Skip to Content

08 . பகுதி - 7

61. பாரம்பரியமும் ஆன்மீகமும்

அந்தக்காலத்தில் மக்கள், இரயில் பயணம் எவ்வாறு நடைபயணத்தின் கஷ்டத்தைப் போக்கி, வழியில் திருடர்களின் வழிப்பறிக்கொள்ளை ஆபத்திலிருந்து நீங்கியதை உணர்ந்தார்களோ, அவ்வாறே ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோதிடம் தோன்றியதை உணர்ந்தார்கள். அதை கவனித்துப் பார்க்கும் பொழுது அது ஒரு நல்ல முன்னேற்றமாகத் தெரிகிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் விமானப் பயணம் நடைமுறைக்கு வந்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் அது பிரபலமடைந்தது. தொலைபேசி கண்டுபிடிப்பும் அத்தகைய வளர்ச்சியைக் காட்டுகிறது. தொலைபேசி, காலத்தைச் சுருக்கி விட்டது. செல்போன் கூட ஒரு இடத்திற்குப் போகாமலேயே தூரத்தை வென்றுவிட்டது. செல்போன் எங்கு வேண்டுமானாலும் கூடவே எடுத்துச் செல்லலாம். அது ஒரு இடத்தில் நிலையாக பொருத்தி வைப்பது அல்ல.

சோதிடம் என்பது ஒரு பெரிய அறிவியற்கலை. புத்தர் பிறந்த பொழுது, அவர் இந்த உலகத்தை சக்தியாலோ அல்லது அன்பினாலோ ஆட்சிபுரிவார் என்று கணித்தது. ராஜாஜி பிறந்த பொழுது எழுதப்பட்ட ஜாதகத்தில், அவர் இந்தியாவின் வைஸ்ராய் ஆக வருவார் என்று கணிக்கப்பட்டது. வாஸ்த்து, சகுனம், மற்றும் சோதிடம் ஆகியவை நமக்கு கர்மவினை உள்ளது என்பதைப் பற்றித்தான் தெரிவிக்கும். ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி அவற்றிற்கு தெரியாது. கர்ம வினையை அழிக்கக்கூடிய சக்தியும் அவற்றிற்கு இல்லை. மனிதன் கர்ம வினையின் பிடியில் கட்டுப்பட்டிருப்பதால், அவன் இதுவரையில் தன் திறமையில் சிறிதளவும், சமூகத்தில் கிடைக்கும் வாய்ப்புக்களை குறைந்த அளவிலும், பயன்படுத்திக் கொண்டான். இவ்வுலகில் அவன் கர்ம வினையினால், அவ்வளவில் மட்டுமே பயன்களைப் பெற முடிகிறது. இறைவன் மீதுள்ள நம்பிக்கை, கர்மவினையின் தடைகளை விலக்குகிறது. அந்த நம்பிக்கை மனிதனுடைய முழுத்திறனையும், சமூகம் வழங்கும் வாய்ப்புகளையும் மனிதனுக்கு முழு அளவில் கொடுக்கவல்லது.

1956லிருந்து சத்திய ஜீவியம் பூமிக்கு இறங்கி வந்து, மனிதனின் அழைப்புக்காக காத்து இருக்கிறது. இந்த சத்திய ஜீவியத்தை அழைத்தால் அது ஒருவருடைய வாழ்வில் அவரது திறமையின் உதவி கூட இல்லாமல் அவருக்கு முடிவில் கிடைக்கக்கூடிய பலனை முதலிலேயே வழங்குகிறது. அந்த ஆன்மா கர்ம வினையை அழித்து, சமூக வாய்ப்புகளை, மனிதனின் திறமைக்கு ஏற்ப, உண்டாக்குகிறது. நான் ஏற்கனவே எழுதியது போல் ½ ரூபாய் கூட கடன் வாங்க முடியாத ஒருவருக்கு ரூ.10,000க்கு வங்கியின் காசோலை, அவர் வீட்டைத் தேடிவந்தது. ரூ.10,000 கடன் பெற முடியாத ஒருவர் 2 லட்சம் கடனுக்காக வங்கியை அணுகியபோது, வங்கி அவருக்கு 4 லட்சம் கடன் வழங்க முன்வந்தது. நீங்கள் உங்கள் கையிலுள்ள ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியாமல் ஒன்று அல்லது இரண்டு வருடகாலமாக தடங்கல்பட்டுப் போயிருந்தால், ஆன்மாவை அழைத்துப் பாருங்கள். உங்கள் வாழ்வில், அந்த திட்டம் நிறைவேற்றப்பட்ட உண்மையை அறிவீர்கள். ஒருவர் செல்வ வளம்பெற, ஆன்மாவை வெற்றிகரமாக அழைக்கும் தருணத்தில், குறை கூறும் மனைவி, கொடூரமான கணவன், கடுகடுப்பான மேலதிகாரி போன்றவர்களால் தொந்தரவுகள் நேர்ந்திருக்கக் கூடும். அப்படிப்பட்ட நேரங்களில் ஆன்மாவை அழைத்தால், இவைகள் அனைத்தும் ஆன்மாவினால் எதிர்மறை குணங்களாக திருவுருமாற்றம் அடையும்.

