Skip to Content

20. அறிவுடைமை

உடலுக்குத் தெரிய முடியாமல் கண்ணுக்குத் தெரியாத புத்திக்குப் புலப்படுவதை நம்பிச் செயல்பட்டுச் சாதிப்பவனை அறிவாளி என்கிறோம். அவனது திறமையை அறிவுடைமை எனக் குறிப்பிடுகிறோம். ஆங்கில இலக்கிய மேதை எழுதிய செய்யுளில் ஒரு கிராமத்துப் பாதிரியை விவரிக்கிறார். காலையில் சர்ச் பூஜை முடிந்தவுடன் பாதிரியார் வெளியே வருகிறார். கூட்டமாகப் பக்தர்கள் அவரைச் சூழ்ந்து கொள்கிறார்கள். ஒரு வியாபாரி சந்தை வரும் தேதியைக் கேட்கிறார். பாதிரியார் அந்தத் தேதியை நினைவிலிருந்து சொல்லியவுடன் கூட்டம் கலகலத்தது. எப்படி பாதிரியார் காலண்டரைப் பார்க்காமல், யாரையும் கலந்து ஆலோசிக்காமல் சொன்னார் என்று திகைக்கிறது. ஒரு மாலுமி பௌர்ணமி என்று என விசாரித்தார். பாதிரியார் உடனே சொன்னவுடன் சிலர் பாதிரியாரின் தலையைப் பார்த்தார்கள். அதற்குள் பல பேர் பலவிதக் கேள்விகளைக் கேட்பதும், பாதிரியார் தயங்காமல் பதில் சொல்வதும் தொடரவே தலையைப் பார்த்தவர்கள் உற்றுப் பார்த்தார்கள். இந்த சின்னத்தலை எப்படி அத்தனை விஷயங்களை தன்னுட்கொண்டுள்ளது என்று அவர்கள் ஆச்சரியப்பட்டதாக கவி வர்ணிக்கின்றார். கிராமத்து மக்களின் கண்ணுக்குப் புலப்படாத அந்தச் செய்திகள் பாதிரியாரின் அறிவுக்குப் புலப்படுவதை, அம்மக்கள் அறிவுடைமை எனக் கருதினார்கள், அதுவே அறிவுடைமைக்கு இலக்கணம்.

ஒர்க் ஷாப், கோர்ட், கோயில், நம் நாட்டு விசேஷங்களில் பிறநாட்டார், பாக்டரி, கம்ப்யூட்டர் வேலை செய்வது, நெசவாலை, வர்ணம் தீட்டும் கலைஞன் இவர்கள் வேலை செய்யும் இடங்களில் நாமிருந்தால் அங்கு நடப்பது எதுவும் நமக்குத் தெரிவதில்லை. அங்குள்ளவர்க்கு அவ்வேலைகள், அத்துப்படி. அங்கு நடக்கும் வேலைகள், நமக்குப் பாதிரியாரைக் கண்ட கிராமத்தார் போலிருக்கும். ஒருவர் வர்ணங்களைக் கலந்து புதுவர்ணம் செய்து படம் தீட்டுவதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த குழந்தை அவர் கருப்பு தொட்டு, பிறகு வெள்ளை, பச்சையைத் தொடுவதைப் பார்த்தது. ஆனால் பிரஷ்ஷிலிருந்து புதிய புதிய கலர் வருவதைக் குழந்தையால் நம்ப முடியவில்லை. உங்கள் வர்ணத்தில் எதைக் கலக்கின்றீர்கள் என்று ஆச்சரியமாகக் கேட்ட குழந்தைக்கு, அவர் brains அறிவைக் கலக்கின்றேன் என்று பதில் சொன்னாராம்.

