Skip to Content

09. சிறு காணிக்கை கொண்டுவந்த பெருஞ்செல்வம்

அன்னையிடம் பக்தியும், விசுவாசமும் மிகக்கொண்ட ஓர் அமெரிக்கர் என்னுடைய நண்பர். அன்னையைப் பற்றிக் கூறக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவருடைய வாழ்க்கை எத்தகைய செல்வமும், செழிப்பும் பெற்றுச் சிறப்பு அடைந்தது என்பதை அந்த அமெரிக்க நண்பர் ஒரு சமயம் என்னிடம் விவரித்தார். அதை அவர் கூறிய விதத்திலேயே இங்கே தருகிறேன்.

நான் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா என்னும் மாநிலத்தைச் சேர்ந்தவன். ஒரு முறை ஸ்ரீ அரவிந்தாசிரமத்திலிருந்து நான் தாயகத்துக்குச் சென்றிருந்தபோது என் நெடுநாளைய நண்பன் மார்க் டேனியல்லை ஒரு நாள் சந்திக்க நேர்ந்தது. அவனை நான் ‘மார்க்’ என்றே அழைப்பேன்.

மார்க் அமெரிக்காவில் ஒரு பெரிய கம்ப்யூட்டர் நிறுவனத்தில் விற்பனையாளனாகப் பணிபுரிந்துவந்தான். எப்போதும் கலகலப்பாகக் காட்சி அளிக்கும் அவன், அப்போது கவலையோடு காணப்பட்டான். அதற்குரிய காரணத்தைக் கேட்டேன். அவன் சொன்னான்: ‘எங்கள் நிறுவனத்தில் அதிகபட்சக் கம்ப்யூட்டர்களை விற்றுத்தந்த விற்பனையாளர்களில் நானும் ஒருவன். நடப்பு ஆண்டில் என் விற்பனை இலக்கில் பாதியைக்கூட என்னால் எட்ட முடியவில்லை. எதைத் தொட்டாலும் சிக்கல் ஏற்படுகிறது. என் திறமை என்னைக் கைவிட்டுப்போனதைப் போன்ற தாழ்வு மனப்பான்மை என் நெஞ்சைத் துளைத்துக்கொண்டே இருக்கிறது. அதனால் நான் அடியோடு ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் இழந்துபோய்விட்டேன்'.

மார்க்கினுடைய பாதிப்பு அவனுடைய மனைவியை அதிகம் சஞ்சலப் படுத்திவிட்டிருந்தது. அவள் அடிக்கடி அவன் மீது ஏதாவது கூறி எரிந்து விழுந்தாள். அவர்கள் வாழ்க்கையே மோசமாகிவிட்டது. நம்பிக்கையை இழந்து நடைப்பிணங்களைப் போல உலவிய அவர்களைப் பார்க்கும்பொழுது எனக்கு வேதனையாக இருந்தது. அவர்களுடைய துயரத்தைப் போக்க நான் ஏதாவது செய்ய நினைத்தேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் அன்னையின் அருள் ஒன்றுதான்.

அன்னையின் திருவருட் சக்தி இம்மாதிரியான நிலைகளில் விரைந்து செயல்புரியும் என்பது எனக்குத் தெரியும். ‘அச்சக்தியை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு மார்க்கை உந்திவிட வேண்டும்’என்று எண்ணிக்கொண்டு, ஆசிரமத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பற்றிக் கூறினேன். பிறகு அன்னையின் தெய்வாம்சத்தைப் பற்றியும், அவரின் அனுக்கிரகத்தைப் பற்றியும் விவரித்தேன்.

அவற்றைக் கேட்ட பிறகு மார்க்கின் சோர்ந்த முகத்தில் நம்பிக்கை இழையின் மின்னல் தெறித்தது. ஆர்வத்தோடு அன்னையைப் பற்றி இன்னும் கூறுமாறு கேட்டுக்கொண்டான். நான் அன்னையின் கருணையை மேலும் விவரித்தேன். அதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்த அவன் முகத்தில் மலர்ச்சி தோன்றியது. அதனால் அன்னை அவனுள் ஊடுருவிக் காப்பாற்றுகிறார் என்று நான் உணர்ந்துகொண்டேன். அதை அவன் உணர்ந்துகொள்ளும் விதத்தில் என் அடுத்த முயற்சியைச் செய்தேன். ‘அன்னையைப் பற்றினால் பற்றிய வினைகள் எல்லாம் அணையும்’ என்பதனை அவன் புரிந்துகொள்ளுமாறு கூறி முடித்தேன்.

