Skip to Content

05. ரிஷ்யசிருங்கர் ராபர்ட்

அது ஒரு நவம்பர் மாதம். மழை விட்டு விட்டுப் பெய்துகொண்டே இருந்தது. பகலில் பிடித்துக்கொண்ட மழை, இரவில் பலத்துவிட்டது. நான் மழையின் ஜாலங்களையும், ஓலங்களையும் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, நள்ளிரவு நேரத்தில் அயர்ந்து தூங்கிவிட்டேன்.

மறுநாள் அதிகாலையில் மிஸ்டர் ராபர்ட் மாடிக்கு வந்து என்னை எழுப்பினார். ‘கீழே வந்து பாருங்கள். நம் வீட்டை வெள்ளம் சூழ்ந்துகொண்டு இருக்கிறது. அருகில் உள்ள வீடுகளில் நீர் புகுந்துவிட்டது. அந்த வீட்டுக்காரர்கள் அடைக்கலம் தேடி நம் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். நம் வீட்டுக்குள்ளும் வெள்ளம் குந்துவிடும்போல் இருக்கிறது. எங்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. கீழே வந்து நிலைமையைப் பாருங்கள்’என்று பரபரப்போடும், பதற்றத்தோடும் கூறினார்.

நான் மாடியை விட்டுக் கீழே இறங்கிவந்து வீட்டுக்கு வெளியே பார்வையைச் செலுத்தினேன். எங்கும் ஒரே வெள்ளக்காடு. அருகில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அட்டகாசம் செய்திருந்தது.

ஆபத்தைக் கருதி அங்கே வசித்தவர்கள் சற்று மேட்டுப்பாங்கான வீடுகளுக்குப் புகலிடம் தேடிப் போய்விட்டார்கள். வெள்ளம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகிக்கொண்டிருந்தது. கொட்டும் மழை அதன் சீற்றத்தைக் குறையாமல் வளர்த்துக்கொண்டிருந்தது.

எங்கள் காலனியை ஒட்டி ஒரு கால்வாய் இருந்தது. எப்போதும் வறண்டு கிடக்கும் அந்தக் கால்வாயில் இப்போது வெள்ளம் பெருகி, எங்கள் காலனிக்குள் நுழைந்து, வீடுகளுக்குள்ளும் பரவி, எது வீடு, எது வெள்ளம் என்று புரியாத குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திவிட்டிருந்தது.

வெள்ள நிவாரணப் பணிக்காகக் கயிறு முதலிய உபகரணங்களுடன் அங்கு வந்து சேர்ந்த தீயணைப்புப்படையினர், எங்கள் காலனியில் வசித்தவர்களை எல்லாம் வீட்டைக் காலி செய்துவிட்டு மேட்டுப்பாங்கான இடங்களுக்குப் போகுமாறு எச்சரித்தனர்.

இன்னும் எங்கள் வீட்டுக்குள் வெள்ளம் புகவில்லை. வாசல் குறட்டைத் தொட்டுக்கொண்டிருந்த நீர், எந்த நேரத்திலும் வீட்டுக்குள் புகுந்துவிடலாம். வாசற்படியோரமாக உள்ளே நின்றபடி, வெளியே கணத்துக்குக் கணம் உயர்ந்து கொண்டிருந்த வெள்ளத்தின் வீக்கத்தை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

வெளியில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு என்னைக் கவனித்த தீயணைப்புப்படையினர், ‘சார்! நகரில் அருகில் உள்ள ஏரி கரை உடைந்து விட்டது. வரவர வெள்ளம் அதிகம் ஆகலாம். ஆகவே நீங்கள் வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு உடனே போய்விடுங்கள். இல்லாவிட்டால் பெரிய ஆபத்து ஏற்படும்’என்று என்னிடம் கூறினார்கள். அவர்கள் சொன்ன செய்தி உண்மையானதுதானா என்பதை அறிவதற்காக, மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்துக்கும், போலீஸ் தலைமை அலுவலகத்துக்கும் தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்டு விசாரித்தோம். அவர்கள், ‘ஏரி எதுவும் உடையவில்லை. நேற்றிரவு பதினான்கு அங்குல மழை பெய்திருப்பதால் தாழ்ந்த பகுதிகளில் நீர் சூழ்ந்துகொண்டிருக்கிறது’ என்றார்கள்.

