Skip to Content

11. பிறருக்காகப் பிரார்த்தனை செய்தல்

தன்னலம் கருதாதவரை உலகம் இலட்சிய புருஷனாகக் கருதுகிறது. மனித வாழ்வில் அதையே சிகரமான பண்பு எனலாம். இருபதாம் நூற்றாண்டுக்கு எளிய மனிதனின் நூற்றாண்டு எனப்பெயர். சமூகம் எளிய மனிதனை உயர்ந்த மனிதனாக்க பெருமுயற்சி எடுப்பதை இலட்சியமாகக் கொண்ட நூற்றாண்டு இது. பூரண யோகத்தின் அடிப்படையே, தான் என்பது அழிந்து உலகத்துடன் இரண்டறக் கலக்கும் நிலையாகும்.

மனித உறவுகளில் சிறந்ததாகக் கருதப்படும் தாய்மைக்கு அவ்வுயர்வு ஏற்பட்டதற்குரிய காரணம் தன்னை மறந்து தாய் தன் குழந்தையின் நலனைப் பாராட்ட முடிகிறது என்பதே. தெய்வத்திற்கு அடுத்த இடம் தாய்மைக்குக் கிடைத்ததற்கு தன்னலமற்ற குணமே காரணம்.

மனிதனின் சிறுமையை நினைந்து வருந்தி ஸ்ரீ அரவிந்தர் பரவலாக எல்லா மனிதர்களிடமும் காணப்படும் இரு குணங்கள் சுயநலம், கயமை என்கிறார். அதற்குப் பரிகாரமாக நாம் செய்யக்கூடியது ஒன்றே அவற்றை நம்மிடமிருந்து அறவே அகற்றுதல் என்கிறார்.

ஒருவர் பிறருக்குச் செய்யும் உதவி அனுதாபத்தால் நிகழ்கிறது. பரிதாபப்பட்டு உதவுவதைவிட அனுதாபம் உயர்ந்தது. கருணையால் செய்யும் உதவி அதைவிடச் சிறந்தது. அதற்கடுத்த நிலையில் உள்ள உயர்ந்த உதவியை செய்யக்கூடியது அருள் என்பதால், அந்நிலை மனிதனுக்கில்லை. கருணையே உயர்ந்துள்ளது என்றால் கருணையால் பிறருக்கு எதைக் கொடுப்பது சாலச் சிறந்தது எனில் பொருள் முதல் நிலையிலும், உறவு அடுத்த நிலையிலும், அறிவு மூன்றாம் கட்ட உயர்வுக்கும் உரியதாகிறது. பொருளைக் கொடுத்துதவுவதைவிட நட்பால் உதவுவது பெரியது. அவருக்குத் தேவையான அறிவைக் கொடுத்துதவுவது அதனினும் சிறந்தது.

பிறருக்காகச் செய்யும் பிரார்த்தனை அவருக்கு அருளைப் பெற்றுத் தருவதால் அறிவால் செய்யும் உதவியைவிட அது சிறந்தது. அத்துடன் மனிதனால் கருணையைவிடப் பெரிய நிலையிலிருந்து உதவ முடியாது என்பதால், பிரார்த்தனை மூலம் அருளைப் பிறர் பெறும்படி செய்தல் இருவகையிலும் உயர்ந்ததாகும். அன்னையின் அருளை ஒருவர் பிரார்த்தனை மற்றவர்க்களிப்பதாலும், அருளைக் கொடுக்க முடியாத மனிதன் பிரார்த்தனை மூலம் அருளைப் பெற்றுத் தர முடியும் என்பதாலும், பிறருக்காகச் செய்யும் பிரார்த்தனையை விட உயர்ந்தது ஒன்று உலகில் இல்லை.