நாம் மடையன் என்று நினைப்பவனுக்கும் ஒரு விஷயத்தில் உயர்ந்த அறிவு இருப்பதுண்டு. உலகம் மேதை என்று போற்றுபவரும் எந்த அறிவிலியும் செய்யாததைத் தவறாமல் செய்வதுண்டு. நியூட்டன் தான் வளர்த்த பூனைக்கு ஒரு மாடமும் அதன் குட்டிக்கு மற்றொரு மாடமும் கட்டியதாகக் கதை. அன்னை பக்தர் ஒருவரை ஒரு முதிய சாதகருக்கு அறிமுகப்படுத்தினேன். பக்தர் போனபின் எப்படி இவருடன் உன்னால் பேச, பழக முடிகிறது. அவரை அரைநிமிஷம் கூட என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இது போன்ற மடமை நிறைந்த ஒருவரை நான் பார்த்ததேயில்லை என்றார். அடுத்த சமயம் அந்தப் பக்தர் கண்ட காட்சியை சாதகரிடம் சொன்னேன். என் நீண்ட ஆசிரம வாழ்க்கையில் இது போன்ற vision காட்சியைக் கண்டவரை நான் பார்த்ததில்லை என்று சொல்லி பார்த்தது யார் என்றார். பக்தரை நினைவுப் படுத்தினேன். சாதகர் பேச்சிழந்தார்.

அறிவுடைமையை பலவாறு விளக்கலாம். தெரிந்ததைச் செய்வது அறிவுடைமை என்றால் அது அனைவரும் ஒத்துக் கொள்ளக்கூடியது. அதில் எந்தச் சிறப்பும் இல்லை. இதை சொல்வது அர்த்தமற்றதாகத் தோன்றும். நாம் இதுவரை செய்த காரியங்களை, அதுவும் தோல்வியுற்ற காரியங்களை இந்த நோக்கில் பார்த்தால், ஒன்றல்ல, பதினைந்து, இருபது காரியங்களை நமக்குத் தெரியாது என்ற பொழுது ஆரம்பித்துத் தோற்றிருப்போம். இன்றுகூட இதுபோல் இரண்டு காரியங்களைச் செய்திருப்போம். அவை சரியாக வரவில்லை என்றால் அப்படியே விட்டு விடுவது வழக்கம். ஏன் இது சரியாக வரவில்லை என்று ஒவ்வொரு முறையும் சிந்திப்பதில்லை. சிந்தித்த சமயம் சில விளங்கும். பல விளங்காது. விளங்காதவற்றை தொடர்ந்து ஆராயும் பொறுமை இருப்பதில்லை. எப்படி இந்த டார்ச் லைட் கெட்டது என்று கேட்டால், திறந்து பார்த்தேன், எரியவில்லை என்று ரிப்பேர் செய்தேன் என்பார். உங்களுக்கு ரிப்பேர் செய்யத் தெரியுமா என்றால், தெரியாது, செய்து பார்த்தேன் என்று பதில் வரும். விளைவு லைட் இனி ரிப்பேர் செய்ய முடியாத அளவு கெட்டுப்போய்விட்டதே என்றால், பரவாயில்லை அதிக நஷ்டமில்லை என்பார். நஷ்டம் ரூபாயாக அதிகமில்லை. ஆனால் நமக்குத் தெரியாததை செய்து அது கெட்டுப் போனபின் பரவாயில்லை என்றால், மீண்டும் இதைச் செய்வோம் என்று பொருள். இதையெல்லாம் நாம் சிந்தித்துச் செயல்படுவதில்லை. தெரிந்ததை மட்டும் நாம் செய்வது அறிவுடைமை, தெரியாததைச் செய்ய முயல்வது அறியாமை என்ற சூத்திரப்படி இதுவரை நம் வாழ்க்கையை சோதனை செய்தால், அறியாமைக்குப் பத்து, இருபது முறை இலக்கணமாகச் செயல்பட்டிருப்பது தெரியும். 2300 ரூபாய் சம்பளம் பெறுபவர் ஒருவர் இந்தச் சோதனையைச் செய்ததில் கிட்டத்தட்ட 11 முறை இது போல் செயல்பட்டதாகவும், தன் பிதிரார்ஜித சொத்து மூலம் கிடைத்ததும், தன் ஆதிநாள் சேமிப்பிலிருந்தும் சுமார் ரூ.17,000 நஷ்டமானதாகக் கண்டார், ஆனால் இன்றும் பழையபடியே செயல்படுகிறார். மாற்ற வேண்டும் என்று தெரியவில்லை. மற்றவர்கள் சரியில்லை என்றே அவருக்குத் தோன்றுகிறது. அது போன்று அறிவுடைமையை விளக்கியும், அதற்குப் பொருத்தமான அறியாமைக்குரிய விளக்கத்தையும் கீழே தருகிறேன்.

