Skip to Content

12. நினைவால் நிறைந்த குடும்பம்

20 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரமம் வருபவர் தான் முதலில் அன்னையை தரிசித்ததை நினைவு கூர்ந்து "அன்னையால் என் வாழ்வில் நடந்த நன்மைகள் பல என்றாலும் கடந்த ஓராண்டாக நான் அன்னையைத் தீவிரமாக ஏற்றுக்கொண்டதால் ஏற்படும் நன்மைகள் வியப்பைத் தருகின்றன. இடைவிடாத பிரார்த்தனையும், அழைப்பும் கடந்த சில மாதங்களாக என் வாழ்க்கையையே மாற்றிவிட்டன. சுருக்கமாகச் சொன்னால், எல்லாம் நல்ல செய்திகளே. நடந்த நிகழ்ச்சிகளை நடந்த பின்னும் நம்ப முடியாமலிருக்கின்றது'' என்றார்.

"என் தங்கை திருமணம் தேதி நிச்சயித்தபின் பணம் கிடைக்கவில்லை என்று நான் எழுதியதற்குப் பதிலாக 3 நாள் இடைவிடாமல் என்னைப் பிரார்த்திக்கச் சொல்லி கடிதம் எழுதினீர்கள். எதிரில் திருமணம் இருக்கும் பொழுது என்னால் அதை மேற்கொள்ள முடியவில்லை. ஆனாலும் நீங்கள் எழுதியதை மனதில் ஏற்று அன்னை நினைவுடனேயே பல காரியங்களையும் செய்து கொண்டிருந்தேன். அன்னை என் நினைவையே பிரார்த்தனையாக ஏற்றுக்கொண்டு நான் கேட்டதைவிட அதிகமாக எனக்கு உதவி செய்து விட்டார்கள்'' என்றொரு பக்தர் எழுதினார்.

ஒரு சில ஆண்டுகளாக அன்னையை ஏற்றுக்கொண்டு வாழ்விலும், மனதிலும் அன்னையின் ஸ்பரிசத்தை அனுபவித்தவர்கள் இனி என்னால் அன்னையின்றியிருக்க முடியாது என்ற நிலைக்கு வந்து விடுகிறார்கள். அவர்களில் சிலருக்கு குடும்பத்தினர் அனைவரும் விரும்பி அன்னையை முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட அதிர்ஷ்டமும் உண்டு. அவர்களுக்குப் பயன்படும் நெடுநாள் நீடிக்கும் ஒரு விரதம் போன்ற முறையை எழுதப் பிரியப்படுகிறேன்.

அன்னையை ஏற்றுக்கொண்ட வாழ்வின் அடிப்படை சத்தியம். மனதில் சத்தியம் குடிகொண்டால் வீட்டில் சுத்தம் குடிகொள்ள வேண்டும். சத்தம் விலக்கப்பட வேண்டும். மேலும் நல்லெண்ணம், நல்ல பழக்கங்கள் மட்டுமே நம் செயலை நிர்ணயிக்க வேண்டும். இதுவரை ஒரு குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக்கொண்டால் அக்குடும்ப வாழ்வை அன்னை நினைவால் நிறைக்கும் விரதத்தை மேற்கொள்ளலாம். நிரந்தரமாக அதை மேற்கொள்வதே முறை எனினும், நடைமுறையில் முடிவதில்லை. உயர்ந்த விருந்தை தினமும் தயாரிக்க முடிவதில்லை என்பதால் விசேஷ தினங்களில் மட்டும் அதை மேற்கொள்வதைப் போல் இந்த விரதத்தை ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு மட்டும் ஏற்றுக்கொண்டால், மனதில் ஏற்படும் மாற்றங்கள், வாழ்வில் திசை திரும்பும் விதம், குடும்பத்திலுள்ள சந்தோஷம், சௌகரியம், சந்தோஷம் உயரும் விதம் ஆகியவை ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். அந்த அனுபவத்தின் மீது நம் எதிர் காலத் திட்டங்களை எந்த அளவுக்குத் தீட்ட முடியும் என்று பிறகு நிர்ணயிக்கலாம்.

சத்தியம், சுத்தம், நல்லவை ஆகியவற்றை நாம் ஏற்கனவே ஓரளவு ஏற்றுக்கொண்டிருப்பதால், அவற்றின் நிலையை உயர்த்தி முழுமைப்படுத்த அனைவரும் முன்வருவார்களா என்று கண்டறிய வேண்டும். முறையின் பகுதிகளைக் கேட்டபின் அவர்களே முன்வந்து விரும்பி இதை நாம் செய்தல் நல்லது, எப்பொழுது ஆரம்பிக்கலாம் என்று கேட்டால் நிச்சயமாக இது பலிக்கும். நமக்காக மற்றவர் ஏற்றுக்கொள்ளும் விரதம், விரதமாக முடியுமே தவிர, பலன் நாம் எதிர்பார்க்கும் அளவில் இருக்காது.