இதுவே உயர்ந்ததென்றால் அதை நாம் தீவிரமாக ஏற்றுக் கொள்ளலாமா என்ற கேள்வி எழும். உயர்ந்தது என்பதில் ஐயமில்லை. எவ்வளவு தீவிரமாக ஒருவர் ஏற்றுக் கொள்ளலாம் என்பது அவர் ஆன்மிகத்திறனையும், மனப்பான்மையையும் பொருத்தது. தன் திறனுக்கு மீறிய காரியம் தன்னைப் பாதிக்கும் என்பது எல்லா இடங்களிலும் உண்மை என்பது போல் இங்கும் உண்மை. அளவோடு செயல்பட்டால், பிறருக்காகச் செய்யும் பிரார்த்தனை அருள் நிறைந்த அன்போடு கூடிய உயர்ந்த செயலாகும்.

தர்மம் சிறந்தது. பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை உயர்ந்தது. செழும்கிளை தாங்குவது செல்வர்க்கழகு. ஏழைக்கறிவு கொடுத்தல் சிறப்பு. அன்னசத்திரம் கட்டுதல், பள்ளி நிறுவுதல் ஆகிய தர்ம காரியங்களைச் செய்பவர்கள் தங்கள் செல்வத்தில் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்கி உறவினர்கட்கும் ஊரார்க்கும் உதவி மகிழ்கின்றார்கள். ஒரு வரையறையோடு அவர்கள் செயல்படுவதால், 5 தலைமுறையாக ஒருவர் ஆரம்பித்த பள்ளி இன்றும் முறையாக நடக்கின்றது. அதே போல் அருளைப் பெற்றுத் தரவும், அதாவது பிறருக்குப் பிரார்த்தனை செய்ய அளவுண்டு. அளவுக்கு மீறி தர்மம் செய்து, வறுமை யடைந்தவர்களைப் பற்றி நாம் கேள்விப்படுதல் போல், எல்லையைத் தாண்டி பிறருக்காகப் பிரார்த்தனை செய்தால் அதனால் ஊறு நிகழ்வதுண்டு.

ஊதாரி நண்பனுக்காக அவன் வாங்கும் கடனுக்கு guarantee உத்தரவாதமாகக் கையெழுத்திட்டாலும், திறமையில்லாதவர் ஆரம்பித்த பேக்டரிக்கு வாங்கிய கடனுக்குத் துணை போனாலும், உன் சொத்து பறிமுதலாகும். இதை உதவி என்று நாம் உணர முடியாது. அளவு கடந்து செயல்பட்டு தானே அபராதம் விதித்துக் கொண்டது என்றாகும்.

அன்னைக்குப் பிரார்த்தனை செய்வதால் நம் பிரச்சினை தீரும் பொழுது, எந்தக் கர்மத்தால் இப்பிரச்சினை ஏற்பட்டதோ அதையும் கரைத்து விடுவார்கள். அதனால் அப்பிரச்சினை மீண்டும் வராது. பிறருக்காக நாம் பிரார்த்தனை செய்தால் அவர் பிரச்சினை தீரும் பொழுது அவருடைய கர்மம், இப் பிரச்சினையை ஏற்படுத்திய கர்மம், கரையாமல் இடம் மாறி உன்னை வந்தடையும். உன்னிடம் உள்ள ஆன்மிக சக்தியில் அது கரைவதும் உண்டு. கரையாமல் உன்னை பாதிப்பதும் உண்டு. அளவோடு செயல்படும்பொழுது பாதிப்பதில்லை. எல்லையைத் தாண்டினால் பாதிக்கும். வாழ்க்கையிலேயே கடன் வாங்கியறியாதவர், நண்பருக்கு ஏற்பட்ட கடனைக் கரைக்க தீவிர பிரார்த்தனையை மேற்கொண்டபொழுது, நண்பர் கடன் கரைந்தது. அவருடைய கடன் அளவுக்குப் பிரார்த்தனை செய்தவருக்குச் சொத்து வந்தது. அதே வேலையைச் செய்த மற்றொருவருக்கு நண்பருடைய கடன் அளவு, கடன் ஏற்பட்டது, முதல்வரின் நல்லெண்ணம் வலிமை வாய்ந்ததால் உயர்ந்த பலனும், அடுத்தவரின் எண்ணம் எளிமையானதால் எதிரானபலனும் ஏற்பட்டது.

