Skip to Content

2. ஸ்ரீ அரவிந்தர் கேட்ட குரல்

அது 1908ஆம் ஆண்டு, மே மாதம். வெள்ளையர் ஆட்சியில் பாழ்பட்டு நின்ற பாரத தேச மக்களை, சுதந்திர வேட்கை கொண்ட எரிமலைகளாக வெடிக்க வைப்பதற்கு ஸ்ரீ அரவிந்தர் தம் பேச்சையும், எழுத்தையும் சக்தி மிக்க ஆயுதங்களாக ஏவிவிட்டுக்கொண்டிருந்தார். வெள்ளை அரசாங்கம் ஸ்ரீ அரவிந்தரின் அரசியல் எழுச்சியைக் கண்டு வெலவெத்து நின்றது. ‘அவரை வெளியே விட்டு வைப்பது நமது ஆட்சிக்கு ஆபத்து’என்று நினைத்த கும்பினித் துரைத்தனம், ஸ்ரீ அரவிந்தரை ஒழித்துக்கட்டத் திட்டமிட்டது. அச்சமயத்தில் சில தீவிரவாதிகள் வெள்ளையர் சிலரை வெடிகுண்டு வீசிக் கொன்று தீர்த்தார்கள். அந்தக் குண்டு வீச்சு நிகழ்ச்சியிலோ, அதை நிகழ்த்தியவர்களிடமோ ஸ்ரீ அரவிந்தருக்கு எந்த விதமான தொடர்பும் கிடையாது. ஆனால் அப்படியொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த வெள்ளையர் அரசு, ‘ஸ்ரீ அரவிந்தர்தாம் அந்தக் குண்டு வீச்சுக்கும், அதிலேற்பட்ட உயிர்ச் சேதத்திற்கும் காரணம்’என ஒரு பொய் வழக்கைப் போட்டு, அவரைச் சிறையிலடைத்து வைத்தது. ஆனால் அவ்வழக்கை விசாரணை செய்த வெள்ளை நீதிபதி, ‘ஸ்ரீ அரவிந்தர் குற்றவாளி அல்லர்’ என்று தீர்ப்பளித்து, அவரை விடுதலை செய்தார். ஸ்ரீ அரவிந்தர் சிறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய மனிதராக வெளிவந்தார். வந்ததும் அவர் நிகழ்த்திய ‘உத்தர்பாரா சொற்பொழிவு’உலகச் சமய இலக்கியங்களில் முதன்மை பெற்று விளங்குகிறது. அதிலிருந்து சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன.

‘நான் சிறைக்குச் சென்றது தண்டனை அனுபவிப்பதற்காக அன்று. எனக்குத் தேவையான தனிமையைக் கொடுத்து, போதிய பயிற்சி அளிக்கப்படவே நான் இறைவனால் சிறைக்கு அனுப்பப்பட்டேன். அவனது திருவுள்ளம் தேவைப்படுகிற அளவுக்கு மேல் ஒரு நிமிடம்கூட என்னை யாரும் சிறையில் அடைத்து வைக்க முடியாது. நான் பேச வேண்டிய சொல் ஒன்று உண்டு; செய்ய வேண்டிய பணி ஒன்று உண்டு; இவை இரண்டும் இறைவனால் கொடுக்கப்பட்டவை. நான் அந்தச் சொல்லைப் பேசி முடிக்கும் வரை, அந்தப் பணியைச் செய்து முடிக்கும் வரை எந்த மனித சக்தியும் என்னை ஒடுக்க முடியாது.

