Skip to Content

8. எண்ணமும் பலனும்

நல்ல எண்ணத்திற்கு உலகெங்கும் பாராட்டு காத்திருக்கின்றது. கெட்ட எண்ணத்திற்கு ஆதரவளிக்க முன் வருபவரில்லை. நல்லவர் ஒருவரிருந்தால் அவரால் உலகுக்கு நல்லது நடக்கும் என்ற எண்ணம் உலகில் உண்டு. நல்லவர்கள் வாழ்வதில்லை நானிலத்தில் என்ற சொல்லுக்கும் உண்மையுண்டு எனும்படி பல நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். எண்ணத்திற்கும், பலனுக்கும் தொடர்பிருப்பது தெரிகிறதே தவிர, முடிவாகச் சொல்லும்படி கண்ணுக்குத் தெரிபவை குறைவு. நம் சொந்த வாழ்க்கை நமக்கு விவரமாகத் தெரியுமாதலால், அவை ஆராய்ச்சிக்குரிய விஷயமாகும்பொழுது தெளிவு ஏற்படும். எண்ணத்தைப் பற்றிய ஆராய்ச்சியைத் தீவிரமாக மேற்கொண்டால் சுமார் 95% தெளிவு ஏற்படும். மீதி 5%க்கும் இதே சட்டம் என்றாலும், நம்மைப்பற்றிய கசப்பான உண்மைகளை மனம் ஏற்றுக்கொள்ளாது என்பதால், அங்கு தெளிவு ஏற்படுவதில்லை. ஆனால் சட்டம் அங்கும் சரியாகவே செயல்படும்.

பலன், திறமையால் ஏற்படுகிறது. நாம் பலனை எண்ணத்தால் மட்டுமே கணிக்கிறோம். நம் எண்ணத்தில் கலந்துள்ள திறமையை சோதனை செய்தால் பலன் ஏற்படும் விதம் புரியும். எண்ணம், திறமை மூலம் பலன் ஏற்படுத்துவதைக் காணலாம். நாம் பிறந்த இடம், வளர்ந்த விதம், பெற்ற கல்வி ஆகியவை நம் எண்ணங்களையும், திறமைகளையும் உருவாக்குவதைக் கண்டு கொண்டால், நமக்குள்ள பொதுவான சந்தேகங்கள் குறையும். அன்னையின் புத்தகங்களில் மனித எண்ணத்தைப் பற்றியுள்ள பகுதிகளை எல்லாம் படிப்பது ஓர் உயர்ந்த பலனைத் தரும். எண்ணத்தைப் பொறுத்த வரை உலகத்திலில்லாத படிப்பை அளிக்கவல்லவை அவை, எண்ணத்திற்கு வலிமையுண்டு என்று நாம் அறிந்தாலும், ஒருவர் 20 வருஷம் உழைத்துப் பெற்ற பலனை, பதவியை, செல்வத்தை, மற்றொருவர் எண்ணத்தின் வலிமையால் பெற முடியும். பெற்றார் என்றால் அது நமக்கு வியப்பை அளிக்கின்றது. பாபு ராஜேந்திர பிரசாத் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக உழைத்தார். சிறை சென்றார், எல்லாவற்றையும் துறந்தார். எதையும் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் வரும் என்பதையும் நிலையாகச் சொல்லமுடியாத நேரம். ஜனாதிபதி பதவி அவரைத் தேடி வந்தது. ராதா கிருஷ்ணன் சர் பட்டம் பெற்றவர். சுதந்திர இயக்கத்துடன் தொடர்பில்லாதவர். வைஸ்சான்ஸ்லராக இருந்தவர். ஆனால் வேதம், உபநிஷதம், கீதை இவற்றைப்பற்றி எழுதினார், பேசினார். இந்தியப் பண்பாட்டைப் பற்றி உலகெங்கும் பேசினார். ராஜன் பாபுவுக்குக் கிடைத்தது ராதாகிருஷ்ணனுக்கும் அதே அளவில் கிடைத்தது. அரசியல் தொண்டுக்கு ஏற்பட்ட பலன் வேதத்திற்கு சேவை செய்ததால் கிடைத்தது. சேவைக்குள்ள திறன் எண்ணத்திற்கும் உண்டு. எண்ணத்தின் தன்மைக்கேற்ற பலன் கிடைக்கும்.

