Skip to Content

01. தூய்மையால் கிடைத்த அருளும் பொருளும்

‘அமுதசுரபி'யில் அன்னையைப் பற்றிய கட்டுரையில் 1980ஆம் ஆண்டிலிருந்து மாதந்தோறும் தொடர்ந்து வருவதை வாசகர்கள் அறிவார்கள். தொடக்கக் காலத்தில், ‘பூக்களும் அவை சொல்கின்ற செய்திகளும்’என்ற கட்டுரை வெளியாயிற்று. ‘பூக்களின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் உலகுக்குத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் அன்னை’என்பதைக் குறிப்பிட்ட அந்தக் கட்டுரை, ‘நம் வாழ்க்கையில் நன்மைகளும், தீமைகளும் கலந்துள்ளன. தீமைகளைத் தவிர்க்கவும், நன்மைகளைப் பெருக்கிக்கொள்ளவும் பூக்கள் பெருந்துணையாக அமைந்துள்ளன. பூக்களின் துணையால் நாம் நம் வாழ்க்கையைச் செப்பனிட்டுக்கொள்ளலாம். இது ஒரு கலை’என்று பூக்களின் மேன்மையைப் பற்றியும் விவரித்தது.

அந்தக் கட்டுரையைப் படித்த வாசகர்களில் பலர் எனக்குக் கடிதம் எழுதி, தங்களுடைய கஷ்டங்களைத் தீர்த்துக்கொள்வதற்கு ஆலோசனை கூறுமாறு கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஆலோசனைகளைக் கூறிப் பதில் எழுதினேன். அவர்கள் சில நாள்களுக்குப் பிறகு, ‘உங்களுடைய ஆலோசனைகள் எங்கள் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்வதற்கு உறுதுணையாக இருந்தன’ என்று கடிதம் எழுதினார்கள். அவர்களில் ஒரு வாசகர் பற்றி மட்டும் இங்கே குறிப்பிட விழைகிறேன்.

அன்னையைப் பற்றிய கட்டுரைகள் வெளிவரத் தொடங்கிய இரண்டு, மூன்று மாதங்களுக்குப் பிறகு, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் ஊரிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதி இருந்தவர் ஒரு பெண்மணி. அதில், ‘ஸ்ரீ அன்னைûயின் மகிமையை ‘அமுதசுரபி'யின் மூலம் அறிந்தேன். நான் அதிலிருந்து என் கஷ்டங்கள் நீங்கவும், அன்னையின் பூரண ஆசியைப் பெறவும் மிக மிக ஆவலுடன் இருக்கிறேன். இந்த உலகத்தில் மிகவும் முக்கியமானது பணம். அதைப் பெற்று, என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் ஸ்ரீ அன்னையின் படத்துக்கு நாள்தோறும் நாகலிங்கப் பூவை வைத்து பூஜை செய்துவருகிறேன். ஆனால், இதுவரையில் நான் நன்மையான பலன் எதையும் அடையவில்லை. நான் அன்னையின் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு எப்படிப் பூஜை செய்ய வேண்டும் என்பதைச் சிறிது விளக்கமாக எனக்கு எழுதி அனுப்புங்கள் என்று எழுதி இருந்தார் அவர்.

தனக்கு எந்த வகையில் பணக் கஷ்டம் என்பதை அவர் எழுதவில்லை.அவர் என்ன தொழில் செய்கிறார்? அவர் எத்தகைய குடும்பத்தைச் சேர்ந்தவர்? என்பன போன்ற பல விவரங்களை தெரியாதவரையில் நான் அவருக்கு தக்க ஆலோசனைகளை வழங்க இயலாது. பொதுவாக, அன்னையை வழிபட ஆரம்பித்துவிட்டால் எல்லா வகைக் கஷ்டங்களும் மறைந்துவிடும். ஆனால், சில சமயங்களில் அன்னையை எவ்வளவுதான் வழிபட்டாலும் சில கஷ்டங்கள் அந்தப் பக்தரை விட்டு விலகாமல் நீடித்துக்கொண்டிருக்கும். அன்னையின் அருள் அவரை அணுகவிடாமல் செய்யும் சில தடைகளே அதற்குக் காரணம்.

