Skip to Content

9. செயல் கண்ட தெய்வம்

பூரண யோகத்திற்கு இதுவரை வகுத்த சாஸ்திரம்பயன்படாது. எந்த மனித குருவும் இந்த யோகத்தைப் பூர்த்தி செய்ய உதவமாட்டார் என்பவை பகவானுடைய கொள்கைகள். பொதுவாகப் பகவான் சொல்லியவற்றுக்கு எதிரானவையும் உண்மை என்ற அளவில் அவர் மற்றவற்றைச் சொல்லியிருப்பதுடன், அதுபோல் நடந்து கொண்டும் இருக்கின்றார். எந்த மனித குருவும் என் இலட்சியத்தைப் பூர்த்தி செய்ய உதவமாட்டார் என்ற சாதகனுக்குப் பகவான் நடைமுறையில் வகுத்த முறை வேறு. உன் தலைவனே உனக்கு குரு, உன் முதலாளியே உனக்கு உயர்ந்த குரு, நீயுள்ள ஸ்தாபனத்தின் தலைவனையே உன் குருவாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையே மனிதகுரு தேவையில்லை என்ற நிலையை அளித்து ஜகத்குருவை உனக்கு அளிக்கும் என்ற நடைமுறையை பகவான் சாதகர்களுக்கு அளித்துள்ளார். அதைத் தானும் தன் யோக வாழ்வில் பூரணமாகப் பின்பற்றியுள்ளார்.

இக்கருத்தை மேலும் நீட்டினால், நமக்கு மேலுள்ளவர்கள் குரு என்பதும், அவர்கள் தெய்வம் என்ற ஞானமும் ஏற்பட வேண்டும். நமக்குக் கீழுள்ளவர்களையும் குருவாக மதிக்க வேண்டும், தெய்வமாகக் கருதவேண்டும் என்றாகும். அதற்கடுத்த நிலையில் எதை யாரிடம் கற்றுக்கொள்கின்றோமோ, அந்த விஷயத்திற்கு அவரே ஆச்சார்யன் என்றும் கடைசி நிலையில் சர்வம் பிரம்மம் என்றும் ஏற்படும். இவையெல்லாம் உயர்ந்த கொள்கைகளேயானாலும், நடைமுறையில் கல்லானாலும் கணவன், ஆசிரியரே குரு என்பன போன்ற நடைமுறை எந்த அளவில் சாத்தியப்படும் என்ற சந்தேகம் எழும்.

ஆன்மிக ரீதியில் குரு என்றும், பிரம்மம் என்றும் சொல்வதை நடைமுறையில் நாம் செய்யும் காரியங்கள் பழுதின்றி அமைவதை முறையாகக் கொண்டால் செயல் தெய்வமாகிறது. செயலைத் தெய்வமாகக் கருதினால், நாம் செய்யும் காரியங்கள் சிறப்பாகப் பூர்த்தியாக வேண்டும். செயலையும், மனிதர்களையும், பொருளையும் நிகழ்ச்சிகளையும் தெய்வமாகக் கருதும் நாம் நம்மைத் தெய்வமாகக் கருதினால், தெய்வம் நம் நிலையில் செய்யக் கூடியவற்றை மட்டும் செய்யவேண்டும். தெய்வம் செய்ய மறுப்பதை நாமும் மறுக்கவேண்டும். மனிதனுடைய நீதி மனு நீதி. அது சமூக நீதியைவிட உயர்ந்தது. தெய்வ நீதி மனச்சாட்சியை விட உயர்ந்தது. கருணை, கனிவு, தன்னலமற்ற செயல், அடக்கம் ஆகியவை தெய்வநீதியை வெளிப்படுத்தும் கருவிகள். அவற்றின் மூலம் வெளிப்படும் செயல்கள் நம்மிடம் உள்ள தெய்வத்தை வெளிப்படுத்தும். பொதுவாக இவை உயர்ந்த மனித குணங்களாக இருக்கும்.

10 ஆண்டுகளுக்கு முன் மாநில முதலமைச்சராக இருந்த பெண்மணியின் கணவர் M.P. ஆக இருந்தார். அவர் வீட்டில் நடந்த துக்கத்தின்போது அவருடைய கட்சித் தலைவர் பேராறுதல் தரும் வகையில் உதவி செய்ய உத்திரவிட்டிருந்தார். எல்லாம் முடிந்தபின் தலைவருக்கு நன்றி சொல்ல அவரைச் சந்திக்கவேண்டி எழுதிய கடிதத்திற்கு நேரில் வரும்படி பதில் வந்தது. சென்றார், 11 நாள் காத்திருந்தார். தலைவரைச் சந்திக்க முடியவில்லை. திரும்ப ஊர் வந்து தலைவருக்கு இதை எழுதினார். மீண்டும் வரும்படி தலைவர் கடிதம் மூலம் அழைத்தார். 9 நாள் காத்திருந்து சந்திக்க முடியாமல் வந்துவிட்டார். பின்னர் பிரதமமந்திரி ஆபீஸுக்குப் போன் செய்து வேறொரு காரியத்தைச் செய்ய முனைந்தார். ஆபீஸில் இருந்தவர் பிரதமரிடம் இதைச் சொல்லவே, பிரதமரே முன்னாள் முதலமைச்சரிடம் பேசி, விசாரித்தார்; சந்திக்கவும் இசைந்தார். சென்றவுடன் தாமதமின்றிச் சந்தித்தார். அன்பாக விசாரித்தார். அவசரமின்றி பேசினார். வந்த டீயை பிரதமர் தானே கோப்பையில் ஊற்றி அந்த அம்மையாரிடம் கொடுக்கும் பொழுது, அவர் கண்கள் பனித்தன. வெளியில் எழுந்து வந்து பிரதமரே காரின் கதவைத் திறந்து அவரை அமரச்சொல்லி வழி அனுப்பினார். சொந்தக் கட்சித் தலைவருடைய மனப்பான்மை வேறு. பிரதமர் பழைய நண்பரை மனிதாபிமானத்துடன் நடத்திய பாங்கு வேறு. மனிதனைத் தெய்வமாகக் கருதும் மனப்பான்மை இதுவே.

