Skip to Content

10. கைகொடுத்த கருணை

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நான் தீவிரமாக விவசாயத்தில் ஈடுபட்டிருந்தேன். தென்னை, முந்திரி என்னுடைய முக்கிய பயிர்கள். என் தென்னந்தோப்பு, கடலை ஓட்டி இருந்தது. மேற்குத் திசையைத் தவிர, மற்ற மூன்று பக்கங்களிலும் உப்பங்கழியே எல்லையாக அமைந்திருந்தது.

தென்னை மட்டைகளை (தேங்காயை உரித்த மட்டை) இந்த உப்பங்கழி நீரில் 4, 5 மாதங்கள் வரை ஊறவைத்து, அதிலிருந்து நார் எடுத்துக் கயிறு திரிப்பார்கள். உப்பு நீரில் ஊறிய மட்டைகளைக் கட்டையால் அடித்தால், அதிலுள்ள சோறு உதிர்ந்துபோகும்; நார் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் தென்னஞ்சோறு நிலங்களுக்கு நல்ல எருவாகும். நிலங்களுக்கு இந்தச் சோற்றை எருவாக இட்டால், மண்ணின் ஈரம் காக்கும்.

தென்னை மட்டைகளைப் பதப்படுத்தி, நார் வேறாகவும், சோறு வேறாகவும் எடுக்கும் தொழிற் பகுதிக்கும், என் தோட்டத்துக்கும் மூன்று மைல் தூரம் இருக்கும். வண்டிகள் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் நான் தென்னஞ் சோற்றைச் சேகரம் செய்து என் தோட்டத்திற்கு எருவாகக் கொண்டு வருவேன். ஆனால் நேரடியாக வண்டிகளோ, லாரிகளோ என் தோட்டத்துக்குள் போக முடியாது. ஏனெனில் குறுக்கே உப்பங்கழி வழியை மறித்துக்கொண்டிருந்தது. அதனால் சுமார் இரண்டு பர்லாங்தூரம் வரை தலைச் சுமையாகத்தான் எருவைக் கொண்டு போக வேண்டும்.

சில ஆண்டுகள் சென்றன. என் தோட்டத்திலேயே மட்டைகளை ஊற வைத்து நார் உற்பத்தி செய்யலாம் என்று எனக்குத் தெரிந்த சில கயிற்றுத் தொழிலாளர்கள் கூறி, அந்தத் தொழிலில் ஏராளமாக இலாபம் இருப்பதாகவும் சொன்னார்கள். கொஞ்சம் மட்டைகளை ஊற வைத்துச் சோதனை செய்ததில், அவர்கள் கூறியது உண்மை எனத் தெரிந்தது. ஏராளமான எருவைச் சுலபமாகப் பெறுவதற்கு இது ஒரு நல்ல வழி என்று நினைத்தேன்.

முதலில் இந்தத் தொழிலுக்குத் தேவையான தேங்காய் மட்டைகளைத் தேங்காய் வியாபாரிகளிடமிருந்து வாங்க வேண்டும். தொழிலில் அதிக இலாபம் இருப்பதால், மட்டைகளுக்குக் கிராக்கி அதிகம். ஒரு வருடம் முழுவதற்குமான மட்டைக் கிரயத்தை வியாபாரிகளிடம் முன்பணமாகக் கொடுத்து மட்டை வாங்குவது தொழிலில் பழக்கமாக இருந்தது. முன்பணமாக ரூபாய் 7,000 கொடுத்து, இந்தத் தொழிலை ஆரம்பிப்பது என்று நான் முடிவு செய்தேன். எங்கள் ஊரில் உள்ள மிகப்பெரிய தேங்காய் வியாபாரியை அணுகி, என் எண்ணத்தைக் கூறினேன். அவர் கோவாபரேடிவ் சொஸைட்டியிடம் வருடத்துக்கான முன்பணத்தை ஏற்கெனவே பெற்றுக்கொண்டிருப்பதாகவும், அடுத்த ஆண்டு எனக்கு மட்டைகளைச் சப்ளை செய்வதாகவும் கூறி, ரூபாய் ஏழாயிரத்தைப் பிராமிசரி நோட் எழுதிக் கொடுத்துவிட்டுப் பெற்றுக்கொண்டார்.

