Skip to Content

21. ஆயிரத்தில் ஒருவர்

இதுவரை சொந்தக்கார ஏழைப் பெண்களை வீட்டிற்குக் கொண்டு வந்து கொஞ்சநாள் வைத்திருந்து கல்யாணம் பண்ணிய வகையில் 9 கல்யாணத்தை இவர் செய்திருக்கிறார் என்றால், யார் இவர்? இப்படிப்பட்டவரை நாம் கேள்விப்பட்டதில்லையே? ஆயிரத்தில் ஒருவராக இருக்கிறாரே என்று சொல்லுகிறோம்.

வக்கீலிடம் போனவுடன் கேஸ் விபரம் கேட்பதற்கு முன், எனக்கு பீஸ் எப்பொழுது தருவாய் என நான்கு, ஐந்து முறை, கேட்டு, கேஸ் ஆரம்பிக்குமுன் முழு பீஸ் கொடுக்கவேண்டும் என்ற வக்கீலுடைய கட்சிக்காரர், வேறொரு வக்கீல் கேஸ் ஜெயித்தபிறகும் பீஸ் கேட்கவில்லை நானே அவரை விசாரித்துக் கொடுத்தேன் என்று நண்பர் சொல்லும் பொழுது, இந்த வக்கீல் ஆயிரத்திலொருவர் என்கிறார்.

இன்ஷுரன்ஸ் ஏஜெண்டை தேடிப் போய் பாலிஸி எடுத்து, முதல் பிரிமியம் செலுத்திய பின் பாலிஸி எடுத்தவர் ஏஜண்டை அழைத்துப்போய் விருந்து வைத்தால், ஏஜெண்ட் இது நான் கேள்விப்படாத விஷயம், நீங்கள் ஆயிரத்தில் ஒருவர் என்கிறார்.

உலக வழக்குக்குப் புறம்பாக, தன்னலமில்லாமல், நேர்மையுடன் பெருந்தன்மையுடன், அதிமேதாவித்தனததுடன், நடப்பவரைப் பார்த்தால் இது போன்றவர் சல்லடை போட்டு சலித்தாலும் கிடைக்கமாட்டார், நம்மூரில் இதுபோன்றவர் இல்லை, ஆயிரத்திலொருவர் இது போன்றவர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.

அறிவு, தைரியம், பொறுமை, நிதானம், உயர்வு, நாணயம், அடக்கம், வீரம், உதவிமனப்பான்மை, பாசம், பற்று, ஆகியவற்றுள் ஏதாவது ஒன்று ஒருவர் வாழ்வில் சிறந்து செயல்பட்டால் அவரை ஆயிரத்தில் ஒருவர் என்கிறோம். இவையெல்லாம் உயர்வை மட்டும் குறிப்பவை. வசதி, செல்வம், செல்வாக்கு பெறுவதிலும் சிலர் ஆயிரத்திலொருவராக இருக்கின்றார்கள். உயர்வானாலும், செல்வமானாலும், செல்வாக்கானாலும், இவை சேர்ந்த நிலைமையானாலும், அதைப் பெறுபவர் நிச்சயமாக ஆயிரத்திலொருவராக அமைவார்.

ஆயிரத்திலொருவர் என்பதை மேலும் முழுவதுமாக விளக்கம் கொடுத்து, சமூகத்தில் இன்று அவர்கள் எப்படி உற்பத்தியானார்கள் என்று சொல்லி, அதைப் பலரும் இன்று எட்டிப்பிடிக்க வழியிருக்கிறதா? இருக்கிறது என்றால் அவ்விஷயத்தில் அன்னை பக்தர்கள் நிலை என்ன என்று விளக்குவதே என் நோக்கம்.

அன்னை பக்தர்கள் கர்மத்தைக் கரைக்கலாம், அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்யலாம், தங்கள் ஸ்தாபனத்தின் தலைவர்களாகலாம், பிரச்சினையேயில்லாத வாழ்வை உற்பத்தி செய்யலாம், தீராத வியாதியைக் குணப்படுத்தலாம், தாம் விரும்பும் எந்த நிலையையும் அடையலாம் என்றெல்லாம் நான் பல வருஷங்களாக எழுதி வருகிறேன்.

இவற்றையெல்லாம் ஏதோ ஒரு சமயம் வாழ்வில் பார்த்த பின்னும், அந்த நம்பிக்கை நீடிப்பதில்லை. மீண்டும் இவை முடவனுக்குக் கொம்புத் தேன் போல காட்சியளிக்கும். தகப்பனாருடைய கான்ஸர் குணமான பின் தன் இதர குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமா என ஓரொரு சமயம் மனம் கேட்கும். மலை போன்ற பிரச்சினை வந்து பனிபோல மூன்று, நான்கு முறை மறைந்தாலும், கொஞ்சநாள் கழித்து மனம் அவற்றை மறந்துவிடும். பழைய சந்தேகங்கள் சிலசமயம் தலைதூக்கும். எனவே, உச்சாணிக் கொம்பிலுள்ள பலனைப் பேசுவதற்குப் பதிலாக, ஏராளமான பேருக்கு பலிக்கக் கூடிய பலனை விளக்க ஆயிரத்திலொருவர் என்ற தலைப்பை எடுத்துக் கொண்டேன்.

இலட்சம் பேர் பங்குகொண்டால் ஒருவருக்குப் பரிசு என்றால், எளிமையான போட்டி என்றாலும், மனம் தயங்கும். இலட்சம் பேர் பங்கு கொண்டால், 100 பரிசு உண்டு என்றால் நிலைமை இலட்சத்திலொன்று என்பதிலிருந்து, ஆயிரத்திலொன்று என்று மாறுகிறது. இந்த நிலைமையில் போட்டியில் பங்கு கொள்ள அதிகம் பேர் முன் வருவார்கள்.

ஆயிரத்திலொன்று என்பது வழக்கு. அதற்குள்ள உண்மையை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது. மகாத்மா காந்தியை ஆயிரத்தில் ஒருவர் என்கிறோம். கடந்த 100 ஆண்டுகளில் அவர் போன்ற மற்றொருவர் பிறக்கவில்லை. ஆயிரத்தில் ஒன்று என்பதை மகாத்மா விஷயத்தில் இலட்சத்தில் ஒன்று, கோடியில் ஒன்று என்று சொல்லத் தோன்றும். அது உண்மையானால் இன்று இந்தியாவில் 80 மகாத்மா பிறந்திருக்க வேண்டும். நூறு ஆண்டுகளில் ஒருமுறை மகாத்மா போன்றவர் பிறக்கின்றார். ஆனால் வழக்கில் அவரை இலட்சத்தில் ஒன்று என்கிறோம்.

நெப்போலியன் தன்னைப் பற்றிச் சொல்லும்பொழுது என் போன்றவர் பல நூற்றாண்டுக்கு ஒருமுறை பிறப்பார் என்றார். பகவான் ஸ்ரீ அரவிந்தர் முற்பிறப்புகளில் நெப்போலியன், லியானர்டோ, அகஸ்டஸ் சீசராக இருந்ததாக அவர்கள் சீடர்களிடையே ஒரு நம்பிக்கையுண்டு. நெப்போலியனுடைய பிறந்த தினம் ஆகஸ்ட் 15.

உயர்ந்த மனிதர்களை நாம் பலவாறு அறிவோம். அறிவிற் சிறந்தவரை மேதை genius என்போம். சாக்ரடீஸ், நீயூடன், கோபர்னிகஸ், கலிலியோ, பெர்னாட் ஷா, ஹெச்.ஜி. வெல்ஸ் போன்றவர்களை மேதை என்கிறோம். வீரத்திற் சிறந்தவரை தலைவர், மாவீரன், என்கிறோம். சீசர், அலெக்ஸாண்டர், செங்கிஸ்கான், சிவாஜி, நெப்போலியன், சர்ச்சில் போன்றவர்களை அதுபோல் குறிக்கிறோம். அரசியல் மேதைகளை Great Kings என்று வர்ணிக்கும்போது அசோகர், அக்பர், எலிஸபெத் மகாராணி, லெனின், நேரு, கிருஷ்ணதேவராயர், ரூஸ்வெல்ட், லூயி XIV போன்றவரைச் சொல்லுகிறோம். ஏசுபிரான், புத்தர், கிருஷ்ணபரமாத்மா, இராமபிரான் ஆகியவரை அவதார புருஷர்கள் என வர்ணிக்கின்றோம். சங்கரர், சிவாஜி, அலெக்ஸாண்டர், மகாத்மா காந்தி போன்றவரை விபூதி என்பார்கள்.

அறிவு ஆன்ம விளக்கம் பெற்றால் மனிதன் மேதையாகிறான். வீரம் ஆன்மிக உயர்வு பெற்றால் அர்ஜுனன் போன்ற மாவீரன் ஏற்படுகிறான். ஜீவன் முழுவதும் ஆன்மிக ஜோதியை ஏற்றுக் கொண்டால் மனிதன் தெய்வப் பிறவியாகி அவதார புருஷனாகிறான். முழுஜீவன் அவதாரத்தை உற்பத்தி செய்யும். அதில் ஒரு பகுதியானது விபூதி என்ற நிலையை உற்பத்தி செய்கிறது. ஆயிரத்தில் ஒருவர் யார் என்பதை விளக்குமுன், குழப்பத்தை தவிர்ப்பதற்காக அவதாரம், விபூதி, மேதை, மாவீரன் ஆகியவர்களை விவரித்து, நாம் இப்படிப்பட்ட பெரியவர்களை மனதில் கொள்ளவில்லை. இவர்கள் அனைவரும் நம் கட்டுரைக்கு அப்பாற்பட்ட மகாபுருஷர்கள் என்று சொல்லி குழப்பத்தை அடிப்படையில் மனதிலிருந்து விலக்க பிரியப்படுகிறேன்.

நான் பேசுவது மகாபுருஷர்களை பற்றியல்ல, நம்மைப் போன்ற மனிதனைப் பற்றிப் பேசுகிறேன். நேருவைப் பற்றி நாம் பெருமைப்படும்பொழுது, பிறப்பிலேயே அந்த அம்சம் உள்ளவரே நேருவைப்போல், காந்தியைப் போலிருக்க முடியும் என்று தெரிந்து கொள்கிறோம். அது சரி. சங்கரருடைய வரலாற்றைப் படிக்கும் பொழுது, இராமானுஜரைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பொழுது, சிபி சக்கரவர்த்தியின் கருணையை கேள்விப்படும்பொழுது, இது நம்மைப்போன்ற மனிதன் எட்டக்கூடியதல்ல. பிறப்பிலேயே இருக்கவேண்டும், என நினைக்கிறோம். ஆண்டாளுடைய பக்தியும், மீராவின் ஆனந்தமும் பயிற்சியால் பெறக் கூடியவையல்ல. சிறு வயதில் அலெக்ஸாண்டருடைய தந்தை அண்டை அயல் நாடுகளை எல்லாம் ஜெயித்துக்கொண்டே வரும் பொழுது, எல்லா நாட்டையும் தகப்பனாரே ஜெயித்து விட்டால் நான் பெரியவனாகியபின் ஜெயிக்க உலகத்தில் நாடே இருக்காது என குறைப்பட்டுக்கொண்டார். சீசரும், அலெக்ஸாண்டரும், நெப்போலியனும் 20 வயதில் உலகத்திற்குத் தங்கள் பெருமையை அறிவிக்க முடிந்தது.