உணர்ச்சி நிறைந்த இடத்தில் பிரார்த்தனை எளிமையாகப் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர், குழந்தைகள், பெற்றோர் நண்பர்கள் இவர்களுக்காகச் செய்யும் பிரார்த்தனை உடனே பலிப்பதுடன், பிரார்த்திப்பவருக்கு நல்ல பலனையும் கொடுப்பது உண்டு. எதைப் பற்றியும் கவலையில்லை. அண்ணன் மீது வந்த வாரண்ட் போக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் அரைமணி நேரத்தில் அது இரத்தாகும். அண்ணன் தம்பியின் நல்லெண்ணத்தை ஏற்றுக்கொண்டாலும், அதன் மூலம் அன்னையின் அருளை உணர்ந்தாலும், எதிரான பலன் வராது. அண்ணன் தம்பியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அன்னையால் ஏற்படவில்லை, வேறு காரணத்தால் பலன் கிடைத்தது என்று வாதாடினால், வாதாடும் மனப்பான்மைக்கேற்ப, அண்ணனுக்கு வந்த ஆபத்து தம்பிக்கு நிஜமாகவோ, நிழலாகவோ வந்து போகும். குடும்பத்திற்குள் ஒருவருக்காக மற்றவர் எதையும் விரும்பி ஏற்றுக் கொள்ளலாம். அதை எந்த அளவு பிறருக்கும் செய்யலாம் என்பது மனநிலையைப் பொறுத்தது.

நாம் செய்யும் பிரார்த்தனை நம் ஆன்மிக உயர்வால் அல்லது அடுத்தவரின் நல்லெண்ணத்தால், அல்லது அவர் மீது நமக்குள்ள உயர்ந்த அன்பால் பலிக்கும் வரை எதிரான பலன் ஏற்படுவதில்லை. அறியாமையாலும், ஆணவத்தாலும், அர்த்தமற்ற வேகத்தாலும் செய்யும் பிரார்த்தனைகளுக்கு எதிரான பலன் இருப்பதுண்டு.

சக்கரவர்த்தி பாபர் தன் மகன் உயிருக்காக பிரார்த்திக்கும் பொழுது தன் உயிரை மாற்றாக அளித்தார். அவர் கேட்டவிதம் நடந்தது. பீஷ்மர் தன் தகப்பனாரின் ஆசையைப் பூர்த்தி செய்ய தன் வாழ்வைத் தியாகம் செய்தார். தியாகத்திற்குப் பரிசாக வாழ்வு அவருக்கு எதையும் அளிக்கவில்லை. ஆசையை வென்று தியாகம் செய்யவில்லை. ஆசையை மறுத்து தியாகம் செய்தார். மறுக்கப்பட்ட ஆசை, மனதினுள் நின்று வலியாக எழும் என்ற உண்மையை அவர் போர்க்கள வாழ்வு நிரூபித்தது. எந்த ஆசையை அவர் மறுத்தாரோ, அதன் பலன் இவருக்குக் கிடைக்காததைப்போல் சத்தியவதியின் மகன்களுக்கும் கிடைக்கவில்லை. பாண்டுவுக்கு அதே ஆசை நிறைவேறாது என்ற சாபம் கிடைத்ததுதான் மிச்சம். அதனால் உயிரும் போயிற்று. தியாகம் உயர்ந்ததென்றாலும், யார் எதைத் தியாகம் செய்வது, யார் யாருக்காக எதைத் தியாகம் செய்வது என்பதற்குரிய அளவை மீறினால், தியாகத்திற்குரிய பலன் கிடைக்காது, அளவை மீறியதற்குரிய பலனே கிடைக்கும்.

