Skip to Content

14. சத்தியஜீவியம்-அது

ஸ்ரீ அரவிந்தர் தன் யோகத்தைப் பூரணயோகம் என்றும், சத்தியஜீவிய யோகம் என்றும் அழைத்தார். மனிதன் தன் ஆன்மிக முழுமையடையும் பாதை இது என்றார். மனிதன் தன் தவ முயற்சியால் ஜீவாத்மாவைக் கண்டு, அதன் மூலம் பரமாத்மாவை அடைவது மோட்சம். மனிதன் சரணாகதி மூலம் இறைவனை தன்னுள் கண்டு, அதன் மூலம் ஜீவாத்மாவை யடைந்து, ஜீவாத்மாவை பரமாத்மாவின் கருவியாக மாற்றி, பரமனின் திருவுள்ளத்தை உலக ஜீவன்களில் பூர்த்தி செய்வது பூரண யோகம்.

பூரண யோகத்திற்குரிய யோக சக்தி தெய்வலோகத்திற்கு மேலுள்ள உலகத்திலிருந்து வருகிறது. அதை ஸ்ரீ அரவிந்தர் Supermind என்ற குறிப்பிட்டார். அச்சொல் பொருத்தமானதல்ல என்றும் வேறு வழியில்லாமல் அதைப் பயன்படுத்துவதாகவும் சொன்னார். அதனால் அக்கருத்தைக் குறிப்பிடும்பொழுது பல முறை Supermind என்பதற்குப் பதிலாக THAT என்று குறிப்பிடுகிறார். அன்னைக்கு Supermind என்ற சொல்லைவிட That என்று சொல்லவே பிடிக்கும். THAT என்று பெரிய எழுத்தில் அதை எழுதுவது வழக்கம்.

நுரையீரல் முழுவதும் கான்சரால் பாதிக்கப்பட்ட கல்கத்தா சர்ஜன் மனைவியை கணவரும், மற்ற டாக்டர்களும் கைவிட்டபின், அவருடைய பக்தியால் வியாதி பூரண குணம் அடைந்துவிட்டது என்ற செய்தி வந்த பொழுது "அது That இருந்தால் எதுவும் நடக்கும்'' என்று அன்னை சத்தியஜீவிய சக்தி Supramental யைக் குறிக்கின்றார்.

ஒரு பிரச்சினையைப் பலவகையாகத் தீர்க்கலாம். சிரமப்படுபவருக்கு எப்படி பிரச்சினை தீருகின்றது என்பது முக்கியமல்ல. எப்படியாவது தீர்ந்தால் போதும் என்பது அவர் நிலை. தீர்ந்தபின் அது எப்படி நடந்தது என்று நாம் யோசனை செய்வதுண்டு. அன்னைக்குப் பிரார்த்தனை செய்து பிரச்சினை தீரும் பொழுதும், தீரும் முறை பல்வேறு வகையாக இருக்கும். நம் சூழ்நிலையிலுள்ள சாதகமானவற்றின் மூலம் அன்னை செயல்படுவதுண்டு.

அதிக மார்க் வாங்கிய மாணவனுக்கு இடம் கிடைக்காத நிலையில் அவன் பிரார்த்தனை செய்தால், அவன் வாங்கிய மார்க் மூலம் அன்னை பிரச்சினையைத் தீர்க்கின்றார். அல்லது அவரது மாவட்டத்திற்குரிய இடத்தில் ஒன்று காயாக நிற்பதன் மூலம் பிரச்சினை தீர்கின்றது.

ஒரு காரியத்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் பொழுது, அது இல்லை என்ற செய்தி வருகிறது. விஷயம் முடிந்து விட்டது. இனி செய்வதற்கொன்றுமில்லை என்ற நிலை ஏற்பட்டு அனைவரும் மனம் தளர்ந்துவிட்ட நிலையில் பிரச்சினைக்குரியவர் நம்பிக்கையை இழக்காமலிருப்பதுண்டு. புதிய நிலைமை ஏற்பட்டு விஷயம் கூடிவந்தால் அன்னை அவர் நம்பிக்கை மூலம் செயல்பட்டார் என்று பொருள்.

