Skip to Content

17. தீராத பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சினையல்ல

பூவுலக வாழ்வு சட்டத்திற்குட்பட்டது. அந்த ஒரு பெரிய சட்டம் பல சட்டங்களாகப் பிரிந்து வாழ்வின் பகுதிகளை நிர்ணயிக்கிறது. பிறந்தவன் இறப்பான், உடலுக்கு உணவு வேண்டும், தூக்கம் இன்றி வாழ்வு அமையாது, வலிமை எளிமையை ஆட்கொள்ளும், விழிப்பான மனிதனுக்கு விருதுண்டு போன்ற சட்டங்கள் அவை.

இரவும் பகலும் உடல் வளர்வதுபோல் உணர்வும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அதேபோல் நம்மை அறியாமல் நம் ஜீவியமும் consciousness தடையின்றி வளர்ச்சியை நாடுகிறது. தன் செயலைக் குறைவர அறிந்து, வளர ஆசையில்லாதவனுடைய வாழ்வு, சலனமற்ற நீர்ப்பரப்பு போல் ஆழ்ந்த அமைதியுடன் நிலவுகிறது. அவர்கள் வாழ்வு பிரச்சினையற்றது. சலனமற்ற வாழ்வானதால் சலிப்புக்கு இடம் இல்லை. வாழ்வில் முன்னேற விழைபவனுக்குச் சிரமம், தடை, சிக்கல், பிரச்சினை, குழப்பம் தொடர்ந்து எதிர்கொள்ளும். இன்றைய வாழ்வின் அஸ்திவாரத்தை நிலையாகப் பெறாதவர் வாழ்வு தொடர்ந்து ஆட்டம் காண்பதால், அவர்களுக்கு முன்னேற்றத்தால் பிரச்சினையில்லை. இருப்பதே நிலையாக இருக்குமா என்பதே நிலையான பிரச்சினை. வாழ்வை அறிந்து, அதன் சூழ்நிலைக் கேற்பவும், நம் மனநிலைக்கேற்பவும், முறைப்படுத்த முடியாததால் நிலையற்ற நிலை ஏற்படுகிறது. எந்த நேரம் எதற்கு ஆபத்து ஏற்படும் என்று அவர்களால் சொல்ல முடியாது. அந்நிலை உடலில் நோயாகவும், குடும்பத்தில் தகராறாகவும், உணர்வில் சோகமாகவும், பொருள் விரயமாகவும், மரியாதைக்குப் பங்கமாகவும், எங்கும் முரண்பாடாகவும், குறைபாடாகவும் வெளிப்படும்.

நோய் ஏற்பட்டால் மனிதன் மருந்தை நாடுகிறான். சோகத்தைக் களைய நட்பின் சுகத்தை விழைகிறான். இழந்த மரியாதையைப் பெற சாதுர்யத்தின் யுக்தியைத் தேடி யோசனையில் ஈடுபடுகிறான். நஷ்டத்தை உழைப்பால் ஈடு செய்ய முயல்கிறான். தகராறைத் தீர்க்க மத்தியஸ்தத்தை நாடுகிறான். அதற்குக் கட்டுப்படாத பிரச்சினையை சமாக்கச் சட்டத்தை நாடி கோர்ட்டுக்குப் போகிறான். நிலைக்கேற்றவாறு பல பிரச்சினைகள் தீரும். சிலவற்றுக்குத் தீர்வு இருப்பதில்லை. எல்லா நாட்டிலும், எல்லா நேரங்களிலும் தீராததை தீர்க்கமுடியாத பிரச்சினை எனக் கருதப்படுகின்றது.

நியாயத்திற்குக் கட்டுப்படாத மனிதனை சமூகத்தின் சட்டம் அடக்கும். அதனால் பொறுப்பற்ற மகனையோ அன்பில்லாத தாயாரையோ, மாற்ற இயலாது. நோய் உற்பத்தியாகும் வழியை அறிந்து அதற்கு மாற்று கண்டால், மாற்று மருந்து நோயைக் குணப்படுத்தும். அதற்கு ஓர் எல்லையுண்டு. எல்லையைக் கடந்து நிற்கும் நோய் தீராத நோயெனப்படும், மனிதன் சுயநலமானவன். சோகம் நிறைந்த மனிதனை ஆதரவுடன் வரவேற்க அனைவரும் முன் வரமாட்டார்கள். விலகி நிற்பார்கள். அன்பால் கிடைக்கும் ஆதரவு சோகத்தை அழிக்கும். அது கிடைக்க முடியாத நிலையில் சோகம் வளர்ந்து நிற்கும். சாதுர்யத்திற்கும், சமயோசித புத்திக்கும் கட்டுப்படாத பிரச்சினையுண்டு. அதனால் சில சமயம் இழந்த மரியாதை இழந்த நிலையிலேயே இருக்கும். உழைப்பு நஷ்டத்தை ஈடு செய்ய ஓரளவு முடியும். அளவைக் கடந்த நிலையிலுள்ளவை உழைப்பால் தீராது. அத்துடன் கடந்தவை இன்றைய உழைப்பால் முழுப்பலன் பெற முடிவதில்லை. எஞ்சி நிற்பவை ஏராளம். எல்லாத் தகராறுகளுக்கும் மத்தியஸ்தம் அமைவ தில்லை. எனவே தீர்க்க முடியாத பிரச்சினைகள் தீராத பிரச்சினையாக வாழ்வில் நிறைந்துள்ளன.