என்னைச் சிறையில் அடைத்தபோது, எனக்கு இறைவனிடத்தில் இருந்த நம்பிக்கை குறைந்தது. ‘பிரபோ! எனக்கு ஏன் இந்த இன்னல் வர வேண்டும்? என் தாய்நாட்டுக்கு நான் செய்ய வேண்டிய தொண்டு ஒன்று உண்டு என்று நம்பி, அதைச் செய்துகொண்டிருந்தேன். அது பூர்த்தியாகும் வரையில் உன் அருளால் எந்த ஓர் இடையூறும் ஏற்படாது என்றன்றோ நம்பினேன்! என் நம்பிக்கையைக் குலைத்து, என்னை ஏன் சிறையில் கொண்டு வந்து தள்ளினாய்? என் மீது சாட்டப்பட்ட குற்றமும் நியாயமோ? எங்கே உன் பாதுகாப்பு?’என்று கதறினேன். அப்போது, ‘பொறு! உண்மையை அறிவாய்’என்ற வாக்கு என் மனதில் எழுந்தது.

செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு ஆரம்பமாயிற்று. நான் நீதிபதியின் எதிரே நிறுத்தப்பட்டேன். அப்பொழுது என்னுள் முன் பேசிய குரல் மீண்டும் ஒலித்தது, ‘உன்னைச் சிறையில் தள்ளியபொழுது உன் உள்ளம் தயர்ந்தது அன்றோ! ‘எங்கே உன் பாதுகாப்பு?’என்று முறையிட்டாயன்றோ! நீதிபதியையும், உனக்கு எதிராக வாதாட வந்திருக்கும் சர்க்கார் தரப்பு வக்கீலையும் பார்!’என்று.

நான் அவர்களைப் பார்த்தேன். உயர்ந்த ஆசனத்தில் வீற்றிருந்தவர் நீதிபதி அல்லர்; ஸ்ரீ நாராயணனே. அருகில் அமர்ந்தவர் சர்க்கார் தரப்பு வக்கீல் அல்லர்; என் நண்பனும், காதலனுமான ஸ்ரீ கிருஷ்ணனே! இத்திவ்ய தரிசனம் நிகழ்ந்தபோது ஈஸ்வரனே இவ்வாறு பேசலானான்: ‘இனி நீ பயப்பட வேண்டாம். நான் எல்லா மக்களின் இருதயத்திலும் இருக்கிறேன். அவர்களுடைய செயல்களும், அவர்கள் பேசுகின்ற சொற்களும் எனக்குக் கட்டுப்பட்டவை. நான் உன்னைக் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த வழக்கில் உனக்கு எந்தவிதமான பொறுப்பும் இல்லை. துன்புறுத்துவதற்காக நான் உன்னை இங்கே கொண்டு வரவில்லை. நீ இங்கு கொண்டுவரப்பட்டதற்கு வேறொரு நோக்கம் இருக்கிறது. இந்த வழக்கு என்னுடைய காரியத்தைச் செய்வதற்கு ஓர் உபாயமே அன்றி, வேறொன்றும் இல்லை.

உனக்குச் சிலவற்றைத் தெளிவாகக் காட்டியுள்ளேன். நீ தெளிந்தது ஹிந்து மதத்தின் உண்மையே ஆகும். இந்த ஹிந்து மதந்தான் இப்பொழுது முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நான் சங்கற்பித்திருக்கிறேன். இந்த மதத்தைத்தான் ரிஷிகள், பக்தர்கள், அவதாரப் புருஷர்கள் மூலமாக நான் செப்பனிட்டு வளர்த்துள்ளேன். உலகெங்கும் விரிந்து பரவும் அளவில் என்னுடைய பணியைச் செய்கின்ற தருணம் இப்பொழுதுதான் ஏற்பட்டுள்ளது. என்னுடைய சொல்லைப் பரப்புவதற்காகவே பரத கண்டம் எழுச்சி பெறுகின்றது. அந்தச் சொல் ‘சனாதன தர்மம்’என்பதாகும். இந்தப் புராதனமான மதத்தை நீ முன்பு அறிந்திருக்கவில்லை. இதனை நீ அறியுமாறு இப்பொழுது நான் வெளிப்படுத்தியுள்ளேன். நீ சனாதன தர்மத்தின் உண்மையை ஏற்றுக் கொள்கின்ற வகையில் சான்றுகளை உள்ளும் புறமும் காட்டியுள்ளேன். நீ சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே போனதும் உன் நாட்டு மக்களிடம் இந்தச் சொல்லையே பேசு. சனாதன தர்மத்திற்காகத்தான் அவர்கள் எழுச்சி பெறுகிறார்கள். அவர்களுடைய எழுச்சி உலகத்திற்காக அல்லாமல், அவர்களுக்காக ஏற்படுவதன்று. உலகத்திற்கு சேவை செய்வதற்காக அவர்களுக்குச் சுதந்திரம் அளிக்கிறேன்.

