Skip to Content

4. அன்னையும் ஆசிரமமும்

அன்னை ஒரு சமயம் இவ்வாறு கூறினார்: ‘ஸ்ரீ அரவிந்தர் இருந்தபோது யோகப் பணியை அவர் கவனித்துவந்தார். நான் ஆசிரமத்தை நடத்துகின்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். முப்பது வருடங்களாக இந்தப் பொறுப்பை எந்தவிதமான ஒரு குறையும் இல்லாமல் என்னால் செயல்படுத்த முடிந்தது’.

1920இல் ஸ்ரீ அரவிந்தரைச் சுற்றி இருந்த பத்து, பதினைந்து சாதகர்கள்தாம் ஆசிரம உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்று சொல்ல வேண்டும். அவர்களுள் ஒரு சாதகர் கூறுகிறார்: ‘அன்னை முதன்முதலாக எங்களுக்கு கற்றுக்கொடுத்தது புத்தகங்களையும், மற்ற பொருள்களையும் எப்படி ஒழுங்காக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான். அந்த நாள்களில் அலமாரிகள் இல்லாததால் புத்தகங்களைத் தரையில்தான் வைத்து இருப்போம்’.

அந்தச் சாதாரண விஷயத்தைக்கூட அன்னை கவனிக்க வேண்டி இருந்தது என்றால், அவரின் பொறுப்பு எத்தகையது என்பதை எளிதில் யூகித்துக் கொள்ளலாம். சமையல் செய்வதோடு, அதைப் பரிமாறுகிற பணியையும் அவரே கவனித்துவந்தார். ஆரம்ப நாள்களில் பத்து, பதினைந்து சாதகர்கள் இருந்தாலும் ‘ஆசிரமம்’என்பது அதிகாரபூர்வமானதாக அமைந்திருக்கவில்லை. அது 1926இல்தான் அதிகாரப்பூர்வமானதாக உருவெடுத்தது எனலாம். 1926இல் ஸ்ரீ அரவிந்தர் மற்றச் சாதகர்களிடமிருந்து விலகித் தனிமையில் யோகம் செய்யத் திட்டமிட்டார். இதனால் அன்னையின் பொறுப்பு இரு மடங்காயிற்று. அவர் ஆசிரமப் பொறுப்போடு சேர்த்து, யோகப் பணியையும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று.

‘ஒவ்வொரு சாதகரும் விடியற்காலையில் நான்கு மணிக்கே படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்’என்ற கோட்பாடு அமல் செய்யப்பட்டது. ஒவ்வொருவரும் இன்ன இன்ன காரியங்களைக் கவனிக்க வேண்டும் என்று அன்னை ஒரு பட்டியலைத் தயாரித்துக் கொடுத்திருந்தார்.

நாள்தோறும் காலை 6.15 மணி அளவில் சாதகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வந்த இடம், ஆசிரமக் கட்டடத்தின் பின் பக்கத்தில் அமைந்துள்ள ‘பால்கனி’யாகும். ஆசிரமத்தில் உள்ள அனைவரும் அந்த இடத்தில் கூடி நின்று அன்னையைத் தரிசித்து, அவருடைய ஆசிகளைப் பெறுவார்கள். அப்போது அவர் சிறிது நேரம் தியானிப்பார். அன்று செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் இறைவனின் அருளுக்குச் சமர்ப்பித்து, அவரவர் செய்ய வேண்டிய வேலைக்குத் தேவையான உதவிகளை அன்னை அனுக்கிரகம் செய்து விடுவார். இதனை எந்தவித ஆரவாரமோ அல்லது சம்பாஷணையோ இல்லாமல் செய்வார். இதனைப் ‘பால்கனித் தரிசனம்’என்று அழைப்பார்கள். இந்தத் தரிசனம் 1962ஆம் ஆண்டு வரை நீடித்தது. 1962இல் அன்னை தனிமையில் இருக்கத் திட்டமிட்டபடியால், பால்கனித் தரிசனத்தை நிறுத்தும்படியாகிவிட்டது.

வேலைகள் காரணமாக வெளியூர்ப் பிரயாணங்களையும் அவ்வப்போது அன்னை மேற்கொள்வதுண்டு. புதுச்சேரியில் உள்ள பல பகுதிகளுக்குச் செல்வதோடு, கடலூர், சிதம்பரம் முதலிய வெளியூர்களுக்கும் அவர் செல்வார்.

‘ஆலம்பூண்டி பாஷ்யம் ரெட்டியார்’என்ற அன்பர் ஒருவர் கடலூரில் வசித்து வந்தார். அவர் அன்னையின் பக்தர். ‘1930ஆம் ஆண்டுவாக்கில் அன்னை என்னுடைய இல்லத்துக்கு விஜயம் செய்வதுண்டு’என்று அவர் கூறியது என் நினைவுக்கு வருகின்றது.