அதற்குள் மார்க் சிரிக்கவும், அறிவுப்பூர்வமாக உணரவுமான நிலைக்கு வந்துவிட்டான். ‘அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்ட உடன், என் துன்பங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. விவரிக்க இயலாத அமைதியும், ஆனந்தமும் என்னை ஆட்கொண்டுவிட்டன. இதைப் போன்ற ஓர் இன்பமான நிலையை நான் என்றுமே பெற்றதில்லை. அடுத்த வாரம் வந்து உங்களைச் சந்திக்கிறேன்’ என்று கூறி, விடை பெற்றுக்கொண்டு சென்றான் மார்க்.

அடுத்த வாரம் என்னைச் சந்திக்க வந்தான். உற்சாகமாகக் காணப்பட்ட அவன், ‘கடந்த ஒரு வாரமாக நான் புதிய அனுபவங்களைச் சந்திக்கிறேன். நான் சூனியத்திலிருந்து விடுபட்டு, ஒரு வெளிச்சத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன். இப்போது என்னிடம் விரக்தியும், சோர்வும் இல்லை. அதனால் என் மனத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிகிறது. என் மனைவியும் முணுமுணுப்பதை விட்டுவிட்டாள். அது மட்டும் அன்று, நான் இப்போது வேலை பார்க்கும் நிறுவனத்தைவிடப் பெரிய நிறுவனம் ஒன்றிலிருந்து எனக்கு இன்டர்வியூ கடிதம் வந்திருக்கிறது. அதில் வேலை கிடைத்தால் இப்போது கிடைக்கும் சம்பளத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாகப் பெறலாம். ஆனாலும் ஒரு பயம்....’ என்று இழுத்தான்.

‘என்ன பயம்?’என்று கேட்டேன் நான்.

‘இந்த வருடம் என்னால் மிகக்குறைந்த அளவு கம்ப்யூட்டர்களையே விற்க முடிந்தது. இது அந்த நிறுவனத்துக்குத் தெரிந்தால் எனக்கு வேலை கிடைக்காது’என்றான் அவன் கவலையுடன்.

‘மார்க், இன்டர்வியூ நடைபெறும்போது அன்னையை மனத்தில் நினைத்துக்கொள். அன்னையை, உன்னை இன்டர்வியூ செய்பவரின் உருவத்தில் இருப்பதாகவும் நினைத்துக்கொள். உன்னுடைய பிரச்சினை தீர்ந்துவிடும். ஒரு சிறிய தொகையை அன்னைக்குக் காணிக்கையாக அனுப்பிவை’ என்று கூறினேன்.

மார்க் உடனே அன்னைக்கு ஒரு சிறிய தொகையைக் காணிக்கையாக அனுப்பிவைத்தான். அதற்கு மூன்றாவது நாள் அவன் என்னைத் தொலைபேசியில் அழைத்து, தனக்கு அந்தப் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டதாகக் கூறினான்.

பிறகு அவன் என்னை அடிக்கடிச் சந்திப்பான். அவனுடைய வாழ்க்கையில் தொடர்ந்து பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருந்தன. மேற்கூறிய வேலை கிடைத்த நான்கு மாதங்களுக்குள் இன்னொரு பெரிய வேலை அவனைத் தேடி வந்தது. அது வேறொரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பு. மிக உயர்ந்த சம்பளம்.