இந்திய நாடு உயர்ந்து விளங்க வேண்டும் என்பதற்கு, ‘சனாதன தர்மம் உயர்ந்து விளங்க வேண்டும்’என்பதே பொருள். இந்திய நாடு எங்கும் வியாபித்து வளர வேண்டும் என்று சொன்னால், அது சனாதன தர்மம் உலகெங்கும் வியாபித்து வளர வேண்டும் என்பதையே குறிக்கும். ‘சனாதன தர்மத்திற்காகவும், சனாதன தர்மத்தினாலும் தான் இந்தியாவே இருக்கிறது’ என்று கூறவேண்டும். இந்தத் தர்மத்தைப் பெருக்குவது நாட்டைப் பெருக்குவது ஆகும்.

நான் எங்கும் இருக்கிறேன். எல்லா மனிதர்களிடத்தும் இருக்கிறேன். எல்லாப் பொருள்களிடத்தும் இருக்கிறேன் என்பதை உனக்குக் காட்டியுள்ளேன். இப்பொழுது தோன்றியுள்ள விடுதலை இயக்கத்திலும் நான் இருக்கிறேன். நாட்டுக்காகப் பாடுபடுகிறவர்களிடத்திலும், அவர்களை எதிர்க்கின்றவர்களிடத்திலும் நான் இருக்கிறேன். எல்லாரிடத்திலும் நான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். யார், எதை நினைத்தாலும், செய்தாலும் என்னுடைய குறிக்கோளை நிறைவேற்றுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது.

பகைவர்களாகக் கருதப்படுவோரும் என்னுடைய பணிகளையே செய்கிறார்கள். அவர்கள் எனக்கு எதிரிகள் அல்லர். அவர்களும் என்னுடைய கருவிகளே ஆவர். எல்லாச் செயல்களிலும் மனிதர்கள் முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். இது அவர்களுக்குப் புரியாமலே நடக்கின்ற நிகழ்ச்சி. அவர்கள் நினைப்பது ஒன்று; ஆனால் நடப்பதோ வேறொன்று. எந்தச் சூழ்நிலையிலும் என்னுடைய சக்தியே வெளிப்பட்டு, அவர்களிடம் புகுந்து வேலை செய்கிறது. நான் நெடுங்காலமாக அவர்களிடம் இந்த எழுச்சியைத் தயார் செய்துகொண்டு இருக்கிறேன். இந்த எழுச்சி வெளிப்படும் காலம் இப்பொழுதுதான் வந்து இருக்கிறது. நானே வழிகாட்டியாக இருந்து இந்த எழுச்சியைப் பூர்த்தி செய்வேன்’.

இவ்வாறு இறைவன் என்னிடம் சொன்னதை, உங்களிடம் சொல்லும்படி என்னைப் பணித்தான். அவன் எதைப் பேசுமாறு என்னைப் பணித்தானோ, அதை உங்கள் முன் பேசி முடித்துவிட்டேன்.

எந்தப் பணியைச் செய்யுமாறு இறைவன் தமக்கு ஆணையிட்டானோ, அந்தப் பணியைத் தமது இறுதி நாள் வரை செய்து வந்தார் ஸ்ரீ அரவிந்தர். அதற்கு அவரது யோக சாதனையும், வேதம், உபநிஷதம், கீதை முதலிய நூல்களுக்கு அவர் எழுதிய விளக்கங்களும் தக்க சான்றுகளாகும்.

*****



book | by Dr. Radut