அடக்கம், நன்றியறிதல், தன் அளவுக்குட்பட்டு செயல்படுவது, பணத்தாலோ, பதவியாலோ நிதானத்தை இழக்காமலிருப்பது போன்றவை நல்ல குணங்கள் என்று அறிவோம். பிறருக்கும் அவசியம் வரும்பொழுது சொல்லுவோம். நமக்கே அக்குணங்கள் தேவைப்படும் சந்தர்ப்பம் ஏற்படும்பொழுது நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்று பார்த்தால் நாமும் பெரும்பாலும் மற்றவர்களைப் போலவே நடந்துகொள்வோம். விலக்கானவர்கள் குறைவு. விதியைப் பின் பற்றுபவர் அதிகம். செயலில் தெய்வம் வெளிப்பட வேண்டுமானால் நாம் விலக்காகவே இருக்கவேண்டும். செயல் முதல் நிலை, உணர்ச்சி அடுத்த நிலை, அறிவு மூன்றாம் நிலை. மூன்றும் சேர்ந்த வாழ்வில் தெய்வம் வெளிப்பட வேண்டும். வாழ்வுக்கடுத்த உயர்ந்த நிலை யோகம். எல்லா உயர்ந்த நிலைகளையும் உயர்ந்தவர்க்காக ஒதுக்கி விட்டு, முதல் நிலையான செயல் தெய்வத்தை வெளிப்படுத்துவதை மட்டும் கருதும் கட்டுரை இது.

மனிதனுக்கு அவசரம் உண்டு. தனக்கு எதுவும் இல்லை என்று முடிவு செய்து ஒரு கடை குமாஸ்தாவாக வேலை செய்பவனுக்கு நண்பன் ஆதரவளித்து ஒரு கடையை ஒரு வருஷம் கழித்து ஆரம்பிக்க உதவி செய்ய முன் வந்தால், இது வரை சும்மா இருந்தவனுக்கு ஒரு வருஷம் பொறுமையிருக்காது. ஒரு மாதம் வரை காத்திருக்க முடியாது. உடனே செய்ய வேண்டும் என்ற அவசரம் பற்றிக்கொள்ளும்.

மனிதனுக்கு ஆசை அதிகம். அளவு கடந்த ஆசையுள்ளவர்கள் ஆசையை வெளிப்படுத்த வழியின்றி சும்மா இருப்பார்கள். பெரிய இடத்துப் பொறுப்பும், பலனில்லாத கடமையும் உள்ள ஒருவர் இருக்கும் இடம் உயர்ந்த இடம், மனப்பான்மை தாழ்ந்தது. ஒரு காரியத்தை தனக்காகச் செய்து கொள்ள மனம் பரபரப்பு அடையும் தன்மை வயது வந்த பிறகும் இவரை விட்டகலவில்லை. இவருக்கு ஒரு புது சந்தர்ப்பம் வந்தது. இவர் அதை நம்பவில்லை. தன் நிலைமைக்கு மீறியது என்பதால் நம்பவே முடியவில்லை. அது பலித்தது, பின்னரும் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அதைச் செய்தவருக்கு நன்றி சொல்ல வாய் வரவில்லை. அதற்கடுத்த கட்டத்தில் அதைவிடப் பெரியது நடந்தது. காரணமாக இருந்தவருக்கு நன்றி சொல்லாமல் இருந்தால் மீதி கெட்டுவிடும் எனப் பதைத்தார். அவரைச் சந்தித்தார். ஆனால் வாயைத் திறந்து நல்ல வார்த்தை சொல்ல முடியவில்லை. நல்ல பெயருக்கும் இவருக்கும் தூரம். இப்பொழுது நல்ல பெயர் வந்தது. இவர் நிலை ஆட்டம் கண்டுவிட்டது. முதலிரண்டு சந்தர்ப்பங்களையும் நம்பமுடியாமல் திகைத்தபோது இப்பொழுது இவர் வாழ்க்கையிலேயே இல்லாத நல்ல பெயர் வந்தது. இத்தனை நாள் கெட்ட பெயர் மட்டுமே வந்த எனக்கு நல்ல பெயர் எப்படி வரமுடியும் என்று யோசனை செய்தார். இனி நன்றி சொல்லி ஆக வேண்டும் என முடிவு செய்த பொழுது இவரைத் தேடி அந்தஸ்து வந்தது. முதலிரண்டு சந்தர்ப்பங்களாலும், நல்ல பெயராலுமே இந்த அந்தஸ்து அமைந்தது. அதைவிட்டு விடக்கூடாது என்று இதற்கு காரணமானவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவரிடம் சொன்னார். அந்த நல்லதைச் செய்ய அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து புகழ் வந்தது. புகழ் பரவியது. இவர் மனம் தத்தளித்தது. கனவிலும் கருதாதவை நடக்கின்றன. இதற்கு ஒருவர் பலன் கருதாமல் காரணமாக இருக்கிறார். வருகின்றது தானே வரக்கூடாதா?

