Skip to Content

08. பக்தியால் பல கோடிகள்

அவர் ஒரு வடநாட்டு வியாபாரி. திறம் மிகுந்த கைத்தொழில் விற்பன்னர். நம் தென்னகத்தில் கருமை நிறத்து மாக்கற்கள் மட்டுமே கிடைக்கின்றன ஆனால் வட இந்தியாவில் பல அழகான வண்ணங்களில் மாக்கற்கள் கிடைக்கின்றன. அவற்றை அகழ்ந்து எடுத்து, கடைந்து, பல அற்புதமான பொருள்களைச் செய்யலாம். மரத்தைக் கடைந்து செய்யக்கூடிய சிறுசிறு பொருள்கள் அனைத்தையும் அந்த மாக்கற்களில் படைக்கலாம். அவை பார்ப்பதற்குக் கவர்ச்சியாகவும், வனப்பாகவும் இருக்கும்.

அந்த வடநாட்டு வியாபாரிக்கு அந்த வண்ண மாக்கற்களின் பொருள்களைத் தயாரிப்பதில் அபாரமான திறமையும், அநுபவமும் உண்டு. அவருடைய தயாரிப்புப் பொருள்களை ஐரோப்பிய நாடுகள் மிகவும் விருப்பத்தோடு இறக்குமதி செய்கின்றன. அங்கு அவருடைய சரக்குகளுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதால், பல ஐரோப்பிய வியாபாரிகள் அவரைத் தேடிக் கொண்டு வட இந்தியாவுக்கே வந்துவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் தேவைக்குரிய பொருள்களுக்கு முன்கூட்டியே பணத்தைக் கட்டிவிட்டு, சரக்குகள் தயாராகும் வரை காத்திருந்து, அவற்றைப் பெற்றுப் போகிறார்கள். பொருள்கள் கிடைப்பதில் தாமதம் அல்லது தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, அவர்கள் பிரயாணச் செலவு போன்ற மற்ற செலவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தேடி வந்து தேவையான பொருள்களைப் பெற்றுப் போகிறார்கள். அந்த அளவுக்கு அவருடைய பொருள்கள் புகழ் பெற்று விளங்கின.

எங்கள் நிறுவனத்தில் ஓர் அமெரிக்கர் உறுப்பினராக இருக்கின்றார். அவர் அந்த வடநாட்டு வியாபாரியிடம் அவ்வப்போது சிறு அளவில் மாக்கல் பொருள்களை வாங்கி, அமெரிக்காவுக்கு அனுப்புவார். அவர் ஒரு தடவை வியாபார நிமித்தமாக அந்த வியாபாரியைச் சந்திக்க நேரிட்டது. அப்பொழுது அந்த வியாபாரி, தம்மைச் சந்திக்க வந்த அமெரிக்கரை ஒரு வியாபாரி என்ற அளவில் பார்க்காமல், நீண்ட நாள் தொடர்புடைய நண்பரைப் போலவும், நெருங்கிய உறவினரைப் போலவும் எண்ணி, அன்பாக வரவேற்று, மிக மேன்மையாக உபசரித்தார். ஒரு வியாபாரி வியாபார நோக்கோடு அப்படியும் செய்யலாம்தான். என்றாலும், அந்த அமெரிக்கரால் அவருக்குக் கிடைத்த வியாபாரம் தொடர்ந்து கிடைக்கக்கூடியதாகவும், கணிசமாகவும் இல்லை. அவர் காட்டிய உபசரிப்பும், உள்ளன்பும் அந்த அமெரிக்கருக்குப் பெருவியப்பை அளித்தன.

அதற்குப் பிறகு பல மாதங்கள் பறந்தோடிவிட்டன. அந்த வியாபாரியிடம் இருந்து அமெரிக்க நண்பருக்குத் திடீரென்று ஒரு கடிதம் வந்தது. அதில், ‘நான் புதுச்சேரிக்குப் புறப்பட்டு வர இருக்கிறேன்’ என்று எழுதி இருந்தார் அவர். அதைப் படித்ததும் அமெரிக்கருக்கு ஒரே வியப்பு. ‘அந்த வியாபாரி 1500 மைல் பிரயாணம் செய்து புதுச்சேரிக்கு ஏன் வருகின்றார்? ஒருவேளை யாராவது நண்பர்களைப் பார்க்க வருகிறாரோ என்றால், அவருக்கு புதுச்சேரியில் நண்பர்கள் யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை. பிறகு அவர் வருகைக்குக் காரணம்தான் என்ன?’அமெரிக்கருக்குப் புரியவில்லை.

