Skip to Content

03. அழைத்தால் உடன் வருவார்

நாள்தோறும் விடியற்காலை நாலரை மணிக்குத் திறக்கப்படுகின்ற ஸ்ரீ அரவிந்தாசிரமத்தின் பிரதான நுழைவாயில் இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. சாதகர்கள் அன்னையின் சமாதியை வணங்கியவண்ணம் இருப்பார்கள். அமைதியும், அருள்மணமும் கமழும் அந்தச் சூழலில் சாதகர்களில் பலர் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி இருப்பார்கள். வழக்கமாகவோ, அவ்வப்பொழுதோ வருகை புரிகின்ற பக்தர்களின் கூட்டம் இரவு ஒன்பது மணிக்குள் வடிந்துவிடும். பேரமைதியில் அருளைத் துய்க்க விழைகின்ற நான் இரவு ஒன்பது மணியிலிருந்து கதவு மூடப்படுகின்ற வரை சமாதியின் அருகே இருந்துவிட்டு வருவது வழக்கம். ஒரு நாள் இரவு 11 மணிக்குச் சமாதியைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தேன். யாரோ ஒருவர் அந்த நேரத்தில் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார். மிக ஆர்வத்தோடு என் அருகில் வந்தார். ‘மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் உங்களைச் சந்தித்திருக்கிறேன்’என்ற பீடிகையோடு தொடங்கி, தாம் வெளிநாட்டிலிருந்து வருவதாகவும், தம்முடைய பெயர் டாம் (Tom) என்றும் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

அதே பெயருடைய வேறொரு வெளிநாட்டு நண்பர் என்னைப் பார்க்க வருவதுண்டு. ‘அவர்தாம் இந்த டாம்’என்று நான் தவறாக எண்ணிவிட்டேன். மறுநாள் மாலையில் என்னைச் சந்தித்துப் பேசுவதற்கு ஒரு நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டார் அவர். எனக்குத் தர்மசங்கடமாக இருந்தது. ஏனென்றால் கடந்த நான்கு ஆண்டு காலமாக மற்றவர்களைச் சந்தித்துப் பேசும் வழக்கத்தை நான் அநேகமாகத் தவிர்த்திருந்தேன். அதை அவரிடம் எப்படிச் சொல்வது? தயங்கினேன். அதோடு அவரை நான் புரிந்து கொள்ளவில்லை. அதை அவர் புரிந்துகொண்டு வேதனையோடு காணப்பட்டார். என் மனத்தில் மின்னல் அடித்தாற்போல ஒன்று மின்னி மறைந்தது. இப்பொழுதுஅவர் யார் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. நான் புரிந்துகொண்டதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மூன்று வருடங்களுக்கு முன்னால் என்னைச் சந்தித்தபோது நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் உற்சாகத்தோடு எனக்கு நினைவுப்படுத்திக்கொண்டிருந்தார் அவர். இறுதியில் அவரை மறுநாள் காலையில் என்னைச் சந்திக்க வருமாறு கூறினேன்.

மறுநாள் காலையில் அவர் வந்தார். ஸ்ரீ அரவிந்தருடைய யோகத்தைப் பற்றிய பல விவரங்களைக் கேட்டு அறிந்துகொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டினார். சளைக்காமல் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டு இருந்தார். ‘இத்தனை ஆர்வத்தோடு வந்துள்ள இவரை உடனே புரிந்துகொள்ளத் தவறிவிட்டோமே’ என்று சங்கடப்பட்டேன். அதனால் அவருக்கு ஏற்பட்ட மனக் கஷ்டத்தைச் சரி செய்வதில் நான் தீவிரமாக இருந்தேன்.