*****

62. அன்றாட வாழ்க்கையில்

ஆன்மீகப் பரிசோதனை

ஒருவருடைய வாழ்வில் பரிசோதனை செய்வதற்கு ஆன்மா அனுமதிக்கிறது. பரிசோதனையை நடத்துவதற்கு ஒருவருடைய சொந்த வாழ்வே ஏற்றது. இந்த ஆராய்ச்சி ஆன்மாவுடன் ஒப்பு நோக்குவதில் தடையேதும் இல்லையென்றாலும், இதை ஒரு முறைக்கு மேல் செய்ய முயற்சிக்கக் கூடாது. நம்பிக்கை மலைகளை நகர்த்தக் கூடியது. ஆனால் அது சாதாரண மனிதனால் அன்று. ஒருவருடைய வாழ்வில் மலைபோன்ற தீர்க்க முடியாத பிரச்சனைகள் உண்டு. ஆனால் பெரிய வாய்ப்புக்களும் வாழ்வில் உண்டு.

வாய்ப்புக்களைப் பெறுவதற்கும் தடைகளை விலக்கிக் கொள்வதற்கும், நாம் ஆன்மாவை அழைக்கலாம். கணவன் தீய பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தாலோ, ஒரு கம்பெனி சிறுகச் சிறுக நஷ்டத்தில் போய், அது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போய்க்கொண்டிருந்தாலோ, அல்லது நீதிமன்ற வழக்கில் அரசியல், இலஞ்சம், போன்றவற்றால் அநீதி இழைக்கப்பட்ட பொழுதும், ஆன்மாவை அழைக்கலாம். வருமானம் எட்டுக் கோடியை தொடும் பொழுதுதான் ஒரு கம்பெனி லாபமோ, நஷ்டமோ இல்லாமல் நடுநிலையை எட்டுமென்னும் பொழுது அதனுடைய வருமானம் ஒரு ஏழு கோடியை தாண்ட முடியாத நிலையில் இருக்குமானால், இந்த ஆராய்ச்சியினால் வருமானம் 8 கோடியைத் தாண்டும். முரண்பாடான சுபாவத்தையும் எண்ணங்களையும் விலக்கி, முழு உண்மையுடன் வேலையில் ஈடுபட்டு செயல்படும் பொழுது, வருமானம் அடுத்த மாதமே 80 கோடிகள் வரும். இதை எவ்வாறு செய்வது?

 1. ஒரு கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) வேலையில் ஊக்கமுடையவராய், தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவராய், மதசார்பு அற்றவராய், பாரம்பரிய சடங்குகள் முதலான கொள்கைகளை விலக்கி செயல்பட வேண்டும். இந்தக் கொள்கைகள் யாவும் ஆன்மாவுக்கு தீங்கானவைகளாகும்.
 2. இலக்கு தலைமை அதிகாரியினால் மட்டுமே அடைய முடியும். மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவும் பொன்னானது.
 3. இதில் தலையாய முக்கியத் தேவை என்னவென்றால், ஆன்மா எதையும் சாதிக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும்.
 4. ஆன்மாவை தாராளமாக வேலையில் ஈடுபடுத்த, எல்லா தடைகளையும் விலக்கி ஆன்மாவை தொடர்ந்து அழைக்க வேண்டும்.
 5. இலக்கு சம்மந்தப்பட்ட எல்லா எண்ணங்களையும் ஒருமுகப்படுத்தி, வேண்டாதவைகளை மெல்ல விலக்கி, அற்பத்தனமான விஷயத்தில் மனதை போகவிடாமல் தடுத்து, மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும்.
 6. இது நிச்சயமாக அமைதியையும் மௌனத்தையும் கொடுப்பதால், மனத்தில் சக்தியின் அழுத்தத்தை உணர முடியும். இந்த அனுபவம் ஆன்மீக பாதை சரியானது என்பதைக் காட்டும்.
 7. உன் உணர்ச்சிகளில் இலக்கை அடைவதில் நம்பிக்கை வைக்கவேண்டும். அப்பொழுது மனதைவிட்டு அகலாத தீவிர ஆர்வம் விலகி, அவ்வப்பொழுது சந்தோஷம் எழும்.
 8. ஒரு நிலையில் இவ்வாறு எவ்வித காரணமுமின்றி தானாகவே சந்தோஷம் எழும். 

வழக்கமாக நூற்றுக்கணக்கான சிறியதும் பெரியதுமான தொடர்ந்து தொல்லைக் கொடுத்துக் கொண்டு வந்த சூழ்நிலைகள் யாவும் மறைந்து, இப்பொழுது இனிமையான சூழ்நிலையாக மாறுவதைக் காணலாம். எதிர்பார்ப்புக்களை அதிகமாக வளர்த்துக் கொள்ளாமல், இலக்கைப் பற்றிய நினைவை விலக்கினால், நீ 8 கோடிகளுக்கு மேல் வருமானம் வருவதைக் காண்பாய். அது 80 கோடிகளைக் கூட எட்டுமென்பதும் சாத்தியம்.

*****

63. கடலின் ஆன்மா

ஆன்மீகத்தில் நாட்டமுடையவர்கள் சமூகத்தின் வீரர்கள். அவர்கள் ஆன்மீக வீரர்கள். குரு அல்லது ஆன்மாவால் ஈர்க்கப்பட்டவர்கள் அரிது. அதைவிட அரிது சந்தர்ப்பம் வரும் போது ஆன்மா மீதும் குருவின் மீதும் எழும் நம்பிக்கையாகும். ராமகிருஷ்ணரின் ஆன்மீக உயர்வு பற்றி விவேகானந்தருக்கு கடைசி வரையில் சந்தேகமாகவே இருந்தது.