வீட்டிற்காக கருத்தாக உழைத்த ஒருவருக்கு வியாபாரத்தில் நெருக்கடி ஏற்பட்டு பிரார்த்தனை செய்தால், எதிர்பாராத வகையில் விஷயம் கூடிவரும்பொழுது அன்னை அவருடைய கடமையுணர்வுக்குப் பரிசாக இதை வழங்கினார் என்று நாம் அறிந்துகொள்கிறோம்.

நமக்குத் தெரிந்து எந்தத் தகுதியும் இல்லாத விஷயத்தில் பிரார்த்தனை பலித்தால், அன்னையே முன்வந்து தானே செய்தார் என்றாகும். தெய்வம் தானே செய்வதை அருள் என்று சொல்கிறோம். அருள் மூலம் நிறைவு பெறும் செயல் ஓர் இழைகூட குறையாது பலன் தெரியும். நம்பிக்கை மூலம் நிறைவுடையவை 99% பூர்த்தியாகும்.

3 கொலை நடந்த நிறுவனத்தை விட்டு அதிகாரிகள் ஓடியபின், அந்த நிர்வாகத்தை ஏற்று, அமைதியை நிலை நிறுத்தி ரூ 50,000 வருஷ நஷ்டம் ஏற்பட்ட இடத்தில் 32 லட்சம் நிகர வருமானம் பெறும் அளவுக்கு 3½ வருஷம் ஒருவர் உழைத்தார் என்றால் அவரது உழைப்பு சிறப்புக்குரியது. இந்த உத்தியோகத்தை ஏற்றுக்கொண்டு தன் தொழில் நல்லமுறையில் நடக்க வேண்டி முதல் மாதச் சம்பளத்தை காணிக்கையாகக் கொடுத்தார். இலாபம் வந்த ஆண்டில் முதலாளி 60,000 போனஸ் கொடுத்தார். இது மானேஜர் எதிர்பாராதது. அதுவும்போக ஒரு நல்ல சொத்தை வாங்க உதவி செய்தார். அவர் செய்த உதவியால் இன்று அந்த மானேஜர் வருஷத்தில் சுமார் 10 லட்ச ரூபாய் சம்பாதிக்கின்றார். உண்மையான உழைப்பை அன்னை ஏற்று அளித்த பரிசு இது.

எதையும் செய்யாமல், எல்லாம் நடக்கும் என்பது நம்பிக்கையில்லை. அருள் அதுபோல் செயல்படாது என்கிறார் அன்னை. அன்னை பேச்சையும் மீறி இந்த மூடநம்பிக்கையை உண்மையுடன் ஒருவர் மேற்கொண்டார். ஒரு பெரிய விஷயத்தில் எதிர்பாராமல் அவருக்கு எல்லாம் நடந்தது. மனம் அறிவுடையதாக இல்லாவிட்டாலும், அதன் அடியில் உள்ள உண்மை மூலம் அன்னை இங்கு செயல்பட முடிந்தது.

முதுகு வலியுள்ளவர் அன்னை முறைகளை கடைப்பிடிக்க முயன்று பலனில்லாமல் இனி முடியாது என்று விட்டு விட்டு மைதானத்தில் தரையில் உட்கார்ந்து சினிமா பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது தலைவழியே ஏதோ உள்ளே சென்று வலியுள்ள இடத்தை அடைந்து, டக் என்ற சப்தம் கேட்பதைக் கண்டார். முதுகுவலி விட்டு விட்டது. அன்னையின் முறைகளைக் கடைப்பிடிக்க முடியாதவர் அதை மறந்திருந்த நேரம் அன்னை தன்முறையைச் செயல்படுத்தி விட்டார்.

பொதுவாக ஆழ்ந்த பயம் உள்ள ஒருவர் ஓர் இக்கட்டான நிலையிருக்கும்பொழுது பயம் புறப்பட்டு வந்து அவரைக் கௌவிக்கொண்டது. பிரச்சினை தீர தீவிர பிரார்த்தனை செய்வதை விட்டுவிட்டு, இப்பயம் அழிய வேண்டும் என்று அவர் ஆழ்ந்த பிரார்த்தனையை மேற்கொண்டார். பிரச்சினை தீர்ந்தது. அப்பயம் அன்று முதல் அவரை விட்டகன்றது.