அவர் அன்னையைத் தரிசிப்பதற்காக அடிக்கடி புதுச்சேரிக்கு வந்து போவார். 75 வயதுக்கு மேற்பட்ட பிறகு, வயோதிகத்தால் தளர்ந்துவிட்ட நிலையில்கூட, அவர் அன்னையைத் தரிசிக்கத் தவறியதில்லை. ஒரு வருஷம் தம்முடைய பிறந்த தினத்தன்று அன்னையைத் தரிசித்த அவர், அதே வாரத்தில் இறந்துவிட்டார். தம் இறுதிக் காலம் வரை அன்னையைத் தரிசிக்கும் பெரும் பேற்றினைப் பெற்றவர் அவர்.

ஒரு சமயம் ஸ்ரீ அரவிந்தருக்காகச் சில மரச்சாமான்கள் செய்ய வேண்டி இருந்தது. அதற்கு வேண்டிய தேக்கு, ‘ரோஸ் வுட்’போன்றவற்றை வாங்குவதற்காக அன்னை ஒரு தடவை கடலூருக்குச் சென்று வந்தார். பொதுவாக, இது போன்ற வெளியூர்ப் பயணங்களை அவர் பிற்பகல் நேரத்தில் தான் மேற்கொள்வார்.

முற்பகல் நேரங்களில் அன்னை ஆசிரமத்தில் உள்ள பல பிரிவுகளிலும் பணியாற்றுகின்ற அதிகாரிகளைச் சந்தித்து, அவரவர் செய்ய வேண்டிய வேலையைப் பற்றி விவாதித்து முடிவு எடுப்பார். அது மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும், அன்றைய தினத்தில் பிறந்த நாளைக் கொண்டாடுகின்ற சாதகர்கள் அனைவரையும் வரவேற்று, ஆசிகளை வாரி வழங்குவார் அன்னை.

கால வளர்ச்சியில், ஆசிரமத்தில் ஏறக்குறைய ஐம்பது பிரிவுகள் ஏற்பட்டு விட்டன. அவை யாவும் நிதானமாகவும், இயல்பாகவும் தோன்றியவை. ஆசிரமத்துக்குச் சொந்தமான கட்டடங்கள் கிட்டத்தட்ட நூறு இருக்கும். வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள கட்டடங்கள் 300க்கும் அதிகம்.

அச்சகம், தொழிற்கூடம், மரச்சாமான்கள் தயாரிக்கும் பிரிவு, விளையாட்டு அரங்கம், போட்டோ ஸ்டூடியோக்கள், பல வகை உணவுகளைத் தயாரித்து வழங்கும் பிரிவுகள் எனப் பல பிரிவுகள் ஆசிரமத்தில் இருந்தமையால், அன்னையின் அன்றாட வேலைகளில் அவற்றுக்கே பெரும்பாலான நேரத்தைச் செலவிட வேண்டியிருந்தது.

ஒவ்வொரு சாதகருடைய பிறந்த நாளையும் அன்னை மிகமுக்கியமான நாளாகக் கருதுகின்றார். பிறந்த நாளையும், அதை ஒட்டியுள்ள நாள்களையும், ‘இறைவனுடைய அருளைப் பெறுவதற்கு மிகச்சாதகமான நாள்கள்’என்று அன்னை கூறுகின்றார். ஆதலால் ஆசிரமத்தில் உள்ள சாதகர்களுக்கு அவர்களுடைய பிறந்தநாள்கள் மிகவும் சிறப்பான நாள்களாக அமைகின்றன. அந்த நாள்களில் சாதகர்கள் அன்னையிடம் புனிதமான பூச்செண்டுகளைச் சமர்ப்பித்து வணங்குவது வழக்கம். அன்னை அவர்களை ஆசீர்வதித்து நல்ல அழகும், மணமும் நிறைந்த மலர்கொத்துகளை அளிப்பார். அந்தச் சமயத்தில் அவர் ஒரு சிறு அட்டையில் ‘Blessings’என்று எழுதிக் கையெழுத்திட்டு வழங்குவார். சிலருக்கு இவற்றோடு கூட, புத்தகம் போன்றவற்றையும் அவர் பரிசுப் பொருள்களாகக் கொடுப்பது உண்டு. இத்தகைய நாள்களைச் சாதகர்கள் மிகப்புனிதமான நாள்களாகக் கருதுவார்கள்.

மாலை வேளைகளில் டென்னிஸ் விளையாடுவது அன்னையின் வழக்கம். ஆகவே தினமும்  அவர் டென்னிஸ் அரங்குக்குச் செல்வார். தம்முடைய 80 வயது வரையில் அவர் டென்னிஸ் விளையாட்டில் கலந்துகொண்டு விளையாடினார். டென்னிஸ் ஆடிய பிறகு உடற்பயிற்சி நடைபெறும். பொது விளையாட்டு மைதானத்துக்குச் செல்வார். அங்கு எல்லாச் சாதகர்களும் உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பதைப் பார்வையிடுவார்.