தடைகளில் பல வகைகள் உண்டு. சில தடைகள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் இருக்கும்; சில பக்தர்களோடு சம்பந்தப்பட்ட மனிதர்களிடம் இருக்கும்; சில, அவர்களின் பழக்கவழக்கங்களில் இருக்கும்; சில, அவர்களின் சிந்தனையிலோ, உணர்வுகளிலோ இருக்கும். குறிப்பாக, சுற்றுப்புறத் தடைகளே எந்த விதமான சிக்கல்களிலும் மையமாக இருப்பது வழக்கம். ஆகவே, ‘அந்தப் பெண்மணிக்கு ஏற்பட்டுள்ள கஷ்டம் நீங்காமல் இருப்பதற்குக் காரணம், சுற்றுப்புறத்தில் உள்ள வழக்கமான தடைகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்’ என்று முடிவு செய்தேன்.

அந்தப் பெண்மணி தம்மைப் பற்றிய எல்லா விவரங்களையும் எழுதி இருந்தால், அவர் பெற்றிருக்க வேண்டிய அன்னையின் அருளை அடைய விடாமல் செய்யும் தடை என்ன என்பதைச் சுலபமாகக் கண்டுபிடித்திருக்க முடியும். அவர்தாம் விவரம் எதையும் சொல்லவில்லையே. ஆகவேதான், ‘அவருடைய தடை இதுவாக இருக்கும்’ என்று நானே யூகிக்கும்படியாகிவிட்டது.

அன்னையின் அருளை அணுகவிடாமல் செய்யும் தடைகளில் ஒன்று, சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருப்பது. அழுக்கு, குப்பை, கூளங்கள் உள்ள இடங்களில் தெய்வம் குடியிருப்பதில்லை. எங்கே தூய்மை இருக்கிறதோ, அங்கேதான் தெய்வம் வாசம் செய்கிறது; அங்கேதான் செல்வமும் பெருகுகின்றது. பரந்து, வளர்ந்த ஒரு மரத்தடியில் ஒரு செடியை வைத்து, எவ்வளவுதான் உரம் வைத்தாலும், நீர் ஊற்றினாலும், அது வளர்வதில்லை. சில மாதங்களில் அது முழுதுமாக அழிந்துபோகிறது. அந்தச் செடிக்குச் சூரிய ஒளி கிடைக்காமல்போவதுதான் காரணம். அது போலத் தூய்மை இல்லாமல் அன்னையை எவ்வளவுதான் வழிபட்டாலும், அந்த வழிபாடு பயன் அளிப்பது இல்லை.

இவற்றை எல்லாம் நினைவுகூர்ந்து அந்தப் பெண்மணிக்கு என்னுடைய ஆலோசனையை இப்படிச் சுருக்கமாக எழுதி அனுப்பினேன்: ‘உங்களுடைய வீட்டைத் துப்புரவாக வைத்திருக்க வேண்டும். முக்கியமாக அன்னையின் திருவுருவப் படத்தை வைத்து வணங்கும் இடம் மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும். இவற்றைப் பக்திபூர்வமாக ஏற்றுக்கொண்டு நீங்கள் அன்னையை வழிபட்டுவந்தால், நீங்கள் கோரும் பலன்கள் நிச்சயமாகக் கிடைக்கும்'.

அதற்குப் பிறகு நாலைந்து மாதங்கள் சென்றுவிட்டன. அவரிடமிருந்து எந்த ஒரு தகவலும் இல்லை.

மேற்கண்ட கடிதத்தை நான் எழுதுவதற்கு முன்பு, அவரிடமிருந்து வந்த இன்னொரு கடிதத்தைப் பற்றியும் இங்கே குறிப்பிட வேண்டும். பூவின் பெருமையைப் பற்றியும், சக்தியைப் பற்றியும் நான் எழுதி இருந்த கட்டுரையைப் படித்துவிட்டு, தாம் நாகலிங்கப் பூவை அன்னையின் திருவுருவப் படத்துக்கு வைத்து வணங்கிவருவதாகவும், ஆனால் தாம் சமர்ப்பிக்கும் பூ நாகலிங்கப் பூதானா என்பது சந்தேகமாக இருப்பதாகவும் அவர் எனக்கு எழுதி இருந்தார். அந்தச் சந்தேகம் தமக்கு ஏன் வந்தது என்ற விவரத்தை அவர் எழுதவில்லை.