உழைப்பு உயர்ந்தது என்று நம்புபவனுக்கு செல்வம் சேர்ந்தால் அதிசயப்பட வேண்டியதில்லை. ஆனால் பழிவாங்கும் எண்ணமுள்ளவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கெட்டுப் போகின்றன என்றால் அது நமக்குப் புரிவதில்லை. பழிவாங்கும் மனப்பான்மைக்கும், வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்புகளுக்கும், என்ன தொடர்பு என்று தெரிவது கஷ்டம். எதையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் எண்ணத்தை அதி தீவிரமாகப் பின்பற்றிப் பலரும் கேலி செய்யும் அளவுக்கு வந்த ஒருவருக்கு எதிர்பாராமல் வாழ்க்கை பெரும் செல்வத்தைக் கொடுக்கும் பொழுது அவர் உட்பட யாருக்கும் சுத்தத்திற்கும், பெரும் செல்வத்திற்கும் உள்ள தொடர்பு தெரிவதில்லை. தெரிந்தால் புரிவதில்லை. இதுபோன்ற தொடர்புகளை விளக்கியும், பட்டியலாக சுட்டிக்காட்டியும் எழுதப்பட்டதே இக்கட்டுரை.

ஓர் இன்ஜினீயர் தான் செய்யும் வேலைகளை கண்ணில் ஒத்திக்கொள்ளும்படி செய்வார். வேலையைச் சேவையாகச் செய்வார். பொழுது போனால் அவர் வீட்டிற்குப் போவதில்லை.குடும்பஸ்தனுக்கு பொருந்தாத காரியங்களை அதி தீவிரமாகச் செய்வார். இரவு நெடு நேரம் கழித்து வீடு திரும்புவார். அவர் உறவினர் அனைவரும் சேர்ந்து அவர் மனைவியை அவருடன் சண்டையிடத் தூண்டினர். அவர் மனைவியும், பிள்ளைகளும் அவருக்கு பக்திக்குச் சமமான அன்பை அவரிடம் செலுத்தினர். அவர் தவறு அவர்கள் கண்ணில் படவேயில்லை.

வேலையை சேவையாக வெளியில் செய்தார். குண விசேஷத்தால் நடத்தை சரியில்லை. வீட்டில் பாசத்தைப் பக்தியாக மனைவி மக்கள் அவருக்கு அளித்தனர். கடமை மீது அவருக்கு பக்தி, அவர் மீது வீட்டிலுள்ளவர்க்கு பக்தி. இதனிடையில் உள்ள குதர்க்கமான நடைமுறையே நமக்குப் புரிகிறது. அவர் மனதில் ஓரிடத்திலுள்ள பக்தி, மற்றவர்களுடைய பக்தியைப் பெறுகிறது.

அந்நியோன்யமான நண்பனைப் பெற்றவருக்கு, அன்பு நிறைந்த மனைவி அமைந்தாள். கணவன் மனைவியின் நெருக்கம் பலரையும் கவர்ந்தது. தன் மீது பாசமுள்ள நண்பனுக்கு இக்கட்டான நேரம் வந்தது. அந்த நேரம் இவரையே ஆத்மார்த்தமாக நண்பன் நினைத்தான். இவருக்கு ஏனோ ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது. நண்பனுக்குத் துரோகம் செய்ய நினைத்தான். பச்சைத் துரோகமாக நடந்து விட்டான். நண்பனுக்குப் பேராபத்து அருகே வந்து அவனுடைய அதிர்ஷ்டத்தால் விலகியது. ஓராண்டுக்குப்பின் மனைவிக்குக் கான்சர் வந்து விட்டது. இறந்துவிட்டாள். நண்பனுக்குச் செய்த துரோகம் அன்பான மனைவிக்கு மரணமாக வந்ததை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. நட்பில் துரோகம் ஏற்பட்டபின், நட்பு அந்த இடத்தில் இருக்க முடியாது. அதனால் மனைவியின் உயர்ந்த அன்பை இனி அவனால் பெற முடியாது. அவள் தன் அன்புக்குரிய இடம் பறிபோனதை ஆத்மாவில் உணர்ந்ததால், இனி அவளால் உயிரோடு இருக்க முடியவில்லை.

