Skip to Content

அபரிமிதமான செல்வம்

தாழ்த்தப்பட்டவர்கள் இன்று முன்னுக்கு வர முயன்றால் அவர்கட்கு சமூகம் எல்லா வசதிகளையும் வாரி வழங்குவது இன்றைய இந்தியாவில் உள்ள புதிய நிலை. கடலோரம் வெறும் மணல் உதவாது, பயிரிட நினைக்க முடியாத நிலப்பரப்பில் ஆயிரம் ரூபாய்க்கு விற்க முடியாத நிலத்திற்கு லட்ச ரூபாய் விலை வருகிறது. அதுவே ஆரம்பம். முடிவை நினைப்பதற்கில்லை. பணத்தைப் பொறுத்தவரை சமூகம் வளர்ந்து பணம் காய்க்கும் மரமாகிவிட்டது. தனிப்பட்ட மனிதனுக்கே அத்திறன் வரும் நேரம் வந்துவிட்டது. எதற்குப் பஞ்சம் வந்தாலும், இனி பணத்திற்குப் பஞ்சமில்லை என்ற கருத்தை விளக்க இந்நூலை எழுதுகிறேன். அதை விளக்கும் வாயிலாகப் பணத்தின் ஆரம்ப வரலாறு, பணம்போல் இதற்குமுன் அபரிமிதமாகப் பெருகியவற்றின் வரலாறு, இதிலுள்ள பொருளாதாரத் தத்துவம், ஸ்ரீ அரவிந்தத்திற்கும் இக்கருத்திற்கும் உள்ள தொடர்பு ஆகியவை நூலில் இடம் பெறுகின்றன.

மனித மனம் திறம் வாய்ந்தது, அவனுள் ஆயிரம் திறமைகள் மறைந்துள்ளன. அவன் அவற்றை அறிய வேண்டும். தன் திறமைகளை வெளிக்கொணர அறிவுடை முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் அளவுகடந்த செல்வத்தை அவனால் அபரிமிதமாக உற்பத்தி செய்ய முடியும். இது ஓர் உண்மை. அறிவுக்குப் புலப்படும். அப்படி விளக்குவது நோக்கம். ஆர்வமுடையவரை அது செயல்படத் தூண்டும். இந்நூலின் சாராம்சத்தை சுருக்கமாகக் கூறினால்,

 • உடலால் ஜடமாக வாழ்ந்த மனிதன் பல வகைகளில் மனத்தால் இன்று வாழ்கிறான்.
 • இந்த ஆயிரம் ஆண்டுகளில் வந்த மாறுதலின் உள்ளுறைசிறப்பை நுணுக்கமாக அறிய முனைந்தால் அம்முன்னேற்றத்தை ஆயிரம் மடங்கு, லட்சம் மடங்கு என்று கூறமுடியாது. அடுத்த கொல்லையில் உள்ளவனை குரல் கொடுத்து அழைத்த மனிதன் இன்று வேறு நாட்டிற்குப் போனில் பேசுவதை எப்படி அளவிட முடியும்? அளவில்லாமல் பெருகியுள்ளது.
 • சமூகம், ஸ்தாபனங்கள், மனத்திண்மை, அறிவு, சமூகத்தின் திறன், சொந்த முயற்சி ஆகியவை அதேபோல் ஏராளமாகப் பெருகியுள்ளன.
 • இவை ஏராளம் என்றாலும், என்ன செய்ய முடியும் என்பதில் இவை கடுகளவேயாகும். சமூகம் மனிதனுக்கு அளிக்கும் வசதிகளை இதுவரை எந்த மனிதனும் முழுமையாகப் பெற்றதில்லை.
 • லட்சம் மடங்கு முன்னேற வாய்ப்பிருப்பதால், முழு முயற்சி செய்பவர் எவரும் 100 மடங்கு வெற்றி பெறலாம்.
 • இந்நூல் பணத்தைப் பற்றியது. ஆனால் இத்தத்துவம் பணத்திற்குப் பொருந்துவதுபோல், திறமை, வசதி, சந்தோஷம், சாதனை ஆகியவற்றிற்கும் பொருந்தும்.
 • இந்நூல் இனி கூறப்போகும் வழிமுறைகளை சுருக்கி 5 அல்லது 6 அம்சங்களாகக் கூறலாம்.
 1. பணம் எப்படி உற்பத்தியாயிற்று, பணம் என்றால் என்ன, சமூகத்திற்கு இதுவரை பணத்தால் ஏற்பட்ட சௌகரியங்கள் எவை, பணத்தின் திறன் என்ன, இதுவரை பணம் எப்படிப் பெருகிவந்தது என்பவற்றை விவரமாக அறிதல் அவசியம். இது ஞானம்.
 2. ஞானத்தைப் பொருளாக மாற்ற வேண்டும்.
 3. அப்பொருளை அன்னையின் சக்தியால் நிரப்ப வேண்டும்.
 4. Token act இவை வெளிப்படும்படியான செயல் (project) ஒன்றைச் செய்வது அவசியம்.
 5. பணம் அபரிமிதமாகப் பெருகும் என்ற உண்மையை இத்திட்டத்தில் அனுபவமாகக் காண வேண்டும்.
 6. சொந்தமாக ஒரு நல்ல காரியத்தைச் செய்து முழுப் பலன் பெறவேண்டும்.

பணம்

ஆதிநாளில் வேட்டையாடியும், காய் கனியைத் தின்றும் மனிதன் வாழ்ந்தான். அப்பொழுது அவன் தன்னை மட்டுமே அறிவான், தனக்காகச் சுயநலமாக வாழ்ந்தான். ஓர் ஊரின் பகுதியாக அப்பொழுது அவன் வாழவில்லை. தனித்து வாழ்ந்தான். கூட்டமாக வாழவில்லை. பசி, தாகம், தூக்கமே அவனுக்குரிய உணர்வுகள். எண்ணம் என்பது அப்பொழுது தேவைப்படவில்லை. எண்ணமோ, மனமோ அப்பொழுது உற்பத்தியாகவில்லை. ஜடமான மனிதன், உடலுக்குக் கட்டுப்பட்டு, சூழலுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தான். ஊர் என்பது அதுவரை ஏற்படவில்லை. கூட்டமாக சில சமயங்களில் வாழ்ந்தான்.

நாகரீகத்தின் வளர்ச்சியால் விவசாயம் ஏற்பட்டது. ஓர் ஊரில் தங்கினான். நாடோடி வாழ்க்கையை விட்டொழித்தான். ஊர் என்பது வெறும் கூட்டமன்று. சமூகம் எனப்படும். விவசாயம் என்பது அறிவால் பெறப்பட்டது. அதை ஊரார் அனைவரும் சேர்ந்து செய்தனர். தனி மனிதனுக்குக் குடும்பம் ஏற்பட்டது. தன் பசிக்காக அலைந்த மனிதன் தன் குடும்பத்திற்காக வேலை செய்தான். அது அவனுக்குப் புரியவில்லை என்றாலும், செய்தான். சுயநலம் விரிவடைந்து பரநலமாயிற்று - குடும்பத்தின் பரநலம். விவசாயம் என்பது தொழில் அறிவால் செய்வது. குடும்பத்திற்குத் தன் கடமை மனதால் அறியப்படுவது. மனம் உற்பத்தியாயிற்று. தன் தேவைக்கு மேல் சில சமயங்களில் உற்பத்தி செய்தால், அவனுக்கு அது பயன்படாது. அழியும்.

பண்டமாற்று வந்தது. இதன் மூலம் மனிதன் சமூகத்தை அறியும் சந்தர்ப்பம் எழுந்தது. இனி உபரி அழிய வேண்டாம். ஒருவருக்குப் பயன்படாத உபரி அடுத்தவர்க்குப் பயன்பட பண்டமாற்று உதவியது. உபரியான சக்தி வேறு வகையாகப் பயன்பட, வேறு பொருளாகப் பயன்பட பண்டமாற்று உதவியது. மனித வாழ்வில் இது முக்கியமான கட்டம். தனித்த மனிதனை ஊருடன் இணைக்க பண்டமாற்று உதவியது. சமூகம் உருவாக ஆரம்பித்தது. இதன் பயனாக,

 • ஒருவருக்கு அடுத்தவருடைய உபரி சக்தி, உபரி உற்பத்தி பயன்பட்டது.
 • தன் உபரி சக்திக்கு உபயோகம் வந்தது.
 • சமூகத்தில் எவரும் பிறர் உபரியைத் தேவைப்பட்டால் பயன்படுத்த முடியும் என்ற நிலை எழுந்தது.
 • மனிதன் இனி தனியனில்லை. சமூகம் உருவாக ஆரம்பித்துவிட்டது. இது ஒரு கூட்டம். கூட்டத்தில் எவருடைய உபரியும் பிறர்க்குப் பயன்படும். அதன் வழி ஒவ்வொருவரும் அடுத்தவருடன் ஒத்துழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
 • ஒருவன் ஊரானான். ஒவ்வொருவருடைய உற்பத்தித்திறன் வளர வழி ஏற்பட்டது. ஊருக்கு அடங்கி, ஒத்துழைக்கும் நிர்ப்பந்தம் எழுந்தது.

பணம் என்பது ஒரு ஸ்தாபனம் :

நாட்டில் கல்வி என்பது ஒரு ஸ்தாபனம். அவரவர் குழந்தைகட்குப் படிப்பு போதிப்பது முதல் நிலை. பள்ளிக்கூடம் என்ற ஸ்தாபனம் ஏற்பட்டு எவரும் கல்வி பெறலாம் என்பது அடுத்த நிலை. தனி மனிதனுடைய பொறுப்பை ஊரும் சமூகமும் ஏற்கும் நிலையிது.

ஏற்பது மட்டுமன்று, அப்பொறுப்பை நடைமுறையில் நிறைவேற்ற அதற்கென கல்வி என்ற ஸ்தாபனம் ஏற்பட்டுள்ளது. நாமே நமக்கு வேண்டிய பொருள்களை உற்பத்தி செய்த நாள் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்தது. இன்று அதை நம்மால் நினைத்தும் பார்க்க முடியாது. நாம் துணி உடுக்கிறோம், அரிசி, பருப்பு, பழம் சாப்பிடுகிறோம். இவற்றை எல்லாம் நாமே உற்பத்தி செய்ய முடியுமா? மேலும் T.V., பேப்பர், மருந்து எல்லாம் நம்மால் எப்படி உற்பத்தி செய்ய முடியும்? இதற்கு முந்தைய நிலை கிட்டத்தட்ட விலங்கு நிலை. விவசாயம் ஏற்பட்டது, உணவுப்பொருள் அனைவருக்கும் உற்பத்தியாயிற்று. வியாபாரம் ஏற்பட்டது. அது அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது. (Industry) தொழில்கள் ஏற்பட்டன. புதிய பொருள்கள் உற்பத்தியாயின. இவைகள் ஸ்தாபனங்கள். இந்த ஸ்தாபனங்கள் நாகரீகத்தின் சின்னம்.

- விவசாயம் உலகில் முதல் ஏற்பட்ட ஸ்தாபனம்.

- இராணுவம் முக்கிய ஸ்தாபனம்.

- விவசாயம் உற்பத்தி ஸ்தாபனம், இராணுவம் பாதுகாப்பு ஸ்தாபனம்.

- வியாபாரம் விநியோகம் செய்யும் ஸ்தாபனம்.

- கல்வி அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஸ்தாபனம்.

அப்படியானால் பணம் என்பது என்ன? விவசாயம், வியாபாரம், இராணுவம், கல்வி ஆகிய ஸ்தாபனங்கள் ஏற்பட அவசியமானது பணம். பணம் இன்றி விவசாயமோ, தொழிலோ ஏற்பட்டிருக்க முடியாது. கல்வி அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஸ்தாபனம் என்பது போல்,

பணம் ஸ்தாபனங்களை உருவாக்கும் அடிப்படை ஸ்தாபனம்.

சமூகம் பக்குவப்பட்டு அறிவால் வளராவிட்டால், அங்குப் பணம் உற்பத்தியாக முடியாது. பணத்தை ஒரு சமூகம் உற்பத்தி செய்ய அதற்கு உற்பத்தித் திறன், பல்வேறு உற்பத்திகளையும் இணைக்கும் திறன், மனவளர்ச்சி வேண்டும். ஒரு சமூகத்தில் பணம் ஏற்பட்டால் அதன் நாகரீக நிலைமையை பணம் எடுத்துக் காட்டும். ஊர் திறமையாகும், வலுவாகும். பணமில்லாமல் இராணுவமில்லை. பணம் நாட்டை விரிவுபடுத்தப் பயன்பட்டது. இராணுவம் அடுத்த நாட்டை வெல்லப் பயன்பட்டதுபோல் பணம் பிறநாட்டு வாணிகத்தை வெல்லப் பயன்பட்டது. பணம் சமூகத்தின் கருவி. பண்டமாற்று வந்தபின் ஒருவருடைய உபரி நெல் அடுத்தவர்க்குப் பயன்பட்டது. அதனால் உபரி நெல்லுள்ளவர் பிறர் உற்பத்தி செய்யும் பருப்பு, பழம் போன்ற பொருள்களை பண்டமாற்றில் பெறலாம். பண்டமாற்றுக்கு அளவுண்டு. பொருள்கள் அழியாமலிருக்கும்வரை பண்டமாற்று பயன்படும். பழம் சில நாட்களுக்குப் பின் அழுகும். நெல் சில மாதங்களுக்குப் பின் பயன்படாது. பணம் அழுகாத, அழுகமுடியாத பண்டம். பணத்தை நெடுநாள் வைத்திருக்கலாம். அதனால் காலத்தை வெல்லும் திறன் பணத்திற்கு ஏற்பட்டது. இளம் வயதில் சேர்த்த பணம், வயோதிகத்தில் பயன்படும். பணம் நம்மைக் காப்பாற்றும் வாரிசு. காலத்தை வெல்வதுபோல், பணம் வயோதிகத்தை வெல்லும். நாளாவட்டத்தில் பணம் மனிதனுடைய குறைகளை, பலஹீனங்களை வெல்லும் கருவியாக மாறிவிட்டது. மனிதன் தன் ஆட்சியை வளர்க்கும் கருவியாகப் பணம் மாறிவிட்டது. பணத்தால் எதையும் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது. மனிதன் உடன் பிறந்தவன், பெற்றெடுத்தவன், உடன் உறைபவன் என்ற உறவுகளோடு வாழ்ந்தவன். உற்பத்தியால் மனிதனுக்குப் பணம் உறவை ஏற்படுத்தியது. பணம் மனித உறவைப் பல மடங்கு உயர்த்திப் பக்குவப்படுத்தியது. ஒருவருடைய பயிர் ஒரு வருஷம் அழிந்து போனால், அடுத்த ஆண்டுவரை அவன் குடும்பம் உயிரோடு இருக்காது. பணம் வந்தபின் சமூகம் தனிக் குடும்பம் அழிவதைத் தடுக்க வழியேற்பட்டது. பணம் நாணயமாக ஆரம்பித்தது. இது சமூகம் முதிர்ச்சியடைந்ததின் அடையாளம். காலத்தை வென்றதின் கட்டம். உபரியைப் பயன்படுத்தும் முறை. தனிமனிதனுக்குச் சமூகம் தரும் ஆதரவு. நமக்குப் பணம் பயன்படும் கருவி. ஆனால் பணம் என்பது,

- சமூகம் வளர உதவும் அமைப்பு, ஸ்தாபனம்.

- இராணுவம் எல்லையை விரிவுபடுத்துவதுபோல், பணம் நாட்டின் வாணிபத்தை விரிவுபடுத்துகிறது.

- பண்டமாற்று பண்டத்தால் செய்ததை, பணம் அடுத்த கட்டத்தில் நிறைவேற்றியது.

- காலத்தை வெல்லும் கருவி பணம்.

- குறைகளைக் குறைத்து மனிதனுக்கு நிறைவுகளை நிரப்பும் கருவி பணம்.

- உடலால் வாழ்ந்த மனிதனை உறவாலும், உணர்வாலும், ஊருடன் இணைத்தது பணம்.

- மனிதன் அழிவதை மற்றவர்கள் தடுக்கும் கருவியாயிற்று பணம்.

- நாணயம் மனிதனுக்கு நாணயத்தை ஏற்படுத்தியது.

அடிப்படையில் பணம் இன்றுவரை இப்படியேயிருக்கிறது. புதிய அம்சங்கள் அதிகமாக ஏற்படவில்லை. ஆனால் நடைமுறை வழக்கங்கள் (usage) ஆயிரமாயிரம் உற்பத்தியாகிவிட்டன.

கடன், பாங்க்

ஒருவர் அழகை இன்று அடுத்தவருக்குத் தரமுடியாது. ஒருவர் புத்திசாலித்தனத்தையும் அடுத்தவருக்கு தர இயலாது. அதுபோல் பிறருக்குத் தரமுடியாதவை பல. கடன் கொடுப்பது என்ற பழக்கம் ஏற்படும்வரை ஒருவரால் அடுத்தவருக்குப் பலனில்லை. கல்வி போதிப்பதால் ஒருவர் புத்திசாலித்தனம் ஓரளவுக்கு அடுத்தவருக்குப் போகும். டாக்டர் சிகிச்சை செய்வதால் டாக்டரால் நமக்கு ஆரோக்கியம் தரமுடிகிறது. ஆனால் ஒருவர் உடல் நலத்தை அடுத்தவருக்கு தரமுடியாது. கடன் தருவது என்ற பழக்கம் நெடுநாள் முன் ஏற்பட்டது.

கடன் உலகை நாகரீக உலகமாக்கியது.

ஒருவர் வாழ்வில் அடுத்தவர் பங்கு கொள்ள வழியாக அமைந்தது கடன். கடன் நாகரீகத்தின் சின்னம். ஒத்துழைப்புக்கு உருவம் தருவது கடன். கடன் தரும் பழக்கம் ஏற்பட்டபின் உலகம் நாகரீகத்தில் ஒரு படி முன்னேறியது. இன்று கடன் தரும் பழக்கம் வேண்டாம் என உலகம் முடிவு செய்தால், எந்த அளவுக்கு வாழ்வு சுருங்கும் என விளங்கும். கடைத்தெருவில் பாதி கடைகளை மூடிவிடுவார்கள். ரோட்டில், லாரி, பஸ், கார் 100 போகுமிடத்தில் ஒன்று, இரண்டுதான் போகும். 1500 A.D.யில் இருந்ததுபோல் வாழ்வு மாறும்.

 • பணம் வந்தபிறகு வாழ்வுக்கு உயிர் வந்தது என்றால்,
 • கடன் வந்தபிறகு பணத்திற்கு உயிர் வந்தது என்று கூறலாம்.
 • கடனில்லாமல் பணத்திற்கு மகத்துவமில்லை.
 • கடன், அடமானம், போக்கியம், தவணை விற்பனை ஆகியவை பணப்புழக்கத்தை பல மடங்கு இன்று பெருக்கி விட்டன.

10 லட்சம் போட்டு வீடு வாங்கினால் குடியிருக்கிறோம். 10 லட்சம் வீடாயிற்று. வீட்டுக்குப் பயன் உண்டு, மதிப்புண்டு. அடமானக் கடன் என்பது முதலிலில்லை. இன்றுண்டு. 10 லட்ச ரூபாயை ஒரு வீட்டில் போட்ட பின், அந்த வீட்டை அடமானம் வைத்து 6 லட்சம் வாங்க முடியும். 6 லட்சத்திற்கு வேறு வீடு வாங்கலாம். அப்படி அனைவரும் செய்வதில்லை. அதை அடமானம் வைத்து 4 லட்சம் கடன் வாங்கலாம். 4 லட்சத்திற்கு மற்றொரு வீடு வாங்கலாம். அதன் மீது 2 லட்சம் கடன் வாங்கி 2 லட்சத்திற்கு வீடு வாங்கலாம். எவரும் இப்படியெல்லாம் செய்வதில்லை. வியாபாரத்தில் ஓரளவு செய்வதுண்டு. 10 லட்சம் பணம் மேலும் 8, 6, 4, 2 என 20 லட்சம் பெறுமான வீடுகளை வாங்க உதவும் என்பது இந்த விளக்கம். ஒரு பாங்கில் ஒருவர் 1 கோடி டெபாசிட் போட்டால் அந்த பேங்க் 90 லட்சத்தை அடுத்த பேங்கிலும், அந்த இரண்டாம் பாங்க் 81 லட்சத்தை வேறொரு பாங்கிலுமாக, 90% அடுத்த அடுத்த பாங்கிற்குப் போனால் முடிவில் 1 கோடி டெப்பாசிட் 9 கோடி ரூபாய் டெப்பாசிட்டாக மாறுவதாக பாங்க் அனுபவம்.

1 கோடி பணம் பாங்க்கால் 9 கோடியாக மாறுகிறது. கடன் என்ற முறை 1 கோடி பணத்திற்கு 9 கோடி புழக்கம் தருகிறது.