உண்மை என்ன என்பதை அறிந்துகொண்ட பிறகு, வீட்டைக் காசெய்துகொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்தோம். எல்லாரும் மாடிக்குப் போய்விட்டோம்.

அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் ராபர்ட் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தார். நான் அவரிடம், ‘ராபர்ட், நீங்கள் இந்தியாவுக்கு வரும் பொழுதே அடைமழையையும் கையைப் பிடித்து அழைத்து வந்திருக்கிறீர்கள். மழையை ‘இறைவனின் அருட்கொடை’என்று அன்னை கூறுவார். உங்களிடம் அன்னையின் அருள் நிறைந்திருப்பதால் நீங்கள் இங்கே வந்தவுடன் மழை கொட்டத் தொடங்கிவிட்டது. புராணத்தில் வரும் ரிஷ்யசிருங்கரைப் போன்றவர் நீங்கள்’ என்று நகைச்சுவையாகக் கூறினேன்.

அவர் ரிஷ்யசிருங்கரின் கதையைக் கூறும்படி ஆவலுடன் கேட்க, நானும் கதையைச் சுவாரசியத்துடன் விளக்கினேன். அவர் கதையை வெகுவாக ரசித்தார். அதே சமயத்தில் தனக்கும், மழைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘நான் எங்கே போனாலும் மழைக் காலமாக இல்லாவிட்டாலும்கூட அங்கே மழை பெய்வது வழக்கம். அதைத் தொந்தரவாக நான் நினைப்பேன்’ என்றார் ராபர்ட்.

‘அது ஒரு தொந்தரவே அன்று; உங்களிடம் நிறைந்துள்ள ஒரு சிறப்பான அம்சம்’என்றேன் நான்.

அதை அவர் மறுக்காவிட்டாலும், ஏற்கவில்லை என்பது அவர் நோக்கிலிருந்து புரிந்தது. ஆனாலும் அவர் சிந்தனையை என் கூற்று வெகுவாகக் கிளறிவிட்டுவிட்டது. அவர் முதன்முதலில் ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்கு வந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார். அது சாதாரணமாக மழை பெய்யக்கூடிய பருவகாலம் இல்லை. ஆனாலும் அவர் ஆசிரமத்துக்கு வந்திருந்த சமயம் நல்ல மழை பெய்தது. அன்று அவர் ஆசிரமத்துக்கு வந்தபோது நானும் அங்கு இருந்தேன். அன்று பெய்த மழை இப்பொழுதும் என் நினைவில் நின்றது.

