Skip to Content

07. விதிக்கு விதி செய்யும் அன்னை

சுமார் அறுபது ஆண்டுகட்கு முன் ஒரு பெரிய ஜமீன்தார் நாடி ஜோஸ்யம் பார்த்தார். நாடியில் சொல்லப்பட்ட விஷயங்களும், ஜமீன்தாரின் வாழ்க்கை நடப்புகளும் ஒரே மாதிரி பொருந்தியிருந்ததை அறிந்து அவரும், மற்றவர்களும் பெரிதும் வியந்தனர். ஜமீன்தாரின் எதிர்காலத்தைப் பற்றி நாடி சிறப்பாக விவரித்தது. அது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. நாடியை மேலும் படித்துக் கொண்டே போன ஜோதிடர், ஓரிடத்தில் படிப்பதை நிறுத்திவிட்டு ஜமீன்தாரின் முகத்தைப் பார்த்தார்.

‘ஏன் நிறுத்திவிட்டீர்கள்? மேலே படியுங்கள்’என்றார் ஜமீன்தார்.

ஜோதிடர் தயக்கத்தை விட்டு அந்த இடத்தைப் படிக்கலானார்: ‘... வருஷம், ஆனி மாதம், 10ஆம் தேதி, சூரியன் உச்சியைக் கடந்த பின் இந்த ஜாதகன் பழைய சோறு சாப்பிடுவான்...’.

அதற்கு முன்னால் வரை நாடியை முழுக்க முழுக்க ஏற்றுக்கொண்ட ஜமீன்தார், இந்த இடத்தில் கடுமையாக எதிர்த்தார்: ‘நான் பழைய சோறு சாப்பிடுவேனா? அப்படிப்பட்ட ஏழ்மையான நிலை என் பரம்பரையைச் சேர்ந்த எவருக்குமே நேராது. நாடி இங்கேதான் தவறு செய்துவிட்டது....’.

சிறிது காலத்திற்குப் பிறகு ஜமீன்தார் ஜோதிடரையும், நாடி ஜோஸ்யத்தையும் அடியோடு மறந்துவிட்டார். ஆனால் காலம் மட்டும் மறக்கவில்லை.

அற்புதமான குதிரை ஒன்றை விலைக்கு வாங்கினார் ஜமீன்தார். குதிரைச் சவாரியில் அதிக நாட்டமுள்ள அவர், அதிஉற்சாகமாக அந்தக் குதிரையின் மீது ஏறி அமர்ந்தார். அதைத் தட்டிப் பறக்கவிட்டார். ‘வாயு வேகம், மனோவேகம்’ என்பார்களே, அந்த வேகத்தில் குதிரை பறந்து போய்க்கொண்டு இருந்தது. அதைத் திருப்ப மனம் இல்லாமல், அது போன போக்கில் போக விட்டார் ஜமீன்தார். இடையில் கடந்துபோன மைல்களுக்குக் கணக்கே இல்லாமல் போய்விட்டது.

குதிரை இப்பொழுது எங்கே போய்க்கொண்டிருக்கிறது? ஜமீன்தாருக்கு இடம் புரியவில்லை. புரியாத பகுதியில் புழுதியைக் கிளப்பிப் பறந்துகொண்டு இருந்தது குதிரை. பொழுது உச்சியைத் தாண்டிவிட்டது. தாகம் அவர் நாக்கை இழுத்தது. கடும்பசி வயிற்றில் நெருப்பாய் எரிந்தது. ஏதாவது சாப்பிடாவிட்டால் உயிரே போய்விடும் போன்றதொரு நிலை. குதிரையை நிறுத்தி இறங்கினார்; பார்த்தார்; கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் வீடுகளோ, மனிதர்களோ காணப்படவில்லை.

