Skip to Content

13. நன்றியறிதல்

எதிர்பாராமல் மந்திரி பதவி கிடைத்தவர் தன் நன்றியை யாருக்குத் தெரிவிப்பது, எப்படித் தெரிவிப்பது என்று திகைத்தார். தனக்கு அன்று கிடைத்த பெரிய பேறு தான் பத்து ஆண்டுகளுக்கு முன் படித்த பள்ளித்தலைமை ஆசிரியரின் முயற்சியால் என்று நினைத்தார். முப்பது மைல் தூரம் பிரயாணம் செய்து பழைய பள்ளியை அடைந்து தலைமை ஆசிரியரைச் சந்தித்து மாலையிட்டு வணக்கம் தெரிவித்து நன்றியை வெளிப்படுத்தி மகிழ்ந்தார்.

நமக்கு நல்லது செய்தவர்களை நன்றியுடன் நினைத்து விஸ்வாச உணர்வை மனதில் எழுப்பும் நேரம் மனிதனுடைய வாழ்வில் மிக உயர்ந்த நேரம். தன்னைப் பற்றித் தானே மகிழும் தருணம். விளையாடினால் உடல் சந்தோஷப்படுகிறது. நல்ல உணவைச் சாப்பிட்டால் வயிற்றின் உணர்வு சந்தோஷப் படுகிறது. புரியாதது விளங்கும்பொழுது அறிவு திளைக்கின்றது. நன்றியுணர்வு நல்லெண்ணத்துடன் மனதில் எழும்பொழுது ஜீவன் மகிழ்ந்து, உள்ளும் புறமும் சந்தோஷம் உபரியாகிறது. நன்றியறிதலை ஆன்மாவின் ஆனந்தம் என அறிகிறோம். நன்றியறிதலை ஆன்மா சைத்திய புருஷன் மட்டுமே உணர முடியும்.

Thank you என்பது மேலை நாட்டு வழக்கம். நம் நாட்டில் நன்றி சொல்லால் சொல்வதில்லை. நன்றிக்குரிய நேரம் மனிதன் தழுதழுத்துப் போவான். உணர்ச்சி பெருகும் அந்நிலையில் சொல்லால் அதை வெளிப்படுத்த முயன்றால் அது ஜீவனற்றுப் போகும். மேலை நாடுகளில் Thank you என்பது அத்தியாவசியமான பழக்கம். ஒப்புக்காகச் சொல்லும் சொல், இருந்தாலும் அதைப் பிறர் நம்மிடம் சொல்லும்பொழுது மனம் குளிரும். பழக்கத்தால் சொல்லும் வெறும் சொல்லும் உணர்ச்சியைத் தொட்டு மகிழவைக்கும்.

உடலுக்குப் பற்று உண்டு, உணர்வுக்கு ஆசையுண்டு. அறிவுக்கு விளக்கம் தேவை. நன்றி ஆன்மாவுக்கு மட்டுமேயுண்டு. மேலும், நம்மிடையேயுள்ள எல்லா உயர்ந்த குணங்களும் நாணயம், விஸ்வாசம், பொறுமை, நிதானம், பக்குவம் ஆன்மாவில் உறைபவை. அறிவாலோ, உணர்ச்சியாலோ அவற்றைப் பெறமுடியாது. அவற்றுக்கு அத்தகுதியில்லை.

மனித வாழ்வுக்கு அடிப்படைத் தேவைகள், அடுத்த நிலையிலுள்ளது ஆசை, மூன்றாம் நிலைக்குரியது அறிவு. இவை மூன்றுக்கும் நன்றியுணர்வு தேவையில்லை. நடைமுறையில் இருப்பதில்லை. இதைத் தாண்டிய கட்டம் பக்தி, ஞானம். பக்திக்கு அடிப்படையே நன்றி. அதனால் வாழ்வில் தெய்வ பக்தியுள்ளவர்க்கு நன்றியறிதல் இருக்கும்.

தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும்படியான வாழ்வுண்டு. அவர்கள் வாழ்வுக்கும் நன்றிக்கும் தொடர்பு கிடையாது. அவர்களுடைய தேவை பூர்த்தியானால், பூர்த்தி செய்தவரை நினைவு வைத்திருப்பதில்லை. படகு, ஏணியை அதற்கு உதாரணமாகச் சொல்வார்கள். ஏணி மூலம் ஏறி மேலே சென்றபின், படகால் ஆற்றைக் கடந்த பின் அவற்றை மனிதன் நினைத்துக் கொண்டிருப்பதில்லை. ஏணியை எல்லோரும் பயன்படுத்துகின்றனர். அனைவரும் முன்னேறுகின்றனர். ஆனால் ஏணி முன்னேறுவதில்லை. ஆசிரியர் தொழில் அனைவருக்கும் கல்வி வழங்கும் ஆசிரியர் ஏணிபோல் இருக்கின்றார் என்பதுண்டு. இது வாழ்வின் முதல்நிலை. உடலுக்குரிய நிலை. உடலைத் தொட்டால்தான் அதற்குப் புரியும். அரை அங்குலம் உடலை விட்டு நகர்ந்தால் அரை அங்குலத்திற்கு அப்புறம் அப்பொருள் இருப்பதை உணரும் தன்மை உடலுக்குக் கிடையாது. இயற்கையில் உடலால் அதை விட்டு நகர்ந்துவிட்ட பொருளையோ, மனிதரையோ உணரமுடியாது. இது உடலின் தன்மை. உடலே முக்கியம் என வாழும் மனிதர் பலர். அவர்களால் விலகிப்போன எதையும் எவரையும் நினைவில் கொண்டுவர முடியாது. இயற்கையில் அவர்களுக்கில்லாத திறனை அவர்கள் பெற்றதில்லை என குறை கூறினால் அவர்கள் மீது தவறில்லை. குறை கூறுபவர்களான நம்மீதுதான் அக்குறை.

நூறு ஏக்கருக்குச் சொந்தக்காரரான பண்ணையாரிடம் தலைமுறை தலைமுறையாக வேலை செய்த பண்ணையாட்கள் இருவர். பண்ணையார் திவாலானார். 4 ஏக்கர் நிலம் வாங்கிக் கொண்டு தன் நிலத்தை விற்று விட்டுப் போய் விட்டார். வாங்கியவர் பழைய ஆராய்ச்சியைத் தொடர்ந்து தனக்கு வேலை செய்யும்படிக் கேட்டார். பழைய முதலாளியும் அதுவே சரி என நினைத்தார். இனி அந்த ஆராய்ச்சிக்குத் தகுந்த வேலை தன்னால் கொடுக்கமுடியாது என்பதை உணர்ந்தார். ஆனால் அந்த ஆராய்ச்சி மறுத்துவிட்டார். கடைசிவரை உங்களுடனே இருப்பேன், ஆராய்ச்சியாக இல்லாவிட்டால், உங்களிடமே கூலிக்காரனாக இருந்து மடிவேன் என அவருடன் போய் விட்டார். அடுத்தவன் காவல்காரன். எனக்கென்ன இருக்கிறது. வேலை கொடுப்பவர் முதலாளி. அன்று அவர் வேலை கொடுத்தார். இன்று நீங்கள் வேலை கொடுக்கின்றீர்கள். வேலை கொடுப்பவர் எனக்கு முதலாளி என்றான். ஆராய்ச்சி நன்றியறிதலுடைய நல்ல ஆத்மா. காவல்காரன் உடலால் வாழும் ஜடம், அவனுக்கு நன்றியறிதல் இல்லை என நாம் அவனைக் கடிந்து கொள்ள முடியாது. இயற்கையாக அவன் உணராதது அது.