ஆயிரத்திலொருவர் என நாம் சில பெரிய மனிதர்களைப் பற்றி பேசும் பொழுது, உலக மேதைகளான மேற்சொன்ன மகாபுருஷர்களை மனதில் கொள்ளக்கூடாது. பயிற்சியால் ஒருவரால் தாகூராக முடியாது. ஆனால் C.V. ராமனாகலாம். இன்று நாம் பேசுவது டாக்டர் இலட்சுமணசுவாமி முதலியார், இராமசுவாமி முதலியார், இராஜாஜி, சர்.சி.வி. ராமன், சி.பி. இராமசுவாமி, சி. சுப்ரமணியம், எம்.எஸ். சுவாமிநாதன், டாடா, பிர்லா, பஜாஜ் போன்றவர்களைப் பற்றியாகும். இவர்களுடைய ஆரம்பகால வாழ்க்கையையும், பிற்காலத்தில் இவர்கள் அடைந்த நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிவதில்லை. வெங்கட்ராமன், சஞ்சீவ ரெட்டி, V.V. கிரி ஆகியோர் ஜனாதிபதி ஆவார்கள் என ஆரம்ப காலத்தில் நினைத்தவர்களில்லை. சாதாரண மத்தியவர்க்க குடும்பத்தில் பிறந்தவர்கள் இவர்கள். 20 ஏக்கர் சொத்துடைய குடும்பம், ரெவின்யூ டிபார்ட்மெண்ட் ஆபீசர், டாக்டர், எஸ்டேட் கணக்குப் பிள்ளை போன்றவர்களுடைய குடும்பங்களில் பிறந்தவர்கள் இவர்களில் பலர். இவர்கள் பிற்காலத்தில் எட்டிய உயர்வை எட்டாமல் போயிருந்தால், இவர்களுக்கு ஏமாற்றமிருந்திருக்காது. எட்டியது உலகத்திற்கு மட்டுமல்ல இவர்களுக்கும் ஆச்சரியம். அது எப்படி நடந்தது? பிறவியில் எந்த பெரிய அம்சத்துடனும் பிறந்தவர்களல்ல இவர்கள். உழைப்பால் உயர்ந்தவர்கள் என்றால், இவர்களைப் போல் உழைத்தவர்கள் அநேகம். அந்தஸ்தால் உயர்ந்தவர்கள் என்றும் சொல்லமுடியாது. இவர்களைவிட உயர்ந்த அந்தஸ்துடைய பலர் இதுபோல் உயரவில்லை. எனவே இதை அதிர்ஷ்டம் என்கிறோம். அதிர்ஷ்டம் என்பதை மறுக்க வேண்டாம். நாம் புரிந்து கொள்ளக்கூடிய அம்சங்களும் இதில் இருக்கின்றன. வெளிநாட்டுப் படிப்பு உயர்த்தியது என்றால், இவர்களுடன் வெளிநாட்டில் படித்த அனைவரும் இந்த உயர்வைப் பெறவில்லை. கிரியும், வெங்கட்ராமனும் தொழிலாளிகள் தலைவர்களாக வெகுநாள் உழைத்தவர்கள். காமராஜ் தலைவராக இருந்ததைவிட தொண்டராக இருந்தது அதிகம். 1954 வரை சுப்ரமணியத்தின் பெயர் கோயம்புத்தூருக்கு வெளியே தெரியாது. பஜாஜுடைய தகப்பனார் ஒரு சர்க்கரை ஆலை வைத்திருந்தார். இன்றைய அவர் நிலையை அன்று ஒரு மில் வைத்திருந்த எத்தனை பேர் எட்டிப் பிடித்திருக்கின்றனர்? சி.பி. இராமசுவாமியின் தகப்பனார் ஜில்லா ஜட்ஜ். அன்றிருந்த ஜட்ஜ் பிள்ளைகள் இராமசுவாமியின் உயர்வை எட்டவில்லை. இன்று உலகம் இவர்களை ஆயிரத்திலொருவராகக் கருதுகிறது.

பேச்சு என்பது ஒரு பெரிய திறமை, மனிதன் முயன்று பயின்று பெறக்கூடியது. பல நாடுகளில் பேச்சுத் திறமையால் மட்டும் அதிகாரத்தை எட்டியுள்ளனர். சரஸ்வதி தெய்வம். படிப்பை பட்டத்திற்காக இல்லாமல் படிப்புக்காக நாடுவது தெய்வீக குணம். புதிய சிந்தனை உலகை ஆளக்கூடியது. புதிய சிந்தனையால் மட்டும் உலகப் புகழ் பெற்றவருண்டு. உத்தியோகத்தை விட படிப்பை நாடுவது சரஸ்வதியை வணங்குவதாகும். உழைப்பைத் தன்னலமற்றதாக்கினால் அது சேவையாக மாறி, உயர்வுக்கு வழி செய்யும்.

சி.பி. இராமசாமி, ஏ. இராமசுவாமி, இலட்சுமணசுவாமி ஆகியவர் சிறந்த பேச்சாளர்களானார்கள். சி.வி. இராமன் A.A.G. அஸிஸ்டெண்ட் அக்கௌண்ட்டெண்ட் ஜெனரலாக 19ம் வயதில் நியமிக்கப்பட்டதை விட்டுவிட்டு ஆராய்ச்சியை நாடினார். இராஜாஜியும், சுப்ரமணியமும் புதிய சிந்தனை யுடையவர்கள். பஜாஜுடைய தகப்பனார் இலட்சியவாதி, அவரது சர்க்கரை ஆலையிலிருந்து வரும் பாகைக் கொண்டு (industrial alcohol) தொழிலுக்குப் பயன்படும் சாராயம்-குடிக்க முடியாது-செய்யச் சொன்ன பொழுது சாராயத்தை எந்த ரூபத்திலும் நான் உற்பத்தி செய்யமாட்டேன் என்ற காந்தீயவாதி அவர். இவை உயர்ந்த திறமைகள், இலட்சியங்கள் தான். ஆனால் இவர்கள் போன்றவர்கள் அன்று அவர்களுடன் ஆயிரம் பேருக்கு மேல் இருந்தனர். அவர்களெல்லாம் இந்த உயர்வை அடையவில்லை என்றால், அதற்கு ராசியும், அதிர்ஷ்டமும் வேண்டாமா என்கிறோம்.

இது போன்ற உயர்ந்த திறமை, இலட்சியம், மனிதனை ஆயிரத்தில் ஒருவராக உயர்த்தும் என்பது தெரிகிறது. ஆனால் அவை மட்டும் இந்த உயர்வு பெறப் போதாது என்றும் தெரிகிறது. இவர்கள் அனைவரும் பெரிய ஸ்தாபனங்களில் உழைத்தவர்கள். கல்கத்தா பல்கலைக்கழகத்திலும், இண்டியன் இன்ஸ்ட்டிடூட்டிலும் ராமன் வேலை செய்தார். அரசியலவாதிகள் சுதந்திர இயக்கத்தில் வேலை செய்தவர்கள். அரசியல் கட்சி, சென்னைப் பல்கலைக்கழகம், அகில இந்திய விவசாய இன்ஸ்ட்டிடூட்டில் மற்றவர்கள் வேலை செய்தார்கள். உயர்ந்த தனி மனிதனால் முடியாத காரியங்களை சிறிய ஸ்தாபனமும் செய்யும். பெரிய உள்ளூர் பணக்காரனால் முடியாததை வியாபாரத் தொடர்பு, அரசியல் தொடர்பு, ஸ்தாபனத் தொடர்புள்ள ஊழியரால் முடியும் என்பதை நாம் அறிவோம். ஸ்தாபனம் அளிப்பது பெரும் பலம். ஸ்தாபனத் தொடர்பு அளிப்பது பெரிய வாய்ப்பு.

உயர்ந்த திறமை, நேர்மை, இலட்சியம் சிறப்புப் பெற அவசியம்; அது இல்லாதவரைப்பற்றி இக்கட்டுரையில் ஆராய்ச்சியில்லை. ஸ்தாபனத் தொடர்பு பெரும் வாய்ப்பு அளிக்கிறது என்பதும் அவசியமாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இன்று சென்னை நகரில் 50 இலட்சம் பேரில் மேற்சொன்ன இரண்டையும் பெற்றவர்கள் 50 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இலட்சமாகவும் அது இருக்கலாம். அவர்களுள் இந்த உயர்வைப் பெற்றவர்கள் 100 பேருக்கும் குறைவு. 50 ஆயிரம் பேரும் இந்த உயர்வைப் பெறலாம் என்பதே என் கருத்து, அனுபவம், நான் செய்த சிறு சோதனைகன் பெரிய பலன். நடைமுறையில் ஏதோ ஒருவகையில் இந்தப் பரிசோதனையை நான் கடந்த பல வருஷங்களாக செய்து வருகிறேன். அதில் நான் கண்ட அனுபவம்.

பெரும்பாலோர் காதுகொடுத்துக் கேட்கமாட்டார்கள்.

கேட்பவர்கள் கேட்டு மகிழ்வதுடன் நிறுத்திக் கொள்வார்கள்.

முயல முன்வருபவர்கள் மிகக் குறைவு.

முயன்றவர் அனைவருக்கும் பூரண பலன் முதற்படியாகத் தெரிந்தது.

முதற்படியில் பெற்ற பலனுடன் முயற்சியை முழுவதுமாக மறந்து விடுகிறார்கள்.

இரண்டாம் படிக்கு இன்றுவரை என் அனுபவத்தில் வந்தவர்களில்லை.

நேரடியாகத் தொடர்பு கொள்ளாமல், மறைமுக தொடர்புடன் சிலர் வளர்வதைப் பார்த்திருக்கிறேன். உலகில் உச்சகட்ட புகழை அடைந்ததைக் கண்டிருக்கிறேன்.