ஏமாற்றத்தை இப்பொழுது நம்பிக்கையாக வளர்த்துக்கொள்ள வேண்டும். ‘ஏதாவதொரு வீடு காணப்படும், மனிதர்கள் யாராவது காணப்படுவார்கள்’ என்று நம்புவது ஒன்றுதான் உயிரைப் போகவிடாமல் தடுத்து நிறுத்தக்கூடிய ஜீவ மந்திரம். அந்த மந்திரத்தை மனத்தில் ஜபித்துக்கொண்டே ‘எங்கே போகிறோம்?’என்பது தெரியாமலே நடந்தார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. தூரத்தில் குடிசை ஒன்று தெரிந்தது. அதை நோக்கி விரைந்தார். குடிசையில் இருந்தவர்களைப் பார்த்து, ‘பசி காதை அடைக்கிறது. சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா?’என்று பரிதாபமாகக் கேட்டார். ‘பழைய சோறு இருக்கிறது’என்றார்கள். ‘அது எனக்கு இப்பொழுது தேவாமிர்தம்; சீக்கிரம் போடுங்கள்’என்று கூறிப் பழைய சோற்றை வாங்கி ‘பரபர'வென்று சாப்பிட்டார் ஜமீன்தார்.

அன்று, ‘.... வருஷம், ஆனி மாதம் 10ஆம் தேதி, நேரம்: சூரியன் உச்சியைக் கடந்த நேரம்'.

நாடி ஜோதிடன் சொன்னது பலித்துவிட்டது.

ஜோஸ்யத்தை முழுக்க முழுக்க நம்புபவர்கள் பலர். ஓரளவுக்கு ஒத்துக் கொள்பவர்கள் சிலர். அவர்கள் அதிர்ஷ்டம், தரித்திரம் என்பவற்றை சில சமயங்களில் ஏற்றுக்கொள்வார்கள்; சில சமயங்களில் மறுப்பார்கள். ‘உழைக்காமல், தரித்திரம் என்பதில் என்ன அர்த்தம்?’ என்று வாதிப்பவர்களும் உண்டு. நம் நாட்டில் அதிர்ஷ்டத்தை நம்பாதவர்கள்கூட தலைவிதியை அதிகம் நம்புவார்கள். ‘கர்மவினையின்பாற்பட்ட தலைவிதியை எவ்வேளையிலும் தவிர்க்க இயலாது’என்று இந்தியப் பண்பாட்டில் ஊறிய இதிகாசங்கள் தீர்க்கமாகவும், உறுதியாகவும் சொல்கின்றன. வாழ்க்கை நடைமுறையில் நாம் அவ்வாறே நினைப்பதற்குக் கற்பிக்கப்பட்டு இருக்கின்றோம்.

சமீபத்தில் ஒரு செல்வர் குருடாகிப்போன தம் இரு கண்களையும் எப்படியாவது மீண்டும் பெற வேண்டும் என்று தீவிரமாக முயன்றுகொண்டு இருந்தபொழுது அற்புதங்களை நிகழ்த்தும் ஒரு சாமியாரைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவர் தீராத வியாதிகளை எல்லாம் தீர்த்துவைப்பார் என்று கேள்விப்பட்டார். முழுநம்பிக்கையோடு அவரிடம் சென்றார்.

உள்ளே இருந்த சாமியார் அவரை அழைத்தார். செல்வர் மனத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தம் கை விரலில் இருந்த மோதிரத்தைக் கழற்றி மடியில் வைத்துக்கொண்டு உள்ளே சென்றார். சாமியார் அவரைப் பார்த்து, ‘இங்கே திருட்டுப்பயல் யாரும் இல்லை. மடியில் இருக்கும் மோதிரத்தை எடுத்துக் கை விரலில் போட்டுக்கொள்ளுங்கள்’ என்றார்.

செல்வர் திடுக்கிட்டுப்போனார்.

‘இது கர்மவினை; தீராது. வீண் முயற்சி செய்ய வேண்டாம்’ என்றார் சாமியார்.

அதற்குப் பிறகு செல்வர் வீண் முயற்சிகள் செய்வதை விட்டுவிட்டு, கர்மவினையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு, பதப்பட்டு, அடங்கிப்போனார்.

‘கர்மவினை செய்தவரை விடாது. விளைவை அனுபவித்தே தீர வேண்டும். தேவர்களும், அவதாரப் புருஷர்களும்கூட அதற்கு விதிவிலக்கில்லை’ என்கிறது இந்துமதக் கோட்பாடு.

மேல்நாட்டில் இந்து மதத்தைப் பற்றி நினைவுகொள்வதற்குக் காரணமாக இருப்பவை இரண்டு விஷயங்கள். அவை: கர்மா, மறுபிறப்பு.