பத்து வருஷமாக ஒரே ஆபீசில் நெருங்கிய நண்பர்கள் எனப் பெயர் வாங்கியவர்களுண்டு. ஒன்றாக வருவார்கள். ஒன்றாகச் சாப்பிடுவார்கள். ஒருவரை வீட்டில் காணோம் என்றால் அடுத்தவர் வீட்டில் பார்க்கலாம். ஏதோ காரணமாக அதே ஊரில் வேறொரு இடத்திற்கு மாற்றலாகி விட்டபின், அவர்கள் பழக்கம் குறைந்து விடுகிறது. ஆபீசில் மற்றவர், ஒருவரோடு அதேபோல் அந்நியோனியமாக அவர்கள் பழக ஆரம்பித்து விடுவார்கள். ஆறு மாதம் கழித்து ஒருவரை ஒருவர் சந்தித்தால் புது மனிதர்களைப் பார்ப்பதுபோல் ஓரிரு வார்த்தையுடன் பிரிந்துவிடுவார்கள். அன்று முழு ஆசையோடு நகமும் சதையுமாகப் பழகியது உண்மை. அதேபோல் இன்று வேறொருவருடன் நகமும் சதையுமாகப் பழகுவது உண்மை. ஆசையோடு பழகுபவர்களுக்கு ஆசை நீடிப்பதில்லை. அந்த ஆசையை வேறொருவர் பூர்த்தி செய்தால் அதுவே போதும். இவர்கள் நிலைக்கு ஓர் ஆங்கிலப் பழமொழியுண்டு. Out of sight out of mind என்பது அப்பழமொழி.

காமராஜ் தன்னுடன் பழகியவர்களை அவர்கள் மறந்து விட்டாலும் 20, 30 ஆண்டுகளுக்குப் பின்னும் நன்றியுடன் நினைவு வைத்திருப்பார். அந்த ஊரிலிருந்து ஒருவர் வந்தால் அவரை விசாரிப்பார். நாட்டின் பிரதம மந்திரியான பின் பழைய பள்ளித் தோழன் இன்று பள்ளி ஆசிரியராக இருப்பவனைக் கூப்பிட்டு அனுப்பி தன் மந்திரி சபையில் அமர்த்திக் கொண்டவர் பர்மா பிரதமர்.

உடலுக்கும், உணர்வுக்கும், அறிவுக்கும் இயற்கையாக நன்றியுணர்வில்லை. அறிவு தன்னை வருத்திப் பிறருக்காக நன்றியறிதலுடன் நடிக்க வேண்டும். ஆன்மாவுக்கு மட்டுமே உள்ள நல்ல குணம் நன்றியறிதல்.

(Timon of Athens டைமன் ஆப் ஏதென்ஸ்) ஏதென்ஸ் நகரத்து டைமன் என்று ஷேக்ஸ்பியர் ஒரு நாடகம் எழுதியிருக்கின்றார். டைமன் செல்வந்தர். உதாரகுணமுள்ளவர். அவரைச் சுற்றிப் பரிவாரமாக நண்பர்களிருந்தனர். அவருடைய சிறு சிறு செய்கைகளை அளவு கடந்து புகழ்வார்கள். கொடை வள்ளலாகத் திகழ்ந்தார். ஒரு நண்பர் டைமனுடைய குதிரையைப் பார்த்து அது நன்றாக இருக்கிறது என்றால் அந்த லாயத்திலுள்ள அத்தனை குதிரைகளையும் இனாமாகக் கொடுத்து விடுவார். அவருக்கு நஷ்டம் வந்தது. அத்துடன் புத்தியும் வந்தது. அத்தனை நண்பர்களும் விலகிப் போனார்கள். ஒரு சிறு உதவிகூட செய்யத் தயங்கினார்கள். மனித சுபாவத்தின் உண்மை சொரூபத்தை டைமனுக்கு அவருக்கு வந்த கஷ்டகாலம் உணர்த்தியது. காட்டுக்குப் போனார். கடைசி நேரத்தில் என்னை மனிதர்கள் பார்வை படாத இடத்தில் புதைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுவே சாதாரண மனிதனுடைய மனப்பான்மை. இதில் ஆச்சரியமில்லை. இதற்கு விலக்காக உள்ளவரைக் கண்டுதான் ஆச்சரியப்படவேண்டும்.

அதிகார பீடத்திலுள்ளவர் மாறும்பொழுது அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் மனநிலை சீக்கிரத்தில் வெளிவரும். இந்திராவும், காமராஜும் பிரிந்தபொழுது, ஒரு கட்சி இரண்டாகப் பிரியும்பொழுது, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையிலுள்ள தலைவர்கள், ஊழியர்கள், தொண்டர்களுக்குச் சோதனைக் காலம். அந்த நேரம் மனித மனத்தின் சாதுர்யத்தையும்', அதைச் செயல்படுத்திக்கொள்ள அவர்கள் கையாளும் முறைகளை கலையுணர்வோடு வெளிப்படுத்துவதையும் காண்பது ஒரு முழு வாழ்க்கையினுடைய அனுபவத்தை மூன்று நாளில் பெறுவது போலிருக்கும்.

"இப்படியெல்லாம் யோசனை செய்தால் அரசியலுக்கு ஒத்துவராது''. "நாம் என்ன செய்வது, நிலைமை மாறிவிட்டது. நாமும் மாறவேண்டியதுதான்''.

"மனதில் துரோகமில்லை. நிர்ப்பந்தத்தால் செய்ய வேண்டியிருக்கிறது''.