அப்பொழுது ராபர்ட் தம் நண்பர் ஒருவருடன் ஆசிரமத்துக்கு வந்து இருந்தார். நான் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று சமாதியையும், பிற இடங்களையும் காட்டினேன். முதலில் நான் நகைச்சுவையாகத்தான் ராபர்ட்டையும், மழையையும் தொடர்புபடுத்திக் கூறினேன். கூர்ந்து நோக்கும் போது எனக்கு மட்டுமன்றி, ராபர்ட்டுக்கும் மேற்கூறிய தொடர்பு ஏதோ எதேச்சையாக ஏற்படுவதன்று, நிரந்தரமான ஒன்று என்பது புரிந்தது. ஆனாலும் அவரால் அந்த உண்மையை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அன்னையை ஏற்றுக்கொள்பவர்களின் வாழ்க்கை வியக்கத்தக்க அளவில் ஏற்றம் பெறுவதை நான் பார்த்திருக்கிறேன். அதே போல அன்னையை ஏற்றுக்கொண்ட இலக்கிய, சமூகப் பணிகளில் ஈடுபட்டிருப்போரின் நிலை, இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்ந்துவிடுகிறது. ஒரு நிறுவனத்தில் பணி புரிகின்ற ஒருவர் மிகச்சாதாரண நிலையில் இருப்பார். அவர் அன்னையைத் தம் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், அதாவது அன்னையின் வாழ்க்கைக் கோட்பாடுகளைத் தம் வாழ்க்கைக் கோட்பாடுகளாக ஏற்றுக்கொண்டால், மிக விரைவில் அவர் பணிபுரியும் நிறுவனத்தில் உச்சி நிலைக்கு உயர்ந்துவிடுவார். அது மட்டுமன்று, அன்னையை ஏற்றுக்கொண்டவர் ஓர் இலக்கியவாதியாகவோ, பேச்சாளராகவோ, விளையாட்டு வீரராகவோ இருந்தால், அதுவரை மற்றவர்களால் கவனிக்கப்படாமல் இருந்த அவர்களுடைய ஆற்றல், வெளிச்சம் பெற்று வெளி உலகில் கவனத்தை ஈர்த்து உரிய புகழைப் பெறும். அதே சமயத்தில் அவர்களுடைய ஆற்றலும் பல்கிப்பெருகும். முன்கோபம், துரதிருஷ்டம் போன்ற எந்தக் குறைகள் அவர்களுக்கு இருந்தாலும், அவை மறைந்துவிடும். அன்னையின் அருளாலே மலையும் கலையாகும்; இரும்பும் கனியாகும்.

அதேபோல மிஸ்டர் ராபர்ட்டுக்கு ஒரு திறமை இருந்தது. அதாவது, அவர் எங்கே சென்றாலும் அங்கே மழையைத் தருவிக்கின்ற திறமை. அத்திறமை அவர் அன்னையிடம் வந்தபிறகு பன்மடங்காகப் பெருகி இருக்க வேண்டும். அவர் அமெரிக்காவிலிருந்து புதுச்சேரிக்கு வந்த அன்று பதினான்கு அங்குல மழை பெய்தது. அதற்கு ‘அன்னையின் அருளால் பன்மடங்காகப் பெருகி இருந்த அவருடைய மழையைத் தருவிக்கும் ஆற்றல்தான் காரணமாக இருக்க வேண்டும்’ என்று நினைத்தேன் நான்.

ஆனால் ராபர்ட்டுக்குத் தன்னிடமிருந்த ஆற்றலில் நம்பிக்கை இல்லை. ‘ரிஷ்யசிருங்கரின் கதை அழகான கற்பனையே தவிர, உண்மை இல்லை. இயற்கை கொடையாகக் கொடுக்க வேண்டிய மழையை, எந்த மனித ஆற்றலும் தர முடியாது’ என்ற கருத்தைத் தெரிவித்த அவருக்கு,

‘எல்லாவற்றுக்குமே விஞ்ஞான காரணங்கள் அடிப்படைகளாக இருக்க முடியா. மெய்ஞ்ஞானம் என்பது அவற்றுக்கு மேலான சக்தி. அதனை மேலோட்டமான சிந்தனைகளால் உணர முடியாது. உணர்வினைக் கடந்து உள்ளிருக்கும் அச்சக்தியின் சூட்சும வெளிப்பாட்டினை உணர வேண்டும். அதற்குப் பகுத்தறிவு என்னும் தளையைக் களைய வேண்டும். மிஸ்டர் ராபர்ட், இனிமேல் உங்களால் ஏற்படும் அந்த அரிய நிகழ்வை உற்றுக் கவனியுங்கள்’என்றேன் நான்.

இப்பொழுது அவர் நம்பிக்கை நட்டத்துக்குள் வந்து நிற்கத் தயாராக இருந்திருக்க வேண்டும். ‘கவனிக்கிறேன். நான் செல்கின்ற இடங்களில் எல்லாம் மழை பெய்கிறதா என்பதை உங்கள் நோக்கோடு கவனிக்கிறேன்’ என்றார்.