ஒரு குடும்பத்திலுள்ள 4, 5 பேர் அனைவரும் இந்த ஏற்பாட்டை விரும்பி ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப் பிரியப்பட்டால் எப்படி அதை நிறைவேற்றுவது என்பதே இக்கட்டுரை. விரும்பி ஏற்றுக்கொண்டதாலும், ஆர்வத்தோடு செயல்படும் மனநிலையிருப்பதாலும், இத்திட்டத்தின் பகுதிகளை அவர்களுக்கு விவரமாக விளக்கினால் ஏற்கனவே பொதுவாக அவர்கள் அறிந்தது என்பதால் எளிதில் விளங்கும். இதுவரை விளங்காதவற்றை நாம் நுணுக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

சுத்தம்:- இருக்கும் சுத்தத்தின் அளவை உயர்த்த அனைவரும் முன் வந்தால் எளிதில் சுத்தம் உண்டாகும். இது சரி, எதற்காக நாம் இந்தச் சுத்தத்தை நாடுகிறோம் என்பது நம் நோக்கத்தைப் (motivation) பொறுத்தது. சுத்தம் இம்முறைக்கு உகந்தது என்று ஏற்றுக்கொண்டால் முறையைப் பூர்த்தி செய்வது நோக்கம். சுத்தம் அன்னைக்கு முக்கியம் என்றால் அன்னையைப் பின்பற்றுவது நோக்கமாகிறது. மேஜையை சுத்தமாக வைத்தால் மேஜை சந்தோஷமாக இருக்கும். அதை அன்னை விரும்புகிறார் என்றால் மேஜைக்கு கவனம் செலுத்துவது நோக்கமாகிறது. எவ்வளவு அதிகபட்ச உயர்ந்த நோக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியுமோ அதை ஏற்றுக்கொள்வது சிறந்தது.

பொங்கற்பானையை சுத்தம் செய்யாமல் வந்து படுத்துத் தூங்கிய அன்பரைத் தட்டி எழுப்பி, என்னை வந்து பார் என்று பானை அழைத்தது. போய், பானையைச் சுத்தம் செய்துவிட்டு வந்து படுத்தவுடன் அன்னை கனவில் தோன்றி நான்தான் உன்னை எழுப்பினேன் என்றார். அதேபோல் ஒழுங்கு. அனைவரும் ஒழுங்கை ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஒருவர் முயற்சி சிரமமாக இருக்கும், உயிர் போவது போலிருக்கும். வெளுத்த துணிகளை எல்லாம் மடித்து அடுக்கி வைக்க 1½ மணிநேரம் ஒருவர் வேலை செய்த பிறகு, முகம் கழுவி, துடைக்க துண்டு வேண்டி ஒருவர் அடுக்கிலிருந்து ஒரு துண்டை இழுத்தால் அத்தனையும் கலைந்து போகும்.

எதிரேயுள்ளவர்க்கு கேட்கும் அளவுக்கு மேல் சத்தமில்லாமல் பேச ஓரிரு மாதப் பழக்கமாவது வேண்டும், அனைவரும் முடிவை ஏற்றுக்கொண்ட பின் ஓரிரு மாதங்கள் இந்த அத்தனை பழக்கங்களையும் எந்த அளவில் நம்மால் கடைப்பிடிக்க முடிகிறது என்று சோதனை செய்வது நல்லது. அதற்குள் பொதுவாக வீட்டிலிருந்த சிறு பிரச்சினைகள் ஒவ்வொன்றாய் மறைவது தெரியும்.

இவையெல்லாம் முறைகள். முறைகளுக்கு ஜீவனளிப்பது அன்னை நினைவு. எந்தக் காரியத்தைச் செய்யும் முன்னும் அன்னையை நினைவு கூற ஏற்றுக் கொண்டவர்கள் சொல்வது ஒன்றே:- "வேலை வரும்பொழுது அன்னை மறந்துவிடுகிறது''. இதிலும் வெற்றி கண்டவர்கள், முதலில் அன்னையை நினைத்தாலும் வேலையை ஆரம்பித்த பின்னர் மனம் வேலையில் ஈடுபடுகிறதே தவிர, அன்னை மறந்து போய்விடுகிறது என்கிறார்கள். இரண்டாம் கட்டம் உயர்ந்தது, சிலரால் மட்டுமே வேலையினூடே அன்னையை நினைக்க முடியும். நம் விரதத்தைப் பூர்த்தி செய்ய அன்னையை நினைத்து வேலையைத் தொடங்கினால் போதும்.

