Skip to Content

11. பூர்ண யோகி ஸ்ரீ அரவிந்தர்

உலகம் என்று தோன்றியதோ அன்றே துன்பங்களும், துயர்களும் தோன்றிவிட்டன. இவற்றின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக உலகத் தொடர்புகளையும், பந்தங்களையும் அறுத்துக்கொண்டு, பற்றற்ற பரம்பொருளைப் பற்றிக்கொள்ளும்போது சித்திப்பது மோட்சம். மோட்சத்தை விரும்பாத யோகிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

‘பல்லாயிரக்கணக்கான உயிர்கள் துன்பத்தில் வாடும்போது எனக்கு மட்டும் மோட்சம் எதற்கு?’ என்று அரிதான மோட்சத்தை உதறித் தள்ளியவர் சுவாமி விவேகானந்தர். ‘உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்தும் துன்பத்திலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடையும்வரை நானும் மோட்சத்திற்குச் செல்லப் போவதில்லை’ என்று சூளுரைத்தவர் புத்த பகவான். பகவான் ஸ்ரீ அரவிந்தரும் அவர்தம் மரபில் வந்தவர்தான். பெறற்கரிய மோட்சம் அவரைத் தேடி வந்தபோது அதை ஏற்காது, ‘உலகிலுள்ள துன்பங்களையும், தீமைகளையும் அழிக்க தமக்குத் தக்கதொரு வழிகாட்ட வேண்டும்!’ என்று இறைவனிடம் கேட்டுக் கொண்டார்.

மோட்சத்தை அடைய பல மார்க்கங்கள் உண்டு. அவற்றில் ஞானம், பக்தி, கர்மம் என்பவை முக்கியமானவை. மோட்சத்தையே குறிக்கோளாகக் கொண்டவர்களுக்கு மனித உடல் பொய்யாகவும், காற்றடைத்த பையாகவும், துன்பக்கடலைத் தாண்டவிடாமல் தடுக்கும் பெருந்தடையாகவும் தோன்றுகிறது. ‘இவ்வுடலைத் துறந்தாலன்றி மோட்சம் கிட்டாது’ என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்டதொரு சித்தாந்தமாகிவிட்டது.

ஞானத்தை அடைந்தவன் தன்னைச் சூழ்ந்துள்ள சிலருக்கு மட்டுமே அந்த ஞான ஒளியை வழங்க முடிகிறது. ஒரு பக்தனிடமிருந்து வெளிப்படும் இறையன்பு, மக்களை எல்லாம் ஈர்த்தாலும், அது நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. ஒரு கர்மயோகியின் செயல்கள் மற்றவர்கள் எவ்வாறு தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துவிடுகிறது. எனினும் மனித இனம் அடிப்படையில் மாற்றம் ஏதும் காணாமல் அப்படியே இருந்து வருகின்றது.

பல்லாயிரம் ஆண்டு காலமாக ஞானிகளும், ரிஷிகளும், யோகிகளும் இம்மனித இனத்தை மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்து வந்தாலும், துன்பமும், இருளும் நீங்கியபாடில்லை. மோட்ச உலகிற்குச் சிலர் செல்வதால் இவ்வுலகத்திற்கு ஏற்படும் நன்மை மிகக்குறைவு. ஆகவே ‘துன்பத்தையும், இருளையும் முற்றும் நீக்க வேண்டுமானால் மோட்சச் சொரூபனான இறைவனையே இவ்வுலகத்திற்கு வருமாறு செய்வித்தல் வேண்டும்’ என்று உணர்ந்தார் ஸ்ரீ அரவிந்தர்.

‘இறைவனுடைய ஒளியும், அன்பும், சக்தியும் இம்மனித உடலிலேயே வெளிப்படுமாறு செய்ய வேண்டும். பொய்யின் வடிவாகவும், மோட்சத்திற்குத் தடையாகவும் உடலைக் கருதுவது தவறாகும். இவ்வுடலில் பொய்யும், தடைகளும் இருப்பது உண்மையே. அதற்காக உடலே பொய் என்றோ, தடை என்றோ கருதக்கூடாது. இறைவன் இவ்வுலகில் அல்லது இவ்வுடலில் வெளிப்படுமாறு செய்வது என்பது மிகக்கடினமான முயற்சி. அதோடு மோட்சத்தை அடைவதற்குச் செய்யும் முயற்சியை ஒப்பிடும்போது, மோட்சத்திற்குப் போவது மிகவும் சுலபம் என்றே சொல்ல வேண்டும். இறைவனை இவ்வுலகத்திற்குக் கொண்டு வரும் முயற்சி, ஒரு தனி மனிதனின் முயற்சியாக இருக்க முடியாது. அது ஒரு கூட்டு முயற்சியாகத்தான் இருக்கும்’ என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

பத்து அல்லது இருபது நபர்கள் இம்முயற்சியில் ஈடுபட்டு, தம்முடைய உடலில் உள்ள பொய்யையும், தடைகளையும் நீக்கி இறைவனுடைய குணங்களை அதில் வெளிப்படுமாறு செய்வதால், இவ்வுலகத்தில் வாழும் மற்ற உயிர்களைப் பற்றிநிற்கும் துன்பமும், இருளும் நீங்க வழி கிடைக்கின்றது. விஞ்ஞானிகள் சிலர் கூட்டாக சேர்ந்து செய்கின்ற முயற்சியினால் விளைகின்ற ஒரு பலனை, உலகில் உள்ளோர் அனைவரும் அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றார்களே, அதை போன்றதுதான் இது.