தெய்வ நம்பிக்கையுள்ளவர் இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க பிரார்த்தனையை நாடுகிறார்கள். தெய்வத்தால் தீர்க்க முடியாததில்லை அல்லவா? இங்கும் பல சிக்கல்கள் அவிழ்கின்றன. சில அசைவதில்லை. பிரார்த்தனை, ஸ்தோத்திரம், பூஜை, மந்திரம், விரதம் போன்ற மார்க்கங்களைப் பக்தர்கள் நாடுகிறார்கள், இவை பலித்தால் பிரச்சினை தீரும். தெய்வம் தானே முன் வந்து நம் பிரச்சினையைத் தீர்க்க முற்படுவதில்லை. நம் குரல் தெய்வத்திற்கு எட்டிய அளவில் பலன் கிடைப்பதால், பிரச்சினை தீர்வது மனித முயற்சியைப் பொருத்தது. முயற்சிக்கு அளவுண்டு, முடிவுண்டு. அதனால் தீராதவையுண்டு, அருள் செயல்பட்டால் எதுவும் கரையும். ஆனால், அருள் தானே செயல்படும் தன்மையுடையது. ஏதோ ஒரு சமயம் தான் அது செயல்படுவதால், எஞ்சியுள்ள சிக்கல்கள், சிக்கல்களாகவே யுள்ளன. "நேரம் வரவில்லை'', "என் கர்மம்'' போன்றவற்றை நாம் கேள்விப்படுகிறோம். "இந்த நிலை மாறினால், அந்தப் பிரச்சினை தீரும்'' என்ற நிபந்தனையைக் கேள்விப்பட்டால், அது பூர்த்தியாகாத நிலையாகத் தோன்றும். அன்னை பக்தர்களுக்குத் தீராத பிரச்சினைகளை அன்னை தங்கள் வாழ்வில் தீர்ப்பதைத் பார்க்கின்றார்கள். அத்துடன் இதுவரை தீர்க்க முடியாது என்று அவர்கள் கைவிட்ட பிரச்சினைகளையும் அன்னை தீர்ப்பதைப் பார்க்கின்றார்கள். என்றாலும், பக்தர்கள் வாழ்விலும் தீராத பிரச்சினைகள் இருப்பதே புதிராக அமைகிறது. இது ஏன் என்பது கேள்வி.

தகராறைத் தீர்க்கச் சட்டத்தை நாடும் மனிதன், அன்னையைப் பிரார்த்தனை மூலம் நாடினால், அன்னை சுமுகம் என்ற புனித ஆன்மிக சக்தியைத் தகராறு வளர்க்கும் நபர்களுக்கு அனுப்புகிறார். நியாயம் சட்டத்தைவிட உயர்ந்தது. கருணை நியாயத்தைவிடப் புனிதமானது. சுமுகம் கருணைக்கு சமமானது. சில அம்சங்களில் உயர்ந்தது. எனவே சுமுகம் அவர்களை எட்டும் பொழுது அவர்கள் மனதில் கருணையுற்பத்தியாகி, சூழ்நிலையில் நியாயம் தோன்றி, சட்டத்திற்குக் கட்டுப்படாத மனிதன் எல்லாவற்றுக்கும் கட்டுப்படும் நிலை ஏற்பட்டு, தகராறு மறைகிறது. காலாவதியான பிராமிசரி நோட்டை கோர்ட் அமுல்படுத்த முடியாது. நியாயம் அதை ஏற்றுக்கொள்ளும். எதிர் வீட்டில் உள்ளவர்கள் பட்டினி கிடக்கின்றார்கள். அவர்கள் பசியை நான் போக்க வேண்டுமென்றால், அது அவர்கள் கடமை, நான் என்ன செய்யமுடியும். எந்த நியாயப்படி அவர்களுக்கு நான் உதவ வேண்டும் என்று மனம் கேட்கும்.

கருணை அக்கேள்வியைக் கேட்காது. கேட்காமல் செயல்படும். கருணை தகராறு வளர்க்கும் மனிதனைத்தொட்டால், அவர்கள் மனதிலுள்ள குதர்க்கம் கரையும், குதர்க்கம் இதமாக மாறும், சுமுகமான நிலை ஏற்படும். இந்தச் சக்திக்கு எல்லையில்லை, இதனால் தீர்க்க முடியாததில்லை. தீராத பிரச்சினை, தீர்க்க முடியாத இந்தச் சக்திக்கு முன் எதில் விலகும்.

