Skip to Content

15. வாய்ப்பைத் தரும் சூழ்நிலை

வாய்ப்பு அரிது. எல்லோருக்கும் கிடைக்காதது, சிலருக்குக் கிடைக்கின்றது, அதைச் சுட்டிக் காட்டும் வாக்கு, நாயாகப் பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும்' என்பது. பிறந்த நேரம் பெரிய வாய்ப்பை மனிதனுக்கு அதிர்ஷ்டமாகத் தருகிறது என்பதை உலகம் அறியும். வாய்ப்பு மனிதனுக்கு வரும் உருவங்களையும், அவற்றின் தன்மைகளையும் விளக்கி ஆன்மிகத்திற்கும் வாய்ப்புக்கும் உள்ள தொடர்பை இக் கட்டுரை விளக்குகிறது. அத்துடன் அன்னைக்கும் வாய்ப்புக்கும் என்ன தொடர்பு, அன்னை பக்தர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் கட்டுரை விளக்குகிறது.

சாதாரண மனிதன் வாய்ப்பு கிடைத்தால் அதனால் பயன் அடைகிறான். அன்னை பக்தர்கள் தங்களுக்குத் தேவையான எந்த வாய்ப்பையும் உற்பத்தி செய்து பலன் பெறலாம் என்ற ஆன்மிக உண்மையுடன் கட்டுரை முடிகிறது.

இயற்கை வளம் சரித்திரம் முழுவதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. நாகரிகம் வளர்ந்தது நதிக்கரையில் என்பது சரித்திரம் நமக்குக் கூறுவது riverbed civilisations, மத்திய ஆசியாவில் நீர்வளம் நிறைந்த சமவெளிகளில் உயர்ந்த நாகரீகம் உற்பத்தியாகி, உலகுக்கு வழிகாட்டியாக அமைந்தது உலக மொழி ஆராய்ச்சி வல்லுநர்கள் எந்த மொழியின் பிறப்பையும் ஆராயும் பொழுது அது Indo-European இந்தோ - ஐரோப்பிய மொழிகளைச் சார்ந்தது என்று காண்கின்றனர். இந்த மொழிகளின் பிறப்பிடம் மத்திய ஆசிய நதி தீரங்கள். உலகப்பெருமதங்களில் இரண்டு அங்கே உற்பத்தியானவை. இஸ்லாம், கிருத்துவமதம் அங்கே உண்டானவை. நதித் தீரமானதால், நீர்வளம் நிறைந்தது, அதனால் பொருள் பெருகி, அதன் காரணமாக மனம் விசாலமடைந்து, மொழி உற்பத்தியாகி, இறைவனை நினைந்து ஆன்மிக விளக்கம் பெற்று, மதவழிபாடு ஏற்படுகிறது என்பது விளக்கம். இதற்கெல்லாம் அடிப்படையான சூழ்நிலை நதி, அதிலுள்ள நீர் வளம், நீர்வளம் வாய்ப்பாக அமைந்து, நாகரிகம் தழைத்து, ஆன்மீகம் பெருகி உலகெங்கும் பரவியது என்பது வரலாறு.

15 ஆம் நூற்றாண்டு வரை இங்கிலாந்தை ஏழைநாடு என்று ஐரோப்பியர்கள் கருதினர். பிரான்சு மக்கள் விலையுயர்ந்த (Wine) திராட்சைரசம் சாப்பிடும்பொழுது, ஆங்கிலேயர்கள் மற்றவர்கள் தொடாத மலிவான பீர் (beer) சாப்பிட்டனர் என்று கேலி செய்வார்கள். இங்கிலாந்து சுதந்திரத்துடன் அதிக நாளிருந்ததில்லை. நார்வே முதலில் இங்கிலாந்தை ஆண்டது. பின்னர் ரோமாபுரி படை எடுத்து இங்கிலாந்தை வென்றது. அதன் பின் ஜெர்மானிய ஆதிக்கத்திலிருந்தது. பிறகு பிரான்சு இங்கிலாந்தை ஆட்சி செலுத்தியது.

ஐரோப்பா பெரியகண்டம். மற்ற நாடுகள், அளவில் பெரியவை. இங்கிலாந்து அளவில் சிறியது; தீவு. அதனால் எதிரிகள் எந்த நேரமும் அதை ஆக்கிரமிக்க முடிகிறது. எனவே, இத்தனை ஆக்கிரமிப்புக்குப் பின் இங்கிலாந்து மக்கள் தங்களை வலுப்படுத்திக் கொள்ள முனைந்தனர். கடற்படையால் மட்டுமே நாட்டைக் காக்க முடியும் என்பதால் கடற்படையை வலுப்படுத்தி, நாட்டைக் காத்தனர். கடற்படை பலம் அதிகரித்ததால், வியாபாரம் செய்தனர். வியாபாரத்திற்காக உலகெங்கும் சென்றனர். வியாபாரத்தைக் காப்பாற்ற சாம்ராஜ்யத்தை நிறுவினர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகெங்கும் பரவியது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்ற நிலை ஏற்பட்டது. பிரிட்டன் ஏற்படுத்திய அளவு பெரிய சாம்ராஜ்யம் இதுவரை உலகு கண்டதில்லை. இவ்வளவுக்கும் காரணமாக இருந்தது ஒரு வாய்ப்பு. நாடு தீவாக இருந்ததால், கடல் கடந்து செல்வது அவர்களுக்குள்ள வழக்கமாகவும், வாய்ப்பாகவும் அமைந்தது. அந்த வாய்ப்பை அவர்கள் பாராட்டியதின் மூலம் உலகப் பெருராஜ்யத்தை ஏற்படுத்த முடிந்தது. ஐரோப்பாவிலுள்ள பல நாடுகள் இங்கிலாந்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஆண்டன. அவற்றால் அது போன்ற சாம்ராஜ்யம் ஏற்படுத்த முடியவில்லை. அவர்களுக்கு அடிமையாக இருந்த பிரிட்டனால் அதைச் சாதிக்க முடிந்தது. இதற்கு அடிப்படையான வாய்ப்பாக இருந்தது கடற்கரை; நாடு தீவாக இருந்ததேயாகும்.

இந்தியாவின் பெரு நகரங்கள் மூன்று: பம்பாய், கல்கத்தா, டெல்லி. இந்தியாவில் வசூலாகும் income tax வருமான வரியில் பாதி, பம்பாய் ஒரு நகரத்தில் வசூலாகிறது. Bombay is the financial capital of India. பம்பாய் இந்தியாவின் வருமானத்திற்குத் தலைநகர் என்று பேர் வாங்கியுள்ளது. அவ்வளவு பெரிய சாதனை எப்படி முடிந்தது என்று பார்த்தால், பம்பாயில் தொழில் அளவுகடந்து பெருகியதே அதற்குரிய காரணம். மேல் நாடுகளிலிருந்து வரும் கப்பல்களுக்கு துறைமுக வசதி தேவை. கல்கத்தா சிறந்த துறைமுகம் என்றாலும், மேல் நாடுகளிலிருந்து வரும் கப்பல்களுக்கு அது அதிகதூரம். எனவே மேற்குக் கடற்கரைத் துறைமுகம் அவர்களுக்கு சௌகரியம். கொச்சி, பம்பாய் இரண்டும் இயற்கையாகத் துறைமுகமாக அமையும் வாய்ப்புடையவை. கொச்சி தென்பகுதியிருப்பதால், அங்கிருந்து வடநாடு செல்வதைவிட, பம்பாய் நாட்டின் எல்லா பகுதிக்கும் அருகாமையில் இருப்பது சௌகரியம். இந்த வாய்ப்பால் துறைமுகம் வளர்ந்தது. அதனால் வணிகம் பெருகியது. அதனால் செல்வம் பெருகியது. இயற்கையான துறைமுக வசதி ஒரு பெருவாய்ப்பாக அமைந்ததால், இந்தியாவின் செல்வத்தில் பாதி இன்று பம்பாயிலிருக்கின்றது. ஒரு வாய்ப்பு, ஒரு நகரத்திற்கு நாட்டின் பாதி செல்வாக்கை அளித்தது. இதுவே வாய்ப்பின் தன்மை. கொச்சி அதே போல் பெருநகரமாகி வளம் கொழிப்பதற்கு காரணம் அங்கு அமைந்துள்ள துறைமுகம். சென்னைக்கு இல்லாத ஒரு வாய்ப்பு அது. பம்பாயிலிருந்து சென்னை வருபவர்கள் சென்னையை மிகச் சிறு இடமாகக் கருதுவதுண்டு. இந்தத் துறைமுக வசதி மற்ற பெரு நகரங்களுக்கில்லை.