தேவர்களாலும், அவதாரப் புருஷர்களாலும் தப்ப முடியாத இந்த விதியில் இருந்து அன்னை அனைவருக்கும் விலக்கு அளிக்கின்றார். ‘தலைவிதி மாற்ற முடியாத ஒன்றன்று; கர்மவினையை விட்டு ஒழிக்கலாம். அதன் பிடியிலிருந்து தப்ப முடியும்’ என்று அன்னை கூறுகின்றார்.

அன்னையின் அருளால் கர்மவினை நீங்கிய சில நிகழ்ச்சிகளையும், அன்னையின் அருளுக்கு அந்த வலிய சக்தி அடங்கி அமைந்த காரணத்தையும், அது பற்றிய அன்னையின் கூற்றுகளையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

அதற்குமுன் கர்மவினை எப்படி ஏற்படுகின்றது என்பதைப் பார்ப்போம். ‘ஆன்மீக அடிப்படையின்படி, செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பலன் உண்டு’ என்பது நியதி. நல்ல செயல்கள் புண்ணியத்தையும், தவறான செயல்கள் பாவத்தையும் கொடுக்கின்றன. நாம் ‘கர்மம்’என்று குறிப்பிடுவது, முந்தைய செயல்கள் தற்பொழுது விரும்பத்தகாத பலனை அளிக்கும் செயல்களேயாகும்.

‘பொய் பேசியவன் மறுபிறப்பில் ஊமையாகின்றான். பிறருக்கு ஈயாதவன் மறுபிறப்பில் தரித்திரன் ஆகின்றான். கிணறு, குளங்களைத் தூர்ப்பவன் மறுபிறப்பில் மீனாகப் பிறக்கின்றான். நூல்களைத் திருடியவன் மறுபிறப்பில் குருடன் ஆகின்றான்’ என நம் சாத்திரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு செயலும் இப்பிறவியிலோ, மறுபிறவியிலோ என்ன கர்மபலனைக் கொடுக்கும் என்பதை அச்சாத்திரங்கள் தெளிவாகப் பேசுகின்றன.

நம் வாழ்க்கை, செயல்களால் அமைந்தது. ஆனால் எல்லாச் செயல்கட்கும் உடனே பலன் கிடைப்பதில்லை. நல்ல சமையலைச் செய்தால், உடனே அதைஉண்டு அனுபவிக்கலாம். ஆனால் நெல்லை விதைத்தால், பலனைப் பெறுவதற்குப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் புறக்கணித்தால், பல ஆண்டுகளுக்குப் பின்னரே அதன் பலன் தெரியும். ஆனால் கெட்டுப்போன பழத்தைச் சாப்பிட்டால் உடனே வாந்தி வரும். செல்வாக்குள்ளவர் தவறு செய்தால், பயத்தின் காரணமாக அவரை யாரும் தட்டிக்கேட்பதில்லை. ஒரு காலத்தில் அவர் செல்வாக்குப் போய்ச் செல்லாக்காசாகிவிட்டால், அவரால் கொடுமைக்கு ஆளான ஒவ்வொருவரும் அவரைத் தூற்றிப் புடைத்துப் புழுதியைக் கிளப்புவார்கள்.

செல்வம் அந்த மனிதரைக் கொஞ்ச காலம் காப்பாற்றியதைப் போல நமக்குப் பல வகைகளிலும் பலமும், திறமையும் அரண்களாக அமைகின்றன. காலப்போக்கில் அந்த அரண்கள் பலம் இழந்தும்போகின்றன. ஆரோக்கியம், செல்வம், குடிப்பிறப்பு, அந்தஸ்து, முற்பிறவிப் புண்ணியம், அறிவு, ஆற்றல், இனிமையான பழக்கவழக்கங்கள், உற்றார் தொடர்பு, ஊரார் நட்பு என மனிதனுக்குப் பல வகையான பலம் இருப்பதால் அவன் செய்யும் காரியங்களில் குறையோ, தவறோ நேரும்பொழுது அதற்குண்டான பலன், அவனுக்கு உடனே கிடைப்பதில்லை.