"எல்லோரும் செய்வதைத்தானே நானும் செய்கிறேன். எப்படி தப்பாகும்?'' என்பன போன்ற சமாதானங்களை தனக்குத் தானே சொல்லிக் கொள்பவர் பலர். எனக்கு அபிப்ராயமில்லை, என் குடும்பத்தாருக்காக நானும் மாறிக்கொள்கிறேன் என்பவர் இவர். எந்தக் காரணத்தைச் சொல்கிறார்களோ, எந்தச் சாக்கு சொல்கிறார்களோ அது முக்கியமில்லை. எதையாவது சொல்லி ஆதாயத்தைத் தேடுவார்கள். சில சமயம் நிலைமை மீண்டும் எதிராக மாறுவதும் உண்டு. முதல் கட்சி மாறியவர்கள் பலர் மீண்டும் மாறக் கூச்சப்படுவார்கள். சிலருக்கு அந்தக் கூச்சம்கூட இருக்காது. மீண்டும் அவர்கள் இடம் மாறும் போது அவர்கள் கொடுக்கும் வியாக்கியானம் இலக்கிய எல்லையை மீறியது.

ஒரு கிராமத்துப் பணக்காரரை கொள்ளைக்காரர்கள் வந்து தாக்கி, சாக்கில் போட்டு கட்டி நாலு மூலையில் நாலு பேர் தூக்கிக் கொண்டு போகும்பொழுது, என்ன செய்வது என்று அவர்களுக்குள் பேசுவது மூட்டைக்குள் இருப்பவருக்குக் கேட்டது. நாலுபேரில் ஒருவன் தன் வேலையாள் என்று புரிந்தது. ஏண்டா, முனியா, நீயுமா இதிலிருக்கிறாய் என்று கேட்டார். ஆமாம் சாமி என்று என்றுமுள்ள பணிவோடு பதில் சொன்னானாம் அவன்.

வயிற்றுப் பசிக்கு எதைச் சாப்பிட்டாலும் பசி தீரும் என்பது நிலை. நாக்கு ருசிக்குத்தான் பேதம் வயிறு உடல். நாக்கு உணர்வு. மனித வாழ்வு ஒரு வகையில் உடலைப் போன்றது. எந்த சௌகரியமும் பலன் தரும் என்றால், பொதுவாக மனிதன் அந்தப் பலனைத் தயக்கமில்லாமல் நாடுகிறான்.

நன்றியுணர்வு வயிற்றுக்கும், நாக்குக்கும் கிடையாது. மனச்சாட்சிக்குண்டு. மனச்சாட்சி ஒரு மனிதனுடைய வாழ்வை நிர்ணயிக்கும் என்றால் அவனுக்கு நன்றியறிதல் இருக்கும்.

துரோகம், ஆதாயமான நிலை, கட்சி மாறும் சூழ்நிலை, பேச்சை மாற்றிப் பேசிப் பலனடையும் நேரம், இது போன்ற நேரங்களில் நாலுபேர் ஏற்றுக்கொள்ளும் விஷயமானால், பெரும்பாலோர் உடனே மாறிவிடுவார்கள். வயதில் குறைந்தவர்கள் எளிமையாகவும், வயதில் மூத்தவர்கள் சிரமப்பட்டும் மாறுவார்கள், மாறாதவர்களில் பெரும்பான்மை, ஒரு சில சந்தர்ப்பத்தில் வயதானவர்களாக இருப்பார்கள். இவர்களை மற்றவர்கள் கேலி செய்வார்கள். விபரம் புரியாதவர்கள் எனப் பேசுவார்கள், மாறாதவர்களில் இரு பகுதியினருண்டு. முதல் வகை மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு உண்மையான நன்றியுணர்வோடு பழைய இடத்தில் இருப்பவர்கள். அடுத்தவர்களுக்கு அந்த உணர்வு இருக்காது. மாறினால் நாலுபேர் என்ன சொல்வார்கள். இத்தனை வயதுக்குப்பின் ஏன் நமக்கு அதெல்லாம் என்று எண்ணி மாறாமலிருப்பார்கள். இவர்கள் ஒப்புக்கு நடப்பவர்கள். பிறர் இவர்களை மட்டுமே கேலி செய்வார்கள். மனச்சாட்சிக்கு உட்பட்டவரை கேலி செய்யமாட்டார்கள். உண்மை அங்கும் வெல்லும்; என்றும் வெல்லும்.

அன்னை தன் கருத்தை தெளிவாகக் கூறுகிறார். நன்றியறிதலை நம்முள் உள்ள தெய்வம் உணர்கிறது. அதனால் தெய்வத்திற்கு நன்றியறிதலை செலுத்தவேண்டும். மனிதர்களுடன் பழகும்பொழுது நல்லெண்ணம், உதவி மனப்பான்மை வேண்டும் என்கிறார்.

மனிதனுக்கு நன்றியறிதலை செலுத்தக் கூடாதா என்று கேட்கலாம். மனிதனிடமுள்ள தெய்வீக குணத்திற்கு நன்றியறிதலைச் செலுத்தலாம். மனிதனால் நன்றியறிதலைப் பெற்று, மீண்டும் அதற்குரிய வகையில் நடக்க முடியாது. மனிதனுக்கு நன்றியறிதலை செலுத்தினால், பிரதி பலனாக எதையும் எதிர் பார்க்காதவர்கள் செலுத்தலாம். நன்றியை எதிர்பார்ப்பது அறிவுடைமையாகாது. சாவித்திரி என்ற காவியத்தில் Man of Sorrows சோக மனிதனின் மனநிலையை நீளமாக வர்ணித்த பகவான்,

I have loved since my birth. no one has loved me பிறந்ததிலிருந்து அன்பைச் செலுத்தினேன். எவரும் என்னிடம் அன்பாக இல்லை என்று எழுதுகிறார். பகவானைப் பற்றி அன்னை சொல்லியிருப்பதை நாம் கவனித்தால், அவர் தன் மனநிலையை, தன் அனுபவத்தையே இங்கு எழுதுவதாகத் தோன்றுகிறது. பகவானுடைய போட்டோவில் அவர் முகம் சோகம் நிறைந்திருப்பதைப் பார்த்து இந்த முகத்தை அவர் எனக்குக் காண்பித்ததேயில்லை என்கிறார். மனித சுபாவத்தை ஆழ்ந்து சோதித்த பகவான், அதனால் அன்பைத் திருப்பிக் கொடுக்க இயலாது என்று விளக்குகிறார்.

நிரந்தர அமைதியுடனும், சந்தோஷத்துடனுமிருக்க வேண்டுமானால் ஆழ்ந்து தீவிரமாக இறைவனுக்கு நன்றி யறிதலை அன்றாடம் தெரிவிக்க வேண்டும். அவனுடன் இரண்டறக் கலப்பதே நன்றியறிதலின் வெளிப்பாடாகும்.

ஆன்மா - சைத்திய புருஷன் - வெளிப்பட ஆரம்பித்த பின்னரே உள்ளத்தில் கருணை உற்பத்தியாகிறது. நன்றி உற்பத்தியாகிறது. உடலும், உணர்வும் கருணையை பலஹீனம் எனக் கருதுகின்றன. உடலுக்குள்ள வலிமையை வெளிப்படுத்த கருணை தடையாக இருக்கின்றது. உணர்வுக்குரிய வேகத்தை நன்றியறிதல் தடை செய்யும். தங்கள் இயல்பான வலிமையை தடைசெய்வதால் கருணையையும், நன்றியையும் உடலும் உணர்வும் விரும்புவதில்லை.