அடக்கம் இருந்தால் தீய சக்திகள் தொடாது என்கிறார் அன்னை. தாராள மனப்பான்மையுள்ளவர்க்கு ஆன்மிகம் தன் பரிசை அளிக்கும். பயமே இல்லாதவர்க்கு வாழ்க்கை தன் பரிசை வளமாக வாரி அளிக்கும் என்கிறார் அன்னை. அடக்கத்திற்கும், தீயசக்திக்கும் என்ன தொடர்பு? பயத்திற்கும் வளத்திற்கும் உள்ள தொடர்பென்ன?

தீய சக்திகளால் இறைவனைத் தொடமுடியாது. மனிதன் இறைவனை நாடுவதை மட்டுமே தீயசக்திகள் தடை செய்ய முயலும். அதனால் மனிதனுடைய குணங்களைத் தாக்கும் திறமை மட்டுமே அவற்றிற்குண்டு. அடக்கம் இறைவனுக்குரியது. அதனால் அடக்கமானவர்களை தீய சக்திகள் தீண்ட முடியாது.

மனிதனுடைய செயல்கள் அளவுக்குட்பட்டவை. கொடுத்தால் குறையும் என்பது மனிதனுக்குரிய சட்டம். ஆன்மீகம் அளவு கடந்தது. கொடுத்தால் குறையாது என்பது ஆன்மீகத்திற்குரிய சட்டம். ஆன்மீகம் கொடுத்தால் வளரும் என்ற சட்டத்தையும் உடையது. அளவோடு செயல்படும் மனிதன் தாராள மனப்பான்மையை மேற்கொண்டால், அந்த சட்டத்திற்குரிய ஆன்மீகம் மனிதனை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

பயம் அழியும் வாழ்க்கைக்குரியது. அழிவில்லாத வாழ்க்கைக்கு அளவு கடந்த பொறுமையுண்டு. எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையது. தொடர்ந்த மலர்ச்சியுண்டு. வீரத்துடன் செயல்படுவது உயர்ந்த வாழ்க்கை. எனவே பயத்துடன் செயல்படுபவனை அழியும் வாழ்க்கை ஏற்றுக் கொண்டு அழிக்கின்றது. பயம் அறியாத வீரம் நிறைந்தவனை அழியாத வாழ்வு ஏற்றுக்கொண்டு தன் பொக்கிஷங்களைக் கொடுக்கின்றது.

தற்பெருமை, கர்வம் உள்ளவர்க்கு விபத்துகள் ஏற்படும் என்கிறார் அன்னை. சிறுமையை உணர்த்தும் அளவில் வாழ்வு செயல்படும். கர்வம் விறைப்பானது, இனிமை இதமானது. அதனால் வளையும் தன்மையுடையது. விறைப்பானது கண்ணாடி போலிருக்கும். இனிமையானது தோல்போல் வளையும். போதுமான திறனில்லாத காரணத்தாலேயே விறைப்பு ஏற்படுகிறது. அளவுகடந்து திறமையிருந்தால் விறைப்பு ஏற்படுவதில்லை. திறன் குறைவாக இருப்பதால் எளிதில் உடையும் தன்மை பெறுகிறது. அதுவும் வாழ்க்கை வளரும்போது அதை தாங்கிக்கொள்ள அதிகத் திறன் தேவை. திறனற்ற கர்வம் அந்நேரத்தில் உடைவது இயற்கையே. ஒருவர் வாழ்வில் விபத்து உடலை அழிக்கின்றது. நஷ்டம் பொருளை அழிக்கின்றது. வதந்தி நல்ல பெயரை அழிக்கின்றது. அவற்றிற்குரிய காரணங்கள் பல. கண்மூடித்தனமாக ரோட்டில் நடந்தால் கார் மீது மோதிக்கொள்கிறோம். யோசனை இல்லாமல் ஒருவரை நம்பினால் மோசம் போகிறோம். குறுக்கு வழியில் போனால் பள்ளத்தில் விழுகிறோம். இதுபோல் பல காரணங்களால் அழிவு வருகிறது. அழிவுக்குரிய காரணங்களில் கர்வம் ஒன்றாகும் நம் வாழ்க்கையில் பழைய நிகழ்ச்சிகளைப் பார்த்தால், அல்லது கர்வமுள்ளவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அழிவு அவர்களை நாடிவருவது தெரியும். வாழ்க்கைக்கு முழுமையுண்டு. பொதுவாக நாம் அதைப் பொருட்படுத்துவதில்லை. கர்வமாக வீட்டில் பேசிவிட்டு ஆபீஸுக்குப் போனவுடன் மரியாதை அழியும் வகையில் உத்தரவு கிடைக்கும். கர்வமாகப் பேசியபின், நினைத்த பின், இதுவரை இருந்த பெரும் திறமை நம்மை விட்டகலும். அதனால் கர்வம் அழியும். தன் சொந்த ஊரில M.L.A. ஆக நின்று 3 முறை ஜெயித்தவர் தன் செல்வாக்கால் கர்வம் அடைந்து, அன்று பிரபலமாகிக் கொண்டிருந்த கட்சித்தலைவரை நோக்கி சவால் விட்டார். தைரியமிருந்தால் என் தொகுதியில் நின்று பார் என்றார். தேர்தலில் ஊர் பேர் தெரியாத அக்கட்சித் தொண்டன் இவரைத் தோற்கடித்து விட்டான்.