அந்த ஆண்டு மழை சரிவரப் பெய்யவில்லை. ஓராண்டில் மழை சரியாகப் பெய்யாவிட்டால், அடுத்த ஆண்டில் தேங்காய் விளைச்சல் கால் பங்காகக் குறைந்துவிடும். அந்த ஆண்டு அப்படிப்பட்டதொரு நிலை ஏற்படவே, அந்த வியாபாரியால் சொஸைட்டிக்குச் சேர வேண்டிய பாக்கிக்குத் தேவையான அளவு மட்டைகளைச் சப்ளை செய்து, வாங்கிய பணத்தை அடைக்க முடியவில்லை. அடுத்த ஆண்டும் மழை சரிவரப் பெய்யாமல் வறட்சியாகி விட்டபடியால், வியாபாரியால் எனக்கு மட்டை கொடுக்க முடியாது என்பது தெளிவாகிவிட்டது. நான் அவரைச் சந்தித்து, அது பற்றிக் கேட்டேன். ‘தேங்காய் விளைச்சல் சரி இல்லாத விவரம் உங்களுக்கே தெரியும். யாரும் ஒன்றும் சொல்வதற்கில்லை’ என்றார் அவர்.

நான் அந்தச் சமயத்தில் கிராமத்தில் விவசாயிகள் பெருவாரியான பாங்குக் கடன்களைப் பெற ஏற்பாடு செய்துவிட்டதாலும், என் நிலத்தில் வாழை, மல்லிகை, கனகாம்பரம் முதலியவற்றைப் பேர்அளவில் பயிரிட ஆரம்பித்ததாலும் எனக்கு வேலைகள் மிகுந்துவிட்டிருந்தன. ஆகையால் கயிறு வியாபாரத்தை விட்டுவிடுவது என்று நான் முடிவு செய்துவிட்டதை அந்த வியாபாரியிடம் தெரிவித்து, கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டேன். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு, சீக்கிரமே பணத்தைக் கொடுத்துவிடுவதாக வாக்களித்தார்.

அவர் ஒரு பெரிய வியாபாரி. வீடு, நிலம் என்ற வகையில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான சொத்துள்ளவர். வட்டிக்கடை வேறு வைத்திருந்தார்.அவரிடம் மட்டைக்காகப் பலர் முன்பணம் கொடுக்கக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். என் பணத்தைத் திருப்பித் தருவதில் அவருக்கு எந்த ஒரு சிரமமும் இருக்கப்போவதில்லை. எனவே என் பணம் சுலபமாக வந்துவிடும் என நான் நினைத்தேன். ஆனால் நிலைமை வேறாக இருந்தது. அதற்குப் பிறகு அவர் கூறிய பதில் திருப்தி அளிப்பதாய் இருக்கவில்லை. அதன் மூலம் அவருக்குப் பணத்தைத் திருப்பித் தர விருப்பம் இல்லை என்பது தெரிந்தது. ‘இன்று', ‘நாளை’ என்று ஆறு மாதம் காலம் கடத்திவந்தார்.

ஒரு நாள் இரவு நானே அவர் வீட்டுக்குச் சென்றேன். என் கடனைத் திருப்பிக் கொடுப்பதற்குத்தான் கவலையோடு இருப்பதைப் போலப் பேசினார் அவர். ஆனால் அதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. தம் மாமனார் பத்து ஏக்கர் வரை கரும்புப் பயிர் செய்திருப்பதாகவும், கரும்பு வெட்டியவுடன் என் பணத்தைக் கொடுத்துவிடுவதாகவும் கூறினார்.

மேலும் அவர், அந்த நிலம் புதுச்சேரி மாநிலத்தில் இருப்பதாகவும், பணத்தைப் புதுச்சேரி சர்க்கரை ஆலையில் வாங்க வேண்டும் என்றும் சொன்னார். எனக்குச் சேர வேண்டிய தொகையான ரூபாய் ஏழாயிரத்தை என்னிடம் கொடுக்கும்படி அவருடைய மாமனாரிடமிருந்து ஆலைக்கு ஒரு கடிதம் பெற்றுத் தருமாறு நான் கேட்டேன். ‘பணத்தை வசூல் செய்வதற்கு அது ஒரு சுலபமான வழி’ என்று நினைத்து, நான் அப்படிக் கேட்டேன். நான் கோலத்தில் நுழைந்தால், புள்ளிக்குள்ளேயே நுழையக்கூடிய பலே பேர்வழி அவர்! அதற்கு அவர் ஒப்பவில்லை. ‘கடிதம் எல்லாம் வேண்டாம். கரும்பு அறுவடையின்பொழுது உங்களுக்கு நிச்சயம் பணம் கிடைக்கும்’ என்று சால்ஜாப்பு கூறி, பொய்யான மலர்ச்சியோடும், பொய் வணக்கத்தோடும் என்னை வழியனுப்பிவைத்தார்.