அன்னைக்குச் சேவை செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதே சேவையை பலரும் நமக்குச் செய்ய முன்வருவதை எல்லோரும் கண்டிருக்கலாம். அன்னை மீது தூய்மையான பக்தியுடையவர்க்குச் செய்யும் சேவைக்கும் அதே பலன் உண்டு என்று நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். சேவைக்குரிய, பெருமை, பிரார்த்தனைக்கும் உண்டு. பிறருக்காக நாம் செய்யும் பிரார்த்தனை அன்னையின் அருளை அவர்களுக்குப் பெற்றுத் தருவதால், அருள் பல திசையிலிருந்தும் நம்மை நோக்கி வருவதைக் காணலாம். உயர்ந்த உண்மை என்றாலும் வரையறைக் குட்பட்ட உண்மை.

தன் முக்கிய பிரச்சினையைத் தீர்க்க அன்னையை நாடிய பக்தர் அதன் மூலம் அன்னையின் ஆன்மிகச் சிறப்பைக் கண்டு கொண்டார். அன்னையை அன்னைக்காகவே நாடினார். அவருக்காக ஒரு சமயம் மற்றொருவர் பிரார்த்தனை செய்யும் சந்தர்ப்பம் பெற்றார். பெற்ற சந்தர்ப்பத்தை அரியதாகக் கருதினார். அடுத்தவர் இப்படிப்பட்ட பக்தருக்காக பிரார்த்தனை செய்வதன் சிறப்பை உணர்ந்தார். அவர் பிரார்த்தனை பலித்தது. அத்துடன் அவர் நினைக்காததெல்லாமும் தொடர்ந்து நடந்தன. நாடு கடந்து சிறப்பேற்பட்டது. வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்காத தொகை சில மாதங்களுடைய வருமானமாக வந்தது. மந்திரிகள் கூட தாமதித்துப் பெறும் சலுகைகள் வீடு தேடி வரிசையாக வந்தன.

ஒரு ஸ்தாபனத்தில் இருவர் நண்பர்களானால் நட்பு உண்மையாகவும் இருக்கும், போலியாகவுமிருக்கும். அன்னையிடம் புதியதாக வந்து அருளின் திறனைக் கண்டு தன் நண்பருக்கு குழந்தையில்லையே, அவருக்கு மக்கட்பேறு ஏற்பட வேண்டும் என்று ஒருவர் பிரார்த்தனை செய்தார். அவர் நண்பரில்லை, இவரை ஊரை விட்டே விரட்ட வேண்டும் என்ற எண்ணமுள்ளவர் என்பதை அறியாமல் அவருக்காக அன்பர் பிரார்த்தனை செய்தார். நண்பர் என்ற போர்வையில் அன்பரை வேலையை விட்டு நீக்க மறைமுகமான ஏற்பாடுகள் செய்தவருக்கு, தன் கை வலுவடையும் சந்தர்ப்பம் வந்தது. அன்பர் வேலையை இழந்தார். வேலையை இழந்த பின்னர்தான், தான் செய்த தவறு தெரியவந்தது. தவற்றை உணர்ந்தவுடன் நிலைமை மாறி போன வேலை திரும்ப வந்தது. பாத்திரம் அறிந்து பிச்சையிட வேண்டும் என்பது வாக்கு. பிச்சைக்குரிய சட்டம் பிரார்த்தனைக்கும் உண்டு. நல்லெண்ணமுள்ளவர்க்காகப் பிரார்த்திக்க வேண்டும்.