பணம் வேறு, பணப்புழக்கம் வேறு. கைமாறினால் பணம் பிரள்கிறது. பணம் பிரண்டால் பணத்திற்கு உபயோகம் அதிகம். 1 லட்ச ரூபாய் சரக்கு 1 வருஷத்தில் விற்றால் 10,000 ரூபாய் இலாபம். ஒரு மாதத்தில் விற்றால் வருஷத்தில் 1,20,000 ரூபாய் இலாபம். பணம் வேகமாக நடமாடினால் பெருகும் என்பது வியாபாரம் அறிந்த செய்தி. நாள்கணக்கில் ஒரு பாங்க்கிருந்து அடுத்த ஊர் பாங்க்கிற்குப் போன பணம் இப்பொழுது கம்ப்யூட்டரில் நிமிஷக்கணக்கில் மாறுகிறது. பணம் பெட்டியிலிருப்பதை விட கைமாறினால், நடமாடினால், புழக்கம் அதிகமாகும், பணத்தைப் பலரும் பயன்படுத்துவார்கள்.

 • வேகம் அதிகரித்தால் பணம் பெருகும்.
 • அதிகமாகக் கைமாறினால் பணம் பெருகும்.
 • நாட்டில் எந்த முன்னேற்றம் வந்தாலும் அதன் மூலம் பணம் பெருகும்.

ஏற்றம் போட்டு தண்ணீர் இறைத்த நிலத்தில் ரூ.1000 முதலீடு செய்தால் 200 ரூபாய் பலன் தருகிறது. ஏற்றம் மோட்டாரானால் அதே ரூ.1000க்கு அதே நிலம் 400 ரூபாய் பலன் தரும். டெக்னாலஜி முன்னேறினால் பணம், பணம் ஈட்டும் திறனை அதிமாகப் பெறும். 5 வகுப்பு படித்தவனிடம் இலட்ச ரூபாய் முதல் கொடுத்தால் அவன் ரூ.5000 இலாபம் சம்பாதித்தால், அதிகம் படித்தவன், அதே இலட்ச ரூபாய்க்கு ரூ.10,000 இலாபம் சம்பாதிப்பான். நாட்டில் படிப்பு வளர்ந்தாலும், நகர வாழ்வு அதிகப்பட்டாலும், நாகரீகம் உயர்ந்தாலும், டெக்னாலஜி பெருகினாலும், எந்த முன்னேற்றம் ஏற்பட்டாலும், ஓட்டுரிமை வந்தாலும்,

பணத்திற்கு பணம் சம்பாதிக்கும் திறன் வளரும்.

பணம் பெருக நாம் நமக்குள்ள அத்தனை திறமைகளையும் அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும். 1969இல் பாங்க் தேசீய உடமையாக்கப்பட்டபொழுது இந்தியாவிலிருந்த அத்தனை பாங்குகளிலும் 4000 கோடி ரூபாய் டெபாசிட்டாக இருந்தது. இன்று 12 லட்சம் கோடி ரூபாய் என்ற கட்டத்தைக் கடந்துவிட்டது. இப்பணத்தை 10 மடங்காக்கும் திறன் இப்பாங்குகட்குண்டு. அதற்கு தேவையானது பணப் புழக்கம், நாணயம்.

பணமும் ஸ்தாபனமும்

நர்சரி பள்ளியும், ஆங்கில மீடியமும் வந்தபிறகு கல்விக்கு முக்கியத்துவம் வந்துவிட்டது. அடிமட்டத்திருந்து Ph.D. வரை படிப்புக்கு நாட்டில் முக்கியத்துவமும், மகத்துவமும் ஏற்பட்டுவிட்டது. நைலான், நைலக்ஸ், பாலியஸ்டர் வந்தபின் டிரஸ்ஸுக்கே மரியாதை அதிகமாகிவிட்டது. டிரஸ் என்றும் உள்ளது. நைலான் புதியதாக வந்தது. புதியதாக வந்த நைலான் மனிதன் பிறந்த நாளாக உள்ள டிரஸ்ஸுக்குப் புது மரியாதையைக் கொடுத்தது. ஆங்கில மீடியம் கல்விக்கே மதிப்பை ஏற்படுத்திவிட்டது. இது உலகிலுள்ள வாழ்வு முறைக்குரிய அம்சம். எந்த புது ஸ்தாபனம் வந்தாலும் எல்லா பழைய ஸ்தாபனங்கட்கும் மரியாதை சற்று உயரும். எந்த புதிய ஸ்தாபனம் வந்தாலும், புதிய டெக்னாலஜி வந்தாலும், எந்த மாற்றம் எங்கு வந்தாலும், பணத்திற்கு மதிப்பும், மரியாதையும் உயர்ந்துவிடும். இதுவரை பணத்தின் மதிப்பு உயர்ந்தது ஏராளம். இனி உயரப் போவதை கற்பனை செய்யமுடியாது. எதிர்காலத்தில் சமூகம் பெறப் போவதை அறிவால் ஒருவர் இன்று பெற முடியுமானால் அவர் முன்னோடி, அவர் பெறுவது அளவுக்குட்பட்டதல்ல. அபரிமிதமான செல்வம்.

பேசுவதற்கு முன் மனிதன் சைகை காட்டினான். அது அவனுடைய அன்றைய மொழி. அதனுடன் இன்று வழங்கும் மொழியை ஒப்பிட முடியுமா? அதேபோல் பணமும் வளர்ந்துள்ளதை நாம் கருதுவதில்லை. எதிர்காலத்தில் பணம் அதேபோல் அளவுகடந்து வளரும், பெருகும். 1960இல் M.A. பட்டம் பெற்று வேலையில் உள்ள பெண் தன் குழந்தைகள் கையில் காசு இருப்பதைக் கண்டு, இது என்ன அநியாயம், நான் 1945இல் வேலைக்குப் போகும்வரை நாலணா காசையும் கையால் தொட்டுப் பார்த்ததில்லை. என் குழந்தைகள் 8 அணா காசைக் கையில் வைத்திருக்கின்றன. எனக்குப் பொறுக்கவில்லை என்றார். கொடுப்பது யார், பெற்றோர்கள்தான். 1945ருந்து 1960 வரைக்கும் இந்த மாறுதல். அது போன்ற மாறுதல்கள் ஏற்பட்டபடியிருக்கின்றன. நாட்டில் பணம் பெருகியதை இவை குறிக்கின்றன. 50 ஆண்டுக்குப் பின் என்ன மாறுதலிருக்கும்? சமூகம் அம்மாறுதலையடைந்து பின்னர் தனி மனிதனுக்கு அவ்வுரிமையை கொஞ்ச நாள் கழித்துத் தரும்.

இன்று அதை நாம் பெறலாம்,

என்பது இக்கட்டுரை.

பணம் என்பது நம்பிக்கை

ரூ.100 நோட்டு வெறும் பேப்பர். இந்த பேப்பருக்கு இம்மதிப்பு எப்படி வந்தது? ரூ.1000 நோட்டு இனி செல்லாது என 40 வருஷத்திற்கு முன் ஒரு சட்டம் வந்தது. அன்று ஒரு பெட்டிக் கடைக்காரன் 1000 ரூபாய் நோட்டில் பாக்கு மடித்துக் கொடுத்தான். 40 ஆண்டுக்கு முன்னும் பம்பாய் பெட்டிக் கடையில் 1000 ரூபாய் நோட்டு புழங்கியது. கரன்சி என்பது தாள், பேப்பர். அதற்கு மதிப்பில்லை. அதில் ரிஸர்வ் பேங்க் கவர்னர் கையெழுத்துள்ளது. I Promise to pay Rs.100 to the bearer இந்த நோட்டைக் கொண்டு வருபவருக்கு ரூ.100 தர நான் வாக்களிக்கிறேன் என்று கவர்னர் கையெழுத்திட்ட பிராமிசரி நோட்டு கரன்சி. சர்க்கார் மீது நமக்கு நம்பிக்கை இருப்பதால் பேப்பர் பணத்திற்கு மதிப்பு வருகிறது. பணம் என்பது நமக்கு சர்க்கார் மீதுள்ள நம்பிக்கை. நாணயம் பவுனால், வெள்ளியால் செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது நம்பிக்கை சர்க்கார் மீதில்லை. பவுன் மீது நம்பிக்கை. பவுனுக்கு உலகெங்கும் மதிப்பிருந்தது. ஒரு ரூபாய் நாணயம் வெள்ளியாலானது. அதிலுள்ள வெள்ளி 1 ரூபாய் பெறும். மனிதன் வெள்ளியை நம்பினான், சர்க்காரையில்லை. காகித நோட்டு வெளியிடும்பொழுது ஆயிரம் கோடி நோட்டு அடிக்க, சர்க்கார் ஆயிரம் கோடி மதிப்புள்ள பவுனை ரிஸர்வ் பாங்க்கில் வைத்துவிட்டு, நோட்டை அடிப்பது வழக்கம். ஆயிரம் கோடி பவுனை வைத்துவிட்டு, 1100 கோடி ரூபாய் நோட்டு அடிக்க பார்லிமெண்ட் அனுமதிக்காது. அப்படி அடித்தால் 100 கோடி ரூபாய்க்கு மதிப்பில்லை. அதுவே inflation பணவீக்கம் என்பது. 1/11 பாகம் ரூபாய் மதிப்பு குறைந்துவிடும். 1 ரூபாய்க்கு 91 பைசா மதிப்புதான் உண்டு. பவுன் மீதிருந்த நம்பிக்கை உலக யுத்தத்திற்குப் பின் சர்க்கார் மீது வந்தது. உலகில் எல்லா சர்க்காரும் பவுனை ரிஸர்வ் பாங்க்கில் வைப்பதை (gold standard) நிறுத்திவிட்டனர். உலகம் முன்னேறியது. இது நம்பிக்கையால் வந்த முன்னேற்றம். எந்த சர்க்கார் இந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கிறார்களோ அவர்கள் கரன்சிக்கு உலகில் மதிப்புண்டு. டாலர் அந்த இடத்தைப் பெற்றுள்ளது. பார்லிமெண்ட் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எந்த அளவு சர்க்கார் தகுதி பெற்றுள்ளதோ, அந்த அளவுக்கு அந்த நாட்டு கரன்சிக்கு உலகில் இன்று மதிப்புண்டு.

 • பணம் என்பது நம்பிக்கை. நம்பிக்கையுள்ளவனுக்குப் பணம் பிரளும். இன்று புதிய கம்பனி ஆரம்பிக்கின்றார்கள். அன்று புதிய கம்பனி ஆரம்பித்தால் அதன் முதல் மீது நம்பிக்கை இருக்கும், முதலில்லாவிட்டால் ஷேர் விலை போகாது.
 • இன்று கம்ப்யூட்டர் கம்பனிகள் ஆரம்பித்தார்கள். முதலில்லாவிட்டாலும் technologyயை நம்பி கம்பனிகள் 1000 மடங்கு, 10,000 மடங்கு வளர்ந்தன.

- முதலில் சர்க்கார் மீது நம்பிக்கை

- அடுத்தாற்போல் பவுன், வெள்ளி மீது நம்பிக்கை

- அடுத்த உயர்ந்த கட்டத்தில் சர்க்கார் மீது அதிக நம்பிக்கை

- கம்பனி முதல் மீது நம்பிக்கை

- கம்பனி டெக்னாலஜி மீது நம்பிக்கை

அப்படி கம்ப்யூட்டர் கம்பனிகள் பெருகின, வளர்ந்தன. அந்த நம்பிக்கையை நல்லபடியாகப் பயன்படுத்தாவிட்டால், கம்பனிகள் சரிந்து விடுகின்றன.

 • இவையெல்லாம் செய்வது மனிதன். உலகில் மனிதன் மீது இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை. அது ஏற்பட மனிதனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கையுள்ள மனிதன் ஏராளமான பணம் உற்பத்தி செய்யமுடியும். உலகிலுள்ள பணம் முழுவதும், அவனைத் தேடிவரும். நாணயஸ்தனுக்கு அந்நிலையுண்டு. அதையும் கடந்தது அன்னை மீது நம்பிக்கை. இன்று கம்ப்யூட்டர் கம்பனிகள் (dot. com companies) சரிகின்றன. ஏனெனில் மக்கள் வைத்த நம்பிக்கைக்கு கம்பனிகள் பாத்திரமாக இல்லை. அப்படி ஒரு கம்பனியிருந்தால் அது வளரும். யாருக்குத் தன்னம்பிக்கை இருக்கிறதோ, அன்னை மீது நம்பிக்கையிருக்கிறதோ, அவர் கம்ப்யூட்டர் கம்பனிகள் சரிவதைத் தடுக்க முடியும்.
 • தன்னம்பிக்கையுள்ளவர் எந்த அளவு பணமும் தன் வாழ்வில் உற்பத்தி செய்யமுடியும் என்பது இங்கு கருத்து. அது அன்னை மீதுள்ள நம்பிக்கையானால் அதற்கு அளவில்லை.
 • பணம் என்பது நம்பிக்கை. சர்க்கார் மீது, பவுன் மீது, சர்க்காரின் நாணயத்தின் மீது, முடிவாக தன்மீது, அதையும் கடந்து அன்னை மீது உள்ள நம்பிக்கை பணம். அந்த நம்பிக்கை பணத்தை உற்பத்தி செய்யும். எப்படி என்பதை கூறுவோம்.
 • இதன் அம்சங்கள் ஆயிரம். நடைமுறை அம்சங்கள் அதைவிட அதிகம். அந்த கோணங்களிலிருந்து பணம் உற்பத்தி செய்வதை விளக்க எழுதப்பட்ட நூல் இது.
 • இதுவரை உற்பத்தியான பணம் ஏராளம். ஆனால் எவ்வளவு பணம் உற்பத்தி செய்யமுடியுமோ அதில் உற்பத்தியானது கடுகளவு. அபரிமிதமாகப் பணம் உற்பத்தி செய்யும் வழிகள் அனந்தம்.

அன்பு, அதிகாரம், சந்தோஷம், அறிவு, நல்லது, செயல்திறன், மனித ஒற்றுமை, அழகு, மௌனம், சாந்தி போன்ற எந்த உயர்ந்த அம்சத்தையும் அளவுகடந்து உற்பத்தி செய்யலாம் என்பது தத்துவம். புதியன வரும்பொழுது, ஆபத்து', எனக் கூக்குரல் எழுகிறது. சர்க்கார் புதியதாக வருபவை - அணுகுண்டு, cloning, பிளாஸ்டிக் - எவையானாலும் அவற்றை நல்லதற்கு மட்டும் பயன்பட சட்டம் இயற்றுகிறது. அபரிமிதமான பணத்திற்கும் அது போன்ற சட்டப் பாதுகாப்புண்டு.

அனந்தம், அபரிமிதம், அதிகபட்சம்

நமது அதிகபட்சத் திறமை நம் வாழ்வில் பயன்பட்டால், பலன் அதிகபட்சமாகும். அது அபரிமிதமன்று. அபரிமிதம் அதிகபட்சத்தைக் கடந்தது. அபரிமிதம் அனந்தமன்று. அனந்தம் என்பது முடிவற்றது.

 • அதிகபட்சம் என்பது நம் திறமைக்கு அதிகபட்சம்.
 • அபரிமிதம் என்பது தேவையைக் கடந்தது.
 • அனந்தம் என்பது இவையிரண்டையும் கடந்த முடிவில்லாத பலன்.

ஆன்மீகரீதியாக உயர்ந்தது என்பது பிரம்மம். தாழ்ந்தது என்பது உடல். இன்று உடல் உழைத்து சம்பாதிக்கிறது. அதிகபட்சம் சம்பாதிக்க அறிவைப் பயன்படுத்துகிறது. ஒரு பில்லியன் டாலர் என்பது 4500 கோடிப் பணம், ரூபாய். உலகில் 450 பேர் இந்த அளவு சொத்துள்ளவர்கள் என்று கணக்கெடுத்துள்ளார்கள். இவர்கள் அறிவால் உழைத்துச் சம்பாதித்தவர்கள். அறிவிலிருந்து பிரம்மத்திற்கு இடையே 9 நிலைகள் உள்ளன. மேலே செல்வது 9 நிலை, இறங்கி வருவது மேலும் 9 நிலை.

பிரம்மம் உடல் வெளிப்படுவது அனந்தமான அபரிமிதத்தை மனிதயத்தனத்தின் அதிகபட்சமாக நாம் அறிவோம்.

சாதனை நமது இலட்சியம். அபரிமிதமான பணம் சம்பாதிப்பது நம் சாதனையாக இருப்பது இலட்சியமானால், பணத்தைப் பற்றிய கருத்துகளை விளக்கவேண்டும். இந்த ஞானத்திற்குத் திறன் உண்டு. ஞானத்தைப் பெற்றவர் திறனாக மாற்ற மனத்தாலும், ஆத்மாவாலும் உழைக்க முன்வரவேண்டும்.

ஞானம் எப்படிப் பலனாக மாறும்? திறனால் பலனாகும். அறிவு என்பது ஞானம், உறுதி என்பது (Will) திறன். உறுதிக்கும் அதனுள் புதைந்துள்ள ஞானம் உண்டு. ஞானத்திற்கு உறுதி பணிந்து செயல்பட்டால், செயல்பாடு ஆகும். அது பாடாவதியாகவுமாகும். விவரம் தெரியாமல் உழைப்பது. விவரம் தெரிவது திறமை (Skill). அது பாடு என்பதாகாது. வேலையாகும். வேலை தெரியாதவன் திணறுவதை நாம் பார்க்கிறோம். வேலை தெரிந்தவன் ஆர்வமாக, அழகாக வேலை செய்வது பார்க்க இனிக்கும். வேலையை நூறு, ஆயிரம் பாகமாகப் பிரித்து ஒவ்வொன்றையும் செய்யக் கற்றுக்கொள்வது உறுதியான ஞானம் பெறுவதாகும். இது ஞானம் பலனாக மாறும் பாதை. பிரம்மம் உடலில் எப்படி வெளிப்படும், அது எப்படிப் பலனாக மாறும், அது பணமாக எப்படி மாறும் என்ற ஞானத்தை விளக்கமாகவும், விபரமாகவும், இந்நூலிலிருந்து பெறலாம்.

அணுவினுள் அகிலம் முழுவதும் பரவும் சக்தியுண்டு. இதை நேரடியாக வேறு சிரமமில்லாமல் வெளிப்படுத்தினால் உலகில் சக்திக்குப் பஞ்சமில்லை. (Solar power) சூரிய வெளிச்சம் மின்சாரமாகிறது என்பது ஓரளவு நடைமுறையில் வந்துள்ளது. (Wind power) காற்று மின்சாரமாகிறது என்பதும் ஓரளவு நாம் எங்கும் காண்கிறோம். இவை முழுவதும் நடைமுறைக்கு வந்தால் உலகில் (power) சக்திக்குப் பஞ்சம் உண்டா?

பண்டமாற்றாக ஆரம்பித்தது பணமாயிற்று. பவுன் பணம், பொருள் பணம், currency பேப்பர் பணமாயிற்று. தபால், தந்தி வந்தபொழுது பணத்திற்கு அதிக மதிப்பு வந்தது. விளம்பரம் வந்தபொழுது பேப்பர் விலை குறைந்தது, T.V. செலவில்லாமல் வருகிறது. ஒரு நியூஸ் பேப்பர் அடக்கவிலை ரூ.10/-, அதை 3 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். மீதி விலையை விளம்பரம் தருகிறது. இன்ஸுரன்ஸ்மூலம் நாம் சிறு பிரீமியம் கட்டி, பெரிய தொகையைப் பெறுகிறோம்.

கம்ப்யூட்டர்போல் எது புதியதாக வந்தாலும், பொருள்கள் மலிவாகின்றன. அதாவது நமக்கு உபரியாகப் பணம் உற்பத்தியாகிறது. காற்றுபோல் ஒரு காலத்தில் பணம் அபரிமிதமாகும். அனைவருக்கும் அது கிடைக்கும். இது சமூகம் பெற்றுக்கொண்டு வரும் திறன். இன்றே அதைத் தன் வாழ்வில் அபரிமிதமாக அனுபவிக்க மனிதன் முன்வரலாம்.

இது யாருக்குப் பலிக்கும்?

பலிக்க என்ன செய்யவேண்டும்?

பலிக்கும் வகை எது? நாம் செய்யக்கூடியது என்ன? நமக்கே பலிக்குமா? நம் போன்றவர் எவருக்காவது பலிக்குமா? என்ற கேள்விகட்கு இந்நூல் பல இடங்களில் பதில் வரும். முடிவில் இதை விளக்கமாக எழுதுகிறேன். அதன் சுருக்கம்,

 • கை வேலையில் (Skill) திறமை சிறந்தவர் - உடல்,
 • பிறர் வாழ மனம் விழைபவர் - உயிர்,
 • பிரம்மத்தை ஞானமாகப் பெறுபவர் - மனம்,
 • செயல் பிரம்ம ஞானத்தை சத்தியமாக வெளிப்படுத்துபவர்,

ஆகியோருக்குத் தங்கள் வாழ்வில் அபரிமிதமான செல்வத்தை உற்பத்தி செய்யும் திறன் பக்கும்.