ஏன் ஒருவர் மூலம் வரவேண்டும் என்று பதறினார். அப்படி நினைத்தால் வருவது நின்றுவிடும் எனப் பயந்தார். புகழ் வெளிநாட்டையும் எட்டியது. மனிதனால் நன்றி சொல்ல முடியவில்லை. மனம் தத்தளித்தது. வந்ததெல்லாம் அளவு கடந்து பெருகியது. இனி என்ன செய்வது என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டார். "நான் புகழுக்கும் பெருமைக்கும் உரியவன். எனக்குச் சேவை செய்யும் பாக்கியத்தை உனக்குக் கொடுத்திருக்கிறேன்'' என்று செய்தவருக்கு சொல்லி அனுப்பினார். வாழ்க்கையில் ஒரு முறையும் நடக்க முடியாதது நடந்ததை வருஷாவருஷம் திரும்பச் செய்யும்படி மற்றவரை வற்புறுத்தினார். அவரால் அது முடியவில்லை என்று தெரிந்ததும் நன்றிகெட்டவர் என்று அவரைத் திட்டினார். மனிதனுடைய வக்ர குணங்களுக்கு எல்லையிது. இதை எல்லோரும் செய்ய மாட்டார்கள். ஆனால் பலர் இது போல் நினைப்பார்கள். சாதாரண மனிதனுடைய மனநிலை இது. இந்நிலையிலிருந்து மனிதன் நகர்ந்து வந்து அடக்கமாகவும், நன்றியுடனும் இருக்க அவன் படும்பாடு பெரியது.

வாழைப்பழ சோம்பேறியைப் பற்றிய கதை பிரசித்தம். மற்றவர்க்கு உதவியே தீருவது என்று முடிவுகட்டியவர்களுடைய அனுபவத்தில் இது தென்படும். தன் காரியத்தை மட்டும் கவனிப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. நடுத்தெருவில் நிற்பவனுக்கு முதல் கொடுத்தால், முதல் கொடுத்தவரை மட்டும் அவன் மனம் எதிரியாக நினைக்கின்றது. சிறு முதல் ஒரு வருஷத்தில் பெரும் இலாபம் சம்பாதித்தவர் சம்பாதித்துக் கொடுத்தவனை விலக்கினார். விலகியவர் நடுத்தெருவில் நின்றார். மற்றொருவரை உதவி கேட்டார். அதே முதலைக் கொடுத்தார். அதேபோல் பெரும் இலாபம் சம்பாதித்தார். முதல் கொடுத்தவருக்கு வட்டியைக் கொடுத்துவிட்டு நஷ்டக் கணக்கு காட்டினார். மூன்றாம் நபருடன் தன் பெருமுதலுடன் சேர்ந்து வியாபாரம் செய்தார். ஒரே வருஷத்தில் இருவரும் திவாலானார்கள். அதே வருஷம் இவரை முதலில் விலக்கியவரும் திவாலானார். இவருக்கு முதல் கொடுத்து உதவியவருக்கு அடுத்த ஆண்டு அதேபோல் 10 மடங்கு முதலை வேறொருவர் கொடுத்து உதவினார்.

கொஞ்சம் பணத்தைப் பார்த்தவுடன் நிலையிழந்தவர்கள் தங்கள் நிலையிலிருந்து இறங்கி விடுகிறார்கள் என்பதைப் பார்க்காதவர்கள் குறைவு.

திவாலானவர்க்கு திடீர் வாழ்வு வர ஒருவர் உதவினார். வந்த வாழ்வின் பெருமையை உதவியவரிடமே காண்பித்தார். மீண்டும் பழைய நிலை வரும் போலிருக்கிறது. கலங்கி நின்றார்.

ஒரு பஸ் முதலாளி மகன், எட்டாவது படிக்கும் பொழுது அவனுக்கு அவன் வகுப்பு ஆசிரியரிடம் டியூஷன் வைத்தார்கள். அடுத்த ஆண்டு அவரிடமே படிக்கப் பிரியப்பட்டான். அதற்கடுத்த வருஷம் ஆசிரியர் பட்டதாரி ஆசிரியரை அவனுக்கு அமர்த்துவதாகச் சொன்னார். பையனுக்கு விஸ்வாசம் அதிகம். "நீங்கள் சொல்லிக் கொடுக்காவிட்டால், நான் டியூஷனே வைத்துக் கொள்ளவில்லை'' என்று அடம் பிடித்து அவரிடமே படித்துப் பாஸ் செய்தான்.

உத்தியோகத்திலிருக்கும் இன்ஜினீயரை சொந்தத் தொழில் ஆரம்பிக்கச் சொன்னவரிடம் டெக்னாலஜி கேட்டான். டெக்னாலஜியைத் தேடிக் கொடுத்தபின் முதலுக்கு வழி கேட்டான். சொன்ன வழி பலித்தது. முதல் கிடைத்தது. அதில் இவனுடைய சிறு பங்கையும் அவரையே கேட்டான். இதற்கிடையே தொழிலுக்கு முதல்போன்ற வேறு ஓர் அம்சத்தையும் பெற்றுக் கொடுத்தார். என் சிறு பங்கையும் நீங்களே கொடுக்காவிட்டால் என்ன புண்ணியம் என்றான். அத்தனையும் போய்விட்டது.