பரம்பரை தரித்திரத்திலிருந்தவர் மீது அனுதாபப்பட்டு அவருக்காகச் செய்த பிராத்தனையால், அவர்கள் தரித்திரம் போய் செல்வமும், செல்வாக்கும் வந்தது. வறுமையில் பொதுவாக உற்பத்தியாவது சிறுமை, கயமை. தரித்திரம் போய் செல்வமும் செல்வாக்கும் பெற்றவர்களுக்குத் தங்களுக்காகப் பிரார்த்தனை செய்தவர்க்கு ஊறு செய்யும் எண்ணம் ஏற்பட்டது. அதை நிறைவேற்ற முனைந்தனர். பிரார்த்தனை செய்தவர் தரித்திரத்தின் வாயிற்படிக்கே வந்துவிட்டார். சுமார் 7,8 ஆண்டுகள் தவறான மனிதனுக்குச் செய்த உதவியின் பலனை கோரமாக அனுபவித்தார். எல்லாம் போய் விட்டது என்ற நிலையை எட்டி, மீண்டும் தன் பழைய நிலைக்கு வந்தார். ஊறு செய்ய முனைந்தவர்க்கு பழைய தரித்திரம் வந்து விட்டது. அத்துடன் வாரண்ட், ஜெயில், ஆபத்து, விபத்தும் சேர்ந்து வந்தன.

சமூகத்தின் கடைசி நிலையிருப்பவர்களை உயர்த்த முயன்ற பிரார்த்தனையும், சேவையும் பலித்ததால் உயர்த்த முயன்றவர் நிலையும் உயர்ந்தது. கடை நிலையிலுள்ளவர்களை ஒருபடி உயர்த்த முயன்றதன் பலன், அவர்கள் முதல் நிலைக்கே வந்துவிட்டனர். தனி மனிதனை உயர்த்தினாலும், ஒரு தொழிலைச் சார்ந்தவர்களை உயர்த்தினாலும், ஓர் இடத்தைச் சார்ந்தவர்களை உயர்த்தினாலும், பிறரை உயர்த்த மேற்கொள்ளும் பிரார்த்தனை உயர்ந்தது. செய்யும் முயற்சி செய்பவரின் திறனுக்குட்பட்டதாக இருந்ததால் மேற்சொன்ன முயற்சிகள் பலித்தன. செய்தவரின் நிலை அளவு கடந்து உயர்ந்தது. அவர் திறனுக்கு மேற்பட்டதாயிருந்திருந்தால் அவரும் அவர்களுடைய ஆரம்ப நிலையை நிரந்தரமாக அடைந்திருப்பார்.

யாருக்காகப் பிரார்த்தனை செய்கிறோமோ அவருடன் சில சமயம் அளவு கடந்து ஒன்றிப் போவதுண்டு. அப்படி நேர்ந்தால் ஒருவருடைய சுபாவம் மற்றவருக்கு வரும். அவசரமே அறியாதவர் அவசரக்காரனுக்கு உதவினால் அவருக்கும் அவசரம் வருவதுண்டு.

யாருக்காக நாம் பிரார்த்தனை செய்கின்றோமோ அவர்களுக்கு நாம் பிரார்த்தனை செய்வது தெரியாவிட்டாலும், பிரார்த்தனை முழுவதும் பலிக்கும்.

புதிய தொழிலை மேற்கொண்டவர் ஒருவருக்கு அத்தொழிலை ஆரம்பிக்கும் முதல் வாடிக்கைக்காரர் கிடைக்காமல் சுமார் ஒரு வருஷம் மனம் சஞ்சலப்படும் பொழுது, அவர் சஞ்சலத்தைப் பார்த்த ஒருவர் தான் பிரார்த்தனை செய்ய முன் வந்தார். அடுத்த வாரம் அவருக்கு வாடிக்கைக்காரர் கிடைத்தார். லக்ஷக்கணக்காக வியாபாரம் செய்தவரைத் தேடியவருக்கு முதல் வாடிக்கை பிறருடைய பிரார்த்தனையால் கோடிக்கணக்கான வியாபாரம் செய்பவராகக் கிடைத்தார். பிரார்த்தனை விஷயமே பலன் பெற்றவருக்குத் தெரியாது. பிரார்த்தித்தவருக்கே தன்னால் கிடைத்த பலன் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதனால் அதிக நம்பிக்கை ஏற்பட்டது. தான் செய்ததை நண்பரிடம் சொல்லவில்லை. சில மாதம் கழித்து நூறு கோடி ரூபாய் செலவாணியுள்ள கம்பெனி பிரார்த்தனை செய்தவரை நாடி வந்து தங்களை வாடிக்கைக் காரராக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டது. அந்த தொழிலில் இன்று வரை நடக்காதது அவர் வாழ்க்கையில் நடந்தது. நல்லெண்ணத்தால் பிறருக்கு அவர் அறியாமலேயே பிரார்த்தனை செய்ய முன் வந்ததின் பலன் இது.