1911 வரை கல்கத்தா இந்தியாவின் தலைநகராக இருந்தது. 1911லிருந்து இன்று வரை டெல்லி தலைநகராக இருப்பதால் அன்று கவர்னர் ஜெனரலும், பிறகு வைஸ்ராயும், இன்று ராஷ்டிரபதியும், பிரதம மந்திரியும் தலைநகரில் வசிக்கின்றார்கள். அதனால் பார்லிமெண்ட் அங்கிருக்கிறது. அரசும், அரசியல் அதிகாரமும், தலைநகரில் இருப்பதால் எல்லா உத்தரவும் பெற மக்கள் தலைநகரை நாடவேண்டியிருப்பதால், தலைநகர் செழிப்பாகிறது.

இருநூறு ஆண்டுகட்கு முன் சென்னப்பட்டணம் இருந்த இடம் தெரியாது. தமிழ் நாட்டு வரலாற்றுக்குரிய பெரு நகரங்கள் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, காஞ்சிபுரம் ஆகியவை. சென்னப்பட்டணம் தமிழ் சரித்திரத்தில் இடம் பெறாத இடம். சென்னை இராஜதானிக்கு சென்னப்பட்டணம் தலைநகராயிற்று. அங்கு கவர்னர் வந்தார். முதல் மந்திரி ஏற்பட்டார். சட்டசபை உண்டாயிற்று. ஹைகோர்ட் வந்தது. தலை நகருக்குரிய செல்வாக்கேற்பட்டது. அதனால் செல்வம் பெருகியது. இன்று சென்னை நகரின் ஜனத்தொகை 50 இலட்சத்தை எட்டுகிறது. இது தலைநகரின் தன்மை. இந்த வாய்ப்பால் காடாக இருந்த இடங்கள் நாடாக மாறி, நிலம் மனையாகி, சதுரஅடி என்ன விலை என்று கேட்கும் அளவில் நிலைமை மாறிவிட்டது. 1947ல் இந்த மாநிலத்தில் - 11 கல்லூரிகள் இருந்தன. இன்று சென்னை நகரில் மட்டும் 40 கல்லூரிகள் ஏற்பட்டுள்ளன. தலைநகர் தந்த வாய்ப்பு இது.

இன்று இந்தியாவில் முதன்முதலாக எழுத்தறிவின்மையை அழித்த பெருமை கேரளாவைச் சாரும். மற்ற எந்த மாநிலத்திற்கும் இல்லாத பெருமை இது. அந்த மாநில மக்களின் சொந்த முயற்சியால் ஏற்பட்டதல்ல. இதற்குரிய வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்ததே காரணம். 400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வந்திறங்கிய போர்ச்சுகீசிய வியாபாரிகளை அங்கிருந்த மிளகும் ஏலக்காயும் கவர்ந்தன. அவர்களுடன் கிருத்துவ பாதிரிமார்கள் வந்து பள்ளிகளை அமைத்தனர். கொச்சியே முதல் துறைமுகமானதால் அவர்கள் அங்கேயே இறங்கி, அங்கேயே தங்கினர். அதன் விளைவாக கல்வி ஏராளமாகப் பரவியது. அவர்களுக்குள் உள்ள போட்டியால் கல்வி அதிவிரைவாகவும் பரவியது. அதனால் இன்று illiteracy அறியாமை மறைந்தது. இமயமலையில் எங்கோ ஒரு மூலையிலுள்ள சிறு கிராமத்திற்குப் போனவர், அங்கு ஒருவர் கேரளாவிலிருந்து வந்து வியாபாரம் செய்வதாகக் கண்டார். உலகெங்கும் கேரள மக்கள் பெருவாரியாகப் பரவியுள்ளதற்கு காரணம் அவர்கள் பெற்ற கல்வியாகும். அக்கல்வி அவர்கள் சொந்த முயற்சியால் பெற்றதல்ல. அங்கு வந்து குடியேறிய பாதிரிமார்களால் ஏற்பட்டதே. இந்த வாய்ப்பு அந்த மாறுதலைக் கொணர்ந்தது.

மேற்குக் கடற்கரையிருப்பதாலும், அதிக அளவு கல்வி பெற்றிருப்பதாலும் துபாய், சவூதி அரேபியா போன்ற மத்திய ஆசிய நாடுகளுக்கு கேரள மக்கள் பெருவாரியாகப் போனார்கள். அங்கிருந்து வருஷம் தோறும் 400 கோடி ரூபாய் கேரளாவுக்கு வருகிறது. அதனால் வாழ்வுவளம் பெற்று விட்டது. இதெற்கெல்லாம் அடிப்படையான காரணமாக இருந்த வாய்ப்பு, அவர்கள் பெற்ற கல்வி.

கேரளாவிலிருந்து இன்று மத்திய ஆசிய நாடுகளுக்குப் போவதைப் போல், கடந்த நூறு ஆண்டுகளாக குஜராத்திலிருந்து கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு குஜராத்திகள் சென்று வியாபாரம் செய்தனர். மகாத்மா காந்தி அது போல் ஆப்பிரிக்கா சென்றவர்தான். பம்பாய் துறைமுகமாக இருந்ததால், ஆப்பிரிக்கா போக ஒரு வசதியிருந்ததால், குஜராத் மாநிலத்தில் இன்று வியாபாரிகள் பெருகி, நாட்டில் அதிகச் செல்வமுடைய மாநிலமாக அது இருக்கின்றது. கடல் கடந்து வாணிகம் செய்யும் வாய்ப்பு அது.

பாரத ரத்தினம் பெற்ற விஸ்வேஸ்வரய்யா மைசூர் திவானாக இருந்தார். அவர் இன்ஜீனியர். 104 ஆண்டு வாழ்ந்தவர். அவர் இறப்பதற்கு முன் வாரம் Collins dictionary காலின்ஸ் டிக்ஷனரியின் புதுப்பதிப்பு வெளியானதை அவர் வாங்கிப் படித்துக்கொண்டிருந்தார். 104ம் வயதிலும் கூர்மையான பார்வையும், அறிவும் உடையவர். திருமணமானவரானாலும், மனைவியுடன் வாழாமல் பிரம்மச்சாரியாகவே இருந்தவர். நாட்டின் தொழில் அபிவிருத்தியில் நாட்டம் கொண்டவர்.

இன்று பெங்களுர் industrial city தொழில் நிறைந்த நகரமாக இருப்பதற்கு இவரே காரணம். இவர் இறந்த பொழுது இவருடைய சவ ஊர்வலம் மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. ஊர்வலத்தை நிறுத்தி ஆங்காங்கு அவருடல் மீது மலர்வளையம் வைப்பதால் நாழியாகிக் கொண்டிருந்தது. முக்கியமான இடங்களில் மட்டும் நிறுத்தினால் போதும், மலர் வளையம் இருக்குமிடமெல்லாம் நிறுத்த வேண்டாம் என்று மேலிட உத்தரவு வந்த பொழுது, விஸ்வேஸ்வரய்யா நிறுவிய ஸ்தாபனங்களில் மட்டுமே ஊர்வலம் நிற்பதாக பதில் வந்தது. பத்தடிக்கு ஒரு நிறுவனம் பங்களூரில் அவர் ஸ்தாபித்தது. அவருடைய படமில்லாத இடங்களை அவ்வூரில் பார்ப்பது அரிது. விஸ்வேஸ்வரய்யா மைசூரில் தொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று நினைத்தது மைசூருக்கு ஒரு வாய்ப்பு. அதனால் இன்று பங்களூர் தொழில் நகரமாகியிருக்கிறது.