கட்ட துணியில்லாதவனுக்கு வீடுகட்டும் அளவுக்கு உதவியவரை நான் போய்ப் பார்க்க முடியாது. அவர் வந்து என்னைப் பார்க்கவேண்டும் என்றார் ஒருவர். அவர் சொல்வதே சரி என்றார்கள் அவர்களைச் சேர்ந்த அனைவரும்.

பெரிய உத்தியோகத்திற்குப் போனபின்னும் பழைய பேராசிரியர்களை மரியாதையுடன் நடத்தும் பலருண்டு. பல்கலைக்கழகப் பேராசிரியரைப் பார்க்க மற்றொரு பல்கலைக்கழகப் பேராசிரியர் வந்திருந்தார். அவரை "சார்'' என்று அழைப்பதைப் பார்த்த மற்றொருவர் வியப்படைந்தார். இவருடைய மாணவர் மற்றவர் இன்னும் சார் என்றே அழைக்கிறார் எனக் கண்டு சந்தோஷப்பட்டார்.

1943 இல் பல்கலைக்கழக ஆசிரியரான ஒருவர் மாணவர்களை "சார்'' என்றழைப்பார். அது இங்கிலாந்திலுள்ள உயர்ந்த பழக்கம். பிரதம மந்திரியும் எளியவரை சார்' என அழைக்கும் பழக்கம் உண்டு. அங்கு, மாணவர்களை தன்னைப் பெயரிட்டுக் கூப்பிடுமாறு சொல்வார். பெரும்பாலான மாணவர்கள் அவரை பெயர் சொல்லி அழைத்தார்கள். ஆசிரியருடைய குணம் பெருந்தன்மையானது. அதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தும் மனப்பான்மை சிறியது. அதை ஏற்றுக் கொள்ளாதவருண்டு. இன்று அம்மாணவர்கன் வாழ்வு அன்று அவர்களுடைய மனப்பான்மையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

ஒரு பேராசிரியரிடம் படித்த இருவர் M.L.A. ஆனார்கள் பேராசிரியர் ஒருவரிடம் பட்டதாரி ஓட்டு கேட்கப் போனார். M.L.A. உட்கார்ந்தபடி வரவேற்றார். அடுத்த பீரியட் நிற்பதற்குள் அல்பாயுசாகப் போய்விட்டார். அடுத்த M.L.A. தான் ஜெயித்த பின் ஆசிரியரை வீட்டில் வந்து பார்த்தார். மந்திரியானார். மந்திரியான பின்னும் பேராசிரியர் ஊருக்குப் போனால் அவரை அவர் வீட்டில்தான் சென்று பார்ப்பார். நன்றியறிதலுக்கும், அடக்கத்திற்கும் எத்தனையோ பலன்கள் உண்டு. ஆன்மிகப் பலன்களும் உண்டு. வாழ்க்கை உயர்வு மட்டும் பலனில்லை. அவற்றைப் பலன் கருதாது, நல்லவை என்பதால் மட்டுமே கடைப்பிடித்தல் சிறந்தது.

எளிமையாக இருந்த பொழுது ஒருவரிடம் வேலை செய்தவர், பிரபலமாகி, பெரும் தலைவரான பின் பழைய முதலாளியைப் பார்த்தால் எழுந்து நிற்பார். ஆரம்பகாலத்து மரியாதையுடன் பழகுவார். அது போன்ற மனிதருண்டு, ஆனால் குறைவு.

பெரிய அதிகாரியான பின்னும் தான் இன்ஸ்பெக்ஷன் செய்யப்போன இடத்தில் தன் பழைய அந்தஸ்துக்கேற்ப நடந்துகொள்ளும் பண்புடையவருண்டு.

100ரூபாய் நோட்டைக் கொடுத்தால் அதில் கையெழுத்துப் போட்டுக் கொடு என்ற நாளில் ஒருவர் பெட்ரோல் பங்கில் 100ரூபாய் நோட்டைக் கொடுத்த பொழுது கையெழுத்துக் கேட்டான். போட்டுக் கொடுத்தார். இது என்ன உங்கள் கையெழுத்தைக் கேட்டால், நோட்டிலிருக்கும் கையெழுத்தைப் போட்டிருக்கிறீர்களே என்று அவன் சொன்னபொழுது நான் ரிஸர்வ் பேங்க் கவர்னராக இருந்தபொழுது வந்த நோட்டு அதனால் இதில் என் கையெழுத்திருக்கிறது என்றார். வாழ்வு அவ்வளவு மாறும் நிலையுண்டு. நாம் அவசரப்பட்டு மாறினால் ஒத்துவராது.

நேரு காஷ்மீர் கலவரத்தை பார்க்கப் போன பொழுது ரோட்டில் கிடக்கும் மலர்களை எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டு, இது ஒன்றுதான் கெடாமலிருக்கிறது. மற்ற அனைத்தும் இங்கு கெட்டுப் போய் விட்டது என்றார். மனிதனைச் சோதனை செய்தால் இதுபோன்ற விஷயம் வெளிவரும்.