மனமும், அறிவும் அதற்குரிய முழுத் தெளிவுடனிருப்பதில்லை என்பதால் உணர்வின் ஆசையாலும், உடலின் இருளாலும் அலைக்கழிக்கப்பட்டு, தன் சுதந்திரத்தை இழந்து, அர்த்தமற்ற அடிமையாகச் செயல்படுகிறது. ஆசை தன்னை மீறிய நேரத்தில் அறிவு செயலற்றுப் போகும் என்பது மட்டுமல்ல, அந்த ஆசையை நிறைவேற்ற அது இட்டவேலையை தனக்கேயுரிய புத்திசாலித்தனத்துடன் செய்வதைப் பார்க்கலாம். உடலின் இருள் பூரணமானது. அதன் போக்கை மீற அறிவால் முடியாது. பத்தியத்தை மீறினால் உயிருக்கு ஆபத்து என்றாலும் உடல் பத்தியத்தை மீற முயலும். அறிவு அதற்கு துணை நிற்குமே தவிர உடலைக் கட்டுப்படுத்த முன் வராது. மற்றவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். மனத்திற்கு அறிவுடைய விழிப்பில்லை. விழிப்பேற்படும் பொழுதும் அறியாமையால் விழித்தெழும். எழுந்த நிலையில் அதன் பார்வையில் கருணைபட்டால், கருணையை கருணையாகச் செயல்பட அனுமதிக்காது, தனக்குப் புரிந்த வகையில்தான் அனுமதிக்கும். ஆன்மாவால் உற்பத்தியான கருணையை மனம் நடைமுறையில் பரிதாபமாக மாற்றும். அதிகமாகப் போனால் உதவியாக ஏற்றுக்கொள்ளும். நன்றியறிதலை, பெற்றதைத் திருப்பிக் கொடுக்கும் மனநிலையாக மாற்றும், கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு மரியாதை தேடும், புகழை நாடும்.

கருணையையும், நன்றியறிதலையும் உடலும் உணர்வும் பலஹீனமாகக் கருதுகின்றன. அவற்றை மனம் பரிதாபமாகவும் பட்ட கடனைத் திரும்பத் தருவதாகவும் மாற்றுகிறது. ஆன்மாவுக்கு மட்டுமே தெளிவுண்டு. ஆன்மா விழித்தெழுந்தால் ஜீவனை ஆட்சி செய்தால், உதவியை நாடும் அனைத்தை நோக்கியும் நம் கருணை வெள்ளமாகப் பாயும். தெய்வம் வெளிப்படும் இடங்களைக் காணும் பொழுது மனத்தில் நன்றியறிதல் தானே உதயமாகும். கலப்பற்ற கருணை, தூய நன்றியறிதலை வெளிப்படுத்தும் திறன் மனத்திற்கில்லை, ஆன்மாவுக்கேயுண்டு.

அருள் அனைத்துலகிலும் செயல்படுகிறது, அறியாமையால் மனிதன் அதைக் காண முடிவதில்லை. அருள் செயல்படும் நேரம் அதைக்கண்டு அன்பு பெருகி, அதை இறைவன் திருவுள்ளமாக அடையாளம் காணுதல் நன்றியறிதலாகும் என்கிறார் அன்னை. சிறு குழந்தைகள் தெருவில் ஆரவாரமாக விளையாடும் பொழுது இறைவனைக் காண்கிறேன். அவனைக் கண்டதால் மனம் நன்றிப் பெருக்கால் நிறைகிறது என்கிறார் அன்னை.

நான் வீடு கட்டினேன். நான் எலக்ஷன் நடத்தினேன். நான் விளம்பரம் செய்தேன், நான் ஆப்ரேஷன் செய்தேன், நான் குடும்பம் நடத்துகிறேன் என்பது நம் நிலை. வீட்டை இறைவன் கட்டுவதை நம் ஊனக் கண் பார்த்திருந்தால் நாம் கருவியாக இருக்கின்றோம் என்று விளங்கும். எலக்ஷனை நடத்துவது ஆண்டவன், என்னை அங்கு வேலை செய்யச் சொல்லியது இறைவன் என்றெல்லாம் நமக்கு விளங்க அடக்கம் தேவை. நான் செய்தேன் என்று கூறுவது அகந்தை. இதுவரை நடந்தவை இறைவனால் நடந்தவை, இப்பொழுது நடப்பவையும் அவன் செயலே என்றுணரும் அடக்கம், நன்றியறிதலாகும்.

சீப் இன்ஜினீயருடன் நான்கு பேர் இருந்தால், யாரை எது கேட்டாலும் அவர்கள் பதில் சொல்லாமல் CE-யைப் பார்ப்பார்கள். முதலாளிக்குக் கட்டுப்பட்டவர்கள், கணவனுக்குக் கட்டுப்பட்ட மனைவி, தலைவர் கீழேயுள்ள தொண்டர் ஆகியவருடைய பழக்கம் இது. இயல்பாக அவர்களுக்கு பதில் எழாது. தலைவரைத் திரும்பிப் பார்ப்பார்கள். தலைவர் பதில் சொல்ல வேண்டும், அல்லது இவரைப் பதில் சொல்ல உத்தரவிட வேண்டும்.

எந்த நேரமும், எந்தச் செயலும் இறைவனைக் காண்பதால் அவனிருக்கின்றான் என்ற நினைவில், அவனுக்குத் தன்னை இயல்பாகக் கட்டுப்படுத்தி, அவனுக்காக நாம் செய்யும் காரியங்களை அதிகபட்சத் திறமையோடு செய்வது, நாம் கடமையைச் செய்வதாகும். அந்தக் கடமையுணர்வு நன்றி யறிதலாகும். இயல்பாக சந்தோஷமாக இருப்பதே இறைவனுக்கு நாம் நன்றி செலுத்துவதாகும் என்கிறார் அன்னை.

நமக்குக் கிடைப்பதெல்லாம் அன்னையின் அனுக்கிரஹம். முதல் பரிசு பெறுவது அருள். மூன்றாம் முறை பெயிலாவதும் அன்னையின் அருள். பரிசை மட்டும் காண்பவன் அரை மனிதன். பெயிலானதும் அருளே என்று அறிபவனே முழுமனிதன். நான் கொடுக்கும் எதையும் சந்தோஷமாகப் பெற்றுக்கொள்வதே தன்னலமற்றதற்கு அடையாளம் என்கிறார். மூன்றாம் முறை பெயிலானபின் சந்தோஷமாக அதை ஏற்றுக்கொள்ளும் மனம் சுயநலத்தால் சுருங்காது. வெற்றி மட்டும் நல்லது எனக் கருதுபவன் சுயநலம் பாராட்டுபவன். நான் மூன்றாம் முறை பெயிலாவது அன்னையின் செயல் பூர்த்தியாவதற்காக என்று ஏற்றுக்கொள்ள சுயநலமிருக்கக் கூடாது. பரந்த தன்னலமற்ற மனம் வேண்டும். அந்த நேரம் நன்றியுடன் இருப்பது அகந்தைக்கு நாம் செய்யும் மாற்று என்கிறார்.