வாழ்க்கையின் சட்டங்கள் பல. அவை நாம் அறிந்தவை. அவற்றுள் சில சற்று புதியனபோல் தோன்றும். உற்ற நண்பருக்குச் செய்யும் துரோகத்தால் பாசத்திற்குரியவர் இறந்து போதல்; பழிவாங்கும் மனப்பான்மை கிடைத்த வாய்ப்புகளை இரத்து செய்வது; பிடிவாதம் தோல்வியைக் கொடுப்பது போன்ற சில சட்டங்களுண்டு. அவற்றுள் தற்பெருமை, கர்வம் ஆகியவற்றைப் பற்றிப் பேசும்பொழுது அன்னை அவை வாழ்விலிருந்து ஆபத்தைக் கொண்டு வரும் என்கிறார். நல்லெண்ணம் உயர்வைத் தருகிறது. கர்வம் இல்லாத ஆபத்தை அழைத்து வருகிறது, கர்வமான நண்பருக்காகப் பிரார்த்தனையை மேற்கொள்பவருக்கும் பேராபத்துக்கள் திடீரெனக் கிளம்பும்.

குடும்பத்தில் ஒருவரை கைவிடும்நிலை ஏற்பட்ட பின், மற்றொருவர் பிரார்த்தனையால் முடிவாக வந்த ஆபத்து முழுவதுமாக விலகியதுடன் எதிர்பாராத நல்லவை பலவும் அவருக்கு ஏற்பட்டன. தன் நிலை தெளிந்தபின் அவர் பிரார்த்தனையின் பலனை ஏற்றுக்கொள்ள மறுத்து வரட்டு வாதங்களைப் பேசினார். அதன் பலனாக குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் பெரும் சிரமங்கள் ஏற்பட்டு தொடர்ந்து உலுக்கின. பலனைப் பெற்றவர் மனம்மாறிய பின்னரே மற்றவர்கள் சிரமங்கள் விலக ஆரம்பித்தன. பலனைப் பெற்றபின் நல்லெண்ணத்தாலும், நன்றியாலும், பக்தியை ஏற்றுக் கொண்டால் அது பொருத்தமானது. அதற்கு மாறாக அவர் நடக்கும்பொழுது அவர் மீது பாசம் உள்ள மற்றவர்கள் அவருடைய குறையை தங்கள் வாழ்க்கை சிரமங்களால் நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது.

உலகத்தை சிருஷ்டித்த அன்னை, மனிதன் இருளில் மூழ்கியிருப்பதைக் கண்டு தன் அருளை அவனால் பெற முடியவில்லை என அறிந்து தானே புவியில் அவதாரம் எடுத்து அருளை அவன் பெறும் வழியைக் காண்பிப்பதுடன் அவனுக்காகப் பிரார்த்தனையை மேற்கொள்கிறார். அத்துடனில்லாமல், பூமாதேவியுடன் இரண்டறக் கலந்து தானே பூமியாகி இறைவனை நோக்கி பூமிக்காகப் பிரார்த்தனை செய்கிறார். அன்னையின் அவதார நோக்கமே பிறருக்காகப் பிரார்த்திப்பது என்பதால், அது உயர்ந்த செயலாகும்.

