திலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து, 27 ஏக்கர் நிலத்தை விற்றுவிடத் தீர்மானித்தேன். அது இன்றைய நிலவரப்படி ரூ.10,000 விலை மதிப்புள்ளது. ஆனால் நான் அதை ரூ.27,000க்குக் குறையாமல் விற்க வேண்டும் என்று முடிவு செய்து, அந்த விலைக்கு வாங்கக்கூடிய நபர்களைத் தேடி, ஐந்து வருட காலம் கடுமையாக முயன்றேன். ஒருவர் அந்த விலைக்கு என் நிலத்தை வாங்குவதற்கு முன்வந்தார். ஆனால் என்ன காரணத்தாலோ பிறகு அவர் வரவே இல்லை. அதனால் நான் ஏமாற்றமும், வேதனையும் அடைந்தேன். அந்த நிலையில் வேறொரு நபர் என் நிலத்தை ரூ.27,000க்கு விலைக்கு வாங்கிக் கொள்வதாக வாக்களித்தார்.

இந்தச் சமயத்தில் என் நண்பர் ஒருவர் அன்னையைத் தரிசனம் செய்வதற்கு, என்னை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றார். நான் தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியவுடன் என்னை எதிர்பார்த்து ஒரு புதிய செய்தி காத்துக்கொண்டிருந்தது. அது என்னுடைய 27 ஏக்கர் நிலத்தை ரூ.81,000க்கு வாங்க ஓர் உரக் கம்பெனி விருப்பம் தெரிவித்திருந்தது. அதை ஒட்டிய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. ஆனால் ஒப்பந்தம் செய்துகொள்ள இருந்த கட்டத்தில் முட்டுக்கட்டை போட்டது போலக் காரியம் திடீரென்று நின்று போய்விட்டது. அந்த நிறுவனத்துக்காக என்னிடம் விலை பேசிய அந்த நபர், போனவர் போனவர்தாம்; பிறகு வரவே இல்லை.

அதற்குப் பிறகு இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. அந்த நல்லதொரு வாய்ப்பு கைநழுவிப்போய்விட்டதை எண்ணி நான் இரவு, பகலாகக் குமைந்தேன். இனிப் பைத்தியம் பிடிக்க வேண்டியது ஒன்றுதான் பாக்கி. என்னை அந்தக் கட்டத்தை நோக்கி வேகமாகச் செலுத்திக்கொண்டிருந்தது என் மனநிலை. எந்தக் காரைப் பார்த்தாலும், ‘அந்த ஆசாமியின் கார்தான் வருகிறதோ?’ என்று பரபரப்புடன் ஓடிப் பார்ப்பேன்; எவர் வந்தாலும், ‘அவர்தாம் வருகிறாரோ?’ என்று ஆவலோடு பார்வையை ஓட்டுவேன்.

இறுதியில், ‘வந்த அதிர்ஷ்டம் வழியோடேயே போய்விட்டது. தேடி வந்த அந்தப் பெருஞ்செல்வம் இனி வாராது. ஆகவே நிலத்தை ரூ.27,000க்குக் கேட்ட பழைய நபரைத்தான் இனித் தேடிப் பார்க்க வேண்டும்’ என்று என்னை நானே ஆறுதலும், தேறுதலும் படுத்திக்கொண்டேன். வேறென்ன செய்வது?

அவருடைய கேள்வி சோகமான கேள்வி.

சொல்லப்போனால் சோகத்தை யாரும் அவருக்குத் தரவில்லை. அவரேதான் அதைத் தேடிக்கொண்டார். எப்படி?

அவருக்கு நில விற்பனையின் மூலம், அதன் பெறுமானத்துக்கும் அதிகமான ஒரு பெருந்தொகை கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அப்போது அவர் மனம் பலவாறாகப் பரபரத்தது. அங்கும், இங்குமாக ஓடி, வந்த வாய்ப்பை நெருங்கவிடாமல் செய்துவிட்டது.