கல்கத்தாவில் ஒரு நீதிபதி தம் வயதை 2 வருடம் குறைத்துக் கொடுத்து விட்டார். 30 ஆண்டுகள் வரை அதைப் பற்றிய பிரச்சினை எழவில்லை. அதற்குப் பிறகுதான் தொல்லை ஆரம்பமாகியது. 60 வயதில் ஓய்வு பெற வேண்டிய நீதிபதியின் சான்றிதழ்படி அவருக்கு இன்னும் இரண்டரை ஆண்டு சர்வீஸ் இருந்தது. அந்த நேரத்தில் அந்த நீதிபதியின் தம்பி, கிராமத்தில் தனக்குச் சஷ்டியப்தபூர்த்தி விழா நடத்த, அந்த விஷயம் டெல்லி வரைக்கும் போக, விவகாரம் தூள் கிளப்பியது. தம்பிக்கே அறுபது வயது என்றால், அவரின் அண்ணனான நீதிபதிக்கு வயது என்ன? கேள்விக்கு மேல் கேள்வி; விவகாரத்திற்கு மேல் விவகாரம். நீதிபதி திக்குமுக்காடிப்போய் பதவியை ராஜிநாமாச் செய்து, விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பஞ்சாப்பில் ஒரு பிரபலமான சாமியார் இருந்தார். அவருடைய பிரபலம் பலருக்கும் பொறாமையை அளித்தது. அவரை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்று அவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில் சாமியார் இருந்த ஊரில் ஒரு கொலை நடந்தது. பொறாமைக்காரர்கள் அதைச் சாதகமாகவும், சாமர்த்தியமாகவும் பயன்படுத்திக்கொண்டு, ‘சாமியாரின் தூண்டுதல் காரணமாகத்தான் அந்தக் கொலை நிகழ்ந்தது’ என வழக்காடினார்கள். அவருக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தது. ஆனால் சாமியாருக்கும், குற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவருடைய பக்தர்களில் ஒருவர், அன்னையிடம் வந்து இது பற்றி முறையிட்டார். அன்னை சாமியாருடைய போட்டோவைப் பார்த்துவிட்டு, ‘இந்த ஜன்மத்தில் அவர் கொலை செய்யவில்லை’ என்றார்.

கர்மம் காலத்தால் ஏற்பட்டது. அதாவது ஒரு காலத்தில் செய்தது மற்றொரு காலத்தில் பலனைக் கொடுக்கிறது. மனிதன் காலத்திற்கு உட்பட்டவன். அவன் காலத்தை வென்றவன் அல்லன். அதனால் காலத்தால் ஏற்படும் விளைவுகளை  கர்மப்பலன்களை  அவன் அனுபவித்தே தீர வேண்டும். யோகம், தவம், செய்து காலத்தைக் கட்டியவர்களுக்குக் கர்மப்பலன் கிடையாது. ரிஷிகளும், யோகிகளும் காலத்தை வென்றவர்கள். அக்காரணத்தால் அவர்கள் கர்மத்தை வென்றவர்கள்.

கடவுளிடம் வரம் பெற்றால் கர்மப் பலனைக் குறைக்கலாம்; அதற்கு மாற்றுச் செய்யலாம். ஆனால் கர்மத்தையே முற்றிலும் ரத்துச் செய்ய இயலாது.

‘மனித வாழ்க்கை காலத்தால் கட்டுண்டது’ என்பதே அதற்குக் காரணம். ஆனால்....

‘எந்தச் செயலால் கர்மப்பலன் ஏற்பட்டுள்ளதோ, அந்தச் செயலை இனிச் செய்வதில்லை என முடிவு செய்து, அதை விட்டுவிட்டால், கர்மப்பலன் உன்னைத் தொடராது; அத்துடன் முடிவடைந்துவிடும்’ என்று அன்னை கர்மப் பலனை வெல்ல வழிகாட்டுகிறார்.

திருட்டுப் பழக்கம் உள்ள ஒருவன், தன் பழக்கத்தை அறவே விட்டொழித்தபோதிலும், ஏற்கெனவே செய்த திருட்டுக்குண்டான கர்மத்தை இப்போதும், இனிமேலும் அவன் அனுபவித்தாக வேண்டும் என்பது மரபு. ஆனால் ஒருவன் தன் தவற்றைத் திருத்திக்கொண்டுவிட்டால், அவன் ஏற்கனவே செய்த பாவத்தின் விளைவான பலனையும் அன்னை அழித்துவிடுகின்றார். இதுதான் நம் மரபுக்கும், அன்னையின் அருளுக்கும் உள்ள வேறுபாடு.