மகாத்மாவின் சுதந்திர போராட்ட அழைப்பில், மன உறுதியுடனும் விசுவாசத்துடனும் கலந்து கொண்டவர்கள் தங்களுடைய எல்லா உரிமைகளையும் உடைமைகளையும் தியாகம் செய்தார்கள். இருந்தாலும் இந்தக் களத்தில் இறங்கியவர்கள் அனைவருக்கும் மனிதனுடைய குறைபாடுகளிலிருந்து மீளமுடியவில்லை.

1920ம் வருடங்களில் பாண்டிச்சேரியில் நிலக்கரி கிடங்கின் சுவர் ஒன்றை கடல் அலைகள் அடித்துச் சென்றுவிட்டன. அந்தக் கிடங்கு அந்த நகரத்தின் மேயருக்குச் சொந்தமானது. அவர் இது சம்மந்தமாக பிரெஞ்ச்சு கப்பல் பொறியாளர்களிடம் ஆலோசித்த பொழுது, அதைத் தடுக்க முயற்சிக்கும் பிரயத்தனம் பயனற்றது என்று தெரிவித்துவிட்டார்கள். எனவே அவர் அந்த இடத்தை விற்க முற்பட்டார். ஆனால் அதை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. பிறகு அவர், ஆசிரமத்தில் இருந்த, சக்தி வாய்ந்த தெய்வீக அன்னையால் அந்த கஷ்டத்திலிருந்து விடுபட முடியும் என்ற நம்பிக்கையில், ஆசிரமத்தில் உள்ளவர்களை அணுகினார். அந்தக் கிடங்கின் சுவர் பலமுறை ஆர்ப்பரிக்கும் சமுத்திர அலைகளால் அடித்துச் செல்லப்பட்டது. சாதகர் எவராலும், அந்தச் சுவரை அலைகளின் தாக்குதலினின்றும் காப்பாற்ற முடியும் என்று மனப்பூர்வமாக எண்ண முடியவில்லை.

அந்த இடம் ஆசிரமத்தால் வாங்கப்பட்டு, சுவற்றைக் கட்டுவதில் புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டும், மீண்டும் அந்த சுவற்றிற்கு பழைய கதியே ஏற்பட்டது. அலைகளிலிருந்து அதைக்காப்பாற்ற எடுக்கப்பட்ட பல முயற்சிகளும் தோல்வியுற்றன. இந்தத் தோல்விகளுக்குப்பின், தெய்வீக அன்னை அந்த இடத்தை பார்வையிட முன் வந்து, கடலின் ஆன்மாவை அழைத்தார். சமுத்திர ராஜன், அன்னை முன் தோன்றினான். அவன் அன்னையிடம், தான் கரைக்கு முன்னேற முடிவு செய்துள்ளதாக தெரிவித்தான். பொதுவாக எந்தத் தெய்வங்களும் அன்னையின் கட்டளைக்குப் பணிவார்கள். ஆனால் கடலரசன், பிடிவாதமாக இருந்தான். பிறகு அன்னை அவனிடம் தனக்கு அந்த இடம் வேண்டுமென்றும், அவன் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்வது நல்லது என்றும் தெரிவித்தார். சமுத்திர தெய்வம் அதற்கு சம்மதித்தது. அதன் பிறகு புதியதாக சுவர் எழுப்பப்பட்டது. அந்த சுவர் இன்றும் அப்படியே கம்பீரமாக நிலைத்து நிற்கிறது.

போகும் வழியில் யாரும் இல்லாத இடத்தில் உன்னுடைய கார் நின்றுவிட்டால், காரை ரிப்பேர் செய்வதற்கு இயலாத இக்கட்டான நேரத்தில், அன்னையை அழைத்தால் அது இயங்கும். அதில் தோல்வி ஏற்படாது. அப்படித் தோல்வி ஏற்பட்டால், காரின் ஆன்மாவை அழைத்தால் அது உடனே இயங்கும்.

ஆன்மா மிகப் பெரியது. அதைவிட மேன்மையானது, இன்னமும் மனிதர்களிடமும் பொருள்களிடமும் உள்ள ஆன்மாவாகும்.