சோகத்திற்குப் பலியானவர் பொதுவாகத் தனித்திருப்பார்கள். மற்றவர் அவர்களை விட்டு விலகுவார்கள். நெருங்கி வருபவரும் ஆதரவு அளிக்க மாட்டார்கள். ஆதரவிருந்தாலும் போதுமானதாக இருப்பதில்லை. எனவே அவர் விஷயம் அத்துடன் முடிந்து விடுகிறது. சோகத்தை கரைக்க ஸ்தோத்திரங்கள், மந்திரங்களுண்டு. அவை சாதாரண மனிதர்கடையே பிரபலமாக இல்லை. அவற்றுக்குரிய முறைகளும் நிபந்தனைகளும் பல. விவரம் தெரியாமல் இவற்றைப் பயன்படுத்தினால், சோகம் அதிகமாகும். பொதுவாக நம் குடும்பங்களில் ஒருவர் சோகமே உருவாக இருந்தால், அதை மாற்ற முயல்வது குறைவு. அக்காரணத்தால் இதற்கெல்லாம் வழியில்லை என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அன்னையிடம் நிலைமை வேறு. அன்னையை சோகமே உருவானவர் அழைத்தால், அன்னை சந்தோஷ தேவதையாக மாறி அவனை நோக்கி அடுத்த நிமிஷம் வருகிறார். சோக மனிதர் அழைப்பை மேற்கொண்டால் 50 அல்லது 60 முறை அன்னையை அழைப்பதற்குள் உள்ளிருந்து சந்தோஷம் வருவதைக் காணலாம். அதைக் கண்டபின், தன் சோகம் முழுவதும் கரையும் வரை அவர் அழைப்பை மேற்கொண்டால், சோகம் நிரந்தரமாக அவரை விட்டகலும். உள்ளம் சோகத்தால் நிரம்பி, வாழ்வு சிறுவயதிலிருந்து சோகத்தின் முழுஆட்சிக்குள் வந்த ஒருவர் தன் முப்பதாம் வயதில் அன்னையை அறிந்து தன் சோகத்தை அழிக்க முயன்றபொழுது முதல் மூன்று நிமிஷத்தில் வாழ்க்கையிலேயே முதன் முதலாகத் தான் சிரிப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, தன் முயற்சியைத் தொடர்ந்தார். 15ஆம் நாள் அவரைக் கண்ட நண்பர் குழாம் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவு சந்தோஷமாக இருந்தார். காரணமேயில்லாமல் அடிக்கடி மகிழ்ச்சி அலைகள் மனதில் நிரம்பி தானே சிரிப்பு வருவதைக் கண்டார். 4ம் மாதம் அவருடைய அண்ணன் அவரைப் பார்க்க வந்தார். "எனக்கு ஒன்றும் புரியவில்லை. இது என் தம்பி என்று நம்ப முடியவில்லை. முகம் பிரகாசமாயிருக்கிறது. எப்படி என விளங்கவில்லை. என் தம்பி சிரிக்கின்றான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை'' என்றார்.

இழந்த மரியாதையை மீண்டும் பெற மனிதன் பல யுக்திகளை மேற்கொள்கிறான். அவனுடைய யுக்தியை மீறிய பிரச்சினைகளுமுண்டு. அவற்றைத் தீர்க்க அவனால் முடிவதில்லை. அப்படிப்பட்டவனும், இறைவனுக்குப் பிரார்த்தனை செய்து பலன் பெறுவதுண்டு. தன் குறையை ஏற்றுக் கொள்பவருக்கும் பக்திமான்களுக்குமே இதனால் பலன் கிடைக்கும். இதற்கும் எல்லையுண்டு. ஏனெனில் பிரார்த்தனையின் பலன், மனித முயற்சியின் அளவை மட்டும் பொருத்தது. பிரார்த்தனை தெய்வத்தின் காதில் விழுந்தால்தான் பலன் கிடைக்கும் என்பதால், காதில் விழுவது பிரார்த்தனையின் வலுவைப் பொருத்தது. வலுவுக்கு முடிவுண்டு என்பதால் முடிவைத் தாண்டிய பிரச்சினைகளுக்குத் தீர்வில்லை.

அன்னையிடம் இரு முக்கியமான மாற்றங்களுண்டு. வலுவான பிரார்த்தனைக்கு அதிகப் பலனுண்டு என்பது அன்னையிடமும் உண்மை என்றாலும், அன்னை பிரார்த்தனையின் வலிமையைவிட முக்கியமாக அழைப்பின் ஆர்வத்தைக் கருதுகிறார். ஆர்வமான அழைப்பை அன்னை உடனே ஏற்றுக்கொள்கிறார். நம்பிக்கையிருந்தால், அன்னை மற்றதைப் பொருட்படுத்துவதில்லை. பிரார்த்தனையின் வலிமை, பூஜையின் சிறப்பு ஆகியவற்றைவிடப் பக்தியையும், நம்பிக்கையையும் அன்னை முக்கியமாகக் கருதுகிறார். மேலும் அன்னை மனிதனை நோக்கி வந்தபடியிருக்கின்றார். மனிதன் தன்னை அழைக்கட்டும், பூஜை செய்யட்டும் என இருப்பதில்லை. அவனை நோக்கி வரும் அன்னை, மனிதன் தன்னை நினைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். மனிதன் நினைத்தால் போதும். அன்னை வந்துவிடுவார். நம்மைச் சுற்றி அவரிருப்பதால் நாம் நினைத்தவுடன் அன்னை பலித்து விடுகிறார். அன்னை செயல்பட ஆரம்பித்தால் சூழ்நிலை மூலம் செயல்படுகிறார். சூழ்நிலையைச் சாதகமாக மாற்றி, சூழ்நிலையிலுள்ள மனிதர்களையும், நிகழ்ச்சிகளையும் நம் பிரச்சினை தீர உதவும்படி செய்கிறார். நம் சாமர்த்தியத்தின் மூலமாகச் செயல்படுவதை விட இது பலமடங்கு அதிக சக்தியை வழங்குகிறது. நம் சூழ்நிலையே நமக்குச் சாதகமாக மாறுவதாலும், நம் அழைப்பிற்காக அன்னை காத்திருப்பதாலும், சிக்கல் தீராமலிருக்க வழியில்லை.