தானென்ற ஆணவமுடையவனால் நன்றியுடனிருக்க முடியாது, அவன் காரியம் ஜெயித்தால் அது அவனுடைய திறமைக்கு வெற்றி. தோற்றால் மற்றவர்கள் காரணம். அவன் மனிதனையும் குற்றம் சாட்டுவான், தெய்வத்தையும் நிந்திப்பான். அவனுக்கு வேண்டியது வெற்றி. தெய்வமில்லை, நன்றியறிதலில்லை. கிடைத்தால்தான் பெரியவன், கிடைக்காவிட்டால் மற்றவர்கள் சரியில்லை. எனக்கு வெற்றியைக் கொடுக்காத தெய்வம் எனக்கெதற்கு? அப்படிப்பட்ட தெய்வத்தை நான் ஏன் வணங்க வேண்டும் என்பது அவன் நிலை. நன்றியறிதலுக்கும் அவனுக்கும் தூரம்.

வருஷத்தில் ஒரு முறை வரும் பரீட்சைக்கு முழுமூச்சோடு படிக்கின்றோம். அதேபோல் வருஷம் முழுவதும் படிப்பது சிரமம். வாழ்நாள் முழுவதும் சேகரம் செய்த செல்வத்தைக் கொண்டு பிள்ளைகளுக்குத் திருமணம் செய்கிறோம் அல்லது வீடு கட்டுகிறோம். வருஷம் ஒரு வீடு கட்டுவதோ, வருஷம் ஒரு திருமணம் செய்வதோ எளிதல்ல. நீண்ட நாள் முயற்சியில் நடக்கும் ஒரு பெரிய காரியம் அது. அதேபோல் வெகு நாள் எதிர்பார்த்தவரைச் சந்தித்தபொழுது உணர்ச்சி வசப்பட்டு பொங்கிவழியும் நிலைக்கு வருகிறோம். அவருடனே தொடர்ந்து வசிக்கும் பொழுது அதே உச்சகட்ட உணர்ச்சி தினமும் வருவதில்லை. பல ஆண்டுகளாக மனம் சிந்தித்த ஒரு விஷயம் புலனாகும்பொழுது ஞானம் உதயமானதுபோல் மனம் பளிச்சென்றிருக்கிறது. அதனால் முகம் பிரகாசமடைகிறது. அது அடிக்கடி வருவதில்லை. வந்ததை நிரந்தரமாக நிலைப்படுத்துவது கடினம்.

நன்றியறிதல் அதே போன்று ஆன்மாவின் முயற்சி. பல நாளைய முயற்சி ஒரு நாள் பலன் தருகிறது. அதை நிலையாகத் தினமும் பின்பற்றுவது எளிதல்ல. ஒரு முறை நன்றியறிதல் வெளிப்பட்டால், அதன்பின் அது பின்னணியில் போய்விடும். இறைவன் நம்மை அறிவான். செயலையும், செயலின் தன்மையையும் அறிவதாலும், ஏன் நாம் ஒரு காரியத்தைச் செய்கிறோம் என்பதையும் அறிவதாலும், நாம் செய்யும் காரியங்கள் அனைத்தையும் அவரால் பொறுத்துக்கொள்ள முடிகிறது.

நன்றியறிதலின் அளவு, ஒருவருடைய பெருந்தன்மைக்கு அளவு கோலாகும்.

ஒரு பெரிய கடைக்கு நாம் சென்றால் நம் அந்தஸ்துக்கு மீறிய வரவேற்பு கிடைக்கிறது. தேர்தல் சமயத்தில் சாதாரண மனிதர்கள் வாக்காளர் பெருமக்களாகி விடுகிறார்கள். முக்கியமான ஆபீசில் சிறிய உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பெரிய நேரங்களில் பெரிய மரியாதை கிடைப்பதுண்டு.

டாட்டா கம்பனியில் கிராமத்துப் பிள்ளைகளை சோதனை செய்து அபரிமிதமான திறமை இருக்கும் என்பவர்களை எடுத்து, பெரிய தொழிற்சாலைகளில் டெக்னீஷியனாக பயிற்சி அளிப்பதுண்டு. அவர்கள் தங்கும் ஹாஸ்டலுக்கு ஒருவர் போனார். நேற்று வரை கிராமத்திலிருந்த பிள்ளைகள் இன்று கட்டில், மெத்தை, தரையில் கம்பளம், TV, போன்ற உயர்ந்த வசதிகள் நிறைந்த அறையில் தங்கியிருந்தார்கள். ஏன் இவ்வளவு வசதி இவர்களுக்கு என்று வந்தவர் கேட்டார். அவர்கள் மிக நுட்பமான (parts) பகுதிகளைச் செய்யவேண்டும். அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும். அவை விலையுயர்ந்த பகுதிகள், என்று பதில் சொன்னார். அவர்களை நாம் நுட்பமாகக் கவனித்தால்தான், அவர்கள் இப்பகுதிகளை (parts) நுட்பமாகக் கவனிப்பார்கள் என்றார். பயிற்சி பெறும் பிள்ளைகளுக்கு தங்களை அன்புடனும், அளவு கடந்த வசதியுடனும் கவனிக்கின்றார்கள், என்ற எண்ணம் உயர்ந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. பக்திக்கு அது போன்ற உணர்வுண்டு. ஆண்டவனிருக்கிறான். அவன் நம்மை நினைக்கின்றான், நம் தகுதிக்கு மீறிய அன்பை நம் மீது பொழிகின்றான் என்று பக்தியுணர்கிறது. அதுவே நன்றியறிதல். ஒவ்வொரு முறையும் மனிதன் இறைவனின் கருணையை தன் பக்தியால் தொடும் பொழுதும், இறைவனின் அருள் அவனையறியாமல் தீண்டும் பொழுதும், இந்த நன்றிப்பெருக்கு ஏற்படுகிறது. அது பரவசமாகிறது.