அந்த வியாபாரி கடிதம் எழுதியபடி ஒரு நாள் புதுச்சேரிக்கு வந்து விட்டார். அவர் இனிமையாகவும், சரளமாகவும் பழகினார். புதுச்சேரியில் ஸ்ரீ அரவிந்தாசிரமம் இருக்கின்றது என்பதை அவர் தெரிந்து கொண்டிருக்கவில்லை. அன்னையைப் பற்றி அறிந்துகொள்ளவும் இதுவரை அவருக்குச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. எங்கள் நிறுவனத்தில் உள்ள சில நண்பர்கள் அன்னையைப் பற்றியும், ஸ்ரீ அரவிந்தரைப் பற்றியும் தெரிவித்து, ‘அவர்களுடைய சமாதியை (இருவரும் ஒரே சமாதியில் அடங்கி இருக்கிறார்கள்) வணங்குவது நல்லது’ என அவரிடம் கூறினார்கள். அதை ஏற்றுக்கொண்ட அந்த வியாபாரி, அன்றே ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்குச் சென்று ஸ்ரீ அரவிந்தரின் அறையையும், ஸ்ரீ அரவிந்தர்லிஅன்னை சமாதியையும் வணங்கிவிட்டு, ரூபாய் ஆயிரத்தைக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு வந்தார்.

அவர் புதுச்சேரியை விட்டுப் புறப்படுவதற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டு, எமது நிறுவனத்தில் உள்ள நண்பர்களிடம் விடை பெற்றுக்கொள்ள இருந்தார். அப்பொழுது அவர் என் அமெரிக்க நண்பரிடம், என்னைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். சிறிது நேரத்தில் எங்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது; சந்தித்தோம்.

அப்பொழுது அவர் முகம் மலர்ச்சியாக இல்லை; வாட்டமுற்று இருந்தது. அதற்கான காரணத்தை அவரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. பொதுவாக அவருடைய வியாபாரத்தையும், அவரின் எதிர்காலத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்த நான், ‘உங்களுடைய வாழ்க்கையில் நீங்களே நம்ப முடியாத அளவுக்குப் பல பெரிய விஷயங்கள் நடைபெற இருக்கின்றன’ என்று கூறினேன். அதைக் கேட்டதும் வாடியிருந்த அவர் முகம் சட்டென்று மலர்ந்தது. அவர் என்னிடம் விடை பெற்றுக்கொண்டு செல்லும்வரை அந்த மலர்ச்சி மாறவே இல்லை.

அவர் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து தம்முடைய அலுவலகத்துக்குத் தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு பேசினார். அவருக்காக ஓர் அதிர்ச்சி தரும் செய்தி காத்திருந்தது. ஏதோ ஒரு விசாரணைக்காக வரித்துறை அதிகாரிகள் அலுவலகத்துக்கு வந்து அவரைத் தேடிவிட்டுப் போனார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.

அதைக் கேட்டுப் பதறிப்போன அவர், உடனே எனக்கு ‘ட்ரங்க்கால்’ செய்து விஷயத்தைத் தெரிவித்துவிட்டு, ‘ஆசிரமத்துக்குப் போய்விட்டுத் திரும்பிய எனக்கு, ஏன் இந்த விதமான சங்கடங்கள் ஏற்பட வேண்டும்?’ என்று கேட்டார்.

‘விளைவுகளைச் சந்திக்கும்போது பயமோ, பதற்றமோ கூடாது. பிரச்சினைகளை நேசக்கரம் நீட்டி வரவேற்கும்போது, அவை நமக்குச் சாதகமாக அமைந்துவிடும். நீங்கள் ஊருக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள். உங்களுக்குத் தேவையான விளக்கத்தைக் கடிதத்தின் மூலம் அனுப்புகிறேன்’ என்று தொலைபேசியின் வழியாகப் பதில் அளித்த நான், சற்றும் தாமதிக்காமல் அவருக்குத் தேவையான விளக்கத்தை எழுதித் தபாலில் அனுப்பினேன்.