1950ல் தமிழ் நாட்டிலுள்ள தொழில்களில் மூன்றில் ஒரு பகுதி நாட்டுக் கோட்டை செட்டிமார் கையிலிருந்ததாகச் செய்தி. நாட்டுக்கோட்டை செட்டிமாருடைய மொத்த ஜனத்தொகை அன்று 1½ லட்சம். 3 கோடி ஜனத்தொகையுள்ள தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி தொழிலை ஒன்றரை லட்சம் ஜனத் தொகையுள்ள செட்டிமார் பெற்றது எப்படி? அவர்கள் குடும்பங்களில் அன்று ஒரு பழக்கம் இருந்தது. எவ்வளவு பணக்காரனானாலும் தன் பிள்ளைகளை மற்றவர்கள் கடைகளில் விட்டுப் பயிற்சி கொடுப்பது வழக்கம். முதல் பயிற்சி முடிந்தால் பையன் அரைக்கால் ஆள் ஆகிறான். அதிலிருந்து 8 கட்டம் தாண்டி முழு ஆளான பின் தன் சொந்தக்கடைக்கு வருகிறான். பிறரிடம் வேலை செய்வதால், செல்லம் கொடுக்க வழியில்லை. பயிற்சியில் எல்லா கட்டங்களும் உண்டு. பணம், பொருள், நிர்வாகம், கீழ்ப்படிதல், கணக்கு, வாடிக்கை, கொள்முதல் என எல்லாப் பகுதிகளுக்கும் பயிற்சியுண்டு. இது போன்ற முறையான பயிற்சியை தங்கள் நிறுவனத்தை விட்டு அகன்று பிள்ளைகள் பெற ஏற்பாடு செய்தது இந்தச் சமூகம் ஒன்றுதான். அவர்களுடைய ஸ்தாபனங்கள் திவாலாவதில்லை. அவர்கள் செல்வம் அளவு கடந்து பெருகியதற்கு இப்பயிற்சியை ஏற்றுக் கொண்டதே காரணம். அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது இப் பயிற்சியாகும்.

சென்னை வரும் பொழுதெல்லாம் நேரு பண்பும் நாகரிகமும் நிறைந்த சென்னைக்கு வருவதில் எனக்கு சந்தோஷம் என்பார். நாட்டின் எல்லா மாநிலங்களுக்கும் சென்றவர்களுக்கும், எல்லா மாநில மக்களுடன் பழகியவர்களுக்கும் நேரு சொல்லியதிலுள்ள உண்மை புரியும். தென்னிந்தியா உயர்ந்த நாகரிகமுடைய இடம். வட நாட்டிலிருந்து காசி சர்வ கலாசாலை M.Sc. மாணவர்கள் இருவர் இங்கு பிரயாணம் செய்தனர். ஹோட்டலில் சாப்பிட வந்தனர். சர்வர் அவர்கடம் வந்து Sir, What do you want, ஐயா உங்களுக்கு என்ன வேண்டும் என்று ஆங்கிலத்தில் கேட்டான். அவனுக்குப் பதில் சொல்லாமல் அருகே இருந்தவரை நோக்கி இது என்ன ஆச்சரியமாக இருக்கிறதே, மெட்ராஸில் சர்வர் கூட இங்கிலீஷ் பேசுகிறாரே, எங்கள் ஊரில் படித்தவர்கள் கூட இங்கிலீஷ் பேசுவதில்லை என்று கேட்டார். வடநாட்டில் 12வுடன் 8யைக் கூட்ட விரல் விடுவது வழக்கம். நம்மூர் பையன்கள் அந்தக் கடையிலிருந்தால் உடனே 20 என்று சொன்னால் அவர்கள் அவனை பெரிய புத்திசாலி எனக் கருதுவார்கள்.

அத்துவைதம், துவைதம், விசிஷ்டாத்துவைதம் ஆகிய மூன்றும் இந்நாட்டுப் பெருமதங்கள். அவற்றை ஸ்தாபித்தவர்கள் சங்கரர், மத்துவர், இராமானுஜராவர். அம்மூவரும் தென்னிந்தியாவில் பிறந்தவர்கள். நாயன்மார்கள் 63 பேர்; ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுக்குப் பின் வந்த மகான்கள் பலர். பட்டினத்தார், வள்ளலார், மகரிஷி போன்ற பலர் உதித்தனர். நாட்டில் 100 பேர் பெரிய சித்தி பெற்றவர்களானால், தமிழ் நாட்டில் மட்டும் சித்தி பெற்ற மகான்கள் 100 பேர் உண்டு.

மராட்டியர்களும், தமிழர்களும் நிதானமாக உட்கார்ந்து தத்துவம் பேசுவது போல் வங்காளியால் முடியாது என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர். வங்காளி உணர்ச்சி வசப்பட்டவன், அவனால் நிதானமாக தத்துவ விசாரம் செய்யமுடியாது என்று விளக்குகின்றார்.

இதுவரை சுதந்திரம் வந்தபின் எல்லா பிரதமர்களும் U.P. உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். தென்னிந்தியர்கள் ஜனாதிபதி ஆகலாம். பிரதமராக முடியாது என்று சஞ்சீவ ரெட்டி பேசினார். நரசிம்மராவ்தான் முதல் தென்னிந்தியப் பிரதமர்.

பிரிட்டிஷ் ராணுவத்திலும், இன்று நம் படையிலும் சீக்கியர்களுக்கு விசேஷ மரியாதை. வீரன் என்ற பெயர் எடுத்தவர்கள். சுதந்திர இயக்கத்தில் பகத்சிங் தூக்கு மேடைக்கு போன சமயம் சீக்கிய வீரர்கள் ஏராளமானவரை அந்தமானில் சிறைப்படுத்தினார்கள். கமகாட்டமரு என்ற கப்பல் நிறைய அவர்களை அழைத்துச் சென்றார்கள். அவர்களில் ஒருவர் 155 நாள் உண்ணாவிரதமிருந்தார்.

இந்தியாவினுடைய எதிரிகள் அனைவரும் கைபர் கணவாய் வழியாக உள்ளே வந்தவர்கள். அப்பகுதிகளிலிருப்பவர்கள் பக்கத்தில் வாளை வைத்துக் கொண்டு தூங்குவார்கள். எந்த நேரம் என்ன ஆபத்து வரும் என்று தெரியாது. நாடு அஸ்ஸாம் வரை கிழக்கிலும், சென்னை வரை தெற்கிலும் பரவியிருந்தாலும் இந்நாட்டின் உயிரைக் காப்பாற்ற எந்த நேரமும் போரிடும் நிலைமை மேற்கேயுள்ளவர்க்கே அமைந்தது. அதனால் பிஷாவரிலிருந்து டெல்லிவரை உள்ள மக்கள் தொடர்ந்து போரிட்டனர். அதனால் வீரம் மிக்கவரானார்கள். இன்றும் வீரர்களாகத் திகழ்கின்றனர். தன் உயிரையும், தன் நாட்டு உயிரையும் காப்பாற்றப் போரிடும் நிலையிலுள்ளவனுக்கு நிதானமாகச் சிந்திக்க முடியாது. சிந்தித்தால் போரிட முடியாது. கடந்த 1500 வருஷமாக இந்தியாவைக் காத்த பெருமை இம்மக்களுக்குரியது. அவர்கள் வீரம் பெரியது. தைரியம் சிறந்தது. 1000 வருஷமாக டெல்லியே தலைநகராக அமைந்தது. எனவே படையெடுப்பு டெல்லியை நோக்கி வந்தது. போர் முனையில் உள்ளவன் உயிரைக் கொடுத்துப் போரிட்டால், அவனுக்கு உத்தரவு போட தலைவர் தேவை. போர்முனையில் போரிட முடியும். தலைமைக்குரிய நிதானத்துடன் யோசனை புறப்படாது. போர் முனைக்குப் பின்னணியில் உள்ளவரே தலைமை தாங்குவார்கள். உத்தரப்பிரதேசம் அந்த இடத்தில் அமைந்துள்ளதால், நாட்டின் தலைவர்கள் அங்கிருந்து எழுகின்றார்கள். Leadership தலைமை அவனுக்கு இயல்பானது.

