Skip to Content

05. வெள்ளத்திற்கு ஒரு வரம்பு

தமிழிலக்கிய உலகில் திரு. வாசவன் ஒரு பிரபல எழுத்தாளராக விளங்கிப் பொலிகின்றார். மூத்த தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஏராளமான சிறு கதைகள், நாடகங்கள், புதினங்கள், தொடர்கதைகள், கட்டுரைகள் ஆகிய படைப்புகளின் மூலம் தமிழ் வாசகர்களிடையே நிரந்தர இடத்தைப் பெற்றிருப்பவர் அவர். ‘அமுதசுரபி'யில் வெளிவரும் கட்டுரைகளைப் படித்துவரும் வாசகர்களில் வாசவனும் ஒருவர். ஒவ்வொரு கட்டுரையையும் ‘அமுதசுரபி'க்குப் பிரசுரத்துக்கு அனுப்புவதற்குமுன், நான் அதை அவரிடம் கொடுத்துப் படிக்கச்செய்வது என் வழக்கமாக இருந்துவருகின்றது. அவ்வப்போது கட்டுரைகளைப் பற்றிய கருத்துகளை அவர் எனக்கு எழுதுவதுண்டு. என்னுடைய கட்டுரைகளைப் படிக்கவும், விமர்சிக்கவும் ஆரம்பித்த அவர், இன்று அன்னையிடம் மிகுந்த நம்பிக்கையும், பக்தியும் கொண்ட அன்பராகிவிட்டார். அன்னையின் அருளால் அவருக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் இந்தக் கட்டுரையில் இடம்பெறுகின்றன.

1

அவர் எனக்கு அறிமுகமான சூழ்நிலை இன்னும் என் மனத்தில் அகலாமல் இருந்துவருகிறது. கடலூருக்கு அருகில் ‘ராமாபுரம்’என்ற ஒரு கிராமம் இருக்கிறது. பத்தொன்பது ஆண்டுகளுக்குமுன் - அதாவது 1967இல் - அந்தக் கிராமத்துக்குச் செல்ல வேண்டிய ஒரு சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது. அப்பொழுது அது பிற்பட்ட கிராமங்களில் ஒன்றாக இருந்தது. அங்கு இருந்த வீடுகள் அனைத்தும் மண்சுவரால் கட்டப்பட்டவை. ‘கல் வீடு’என்றால் அங்கு இருந்த ஒரேயொரு வீட்டைத்தான் குறிக்கும்.

ராமாபுரத்தில் உள்ள நிலங்கள் யாவும் வானம் பார்த்த நிலங்களே! ‘கிணற்றுப் பாசனம்’என்பது அந்தக் கிராமத்தில் அப்போது அறிமுகமாகாத ஒன்று. ஊரில் வறட்சியும், வறுமையுமே நிறைந்திருந்தன. அரசாங்கம் கிராமங்களில் நிலவும் வறட்சியையும், வறுமையையும் விரட்டி, வளம் கொழிக்கச் செய்வதற்குப் பல விதமான திட்டங்களையும், செயற்பாட்டு முறைகளையும் உருவாக்கியுள்ளது. ஆனால், இத்திட்டங்களையும், ஏற்பாடுகளையும் செயல்படுத்துகின்ற துறைகள் ராமாபுரம் போன்ற கிராமங்களுடன் தொடர்பு கொள்ள முடியாதபடி ஏதோ ஒரு தடை இருந்துவந்தது. அதனால் கிராமத்தைச் சென்று அடைய வேண்டிய பல திட்டங்கள் அங்கு போய்ச் சேராமல் வறுமையும், வறட்சியும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தன. சோபை இழந்து நின்ற ராமாபுரம் அந்தச் சோகங்களில் மூழ்கிக்கிடந்தது.