அன்னை பக்தருடைய தாயாருக்கு வயதாகி bedsore படுக்கையில் இருந்ததால் உடல் புண்ணாகி விட்டது. மகன் தாயாருக்காகப் பிரார்த்தனை செய்தான். பலன் இல்லை. தாயாருக்கு அன்னையைப் பிடிக்காது. வெறுப்பு. மகனுக்கு தாயார் சிரமப்படக்கூடாது என்ற எண்ணமும் அதனால் செய்த பிரார்த்தனையும் பலன் தரவில்லை. அன்னையை நேரில் சந்தித்து தாயாரைப் பற்றிச் சொன்னார். பலன் இல்லை. மகன் அடிக்கடி அன்னையிடம் வந்து எப்படியாவது தன் தாய் குணமாக வேண்டும் என்று கேட்டார். அன்னை கேட்டுக் கொண்டார். எந்தப் பலனும் ஏற்படவில்லை. அதிகமாக மகன் வற்புறுத்திய பொழுது அன்னை ஒரு பிளஸிங் பாக்கட் கொடுத்தார். மகனுக்கு அதைத் தாயாரிடம் கொடுக்கத் தைரியமில்லை. கொடுத்தால் வீசி எறிந்து விடுவார். அதை என்ன செய்வது என்று அன்னையையே கேட்டார். உன் தாயாருக்குத் தெரியாமல் தலையணைக்குக் கீழே இதை வை என்றார் அன்னை. உடல் புண் முழுவதும் அவர் தாயாருக்கு குணமாய்விட்டது. அன்னைக்கு உடல் புண் ஏற்பட்டுவிட்டது. குணமாக நாளாயிற்று. அருள் செயல்படும். வலியுறுத்தி அருளைக்கூட மற்றவர் மீது திணிக்கக் கூடாது.

நான்கு கூட்டாளிகளில் ஒருவர் பக்தர். மற்றவர்கள் அன்னையை ஏற்றுக் கொள்ளாதவர்கள். அவர்களுக்கும் அவர்கள் அறியாமல் நன்மை விளைவிக்க வேண்டும் என்பது ஆன்மிக நல்லெண்ணம் என்று நினைக்கலாம். அது பலிக்கலாம். கூட்டாளியானாலும், தகப்பனாரானாலும், மகனானாலும். அவர்களுக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும் பலன் பெற வேண்டும் என்ற எண்ணம் நல்லது. அதற்கு ஓர் எல்லையுண்டு.

போதுமான தகுதியில்லாதவன் வேலை தேடிப் போகும் பொழுது அவனை அறியாமல் மற்றொருவர் செய்த பிரார்த்தனையால் அவனுக்கு வேலை கிடைக்கிறது. கிடைத்தது எப்படி கிடைத்தது என்று அவன் அறியவில்லை. தன் திறமைக்குக் கிடைத்ததாகக் கருதுகிறான். செய்யும் வேலையில் நேர்மை தவறி நடக்கின்றான். அடுத்தவர் பிரார்த்தனையைத் தொடர்கிறார். தண்டனை கிடைக்கவில்லை, தான் செய்ததை மீண்டும் செய்ய முனைகிறான். செய்யும் வேலையை சரியாகச் செய்வதில்லை. பின்னாருக்கும் பிரார்த்தனை அவன் அறியாதது. வேலை நிரந்தரமாகிறது. இன்கிரிமெண்ட் கிடைக்கிறது. ஆபீஸில் திருட்டுத்தனம் செய்கிறான். அகப்பட்டுக் கொள்ளவில்லை. நம்பிக்கையில்லாதவனுக்கு புதிய சௌகரியம் வருகிறது. அங்கும் வேலையை சரிவரச் செய்வதில்லை, மேலும் சௌகரியம் வருகிறது. பழைய வேலையை விடவேண்டிய நிலை வருகிறது. புதிய பெரிய வேலை கிடைக்கிறது. தான் அறியாமல் தனக்காக மற்றொருவர் பிரார்த்தனை செய்வதால் தன் கோணல் புத்திக்கு தண்டனை கிடைக்காமல், புதிய நல்ல சந்தர்ப்பங்கள் வருவதை அவன் உணர்ந்தால் நல்லது. அவர் தன் பிரார்த்தனையை நிறுத்தும் கட்டத்தில் அவன் வாழ்க்கை அவனுக்குரியதைக் கொடுக்கும். விநாயகர் அன்னைக்கு 10 வருஷம் நிதியத்தார். அவை எப்படி எல்லாமோ மற்றவர்களால் செலவாகி விட்டன. அன்னை விநாயகரை மீண்டும் கேட்டபொழுது, "என் திறமை தீர்ந்து விட்டது'' என்றார். நல்ல சந்தர்ப்பங்கள் வந்தால் மாறிக் கொள்பவருண்டு. அவர்களுக்கு உதவலாம். இதையே ஒரு முறையாக எதிர்பார்ப்பவர்களுக்கு உதவ முடியாது. ஓர் அளவுக்கு மேல் உதவக் கூடாது. உதவினால் அவருக்குக் கிடைக்க வேண்டிய தண்டனை செய்பவருக்குக் கிடைக்கும்.

