Skip to Content

6. தோற்றேன் என்றபொழுதே வென்றாய்

அடக்கம் என்பது என்ன என்று அன்னை விவரிக்கும்பொழுது தன் அறியாமையின் முழுமையை அறிவது அடக்கம் என்கிறார். இறைவனின் திருவுள்ளம் செய்ய முனைந்திருப்பது எது என்று உணர்வதே அறிவு. அந்த அறிவு தனக்கில்லை என்ற தெளிவே அடக்கம் என்கிறார். அன்னை தான் ஒரே ஓர் அடக்கமான மனிதனைப் பார்த்திருப்பதாகச் சொல்லி அது பகவான் ஸ்ரீ அரவிந்தர் எனவும் கூறுகிறார்.

அர்ச்சுனன் தவம் செய்யுமிடத்தில் சிவலிங்கத்தை வைத்து அதற்கு மலர்மாலை சூட்டி வணங்கும் பொழுது, அங்கொருவர் வந்து அவனிடம் வம்பு செய்கிறார். அர்ச்சுனன் அவருடன் மல்யுத்தம் செய்ய நேரிடுகிறது. அவனால், அவரை இம்மி அளவுகூட தோற்கடிக்க முடியவில்லை. இந்த மனிதர் யாராக இருக்கமுடியும், இவரை என்னால் சமாளிக்கவே முடியவில்லையே என்று அவனுக்கு யோசனை பிறந்தபொழுது அவர் கழுத்திலுள்ள மாலையைப் பார்க்கின்றான். தான் சிவலிங்கத்திற்கு அணிவித்த மாலை அது. திரும்பி சிவலிங்கத்தைப் பார்த்தால் அங்கு அந்த மாலையில்லை. இவர் சாதாரண மனிதரில்லை. சிவபெருமானே இங்கு வந்து என்னுடன் வம்புசெய்கிறார். என்று புரிந்து அவரைப் பணிகின்றான். மனித உருவில் பெருமான் சங்கரர் எதிரிலும், இராமானுஜரெதிரிலும் வந்ததாக வரலாறு கூறுகிறது. சாமான்ய மனிதர்கள் எதிரில் சாமான்ய மனிதனே வருகிறான். அர்ச்சுனன், சங்கரர் போன்ற உத்தமர் எதிரில் தெய்வம் மனிதனாக வந்து அவர்களுக்கு ஞானத்தைப் புகட்டுகின்றது. உத்தமமான மனிதனுக்கும் மத்திமமான, அதமமான குணங்கள் இருப்பதுண்டு. அகந்தை அது போன்ற ஒரு குணம், உத்தமனின் அகந்தையை அகற்றத் தெய்வம் எந்த ரூபமும் எடுத்து வரும். அதை உணரும் வரை உபத்திரவம் செய்யும்.

யோகத்தையோ, யோக வாழ்க்கையையோ மேற்கொண்டவர்க்கு சர்வம் பிரம்மம் என்பது தத்துவம். நமக்கு வெறும் கல்லாக இருப்பது உத்தம நிலையை நாடிச் செல்பவனுக்கு பிரம்மமாகவும், விக்ரஹமாகவும் காட்சி அளிக்கும். அவனும் நம்மைப் போலவே அதைக் கல்லாக நினைத்தால் கல்லினுள்ளிருந்து தெய்வம் புறப்பட்டு வந்து அவனுக்கு ஞானம் உதயமாகும் வகையில் நடந்துகொள்ளும். அகந்தையை அழித்து, கண்திறந்து பார்க்கும்வரை அவனுக்கு ஏற்பட்ட பிரச்சினை தீராது. அகந்தையின் தோல்வியை அவன் ஏற்றுக்கொண்ட பின்னரே அவன் செயலில் அவனுக்கு வெற்றியுண்டு. அகந்தை எந்த உருவத்தில் வந்தாலும், உயர்ந்த சேவையில் வெளிப்பட்டாலும் அது அகந்தையாக இருக்கும்வரை அதற்கு வெற்றி கிடையாது. தோல்வி மட்டுமே உறுதி.