மிஸ்டர் டாம் ஓர் அமெரிக்கர்; பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தவர். அவருடைய குறிக்கோள் ஆன்மாவைப் பற்றி அறிந்துகொள்வது. இரண்டாவது தடவையாக அவர் இப்பொழுது உலகத்தைச் சுற்றி வருகிறார். புதுச்சேரிக்கு வருவதற்கு முன்னால் மைசூர், கல்கத்தா, ஹிமாலயப் பிரதேசம் போன்ற இடங்களுக்குச் சென்று, அங்குள்ள பல பெரியவர்களைச் சந்தித்திருக்கிறார். பொதுவாக, வறுமைக்கோட்டுக்கும் கீழே இருப்பவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வகுக்கப்படுகின்ற கோட்பாடுகளிலும், திட்டங்களிலும் அவருக்கு அக்கறையும், ஆர்வமும் இருந்தன. அவற்றைப் பற்றி எல்லாம் பேசிய பிறகு, ‘நான் உலகத்தில் பல நாடுகளுக்குச் சென்று, பல பெரியவர்களைச் சந்தித்திருக்கிறேன்; அமைதி தவழும் இடங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் நிலவும் தெய்வீக அமைதி ஒன்றே என் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றுவிட்டது’என்றார்.

அவர் முன்றாண்டுகளுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்துவிட்டுப் போன பிறகு ஸ்ரீ அரவிந்தருடைய பல நூல்களைப் படித்திருந்தார். சென்ற தடவை அவர் என்னைச் சந்தித்தபோது ஸ்ரீ அரவிந்தரின் யோகத்தைப் பற்றிய பல விவரங்களையும், அவற்றை மேற்கொள்கின்ற முறைகளைப் பற்றியும் கூறி இருந்தேன். அவற்றை எல்லாம் இப்பொழுது அவர் நினைவுகூர்ந்தார். பல ஆசாரியரைச் சந்தித்து அளவளாவியபோது, ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி என்னிடமிருந்து அறிந்துகொண்ட சிலவற்றையே தாம் மேற்கொள்வதாகவும் சொன்னார் அவர். ‘நீங்கள் சொன்னீர்கள், நீங்கள் சொன்னீர்கள்’ என்று இன்னும் பலவற்றை அவர் அடுக்கிக்கொண்டே இருந்தார். எனக்கோ அவை முழுவதும் ஞாபகத்துக்கு வரவில்லை. அவருடைய உற்சாகத்தையும், நட்பு உணர்வையும் கவனிக்கிறபோது, என்னால் எதுவுமே சொல்ல முடியவில்லை.

நல்லவேளையாக அவருடைய பேச்சு, அவர் உலகப் பயணத்தை மேற்கொண்டபொழுது ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றித் திரும்பியது. அவருக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை இங்கு அவர் வாயிலாகக் குறிப்பிடுகின்றேன்.

‘மூன்றாண்டுகட்கு முன்னால் புதுச்சேரியை விட்டுப் புறப்பட்ட நான், வேறு பல நாடுகளைக் காண என் பிரயாணத்தைத் தொடர்ந்தேன். பிரயாண காலங்களில் நான் ஸ்ரீ அரவிந்தரின் நூல்களைப் படித்துக்கொண்டிருப்பேன். ஆஸ்திரேலியாவுக்குப் போய்விட்டுத் தென் அமெரிக்காவுக்குப் பயணமானேன். நான் தென் அமெரிக்காவில் இருந்தபொழுது ஸ்ரீ அரவிந்தருடைய யோகத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது. ஆனால் அதை எப்படித் தொடங்குவது என்று புரியவில்லை. ஆகவே அதற்கு ஸ்ரீ அரவிந்தருடைய நூல்களில் ஏதேனும் குறிப்பு கிடைக்குமோ என்று தேடிக்கொண்டிருந்தேன். அவருடைய நூல்கள் அனைத்தும் உன்னதமானவை. ஆனால் அவற்றில் உள்ள கருத்துகள் யாவும் பொதுப்படையாகச் சொல்லப்பட்டிருப்பதால், அவற்றைத் துணை கொண்டு அப்பியாசத்தை மேற்கொள்வது என்பது கடினமானதாகும். போதிய அளவு எனக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், ‘ஸ்ரீ அரவிந்தருடைய யோகத்தை எந்த வகையிலாவது தொடங்க வேண்டும்’என்று அவாவுற்றேன்.

இதற்கிடையில் நான் மெக்ஸிகோ நாட்டிற்குச் சென்றேன். அங்கு ‘வோக்ஸ்வாகன்’(Volkswagon) என்ற ஊர்தி ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டேன். அதில் எழுத, சமைக்க, குளிக்க, ஓய்வு எடுத்துக்கொள்ளத் தேவையான எல்லா வசதிகளும் இருந்தன. நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்ட வீடு என்றே அதைச் சொல்ல வேண்டும். அந்த வண்டியைக் கொண்டு பல இடங்களையும் சுற்றிப் பார்க்க முடிவு எடுத்துப் பிரயாணத்தை மேற்கொண்டேன்.