1000 மைலுக்கப்பால் சண்டை நடக்கின்றது என்றால் தென்னிந்தியாவில் நாம் நிதானமாக வாழ முடியும். மூன்று பக்கமும் கடலிருப்பதால் எதிரிகளில்லை. வடநாட்டுக்கு வரும் எதிரியை அங்குள்ளவர் சமாளித்துக் கொள்வதால், வடநாட்டில் போர் மூண்டதுபோல் தென்னாட்டில் எல்லைக்கு ஆபத்தில்லை. ஆபத்தில்லாத இடத்தில் அமைதியுண்டு. அமைதியில் சிந்தனை தெளிவுறும். சிந்தனை சிறந்தால் தத்துவம் பிறக்கும். நாட்டின் எல்லா பெரிய தத்துவங்களும் காலடியிலும், காஞ்சீபுரத்திலும் உற்பத்தியானதில் வியப்பில்லை.

பஞ்சாபிலுள்ளவர்க்கு போரிடும் வாய்ப்பு, உத்தரப்பிரதேசத்திலுள்ளவர்க்கு தலைமை தாங்கும் வாய்ப்பு, நமக்குச் சிந்திக்கும் வாய்ப்பு இந்த வாய்ப்புகள் பூகோள அமைப்பால் சரித்திரம் நமக்கு வழங்குகிறது. இதுவே வாய்ப்பின் சரித்திரம்.

வங்காளம் டெல்டா பகுதி, அளவு கடந்த நீர்வளம் அபரிமிதமான பகுதி. கங்கை பாயும் இடம். அதற்கடுத்த பர்மாவில் நெல் வயல் 4 அடி தண்ணீர் நிற்கும். படகில் சென்று அறுவடை செய்வார்கள். நீர்வளம் பெருகியதால் அளவு கடந்த பொருள் வளமுண்டு. பொருள் நிறைந்த ஊரில் மக்கள் மனவளம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். உள்ளம் செழித்திருப்பதால் சிந்தனை உற்பத்தியாகுமுன், உணர்ச்சி மேலிடும். நீர்வளம் மிகுந்த பகுதிகளுக்குரிய இலட்சணம் இது. அதனால் வங்காளிகள் உணர்ச்சி வசப்படுவது எளிது. நிதானமாகச் சிந்திக்கும் திறன் அதுபோன்ற இடங்களில் எளிதில் உற்பத்தியாவதில்லை. செல்வ வளம் பெருகியதின் சிறப்பு இது.

ஓட்டை உடைசல் பொருள்களை உற்பத்தி செய்த நாடு ஜப்பான். இன்று உலகப் பெருநாடாக வணிகத்தில் பெயர் வாங்கி, நீண்டநாள் உழைக்கும் பொருள்களை சிறப்பாகத் தயார் செய்கிறது. இரண்டாம் உலக மகாயுத்தத்தால் சீரழிந்த நாடு ஜப்பான். இரண்டு அணுகுண்டு விழுந்த இடம். யுத்தம் முடிந்தபின் ஜப்பான் அமெரிக்க ஆதிக்கத்திலிருந்தது. அதனால் அதற்கு இராணுவ பட்ஜெட் கிடையாது. அந்தச் செலவு ஆக்கிரமித்திருந்த அமெரிக்காவைச் சேர்ந்தது. இன்று இந்திய பட்ஜெட் 70 ஆயிரம் கோடி ரூபாய். அதில் இராணுவ பட்ஜெட் 16 ஆயிரம் கோடி ரூபாய். இன்று நாம் இராணுவத்திற்காக 16 ஆயிரம் கோடி செலவு செய்யாவிட்டால் அது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படும். கடந்த 45 வருஷமாக ஜப்பானுக்கு இராணுவ பட்ஜெட்டில்லை. அந்தச் செலவு மிச்சம். அதனால் அதன் தொழிலும், கல்வியும் வளர்ந்தன. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்காவை கலக்கும் அளவுக்கு இந்த வாய்ப்பு ஜப்பானை வளர்த்துவிட்டது. சாதாரண வாய்ப்பாகத் தோன்றும் இந்த அம்சம் இன்று உலகில் இரண்டாவது பணக்கார நாடாக ஜப்பானை மாற்றியுள்ளது. இந்த வாய்ப்பால் தான் இந்த பலன் ஏற்பட்டதா என்ற கேள்வி வரலாம்.

ஜெர்மனி அதேபோல் ஆக்கிரமிக்கப்பட்ட நாடு. நாட்டின் பாதியை மேற்கு ஜெர்மனி என்றனர். அங்கும் இராணுவ பட்ஜெட் கிடையாது. அதனுடைய பொருளாதார வளர்ச்சியும் ஜப்பானின் வளர்ச்சியைப் போன்றது. உலகத்தில் மதிப்புள்ள கரன்ஸி டாலர் என்றிருந்த நிலையை ஜப்பானுடைய கரன்ஸி (Yen) யென்னும், ஜெர்மனியுடைய கரன்ஸி மார்க்கும் (Mark) அசைக்க முயல்கின்றன. இராணுவ பட்ஜெட் இல்லை என்பது ஒரு வாய்ப்பு. அது ஒரு நாட்டை உலகத்தில் முதன்மையாக்க உதவும் என்று நாம் அறிகிறோம்.

1900 வரை அமெரிக்கா என்றால் ஐரோப்பாவில் கேலியாகப் பேசுவார்கள். உழைப்பாளிகளுடைய ஊர் அமெரிக்கா. அங்கு, உயர்ந்த பழக்கம், பண்பில்லை என்பது பொதுக் கருத்து. பணம் மட்டும் இருக்கிறது, அதை நாம் உயர்வாகக் கருதமுடியாது என்ற அபிப்பிராயம் உண்டு. 1900ருந்து 1950 வரை ஐரோப்பா அமெரிக்காவிலிருந்து பல்வேறு உதவிகளைப் பெறத் தவறியதில்லை. 1950-க்குப் பின் அமெரிக்கர்கள் எல்லாத் துறையிலும் சிறந்து விளங்க ஆரம்பித்தார்கள். நோபல் பரிசும் அமெரிக்காவை நோக்கிச் சென்றது. உலகத்தில் எல்லா அம்சங்களுக்கும் அமெரிக்காவே முதன்மை பெற்றது போன்ற நிலை கடந்த 20 வருஷமாக நிலவுகிறது. இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது?

காடாக இருந்த நாட்டில் ஐரோப்பியர் குடியேறி காட்டைத் திருத்தி நாடாக மாற்ற முனைந்தனர். இது எவ்வளவு பெரிய முயற்சி என்று நாம் அறிய வேண்டுமானால், சமமில்லாத இடங்களில் மனை வாங்கி வீடு கட்டியவர்களைக் கேட்டால் மேட்டை அழித்து, பள்ளத்தை நிரவிய பாட்டை அவர்கள் விளக்குவதில் அறியலாம்.

நாடு உற்பத்தியாக காடு அழிய வேண்டும். ஊரின் எல்லையிலுள்ள காட்டை அவசியத்தின் பேரில் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, அங்குள்ள நிலத்தைப் பண்படுத்தி பயிரிட்ட வரலாற்றைக் கேட்டால் சுமார் 15, 20 ஏக்கர் நிலத்தை 50, 60 ஆண்டுகளில் திருத்தியதாகச் சொல்வார்கள். ஆயிரம் ஏக்கர் காட்டை அழித்து நிலமாக மாற்றும் முயற்சியை சாதாரணமாக மனிதன் விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் ஆயிரம் ஏக்கர் 100, 200 ஆண்டுகளில் கழனியாகத்தானே மாறியதுண்டு. அமெரிக்கர்கள் ஓரிடத்தில் புதியதாகக் குடியேறினால் ஆயிரம் ஏக்கர் நிலத்தை அவசரமாகத் திருத்தினால்தான் உயிர்வாழ முடியும் என்ற நிலை. 200 ஆண்டுகளில் தானே மனிதன் செய்து முடித்ததை, நிர்பந்தத்தை யொட்டி 10 அல்லது 20 ஆண்டுகளில் அமெரிக்கர்கள் முடிக்க வேண்டியதாயிற்று. அதனால் அவர்கள் திறனும், உறுதியும், உழைப்பும், சாதாரண மனிதனைப் போல் 10 அல்லது 20 மடங்காகப் பெருகியது. அவன் செய்யும் எல்லாக் காரியங்களும் இந்த அளவுகடந்த சக்தியால் அபரிமிதமாகப் பரிமளித்தன.