உழைப்பு உயர்ந்தது. உழைப்பின் பலன் உழைப்பவருக்கே உரியது. உடல்வருந்த ஒருவர் உழைத்துப் பெற்றதை மற்றவர் விழைவது தவறு. முதலாளிகளுக்கு தொழிலாளிகளை அமர்த்தும் வேலையிருந்த ஒருவர் அதற்காக கமிஷன் பெறுவது வழக்கம். அவர் சாமர்த்தியசாலி. தொழிலாளிகளை ஓர் இடத்தில் அமர்த்திய பின் தொடர்ந்து தொழிலாளியின் கூலியில் ஒரு பகுதியை தனக்கு கமிஷனாகக் கிடைக்க ஏற்பாடு செய்து பெரும் செல்வம் சேர்த்து விட்டார். அவர் மகன் பெரும் திறமைசாலி. அளவு கடந்து வருமானத்தைப் பெருக்கும் வகையில் உழைக்கும் திறனுடையவர். ஒரு சமயம் இலட்சரூபாய் முதலை 50 இலட்சமாகப் பெருக்கினார். ஆனால் தன் முதலீடு மட்டுமே அவருக்குக் கிடைத்தது. உபரி அடுத்தவர்க்குப் போய்விட்டது. அது சமயம் அவர் தன் வாழ்க்கையைப் பற்றி யோசனைசெய்தார். அவர் ஈடுபட்ட இடங்களிலெல்லாம் இவர் உழைப்பு பெரும் பலனை அளித்துள்ளது. பலன் இவரை நாடுவதில்லை. அடுத்தவருக்குப் போய்விடும். தகப்பனாரிடமிருந்து தான் பெற்ற முதல் பிறர் உழைப்பால் திரண்டது. அதனால் இவர் உழைப்பின் பலன் அடுத்தவருக்கே தொடர்ந்து போயிருக்கின்றது. கர்மம் என்று புரிந்து கொள்வதை விட இதை உழைப்பின் குணம் என்று புரிந்துகொண்டால் நல்லது.