தன் மகனை திருட்டுப் பட்டம் கட்டி வீட்டைவிட்டு வெளியேற்றிய தகப்பனாரை கடைசிவரை வலிய ஆதரிக்கும் மகன் ஒருவர். வாழ்க்கை முழுவதும் 100ரூ சம்பாதிக்காத புருஷனைத் தெய்வமாக நடத்தி பணிவிடை செய்த பெண் ஒருத்தி. தனக்குத் தீங்கு செய்த முதலாளி கஷ்டப்படுவதைக் கேட்டு 15 ஆண்டு ஆனபின்னும் விஸ்வாசத்தோடு உதவியவரை முதலாளியால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஆங்கிலம் ஒரு வாக்கியம் கூட பேசியறியாதவரை சரளமாக ஆங்கிலம் பேசவைத்ததற்கு பிரதிபலனாக பெருந்துரோகம் செய்து மனைவியை இழந்தவர் ஒருவர். வாழ்க்கையிலேயே நினைக்கமுடியாததை தன் வாழ்வில் நிறைவேற்றிக் கொடுத்தவருக்கு தீங்கு செய்து, அதே பலனை மற்றொருவர் மூலம் பெற்றுச் சீரழிந்தவர் ஒருவர். தன் வயதிற்கும் அந்தஸ்திற்கும் பொருத்தமில்லாத பொறாமையை மேற்கொண்டு மனம் புளகாங்கிதமடைந்து மகன் வாழ்க்கையைப் பறிகொடுத்தவர் ஒரு பேரறிஞர். புதிய வாழ்வின் பெருமை வாயில் தடிப்பான சொல்லாகி அதுவே மகனுக்கு எமனாகி விட்டதைக் கண்டும் தன் தடிப்பை மாற்றாதவர் வேறொருவர். சம்பளம் கொடுக்கும் முதலாளியைத் துச்சமாகப் பேசி வருஷத்திற்கு இரு முறை வேலையை இழந்தும் தன் பழக்கத்தை மாற்ற முடியாதவர் ஒருவர்.

தன் வியாபாரத்தை அளவுகடந்து வலியவந்து பெருக்கிக் கொடுத்தவர் மீது பொய் கேஸ் போட்டு முடிவதற்குள் இறந்தவர் ஒருவர். தன் கட்சிக்காரன்மீது பொய் கேஸ் போடத் துணையாயிருந்து கேஸை நடத்தி குறுக்கு வழியில் ஜெயித்து மேல் கோர்ட்டில் அவனுக்கு நியாயம் கிடைத்த மறுவாரம் உயிரை இழந்தவர் ஒரு பெரிய வக்கீல்.

உதவி கேட்க வந்தவருக்குப் பேருதவி செய்தவுடன் சொல்லாமல் எழுந்து போன 80 வயதுக் கிழவர் ஊர் நியாயம் பேசுபவர். உலகத்தில் பெரிய கம்பெனியில் தனக்கு (consultancy) கன்சல்டிங் வேலை வேண்டுமென எல்லா உதவியையும் எல்லா வகையிலும் 1½ வருஷமாக கேட்டுப் பெற்று அது கிடைத்ததைக் கூட உதவியவருக்கு சொல்ல மறந்து விட்டார் ஒருவர். பொன் முட்டையிடும் வாத்தை அறுத்த கதையும், பஸ்மாசூரன் சிவபெருமானை தகனம் செய்ய முயற்சி செய்ததையும் சிறு பிள்ளைத்தனமான கதை, இப்படி மனிதர்கள் இருக்க மாட்டார்கள் என நினைப்பதுண்டு. அவசரக்காரர்களில் ஒருவர் கூட வாத்தை அறுக்கத் தவறியதில்லை. அதிகாரம் வந்த பின் பஸ்மாசூரனைத் பின்பற்றாத சாமானிய மனிதர் எவருமில்லை.

அவசரப்படாதவருண்டு, சாமானியராக இல்லாதவருண்டு, அவர்களே விதிவிலக்கு, மற்றவர்கள் விதிக்குட்பட்டவர்கள்.

அன்னையை அன்னையாக வழிபடுதல் எது. அன்னையின் முழு அருளும் நம் வாழ்வில் பொலிவுபெற வேண்டுமானால், நாம் எந்த சூழ்நிலைக்கு கட்டுப்பட்டிருக்கின்றோமோ, எந்த ஸ்தாபனத்தில் வேலை செய்கிறோமோ, எவருடைய அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கிறோமோ அவர்களை அன்னையாக வரித்தால் அருள் முழுவதும் செயல்படும். இதனுள் உள்ள ஆன்மீக உண்மையை புருஷப் பிரகிருதி - ஈஸ்வர சக்தி - தத்துவம் மூலம் பகவான் விளக்குகின்றார். சக்தி, ஈஸ்வரனுக்கு உட்பட்டவளானாலும், அவனுடைய அன்பின் அதிகாரத்திற்கு தன்னைப் பணிய வைக்கவே ஈஸ்வரன் விரும்புகிறான். அதுவே அவனுக்கு பூர்த்தியை அளிக்கிறது என்கிறார். உலக இயல்பை உணர்ந்த பகவான், அதிலுள்ள மற்ற அம்சத்தையும் சுட்டிக் காட்டுகிறார். ஈஸ்வரன் தனக்கு அன்பால் பணிவதை சக்தி அளவுக்கு மீறி பயன்படுத்த விரும்புவதுண்டு. அப்பொழுது ஈஸ்வரன் தன் சுய அதிகாரத்தை வெளிப்படுத்தினால், அவள் மகிழ்ந்து பணிகிறாள் என்கிறார். இது நம் மரபில் பிரபலமில்லாத கருத்து. இதைப் பாரதி அவள் தாளினை கைக்கொண்டு மகிழ்ந்திருப்பான்' என்று எழுதுகிறார்.