அறிவுடைமை

1. ஒரு பொருளைப் பயன்படுத்து முன் அது என்ன, அதன் தன்மை என்ன என்று அறிதல்.

2. தனக்குப் பயிற்சியும், திறமையும் உள்ள வேலைகளை மட்டும் செய்ய முனைதல்.

3. ஒரு வேலைக்குரியவை அனைத்தும் இருந்தால் மட்டும், அவ்வேலையை ஆரம்பிப்பது.

4. தன் உடலின் திறன், தெம்பு, திறமை ஆகியவற்றை அறிதல்.

5. உடலின் திறன், தெம்பு, திறமை ஆகியவற்றிற்குள்ள limit அளவைத் தெளிவுற அறிதல்.

6. இரு விஷயங்களுக்கிடையேயுள்ள தொடர்பை விவரமாக அறிவது.

7. இரு விஷயங்களுக்கிடையேயுள்ள முக்கியத் தொடர்பை புறக்கணிக்காமலிருப்பது.

8. தன்னால் முடியாதவற்றைப் பிறருக்குப் புத்திமதியாகச் சொல்லாமலிருப்பது.

9. பொதுவான விதி குறிப்பான இடத்தில் அதே விதமாகச் செயல்படும் என்று எதிர்பாராதது.

10. ஒரு விஷயத்தில் பலித்தது, எல்லா விஷயத்திலும் பலிக்க வேண்டிய அவசியமில்லை என்று புரிவது.

11. தோற்றத்தைக் கண்டு விஷயத்தை நிர்ணயிக்காத மனநிலை.

12. தோற்றத்திலுள்ள தெளிவை நம்பி விஷயத்தை நாடும் இடத்தில் காரியத்தை முடிக்க முயலாத அறிவு.

13. பிறருக்குச் செய்ய நமக்குப் பிரியமில்லாததை, மற்றவர் நமக்குச் செய்யமாட்டார்கள் என அறிவது.

14. பெரிய இரகஸ்யத்தை சிறிய உறவை நம்பி விடாமலிருப்பது.

15. எதிரி உன் உயர்வுக்காகப் பாடுபடமாட்டான் என அறிவது.

16. ஸ்தாபனம் வேறு, இலட்சியம் வேறு என்ற தெளிவு.

17. மனித சுபாவம் மாறாது என்ற அனுபவம்.

18. வாழ்வில் நியாயம் கிடைக்காது என்ற விளக்கம்.

19. நன்றியறிதலை எதிர்பாராத நிலை.

20. அறிவுள்ளதால் மனிதன் தான் நஷ்டப்படுவதைச் செய்யமாட்டான் என்ற அறிவு.

21. அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருக்காமல் செயல்படுவது.

22. எப்படியாவது நல்ல பதில் வரும் என எதிர் பார்க்காதது.

23. வாழ்க்கையை அனுபவிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை மனிதன் தவற விடமாட்டான் என்ற தெளிவு.

24. சிரமப்பட்டுக் கிடைக்கும் பலனைத் தரும் வாய்ப்பை மனிதன் ஏற்கமாட்டான் என்ற அறிவு.