 • மேல்நாட்டார் செயல் பிரம்மத்தைக் கண்டவர், உண்மை மட்டும் பேசுபவர்.
 • அவை நம்மிடம் வித்தாக உள்ளன. அகத்திலும், புறத்திலும் அவ்வுண்மை வெளிப்படும்படி, சொல்லும், செயலும் அமையவேண்டும்.

மனத்தின் சிருஷ்டித் திறன் - பணம்

உலகம் மனத்தால் சிருஷ்டிக்கப்பட்டது, அகந்தையால் சிருஷ்டிக்கப்பட்டது என்பவை இந்திய ஆன்மீக மரபு. அதனால் வாழ்வு மாயை என்றும் கூறுகின்றனர். உலகத்தை சிருஷ்டித்தது சத்திய ஜீவியம் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். மனம் சத்திய ஜீவியத்தின் பகுதி (subordinate power). சத்திய ஜீவியத்தில் ஜீவியம் இரண்டாகப் பிரிகிறது. ஞானம், உறுதி என்று பிரிகின்றது. ஞானம் உறுதிமேல் செயல்பட்டால் சக்தி பிறக்கிறது. அதுவே life வாழ்வு எனப்படும். மனம் வாழ்வை உற்பத்தி செய்தது. பணம் வாழ்வில் கடுகளவான பகுதி. வாழ்வை உற்பத்தி செய்த மனம் அதன் பகுதியான பணத்தை உற்பத்தி செய்ய முடியும்.

மனத்தில் நல்லதும், கெட்டதும் உண்டு. பணத்தை முடிவில்லாமல் மனம் உற்பத்தி செய்யும் என்பதை நாம் இங்கு எடுத்துக்கொண்டுள்ளோம். மனமே இரு பகுதிகளாக இருப்பதால், மனம் நல்ல பணத்தை உற்பத்தி செய்வதுபோல், கெட்ட பணத்தையும் உற்பத்தி செய்யவல்லது. நடைமுறையில் அவை கலந்தே காணப்படுகின்றன. பணம் நல்லதாக மட்டுமோ, கெட்டதாக மட்டுமோ இருப்பதில்லை. நல்லதும், கெட்டதும் கலந்த மனிதனால் சம்பாதிக்கப்பட்டதே பணம்.

மனத்தின் திறன்கள் பல. பணத்தை உற்பத்தி செய்வது மட்டும் நமக்குரியது. இக்கோணத்தில் மனம் எப்படியிருக்கிறது, எப்படியிருந்தால் பணம் உற்பத்தி செய்ய உதவும் என்பதை,

 • அடுத்தவர் எவரானாலும் மனிதன் அவர் நிலை உயரப் பொறுக்கமாட்டான் என்று கூறலாம்.
 • பிறர் பெரு வாழ்வு வாழ மனம் விழைவது பணத்தை மனம் உற்பத்தி செய்ய உதவும்.

இன்று சமூகம் தனி மனிதன் நல்வாழ்வு வாழ பல துறைகளில் பாடுபடுகிறது. எந்தக் காலத்திலும் சமூகம் தனி மனிதனுக்கு உதவியாகவுள்ளது. கடினமான வாழ்வைக் கடுமையற்ற வாழ்வாக மாற்றியுள்ளது. விலங்குபோல் நாடோடியாகத் திரிந்த மனிதனை ஊரும், உறவுமாக வாழ வைத்தது. வேட்டையாடியும், காய் கனியைப் புசித்தவனுக்கு விவசாயம் ஏற்பட்டது. தொடர்ந்து மனிதனுக்கு சமுதாயம் சேவை செய்கிறது. மருந்துமூலம் வியாதியிலிருந்து விடுதலையளித்ததுபோல் இன்று மனிதன் அனுபவிக்கும் அத்தனை சௌகரியங்களையும் அவனுக்கு அளித்தது சமூகம். சமூகம் மனிதனுக்குச் செய்த வேலைகளில் முக்கியமானவை பல. அவற்றுள் பணம் முக்கியமானது.

மனிதன் வாழ சமூகம் நல்லெண்ணம் கொண்டுள்ளது.

இந்த நல்லெண்ணத்தின் அம்சம் பணம், பணம் நமக்குச் செய்யும் சேவைகள். நாளுக்கு நாள் பணம் பெருகுகிறது. பெருகும் பணம் பெருகி வரும் நல்லெண்ணம். காலத்தை வென்று, கர்மத்தை வென்று, நல்லெண்ணமாக உருவம் பெற்றது பணம். பணம் நம் வாழ்வில் பெருகவேண்டுமானால்,

அனைவரும் தொடர்ந்து உயரவேண்டும் என்ற நல்லெண்ணம்

நம் மனத்தில் பெருகவேண்டும். அது அடிப்படையான நிபந்தனை.

இன்று பெரும் பணக்காரர்களாக இருப்பவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்களா என்ற கேள்வி மனத்தில் எழும். இது வேறு கேள்வி. இதனுள் வேறு பல அம்சங்கள் அடங்கியுள்ளன. ஏனெனில் பணத்தைப் பல வழிகளிலும் சம்பாதிக்கலாம். தவறாகவும் சம்பாதிக்கலாம். பணத்தை நல்ல முறையாகச் சம்பாதிப்பது மட்டும் நமக்குரிய கருத்து. இக்கேள்விக்குரிய பதிலின் சுருக்கத்தை மட்டும் கூறமுடியும்.

எவர் அதிகப் பணம் சம்பாதித்தாலும் பொதுமக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பெரிய சௌகரியமில்லாமல் சம்பாதிக்க முடியாது.

மனிதன் சுயநலமானவன். அவன் சுயநலத்தைவிட்டு, பிறர் நலம் பேணுவது finite மனிதன் infiniteஆக மாறுவதாகும். ஸ்ரீ அரவிந்தர் மனிதனுடைய மிகப்பெரிய இரகஸ்யத்தைக் கூறுகிறார். அது ஆன்மா ஜடத்தை ஆளும் இரகஸ்யம். சமூகத்தில் கிராக்கியான பண்டங்கள் பல. நாளாக ஆக கிராக்கியான பண்டங்கள் அதிகமாகக் கிடைக்க சமூகம் வழி செய்தது. 1952 எலக்ஷனில் சுதந்திரம் பெற்ற காங்கிரஸ் தோற்றதற்கு அரிசி கிடைக்காததே காரணம். "ஆறு அவுன்ஸ் சர்க்கார் அழிக'' என்று மக்கள் காங்கிரஸைத் தோற்கடித்தனர். இன்று நெல்லும், அரிசியும், கோதுமையும் உபரியாகக் கிடைக்கின்றன. 1970க்கு முன் கார் வாங்க முன் பணம் கொடுத்து காத்திருக்கவேண்டும். இன்று கார் வாங்க லோன் கொடுக்கும் பாங்க்குகட்கு லோன் பெற ஆளில்லை. ஒரு காலத்தில் கிராக்கியான சரக்கு, பிற்காலத்தில் உபரியாகக் கிடைப்பதுபோல்,

இன்று கிடைக்காத பணம் எதிர்காலத்தில் காற்று, தண்ணீர், நெல்போல் அபரிமிதமாகக் கிடைக்கும்.

உடலாலும், உணர்வாலும் மனிதன் உழைத்தபொழுதும் மனம் பின்னணியிலிருந்தது. பின்னணியிலிருந்த மனம் முன்னணிக்கு வந்து நேரடியாகச் செயல்பட்டது. வீராணம் ஏரியை இங்கிலாந்து இன்ஜினீயர்கள் வந்து பார்த்தனர். 1000 ஆண்டுகட்கு முன் இன்ஜினீயரிங் அறிவு வளராத காலத்தில் எப்படி இந்த ஏரியைக் கட்டினர் என ஆச்சரியப்பட்டனர். கோபுரம், பிரமிட் போன்றவை கட்டியது உடல் உழைப்பால் முடியாது. அது அறிவு வளர்ச்சியால் நடந்த செயல்கள். பணம் என்று முதல் ஏற்பட்டபொழுது அது ஓர் எண்ணம், அது மனத்தின் செயல். பணம் மனத்தால் ஏற்படுத்தப்பட்டது. மனம் எண்ணத்தாலானது. எண்ணக்கோவைகள் சிக்கலின்றி சீராக அமைந்தால், எண்ணம் நிர்வாகத் திறன் (organizing power) பெறுகிறது. அதுவே சட்டமாகிறது. மனத்திற்கே எண்ணமுண்டு. எண்ணம் செயலைக் கட்டுப்படுத்தும். செயல்களின் போக்கையறிந்து அவற்றை எண்ணத்தின் திறனால் கட்டுப்படுத்துவது கட்டுப்பாடு. அதன் சிகரம் சட்டம், ஒழுங்கு (rule). மனிதனுடைய உழைப்பு, பொருள்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்ய உதவும் கருவி மனம். உழைப்பின் சிறப்பு, பொருள்களின் அளவு, தன்மை, விநியோகத்திற்குரிய நிபந்தனைகள் மனத்தால் அறிந்து அதை நிதானப்படுத்தி நிர்ணயம் செய்வது விலை எனப்படும். விலை என்பது மனத்தால் குறிக்கப்படுகிறது. இவ்வெண்ணக்கோவைகளின் மையம் பணம். இதற்கு அமைப்பு, ஸ்தாபனம், நிர்வாக அமைப்பு எனப் பெயரிடலாம். இது மனத்தின் செயல். மனம் செயல்பட்டால், அங்கு இவ்வமைப்பிருக்கும். இது சமூகத்தில் ஒரு புரட்சிகரமான மாறுதல், சமூகம் வளர (evolutionary) உதவும் மாறுதல். அதனால் ஏற்பட்டவை,

 • தன் உபரி சக்தி, உபரி உற்பத்தி அழிவதற்குப் பதிலாக அதை வேறொரு நாளைக்குப் பயன்படுத்த முடியும்.
 • ஒருவருடைய உபரியை மற்றொருவர் பயன்படுத்தலாம்.
 • சமூகம் தனி மனித வாழ்வைச் சிறப்பாக்க முடியும்.
 • ஒவ்வொருவரும் அடுத்தவர் வாழ்வு பயனுற உதவ முடியும்

என்பவை பணம் ஏற்பட்டதால் ஏற்பட்ட பெரிய புரட்சிகரமான மாறுதல்கள்.

 • Unity, Mutuality, Harmony, ஒற்றுமை, பரோபகாரம், சுமுகம்

என்பவை சத்தியஜீவிய வாழ்வுக்கு உயிர். அவற்றை நிலைநாட்டப் பயன்படுவது பணம் என நாம் அறிகிறோம்.

பணம் என்பது மனிதத் திறமையின் சின்னம். நேற்றைய உழைப்பைப் பணம் மூலம் நாளைக்குப் பயன்படுத்த முடியும். இளம் வயது சேமிப்பை வயோதிகத்திற்குப் பயன்படுத்தலாம் என்பது தினமும் வேட்டையாடி உழைத்தவனுக்குப் புரியாத ஒன்று. புலியானாலும், பல் போனபின், உடல் தெம்பு குறைந்தபின் பட்டினி கிடந்து சாகும். மனிதன் அப்படியிருந்தவன். சேமிப்பால் எதிர்காலத்தில் வாழலாம் என்பது காலத்தை வெல்வதாகும். கங்கையில் பிரவாகமாக வெள்ளம் கடலையடைகிறது. காவிரி வறண்டுள்ளது. கங்கை நீர் காவிரிக்குப் பயன்படாது. பணம் ஓரிடத்தில் சம்பாதிக்கப்பட்டாலும், வேறு இடத்தில் உதவும். வெளிநாட்டிலும் உதவும். இது இடத்தை வெல்வதாகும். தனி மனிதன் தனி மனிதனாகவே வாழ்ந்தால் பணம் இல்லை. சமூகமாக வாழும்பொழுதும் நோட்டிற்கு மதிப்பு வருவது மனிதனுக்கு சர்க்கார் மீது நம்பிக்கையிருப்பதால்தான். சர்க்கார் மீது நம்பிக்கை போன நாடுகளில் பணக்கத்தைகள் வீசப்பட்டன. காலத்தையும், இடத்தையும் வெல்லும் பணம் நம்பிக்கையால் உற்பத்தியாகிறது. இதன் மதிப்பு நிர்வாகத் திறமையைப் (organisation) பொருத்தது.

 • கடந்த கால உழைப்பை எதிர்காலத்திற்கு உபயோகப்படுத்துவதும்,
 • ஓரிடத்து உற்பத்தியை அடுத்த ஊருக்கு, அடுத்த நாட்டிற்கு எடுத்துப் போக உதவுவதும்,
 • சமூகத்தை நம்பும் மனிதனுக்கு சமூகம் உதவும் கருவியாக இருப்பதும்,
 • உழைப்பு, திறமை, தரம், மதிப்பு, இவற்றைச் சேர்த்து (organise) நிர்ணயிப்பதும் பணம் என்பதால்,
 • Energy Organisation, trust, உழைப்பு, நிர்வாகத் திறமை, நம்பிக்கை ஆகியவற்றால் பணம் உற்பத்தி செய்யப்படுகிறது.

உழைப்பு என்பது சக்தி, நிர்வாகம் என்பது எண்ணக் கோவை, நம்பிக்கை என்பது மனம் ஏற்பது ஆகியவை முழுவதுமாக மனத்தின் அம்சங்கள். மனம்,

 • சக்தியை அளவுகடந்து எழுப்பும்.
 • Oragnisation நிர்வாக முறையை மனம் உற்பத்தி செய்ய அளவில்லை.
 • முடிவில்லாத நம்பிக்கையை மனத்தால் எழுப்ப முடியும்.

இவை மூன்று மட்டுமே பணத்தின் அம்சங்கள். இவற்றை மனம் முடிவில்லாமல் உற்பத்தி செய்ய முடியும் என்பதால், மனத்தால் அளவு கடந்து பணத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது தெளிவு. மேலும், பணத்திற்குச் சில அம்சங்களுண்டு.

 1. பணம், பணப்புழக்கம் விரிவடைய உதவும்.
 2. பணத்தின் வேகம் பணத்தின் மதிப்பை நிர்ணயிக்கும்.
 3. எவ்வளவு தூரம் பணம் ஏற்கப்படும் என்பது ஓர் அம்சம்.
 4. எத்தனை நாடுகளில் நம் பணம் ஏற்கப்படும் என்பது அடுத்தது.
 5. எத்தனை வகையாகப் பணம் பயன்படும், எந்தக் கருவியைப் பணம் வாங்க முடியும், எதை வாங்க முடியாது என்பது முக்கிய அம்சம்.

வேகமாகப் பணம் புரளும்பொழுது பணம் அதிகமாகச் சம்பாதிப்பதை வியாபாரி அறிவான். வாடகைக்கு வீடு வேண்டுமானால், பணம் மட்டும் போதாது. கேட்ட வாடகையைத் தருகிறோம் என்றால் எல்லோருக்கும் வாடகைக்கு வீடு தரமாட்டார்கள். கம்பனி நடத்த குடியிருக்கும் வீட்டைத் தரமாட்டார்கள். அதுவே பெரிய கம்பனி எனில் தருவார்கள். வாடகைப் பணம் சாதிக்காததை, கம்பனியின் செல்வநிலை சாதிக்கும். இன்று IAS உத்தியோகம் விலை கூறப்படவில்லை. சென்ற நூற்றாண்டில் இங்கிலாந்தில் ராணுவ ஆபீசர் வேலைகள், கப்பல் கேப்டன் வேலைகள் விலைக்கு விற்கப்பட்டன. மெடிகல் டிரீட்மெண்ட்டுக்கு அதிகப் பணம் தேவை. சுப்ரீம் கோர்ட்டுக்குப் போக ஏராளமான பணம் தேவை. எலக்ஷனில் ஜெயிக்க லட்சக்கணக்கான பணம் தேவை.

 • பெரும் பணம் தேவைப்படும் செயல்கள் இவை என்றாலும், பணம் இவற்றைச் சாதிக்கிறது என்பது உண்மை என்பதால், பணத்தின் மதிப்பு வளருகிறது.
 • இன்றும் பணத்தால் சாதிக்க முடியாதவையுண்டு. அவை பணத்திற்கு எட்டுமானால், பணத்தின் மதிப்பு உயரும்.

இந்திய ரூபாய் 20 நாடுகளால் ஏற்கப்படுகிறது என்பது 40 நாடுகளானால், நாம் செலவு செய்யும் ரூபாயின் மதிப்பு உயருகிறது. 1 டாலர் விலை 3¾ ரூபாயாக 1950லிருந்தது இன்று 45 ரூபாயாகிவிட்டது. மீண்டும் 3¾ ரூபாயானால் நாம் அமெரிக்கப் பொருள்களை மலிவாக வாங்கலாம். ரூபாயின் மதிப்பு உயரும். ரூபாயின் பயன் அதிகப்பட்டால், மதிப்பு அதிகப்படும்.

மனிதன் உடலுழைப்பிலிருந்து உயர்ந்து அறிவால் உழைக்க ஆரம்பித்தால், அவனது உற்பத்தித் திறன் வளருகிறது. பாங்க் செக்கும் தபால் (physical transmission) அனுப்ப வேண்டி இருக்கிறது. இது ஆயிரத்தில் ஒரு விஷயம். இன்று அது கம்ப்யூட்டர் வழியாகப் போகிறது. வருஷத்தில் 10 கோடி வியாபாரம் உள்ள கம்பனியில் தினமும் ரூ.3 லட்சம் சராசரியாக செலவாகும். பணவரவு 2½ லட்சமானால், தட்டுப்பாடு 4 லட்சமானால் சௌகரியமாக இருக்கும். ஒரு லட்ச ரூபாய் செக் வசூலாக 1 வாரம் ஆகிறது. இந்த மாதம் 30 லட்ச ரூபாய் செக் வந்துள்ளது. கம்பனி 30 லட்சம் வாடிக்கைக்காரர்கட்குத் தரவேண்டும். வரவேண்டிய பணம் 1 வாரத்தில் பாங்க்மூலம் வசூலாகும். கம்ப்யூட்டர்மூலமாக வசூலானால் 1 நாளில் வசூலாகும். அதாவது 30 லட்ச ரூபாய் பணம் 7 நாட்கள் அதிகமாகப் பயன்படும். இந்த மாதம் 30 லட்சம் வசூலாவதற்குப் பதிலாக 23 நாளில் 30 லட்சம் வந்து பணத் தட்டுப்பாடு குறையும். இது ஒரு சிறு உதாரணம். இதுபோன்ற சிறு செயல்கள் பணத்தைப் பொருத்தவரை 15, 20 உள்ளன. ஒவ்வொரு முறையும் கம்பனியின் பணப் புழக்கத்தை 5 or 10% அதிகப்படுத்தும். அதனால் கம்பனி தன் பணப் புழக்கத்தை (cash flow) 100% அதிகப்படுத்த முடியும். மாதம் 30 லட்சம் செலவாகும் கம்பனிக்குப் பணம் தாராளமாகப் புரளும்படி மாதம் 60 லட்சம் பணம் வரும். அனுபவப்படுபவர்கட்கு இது தெரியும் என்றாலும், இவை மனதில் படுவதில்லை.

இவை புற நிகழ்ச்சிகள். ஒவ்வொரு புற நிகழ்ச்சிக்கும் உரிய அகவுணர்வுண்டு. ஒருவருக்கு பாக்கித் தரவேண்டுமானால், அவர் கேட்கட்டும், கொடுக்கலாம் என்பதும், கேட்பதற்கு முன் கொடுத்துவிடவேண்டும் என்பதும் எதிரான மனநிலைகள். அகவுணர்வு எல்லாப் புறநிகழ்ச்சிகட்கும் உண்டு. அவை சக்தி வாய்ந்தவை. நம்பிக்கையை நேரடியாகவும், சக்தியை மறைமுகமாகவும் வளர்ப்பவை. பணம் சம்பந்தப்பட்ட எல்லா அம்சங்களையும் ஒருவர் அறிந்து ஒன்றுவிடாமல் பின்பற்றினால் அவர் பணவரவு 30 அல்லது 40 மடங்கு பெருகும் என்பது உண்மை, அனுபவம். இவற்றை செய்வது மனம், மனத்தின் சிருஷ்டித் திறனை இங்குக் காணலாம்.

 • எண்ணத்தைப் பொருத்து, ஆர்வத்தைப் பொருத்து சக்தி அதிகரிக்கும். தனக்காகச் சம்பாதிப்பதைவிட குடும்பத்திற்காகச் சம்பாதிக்க அதிக ஆர்வம் எழும்.
 • மனம் செயல்படு வகை, (organisation) யாருடன் எப்படிப் பழகுகிறோம் (co-ordination), எவற்றை எப்படிச் செய்கிறோம் என்பதாகும். இது அளவுகடந்து விரிவடையக் கூடியது. அளவுகடந்து co-ordination விரிவடையுமானால், பணம் அளவுகடந்து பெருகும் என்ற தத்துவத்தை நடைமுறையில் காணும் இடம் இது.
பணம் நம்பிக்கையால் ஏற்பட்டது. மனிதனை நம்புவதாலும், சமூகத்தை நம்புவதாலும் பணம் உற்பத்தியாயிற்று. பணம் என்பது நம்பிக்கை. நம்பிக்கையை அதிகமான பேருக்கு அளித்தால் பணம் அதிகமாகும். எத்தனைப் பேரை நம்பலாம் என்பதற்கு முடிவில்லை. நம்பிக்கையின் அளவை - ஆழத்தை - அதிகப்படுத்தலாம், அதற்கும் முடிவில்லை.