நான் நம்பியவர் நழுவும் மீனாகிவிட்ட நிலையில், ஊரில் அவரைப் பற்றி அடி முதல் நுனி வரை நன்கு அறிந்தவர்களிடம் விசாரித்தேன். ‘அந்தப் பணத்தை இனி நீங்கள் மறந்துவிடலாம். அவர் சம்பாதித்த சொத்து எல்லாம் இப்படித் தேடியதுதான். அவரிடம் கொடுத்ததற்குப் பதிலாக நீங்கள் அந்தப் பணத்தை ஆற்றில் போட்டிருக்கலாம்’ என்று கூறிக் கொஞ்சம்நஞ்சம் இருந்த நம்பிக்கையையும் சுத்தமாகத் துடைத்துவிட்டுவிட்டார்கள்.

அவர் எழுதிக் கொடுத்த பிராமிசரி நோட்டு இருந்தாலும், கோர்ட்டுக்குப் போவது என்பது உசிதமாகத் தோன்றவில்லை. கோர்ட்டுக்குப் போகாமலேயே அந்தப் பணத்தை வசூலிக்க வேண்டும் என நான் திட்டமிட்டுக்கொண்டிருந்த பொழுது அவரை அறிந்த நண்பர் ஒருவர், ‘கோர்ட்டுக்குப் போகலாம்; ஆனால் பணம் வாராது. இடம், பொருள், ஏவல் பார்த்துக் கணக்கிட வேண்டும்’ என்றார்.

அவர் கூறிய இறுதிச் சொற்கள் என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தன. ஆளுக்கு ஆள் கணக்கு வேறுபடுகிறது. அவருடைய கணக்கு என்ன? புரியவில்லை. இம்மாதிரியான சூழ்நிலையில் நான் மற்றவர்களுக்குக் கூறும் யோசனைகளை எல்லாம் அப்போது கவனமாகக் கடைப்பிடித்துப் பார்த்தேன். எதற்கும் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை.

அன்னையிடம், ‘அந்தப் பணம் திருப்பிக் கிடைக்க வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்தேன். பிரார்த்தனை தெளிவாக இருந்தது; மனம் சலனமற்று இருந்தது. ‘இதில் பிரச்சினையே இல்லை’ என்பது போன்ற உணர்வு மேலோங்கி நின்றது. பொதுவாக, எல்லா அறிகுறிகளும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தன. அதனால் பணத்தைக் கேட்டு வரும்படி அந்த வியாபாரியிடம் ஆள் அனுப்பினேன். பதில் பணமாக வரவில்லை; சிக்கலைப் பெரிதுபடுத்தும் புயலாகிவிட்டது.

மேலும் சில மாதங்கள் ஓடின. பிரச்சினை தீர்ந்தபாடாக இல்லை. இன்னும் 4, 5 மாதங்கள் சென்றால் நோட் காலாவதியாகிவிடும். அதற்குள் ஒரு முடிவு செய்தல் வேண்டும். நான் அதைப் பற்றிய யோசனையில் தீவிரமாக ஆழ்ந்தேன். அப்பொழுது என் நண்பர் ஒருவர் என் அருகே வந்து உட்கார்ந்தார். ‘எதைப் பற்றி இவ்வளவு தீவிரமாக யோசனை?’என்று கேட்டார். நான் விஷயத்தைக் கூறினேன். அவர் அதை மௌனமாகக் கேட்டார். பதில் பேசவில்லை. அவருக்கு இந்த விஷயம் பற்றிய எல்லாம் தெரியும். அவருடைய மௌனத்துக்குப் பின்னால் ஒரு நல்ல கருத்து மறைந்திருக்கலாம்; அதை வெளியே கொணர நினைத்தேன்; கேட்டேன்:

‘அன்னையிடம் செய்துகொள்ளும் பிரார்த்தனை உடனே பலிப்பது வழக்கம். ஆனால் அந்த வியாபாரியின் விஷயத்தில் எதுவும் நடக்கவில்லை. இதில் நான் என்ன தவறு செய்தேன்? என்ன குறை என்னிடம் என்று எனக்குத் தெரியவில்லை. அது பற்றி உங்களால் சொல்ல முடியுமா?’

