Skip to Content

06. வால்டர்

வால்டர் ஓர் அமெரிக்கர். அவருடைய மகனும், மருமகளும் ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டிருந்தார்கள். வால்டர் அவர்களைப் பார்க்கும் ஆவலோடு 1972இல் இந்தியாவுக்கு வந்தார். அது அவருடைய முதல் இந்தியப் பயணம். அப்போது அவருக்கு வயது 63.

1956இல் வால்டர் நியூயார்க்கின் அண்மையில் இருபது மைல் தொலைவில் உள்ள ஓர் இடத்தில் வசித்துவந்தார். அவருடைய வீடு விஸ்தாரமான இடத்தில் கட்டப்பட்டிருந்தது. பின்புறத்தில் ஷெட்டிலிருந்து வெளியில் உள்ள பொதுச்சாலைக்குக் காரைக் கொண்டு வர வேண்டும் என்றால், 150 அடி நீளம் உள்ள பாதையைக் கடந்தாக வேண்டும். அந்தப் பாதை வீட்டுத் தோட்டத்திலேயே இருந்தது. குளிர் காலங்களில் அங்கே பனிக்கட்டிகள் பெய்யும். ஒரு சமயம் இரவில் பனிக் கட்டிகள் பெய்வது மிகக்கடுமையாக இருந்தது.

மறுநாள் காலை, வால்டர் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தார். எங்கும் பனிக் கட்டிகள் மலை மலையாகக் குவிந்து கிடந்தன. அதே போல் சாலைகளிலும் பனிக் கட்டிகள் வழியை அடைத்துக்கொண்டு இருந்தன.

இதுபோன்ற சமயங்களில் பனிக் கட்டிகளை சாலையிலிருந்து அப்புறப்படுத்துவதற்குப் பெரிய இயந்திரங்களை நியூயார்க் அரசாங்கம் ஏற்பாடு செய்வது வழக்கம். அதே போல இன்னும் சிறிது நேரத்தில் சாலையில் உள்ள பனிக் கட்டிகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்து விடுவார்கள். வால்டரின் காரை வெளியே எடுக்க வேண்டுமானால், தோட்டத்தில் 150 அடி நீளமுடைய பாதையில் கிடக்கும் பனிக் கட்டிகளை அப்புறப்படுத்த வேண்டும். அதை அரசாங்கம் செய்யாது; அவர்தாம் செய்தாக வேண்டும்.

வழக்கமாக அவர்தாம் செய்வார். அன்றும் செய்தார். பனிக் கட்டிகளை அப்புறப்படுத்துவதற்குப் பெரிய இரும்புத் துடுப்புகளை அங்கு உபயோகிக்கிறார்கள். அது நீண்ட கைப்பிடியைக்கொண்டது. பல கிலோ எடையுள்ள பனிக் கட்டிகளை அந்தத் துடுப்பின் மூலம் அப்புறப்படுத்துவது அத்தனை எளிதான காரியமன்று. அவ்வாறு செயல்படும்போது பனிக் கட்டியின் பளு, செயல்படுபவரின் கைகளிலும், முதுகிலும் பலமான அழுத்தத்தை ஏற்படுத்தும். வால்டர் மிகப்பளுவான பனிக் கட்டி ஒன்றை அந்தத் துடுப்பினால் அள்ளி அப்புறப்படுத்த முயன்றபோது, அவரின் நடுமுதுகில் தாங்க முடியாத ஒரு வலி ஏற்பட்டது. அதனால் அவர் செயலற்றவராய்ப் பனிக் கட்டியில் குப்புற விழுந்தார். எழுந்திருக்க முயன்றார்; முடியவில்லை.

அவர் விழுந்து கிடப்பதைப் பார்த்துவிட்டு மனிதர்கள் வெளியே ஓடி வந்து அவரைத் தூக்கிக்கொண்டுபோய்ப் படுக்கையில் படுக்க வைத்தார்கள். அவருக்கு முதுகில் இனம் புரியாத வலி; துடித்துப்போனார். வலியைச் சற்று மறப்பதற்குத் தூக்கம் உதவலாம். ஆனால் அப்போது தூக்கமும் அவருக்கு உதவ முன்வரவில்லை. அந்தச் சமயத்தில் அதுதான் அவசிய, அவசரச் சிகிச்சை. டாக்டர் அழைக்கப்பட்டார். அவர் வால்டருக்குத் தூக்க மாத்திரையைக் கொடுத்துவிட்டுப் போனார். வால்டர் அதைச் சாப்பிட்டுவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்தார்.