உழைப்பு உயர்ந்தது. பலநாள் நஷ்டத்தை சிலநாள் உழைப்பு ஈடுகட்டமுடியும். எனினும் கடந்த காலப் பிரச்சினைகள் அனைத்தையும் இதுபோல் இன்றைய உழைப்பால் சரிசெய்ய முடிவதில்லை. அன்னையை அழைத்தவுடன், நம் திறமை அதிகரிக்கின்றது. சூழ்நிலை சாதகமாக மாறுகிறது. உழைப்பின்தரம் உயர்கிறது. உயர்ந்த உழைப்பு சாதகமான சூழ்நிலையில் அளிக்கும் பலன் வழக்கமான பலனைவிட அதிகமானது. பலமடங்கு அதிகமானது. கர்மத்தை அழிப்பதைப் போல், அன்னையின் சக்தி, கடந்த காலக் குறைகளை அழிக்க முடிகிறது. செய்யும் வேலைக்குப் பலன் பெருகுவது போல், தரம் உயர்வது போல், இல்லாத புதுத்திறமைகள் ஏற்படுவதால், கடந்தகால குறை எதையும் அழிக்க முடியாது என்ற நிலையிருப்பதில்லை.

தகராறைத் தீர்க்க மற்றவர்களை மத்தியஸ்தம் செய்யச் சொல்கிறோம். அன்னையை அழைத்தால் தானே மத்தியஸ்தம் செய்ய முன்வருகிறார். நம்மைச் சுற்றியுள்ள சக்திகள் மூலமாகவும் அன்னை மத்தியஸ்தம் செய்ய முனைகிறார். நமக்கு எதிராகவுள்ள சூழ்நிலையை மாற்றி சாதகமாக மாற்றுகிறார். வம்பு வளர்த்தவரே மனம் மாறி, நியாயம் பேசும் நிலைக்கும் வருவதுண்டு. ஆசிரியை வேலைக்கு மனுப் போட்டவரை கமிட்டி மெம்பர் எதிர்த்தார். மனுப்போட்டவர் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தார். ஒருநாள் கடையில் இவரை கமிட்டி மெம்பர் கண்டு நல்ல முறையில் பேசினார். அத்துடனில்லாமல் அவர் இப்பெண்ணின் தகப்பனாருடைய மாணவன் என்றும், அதனால் அவரே முன்நின்று இவ்வுத்தியோகத்தைப் பெற்றுத் தருவதாகவும் கூறினார். மற்ற கமிட்டி மெம்பர்களை அவரே சந்தித்து, இப்பெண்ணிற்கு வேலை வாங்கிக் கொடுத்தார். தற்காலிக வேலை கிடைத்தால் போதும் என்றிருந்தவருக்கு நிரந்தர வேலையை அவரே வாங்கிக் கொடுத்தார்.

ஏன் பக்தர்களுக்கு தீராத பிரச்சினைகள் இருக்கின்றன? ஏன் அவர்களால் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை? தீர்க்க முடியவில்லை என்பது உண்மையா? தீர்க்க முனைவதில்லை என்று பொருளா? தீர்வை விட முக்கியமானது ஒன்று அவர்களுக்குண்டா? குறிப்பிட்ட வழியில் தீர்க்க வேண்டும் என்ற பிடிவாதத்தால் தடையாக இருக்கிறதா? தடையென்று தெரிந்த விஷயத்தை விலக்க மறுப்பதால் தாமதமாகிறதா? அல்லது தங்கள் பழக்கத்தால் தடையை ஏற்படுத்துகிறார்களா? என்ற கேள்விகள் எழுகின்றன. பிரச்சினைகளைத் தீர்க்கும் எல்லா திறமைகளும் இருந்தபோதிலும், அவற்றைத் தீர்க்காமல் இருக்கின்றார்கள் என்பது விநோதமாக இருக்கின்றது. பக்தர்களால் தீர்க்க முடியாதது என்பதில்லை என்பதும் உண்மை. அவர்களுக்குத் தீராத பிரச்சினைகள் உண்டு என்பதும் உண்மை.