சர். எஸ். இராதாகிருஷ்ணன், சீனுவாச இராமானுஜம் ஆகியவர்களை உலகம் பெரிய மனிதன், மேதை என அறியும். அவர்கள் அறிவது உண்மை. மேலும் அதனுள் ஓர் உண்மையுண்டு. (Intuition) மேதையின் ஞானம் தவிர சீனுவாச இராமானுஜம் ஒரு ஐரோப்பியப் பேராசிரியர் போலிருக்கிறார் என்று அவருடன் இருந்த ஆங்கிலேயர் ஒருவர் கூறுகிறார். மேதாவிலாசம் இருப்பது உண்மை. என்றாலும் ஐரோப்பிய பேராசிரியர்களுக்குள்ள பாங்கு அவருக்குள்ளது, மேதாவிலாசம் பிறப்பில் வருவது. பேராசிரியர் திறன் படிப்பாலும், பயிற்சியாலும் வருவது.

சர்.எஸ். இராதாகிருஷ்ணன் நம் நாட்டில் மேதை எனக் கருதப்படுகிறார். மேல்நாட்டில் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் அனைவரும் அவர் போன்றவர்களே. நம் நாடு பின்தங்கியதாலும், பெரிய படிப்புள்ளவர் குறைந்துள்ளதாலும் ஓரிருவர் பெருமை அதிகமாகத் தெரிகிறது. ஆப்பிரிக்காவில் லுமும்பா பிரதம மந்திரியானார். உலகப் புகழ் பெற்றார். எதிரி அவரைத் தோற்கடித்தான். உயிரிழந்தார். ரஷ்யாவில் அவர் பெயரை ஒரு பல்கலைக் கழகத்திற்கு அளித்தனர். லுமும்பாவிடம் எந்தப் பெரிய சிறப்பான விசேஷமுமில்லை. அவர் நாட்டில் 13 பட்டதாரிகளில் அவர் ஒருவர். பட்டத்திற்குரிய மதிப்பு அது. பிரான்சிலோ, இத்தாலியிலோ, இங்கிலாந்திலோ, பிறந்திருந்தால் அவர்கள் பெயர் வெளியில் வந்திருக்காது. அவர்கள் ஆக்ஸ்போர்ட் பட்டம் பெற்றதால் இந்தியாவில் பிரபலமானார்கள். இங்கிலாந்தில் அவர்களைப் போல் பட்டம் பெற்றவர்கள் பல இலட்சம் பேர். நம் நாட்டில் பட்டதாரிகள் விரும்பிப் படிக்கும் புத்தகம் கதைப்புத்தகம், ஆனந்தவிகடன், குமுதம். பெங்க்வின் புத்தகங்கள் ஏராளமாக மலிவுப் பதிப்பாக வெளிவருகின்றன. இங்கிலாந்தில் அவை இலட்சக்கணக்காக விற்கின்றன. நம் நாட்டில் அவை ஓரிரு ஆயிரம்தான் விலையாகின்றன. 1945-ல் பட்டம் பெற்றவர்களை நான் நண்பர்களாக அறிவேன். 100 பேரில் அப்புத்தகங்களை விரும்பிப் படிப்பவர்கள் 3, 4, பேருக்குக் குறைவு. புத்தகங்களின் தரம் அதிகம். இங்கிலாந்து, கானடா போன்ற நாடுகளில் அவை ஏராளமாக விற்கின்றன. அந்த நாட்டில் ஆக்ஸ்போர்டில் பட்டம் பெற்றதால் மட்டும் பிரபலமடைய முடியாது. நம் நாட்டில் ஆக்ஸ்போர்ட் பட்டம் இருந்தவர்கள் அனைவரும் அந்த நாளில் துணைவேந்தர், I.C.S., மந்திரி பதவி போன்ற பதவியிலிருந்தார்கள். இன்றும் ஓரளவு அந்த நிலையுண்டு. நம் நாட்டில் வாழ்க்கைத் தரம், படிப்பின்தரம் மிகக் குறைவாக இருந்ததாலும், படிப்பின் அளவே குறைவாக இருந்ததாலும், படித்து வெளிநாட்டுப் பட்டம் பெற்றவர் மிகக் குறைவாக இருந்ததாலும், அவர்களுடைய திறமை வெகு சிறப்பாக இருந்ததாலும், மிக உயர்ந்த பதவிகளை அவர்கள் நெடுநாள் வகிக்க முடிந்தது. 27 வருஷம் தொடர்ந்து A.L.முதலியார் சென்னையில் துணைவேந்தராக இருந்தார். அதற்குரிய அபரிமிதமான தகுதி அவருக்கிருந்தது உண்மை.

இன்றைய இந்தியாவில் அன்று அவர் போன்றவர்களுக்கு கிடைத்த ஸ்தாபன ஆதரவு ஏராளமான பேருக்குக் கிடைக்கிறது. அமெரிக்காவில் மட்டும் இந்தியர்கள் 8 லட்சம் பேர் இன்றிருக்கிறார்கள். நாட்டில் படிப்பிற்கும், உயர்வுக்கும் ஆதரவான நிலை அபரிமிதமாகப் பெருகிவிட்டது. அன்று அந்தஸ்தால் மட்டும் பெற்றதை, இன்று திறமையால் மட்டும் பெறமுடியும். அன்று 10 பேருக்கு கிடைத்தது இன்ற 100 பேருக்குக் கிடைக்கிறது. 1000 பேருக்கும் பல துறைகளிலும் கிடைக்கிறது. இது நாட்டின் நிலை. இதைப் பயன்படுத்தி ஏராளமான பேர் முன் வந்திருக்கிறார்கள். ஆனாலும், இந்த முன்னேறும் வாய்ப்பும், தகுதியும் உள்ள ஏராளமான பேருக்கு அதெல்லாம் நமக்கில்லை என்ற அபிப்பிராயம் இருக்கிறது. அந்த அபிப்பிராயம் தேவையில்லை, தவறு என்றும், அதைத் தாண்டி அன்னை என்ன செய்வார் என்பதையும் விளக்கவே இக்கட்டுரை முனைகிறது.

M.L.A. ஆகவேண்டும், பார்லிமெண்டில் நுழையவேண்டும் என்றால் இன்று எவ்வளவு பெரிய அறிவாளியானாலும், மிராசுதாரானாலும் சொந்தக் காலில் நிற்கமுடியாது. மத்திய சர்க்காரை எதிர்த்து ராஜினாமா செய்த அதிகாரி I.A.S. பெற்றிருந்ததால் M.P. எலெக்ஷனுக்கு நின்றார். தோற்றார். இனிமேல் தனிமனிதன் அரசியலில் முன்னுக்கு வர முடியாது. அரசியல் முன்னேற்றம் வேண்டுமானால், ஒரு கட்சியின் ஆதரவு தேவை என்பதை இன்று அனைவரும் அறிகின்றார்கள்.

வெளிநாட்டு பட்டத்திற்கு இன்று அந்த அந்தஸ்துண்டு. எவ்வளவு அதிபுத்திசாலியானாலும் ஹார்வேர்ட் பட்டதாரி போட்டிக்கு வந்தால் பேராசிரியர் பதவி, துணைவேந்தர் பதவி, மந்திரி பதவி ஹார்வேர்ட் பட்டதாரிக்குப் போகிறது. இங்கெல்லாம் ஜெயிக்க வேண்டுமானால், அமெரிக்க Ph.D. இல்லாமல் முடியாது என்று பேசுகின்றனர். தொழில் முன்னேற்ற மாறுதல்கள் ஏற்படும்பொழுது, அவற்றை ஏற்றுக்கொண்டவர்கள் முன்னேறுவதையும், ஏற்றுக் கொள்ளாதவர்கள் முன்னேறாததையும் காண்கிறோம்.

கம்ப்யூட்டருக்கு அந்த அந்தஸ்து உண்டு. பட்டத்திற்கும், professional degrees தொழில் பட்டத்திற்கும் உத்தியோகம், திருமணம் ஆகியவற்றில் அந்த நிலைமை உண்டு. S.S.I சிறு தொழிலை ஆரம்பித்து முன்னேற முடியாமல் திணறுபவரைப் பார்த்து, மற்றவர் இந்த நாளில் போனில்லாமல் தொழில் நடத்த முடியுமா, முதலில் போன் ஏற்பாடு செய்யுங்கள், அது வந்தால் தொழில் தானே முன்னேறும் என்கிறார்.

குடும்பத்தின் மரியாதை, நல்ல சம்பந்தம், போதுமான, வருமானம், உயர்ந்த உத்தியோகம், அரசியல் முன்னேற்றம், தொழில் சிறப்பு ஆகியவை வேண்டுமானால் வீடு T.V., fridge போன்றவையால் நிரம்ப வேண்டும். தொழில் படிப்பு வேண்டும். பெண்கள் வேலைக்குப் போகவேண்டும். வெளிநாட்டுப் பட்டம் தேவை, போன், கார் ஆகியவை அத்தியாவசியமாகத் தேவை. இவற்றை காலத்திற்கேற்ற தேவைகள் என நாம் அறிந்து கொள்கிறோம். மேலும் அதனுள் ஓர் உண்மையுண்டு. போன் என்பது ஒரு சிஸ்டம். ஒரு வாரத்து வேலையை ஒரு நாளில் செய்து முடிக்கவல்லது. எல்லோரும் போன் மூலம் தொழில் செய்யும்பொழுது போனில்லாமல் தொழில் செய்பவன் தோற்று விடுகிறான். 40 வருஷத்திற்கு முன் போன் வசதி பெரிய நகரங்களில் உண்டு. சிறிய ஊர்களில் இல்லை. போன், கார், வசதியோடு பெரிய நகரங்களில் தொழில் செய்பவர் மற்ற ஊர்களில் அதே தொழில் செய்பவரைவிட அளவுகடந்து முன்னேறுவார்கள். அதை போன் நிறைவேற்றும். போன் மூலம் பூர்த்தியாகும் காரியங்களைப் போனில்லாதவர்கள் பூர்த்தி செய்ய முடியாது. நினைக்கவும் முடியாது. அதுமட்டுமல்ல. போன் சௌகரியத்தைக் கொடுக்கிறது. சீக்கிரம் வேலையை முடிக்கிறது என்பதுடன் போன் வந்தவுடன் மரியாதை வந்து விடுகிறது. இதுவரை பதில் சொல்லாதவர்கள் நல்ல பதில் சொல்கிறார்கள். பொதுவாகப் போனும், காரும் வந்தபின் தொழில் தானே உயர்ந்த கட்டத்திற்குப் போகிறது. சில நாட்களுக்குப் பிறகு நான் இந்த பாக்டரியைக் கட்டி முடித்து இந்தத் தொழில் வெற்றி பெற்றதற்குப் போனும், காரும் முக்கிய காரணம் என்று சொல்கிறோம்.