செய்ய வேண்டியவை இவை. இதைவிட முக்கியமானது செய்ய வேண்டாதவை. சில்லரையாகப் பழகுவது, மட்டமாக ஊர்வம்பு பேசுவது போன்ற பல பழக்கங்களுண்டு. வீட்டில் சண்டை போடுவது சகஜமாக உள்ள இடங்களுண்டு. பொதுவாக ஒரு குடும்பம் மேற்சொன்ன விரதத்தை மேற்கொள்ள விரும்புகிறார்கள் என்றால், அவ்வீட்டில் இது போன்ற செயல்கள் இருக்கா. ஒன்றிரண்டு வந்தாலும் இந்த விரத காலத்திற்குள் அதை முனைந்து விலக்க வேண்டும்.

ஒரு வீட்டில் உள்ள பொதுவான வேலைகள் நாமறிந்ததே.. எலக்டிரிக் பில் கட்டுவது, பள்ளிக்கூடம் தவறாது செல்வது, காஸ் (gas) தீர்ந்தபின் அடுத்ததைப் பெறுவது, கார்ப்பரேஷன் வரி கட்டுவது போன்ற 20, 30 காரியங்கள் இருக்கின்றன.

சாதாரணமாக சாவிக்கொத்து தொலைந்து விட்டது, ரேடியோவுக்கு பேட்டரி கிடைக்கவில்லை, கிடைத்த பின் ரேடியோ வேலை செய்யவில்லை, ஆபீஸில் ஒரு நாள் லீவு கொடுக்கத் தயங்குகிறார்கள் என்பன போன்ற பல அசௌகரியங்களிருக்கும். நம் திட்டத்தைச் சுருக்கமாகச் சொன்னால், நேரம், சக்தி பணம் விரயமாவதை முழுவதும் தடுக்க அனைவரும் முனைய வேண்டும். சுமார் 30 நாள் இந்த விரதத்தை மேற்கொள்ளச் சம்மதித்து அதற்கு முன் ஓரிரு மாதங்கள் தங்களைத் தயார் செய்துகொண்டால், குறைகள் விலகுவதைக் காணலாம். அவை விரதம் ஆரம்பிக்கும் முன்பே விலகிவிட்டால், விரதத்திற்குரிய முறையோடு அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று பெயர். 

சரியான மனப்பான்மையுடன் தயார் செய்து கொண்டு அனைவரும் 30 நாள் இதற்குரிய அம்சங்களை பக்தியுடனும், பவித்திரத்துடனும் பூர்த்தி செய்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்குரிய பலன் என்று நானே எழுதுவதற்குப் பதிலாக இதை அனுஷ்டித்தவர்கள் தங்கள் அனுபவத்தை எழுதினால் அது எனக்கு உதவியாக இருக்கும். அதைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்.

  • அன்னையை இதுவரை நாம் அறியாதது போலவும் இப்பொழுதுதான் அன்னை என்றால் என்ன என்று கண்டு கொண்டதும் தெரியும்.
  • பக்திக்குரிய சிறப்பை நாயன்மார்களும், ஆழ்வார்களும் எழுதிய பெருமையின் உள் அர்த்தத்தை நாம் அனுபவத்தில் காண்போம். எற்றுக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம் என்று உள்ளிருந்து குரல் எழும்.
  • உள்ளந்தாள் நின்று உச்சி முதலாய் கண்ணாகி வெள்ளந்தான் பெருகுவதை அறிவோம். தெய்வ தரிசனம் தினமும் ஏதோ ஒரு வகையில் கிட்டும்.
  • (failure) தோல்வியே வாழ்வில் இல்லை போலிருக்கிறது என்ற உண்மை புலனாகும். சோகம் கவலை, குறை எங்கு போயிற்று என்று ஆராய்ச்சி செய்யவேண்டும்.
  • உலகத்தில் எல்லா திசைகளினின்றும் வாய்ப்புகள் நம்மை கை தட்டிக் கூப்பிடும்.
  • உலகம் துன்பத்திலிருந்து விடுபட்டு இன்பத்தை மட்டும் துய்க்க வேண்டும் என்ற அன்னை குறிக்கோள் எட்ட முடியாததல்ல என்று புலப்படும்.

தொடர்ந்து இதை மேற்கொள்ள முடியாவிட்டாலும் வருஷத்திற்கு ஒரு மாதம் இதை மேற்கொள்ள மனம் விழைந்தால், விரதம் பலித்துவிட்டதாகும்.

* * *book | by Dr. Radut