*****

64. சிறப்பானதைத் தேடுவது

புத்தக வெளியீட்டாளர்கள் எழுத்தாளர்களை விட புத்தகங்கள் விற்பனையைப் பற்றி அதிகமாக தெரிந்து வைத்திருப்பார்கள். ஹார்ப்பர் (Harper) மற்றும் ரோவ் (Row) என்பவர்கள் சிறந்த பதிப்பாளர்கள். ஒரு சமயம் டாம் பீட்டர்ஸ் (Tom Peters) மற்றும் வாட்டர்மேன் (Waterman) எழுதிய அறிக்கையைப் பார்த்து வியப்பு மேலிட்டவர்களாய் அதை பிரசுரம் செய்வதற்கு அனுமதி பெற அந்த எழுத்தாளர்களைப் போய்ப் பார்த்தார்கள். அதற்கு டாம் (Tom) அது ஒரு அறிக்கையே தவிர படிக்கக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். மேலும் அவர்களிடம், அவர்கள் இதில் போடும் மூலதனத்தைத் திரும்பப் பெற 10,000 பிரதிகள் கூட விற்க முடியாத என்று கூறினார். பதிப்பாளர்கள் விடவில்லை. எழுத்தாளரின் வாதத்தை ஏற்காமல், அவரின் சம்மதத்தைப் பெற்று, அனுமதியைப் பெற்றுக்கொண்டபின் அச்சடித்து, அடுத்து வரும் ஆண்டுகளில் 60 லட்சம் பிரதிகள் விற்பனை செய்தார்கள். அது ஒரு நாவலாக இல்லாத போதிலும், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது, ஒரு வியப்புக்குரிய நிகழ்ச்சியாகும். தன்னுடைய விருப்பத்திற்காக மட்டும் எழுதும் எழுத்தாளர்களைவிட வாசகர்கள் எதை விரும்புவார்கள் என்று பதிப்பாளர்கள் நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டாம் பீட்டர்ஸ் (Tom Peters) ஹிப்பியாக இருந்தவர். அவர் கட்டுப்பாடற்ற சுதந்திரம் வேண்டுமென்ற விருப்பத்தில், தீவிரமாக இருந்தார். ஹிப்பி இயக்கம் எந்தத் திசையில் சென்றாலும், மனிதனின் சுதந்திரத்திற்கு தூண்டுதலாக இருந்தது. அந்த சூழ்நிலை சுதந்திர தாகத்தின் சின்னமாக டாம் உணர்விலும் எழுத்திலும் விளங்கினார். ஆனால் எந்த சக்தி அவரை இயக்குகிறது என்று அவரால் தெரிந்து கொள்ளமுடியவில்லை. அந்தப் பதிப்பாளர் அதைப் பற்றி தெரிந்திருந்தாரா அல்லது அவருடைய வியாபார புத்திக் கூர்மையால் செயல்பட்டாரா என்பது தெரியவில்லை. டாம் (Tom) தன்னுடைய சுதந்திர வேட்கை தன் ஜீவனுடைய ஒரு அதிர்வாகவே மாறிவிடும் அளவிற்கு சக்தி பெற்றிருந்ததை அறியாதவராகவே இருந்தார். இது சமீபகாலத்திய சரித்திரம்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், ஆன்மா இருக்கிறது. ஆனால் மனிதன் அதை அறியவில்லை. ஜெர்மன் டாக்டர்கள், ஒரு சமயம் ஆன்மா உண்டா என்பதைக் கண்டறியும் பொருட்டு மனிதனின் உடலில் எல்லா உறுப்புகளையும் அறுவை செய்து பார்த்த பிறகு, அவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான ரிஷிகள், நூற்றாண்டு காலமாக தவம் செய்து பிரம்மத்தை உணர்ந்தவர்கள், இந்தியர்களின் உடலில், தவத்தின் பயனாய் தாங்கள் பெற்ற ஒளியினை தந்துவிட்டுச் சென்றார்கள். டாம் (Tom) பிறகு ஒருமுறை தாம் எழுதிய புத்தகங்களை பிரசுரிப்பதற்கு ஒரு மில்லியன் டாலர் முன்பணமாகக் கேட்டார் என்று சொல்லப்படுகிறது. நாம் நம்முள் ஆன்மாவை அறிந்து, அதை நம்வாழ்வில் செயல்பட அழைப்பதற்குத் தெரிந்து கொண்டால், நாம் இவ்வாழ்வில் பெரும் பலன்களை அடைய முடியும்.

*****

65. இந்தியாவில் எந்தத் தொழிலுக்கும்

தோல்வி என்பதே இராது

இந்தியா, வியாபாரச் சந்தையில் பெருகி வரும் நாடாக உள்ளது. இங்கு மக்கள் அதிக சௌகரியங்களை விரும்புகிறார்கள். குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை கேட்கிறார்கள். எவரொருவர் தனக்கு அதிக சௌகரியம் வேண்டுமென்று கேட்கிறாரோ அவர் அதிகமாக உழைக்கவும் விருப்பங்கொள்கிறார். வேலையை முறைப்படுத்துவதன் மூலம் அது அதிகப் பலனைக் கொடுக்கும். முறைப்படுத்தப்பட்ட வேலை நேர்மையானதாக இருக்க வேண்டும். இன்றேல் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. இந்தியாவில் எந்த ஒரு கம்பெனியும் அதனுடைய வேலையில் பண்புகளை வெளிப்படுத்தி, முறைப்படுத்தலில் கவனம் செலுத்தினால், தோல்வியைச் சந்திக்க வேண்டியிராது.

திட்டக்கமிஷனின் 2020 தொலை நோக்குத் திட்டத்தில், இந்தியா தற்பொழுது 153வது இடத்திலிருந்து 100வது இடத்திற்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறது. இந்திய இளைஞர்கள் யாவரும் துடிப்பு மிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இந்தியா காலனியாக இருந்தபொழுது இருந்த ஏழ்மையை நிராகரிக்கிறார்கள். அரசியல் அமைப்புப்படி கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டது போன்று இளைஞர்களுக்கு அரசியல் சட்ட அமைப்பில் வேலைவாய்ப்புக்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும். இந்தியாவின் சுபிட்சத்திற்காக ஒரு இயக்கம் நடத்தப்படுமானால், 2020 தொலை நோக்குத் திட்டத்தின் இலக்கு அடையக்கூடியதாகி விடும். இந்திய வியாபாரச் சந்தை துடிப்பாக உள்ளது. முறைப்படுத்தப்பட்ட நேர்மையான வேலை உயர்ந்த பரிசை வழங்கும்.