மனம் இந்த மூன்று விஷயங்களை - சக்தி, நிர்வாகம், நம்பிக்கை ஆகியவற்றை - வளர்க்க இசையும்வரை, மனத்தால் பணத்தை உற்பத்தி செய்யமுடியும். இந்த மூன்று அம்சங்கள் வளர அளவில்லை. பணத்தை உற்பத்தி செய்ய அளவில்லை.

உலகில் நாம் பெரும் பணம் பெருகும் இடங்களில் காண்பது இரண்டு. 1. திறமை, 2. டெக்னாலஜி. திறமையின்றி டெக்னாலஜி பயன்படாது. திறமை தன்னளவில் பயன்படும். அறிவு, ஜடத்தில் வெளிப்படுவது டெக்னாலஜி. கத்தரிக்கோல் என்பது இரும்பு. இரண்டு கூரான இரும்புத் துண்டுகள் சரியாக இணைக்கப்பட்டால் வெட்டும் என்ற அறிவை கத்தரிக்கோல் இரும்பில் வெளிப்படுத்துகிறது. மரத்திருந்து ஒரு கிளை வேண்டுமானால் ஒடிக்கவேண்டும், பலமுறை இழுக்கவேண்டும், சிம்பவேண்டும். இச்செயலை நன்றாகச் செய்ய கூரான இரும்பு நாம் கிளையை ஒடிப்பதை அழகாகச் செய்யும் என்பது டெக்னாலஜி. மனம் உடலைவிட உயர்ந்தது. உடல் சக்தியை வெளிப்படுத்துவதைவிட மனம் அதிக சக்தியை வெளிப்படுத்தும். உடல் வேலை செய்யும். என்ன வேலை செய்யவேண்டும் என மனம் கூறும். அதனால் உடன் பல வேலைகளைச் செய்யும் சக்தியைத் தரமுடியும். உடல் தன் வேலையைச் செய்யும். மனம் பலரை வேலை செய்யச் சொல்லும். மனம் பெரியது. உடல் மனத்தை ஏற்றால், மனம் (descent) இறங்கி உடலில் வந்து உறைந்தால், உடல் தான் வழக்கமாக வெளியிடும் சக்தியைப்போல் பல மடங்கு சக்தியை வெளிப்படுத்தும். வேலை செய்யும்பொழுது எப்பொழுது 5 மணி அடிக்கும் என உடல் காத்திருக்கும். எவ்வளவு வேலை செய்தாலும் அதற்கேற்ப ஊதியம் (piece rate) உண்டு என்றால் 5 மணிக்குக் களைக்கும் உடல் 5½ வரை வேலை செய்யும். செய்யும் வேலை எவரும் அறியாத அளவுக்கு நமக்குத் தெரிந்தால் - அறிவு உடல் வந்து வேலை செய்தால் - 5½ இல்லை, 6½ வரைக்கும் நேரம் போவது தெரியாது.

நாம் ஒரு வேலையை ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் இத்தனை நாள் செய்கிறோம். அது கடமையால் வந்தத் திறமை. அறிவு உடல் வந்து வேலை செய்வது என்றால் என்ஜினீயருக்குத் தெரியாதது helperக்குத் தெரியும். வேலையின் நுணுக்கத்தை அறிவுபூர்வமாகத் தெரிவது அறிவு உடல் செயல்படுவதாகும். இவர்கட்கு 3, 4 மடங்கு தெம்பும், உற்சாகமுமிருக்கும். பொதுவாக கீழிருந்து எளிதில் மேலே போய்விடுவார்கள்.

 • மனம் உடலைவிட அதிகப் தெம்புள்ளது.
 • மனம் உடல் வந்து விழிப்புற்றால் தெம்பு ஏராளமாக எழும்.

மேல்நிலை கீழே வந்து வேலை செய்யும்பொழுது பலன் அதிகம். ஒரு நாட்டின் சிறப்பு நாட்டில் அடிமட்டத்திலுள்ளவர் திறமையைக் காட்டும். பணம் அதுபோல் உற்பத்தியானது. அதனால் பணத்திற்கு வளரும் தன்மையுண்டு, வளர்ச்சிக்கு முடிவில்லை.

சமூகத்திற்குப் பயன்படும் பொருள்கள் (resources) ஏராளம். மரம், நிலக்கரி, எண்ணெய் போன்றவை. இவை தீர்ந்துபோனால் என்ன செய்வது என்ற குரல் பல திசைகளிலும் எழுகிறது. இவை எப்பொழுதும் தீராது என்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. பயன்படும் பொருள்களின் ஒரு பகுதி தீர்வதற்குமுன் சமூகம் வேறு ஒரு பொருளைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறது. புதுப்புது வேலைகளை ஆரம்பிப்பதால் பழைய பொருள்கள் தேவைப்படா. கார் வந்த பிறகு குதிரைக்கு வேலையில்லை. டிராக்டர் வந்த பிறகு உழுவதற்கு மாடு தேவையில்லை. பேப்பர் வந்தபின் பனைஓலை அவசியமில்லை. பணம் அதுபோல் ஒன்று. பணத்திற்குப் புதுப்புது உபயோகங்கள் ஏற்படுவதால் பண உற்பத்திக்கு அளவு என்பது கிடையாது.

அளவு கடந்து பணம் உற்பத்தி செய்ய முடியும் என்று வைத்துக்கொள்வோம், அது முடியுமானால், எவரும் அதைச் செய்ய முன்வர மாட்டார். உதாரணமாக, இன்று ஒருவரால் அளவு கடந்து பல பொருள்களைப் பெருக்க முடியும். அதை எவரும் செய்வதில்லை. ஷர்ட், பேனா, சாமான், கடிகாரம், செருப்பு போன்ற பொருள்களை அளவுகடந்து ஒருவரால் வாங்கி வைத்துக்கொள்ள முடியும். அதை எவரும் செய்வதில்லை. ஆனால் அளவு கடந்து சொத்து வாங்க, பணம் சம்பாதிக்க எவரும் பிரியப்படுவார். பணம் பற்றாக்குறையாக இருப்பதால் இனி நாம் அதைச் செய்யலாம். ஜப்பான் அதைச் செய்தது. $12 டிரில்லியன் (டிரில்லியன் என்பது ஆயிரம் பில்லியன்; 1 பில்லியன் ஆயிரம் மில்லியன்) பணம் நாட்டில் சேமிப்பிருக்கிறது. பாங்கில் போட்டால் வட்டியில்லை. இந்தப் பணத்திற்கு நாட்டில் எந்த உபயோகமும் இல்லை. நமக்கு அப்பிரச்சினையில்லை என்பதால், நாம் அதைச் செய்யலாம். அதைச் செய்யக்கூடிய வழிகளை ஒன்றுவிடாமல் பின்பற்றினால் நாட்டில் பணம் அபரிமிதமாக உற்பத்தியாகும். நாடு அதைச் செய்ய நாட்டின் தலைமை அதை ஏற்கவேண்டும். அதை நான் இங்கு கருதவில்லை. தனிப்பட்டவர் அதைச் செய்ய முன்வர வேண்டும் என்பதே என் கருத்து.

இதைச் செய்யக் கூடிய வழிகள் :

 1. இரு துறை ஒன்று சேர்தல். இத்தலைப்பில் சுமார் 50 முதல் 100 காரியங்கள் செய்யலாம்.
 2. பணத்தின் வேகத்தை அதிகப்படுத்தலாம்.
 3. இன்ஷுரன்ஸை எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம்.
 4. தவணை முறையை எல்லா இடங்களிலும் சட்டப்படி ஏற்கலாம்.
 5. Credit Card System பரவலாக அமுல்படுத்தப்படலாம்.
 6. பென்ஷன் வசதிகளை அதிகப்படுத்தலாம்.

இன்று வெளிநாட்டில் அமுல் செய்யப்பட்டவற்றுள் நம் நாட்டில் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவையும் செய்வது நல்லது. இவற்றைச் செய்வதால் உலக நாட்டில் 134வது இடத்தில் உள்ள இந்தியா இந்த முறைகளால் உயர்ந்து 124க்கு அல்லது 100வது இடத்திற்கு வரும். கங்கை - காவிரி திட்டத்திற்கு 60,000 கோடி தேவை. இத்திட்டம் நிறைவேறினால் இலட்சக்கணக்கான நிலங்கள் 100 மடங்கு விளையும். ஆயிரக்கணக்காக மின்சார உற்பத்தி பெருகும். இன்று கரம்பாக உள்ள நிலம் ரூ.5000. ஆனால் கங்கை நீர் வந்தபின் அந்நிலம் 50,000 ரூபாயாக அல்லது லட்ச ரூபாயாக மாறும். இந்த எதிர்காலத்தில் வரப்போகும் விலையை இன்று Govt. of India Bond சர்க்கார் பாண்ட் மூலம் - அதன் பகுதியை - பணமாக்கும் முறை எல்லாச் சர்க்காரும் செய்வது. இத்திட்டத்திற்குத் தேவையான எல்லாப் பணமும் உள் நாட்டிலேயே எழுப்ப முடியும். நாட்டில் புது ரோடு போடுவதற்கும், புதிய மின் திட்டங்கள் உற்பத்தி செய்வதற்கும் அடுத்த10 ஆண்டுகளில் தேவைப்பட்ட அத்தனை திட்டங்களுக்கும் தேவையான பணத்தை நாடே உற்பத்தி செய்ய முடியும். அத்திட்டங்கள் நாட்டை வளமாக்கும்.

1) இரு துறைகள் சேர்வது - இன்று உலகத்தில் புரட்சிகரமான மாறுதல் கம்ப்யூட்டர் - டெலி கம்யூனிகேஷன். இவை சேர்ந்தபின் வந்தவை Internet, Web ஆகியவை. இதுவரை நடந்ததில் இதுவே பெருமாறுதல். இரு துறைகள் சேர்ந்தால் இதுபோன்ற புரட்சி நடப்பது வழக்கம். ரயில்வே வந்த புதிதில், ரயில்வே தங்களுக்கே தந்தி ஏற்படுத்தியது. இத்தந்தி வந்ததால் ரயில்வே நடந்தது. பாங்க் ஏற்பட்டு, வியாபாரத்துடன் சேர்ந்தபொழுது பாங்க் இலாபகரமாயிற்று. சுமார் 1950வரை மற்ற நாடுகளில் இதுபோன்று இரு துறைகள் சேர்ந்ததுபோல் நம் நாட்டில் இதுவரை வரவில்லை. ரயில்வேயும், பஸ் ரூட்டும், சில இடங்களில் சேர்ந்து செயல்படுவதைக் காணலாம். அது 1% கூட இல்லை. ரயில்வே எல்லா இடங்களிலும் எல்லா பஸ் ரூட்டுடன் இணையவேண்டும். இதுபோன்று சுமார் 100 இணைப்புகளைக் கூறலாம். இதற்கெல்லாம் பணம் தேவையில்லை. இது தோட்டத்துப் பச்சிலை.

2) பணம் நம் நாட்டில் பிற நாடுகளில் நடமாடும் வேகத்தில் பாதிக்கும் குறைவாக நடமாடுகிறது. வேகத்தை அதிகரிக்க சர்க்காரும், வியாபாரமும் செய்யக் கூடியவை ஆயிரம். நம் நாட்டு நிலையில் நாம் 30% வேகத்திருந்து 100% வேகத்திற்குப் போக முடியாது. ஆனால் 60%க்குப் போகலாம். அந்த வேகத்தால் நாட்டில் பணம் இரு மடங்காகும். இவற்றைச் செய்ய முதல் தேவையில்லை, முனைந்து செயல்பட வேண்டும்.

3) இன்று இன்ஷுரன்ஸ் நாட்டில் அதிகமாகப் பரவியுள்ளது. அது மேல்நாடுகளில் உள்ளதில் 1/100 பாகம்கூட இல்லை. ஒரு மத்தியப்பிரதேஷ் மந்திரி அமெரிக்காவில் விமானத்தில் பிரயாணம் செய்தபொழுது கால் அடிபட்டுவிட்டது. அதை அவர் புகாராகக் கூறவில்லை. அவர் இந்தியா திரும்பிய 6 மாதத்திற்குப் பின் அக்கம்பனியிருந்து கடிதம் வந்தது. "உங்கள் கால் விமானப் பயணத்தில் காயம்பட்டதை நாங்கள் இன்ஷுரன்ஸ் கம்பனிக்கு எழுதி நஷ்டஈடு பெற்ற தொகையை இத்துடன் அனுப்புகிறோம்'' என்று 1½ இலட்ச ரூபாய் செக்கை அனுப்பிற்று. எனக்கு அதைச் சொல்லியவருக்கு அது 1½ இலட்ச ரூபாயா அல்லது 1½ கோடி ரூபாயா என விளக்க முடியவில்லை. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கட்கு அந்நாட்டில் இன்ஷுரன்ஸ் செய்யும் சேவை தெரியும். இன்ஷுரன்ஸ் என்பது வரப்பிரசாதம். உலகம் கண்டுபிடித்த அற்புதம். பென்ஷனுடைய அருமை பென்ஷனில்லாதவர்க்குத் தெரியும். வயோதிகத்தில் காப்பாற்ற மனிதரில்லாதவர்க்குக் குடும்பத்தின் அருமை தெரியும். சிறு பிரீமியம் கட்டி பெரிய வசதியைக் கொடுப்பது இன்ஷுரன்ஸ். அமெரிக்காவில் இன்ஷுரன்ஸ் இல்லாத இடமேயில்லை என்றாலும், இன்ஷுரன்ஸை சமூகம் முழுவதும் ஏற்றால் எவ்வளவு பலன் பெற முடியுமோ அதில் 1/100 கூட அமெரிக்காவில் இன்று நடைமுறையிலில்லை. அதிகபட்சம் இந்தியாவில் எந்த அளவு இன்ஷுரன்ஸ் இன்றுள்ள நிலையில் ஏற்கப்பட முடியுமோ அந்த அளவு ஏற்கப்பட்டால் கடந்த 10 ஐந்தாண்டுத் திட்டங்கள் செய்ததை அது செய்யும் என்ற கருத்து இன்று இந்தியாவில் இல்லை.

4) மணிலா மார்க்கட் 60 ஆண்டுகட்கு முன் ஏற்பட்டபொழுது விவசாயிக்கு பெரிய உதவி. வியாபாரிகள் எடையில், விலையில் செய்யும் தில்லுமுல்லுகள் விலக்கப்பட்டன. ரூ.1000 மணிலா வியாபாரம் செய்ய இன்று மார்க்கட் கமிஷன் 10 ரூபாய் அல்லது 20 ரூபாய் ஆகும். பழைய முறைப்படி எடை ஏமாற்றப்படும், விலை ஏமாற்றப்படும், வட்டியாக பணம் போகும், விவசாயி வீட்டிற்கு 700 ரூபாய் எடுத்துச் செல்வான். மார்க்கட்டை ரயில், பஸ் போக்குவரத்துடன் இணைப்பது, ரேடியோ, T.V. ஸ்டேஷனுடன் இணைந்து செயல்படுவது, நியூஸ் பேப்பருடன் முழு உறவு கொள்வது, மார்க்கட்டைப் பற்றிப் பள்ளியில் போதிப்பது, போன் சர்வீஸுடன் சேர்ந்து செயல்படுவது போன்ற அநேக காரியங்களைச் செய்தால், மார்க்கட் விரிவடையும். சமூகம் தன் முயற்சியால் முன்னேற உதவும் காரியங்கள் இவை. இதுபோல் செய்யக்கூடியவை ஏராளம். தவணைமுறை கடந்த 10 அல்லது 20 வருஷமாக அமுலிலிருப்பது நாம் பெற்ற சௌகரியம். இம்முறை சமூகத்தில் 10 அல்லது 15% தான் செயல்படுகிறது. முழுவதும் செயல்படலாம்.

5) Credit கார்டு சிஸ்டம் ஆரம்பக்கட்டத்திலிருக்கிறது. இது வளர வேண்டும். இது பரவினால் பணம் பெருகும். 1937இல் போர்ட் கம்பனி முதலாளி பாங்க்கை நம்பாமல் பணத்தை வீட்டில் வைத்திருந்தார். நம் நாட்டில் 1970, 1980வரை பாங்கில் பணம் போடும் பழக்கம் அதிகமில்லை. இப்பொழுது இது நடைமுறைக்கு வருகிறது.

 • வீட்டில் உள்ள பணத்தைப் பாங்கில் போட்டால் நாட்டில் செல்வம் பெருகும் என்பது புரியாதது போலிருக்கிறது.
 • வீட்டில் பெட்டியில் பணமிருந்தால், அது பத்திரமாக இருக்கும், தூக்கம் வராது.
 • பாங்கில் போட்டால், அது ஒரு தொழிலதிபருக்குப் போய் தொழில் வளர உதவும்.
 • தொழில் வளர்ந்தால் உற்பத்தி பெருகி, பணம் பெருகும்.
 • டெபாசிட் போட்டவருக்கு வட்டி வரும்.
 • Credit கார்டில் பணம் பெருகுவதை விளக்குவது சுலபமன்று. ஆனால் Credit Card பயன்படுத்தினால் பணம் ஏராளமாகப் பெருகும், அதனால் நாம் அதை ஏற்கவேண்டும்.

6) பென்ஷன் பெறுபவருக்குச் சௌகரியம். பென்ஷன் தருவதால் சர்க்காருக்குச் செலவு. அதனால் நாட்டில் பணம் பெருகும் எனக் கூறுவது விளங்காது. பென்ஷனிருப்பதால் மனிதனுக்குச் சர்க்கார் மீதும், சமூகத்தின் மீதும் நம்பிக்கை வளரும். நம்பிக்கை பணம். நம்பிக்கை வளர்ந்தால் பணம் பெருகும். நாட்டில் பணம் பெருக இவை முக்கியமான வழிகள். இதேபோன்று சொல்லக்கூடியவை ஏராளமாக இருக்கின்றன. துணி, பேப்பர், ரேடியோ, பேனா, போன்ற சரக்குகள் ஆரம்பத்தில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. நாளடைவில் அவை மக்களிடையே பரவி வரும்பொழுது மலிந்துவிடுகின்றன. அந்நிலைக்குப் பிறகு அப்பொருள்களுக்குக் கிராக்கி இருப்பதில்லை. அவற்றிற்கு (use value) பயன்படும் திறமையுண்டு. பயனுண்டு, கிராக்கியில்லை என்ற நிலை ஏற்பட்டால், அவற்றை எவரும் சேகரம் செய்யமாட்டார்கள். பணத்தால் வாங்கும் பொருள்களுக்கு (Saturation point) சமூகத்தில் நிறையும் நேரம் வருவதால், பணத்திற்கும் நிறையும் நேரம் வரும். இனி பணத்திற்கு (use value) பொருள்களை வாங்கும் திறமையுண்டே தவிர சேமித்து வைப்பதால் பலன் இல்லை என்ற நிலை வரும்.

 • பொருள்கள் வந்த புதிதில் கிராக்கியாக, அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
 • நாளடைவில் கிராக்கி மலிவாகி, விலை குறைகிறது.
 • அந்நேரம் அவை பயன்படும், வேறு உபயோகமில்லை.
 • ஒரு பேனாவை எழுதப் பயன்படுத்தலாம், அதற்கு இன்று வேறு பயனில்லை.
 • பணம் இன்றும் புதியதாக இருப்பதால் (scarce) அதற்கு மதிப்பு, கிராக்கியுள்ளது.
 • ஒரு நாள் பணம் சமூகத்தால் நிறைந்து மலியும். அன்று அதற்கு (exchange value) பொருள்களை வாங்கும் திறன் மட்டுமிருக்கும். சேமித்தால் பயன்படாது.

எவ்வளவு காற்றிருந்தாலும் நாம் தேவையான அளவுக்கே மூக்கால் பயன்படுத்துகிறோம். அதிகமாகப் பயன்படுத்த முடியாது. தேவையான அளவுக்குத் தாராளமாகப் பயன்படுத்த காற்று அபரிமிதமாக இருக்க வேண்டும் என்பது அவசியம். காற்றுபோல் பணம் ஒரு நாள் தேவைக்கு மட்டும் பயன்படும் அளவுக்கு சமூகத்தில் அளவுகடந்து பெருகும். எனவே,

அபரிமிதமான பணம் அவசியம் தேவை.

 

பணம் பெருகுவதால் என்ன பயன்? ஓரளவுக்குப் பெருகும் வரை நாம் பணத்தால் தேவையான பொருள்களை வாங்குகிறோம். இனி வாங்க வேண்டிய பொருள்களில்லை எனில் பணம் சேமிப்பாகிறது. சேமிப்புக்கு வட்டியாக வருமானம் வருவதால் மனிதனுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை (leisure) என்று ஓய்வுண்டாகிறது. ஓய்வு என்பது நம் மனத்திற்கு ஓய்வு. அதிலிருந்து புதுக் கருத்துகள் எழும். புது எண்ணம் புதுத் தெம்பை அளிக்கும். முன்னேற்றத்திற்கு முடிவில்லை என்பதை புதிய சக்தியை அளவு கடந்து உற்பத்தி செய்யலாம் என்று கூறலாம். சக்தி பணம்.

