Skip to Content

02. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

அன்னையைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பல இருக்கின்றன. அவற்றைக் கவனமாகக் கடைப்பிடிக்கின்றவர்களுடைய வாழ்க்கை, தெய்வ மணம் நிறைந்து மகிழ்ச்சிகரமாகவும், சுபிட்சமாகவும் அமைவதைக் கண்கூடாகக் காணலாம்.

இந்தக் கட்டுரையில் அன்னையின் அன்பர்கள் தம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைப் பற்றிச் சற்று விளக்கமாகவும், விரிவாகவும் எழுத நினைக்கின்றேன். அன்னையை வழிபட விரும்பும் ஏராளமான ‘அமுதசுரபி’வாசகர்கள், ‘அன்னையை எவ்வாறு வணங்க வேண்டும்? அன்னையை வழிபடுவதற்கு ஏதேனும் விதிமுறைகள் இருக்கின்றனவா?’என்று கேட்டு எனக்கு அடிக்கடி எழுதுகின்றார்கள். அவ்வாறு கேட்டு எழுதுபவர்களுக்கு நான் விளக்கமாகப் பதில் எழுதுகின்றேன்.

இதற்குமுன், ‘அன்னையை வழிபடுவது எப்படி?’என்ற தலைப்பிலேயே ‘அமுதசுரபி'யில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கின்றது. ஆனாலும் எனக்குக் கடிதம் எழுதும் ஒவ்வொரு வாசகரும், ‘அன்னையை வணங்குவதற்கான வழி முறைகளைத் தெரிவிக்க வேண்டும்’என்று கேட்கின்றார்கள்.

அன்னையை வணங்கும் வழிகளை இரண்டு வகைகளில் எழுதலாம். அவற்றின் உள்ளடக்கத்தைச் சுருக்கமாக எழுதுவது ஒரு வகை; விரிவாக எழுதுவது இன்னொரு வகை. இதுவரை நான் அன்பர்களுக்கு இவை பற்றி விவரமாக எழுதி இருந்தாலும், அவர்கள் இவை பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு விரித்துரைக்கத் தவறிவிட்டேன் என்பதை அவர்களிடமிருந்து விளக்கம் கேட்டு வரும் கடிதங்களின் வாயிலாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. அந்த வகையில் என்னுடைய விளக்கங்கள் அன்னையின் அணுக்கத்தைத் தொட்டுக் காட்டாமல் தொலைவில் நின்று சுட்டிக்காட்டும் அளவில் பொதுவாக அமைந்துவிட்டன என்றே தோன்றுகிறது. அக்குறையைப் போக்குகின்ற நோக்கில் இந்தக் கட்டுரை அமைகின்றது. அதை இவ்வாறு அமைப்பதற்கு வேறொரு காரணமும் இருக்கின்றது.

உதாரணமாக, ஓர் அன்பருக்கு, ‘வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இது உங்களுடைய பிரச்சினை தீர்வதற்கு வழி செய்யும்’ என்று நான் எழுதி இருந்தேன். நான்கு வாரங்களுக்கு பிறகு அந்த அன்பர், ‘நீங்கள் கூறியபடி நான் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்கிறேன். ஆனால் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடாக இல்லை’என்று குறைப்பட்டு எனக்கு எழுதியிருந்தார்.

அவருடைய பிரச்சினை தீராமல் இருந்ததற்குக் காரணம் உண்டு. ‘வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதென்றால் என்ன?’ என்பதைப் புரிந்து கொள்ளாமலே ஏதோ ஒன்றைச் செய்துவிட்டு, வீட்டைச் சுத்தப்படுத்திவிட்டதாக நினைத்துவிட்டார் அவர். அதனால்தான் அவருடைய பிரச்சினை அப்படியே தீராமல் இருந்துவிட்டது.

பெரும்பாலும் நம்மைச் சுற்றியுள்ள குறைகள் நம் கண்ணில் படுவதில்லை. அப்படியே நாம் அக்குறைகளைத் தெரிந்துகொள்ள விரும்பினாலும், ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் நம் கண்ணில் படுவதில்லை. கண்ணில் பட்டதைப் பார்த்துவிட்டுக் குறைகள் அனைத்தையும் பார்த்துவிட்டதாக நினைத்துக் கொள்கின்றோம். பார்த்ததற்கும், பார்க்கப்பட வேண்டியதற்கும் நடுவே ஒரு பெரிய இடைவெளியே இருக்கின்றது. இந்த உண்மையைப் புரியவைக்க முன்வருகின்றது இந்தக் கட்டுரை.



book | by Dr. Radut