புதிய சமுதாயத்தை உற்பத்தி செய்யும் நிர்பந்தம் அவனுக்கு வாய்ப்பாக அமைந்து இந்த நூற்றாண்டில் எல்லாத் துறையிலும் பெரும் பலன் அளிக்கிறது.

மேலை நாடுகள் செல்வம் பெருகியும், ஆசிய நாடுகள் வளம் குன்றியும் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. மேலை நாடுகள் பொதுவாகக் குளிர் நாடுகள். வருஷத்தில் 3 மாதம் பனியால் வெளியே வரமுடியாது. எந்தப் பயிரும் உயிருடனிருக்காது. அதனால் மற்ற மாதங்களில் வருஷத்திற்கு வேண்டிய உணவு தானியங்களையும், குறிப்பாக குளிர் காய விறகு, கரி ஆகியவற்றையும் அவன் சேகரித்துக் கொள்ள வேண்டும். நடைமுறையில் அவன் ஆறு மாதத்தில் தனக்கு வருஷத்திற்கு வேண்டியதை சேகரம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிழைக்க முடியாது. அத்துடன் குளிரான பிரதேசம் என்பதால் நம் போன்று லேசான உடைகளுடனிருக்க டியாது. அதிகச் செலவில் கம்பளி உடைகள், போர்வைகளைக் கட்டாயமாக வாங்க வேண்டும். எளிய கூரை வீடுகளில் குடியிருக்க முடியாது. பனியிலிருந்து காப்பாற்றும் தரமான வீடுகள் தேவை. அங்கு குளிரைப் போக்க 3 மாதத்திற்கு எரிபொருள் தேவை. ஆறுமாதத்தில் அதிகமாகத் தனக்கு வேண்டிய அனைத்தையும் அவன் சேகரம் செய்தால்தான் உயிர் வாழ முடியும் என்பதால் அதிக அளவு உழைக்கவேண்டும். அந்த நிர்ப்பந்தம் உஷ்ணப் பிரதேசங்களிலுள்ள நமக்கில்லை. அதிகமாக உழைப்பதுவே நாட்டு மரபு என்பதால் அவர்கள் தரம் உயர்கிறது. உயர்ந்த திறமை உற்பத்தியாகிறது. அதனால் விஞ்ஞான முன்னேற்றம் ஓரளவு வந்தவுடன் அதன் முழுப் பலனையும் பெற முடிகிறது, முன்னேற்றம் விரைவாக வருகிறது. குளிர் சீதோஷ்ணம் அவர்களுக்கு அமைந்த வாய்ப்பாகிறது.

கோயம்புத்தூர் ஜில்லா தொழில் மயமான ஜில்லா. Farmers of India இந்திய விவசாயிகள் என்ற பொருள்படும் தலைப்பில் சிவராமன் என்ற IAS அதிகாரி எழுதிய புத்தகம் பிரபலமானது. கோயம்புத்தூர் விவசாயியிடம் 5 ஏக்கர் கரம்பு நிலத்தைக் கொடுத்தால், கொஞ்ச நாளில் அதை முதல் தரமான நிலமாக மாற்றி விடுவான் என்று அப்புத்தகத்தில் எழுதினார். வெளியூரிலிருந்து கோயம்புத்தூருக்குப் பயிரைப் பார்க்கவந்த பெரிய விவசாயி கேழ்வரகு நிலத்தைப் பார்த்தார். எல்லாச் செடிகளும் ஒரே உயரமாக இருந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் ஊரில் ஒரு செடி சிறியதாகவும், மற்றது பெரியதாகவும் அலங்கோலமாக இருக்கும். செடிகளின் உயரம் ஒரே அளவாக இருக்க வேண்டுமானால், விதை ஒரே தரமாக இருக்க வேண்டும். நிலம் மேடு பள்ளமில்லாமலிருக்க வேண்டும். நீர் பாய்ச்சும் பொழுது எல்லா இடத்திற்கும் ஒரே அளவு தண்ணீர் செல்ல வேண்டும். இது மனிதனால் முடியாத காரியம். இதை நான் செய்ய வேண்டுமானால் அடுத்த ஜன்மத்தில் கோயம்புத்தூர் விவசாயிக்கு மகனாகப் பிறந்தால்தான் முடியும் என்றார்.

எதனால் கோயம்புத்தூரில் இந்தச் சிறப்புள்ளது. மேற்கூறிய புத்தகத்தில் IAS அதிகாரி சிவராமன் கோயம்புத்தூரை இந்தியாவின் முதன்மையான விவசாய ஜில்லா என்று வர்ணிக்கின்றார். இதன் இரகஸ்யம் என்ன? எப்படி விவசாயத்திலும் தொழிலும் கோயம்புத்தூர் முதன்மை பெற்றுள்ளது?

பம்பாயில் பஞ்சாலைகள் ஏற்பட்ட பொழுது கரிசல் மண் நிறைந்த கோயம்புத்தூர் அந்த ஆலைகளுக்குப் பஞ்சு பயிரிட்டு அனுப்பினார்கள். அதனால் இலாபமேற்பட்டது. விவசாயம் உபரி இலாபம் உற்பத்தி செய்தால் அங்குத் தொழில் உற்பத்தியாகும் என்பது பொருளாதார விதி. இந்த விதியைக் கண்டு பிடித்தவருக்கு, நோபல் பரிசு கொடுத்தார்கள். பஞ்சு பயிரிட்டு பணம் சம்பாதித்தவர்கள் பஞ்சைச் சுத்தம் செய்யும் தொழிற்சாலைகளை (ginning factory) ஆரம்பித்தார்கள். அடுத்த தலைமுறையில் நெசவாலைகளை ஆரம்பித்தார்கள். நெசவாலைகள் பரவ ஆரம்பித்த பின் அதையொட்டி இதர தொழில்கள் வளர ஆரம்பித்தன. Pykara hydel project பைக்காரா திட்டம் இதற்கு உதவியாக வந்து சேர்ந்தது.

தஞ்சாவூர் விவசாயி காலால் மடை தள்ளி நிலத்திற்கு உரம் போடாமல் பயிரிடுபவன். அவனுக்கு தண்ணீர்ப் பஞ்சம் கிடையாது. கோயம்புத்தூரில் விவசாயம் அபரிமிதமாகப் பரவாத காலத்து, கரம்பாக இருந்த நிலத்தை எடுத்து அதைப் பண்படுத்தி உரமிட்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பயிரிடும் நிலமாக மாற்ற வேண்டும். தானே இயற்கையில் நூற்றாண்டில் ஏற்பட்ட (topsoil) மண் வளத்தை மனிதன் அறிவாலும், முயற்சியாலும், தொடர்ந்த கவனிப்பாலும் பத்து பன்னிரெண்டு ஆண்டுகளில் சாதிக்க வேண்டுமென்றால் அது பெருமுயற்சி. அமெரிக்கர்கள் காட்டை நாடாக மாற்றும் முயற்சிக்கு ஈடானது. இப்பெரு முயற்சியால் நிலத்தைத் திருத்திப் பண்படுத்தியவனுக்கு பயிரிடுதல் எளிய வேலை. தண்ணீர் வேண்டுமானால் இதர ஜில்லாக்களில் பம்ப்செட்டிருந்தால் தண்ணீர் இறைத்துக் கொள்ளலாம். கோயம்புத்தூரில் நீரைக் கண்டுபிடிப்பது சிரமம்.