‘அவரிடம் பணம் கொடுத்தது தவறு’என்றார் நண்பர்.

‘எல்லாரும் முன்பணம் கொடுக்கிறார்கள். அவர்களிடம் எல்லாம் சரியாக நடந்துகொள்கிறார். அவருக்குச் சொத்து இருக்கிறது. நோட் எழுதிக் கொடுத்து இருக்கிறார். எதில் தவறு? என்ன தவறு?’ என்று கேட்டேன் நான்.

‘அதெல்லாம் நமக்குச் சரி வாராது. மற்ற வியாபாரிகளுக்குச் சரி’என்றார் நண்பர்.

அதுவரை எனக்குத் தெரியாமல் இருந்த ஒரு சாதாரண விஷயம், அப்பொழுது தெளிவாகத் தெரிந்தது.

நம்மைப் போன்ற இயல்பு படைத்தவர்கள் எழுதிக் கொடுக்கும் நோட், சட்டத்தில் மட்டும் இல்லை, நடைமுறையிலும் சரியாக அமையும். அந்த வியாபாரியைப் போன்றவர்களுக்கு, அவர் எழுதிக் கொடுக்கும் நோட் சரியாக அமையும். வெவ்வேறு இயல்பு படைத்த இருவர் செய்துகொள்ளும் உடன்பாடு உறுதிப்பாடாக இருக்க முடியாது. அவர் எனக்கு எழுதிக் கொடுத்த நோட்டைக் கொண்டு, அவரைக் கோர்ட்டில் ஏற்றி அவமானப்படுத்திப் பணத்தை எப்படியாவது வசூலித்துவிட வேண்டும் என்ற வன்மமும், கொடூரமும் எனக்கு இல்லை. மென்மையான நூலைக்கொண்டு ஒரு யானையைக் கட்ட முடியாது. அவர் ஒரு யானை. நானோ மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று நினைக்கும் மெல்லிய நூல். அதனால்தான் அந்த யானையைக் கட்டிப்போட்டு என்னால் பணத்தை வசூலிக்க முடியவில்லை.

இதில் பெருந்தவறு, மாற்றான் வலி அறியாமல் நானே அவரிடமிருந்து பணத்தை வசூலித்துவிடலாம் என்று நினைத்ததுதான். அதனால் நான் அன்னையிடம் செய்துகொண்ட பிரார்த்தனை பூரண சரணாகதியில்லை என்றாகிவிட்டது. அது புரிந்தவுடன் என் மனத்தை அழுத்திக்கொண்டிருந்த பாரம் மறைந்தது.

மீண்டும் அன்னைக்கு முழுமையாகப் பிரார்த்தனை செய்துகொள்ளலாம் என்று நினைத்தேன். அதற்கு அவசியமே இருக்கவில்லை. பிரச்சினை தீர்ந்து விட்டது போன்ற தெளிவு இந்த விஷயத்தில் எனக்கு ஏற்கனவே ஏற்பட்டிருந்தது. ஆனால் பணம் வரவில்லை. இந்தச் சுமையற்ற தெளிவுக்குப் பிறகு புதிய விடிவு ஏதேனும் ஏற்படுமா? ‘மறுநாள் அந்த வியாபாரியைச் சந்திக்க வேண்டும்’ என்று முடிவு செய்தேன்.

மறுநாள் காலையில் டிரைவர் வந்தவுடன் நான் காரில் ஏறி எஸ்டேட்டிற்குப் புறப்பட்டேன். ‘திரும்பும் வழியில் அந்த வியாபாரியைச் சந்திக்க வேண்டும்’ என்று புறப்படும்போதே டிரைவரிடம் நான் சொல்லிவைத்தேன். 11 மணிக்கு எஸ்டேட் வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பும் சமயத்தில், அவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைவுகூர்ந்தபடி காரில் வந்துகொண்டிருந்தேன். நஞ்சை நிலங்கள் நிறைந்த ஒரு பகுதியில் கார் போய்க் கொண்டிருந்தபொழுது அதை மெதுவாக நிறுத்தினார் டிரைவர்.