மறுநாள் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சோதனை செய்தார்கள். ‘அவருடைய நடு முதுகெலும்பு புரண்டு, முதுகில் உள்ள நரம்பு ஒன்றை அழுத்திக்கொண்டிருக்கின்றது. அதனால்தான் அந்த வலி’ என்பது சோதனையின் மூலம் தெரியவந்தது. பின்னர் அறுவைச் சிகிச்சை செய்து முதுகெலும்பைச் சரி செய்து, முதலில் இருந்த இடத்தில் அதைப் பொருத்தினார்கள். ‘ஆறு மாதம் படுக்கையிலேயே இருக்க வேண்டும்’ என்று டாக்டர்கள் கூறினார்கள். என்ன செய்து என்ன? வால்டரின் வலியும், வேதனையும் குறைந்தபாடாக இல்லை. சில நேரங்களில் வலியின் மிகுதியால் வால்டர் வாய்விட்டு அலறுவார். அப்படி இரவு நேரங்களில் அவர் திடீர் திடீரென்று அலறும்போது வீட்டில் உள்ளோர் திடுக்கிட்டுக் கண்விழித்து எழுந்துவிடுவார்கள்.

ஆறு மாதங்கள் சென்றன. ‘இனி வால்டர் வேலைக்குச் செல்லலாம்’ என்றும், ‘ஆனால் முதுகை நிமிர்த்தி வைத்துக்கொள்வதற்காக பெல்ட் (belt) ஒன்றை எப்போதும் அவர் அணிந்துகொண்டிருக்க வேண்டும்’என்றும் டாக்டர் கூறினார். வேறு வழி இல்லை.

அந்த பெல்ட் முதுகுப் பக்கத்திலிருந்து தொடங்கி, வயிற்றுப் பகுதி வரை வளர்ந்து, இரண்டு பகுதிகளையும் இறுகப் பிடித்துக்கொள்ளும். அதன் முதுகுப் பக்கத்தில் பத்து அங்குலத்துக்குப் பித்தளைக் குழாய்கள் வரிசையாக அமைந்திருக்கும். அவை செங்குத்தாக அமைந்து இருந்ததால், முதுகு வளையாமல் நேராக இருப்பதற்குத் துணை செய்யும். வயிற்றுப் பகுதியில் ஆறு அங்குலத்துக்கு ஒரு பித்தளைத் தகடு பொருத்தப்பட்டிருக்கும். அதனால் பெல்ட் உடலில் சரியாகப் படிந்து இருக்க முடிகிறது. அதே வயிற்றுப் பகுதியில் பெல்ட்டை இறுக்குவதற்கு வசதியாக எட்டுப் பட்டைகள் இருந்தன.

அந்தப் பெல்ட்டை அணிவது ஒரு தொல்லைதான். அந்தத் தொல்லையைத் தவிர்ப்பதற்கு ஆசைப்பட்ட வால்டர், இரண்டொரு முறை அந்த பெல்ட்டை நீக்கினார். அப்போதெல்லாம் அதுவரை மறைந்திருந்த வலி மீண்டும் தோன்றி அவரின் முதுகைப் பிளக்கம். ஆகவே பெல்ட் இல்லாமல் வால்டரால் செயல்பட முடியாமல்போயிற்று.

ஆரம்பத்தில் கூறியபடி வால்டர் முதன் முதலாக 1972இல் இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவரோடு மறைந்திருந்த முதுகு வலியும், மறைத்து அடக்கி ஆளும் அந்த பெல்ட்டும் கூடவே வந்தன. வந்திருந்த சமயத்தில் அவர் ஸ்ரீ அரவிந்தாசிரமத்தைச் சேர்ந்த விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார். ஆசிரமவாசியான அவருடைய மகன், ‘அன்னையை நேரில் தரிசிக்கலாம், வாருங்கள்’என்று அவரை அழைத்தார். ஆனால் அவர், ‘அன்னையைத் தரிசிக்க விருப்பம் இல்லை’என்று மறுத்துவிட்டார்.