அன்னையை அறிந்த பின்னர் தன் குடும்பத்தார் அன்னையை ஏற்றுக்கொள்ளவேண்டும், நண்பர்கள் அன்னையிடம் வந்து பலனடையவேண்டும் என்று விழையும் பக்தர்கள் பலர். இந்த நல்லெண்ணம் பலர் வாழ்வில் அதிகமாகப் பலிப்பதுண்டு. சிலருக்கு பலிப்பதில்லை. ஒரு சிலருக்கு எதிர்மறையான பலன் ஏற்படுவதுண்டு. அதற்குரிய காரணங்கள் பல. அவற்றுள் ஒன்று "நான்'' சொல்வதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை. சொல்பவருடைய அத்தனைச் சொற்களும் உயர்ந்தவையாக இருப்பதுண்டு.

எத்தனைபேர் அன்னையை என்மூலம் அறிந்து தங்கள் குறைகளைப் போக்கிக் கொண்டார்கள் என்று உனக்குத் தெரியும், நீ மட்டும் ஏன் அடம்பிடிக்கின்றாய். உன் நன்மைக்காக மட்டுமே நான் சொல்வதை நீ நம்பவில்லையா?

  • நீ அன்னை பக்தனாகி வாழ்நாள் முழுவதும் அன்னையைத் தொழவேண்டும் என்று நான் சொல்லவில்லை. இந்தச் சிக்கலை அவிழ்க்க எல்லா வழியும் முயன்று பார்த்தாயிற்று. அதனால்தான் அன்னைக்குப் பிரார்த்திக்கச் சொல்கிறேன். இது முடிந்த பின் அன்னையை நீ வணங்க வேண்டாம்.
  • என் வாழ்வில் ஏற்பட்ட அதிசயத்தை நீ கண்டாய், உன் வாழ்வு சீரழியப்போகிறது என்று எனக்குப் பயமாக இருக்கிறது. எனக்காகவோ, அன்னைக்காகவோ நீ இதைச் செய்யவேண்டாம். உனக்காக மட்டும் செய்தால் போதும்.
  • இரவு பகலாக மகன் நடுங்குகிறான். எதைச் சொன்னாலும் கேட்கக்கூடிய பையன். அன்னை விஷயத்தில் மட்டும் கல்லாக இருக்கிறான். என் மனம் புண்ணாகிறது.

இது போன்ற நிலைகள் சில சமயம் அன்பர்களைத் திடுக்கிட வைப்பதுண்டு. ஏன் என் பிரார்த்தனை இது விஷயத்தில் பலிக்கவில்லை என்று ஐயம் அவர்களுக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. இந்நிலை பல காரணங்களால் ஏற்படுவதுண்டு. தான் எனும் முனைப்பாலும் எழுவதுண்டு. அப்படியிருந்தால் அவர்களுக்கு காரணம் தெரிய வழியில்லை. அன்னையை வழிபட வேண்டும் என்பது உயர்ந்த கொள்கையானாலும், என்விருப்பப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கோடு அது வெளிப்படுமானால் அங்கு எஞ்சி நிற்பது அன்னையில்லை, உன் நல்லெண்ணமில்லை. அவற்றை மீறி மிச்சமாக நிற்பது நான்' எனும் உணர்வு. ஓர் உயர்ந்த அதிகாரி ஸ்ரீ அரவிந்தரை வந்து சந்தித்துவிட்டுப் போனார். 1926க்கு முன் பகவான், மாலையில் சாதகர்களோடு உரையாடும் நேரம். அதிகாரி போனவுடன் ஒரு சாதகர் அவர் முகம் வட்டமாக ஆங்கில எழுத்து O போலிருக்கிறது அல்லவா என்றார். அதற்கு பகவான் அதிகாரி முகத்தில் ஒ (O) என்ற எழுத்தும், உள்ளத்தில் I* என்ற எழுத்தும் பெரிய அளவில் உள்ளன என்றார். அந்த அதிகாரி தான் பார்ப்பவர்களை எல்லாம் ஆசிரமம் வரச் சொல்வார். அவர் மூலம் பகவானை ஏற்றுக் கொண்டவர்கள் ஒரு சிலரேயாகும்.