நான் அவருக்கு எழுதிய விளக்கத்தின் சுருக்கம்: ‘உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன என நான் எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள் தெரிவித்த செய்தியின் மூலம் நான் நினைத்ததினும் மேலான மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகின்றன என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. பொதுவாக, ‘வரவு-செலவுக் கணக்குகளை மிகத்தெளிவாகவும், முறையாகவும் எழுதி வைக்க வேண்டும்’ என்று அன்னை கூறுவார். அவ்வாறு கணக்குகளை எழுதுவதனால் பெருமளவில் பொருள் நம்மைத் தேடி வரும். உங்களுடைய கணக்குகளை நன்றாக முறைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அந்த அதிகாரிகள் உங்களைத் தேடி வரும் ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். பெருஞ்செல்வத்தை வாரி வழங்குவதற்காகவே தம் பக்தனுக்கு இது போன்ற ஒரு சூழ்நிலையைத் தந்து, அன்னை செம்மைப்படுத்துகிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்'.

அதன்பின் இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன. அந்த வியாபாரி இரண்டாவது தடவையாகப் புதுச்சேரிக்கு வந்திருந்தார். அவர் முகத்தில் முன்பு இருந்த வாட்டம் முழுவதுமாக மறைந்துவிட்டிருந்தது. இம்முறை அவர் இங்கு வந்திருப்பது ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றியதாகும். எம்முடைய அமெரிக்க நண்பர் அவரிடமிருந்து ரூ.50,000க்கான மாக்கல் பொருள்களை வாங்கி அமெரிக்காவுக்கு அனுப்பியிருந்தார். அதற்கு முன்னதாக அவர், புதுவையில் இருந்து ஒருவரை வடநாட்டில் உள்ள அந்த வியாபாரியின் தொழிற்சாலைக்கு அனுப்பி, மாக்கல் பொருள்களைப் பக்குவமாகப் பெட்டிகளில் அடைத்து, ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்திருந்தார். இருந்தபோதிலும், அவை அங்கே போய்ச் சேர்ந்தபோது பெருமளவில் சேதம் அடைந்துவிட்டிருந்தன.

அதைக் கேள்வியுற்ற அந்த வியாபாரிக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டு விட்டது. அவ்வாறு நடந்துவிட்டதற்கு ஏதேனும் ஒரு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் அவர் புதுச்சேரிக்கு வந்திருந்தார்.

‘எப்பொழுதும் என்னுடைய நேரடி மேற்பார்வையில்தான் என் சரக்குகளை மிகக்கவனமாகப் பெட்டிகளில் அடைத்து, பல வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறேன். இதுவரை ஒரு தடவைகூட அவ்வாறு சேதம் ஏற்பட்டதில்லை. பெட்டிகளில் அடைப்பதை மேற்பார்வை செய்வதற்காகவே நீங்கள் அனுப்பி இருந்தவர் வந்திருந்ததால், நான் மேற்பார்வை செய்யத் தேவை இல்லை என்று நினைத்து, அவரிடமே அந்தப் பொறுப்பை விட்டுவிட்டேன். எப்படியானாலும் சேதம் பேரளவில் ஏற்பட்டுவிட்டது. அது எனக்கு மனக்கஷ்டத்தைத் தருகிறது. ரூ.50,000ஐ எனக்கு ஏற்பட்ட நஷ்டமாக வைத்துக்கொள்கின்றேன். அந்தத் தொகைக்குப் புதிய சரக்குகளை அனுப்பிவிடுகின்றேன். இதற்காக நீங்கள் வருந்த வேண்டாம்’ என்றார் அவர்.

அந்தச் சேதத்துக்கு அவர் பொறுப்பு ஏற்க வேண்டிய அவசியமே இல்லை. அதற்கு உண்மையில் பொறுப்பு ஏற்க வேண்டியவர், கவனக்குறைவாகப் பொருள்களைப் பெட்டிகளில் அடைத்த புதுச்சேரி அன்பர்தாம். சாதாரணமாக எந்த ஒரு வியாபாரியும் இதுபோல் பேசவோ, நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளவோ முன்வரமாட்டார். ‘நானே நஷ்டத்தை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சொல்வதற்காக 1500 மைல் பிரயாணத்தையும் பொருட்படுத்தாமல் வருகின்ற ஒரு வியாபாரியை எங்காவது காண முடியுமா? இத்தகைய நல்லார் ஒருவரைக் காண்பது அரிதினும் அரிது அன்றோ?