ராபர்ட் ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து கலிபோர்னியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். கலிபோர்னியா ஒரு வறட்சிப் பிரதேசம். அங்கு வருடத்தில் பத்து அங்குலத்துக்குக் குறைவாகவே மழை பெய்யும். அங்கிருக்கும் பெருநகரமாகிய லாஸ் ஏஞ்சல்ஸுக்குத் தேவையான குடிநீர், பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள ஓர் ஆற்றலிருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. ராபர்ட் அங்கே தங்கியிருந்த ஒரு மாத காலத்தில் முப்பது அங்குல அளவில் மழை பொழிந்தது. அதுவரை அந்நகரின் வரலாற்றிலேயே இத்தனை பெரிய மழை பெய்ததில்லை. வரலாற்றுச் சிறப்பானதொரு நிகழ்ச்சி ராபர்ட்டின் வருகையால் நிகழ்ந்தது.

அதற்குப் பிறகு அவர் நியூயார்க்கில் உள்ள தம் அத்தையின் வீட்டுக்குச் சென்றார். அந்தச் சமயம் அந்நகரில் மட்டுமன்றி, கிழக்கு அமெரிக்கா முழுவதும் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. நியூயார்க் அருகில் உள்ள வேறொரு நகரில் ஏழு நாள்களுக்குப் போதுமான நீரே இருப்பில் இருக்கின்றது என்ற ஒரு நெருக்கடி அறிவிப்பு வெளியிடப்பட்டது. நீரை மிகச்சிக்கனமாக உபயோகிக்க வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அவை கடுமையாக அமல்படுத்தப்பட்டன.

இந்நிலையில் ராபர்ட் நியூயார்க்குக்குப் போய்ச் சேர்ந்தார். அப்பொழுது பிப்ரவரி மாதம். சாதாரணமாக நியூயார்க்கில் மாதா மாதம் இரண்டு அங்குலத்திற்குக் குறையாமலும், தவறாமலும் மழை பெய்யும். ஆனால் ராபர்ட் அங்கே சென்றவுடன் தொடர்ந்து ஒரு வாரம் ‘கொட்டோ கொட்டு’ என்று விடாமல் கொட்டிய மழை, அந்த பிப்ரவரியில் மட்டும், குறிப்பாக அந்த ஒரு வாரத்தில் மட்டும் பெய்த மழையின் அளவு ஆறு அங்குலம்!

அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு வரவிருப்பதாக அமெரிக்காவில் இருந்து எனக்குக் கடிதம் எழுதி இருந்தார் ராபர்ட். நான் இன்னும் அதே வீட்டில்தான் வசித்துவருகிறேன். சென்ற ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபொழுது அந்த வீடு எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையில்தான் அது இப்பொழுதும் இருந்தது. அந்தப் பள்ளமான காலனிப் பகுதியைச் சீராக்கவும், மேடாக்கவும் முனிசிபாலிட்டி இதுவரை எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

ரிஷ்யசிருங்கரான ராபர்ட் இங்கே வருகைபுரிந்தால் பேய்மழை பெய்து, வீடு வெள்ளத்தில் மிதக்குமே என்ற அச்சம். ‘கோடைக் காலம் வரை உங்கள் இந்தியப் பயணத்தை ஒத்திப்போடுங்கள்!’என்று அவரிடம் கேட்டுக்கொள்ளலாமா என்று ஓர் எண்ணம். ஆனால் இவற்றைக் குறிப்பிடாமல், ‘நீங்கள் இங்கே வருவது குறித்து மகிழ்ச்சி. உங்களோடு தொடர்ந்து வரும் மழை அன்னை வழங்கும் அருட்பிரசாதம். ஆகவே உங்களுடன் வரவிருக்கிற மழையையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். ஆனால் அதை ஒரே மூச்சாகக் கொட்டச் செய்யாமல், கொஞ்சம் கொஞ்சமாகப் பெய்யச் செய்யுங்கள்’என்று அவருக்குப் பதில் எழுதினேன்.