சமூகத்தில் அந்தஸ்து என்பது பல நிலைகல் உள்ளது. பத்து நிலைகள் இருப்பதாகக் கொள்வோம். 5ஆம் நிலையிலுள்ள பக்தன் அன்னையிடம் வந்தபின் அந்த நிலையிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். தீராத பிரச்சினைகளிருந்தால் அவை அந்த நிலையிலிருக்காது. 6ஆம் நிலையை அடைந்தபின் அந்த நிலையில் தீராத பிரச்சினைகளிலிருக்கும். ரூ. 1500 சம்பளத்திலிருந்தவர் வீட்டில் அவ்வளவும் பிரச்சினையே. கடன் பெரிய பிரச்சினை. தெரிந்தவர்கள், உறவினர்களில் கடன் வாங்காதவரேயில்லை. வீட்டுக்கு வருபவர்கள் அனைவரும் பாக்கி வசூல் செய்ய வருபவர்கள். உத்தியோகம் பிரச்சினை. கணவன் மனைவி உறவு எல்லா பிரச்சினைகளையும் கடந்து கடைசிநிலையில் மயிரிழையில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. இனி தொடர்வதா, இல்லையா என்பதே கேள்வி. குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது மனைவியின் கேள்வி. வீட்டிற்கு எப்படிப்போவது என்பது கணவன் நிலை. அன்னையை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். சம்பளம் இருமடங்காயிற்று. கொஞ்ச நாளைக்குப் பின் அதுவும் இருமடங்காயிற்று. கடன்கள் கரைந்து விட்டன. இனி கடனேயில்லை என்று நிம்மதியாகவும் மூச்சு இந்த வீட்டில் விடமுடிந்தது. பிள்ளைகள் படிப்பில் இருந்த குறை இப்பொழுதில்லை. கணவனும், மனைவியும் அந்நியோன்யமாகி விட்டனர். மனைவியிடம் தான் தினமும் சண்டை போட்டது மாறி மனைவியை எவரேனும் குறைசொன்னால் கணவன் மனம் நொந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. கணவனும் மனைவியும் பிரிவதேயில்லை. எல்லாப் பிரச்சினைகளும், பழைய நிலையிலிருந்த அனைத்துப் பிரச்சினைகளையும் இப்பொழுது காணோம். இப்பொழுதுள்ள உயர்ந்த நிலையில் வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றில் சில தீர்வடைகின்றன. சில தீர மறுக்கின்றன என்ற நிலையுள்ளது. நாம் வாழ்வில் சில நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம்.

படித்த உத்தியோகத்திலுள்ள வரன்களை மறுத்துவிட்டு, படிக்காத வசதியில்லாத தன் தம்பியை மணந்துகொள்ள வேண்டும் என்று மகளை வற்புறுத்தி திருமணம் முடிக்கும் தாயார் உண்டு.

கல்லூரி பிரின்ஸ்பால் மகன் பட்டப்படிப்பை திறமையிருந்தும் முடிக்க மறுப்பதுண்டு.

1960-ல் சர்க்கார் உத்தியோகஸ்தர் தன் மனைவிக்கு வந்த சர்மவியாதியைக் குணப்படுத்த டாக்டர் ரத்தம் கொடுக்க வேண்டும் என்ற பொழுது அது பிறர் இரத்தம் என்பதால் மறுத்து இன்றுவரை அப்பெண்மணி வியாதியால் துன்பமடைகிறார்.

தொழில் அதிபர்கள் தங்களுடைய எதிரிகளான அரசியல்வாதிகள் உதவுவார்கள் என்ற தவறான கருத்தில் அவர்களுக்குப் பண உதவிசெய்து அதனால் சிரமப்படுகிறார்கள்.

ஊழல் நிறைந்த மானேஜரைப்பற்றி தெரிந்து கொண்ட பின்னும் முதலாளிகள் வேறு காரணங்களுக்காக அவர்களை விலக்க மறுத்து, நஷ்டமடைகிறார்கள்.

உயர்ந்த விஞ்ஞானிகளின் படிக்காத மனைவிகள் அயல்நாடு போக கணவனை அனுமதிக்காததால் தன்னைப் போன்றவர்கள் துணை வேந்தராகவும், உலகப்புகழ் பெறும்பொழுது, தான் பேராசிரியராக இருக்கவேண்டியிருக்கிறது.

பெரிய படிப்பிருந்தாலும் தன் அபிப்பிராயங்களுடன் மோதும் விஷயங்களில் மனிதன் அறிவில்லாமல் செயல்படுவதுண்டு. அதேபோல் குணத்தைத் தொடும் விஷயங்களிலும் மனிதன் நிதானமாக நடந்து கொள்வதில்லை. அதில் பிடிவாதம் ஏற்படுவதும் உண்டு. தன் சூழ்நிலையை அறியாமல் கண்மூடித்தனமாக செயல்படுவது மனித குணத்தின் சிறப்பு அம்சம். ஒரு காரியம் 20 முறை தவறினாலும் 50 முறை பக்கவில்லை என்றாலும் அடுத்த முறையும் செய்பவர்களுண்டு. காரியத்தின் காரணத்தைப் புரிந்துகொள்பவர்கள் குறைவு. ஒன்றைச் செய்தால், மற்றொன்று புறப்படுகிறது. அதனால் அவற்றுக்குத் தொடர்புண்டு என்று கண்டு கொள்பவர் மிகச் சிலர். அதே போன்ற நிகழ்ச்சிகளில் பக்தர்களும் தன்னையறியாமல் செயல்படுவதுண்டு. சில உதாரணங்களை எழுதுகிறேன்.

சம்பளத்தை மட்டும் நம்பி வாழும் உயர் அதிகாரி தன் சம்பளத்தைப் போல் 40 மடங்கு கடன் வாங்கிவிட்டார். வருமானத்திற்கு மேல் செலவு செய்யக்கூடாது என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை! அதே நிலையிலுள்ள மற்றொருவர் அவரையும் மிஞ்சிவிட்டார். தன் சம்பளத்தைப் போல் 70 மடங்கு கடன் வாங்கிவிட்டார். இதற்கெல்லாம் வாழ்க்கையில் தீர்வில்லை. தன் தவற்றை உணர்ந்தபின், அன்னையிடம் தீர்வில்லாத விஷயமில்லை. மேற்சொன்னவர்களில் ஒருவர் அதுபோல் தன் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டார்.