அரசியல் ஆதரவு தொழில் முன்னேற்றத்திற்கு உதவி. இங்கீலிஷ் மீடியம் பள்ளியில் படித்தால் காலேஜ் அட்மிஷனுக்கு உதவி. இது போன்ற உதவிகளை நாம் முழுவதும் அறிவோம்.

சில சமயம் இந்த உதவி சிலருக்கு மட்டும் கிடைக்கும். சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேயருக்கு தொழில் அரசியல் உதவியை சர்க்கார் செய்ததால், அவர்கள் மட்டும் தொழில் நடத்த முடிந்தது. இந்தியர்களால் தொழிலில் ஆங்கிலேயருடன் போட்டி போட முடியவில்லை. சிலசமயம் இது போன்ற உதவி எல்லோருக்கும் கிடைக்கும்.

இன்று Indian economy நம் நாட்டு மார்க்கட் தொழிலுக்கு ஆதரவாக இருக்கிறது. எந்தப் பொருளும் எளிதில் விற்கிறது. பத்து, இருபது வருஷத்திற்கு முன் இதுபோல் இல்லை. இன்று சுறுசுறுப்பானவர் எவரும் முன் வரலாம். நாட்டில் ஆயிரக்கணக்கான புதுத் தொழில்கள் ஏற்படுகின்றன.

1945-ல் சென்னை மாகாணத்தில் 23 ஜில்லா. இன்ஜினீயரிங் படிக்க ஒரு கல்லூரி. இன்று தமிழ் நாட்டில் அன்றைய ஜில்லாக்களில் 12 மட்டும் உண்டு. 43 இன்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. படிப்புக்கு இன்று அபரிமிதமான வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது. காலம் மாறியது. புது வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

டெக்னாலஜி, மார்க்கட், வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டு வியாபாரம், படிப்பு, உத்தியோகம், வீடு கட்டுதல், நகர வாழ்க்கை, நாகரிக வாழ்க்கை, வருமானம், மரியாதை ஆகிய வாழ்வின் அம்சங்களுக்கு சர்க்கார், சமூகம், சந்தர்ப்பம், நம் தைரியம், சமூக மனப்பான்மை, சட்டங்கள், புது ஸ்தாபனங்கள், புதுத் திட்டங்கள், மாறிய மனநிலை, ஜாதி ஒழிப்பு ஆகியவை பேருதவியாக அமைந்து வாழ்க்கையை வளப்படுத்துகின்றதை நாம் அனைவரும் அறிவோம். அனுபவித்து வருகிறோம்.

இதற்கடுத்த கட்டம் ஒன்றுண்டு அதற்குரிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அன்று ஆயிரத்தில் ஒருவர் பெற்றதை, இன்று அநேகர் பெறலாம். நூறு பேர் பெறலாம், ஆயிரம் பேரும் பெறலாம். திறமையும் நேர்மையும் உள்ள அனைவரும் பெறலாம். அவர்கள் ஆயிரம் பேரானால், அன்று ஒருவர் பெற்றதை திறமையுள்ள அத்தனை பேரும் தவறாது பெறலாம். திறமையுடன், நேர்மை மட்டும் இருந்தால் போதுமானது.

வியாபாரத்தை மாநிலம் முழுவதும் செய்பவர்களுக்குப் பல இடங்களில் வியாபாரத் தொடர்பு இருக்கும். ஒரு அவசியமான நேரத்தில் எந்த ஊரிலும் அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொள்ளலாம். இது வியாபாரத்தால் ஏற்பட்ட சந்தர்ப்பம், சாதாரண மனிதனுக்குக் கிடைக்காது. சிதம்பரத்திலுள்ளவர் பாஸ்போர்ட், விசா (visa) வாங்குவதற்கும், சென்னை அண்ணாநகரிலுள்ளவர் அதையே செய்வதற்கும், உள்ள வித்தியாசத்தை இந்த அனுபவமுள்ளவர் அனைவரும் அறிவார்கள். சென்னையில் உள்ளவர்களுக்கு அநேக வகையில் அநேக இடங்களில் தொடர்பிருக்கும். காரியம் நகரும். சிதம்பரத்திலுள்ளவர்க்கு சென்னையில் யாரையும் தெரியாது. பாஸ்போர்ட் வாங்குவது அவருக்கு ஒரு வருஷ முயற்சி. சென்னையிலே உள்ளவர் சென்ற மாதம் பாஸ்போர்ட்டை 5 நாளில் வாங்கிவிட்டார். வியாபாரத் தொடர்பு, ஆசிரியர்களாக இருந்தவர்களுக்கு நாடெங்கும் பரவிய மாணவர் குழாம், உறவினர் பல பெரிய ஊர்களில் உள்ளவர்கள், தொழில் மூலமாக (வக்கீல், ஆடிட்டர், பேராசிரியர், இன்ஜினீயர்) பம்பாய், ஹைதராபாத், டெல்லி போன்ற இடங்களில் தொடர்புள்ளவர்கள், அரசியல் மூலம் தொடர்பு பெற்றவர்கள் மற்றவர்களைவிட பல மடங்கு சாதிக்கலாம். ஆயிரம் மடங்கும் சாதிக்கலாம் என்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.

அன்னை பக்தர்கள் போகும் இடங்களில் தெரிந்தவர்கள்; நல்லவர்கள், சாதகமான சட்டம், சாதகமான சூழ்நிலை, திடீர் வசதி, உதவி மனப்பான்மையுள்ளவர்கள் தொடர்ந்து புறப்பட்டு வந்து நம் காரியங்கள் பூர்த்தியாவதைப் பார்த்து அன்னை எங்குமிருக்கிறார்கள் என்று சொல்வதுண்டு. இது பலருடைய அனுபவம். பல முறையும் கண்ட அனுபவம். ஆரம்பத்திலேயே தெரியும் அனுபவம். இதில் ஒரு பெரிய ஆன்மிக உண்மையுண்டு. அதை எளிதில் புரிந்து கொள்ளாதவர், முதலில் அப்படித்தானிருந்தது, இப்பொழுதில்லையே என்னும்படி இழந்துவிடுவார்கள். இழந்ததைப் பெறலாம். இழக்காமல் வைத்திருக்கலாம், இதைப் புரிந்துகொள்வதின் மூலம் மற்ற எவரும் பெற முடியாததைப் பெறலாம். இந்தத் தெளிவே ஆயிரத்தில் ஒருவர் பெறக்கூடியதை ஆயிரம் பேருக்கும் பெற்றுத் தரும்.

இது என்ன தொடர்பு? எப்படிப் பெறுவது? பெற முடியுமா? ஒரு காலத்தில் உயர்ந்தவர்கள் மட்டும் பெறமுடிந்ததை, காலம் மாறினால் சாமானியனும் பெற முடிகிறது. முகம் பார்க்கும் கண்ணாடி அரசர்களுக்கு மட்டுமே உரியது என்ற காலம் இருந்தது. இப்பொழுது அனைவரும் பெறக்கூடியதாகி விட்டது. ஏர்கண்டிஷனிங் செல்வந்தருக்கு மட்டும் கிடைக்கக் கூடிய நாளிருந்தது. இன்று அனைவரும் ஒருசமயம் அனுபவித்துப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

அறிவும், அப்படியே, ஞானம் அதை விட உயர்ந்தது. செய்யுள் எழுதுவது என்றால் அது சாதாரண மனிதனால் ஆகக்கூடியதில்லை. தெய்வ அனுக்கிரஹம் தேவை என்ற நிலை கம்பர் காலத்திலிருந்தது. செய்யுள் எழுதுபவரை சித்து விளையாடுபவரைப் பார்ப்பதைப் போல் பார்த்த காலம் அது. இன்று புலவர் படிப்பில் வாரம் ஓரு பீரியட் செய்யுள் எழுதும் பயிற்சியுண்டு. The mystery is no longer there. இது ஓர் அற்புதம், அபூர்வம் என்ற கருத்து மாறிவிட்டது. அன்று பதிகம் பாடுபவர்கள் இராஜ சபையில் நுழைய முடியும். பாசுரம், பதிகம், செய்யுளுக்கு அந்த மந்திர சக்தி அன்றிருந்தது.

ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மனிதன் உழைப்பாலும், விஞ்ஞானத்தாலும், படிப்பாலும், முயற்சியாலும், முன்னுக்கு வந்தான். கைதிகளை அனுப்பும் இடம் அந்தமான், இந்தியாவுக்கு அந்தமான் போல் இங்கிலாந்தில் நாட்டை விட்டு வெளியேற்றும் கைதிகளை அனுப்பும் இடம் ஆஸ்திரேலியா. அந்தமானாகிய ஆஸ்திரேலியா இன்று பணக்கார நாடாகிவிட்டது. இந்தியர்கள் வேலை தேடிச் சென்ற நூற்றாண்டில் இலங்கை, பிஜீ தீவு, ஆப்பிரிக்கா போன்ற இடங்களிலுள்ள எஸ்டேட்டுக்குச் சென்றனர். அதுபோல் ஐரோப்பாவிலும், இங்கிலாந்திலும், வேலை கிடைக்காதவர் அமெரிக்காவை நாடிச் சென்றனர். இன்று அமெரிக்கா முதலிடம் பெறுகிறது.

சுதந்திரம் வந்தபின், இந்திய சர்க்கார், இந்தியாவிலும் அமெரிக்காவில் ஏற்பட்ட முன்னேற்றம் வரவேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் அமெரிக்கா சென்றவர்கள் காட்டைத் திருத்தி நிலமாக்கி, சாதாரண மனிதனைவிட நூறு மடங்கு உழைத்து இன்று முதலிடம் பெற்றிருக்கிறார்கள். ஏராளமான உணவு உற்பத்தியாவதால் அது மார்க்கட்டிற்கு வந்தால் விலை இறங்கும் என்பதால், உணவை, பயிரிடாமலிருக்க சர்க்கார் ஏக்கருக்கு ரூ. 25,000 மானியம் கொடுக்கிறார்கள். ஏராளமான வருமானம் வருவதால் சாதாரண மக்கள் அபரிமிதமாகச் சாப்பிடுவதால் over weight அதிக எடை பிரச்சினையாகிறது. எடையைக் குறைப்பதெப்படி என்று மார்க்கட்டில் நூறு புத்தகங்கள் விற்கின்றன. அவர்களுக்கு உபரியால் கஷ்டம். நமக்கு பற்றாக்குறையால் கஷ்டம். அவர்கள் சொந்த தனி மனிதனுடைய உழைப்பால் முன்னேறியவர்கள். இங்கு தனி மனிதனுக்கு முன்னேற வழிதெரியவில்லை. தெரிந்தால் உதவியில்லை. உதவியிருந்தால் மற்ற வசதிகளில்லை. எனவே மற்ற நாட்டு முன்னேற்றம் இங்கும் வரவேண்டும் என்பதற்காக நம் மக்களால் முடியாததை, சர்க்கார் அவர்களுக்காக பெற்றுத் தர முன் வருகிறது. முதல் கொடுக்கிறது. டெக்னாலஜி பெற உதவி செய்கிறது. தொழிற்கூடம் அமைக்க முடியவில்லை என்றால், அமைத்து கொடுக்கிறது. கடவுளே நேரடியாக வந்து உதவி செய்வது போலிருக்கிறது என்றார் ஒருவர். பாங்க் பயிரிட 14,000 ரூபாயை இரண்டு நாளில் கொடுத்த பொழுது என் பெட்டியிலுள்ள பணத்தைக் கூட இவ்வளவு சீக்கிரம் எடுத்துச் செலவு செய்ததில்லை என்றார் மற்றொருவர்.