 • சுயத் தொழில்தான் இன்றைய தேசப்பற்று.
 • வணிக விவசாயப் பொருள் உற்பத்தி பசுமைப் புரட்சியாகும்.
 • அதிகமாக கேட்பதுவும், அதிகமாக விரும்புவதும் சுபிட்சமாகும்.
 • அதிகமான சௌகரியத்திற்கு உன்னையே கேட்பது, நீ சுபிட்சத்தை அதிகமாகப் பெறுவாய் என்பதாகும்.
 • அதிக சௌகரியத்தை விரும்புவது, வியாபாரச் சந்தையின் வளர்ச்சியாகும்.
 • வியாபாரச் சந்தையின் வளர்ச்சி இந்தியாவின் சுபிட்சம்.
 • அதிகப் பிரயாசைப்பட்டால் அதிகமான சுபிட்சத்திற்கு வழியுண்டு.
 • நாடு சுறுசுறுப்பாக உள்ளது.
 • கல்வி நாட்டுக்கு ஒரு வெகுமதி.
 • கல்வியுள்ள நாடு வளமான நாடு.
 • வேலை செய்வதற்கு தகுதியாக்கிக் கொள்.
 • வேலைக்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

சுயதொழிலில் விருப்பங்கொள். வேலையை முறைப்படுத்தி, பண்புகளை வெளிப்படுத்தி தொடர்ந்து சிறப்புத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிக்கோளை அடைவதற்கு முன்பாகவே, 2020 தொலை நோக்கு எதிர்பார்ப்பை அடைய வேண்டும். 

விழித்திரு - எழுந்திரு - முறைப்படுத்து - அதுவே சுபிட்சம்.

*****

66. சுபிட்சத்தின் இயக்கம்

இந்திய தேசிய காங்கிரஸ் 1947க்கு முன்பு ஒரு கட்சியாக இல்லாமல், நாட்டின் விடுதலை இயக்கமாக இருந்தது. தேசத்தின் வளர்ச்சிக்கு, அத்தகையதொரு மக்களால் விரும்பப்படுகிற இயக்கம் தேவைப்படுகிறது. திட்டக்கமிஷன் 2020, தன்குறிக்கோளை அடைவதற்கு இத்தகைய இயக்கத்தின் மூலமாகத்தான் இலக்குகளை அடைய முடியும். நமது ஜனாதிபதி அப்துல்கலாம், நமது நாட்டு இளைஞர்கள் உயர்தரக் கல்வியையும் எதிர்கால சுபிட்சத்தைப் பெறுவதிலும் எழுச்சியுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை அறிகிறார். இத்தகையதொரு எழுச்சிக்கு செயல்வடிவம் தருவதற்கு அரசாங்கமோ அல்லது கட்சியோ இல்லாமல், ஒரு இயக்கம் தேவைப்படுகிறது.

நல்ல அரசாங்கம் வேண்டுமென்று கொடுத்த மனுக்களால் சுதந்திரம் கிட்டவில்லை. ஆனால் அது பூரண சுதந்திரம் அடைய வேண்டுமென்ற உயர்ந்த திடமான உறுதிப்பாட்டால் பெறப்பட்டது. நிர்வாகத்தின் திறமையால் மட்டுமே இந்தியாவின் சக்தியை வெளிக்குக் கொண்டு வரமுடியாது. சுபிட்சத்தின் இரகசியம், அதிக சௌகரியங்களை நாடுவதிலும் அதற்காக அவன் அதிகமாக உழைப்பதிலும் உள்ளது. விவசாயத்தால் மட்டுமோ அல்லது உற்பத்தி அதிகரிப்பால் மட்டிலுமோ அந்த அற்புதம் நிகழாது. இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்களுக்குத் தேவையான வசதிகளை அதிகரித்துக் கொள்வதிலும், உயர்கல்வி பெறுவதிலுமே வியாபார சந்தையை, சர்வீஸ் துறையின் மூலம் அதிகமாக விஸ்தரித்துக் கொள்ள முடியும். அந்த வளர்ச்சி, ஓர் அளவுக்கு நாட்டின் தலைநகரங்களிலும் பெரிய நகரங்களிலும் காணப்படுகிறது.

இந்தியாவின் கிராமப்புறத்தில் அதிக உற்பத்தியை பெருக்க முடியும். விவசாயத்தை வணிகப்பயிரிடும் முறைக்கு மாற்றி பின்பற்றினால், இலாபகரமாக இருக்கும். ஆனால் கிராமவாசி, தன்னுடைய சொந்த முயற்சியால் நகர வாழ்வின் வசதிகளைப் பெற விரும்பினால் அத்தகைய முயற்சிகள் அதற்கு முன் கண்டிராத வியாபாரச் சந்தையை உருவாக்குகிறது. அது தேசத்தின் சுபிட்சமாகும். எல்லாவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு, உள் கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன. அவை ரோடு வசதி, சேமிப்புக் கிடங்குகள், குளிர்சாதன வாகனங்கள், தகவல்கள் சேகரித்தல், போன்றவைகளாகும். அப்படி செய்வதின் மூலம் மக்களின் சக்தி வெளிப்படுத்தப்பட்டு, அவை முறைப்படுத்தப்படுவதின் மூலம் வாழ்வில் குறிப்பிடத்தக்க பலன்களைப் பெறமுடியும்.