ஒரே ஊரில் ஒரே பெயருள்ள இரண்டு சேவை ஸ்தாபனங்கள். ஒன்று சேவை செய்கிறது, மற்றது சேவை செய்வதில்லை. சேவை ஸ்தாபனம் அருகிலுள்ள ஆலைத் தொழிலாளிகளுக்கு அதிக சேவை செய்வதால் ஆலையிலிருந்து ஒரு பெரிய நன்கொடையை எதிர்பார்த்தனர். ஒரு வருஷ காலமாக நடந்து பல கட்டங்களைத் தாண்டி வந்து பெரிய நன்கொடையை சென்னை தலைமை ஆபீஸ் சாங்ஷன் செய்தது. இதையெல்லாம் கவனித்து வந்த சேவை செய்யாத ஸ்தாபனத் தலைவர் தன் ஸ்தாபனத்திற்கும் அதே பெயர் இருப்பதால், தலைமை ஆபீஸில் உள்ளூர் நிலவரம் தெரியாது என்பதால், பணம் சாங்ஷன் ஆனவுடன் தான் போய் அதை தன் ஸ்தாபனத்திற்குப் பெற்றுக் கொண்டார். சேவை செய்த ஸ்தாபனம் ஏமாந்துவிட்டது. பெற்றவர் தன் 30 வருஷ சர்வீஸை ஸ்தாபனம் பாராட்டும் விழாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். 30 வருஷமாக அந்த ஸ்தாபனத்திற்கு உழைத்தவர் அவர். அவர்கள் நிறுவனத்தின் தலைமைப் பீடத்திலிருந்து ஒரு புதியவரை அங்கு நியமித்து, 30 வருஷமாக வேலை செய்தவரை விலக்கி விட்டு விழா கொண்டாடினார்கள். பாராட்டு முழுவதும் புதியவருக்குப் போய்ச் சேர்ந்தது. புற வாழ்க்கை, அகவுணர்வைப் பிரதிபலிக்கின்றது என்ற உண்மையை நாம் புறக்கணிக்கலாம், வாழ்வு புறக்கணிக்கமுடியாது. புறக்கணிக்காது.

பிறர் மனம் புண்படும்படி நடந்தவர் வீட்டில் ஒருவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. கர்மம் என்று புரிந்து கொண்டனர். எல்லா விஷயங்களிலும் நல்ல குணம் உள்ளவர் இவர், ஒரு விஷயத்தில் அடக்க முடியாத ஆசையுடையவர். தன் ஆசையைப் பூர்த்தி செய்ய, தன்னை மறந்து செயல்படுவது இவர் வழக்கம். இவர் தன் ஆசையைப் பூர்த்தி செய்த வகை, மற்றவர் மனதை ஆழ்ந்து புண்படச் செய்தது. அதே காரியத்தைப் பலமுறை செய்தார். பிறர் மனம் ஆழ்ந்து புண்படுவதை புறக்கணித்து தன் ஆசையைப் பூர்த்தி செய்யும் குணம் தன்னை மறக்கும் சுயநலமாகும். இவர் வீட்டில் முக்கியமானவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டதால், தன்னை மறந்து செயல்படுபவனை தன்னை உணரும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது. பிறர் மனத்தைப் புண்படுத்தியதால், இவர் மனம் புண்பட்டது.

அதிகத் திறமையும் பிடிவாதத்தால் செயலற்றுப் போகிறது. பிடிவாதமுள்ளவர்கள் எவ்வளவு திறமைசாலிகளானாலும், பிடிவாதம் உள்ள வரை முழுத்தோல்வியை உற்பத்தி செய்வார்கள். கண்முன் உள்ள நிலைமையைப் பார்க்க மறுப்பது பிடிவாதம். பிடிவாதத்தை விடாமுயற்சி என நினைத்து ஏமாந்து போவதும் உண்டு. அளவுக்கு மேல் பிடிவாதம் செய்தால் அழிவு நிச்சயம்.