அளவுகடந்த பணத்தை முடிவில்லாமல் உற்பத்தி செய்யலாம்,

என்ற கருத்து தெளிவாகிறது.

குறைவாகச் சம்பாதிப்பவன் அதிகமாகச் சம்பாதிப்பது அவனுக்கு அதிக வருமானம். சமூகத்தில் உள்ள பணத்தின் அளவு அதனால் மாறாது. சமூகத்தில் உள்ள பணத்தின் அளவு பெருகுவது சமூகத்தின் வருமானம் அதிகரிப்பதாகும். அதையே பணம் பெருகுவது எனலாம்.

 • என்றும்போல் வாழ விரும்புபவர்க்கு அதிக வருமானத்தால் பெரும் பலனில்லை.
 • முன்னேற விரும்புபவன் முன்னேற்றத்திற்குரிய அதிக சக்தியை உற்பத்தி செய்வான். அதிக சக்தியை உற்பத்தி செய்ய லிமிட் கிடையாது. சக்தி பணம், அதிக சக்தி அதிகப் பணம். அவனால் அளவுகடந்த பணத்தை உற்பத்தி செய்ய முடியும்.
 • பணம் சரக்கன்று. சரக்குக்குப் பயன் உண்டு. வேறெதுவும் கிடையாது. பணம் சமூகத்தை மாற்றும் கருவி. எந்தச் சரக்காலும் சமூகத்தை மாற்ற முடியாது.

இன்றுவரை உலகில் பணம் பெருகியுள்ளது. இது நம்மையறியாமல் நடந்தது. கல்வி 1900வரை தானே பரவியது. அதன்பின் உலகம் கல்வி முக்கியம் எனக் கருதி முயன்று கல்வியைப் பரப்பியது. தானே நடந்தது (conscious) நாமே முனைந்து நடந்தால் (unconscious) அளவு கடந்து பெருகும். இதுவரை தானே பெருகிய பணத்தை இனி நாமே முனைந்து பெருக்க முயன்றால், பணம் பெருகுவதற்கு அளவில்லை. மனிதன் முன்னேறியுள்ளான். உழைத்தவன் இன்று சிந்திக்கின்றான். உடலிலிருந்து அறிவுக்கு முன்னேறியுள்ளான் என்று கொள்கிறோம். இந்த முன்னேற்றம் உண்மை என்றாலும், இது பூர்த்தியாகிவிட்டதா? இதனால் பெறவேண்டிய முன்னேற்றத்தில் நாம் இதுவரை பெற்றது சிறு பங்கு. மிகச் சிறிய பங்கு. இது உடலுக்கும், அறிவுக்கும் மட்டும் உள்ள நிலையில்லை. கார் வந்து 120 வருஷமாகிறது, போன் வந்து 140 வருஷமாகிறது. இரயில் வந்து 180 வருஷமாகிறது. இவை மேல் நாட்டார் நமக்குக் கொடுத்தது. கல்வி 1000 ஆண்டிற்கு முன் தெரிந்தது. கலை அது போல் நாம் முன்னரேயறிந்தது. குடும்பம் அதற்கு முன் ஏற்பட்டது. நிலத்திற்கு உரம் 60 வருஷமாக உள்ளது. இன்ஸுரன்ஸ் நாட்டில் 100 ஆண்டாகப் பழக்கம். சத்தியம் ஏற்பட்டு எவ்வளவு நாளாகிறது? இவற்றையெல்லாம் நாம் முழுவதும் பயன்படுத்துகிறோம் எனக் கூற முடியுமா? நாட்டின் கோணத்தில் பார்த்தால் இவற்றை 30% முதல் 1% வரைப் பயன்படுத்துகிறோம். போனும், கல்வியும், மருந்தும், நாணயமும் இனி ஏராளமாகப் பரவ இடம் உண்டு. அதேபோல், நாம் பணத்தை ஆயிரமாயிரமாண்டாக அறிவோம். அதை முழுவதுமாக இன்னும் அறியவில்லை.

பணத்தை நாடு பெருக்க முனைந்தால் ஏராளமாகப் பெருக்கமுடியும். அதற்கு முடிவில்லை.

கல்விக்குத் தடையிருந்த காலம் உண்டு. இனி அது இல்லை. லைப்ரரி என்பது பரவி வரும் காலம். தினசரிப் பத்திரிகைகளும், வார இதழ்களும், எளிய புத்தகங்களும் ஏராளமாக வெளிவருகின்றன. Internet கல்வியை உலகில் எங்கிருந்தும் பெறலாம் என்ற நிலையைத் தருகிறது. எந்தக் கல்லூரியிலும், எந்த நாட்டு கல்லூரியிலும் எவரும் பயிலலாம் என்பது இன்றைய நிலை.

படிக்க அளவில்லாத வாய்ப்புண்டு.

மனத்திற்கு இரு பகுதிகள் உண்டு. ஞானம், உறுதி எனப்படும். கல்விக்குரியது ஞானம். பணத்தை உற்பத்தி செய்வது உறுதி. அளவில்லாமல் படித்து ஞானத்தை உற்பத்தி செய்யமுடியும் என்றால், அளவில்லாமல் உறுதி பெருகும். இவை கூறுவது,

அளவில்லாமல் பணம் உற்பத்தியாகும்.

மனம் ஜடத்தை உற்பத்தி செய்தது என்பது ஸ்ரீ அரவிந்தம். வாழ்வு ஜடத்தின் பகுதி. பணம் வாழ்வில் கடுகளவு, மனம் பணத்தை உற்பத்தி செய்ய முனைந்தால், அதற்களவில்லை. மனிதன் தெய்வமாவது யோக இலட்சியம். ஸ்ரீ அரவிந்தரது சிஷ்யர்கள் கடவுளாகாவிட்டால், யோகத்தில் தோல்வியடைந்தவராவோம். குறைந்தபட்சம் பணத்தையாவது அபரிமிதமாக உற்பத்தி செய்து யோகத்தில் தோல்வியை ஏற்கலாம். இந்தச் சட்டம் பணத்திற்கு மட்டும் உரியதன்று. அளவுகடந்து பெருக்கும் அனைத்திற்கும் உண்டு. நாம் அளவு கடந்து (infinite) பெருகுவதைச் சில விஷயங்களில்தான் பார்க்க முடிகிறது. அப்பெருக்கம் உள்ள இடங்களிலெல்லாம் காண்பதில்லை. Internet உம்., e-mailம் ஒரு நாளைக்கு 10 லட்சம் செய்திகளை 100 கோடிச் செய்திகளாக மாற்றுகிறது. விமானப் பயணம் அதுபோல் வளர்கிறது. கலைக்களஞ்சியத்தைப் படிப்பவர் எண்ணிக்கையும் அதுபோல் வளர்கிறது. இவை வளர்ச்சியின் முடிவுக்கு முன்னுள்ள கட்டங்கள். அதைக் கடந்து போனால் அபரிமிதம், அனந்தமாகும். பணவளர்ச்சியை நாம் அதுபோல் தொடரலாம். வாழ்வு, காலத்தில் ஏற்பட்டது. நவீனச் சாதனங்கள் காலத்தைச் சுருக்குகின்றன. காலம் சுருங்கினால் வாழ்வு பெருகும். வாழ்வு பெருகினால் பணம் பெருகும். இதன் பலனை அடைபவர் பலர். அவர்கட்கு என்ன நடக்கிறது எனத் தெரியாது. 55 வயதில் ஓய்வு பெற்றவர் மேலும் 10 வருஷமிருப்பதில்லை. அது அரிது. அமெரிக்காவில் ஓய்வு பெற 65 வயதாக வேண்டும். 20 வருஷம், 25 வருஷம், 30 வருஷம் என சர்வீஸுண்டு. 45 வருஷ சர்வீஸும் உண்டு. 20 வருஷம் வேலை செய்து ஓய்வு பெற்றவர் 85 வயதில் 20 ஆண்டு பென்ஷன் பெறுகிறார். நிலைமை மாறுகிறது. 20 ஆண்டு சர்வீசில் பெற்ற தொகையை விட 20 ஆண்டு பென்ஷன் தொகை பெரியதாக இருக்கிறது. நிலைமை மாறி சம்பளத்தைவிடப் பென்ஷன் அதிகமாக வருகிறது. சமூகம் காலத்தைச் சுருக்குவதால் பென்ஷன் அதிகமாக வருகிறது என்பதை விளக்குவது கடினம்.

வேலை : மனிதனுடைய உற்பத்தித் திறன் அதிகமாவதால் மனிதன் தன் உழைப்பால் அதிகப் பணத்தை உற்பத்தி செய்கிறான்.

உறவு : நாளுக்கு நாள் மனிதன் மற்றவர்களுடன் பழகுவது அதிகமாகிறது. உறவு அதிகமானால் உற்பத்தி அதிகமாகும் என்ற கருத்து முழு உண்மையானாலும், பொருளாதாரரீதியாகவோ, தத்துவமாகவோ விளக்குவது எளிதன்று. உறவு அதிகமான இடத்தில் பணம் அதிகமாகப் புழங்குவதைக் காட்டலாம். பாங்க் டெப்பாசிட் 9 மடங்கு வளர்வதுபோல் இருவர் இனிக்கப் பழகுவது ஓர் உற்பத்தி ஸ்தானம். Human exchange is a point of production.

ஒரு புது ஸ்தாபனம் - ரயில்வே, தந்தி, தபால், கல்வி, சர்க்கார், Internet போன்றவை - வந்தால் ஏற்கனவே உள்ள அத்தனை ஸ்தாபனங்களும் அதனுடன் இணைகின்றன. அதனால் அத்தனையும் உயர்வடைகின்றன.

இப்படிப் பார்த்தால் பணத்தின் அளவும் திறனும் உயர்கின்றன. அதன் மூலம் மனிதனுடைய திறமை அதிகரிக்கிறது. அவனால் மேலும் பணம் உற்பத்தி செய்யமுடிகிறது. இதற்கு முடிவில்லை.

நம்பிக்கை ஆரம்பத்தில் சிறியது. நாளாக ஆக நம்பிக்கை அதிகரிக்கிறது. சர்க்கார் நெல்லை நல்ல விலைக்கு வாங்கிக் கொள்ளும் என்றால் நம்பிக்கை மேலும் உயர்கிறது. நம்பிக்கை உயர்ந்தால், பணம் பெருகும்.

அதேபோல் வேகம், ஆயுள், ஸ்தாபனம், சக்தி, எண்ணம், ஏற்றுமதி ஆகியவை அதிகரித்தால் பணம் பெருகும்.

அகந்தையை வெளிப்படுத்த அனுமதியில்லை. தானே கொண்டாடலாம். வெளியில் நானே பெரியவன் என்று கூற இனி இடமில்லை. அகந்தை அழிந்தால், பணம் பெருகும்.

பணமும், பண்பும் : நெல், கம்பு, மணிலா, உளுந்து போன்ற தான்யங்கள் பணம். மேஜை, நாற்காலி, பாத்திரம், மிக்ஸி போன்ற பொருள்கள் பணம். தையல், வைத்தியம், கூலிவேலை, கல்வி போதிப்பது, வழக்காடுவது போன்ற services சேவைகள் பணம். பொருள்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்பவன் பணம் சம்பாதிக்கின்றான். நாணயம், நல்லெண்ணம், நட்பு, கடமை, கட்டுப்பாடு, ஆகியவை பண்புகள். பொருள் பணம் என்பதை ஏற்கலாம். பண்பு பணம் என்பது விளங்கவில்லை. பண்பு என்பது மனித உறவில் மட்டுமன்று, வேலையிலும், வியாபாரத்திலும், ஆபீசிலும், தர்ம நியாயத்திலும், தனிப்பட்ட முறையிலும், ஆன்மீகத்திலும் பண்புண்டு. வேலையை அழகாகச் செய்வது (Work value) வேலைக்குரியது. ஸ்டூல் ஆடினால், கால் தரையில் படியாவிட்டால் அது வேலையில்லை. ஸ்டூல் அழகாக நன்றாக இருப்பது அவசியம். வீட்டுக்கு வருபவரை யார், ஏன் வந்தீர்கள்? என யாரும் கேட்கமாட்டார்கள். வருபவரை அன்பாக உபசரித்து வரவேற்பது (Social value) பழக்கத்திற்குரிய பண்பு. வியாபாரத்தில் விலையின் நேர்மை, பொருள் தரமாக இருப்பது (Commercial value) வியாபாரத்திற்குரிய பண்பு. பண்பில்லாத மனித உறவில்லை. வியாபாரிக்குப் பண்பில்லாவிட்டால் வியாபாரம் நடக்காது. ஆபீசில் வருபவர்களிடம் முகம் சுளித்தால் கெட்ட பெயர் வரும். பழகத் தெரியாவிட்டால் ஒதுக்கப்படுவோம். பண்பு நிறைந்தவர் வசதியாகவும், குறைந்தவர் வசதி குறைவாகவுமிருப்பார்கள். பண்பு பணம்.

பொருளை உற்பத்தி செய்தால் அதன் மூலம் வேலை வரும். தான்யம் பத்திரப்படுத்தப்பட வேண்டும். பேப்பர் உற்பத்தி செய்தால் லாரி மூலம் அனுப்ப வேண்டும். உற்பத்தி, பொருள் எனில் வேலையுண்டு. வேலைக்குரிய பண்புண்டு. வேலைக்குரிய பண்புகள் (Functional values) என்பன அலமாரியைத் திறந்தால் மூடவேண்டும், சாவியை உரியவரிடம் தரவேண்டும். அது தவிர மனிதனுக்குரிய பண்புண்டு. சிறியவரிடம் சாவியைக் கொடுக்கும் போது அன்பாகக் கொடுக்க வேண்டும். பெரியவரிடம் தரும்போது பணிவாகத் தரவேண்டும். பெண்களிடம் தரும்பொழுது பெண்ணுக்குரிய மரியாதை வேண்டும். இவை (Pure values) பண்புகள், மனிதத் தன்மைக்குரிய பண்புகள். பொருள் உற்பத்தியாவதும், வேலை செய்வதும் மனிதனுக்குரியது. பண்பு என்பது சூட்சுமமானது. அது மனிதனுடன் நிற்பதில்லை. அதற்கு முடிவில்லை. மரியாதைக்கும், நாணயத்திற்கும் எல்லையில்லை. அவை முழுமை பெறும்வரை, முடிவில்லாமல் வளர்பவை. பண்பு பணமானால், பண்புக்கு முடிவில்லை என்றால், பண்பால் உற்பத்தியாகும் பணத்திற்கும் முடிவில்லை.

பண்புகளை முடிவில்லாமல் உற்பத்தி செய்பவன், பணத்தைமுடிவில்லாமல் உற்பத்தி செய்ய முடியும் என்பது தத்துவம்.

தரமான பொருள், குறித்தபடி கொடுப்பது, அழகான பேக்கேஜ், நாணயமான வியாபாரம், நம்பிக்கையான கொள்முதல், இனிய பழக்கம் ஆகியவை சரக்குக்கு மரியாதை தரும். அதேபோல் டாக்டர், வக்கீல், ஆடிட்டர், ஆசிரியர், ஆபீசர் ஆகியவர் செய்யும் வேலைகளும் பணியால் சிறப்படைகின்றன. பண்பு பொருள்களிலிருந்து வேறுபட்டன என்றாலும், வேலையுடன் கலந்து வரும் பண்புகளே அதிகம். மனம் ஜடத்தை உற்பத்தி செய்தது. பண்பு பொருள்களை உற்பத்தி செய்தது. நாம் பொருள்கள் என்று கூறுவது மனிதனுக்குரிய பல்வேறு பண்புகளால் உற்பத்தி செய்யப்பட்டவை. நாம் பொருள்களை ஜடமாகவும், வேலையை உழைப்பாகவும், பண்புகளை மனத்திற்குரியனவாகவும் கருதுகிறோம் என்றாலும், முடிவாக அனைத்தும் ஒன்றே.

சமூகம் பொருள்கள் மூலம் பணம் உற்பத்தி செய்வதுபோல், பண்புகள் மூலமும் பணத்தை உற்பத்தி செய்கிறது. சமூகம் பண்பால் பணத்தை உற்பத்தி செய்தால், மனிதன் பண்பால் பணத்தை உற்பத்தி செய்யலாம். பண்புள்ளவர் பண்பற்றவரைவிட அதிகமாகச் சம்பாதிப்பதைக் காண்கிறோம். பண்பு தனியாகப் பணம் சம்பாதிப்பதைக் காண்பது அரிது. ஒரு புதிய பழக்கம், ஸ்தாபனம் சமூகத்தில் உற்பத்தியானால், சமூகம் ஓரளவுக்கு அதற்குத் துணை செய்யும். அப்பழக்கம் வேரூன்றிவிட்டால், அதுவே தானாக வளரும். ஒரு செடியை நட்டால் நாம் அது வேரூன்றுவதுவரை தண்ணீர் விடுகிறோம். அதன்பிறகு தானே வளர்வதுபோல் சமூகப் பண்புகள் ஓரளவுக்கு வளர்ந்தபின் தாமே வளரும்.

ஆயிரம் ஆண்டுகட்கு முன் மனிதன் பேச்சை அதிகமாக அறியவில்லை. ஓரூரில் கொஞ்சம் பேர்தான் சரளமாகப் பேசுவார்கள். மற்றவர்கள் எளிய சொற்களை மட்டும் அறிவார்கள். அன்று ஒருவன் சளைக்காமல் பேசுவதை ஆச்சரியமாகப் பார்த்தனர். ஒரு நாள் ஊரிலுள்ள அனைவரும் அவன்போல் பேசுவார்கள் என்று அன்று கூறியிருந்தால், எவரும் நம்பியிருக்கமாட்டார்கள். இன்று ஓரூரில் ஒரு கோடி பணம் உள்ளவர் சிலர். ஒரு நாள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி சொத்திருக்கும் என்று இன்று கூறினால் நம்புவது கஷ்டம். மொழி பரவியதுபோல் பணமும் பரவும். மொழி வளர்ந்து வேரூன்றி தானே வளர ஆரம்பித்துவிட்டது. தன்னையறியாமல் வளர்கிறது.

இது மொழிக்கும், பணத்திற்கும் மட்டும் உரிய சட்டமன்று. கல்விக்கும் உரிய சட்டம் இதுவே. நாணயத்திற்கும் அதுவே பொருந்தும். நம்பிக்கைக்குரிய சட்டமும் அதுவே. சமூகம் ஏற்படுத்துகிற ஸ்தாபனங்களாகிய விவசாயம், வியாபாரம், மார்க்கட், போக்குவரத்து, விளையாட்டு, கல்வி, குடும்பம், பணம், மொழி ஆகிய அனைத்து ஸ்தாபனங்கட்கும் இது பொது விதி. ஆயிரமாண்டாக மார்க்கட் வளர்ந்தது. கடந்த 20 வருஷமாக மார்க்கட் வளர்வது, tourism வெளிநாட்டுப் பிரயாணிகள் எண்ணிக்கைக் கூடுவது இந்தச் சட்டப்படிதான். நாம் வளர்ச்சியைக் காண்கிறோம், வளர்ச்சியின் காரணத்தை அறிய முயல்வதில்லை. பொருள்கள் பணம், தொழில் பணம். பண்பு பொருள்களுக்கு அதிக விலை தரும், தொழிலுக்கு அதிக பீஸ் தரும் என்பவை விளங்கும். பண்புகள் மட்டும் பணம் என்பது விளங்காது. கடந்த 20 அல்லது 30 ஆண்டுளாக இந்திய மார்க்கட் அது போன்ற பண்புகள், வியாபாரத்திற்குரிய பண்புகளை - punctuality, சுத்தம், நாணயம், அழகான பேக்கேஜ் போன்ற பண்புகள் - ஏற்றதால் விரிவடைந்துள்ளது. எந்த நாட்டில் மார்க்கட் வளர்ந்தாலும், இப்படித்தான் வளர்கிறது. பண்பால் வளர்ந்தன என எடுத்துக் கூறலாம். எந்தக் கோணத்தில் விளக்கினாலும், பண்புகள் அதனுள் அடக்கம்.

கம்ப்யூட்டர் அசுர வேகத்தில் வளர்கிறது. வேகத்திற்குரியது கம்ப்யூட்டர். வேகம் வளர்ச்சி. வேகத்தை வளர்க்கும் கம்ப்யூட்டர் வளர்வதில் ஆச்சரியமில்லை. வேகம் காலத்தைச் சுருக்குகிறது. சக்தியைக் குறைக்கிறது. வேலையைக் குறைக்கிறது. இவையெல்லாம் பணம் பெருகும் வழிகள். பொருளாதாரம் ஒரு நாட்டில் முன்னேறுவதை டெக்னாலஜி மூலம் அறிகிறோம், முதலீடு மூலம் அறிகிறோம், நிலக்கரி, எண்ணெய் போன்றவை கிடைத்ததன் மூலம் புரிந்து கொள்கிறோம். பண்புகளால் பொருளாதாரம் வளர்வதை நாம் கவனிப்பதில்லை.