‘இறைவன்’என நாம் சொல்வது பரம்பொருளை. இறைவன் உலகைச் சிருஷ்டித்தான்; கடவுள்களைச் சிருஷ்டித்தான்; சிருஷ்டியைச் சிருஷ்டித்தான். கிருஷ்ணனும், இராமனும் மகாவிஷ்ணுவின் அவதாரங்கள். சிவபெருமான் மனித உடலில் அவதாரம் எடுப்பதில்லை. ஸ்ரீ அரவிந்தர் இறைவனின் அவதாரம். இறைவனுடைய சக்தி அன்னையாகும். பராசக்தியின் அவதாரம் அன்னை. ‘பராசக்தி கடவுள்களுக்கெல்லாம் தாய்’என ஸ்ரீ அரவிந்தர் கூறி இருக்கின்றார்.

அன்னை, ‘ஒரு விநாடியே என்னைச் சந்தித்தவர்களின் வாழ்க்கைக்கும் நான் பொறுப்பேற்றுக்கொள்கின்றேன்’என்கின்றார்.

அன்னை என்பது பேரொளி; இறைவனின் சக்தி; சக்தி மிக்க ஒளி. ஒருவர் அன்னையை மனத்தில் தெய்வமாக உணர்ந்து ஏற்றுக்கொண்டவுடன், அப்பேரொளியின் ஒரு பொறி அவருடைய ஆன்மாவை வந்தடைந்து, அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றது. இதை அன்னையே சொல்லி இருக்கின்றார்.

அந்த பக்தரின் ஆன்மாவை ஊடுருவி ஒளிர்கின்ற அந்த ஒளிப்பிழம்பு, காலத்தைக் கடந்த இறைவனின் ஒளியாகும். காலத்தால் ஏற்பட்ட கர்மத்தை அழிக்கும் வல்லமை படைத்தது அவ்வொளி. அவ்வொளியை அன்னையின் பக்தர்கள் தங்கள் ஆன்மாவில் சுமந்து செல்கின்றார்கள். காலத்தால் ஏற்பட்ட கர்ம வினையை அவ்வொளிக்குச் சமர்ப்பணம் செய்தால், அதன் பலனை அன்னையின் ஒளி பூரணமாக அழித்துவிடுகின்றது.

75 வயதான சாதகர் ஒருவர், அன்னையிடம் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்தார். அவருக்கு நல்ல திடகாத்திரமான உடல். 75 வயதுக்கும், அவருடைய வேலைக்கும் கொஞ்சம்கூடச் சம்பந்தம் இல்லை. அவ்வளவு சுறுசுறுப்பு. திடீரென்று ஒரு நாள் அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மூன்றாம் நாள் அவர் காலமாகிவிட்டார். ‘அவர் இப்படித் திடீரென்று காலமாகி விடுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை’ என்று ஒரு சாதகர் அன்னையிடம் தம் கவலையைத் தெரிவித்தார்.

‘அவருக்கு ஆயுள் ஐம்பதில் முடிந்துவிட்டது. நான் இந்த 25 ஆண்டுகளாக அவரை உயிருடன் வைத்திருந்தேன்’என்று அன்னை பதில் அளித்தார்.

இளைஞர் ஒருவருக்கு ஜாதகப்படி 35 வயது வரைதான் ஆயுள். அவருடைய 19ஆவது வயதில் இந்தச் செய்தியை அன்னையிடம் தெரிவித்தார்கள். அன்னை புன்முறுவல் பூத்தார். காலம் கடந்தது. அந்த நிகழ்ச்சியை மற்றவர்கள் மறந்துவிட்டார்கள். ஆனால் அன்னை மறக்கவில்லை. அந்த இளைஞர் இறக்க வேண்டிய கட்டத்தில், அதாவது அவருடைய 35ஆவது வயதில் அவர் அன்னையைத் தரிசிப்பதற்காக க்யூவில் வந்தார். அவர் தம் எதிரே வந்ததும் அவரைக் குறிப்பாகப் பார்த்துப் புன்னகை செய்தார் அன்னை. அதற்குப் பிறகு அவர் மேலும் ஒரு 35 ஆண்டுகள் வரை உயிரோடு இருந்தார்.