_____________________________________________________________________________________

* வட்டமான முகத்தை Capital 'O' என்றும் வளர்ந்த அகந்தையை Capital 'I' என்றும் குறிப்பிடுகிறார்.

அன்னையை அறிவது பாக்கியம் என்றாலும் அன்னையை ஒருவர் மீது திணிப்பது சரியாகாது. அவர்களே விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, அவர்களை ஒரு சிக்கலிலிருந்து மீட்க அன்னையிடம் நாம் பிரார்த்தனை செய்யலாம். அவரை வற்புறுத்துவது சரியல்ல. தொடர்ந்து வற்புறுத்தினால் எதிரான பலன் கிடைக்கும். அதற்கு அகந்தையின் வெளிப்பாடு எனப் பெயர்.

பிறருக்குரிய சுதந்திரத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அடக்கம் எனப்படும். அன்னிபெசன்ட் அம்மையார் காலத்தில் சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தப் போதுமான வசதியில்லை. பள்ளிக்கூடம், பெரிய ஸ்தாபனங்களுக்குச் சொந்தமான ஹால் போன்றவை எல்லோருக்கும் கிடைக்காது. அரசியல் எதிர்கட்சியாளராக இருந்தால் ஹால் கிடைக்காது. இந்த அசௌகரியத்தை நீக்க பலர் சேர்ந்து கோகலே ஹால் கட்டினார்கள். (freedom of speech) பேச்சு சுதந்திரம் வலுப்பெற செய்த காரியம் அது. அந்தத் திறப்பு விழாவில் பேசிய அன்னிபெஸன்ட் அம்மையார் பேச்சு சுதந்திரத்தின் பெருமையை வலியுறுத்திவிட்டு அதற்கொரு விளக்கம் கொடுத்தார்.

என்னை எதிர்த்துப் பேச என் எதிரிக்குப் பேச்சு சுதந்திரம் மறுக்கப்படுமென்றால் அவனுக்கு அந்த உரிமை வேண்டும் என்று நான் போராடுவேன்,

என்ற மனப்பான்மையே பேச்சு சுதந்திரத்தைப் போற்றும் மனப்பான்மையாகும்.

ஒரு பிரச்சினையில் அன்னை வந்த பின், அப்பிரச்சினையின் உருவம் மாறிவிடும். அதன்பின் அது மாறிய நிலைக்கேற்ப நாம் நடந்து கொள்ளவில்லை என்றால், எளிதாக இன்றுவரை நடந்த காரியங்களும் இனி சிரமமாகப் போய்விடும்.பஸ்ஸில் ஏறிப்போக வேண்டும் என்பது சிறிய விஷயம். பஸ்ஸில் ஏராளமாக இடம் இருந்தால், நாம் அதில் ஏறத் தடையாக இருக்காது அதுவும் பாண்டிச்சேரி வந்து சமாதி தரிசனம் செய்யப் புறப்பட்டு வந்தால் பஸ் சுலபமாகக் கிடைக்கும். அதே பிரச்சினையில் நான் அன்னை பக்தன், நான் பாண்டி போகப் போகிறேன். பஸ் எனக்காகக் காத்திருந்தது ஏற்றிக் கொள்ளும் என்ற நினைவு தோன்றினால், அகந்தை வெளிப்பட்டு விடும். பஸ்ஸில் பாதி காலியாக இருந்தாலும், ஏறக் கூடாது என்பார்கள். என்ன அநியாயம் இது என்று கோபம் வரும். சண்டை போட்டால் சண்டைதான் மிச்சமே தவிர பஸ்ஸில் ஏற முடியாது. மனம் தன் தவறை உணராதவரை பாண்டிக்கு வரமுடியாது. உணர்ந்த அடுத்த நிமிஷம் சரி ஏறுங்கள்' என்று கூறும் நிலைமை ஏற்படும்.