ராமாபுரத்தின் நிலை என் மனத்தை வெகுவாகப் பாதித்தது. அந்த வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு வங்கிக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. நான் ஒரு முறை வங்கியின் உயர் அதிகாரிகளிடம் பேசிக்கொண்டு இருந்தபொழுது, ‘வங்கியில் கிணறு வெட்டுவதற்கும், பயிர் செய்வதற்குமாகப் பலவிதமான கடன் வசதிகள் உள்ளன. அந்த வசதிகள் ராமாபுரத்தில் உள்ள விவசாயிகளுக்குக் கிட்டுமாறு செய்து, அங்கிருக்கும் வறுமைக்கும், வறட்சிக்கும் முடிவு கட்டும் ஒரு முயற்சியை மேற்கொள்ளுங்கள்’என்று கூறினேன். அதற்குப் பிறகு எங்களுக்குள் நேர்ந்த சந்திப்பின்போதெல்லாம் அதைப் பற்றியே வலியுறுத்திக் கூறினேன். முதலில் வங்கி அதிகாரிகள் மிகவும் தயங்கினார்கள். முடிவில் என் வற்புறுத்தலின் காரணமாக, ராமாபுரம் விவசாயிகளுக்குக் கடன் வழங்க முன்வந்தார்கள். ஆனால், வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டதைப் போல ராமாபுரம் விவசாயிகள் வங்கியில் கடன் வாங்கப் பயந்தார்கள். அதற்குக் காரணம், ‘வங்கி கொடுக்கும் பெரிய தொகைகளைக் கடனாகப் பெற்றால், அதைத் திருப்பிச் செலுத்த முடியாதபடிப் போய்விடலாம். முடிவில் அடமானம் வைத்த சொத்துகள் மீட்கப்பட முடியாமல் மூழ்கிவிடும்’ என்று அவர்கள் கருதியதுதான். அதனால் அவர்கள் கிணறு வெட்டுவதற்காகக் கொடுக்கும் ஏழாயிரம் ரூபாய்க் கடனைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.

கிணறு வெட்டிப் பூமிக்கடியில் உள்ள நீரைப் பயன்படுத்தாவிட்டால் அந்தக் கிராமத்தில் உள்ள வறட்சி நீங்குவதற்குக் காலம் காலமாக வழி இல்லை. காமதேனுவாக விவசாயிகளைத் தேடி வந்து நிற்கும் வங்கியின் கடன் வசதிகளை உபயோகப்படுத்திக்கொண்டால் மட்டுமே வறட்சி நீங்கி நிரந்தரச் சுபிட்சத்தை அடைய அந்தக் கிராமத்துக்கு வழி இருக்கிறது. இதை அந்த ஊர் விவசாயிகள் உணராமல் கண்மூடித்தனமாகப் பேசினார்கள்.

அவர்கள் கண்களை எப்படித் திறக்க வைப்பது? சிந்தித்தேன்; செயல்பட்டேன். ராமாபுரத்தில் உள்ள ஒரு விவசாயி எனக்குப் பழக்கமானவர். அவரை அழைத்து, ‘நீ ஒரு கிணறு வெட்டு. அதற்கு வேண்டிய வசதிகளை நான் என் சொந்தப் பொறுப்பில் செய்து கொடுக்கிறேன். அதில் நஷ்டம் வந்தால், அதற்கு நான் பொறுப்பு’என்று கூறினேன். அவரும் அதற்கு இணங்கிக் கிணற்று வேலையைத் தொடங்கினார்.

என் முயற்சியும், அவருடைய உழைப்பும் வீண்போகவில்லை. நிலத்தடியில் மறைந்துகிடந்த நீர், அவர் வெட்டிய கிணற்றில் பொங்கி எழுந்தது. அதனால் அவருக்கு உற்சாகமும், நம்பிக்கையும் பிறந்தன. வங்கி கொடுக்க முன்வந்த கடன் தொகையை இப்போது அவர் எந்தவிதத் தயக்கமும் இன்றிப் பெற்றுக் கிணற்று வேலையைப் பூர்த்தி செய்தார். அபரிமிதமாகக் கிடைத்த நீரைக் கொண்டு விவசாயம் செய்தார். நல்ல மகசூல் கிடைத்தது. மிகக்குறுகிய காலத்தில் சாதாரண விவசாயியாக இருந்த அவர், மிகவசதியுள்ள ஒரு முக்கியஸ்தராக அந்தக் கிராமத்தில் உயர்ந்துவிட்டார்.

இந்த மாற்றமும், ஏற்றமும் அவர் வெட்டிய கிணற்றாலும், வங்கி கொடுத்த கடனாலும் ஏற்பட்டவையே என்பதை ராமாபுரத்தில் உள்ள எல்லா விவசாயிகளும் உணர்ந்தார்கள். வங்கியில் போட்டி போட்டுக்கொண்டு கடன் தொகையைப் பெற்றுக் கிணறு வெட்டத் தொடங்கிவிட்டார்கள்.