மனித குருவையே ஜகத்குருவாக ஏற்றுக்கொண்டு யோகத்தை ஆரம்பித்தால், மனிதகுருவின் கடமை முடிந்தபின் தானே விலகி விடுவார். விஷ்ணு லீ ஸ்ரீ அரவிந்தரை விட்டகன்றார்.

ஆன்மிக ஸ்தாபனத்தில் ஆபீஸ் வேலையிருப்பவருக்கு ஆசையுண்டு, அனைவரும் தனக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவேண்டுமென பிரியப்பட்டார். அவர் பிரியம் பிரியமாகவே இருந்தது. பிற்காலத்தில் அது தானே நடைபெற்றபோது, பக்தியுடன் நமஸ்காரம் செய்வதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கால் வலி ஏற்பட்டது. நமஸ்காரம் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஸ்ரீ அரவிந்தருக்கு வைத்தியம் செய்த டாக்டர் இது போன்ற வியாதியஸ்தரை நான் கண்டதில்லை என்றார். டாக்டர் கொடுக்கும் மருந்து, அனுஷ்டிக்கச் சொல்லும் முறைகளை நிமிஷம் தவறாது முறையோடு பின்பற்றுவதில் ஸ்ரீ அரவிந்தர் அதிக அக்கரை செலுத்துவார். இன்று நாம் டாக்டரிடம் வைத்தியம் செய்து கொண்டால் அவருக்கு முழுமையாக கட்டுப்பட வேண்டும் என்ற மனப்பான்மை டாக்டரை குரு ஸ்தானத்தில் வைக்கின்றது. ஓர் இடத்தில் மனிதருக்குக் கட்டுப்படுகிறோம். அடுத்த இடத்தில் மனிதாபிமானத்திற்குக் கட்டுப்படுகிறோம். அடுத்த இடத்தில் கடமைக்குக் கட்டுப்படுகிறோம். ஆபீஸில் ஓர் எதிரி உன் உயிரை எடுத்துக்கொண்டிருக்கின்றான். அவனுக்குப் பிள்ளையில்லை, அதை சுட்டிக் காட்டித் திட்டினால் அடங்குவான் என்று உபதேசம் செய்தபோது, "என்னால் அந்த அளவுக்கு இறங்கி பேச முடியாது'' என்று சொல்லி மேலும் பல வருஷம் அவனால் சிரமப்பட்டார் ஒருவர், அவர் தன் குடும்பப் பண்புக்குக்கட்டுப்பட்டார். எதற்கு கட்டுப்பட வேண்டுமோ, எவருக்குக் கட்டுப்பட வேண்டுமோ அவரை அன்னையாக வரித்தால், அந்த கடமையை அன்னையாக வரித்தால் மனித செயலில் தெய்வம் தரிசனம் தரும்.

எளிய மனிதனிடமும் இறைவன் இருக்கிறான் என்பதை ஏற்றுக்கொண்டால் அவனிடமும் நமக்கு மரியாதை ஏற்படும். அது உயர்ந்த மனிதப் பண்பு. அங்கே அன்னையின் வெளிப்பாடு அதிகம்.

செயலும், கடமையிலும், பிறர் உரிமையிலும், மற்றவர் ஸ்தானத்திலும் அன்னையைக் கண்டு ஏற்றுக்கொள்வது அன்னையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகும்.

செயல் என்பது வாழ்வின் அடிப்படை. கட்டும் வீட்டிற்கு கல் அடிப்படையாக இருப்பதைப்போல் வாழ்வு செயல்களால் நிறைந்தது என்பதால் வீட்டின் அடிப்படையாக ஒரு செங்கல் அமைவதைப் போல் வாழ்வின் அடிப்படையாக ஒரு செயல் அமைகிறது. செயல் தெய்வத்தைக் கண்டால், தெய்வீக வாழ்விற்கு நல்வித்திட்டதாக அர்த்தம். செயலுக்குரிய பகுதிகள் மூன்று. உழைப்பு, உணர்வு, அறிவு ஆகியவை அவை. 10 மட சாம்பிராணிகளை சிஷ்யனாகப் பெற்ற குருவைப் பற்றிய கதைகளில் செயலுக்குரிய அறிவு குறைவதால் ஏற்படும் விநோதங்களை விவரிக்கின்றார்கள். அறிவேயில்லாதவர் செய்கை போன்று அவை தோன்றினாலும், அக்கதைகளிலுள்ள கருத்தை மட்டும் எடுத்து நம்மைச் சுற்றியுள்ள வாழ்வை சோதனை செய்தால், அக்கதைகளுக்கு எடுத்துக்காட்டாக அமையாதவர்களை காண முடியவில்லை என அறியலாம். நம் வாழ்வின் முக்கிய நிகழ்ச்சிகளை அது போல் பரிசோதனை செய்தால், அநேகமாக அந்த ஒவ்வொரு கதைக்கும் நாமே ஒரு வகையில் ஒரு நேரம் உதாரணமாக இருந்திருப்பது தெரியும்.