மீண்டும் வால்டர் 1973இல் அமெரிக்காவிலிருந்து ஆசிரமத்துக்கு வந்து இருந்தார். அவருடைய மகன் அவரை விடவில்லை. ‘இப்போதாவது அன்னையை நேரில் தரிசிக்க விரும்புகிறீர்களா?’ என்று கேட்டார்.

‘மகனே மதம், ஆன்மீகம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை என்பது உனக்குத் தெரியும். நான் இதுவரை வாழ்க்கையில் யாரிடமும் மண்டி இட்டதே இல்லை. இனியும் மண்டியிட விரும்பவில்லை’என்றார் வால்டர்.

‘நீங்கள் விரும்பாவிட்டால் அன்னையைச் சந்திக்கும்போது மண்டியிடத் தேவை இல்லை. ஏனென்றால், அன்னையைச் சந்திக்கச் செல்லும் யாரும் அப்படி வற்புறுத்தப்படுவதில்லை. அதே போல மகத்தான சந்திப்பு ஒன்றையும் நீங்கள் இழந்துவிடக்கூடாது என்று நான் விரும்புகிறேன்’ என்றார் வால்டரின் மகன்.

‘அப்படியா? ஓ.கே. அன்னையைச் சந்திக்க எனக்கு இப்போது ஆட்சேபம் இல்லை’ என்றார் வால்டர்.

ஏற்பாட்டின்படி அவர் அன்னையின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அன்னையைத் தரிசனம் செய்த அந்தக் கணத்தில் அவரின் மனம் ஆரவாரம் அற்று அடங்கியது. மென்மையாக, மிகமிக மென்மையாக ஏதோ ஓர் ஆளுகை அவர் உணர்வைப் பற்றிக்கொண்டது. அவர் கைகளைப் பற்றிக்கொண்டு, அவருடைய கண்களைச் சற்று நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அதன் மூலம் ஒரு விளக்கைக் கொண்டு தம்மை விளக்கம் செய்வதைப் போன்ற அநுபவத்தைப் பெற்றார் வால்டர்.

அன்னையைத் தரிசித்துவிட்டுத் திரும்பியதும் அவர் முகம் தெளிவும், பொலிவும் பெற்றுப் பிரகாசித்தது. ‘மை டியர் சன்! அன்னையின் தரிசனம் அற்புதமானதோர் அனுபவம் என்று எனக்கு நீ சொல்லவே இல்லையே! அன்னையிடம் சென்ற பிறகு மண்டியிட்டு வணங்காமல் இருக்க முடியவில்லை. குதர்க்கவாதம் செய்கிற அறிவையும் அடக்கி ஆள்கிற தெய்வாம்சம், அன்னையாக உருக்கொண்டு இருப்பதை அந்தக் கணத்தில் நான் உணர்ந்தேன். அன்னை என் கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தபோது நான் துடைக்கப்பட்டேன் என்பதையும், துலக்கப்பட்டேன் என்பதையும் உணர்ந்தேன். அந்த உணர்வின் விம்மலில் என் இதயம் வெடித்துவிடும்போல் ஆகிவிட்டது. என்னுள் இத்தனை பெரிய விளைவையும், விளைச்சலையும் செய்வித்த அன்னை மகத்தானவர்!’என்று உற்சாகத்தோடும், உணர்வுப் பெருக்கோடும் தம் மகனிடம் விவரித்தார் வால்டர்.

மீண்டும் 1974இல் வால்டர் ஆசிரமத்துக்கு வந்து, ஆசிரம விடுதியில் தங்கியிருந்தார். அப்போது ஒரு நாள் இரவு கனவு ஒன்று கண்டார் அவர். அந்தக் கனவில் வால்டர் ஆசிரமத்தின் ஏதோ ஒரு பகுதியில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது அறிமுகம் இல்லாத ஒருவர் அவருக்கு ஒரு பரிசுப் பொருளை அளிக்கிறார்.

அதோடு கனவு கலைகிறது. வால்டக்கு விழிப்பு வந்துவிடுகிறது. அந்தக் கனவின் பொருள் என்ன? அவருக்குப் புரியவில்லை. அதைப் புரிந்துகொள்ளவும் அவர் முயலவில்லை.