பாரதி பாண்டியில் வாசம் செய்த பொழுது அதிகமான பாடல்களை எழுதினார். அடிக்கடி ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்தார். அவருக்கு நாலாயிரப் பிரபந்தம், திருக்குறள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார். பாரதியாருக்கு, ஸ்ரீ அரவிந்தரிடம் விசேஷ சுதந்திரம் உண்டு. ஸ்ரீ அரவிந்தர் தன்னை சாதகர்கள் குரு என்று சொல்வதை விரும்புவதில்லை. பாரதி யாரையுமே குருவாக ஏற்றுக்கொண்டதில்லை. அவர்கள் அரசியலுடன், இலக்கியமும் ஆன்மிகமும் கலப்பதுண்டு.

நம் ஆன்மிக மரபில் அகந்தையை அழித்தல் முக்கிய கருத்து என்றாலும், நடைமுறையில் நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்பதே, உயர்வு, வீரம், தைரியம் என்ற நிலை அன்றிலிருந்து இன்று வரையுண்டு. அகந்தையை அழிப்பதன் முக்கியத்தை நம் ஆன்மிக இலக்கியங்கள் வற்புறுத்தவில்லை. பக்தி, நம்பிக்கை, கீழ்ப்படிதல், தூய்மை, எமை ஆகியவற்றை வற்புறுத்திய அளவுக்கு அகந்தையை அழிக்கவேண்டும் என்று கூறவில்லை.

பாரதியார் நம் மரபின் சிறப்பைப் போற்றியவர். பழமையிருந்த நிலை பாமரர் ஏதறிவார் என்று மனம் புழுங்கியவர், மரபுக்குச் சிறப்பு சேர வேண்டும் என்றும், நம் மரபை அரியாசனத்தில் ஏற்ற வேண்டும் என்ற கருத்துடையவர்.

நம் மரபின் சிறப்பை அதிகமாகப் போற்றினாலும், ஸ்ரீ அரவிந்தருடைய யோக அடிப்படைகள் மரபிலிருந்து குறிப்பாக மாறுபடுகின்றன. சில முக்கியமான இடங்களில் மரபுக்கு நேர் எதிராகவும் இருக்கின்றன. இந்நிலையில் பாரதியின் கவிதைகளைப் பார்க்கும் பொழுது ஸ்ரீ அரவிந்தரின் எல்லா முக்கிய கருத்துக்களும் அவற்றில் சிறப்பாக இடம் பெறுவது வியப்பாக உள்ளது. இது பாரதியாரும், ஸ்ரீ அரவிந்தரும் நெருங்கிப் பழகியதால் ஏற்பட்டதாகத் தோன்றுகிறது.

கண்ணன் என் சீடன்' என்ற கவிதையில் அகந்தை அழிய வேண்டும் எனப் பாரதி சித்தரிப்பதுபோல் அகந்தைக்கு இலக்கிய சமாதி கட்டியவரில்லை. கவிதையில் வரும் குரு ஓர் உத்தமர். சீடன் கண்ணன். கண்ணனே சீடனாக வந்தது சீடனை உயர்வு படுத்துவதற்காக அல்ல, உத்தம குருவுக்குப் பிரம்ம ஞானம் அளிப்பதற்காக.

கண்ணக் கள்வன்
சீடனா வந்தெனைச் சேர்ந்தனன் தெய்வமே! பேதையேன் அவ்வலைப் பின்னல் வீழ்ந்து பட்டன தொல்லைப் பல பெரும் பாரதம்!

எனக் குரு தன் நிலையை விளக்குகிறார். அதற்குரிய காரணத்தை, 

உளத்தினை வென்றிடேன், உலகினை வெல்லவும் தானகஞ் சுடாதேன் பிறர்தமைத் தானெனும் சிறுமையி னகற்றிச் சிவத்திலே நிறுத்தவும் தன்னுள்ளே தெளிவும் சப்பிலா மகிழ்ச்சியும் உற்றிடேன். 