அன்னைக்கு வேண்டிக் கொண்டால், அது புனிதமான ஆன்மிக சக்தியை நம்முள்ளும், நம் சூழலும் கொணரும். அது பலிக்கத் தூய்மையான சூழல் தேவை. இருப்பிடம் சுத்தமாகவும், உணர்வுகள் தெளிந்து தூய்மையாகவும் இருந்தால் அன்னையின் சக்தி தடையின்றி செயல்படும்.

Ph.D. படித்துக்கொண்டிருந்த மாணவர், தன் பிரச்சினை ஒன்று தீர blessing packet பிரசாதம் பெற்றுக்கொண்டார். அதனால் பலன் ஏற்படவில்லை எனக் குறைப்பட்டார். அவர் வீட்டையும், துணிமணிகளையும் சுத்தமாக வைக்கவேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. அதைச் சுட்டிக்காட்டியபின் வீட்டைப் பெருக்கி, மெழுகி, துணிமணிகளைத் துவைத்த அன்றே பிரசாதம் பலன் கொடுத்தது. அழுக்குள்ள இடத்தில் அன்னையால் செயல்பட முடியாது.

சிறு தேவதைகள் சுமார் நூறு பிரிவானவை, அவற்றின் உட்பிரிவுகளை எண்ணினால் ஆயிரத்திற்கு மேலாகும். குடு குடுப்பைக்காரன் அடுத்த மாதம் நடப்பதை யட்சிணியிடம் கேட்டுச் சொல்கிறான். அது முதல் நிலையானால் உச்ச கட்டத்தில் அவை உலக யுத்தத்தைக் கிளப்புகின்றன. சித்து விளையாடுபவர்களுக்கு அவை உதவும். பொருள்களை மறையச் செய்யும். திடீரென உற்பத்தி செய்யும், பார்ப்பவர்களுக்கு அவை அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். என்றாலும் அவை சிறு தேவதைகளே. ஆன்மிகத்திற்கு எதிரானவை. அவை உள்ள இடத்தில், அவற்றை வணங்குபவர் வாழ்வில் அன்னையின் ஆன்மிக சக்தி ஒரு சிறு அளவே செயல்படும். குறிசொல்லுமிடம், சித்து விளையாடுபவர்கள் ஆன்மிகத்திற்குப் புறம்பானவர்கள். உண்மையான பக்தர்கள், ஆசார சீலர்கள், ஞானத்தை நாடுபவர்கள், ஆன்மிக வழிபாட்டில் ஈடுபாடுள்ளவர்கள் இதுபோன்ற சிறு தேவதை வழிபாட்டில் தொடர்பு கொள்வதில்லை. அதிகமாகப் படித்து, உயர்ந்த வேலையிலுள்ள பெண்மணி அன்னை பக்தராகி நல்வாழ்வு வாழும் பொழுது ஒரு சாமியார் மற்றொருவர் மூலம் இப்பெண்மணியை வரவழைத்து, ஆகாயத்திருந்து ஒரு பொருளை வரவழைத்துக் கொடுத்தார். அன்றிலிருந்து அண்ணனுக்குப் பிரச்சினை, தம்பிக்குத் தொந்தரவு, தங்கையின் வாழ்வில் புயல் என்று ஏராளமான பிரச்சினைகள் கிளம்பின. அவருடைய தொடர்புள்ளவரை அப்பிரச்சினைகளும் தொடர்ந்தன.

சிறுதேவதைகளைத் தொழ ஆரம்பித்தால், அவற்றின் பிடியிலிருந்து விலக அவை அனுமதிப்பதில்லை. விலக முயன்றால், அவை தொந்தரவு செய்யும். தெய்வங்களுக்கு அந்தக் குணம் கிடையாது. ஒரு தெய்வத்தை விட்டு மற்ற மதத்தின் மூலம் வேறு தெய்வத்தைத் தொழ ஆரம்பித்தால் அதுபோன்ற சிரமம் ஏற்படுவதில்லை. சமாதி தரிசனத்திற்கு வந்து போனவர்கள், ஆசிரம தரிசனத்திற்கு வந்து வீடு திரும்பினால், தவறாது நல்ல செய்தி காத்திருக்கும் என்பது பக்தர்களுடைய அனுபவம். வீட்டில் சிறு தேவதைகளிருந்தால் அவர்களை நிம்மதியாகத் திரும்ப அனுமதிக்காது. ஆசிரமத்திலிருந்து திரும்பி வந்தால் அதுபோன்ற பக்தர்களுக்கு கெட்ட செய்தி காத்திருக்கும், அல்லது சீக்கிரத்தில் நிகழும். மீண்டும் மீண்டும் அது போன்ற நிகழ்ச்சிகள் பக்தர்களைச் சிந்திக்க வைப்பதுண்டு. சிலருக்குக் காரணம் புரிவதும் உண்டு. பலர் அதைக் கருதுவதில்லை. வேறு காரணம் காட்டி விளங்கிக் கொள்வார்கள். அவர்களுக்கு அன்னையிடம் செய்யும் பிரார்த்தனை பலிக்குமா? அவர்களுடைய பிரச்சினை தீரும் என எதிர்பார்ப்பது சரியா? சூழல் கறை பட்டிருக்கும்பொழுது, தங்கள் போக்கை மாற்ற விரும்பாதவர்களுக்குப் பிரார்த்தனை பலன் தருமா? பலன் கிடைத்தாலும் முழுப்பலன் கிடைக்குமா? அருளை அழிக்கும் செயலை விரும்பிச் செய்த பின், அருள் பலன் தரவில்லை என்று எப்படிச் சொல்வது? சிறு தேவதைகள் இருளில் பிறந்தவை. அவை அருளுக்கு நேர் எதிரி.