தொழில் முன்னேற்றத்திற்காக சர்க்கார் மக்களுக்கு உதவ முன்வருவது உலகில் 1950 வரை இல்லாதது. இந்தியா முன்னோடியாக 1950ல் ஆரம்பித்தது. இன்று மற்ற நாடுகளிலும் இந்தப் போக்கு பெரும்பாலும் அமைகிறது. சென்ற நூற்றாண்டில் நம் குழந்தைகளின் படிப்புக்கு நாமே பொறுப்பு. அவர்களுக்கு பெற்றோர் முனைந்து படிப்புச் சொல்லிக் கொடுக்கிறார்கள். அது அன்று சமூகத்தின் பொறுப்பாக இல்லை, சர்க்காரின் பொறுப்பாக இல்லை, இன்று சர்க்கார் அந்தப் பொறுப்பை ஏற்க முன் வருகிறது. ஊரில் அம்மை, காலரா, மலேரியா வருகிறதென்றால் அது அவரவர் கர்மம் அவரவர் பொறுப்பு, கோயில் சென்று பிரார்த்திக்கலாம், முடிந்த வைத்தியத்தைச் செய்யலாம். இன்று சர்க்கார் பொறுப்பேற்று அம்மையை அழித்து விட்டது. மற்றதைக் கட்டுப்படுத்துகிறது. ஒருவருக்கு அம்மை போட்டால், காலரா வந்தால், ஆஸ்பத்திரி மூலம் சிகிச்சை செய்கிறது. இது இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மாறுதல். போன நூற்றாண்டில் வேலை செய்து ஓய்வு பெற்றால் பென்ஷனில்லை. கணவன் இறந்தபின் மனைவிக்கு இன்று சர்க்கார் மூலம் பென்ஷன் ஆதரவு சர்க்கார் ஊழியருக்கு உண்டு. இவை புதிய நிலைமைகள். இந்த நூற்றாண்டில் மேலைநாடுகளில் வேலையில்லாதவருக்கு, un-employment dole சர்க்கார் உதவித்தொகை அளிக்கிறது. வேலை வாங்கித்தர உதவி செய்கிறது. இவை உலகிலும், சமூகத்திலும் ஏற்படும் நல்ல மாறுதல்கள். அதனால் அதிகப்பயனுண்டு ஆரம்பத்தில் பயன் பெறுபவர் குறைவு. நாளாவட்டத்தில் அனைவரும் பயன் பெறுகின்றனர். அனைவரும் பயன்பெற்றபின் நாடு நாகரீகமடைந்து விட்டது என்கிறோம்.

இன்னும் இந்த உதவி அனைவருக்கும் கிடைப்பதில்லை. அனைவரும் பெற உரிமையுண்டு என்றாலும், அதற்குரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்க்கே அப்பலன் உண்டு. வேலையில்லாதவனுக்கு சர்க்கார் வேலை வாங்கித்தர வேண்டுமானால் அவன் பதிவு செய்து கொள்ள வேண்டும். வேலை சீக்கிரம் கிடைக்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்றால், ஏதாவது ஒரு பயிற்சியை பெற்றிருக்க வேண்டும், பதிவு செய்யாதவர்க்கு சர்க்கார் உதவமுடியாது. எதுவுமே தெரியாது, கூலிவேலைக்குத்தான் லாயக்கு என்பவனுக்கு employment exchange வேலை வாங்கித்தரும் நிறுவனம் உதவிசெய்வது கடினம். சர்க்கார் அந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டு நமக்காக உதவி செய்ய முன்வந்தால், அந்த உதவியைப் பெறும் தகுதிகளை நாம் முதலிலேயே பெற்றுக் கொள்ள வேண்டும். பயிற்சி பெற்றவருக்குப் பலனுண்டு.

மனிதன் இறைவனையடைய எடுக்கும் முயற்சிகள் அதிகம். அதற்குத் தவம் எனப்பெயர். அதை மேற்கொள்பவர்கள் சிலர். பலிப்பது அரிது. இறைவனின் கருணையால் அந்த நிலைமை மாறியது. மனிதனால் முடியாத பெரிய காரியத்தை அவனுக்கு சாதித்துக் கொடுக்கத் தெய்வம் சித்தம் கொண்டதால் ஏற்பட்ட அவதாரம் அன்னை. மனிதன் தெய்வத்தை நாடி கடும் தவம் புரியும் பொழுது, தெய்வம் அன்னையாக அவனை நாடி, மனித உருவில் அவதாரமாக பூவுலகில் வந்து நடமாடியது. அதன் நோக்கம் மனித அபிலாஷையைப் பூர்த்தி செய்வது. பூலோக வாழ்க்கை அநித்தியமானது. இது பூர்த்தியாகாது என்று மனிதன் கைவிட்டு, மேல்லோகத்தை நாடுகிறான். பூலோக சுவர்க்கம் என்பது கற்பனைக்கு மட்டும் உரியதாகிவிட்டது. வாழ்வைப் பூர்த்தி செய்ய முடியும் என்று உணர்த்த வந்த அவதாரம் அன்னை. வாழ்க்கையில் யோகத்தை பூர்த்தி செய்ய முடியும் என்று உணர்த்த வந்த அவதாரம் அன்னை வாழ்க்கையில் யோகத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதையே வாழ்வனைத்தும் யோகம் என்றார் அன்னை. யோகத்தையும், யோகத்தின் குறிக்கோளான சத்திய ஜீவனின் பிறப்பையும் விளக்க நான் முற்படவில்லை.

அதற்கடுத்த கட்டம் வாழ்வின் சிறப்பு. கிருகஸ்தன், குடும்பஸ்தன் என்பவனுக்குரியது அது. வாழ்வின் சிறப்பைப் பூர்த்தி, செய்து கொடுக்க அன்னை முன் வருகிறார். அதுவும் மனிதனை நாடி வருகிறார். சர்க்கார் மனிதனுடைய படிப்பு, உடல் நலம், வேலைக்குரிய பொறுப்பை ஏற்பதுபோல், அவன் தொழில் (Industry) செய்ய பல்வேறு வகையிலும் உதவி செய்ய முன் வருவதைப் போல் வாழ்வின் சிறப்பை அடைய முயலும் மனிதனுக்கு அன்னை உதவி செய்ய முன் வருகிறார். வியாபாரம் எங்கும் பரவிய ஸ்தாபனம். வியாபாரத் தொடர்புள்ளவர்க்கு எந்த ஊர் போனாலும் வியாபாரம் துணை செய்கிறது. சர்க்கார் எங்கும் பரவியுள்ள அதிகாரமுள்ள ஸ்தாபனம். அதன் உதவி கிடைக்காத ஊரில்லை. சர்க்கார் உதவி செய்ய முன்வந்தால் அதன் ஸ்தாபனம் வலுவாகச் செயல்படும். ஒரு கைதியைப் பிடிக்க சர்க்கார் முனைந்தால், தப்பிப்பது கடினம். துறைமுகம், பஸ் ஸ்டாண்ட், ஹோட்டல், கடைத்தெரு ஆகிய எல்லா இடங்களிலும் போலீஸ் ஸ்டேஷனிருக்கிறது. செய்தி wireless வயர்லெஸ் மூலமாக க்ஷணத்தில் வரும்.

அன்னை மனிதப் பிறவியாக வந்தாலும், அவர் சூழல் எங்கும் பரவியுள்ளது. போகுமிடமெல்லாம் எதிர்பாராத உதவி கிடைக்கிறது என்பவர்கள் அன்னையின் சூழலுடைய உதவியைப் பெறுகிறார்கள் என்று அர்த்தம். இந்த சூழல் நம் வாழ்வில் சிறப்பாகவும் செயல்படும், பொதுவாகவும் செயல்படும். போலீஸ் ஸ்டேஷன் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு திருடன் ஊரைவிட்டு வெளியே போகுமுன் பிடிப்பதும் உண்டு. நாமே திருடனைப் பிடித்துக் கொடுத்தால் பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்பதுபோல் இருப்பதும் உண்டு. போலீஸுக்கு திறமையிருந்தாலும் பல்வேறு கேஸ்களில் பல்வேறு விதமாக நடப்பதைப் பார்க்கிறோம். நிலைமைக்குத் தகுந்த சுறுசுறுப்பு, பலன், வியாபாரத் தொடர்பு, அரசியல் தொடர்பு, அரசாங்க அதிகாரத்தொடர்பு, உறவினர் மூலம் தொடர்பு ஆகியவை ஓர் அகில இந்திய ஸ்தாபனம் போலச் செயல்பட்டு செல்லுமிடமெல்லாம், செய்யும் காரியங்களிலெல்லாம் உதவியாக இருப்பதை நாம் காண்கிறோம்.

அதேபோல் அன்னையின் சூழல் நாம் போகுமிடமெல்லாம் நம்மை எதிர்கொள்கிறது. நம் காரியங்களைப் பூர்த்தி செய்ய கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதுபோல் மனிதர்கள் மூலம், நிகழ்ச்சிகள் மூலமும், இயற்கையின் மூலமும் செயல்படுவதை அன்பர்கள் அறிவார்கள். அதை ஒரு சௌகரியமாகக் கொள்வதைவிட அதன் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டால், அந்தச் சூழல் நிரந்தரமாக நம்மைச் சுற்றிக்கொள்ளும்.

இந்தச் சூழல் என்ன செய்யும்? நாம் எப்படி இதை வாழ்வில் சந்திக்கின்றோம்?

கொடைக்கானல் போகும் பொழுது வழியில் அநேக தடை வந்து பாங்க் ஊழியர் போன கார் தாமதமாயிற்று. தாமதத்தை சபித்துக் கொண்டே போனவர்கள் மலை ரோடு மேலே போகும் பொழுது பல கார்கள் நிற்பதையும் சற்றுமுன் ஒரு பாறை உருண்டு வந்து பாதையில் நிற்பதையும் அறிந்தவர்கள், அன்னை நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றினார். முன்பே போயிருந்தால் நாளை வீடு திரும்பியிருக்க முடியாது. அதையும் அன்னை தடுத்தது அற்புதம் என்று நினைத்து திரும்பினர்.