ஒரு காரியத்தை அன்னை முறைப்படி செய்ய வேண்டிய அனைத்தையும் மேற்கொண்டு செய்தவர் தன் காரியம் எதிர் பார்த்ததைவிட 24 மடங்கு பெருகியதைக் கண்டார்.

அன்னை ஒருவர் பிரார்த்தனைக்குப் பதிலளிக்கும் பொழுது அவரிடம் உள்ள ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பத்தின் மூலம் அதை நிறைவேற்றுகிறார். அது உடல் உழைப்பாகவோ, விஸ்வாசமாகவோ, அறிவாகவோ, பக்தியாகவோ, நம்பிக்கையாகவோ இருப்பதுண்டு. இவற்றுள் உழைப்பு உடலுக்கும், விஸ்வாசம் உணர்ச்சிக்கும், அறிவு மனத்திற்கும் உரியவை. அன்னை இவற்றின் மூலம் செயல்படும்பொழுது உடல் மூலமாக அல்லது உணர்ச்சி மூலமாக அல்லது மனத்தின் மூலமாக செயல்படுகிறார் என்று பொருள். மனம் மௌனமாக இருந்து அன்னை அதன் மூலம் செயல்படும்பொழுது அன்னையின் செயல் நம் ஆன்மா மூலம் நம்மை வந்தடைகிறது. இவையெல்லாம் தவறும் நேரம் உண்டு. அப்பொழுது அன்னை தானே செயல்பட்டால் அது அருள் எனப்படும். அப்படி நடந்த செயலை நாம் யோசிக்கும்பொழுது, யோசனை புரியாது. பலன் கிடைத்தது தெரியும். எதற்குப் பலன் கிடைத்தது என்று ஆராய்ந்து புரிந்து கொள்ள முடியாது. உடல், உணர்வு, மனம் ஆகிய கரணங்கள் தோல்வியடைந்த பின் அவற்றால் அன்னை செயலுக்கு குறுக்கே நிற்க முடியாது. எனவே அன்னை செயல்பட்டு விடுகிறார்.

பொதுவாக அன்னை மனிதனிடம் உள்ள ஓர் அம்சத்தின் மூலமாகவே செயல்படுகிறார். அவை அனைத்தும் தோல்வியடைந்த பொழுது எந்த உதவியுமில்லாமல் நேரடியாகச் செயல்படுகிறார். அப்படிச் செயல்படும்பொழுது அதற்குரிய சக்தி சத்திய ஜீவியத்திலிருந்து புறப்பட்டு வருகிறது. அது (That) என்று அன்னை குறிப்பிடும் சக்தியாகும்.

பலனைப் பார்த்தால் அதில் எதன் மூலமாக வருகிறதோ அதன் அடையாளம் இருக்கும். அத்துடன் எதன் மூலமாக வருகிறதோ அதன் அளவும் உடன் தெரியும். இவற்றையெல்லாம் தாண்டி அது' செயல்படும்பொழுது அதன் சுவடு தெரியும். அதாவது நம்மால் கண்டுகொள்ளக்கூடிய காரணம் எதுவுமில்லாமல் பலன் ஏற்பட்டிருந்தால், எந்தக் காரணத்தின் சுவடும் தெரியாவிட்டால் அது செயல்பட்டதாக அர்த்தம் என்றாலும் அதற்குரிய முத்திரைகளும் உண்டு.

1. பெற்ற பலனில் குறை என்று சொல்லக்கூடியது ஒன்று கூட இருக்காது.

2. நமக்குத் தெரிந்த எந்தக் காரணத்தாலும் பலன் ஏற்பட்டிருக்காது.

3. ஆயுள் பரியந்தம் அப்பிரச்சினை மீண்டும் வராது.

4. எதிர்பாராத ஒரு பலனும் சேர்ந்துவரும்.

5. இதுவரை யாரும் கேள்விப்பட்டதாக இருக்காது.