ஆழ்ந்த பக்தியுள்ள பெண்மணி அன்னையைத் தொழ ஆரம்பித்தபொழுது அருள் பொருளைக் கொடுக்கும் என்பதை முழுவதும் அறிவதற்கு முன், அவர் வருமானம் நான்கு மடங்கு உயர்ந்தது. தனக்குக் கிடைத்த உபரிவருமானம் முழுவதும் ஆசிரம புத்தகங்கள், படங்கள் வாங்குவதில் செலவிட்டார். புத்தகங்களும் படமும் உயர்ந்தவை. எதற்கும் ஒருவரையறை உண்டு. எல்லையைத் தாண்டினால் நல்ல செயல், நல்லதாக இருக்காது. மேலும் தொடர்ந்தால், நல்ல செயல் கெட்ட செயலாகவும் மாறும். தன் போன்றவர்க்கு வரும் வாய்ப்புகள் தனக்கு ஏன் வரவில்லை என்ற யோசனைக்கு அவருக்குப் பதில் கிடைக்கவில்லை. அறிவுக்குப் பொருத்தமில்லாத காரியத்தைச் செய்வதை நிறுத்தினால் அருள் பலிக்கும். அறிவின் மூலம் அன்னை சிறப்பாகச் செயல்படுவார். பிடிவாதம் அளவை மீறினால் நல்லதைக் கெட்டதாக மாற்றும். உண்மையான பக்தியும், அர்த்தமற்ற போக்கால் (insincere) உண்மையற்றதாகும்.

பாசம் உயர்ந்தது. எனினும் பிரச்சினை என்றால் பாசம் கண்ணை மறைக்கும். நம் சொந்தக் குறைகள் நமக்குத் தெரிவதில்லை. நம் மனைவி அல்லது கணவன் குறை நம் கண்ணில் படாது. குழந்தைகளுடைய குறை பெற்றோருக்குத் தெரிவதில்லை. குறையைக் காணமுடியாத மனநிலை அருளுக்குத் தடையானது. அப்படிப்பட்டவருக்கு பிரச்சினைகள் தீருவதில்லை. குறிப்பாக இந்தக் குறையால் ஏற்பட்ட பிரச்சினை தீருவதில்லை. அவை தீர்க்கமுடியாதவையில்லை.

மனம் எதிர்பார்க்கும் தன்மையுடையது. படபடக்கும் இயற்கையுடையது. அவை நோய் குணமாவதைத் தடுக்கும். தன் பிரார்த்தனையால் தன் நீண்டநாள் நோய் குணமடைந்து வருவதைக் கண்ட பக்தருக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. நாளை காலை நான் எழுந்தவுடன் நோய் மாயமாய் மறைந்து நான் விடுதலையடைய வேண்டும் என்று நினைக்கின்றார். இது இயற்கை. இதுவே மனம் செயல்படும் விதம். மனமே நோயின் அஸ்திவாரம். ஓரளவு குணத்தைக் கண்டவுடன் மனம் எதிர்பார்க்க ஆரம்பிக்கின்றது. மனம் எதிர்பார்க்கும்பொழுது நாமும் அத்துடன் சேர்ந்துகொண்டு கற்பனைக்கு ஜீவனத்தால் அது மனத்தை வலுப்படுத்துவதாகும். நோய்க்கு அஸ்திவாரமான மனத்தைத் தூண்டினால், மறுநாள் காலையில் எழுந்தவுடன் நோய் அதிகரித்திருப்பது தெரியும். எண்ணம் மனத்தை நாடினால் நோய் அதிகமாகும். நோயைவிட்டு அகன்று மனம் அன்னையை நாடினால் மனம் அமைதியுறும். நோய் குறையும். நோய் குறைய ஆரம்பித்தவுடன் அன்னை நினைவை அதிகப்படுத்திக் கொண்டும், நன்றியறிதலுடன் அன்னையை நினைத்தால் மனம் நிறைவுறும். அதனால் நோய் தீரும். இருந்தாலும் மனம் நோயைக் கருதினால் வேறு பக்கம் மனத்தைத் திருப்ப முயல வேண்டும். சிறு தேவதைகளைத் தொழும் வீட்டிலும், அவர்கள் படம், சிலையுள்ள இடங்களில் சூழல் கறைபட்டிருக்கும். கொச்சையான பாஷையில் கூறுவதானால் தீட்டுப்பட்டிருக்கும். அங்கு மனம் நோயை அதிகமாக நாடும். குப்பை, அழுக்கு மலிந்த இடத்திலும் மனம் நோயை நாடும். மனம் நோயை அதிகமாக சிந்தித்தால், குணம் தள்ளிப் போகும்.