என்று குரு கூறுகிறார்.

... ... ... ... ...

இன்னது செய்திடேல், இவரோடு பழகேல்

இவ்வகை மொழிந்திடேல், இனையன விரும்பேல்

போன்ற கருத்துக்களை குரு கூறி முடித்த பின் கண்ணன் செயல் கணவன் சொல்லினுக்கெலாம் எதிர் செயும் மனைவி போல் இவன் நான் காட்டும் நெறியினுக்கெலாம் நேரெதிரே நடப்பானாயினன் என்று குரு காண்கிறார்.

மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும்

தெய்வமாக கொண்ட சிறுமதியுடையேன்

என்று தன்னை குரு கூறுகிறார்.

கண்ணன் குருவின் ஆணையெலாம் கேட்டபின்

உலகினர் வெறுப்புறும் ஒழுக்கமத் தனையும்

தலையாகக் கொண்டு சார்பெலாம் பழிச்சொல்லும்

இகழுமிக்கவனாய் என் மனம் வருந்த

நடந்திடல் கண்டேன்; 

என்றவாறு நடந்து கொள்கிறான். கண்ணனைத் தான் காத்திட விரும்பி,

தீயெனக் கொதித்துச் சினமொழி யுரைத்தும்

சிரித்துரை கூறியும் செள்ளென விழுந்தும்

கேலிகள் பேசிக் கிளறியும், இன்னும்

எத்தனை வகையிலோ என்வழிக் கவனைக்

கொணர்ந்திட முயன்றேன்.

இதன் முடிவு "கொள்பயனொன்றிலை.'' அதனால் குருவின் "அகந்தையும், மமதையும் ஆயிரம் புண்ணு''ற்றன. மேலும் குரு "கடும் சினமுற்று எவ்வகையாயினும் கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன்'' எனத் துணிந்து ... ... ... ... ... இவ்வுரைக் கிணங்குவாய் என்றார்.

"என் செய்யுளையெல்லாம்

நல்லதோர் பிரதியில் நாடொறும் எழுதிக்

கொடுத்திடும் தொழிலினைக் கொள்ளுதி'' 

என்று கேட்டுக் கொண்டார்.

நன்றெனக் கூறியோர் ஒரு நாழிகையிருந்தான்,

"செல்வேன்'' என்றான், சினத்தோடு நானும்
... ... ... ... ...
"எழுதுக'' என்றேன், இணங்குவான் போன்றதைக்

கையிலே கொண்டு கணப் பொழு திருந்தான்:

"செல்வேன்'' என்றான் ... ... ... ... ...

"செய்கின்றனையா? செய்குவதில்லையா?

ஓருரை சொல்'' என் றுறுமினேன் கண்ணனும்

"இல்லை'' என்றொரு சொல் இமைக்குமுன்

கூறினான்,

... ... ... ... ...

"போபோ போ'' என்

இடியுறச் சொன்னேன்: கண்ணனும் எழுந்து

செல்குவ னாயினன் 

... ... ... ... ... விழிநீர் சோர்ந்திட

"மகனே, போகுதி வாழ்கநீ, நின்னைத்

தேவர் காத்திடுக! நின்றனைச் செம்மைச்

செய்திடக் கருதி ஏதேதோ செய்தேன்

தோற்றுவிட்டேனடா; சூழ்ச்சிக ளழித்தேன்

மறித்தினி வாராய் செல்லுதி வாழி நீ!''

எனத் துயர் நீங்கி, அமைதியோ டிசைத்தேன்

... ... ... ... ... எங்கிருந் தோநல் லெழுதுகோல்

கொணர்ந்தான்:

காட்டிய பகுதியைக் கவினுற வரைந்தான்.

"ஐயனே, நின்வழி யனைத்தையுங் கொள்வேன்'' 

என்றான் கண்ணன்.

... ... ... ... ...

கண்ணன் மறுகணத் தென்றன்

நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினன்:

... ... ... ... ...

"தோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலே

வென்றாய்: உலகினில் வேண்டிய தொழிலெல்லாம்

ஆசையும் தாபமும் அகற்றியே புரிந்து

வாழ்க நீ''

என்றான்.

குரு தனக்குரிய ஆணையிடும் அதிகாரத்தைச் செலுத்தும் வரை கண்ணன் பித்தனாய், பேயனாயிருக்கின்றான். செல்லுதி வாழி நீ' என அன்பொழுக ஆசீர்வதித்த மறுகணம் எங்கிருந்தோ ஓர் எழுதுகோல் கொணர்ந்து காட்டிய பகுதியை கவினுற வரைகிறான். நின் வழியனைத்தும் கொள்வேன் என உறுதியளிக்கின்றான். பிறகு மனதில் தோன்றி சீடன் கண்ணன் உத்தம குருவுக்குப் பிரம்ம ஞானம் போதிக்க "தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே வென்றாய்'' என அறிவுறுத்துகிறான்.

அகந்தை தோல்வியுற்று அந்தராத்மா வெல்வதே குறிக்கோள்.

நாம் தோல்வியுறும் ஒவ்வொரு இடத்திலும், பிரார்த்தனை பலிக்கத் தவறும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அகந்தையோ அது போன்ற மற்றொரு தடையோ இருப்பதைக் காணலாம். அவசரம், எதிர்பார்ப்பு, ஒரு குறை, ஒரு முக்கிய விஷயத்தைப் புறக்கணிப்பது. கடமையில் வேறொரு இடத்தில் தவறுவது போன்றவையும் அகந்தைபோல் தடையாக இருப்பதுண்டு. அவற்றை கண்டு களைந்தால் அடுத்த வினாடி அருள் செயல்படுவதைக் காணலாம். குரு கண்ணனைத் திருத்த முயல்வது சிறந்ததெனினும், தன் அகந்தையை முன் வைப்பது சரியில்லை. கண்ணன் சீடனாக அமைந்தால் குருவுக்கு ஞானம் வரும் வரை தோல்வி வரும். அன்னை பக்தர்களுக்கு நினைத்ததெல்லாம் முதற்படியில் நடந்தால், இரண்டாம் கட்டத்தில் தொட்ட இடமெல்லாம் அன்னை புறப்பட்டுத் தோல்வியை மட்டும் கொடுப்பார். உயர்ந்த நிலையை எய்திய பின்னரே இத்தோல்விவரும். இதுவரை எளிமையாக நடந்த காரியங்கள் அனைத்தும் இனி சமர்ப்பணமின்றி நடக்காது என்ற அளவில் தெரியும். அன்னை கடைக்காரனாகவும், பஸ் கண்டக்டராகவும், உன் பிள்ளையாகவும், மனைவியாகவும், உன் கீழ் வேலை செய்யும் டைபிஸ்ட் ஆகவும் தோன்ற ஆரம்பித்தால் கண்ணனுடைய குருவின் நிலை நமக்கு வரும். அவர்களில் தோன்ற முயலும் அன்னையைக் கண்டு நம்முள் அகந்தையோ, அதையொத்த மற்றவையோ தடையாக இருப்பதைக் கண்டு அதைக் களைந்து, பஸ் கண்டக்டரில் தோன்றும் அன்னையை வணங்கும் மனப்பான்மை வரும் வரை, பிரச்சினை தீராது. ஞானம் வந்த பின்னரே பிரச்சினை விலகும்.

உயர்ந்த பக்தி நிலையை எட்டிய பின்னரே இது நிகழுமாதலால் ஆரம்ப நிலையிலுள்ள பக்தர்களுக்கு இது ஏற்படாது. முதல் நிலையிலுள்ள பக்தர்களுக்கு நினைத்த தெல்லாம் நடக்கும். அத்துடன் எவ்வளவு பக்தி உயர்ந்தாலும் மனத்துள் வக்கிரங்கள் இல்லாதவர்க்கு எல்லா நிலையிலும், முதல் நிலையிலுள்ளது போன்றே அமையும்.

* * *book | by Dr. Radut