என்ன காரணத்தாலோ ராபர்ட்டால் நவம்பர் மாதந்தான் இங்கு வர முடிந்தது. அவர் வந்தவுடன் மழையும் வந்துவிட்டது. அவர் வந்த அன்று ஆறு அங்குலம் மழை பெய்தது. நல்லவேளையாக வீடு வெள்ளத்தால் சூழப்படாமல் தப்பியது.

டாடா நிறுவனத்துடன் இணைந்து சேவை செய்கின்ற ஒரு சந்தர்ப்பம் எங்களுக்கும் ஏற்பட்டது. நான் ‘சந்தர்ப்பம்’ என்று குறிப்பிட்டது இதைத்தான்: கிராமப்புற வளர்ச்சியைப் பற்றி எங்கள் நிறுவனம் வெளியிட்டிருந்த கருத்துகளை அந்த டாடா நிறுவனம் ஏற்றுக்கொண்டு, தனது கிராமப்புற வளர்ச்சித் திட்டத்துக்கு உதவுமாறு எங்கள் நிறுவனத்துக்கு அழைப்பு அனுப்பியிருந்தது.

அந்த நிறுவனம் ஒரு வறட்சிப் பிரதேசத்தில் இரசாயனத் தொழிற்சாலை ஒன்றை ஐம்பது ஆண்டுக் காலமாக நடத்திவந்தது. அந்தத் தொழிற்சாலையில் திறந்த தொட்டிகளில் உப்பைச் சேகரிப்பார்கள். அதற்காகவே மிகக்குறைந்த அளவே மழை பெய்யும் அந்த வறட்சிப் பகுதியை அவர் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். அந்தப் பகுதி ‘கட்ச் வளைகுடா’என்ற இடத்தில் இருக்கிறது. அங்கு வருடத்துக்குப் பத்து அங்குலத்துக்கு மேல் மழை பெய்யாது.

அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள் அனைவரும் சுற்றுப்புறக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே, நாற்பது சுற்றுப்புறக் கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த விரும்பியது டாடா நிறுவனம். நாங்கள் அவர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, ராபர்ட்டை அங்கே அனுப்பிவைத்தோம். அந்தக் கிராமங்களைப் பார்வையிட்டு, ‘கிராம வளர்ச்சிப் பணியை எவ்வாறு செய்ய வேண்டும்?’என்ற ஆலோசனையைக் கூறிவிட்டு வந்தார்.

அவர் திரும்பியதும், கட்ச் பகுதியில் கடும்மழை பெய்ததாகச் செய்தித்தாள்களில் ஒரு செய்தி வந்தது.

அந்த வருடம் நடைபெற்ற வருடாந்திரக் கூட்டத்தில் பேசிய டாடா அவர்கள், ‘வழக்கத்துக்கு மாறாக இந்த வருடம் கட்ச் பகுதியில் கடும்மழை பெய்தது. அதன் காரணமாகத் தொழிற்சாலையில் சேகரிக்கப்பட்டிருந்த உப்பு எல்லாம் மழை நீரில் கரைந்து ஓடிவிட்டது. ஒரே நாளில் தொழிற்சாலை இருக்கின்ற பகுதியில் பெய்த மழை இருபது அங்குலமாகும். இது கட்ச் பகுதிச் சரித்திரத்திலேயே கேள்விப்படாத ஒன்றாகும்’ என்று கூறியிருந்தார்.

இவ்வாறு ராபர்ட் செல்லும் இடங்களில் எல்லாம் மழையும் தொடர்ந்து சென்றது. அன்னை அவருடைய ஆற்றலில் மழையாகப் பெருகிப் பொழிந்தார்.

*****



book | by Dr. Radut