25. அதிகாரமில்லாத இடத்தில் கீழே வேலை செய்பவர்கள் விஸ்வாசமாக இருக்கமாட்டார்கள் என்ற அனுபவம்.

26. பணம், பதவியை விட மனிதன் பண்பைக் கருத மாட்டான் என்று புரிவது.

27. நம் குறைகளைப் பிறர் அறிவார் என்று நினைப்பது.

மேலே சொல்லியவற்றைப் படித்தால் பெரும்பாலானவை ஏற்றுக்கொள்வதாக இருக்கும். இதில் ஒன்றும் விசேஷமில்லை என்று தோன்றும். எனக்குத் தெரிந்த பல நிகழ்ச்சிகளை நான் கீழே எழுதுகிறேன். மேற்கண்ட சட்டப்படி அவை செய்தவருடைய வயதுக்கும், படிப்புக்கும், அனுபவத்திற்கும் பொருத்தமான அறிவுடைமையா எனப் பார்த்தால் இந்த விளக்கங்களின் முக்கியத்துவம் புரியும்.

1. பட்டம் இறுதியாண்டு படிப்பவர் டெல்லிக்குப் போன பொழுது திரும்பி வர டிக்கட்டுக்குரிய பணத்தைச் செலவு செய்து விட்டார்.

2. இதுவரை எவருக்குமே நன்கொடை கொடுக்காத செல்வந்தரிடம், எவரிடமும் நன்கொடை பெறடியாத ஆங்கில எழுத்தாளர் தன் புத்தகங்களை வெளியிட நன்கொடை கேட்டார். அதுபோல் தொடர்ந்த அகில இந்தியப் பிரயாணத்தில் 40 பேரைக் கேட்டார். அவருக்குக் கிடைத்தது அவர் செய்த பிரயாணச் செலவு.

3. பிரதமரான பின் இந்திரா தன் அபிப்பிராயப்படி, நடப்பார் என காமராஜ் எதிர்பார்த்தார்.

4. சுமார் 25 வருஷமாக எதையும் சம்பாதிக்காதவர் இருப்பதை விற்றுச் சாப்பிட்டவர், இனி விற்க ஒன்றுமில்லை என்ற பொழுது தன் பெரிய செலவுக்குத் தானே பணம் வரும் எனக் காத்திருந்தார்.

5. தன் சம்பளத்திற்குச் சமமான வட்டியாகும் என்று தெரிந்து அந்தத் தொகையை கடனாக வாங்கி அதை ஒரு மனை வாங்கப் பயன்படுத்திய பெரிய அதிகாரி பெரிய பட்டம் பெற்றவர்.

6. கல்லூரியில் சேர்ந்த தன் பிள்ளைகளுக்குக் கெட்ட பழக்கம் வராது என்று நம்பும் எல்லா கெட்ட பழக்கங்களையுடைய தகப்பனார்.

7. குடும்பத்தை விட்டு கணவனைப் பிரித்தால், கணவன் தன்னை விட்டுப் பிரியமாட்டான் என நம்பும் மனைவி.

8. ரயிலில் சந்தித்த அமெரிக்கரை தன் பிள்ளையை அவர் செலவில் படிக்க வைப்பாரா என்று கேட்கும் உயர் அதிகாரி.

9. தான் விட்டுவிட்டுப்போன கட்சியை, அக்கட்சி அதிகாரத்திற்கு வந்த பின் அதன் தலைமைப் பதவியை தனக்குக் கொடுக்கும்படி கேட்கும் அரசியல்வாதி.

10. காவல்காரன் திருடமாட்டான் என்று நம்பும் முதலாளி.

நம் பழைய செயல்களையும், நமக்குத் தெரிந்தவர்கள் செயல்களையும் பார்த்து அதில் தோல்வியுற்றவற்றை மட்டும் மேற்கண்ட கண்ணோட்டத்தில் பார்த்தால், பத்தில் ஒன்பது இந்தத் தெளிவு இல்லாததால் என்பது விளங்கும். தோற்ற காரியத்தில் உள்ள குறையை இப்பொழுது நினைத்துப் பார்த்தால் எப்படி இவ்வளவு அறியாமையான காரியத்தைச் செய்தோம் என்று தோன்றும்.