நாமும், நம் அறிவும், திறமையும், நமக்குத் தெரிந்த உக்திகளும், வழிகளும், நம் ஆர்வமும், உழைப்பும், நமக்கு இதுவரை இருந்த பக்கபலமும் கைவிட்டபின் அது செயல்படுகிறது. அதாவது இவையெல்லாம் குறுக்கிட முடியாத நேரத்தில் அது செயல்படுகிறது என்று பொருள். பெரும்பாலான பக்தர்கள் இதை அனுபவத்தில் கண்டிருப்பார்கள். நான் மேலே சொன்ன 5 அடையாளங்களுடன், இதன் மூலம் வரும் பலன் மிக உயர்ந்ததாகவுமிருக்கும். தங்கள் அனுபவத்தில் இதைக் கண்ட பக்தர்கள் இது தானே நடந்தது என்றறிவார்கள். தானாக நடந்த ஒன்றை நாமே நடத்த முடியுமானால், நம் வாழ்க்கை நிலை என்ன என்று நாம் அறிவோம். நாமும், நம் காரணங்களும் குறுக்கிடாமலிருந்தால் அது எந்த விஷயத்திலும் செயல்படும், எத்தனை முறையும் செயல்படும். நாமே அதைச் செயல்படவைப்பது எப்படி என்பதே இங்கு நம்முன் உள்ள கேள்வி.

தானே செயல்படுகிறது என்றால் நம் அறியாமை மூலம் செயல்படுகிறது. அதனால் அதன் செயலை நாம் உணருவதில்லை. நாம் விழிப்போடு இல்லாவிட்டாலும் அன்னை நம்மில் செயல்படுகிறார் என்று ஸ்ரீ அரவிந்தர் இதையே குறிப்பிடுகிறார். நாம் விழிப்போடு இருந்தால் நம் கரணங்கள் அன்னையின் செயலிலும் அதன் செயலிலும் குறுக்கிட்டு கெடுத்துவிடுகின்றன. செயலைக் கெடுக்காமல், விழிப்புடனிருக்கக் கற்றுக்கொண்டால், அது தொடர்ந்து செயல்படும். அது யோகத்தை மேற்கொண்ட சாதகருடைய உயர்ந்த நிலை. எளிய பக்தன் செய்யக் கூடியது என்ன?

இதையும் பயிற்சி மூலம் பெறலாம். பயிற்சி மனத்தைப் பற்றியது. இது போன்ற பலனை ஒரு முறையாவது பெற்றவர் இப்பயிற்சியைப் பெறலாம். தான் பெற்ற பலன்தானே வந்தது என்றாலும், ஒரு முறை அதைப் பெற்றவருக்கு மனத்தில் தெளிவு ஏற்பட்டிருக்கும். மேற்சொன்ன 5 அடையாளங்களையும் 6 வது அம்சத்தையும் தன் அனுபவத்தில் கண்டிருப்பார். அவர் மனம் அதை அறிந்திருக்கும்.

இப்பயிற்சியின் முதல் அம்சம் இச்செயலின் தன்மையை மனம் அறிந்து ஏற்றுக்கொள்வது. இரண்டாம் அம்சம் நம் இன்றைய செயலின் தன்மையை அறிந்து அதை விலக்குவது. மூன்றாவது அம்சம் முக்கியமானது. முதலிரண்டு அம்சங்களுக்குரியவாறு உள்ளே நாம் மாறிக் கொண்டு அதன்படி செயல்படுவதாகும்.

1. பொதுவாக நம் நிலையை சோதனை செய்து பார்த்தால், நமக்கு கிடைப்பவை அனைத்தும் நம் முயற்சியால் கிடைத்தவை. நான் புத்திசாலி என்பதால் படித்தேன். என் பணத்தாலும், அறிவாலும், உழைப்பாலும் பட்டம் பெற்றேன். என் தகப்பனார் அளித்த சீர் வரிசைக்காக எனக்குத் திருமணமாயிற்று, என்பவை நம் மன நிலைகள். சாதாரணமாக ஒரு சிறு பொருளை வாங்கும் பொழுதும் நாம் நம் திறமையை நம்பி வாங்குகிறோம் என்பது தெளிவு. நம் திறமையிலும், குடும்ப அந்தஸ்திலும், நம் அதிர்ஷ்டத்திலும் நமக்கு நம்பிக்கையுண்டு. இவற்றையெல்லாம் தாண்டிய நிலை நம் வாழ்வில் உண்டா என்று சோதனை செய்தால் கண்டுபிடிப்பது கடினம்.