சாதகர்கள் உடற்பயிற்சிகளை முடித்துக்கொண்ட பிறகு அன்னை வீற்றிருக்கும் இடத்துக்கு வரிசையாகச் செல்வார்கள். அவரிடம் ஆசிகளைப் பெற்றுத் திரும்புவார்கள்.

வாரத்தில் இரண்டு நாள்கள் புதன், சனி கிழமைகளில் மைதானத்திலேயே எல்லாருடனும் அன்னை தியானம் செய்வார். அவர் இந்த நாள்களில் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு யோகத்தைப் பற்றிய வகுப்புகளை நடத்துவார். இந்த வகுப்புகள் குழந்தைகளுக்காக நடத்தப்பட்டாலும், இவற்றில் மற்ற சாதகர்களும் கலந்துகொள்வார்கள். ஒரு விதத்தில் பார்த்தால் எல்லாரும் அன்னையின் குழந்தைகள்தாமே!

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று சாதகர்களுக்கு வேண்டிய பேப்பர், இங்க், சோப்பு, பற்பொடி போன்றவற்றை அன்னையே வழங்குவார். இத்தினங்களை ‘ப்ராஸ்பெரிட்டி (prosperity) தினங்கள்’என்று அழைப்பார்கள். தரிசனத் திருநாள்கள் வருகிற சமயங்களில், அந்த நாள்களுக்கு முன் வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளில் சாதகர்களில் பெண்களுக்குப் புடவைகளையும், ஆண்களுக்குக் கைக்குட்டைகளையும் வழங்குவார் அன்னை.

ஒவ்வொரு வருடத்திலும் நான்கு நாள்கள் விசேஷத் தரிசன நாள்களாகக் கருதப்படுகின்றன. அவை பிப்ரவரி 21ஆம் தேதி (அன்னையின் பிறந்த தினம்), ஏப்ரல் 24 (அன்னை புதுச்சேரிக்கு வந்து சேர்ந்த நாள்), ஆகஸ்ட் 15 (ஸ்ரீ அரவிந்தர் பிறந்த தினம்), நவம்பர் 24 (ஸ்ரீ அரவிந்தர் தமது யோகத்தில் சித்தி பெற்ற நாள்). ஸ்ரீ அரவிந்தர் மறைகிறவரை தரிசன காலங்களில் அன்னையும், அவரும் சேர்ந்தே தரிசனம் அளிப்பார்கள்.

நாற்பது ஆண்டுக் காலமாக யோகம் செய்து வந்த ஸ்ரீ அரவிந்தரின் அறைக்கு வெளியே ஒரு சிறிய அறை இருக்கிறது. அங்கு அவரும், அன்னையும் அமர்ந்து தரிசனம் கொடுப்பார்கள். சாதகர்கள் வரிசையாக ஸ்ரீ அரவிந்தரின் அறையைத் தரிசித்துவிட்டு அவரும், அன்னையும் அமர்ந்திருக்கும் இடத்துக்கு வருவார்கள். ஒவ்வொரு சாதகரும் அவர்கள் இருக்கும் இடத்தை நெருங்குமுன், அங்குள்ள வேறு சாதகர்களின் மூலம் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் வருகின்றவரைப் பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்துகொள்வார்கள். சாதகர்கள் அவர்களின் எதிரே வந்ததும் மண்டியிட்டோ, சாஷ்டாங்கமாகத் தரையில் பரவியோ வணங்குவார்கள். ஒவ்வொரு சாதகரின் தலையிலும் தம் திருக்கரத்தை வைத்து ஸ்ரீ அரவிந்தர் ஆசீர்வதிப்பார். இவை யாவும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் முடிந்துவிடும். இது ஒரு புனிதமான தருணம் ஆகும். இப்படித் தரிசனம் செய்து, ஆசீர்வாதத்தைப் பெற்ற பல சாதகர்கள் தாம் ஒரு புதிய ஜன்மத்தை எடுத்த உணர்வினைப் பெற்றிருக்கிறார்கள்.

ரமணாசிரமத்தைச் சேர்ந்த ‘மௌனி சாது’என்பவர், ஒரு சமயம் இது போன்ற தரிசனத்தில் கலந்துகொண்டார். அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் இருக்கும் இடத்துக்கு வருமுன் ஸ்ரீ அரவிந்தரின் அறையைத் தரிசித்துக்கொண்டு வர வேண்டும். அந்த நியதிப்படி அந்த அறையைத் தரிசிப்பதற்காக அங்கே கால் எடுத்து வைத்தவுடன், தம் மனத்தில் இருந்த எண்ணங்கள் யாவும் ஒடுங்க, மனம் ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்துவிட்டதாகக் கூறினார் அவர். ‘பேச வேண்டும்’என்று முயன்றும்கூட, அவரால் பேச முடியாதபடி அந்த அமைதி அவரை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.