ஓர் இளைஞர் உத்தியோகத்திற்குப் போகத் தொடங்கியவுடன், அவருடைய எதிர்காலத்தைப் பற்றி அறிவதற்காக அவர் தந்தை ஜாதகம் பார்த்தார். பிள்ளைக்குப் பெரிய கண்டம் இருப்பதாக ஜோதிடர் கூறியதும், தகப்பனார் ஆடிப்போனார். ‘அந்தக் கண்டத்திலிருந்து தப்ப வழியே இல்லையா?’ என்று அவர் ஜோதிடரிடம் கேட்கப்போக, ‘தப்ப வழியே இல்லை. இப்பொழுது ஒரு கண்டம். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு கண்டம். அதற்கு அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு கண்டம். இப்படிப் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை 3 கண்டங்கள் வரும்’ என்று ஜோதிடர் கண்டங்களுக்கு நிகழ்ச்சி நிரல் போட்டுக் காட்டினார்.

அதைக் கேட்டுத் தகப்பனார் பீதி அடைந்தார். ‘25 வயதில் என் பிள்ளைக்கு இந்த நிலையா?.... என் பிள்ளை எப்படியாவது பிழைக்க வேண்டும்.

ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்’ என்று கண்ணீருடன் ஜோதிடரை வேண்டினார்.

ஜோதிடர் சற்று நேரம் யோசித்துவிட்டு, ‘அந்த முதல் கண்டம் ஏற்படும் நாளில் உங்கள் பிள்ளை இறந்துவிட்டதாக ஒரு புரளியைக் கிளப்பிவிடுங்கள். ஒருவேளை கண்டம் மாறுகண்டம் ஆகலாம்’ என்றார்.

தகப்பனார் அதை மறக்காமல் நினைவில் வைத்துக்கொண்டார். முதல் கண்டம் ஏற்பட வேண்டிய தினத்தன்று, தன் பிள்ளை இறந்துவிட்டதாக ஓர் உறவினருக்குத் தந்தி கொடுத்தார் அவர்.

விதி ஏமாந்துவிட்டதுபோலும்! முதல் கண்டத்திலிருந்து அவருடைய பிள்ளை தப்பிவிட்டார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பிள்ளை அன்னையின் பக்தரானார். முதல் கண்டம் முன்னாலேயே போய்விட்டது. அடுத்த கண்டமும், மூன்றாவது கண்டமும் அன்னையின் அருளால் ஆபத்தை விளைவிக்காமல் விடைபெற்றுக் கொண்டன. மேலும் சில ஆண்டுகள் அவர் உயிர் வாழ்ந்தார். ‘அன்னையிடம் வந்த பிறகு தம் உயிருக்கு உண்டான ஆபத்து நீங்கும்’என்பதுகூட அவருக்குத் தெரியாது. ஆண்டுக்கு ஓரிரு தடவை வந்து அன்னையைத் தரிசனம் செய்துவிட்டுப் போவார் அவர், அவ்வளவுதான்.

70 வயதுப் பெரியவர் ஒருவர். அவர் ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர். அவருடைய 72, 74, 78ஆவது வயதுகளில் ஜாதகப்படி அவருக்குக் கண்டம் இருப்பதாகவும், அதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்து இருப்பதாகவும், எனக்கு எழுதினார் பெரியவரின் பேத்தி. அன்னையின் பிரசாதத்தைப் பெற்றுக்கொள்ளும்படிப் பதில் எழுதுவது என் வழக்கம். அதன்படியே அவருக்குக் கடிதம் எழுதினேன்.

பெரியவர் அந்தக் கண்டங்களை எல்லாம் கடந்து 81ஆவது வயதை நெருங்கிக்கொண்டிருந்தபொழுது, அவருடைய பேத்தியிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தது. அதில், ‘தாத்தாவுக்கு நேற்று இரவு திடீரென்று மயக்கம் வந்துவிட்டது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம். அவருக்குப் பிரக்ஞை இல்லை’ என்று எழுதியிருந்தார்.

அவருக்கு வழக்கம் போல அன்னையின் பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளும்படியும், ‘அன்னை தாத்தாவைக் காப்பாற்றுவார்’ என்றும் எழுதினேன்.

அதற்குப் பிறகு இரண்டு நாள்களுக்கு ஒரு முறை அவருடைய நிலையைத் தெரிவிக்கும் பேத்தியின் கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. ‘ஒரு வாரமாகப் பேச்சில்லை', ‘தாத்தா புரண்டுகூடப் படுப்பதில்லை’ என்பன போன்ற செய்திகளைக் கூறும் அந்தக் கடிதங்கள்.