‘நாகலிங்கப் பூவை வைத்து வணங்க ஆரம்பித்துப் பல நாள்களாகியும் பலன் தெரியாமல் இருந்திருக்க வேண்டும். ஆகவே, தான் வைத்து வணங்கி வருவது நாகலிங்கப் பூவாக இல்லாமல் வேறு ஏதேனும் ஒரு பூவாக இருக்குமோ என்ற சந்தேகம் அவர் மனத்தில் தோன்றி இருக்கலாம்’என்று எண்ணிய நான், ஒரு நாகலிங்கப் பூவை எடுத்து அவருக்குத் தபாலில் அனுப்பிவைத்தேன். அதற்கு அவர் பதில் தரவில்லை. அதனால் அவர் வைத்து வணங்கிவந்தது நாகலிங்கப் பூவாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் வழக்கம்போல யூகித்துக்கொண்டேன்.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு அவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. நாகலிங்கப் பூவை வைத்துத் தினமும் அன்னையை வணங்கிவருவதாகவும், பல வகைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அதில் எழுதியிருந்தார். என்ன முன்னேற்றம், எந்த வகையில் முன்னேற்றம் என்ற விவரங்கள் கடிதத்தில் இல்லை. ஆனாலும் அவரிடமிருந்து வந்த நல்ல செய்தி எனக்கு மனநிறைவை அளித்தது.

டிசம்பர் மாத இறுதியில் அந்தப் பெண்மணியிடமிருந்து எனக்கு நீண்டதொரு கடிதம் வந்தது. அதில் அவர் அன்னையின் பெருமையைப் பற்றி விரிவாக எழுதி இருந்தார். உருக்கமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் அமைந்து இருந்த அந்தக் கடிதத்தைப் பார்த்தபோது என் உடல் புல்லரித்தது. அளப்பரிய அன்னையின் கருணைப் பிரவாகம் விதியின் எல்லைகளைக் கடந்து பரவிய செய்தியை அறிந்தபோது, உலகியல் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அணை போட்டு வாழும் நான், அப்போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அவர் பெருக்கமாக எழுதிய கடிதத்தின் சுருக்கத்தைக் கீழே தருகிறேன்:

‘நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள் தற்செயலாக அன்னையைப் பற்றிய கட்டுரையை ‘அமுதசுரபி'யில் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. ‘பூக்களும் அவை சொல்கின்ற செய்திகளும்’என்ற அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, ‘நாகலிங்கப் பூவை வைத்து அன்னையை வணங்கி வந்தால், பொருள், செல்வம் கிடைக்கும்’என்பதை அறிந்துகொண்டேன். அப்பூவைத் தினமும் அன்னைக்கு வைத்து வணங்கிவந்தேன். ஆனாலும் எங்கள் பொருளாதார நிலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. பிறகுதான் நான் தங்களுக்கு என்னுடைய பிரச்சினைக்கு ஒரு வழி கூறும்படிக் கேட்டு ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு நீங்கள் எழுதிய பதில் கடிதத்தில், ‘வீட்டையும், வணங்குகிற இடத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்’என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். நான் உங்கள் குறிப்பின்படி வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ளலானேன். என் அன்னையின் முன் நாகலிங்கப் பூவை வைத்து, மெய் உருகி வணங்கலானேன். அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய வறுமை நீங்கியது.

என் கணவர் ஓர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர். அவர் மாலை நேரங்களில் வீட்டில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார். எப்போதும் பத்து மாணவர்களுக்குக் குறையாமல் பாடம் படிக்க வருவார்கள். மாதத்துக்குப் பத்து ரூபாய் டியூஷன் பீஸ். வருகிற பத்து மாணவர்களில் ஐந்து அல்லது ஆறு மாணவர்கள்தாம் பணம் கொடுப்பார்கள். மற்ற மாணவர்கள் தெரிந்தவர்களுடைய பிள்ளைகளாதலால், பணம் கேட்க முடியாத சங்கட நிலை. சம்பந்தப்பட்டவர்களும் எங்கள் சங்கடத்தைக் ‘கண்டு'கொள்வதில்லை.