‘தவறு உங்களிடம் இல்லை; எங்களிடம்தான் உள்ளது. ஆகவே நீங்கள் நஷ்டத்தை ஏற்றுக்கொள்வது சரி இல்லை’என்று என் நண்பர்கள் அவரை வற்புறுத்தும்படியாகிவிட்டது. ஆனாலும், அவர் தம் முடிவை மாற்றிக்கொள்வதாக இல்லை. என் நண்பர்கள் கூறியதை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்ததால், நான் அவரைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

‘நான் ஒரு வெற்றிகரமான வியாபாரி. ஆண்டு ஒன்றுக்குப் பத்து இலட்ச ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் கிடைத்துவந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் உங்கள் அமெரிக்க நண்பர் என்னுடைய நிறுவனத்துக்கு வந்திருந்தார். அந்த அன்னையின் பக்தர் அங்கு வந்துவிட்டுச் சென்றதிலிருந்து என்னுடைய வியாபாரம் பன்மடங்காகப் பெருகியது. இப்போது நான் ஓர் இரண்டாவது நிறுவனத்துக்கும் அதிபராக இருக்கிறேன். அதுவரை என்னை வாட்டி வதைத்த மனச்சஞ்சலங்கள் அறவே நீங்கி, இப்போது நான் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். உங்கள் அமெரிக்க நண்பர் பேரளவில் என்னிடம் சரக்கு வாங்கவில்லை என்றாலும், அவர் வந்துவிட்டுத் திரும்பிய பிறகு என் வாழ்க்கையில் பெருநன்மைகள் ஏற்பட்டுள்ளன. ஆதலால்தான் அந்த நஷ்டத்தை அவருக்குக் கொடுக்க நான் விரும்பவில்லை. நான் சென்ற தடவை இங்கு வந்திருந்தபோது எனக்குப் பெரிய நன்மைகள் ஏற்படப்போகின்றன என்று கூறினீர்கள். நீங்கள் கூறியது போலவே யாவும் நடந்துவிட்டன’ என்று கூறி, தம் நன்றியுணர்வைப் பார்வையாலும், தழுதழுப்பாலும் தெரியப்படுத்தினார் அவர்.

எம்மைப் பற்றி அதிகமாக அறிந்திருக்காவிட்டாலும் அவரிடம் காணப்பட்ட நன்றியுணர்வையும், நேச மனப்பான்மையையும் கண்டு நான் வியந்தேன் என்றாலும் நன்றிக்கு ஒரு விலையைக் கொடுக்க அவர் முன்வருவதை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

‘நஷ்டத்தை நீங்களே ஏற்றுக்கொள்வதாகக் கூறுவது உங்கள் குணச் சிறப்பை வெளிப்படுத்துகிறது. ஆனாலும் அந்த நஷ்டத்துக்கு நாங்கள்தாம் பொறுப்பு என்பதை உணர்கிறோம். ஆதலால் நீங்கள் அதனை ஏற்க வேண்டாம் என்ற எங்கள் வேண்டுகோளுக்குச் செவி சாய்ப்பது மிகச்சிறப்பாக இருக்கும்.

உங்களுடைய நல்லெண்ணம் எங்களுக்குத் தேவை. ஆகையால் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை நாங்களே ஏற்றுக்கொள்ள நீங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என்று நான் கூறினேன். அவரும் வேறு வழி இல்லாமல் அதற்கு இசைந்தார்.

அவர் எங்களிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டார். பிறகு நான் அவரைப் பற்றி என் நண்பர்களிடம் பேச வேண்டிய சந்தர்ப்பம் ஒன்று வந்தது. அப்போது நான், ‘எந்த அளவுக்கு பக்தன் பக்குவமாக இருக்கிறானோ, அந்த அளவிற்கு அன்னையின் அருளும், ஆசிகளும் அவனுக்குக் கிடைக்கின்றன. அந்த வடநாட்டு வியாபாரியிடம் காணப்படும் நன்றியுணர்ச்சி மிகவும் உன்னதமானது. ஆகவே அவர் அன்னையை நினைத்து வணங்காவிட்டாலும், அன்னையின் அருள் அவரிடம் அபரிமிதமாகப் போய்ச்சேரும் என்பதில் ஐயம் இல்லை’ என்று கூறினேன்.

