Skip to Content

02. ஒளி வெள்ளம்

அந்தக் கடிதம் கோவையிலிருந்து வந்திருந்தது. அதை ‘அமுதசுரபி’ வாசகர் ஒருவர் எழுதி இருந்தார். ‘அன்னையைப் பற்றிய கட்டுரைகளை ஆழ்ந்து படித்துவரும் அன்பன்’என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், தம் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சோதனையையும், அதன் காரணமாக எழுந்துள்ள வேதனையையும் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, அவற்றில் இருந்து மீள்வதற்கு அன்னையின் அருளை நாடுவதாகவும் எழுதியிருந்தார். அதற்கு முன்னால் அவர் தம் வாழ்க்கையைப் பற்றிய சிறுகுறிப்பு ஒன்றையும் தந்திருந்தார். எஸ்.எஸ்.எல்.ஸி.யோடு தம் படிப்பை முடித்துக்கொண்டு, வேலைக்குப் போக ஆரம்பித்த அவர், 15 ஆண்டு காலம் பல ஊர்களில் வாழ்ந்தார். பல மனிதர்களைச் சந்தித்தார். அவருடைய அனுபவம் வளர்ந்தது. ‘சொந்தத் தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்’ என்ற முனைப்பு இலட்சியமாக உருப்பெற்றது.

1975ஆம் ஆண்டு வந்தது. கூடவே நல்ல காலமும் வந்தது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவருக்குச் சொந்தத் தொழில் செய்யும் வாய்ப்புக் கிட்டியது. அது இனிப்பு மிட்டாய்களைச் செய்து, விற்கும் ஒரு நிறுவனம். இரண்டு ஆண்டுகளில் தொழில் நன்றாகவே கால் ஊன்றிக்கொண்டுவிட்டது. அதை இன்னும் சற்றுப் பெரிய அளவில் செய்ய நினைத்த அவர், நாட்டுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கியில் வீட்டை அடமானம் வைத்து, பணம் வாங்கி, தொழிலை விரிவுபடுத்தினார். அதற்குப் பிறகுதான் சோதனை ஆரம்பம் ஆயிற்று. நன்றாக நடந்துகொண்டிருந்த தொழிலில் தோல்விக்கு மேல் தோல்வி. அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

வங்கியில் கடன் வாங்கிப் போட்ட தொகை மட்டுமன்றி, தொழிலில் போட்ட முதலும் சேர்ந்து போய்விட்டது. வாங்கிய கடனைக் காலத்தில் வங்கிக்குச் செலுத்த அவரால் முடியவில்லை. வங்கியும் அவரை விடுவதாக இல்லை. அவர் மீது கோர்ட்டில் வழக்குத் தொடுத்து, கடனை வசூல் செய்தவற்கான டிக்ரியையும் அது பெற்றுவிட்டது. ஆனால் அதுவரை வேகத்தைக் காட்டிய வங்கி, அதற்குப் பிறகு டிக்ரியை நடைமுறைப்படுத்த மேல்நடவடிக்கை எதுவும் எடுக்காமல் நிதானம் காட்டியது.

அப்படி எத்தனை காலம்? அதை அன்பர் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் குறிப்பிட்ட இன்னொன்று நெஞ்சை நெகிழவைப்பதாக இருந்தது. ‘மூன்று வயதான என் மகனுக்குப் பிறந்த நாள் முதல் இதுவரை ஒரு வாய் பால்கூட வாங்கிக் கொடுக்க முடியவில்லை’ என்று அவர் எழுதியிருந்ததைப் படித்தபோது மனம் பனியாக உருகிப்போயிற்று. இதிலிருந்து அவர் மூன்று ஆண்டுக் காலமாக வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது.

இப்படிப்பட்ட வேதனையான பலவற்றைக் கொட்டி எழுதி இருந்த அவர், ‘இத்தகைய ஓர் இக்கட்டான நிலையிலிருந்து மீள அன்னை அருள் செய்ய வேண்டும்’என்று முடித்திருந்தார்.

அந்தக் கடிதம் டிசம்பர் 82இல் எழுதப்பட்டது.

‘உங்களுடைய குறைகளையும், முறையீடுகளையும் அன்னையிடம் ஒன்றன்பின் ஒன்றாக, நிதானமாகவும், தெளிவாகவும் எடுத்துச் சொல்லுங்கள். தெய்வங்களைத் தேடிப் போக வேண்டும். ஆனால் அன்னை, துயருற்றவர்களைத் தேடி வருவார். உங்கள் துன்பங்கள் தொலைகின்றவரை நாள்தோறும் காலையும், மாலையும் அன்னையிடம் கசிந்துருகிச் சொல்லிக்கொண்டே இருங்கள். அன்னை அருள் செய்வார்’ என்று அவருக்குப் பதில் எழுதினேன் நான்.

ஒரு மாதம் ஆயிற்று. அவரிடமிருந்து இரண்டாவது கடிதம் வந்தது. 1983ஆம் ஆண்டு, ஜனவரி மாத இறுதியில் வந்த அந்தக் கடிதத்தில் புதிய தெம்பும், பொலிவும் நிறைந்திருந்தன.