*****

67. நிம்மதியான தூக்கம்

முன்னாள் ஆங்கிலேயருக்குச் சொந்தமான ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் ஒரு கிராமத்து சிறிய பண்ணைக்கு வந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த பொழுது, உடலின் சோர்வு நீங்கியதை உணர்ந்தார். அன்றிரவு அங்கேயே ஒரு சிறிய அறையில் தங்குவதற்கு விரும்பினார். மறுநாள் காலை தூங்கி எழுந்தவுடன், அந்த இடம் அவருக்கு பூலோக சொர்க்கமாகத் தெரிந்தது. அந்த சிறிய அறை, அவருக்கு இதற்குமுன் பதினைந்து வருடங்களாக அனுபவத்தறிந்திராத, புத்துணர்ச்சி வழங்கும் தூக்கத்தைக் கொடுத்தது. மனிதனுக்கு எல்லா செல்வத்தையும் அளித்த கடவுள், அந்த மனிதன் தன்னை மறந்துவிடுவான் என்று வேண்டுமென்றே, அத்தகைய நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கவில்லை என்று ஒரு நம்பிக்கை உண்டு.

அநேக மனிதர்கள் நன்றாக உறங்குவார்கள். நல்ல புத்துணர்ச்சியை வழங்கும் ஆழ்ந்த தூக்கத்தையும் அனுபவிப்பார்கள். தூக்கத்தில் அச்சுறுத்தும் பயங்கர கனவுகள் காண்பவர்கள், ஒரு மணி நேரம் கூட தூங்க முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு நன்றாக தூங்குபவர்கள் வியப்பிற்குரியவர்களாவார்கள். அவர்களுடைய பொறாமைக்கு இவர்கள் இலக்கானவர்களாக இருக்கக் கூடும். எல்லோரும் அத்தகைய பிரச்சனைகளை ஆன்மாவிடம் சமர்ப்பித்துவிட்டால், நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்கலாம். அவர்களில் பெரும்பாலோர் பக்திமான்களாகவும் மதப்பற்று உடையவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் கடவுள் ஏன் தங்களுக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கவில்லை என்று ஆச்சரியப்படுவார்கள். சில நேரங்களில் அவர்கள் கடவுளை பழிப்பதும் உண்டு. அவர்கள், தாழ்ந்த உணர்வுள்ள குட்டி தேவதைகளை தெய்வம் என்று கருதி வழிபடுவதால், அது அவ்வாறு அடிக்கடி நிகழ்கிறது. காரணம் எதுவானாலும் அவைகளை வெற்றி கொள்ள முடியும்.

ஆன்மாவை அழைத்து உறக்கத்தை ஆட்கொள்ளச் செய்தால், இரவில் தூக்கமின்மை என்ற பிரச்சனையிலிருந்து அவர்கள் விடுபடமுடியும். படுக்கப் போகுமுன் சிறிது நேரம் தியானத்தை மேற்கொள்வதாலும், தூக்கம், கனவு, அச்சுறுத்தும் பயங்கரச் சொப்பனம் ஆகிய எல்லாவற்றையும் ஆன்மாவின் பொறுப்பில் விட்டு விடுவதால், தூக்கமின்மை மறைந்துபோகும். "போகன் வில்லா” என்று அழைக்கப்படும் ஆன்மீக குணமுள்ள பாதுகாப்பு மலரை தன்னுடன் வைத்துக் கொண்டு உறங்கினால், தீய பயங்கர சொப்பனத்திலிருந்து விடுபடுவார்கள்.

ஒரு உத்தியோகஸ்தர் வரம்பில்லாமல் கடன் வாங்கும் ஆர்வம் உடையவராக இருந்தார். அந்த கடன் சுமை அவரது சம்பளத்தைப் போல் 30 மடங்கு அதிகரித்துவிட்டதால் அவருக்கு தூக்கம் கெடுவது ஒரு பிரச்சனையாக ஆகிவிட்டது. அவர் ஆன்மாவை அழைத்து செயல்படும் நண்பர்களில் ஒருவருடைய வீட்டிற்கு போய் தங்கும் வாய்ப்பு பெற்றார். அன்று இரவு அங்கு தூங்கி, மறுநாள் எழுந்தவுடன், இப்படிக் கூறினார். "நான் இரவில் விடியற்காலை 2 மணி வரை தீய பயங்கர கனவுகளால் தூக்கமில்லாமல் அவதிப்படுவேன். அதன் பிறகு தூக்கம் வராமல் தவிப்பேன். அந்த பிரச்சனை எழுந்ததிலிருந்து, முதன் முறையாக இங்கு விடியற்காலை 2 மணி வரையில் நன்றாக ஆழ்ந்து தூங்கினேன். அதன் பிறகு விழித்துக் கொண்டிருந்த போதும் முன்பு இருந்த அச்சம் இல்லாமல் இருந்தேன்'' என்று கூறினார்.