பொழுது புலர்ந்தது. வால்டர் அந்தக் கனவை அடியோடு மறந்துவிட்டுத் தம் வேலைகளில் ஈடுபட்டிருந்தார். காலை எட்டு அல்லது ஒன்பது மணி இருக்கலாம். ஆசிரமத்தில் இருந்த சாதகர் ஒருவர் அவர் அறைக்கு வந்தார். அவர் கையில் ஒரு பொருளைப் பரிசாக வைத்தார். அது வெள்ளியிலான ஓர் அழகான பதக்கம். ஸ்ரீ அரவிந்தரின் சிம்பல் பொறிக்கப்பட்ட பதக்கம் அது. பார்ப்பதற்கு அது ஸ்ரீ சக்கரம் போல இருக்கும். அதன் நடுவில் தாமரை மலரின் உருவம் அமைக்கப்பட்டிருந்தது.

‘இந்தப் பதக்கத்தை அன்னை அடிக்கடி அணிந்துகொள்வார். முக்கியமாக, சாதகர்களுக்குத் தரிசனம் கொடுக்கும் நாள்களில் அவர் அதனைத் தம் நெற்றியில் அணிந்துகொள்வார்!’ என்ற விவரங்களை வால்டருக்கு எடுத்துரைத்தார் அந்தச் சாதகர்.

வால்டருக்கு முதல் நாள் இரவு கண்ட கனவு நினைவு வந்தது. அந்தக் கனவில் அவருக்கு யாரோ ஒருவர் பரிசுப் பொருள் ஒன்றைக் கொடுக்கிறார். இப்போதும் அதே போல் உண்மையிலேயே சாதகர் ஒருவர் அரிதிலும் அரிதான பரிசுப் பொருள் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அந்தக் கனவை அவருக்குத் தோற்றுவித்தவர் யார்? அந்தக் கனவை இப்போது மெய்ப்பித்து நடத்திக்கொண்டு இருப்பவர் யார்? அவர் அன்னையைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்!

வால்டர் உணர்வுத் தழுதழுப்பில் உருகியும், பெருகியும் நின்றார். தம்மைத் தேடி வந்து பரிசளித்த அந்தச் சாதகருக்கு நன்றி கூறக்கூட அவருக்குத் தோன்றவில்லை.

அதற்குப் பிறகு இரண்டொரு நாள் சென்றன. வால்டர் பெல்ட் அணிந்து கொள்ளாமல் இருப்பதை அவருடைய மகன் கவனித்தார். ‘நீங்கள் பெல்ட் அணிந்துகொள்ளவில்லையா?’ என்று கேட்டார்.

‘இல்லை, அந்தச் சாதகர் எனக்கு அந்தப் பதக்கத்தைப் பரிசு அளித்ததிலிருந்து நான் உற்சாகத்தோடும், உடல் ஆரோக்கியத்தோடும் இருக்கிறேன். இந்த மாற்றம் அசாதாரண மாற்றம். வலியையும், வேதனையையும் போக்குகிற மாற்றம். இதை அனுபவத்தில் உணர வேண்டும் அல்லவா? அதனால் பெல்ட்டைக் கழற்றிவைத்துவிட்டேன். இப்போது வலி இல்லை’ என்றார் வால்டர்.

அப்போது மட்டும் அன்று, அவர் ஆசிரம விடுதியில் தங்கி இருந்தபோதும், பிறகு அவர் அமெரிக்காவுக்குச் சென்ற பிறகும் அந்த வலி அவருக்கு ஏற்படவில்லை. அவருடைய மனைவிக்கு இது நம்ப முடியாத அளவுக்கு வியப்பு. பதினெட்டு ஆண்டுக் காலம் வால்டரின் உடல் உறுப்புப் போல ஒட்டிக்கொண்டு இருந்த அந்த பெல்ட்டும், அதை அணியாவிட்டால் வலியிலிருந்து தப்ப முடியாது என்ற நிலையில் நீங்கி, அவருக்கு இன்றுவரை விடுதலையை அளித்துவிட்டது.

இப்போது வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் வால்டர், உழைப்பில் இருந்து ஓய்வு பெற்றுவிடவில்லை. இன்றும் காலையிலும், மாலையிலும் சுமார் எட்டு மணி நேரம் தேனீயைப் போலச் சுறுசுறுப்பாக இயங்கி, கடினமான தோட்ட வேலைகளை உற்சாகத்தோடு செய்து வருகிறார்.

*****



book | by Dr. Radut