‘என்னுடைய கஷ்டங்களையும், நெருக்கடிகளையும் உங்களுக்கு எழுதிய நேரம் முதற்கொண்டே என்னுடைய வாழ்க்கையில் அன்னையின் அருள் பாய ஆரம்பித்துவிட்டதை நான் பரிபூரணமாக உணர்கிறேன். உங்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘பெற்ற மகனுக்குப் பால் வாங்கிக்கூடத் தர முடியவில்லையே’ என்று கதறியிருந்தேன். ‘இந்தா, அதற்கு ஒரு வழி!’ என்று உடனடியாக ஒரு வழியை அருளினார் அன்னை. ‘வாங்கிய கடனை அடைத்து, அத்துன்பத்தில் இருந்து மீள வழி தெரியவில்லை’என்று நான் உங்களுக்கு எழுதியிருந்தேன். ‘கடனை அடைத்ததுபோக மீதி இருப்பதை வைத்துக்கொண்டு நல்லபடியாகப் பிழைத்துக்கொள்’என்பதுபோல, அன்னை ஒரு பெரிய வழியைக் காட்டிவிட்டார்’ என்றெல்லாம் உள்ளம் உருகி எழுதியிருந்தார் அவர்.

பாலகனுக்கு பால் கிடைத்த வழியைப் பற்றியும், கடனை அடைத்ததுபோக மீதப்படும் அளவுக்குப் பணம் கிடைத்தது பற்றியும் அவர் விரிவாக எழுதவில்லை. இத்தனை விரைவாக அன்னையின் அருள் அவருக்குக் கிடைத்ததும், அதனால் அவர் உடனடியாகத் துன்பங்களிலிருந்து மீண்டதும் அற்புத நிகழ்ச்சிகளாகும். அவர் விவரமாக எழுதியிருந்தால் அன்னையின் அருட்கொடையைப் பற்றி இன்னும் சிறப்பாக உணர்வதற்கு வசதியாக இருந்திருக்கும். ஆனாலும் அவர் எழுதியிருந்ததைப் படித்தபோது என் மனம் நெகிழ்ந்துவிட்டது.

மேலும் அவர் கடிதம் நீண்டது. இப்போது அவருக்கு அன்னையே அனைத்தும்; அவர் நெஞ்சம் எல்லாம் அன்னை; நினைவு எல்லாம் அன்னை; அவர் பேசும் பேச்செல்லாம் அன்னை; அன்னையின்றி அவர் இல்லை. ‘துன்பங்கள் தீர்ந்து, நல்ல எதிர்காலம் அமைவதற்கான அடையாளங்களை இப்போது என்னால் நன்றாகப் பார்க்க முடிகின்றது’என்று பேசிய அன்பரின் கடித வரிகள், அவருடைய வாழ்வில் படிந்த இருளைத் துடைத்து, ஒரு நம்பிக்கை விளக்கை ஏற்றிவைத்த அன்னையின் அருளுக்கு அஞ்சலி செய்தன.

அவருடைய கடிதத்தில் காணப்பட்ட இன்னொரு முக்கிய அம்சம், அவர் அன்னைக்கு ஒரு சிறு தொகையைக் காணிக்கையாக அனுப்பியதைப் பற்றி எழுதியிருந்தது. அது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது. ‘அன்னைக்குக் காணிக்கை அனுப்பியவர்களின் துன்பம் உடனே நீங்கும். அவர்களின் எத்தகைய கோரிக்கையும் நிறைவேறும்’என்பதை நான் பல தடவை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். ஆகவே, ‘அன்னைக்குக் காணிக்கை அனுப்பிவைத்த கோவை அன்பர் இன்னும் பல சிறப்பான நலன்களைப் பெற்று மகிழப்போகிறார்’ என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.

அதற்குப் பிறகு இரண்டு மாதங்களாகிவிட்டன. அந்த ஏப்ரல் மாதக் கடைசியில் அந்த அன்பரிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை அவர் ஒரு நீண்ட கவரில் அனுப்பியிருந்தார். ‘பளிச்'சென்று அச்சிடப்பட்ட ‘ஏர் மெயில்’கவர் அது. அதன் இடப் பக்கத்தில் அவருடைய பெயரும், முகவரியும் அச்சிடப்பட்டிருந்தன. அந்த அன்பருடைய வாழ்க்கையில் புதிய மாற்றமும், ஏற்றமும் ஏற்பட்டிருக்கின்றன என்பதை அந்தக் கவரின் எடுப்பான தோற்றம் எனக்குத் தெரிவித்தது. ‘அதைப் போல உள்ளே இருக்கும் விஷயமும் சுவையானதாகவே இருக்க வேண்டும்’என்று நினைத்துக்கொண்டு கவரைப் பிரித்தேன். அதில் இருந்த ஒன்று என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர் அன்னைக்குக் காணிக்கையாக ரூபாய் ஐம்பத்தொன்றுக்குச் செக் அனுப்பி இருந்தார். என்னுடைய வியப்பை அதிகமாக்குவதைப் போல அவருடைய ‘லெட்டர் ஹெட்’ வழவழப்பான, விலையுயர்ந்த வெள்ளைத் தாளில் அமைந்து இருந்தது. அதில் அவருடைய பெயரும், முகவரியும் அழகாக அச்சிடப்பட்டு இருந்தன. மொத்தத்தில் சிறந்த வியாபார நிறுவனங்களிலிருந்து வரும் கடிதத்தைப் போல அது தோற்றப்பொலிவோடு காட்சியளித்தது. அதைப் பார்த்தவுடன் இந்தக் கடிதத்துக்கும், அவர் முன்பு எழுதிய கடிதங்களுக்கும் இருந்த வித்தியாசம் தெரிந்தது. அந்தக் கடிதங்கள் அவருடைய அவல வாழ்க்கையின் துன்பப் பதிப்புகள். இந்தக் கடிதமோ, அவர் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் புதிய செழிப்பின் புன்முறுவல்.