நாம் அடிக்கடி அறியாமையால் செயல்படுகிறோம் என்ற தெளிவே உயர்ந்த அறிவுடைமை.

அறிவுடைமையை விளக்கியது போல் அறியாமையையும் விளக்கலாம்.

அறியாமை:

1. ஒரு பொருளின் தன்மை என்ன என்று தெரியாமல் அதை வேறொன்றாகக் கருதி அதை நம்புவது.

2. தனக்குத் திறமையில்லாத விஷயத்தில் ஒரு காரியத்தைச் செய்ய முற்படுதல்.

3. ஒரு வேலைக்குரியதில் முக்கியமான ஒன்றிரண்டு குறையாக இருக்கும்பொழுது, அவ்வேலையை ஆரம்பிப்பது.

4. தன் உடலின் திறமையை அறியாதது.

5. தன் திறமையின் வரையறையை அறியாதது.

6. இரு விஷயங்களிடையே இல்லாத தொடர்பை இருப்பதாகக் கொள்வது.

7. இரு விஷயங்களிடையே உள்ள தொடர்பை அறியாமல் செயல்படுவது.

8. தான் வெற்றி பெறாத விஷயத்தில் மற்றவருக்குப் புத்திமதி சொல்வது.

9. பொதுவிதி குறிப்பான இடத்தில் செல்லும் என நினைப்பது.

10. ஒரு இடத்தில் பலித்ததால், எல்லா இடத்திலும் பலிக்கும் எனக் கருதுவது.

11. தோற்றத்தை விஷயமாகக் கருதுவது.

12. தோற்றத்திலுள்ள அறிவைக் கொண்டு விஷயத்தைப், பூர்த்தி செய்ய முனைவது.

13. மற்றவருக்கு நாம் செய்யப் பிரியப்படாததை அடுத்தவர் நமக்குச் செய்வார் என நினைப்பது.

14. பெரிய இரகஸ்யத்தை சிறிய உறவை நம்பிக் கொடுப்பது.

15. எதிரி தன் உயர்வுக்குப் பாடுபடுவான் என்று எதிர்பார்ப்பது.

16. ஸ்தாபனத்தை இலட்சியத்திற்குப் பதிலாகப் போற்றுவது.

17. மனிதன் மாறுவான் என எதிர்பார்ப்பது.

18. வாழ்வில் நியாயம் கிடைக்கும் என்ற நினைவு.

19. நன்றியறிதலை எதிர்பார்ப்பது.

20. அறிவுடையவன் என்பதால், தான் நஷ்டப்படும்படி நடப்பான் என்று கருதுவது.

21. அதிர்ஷ்டம் வரும் எனக் காத்திருப்பது.

22. எப்படியாவது விஷயம் கூடிவரும் என்ற நம்பிக்கை.

23. அனுபவிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை மனிதன் விட்டு விடுவான் என்ற நம்பிக்கை.

24. சிரமப்பட்டுச் சாதிக்கவேண்டிய வாய்ப்பை மனிதன் வரவேற்பான் என்ற எண்ணம்.

25. தனக்கு அதிகாரமில்லாத இடத்தில் தன் கீழிருப்பவர்கள் விஸ்வாசமாக இருப்பார்கள் என்ற நினைவு.

26. பணம்,பதவியைத் தாண்டி பண்பு செயல்படும் என்ற அறிவு.

27. நம் குறையை பிறரறியார் என்ற கற்பனை.

28. விஷயம் என்று எழுந்தால் நண்பரும் எதிரியாவார், அனைவரும் எதிரியே என்று புரியாதது.

* * *book | by Dr. Radut