பெரும் புயல் உருவாகி ஆரம்பித்தபின் பிரார்த்தனையால் புயல் ஊரைவிட்டு நகர்ந்து போகிறது.

நாம் புதியதாக தொழில் ஆரம்பிக்கும்பொழுது அந்தத் தொழிலுக்கு 5 வருஷம் வரியில்லை எனச் சட்டம் வருகிறது.

திட்டக்கமிஷன் மெம்பரை சந்திக்க டெல்லிக்கு எப்பொழுது வரலாம் என போனில் அவரைக் கேட்டால், தான் அன்று மாலை சென்னை வருவதாகவும், அங்கே சந்திக்கலாம் என்றும் கூறுகிறார்.

பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்த சிறு குழந்தை வழி தவறி காணாமல் போனபோது அன்னையை அழைத்ததால் தெரிந்தவர் கண்ணில் குழந்தை பட்டு அவர் அழைத்து வரும் பொழுது இந்தக் கல்கத்தாவில் என் குழந்தை உங்கள் கண்ணில் பட்டது ஆச்சரியமல்லவா என்கிறோம்.

அமெரிக்கா போக பாஸ்போர்ட், விசா வாங்க வேண்டுமென ஆயத்தம் செய்யும்பொழுது நண்பர் தானும் போவதாகவும் தனக்காக ஒரு பெரிய ஆபீசர் உதவுவதாகவும், அவரிடம் உங்கள் பெயரைக் கொடுத்து விட்டால் போதும், நானே வாங்கிக் கொடுக்கிறேன் எனக் கூறுகிறார்.

அலட்சியமாக இருந்ததால் காஸ் (gas) பற்றிக் கொண்ட பொழுது தற்செயலாய் பார்த்து நிறுத்த முடிகிறது.

புதிய தொழிலை ஆரம்பித்து எப்படி இதற்குரிய (client) வாடிக்கைக்காரர் தேடுவது என எண்ணமிட்டுக் கொண்டுள்ள பொழுது, வீட்டுக்கு வேறு வேலையாக வந்தவர் நமக்கு முதல் வாடிக்கைக்காரராக அமைகிறார்.

வெளிநாட்டிற்குப் போய் மூன்று மாதம் கழித்து புறப்பட இரண்டு நாளிருக்கும்பொழுது, ஊருக்குத் திரும்பப் போனவுடன் முதற்காரியமாக குருவைப் போய் பார்த்து நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது, தெரிந்தவர் மூலமாக குருவிடமிருந்து ஆசிசெய்தி தந்தியாக வந்து, போன் மூலம் நம்மைத் தேடி வருகிறது.

கார் குழந்தை மீது மோதி கூட்டம் காரைச் சூழ்ந்து கொண்டு டிரைவரை அடிக்க முயலும்பொழுது ரோடுக்கு பக்கத்திலுள்ளது நண்பர் கம்பெனி என அறிந்து டிரைவரை அங்கு கொண்டு போனபொழுது அங்குள்ள முதலாளி தன் செல்வாக்கால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துகிறார்.

துறைமுகத்தை விட்டுப்போன கப்பலும், விமான நிலையத்தை விட்டுப் போன விமானமும், பிரார்த்தனையை ஏற்றுத் திரும்பிவருகின்றன.

பிரச்சினைகள் தீர பிரார்த்தனைகள் பலிக்கின்றன. நம்மை அறியாமல் அருள் செயல்பட்டு ஆபத்தை விலக்குகிறது. விலக்க முடியாவிட்டால், மேலும் வரும் சிரமங்களிலிருந்து பாதுகாக்கிறது. இது எல்லா அன்பருடைய அனுபவம்.

பிரார்த்தனைகள் பலிக்க அன்னையை நாடுபவர்கள் நிலை இது. பொதுவாக குல தெய்வம். பிரபலமான கோயில்கள், நாமறிந்த மகான்கள், குறிசொல்பவர்கள், ஜோஸ்யம் இங்கெல்லாம் பலிக்காத பிரார்த்தனைகள் தான் அன்னையிடம் வருவது வழக்கம். பெரும்பாலானவர் பிரார்த்தனை பலித்தவுடன் திருப்தி அடைந்து வருவார்கள். அதற்காக மட்டும் கோயிலுக்குப் போவதைப் போல் ஆசிரமம் வருவார்கள். இதுவே நம்முடைய பழக்கம்.

இதற்கடுத்த நிலை வாய்ப்பைப் பூர்த்தி செய்வது. தொண்டன், தலைவனாகும் வாய்ப்பு, தான் கணக்குப் பிள்ளையாக வேலை செய்யும் எஸ்டேட்டை வாங்கும் வாய்ப்பை முதலாளி பெருந்தன்மையாகத் தனக்கு அளித்ததைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு, மூன்றில் ஒரு கூட்டாளி, மூன்றில் இரண்டு பாக கூட்டாளியாகும் நிலை, வெளிநாடு போகும் வாய்ப்பு போன்ற வாய்ப்புகளைப் பூர்த்தி செய்ய அன்னையை நாடுபவர்கள் அதை ஒரு பிரார்த்தனையாகக் கொள்வார்கள். அதாவது என் முயற்சி பூர்த்தியாக வேண்டும் என பிரார்த்திப்பார்கள். சிலருக்குப் பலிக்கும், பலருக்குப் பலிக்காது. ஏனெனில் என் முயற்சியாக இருக்கும்வரை நான்' என்பதை விலக்கி அதை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்யத் தோன்றுவதில்லை. பொதுவாக மனம் நம்மை அறியாமல் ஏற்றுக்கொண்டுள்ள சமர்ப்பண மனப்பான்மை உள்ள அளவுக்கு இது பலிப்பதுண்டு. நம்மை விலக்கியவுடன் வாய்ப்பு முழுவதும் பலிக்கும். நம்மை விலக்கத் தோன்றுவதில்லை. தோன்றினால் எப்படி விலக்குவது என்ற கேள்வி எழும். அன்னை முன் நாம் ஒரு பொருட்டல்ல என்ற அடக்க உணர்வு எல்லா சமயத்திலும் எழுவதில்லை. எழுந்தால் வாய்ப்பு பலிக்கும்.

பிரார்த்தனையும், வாய்ப்பும் முதல் நிலை. யோகம், சத்திய ஜீவனாக மாறுவது முடிவான நிலை. இடைப்பட்ட நிலைகள் ஏராளம். வாய்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் அடக்கமுள்ளவருக்கு வாய்ப்பு முழுமையாகப் பலிக்கும். ஆயிரத்திலொருவர் என்பது அதற்கடுத்த நிலை. திறமையும், நேர்மையும் உள்ள எந்த பக்தனும் அன்னையை முழுமையாக ஏற்றுக் கொண்ட தினத்திலிருந்து தன் வாழ்வு ஆயிரத்திலொருவர் வாழ்வாக மாறுவதைத் தினசரி காணலாம். இதைப் பரவலாகக் காணாததற்கு காரணம் இப்படி ஒரு நிலையிருப்பதாகவோ, அதற்கு அன்னை துணை செய்வார் என்பதையோ, அது நமக்கு பலிக்கும் என்பதையோ நாம் அறியாததேயாகும். இதைப் பெற வேண்டி நாம் செய்ய வேண்டியது என்ன? முதலில் இது பலிக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். நம்பிக்கையுள்ளவர்க்கே பலனுண்டு. அடிப்படையில் நேர்மை மூலமாக மட்டும் பெறும் பலன் இது. நேர்மை யுள்ளவருக்கு இது நிச்சயம் பலிக்கும். இதைப் பெற வேண்டியது இரண்டு (1) திறமை (2) இடையறாத அன்னை நினைவு.

நாமே அன்னையை இடைவிடாமல் நினைத்தால் திறமையுள்ளவர்க்கு இது அவர்கள் நேர்மை மூலம் பலிக்கும். தானே எழும் அன்னை நினைவு அதனினும் சிறப்பு. வெளிநாட்டுப் பயணம், புதிய M.L.A. பதவி, வீடு கட்டுதல், மனதில் தானே நம்மை மீறி நிமிஷம் தவறாமல் எழுவது போல் அன்னை நினைவு எழுந்தால் அந்தப் பக்தனுக்கு திறமை நேர்மை மூலம் இது பலித்து அவர் ஆயிரத்திலொருவராவார்.

இன்று ஏராளமான அன்னை பக்தர்கள் இதுபோல் அளவு கடந்து வாழ்வில் உயராததற்கு சில காரணங்களைக் குறிப்பிட்டேன். உயர்ந்த சிலரைக் கவனித்தால், இதுவரை நான் கட்டுரையில் சொல்லியவை அனைத்தும் உண்மை எனத் தெரியும். அவர்களை மனதில் கொண்டுதான் மேற்சொன்ன விளக்கங்களை எழுதினேன். பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சிகளை மீண்டும் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

தோட்டத்துக் காவல்காரன் உள்ளூர் அரசியல் தலைவனாகிறான்.

அரசியல் தொண்டர் மாநில முதலமைச்சராகிறார்.

யாரையும் பார்த்துப் பேச அஞ்சுபவர், பிரபலமான மேனேஜராகி ஊரிலும், வெளியிலும் உள்ள பெரிய மனிதர்கள் அவர்களைத் தேடிவந்து பார்க்கும் அந்தஸ்தை அடைகிறார்.

இவரெல்லாம் ஒழிந்தால்தான் ஸ்தாபனம் உருப்படும் என்று ஒதுக்கப்பட்டவரை நாட்டில் பெரிய மனிதர் நாடி வந்து இந்த ஸ்தாபனம் முன்னுக்கு வரவேண்டுமானால் உங்களால்தான் அது நடக்கும் என்கிறார்.

பஞ்சத்திற்குப் பேர் போன மக்கள் செல்வத்தில் முதல்வராகிறார்கள். சுமார் 40 அல்லது 50 நிகழ்ச்சிகளை பல வருஷங்களுக்கு முன் ஒரு கட்டுரையில் விளக்கமாக எழுதினேன். இவர்களெல்லோரும், ஒருவர் தவறாமல், தங்களுக்குக் கிடைத்த முதல் படியான பரிசை கடைசி அதிர்ஷ்டம் எனக் கருதி தலைகால் புரியாமல் நடந்துகொண்டு, அன்னையைவிட்டு மனத்திலும் செயலிலும் விலகினர். பொதுவாக அவர்கள் செயல் நிறைந்துள்ள அம்சங்களைக் குறிப்பிடுகிறேன்.