குப்பை நிறைந்த வீட்டைச் சுத்தம் செய்யும் வரை, சிறு தேவதைகளை விட்டு அகலும் வரை, தன் அறிவில்லாத பிடிவாதத்தை விட்டொழிக்கும் வரை, இவர்களுடைய பிரச்சினை தீராது. வந்த வாய்ப்பு பலிக்காது. அவை பலிக்காத வாய்ப்பாகாது, தீராத பிரச்சினை ஆகாது.

தீராத பிரச்சினையுள்ள அன்னை பக்தர்களிடம் இது போன்ற குணம், செயல், போக்கு ஒன்றிருக்கும். அதை விட்டுவிட அவர்கள் முன்வராமல், அன்னை என் பிரச்சினையைத் தீர்க்கவில்லையே என்பது சரியாகாது. அருள் எந்தப் பிரச்சினையையும் தீர்க்கும். எந்த வகையிலும் நாம் அதற்குத் தடையாக இருத்தலாகாது.

இதற்கெல்லாம் தாண்டிய நிலையில் மனம் வேறொன்றையும் நினைப்பதுண்டு. என் வீடு சுத்தமில்லா விட்டால், நீதான் அந்த சுத்தத்தை எனக்களிக்கவேண்டும் என்று இறைவனை மனம் கேட்கத் தோன்றும். ஒரு வகையில் இதைவிட உயர்ந்த பக்தியில்லை. மற்றொரு வகையில் இது சிறுபிள்ளைத்தனம்.

நான் என்னை உனக்கே அர்ப்பணம் செய்த அன்றே என் ஆவியையும், உடலையும், உடமையையும் நீ ஆட்கொண்டாயல்லவா? இன்று எனக்கு ஒரு பாரம் உண்டோ? நன்றே செய்வாய், பிழை செய்வாய், நானோ அதற்கு நாயகமே என்று நாயன்மார் பாடினார். இறைவன் அவருடைய ஆன்மா மூலம் செயல்படுவதால், பாரம் இறைவனுக்கே, தனக்கில்லை என்கிறார் நாயன்மார். நாயன்மாருடைய நிலை உயர்ந்தது. உயர்ந்ததினும் உயர்ந்தது. தன்னைக் கொன்றவன் உயிரைக் காப்பாற்ற உத்தரவிட்டார் ஒருவர். தன் பிள்ளையை கறி சமைத்துத் தந்தவர் அடுத்தவர். மனைவியையும் சிவனடியாருக்குக் காணிக்கையாக அளித்தவர் மற்றொருவர். அவர்கள் மனநிலை நமக்கிருந்தால், நமக்குப் பிரச்சினை வராது. வந்தால் அதையும் நீயேதான் தர வேண்டும் என்றால் இறைவன் அதையும் அளிப்பார். நம்மைச் சற்று மதிக்கவில்லை என்று சண்டைக்குப் போகும் மனநிலையுடையவரும், பஸ் பிடிக்க முயன்றால் டென்ஷன் வருபவரும், வாய் ஓயாது தன் பெருமையைப் பேசுபவரும், மனதால் தன் உயர்வைக் கருதுபவரும், நாயன்மார் பாஷையை ஆயிரம் முறை அன்னையிடம் பேசியதைக் கேட்டு அன்னை "அருள் அதுபோல் செயல்படும் என எதிர்பார்ப்பது அறிவுடைமையல்ல'' என்று சொல்லியிருக்கிறார்.

அது போன்று பூரண சரணாகதியடைந்த பக்தர் வீடு தானே சுத்தமாக அமையும். சுத்தத்தில் அங்கு குறை வராது. எப்படி சுத்தம் குடிகொள்கிறது என்பதை பக்தர் அறியுமுன் தானே சுத்தத்திற்குள்ள சூழ்நிலை ஏற்படும். அதையும் தாண்டிய நிலையுண்டு. எவ்வளவு அசுத்தமாக இருந்தாலும், இறைவனும், அன்னையும் அங்கு விருப்பமுடன் வந்து விலகாமல் தங்கி விடுவார்கள். ஏனென்றால் அசுத்தத்தை இறைவனாகக் கருதும் மனநிலை பக்தருக்கு வந்து விட்டது என்பதை அன்னை ஏற்றுக்கொள்வார்.

தன் அகந்தையை மட்டும் சரணாகதியால் சமர்ப்பணம் செய்தவரே அதையும் நீதான் செய்யவேண்டும் எனலாம்.

தான்' அழியும்வரை முயற்சி வேண்டும். தான்' அழிந்தால் அங்கு அன்னை தோன்றி நம் கடமையைத் தானே ஏற்றுக் கொள்வார். தான்' எனும் அகந்தை அழியுமுன், சரணாகதியடைந்த ஆத்மாவின் பாஷையைப் பேசுவது மனித இயல்பு. அதைப் பேசும் முன் மனத்தால் சரணாகதியை மேற்கொண்டு வாழ்வில் அதைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அன்னையின் அருளுக்கு எல்லையில்லை. நாமே அதற்குத் தடை ஏற்படுத்தி விட்டு, அருளுக்கும் எல்லையுண்டு என்று நினைப்பது சரியில்லை.

* * *book | by Dr. Radut