புது வேலையை ஏற்குமுன் இந்தியாவுக்குச் சென்று, ஆசிரமத்தில் ஸ்ரீ அரவிந்தர், அன்னை சமாதிகளைத் தரிசித்து வர வேண்டும் என்று விரும்பினான். இருபதாயிரம் ரூபாய் இருந்தால்தான் இந்தியாவுக்குச் சென்று திரும்ப முடியும். அதோடு அவன் இந்தியாவுக்கு வந்து, போகத் தேவையான மூன்று வாரங்களுக்குச் சம்பளம் கிடைக்காது. அந்த வகையில் அவன் மேலும் ஓர் இருபதாயிரத்தை இழந்தாக வேண்டும். ஆனாலும் அவன் எதற்காகவும் தயங்கவில்லை. அதுவரை அவன் சேர்த்து வைத்திருந்த தொகையைச் செலவுக்கு எடுத்துக்கொண்டு புதுச்சேரிக்குப் புறப்பட்டுப் போய்விட்டான்.

மார்க் புதுச்சேரிக்கு வந்த சமயத்தில் நானும் அங்கு வந்திருந்தேன். ஆசிரமத்தில் உள்ள ஸ்ரீ அரவிந்தர், அன்னை சமாதியைத் தரிசித்த பிறகு, அவன் என்னைச் சந்தித்தான். ‘ஆசிரமத்தில் நான் அனுபவித்த அமைதியையும், ஆனந்தத்தையும் உலகில் எங்குமே அனுபவித்ததில்லை’ என்று கூறினான்.

சில நாள்களுக்குப் பிறகு அவன் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றான். அங்கே போனதும் அவன் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதில், ‘என்னுடைய இந்தியப் பயணத்தால் எனக்கு ஏற்பட்ட நாற்பதாயிர ரூபாய் இழப்பை, அன்னை எனக்குக் கிடைக்கச் செய்துவிட்டார். அதாவது, சற்றும் எதிர்பாராத வகையில் எனக்கு ஒருவரிடமிருந்து இனாமாக நாற்பதாயிரம் ரூபாய் கிடைத்திருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தான்.

மார்க்கின் வாழ்க்கையில் அதிர்ஷ்டக்காற்று வீசியது. அதற்குக் காரணமான அன்னையை அவன் நன்றியோடு நினைவுகூர்ந்தான். மாதாமாதம் அன்னைக்குக் காணிக்கை அனுப்பினான். அன்னையைப் பற்றி நினைப்பதையும், பேசுவதையும் அதிகமாக்கிக்கொண்டான்.

ஒரு நாள் அவன் தன் சக ஊழியர்களோடு பேசிக்கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த பலர், தங்களது சம்பளத் தொகையை ஒரு மாதத்துக்கு மேலாகியும் கொடுக்காமல் நிறுவனம் காலம் கடத்துகிறது என்று குறைப்பட்டார்கள். ஏற்கெனவே அவர்கள் அவன் மூலமாக அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்கள். அதன் காரணமாக அவன், ‘உங்கள் பிரச்சினையை அன்னையிடம் ஒப்படைத்துவிடுங்கள். உங்கள் குறை தீர்ந்துவிடும்’என்றான்.

அந்த ஊழியர்களும் அதேபோல அன்னையிடம் தமது பிரச்சினையை ஒப்படைத்த ஐந்தாவது நிமிடத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. நிறுவனத்தின் டிரஷரர், அவர்கள் இருந்த இடத்துக்கு வந்து, உரிய சம்பளத் தொகையை ஒவ்வொருவரிடமும் சேர்த்துவிட்டுச் சென்றார். அன்னையின் துரித அருட்சக்தியை எண்ணி, மற்றவர்களும் மெல்சிலிர்த்தனர்.

முதலில் அலட்சியமாக நினைத்த மார்க்கின் மனைவிக்கும் இப்போது அன்னை மீது அளவுகடந்த நம்பிக்கை ஏற்பட்டுவிட்டிருந்தது. அவளுடைய தந்தை ஐந்நூறு மைல்களுக்கு அப்பால் ஓர் ஊரில் வேலை பார்த்துவந்தார். ஒரு நாள் அவர் தம் மகளைத் தொலைபேசியில் அழைத்து, ‘மகளே, இருபத்தைந்து வருடங்களாக வேலை பார்த்துவந்த என்னைத் திடீரென்று வேலை நீக்கம் செய்துவிட்டார்கள். எனக்கோ வயது அதிகமாகிவிட்டது. இனி நான் எங்கே போய் வேலை தேடுவேன்? எப்படி வாழ்நாளை ஓட்டப்போகிறேன்?’ என்று கவலையோடும், கண்ணீரோடும் கேட்டார். மகள் ஊதோ சுவாரசியம் இல்லாத ஆறுதலைக் கூறி, ரிஸீவரை வைத்துவிட்டாள்.