அபரிமிதமாக திருட ஆரம்பித்து, தானெனும் திமிர் அதிகப்பட்டு எல்லோரையும் துச்சமாக நடத்தி, யாரால் முன்னுக்கு வந்தானோ அவரை அழிக்க முற்பட்டான்.

அன்னையை 30 வருஷம் வணங்கியதை முழுவதும் மனதால் மறந்துவிட்டு தன் புதிய நிலைக்குரிய அனைத்து தவறான பழக்கங்களையும் மேற்கொண்டார் ஒருவர்.

மாபெரும் துரோகம் செய்தால் பலன் வரும் என நினைத்து, அதை விரும்பிச் செய்தார் மற்றொருவர்.

தான் முன்னுக்கு வரக் காரணமாயிருந்த ஒரே மனிதர் மீது சின்ன புத்தியால் அளவு கடந்து பொறாமைப்பட்டு, அவரை அழிக்க வேண்டிய அனைத்தையும் செய்து தோல்வியுற்று ஆன்மீகத்தில் பஞ்சமா பாதகம் எனக் கருதப்படும் தவறு மூலம் அவரை அழிக்க முற்பட்டார்.

உதவி செய்தவருக்குத் தொந்தரவு கொடுத்து, தனக்கு வேண்டியதை அதிகாரம் செய்து பெற விரும்பினார்.

முதற்படியாக பலன் வந்தவுடன் அன்னையை மறந்து விட்டு, தன் தவறான குணங்களை வளர்க்க முயல்வது மனிதனுடைய இயல்பு. அதனால்தான் யோகத்தை ஏற்கு முன் தன்னைத் தூய்மைப்படுத்த வேண்டும், அகந்தையை அழிக்க வேண்டும் என்று பகவான் வற்புறுத்துகிறார்.

ஆயிரத்திலொருவராக, அனைவரும் ஆகமுடியும் என்பது என் கருத்து. அதற்குரிய தகுதிகள் சில. உலகில் நல்லவர் கெட்டவர் என்றுண்டு. அது நல்லவர்களுக்கு மட்டும் உரியது. மற்றவருக்கு நான் சொல்லும் உபாயங்கள் பயன்படாது, நல்லவர்களில் நேர்மையும், திறமையும் உள்ளவருக்குப் பலிக்கும் எனப் பலமுறை சொன்னேன். திறமை என்றால் உலகத்திலில்லாத அபரிதமான திறமை என்று கொள்ள வேண்டாம். செய்யும் தொழில் பலன் ஏற்படும் அளவுக்கு முழுத்திறமை வேண்டும். கான்ட்ராக்டர் வீடு கட்டினால், வீட்டில் பழுதிருக்காது என்றால் அவரை திறமையான கான்ட்ராக்டர் என்கிறோம். பத்தர் நகை செய்து கொடுத்தால் அதில் எந்தப் பழுதும் இருக்காது என்ற பத்தரை நல்ல வேலைக்காரர் என்கிறோம். திறமை என்றால் செய்த தொழில் குறைவற பலன் வரும்வகையில் செய்யக்கூடிய திறமையைக் குறிப்பிடுகிறேன். எந்தத் தொழிலும் எந்த ஊரிலும் இந்தத் தகுதி பெற்றவர் பலரிருப்பார்கள். அவர்களில் பலருக்கு நேர்மையிருக்கும். நேர்மையும் திறமையும் உள்ளவர் அன்னை பக்தரானால், அவருடைய முயற்சிக்குப் பலனாக அவர் ஆயிரத்திலொருவராக வருவார் என்றேன். மேலும் அன்னை பக்தி என்பது இவ்விஷயத்தில் எது என்பதைத் தானே வரும் அன்னை நினைவு என்றேன்.

வீடு கட்டும் பொழுது, வீட்டில் நடக்கும் பேச்சு எதுவானாலும் அதில் வீடு குறிப்பிடப்படும். அவர்களைப் பற்றி மற்றவர்கள் மனதில் அவர்கள் வீடு நிறைந்திருக்கிறது. வீட்டைக் கலக்காமல் அவர்களால் எதையும் பேச முடியாது என்பார்கள். அதாவது, அவர்கள் எண்ணத்திலும், உணர்விலும் வீடு நிறைந்து அவர்களை மீறி எந்த நேரமும், எந்தப் பேச்சிலும் வீடு அவசியமில்லாமல் தானே இடம் பெறுகிறது. வெளிநாட்டுப்பயணம், முதன் முறையாக சேர்மன் பதவி, கெஜட்பதவிக்குப் பிரமோஷன் புதிய பணம் ஆகியவை, பெரிய சம்பந்தம் போல் மனத்தை நிரப்பும். நிரம்பி வழியும் அன்னை பக்தி என்று நான் இந்த விஷயத்திற்கு சொல்வது, இதுபோல் அன்னை நம்மை நிரப்பி, நம் மன, மொழி, மெய்வழியாக வழிந்தோட வேண்டும். அன்னை, தானே மனத்தின் அடியிலிருந்து எழுந்து வரவேண்டும் என்றால், அது எப்படி முடியும் என்று திகைக்கக் கூடாது என்பதற்காக, நான் சொல்லும் நிலை நம் வாழ்வில் உள்ள நிலை, புதியதல்ல என்று சொல்லுகிறேன். Mother should saturate us. உள்ளும் புறமும் அன்னை நம்மை ஆட்கொண்டு நிரப்பி, பூர்த்தி செய்யும் நிலையிது. வாழ்வில் இந்நிலையுண்டு. வாழ்வில்லாத ஒன்றை நான் குறிப்பிடவில்லை என்பதற்காகவும், இது எல்லோராலும் முடியக்கூடிய ஒன்று என்று தெளிவுப்படுத்தவும் இதை இந்த உதாரணத்தின் மூலம் சொல்கிறேன்.

திறமையும் பக்தியும் இருந்தால் நாட்டில் பெரியநிலையை அடையமுடியும் என்றால், எல்லோரும் அந்நிலையை அடைந்து விட்டால், எல்லோரும் இராஜாஜி, சி. வி. இராமன் போலிருப்பார்களா? என்று மனம் திகைக்கும். ஒவ்வொரு நூற்றாண்டும் இதுபோன்ற மாறுதல் ஏற்படுகிறது. சென்ற நூற்றாண்டில் தாசில்தார் வந்தால் மேள தாளத்தோடு வரவேற்றனர். B.A. படித்தவரை ஜில்லா முழுவதும் அறியும். காரில் போகும் நபரை கார் வந்த புதிதில் தெய்வீகப் பிறவியாகக் கருதினர். ஆங்கிலம் பேசினால் அவரைத் தேவதூதராகக் கருதினர். இன்று இவை சாதாரண காரியங்களாகி விட்டன. நோபல் பரிசு பெற்றால் இன்று உலகம் புகழ்கிறது. அடுத்த கட்டத்தில் சமூகத்தில் இன்று Ph.D. பெற்றவர்கள் மலிந்துள்ளதைப்போல் நோபல் பரிசு பெறும் தகுதியுள்ளவர் நிரம்பியிருப்பார்கள். அடுத்த நூறு ஆண்டில் ஏற்படும் பெரிய மாறுதல்கள் இவை. நூற்றாண்டிற்குப்பின் இன்றுள்ள நிலைமை மாறும். இன்று ஆயிரத்திலொருவர் என நாம் கருதுபவரைப்போல் எதிர் காலத்தில், ஆயிரம் பேரும் இருப்பார்கள். சமூகம் அந்த உயர்வை நூறு, இருநூறு ஆண்டில் பெறுவது நிச்சயம்.

30,000 ஆண்டிற்குப் பின் சத்திய ஜீவன் பிறப்பது நிச்சயம். யோக முயற்சியால் அவன் முப்பது ஆண்டுகளில் உதயமாக முடியும் என்பது பூரணயோகம். அந்த யோகசக்தி அன்னை அன்பர்கள் வாழ்வில் செயல்படுகிறது. மனிதன் அந்த சக்தியால் முன்னேற முடிவு செய்தால் நூறு ஆண்டிற்குப்பின் வருவது இன்று கிடைக்கும் என்பதே நான் சொல்வதாகும். யோகம் பலிப்பது கடைசிகட்டம். அதற்கு முந்தையநிலை தெய்வங்களின் நிலையாகும். அதற்கு முன் உள்ள நிலை யோகியின் தவம். ரிஷியும், முனிவரும் மனிதனுக்கும் யோகிக்கும் இடைப் பட்டவர்கள். பூரண யோகப்பலனுக்கும் மனித நிலைக்கும் இடையில் 4 நிலையுள்ளது. மனிதனில் அவதாரம், விபூதி, மேதை, மாவீரன் என்ற படிப்படியான நிலைகளும் உள்ளன. இந்த எட்டு நிலைகளையும் உயர்ந்தவை, நமக்கு எட்டாதவை என நாம் விலக்கிவிட்டு மனித வாழ்வில் நேர்மையான திறமைக்கு அன்னை பக்தி நிரம்பிய காலத்துக் கிடைக்கும் பலனையே பரிசு என்றும், ஆயிரத்திலொருவர் என நாம் இன்று கருதுபவர் நிலை எனவும் கூறி, அது நமக்கு எட்டக்கூடியது, இந்தத் தகுதியுள்ளவர் அனைவருக்கும் எட்டக்கூடியது என்றேன். அடுத்த நூற்றாண்டில் சமூகத்தில் ஏராளமான பேருக்குக் கிடைக்கும் பலன், இன்று இந்தத் தகுதியுள்ள எல்லா பக்தர்களுக்கும் கிடைக்கும் என்றேன்.