*****

68. எழுத்தர் பதவி உயர்வு

அட்டெண்டர் (Attender) கீழ் நிலை எழுத்தர், என்ற வார்த்தை சாதாரணமாக கேள்விப்பட்டதும் உபயோகத்தில் இருந்து வரும் வார்த்தையாகும். ஆங்கிலத்தில் அப்படிப்பட்ட வார்த்தை இல்லை. அந்த வார்த்தை அட்டெண்டெண்ட் (Attendent) வேலைக்காரன் என்பதுதான் உண்மையான பொருள். நம்முடைய சிறந்த தமிழ் மொழியானது, இந்தப் புதிய வார்த்தையை வழக்கத்தில் சேர்த்து, தமிழ்நாட்டில் இந்த ஆங்கில வார்த்தை அட்டெண்டர் (Attender), நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒருவர் அத்தகைய கீழ்நிலை எழுத்தராக (Attender) பத்து வருடம் பணி புரிந்து, எழுத்தர் (Clerk)பதவி உயர்வு பெற்றார்.

அந்த நாட்களில் பலவகை தரப்புகளிலும் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்தன. மாவட்ட தலைநகரில் மாவட்ட சங்கம் அமைக்கப்படவிருந்தது. இந்த எழுத்தர் தன்னுடைய புதிய அனுபவ நிலையில், சங்கம் அமைக்கும் கூட்டத்திற்குப் போக விரும்பினார். அந்தக் கூட்டத்திற்குப் போகுமுன், தன்னுடைய உறவினர் ஒருவரை அவர் ஆன்மீக மையத்துக்குப் போகும் தருணத்தில் போய்ப்பார்த்தார். அவர் போகுமிடத்தின் விசேஷத்தை அறியாமலே உறவினருடன் அந்த இடத்திற்குச் சென்றார். அங்கே அந்த இடம் அவருக்கு மங்களகரமாகத் தோன்றிற்று. மகிழ்ச்சியால் தன்னைத் தானே, அந்த இடத்திற்கு வந்ததை பெருமிதமாக எண்ணினார். எல்லாமே ஒரு நன்மை என்று மகிழ்ந்தார். அவர் வாழ்நாளில் அப்படிப்பட்ட நல்லவைகளை அதிகமாகக் கண்டதில்லை.

அடுத்த மாதம் அவர் உறவினர் வீட்டுக்கு முக மலர்ச்சியுடன் சென்றார். அங்கு தன்னுடைய அபூர்வமான அனுபவத்தைப் பற்றி இவ்வாறு கூறினார். "நான் சென்ற மாதம் சங்கம் அமைக்கும் கூட்டத்திற்குச் சென்றேன். தாலுக்கா அளவில் அதிகமான பிரதிநிதிகள் வரவில்லை. அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் ஓய்வு பெறும் தறுவாயில் வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள். கூட்டத்தில் கூட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாயின. மாவட்ட அளவில் மாவட்டக் குழுக்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. எதிர்பாராத வகையில் என்னுடைய பெயர் முன் மொழியப்பட்டு ஆமோதிக்கப்பட்டது, என்னை வியப்புக்குள் ஆழ்த்தியது. என்னுடைய வயதிற்கும், புதிய பதவிக்கு வந்த குறுகிய காலத்திற்கும் அது எனக்கு கிடைத்த ஒரு கௌரவம் என்றே கருதினேன். நான் மிகவும் உணர்ச்சிவயப்பட்டேன். பிறகு மற்றொருவர், என் பெயரை மாவட்ட சங்கத்தின் தலைவர் பதவிக்கு, முன் மொழிந்தார். இதை என் காதுகளால் நம்பவே முடியவில்லை. வியப்பின் மேலீட்டால் என்ன நடக்கிறது என்றுத் தெரியவில்லை. என்னை மாவட்ட சங்கத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவரும் வந்து எனக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்”.

அவர் தன் உறவினர் வீட்டுக்கு மறுபடியும் வந்து, தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட அபூர்வமான நிகழ்ச்சிகளைப் பற்றித் தெரிவிப்பதற்காக வந்தது வெளிப்படையான விஷயம். அதைவிட வெளிப்படையானது, அவருடைய உறவினர் இவருடைய வாழ்வில் ஏற்பட்ட திடீர் மாற்றத்திற்கு, இவர் ஆன்மீக மையத்திற்கு வந்ததற்கும், தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்த நிகழ்ச்சியின் தொடர்பினையும் உணர்ந்தது என்பதுதான். பயன் அடைந்தவர் அதைப்பற்றி அறியாமல் இருந்த போதும், அவர் ஆன்மீக மையத்திற்குச் சென்று வந்ததால்தான் அந்நன்மை ஏற்பட்டது என்பதே உண்மை.

*****

69. பரிதாபம், அனுதாபம், கருணை,

அருள், பேரருள்

பலவீனமானவர்கள் கொடூரக்காட்சியைப் பார்க்க மாட்டார்கள். அதைக் கண்டால் மனத்தால் பாதிக்கப்படுவார்கள். அவரது நிலை பரிதாபத்திற்குரியது. நண்பருக்காக வருத்தப்படுவது அனுதாபமாகும். அனுதாபம் மற்றவருடைய துன்பத்தைப் போக்காது, ஆனால் ஆறுதல் அளிக்கும். கருணை என்பது தெய்வத்தின் செயல். அது தான் துன்பப்படாமல் மற்றவருடைய துன்பத்தைப் போக்கும். அருள் துன்பத்தின் காரணத்தின் வேரை அறுக்கும் தன்மையுடையது. அது கடந்தகால கர்மவினைப் பயனால், இப்பொழுது அனுபவிக்கும் கஷ்டங்களை அழித்துவிடும்.