ஒரு நாள், காலையிலிருந்து தொடர்ந்து வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தேன். உச்சிவேளையும் வந்துவிட்டது. மிகவும் களைப்பாக இருந்தது. அதனால் நான் சமையல் செய்யவில்லை. ஒரு ஹோட்டலில் பகல் உணவை முடித்துக்கொள்ளலாம் என்று கருதி, ஒரு சாலையோர ஹோட்டலின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே போய் என் சாப்பாட்டை முடித்துக்கொண்டேன். சாப்பிட்டவுடன் பிரயாணத்தைத் தொடர நினைத்தேன். கடந்த இரு வாரங்களாக ஓய்வில்லாமல் வண்டியை ஓட்டிய காரணத்தால் எனக்குச் சிறிது சோர்வாக இருந்தது.

சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்ட பின்பு, பிரயாணத்தைத் தொடர்ந்தேன். 50, 60 மைல் பிரயாணம் செய்த பிறகு என் உடல் அதிகம் சோர்ந்துபோயிற்று. ஆகவே சாலை ஓரத்தில், பசும்புல் நிறைந்த ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு மீண்டும் பிரயாணத்தைத் தொடர்ந்தேன்.

போகும் வழியில் என் கவனம் திடீரென்று என் தோல்பையின் மீது சென்றது. அதை வண்டியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாட்டி இருப்பேன். என் பார்வை அந்த இடத்தை நோக்கிச் சென்றது. அங்கு என் தோற்பை இல்லை. நான் துணுக்குற்றேன். ஏனென்றால், அதில்தான் என்னுடைய பாஸ்போர்ட்டும், பணமும் இருந்தன. ‘அந்தப் பையைத் தவறுதலாக வேறு எங்காவது வைத்து இருப்போம்’என்று என்னையே நான் சமாதானம் செய்துகொண்டு வண்டியைத் தொடர்ந்து செலுத்தலானேன். ஆனாலும் மனத்தில் ஓர் உறுத்தல். வண்டியை நிறுத்திவிட்டு எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன். என் தோற்பையைக் காணவில்லை.

நானோ மெக்ஸிகோ நாட்டுக்கு ஒரு வெளிநாட்டுப் பிரயாணியாக வந்து இருக்கிறேன். ஆகவே பாஸ்போர்ட் மிக அவசியம். அது இல்லாவிட்டால் எனக்குப் பல தொல்லைகள் ஏற்படும். அதோடு என் பணம் எல்லாம் அந்தப் பையோடு போய்விட்டது. செலவுக்குக் கையில் பணமில்லாமல் என்ன செய்ய முடியும்? ஒரே குழப்பம்; தலைசுற்றல்.

அந்தப் பை எப்படிக் காணாமல் போயிருக்கலாம் என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தேன். அந்தச் சாலையோர ஹோட்டலில் என் சாப்பாட்டை முடித்த பிறகு, அந்தத் தோற்பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அதுதான் நான் பையைக் கடைசியாகப் பார்த்தது. அதன் பிறகு அந்த ஹோட்டலிலிருந்து ஏறக்குறைய நூறு மைல்களுக்கு அப்பால் வந்துவிட்டேன். நடு நடுவே நாலைந்து இடங்களில் வண்டியை நிறுத்தி நிறுத்திப் பயணம் செய்துள்ளேன். மறுபடியும் வண்டியைத் திருப்பிக்கொண்டு அந்த ஹோட்டலுக்குப் போனேன். அங்குள்ள எல்லா இடங்களையும் நன்றாகச் சோதனை செய்தேன். அங்கிருந்தவர்களை விசாரித்தேன். எல்லாம் வீண். பை கிடைக்கவில்லை. எனக்குப் பீதி அதிகமாயிற்று. நடுவில் நான் வண்டியை நிறுத்திய இடங்களில் ஒருவேளை அந்தப் பை அகப்படலாம் என்று எண்ணி, அந்த இடங்களைத் தேடிச் சென்றேன். ஆனால் நான் வண்டியை நிறுத்திய இடங்கள் எவை என்று சரியாகப் புரியவில்லை. 10 அல்லது 12 தடவைகளுக்குக் குறையாமல் வண்டியை விட்டு இறங்கி, நான் முன்பு வண்டியை நிறுத்தி இருந்த புல் தரையைப் போல் காணப்பட்ட இடங்களில் தேடிப் பார்த்தேன். பை கிடைக்கவில்லை.