அன்னை நினைவு தானே உள்ளிருந்து புறப்பட்டு வழிந்து நிரம்ப வேண்டும் என்பதற்காகத்தான் அழைப்பு என்ற கருத்தை நீண்டதொரு கட்டுரை மூலம் விளக்கினேன். சில ஆண்டுகளாக ஓரிரு இடங்களில் மாதம் தோறும் அழைப்பை நடத்தி வருகிறேன். தொடர்ந்த அழைப்பு அன்னை நினைவை ஆழத்திலிருந்து தானே எழச் செய்யவல்லது. அழைப்பை மேற்கொண்டு இந்தப் பலன் பெற வேண்டுமானால், அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். வாரம் தோறும், அல்லது மாதமொரு முறை அழைப்பை மேற்கொள்ளும் பொழுது நடுவில் ஒரு முறை தவறினால், அதுவரை பெற்றபலன் அழிந்துவிடும். ஓவியர் தீட்டும் படம் ஒருவருஷமாக அவர் மேற்கொண்டதானாலும், சித்திரம் முடிய இன்னும் ஒரு மாதம் இருக்கும் பொழுது வர்ணம் சித்திரத்தில் கை தவறி கொட்டி விட்டால், சித்திரத்தை மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். Method, முறை என்பதைக் கையாண்டால், அதற்குரிய சட்டத்தைப் பின்பற்றினால் தான் அதற்குரிய பலன் வரும். அழைப்பில் உட்காருபவர்கள் ஒரு சில நிமிஷத்தில் உள்ளே சென்று அங்கே புதைந்து விடுகிறார்கள். அழைப்பு கலையும் வரை வெளியே வர முடிவதில்லை. கண்களைத் திறக்க முடிவதில்லை. 12 மணி அழைப்பு ஒரு மணி போல் போயிற்று என்கின்றனர். இதுவே அழைப்புக்குரிய இலட்சணம். இருந்தாலும் இந்நிலையிலும் சில சமயம் தூக்கம் வரும். ஒருவருக்கு குறட்டையும் வந்தது. இவ்வளவு சிறப்பான அழைப்பையும் தூக்கத்திலிருந்தும், குறட்டையிலிருந்தும் பாதுகாப்பது அவசியம். இதுபோல் ஒவ்வொரு மாதமும்-ஒரு மாதம் தவறாமல்-அழைப்பை மேற்கொண்டால் அன்னை நினைவு சில சமயம் உள்ளிருந்து தானே பீறிட்டெழுவதைப் பார்க்கலாம். அது ஓரிரு நிமிஷங்கள் நீடிக்கும். அது முழுமையாக வேண்டும் எனப் பிரார்த்தனை செய் என தன்னுடனேயே இருந்த சாதகருக்குப் பகவான் சொன்னார்.

அழைப்பு கனிந்து நாள் முழுவதும் அன்னை நினைவு மீறினால் அவருக்கு ஆயிரத்திலொருவராவது ருசிக்காது. அவருடைய நிலை பூரணயோகம் பக்தியால் பலிக்கும் முதல் நிலை என்பதால், உலகத்தின் சிறப்பு எதுவும் அவருக்குச் சிறப்பாக இருக்காது. நான் சொல்லும் நிலை தானே அன்னை நினைவு உள்ளிருந்து மேலே வரவேண்டும் என்ற நிலையானாலும், அதை அவரெடுத்துக் கொள்ளும் திட்டத்தில் சாதித்தால் போதும் என்று சொல்கிறேன். தான் ஆயிரத்திலொருவராக வேண்டும் என்ற எண்ணத்தைப் பூர்த்தி செய்ய அவர் மேற்கொண்டது அரசியல் துறை, தொழில், கலை, விஞ்ஞானம், எதுவாக இருந்தாலும், அவர் திட்டத்தைப் (project) பொறுத்தவரை அன்னை நினைவு இது போன்றிருக்க வேண்டும் என்பது அவசியம்.

முழு நல்லவர்கள் பலருண்டு. முழுத் திறமைசாலிகள் ஏராளம். திறமைசாலிகள் நல்லவராக இருந்தால் முழு நல்லவர்களாக இருப்பதில்லை. நல்லவர்கள் திறமைசாலிகளாக இருப்பதில்லை, இல்லாத அம்சத்தைப் பெற முயல வேண்டும். திறமையும், நல்ல குணமும் உள்ளவர்களுக்குப் பொதுவாக தெய்வ பக்தியிருக்காது. அவர்கள் செய்வது அவ்வளவும் பலிக்கும். அதனால் பிரார்த்தனை தேவைப்படுவதில்லை. நல்லவர்களாக இருப்பதால் ஆசை இருப்பதில்லை. இருப்பது போதும் என்றிருப்பார்கள். அவர்கள் அன்னையை நாடி வந்தால், கணவனுக்காகவோ, மனைவிக்காகவோ, மற்றவருக்காகவோ வருவார்கள். தாங்களே வந்தால் கோயிலுக்குப் போவது போல் ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஈடுபாடில்லாமலிருப்பார்கள். இவை மூன்றும் உள்ளவர் அரிது. அவருக்குப் பிரார்த்தனை இல்லாமல் இது பலிக்கும்.

இதையெல்லாம் தாண்டிய நிலையில் சில இல்லாத பிரச்சினைகளுண்டு. திறமையில்லாதவன் தன்னை திறமைசாலி என நம்பிக்கொண்டிருப்பான். நல்ல குணம் ஒன்றிருந்தால், தன்னை முழு நல்லவன் என வைத்துக் கொண்டு ஏன் எனக்கு இது பலிக்கவில்லை என நினைப்பவருண்டு. இவர்களை உலகம் சரியாக அறியும். எல்லோருக்கும் தன்னைப் பற்றித் தெரிந்ததை, தான்தெரிந்து கொள்ளாமல் அல்லது புறக்கணித்துவிட்டு தன்னைத் திறமைசாலியாகவோ, நல்லவராகவோ கற்பனை செய்து கொள்வதுண்டு. கற்பனைக்கு இடம் உண்டு, உரிமை உண்டு, ஆனால் கற்பனை மேற்சொன்ன பலனைப் பெற்றுத் தராது. இவற்றுக்கு விளக்கம் தேவையில்லை. என்றாலும் இந்நிலையிலுள்ள பலர் அன்னையை அணுகி கேட்ட கேள்விகளுக்கு அன்னை பதிலளித்துள்ளார். அவருடைய பதிலைக் கேட்டுக் கொண்டவர் சரியாகப் புரிந்துகொள்ள வில்லை. அந்நிலையிலுள்ளவரில் சிலருக்கு மனத்தில் உண்மையிருக்கும், அறிவில் தெளிவிருக்காது. அந்தத் தெளிவு ஏற்படும்படி சில சந்தர்ப்பங்களைக் கூறுகிறேன். மனத்தில் உண்மையில்லாதவரைப் பற்றிக் கேள்வியில்லை. தெளிவில்லாதவருக்கு தெளிவு ஏற்பட்டால், அவருக்கு பலனுண்டு. தன்னை திறமைசாலி என்று திறமை எதுவுமில்லாதவர்களில் சிலர் உள்ள நிலைகள் பல:

தான் செய்யும் வேலைகளில் பாதிக்கு மேல் பலன் தராத பொழுது அதற்கு வேறு காரணம் கண்டு பிடிப்பவர்.

தான் செய்யும் வேலைக்குரிய தகுதியே இல்லாத பொழுது சந்தர்ப்பவசத்தாலோ, சிபார்சாலோ, பெற்ற வேலை எனத் தெரிந்தும் தான் திறமை மிகுந்தவன் என நினைப்பவர்.

திறமைசாலிகள் ஓயாது உழைப்பார்கள். அவர்களால் ஓய்வாக இருக்க முடியாது. இந்த உண்மை புரியாமல் தினமும் 2 மணி நேரம் வேலை செய்தவர் தன் திறமையைத் தானே ஏற்றுக் கொள்வார்.

ஒரு வேலையில் 6 அல்லது 7 பாகமிருக்கும். அதில் ஒரு பாகத்தில் இவருக்குத் திறமையிருக்கும். 15 வருஷ சர்வீஸில் ஒரு முறைகூட முழு வேலை செய்யாதவர் தன்னை திறமையுள்ளவன் என நினைப்பார்.

வேகமாகக் கூட்டல் போடக்கூடியவர் அனைவரும், வேறு எதுவும் தெரியாவிட்டாலும், அந்த ஒரே காரணத்திற்காக திறமையிருப்பதாக நினைப்பார்கள்.

சரளமாக ஆங்கிலம் பேசுபவரை மற்றவர் போற்றுவதால், அவரே தனக்குத் திறமை இருப்பதாகக் கருதுவார்.

உயர்ந்த ஜாதி, ஒரு காலத்தில் செல்வம், நல்ல உடை, சாதுரியமான பேச்சு, இனிமையாகப் பழகுதல், பெரிய இடத்து மாப்பிள்ளை, ஏதோ ஒருசமயம் பெரிய அரசியல் தொடர்பு ஆகியவை இருந்திருந்தால், இன்று அதற்கெதிரான நிலையிருந்தாலும், பழைய நினைவு அவர்களை, அது சம்பந்தப்படாத இன்றைய தொழிலில் திறமைசாலி என நினைக்கத் தோன்றும்.

நல்லவன் என்று தன்னை எல்லோரும் நினைப்பார்கள். ஒரு சிலர் தன்னை நல்லவனுக்கு எடுத்துக்காட்டாக வைத்துக் கொள்வார்கள். பிறர் தன் நல்ல குணத்தை ஏற்றுப் புகழவில்லை என குறைப்பட்டுக் கொள்வார்கள். அவர்களில் சிலரைப் பற்றி எழுதுகிறேன். எந்தக் குணம் இருந்தால் அவர்கள் நிச்சயமாக நல்லவர்கள், எது இருந்தால் நிச்சயமாக நல்லவர்களாக இருக்க முடியாது என்பதற்கும் ஒரு உதாரணம் கொடுக்கிறேன்.

பொய் சொல்பவரால் நல்லவராக இருக்க முடியாது.

கடுமையாகப் பேச முடியாதவர் நிச்சயமாக நல்லவராக இருப்பார்.

தன்னைப்பற்றி எக்காரணத்திற்காகவும் (படிப்பு, பணம், பதவி, ஜாதி, தோற்றம்) உயர்வாக நினைவு ஏற்பட்டால் நல்லவராக இருக்க முடியாது.

சும்மா உட்கார்ந்திருக்கும் பொழுது இனிமையான எண்ணம் தானே எழுந்தால் அது நல்ல உள்ளம். விகாரமான எண்ணம், வெட்கப்படக் கூடிய எண்ணம் தோன்றுபவருக்கும் நல்ல தன்மைக்கும் தூரம்.

ஆதாயமான நேரத்தில் மட்டும் மெய் சொல்பவர் பெரிய ஸ்தாபனத்திலிருப்பதால், தினமும் ஒரு முறை "என்னைப் போன்ற நல்லவர்'' என்று பேசுவார்.

நான் நல்லவன் என்ற தெளிவான எண்ணம் தானே மனதில் தோன்றினால் அது அதன் எதிரிடையானதைக் குறிக்கும்.

நம்ம காரியத்தைப் பார்ப்போம்' என்ற போக்குடையவர் நிச்சயமாக நல்லவராக இருக்க முடியாது.

என்னுடைய கட்டுரையின் விளக்கத்திற்கு இவர்கள் புறம்பானவர்களானாலும், இது போன்ற மனநிலையுடையவர்கள் அன்னையிடம் கேள்வி எழுப்பியிருப்பதால், அவர்களை இங்குக் குறிப்பிடுகின்றேன்.

* * *book | by Dr. Radut