நிலத்தில் அவர்கள் நீர் பாய்ச்ச வெட்டிய கிணறுகள் ஒரு சிறு குளம் போலிருக்கும். பொதுவாக பாறை இருப்பதால் 40 அடி, 60 அடி ஆழம்கூட பாறையை உடைத்துக் கிணறு தோண்ட வேண்டும். நிலத்தைத் திருத்துவது நூறாண்டு முயற்சி என்றால் ஒரு கிணறு எடுக்க நூறு குடும்பத்தின் முயற்சிக்கு சமமான உழைப்பை ஒருவர் நல்க வேண்டும். இந்த இரண்டு பெரிய முயற்சிகளும் விவசாயியின் உழைப்புத்திறனை 100 மடங்கு உயர்த்தி விடுகிறது. அதன்பின் பயிரிடுதல் ஒரு சிறிய வேலை. சிறப்பான பலன் உபரியாகிறது. உபரி விவசாய வருமானம் தொழில் வளர அஸ்திவாரமாகிறது. இந்தச் சந்தர்ப்பம் கோயம்புத்தூர் மக்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்த பொழுது பம்பாய் பஞ்சாலைகள் மேலும் ஒரு வாய்ப்பை அதனுடன் சேர்த்தன.

இவையிரண்டையும் பொன் போல் விவசாயி போற்றியதால் இன்று கோயம்புத்தூர் இந்தியாவிலேயே விவசாயத்திலும், தொழிலிலும் முதன்மையான ஜில்லாவாக விளங்குகின்றது.

நிலம் திருத்த வேண்டிய நிர்ப்பந்தமும், நீர் கிடைக்காததும் பஞ்சு பயிரிடும் சந்தர்ப்பமும் அவர்களுக்கு கிடைத்த பெருவாய்ப்புகள்.

சுதந்திரம் வந்தவுடன் நம் நாட்டில் தொழில் அதிகமில்லை. குண்டூசி கூட லண்டனிலிருந்து வரவேண்டிய பரிதாப நிலையிலிருக்கிறோம் என்று சுதந்திர இயக்கத் தலைவர்கள் பேசுவார்கள். ஆனால் சுதேசி இயக்கம் அன்னியப் பொருள்களையும், அன்னியத் துணியையும் பகிஷ்காரம் செய்ததால் textile mills பஞ்சாலைகள் மட்டும் மக்கள் ஆதரவால் பெருகி நின்றன. சுதந்திர இயக்கம் நம் நாட்டுத் தொழிலுக்கு அளித்த வாய்ப்பு இது. பம்பாய், அகமதாபாத், மதுரை, கோயம்புத்தூர், கான்பூர் போன்ற இடங்களில் துணி நெய்யும் ஆலைகள் பெருகின.

பேச்சு வன்மையால் அரசியல் அதிகாரத்தைப் பெறுவது பல நாடுகளில் நடந்த நிகழ்ச்சி. நம் நாட்டிலும் பேச்சு வன்மையைப் பெருவாய்ப்பாகக் கொண்டு ஆட்சி பீடத்தை அடைந்தவர்கள் அதிகம். அரசியல் கட்சிக்குப் பேச்சுத் திறமை ஒரு வாய்ப்பு.

தங்கள் குல ஆசாரத்தைப் பின்பற்ற வேண்டி சமஸ்கிருதம் கற்றுக்கொண்டவர்களுக்கு, ஆங்கிலப் படிப்பு வந்தவுடன், ஆங்கிலத்தை எளிதில் கற்க முடிந்தது. தமிழ், சமஸ்கிருதம் நன்றாகப் பயின்றவர்களுடைய குழந்தைகள் எளிதில் ஆங்கிலம் கற்றதால், இந்த நூற்றாண்டில் முதல் பாதியில் சர்க்கார் உத்தியோகங்களில் பெரும்பாலும் அவர்களே இருந்தனர். சமஸ்கிருதப் படிப்பு, ஆங்கிலேயர் வந்த பின், உத்தியோக வாய்ப்பை உபரியாகக் கொடுத்தது.

கிருஸ்துவ மதம் பரவிய காலத்தில் போப்பாண்டவருடைய செல்வாக்கு அதிகம். அதனால் ரோமாபுரியை நடைமுறையில் ஆண்டவர் போப்.

ஐரோப்பாவிலுள்ள பல நாடுகளில் அரசு போப்பாண்டவரால் நிர்ணயிக்கப்பட்டது. மதவழிபாட்டை நடத்திச் செல்ல வேண்டியவருக்கு மக்கடையே கிடைத்த செல்வாக்கால் அரசியல் அதிகாரம் மறைமுகமாக வருகிறது.

எகிப்து இன்றும் உலகப் பிரசித்தி பெற்ற நாகரீகமாக விளங்குவதற்கு அந்நாட்டைச் செழிப்புப்படுத்தும் நைல் நதியே காரணம்.

எந்தப் பெரிய மனிதர் வாழ்வுக்குப் பின்னாலும், அல்லது பெரிய ஸ்தாபனத்திற்குப் பின்னாலும், ஏதோ ஒரு வாய்ப்பு அமைந்துள்ளதைக் காணலாம்.

பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் அகில இந்திய ஸ்தாபனத்தின் தலைவராகி, பிரிட்டிஷ் பிரதம மந்திரியைப் பார்த்து இந்தியப் பிரதிநிதியாகப் பேசி, இங்கிலாந்து முழுவதும் பிரயாணம் செய்து பிரசங்கம் புரிந்து உலகப் பிரசித்தி பெற்றது அவர் பெற்ற ஆங்கில அறிவை இந்தியாவிலும், இங்கிலாந்திலும் எவரும் பெறாத முறையில் உயர்வாகப் பெற்றது அவருக்கு அத்தகைய வாய்ப்புகளை அளித்தது.

வசதி வாய்ப்பாகும் நிலையுண்டு. சிரமம் வாய்ப்பாவதும் உண்டு. இராஜஸ்தானில் தண்ணீர் கிடையாது. பாத்திரங்களை மணலால் தேய்த்து, தூசி தட்டி துடைத்து உபயோகப் படுத்துவார்கள். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதால் அவர்கள் சிக்கனத்தைக் கற்றுக்கொண்டார்கள். அதனால் எந்தப் பொருளையும் கண்ணும் கருத்துமாகப் பயன்படுத்தும் குணம் ஏற்பட்டது. அதுவே பணத்தை உபயோகிப்பதிலும் வந்தவுடன், பணம் பெருகியது. இராஜஸ்தானிலுள்ளவர்கள் இன்று நாடு ழுவதும் பணத்தின் அதிபதியாக பரவியுள்ளார்கள். தண்ணீர் இல்லாத சிரமத்தால் வந்த சிக்கனம், பணப்பெருக்கத்திற்குப் பயன்படுகிறது.

யூதர்களுக்குச் சொந்த நாடில்லை. அதனால் அவர்களுக்கு (insecurity) பாதுகாப்பில்லை என்ற உணர்வு அதிகம். அதனால் வேறு வகையில் பாதுகாப்புத் தேடவேண்டி செய்யும் தொழிலை அதிக தீவிரத்துடன் கவனித்து பெரிய வெற்றி கண்டார்கள். உலகெங்கும் யூதர்கள் எந்தத் தொழிலிலும் சிறந்து விளங்குவதற்கு நாடில்லை என்ற உணர்வு காரணம்.

இஸ்ரேல் நாட்டில் நிலம் இல்லை. மண் இல்லை. மண் இல்லாமல் அவர்கள் விவசாயம் செய்யக் கற்றுக்கொண்டார்கள். ஒரு கூடை மண் கொண்டுவந்து பாறையிலுள்ள பள்ளத்தில் போட்டு அதில் வாழைபோன்ற மரத்தை நட்டு, விஞ்ஞான ரீதியாகப் பயிரிட்டு நமக்குக் கிடைக்கும் மகசூல் போல் பல மடங்கு பெறுகிறார்கள். மண் இல்லாதது ஒரு சிரமம். அந்தச் சிரமத்தை ஒரு வாய்ப்பாக மாற்றி உலகப் பிரசித்தி பெற்ற விவசாயம் செய்து ஏராளமான காய்கறி, பழங்களை ஏற்றுமதியும் செய்கிறார்கள். அங்கு விளையும் ஆரஞ்சு பழத்தில் அளவு கடந்த ரசமிருப்பதால், அந்தப் பழச்சாறு சிந்தாமல் பழத்தை உரிப்பது கடினம். தண்ணீர் இல்லை. மண் இல்லை. ஆனால் விவசாயம் அற்புதமாக இருக்கிறது. சிரமத்தை வாய்ப்பாக மாற்றிய பெருமை இவர்களுக்கு உண்டு.