எழாண்டுகளுக்குப் பிறகு நிலைமை முற்றும் மாறிவிட்டது. ராமாபுரத்தில் மட்டும் அல்லாது அதைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் நானூற்றுக்கும் அதிகமான கிணறுகள் தோண்டப்பட்டுவிட்டன. அதனால் எங்கும் பசுமை, செழிப்பு, பணப்பெருக்கம், வாழ்வில் நம்பிக்கை, பல்துறைகளிலும் வளர்ச்சி, ஊரெல்லாம் கல்வீடுகள்.

விவசாயம் வளர்ந்தபோது விவசாயிகளும் வளர்ந்துவிட்டார்கள்; உயர்ந்து விட்டார்கள். விவசாயம் வளரக் காரணமாக இருந்தவை அரசாங்கம் வழங்கிய கடன்கள். விவசாயிகள் அந்தக் கடன்களைப் பெற்றுக்கொள்ளத் தயங்கினால், அவர்கள் வாழ்வில் வளம் இல்லை; நலம் இல்லை.

இந்தச் செய்தியை இந்திய நாட்டில் உள்ள எல்லா விவசாயிகளுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன். ராமாபுரத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னணியாக வைத்து ஒரு கதையை உருவாக்கினால், அது விவசாயிகள் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அமையும் என்று நினைத்தேன்.

கதைக்கு வேண்டிய கருத்தும், நிகழ்ச்சிகளும் என்னிடம் இருந்தன. ஆனால் அதைக் கதை வடிவத்தில் நான் கூற விரும்பிய உண்மையை மையமாக வைத்து எழுதுவதற்கு ஒரு நல்ல தேர்ந்த தமிழ் எழுத்தாளர் தேவை என்பதை உணர்ந்தேன்.

1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரபல எழுத்தாளர் திரு. அகிலனுக்கு ஒரு கடிதம் எழுதி, என் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும்படிக் கேட்டுக் கொண்டேன். அவருடைய உதவியால் திரு. வாசவன் எனக்கு அறிமுகமானார். நான் கேட்டுக்கொண்டபடி, ‘ஒரு கிராமம் உயிர் பெறுகின்றது’என்ற தலைப்பில் ஒரு நவீனத்தை எழுதிக் கொடுத்தார் அவர். அது இன்னும் நூல் வடிவில் வெளியிடப்படவில்லை. கதையை எழுதி முடித்த பிறகும் எங்களுடைய தொடர்பு நீடித்துவருகிறது. நான் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக ‘அமுதசுரபி'யில் அன்னையைப் பற்றி எழுதிவரும் கட்டுரைகளையெல்லாம் அவருக்கு அனுப்பி வைக்கிறேன். அவரும் கட்டுரையைப் பற்றிய கருத்துகளைத் தவறாது தெரிவித்து வருகிறார்.

2

ஒரு சமயம் வாசவன் புதுவைக்கு வந்திருந்தார். நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது அவர் தன் துணைவியாரைத் தொல்லைப்படுத்திவரும் நாள்பட்ட தலைவலியைப் பற்றிக் கூறினார். ‘எத்தனையோ வைத்தியங்கள் செய்தும் அது தீரவில்லை’என்று சொன்னார்.

‘நீங்கள் சென்னைக்குக் கிளம்பு முன் ஆசிரமத்துக்குச் சென்று ஸ்ரீ அரவிந்தர்-அன்னை சமாதியில் சிறிது நேரம் உங்கள் மனைவிக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். ‘நீண்ட நாள்களாக இருந்துவரும் தலைவலி என் மனைவியை விட்டு நீங்க வேண்டும்’என்று அன்னையிடம் கேட்டுக் கொள்ளுங்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்போம்’ என்று நான் அவரிடம் கூறினேன். அவர் சென்னைக்குச் சென்றவுடன், ‘சமாதிக்குப் போய் மனைவியின் தலைவலி நீங்க வேண்டும்’என்று வேண்டிக் கொண்டதாக எனக்குக் கடிதம் எழுதினார். அதற்குப் பிறகு ஒரு நீண்ட இடைவெளி. ‘தலைவலி தொடர்ந்து இருந்துவருகிறதா? அல்லது நீங்கிவிட்டதா?’ என்பது பற்றி அவரும் எனக்கு எழுதவில்லை; நானும் அதைப் பற்றி அவரிடம் கேட்கவில்லை.