‘அந்த வியாபாரியின் வீடு இன்னும் அரை மைல் தூரத்தில் அல்லவா இருக்கிறது?’என்று நான் கேட்க நினைத்தபோது, ‘அதோ அங்கே வெள்ளைச் சட்டை போட்டுக்கொண்டு நிற்கிறார் அவர்’என்று கூறிக்கொண்டே தூரத்தில் தெரிந்த ஒரு தென்னந்தோப்பைச் சுட்டிக்காட்டினார் டிரைவர்.

நான் காரிலிருந்து இறங்கி, அந்தத் தென்னந்தோப்பை நோக்கி நடந்தேன். அங்கிருந்து என்னைப் பார்த்துவிட்ட அவர், என்னை நோக்கி வந்தார். என்னை மலர்ச்சியோடு வரவேற்றார். அதுவரை என்னைப் பார்த்ததும் பொய்யாகவே சிரிக்கும் அவர், இப்போது மெய்யாகவே சிரித்தார். என்னை நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருப்பது போன்ற பரவசத்துடன் பேசினார்.

நான், ‘பணம்’என்று பேச்சைத் தொடங்கினேன்.

‘அறுவடை முடிந்துவிட்டது. தோப்பில் நெல் அடித்துக்கொண்டிருக்கிறேன்.

இன்று மாலையில் உங்கள் பணம் முழுவதையும் கொடுத்துவிடுகிறேன்’ என்றார்.

எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ‘உண்மையிலேயே இப்போது அவர் நெல் அடிக்கிறாரா? தோப்புக்கு டிரைவரை அனுப்பிப் பார்த்துவரச் சொல்லலாமா?’ என்று நினைத்தேன் நான்.

அவர் என் நினைவை உணர்ந்தவராக, ‘என் பேச்சில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை போலத் தோன்றுகிறதே....’ என்று கூறிக்கொண்டே பையிலிருந்து ஒரு பட்டியலை எடுத்துக் காட்டி, ‘இதோ பாருங்கள் இந்தப் பட்டியலை. இதில் குறிக்கப்பட்டவர்கள் எல்லாருக்கும் இன்று மாலையில் பணம் கொடுக்கப்போகிறேன்’ என்றார்.

நான் அந்தப் பட்டியலைக் கூர்ந்து நோக்கினேன். அதில் முதலில் என் பெயரும், அதன் எதிரே ரூபாய் 7,000 என்றும் எழுதப்பட்டிருந்தன.

‘நீங்கள் பணமாகக் கொடுக்க வேண்டாம்; நெல்லாகவே எடுத்துக் கொள்கிறேன்’ என்று நான், அன்று மாலையில் ரூபாய் 7,000க்கு நெல்லை ஏற்றிக்கொண்டு வந்துவிட்டேன்.

தேடிப் போனபொழுதெல்லாம் வாராத கடன், தன்னாலேயே தேடி வந்தது எதனால்? அன்னையின் அருளால்!

கடமை உணர்வோடும், சுறுசுறுப்போடும், ஆர்வத்தோடும், தெளிவோடும், இவற்றை எல்லாம் இணைக்கும் கருணையாக இருக்கும் அன்னையைப் பற்றிய நினைவோடும் செயல்படும்பொழுது தனியாகப் பிரார்த்தனை என்ற ஒன்றைச் செய்ய வேண்டியதில்லை. அன்னை நிகழ்ச்சிகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்வார். ஏதோ ஒரு கட்டத்தில் தடை ஏற்படும்பொழுது அன்னையைப் பிரார்த்தனை செய்தால், உடனே பலன் கிடைக்கும். அப்படியும் உடனே பலன் தெரியாவிட்டால், நம் வாழ்விலோ, மனத்திலோ, செயலிலோ, முறையிலோ குறை இருப்பதாக அர்த்தம். அத்தகைய குறையை அல்லது தவற்றை உணர்ந்து, மனம் வருந்தினால் பிரச்சினை உடனே பனி போல மறையும்.

சுருக்கமாக, உருக்கத்தில் பெருக்கமாக நிறைந்து, விண்ணளாவிய விளைவுகளை ஏற்படுத்தவல்லது அன்னையின் தண்ணருள்.

*****



book | by Dr. Radut