இது நடந்து மூன்று ஆண்டுகள் சென்றுவிட்டன. எம்முடைய நிறுவனத்தைச் சேர்ந்த மற்றோர் அமெரிக்க நண்பர் அந்த வியாபாரியிடம் மாக்கல் சரக்கு வாங்குவதற்காக வடநாட்டுக்குப் போயிருந்தார். அவர் அந்த வியாபாரியைச் சந்தித்த பிறகு அறிந்த சில முக்கியமான விவரங்களை எனக்குச் சொன்னார்.

அந்த வியாபாரியின் வாய்மொழியிலேயே அந்த விவரங்களைக் கீழே தருகிறேன்:

‘உங்களிடமிருந்து எப்போது ஆர்டர் வந்தாலும் அதை உடனடியாக ஏற்றுச் சரக்குகளின் விலையில் பத்து சதவீதக் கழிவு செய்து பில் போடுவேன். என் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு அது ஆச்சரியத்தைக் கொடுக்கும். என் மகன்கூட அதைப் பற்றிக் கேட்பதுண்டு, ‘என்ன பிதாஜி, அவர்களுக்கு மட்டும் தனிச் சலுகை?’ என்று. அதற்கான காரணத்தை எல்லாரிடமும் சொல்ல முடியுமா? ஆனால் உங்களுக்கு மட்டும் சொல்கிறேன்.

உங்களுடைய நண்பர் முதல் முதலில் என் நிறுவனத்திற்கு வந்து சென்ற பின் என் வாழ்க்கையில் பல பெரிய நன்மைகள் ஏற்பட ஆரம்பித்தன. நான் புதுச்சேரிக்குச் சென்றிருந்தபோது என்னாலேயே நம்ப முடியாத அளவுக்குப் பல சிறந்த மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன என்பதையும் நான் அறிந்து கொண்டேன். அந்தச் சமயத்தில், ஏற்படப்போகும் மாற்றம் என்னவாக இருக்கும் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. இப்பொழுதுதான் அது என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

என்னுடைய சரக்குகளுக்குத் தேவையான மூலப்பொருள் ஒரு தனி ரகமானது. அது சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. பல வண்ணக் கற்கள் கிடைக்கும் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அதில் உள்ள கற்களைத் தோண்டி எடுக்க அரசாங்கத்திடம் லைசென்ஸ் கேட்டு மனுச் செய்து இருந்தேன். டாடா, பிர்லா கம்பெனிகளும் அந்த இடம் வேண்டும் என்று கேட்டு அரசாங்கத்துக்கு மனு கொடுத்திருந்தன. கடும்போட்டி ஏற்படவே, எனக்கு அந்த லைசென்ஸ் எதிளில் கிடைக்கவில்லை. ஒவ்வோர் ஆபீசாக நான் ஏறி, இறங்கினேன். அது கோர்ட்டுக்குப் போய், இறுதியில் சுப்ரீம் கோர்ட் வரை சென்றுவிட்டது. டாடா, பிர்லாக்களை என்னால் எதிர்த்து நிற்க முடியுமா? ‘அன்னையின் அருளே துணை’ என்று நான் முழுவதுமாக நம்பினேன். பெரும் பொருளையும் செலவிட்டேன். வழக்கில் எனக்கே வெற்றி கிடைத்தது.

அன்னையின் அருள் மட்டும் எனக்குத் துணை செய்திக்காவிட்டால் பொருள் மன்னர்களான டாடா, பிர்லாக்களை என்னால் வென்றிருக்க முடியாது. உண்மையைச் சொல்லப்போனால், இந்தப் புதிய சுரங்கத்தை நான் குத்தகைக்கு எடுத்துள்ளதால், இதிலிருந்து மட்டும் எனக்குப் பல கோடி ரூபாய்கள் லாபமாகக் கிடைக்கும்'.

அன்னையின் அருள் அத்தனை வலிமை பெற்றது. தம்மைச் சேர்ந்தார்க்கும், சோதனைகளில் சோர்ந்தோர்க்கும் ஆறுதல் அளிக்கும் அமிர்தப் பிரவாகம் போன்றது அன்னையின் அருள்.

*****



book | by Dr. Radut