சிங்கப்பூர், தாய்வான், கொரியா, ஹாங்காங் ஆகியவை உலகப் பிரசித்திபெற்ற முறையில் வியாபாரம் செய்வது இது போன்ற ஒரு வாய்ப்பால்தான்.

வசதியை வாய்ப்பாக்கலாம்; சிரமத்தை வாய்ப்பாக்கியவர்களுண்டு, என்றால் எதையும், எந்தச் சந்தர்ப்பத்தையும் ஒரு நல்ல வாய்ப்பாக்க முடியும் என்று தெரிகிறது.

வாய்ப்பின் வகைகள் பல. எல்லா நிலைகலும் வாய்ப்புண்டு.

நம்மூர் வழியே போடப்படும் புதுரோடு நம்மூருக்கு புது வாய்ப்பை அளிக்கிறது. வெண்கலம் போன்ற உடல் நிலையை என் பெற்றோரிடமிருந்து பெற்றேன் என்பது ஒரு வாய்ப்பு. இனிமையாகப் பழகும் குணத்தை என் பள்ளியில் கற்றேன் என்பது அதிக வாய்ப்புடையது. எனக்கு ஞாபகம் அதிகம். அதுவே எனக்கு நல்ல உதவியாகிவிட்டது என்பது அதைவிட உயர்ந்தது. எனக்கு பாங்க் முதல் கொடுத்துதவியது என்பார் ஒருவர். நான் இந்தப் புதிய டெக்னாலஜியைக் கண்டு கொண்ட பின் முன்னுக்கு வந்தேன் என்பவர் மற்றொருவர்.

உடல் நலமும், ரோடும் முதல் நிலை (physical) வாய்ப்புகள். இனிமையான பேச்சும், பாங்க் முதலும் இரண்டாம் நிலை (vital) வாய்ப்புகள். ஞாபகமும், டெக்னாலஜியும் (mental) மூன்றாம் நிலை வாய்ப்புகள்.

நான் எதைச் செய்தாலும் கூடி வருகிறது என்பது நான்காம் நிலையான (spiritual opportunity) ஆன்மிக வாய்ப்பு, அதை இராசி என்கிறோம். உடல் நலத்தைப் பெற்றோரும், ரோடை சர்க்காரும், இனிய பழக்கத்தைப் பள்ளியும், முதலை பாங்கும், ஞாபகத்திற்கு ஒரு தந்திரத்தை அறிவாளியும், டெக்னாலஜியை இன்ஜினீயரும், இராசியை ஒரு மகானுடைய அனுக்கிரஹத்தாலும் மனிதன் பெறலாம். வாய்ப்பின் தரம் உயர்ந்தால் அதன் பலன் உயரும்.

பொதுவாக மனிதன் இது போன்ற வாய்ப்பை நாடிப் பெறுகிறான். அவை மனிதனை நாடி வருவதும் உண்டு. அது குறைவு. வாய்ப்புகள் ரோடு மூலம் வந்தால் அனைவருக்கும் பயன்படும். ஞாபக சக்திக்குரிய முறையை ஒருவருக்கு கற்றுக் கொடுத்தால் அவருக்கு மட்டும் பயன்படும்.

வாய்ப்பு எவ்வளவு பெரிதானாலும் பயன் அவரவர் நிலைக்கேற்பவே அமையும். இந்த ஊரில் பெரிய தொழிற்சாலை ஏற்படுவது அனைவருக்கும் வாய்ப்பானாலும், காண்ட்ராக்டருக்கு பெரிய இலாபமும், வேலை தேடுபவனுக்கு தினக்கூலியும், பெரிய இன்ஜீனியருக்கு மேனேஜர் வேலையும், அவரவர் நிலைக்கேற்பவே பலன் கிடைக்கும். இது அவரவர் (social status) சமூகநிலை. மனநிலை என ஒன்றுண்டு. எதுவும் நமக்கில்லை என்பது ஒரு மனநிலை. நமக்குப் பயன்பட வேண்டுமானால், அது நமக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்பது மற்றொரு மனநிலை. எந்த நிலைக்குப் பொருத்தமாகவும் நான் மாறிக் கொள்ள முயலவேண்டும் என்பது உயர்ந்த மூன்றாம் நிலையிலுள்ள மனநிலை.

உயர்ந்த மனநிலையிருந்தால் எதையும் வாய்ப்பாக மாற்றிக் கொள்ளலாம். அதுவே அன்னையின் கொள்கை. அவர் போற்றுவது. எதையும் வாய்ப்பாக மாற்றிக் கொள்ளும் மனநிலை உள்ளவனுக்கு எதுவும் வாய்ப்பாக மாறும். கூட்டத்தில் பேச்சாளர் மீது கல்லை வீசினான். எட்டி கல்லைப் பிடித்து, கல்லை ஏலம் விட்டார். ரூ.100/-க்கு ஏலம் போயிற்று. கூட்டம் அவர் மேற்கொண்டு பேசியதை ரசித்துக் கேட்டு பேச்சாளரைப் போற்றியது.

எதையும் வாய்ப்பாக மாற்றலாம் என்பது சிருஷ்டிக்குரிய மனப்பான்மை. அந்த மனப்பான்மையுள்ள இடத்தில் அன்னை எளிதில் தோன்றுவார். அன்னையை நெருங்கிவரும் மனநிலை அது. அன்னை வெளிப்பட்ட பின் எந்தக் காரியமும் பூர்த்தியாகும். நாம் செய்யும் காரியம் எதுவானாலும் அது பூர்த்தியடையும் திறனை, ஆன்மீக வாய்ப்பாக அன்னை நமக்களிக்கின்றார்.

செய்யும் காரியம் எதுவானாலும் அது பூர்த்தியாகும் என்றால் நமக்குத் தேவையான எந்த வாய்ப்பையும் நாம் உற்பத்தி செய்யலாம். நம் மனநிலை அதைப் பூர்த்தி செய்யும். அதனால் எதையும் சாதிக்கலாம் என்ற வாய்ப்பை இம்மனநிலை மூலம் அன்னையிடமிருந்து நாம் பெறலாம்.

சாதாரண மனிதனுக்கு ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்தபின் அவனுக்குப் பாதகமானவை, பாதகமாக இருப்பதில்லை. பதவி, பணம், படிப்பு போன்றவற்றுள் ஒன்று வந்துவிட்டால் இதுவரை அவனிடம் குறையாகக் கருதிய குணம், தாழ்ந்த குடும்பம், கரிய நிறம் இனி குறையாகத் தோன்றுவதில்லை. மாப்பிள்ளை கருப்பு என்ற குறை பெரிய படிப்பு பெற்றபின் இருக்காது. பழைய விரோதம் புதிய பதவியால் மறக்கப்படும். முன்கோபக்காரனை விலக்கியவர்கள் பணம் வந்தபின் அவனை முன்கோபத்திற்காக விலக்க மாட்டார்கள். சமூகத்தின் நிலையும், மக்களின் மனப்பான்மையும் மாறினால் குறையாக இதுவரை இருந்தது, நிறையாக மாறுவதும் உண்டு. பின்தங்கிய ஊரில் பிறந்தால், பெரிய உத்தியோகத்திற்கு விண்ணப்பம் கூட போட முடியாது என்ற நிலைமாறி இன்று பின்தங்கிய ஊரில் பிறந்ததாலேயே அந்த உத்தியோகம் கிடைக்கிறது.

