Skip to Content

5. சத்தியம்

'(Men, countries, continents, Truth or abyss) தேசங்களும், கண்டங்களும், மனித குலமும் சத்தியத்தைத் தழுவ வேண்டும். இன்றேல் பாதாளத்தில் தள்ளப்படும்' என்ற புது வருஷச் செய்தியை அன்னை நெடுநாளைக்கு முன் அளித்தார்கள்.

நம்மை நாம் கவனித்தால் மனம் பல சமயங்களில் பல நிலைகளிலிருப்பதை அறிவோம். அதில் பலரும் பலவிதம். அவற்றுள் சில மனநிலைகள்.

இவற்றையெல்லாம் பொய் என்று எப்படிச் சொல்வது?

  • முழுவதும் பொய் சொல்லாதவர் வாழ முடியாது.
  • முக்கியமான இடத்தில் பொய் சொல்வது தவறு.
  • முக்கியமான இடத்தில் பொய் சொல்லாமல் முடியாது. மற்ற இடங்களில் சொல்லாமலிருக்கலாம்.
  • நெருக்கடி வந்தால் எப்படி மெய்யைச் சொல்லமுடியும்.
  • முழுவதும் மெய் பேசுவது நம் போன்றவர்க்கில்லை.
  • இந்தப் பழக்கம் வாழ்க்கைக்கு ஒத்து வராது.

எந்த வகையாகப் பார்த்தாலும், ஓரளவு பொய்யை நாம் ஏற்றுக்கொள்கிறோம், பயன்படுத்துகிறோம்.

அன்னையிடம் முழுப்பயனடைய பொய் அறவே உதவாது. யோகத்தை மேற்கொண்டு பல கட்டங்களைத் தாண்டியபின், ஒரே ஒரு பொய் சொன்னால், அதுவரை பெற்ற யோகப் பலன் கம்ப்யூட்டர் திரையில் எழுத்து மறைவதைப் போல் கணப்பொழுதில் அழிந்துவிடும்.

நாம் பலவகையான பொய்யைச் சொல்கிறோம். பொய்யை பல நிலைகளில் மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள்.

யோசனையின்றி பொய் பேசுவது,

பொய்யை நம்புவது,

பொய்யை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது,

வாழ்க்கையைப் பொய்யின் அடிப்படையில் அமைத்துக் கொள்வது,

இப்படியெல்லாம் செய்யும் பொழுது ஜீவன் பொய்யால் பல்வேறு அளவில் மறைக்கப்படுகிறது. பொய்யின் கறைபடாத இடத்தில்தான் அன்னை செயல்பட முடியும், முழு ஜீவனும் பொய்யால் ஆட்கொள்ளப்படாததால், அன்னை மேலும் நம்முள் செயல்படுகிறார்கள். இதன் உண்மையை அறியவேண்டுமானால், ஒரு பொய்யும் சொல்வதில்லை என்று முடிவு செய்து அதனடிப்படையில் ஒரு காரியத்தை ஆரம்பித்தால், அன்னை செயல்படும் வேகம், மெய்யின் திறத்தை வெளிப்படுத்தும்.

ஸ்ரீ அரவிந்த அன்னைக்கு சீதாராமன் என்ற அன்பர் எழுதிய கட்டுரையில் நாம் தினமும் சொல்லும் பொய்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அன்னைக்குப் பிரியமான sincerity உண்மை'' என்ற கோணத்தில் பார்த்தால் இக்கட்டுரை மிக அருமையானதாகும்.

என் புத்தகங்களை எல்லாம் தீவிரமாகப் படித்து விட்டு என்னைச் சந்தித்த அன்பர் ஒருவர், "சுற்றி வளைத்து நீங்கள் சொல்வதெல்லாம் ஒன்றே, பொய் சொல்லாதே என்று எழுதுகிறீர்கள்'' என்றார்.

வியாதி வந்தால், இதை விட்டு விட்டு எப்படி வாழ்வது என்று நாம் நினைப்பதில்லை. எந்த அளவு குணமாக வேண்டும் என்று கேட்பதில்லை. அதன் நிழலே தெரியாத அளவுக்கு வியாதியை அழிக்க முற்படுகிறோம். பொய், ஆன்மாவுக்கு ஏற்பட்ட வியாதி, அறவே ஒழிப்பது நம் கடமை.

நேரடியான பொய், பொய்யின் வடிவங்களிலிருந்து மாறுபடும். பக்தியில்லாத பூஜை, பிரியமில்லாத உபசாரம், படிப்பில்லாத பட்டம் போன்றவை பொய்யின் வடிவங்கள்.

தியான மையத்திற்கு வருபவர்கள் சூழல் லேசாக இருக்கிறது. ஒளி நிறைந்து காணப்படுகிறது என்பது சத்தியத்தின் பிரசன்னமாகும்.

சூட்சுமப்பார்வையுள்ளவர்க்கு பக்தியுள்ள பூஜையில், ஒளியும், பக்தியில்லாத பூஜையில் இருளும் கண்ணுக்குத் தெரியும். அதற்குரிய தேவதைகள் தெரிவதும் உண்டு.

கடைசி காலத்தில் அன்னை, என்னிடமே பொய் சொல்கிறார்கள், என்ன செய்வது' என்று குறைபட்டுக் கொண்டார். அன்னையிடம் பொய் சொல்லியவரை பொய் பல ஜன்மங்களுக்கு விடாது. அன்னை ஸ்பர்சம் பட்டவுடன் சொல் ஜீவனாக வளரும். அவரிடம் சொல்லிய பொய், பொய்யின் தேவதையாக வளர்ந்து சொல்லியவர் ஜீவனை ஆட்கொண்டு பிறவிக்குப் பிறவி தொடரும். அவரே பொய்யின் தேவதையாக மாறும் வரை வளரும்.