பிறகு ஒரு நாள், நான் அவருடைய மனைவியின் உடல்நலத்தைப் பற்றிக் கேட்டுக் கடிதம் எழுதியிருந்தேன். ‘என் மனைவியைப் பீடித்திருந்த அந்தத் தலைவலி அன்றே போய்விட்டது. அது எப்பொழுதாவது ஒரு தடவை சிறிது நேரம் தலைகாட்டிவிட்டுப் போய்விடும்’என்று அவர் எழுதி இருந்தார்.

1982ஆம் ஆண்டு ஜூலை மாதம், வாசவன் வழக்கம் போல எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் வழக்கத்துக்கு மாறாக ஒரு செய்தியை எழுதியிருந்தார். தன்னுடைய மனைவி முதல் முறையாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மிகப்பெரிய நர்ஸிங் ஹோமில் அவரைச் சேர்த்துள்ளதாகவும், ரத்தம், நீர், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளின் முடிவுகளை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும், அன்னைதான் அருள் செய்ய வேண்டும் என்றும் எழுதியிருந்தார். ‘அன்னையின் அன்பரான அவருடைய மனைவிக்கு அப்படிப்பட்டதொரு துன்பம் ஏற்படுவதற்கில்லை. நிச்சயமாக அன்னை அவருக்கு அருள்வார். அவர் மனைவியின் துன்பம் அறவே நீங்கிவிடும்’ என்று நான் உறுதியாய் நம்பினேன். அடுத்து வரும் கடிதத்தில் அவர் என்ன செய்தியை எழுதப்போகிறார்? நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவரிடமிருந்து கடிதம் வந்தது. அதில் அவர், ‘சென்ற கடிதத்தில் என் மனைவியின் நோய் பற்றி எழுதி இருந்தேன். எல்லா மெடிகல் ரிப்போர்ட்களும் வந்தன. நான் அதற்கு முன்பே அன்னையிடம் வேண்டியிருந்தேன். அன்னையின் அருளால் என் மனைவிக்குப் பெரிய கோளாறுகள் இல்லை என்பதோடு, இருதய நோயும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. ‘ஈஸ்னோஃபலியா’என்னும் சாதாரண சுவாசக் கோளாறுதான் என்று மருத்துவர் கூறினார்.

என்னைப் போலவே என் மகளும் அன்னைக்கு வேண்டுதல் செய்து இருந்தாள். இருவரும் எங்கள் காணிக்கையை ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்கு மணியார்டர் மூலம் அனுப்பியுள்ளோம்’என்று எழுதியிருந்தார். ‘அன்பருக்கு வந்த துன்பத்தை அன்னை விலக்கிவிட்டார்’என நினைத்து மகிழ்ந்தேன்.

அதற்குப் பிறகு வந்த கடிதம் ஒன்றில், அவர் தன் மகனைப் பற்றி எழுதி இருந்தார். அவருடைய இளைய மகன் வாழ்க்கையில் நிரந்தரமாகக் கால் ஊன்றாமல் இருந்துவந்தது அவருக்கும், குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் பெருங்கவலையை அளித்தது.

அன்னையின் அருளால் இப்பொழுது பிரபலமாக விளங்கும் சினிமா இயக்குநர் ஒருவரிடம் அவன் உதவி இயக்குநராகச் சேர்ந்து, புகழ் வாய்ந்த நிறுவனம் தயாரித்துவரும் படம் ஒன்றில் பணிபுரிந்துவருவதாகவும், இந்த முயற்சியில் வெற்றி பெற்றால், அவன் முன்னுக்கு வரப் பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தார். அன்னையிடம் அண்டியவர் யாராக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்து பிரகாசிப்பார்கள் என்பதைப் பல நிரூபணங்களின் மூலம் நான் கண்டிருக்கிறேன். அது போல, ‘வாசவனுடைய மகனும் நிச்சயம் முன்னுக்கு வருவான்’என்று நான் நினைத்தேன்.