சமூக வளர்ச்சிக்குப் பல அங்கங்களுண்டு. பொருளாதாரம் அதில் ஒன்று. அரசியல் வளர்ச்சி முக்கியமானது. ராணுவம் அடுத்தது. கல்வி, கலை எனப் பல அம்சங்களில் பொருளாதாரம் ஒன்று என்பதை நாம் முக்கியமாகக் கருத வேண்டும்.

குழந்தை தானே வளர்வதுபோல் சமூகம் தானே வளர்கிறது. குழந்தையின் வளர்ச்சிக்குச் சாப்பாடு, கவனம், காற்று என்பவை துணை செய்கின்றன. அதேபோல் சமூகம் தானே வளர்கிறது. டெக்னாலஜி, மூலதனம், கனிப்பொருள்கள், பணம், போக்குவரத்து என்பவை துணை செய்பவை. சமூக வளர்ச்சியில் பொருளாதார வளர்ச்சி ஒன்று. தானே வளராத சமூகத்திற்குப் பணமோ, டெக்னாலஜியோ, மற்ற எதுவோ பயன் தாராது. சமூகத்தின் வளர்ச்சி தன்னிச்சையாக வளர்வது.

சமூகத்தின் வளர்ச்சியைப் பல கோணங்களில் பார்க்கலாம் என்றாலும், பண்பால் சமூகம் வளர்வதைக் கருதுவோம். பண வளர்ச்சியே நம் கருத்து, சமூகமன்று. மனித வாழ்வு சௌகரியமாவது சமூக வளர்ச்சி. மனிதனுக்கு வசதியும் சௌகரியமும் வருகின்றன. இது சமூகத்தின் நல்லெண்ணம். மனிதன் வசதியாக வாழவேண்டும், நீண்ட ஆயுளுடனிருக்கவேண்டும், சுத்தமான சூழ்நிலையில் ஆரோக்கியமாக இருக்கவேண்டும், பற்றாக்குறையால் பதறக்கூடாது, படிப்பறிவு பெறவேண்டும் என்பது சமூகத்தின் நல்லெண்ணம். இதன் பிறகு சமூகம் அவனுக்கு அதிக வசதி தரும்பொழுது குறைந்த விலைக்குத் தருகிறது. இன்றைய சமூகத்தின் நல்லெண்ணம் மனிதனுக்கு மலிவுப் பொருளாக வருகிறது. நாம் வாங்கும் பொருள் அதிக வசதி தருவதாகவும், குறைந்த விலையுள்ளதாகவு மிருக்கின்றது. கம்ப்யூட்டரிலும், தினசரி பேப்பரிலும் இதைத் தெளிவாகக் காணலாம். மக்கள் செலவைக் குறைத்து அதிக வசதி பெறுவதால் பணம் உபரியாக அவர்கள் கையிலிருக்கின்றது. ஏராளமாகப் பணம் மக்கள் கையிலும், பாங்க்களிலும், கம்பனிகளிலுமிருப்பதால் வட்டி குறைகிறது. இந்தியாவில் டெபாசிட் போட்டால் 12% வட்டி கிடைக்கும். ஐரோப்பா, அமெரிக்காவில் 3%, 3½% தான் கிடைக்கும். ஜப்பானில் 0% வட்டி. அனைவரும் இதை அறிந்தாலும் சமூகக் கண்ணோட்டத்தில் இதன் காரணம் எவருக்கும் விளங்கவில்லை.

இதை நான் maturity சமூகம் முதிர்ச்சியடைந்தது என்று கூறுகிறேன். இக்கட்டத்திற்குப்பின் பணம் தானே பெருகும் (self-multiply). வேரூன்றிய செடி இனி எவரும் நீர்ப் பாய்ச்சாமல் தானே வளர்வதுபோல் இக்கட்டத்திற்குப் பிறகு பணம் தானே வேறு உதவியோ, காரணமோயில்லாமல் பெருகும்.

இன்று சமூகம் பெறும் திறன் நாளை தனி மனிதனுக்கு வரும்.

மனிதன் தன்னிடம் உள்ள பணத்தை தானே பெருக்கிக்கொள்ள முடியும் என்ற திறன் பெறுவான். அது நடக்க நாளாகும். ஓர் ஆசிரியர் எழுதும் புத்தகம் பிரசுரமானால் அனைவருக்கும் கிடைக்கும். அதற்கு இடைவெளியுண்டு. ஆசிரியருடைய நண்பருக்கு, பிரசுரத்திற்கு முன்பே பிரதி கிடைக்க முடியும். சமூகம் இன்று பெற்ற திறனை - பணம் தானே பெருகும் திறனை - மனிதன் இன்றே பெற வழியுண்டு. அதற்கு மனிதன் சமூகத்தை எட்டவேண்டும், இத்திறனுடைய மூலத்தை எட்டித் தொடவேண்டும்.

 • நல்லெண்ணத்தால் சமூகம் தன் பணத்தைத் தானே பெருக்கிக்கொள்கிறது.
 • நல்லெண்ணமுள்ள மனிதன் சமூகத்தை இவ்விஷயத்தில் தொடமுடியும். அதன்மூலம் இத்திறனைப் பெறமுடியும்.

மனிதன் நல்லெண்ணம் பெறுவதுடன், தானே அவனுள் நல்லெண்ணம் பெருகும் மனநிலையை அடையவேண்டும். அதன்மூலம் சமூகம் பெற்ற திறன் அவனுக்கு அவனுடைய சொந்தத் திறனாக வரும்.

கிராமப்புற வாழ்வையும் பம்பாய்போல் பெருநகர வாழ்வையும் எடுத்துப் பார்ப்போம். கிராமத்திலும், பம்பாயிலும் ஒரே திறனுடையவர் ஒரே வேலையைச் செய்வதானால் இங்கு 10 பேர் வேலை செய்தால், அங்கும் பத்து பேர் வேலை செய்தால் வித்தியாசம் (values) பண்புகள். செய்பவருடைய திறமை சமம். பண்புகள் இங்கு கிராமப்புறப் பண்புகள். அங்கு பம்பாய்க்குரியது. பலன் வரும்பொழுது நகரத்தில் 5 அல்லது 10 மடங்கு அதிகப் பலன் பணமாக வரும். அவ்வதிக வருமானம் பண்புகள் சம்பாதித்தது.

பண்புகள் பணத்தை ஈட்டும் என்பதை ஏற்பது சிரமமில்லை. ஒரே படிப்பு, வயது, திறமை, சந்தர்ப்பமுள்ள இருவர் பண்பால் மாறுபட்டிருந்தால் அவர்கள் சாதனைகள் அதிகமாக மாறுபட்டிருக்கும். அதைப் பணமாகவும் கணக்கிடலாம். அந்த வித்தியாசம் பண்புக்குரியது.

பண்பில்லாமல் செயலில்லை.

நல்லதோ, கெட்டதோ செயலுக்குப் பண்புண்டு.

மேற்சொன்ன உதாரணத்தில் மாறுபடுபவை punctuality, சுத்தம், நியாய விலை, பேரம் பேசாதது, குறித்த நேரத்தில் கொடுப்பது, நாணயம், இனிமை, பாதுகாப்பு, பிறர்நோக்கு ஆகியவை.

ஓர் இடத்தில் தலைக்கு மாதம் ரூ.2000/- வந்தால் அடுத்த இடத்தில் ரூ.20,000/- வருகிறது. பண்புகள் 10 மடங்கு சம்பாதிக்கும் எனக்கூற இவ்வுதாரணம் உதவும். அன்னையை அழைப்பது அன்னையைப் பொதுவாக ஏற்பது. அன்னையின் பண்புகளை ஏற்பது, ஒவ்வொரு வேலையிலும் ஏற்பது நாம் அதிகபட்சம் அன்னையைப் பெறுவதாகும். அன்னைக்கு முக்கியமான பண்புகள் நிதானம், இனிமை, பொறுமை, தெளிவு, பிறர்நோக்கு போன்றவை.

பண்புகள் இரு முனையில் செயல்படுவதாக (double opening) யோக பாஷையில் கூறலாம். மேலே போவது சிறப்பு, அளவு, பரப்பு ஆகியவற்றை வளர்க்கும். மனத்தின் வளர்ச்சியை, கீழே போகும்போது உடலுக்கும், உணர்வுக்கும் தருவது அடுத்தது. தன் பணத்தைத் தானே பெருக்கிக்கொள்ள முன்னோடியாக ஒருவர் கற்றுக்கொண்டால், அது அவருக்குப் பெரிய பலன் தரும். ஆர்ட்டீஷியன் கிணறுபோல தானே பெருகுவது தடை செய்யாமல் பெருகும். ஒரு விதை ஓராயிரம் விதையைத் தருவதைப்போல் அது பெருகும். தானே பெருக ஆரம்பித்தபின் அதற்கு வெளியுதவி தேவையில்லை. தானே வேரூன்றி, பலன் தரும்.

மொழி, குழந்தை பிறந்தவுடன் பிறப்பதில்லை. குழந்தை நெடுநாள் பேச்சைக் கேட்கிறது. ஒரு நாள் பேச ஆரம்பிக்கிறது. சில சொற்கள், பிறகு மொழியாகின்றன. மனிதன் வளர்ந்தபின் சிலர் பேச்சாளராகின்றனர். எண்ணம் உள்ளே சேர்ந்தால் பேச்சாக வெளிவரும். சக்தி, திறமை, நம்பிக்கை மனதில் சேர்ந்தால், பணமாக வாழ்வில் வெளிப்படும்.

பணம் ஒரு பொருளன்று. அது ஒரு சின்னம். நம்பிக்கையின் சின்னம். பிறரை நம்புவது, பரஸ்பர நம்பிக்கை, சமூகத்தையும், அதன் ஸ்தாபனங்களையும் நம்புவது, பொதுவாக மனித மனத்திலுள்ள நல்லெண்ணத்தை நம்புவது ஆகியவை நம்பிக்கையின் உருவங்கள்.

இன்று கொலை நடக்கிறது, கொள்ளையடிக்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள், பிரயாணத்தில் ஆபத்து வருகிறது. புயல், பூகம்பம் வந்தால் சமூகம் உதவுகிறது. இக்கொடுமைகள் குறைந்து வருகின்றன. ஒரு நாள் மனித வாழ்வில் சூறையாடுவதும், கொலையும், கொள்ளையாகவுமிருந்தது. அது மாறி நாகரீகம் வந்தும் அப்பழைய பழக்கங்கள் இன்னும் தொடர்கின்றன. சமூகம் வளர்ந்து மாறி தன் நல்லெண்ணத்தைப் பிரவாகமாக மனிதனுக்குக் கொடுப்பதை அன்று ஒரு நாள் உலகம் எப்படியிருந்தது, இன்று எப்படி மாறியுள்ளோம் என மேற்சொன்னவை காட்டுகின்றன. இராணுவம் எல்லையைப் பாதுகாக்கிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறது. இவை சமூகத்தின் நல்லெண்ணத்தால் நடப்பவை.

உடல்நலத்தையும், கல்வியையும் கட்டாயமாக சமூகம் நமக்குத் தருகின்றது. இன்ஷூரன்ஸும், பென்ஷனும் சமூகத்தை நம்பலாம் என்பதற்குரிய சின்னங்கள். நம்பிக்கைக்கு ஓர் அளவுகோலிருந்தால், ஆயிரம் மடங்கு நம்பிக்கை வளர்ந்துள்ளதைக் காட்டும். இந்த நம்பிக்கை பணம். முடிவில்லாத வழிகள் மூலம் முடிவில்லாத வளர்ச்சி பணத்திற்குரியது.

முடிவில்லாத பணம் :

பணம் வருமுன் உபரி சக்திக்கு உபயோகமில்லை. பணம் வந்தபின் அது பயன்படுகிறது. தவணை முறை வந்தபின் எதிர்கால உழைப்பைப் பணமாக்கியது. கடன் கடந்த கால உழைப்பால் வந்த சொத்து பணமாகியது. பணம் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும், நிகழ்காலத்திற்குள் கொண்டுவந்து வாழ்வை விரிவுபடுத்தியுள்ளது.

 • அப்படிச் செய்ததில் மனிதத்திறன் (potentials of man) ஓரளவு வசதியாகியுள்ளது.
 • நாமறியாத திறமைகள் ஏராளம்.
 • அவற்றைப் பணமாக்கும் வழிகளும் ஏராளம்.
 • இன்றுள்ள பணம்போல் அது ஆயிரம், லட்சம் மடங்கு.
 • நாகரீகம் தன்னையறியாமல் அப்பணத்தை உற்பத்தி செய்துள்ளது.
 • அறிந்து செய்தால் ஆயிரம் மடங்கு பணம் உற்பத்தியாகும்.
 • கல்வி, பிரயாணம், மருந்து, விஞ்ஞானம், வசதி ஆகியவை அதுபோல் இன்று ஆயிரம் மடங்கு பெருகியுள்ளன. இனியும் ஏராளமாகப் பெருகும். பணமும் அந்தச் சட்டத்திற்குட்பட்டதாகும்.

செலவுக்குப் பணம் வரும், சேமிப்புக்கு வாராது :
 

சேமிப்பு என்பது பழங்காலத்திற்குரியது. ஜாதி அழிய வேண்டும், மூடநம்பிக்கை அழியவேண்டும் என்பதில் எதிர்காலத்தில் சேமிப்பும் சேரும். சேமிப்பு அர்த்தமற்றதாகிவிட்டால், பணத்திற்கு என்ன செலவு? பணத்தை நல்ல முறையில் செலவு செய்ய மனிதன் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. பொருள்கள் விலை இறங்குவதால் பணம் உபரியாகும்.

தானே பெருகும் பணம் :

இயற்கையில் பிராணிகளும், தாவரங்களும் பெருகுகின்றன. மனித குலம் தானே பெருகி வருகிறது. இது வேறு தலைப்பு. அதேபோல் சமூகத்தில் உற்பத்தியாகும் எந்த அம்சமும் - கல்வி, கலை, பொருள்கள் - தாமே பரவுகின்றன. பணமும் அதுபோல் பரவுகிறது. ஒரு கட்டத்தில் தாமே அவை பெருகுகின்றன (self-multiplying). பணம் கொஞ்ச நாட்களாக அந்நிலையை அடைந்துள்ளது.

இயற்கையிலும், சமூகத்திலும், ஆன்மீகத்திலும் இவ்வுண்மையைக் காண்கிறோம் (One becomes the many). இறைவன் சிருஷ்டியாவதால் குறைவதில்லை. பரமாத்மா, ஜீவாத்மாக்களை குறைவின்றி உற்பத்தி செய்கிறது. அதனால் பரமாத்மா குறைவதில்லை. குறையாத தன்மை (infinity) மனம், வாழ்வு, ஜடத்திற்குண்டு. எல்லாவற்றிற்கும் உண்டு என்பது தத்துவம். சக்திக்கும், ரூபத்திற்கும் முடிவில்லாமல் வளரும் குணம் உண்டு. பணம் அதற்கு விலக்கன்று.

பணம் முடிவில்லாமல் வளரும் தன்மையுடையது.

 

மனித வாழ்வு மற்றவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது. கண்மூடியுள்ளவரை சூழல் வாழ்வை நிர்ணயிக்கும். நாம் நம்மையறிந்தால் (conscious) நம் சூழலை நிர்ணயிக்கலாம். இன்று பணம் தானே பெருகுகிறது. நாம் கண்ணைத் திறந்தால் பணத்தை முடிவின்றிப் பெருக்கலாம்.

சமூகத்திற்கு உடல் உண்டு. ஜடமான பொருள்கள் - வீடு, ரோடு - சமூகத்தின் உடல். பணம் சமூகத்திற்கு உயிர். உடல் மந்தமானது, உயிர் வீர்யமானது. உடலும் பெருகும், மெதுவாகப் பெருகும். உயிர் வேகமாகப் பெருகும். பணம் வேகமாகப் பெருகும்.

வளர்ச்சிக்கு இரு நிலைகள் உள்ளன. (multiplication, self-multiplication) உணவால் வளர்வது வளர்ச்சி, உணர்வால் வளர்வது தானே பெருகுவது. தானே பெருகுவது உள்ளுணர்வின் தன்மையைப் பொருத்தது.

சமூகத்தின் திறமை :

நாளுக்கு நாள் சமூகத்தின் திறமை அதிகரிக்கிறது. அதை மனிதனுக்கு சமூகம் கொடுக்கிறது. அதனால் சமூகம் மனிதனைக் கட்டுப்படுத்தியது. நாகரீகம் வளரும்பொழுது கட்டுப்பாடு தளர்ந்து, சுதந்திரம் வருகிறது. முன்னேறிய நாடுகளில் சுதந்திரம் அதிகம். தன்னிஷ்டப்படி வெளிநாடு போக, தான் விரும்பிய கடவுளை வணங்க, தான் இஷ்டப்பட்டதை கற்க, பல நாடுகளில் சுதந்திரம் உண்டு. பல நாடுகளில் இல்லை.

 • சமூகம் எந்தப் புதியதை ஏற்றாலும், மனிதனுக்கு அவ்வசதி வரும்.
 • அது பணத்தைப் பெருக்கும்.

உலகில் நாகரீகம் வளர்வதால் மனிதன் பெறும் வசதிகளும், சுதந்திரமும் பெருகுகின்றன. இவை தாமே நடப்பவை. அதற்குப் பதிலாக மனிதன் தன்னையறிந்து செயல்பட்டால், வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். அந்தச் சட்டம் எல்லா அம்சங்களுக்கும் உண்டு.

 • நம் கருத்து பணம். பணம் பெருகக் கூடிய அளவில் சிறு அளவே பெருகியுள்ளது. முயன்றால் அளவுகடந்து பெருகும்.

சூட்சும ஞானம் தரும் பாதுகாப்பு :

வசதியும், இலாபமும், அதிகாரமும் ஏராளமாக உள்ள இடத்தில் ஆபத்து, ஏமாற்றுதல் ஏராளமாக இருக்கும். எந்தத் துறையில் இலாபம் இருந்தாலும் அதே துறையில் உள்ளவர்க்கே அது பயன்படும். மற்றவர்க்குப் பயன்படாது. ஏனெனில் அதே துறையில் உள்ளவர்க்குத்தான் அத்துறையின் சூட்சும ஞானமிருக்கும். சூட்சும ஞானமிருந்தால்தான் பாதுகாப்பிருக்கும். பொதுவாக இதை அனுபவம் என்போம்.

மேடைப் பேச்சிலிருந்து சமையல்வரை துறை தெரியாதவர் அதிக நாள் அங்கிருக்க முடியாது. மேடைப் பேச்சின் நுணுக்கமறியாதவர்களைக் கேலி செய்து அனுப்பிவிடுவார்கள். சமையலில் அஜாக்கிரதையாக இருந்தால் கை கால் சூடு விழும், சமையல் வாராது. எல்லாத் துறைகளிலும் அனுபவம் உண்டு. அனுபவத்தின்மூலம் சூட்சும ஞானம் உண்டு. அதில்லாதவர்க்கு அத்துறை தன் பரிசைத் தாராது.

நாம் பணத்தை அபரிமிதமாக உற்பத்தி செய்யலாம் என்கிறோம். உற்பத்தி செய்வது திறமை. திறமை மட்டும் போதாது. பணத்திற்குச் சூட்சும ஞானமில்லாவிட்டால் அது பாதியில் தோற்கும். அது முழுவதும் பலித்த பிறகு தொந்தரவாக முடியும். பொதுவாக சூட்சும ஞானம் என்ன என்பதையும், பணத்தில் அது என்ன என்பதையும் அறிவது அவசியம்.

எந்த வேலையையும் சொல்லிக் கொடுக்கலாம், காட்டிக் கொடுக்கலாம், பயிற்சி அளிக்கலாம். சொல்லையும் பயிற்சியையும் கடந்து நாமே கற்றுக்கொள்ளக்கூடியன எல்லா வேலைகளிலும் உண்டு. அவற்றை சூட்சுமம், ரகஸ்யம் என்கிறோம். அரசியல் திறமை, நிர்வாகம், தலைமை என்பவற்றைக் கடந்து பிரபலம் என்பது இப்படிப்பட்டது. எழுத்தாளருக்கு நடை, சமையல் பதம், சங்கீதத்தில் பிரபலம் போன்றவை சூட்சுமத்தைச் சேர்ந்தன.

 • சூட்சும ஞானமில்லாவிட்டால் பலிக்காது.
 • சூட்சும ஞானமிருந்தால்தான் பலித்தாலும் பாதுகாப்பிருக்கும்.

பொதுமக்கள் இதை இராசி என்பார்கள். இராசி என்பது சூட்சுமத்தின் பகுதி. இதைப் பலவகைகளாகக் கூறலாம்.

 • நம் நிலைக்கு மேம்பட்ட ஞானம்.
 • நம் சூட்சும நிலைக்குரிய ஞானம்.
 • அனுபவ ஞானம்.
 • பகுதியை அறியும் முழுமையின் ஞானம்.
 • சாரத்தை அறியும் ஞானம்.
 • உணர்ந்து அறியக்கூடிய ஞானம் என விவரிக்கலாம்.