நான் ஒன்றும் தோன்றாமல் வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். வண்டியில் உள்ள பெட்ரோல் இரண்டு மணி நேரப் பிரயாணத்துக்கு மட்டுமே வரும். பிறகு பெட்ரோலுக்கு என்ன செய்வது? அடுத்த வேளை உணவுக்கு என்ன வழி? நான் கடைசிக் கட்டத்திற்கு வந்துவிட்டேன். அப்பொழுது நான் சென்ற முறை உங்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘இனி எதுவும் செய்ய முடியாது; எல்லாம் போய்விட்டது; நம்பிக்கைக்கு இனி இடம் இல்லை என்ற ஒரு நிலை ஏற்படுமானால், அதுதான் என்னை அழைப்பதற்குத் தகுந்த நேரம். நான் அந்த நேரத்தில் உடனே வருகிறேன். நான் எங்கும் இருப்பேன். நான் புதுச்சேரியில் மட்டுமே இருப்பதாக நினைக்க வேண்டாம்’என்ற அன்னையின் மொழியினை நீங்கள் எனக்குச் சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த வார்த்தைகள் என் மனத்தில் மின்னல் போலப் பளிச்சிட்டன. இழந்த தைரியம் எனக்கு வந்துவிட்டது.

சாலை ஓரத்திற்குச் சென்று, புல் தரையில் பத்மாசனமிட்டு அமர்ந்தேன். கண்களை மூடிக்கொண்டு, மனம், வாக்கு, காயம் ஆகிய இம்மூன்றாலும் அன்னையை அழைத்தேன். என் மனம் சலனமற்ற அமைதியைத் துய்த்தது. இப்பொழுது என்னிடம் எல்லாம் நிறைந்திருப்பதைப் போன்றதோர் உணர்வுடன் வண்டியை நோக்கி நடந்தேன். வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். வண்டியைக் கிளப்பத் தயாரானேன். அப்பொழுது என் பார்வை யதேச்சையாக வண்டியின் வெளிப்புறம் சென்றது. அச்சமயம் சாலை ஓரத்தில் இதுவரை என் கண்ணில் படாத ஏதோ ஒன்று என் பார்வையில் பட்டது. பார்ப்பதற்கு அது ஒரு துணியைச் சுருட்டிப் போட்டிருப்பதைப் போலக் காட்சி அளித்தது. சாலையில் கிடக்கும் அது என்னவாக இருக்கும்? என்று அறிய ஆவலுற்ற நான், வண்டியை விட்டு இறங்கி அந்தத் துணி கிடந்த இடத்திற்குச் சென்றேன். அதன் அருகில் புதர் ஒன்று இருப்பதைப் பார்த்தேன். அதை மட்டுந்தானா? இல்லை, அந்தப் புதர் நடுவே என் தோற்பை கிடப்பதையும் பார்த்தேன்! பரபரப்புடன் அதை எடுத்துப் பார்த்தேன். என் பாஸ்போர்ட்டும், பணமும் அதில் பத்திரமாக இருந்தன.

அன்று நடந்த இந்நிகழ்ச்சி இன்னும் என் மனத்தில் தெளிவாக உள்ளது. ‘அன்னையை அழைத்தால் உடன் வருவார்’என்பது என்னைப் பொருத்தவரையில் ஓர் உண்மையான அநுபவம். இதைச் சொல்ல வேண்டும் என்றுதான் நான் உங்களிடம் வந்தேன்’என்று தன் கதையைக் கூறி முடித்தார் மிஸ்டர் டாம்.

அப்பொழுது அவர் உணர்ச்சிமிகுந்து காணப்பட்டார். அதுதான் ‘நம்பிக்கை’என்பது. நம்பியவர்களுக்குத் துணை செய்ய அன்னையின் அருள் எக்காலத்தும் தயாராக இருக்கின்றது.

*****



book | by Dr. Radut