ஒரு காரியத்தைப் பூர்த்தி செய்ய சுமார் 20,30 விஷயங்கள் தேவைப்படுகிறது. அவற்றுள் முக்கியமான ஒன்றில்லை என்றால் அது கெட்டுப்போகும். 29 விஷயங்கள் இருந்தும் அவற்றைப் பயனற்றதாகச் செய்யும் திறன் இல்லாத அந்த ஒன்றுக்குண்டு. ஏதாவது ஒரு விஷயத்தை மாற்றிப் புரிந்து கொண்டாலும், விபரீத பலன் ஏற்படும். அவற்றுள் பல அம்சங்கள் நேரடியாக கண்ணுக்குத் தெரியாதவை. அதனால் புறக்கணிக்கப்படுபவை. நன்றியறிதல், கடமை போன்றவை அத்தகையவை. நம் சுபாவம் ஒரு காரியத்திற்கு ஒத்துவராது. அவசரம் அது போன்றது. அதுவும் கெடுத்து விடும். 12 விஷயங்களில் 11 விஷயம் தெரிந்தாலும் பூர்த்தியாகாத காரியத்தில் ஒன்றோ, இரண்டோ தெரிந்தவுடன் அனைத்தும் தெரிந்த உணர்வு ஏற்பட்டு வேலையைக் கெடுத்துவிடும். நானும் 20 வருஷமாக சமைக்கின்றேன். நான் செய்யும் சாம்பாரை என்னாலேயே சாப்பிட முடியவில்லை. எத்தனையோ பார்ட்னர்களைப் பார்த்தாயிற்று, எவரும் என்னை நம்பமாட்டேன் என்கிறார்கள். எந்த வேலை செய்தாலும், மற்றவர் துணையில்லாமல் பூர்த்தி செய்ய முடியவில்லை என்ற அனுபவம் உள்ளவர் அநேகம். அவர்களுக்கெல்லாம் மேற் சொன்ன குறையிருக்கும். இக்குறையுள்ளவரை மனிதன் அரை மனிதனாகவே இருப்பான். அதைப் போக்கிக் கொள்வது அவசியம். அன்னை பக்தர்கள் இது போன்ற குறையுடையவர்களாக இருந்தால், அருள் இக்குறையை மீறி ஒரு விஷயத்தில் காரியத்தைப் பூர்த்தி செய்யும். ஒவ்வொரு முறையும் பிரார்த்தனை அந்தக் காரியத்திலுள்ள அடிப்படைக் குறையை மட்டும் பூர்த்தி செய்ய உதவும்.

மனிதன் முனைந்து அடிப்படைக் குறையை விலக்கினால் இனி அவன் வாழ்வில் அதுபோன்ற எந்தத் தோல்வியும் இல்லை எனும்படி அருள் செயல்படும்.

ஒரு வைத்தியரிடம் ஒரு சிஷ்யன் நீண்டநாளாக வேலை செய்து வந்ததால், அவருடைய எல்லா மருந்துகளையும், முறைகளையும் மனப்பாடமாக அறிந்தான். ஆனால் குரு சிஷ்யனுக்கு குரு மருந்தின் இரகஸ்யத்தை மட்டும் சொல்லவில்லை. 12 வருஷ சிட்சை முடிந்து பல ஆண்டுகளாயிற்று. சிஷ்யன் மனவருத்தத்தோடு குருவிடம் அடிக்கடி முறையிடுவதுண்டு. ஒவ்வொரு முறையும் குரு ஒத்திப்போடுவார். அந்தக் குரு மருந்தையும் சிஷ்யனே செய்வதால் அவனுக்கு அதுவும் முழுவதும் தெரியும். ஆனால் அதற்குரிய மூலிகை மட்டும் ரகசியம். ஒரு முறை சிஷ்யன் மனம் வெதும்பி அவரிடம் ரகசியத்தைச் சொல்லும்படிக் கேட்டான். அவரும் சொன்னார், சந்தோஷ மேலீட்டால் அவருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு விடை பெற்றுக் கொண்டான். சில மாதம் கழித்து சோர்ந்த முகத்துடன் வந்தான். அவனுக்கு அது பலிக்கவில்லை, இவரிடம் மருந்து செய்வதுபோலவே தன் வீட்டில் செய்தான். ஏனோ பலிக்க வில்லை, ஏமாற்றத்துடன் வந்தான். குரு அவனை விசாரித்தார், அவனுக்குத் தன் தவறு புரியவில்லை. குரு மூலிகையைப்பற்றி விசாரித்தார். சரியாகச் செய்திருந்தான். எப்படிப்பட்ட இலை எனக் கேட்டார். நன்கு முதிர்ந்த இலையைப் பறித்தேன் என்றான். குருவுக்குப் புரிந்துவிட்டது. இளம் இலை தேவை. அதைச் சொன்னவுடன் சிஷ்யனுக்கு ஆர்வம் வந்தது. எழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான். இது மட்டுமே தன் தவறு என்றுணர்ந்தான். விடை பெற்றான். குரு அவனைச் சமாதானப்படுத்தி மீதி அனைத்தையும் சொல்வதாகக் கூறினார்.

இனி எதுவும் தேவையில்லை என சிஷ்யன் ஓடிவிட்டான். சில மாதம் கழித்துச் சோர்ந்து வந்தான். குரு பரிவுடன் விசாரித்தார். மீண்டும் தோல்வி. எப்படிக் காயவைத்தான் மூலிகையை என்பது பிரச்னை. நல்ல வெய்யில் மூலிகை சருகாகும் வரை காய வைத்த முறையை சிஷ்யன் பெருமிதத்தோடு விவரித்தான். அவன் பின்பற்றிய முறைகள் அனைத்தும் சரி, ஆனால் இளம் வெய்யில், நேரடியாகப் படாத நிழல் மூலிகை காய வேண்டும் என்பது அவனுக்குத் தெரியாது. குரு இம்முறை சிஷ்யனுக்கு மூலிகை இரகஸ்யத்தை முழுவதுமாகச் சொல்ல முடிவு செய்தார். நிழற்பாடத்தைக் கேட்டவுடன் சிஷ்யன் துள்ளி ஓடிவிட்டான்.