சில நாள்கள் சென்றன. பெரியவர் சிறிது குணம் அடைந்து வீடு வந்து சேர்ந்தார். நடமாட்டம் இல்லை; படுக்கைதான். இரண்டு மாதங்களுக்குப் பிறகு பேத்தி என்னைப் பார்க்க வந்திருந்தார். தாத்தாவைப் பற்றிக் கேட்டேன். ‘இப்பொழுது எவ்வளவோ தேவலை. தாத்தா எழுந்து நடமாடுகிறார். மாலை நேரங்களில் கொஞ்ச தூரம் வாக்கிங் போய் வருகிறார்’என்றார் அவர்.

இப்பொழுது அந்தப் பெரியவருக்கு வயது 83.

ஒரு குடும்பத்தில் மிகக்கஷ்டம். பல ஆண்டுகளாகத் தீராத கஷ்டம். பிள்ளை இருக்கிறான்; உத்தியோகம் இல்லை. குடும்பத் தலைவர் இருக்கிறார்; வருமானம் இல்லை. ஏதோ சொத்து இருக்கிறது; சிறிதும் பலன் இல்லை. இப்படிப்பட்ட சமயங்களில்தான் மனிதர்களுக்கு ஜாதகம் பார்க்கத் தோன்றும். அந்தக் குடும்பத்தின் தலைவருக்கும் தோன்றியது. மனைவியை அழைத்துக் கொண்டு ஒரு பிரபல ஜோதிடரிடம் சென்றார்.

ஜோதிடர் அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவருடைய ஜாதகங்களையும் நுணுகிப் பார்த்துவிட்டு, ‘உங்களுடைய ஜாதகப்படியும், மற்றவர்களின் ஜாதகப்படியும் உங்கள் குடும்பம் பத்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே சிதறிச் சின்னாபின்னமாகி, இருந்த இடம் தெரியாமல் போய் இருக்க வேண்டும். நீங்கள் எப்படி இன்னும் ஒரே குடும்பமாக இருக்கிறீர்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரு சக்தி வாய்ந்த தெய்வத்தை வணங்குவதாகத் தெரிகிறது. ஜாதகப்படி உங்களுக்கு எதுவும் நிலைக்க நியாயம் இல்லை. ஏதாவது இருக்கிறது என்றால், அது அந்தத் தெய்வத்தின் சக்திதான். இதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை’ என்றார்.

அந்த ஜோதிடர் சொன்னது உண்மையே. அந்தக் குடும்பம் அன்னையை வணங்கும் குடும்பம். ஜாதகத்தையே மாற்றி எழுதிய அன்னையின் அருளைப் பிரசாதமாகப் பெற்ற அந்தக் குடும்பத்தின் இன்றைய வருட வருமானம் ரூ.20,000.

நேர்மைக்கே பெயர்போன அதிகாரி ஒருவர். அவருடைய எதிரிகூட அவரின் நேர்மையைப் பாராட்டுவான். அவர் 15 ஆண்டுகளுக்கும் அதிகமாக அரசாங்கத்தின் பல பதவிகளில் இருந்தவர். என்ன காரணத்தாலோ செல்வாக்கு மிக்க ஓர் அரசியல்வாதிக்கு அவரைப் பிடிக்கவில்லை. எவ்வளவுதான் நேர்மையும், திறமையும் இருந்தாலும், செல்வாக்குள்ள அரசியல்வாதிகளிடம் அதிகாரிகள் ஓரளவு தணிந்துபோவது வழக்கம். அந்த அதிகாரியால் அளவுக்கு மீறி வளைந்துகொடுக்க முடியவில்லை. தம் நேர்மையை நம்பி நிமிர்ந்து நின்றார்.

அதனால் அந்த அரசியல்வாதிக்குக் கோபம்; பழிவாங்கும் குரோதம். 9 குற்றச்சாட்டுகளுடன் ஒரு பொய் வழக்கை உருவாக்கி, இலட்ச ரூபாய்களை மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டி, அதிகாரியை அரெஸ்ட் வாரண்டில் பிடிக்க உத்தரவு வாங்கும்வரை அரசியல்வாதி ஊண், உறக்கம் கொள்ளவில்லை.