இந்தச் செய்தியை அவள் தன் கணவன் மார்க்கிடம் தெரிவித்தாள். அவனுக்கு மாமனார் என்றாலே ஒரே கசப்பு. இருந்தாலும் அவர் நிலை கருதிப் பரிதாபப்பட்டான். ‘என் மாமனாருக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா?’ என்று என்னிடம் கேட்டான் அவன்.

‘அன்னைக்கு ஏதேனும் காணிக்கையாக அனுப்பிவைத்தால், அவருக்கு ஏதாவது ஒரு நல்ல வழி பிறக்கும்’என்றேன் நான்.

அதற்காக மறுநாள் தன் தந்தைக்குப் போன் செய்து, ஒரு சிறுதொகையைத் தனக்கு அனுப்பிவைக்கும்படியும், அது ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்விகள் கேட்கக்கூடாது என்றும் தெரிவித்தாள் மார்க்கின் மனைவி. அதற்குக் காரணம் உண்டு. அவளுடைய தந்தை ஒரு கண்டிப்பான கிறிஸ்துவர். அதனால், ‘அன்னைக்குக் காணிக்கை அனுப்பிவையுங்கள்’ என்று வெளிப்படையாகக் கேட்க அவளுக்குத் துணிவில்லை. அவள் கேட்டுக் கொண்டபடி அவளுடைய தந்தை ஒரு சிறு தொகையை உடனே அனுப்பி வைத்தார். அந்தத் தொகையை அவள் அன்னைக்குக் காணிக்கையாக அனுப்பி வைத்தாள்.

ஒரு வாரத்துக்குப் பிறகு ஒரு நாள் அவளுடைய தந்தை அவளுக்குப் போன் செய்து, தனக்கு தற்காலிகமாக இரண்டு வார காலத்துக்கு ஒரு வேலை கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார். ஒரு மாதம் சென்றது. இன்னும் அதே வேலையில் தொடர்ந்து இருப்பதாக மகளுக்குச் செய்தி அனுப்பினார் தந்தை. ஆறு மாதங்கள் பறந்தன.

இன்னும் அதே வேலையில் நீடிப்பதாக போனில் தெரிவித்தார் தந்தை. ஏதாவது மாதம் மார்க்கிற்கு ஒரு போன்கால் வந்தது. மறுமுனையில் அவனுடைய மாமனார் உற்சாகமான குரலில் பேசினார்: ‘புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் எனக்கு ஒரு நிரந்தர வேலை கிடைத்திருக்கிறது. அந்த நிறுவனம், உங்கள் நிறுவனம் இருக்கும் கட்டடத்திலேயே இருக்கிறது’. மாமனாருக்கு ஒரு நிரந்தர வேலை கிடைத்ததில் அவனுக்கு மகிழ்ச்சி. அதே சமயத்தில், ‘அவர் இவ்வளவு நெருக்கமாக வந்துவிட்டாரே’ என்பதை நினைக்கும்போது அவனுக்குக் கொஞ்சம் கசப்பு.

மார்க்கின் வாழ்வில் அன்னையின் அருளால் விளைந்த அற்புதங்கள் பல. அவை இன்னும் தொடர்கின்றன.

நான் சமீபத்தில் அவனைப் பற்றி அறிந்த செய்தி இது: இப்போது அவன் புகழ்பெற்ற ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தின் பங்குதாரர். இலட்சக் கணக்கில் வருட வருமானம். இன்னும் அவன் ஏறப்போகும் வெற்றிப்படிகள் என் கண்களுக்குத் தெரிந்தன. ஏனென்றால் அன்னையைப் பூரணமாக ஏற்றுக் கொண்டவர் காணும் ஏற்றங்கள் அளவிட முடியாதவை; அரிதானவை.

*****



book | by Dr. Radut