பற்றாக்குறை வருமானத்தின் காரணமாக ஏற்பட்ட நெருக்கடிகள் கொஞ்சநஞ்சமில்லை. ஒவ்வொரு நாளும் ‘ஏன்தான் பொழுது விடிகிறதோ?’ என்று என் மனம் முணுமுணுக்கும். ‘முதல் தேதியே வாராமல் இருந்துவிடக் கூடாதா?’என்று அஞ்சுவேன். ஏனென்றால் முதல் தேதி வந்ததும் கடன்காரர்கள் வசூலுக்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு வாயால் பதில் சொல்ல முடியாது. பணத்தால்தான் பதில் சொல்ல முடியும். அள்ளிக் கொடுக்க வேண்டிய கடன்களைக் கிள்ளிக் கொடுக்கும் சமாளிப்புகள். அப்போது நாங்கள் அவர்களிடம் கேட்கும் தவணைகள்.... நாங்கள் மறந்தாலும் மறக்காமல் குறிப்பிட்ட தவணை நாள்களில் வசூலுக்கு வந்து நிற்கிற கடன்காரர்கள்... இப்படி அவலமாய் விடிகின்ற ஒவ்வொரு நாளும் எங்களுக்கு வேதனையான நாளே!

இந்நிலையில் என் கணவர் எம்.எட். படித்தால் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதால், அந்தப் பட்டத்தை எப்படியாவது பெற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அதற்காகச் செலவழிக்க எங்களிடம் பண வசதி இல்லை. ‘நகைகளை அடகு வைத்தாவது அந்தப் படிப்பினை முடிக்க வேண்டும்’ என்று என்னிடம் கூறினார் அவர். அப்போதுதான் நான் என் அன்னையைப் பற்றி அவரிடம் விவரித்து, ‘அன்னையை முழுமையாக நம்புங்கள். அவர் கேட்டவற்றை எல்லாம் கொடுப்பார். நம் கஷ்டங்களை எல்லாம் துடைப்பார்’ என்றேன்.

அதுவரை நான் அன்னையை வணங்குவதை எட்ட இருந்து பார்க்கும் அவர், அன்னையைப் பற்றித் தெரிந்துகொள்ள அக்கறை காட்டுவதில்லை.

ஆனால் இப்போது நான் அன்னை பற்றிக் கூறியதை, அவர் அக்கறையாகவும், பவ்யமாகவும் கேட்டார். பிறகு, ‘இனி, நானும் அன்னையை வணங்குகிறேன்’ என்ற அவர், அன்னையை வணங்கிவிட்டே வெளியில் செல்வார். நாங்கள் இருவரும் மனம் ஒன்றி, ‘எங்கள் கஷ்டங்களை நீங்கள் நீக்கி அருள வேண்டும்’ என்று அன்னையிடம் வேண்டுவோம். அத்துடன் M.Ed பட்டம் பெறுவதற்கு நீங்கள்தாம் துணை செய்ய வேண்டும்’என்று அன்னையிடம் அனவரதமும் பிரார்த்தனை செய்தோம்.

நாங்கள் இருவரும் சேர்ந்து அன்னையை வேண்ட ஆரம்பித்த மறுமாதமே பலன் தெரிந்துவிட்டது. அதுவரை என் கணவரிடத்தில் பத்து மாணவர்களே ட்யூஷனுக்கு வந்தார்கள் என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன். இப்போது ட்யூஷனுக்கு இருபது மாணவர்கள் வந்தார்கள். அதுவரை ட்யூஷன் பீஸாக பத்து ரூபாய் கொடுத்துவந்த மாணவர்கள், தாங்களாகவே முன்வந்து பதினைந்து ரூபாய் வீதம் உயர்த்தி முதல் தேதியன்றே கொண்டுவந்து கொடுத்து விட்டார்கள். எப்படி நேர்ந்தது இந்த அதிசயிக்கத்தக்க மாற்றம்? அன்னையின் கருணையே கல்லையும் கரைத்து, புற்களான எங்களை நெற்களாக விளைய வைத்திருக்கிறது. அன்னையின் அருள் ஆட்கொண்டால் பாறையும் பனியாய் உருகும் என்பதை உணர்ந்த நாங்கள், அன்னைக்கு எங்கள் கண்ணீர்ப் பூக்களை நிறையவே சமர்ப்பித்தோம்.