நாம் பலவகையான பொய்களைச் சொல்கிறோம்.

1. எவருக்கும் தீங்கிழைக்காத, யோசனையற்ற பொய்.

2. வெட்கப்படக்கூடியதை மறைக்கச் சொல்லும் பொய்.

3. நல்ல பெயர் வாங்கச் சொல்வது.

4. நஷ்டத்தைத் தவிர்க்கச் சொல்வது.

5. இலாபம் கருதிச் சொல்லும் பொய்.

6. தொழில் சம்பந்தமாகச் சொல்லும் ஏராளமான பொய்கள்.

7. யோசனையின்றி சொல்லும் பொய்யால் பிறருக்கு ஏற்படும் தீங்கு.

8. வேண்டுமென்றே  பொய் சொல்லிபிறரை நஷ்டப்படுத்துவது.

9. பிறருக்குக் கெட்ட பெயர் வரவேண்டுமென பொய் சொல்வது.

10. வக்கிர புத்தியால் புனைந்துரைப்பது.

11. பிறரைத் தொந்தரவுபடுத்த புனைந்துரைத்த வக்கிரம்.

12. பிறருக்கு ஊறுசெய்து தான் பலன் பெற சொன்ன பொய்.

13. கடமை, நன்றியிலிருந்து புனைந்துரைப்பிக்கச் சொல்லும் பொய்.

14. பெரும் குற்றங்களைச் செய்யச் சொல்லும் பொய்.

நாம் ஏற்றுக்கொண்ட மெய், பொய் பல நிலைகளில் செயல்படும். நம்முடைய மெய்யின் வலிமை எந்த அளவிலிருக்கிறது. பொய் நம்மில் எந்த அளவிலிருக்கிறது, நமக்குத் தெரிந்தது எது தெரியாமல் செயல்படுபவை எவை என அறிந்துகொள்வது சற்று சிரமம். அது தெரிந்தால், மனம் அதை அதனடிப்படையில் செயல்படுவது கடினம். இவை இரண்டையும் செய்ய முடிந்தால், நாம் மேலும் சத்தியத்தின் ஆட்சிக்குள் வருகிறோம். கீழே சில உதாரணங்களை விளக்குகின்றேன்.

1. நட்பின் சிறப்பு பக்தியாகி ஒருவர் கொடுத்த பரிசுப் பொருள் - உதாரணமாக வெள்ளி டம்ளர் - மேலும் இரண்டு பொருள்களை அவருக்குக் கொண்டு வருகிறது எனில், கொடுத்தவர் இவ்விஷயத்தில் Mother's Truth அன்னையின் சத்தியத்தைப் பெற்றுள்ளார் எனப் பொருள்.

2. தான் கல்லூரியில் படிக்கமுடியாது, அதற்குரிய சூழ்நிலையேயில்லை எனக் கூறியதைக் கேட்டவர், பதிலாக உனக்கு அந்த வாய்ப்புண்டு' என்று சொல்லி, அது பலித்தால், அவர் வாக்கு சத்திய வாக்கு என்று பொருள்.

3. காலையிலிருந்து கரண்ட் இல்லாத வீட்டில் செய்த முயற்சிக்கு கரண்ட் வர இன்னும் 4 மணியாகும் என்று தெரிந்தபொழுது, உள்ளே ஒருவர் வந்தால், அத்துடன் கரண்ட்டும் வந்தால் அவரிடம் vital truth, பிராணனின் சத்தியம் இருக்கிறது எனப் பொருள்.

4. ஒரு வருஷமாக கரண்ட் இல்லை என்பதே இல்லை என்ற வீட்டில் ஒருவர் நுழைந்தவுடன் கரண்ட் போய் விட்டால், அவருக்கு இவ்வீட்டார் விஷயத்தில் (பிராணன், உயிர், வாழ்வு, vital) சத்தியமில்லை என்று தெரியும். 

5. மெடிகல் சீட் கிடைக்கும் வாய்ப்பு ஓரளவுதான் உள்ளது என்ற மாணவனின் மீது அவன் மாமா அதிக அக்கரை எடுத்து மெடிக்கல் சீட் பெற முயன்றபொழுது அவன் +2 பரீட்சையில் பெயிலாகி விட்டான் என்றால், மாமாவுக்கும் படிப்புக்கும் தூரம், அவர் அக்கரை (surface mind) மேல் மனத்தில் முழுமையானாலும், உள்மனத்தில் அவர் பையன் மீது வெறுப்புள்ளவர் என்று தெரிந்து கொள்ளவேண்டும். விருப்பு இங்கு சத்தியமாகவும், வெறுப்பு பொய்யாகவும் மாறும்.

6. நெருநாளாக வரும் பெரிய காணிக்கை ஒரு சமயம் ஓர் அன்பர் மூலம் வந்து, அதன் மூலம் அதுபோன்ற பல பெரிய காணிக்கைகள் சேவைக்காக வந்தால், கொண்டு வந்த அன்பருக்கு சேவையின் சத்தியமிருக்கிறது என்று பொருள். அவர் கையால் வந்ததே கடைசி காணிக்கையாகி அத்துடன் இத்தனை வருஷமாக காணிக்கை செலுத்துபவர் நிறுத்தி விட்டால் கொண்டு வந்த அன்பருக்கும், பணத்திற்கும் பகை அல்லது அவர் மனம் சேவையை எதிர்க்கிறது என்று பொருள்.

சத்தியம் நம்முள் எந்த அளவு ஊறியிருக்கிறது, சத்தியத்தை நம்முள் நாடுவது மனமார வாழ்வா (vital), ஜீவனா என்பதை அறிவது மேலும் சத்தியத்தை நாட உதவும்.

* * *book | by Dr. Radut