வாழ்க்கையில் சிலவற்றை நல்லது எனவும் வேறு சிலவற்றைக் கெட்டது எனவும் அறிவோம். நிலைமை மாறும் பொழுது நல்லது கெட்டதாகவும், கெட்டது நல்லதாகவும் மாறுவதும் நாம் அறிந்ததே. நிலைமை மாறும் பொழுது நாமும் மாறினால் அது சில சமயம் தவறாகும். மாறாவிட்டால் சில சமயம் தவறாகும். இவற்றுக்கெல்லாம் பொதுவான சட்டம் ஒன்றுண்டு. அன்றாட வாழ்வில் நம்மை அறியாமல் நாம் அதைக் கடைப்பிடிக்கின்றோம். ஆனால் அறிவுக்குரிய விஷயத்தில் அது போன்ற தெளிவு நமக்கிருப்பதில்லை என்பதால் சிரமங்களை வரவழைத்துக் கொள்கிறோம். குடும்பத்தில் மற்ற அனைவருக்கும் உதவியாக இருப்பது நல்லது என்ற உயர்ந்த கொள்கையை 8 பேர் பிறந்த குடும்பத்தில் ஒருவர் மட்டும் படித்து உத்தியோகம் செய்யும் பொழுது பின்பற்றினால் முடிவு விபரீதமாகவோ அல்லது வினோதமாகவோ இருக்கும். அதனால் இன்று சமூகத்தில் ஏற்பட்டுள்ள புதிய மன நிலையை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். உதவி செய்வது நல்லது என்றால் ஓர் அளவுக்கு மேல் உதவி செய்வதால் பெறுபவருக்கு கொடுப்பவர் மீது ஓர் உரிமை ஏற்பட்டு, நன்றியுணர்வு மீறி வெறுப்பாக மாறுகிறது. கண்டித்து குழந்தைகளை வளர்த்தால் நல்ல குழந்தைகளாக வளர்கின்றனர். அதனால் கண்டிப்பை அதிகப்படுத்தினால், குழந்தைகள் மனம் சுருங்கி வதங்கி விடுகின்றனர். அதேபோல் நல்ல குழந்தையை சுதந்திரமாக வளர்ப்பதைப்போல் முரட்டுக் குழந்தைக்கும் சுதந்திரம் கொடுத்தால் குழந்தை கெட்டுவிடும்.

சுதந்திரம் நல்லது என்றாலும் பலன் குழந்தையின் தன்மையைப் பொறுத்தது. முரட்டுக் குழந்தையை 1 எனவும் நல்ல குழந்தையை 10 எனவும் கொண்டு குழந்தைகன் தரத்தைப் பிரித்தால் 4-ம் நிலையில் உள்ள குழந்தை சராசரி குழந்தை எனலாம். சுதந்திரம் என்பது மேல் நிலையில் உள்ள குழந்தைகளிடம் நல்ல பலனைக் கொடுத்தால், கீழ்நிலையில் உள்ள குழந்தைகளிடம் கெட்ட பலனைத் தரும். இது வாழ்வில் பொதுவான சட்டம். மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றும், நிலைமையை உயர்ந்தது தாழ்ந்தது என்றும் பிரித்தால், ஒரேமுறை உயர்ந்த இடத்தில் உயர்ந்த பலனையும், தாழ்ந்த இடத்தில் தாழ்ந்த பலனையும் கொடுக்கும் என்பது வாழ்வுக்குரிய சட்டம்.

காசின் பேரில் உயிராக இருப்பவர்களுக்கு காசு சேரும். பண விஷயத்தில் தொடர்ந்த வெற்றி கிடைக்கும். அதற்கு ஓர் அளவுண்டு. அவரே தொழிலதிபரானாலும் முதலில் நல்ல பலன் கிடைக்கும். தொழிலின் அளவு பெருகும்பொழுது, சம்பள விஷயத்திலும், விலையிலும், இதரச் செலவுகளிலும் தாராளமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்நிலையை எட்டிய பின் இதுவரை பலன் கொடுத்த சிக்கனம் பயன்படாது என்பதுடன், எதிர்மாறான பலனைக் கொடுக்கும். இவர் தொழிலைச் சுருக்கவும் அழிக்கவும் பயன்படும் குணவிசேஷங்களையும், அவற்றிற்குரிய வாழ்க்கைப் பலன்களையும் பட்டியலாக கீழே எழுதுகிறேன். சில குணங்களுக்கு எதிரெதிரான இருபலன்களும் உயர்ந்த, தாழ்ந்த நிலையில் இருப்பதையும் குறிப்பிடுகிறேன்.


குணம்                                                                                                                 பலன்


பயமின்மை

மலர்ந்த முகம

வளைந்து போகும் தன்மை -               இயற்கை தன் வளங்களை வாரி வழங்கும்.

பொறுத்துக் கொள்ளும் திறன் 

ஆர்வம்

மனத்திட்பம்

இலட்சியம் -                                 -          ஆன்மீகம் தன் பரிசை வழங்கும்

உற்சாகம்

தாராள மனப்பான்மை

விழிப்பு

உண்மை (sincerity) -                                      தீயசக்திகள் நம்மைத் தொடமுடியாது.