பல பேர் உள்ள இடத்தில் ஒரு குழந்தை வந்தால் அனைவரும் அதை கவனிக்கின்றனர். அனைவருடைய முகத்தையும் அந்த நேரம் கவனித்தால், அவை மலர்ந்து பிரகாசமாக இருக்கும். அப்பிரகாசமான மலர்ச்சி நன்றி யறிதலாகும். இதை நாம் அறிவோம். அவ்வுணர்வுக்கு ஈடில்லை; இணையில்லை. அழகிய மலர், பறவையின் குரல், நல்ல செயல், செதுக்கப்பட்டதுபோன்ற சொல், சூரிய உதயம், ஆகியவை மனிதனை அதுபோல் மலர வைக்கும். வாழ்க்கை என்றால் வாழ வேண்டியது, பாரமானது, மீதி நாளைக் கழிக்க வேண்டும் என்ற உணர்வு மாறி வாழ்வு ஜீவனுள்ளது, மலரும் தன்மையுடையது, நாம் காண்பதே முடிவல்ல, பின்னணியில் உள்ளது பெரியது, இறைவன் திரை மறைவில் நின்று புன்னகையால் மலர்கின்றான் என்ற பரவச உணர்வு ஏற்படும்.

பக்தியில்லாமல் நன்றியறிதல் பூரணம் பெறாது. நன்றியறிதலின் நறுமணம் பக்தி மூலமாகவே வீசும்.

ஆர்வமாக இயல்பாகச் செயல்படுபவர்களுண்டு. ஆர்வம் அதிகமாகும்பொழுது புதிய சந்தர்ப்பங்கள் சில சமயம் வரும். அவை பொருள் பெருகும் சந்தர்ப்பமாக இருப்பதும் உண்டு. சந்தோஷம் பெருகும் வாய்ப்பாக இருப்பதும் உண்டு. உயர்ந்த நன்றியுணர்வு தானே எழுபவருண்டு. அவர்களுடைய உணர்வு சிறக்கும் பொழுது அருளைக் கண்ணுறும் வாய்ப்பு ஏற்படுகிறது. அன்னை படிப்பறிவில்லாத பலரைத் தான் பார்த்து அவர்களிடம் ஆர்வத்தையும், நன்றியறிதலையும் கண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆர்வமாகச் செயல்படும் நேரம் சுயநலத்தைக் தாண்டி வருகிறோம். அகந்தையையும் தாண்டப் பயன்படும் கருவி ஆர்வம். நன்றியறிதல் பெருகியபொழுதும் அகந்தையை மனிதன் கடந்து வருகிறான். இவை ஆன்ம விளக்கம் தருபவை.

நம்மால் பிறரிடம் நன்றியறிதலுடன் இருக்க முடியுமானால் நல்லது. ஆனால் அதையே ஒரு கொள்கையாகக் கடைப்பிடித்து மற்றவர்கள் நமக்கு நன்றியறிதலுடன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அதுவே சிறப்பு. நடைமுறையில் நாம் நன்றியறிதலைக் கடைப்பிடித்தால், மனம் பிறரிடமும் அதை எதிர்பார்க்கும். மனிதர்களிடம் நல்லெண்ணமும், இறைவனுக்கு நன்றியறிதலையும் செலுத்த வேண்டும் என்கிறார் அன்னை.

மனிதன் நன்றியறிதலுடையவன் இல்லை என்பதை நம் மனம் ஒத்துக்கொண்டாலும், நாம் அவனுக்கு நன்றியோடு இருக்க முயல்வது நல்லதல்லவா என்று மனம் நினைக்கிறது. அதையும் செய்து பார்த்தால் வேறொன்று புரியும். மனிதனால் நன்றியுணர்வை பெற்றுக் கொள்ள முடிவதில்லை. அவன் அதற்கு ஏதாவது ஒரு காரணம் கற்பிக்க முற்படும் பொழுது நாம் மனம் ஒடிந்து, கசந்து விடுவோம். நன்றியறிதலுள்ளவரிடம் நாமும் நன்றியறிதலுடனிருந்தால் அங்கு பிரச்சினை வராது. நல்லுணர்வுக்கும் செயல்படும்பொழுது வரையறையுண்டு. எல்லையைத் தாண்டினால் எதற்கும் தலைகீழான பலன் வரும்.

இவையெல்லாம் வாழ்விற்குட்பட்ட பிரச்சினைகள், கண்ணுக்கு தெரியும் நிகழ்ச்சிகள். ஒருவர் நமக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறார். மனம் நெகிழ்ந்து விடுகிறது. வேலை கிடைத்தவுடன் அவரைப் போய்ப் பார்த்துச் சொல்லிவிட்டு வருகிறோம். இது நல்ல காரியம். வேலை வாங்கிக் கொடுக்கும் நல்ல குணமுள்ளவர் ஏன் பையன் வந்து சொல்கிறான்? மேலும் உதவி எதிர்பார்க்கிறான் போலிருக்கிறது என்று நினைக்கிறார். உதவி செய்யும் மனப்பான்மையையும், பிறரைத் தவறாக நினைக்கும் சின்ன புத்தியும் கலந்திருக்கின்றது, அதனால் அவருக்கோ அவனுக்கோ பிரச்சினையில்லை.

இதைத் தாண்டிய கட்டங்களுண்டு. அங்கு பெறுபவருக்கும். கொடுப்பவருக்கும் என்ன நடக்கிறது என்று தெரியாது. நிகழ்ச்சிகள் தானே நிகழும். நாமும் உள்ளுணர்வால் அதற்கேற்ப நடந்தால், நல்லது. தானே நிகழும் நிகழ்ச்சிகளுக்கு நாம் யாருக்கு நன்றி சொல்ல முடியும். மனம் வேலை செய்தால் அதன் குணத்திற்கேற்ப நடக்கும், அவை ஒத்துப்போக வேண்டும். முரண்பாடிருந்தால், சமூகமும் நம் மனச்சாட்சியும் ஏற்றுக் கொள்வதை life வாழ்வு ஏற்றுக்கொள்ளாது. அதற்குரிய தீர்ப்பை வழங்கும். தீர்ப்பு மனநிலைக்கேற்ப இருக்கும்.