இதற்கிடையில் என் கணவரும் எம்.எட். பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டார். எங்களுக்கு எந்தவிதமான பணக் கஷ்டத்தையும் வைக்காமல் அந்தப் பட்டத்தை என் கணவருக்குக் கிடைக்குமாறு செய்துவிட்டார் அன்னை. அது மட்டுமன்று, அந்தப் பரீட்சையில் அவர் இரண்டாம் வகுப்புப் பெற்று வெற்றி அடைந்திருந்தார்.

அடுத்து நடந்தது எங்களைக் கலங்கவைக்கும் ஒரு நிகழ்ச்சி. நாங்கள் குடியிருக்கும் வீட்டையும் சேர்த்து மொத்தம் நான்கு வீடுகள் ஒரே காம்பவுண்டுக்குள் இருக்கின்றன. எங்கள் குடும்பம் கஷ்டத்திலிருந்து விடுபட்டுச் சிறிது சிறிதாக நல்ல நிலைக்கு வந்துகொண்டிருப்பதைப் பார்த்த எங்கள் அண்டை வீட்டுக்காரர்களுக்குப் பொறாமைக்காய்ச்சல் ஏற்பட்டுவிட்டது. அவர்களும் பள்ளி ஆசிரியர்களே. அவர்கள் வெளியூர்க்காரர்கள். வேலைக்காக இங்கே வந்து குடியேறி இருப்பவர்கள். ‘நாங்கள் குடியிருக்கும் வீடு ராசியான வீடு; அதனால்தான் எங்கள் குடும்பம் முன்னுக்கு வந்துவிட்டது’என்று நினைத்து, அவர்கள் மனம் புழுங்கினார்கள். அதன் காரணமாக வீட்டுச் சொந்தக்காரரிடம் ஏதேதோ கூறி எங்களை வீட்டை விட்டுக் கிளப்ப ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

அவர்களின் சூழ்ச்சியை அறியாமல் செயல்பட்ட வீட்டுக்காரர், ‘நீங்கள் ஒரே மாதத்தில் வீட்டைக் காலி செய்துவிட வேண்டும்’ என்று எங்களிடம் கண்டிப்பாகக் கூறிவிட்டார். நாங்களும் வேறு வழி இல்லாமல் வீட்டைக் காலி செய்துவிடுவது என்று தீர்மானித்து நான்கு, ஐந்து வீடுகளைப் போய்ப் பார்த்தோம். எந்த வீடும் எங்களுக்குப் பிடித்ததாக இல்லை. அந்த நிலையில் மறுபடியும் வீட்டுக்காரர் வந்தார்.

‘அதிக வாடகை கேட்டாலும் கொடுத்துவிடுகிறோம். வீட்டைக் காலிசெய்யும்படி மட்டும் சொல்ல வேண்டாம்’என்று நாங்கள் அவரிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டோம். அவரோ, ‘எனக்கு அதிக வாடகை தேவை இல்லை; வீடுதான் வேண்டும்’ என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார்.

எனக்கு என்ன செய்வது என்று தோன்றவில்லை. அன்னையின் திருவுருவத்தின் முன்பு அமர்ந்து அழுதுகொண்டே இருந்தேன். ‘பொறாமைக்காரர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இந்த வீட்டுக்காரர் எங்களை இப்படிக் கஷ்டப்படுத்துகிறாரே, இது நியாயமா? நானும் உன் குழந்தைதானே?’என்று அன்னையிடம் முறையிட்டேன். சதா அழுகையில் மூழ்கி இருந்த என்னைப் பார்த்து என் கணவர், ‘இந்த வீடு இல்லாவிட்டால் வேறொரு வீடு கிடைக்காமலா போய்விடும்? இதற்காக நீ ஏன் அழுகிறாய்?’ என்று சமாதானம் கூறினார்.

எனக்கோ, இருக்கும் வீட்டை விட்டுப் போக மனம் இல்லை. இப்படியும், அப்படியுமாக இருபது நாள்கள் நகர்ந்துவிட்டன. மீண்டும் வீட்டுக்காரர் வந்தார். ‘இன்னும் இரண்டு நாள்களில் வீட்டைக் காலி செய்துவிடுங்கள்!’ என்று எச்சரித்தார். அவர் மேலும், ‘புரட்டாசி பிறப்பதற்குள் நான் இந்த வீட்டுக்குக் குடி வந்துவிட வேண்டும். அதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நாங்கள் இங்கே பால் காய்ச்சப்போகிறோம். நீங்கள் வீடு கிடைக்கும்வரை இந்த வீட்டுத் திண்ணையில் குடியிருந்துகொள்ளலாம்’ என்று எங்களைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாகப் பேசினார்.