யோக மார்க்கங்களுடைய முடிவாக இருப்பது மோட்சம். ஆனால் ஸ்ரீ அரவிந்தருடைய பூர்ண யோகத்தில் ‘மோட்சம்’ என்பது முதற்படியாக அமைகின்றது. பாண்டிச்சேரிக்கு வருவதற்கு முன்னமேயே மோட்ச அனுபவத்தைப் பெற்றவர் அவர். ஆனால் உடலையும், உலகத்தையும் துறக்கவோ அல்லது ‘மோட்சமே யாவும்’ என்று அதை அடையவோ அவர் விரும்பவில்லை. அலிப்பூர் சிறையில் அவர் இருந்தபொழுது ‘சர்வம் வாசுதேவம்’என்ற அரிய காட்சியைப் பெற்றார். ‘எல்லா உயிர்களிடத்தும், பொருட்களிடத்தும் இறைவன் வாசம் செய்கின்றான்’ என்பதை அங்கு அனுபவபூர்வமாகக் கண்டார். இறைவனுடைய ஆணை அவரைப் பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்தது. அங்கு அவருடைய யோகம் தீவிரம் அடைந்து பன்மடங்காகப் பெருகியது. வரையறையற்ற பேரமைதி அவரிடம் குடி கொண்டது. புயல் வீசுகின்ற காலங்களில் அவர் இருந்த அறையில் ஜன்னல் கதவுகள் மூடப்படாதபோதும் ஒரு மழைத்துளிகூட உள்ளே நுழைந்தது இல்லை.

ஒரு சமயம் ஸ்ரீ அரவிந்தர், அன்னையின் கணவர் ரிச்சர்டிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுதே ‘அகண்ட மௌன’அனுபவத்தை அன்னைக்கு வழங்கிய சித்தர். கிருஷ்ண பகவான் அவருடைய உடலில் வந்து தங்கியிருந்த பெருமையும் பெற்றவர். ஒரு தடவை சாதகர் ஒருவருக்கு விளக்கம் கூறும்பொழுது சிவபெருமான் தம்முடைய ஓர் அம்சம் என்பதை அவர் வெளிப்படுத்தினார். இறைவனுக்குத் தம்மை முழுதுமாக அர்ப்பணித்துக்கொண்ட அவர், இறைவன் இவ்வுலகிலேயே வெளிப்பட வேண்டும் என்று விரும்பினார்.

தம்முடைய அறையிலேயே தனித்திருந்து கடுமையான யோகத்தில் இருந்தார் ஸ்ரீ அரவிந்தர். இறைவனுடைய குணங்கள் அவருடைய உடலில் வெளிப்படும் நேரம் நெருங்கியது. அவரது உடல் அக்குணங்களை வெளிப்படுத்தும் அளவில் புனிதத் தன்மை அடைந்திருந்தது. அதோடு இன்னொரு நிபந்தனையும் நிறைவேற்றப்பட வேண்டும். இறைவன் இவ்வுடலில் நிரந்தரமாக வெளிப்பட வேண்டுமானால், ஸ்ரீ அரவிந்தர் மேற்கொண்ட முயற்சியை 10 அல்லது 20 யோகிகள் மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமன்று, அவர்களுடைய உயிரும் உடலும், ஸ்ரீ அரவிந்தருடைய உயிரும் உடலும் அடைந்து இருந்த புனிதத் தன்மையையும் பெற்றிருக்க வேண்டும். அவருடைய பெருமுயற்சியினால் இறைவனுடைய ஒளி இவ்வுலகில் வெளிப்பட்டது. வெளிப்பட்ட ஒளி அவருடைய உடலில் மட்டும்தான் தங்கியிருந்தது. மற்ற உடல்களில் அது வெளிப்பட வழியில்லாமல் போயிற்று. ஆனாலும் அந்த ஒளியை இவ்வுலகத்தைத் தொடுமாறு செய்விக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். தம்முடைய உடலைத் தியாகம் செய்வதன் மூலம், அதில் தங்கியுள்ள ஒளி இவ்வுலகோடு ஒரு குறுகிய கால அளவிலாவது தொடர்புகொள்ளும் என்று நினைத்தார்.

ஆகவே, ஸ்ரீ அரவிந்தர் 1950ஆம் ஆண்டில் தம் உடலைத் தியாகம் செய்தார். நான்கு நாள்களுக்கு ஒரு பொன்னிறமான புனித ஒளி அவருடைய உடலிலிருந்து வெளிப்பட்டு இவ்வுலகெல்லாம் பரவிக்கொண்டிருந்தது.

இவ்வுலகில் இறைவன் நிரந்தரமாக வெளிப்படுகின்றவரை ஸ்ரீ அரவிந்தரின் பணி தொடர வேண்டும். உலகின் சூட்சுமப் பகுதியில் இருந்து கொண்டு அப்பணியில் ஈடுபட்டிருக்கிறார் அம்மகான். தம்முடைய சொந்த லாபத்தைக் கருதி இருந்தால் அவர் மோட்சத்துக்குச் சென்றிருக்கலாம். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. தம்மை விடுக்கும்போதுதான் எதுவும் பூர்ணம் ஆகிறது. அந்தப் பூர்ணத்தில் பூர்ணமாக நிறைந்தவர் ஸ்ரீ அரவிந்தர்.

*****



book | by Dr. Radut