3

1983ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், வாசவன் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னால் சென்னையிலும், பரவலாகத் தமிழ்நாட்டிலும் பெருமழை பெய்திருந்தது. சில இடங்களில் வெள்ளமும், பெருத்த சேதங்களும் ஏற்பட்டன. வாசவனுடைய வீடு நெடுஞ்சாலையை ஒட்டி இருந்தாலும், அது மிகத்தாழ்வான பகுதியில் உள்ளது. அவர் வீட்டை ஒட்டி ஒரு கால்வாய். தென்சென்னையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மழை பெய்தால், நீர் மொத்தமாகத் திரண்டு அந்தக் கால்வாய் வழியாகப் பெருமளவில் பெருக்கு எடுத்துச் சென்று அடையாற்றில் கலக்கும்.

மழைநீர் வெள்ளம் போலப் பெருகிவிட்டால் அது கால்வாய்க் கரைகளைக் கடந்துவந்து வாசவன் வீட்டைச் சூழந்துகொண்டு, அந்தப் பகுதியை ஒரு தீவைப் போல ஆக்கிவிடும்.

பேய்த்தனமாகக் கொட்டிய மழை இரண்டு நாள்களாகியும் ஓயவில்லை, மாயவில்லை. அதுவரை அவருடைய வீட்டைச் சூழ்ந்திருந்த மழைநீர் கணத்துக்குக் கணம் பெருகி, வீட்டிற்குள் வந்துவிட்டது.

அதைப் பற்றி எல்லாம் விரிவாக எழுதி இருந்த அவர், ‘வெள்ளம் வீட்டுக்குள் புகுந்துவிட்டதால் நானும், என் குடும்பத்தினரும் அப்புறப்படுத்த வேண்டிய பொருள்களை மட்டும் எடுத்துக்கொண்டு, மேல்தளத்தில் வசிக்கும் எங்களிடம் அன்பு மிகக்கொண்ட ஒரு மூதாட்டியின் இல்லத்தில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தோம். மூன்று நாள்கள் வரை மழையும் விடவில்லை; வெள்ளமும் குறையவில்லை. நான்காவது நாள் திடீரென்று மழை நின்றது; வெள்ளம் சிறிது சிறிதாக வடிந்தது. வெள்ளம் புகுந்ததால் வீட்டுச் சுவர்களில் ஏற்பட்ட கறைகளும், காயங்களும் அதிகம். அதனால் வீட்டுக்கு வெள்ளை அடித்துச் சுத்தம் செய்த பிறகு நேற்றிரவு அங்கே திரும்பினோம். திரும்பியதும் அன்னைக்கு மலரஞ்சலி; அடுத்ததாக உங்களுக்குக் கடிதம் எழுதுகின்றேன்’ என்றும் எழுதியிருந்தார்.

எதிர்பாராதவிதமாக 1984, பிப்ரவரி மாதம், சென்னையிலும், தமிழ்நாட்டிலும் நல்ல மழை பெய்தது. விடாமல் கொட்டிய மழை, 16ஆம் தேதி விடியற்காலை 4 மணிக்கு வாசவனின் வீட்டுக்குள் வெள்ளம் வழக்கம் போல வருகை தந்துவிட்டது. மூன்று மாதங்களுக்கு முன்னால் பட்ட பாட்டை இன்னும் அவர் மறக்கவில்லை. மறுபடியும் அதே மாதிரியான துன்பம். அது மட்டுமன்று, வெள்ளத்தால் சேதமுறாமல் செய்ய அலமாரி, மேஜைகள் போன்ற பெரிய பொருள்களிலிருந்து சிறிய பொருள்கள் வரை அப்புறப்படுத்தியாக வேண்டும்.

வெள்ளம் வடிந்தபின், வெள்ளை அடித்துப் பூச்சுவேலைகள் செய்ய வேண்டும். ஆகவே, சமீபத்தில் வீட்டுக்கு அடித்த வெள்ளை பாழாகமலும், பெரும்பாலான பெரிய சாமான்களைக்கூட எடுத்துப்போகக்கூடிய நெருக்கடி இல்லாமலும் செய்யுமாறு அவரும், அவர் குடும்பத்தினரும் அன்னையைப் பிரார்த்திக்கொண்டார்கள். ‘வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தாலும், அரை சாண் அளவுக்கு மேல் தண்ணீர் உயராமல் இருக்க வேண்டும்’என்று அன்னையிடம் கூறிவிட்டு, சில சாமான்களை மட்டும் எடுத்துக்கொண்டு மேல்வீட்டுக்கு அகதிகளாகப் போய்ச் சேர்ந்தார்கள். 17ஆம் தேதி வரை, மழை கொட்டிக் கொண்டிருந்தது. வீட்டைச் சுற்றிலும் இடுப்பளவு தண்ணீர். வீட்டுக்குள்ளும் அதே அளவு தண்ணீர் புகுந்திருக்க வேண்டும்.