இருபதுலட்ச ரூபாய் சொத்துள்ளவர் வக்கீலை அணுகி திவால் பதியச் சொன்னார். எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடியும் சமயத்தில், அவர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது. அவருக்கு நேராக கடமையில்லாத இடத்தில், நல்ல உதவி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது. உதவியைப் பெற வேண்டியவர் இவரை உதவி கேட்கவில்லை. கேட்கக்கூடிய உறவில்லை, தன் திவால் நிலைமை ஒருபுறமிருக்க, உதவி கேட்காதவருக்கு, உதவ வேண்டும் என முடிவு செய்தார். தான் உதவமுடியாத நிலை. மலையைப் பிரட்டி வெற்றிகரமாக 30 நாளில் 300 நாளில் முடியாததை செய்து முடித்தார். உதவிபெற்றவர் நன்றிப்பெருக்கால் நெகிழ்ந்தார். திரும்ப அவர் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. இதில் சம்பந்தப்பட்ட தொகை, பெற்றவருடைய நிலையை விட மலை அளவு பெரியது. அதனால் உணர்வால் செலுத்திய நன்றியுடன் அவர் கடமை முடிந்தது. அடுத்த ஆண்டு நிலைமை அளவு கடந்து மாறியதால் பெரும் தொகையால் சென்ற ஆண்டு உதவியவருக்கு நல்ல உதவி செய்யும் திறன வந்தது. அந்த உதவியைச் செய்ய முன் வந்தார். ஏனோ முதல் உதவி செய்தவர் அவ்வுதவியைப் பெற மறுத்துவிட்டார். அடுத்த ஆண்டு நிலைமை மேலும் மாறியது. 20 லட்சம் சொத்து திவாலாகும் நிலையை எட்டியவர், 2½ கோடி சொத்து பெற்றார். இவர் செய்த உதவியும், இவருக்கு மற்றவர் செய்ய முன் வந்ததும் அவர்கள் தெளிவுற அறியாதது. இருவருக்கும் மனம் நேர்மையாக இருந்ததால் தொடர்ந்து நல்லதை life வாழ்வு தானே தன் சட்டப்படி நடத்திக் கொண்டது.

35 வயது இலட்சியவாதி நெடுநாள் சிரமத்திற்குப் பின் சௌகரியமான உத்தியோகம் பெற்றார். 300 பேர் வேலை செய்யும் ஸ்தாபனத்தில் junior most கடைசி நிலையில் சௌகரியமான உத்தியோகம் கிடைத்தது. பிரபலமானவர் என்பதால் தினமும் பல பேர் இவரிடம் அறிமுகமானார்கள். அனைவரும் தங்கள் வசதிக்காக இவரிடம் வருபவர். அவர்களுள் இலட்சியவாதியாக ஓர் இளைஞரும் வந்தார். வந்தவர், இவரைத் தலைவராகவும், இலட்சியத் தலைவராகவும், அன்பிற்குரியவராகவும் ஆர்வமாக ஏற்றுக்கொண்டார். செய்யக்கூடியது என்று ஒரு திட்டமோ, காரியமோ இல்லை, எல்லாம் பேச்சளவில். ஆனால் ஜீவனும், இலட்சியமும், உண்மையும், உயர்வும் நிறைந்த நாட்களாக அவர்கள் உறவு வளர்ந்தது. புதிய நிலையை உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஸ்தாபனத்தில் ஸ்தாபிதமானதிலிருந்து இல்லாத இலட்சியத்தை உருவாக்க முனைந்தார் இலட்சியவாதி. எதிர்பாராவிதமாக, பல தடையிருக்க வேண்டிய இடத்தில், பல பாராட்டுகளுடன், இலட்சியத் திட்டம் நிறைவேறியது. அந்தத் திட்டத்தில் பெறவேண்டிய அனைத்துப் பலனும் இலட்சியவாதிக்கே முழுமையாகக் கிடைத்தது. முதல் கட்ட வெற்றி, அடுத்த கட்டத்தை நினைக்கச் சொல்லிற்று. அடுத்த கட்டம் 100% நிறைவுடன் நிறைவேறியது. ஸ்தாபனத்தில் ஜூனியராக இருந்தவருக்கு சீனியர்களுக்கு கிடைக்காதது கிடைத்தது. அதற்கடுத்த கட்டத்தையும் எட்டவேண்டும் என அனைவரும் அவரை உற்சாகப்படுத்தினர். மந்திரியின் நண்பர் துணை வந்தார். பெரிய கட்டம் பெரிய அளவில் பெரும் புகழோடு பூர்த்தியாயிற்று. இதற்கடுத்தாற்போல் உள்ளது ஸ்தாபனத் தலைவருக்கும் மேற்பட்ட இடம். அதிலும் முழு செல்வாக்கு ஏற்பட்டது. எல்லாம் ஒரு வருஷ காலத்திய நிகழ்ச்சிகள். இளைஞரும் இலட்சியவாதியும் பிரியா நண்பர்களானார்கள்.

இளைஞருக்கு அற்புதமான நல்ல உதவியை இலட்சியவாதி செய்யும் சந்தர்ப்பம் அருகில் காத்திருந்தது. கேட்டுப் பழக்கமில்லாதவர் இளைஞர். வற்புறுத்திக் கேட்டாலொழிய கொடுத்துப் பழக்கமில்லாதவர் இலட்சியவாதி. ஆனால் கேட்கும் நிலையும், கேட்டு வற்புறுத்தும் நிலையும் ஏற்படவில்லை. இளைஞன் தன் வாழ்வின் அடுத்த பகுதியைத் தேடிப் போய் விட்டான். இளைஞனின் தன்னலமற்ற இலட்சிய நோக்கால், இலட்சியவாதியின் பத்து ஆண்டு வறண்ட வாழ்வில் புதிய நிலைகள் உருவாகி, பெரிய பெரிய வெற்றிகளை எல்லா கட்டத்திலும் அளவு கடந்து வாழ்க்கை வாரி வழங்கியது. வாரி வழங்கிய வாழ்க்கைக்கு ஒரு நியதியுண்டு. அதற்குரிய முறையில் பெற்றவர் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வாழ்வின் அடுத்த நியதிகள் செயல்படும். தான் பெற்றது என்ன என்றறியும் இலட்சியவாதிக்கு, தான் எப்படிப் பெற்றோம் என்ற தெளிவில்லை. யார் மூலம் இந்த நிலைகள் ஏற்பட்டன என்பதும் எண்ணத்தில் எட்டாத ஒன்று. இலட்சியவாதிக்கு இதெல்லாம் தெரியாது என்றால், இளைஞனுக்கு எதுவும் தெரியாது. ஆனால் தெரியவே தெரியாது என்று மட்டும் சொல்லமுடியாது. இதையெல்லாம் நீங்கள் வந்த பின்தானே ஆரம்பித்தேன் என்று அடிக்கடி பேசுவதுண்டு. சூட்சும உணர்வுக்குத் தன் கடமை தெரியாமலில்லை.

செய்ய வேண்டியவருக்குச் செய்யாதது மட்டுமல்ல. இலட்சியவாதிக்கு உறவு ஒருவர் உண்டு. அவர் இலட்சியத்திற்கு எதிரானவர். அவருக்குத் தகுதியில்லாததை - இளைஞனுக்குத் தகுதியுள்ளதைச் - செல்லும் தடம் புரண்டு, பெருமுயற்சி செய்து இலட்சியவாதி பெற்றுக் கொடுத்தார். சில ஆண்டுகள் சென்றன. உதவி பெற்ற உறவினரும், இளைஞனும் வேறோர் இடத்தில் பெரிய அந்தஸ்திலும், சிறிய அந்தஸ்திலும் சந்தித்தனர். அந்தஸ்திற்கு ஏற்ப உறவிருந்தது. இலட்சியவாதி உறவினரை வந்து பார்க்க ஆவலான நேரம். உறவினர் அகால மரணமடைந்ததால் மரணத்தைக் கேள்விப்பட்டு வர நேர்ந்தது.