அவருடைய கடிதத்தைப் படிக்கும் முன்பே, அவர் கடிதத்தில் என்ன எழுதி இருப்பார்? என்பது தெளிவாகப் புரிந்தது. கடிதத்தை ஆவலுடன் படித்தேன். கடிதத்தில் காணப்பட்ட ஒவ்வொரு வரியும் பக்திபூர்வமாக அமைந்து இருந்தது. அதன் இறுதியில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு செய்தி, நான் கடிதத்தின் புறத் தோற்றத்தைப் பார்த்துச் செய்த யூகத்தை உறுதி செய்வதாக இருந்தது.

மூன்று பக்கங்களைக் கொண்ட அந்தக் கடிதத்தில் இரண்டு பக்கங்கள் ஸ்ரீ அரவிந்தாசிரமத்தைப் பற்றியதாக இருந்தன. கோவையிலிருந்து புதுச்சேரிக்கு வந்து, ஆசிரமத்தின் விருந்தினர் விடுதியில் இரண்டு நாள்கள் தங்கி இருந்ததாகவும், சமாதியைத் தரிசித்ததாகவும், ஆசிரமத்திலேயே உணவு உட்கொண்டதாகவும், ஆசிரமத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிடலாமா என்று தம் மனம் தவித்ததாகவும், அந்த எண்ணத்தை அப்போதைக்கு ஒத்திப் போட்டுவிட்டு ஊர் திரும்புவதற்கு மனத்தை மிகவும் திடப்படுத்திக் கொண்டதாகவும், ஆசிரமத்திலிருந்து கிளம்பும்போது அன்னை, ஸ்ரீ அரவிந்தர் படங்களில் இருபதை வாங்கிக்கொண்டுபோய்ப் பல அன்பர்களுக்குக் கொடுத்ததாகவும் மனம் நெகிழ்ந்து எழுதி இருந்தார் அவர்.

அடுத்து அவர் எழுதியிருந்தது மிக முக்கியமான செய்தியாகும். ‘நான் அன்னையின் திருப்பாத கமலங்களில் பூரணமாகச் சரண் அடைந்துவிட்டேன். அன்னையிடம் எல்லாப் பாரங்களையும் ஒப்படைத்த நாள் முதலாக என் வாழ்க்கையில் ஒளி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஒளிமயமான எதிர்காலத்திற்கான வழிகள் ஒன்றன் பின் ஒன்றாய் அமைந்து கொண்டே இருக்கின்றன’என்ற வரிகளைப் படித்தவுடன், ‘இனி அவர் சொல்லப்போகும் செய்தி எதுவாக இருக்கும்?’என்ற எதிர்பார்ப்புடன், கடிதத்தின் கடைசிப் பகுதிக்கு வந்தேன். ‘இன்று டெக்ஸ்டைல் மில் ஸ்பேர் பார்ட்ஸ்கள் சப்ளை செய்யும் ஒரு கடையைத் திறந்திருக்கிறேன். அன்னையின் ஆணையும், அருளும் என்னை வழிநடத்திச் செல்கின்றன’ என்று கடிதத்தை முடித்திருந்தார் அவர்.

அந்த அன்பர் தம்முடைய புதிய தொழிலுக்கு எவ்வளவு முதலீடு செய்து இருக்கிறார்? அந்த முதல் அவருக்கு எவ்வாறு கிடைத்தது? இந்த விவரங்களை அவர் கடிதத்தில் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் யூகம் செய்ய முடிகின்றது. அவர் தொடங்கி இருக்கும் தொழில் பெரிது. அதைப் போலவே அந்தத் தொழிலைத் தொடங்கத் தேவைப்பட்ட தொகையும் கணிசமாகவே இருந்திருக்க வேண்டும்.

கோவை அன்பரின் வாழ்வில் இத்தனை பெரிய மாற்றத்தை மிகக்குறுகிய காலத்தில் விளைவித்த அன்னையின் அருளை எப்படிச் சொற்களால் விவரிக்க முடியும்?

*****



book | by Dr. Radut