அதைக் கண்டு அந்த அதிகாரியின் பொறுப்பில் இருந்த துறையே திகில் கொண்டுவிட்டது; அவருக்கே இந்தக் கதி என்றால், மற்றவர்களின் கதி என்ன?

அந்த அதிகாரிக்கு ஒன்றும் புரியவில்லை. ‘நேர்மையாக இருப்பது அவ்வளவு தவறான விஷயமோ? அதற்காக இவ்வளவு பெரிய நெருக்கடியா?’ என்றெல்லாம் குழம்பினார். தப்புவதற்கு என்னதான் வழி? புரியவில்லை. புரிந்துகொள்வதற்கு நாடி ஜோஸ்யத்தின் துணையை நாடினார்.

முன்பிறவியில் அவர் அந்தணராகப் பிறந்து, ஒரு செல்வரிடத்தில் கணக்கராக வேலை பார்த்து வந்ததாகவும், அப்பொழுது அவர் செல்வரைப் பெரிய அளவில் மோசடி செய்ததாகவும், அதற்கான தண்டனை இந்தப் பிறவியில், இந்த உருவத்தில் வந்திருப்பதாகவும், அதிலிருந்து தப்ப முடியாது எனவும், அனுபவித்தே தீர வேண்டும் எனவும் நாடி ஜோஸ்யம் விண்டுரைத்தது. அதைக் கேட்டதும் அதிகாரிக்கு நாடியே விழுந்துவிட்டது. செயல் இழந்தவராய், தமக்கு எதிரான பாதகங்களை எல்லாம் ஏற்கத் தயாரானவராய்க் குலைந்தும், கலைந்தும் போய்விட்டார் அவர்.

அவருடைய பரிதாப நிலையை அறிந்து பரிதவித்த அவரின் உறவினர் ஒருவர், அன்னைக்குப் பிரார்த்தனை செய்துகொண்டு, பிரசாதம் வாங்கி அவருக்கு அனுப்பி வைத்தார். 14 நாள்களுக்குப் பிறகு அனுப்பிய பிரசாதத்திற்குப் பதில் ஒரு தந்தி மூலம் வந்தது. ‘9 குற்றச்சாட்டுகளில் இருந்தும் நான் விடுதலை செய்யப்பட்டேன்’என்பது அத்தந்தியின் வாசகம்.

கர்மப் பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்பது முக்காலும் உண்மை. அன்னையின் அருள் அக்கருமப் பலனை முழுவதுமாகக் கரைத்துவிடும் என்பது அன்னையின் அன்பர்களுக்குக் கிடைத்திருக்கும் அனுபவபூர்வமான புதிய உண்மை. அன்னையைத் தெய்வமாக உணர்ந்து ஏற்றுக்கொள்பவன், கடவுள்களை எல்லாம் சிருஷ்டித்த பரம்பொருளை தன் ஆத்மாவில் பிரதிஷ்டை செய்கின்றான். பரம்பொருளான இறைவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன். காலத்தால் ஏற்பட்ட கர்மாவுக்கும் அப்பாற்பட்டவன். பரம்பொருளின் ஆதீனத்தில் கர்மம் கரைந்து போய்விடுகின்றது. கடவுளைத் தொழுபவன் பக்தன்.

பரம்பொருளை நாடுபவன் யோகி, முனி, தபஸ்வி. நம் மரபுப்படி முனிவனுக்கும், தபஸ்விக்கும் இல்லறம் பொருத்தப்படாது. இல்லற வாழ்க்கைக்கு, துறவறத்தின் தூய்மையையும், துறவறத்தின் ஆன்மீகத் திறனையும் வழங்குவது அன்னையின் அருள்.

பாவத்தைச் செய்த பின்பு நாம் அதை விட்டாலும், அதன் பலன் நம்மைத் தண்டிக்காமல் விடாது. அதுவே ‘கர்ம வினை’எனப்படுவது. நாம் பாவத்தை விட்ட பின்பு, பாவத்தால் தொடரும் வினையை அழிக்க வல்லது அன்னையின் அருள். அவ்வகையில் துறவறத்தின் சிறப்பை இல்லறத்திற்குக் கொண்டுவந்து சேர்ப்பது அன்னையின் வழி. இப்பெருமையும், திறமையும், கனிவும் நம் மரபில் இல்லாத சிறப்புகளின் பிறப்புகளாகும்.

*****



book | by Dr. Radut