அடக்கம்

உற்சாகம் -                                                    சைத்திய புருஷன்

நன்றியறிதல்                                                (ஆன்மா) வெளிவர உதவும்

கர்வம் -                                                       விபத்து, ஆபத்து, வாழ்வு தண்டனை

                                                                      அளிக்கும்

மற்றவர் எண்ணத்தை -                           நம் திறமையால் சாதிக்க முடிவதை

அறிந்து செயல்படுதல்                             விட அதிக மாகச் சாதிக்கலாம்

தொழில் திறமை (skill) -                           சம்பளம் பெற உதவும்

நிர்வாகத்திறமை -                                     சுயதொழில், செல்வம்

 

பிறரைச் சந்தேகப்பட -                          உயர்ந்த சூழ்நிலையில்

முடியாத பண்பு                                        எதிர்பாராத அதிர்ஷ்டம் தாழ்ந்த

                                                                    சூழ்நிலையில் அழிவு.

உணர்ச்சி பூர்வமான -                             எவரும் உன்னை ஏமாற்ற முடியாது.

அறிவு (vital intuition)

வளமான குழந்தைப் -                                தன்னம்பிக்கை

பருவம்

தன்னம்பிக்கை -                                        தலைமைப் பதவி, எடுத்த காரியத்தை

                                                                         முடிக்கும் திறன்

குறை கூறும் பழக்கம் -                           தொடர்ந்த நிரந்தரத் தோல்வி, தனிமை

 

அளவுக்கு மீறிய அர்த்த மற்ற -                 பிறரால் ஏமாற்றப்படுதல்

தைரியம் (over confidence)

உற்சாகமும் தைரியமும் -                        உயிருக்குப் பூரண பாது காப்பு (வந்த

                                                                        ஆபத்தும் தானே விலகும்)

சுயநலம் -                                                      நீ இருக்கும் நிலையில் பூரண

                                                                          வெற்றி; அதற்கு மேலுள்ள நிலையில்

                                                                            தோல்வியும், கெட்டபெயரும்ஏற்படும் .

குறுக்கு வழி -                                                   திவால்

பிடிவாதம் -                                                    பூரண தோல்வி

பணத்தின் மீது அளவுகடந்த -                  உன்னுடைய நிலையில் பெரும் வெற்றி கருத்து                                                         அடுத்த நிலைகளில் பூரண தோல்வி.

 

சுயநலத்தால் குடும்பத்தை -                   முதல் வசதியான வாழ்வும் முடிவில்

நடுத்தெருவில் விடுவது                           வாழ்வுள்பட அனைவரும் விலகிப்

                                                                     போய் விடுவார்கள்.

சுயநலத்திற்காக குடும்பத்துடன் -          சுயநலம் தவறாமல் தண்டனை பெறும்.

ஒட்டி இருப்பது

குழந்தைகளைப் புறக்கணிப்பது -          பிற்காலத்தில் குழந்தைகள்

                                                                   பிரியப்பட்டாலும் அவர்களால் உன்னைப்

                                                                    பராமரிக்க முடியாது

நட்புக்குத் துரோகம் -                               மனைவி துரோகம் செய்வாள்

நமக்குக் கீழுள்ளவரை -                          முதலாளி உன்னை ஜடமாக நடத்துவார்.

ஜடமாக நடத்தும் குணம்

அலுவலக கடமையை செய்யத் -             குழந்தைகளால் புறக்கணிக்கப்படுதல்

தவறுவது

இளமையில் வறுமை -                            நம்பிக்கையை இழந்து விட்ட மனம்;

                                                                      பாதுகாப்பில்லாத வாழ்வு.

பிறர் வருமானத்தில் வாழ்க்கையை -      உன் செல்வமும், உன் குழந்தைகள் நடத்துவது                                                     செல்வமும் பிறர் கைக்குப் போகும்

பொதுச் சேவை -                                          பிற்காலத்தில் புகழ் ஏற்படும்; வாழ்க்கை

                                                                         பரிசாக வளத்தையும் அளிக்கும்.

