Skip to Content

08. அன்னையின் பொறுப்பில் வருபவர்கள்

ஞானிகளும், தபஸ்விகளும் பரம்பொருளை அடைந்து, அனுபவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். மக்கள் இவர்களை நாடிச் செல்வதை நாம் அறிவோம். வாழ்க்கையில் அல்லலுறும் மக்கள் இவர்களை நாடிச் செல்வதற்குக் காரணம், இவர்களிடம் உள்ள ஆன்மீகச் சக்தியால் தம்மை வருத்தும் பிரச்சினைகளுக்கு விடிவு ஏற்படும் என்பதுதான்.

நமது முன்னாள் ராஷ்டிரபதி ராஜன்பாபு ஆஸ்த்மா வியாதியால் மிகவும் துன்புற்றுக்கொண்டிருந்தார். ‘ரமண மகரிஷியைத் தரிசித்தால் அந்த நோய் தீரும்’என்று அறியவே, ராஜன்பாபு சிறிது காலம் திருவண்ணாமலைக்குச் சென்று, ரமணரின் ஆசிரமத்தில் தங்கி, மகானைத் தரிசித்து நலம் பெற்றார். இதைப் போலவே, ‘என்னுடைய பசு சரியாகப் பால் கறக்கவில்லை. விபூதி பிரசாதம் தந்து இக்குறையை நீக்கி அருள வேண்டும்’ என்று ஒரு விவசாயி, ஞானானந்தரிடம் வந்து பிரார்த்தித்து, குறை தீர்ந்து சென்ற நிகழ்ச்சியைப் பற்றியும் பலர் கேள்விப்பட்டு இருப்பார்கள். இந்நிலை கடந்த தபஸ்விகள், இந்நிலைக்குட்பட்ட மனிதர்களின் லௌகிகக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு, அனுக்கிரகம் செய்வதை நாம் பார்க்கிறோம். ஒரு பெருங் குறிக்கோளுக்காக வாழ்ந்தாலும், இப்பெரியவர்கள் பரோபகாரக் குணம் படைத்தவர்கள். ஆகவே, மிகச்சிறிய விஷயங்களாக இருந்தாலும் அவற்றைக் கனிவோடு ஏற்று, அவற்றில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து, நலம் செய்வார்கள்.

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்து அன்னையை நாடி வந்தவர்கள் பலர். அவர்கள் அனைவருமே யோகம் செய்வதற்காக வந்தவர்கள் அல்லர். ஆனால், அவர்களுடைய கோரிக்கைகளை எல்லாம் ஏற்றுப் பூர்த்தி செய்து வைத்துள்ளார் ஸ்ரீ அன்னை. ஸ்ரீ அரவிந்தாசிரமம் பிற ஆசிரமங்கள் பலவற்றிலிருந்தும் வேறுபட்டிருப்பதால், ‘அன்னையை நாடி வருபவர்கள், மற்ற எங்கும் கிடைக்காத நன்மைகள் இங்கு கிடைக்கும்’ என்ற நம்பிக்கையோடு வருவார்கள். ‘பேச்சை இழந்த குழந்தை பேச வேண்டும்’என்று வருபவர்கள் சிலர்; ‘வீட்டை விட்டு ஓடிய பையன் திரும்பவும் வீட்டிற்கு வர வேண்டும்’ என்று வருபவர்கள் சிலர்; ‘தொழிற்சாலையில் கதவடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அது நீங்க வேண்டும்’ என்று வருகின்ற தொழிலதிபர்கள் சிலர்; ‘வேலை கிடைக்க வேண்டும்’ என்ற பிரார்த்தனையோடு வருபவர்கள் சிலர்; ‘திருமணமாகவில்லை. விரைவில் திருமணமாக வேண்டும்’ என்று கோருபவர்கள் சிலர்; ‘தீராத பிணிகளைத் தீர்த்துவைக்க வேண்டும்’ என்று தஞ்சம் அடைபவர் சிலர்; - இவ்வாறாக, பல தரப்பட்டவர்கள் பலவிதமான கோரிக்கைகளோடு அன்னையிடம் வந்தவண்ணம் இருப்பார்கள். அப்படி வந்தவர்கள் அனைவரும் தம் குறை தீர்ந்து, குதூகலத்துடன் செல்வார்கள்.

எந்தச் செய்தியாக இருந்தாலும், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அது அன்னையின் கவனத்திற்கோ அல்லது அவர் இருக்கும் இடத்திற்கோ கொண்டு வரப்பட்டால் போதும். உடனே அதற்கு வழி பிறந்துவிடும்; அல்லது அது நிறைவேறிவிடும். ‘என்னை நேரடியாகச் சந்தித்தவர்கள் பலராக இருந்தாலும், சந்தித்த நேரம் ஒரேயொரு கணமாக இருப்பினும், அவர்கள் என் பொறுப்பில் வந்துவிடுகிறார்கள்’ என்று அன்னை குறிப்பிடுவார். அன்னையின் அருளால் பலருக்குப் பலவிதமான அனுபவங்களும், விமோசனங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

சிரமங்களாக வந்தவை பல பெரிய நன்மைகளாக மாறி, பெரும்பலனைத் தருவதை அன்னையின் பல பக்தர்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். ‘சில பிரச்சினைகளுக்கு முடிவே இல்லை’ என்ற நிலையில், அன்னையின் அருளால் அவை சாதனையாக மாறியிருக்கின்றன.

மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல நோயாளிகள், பல்வேறு தெய்வங்களையும் வழிபட்டுப் பலன் கிடைக்காமல் போனபிறகு, அன்னையிடம் செய்துகொண்ட கோரிக்கையால் தம்முடைய நோய் தீர்க்கப்படுவதைப் பார்க்கிறார்கள்.

எந்தவிதக் குறிக்கோளும் இல்லாது வருகின்ற சிலர், அன்னையின் அருளைப் பெற்றவுடன் தம் வாழ்க்கையில் புதுவிதமான குறிக்கோள் இடம் பெற்று, அதனால் வாழ்வு பிரகாசமாவதைக் கண்டிருக்கிறார்கள்.

ஒரே பதவிக்காகப் போட்டயிட்ட இருவர் அன்னையின் அருளை நாடுகிறார்கள். இருவருமே அப்பதவியை உரிய காலங்களில் பெற்று மகிழ்ச்சி அடைகிறார்கள். வாழ்க்கையில் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியவர்கள்கூட அன்னையைத் தற்செயலாகத் தரிசிக்க நேர்ந்தபோது, எந்தவித முயற்சியும் இன்றி அந்த ஆபத்திலிருந்து நீங்கியிருக்கிறார்கள்.

கோரிக்கை செய்தவர் யாராக இருந்தாலும் அவருடைய கோரிக்கை நிறைவேறுகிறது.

அன்னையிடம் நம்பிக்கை இல்லாதவர்களின் இன்னல்களுக்காக, அன்னையிடம் நம்பிக்கையுள்ள அன்பர் ஒருவர் பிரார்த்தனை செய்து கொண்டால், நம்பிக்கை இல்லாதவர்களின் இன்னல்கள் முழுவதுமாக நீங்கிப் போகின்றன.

தற்செயலாக அன்னையைத் தரிசித்தவர்களோ அல்லது அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டவர்களோகூட, அன்னையின் அருளைப் பெறுகின்றனர். அவர்களுடைய துயர்கள் தாமாகவே தீர்கின்றன. அல்லது பொருட்செல்வம் தாமாகவே வந்து குவிகிறது.

*****



book | by Dr. Radut