அன்று காலை ஆறு மணி அளவில் மழை நின்றது. வெள்ளமும் குறையத் தொடங்கியது. ஒரு பெரிய இழப்புக்குத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டு வாசவனும், அவர் குடும்பத்தினரும் வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே போய்ப் பார்த்தனர். அங்கு நிலவிய காட்சி அவர்களை வியப்பில் ஆழ்த்திவிட்டது.

‘என்ன அதிசயம்! ‘வீட்டுக்குள் இந்த உயரத்திற்கு மேல் வெள்ளம் வரக் கூடாது’என்று நாங்கள் எந்த வரம்பு கட்டி இருந்தோமோ, அந்த வரம்பை மிகாமல், சரியாக அதே அளவு தண்ணீர்தான் வீட்டுக்குள் பரவி இருந்தது. அன்னையின் அருள், வெள்ளத்தை ஊடுருவி விரட்டி, இந்த எளிய சிட்டுக்குருவிகளின் சின்னஞ்சிறு கூட்டை எந்த ஒரு சேதமும் இல்லாமல் காப்பாற்றித் தந்துவிட்டது’என்று உணர்ச்சி பெருகத் தமக்கேயுரிய பாணியில் தம் வியப்பை வர்ணித்திருந்தார் வாசவன்.

4

‘வாசவன் என் கட்டுரையைப் படித்தபின் தம் கருத்துகளையும், விமர்சனங்களையும் எனக்கு எழுதுவார்’என்று நான் முன்னர் குறிப்பிட்டு இருந்தேன். அவர் அப்படி எழுதியவற்றுள் இரண்டொன்றை வாசகர்களுக்குச் சொல்லாமல் இந்தக் கட்டுரையை முடிக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை.

‘அமுதசுரபி’இதழில் வெளியான ‘ஒரு திருமணம்’கட்டுரையை, நான் வழக்கம் போல அவருக்கு அனுப்பி இருந்தேன். அவர் அதைப் படித்துவிட்டு எழுதியதை அவர் சொற்களிலேயே இங்கே தருகிறேன்.

‘இதுவரை வந்த கட்டுரைகளுள் இதுவே என்னை நீராக உருக்கிய கட்டுரையாகும். 35 வயதுப் பெண்ணின் தடைப்பட்ட திருமணம், ஊராரின் ஏச்சுப் பேச்சுகள், அந்தப் பெண்ணின் கண்ணீர், தமக்கையின் தவிப்பு  இத்தகைய சூழலில் சிக்கி இருந்த அந்தத் துன்பப் படகினை விபத்தின்றிக் கரை சேர்த்த அன்னையின் கருணையை அந்தப் பெண்மணி தந்த உருக்கமான கடிதத்தில் படித்தபோது கண்ணீர் பெருகியது.

அருளே! அன்னையே! என்றும் என்னை உங்களுக்குள் இருத்திக் கொள்ளுங்கள்'.

வேறொரு கடிதத்தில் வாசவன் அன்னையைப் பற்றியும் எழுதி இருந்தார். அதில் ஒரு பகுதி:

‘அன்னையைக் காரியவாதமாக மட்டும் அல்லாது பரிபூரணமாக நம்பி, அவரிடம் நம் காரியங்களை ஒப்படைக்கும்போது, அவரே அந்தக் காரியங்களை நடத்திக்கொண்டுபோகிறார். நமக்குச் சுமை இல்லை; வலி இல்லை; வலிமை மட்டுமே உண்டு'.

அவர் இவை போன்ற பக்திப் பரவசமான பல கடிதங்களை எனக்கு எழுதி, என்னையும் அந்தப் பரவசத்தில் ஈடுபடுத்தத் தவறியதில்லை.

*****



book | by Dr. Radut