பொதுவாக அன்னையை ஏற்றுக் கொண்டபின் மேற் சொன்ன இருமாறுதல்களும் ஓரளவு நம் வாழ்வில் ஏற்படுவதைக் காணலாம். ஈடுபாடு உள்ளவர்க்கு அதிகமாக ஏற்படுவதையும் காணலாம். விலகிப்போன நல்லவை விரைந்து நம்மைத் தேடி வரும். எந்தக் குறை நல்ல சந்தர்ப்பங்களை விரட்டியதோ, அதே குறை இன்று அவற்றை ஈர்க்கும். வறுமை நிறைந்த கிராமம் என்பதால் நம்மை விலக்கிய பாங்க், அன்னையை ஏற்றுக் கொண்டபின், வறுமையுள்ள கிராமம் என்பதால் மட்டுமே நம்மை விரும்பி ஏற்றுக்கொள்வதைப் பார்க்கலாம்.

அன்னையின் முறைகளை ஏற்றுக்கொள்வது சிரமம். அவற்றை ஏற்றுக்கொண்டால் அன்னை நம்மில் அதிகமாகச் செயல்படுவார்கள். எந்தச் சந்தர்ப்பமும் நல்ல வாய்ப்பாகும் என்பது அன்னையின் முறைகளில் ஒன்று. நம் வாழ்வில் நல்லதை ஏற்றுக்கொண்டு, கெட்டதை விலக்கி மற்றதைப் பொறுத்துக் கொள்கிறோம். அதற்குப் பதிலாக இந்நோக்கத்தை ஏற்றுக்கொண்டால் நல்லதும், கெட்டதும், மற்றதும் உயர்ந்த வாய்ப்பாகும். அவை உயர்ந்த வாய்ப்பு என மனம் ஏற்றுக்கொண்டபின், அன்னை அவற்றை உயர்ந்த வாய்ப்பாக மாற்றிக் கொடுக்கின்றார்.

சென்னையில் தொழில் நடத்திக் கொண்டிருந்தவர்க்கு, கிராமத்து நிலங்களைப் பராமரிக்க முடியாமல் சிரமமாக இருந்தது. அவர் அன்னையிடம் வந்தபின், மனதை மாற்றிக் கொண்டார். கிராமத்து நிலங்களைப் பற்றிக் குறைபடுவதில்லை. புதிய நிலை ஏற்பட்டது. ஏதோ காரணத்திற்காக லாரி சொந்தக்காரர்கள் எல்லாம் இவர் கிராமத்தில் இரவு லாரிகள் சந்திக்க ஏற்பாடு செய்தனர். ஒரே வாரத்தில் நூற்றுக்கணக்கான லாரிகள் இரவில் தங்கி சவுக்கு விறகைத் தோப்பிலிருந்து சென்னைக்குப் போக மாற்றுமிடமாக்கினர். சுமார் நூறு சிறு கடைகள் சொல்பநாளில் உற்பத்தியாயின. பயிரிடும் நிலத்திற்கு மனைவிலை ஏற்பட்டது. பக்தருடைய புஞ்சை நிலங்கள் அத்தனையும் ரோடு ஓரத்தில் உள்ளவை!

அகவுணர்ச்சி, புறநிகழ்ச்சியை நிர்ணயிக்கிறது என்பது அன்னையின் கோட்பாடு. நீ எதை ஆர்வமாக நம்புகின்றாயோ, அதுவாக நீ மாறுவாய் என்பது பகவத்கீதை. நாம் மனத்தை மாற்றியபின், அன்னையின் சக்தி வாழ்வின் குறையை நிறைவாக்குகிறது. அர்த்தமற்ற சந்தர்ப்பத்தை அர்த்தமுள்ளதாக்குகிறது, நமக்கு வேண்டிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இயற்கையாக நமக்குள்ள நல்ல சந்தர்ப்பங்களை நாம் ழுவதும் பயன்படுத்துவதில்லை. குறையைக் கண்டு மனம் ஒடிந்து விடுகிறோம். மற்றதை தலைவிதி என ஏற்றுக் கொள்கிறோம். அதற்குப் பதிலாக நல்ல சந்தர்ப்பங்களைப் பூரணமாகப் பயன்படுத்தினால், குறையை நிறைவாகக் கருத முயன்றால், மற்றதை எப்படி உயர்ந்த சந்தர்ப்பமாக்கலாம் என்று ஆராய்ந்தால், தினமும் நிலைமை மாறும்.

வாழ்வில் அன்னையை அறிந்து கொண்டதே மிக உயர்ந்த சந்தர்ப்பம். அவர் முறைகளை ஏற்றுக் கொள்ள முன்வருவது அதைவிட உயர்ந்தது. நமக்குள்ள சந்தர்ப்பங்கள் அனைத்தும் உயர்ந்தவை என மனம் ஏற்றுக்கொள்வது நல்லது. அதன்பின் அவை அனைத்தும் உயர்ந்தவையாக மாறும். மேலும் எந்த நல்ல சந்தர்ப்பங்கள் வேண்டும் என்று நினைத்தாலும், இத்தனையும் செய்தவருக்கு அதுவும் முடியும்.

எல்லா சந்தர்ப்பங்களையும் உயர்ந்த சந்தர்ப்பமாக்க முடியும் என்றால், நமக்குத் தேவையான சந்தர்ப்பங்களை உற்பத்தி செய்ய முடியுமானால், மனிதனுடைய நிலை வேறு. அவன் வாழ்வில் தோல்வி கிடையாது. அன்னையுள்ள இடத்தில் தோல்விக்கு வழியில்லை. அதுவும் முயற்சியுள்ளவர்க்கு அன்னையிடம் தோல்வியே கிடையாது.

இந்தியருக்குண்டான பெரிய நல்ல சந்தர்ப்பம் அவர்களுக்குள்ள ஆன்மிகப் பரம்பரை. உலகத்தின் குருவாகும் தகுதி இந்தியாவுக்குண்டு என்று அன்னை கூறுகிறார். ஜகத்குருவின் பிரஜைகள் நாம் என அறிவதும், அதற்குரிய முறையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வதும் உயர்ந்தது.

புற வாழ்வின் முறைகளான பூஜை, திருவிழா, அர்ச்சனை, விரதம், ஸ்தோத்திரம், யக்ஞம், யாகம், வழிபாடு மூலமாக அகவாழ்வின் ஜகத்குருவானவர் ஆட்சிக்கு வர மாட்டார். ஆசனமும் பிராணாயாமமும் பயன்படா. ஞானமும், பக்தியும் பயன்படும். உண்மையுள்ளவை அனைத்தும் பயன்படும். உயிரற்றவை எதுவானாலும் பயன்படாது.

வங்காளத்தில் பிறந்த பகவானும், பாரிசில் பிறந்த அன்னையும் தமிழ் நாட்டைத் தேடி வந்ததை விடத் தமிழர்களுக்கு உயர்ந்த சந்தர்ப்பமில்லை. தொண்டைநாடு சான்றோருடைத்து என்பதை நிரூபிக்கும் வகையில் வெளியில் பிறந்த மகரிஷியும், ஞானாநந்தரும், பகவானும், அன்னையும், இங்குள்ள புதுவையை நாடி வந்திருப்பது தமிழ்மக்களுக்கும் புதுவை வாசிகளுக்குமுள்ள பெரிய சந்தர்ப்பம்.

இந்தியர்கள் ஆன்மிகப்பாதையை மேற்கொண்டால், வாழ்வை ஆன்மிக அடிப்படையில் அமைத்துக் கொண்டால் இந்தியா ஜகத்குருவாகும். அதையுணரும் இந்தியர் எவருடைய வாழ்வும் ஆன்மிக வாய்ப்பு நிறைந்ததாக மாறும்.

மனிதப் பிறவியின் பயன் தெய்வத்தை உலகில் கொண்டு வந்து மனிதவாழ்வை தெய்வீக வாழ்வாக மாற்றுவது என்கிறார் பகவான். அதுவே பூரண யோகம்.

எந்த நிலையும் வாய்ப்பானால், எந்த நேரமும் சந்தோஷமான நேரமானால், எவரும் நல்லெண்ணம் கொண்ட நண்பரானால், வாழ்வு Divine life தெய்வீக வாழ்வாகிறது. வாழ்வை தெய்வீக வாழ்வாக்கும் வாய்ப்பை அன்னை மனிதனுக்கு அருயுள்ளார்.

* * *book | by Dr. Radut