என் கணவரும் வீட்டுத் திண்ணைக்குக் குடிபோய்விடச் சம்மதித்து விட்டார். ‘எந்தப் பாதுகாப்பும் இல்லாத வெளித் திண்ணையில் எப்படிக் குடும்பம் நடத்துவது?’ என்ற கவலை என் மனத்தை அரித்தது. ‘இனியும் சும்மா இருந்து பயன் இல்லை’ என்று நினைத்து, என் அன்னையின் முன்பு திருவுளச்சீட்டுகளை எழுதிப் போட்டு, என் குழந்தையை விட்டு அவற்றில் ஒன்றை எடுக்கச் சொன்னேன். ‘நீ இந்த வீட்டை விட்டுப் போக வேண்டாம்’ என்ற உத்தரவு கிடைத்தது. இப்போது நினைத்தாலும் என் உடல் சிலிர்க்கிறது. என் அன்னை நேராக வந்து என்னிடம் சொல்லியதுபோல இருந்தது அந்தக் கட்டளை.

‘இனி நடப்பதைப் பார்ப்போம்’என்று தைரியம் அடைந்தேன். வீட்டுக்காரர் பால் காய்ச்ச வரப்போவதாகச் சொன்ன ஞாயிற்றுக் கிழமையும் வந்துவிட்டது. அன்று வீட்டுக்காரர் வந்தார். ‘நீங்கள் புரட்டாசி மாதம் முடியும் வரை இதே வீட்டில் இருந்துகொள்ளலாம். ஐப்பசி பிறந்தவுடன் நீங்கள் வீட்டுத் திண்ணைக்குக் குடிபோய்விட வேண்டும்’ என்று கூறிவிட்டு வேகமாகச் சென்று விட்டார் அவர். ‘இன்றைக்கு வரவிருந்த புயல் ஒத்திப்போடப்பட்டிருக்கிறது. இது அன்னையின் திருவருளே!’ என்று நெஞ்சம் தழுதழுத்த நான், மீண்டும் அன்னையிடம் திருவுளச்சீட்டைப் போட்டுப் பார்த்தேன். மறுபடியும் அதே உத்தரவு கிடைத்தது.

புரட்டாசியும் முடிந்தது; ஐப்பசியும் பிறந்தது. வீட்டுக்காரர் வந்தார், ‘அவர் என்ன சொல்லப்போகிறாரோ?’ என்று கவலையுடன், நாங்கள் அவர் முகத்தைப் பார்த்தோம். ‘நீங்கள் இந்த வீட்டில் இருந்துகொள்ளுங்கள். ஆனால் வாடகையை மட்டும் ரூபாய் முப்பதாகக் கூட்டிக்கொடுக்க வேண்டும்’என்றார் அவர்.

அதைக் கேட்ட எங்களுக்கு ஒரே வியப்பு. நாங்கள் வீட்டைவிட்டுக் காலி செய்துவிட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த வீட்டுக்காரர், எப்படி மனம் மாறினார்? அவராக மனம் மாறி இருக்க முடியாது. அன்னையின் அருள் அவர் மனத்தை மாற்றி இருக்க வேண்டும். கல்லைப் பிசைந்து, கனியாக்கி, உவந்தளித்த அன்னையே! உங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம். உங்கள் கட்டளை அப்படியே நிறைவேறிவிட்டது தாயே! தயாபரியே!

அதைத் தொடர்ந்து நடந்த ஒன்று சற்றும் எதிர்பாராதது; மிக மிக அதிசயமானது. எங்களுக்குத் தொந்தரவு கொடுத்துவந்த மற்ற மூன்று வீடுகளில் குடி இருந்தவர்களுள் முக்கியமான இருவர் மிகக்குறுகிய காலத்திலேயே வெளியூர்களுக்கு மாற்றலாகிக் குடும்பத்தோடு போய்விட்டார்கள். எங்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த துன்பம் அன்னையின் கருணையால் மறைந்து, எங்கள் வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் துளிர்த்தன'.

*****



book | by Dr. Radut