பலர் மனம் ஆழ்ந்து -                                    பைத்தியம் பிடிக்கும்

புண்படும்படி நடப்பது

 

பழி வாங்கும் ஆர்வம் -                                உரிய வாய்ப்புகள் விலகிப் போகும்

அதிகமான ஆசை -                                        செய்த வேலையின் பலன் கெட்டுவிடும்

தன்னை மறந்து செய்யும் -                           எதிர்பாராத அதிர்ஷ்டம்

பெரும் உழைப்பு

கேட்டுப் பெறுதல் -                                        உனக்குச் சேரவேண்டியது

                                                                         குறைந்து விடும் அல்லது தவறிவிடும்

வீண் பெருமை -                                            பொய் வதந்தி

உயர்ந்த சேவை -                                         விஸ்வாசம் நிறைந்த நட்பு

கவரிமான்போன்ற சிறந்த உணர்ச்சி -        உயர்ந்த மனச்சாட்சி

சுயநலத்திற்காகப்பிறருக்கு உதவுவது -      உதவியைப் பெற மறுப்பு

தற்பெருமைக்காக பிறருக்குச் -                  யோசனை பலிக்காது என

சொல்லும் நல்ல யோசனை                         பிறர் நினைப்பது

ஏதாவது செய்ய வேண்டும் -                        காரியம் கூடிவரத் தடை

என்ற பரபரப்பு

பலன் பெற அவசரப்படுதல் -                      திட்டமே ரத்தாகிவிடும்.

சுயநலத்தால் செய்யும் சேவை -            சேவைக்குப் பிறர் காரணம் கற்பிப்பார்கள்.

உரியதற்குமேல் கொடுக்க முயல்வது -      அளவுக்குக் குறைவாகப் பெற்றுக்

                                                                           கொள்ளுதல்

 

நேரம் வரும்முன் தீட்டும் திட்டம் -          திட்டத்தை ஆரம்பிக்க முடிவதில்லை

தாழ்ந்த ஆசையைப் பூர்த்தி செய்தல் -      வெறுப்பு; பெறுபவர் உனக்குத் தீங்கு

(அ) தாழ்ந்த மனப்பான்மை                                   செய்வார்; அவர் செய்யா விட்டால்

யுடையவரின் ஆசையைப்                                       வாழ்க்கை தண்டிக்கும்

பூர்த்தி செய்தல்

நல்லவர்களுக்குச் சுதந்திரம் -                      அதிகபட்ச பலன்.

தாழ்ந்தவர்களுக்குச் சுதந்திரம் -                  குறைந்தபட்ச பலன்.

பொருள்களை கவனிப்பது -                      ஏராளமான பொருள்கள் குவியும்.

பொருள்களை புறக்கணிப்பது -                      பற்றாக்குறை.

சுத்தமில்லாத வீடு -                                       வறுமை

சுத்தமான இடம் -                                            பெரும் செல்வம்

தானே வரும் உதவிக்கு நன்றி -          பொதுமக்களிடையேயிருந்து எதிர்ப்பு எழும்

 செலுத்தத் தவறுதல்                                                               

ஆசைகளை அவசரமாகப் -                          வயதான பின் விலக்கடியாத கஷ்டம்.

பூர்த்திசெய்யும் மனநிலை

குழந்தைகளுக்கு வசதி செய்ய -                   சந்தோஷமான, சௌகரியமான

முடிந்தாலும், முடியாவிட்டாலும்,                   பிற்காலம்

அவர்கள் மீது உண்மையானபாசம்

 

அன்பானவர்களுக்குச் செய்யும் -                     உன் அன்பிற்குரியவர்

துரோகம்                                                                 அகாலமரணமடைவர்

 

 

காரணமில்லாமல் மனம் -                                காரணம் இல்லாத அவமானம்.

புண்படும்படி நடப்பது

அடிப்படையான இலட் -                                          திடீர் மரணம்

சியத்தின் மீது வெறுப்பு

முழுநம்பிக்கை வைத்த -                                  பதவி, சொத்து, உயிர் பறிபோகும்.

வர்களுக்கு இழைக்கும்

மன்னிக்க முடியாத துரோகம்

* * *book | by Dr. Radut