ஒரு சமயம் ஓர் அமெரிக்க நாட்டுக்காரர் ஸ்ரீ அரவிந்தரைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டு எழுதியிருந்தார். ‘தரிசன நாள் ஒன்றில் ஆசிரமத்துக்கு வருமாறும், சாதகர்கள் ஸ்ரீ அரவிந்தரைத் தரிசிக்கும் சமயத்தில் தரிசிக்கலாம்’என்றும் அவருக்குப் பதில் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் தரிசன தினம் ஒன்றில் ஆசிரமத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர் மற்ற சாதகர்களோடு ஸ்ரீ அரவிந்தரைத் தரிசிக்கச் செல்லும் வரிசையில் நின்றுகொண்டிருந்தார். ‘இப்படித்தான் ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க வேண்டும் என்றால், நான் முழுமையாக ஒரு நிமிடம்கூட அவரைக் காண முடியாது’என்று தம் பக்கத்தில் நின்ற சாதகரிடம் குறைப்பட்டுக்கொண்டார் அவர். மேலும் அவர், ‘நான் ஏறக்குறைய 12,000 மைல் தூரத்திலிருந்து வந்திருக்கிறேன். ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க எனக்குப் போதிய அவகாசத்தை ஏற்பாடு செய்து கொடுக்கக்கூடாதா?’என்றும் தம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திப் பொருமினார்.

சிறிது நேரத்தில் அவர் ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்துவிட்டுக் கீழே இறங்கி வந்தார். அப்போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த அந்த சாதகர், ‘நீங்கள் ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்த சமயத்தில், உங்களுக்குப் போதிய அவகாசம் தரப்படவில்லை என்று நினைக்கும்படியாக இருந்ததா?’என்று கேட்டார்.

அமைதியிலும், ஆனந்தப்பெருக்கிலும் திளைத்துக்கொண்டிருந்த அவரால் பேசக்கூட முடியவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு, ‘எனக்குக் கிடைத்த அந்த ஒரு நிமிடச் சந்திப்பைக்கூட என்னால் சமாளிக்க முடியவில்லை. அது எனக்கு மிகஅதிகம்’என்று பதிலிறுத்தார் அவர்.

ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மீகச் சக்தி எத்தனை மகத்தானது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஸ்ரீ அரவிந்தர் மறைந்த பிறகு அன்னை மட்டும் எல்லாச் சாதகர்களுக்கும் தரிசன நாள்களில் ஆசிகளை வழங்குவார். முன்பு கூறிய நான்கு நாள்களைத் தவிர ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்றும் அன்னை தரிசனம் கொடுப்பார். அதோடு தீபாவளி, நவராத்திரி நாள்களில் அவர் தரிசனம் அளிப்பார். மேலும் ஸ்ரீ அரவிந்தர் மறைந்த தினமாகிய டிசம்பர் 5ஆம் தேதி அன்றும், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட டிசம்பர் 9ஆம் தேதியன்றும் அன்னை தரிசனம் வழங்குவார். இயேசு கிறிஸ்து அவதரித்த தினமாகிய டிசம்பர் 25ஆம் தேதியன்றும் அவர் தரிசனம் கொடுப்பது வழக்கம். அன்று அவர் குழந்தைகளுக்குப் பல விதமான பரிசுப்பொருள்களையும், பெரியவர்களுக்குக் கேக்குகளையும் வழங்குவார்.

புத்தாண்டு தினமாகிய ஜனவரி முதல் தேதி, ஆசிரமத்தில் மிக விசேஷமான நாளாகும். அன்று அன்னை சாதகர்களுக்கும், மற்ற பக்தர்களுக்கும் காலண்டர்களை வழங்குவார். அந்த நாளை ‘ப்ராஸ்பெரிட்டி நாள்’(Prosperity day) என்று அழைப்பார்கள். அந்தக் காலண்டர்களில் அன்னையின் படம் அச்சிடப்பட்டிருக்கும். அந்த ஆண்டுக்கு ஏற்ப, ஒரு செய்தியும் அதில் அச்சிடப்பட்டிருக்கும். 1962ஆம் ஆண்டு வரை அன்னையே நிகழ்ச்சிகளில் எல்லாம் நேரிடையாகக் கலந்துகொண்டார். 1962ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை இந்த நிகழ்ச்சிகளையும், இதர முக்கியமான விவகாரங்களையும் தம்முடைய அறையில் இருந்தே அவர் கவனித்து வந்தார். 1973ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 17ஆம் தேதி அன்னை மகாசமாதி அடைந்தார்.

*****



book | by Dr. Radut