ஏராளமாக விவரம் தெரிந்தால் அதன் மூலம் இதைப் பெறமுடியும். பணம் முதல் பொருளாக இருந்தது. பிறகு வேலையாயிற்று. முடிவாகப் பண்பாயிற்று. இவை ஒவ்வொன்றிற்கும் சூட்சுமப் பகுதிகள் உண்டு. அவற்றை எல்லாம் அறியவேண்டும்.

பழம் என்பது பொருள். அதை வாங்கி விற்பவன் பழம் எத்தனை நாளைக்கு வரும், விற்க எத்தனை நாளாகும், எவ்வளவு அழுகிப் போகும் என்பதை அறிந்து கொள்முதல் செய்யவேண்டும். அப்பொழுதுதான் இலாபம் வரும். வேலையில் சூட்சுமம் உண்டு. ஹோட்டல் சர்வரிலிருந்து ஹைகோர்ட் வக்கீல்வரை வாடிக்கைக்காரரை அறியமுடியாதவருக்குத் தொழில் பலிக்காது.

எந்த வேலையிலும் நல்லது, கெட்டதுண்டு. இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் சூட்சுமம் மிஞ்சி நிற்கும். மனை விற்குமிடங்கள், ரொக்க லாவாதேவி, புரோக்கர் வேலை செய்யுமிடங்களில் சூட்சுமம் மிச்சமாக இருக்கும். அங்கெல்லாம் திருட்டுத்தனம் அதிகமாகப் பலிக்கும். குற்றவாளிகட்கு சூட்சுமம் அதிகம். வேலையின் எல்லா அம்சங்களும் தெரியும் நேரம் பகுதியின் சூட்சுமம் விளங்கும்.

மார்க்கட் என்பது பெரியது. பண்டமாற்று அதன் பகுதி. மார்க்கட் புரிந்தால் பண்டமாற்று புரியும். உபரியான சக்தியைச் சேகரம் செய்வது நம் திறமையை வளர்ப்பது. பணம் என்பதில்லாவிட்டால் மனிதன் தனக்கு வேண்டியதை மட்டும் உற்பத்தி செய்வான். உபரியை உற்பத்தி செய்யமாட்டான். பணமாக உபரியை மாற்றலாம் என்பதால் உபரியை உற்பத்தி செய்கிறான். பணம் சம்பாதிக்கும் ஆசையால், அதிகபட்சம் வேலை செய்கிறான். நாணயம் வந்தபிறகு உள்ளூர் சரக்கை வெளியூரில் விற்க முடிந்தது. நோட்டு வந்தபிறகு வெளி மாநிலத்தில் விற்க முடிந்தது. பணம் இவை மூலம் மனிதனுடைய ஆட்சியை விரிவு செய்கிறது.

வெகு தூரத்தில் பொருள்களை விற்றால் பாங்க்மூலம் பணம் வசூலாகும். ரயில்வேமூலம் சரக்கு போகும். பணம் வசூல் செய்ய கோர்ட்டிற்குப் போக வேண்டிவரும். சுங்க வரி கட்டுகிறோம். பாங்க், ரயில்வே, கோர்ட், சர்க்கார் ஆகிய ஸ்தாபனங்கள்மூலம் பணம் செயல்படுகிறது.

நேரடியாகப் பணம் செலாவணியாவதற்குப் பதிலாக ஒரு ஸ்தாபனத்தின்மூலம் பணம் செயல்பட்டால், பணத்திற்கு சக்தி வளரும்.

பாங்க்மூலம் சரக்கு விற்கப்பட்டால், பணத்தை ஏமாற்றமுடியாது, வசூலிக்கப்படும். ஏமாற்ற முடியாது எனில் பணத்திற்கு பலம் வந்துவிடும். அதிகமான ஸ்தாபனங்கள் மூலமாக பணம் செயல்பட்டால் அத்தனை மடங்கு பணத்திற்கு பலமும், மரியாதையும் வரும். அத்துடன் அதன் சூட்சுமப் பலமும் வளரும். ஊரில் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் அவர் யாரிடம் கடன் வாங்கியிருக்கின்றாரோ, அவருக்குக் கட்டுப்படுவார். அதாவது பணத்திற்குக் கட்டுப்படுவார். பணம் உற்பத்தியானது, வளர்ந்தது, வளர்ந்து முடிந்தது, அதன் சூட்சும சக்தி ஆகியவற்றிற்குச் சட்டங்களுண்டு. இவை இத்துறையிலுள்ளவர் அறிவர். இந்தச் சட்டங்களையும், அதன் சூட்சுமங்களையும் அறிந்தால்,

 1. பணத்தைப் பெருக்கலாம்.
 2. பெருகிய பணத்தால் வரும் ஆபத்திலிருந்து தப்பலாம்.

பௌதீகம், ரசாயனம் ஆகிய சட்டங்களுடன் பணத்தின் சட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது பயன் தரும். கணிதம் இச்சட்டங்களைச் சூத்திரமாக்கும், தத்துவம் சுருக்கும், கவி காவியநயத்துடன் கூறுவார், யோகி சாதிப்பார்.

பணம் பெருகவேண்டும். பெருகியபின் அதனால் தொந்தரவு வரக்கூடாது. நாம் சம்பாதித்த பணத்தால் நமக்குத் தொந்தரவு வரக்கூடாது. நம் பணத்திலிருந்து நமக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பவை அனைவருக்கும் தெரிந்தவை என்றாலும் விளக்கம் அவசியம்.

கோடிக்கணக்காக லாட்டரியில் சம்பாதித்த பலரை நிருபர்கள் பேட்டி கண்டனர். அத்தனை பேரும் பணத்தை இழந்தவர்கள். இழந்ததால் தாம் முன்னிருந்த நிலையைவிட மனத்தால் தாழ்ந்தவர்கள். அடுத்த முறை பரிசு கிடைத்தால் ஏற்கமாட்டோம் என்றும் கூறினார்கள். எது உண்மையோ, இல்லையோ அவர்கள் பெற்ற பெரும் பணம் அவர்கட்கு சந்தோஷம் தரவில்லை.

பணத்தால் எப்படித் தொந்தரவு வரும் என்பது இத்தலைமுறையில் சம்பாதித்தவர்கள் அறிவார்கள். பரம்பரை பணக்காரனுக்குண்டான நிதானம், அனுபவமில்லாமல் அந்த அனுபவம் பெற பணத்தை இழந்து, நிம்மதியையும் இழப்பவர் அதிகம். சில கோடி சம்பாதிப்பவர்கட்கு இப்பிரச்சினை அதிகமாக இல்லை. பல ஆயிரம் மடங்கு சொத்து சேரும்பொழுது அதை நிர்வாகம் செய்ய முடியாமலும், அவற்றால் ஏற்படும் மனத்தாங்கலும், டென்ஷனும் பெரிய தலைவலி. பெரும்பாலும் பணத்தை இழந்துவிடுவார்கள். அடுத்த தலைமுறை கட்டுப்படாது. இவை அனைவருக்கும் உள்ள பிரச்சினைகள். நான் இதை மட்டும் குறிப்பிடவில்லை. பெருந்தொகை, அதற்குரிய இடத்தில் சேர்க்கும். பெருந்தொகைக்குப் பெரிய சக்தியுண்டு. இது அறிவுக்குக் கட்டுப்படாது, வலிமைக்குக் கட்டுப்படும். அதற்கும் சூட்சுமம் வேண்டும். இல்லையேல் இப்பணத்தின் சக்தி பெற்றவரை அழிக்கும். இது பணம், பதவி இரண்டுக்கும் உள்ள தன்மை. நமக்கு நேரடியாகச் சம்பந்தப்பட்ட பிரச்சினையில்லை என்றாலும், இதைக் குறிப்பிடவேண்டியது அவசியம் என்பதால் குறிப்பிடுகிறேன்.

இந்தப் பாதுகாப்புப் பெற சூட்சும ஞானம் வேண்டும் என்பதே நமக்கு இங்கு முக்கியம்.

இந்த அம்சத்தை ஒருவர் விவரமாக அறியவேண்டுமானால், சமூக முன்னேற்றம், சமூகப் பரிணாமம் என்ற நோக்கில் பணத்தை அறிய முன்வரவேண்டும்.

பணத்தை யோகக் கண்ணோட்டத்தில் ஆராய்ச்சி செய்தால், அதுவே முடிவானது.

சமையல் கற்பவனைக் கருதுவோம். (recipe) எப்படிச் சமையல் செய்வது என இவனுக்குக் கற்பிக்கலாம். தேர்ந்த சமையல்காரனுக்கு (master cook) பதம்பார்க்க, ருசி பார்க்க தேவையில்லை. கொதிக்கும் பாத்திரத்தைப் பார்த்தவுடன் அவனுக்குப் பதம் தெரியும். சாம்பாரில் என்ன போடவேண்டும் என எழுதித் தரலாம். அதனால் பதம், ருசியைக் கற்றுக்கொள்ள முடியாது. தலைமைச் சமையல்காரனுக்கு அந்த ஞானம் சூட்சுமமாக வருகிறது. வாயால் சொல்லும் தேவையில்லை.

ஒர்க்ஷாப்பில் பல ஆண்டுகள் வேலை செய்து வேலையைக் கற்றுக்கொள்வதை, பயிற்சியால் குறைந்த நாளில் கற்றுத் தரலாம். படிப்பிருந்தால் பயிற்சிக் காலத்தையும் சுருக்கலாம். வேலைக்குரிய சூழல் சூட்சும ஞானம் பெறும் திறனைத் தரும். பணிவு, கீழ்ப்படிதல், அடக்கம் ஆகியவை அந்தரங்கமானவை. குருவின் சூட்சும ஞானம், பணிவால் சிஷ்யனுக்கு சூட்சுமமாக வரும். அடக்கம் அந்தரங்கக் காதலானால் அடிமனம் திறந்து அனைத்தையும் அரை நிமிஷத்தில் குருவிடமிருந்து பெறும்.

லட்சியம், தீட்சண்யம், பணிவு, பக்தி, சேவை, ஆர்வம், நன்றி சூழலிலிருந்தாலும், குருவிடமிருந்தாலும், சிஷ்யனிடமிருந்தாலும் சூட்சுமமாகக் கற்க உதவும். குருகுலம் ஏற்பட்டது அக்காரணத்தால்தான். கல்லூரியின் சூழல் கற்பதைச் சிறப்பாக்கும். அமெரிக்காவில் வசிப்பது பல்கலைக்கழக வாசத்திற்குச் சமம். M.B.B.S. முடித்தபின் டாக்டர் ஓர் ஆண்டு ஆஸ்பத்திரியில் பயிற்சி பெறுகிறார்.

பணத்திற்கும் சூட்சுமம் உண்டு. சூட்சுமச் சூழலில் பணம் காலடி எடுத்துவைத்தால் அது தானே பெருக ஆரம்பிக்கும். 1990 முதல் உலகில் அதைக் காண்கிறோம். தானே பெருக முதிர்ச்சியும் பக்குவமும் தேவை (saturation and maturity). மொழியின் வளர்ச்சி இதை நமக்கு அறிவுறுத்தும். குழந்தை மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு (from the physical environment) கற்றுக்கொள்கிறது என்றாலும் அதன் சூழல் சூட்சுமச் சூழலும் கலந்துள்ளது. (Pronunciation,tone,accent,intonation) உச்சரிப்பு, குரல், சொல்நயம், அதன் சுருதி ஆகியவற்றைப் புத்தகத்திலிருந்து கற்கமுடியாது. கேட்டுக் கற்பவை அவை. பிறமொழி பயிலும்பொழுது இவற்றைப் பெறமுடியாது. வடநாட்டிற்குப் போன தமிழன் இந்தி கற்பதற்கும், நம்மூரில் இந்தி கற்பதற்கும் வித்தியாசம் உண்டு. வடநாட்டில் அனைவரும் இந்தி பேசுவதால் சூழல் கனத்துள்ளது. எளிதில் வரும். தாய்மொழியின் சூட்சுமத்தை அறிபவர் அதன்மூலம் பிறமொழியின் சூட்சுமத்தை எட்டினால் எளிதில் கற்கலாம். அது அனைவராலும் முடியாது.

 • Conception, perception, sensation என்பவை எண்ணம், உணர்ச்சி, உடல் அறியும் நிலைகள்.
 • இந்த ஆராய்ச்சிக்கு எண்ணமே ஜடமானது.
 • சூட்சும ஞானம்மூலம் எண்ணம் உணர்ச்சியாகிறது, conception perception ஆகிறது.
 • அதுவே உடல் அறியும் (sensation) பாதை.
 • சூட்சும ஞானம் ஜடமான அறிவை சூட்சுமமான அறிவாக்கும்.
 • அறிவு சூட்சுமமானால் ஆயிரம் மடங்கு பலிக்கும்.

எத்தனை வருஷம் பேனாவைப் பயன்படுத்தினாலும் பேனா செய்யும் திறன் வாராது. அது ஜடமான செயல், பயன்படுத்தும் திறமை. நெடுநாளாகப் பணத்தை நாம் பயன்படுத்துகிறோம், பயன்படுத்தினால் நமக்கு பயன்படுத்தத் தெரியும். அதனால் பணத்தை உற்பத்தி செய்ய முடியாது. பேனாவால் எழுதுவது பயன்படுத்துவது. பேனாவைச் செய்ய டெக்னாலஜி தெரியவேண்டும், கம்பனி வேண்டும், மெஷின் வேண்டும், முதல் வேண்டும், இவற்றுடன் சூட்சும ஞானமும் வேண்டும். பணத்தை உற்பத்தி செய்ய பணத்தின் வரலாறு தெரியவேண்டும். பணம் உற்பத்தியாகும் வேலை ஒன்று வேண்டும், பணத்தின் தத்துவம் தெரியவேண்டும், இவற்றுடன் பணத்தின் சூட்சுமம் தெரியவேண்டும். பணம் ஓர் அமைப்பு, ஸ்தாபனம் (organisation). உற்பத்தி, விநியோகம், உபயோகம் ஆகியவற்றைச் சேர்ப்பது பணம். நெல் நிலத்தில் உற்பத்தியாகிறது. மார்க்கட்டில் விற்கிறது. நாம் வாங்கிப் பயன்படுத்துகிறோம். இவற்றை எல்லாம் இணைப்பது பணம். விவசாயி பணத்திற்கு நெல்லை விற்கிறான். நாம் பணம் கொடுத்து நெல் வாங்குகிறோம். அவனுக்கு ஒரு விலை,

நமக்கு வேறு விலை. விலைகள் மாறும், விவசாயி தன் விலையை ஏற்கவேண்டும், நாம் வியாபாரி விலையை ஏற்கவேண்டும். இவையெல்லாம் பணத்தால் நடக்கின்றன. இந்த அமைப்பு (organisation) சூட்சுமமானது. அமைப்பு மனத்திற்குரியது, அமைப்பு சூட்சுமமானது.

பணத்தின் அத்தனை அம்சங்களையும் அறிந்து, அதன் சூட்சுமத்தையும் அறிந்தால், பணத்தை உற்பத்தி செய்ய முடியும்.

நாணயத்தை உற்பத்தி செய்தவன் என்ன நினைத்திருப்பான் என்று நாம் கருதினால், நாணயம் நோட்டானபொழுதும் அதே நினைவு எழுந்தது. கம்ப்யூட்டரால் பணம் வேகமாக சென்றபொழுதும் அதே நிலை. இவர்கள் சமூகத்திற்குச் செய்த சேவை பெரியது. பல சமயங்களில் இவை வியாபார நோக்கால் நடந்தது என்றாலும், அடிப்படையில் இவை சமூகத்தின் நல்லெண்ணத்தை மனிதனுக்களித்த செயல்கள். எந்தப் புதிய வசதி மனிதனுக்கு வருவதும், சமூகத்தின் நல்லெண்ணமாகும். நல்லெண்ணம் ஒரே நோக்கமாகும். நோக்கம் சூட்சுமமாகும். ஆன்மா முழுவதும் சூட்சுமம். அதன் அம்சங்களான சத்தியம், நல்லது, சந்தோஷம் போன்றவையும் சூட்சுமமானவையே. நம் நல்லெண்ணமும் சூட்சுமமானது. அதனால் நம் நல்லெண்ணம் உயர்ந்து சமூகத்தின் நல்லெண்ணத்தைத் தொடமுடியும்.

பணத்தைப் பற்றி எல்லா விவரங்களையும் முழுமையாகச் சொல்லாவிட்டாலும், மேற்சொன்னவை எல்லா முக்கிய விஷயங்களையும் சுருக்கமாகக் கூறுகிறது. மனிதன் இப்பலனை எப்படிப் பெறுவான் என்பது நமக்கு முக்கியம். அவன் பெறவேண்டியவை organisation நிர்வாக அமைப்புத் திறமை, சூட்சும ஞானம், நல்லெண்ணம், நல்நோக்கம், பண்புகளைத் தீவிரமாக அறிதல், காரியத்தைச் சாதிக்கும் பண்புகள். இவற்றைப் பெற்றவன் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். எவ்வளவு நாளாகும் என்பது கேள்வியில்லை. ஒரு சோதனை செய்ய மனம் தயாராகவேண்டும். பணம் உற்பத்தியாக மனத்திலுள்ள தடைகளை அகற்றி, முடிவு செய்வது முக்கியம்.

பணம் என்பது நம்பிக்கை. நம்பிக்கை என்றால் என்ன? தெரிந்ததை நம்புவது அனுபவம். நம் நம்பிக்கை என்பது அதன்று. கொலம்பஸ் எதையோ ஒன்றை நம்பி அதை நாடினான். அதுவரை எவரும் காணாதது அது. தெரியாததை அறிவால் புரிந்து நம்புவது நம்பிக்கை. அதற்குத் தேவையானது சூட்சும ஞானம்.

நம்பிக்கை சூட்சும ஞானம்.

செக்கை மறுக்கும் கிராமத்தானுக்குப் பணத்தைப் பற்றிய ஞானமில்லை. செக்கை ஏற்கும் நகரவாசி பணமிருந்தால் நல்லது என்பதும் செக் என்பது பணம் என்றும் சூட்சுமமாகப் புரியவில்லை. ஒரு முக்கிய விஷயம் பேச போனில் பேசுவதைவிட நேரில் பேசலாம் என்பது போன் என்பதை முழுவதும் அறியாதவர் செய்வதாகும். எந்த டாக்டருக்கு கைராசி என்று கேட்பவனுடைய நம்பிக்கை சரி. அது மூடநம்பிக்கை. ஹாலண்டில் பணத்தை வீட்டினுள் உள்ள குப்பைத் தொட்டியின் அடியில் வைப்பார்கள், சாவியைத் தலையணையின் கீழ் வைப்பதைப்போல். திருடன் பணத்தை பெட்டியில் தேடுவான். குப்பைத் தொட்டியில் தேடமாட்டான் என்பது கருத்து. 21ஆம் நூற்றாண்டு பிறந்த பின் ஹாலண்டில் பணத்தை பாங்கில் போடாமல் குப்பைத் தொட்டியில் வைப்பது மூடநம்பிக்கை. குப்பைத் தொட்டியில் ஒளிந்துள்ள பணம் திருடு போகாது என்றாலும் இவை மூடநம்பிக்கை மூலம் ஏற்பட்ட சூட்சும ஞானம். கைராசியை நம்பாத படித்த மனிதன் பெரிய பட்டம் பெற்ற டாக்டரிடம் போவது சூட்சும ஞானமில்லாதது.

நாம் கட்டுப்பட்டி, இக்காலத்து புதிய மனிதர் என்பவர் யார்? இவற்றுள் இருபக்கமும் உண்டு. புதியதை ஏற்பது முன்னேற்றம். புதியது, பேஷன் என்பதற்காக ஏற்பது சரியில்லை. கடந்தது கைவிடப்பட வேண்டும் என்றாலும் கடந்ததில் நல்லவை, உயர்ந்தவை கைவிடப்படக் கூடாது. நல்லதன்று என்று தெரிந்தும் விட முடியாதது மூடநம்பிக்கை. மனம், உணர்வு, உடல் மூன்றும் இத்தகையன. "இது சரி என நான் அறிவேன். நான் நினைப்பது தவறு. என்னால் மாற முடியவில்லை'' என்று கூறினால் பகுத்தறிவை ஏற்க முடியவில்லை என்று தெரிகிறது. இது மனத்தின் குறை. "தியானத்திற்கும், ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கும் எந்தத் தொடர்புமில்லை என நான் அறிவேன். தரிசனத்தன்று ஆழ்ந்த தியானம் கலைந்த பின், ஐஸ்கிரீம் சாப்பிட மனம் ஒப்பவில்லை''. தன்னால் மாற முடியவில்லை, மாறாமலிருப்பது நல்லது என்ற மனப்பான்மையிது. இது உயர்ந்த நம்பிக்கையில்லை. மூடநம்பிக்கை எனவும் கூறலாம். அடுத்த நிலையிலுள்ளவர் பேசுவதில்லை. அவரிஷ்டப்படி நடப்பார்கள். புத்தூரில் எலும்பு கட்டுகிறார்கள். அது பெயர் போன இடம். நான் அங்கே போகிறேன் என்பவர் விவரம் தெரியாதவர். உடைந்த எலும்பை ஆப்பரேஷன் செய்யாமல் நேரடியாகக் கட்ட முடியாது என்பது அவர் அறியாதது. புத்தூர் போய் எலும்பை கோணலாக செட் செய்து கொண்டு வருகிறார். யோசனையில்லாமல், விவரம் அறியாமல் செய்யும் காரியம் இது. புத்தூரை நம்பும் சூட்சும ஞானமுண்டு. ஆப்பரேஷனை நம்பும் சூட்சும ஞானமில்லை.