இதேபோல் மீண்டும் 7,8 முறை தோல்வி, இலைக்கு ஒரு பாடம், காய்வதற்கு ஒரு சட்டம், நெருப்புக்கு ஒரு நிபந்தனை, இந்த மூலிகையைச் சூரணம் செய்ய எந்த மரத்தை விறகாகப் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் ஒன்று. கடைசிவரை, அதாவது குரு மருந்தை மற்ற மருந்தில் சேர்க்கும்வரை, சூரணத்தின் சூடு, வைக்கும் பாத்திரம், முதல் அதை எடுக்கும் நாள் என மொத்தத்தில் 12 ரகசியங்கள் உள்ளன. குரு அனைத்தையும் சொல்ல விரும்பினார். சிஷ்யனுக்கு முழு அனுபவமும் பற்றாக்குறை பக்குவமும் இருந்தது. அவனுக்குள்ள சிறப்பான அனுபவத்தால் அவன் சிஷ்யனாகவே இருக்க முடியும். அவசரமில்லாமல், நிதானமாக பக்குவம் வரும்வரை அவனால் காத்திருக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் சிஷ்யன் ஆர்வமாகப் ஓடிப் போய் சோர்ந்து திரும்புவான். கடைசி முறையில் நான் சிஷ்யனாகவே இருந்து விடுகிறேன். அதுவே போதும் என்று அவரிடம் நமஸ்காரம் செய்து சொன்னான். குரு அவர் நிதானத்தை ஏற்றுக்கொண்டார். அவனுக்குப் பக்குவம் வந்துவிட்டதைக் கண்டார். மருந்தும் அவனுக்குப் பலித்து விட்டது.

சிறுபிள்ளைத்தனமான கதை. ஆனால் நாமறிந்த பெரும் தோல்விகளை மற்றவர்கள் வாழ்வில் சோதனை செய்து பார்த்தால், பெரும்பாலும் இதுபோன்ற ஒரு நிபந்தனை குறையும். நம் சொந்த வாழ்வே நமக்கு முக்கியம். அதை சோதனைக்குள்ளாக்கினால் ஞானம் வரும். மனம் ஞானத்தைப் பெற்றுக் கொண்டால் பக்குவம் ஏற்படும். பக்குவத்திற்குப் பதிலாக அருள் நிரந்தரமாக வரும். அற்புதங்கள் பல நிலைகளில் ஏற்படுவதுண்டு. எந்த நிலையில் இந்தப் பக்குவத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ அந்நிலையில் அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன என்ற ஸ்ரீ அரவிந்தர் வாக்கு பலிக்கும்.

நாமறிந்த மனித வாழ்வில் இந்தப் பக்குவம் உள்ளவர்க்கு அந்த ஒரு காரியம் பலிக்கும். அன்னையை ஏற்றுக் கொண்ட அருள் வாழ்வில் அதே பக்குவத்திற்கு அந்த நிலையிலுள்ள எல்லாக் காரியங்களும் பலிக்கும். சர்க்காரில் கெஜட் பதவியுள்பட எந்தப் பதவிக்கு நேர் முகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இரயில்வேயில் இன்ஜினீயரானாலும், A.G. ஆபீஸில் அசிஸ்டண்ட் A.G. ஆக நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டாலும், வெளிநாட்டுப் பட்டம் பெற்று பல்கலைக் கழகப் பேராசிரியரானாலும், ரிடையர் ஆகும் வரை அதே டிபார்ட்மெண்ட்தான் நமக்குரியது. அந்த இலாகாவிலுள்ள உயர்ந்த உத்தியோகங்களை நாம் எட்டிப் பிடிக்கலாம். வேறு டிபார்ட்மெண்டுக்குப் போக முடியாது. ஆனால் I.A.S. பாஸ் செய்தால் எல்லா இலாகாவுக்கும், எல்லா சர்க்காருக்கும், வெளிநாட்டிற்குப் போகும் அனுமதியுண்டு. வாழ்வு தன் நிலையில் பலன் தரும். அன்னை தான் இருப்பதால் எல்லா நிலைகளிலும் பலனைத் தருகிறார். வாழ்வு சர்க்கார் உத்தியோகம் போன்றது. அன்னையின் அருள் I.A.S. போன்றது.

செயலைச் சிறப்பாகச் செய்வதே யோகம் என கீதை கூறுகிறது. செயலே வாழ்வு என பகவான் எழுதுகிறார். செயல் தெய்வத்தைக் கண்டால் அது அன்னை தரிசனம். அது வாழ்வை யோகமாக மாற்றும் பாங்குடையது.

அன்னையைச் செயலில் காணத் தேவையான மனப் பாங்குகளில் தலையாயது (Your boss is your Mother) உன் தலைவனை அன்னையாக ஏற்றுக்கொள்ளும் மன நிலை, அந்தத் தலைவன்' முதலாளியாகவோ, தாயாராகவோ, அண்ணனாகவோ, கேப்டனாகவோ, நல்லெண்ணமுள்ள நண்பனாகவோ இருக்கலாம். அன்னையை அங்கு நாம் கண்டு கொண்டால், அருள் நம் வாழ்வை ஆட்கொள்ளும்.

* * *book | by Dr. Radut