‘இதற்கென்ன செய்வது? இதுபோன்ற ஒரு நிலையிலிருந்து மீள வழி உண்டா? கட்டுக்கடங்காமல் ஓடுகின்ற எண்ணங்களைத் தடுத்து நிறுத்த ஓர் உபாயம் உண்டா?’ என்பன முக்கியமான கேள்விகள்.

மேற்கூறிய இரு அன்பர்களின் அநுபவங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது இதுதான்: ‘ஒரு பெருவாய்ப்பு நம்மைத் தேடி வந்தவுடன், நம் மனம் பல திசைகளில் ஓட ஆரம்பிக்கின்றன. அந்த ஓட்டம் வந்த வாய்ப்பை நம்மிடம் வரவிடாமல் செய்துவிடுகின்றது; அல்லது வந்த வாய்ப்பை முழுப் பலனையும் நாம் பெற்றுக்கொள்ள விடாமல் செய்துவிடுகின்றது. அன்னை எப்பொழுதும் வழங்குகின்றார். அதை ‘வேண்டாம்’ என்று புறக்கணிப்பது மனிதனின் வேலை. ‘மனிதன் திட்டமிடுகின்றான். கடவுள் அதைத் தடுத்து விடுகின்றார்’ என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. ஆனால் அன்பர்களின் விஷயத்தில் இந்தப் பழமொழி தலைகீழாக அமைந்துள்ளது என்று சொல்ல வேண்டும்.

‘இது போன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் மனத்தைக் கட்டுப்படுத்தி, எண்ணங்களை மனத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டியது அவசியம்’ என்று நான் அந்த அன்பர்களிடம் கூற முடியாது. ஏனெனில் எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது என்பது, இது போன்ற சூழ்நிலைகளில் நடவாத ஒன்றாகும். இதற்கு என்னதான் வழி?

அன்னையின் அருளால் நம்மை நாடி வந்த வாய்ப்புப் பலனளிக்க வேண்டுமானால், நம் மனம் அமைதியாகவும், பதற்றம் இல்லாமலும் இருக்க வேண்டும். எங்கு அமைதியும், நிதானமும், பொறுமையும், நம்பிக்கையும் உள்ளனவோ, அங்கேதான் அன்னையின் அருள் நன்றாகச் செயல்பட்டு, முழுப் பலனையும் பெற்றுத் தருகின்றது.

மனத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், இந்த உண்மையை, அதாவது குறையை ஏற்றுக்கொண்டு, ‘எவ்வாறேனும் மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்ற முடிவை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த முடிவை எடுத்த பிறகு, எண்ணங்களின் பாய்ச்சல்களும், ஓட்டங்களும் ஓரளவு குறைந்துவிடும். என்றாலும் எண்ணங்கள் முழுவதுமாக ஓய்ந்துபோய்விடுவதில்லை. அப்போது அன்னையிடம், ‘எண்ணங்கள் என்னை விட்டு நீங்குமாறு செய்ய வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அன்னையின் அருளால் இருளான எண்ணங்கள் இற்று விழுந்து, அதுவரை வாய்ப்பை நெருங்கவிடாமல் செய்திருந்த தடைகள் ஒவ்வொன்றாக நீங்கி, அந்த வாய்ப்பின் முழுப் பலனும் கிட்டுமாறு அமைந்துவிடும்.

இந்த முறைகளைக் கையாண்டதால் இக்கட்டுரையில் குறிப்பிட்ட இரு அன்பர்களின் பிரச்சனைகளும் நீங்கி, அவர்கள் விரும்பிய பலனை வேண்டிய அளவுக்குப் பெற்று இன்புற்றார்கள் என்பதை இங்கு நான் மனநிறைவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்த முறைகளே மற்ற அன்பர்களும் அனுசரிக்க வேண்டிய முறைகளாகும்.

******



book | by Dr. Radut