நாகரீகம், கல்வி, நகரவாழ்வு, புதிய வாழ்வு, உயர்ந்த வாழ்வு, யோகம் ஆகியவை மனிதன் அறியாமையிலிருந்து விலக உதவுபவை. பணம், அதுவும் தானே பெருகும் பணம் எதிர்காலத்திற்குரியது. அதைப் பெற, பெற்றுப் பலன் பெற, எதிர்காலத்தை நம்ப வேண்டும், கடந்த காலக் கட்டுப்பெட்டியாக இருக்கக் கூடாது. பணத்தை சமூகத்தின் வழியாகவும், சக்தி எனவும், நம்பிக்கை எனவும், ஸ்தாபனம் எனவும் பல கோணங்களில் அறிய முயல்கிறோம்.

இதன்பின் ஒரு பெரிய தத்துவம் மறைந்துள்ளது. நாம் உலகத்தை அறிகிறோம். வாழ்வை அறிய முயல்கிறோம். ஞானம் என்றால் என்ன, சக்தி என்பது என்ன என்று அறிகிறோம். இவையெல்லாம் முழுமையானவை. முழுமையான சிறப்பை எய்தக் கூடியவை. எந்த விஷயத்தை எல்லாக் கோணங்களிருந்தும் அறிய முடியுமோ, அந்த விஷயம் பலன் தரும். பணத்தைப் பல கோணங்களிலும் - எல்லாக் கோணங்களிலும், எல்லா அம்சங்களிலும் - அறிந்தால் அந்த அறிவு பணமாகும். பணம் என்ற பலனை அவ்வறிவு தரும்.

அறிவு பூரணமானால், பலனாக மாறும்.

 • பணத்திற்கு ஒரு வரலாறுண்டு.
 • பணம் பொருளாதாரத்திற்கு முக்கியமானது.
 • இதன் திறன் ஒரு சூட்சும ஸ்தாபனத் திறன்.
 • நாட்டு மக்கள் வாழ்வில் எல்லாத் துறைகளிலும் - இராணுவம், அரசியல், கல்வி, போக்குவரத்து, விளையாட்டு, செய்தித்துறை - பணம் முக்கியச் சேவையைச் செய்கிறது.
 • புதிய டெக்னாலஜி வந்தவுடன் அதற்குச் சேவை செய்கிறது.
 • சமூக லட்சியங்களை அரசியல் முதல் பல துறைகளிலும் அடைய உதவுகிறது.
 • பொருளாதார சக்தியாக ஆரம்பித்து சமூக சக்தியாகிவிட்டது.

பணத்தின் அம்சங்கள் அநேகம். அதனால் நம் ஆராய்ச்சியும் அநேக வகையானது. நாம் எல்லா அம்சங்களையும் ஆராய்ச்சி செய்யுமுன் நம் முயற்சி முடிவடைகிறது. நம் ஆராய்ச்சித் திறன் முடியுமிடத்தில் ஆராய்ச்சி முடிகிறது. வேலை முடிந்தாலும், முடியாவிட்டாலும், நம் முயற்சி முடிவடைகிறது.

மனிதன் முடியுமிடத்தில், அன்னை ஆரம்பிக்கிறார். நம் முயற்சி முடியுமிடத்தில் வேலை தானே தொடர்ந்து நடந்து தன்னை முடித்துக் கொள்ளும். எந்த அளவு பலன் வரும் என்பது நம் மனத்தின் அளவைப் (personality) பொருத்தது. இதையடையும் நம்பிக்கைக்குச் சரணாகதி எனப் பெயர்.

அன்றாட வாழ்வில் அருளின் அற்புதம் அனந்தம்.
(Spiritual significance of a token act)

 • அணுவே பிரம்மம்.
 • சிறிய காரியத்தினுள் சிருஷ்டியுள்ளது.
 • சமர்ப்பணம் சிறப்பானால் சாதாரணச் செயலில் சர்வேஸ்வரன் வெளிப்படுவான்.
 • கற்புக்கரசிக்குக் கடவுளின் அம்சம் உண்டு - "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா" எனக் கேட்கும் திறன் கணவனின் பணிவிடைக்குண்டு.
 • அன்னையின் சூழல் நடக்கும் எந்தச் செயலும் உலகெங்கும் நடக்கும்.

மேற்கூறிய கருத்துகள் தத்துவம், அன்னை கூறிய விளக்கங்கள், அன்பர்களுடைய அனுபவம். அழைப்பு என்பது மூச்சு விடுவதுபோல் ஆழத்திருந்து எழவேண்டும். Token act ஒரு காரியத்தைச் செய்தால் அதன்மூலம் உலகமே புரளும் என்பதால் நாம் ஒரு காரியத்தைச் செய்யலாம் என்று பொருளில்லை. மனத்தைத் தயார் செய்து பக்குவப்படுத்த வேண்டும். பக்குவப்பட்டதற்கு அடையாளம் எரிச்சல் வரும் இடத்தில் சந்தோஷம் வரவேண்டும். இம்மனப்பக்குவம் போதாது, இனி எனக்கு கொடுமை, கடுமை, எரிச்சல் வரும்படியானவை உள்ளேயில்லை என்று நமக்குப் புலப்படவேண்டும். உடலால் செய்யும் வேலையில் ஆர்வம் வந்தால் திறமையும் தெம்பும் வரும். அறிவோடு அதையே செய்தால் ஆயிரம் மடங்கு செயல் உயரும். அமைதியாகச் செய்தால் காரியம் அற்புதமாகும். ஆர்வம் என்பது உணர்வு, அறிவு என்பது மனம், அமைதி ஆன்மா. ஆன்மா வெளிப்பட்டால் செயல் திறமை உச்சக்கட்டத்திற்குப் போகும். ஒரு வேஷ்டியை சுருக்கி மோதிரத்தின் வழியாக செல்லும்படி அன்று இந்தியர் நெய்தனர் எனில் ஆன்மா நெசவில் வெளிப்பட்டது என்று பொருள். அந்த ஆன்ம ஒளி இந்தியருடம்பில் இன்றும் உள்ளது என்கிறார் அன்னை. வாயால் பேசுவது சத்தியமானால், கையால் செய்வது திறமைமிக்கதானால், உடல் சுறுசுறுப்பாக இருந்தால், வேலை செய்ய ஆர்வம் அதிகமானால், உள்ளொளி புறச்செயல் வெளிப்படும், ஒன்று பதினாயிரமாகும். ஒரு token act செயலை செய்யுமுன் சமர்ப்பணத்தை ஏற்று, மனத்தை நிதானமாக்கி, ஆர்வமாக, தீட்சண்யமாகச் செயல்பட ஆரம்பித்தால், வழக்கமான பொய் வெளிவரும். அவற்றை அறவே விலக்கவேண்டும். எரிச்சல் எழும், எதிரியைக் கொளுத்தவேண்டும் எனக் கொதிக்கும். அது எதிராக மாறி, எதிரி நண்பனாகி, நண்பன் மீது நயமான பிரியம் வரும்வரை மனம் தயாராகவில்லை என்று நாம் அறியவேண்டும். மனம் தயாரானால் Life Response வாழ்வு நம் மனநிலையைத் தன் செயலால் சுட்டிக்காட்டும், சுட்டிக்காட்டியபடியேயிருக்கும். ஆன்மா செயல் வெளிப்படாமல் திறமை உச்சக்கட்டத்திற்குப் போகாது. நெசவிலும், அஜெந்தா சித்திரங்களிலும், மாமல்லபுரம் சிற்பங்களிலும், பெண்களின் பவித்திரமான வாழ்விலும், சான்றோரின் அடக்கத்திலும், இந்தியர் வாழ்வில் இன்றும் இதைக் காண்கிறோம்.

மேல்நாட்டார் செயல்கள் அனைத்திலும் இவ்வான்மீக உயர்வு தென்படுகிறது. உடல் இருளாக இருக்கும்பொழுது செயல் ஆன்மாவை மேல்நாட்டில் காட்டுகிறது. உடல் ஒளியால் நிரம்பினாலும், செயல் இருளால் சூழப்பட்டிருப்பதால் இந்தியர் வறுமையிலிருக்கின்றனர்.

நாம் மேற்கொள்ளப் போகும் சிறு செயல் token act நம் உடலில் புதைந்துள்ள ஒளி செயல் ஆன்மாவாக வெளிப்படவேண்டும். அப்படி ஒரு செயலை நாம் செய்து அதில் ஒன்று ஆயிரமாவதைக் கண்ணுற்றால், நாம் அடிப்படையில் தயாராகிவிட்டோம். அதன்பின் நம் வாழ்வை அருளின் வெளிப்பாடாக ஆக்க முடியும். எப்பக்கம் திரும்பினாலும் அதிர்ஷ்டம் எதிர்கொள்ளும். வீட்டு மாடியில் கட்டும் புது அறை, தீபாவளிக்கு அனைவருக்கும் ஜவுளி எடுப்பது, மகனை பெரிய கோர்ஸில் சேர்ப்பது, ஆபீசில் செக்ரடரி எலக்ஷனுக்கு நிற்பது, பாக்கியான பிரமோஷனை சமர்ப்பணத்தால் பெறுவது, 100 ஏக்கர் பண்ணையில் ஓர் ஏக்கர் புதுப் பயிர் செய்வது, குடும்பத்தோடு காஷ்மீர் போவது போன்ற சிறு காரியம் முக்கியமானதாக எடுத்துச் சோதனை செய்யலாம்.

மாடியில் புது அறை கட்டும் வேலையை உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.

எல்லாச் செயல்களையும் சமர்ப்பணம் செய்யவேண்டும் என்பது அடிப்படை.

சமர்ப்பணமாகாத செயல்களைச் செய்யக்கூடாது. சமர்ப்பணம் என்பது அன்னையை நினைத்துச் செயல்படுவது. அது முதல் நிலை. அதை மட்டும் செய்தால் token act வெற்றிகரமாக முடியும். அது வாழ்வில் அருளாகத் தொடரவோ, அதிர்ஷ்டமாக நீடிக்கவோ, முதல்நிலை சமர்ப்பணம் போதாது. மீண்டும் நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும். Token actஇல் முடிவான சமர்ப்பணத்தை நாடினால், அது முடிந்தபின் பெரிய ஆத்மாவுக்கு அருளும், சிறிய ஆத்மாவுக்கு அதிர்ஷ்டமும் தென்படும். தானே நீடிக்கும். செயலை சமர்ப்பணம் செய்யுமுன், அது உணர்வாக இருப்பதைக் காணலாம். அதற்கும் முன்நிலையில் எண்ணமாக எழுவதும் தெரியும். எண்ணம் எழுந்து, உணர்ச்சியாகி, செயலாக நிரம்புவதால் சமர்ப்பணம் எண்ணத்தில் ஆரம்பிக்க வேண்டும். எண்ணம் சமர்ப்பணமானால், எண்ணம் நம்மைவிட்டுப் போகும், அது மறந்துபோகும். இது எண்ணத்திற்கு முடிவான சமர்ப்பணம். இங்கு ஆரம்பித்தால் முடிவான பெரும்பலன் உண்டு. இதற்கடுத்த இரண்டு நிலைகளில் உள்ள சமர்ப்பணத்தையும் தெரிந்துகொள்ளலாம். நமது முயற்சி மனித வாழ்வில் சிறு முயற்சி என்பதால் அவை இப்பொழுது தேவையில்லை. எண்ணம் மறந்துபோனபின், காரியத்தைத் தொடங்குமுன் உணர்ச்சி எழும். உணர்ச்சி எழுந்து நம்மை ஆக்கிரமித்து, வெளிப்பட்டபின்தான் நமக்குத் தெரியும். அதற்குமுன் தெரிய உணர்ச்சி விழிப்பாக இருக்கவேண்டும். விழிப்பாக இருந்தாலும் சமர்ப்பணமாகாது. காற்றைக் கையால் பிடிப்பது போலிருக்கும். அடுத்தகட்டப் பக்குவத்திற்கு உணர்ச்சி பிடிபடும், சமர்ப்பணமாகும். சமர்ப்பணமானால் உடல் புல்லரிக்கும், காரியம் மறந்துபோகும். இவ்வுணர்வு எழுந்தால் வீட்டில் அறை கட்டப்போனால் வீடு அமையும். முடிவான பலன் முதலிலேயே கிடைக்கும். உடல் உணர்ச்சி என்பது செயல். அது யோகத்திற்குரியது. இது பலிப்பது intolerable ecstasy பொறுக்கமுடியாத பூரிப்பு. எண்ணம் முழுவதுமாகச் சமர்ப்பணமானாலும், முதல் நிலையில் சமர்ப்பணமானாலும், நாம் சோதனையை மேற்கொள்ளலாம். இதற்குரிய முறைகளை உதாரணமாக விளக்கமாகக் கருதுவோம். சில முக்கியமான கருத்துகள்,

1. நாம் செய்யவேண்டிய வேலைகளைப் பல பாகங்களாகப் பிரித்து, பகுதிகளைச் சிறு பாகங்களாகவும் பிரித்து, இனிப் பிரித்துப் பார்க்க எதுவுமில்லை என்ற அளவில் பிரித்து எழுதிக் கொள்ளவேண்டும்.

2. அவற்றை முழுமையாகவும், பகுதியாகவும், சிறு பகுதியாகவும் சமர்ப்பணம் செய்து சமர்ப்பணம் பூர்த்தியாகும்வரை காத்திருக்கவேண்டும்.

3. பிறர் செய்யக்கூடிய வேலைக்கு நம் உள்ளுணர்வின் பிரதிபலிப்பைக் கண்டு அதைச் சமர்ப்பணம் செய்யவேண்டும்.

4. காரியத்தைச் சமர்ப்பணம் செய்வதைவிட உணர்வு உள்ளே சமர்ப்பணம் செய்யப்படுவது முக்கியம். அவசரம் எழுந்தால் அவசரம் சமர்ப்பணத்தால் நிதானமாக வேண்டும்.

5. பொதுவாக நாம் நம்மை இக்கண்ணோட்டத்தில் தயார் செய்வது காரியத்தைவிட முக்கியம்.

வீட்டில் கட்டும் அறைக்குரிய முக்கியப் பகுதிகள்:

 • கார்ப்பரேஷன் உத்தரவு வாங்குவது, அதற்குரிய blue print தயார் செய்வது.
 • பணம் நேரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்வது.
 • காண்ட்ராக்டரிடம் பேசி முடிவு செய்வது.
 • நாமே செய்வதானால், சிமெண்ட், கல், ஆட்கள் தயார் செய்வது.

மேற்சொன்னவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனி சிறு பகுதிகளாகப் பிரித்து நோட்டில் எழுதுவது. பணம் கையிலிருக்கலாம், பாங்கில் வாங்கலாம், கல் நாமே வாங்கி காண்ட்ராக்டரிடம் தரலாம், காண்ட்ராக்டரிடமே அதையும் ஒப்படைக்கலாம். நாமே வாங்குவதானால், அது புது அனுபவம். அதனால் நமக்கு முன் செய்தவர்களைக் கலந்து விசாரிக்க வேண்டும். காண்ட்ராக்டரே செய்வதானால் நாம் சும்மா இருப்பதற்குப் பதிலாக, இக்காண்ட்ராக்டர் ஏற்கனவே செய்த வேலைகளைப் பற்றி அவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் செய்த வேலைகளைப் போய்ப் பார்க்கவேண்டும். நாம் செய்வது சரியானால், எதுவும் விட்டுப்போகவில்லை எனில் தப்பு வாராது. இப்படியெல்லாம் பார்த்தால் எந்த வேலையும் நடக்காது, ஓரளவுக்குமேல் துருவக் கூடாது என்ற எண்ணம் அடிக்கடி எழும். முடிவாக தவறு வரவில்லை என்றால் நாம் செய்தது தவறில்லை எனப் பொருள். "அட, இதை மறந்துவிட்டேன்'' என்று பின்னால் சொல்லக்கூடிய நிலை எழக்கூடாது. முழு மனதுடன் நாம் செயலை அணுகும்பொழுது செயலின் நுணுக்கங்கள், தில்லுமுல்லுகள் தானே வெளிப்பட்டு அகலும். அதுவே சமர்ப்பணமான செயலுக்குரிய இலட்சணம். உதாரணமாக சிமெண்ட் கலவைக்கு நாம் பணம் நிர்ணயிக்கும்பொழுது 1:3 என நிர்ணயித்துப் பணம் கொடுத்தால் காண்ட்ராக்டர் 1:6 என்று போட்டால் என்ன செய்வது? நாமே உடனிருந்து ஒவ்வொரு கலவையையும் பார்ப்பது ஒரு முறை. சிறு வேலையில் அதைச் செய்யலாம். அதற்குரிய முறையென்ன? அதைச் செய்யாத காண்ட்ராக்டரை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அப்படிப்பட்டவர் நம்மை நாடி வருவது சமர்ப்பணம். நாமே முனைந்து ஒவ்வொன்றையும் பார்க்கலாம். அது குறைந்தபட்சம். தானே எல்லாக் காரியங்களும் சிறப்பாக நடக்கலாம், அது அதிகபட்சம். நம் மனநிலை எது? அதற்குரிய அளவுக்கு நாம் செயலைச் சீர்செய்வது சரியான முறை. வேலை சரியாக நடக்கிறதா, இல்லையா என்பதை மனமும், செயலும், புற நிகழ்ச்சிகளும், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும், சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளும், காட்டிக்கொண்டேயிருக்கும். அவற்றைக் கவனிக்கவேண்டும். Type செய்வதை இதுபோல் பாகுபாடு செய்வதில் 1) எழுத்துப் பிழை 2) இலக்கணப் பிழை 3) மார்ஜின் 4) அடுத்த பக்க மார்ஜின் 5) Spacing 6) எழுத்தின் சைஸ் 7) இங்கின் தெளிவு எனப் பிரிகிறது. எந்த வேலையும் 5 முதல் 10 சிறு பிரிவுகளாகப் பிரியும். அவற்றை எழுதி ஒவ்வொன்றிற்கும் தரம் - scale - நிர்ணயம் செய்து 1 முதல் 10 வரை பாயிண்ட் கொடுத்து நாம் 5ஆம் நிலையிலிருந்தால் 10ஆம் நிலைக்குப் போக முயலவேண்டும். 100 பக்க புத்தகத்தில் 1 பிழை இருப்பது 10 பாயிண்ட் குறைந்து திறமை 90% ஆகும். 2 பிழையிருந்தால் 80%க்குப் போகாது, 50%க்குப் போகும். அதற்குமேல் பிழையிருந்தால் அது வேலையில்லை, அது பிழை.

 • செய்வன திருந்தச் செய்.
 • திருத்தமாகச் செய்வதை ஆர்வமாகச் செய்.
 • ஆர்வத்திற்கு அறிவுண்டு.
 • அறிவுக்கு அமைதியிருப்பது ஆத்மாவின் செயல்.
 • அமைதியை சமர்ப்பணம் செய்.
இதுபோல் அன்பர் செய்த வேலைகள் ஏராளம்.
 • ஒரு கிராமத்துச் சேவை நாட்டிற்கே பலன் தந்தது ஒரு திட்டம்.
 • ஓர் ஏக்கர் நிலம் வாங்கச் செய்த முயற்சி 1000 ஏக்கரைக் கொண்டு வந்தது ஒன்று.
 • ரூ.10,000 வசூல் செய்ய முயன்றபொழுது 10½ லட்சம் வசூலானது மற்றொன்று.
 • ஒரு கிராமத்திற்கு மின்சாரம் கொண்டுவர முயன்றது தமிழ்நாட்டிற்கே எல்லா கிராமங்களுக்கும் கிடைத்தது.
 • ஓர் அன்பர் பெற்ற பிரமோஷன் அவர் போன்ற ஆயிரம் பேர் பெற்றது.

நாம் திறமையை அதிகரிக்க முனையும்பொழுது நம்மை நாமே வற்புறுத்திச் செய்தாலும் காரியம் கூடிவரும், ஆனால் மனம் கல்லாகும், அது கடுமையாகும். அப்படி நிகழ்ந்தால், token act ஜெயிக்கும். ஓரளவு வளர்ந்து ஒரு நிலையில் நின்றுவிடும். கடுமை எழக்கூடாது, கனிவு வேண்டும். அடுத்தகட்டத் திறமையை ஆர்வமாக ஏற்று மனம் பூரித்தால், கனிவு எழும், கருணையாகும். முடிவில்லாத வளர்ச்சி முழுமையாக வரும்.

முற்றும்.

********book | by Dr. Radut