செய்ய வேண்டியதைச் செய்யாமல், செய்யக் கூடாதவருக்குச் செய்தால், சமூகம் ஏற்றுக்கொள்ளும். மனச் சாட்சி அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளாது. வாழ்க்கை அதன் நியதிக்குரிய பலனைத் தவறாது வழங்கும்.

இறைவனையடைய நன்றியறிதல் நல்ல முறை. வாழ்வில் தனக்கு நடப்பவை அனைத்துக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்த கூடியவன், இறைவனையடைவான்.

நன்றியறிதல் என்ற மலருக்கு ipomea என்று பெயர். வேலியில் பயிராகும் செடி. குவளை போல் சற்று நீலநிறமானது. ஆடா தொடை செடி என்று பெயர். அதன் மலருக்கு நன்றியறிதல் என்ற பெயரை அன்னை அளித்துள்ளார்.

விஸ்வாசமும், துரோகமும் ஒன்றே என்பது ஆன்மிகக் கொள்கை. விஸ்வாசமாக ஆரம்பிக்கும் உறவு துரோகத்தில் முடியலாம். துரோகத்தில் ஆரம்பிப்பது விஸ்வாசத்தில் முடியலாம் என்பது ஆன்மிகச் சட்டம். ஆன்மா செல்வத்தை அனுபவிக்க முயன்றால், செல்வமுள்ள இடத்தில் ஜனிக்கிறது. அடுத்த பிறவியில் அதிகச் செல்வம் உள்ள இடத்தில் பிறக்கின்றது. தொடர்ந்து பெரிய செல்வத்தை நாடி முடிவில் மிகப்பெரிய செல்வந்தர் நிலைக்கு வரும். செல்வத்தை முழுவதும் அனுபவித்த ஆன்மா, இனி இதற்கு எதிரான அனுபவத்தைப் பெற விழையும். ஏழையாகப் பிறக்கும். தொடர்ந்து அதிக ஏழ்மை நிலையை நாடும். முடிவில் தரித்திரமே உருவான நிலையில் ஜனிக்கும். அதற்கடுத்தாற்போல் வேறு அனுபவத்தை நாடும்.

உஜ்ஜயினி அரசன் நன்கு தமிழ் பயின்று, தமிழில் புலமையுள்ளவன். ஒரு பிச்சைக்காரியின் அழகைக் கண்டு வியந்து அவளை மணந்தான். பிச்சைக்காரிக்கு இராஜபீடமும் அரசனும் ஒத்துவரவில்லை. குதிரை லாய சாணி நெடியும், குதிரைக்காரனும் மனத்திற்கு இதமாக இருந்தது. அரசன் கண்ணில் இது பட்டு விட்டது. அவளை நடுத்தெருவில் நிறுத்தி கல்லால் அடிக்கச் சொன்னான். அவள் இறந்துவிட்டாள். அரசன் பட்டத்தைத் துறந்து பரதேசியாகி பட்டினத்தார் சிஷ்யனாகினான். அவள் நாயாகப் பிறந்து பட்டினத்தாரை தஞ்சம் புகுந்தாள். பட்டினத்தார் அந்த நாயை பத்திரகிரியிடம் ஒப்படைத்தார். நாய் பத்திரகிரியின் சட்டியால் அடிபட்டு மீண்டும் அவர் கையால் இறந்தது. அடுத்த பிறவியில் காசிராஜன் மகளாகப் பிறந்து, தன்னை பத்திரகிரியிடம் ஒப்படைக்க வேண்டினாள். அவனும் அழைத்து வந்தான். பத்திரகிரி அவளுக்கு மோட்சம் அளித்தார். கடைசிப் பிறவியில் அவள் பெற்ற விஸ்வாசம், முதற்பிறவியில் துரோகமாக ஆரம்பித்தது. கல்கத்தாவிலிருந்து ஆசிரமம் வந்தவர்கள் இரயிலில் அன்னையைப் பற்றி பேசியதைக் கேட்ட விவசாயி கண்கலங்கி தன் முழுசொத்தான சேமிப்பு ரூ 1-ஐ முடிச்சிலிருந்து எடுத்து, இதுவே என் சேமிப்பு. அந்தத் தாயிடம் இதை என் சார்பாகக் கொடுங்கள் என்றார். அதைப் பெற்ற அன்னை அவனுடைய பக்தி விஸ்வாசத்தால் பெரு மகிழ்ச்சியடைந்து "இப்படிப்பட்ட நன்றிக்குத் தெய்வம் எப்படி பிரதிபலன் அளிக்க முடியும்'' என்றார்.

அன்னை எழுதிய கதை

ஒரு பெரிய அரண்மனையின் இரகஸ்ய இடத்தில் புத்தி என்ற இடம் இருந்தது. தேவதைகளுக்கான திருவிழா ஏற்பாடாயிற்று. அங்கு தைரியம், அடக்கம், உண்மை, சாமர்த்தியம், தர்மம், அன்பு, பொறுமை, மென்மை, கருணை போன்ற தேவதைகள் அங்கு குழுமியிருந்தன. திடீரென்று பொன்னாலான வாயிற்படியைத் தாண்டி புதியதாக ஒரு தேவதை நுழைந்தாள். துவார பாலகர்கள் அத்தேவதையை முன்னால் பார்த்ததில்லை என்பதால் உள்ளே விடத் தயங்கினார்கள். ஒரு வழியாக உள்ளே அனுமதித்தனர்.

அத்தேவதையின் தோற்றத்தில் அவர்கள் எந்தப் பெரிய அம்சத்தையும் காணவில்லை. வெள்ளையுடையுடன் எமையான தோற்றம் அவர்களுக்கு வறுமையாகவே தெரிந்தது. இளமையாகவும், மென்மையாகவும் இருந்த அத்தேவதை அவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டமான அரங்கில் நடக்கவே தயங்கினாள்.

சிலரிடம் கேள்விகள் எழுந்தன. சாமர்த்தியம் தன் நண்பர்களைக் கலந்து ஆலோசித்துவிட்டு, இந்தப் புதிய தேவதையிடம் சென்று, "இங்குக் குழுமிய நாங்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிவோம். நீங்கள் புதியவராகக் காணப்படுகிறீர்கள். நாங்கள் இதற்குமுன் உங்களைப் பார்த்ததில்லை. யாரென்று தெரிந்து கொள்ளலாமா'' என்று கேட்டாள்.

பெருமூச்செறிந்துவிட்டு புதியவர், "உங்கள் கேள்வி எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. என்னை யாரும் எங்கும் அழைப்பதில்லை. என் பெயர் நன்றியறிதல்'' என்று பதிலிறுத்தார்.

* * *book | by Dr. Radut