பின்னணியிலிருந்து பிரார்த்தனையின் உதவி நின்ற பின் இப்படிப்பட்டவர் தன் காரியங்களைப் பூர்த்தி செய்யும்போது வாழ்க்கை கல்லில் நார் உறிப்பது போலிருக்கிறது என்று காண்பார்கள்.

தீராத பிரச்சினை என்பன உண்டு. கடைசி கோர்ட்டில் தோற்றுவிட்ட கேஸ், காலாவதியான பிராமிசரி நோட்டு, மானம் பறிபோன நிலை. வயது லிமிட் தாண்டியபின் எதிர்பார்க்கும் பிரமோஷன், எளியவன் கையிலுள்ள சொத்துக்கு மதிப்பு, பல வருஷங்களாக கெட்ட பழக்கத்தில் ஊறியவர் போன்றவற்றைத் தீர்க்க முடியாது என்று விட்டு விடுவார்கள். விட்டுப் பல ஆண்டுகளான பின், அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனையால் அது பலிக்கும் என்று ஒரு வழியைச் சொன்னால், கேட்பவர் விரும்பி ஏற்றுக்கொண்டு பலன் பெறுவதுண்டு. சொல்பவரையே, நீங்களே அதைத் தீர்த்துக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் மனநிலையுள்ளவருண்டு. அவர்களுக்கு உதவ முடியாது. உதவ நினைப்பது அறிவுடைமையாகாது.

அதேபோல் எட்டாத வாய்ப்பைப் பெறும் வழியைச் சொன்னால், அது பலிக்கும் அறிகுறிகளைக் கண்ட பின்னும், தான் அடிமட்டத்தில் இருப்பதற்கான குணங்களை வலியுறுத்தும் மனிதர்களும் உண்டு. அவர்களுக்கும் உதவ முடியாது. தன் குணத்தின் பலனைத் தானே அனுபவிக்க வேண்டும் என்ற உண்மையை அவர்கள் அனுபவத்தால் கண்டு கொள்வது நல்லது.

175 ரூ. மாதச் சம்பளத்தில் அன்னையை ஏற்றுக்கொண்டு குறுகிய காலத்தில் ரூ. 2000/- சம்பளம் பெற்றவர் தன் வருமானம் உயர்ந்ததைப் போல் தன் பழைய குணங்களையும் அதிகப் படுத்திக்கொண்டு பிரச்சினைகளும் பெருகிவிட்டன என்ன செய்வது என்றால், அவர் மாறும் வரை அருள் காத்திருக்கும் என்றுதான் சொல்ல முடியும்.

* * *book | by Dr. Radut