உலகத்தில் நடப்பவை எல்லாம் அவன் செயல். நம் முயற்சியும் மற்றவையும் அவனுக்குரிய கருவிகளே. அவனின்றி ஓர் அணுவும் அசையாது. அவனை விலக்கிய பின் நம்மால் ஒரு வாய் தண்ணீர் கூட சாப்பிட முடியாது என்பது ஆன்மிக உண்மை. அந்த ஆன்மிக உண்மையை மனம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது புரிய வேண்டும். அதுவே முடிவான உண்மை என்பதும் தெரிய வேண்டும். இதை வெறும் கருத்தாக ஏற்றுக் கொள்ளாமல், முடிவான சத்தியமாக மனம் ஏற்றுக்கொள்வது முதல் அம்சம்.

2. நம் செயலைக் கவனித்துப் பார்த்தால், அதுவும் அருள் செயல்படும்பொழுது நம் செயலைக் கவனித்தால், எண்ணம் குறுக்கிடுவது தெரியும். உணர்ச்சி மாறாக இருப்பதைக் காணச் செயல் எதிர்மறையாக இருக்கும். "ஏனோ, அப்படித் தோன்றிற்று, விஷயம் கெட்டுப்போயிற்று'' "காரணமே புரியவில்லை எனக்கு உள்ளே கோபம் வந்தது''. "தலைகீழே செய்தேன், நல்ல காரியம் கெட்டு விட்டது'' என்று நாம் ஒரு காரியம் கெட்ட பொழுது சொல்வதைப் பார்த்திருக்கலாம். ஒரு காரியம் அதனால் கூடி வந்த பொழுது "நல்ல வேளை யார் கண்ணிலும் படாமல் இது நிறைவேறியது. எங்கள் கண்ணில் பட்டிருந்தால், கெட்டுப் போயிருக்கும்'' என்றும் கூறுவதுண்டு. நம் எண்ணங்களும், செயலும் குறுக்கிட மட்டுமே உதவுகின்றன என்பது ஆன்மிக உண்மை. அதை ஏற்று அவற்றை விலக்க முன்வர வேண்டும். அது இரண்டாம் அம்சம்.

3. முதலிரண்டு நிலைகளுக்குரியவாறு நம் மனத்தை மாற்றிக்கொள்ள முன்வருவது மூன்றாம் அம்சம். அது நமக்குப் பக்குவத்தைக் கொடுப்பதைப் பார்க்கலாம்.

இந்த மூன்று முயற்சிகளும் தவமுயற்சி. அவற்றை மேற்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து, அது நம் வாழ்வில் அங்கும் இங்குமாகச் செயல்படுவது தெரியும். ஏதோ ஒருமுறை செயல்பட்டாலும், நாம் அனுஷ்டிக்கும் முறை சரியானது என்றாகும்.

சோதனையை நம் கையில் உள்ள பெரிய விஷயத்திலும் செய்யலாம், சிறு காரியத்திலும் செய்யலாம். அதற்கு பெரியது, சிறியது என்பது இல்லை. பக்குவம் இருந்தால், பலன்தரும். எந்த விஷயத்தில் ஒருமுறை பலன் இதன் மூலம் கிடைக்கின்றதோ,

அந்த விஷயத்தில் ஒவ்வொரு முறையும் பலன்பெற நம்மை மேற்சொன்னவகையில் செய்து கொள்ள வேண்டும். ஓரளவு உயர்ந்தவனுக்கு இதற்குரிய அனைத்து அம்சங்களும் தெளிவுற விளங்கும். அதன் சுருக்கம்: பக்குவம் பலனைத் தரும். பக்குவத்தை எங்கெங்கு கொண்டு போனாலும், அங்கு பலன் தொடர்ந்து வரும். நம் முழு வாழ்வையும் இதனால் நிரப்பமுடியும் என்பது உண்மையானாலும், முடிந்த அளவுக்கு செய்தாலும் உயர்ந்த பலன் உண்டு.

* * *book | by Dr. Radut