இறைவன் மீது வைக்கும் நம்பிக்கை, அருளை வரவழைக்கிறது. அனுதாபம் நல்லெண்ணத்திலிருந்து எழுவது. பரிதாபம் என்பது ஒருவருடைய பலவீனமான மன நிலையிலிருந்து எழுவது. ஒருவர் பலவீனமாக இருப்பதால், துன்பத்தினால் பாதிக்கப்படுகிறார். இவருடைய பலவீனமான உணர்வுகளால், துன்பப்படுபவரை மேலும் கஷ்டத்திற்குள்ளாக்குகிறார். கடவுள் மீது வைக்கும் நம்பிக்கை மறைமுகமாக கர்மத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. மனிதன் கர்மவினையின் மீதுள்ள நம்பிக்கையை மாற்றி இறைவனின் அருள் மீது நம்பிக்கை வைத்தால், பழைய கர்மவினை கரைந்துவிடும். இதில் இந்திய பாரம்பரியம் திடமான நம்பிக்கை வைத்துள்ளது. ரிஷி தவத்தை மேற்கொண்டு, இறைவன் மீது வைக்கும் திடமான நம்பிக்கையினால், அவர் தன்னுடைய பழைய கர்மவினைக்கு கட்டுண்டவராக ஆகமாட்டார். ரிஷி தவத்தால் பெற்றதை, தெய்வீக அன்னை நமக்கு அருளாக வழங்குகிறார். அன்னையின் மீதுள்ள நம்பிக்கை அருள். அது ஒருவருக்கு பழைய கர்ம வினைகளிலிருந்தும் விடுதலை அளிக்கிறது.

ஒருவர் தன்னுடைய திறமையை நம்பாமல் அன்னையை மட்டும் நம்பினால், அன்னை அவருக்கு எல்லை கடந்த பேரருளை வழங்குவார். அருள் பேரருளாக செயல்பட்டு, முடிவில் கிடைக்கக்கூடிய பலனை முதலிலேயே வழங்குகிறார்.

 1. அன்னையை அறிவது அருள்.
 2. அன்னையை நம்புவது பேரருள். 

*****

70. சிந்திக்காமல் புரிந்துகொள்வது

நாம் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமாக சிந்திக்கிறோம். நினைக்க முடியாதவருக்கு புரிந்து கொள்வது கஷ்டம். அவர் விஷயங்களை மனப்பாடம் செய்து ஞாபகத்தில் வைத்திருப்பாரேயன்றி, புரிந்து கொண்டிருக்க மாட்டார். வக்கீல் குமாஸ்த்தாக்கள், நர்சுகள், மருந்தாளுனர்கள் தங்களின் தொழிலின் தன்மைப் பற்றி அறிவார்கள். ஆனால் அதன் விதிமுறைகளைப் பற்றியோ, மருந்தைப் பற்றியோ புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். அந்தத் தொழிலைப் பற்றிய அறிவு, முறையான கல்வி அறிவினால் ஏற்பட்டதல்ல. அது நீண்ட கால அனுபவத்திலிருந்து வந்ததாகும். சில சமயங்களில் அவர்கள் தங்களுடைய தொழில் மேலதிகாரிகளைவிட திறமையாக இருப்பார்கள். இது ஒரு விதிவிலக்கேயன்றி, விதிமுறை அல்ல.

ஒரு பிரச்சனை புரிந்து கொள்ள முடியாமல் சவாலாக இருந்தால், அதை நாம் கைவிட்டு விடுகிறோம். சில நாட்களுக்குப் பிறகு திடீரென்று நம் மனதில் அது தெளிவாக விளங்குகிறது. சிந்திக்கும் திறன், தோல்வியுறும் பொழுது, புரிந்து கொள்ளும் சக்தி மனதில் உதயமாகிறது. புரிந்து கொள்ளும் திறன், மௌனத்தின் மூலம் அதிகம் வரும். அதிக அளவில் புரிந்து கொள்வதற்கு, சிந்திக்கும் திறனைவிட, மௌனம் ஒரு சிறந்த சாதனம் என்று நீண்ட கால விவேகம் நமக்குத் தெரிவிக்கிறது.

வெளியுலக அனுபவத்திலிருந்து நாம் அறிவை பெறுகிறோம். அது மனத்தின் அறிவு. அதே அறிவு, நம் மனத்தின் உள்ளே உயர்ந்த நிலையில் உள்ளது. அந்த சிறந்த அறிவைப் பற்றி நாம் உணராமல் உள்ளோம். ஒருவர் மௌனத்தை நாடி உள்ளே சென்றால், அங்குள்ள உயர்ந்த அறிவை அதிகமான அளவில் பெறமுடியும். அது சிந்தனை செய்யாமலே புரிந்து கொள்ளக் கூடியது. மௌனத்தை தினமும் பயிற்சியின் மூலம் கடைப்பிடிக்கும் பொழுது, குறிப்பாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பழக்கத்தில் கொண்டு வந்தால், உள்மனதில் மௌனம் கூடும். மௌனம் என்று நான் குறிப்பிடுவது பேச்சற்ற நிலை அல்ல, அது மனதில் எண்ணமற்ற மௌன நிலையில் இருப்பதாகும். மௌனத்தைப் பெறுவதற்கு எடுக்கும் முயற்சியை, எண்ணம் தடுக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் தியானம் செய்வது உகந்தது. அந்தப் பிரார்த்தனை, மௌனமான தியானமாக இருக்க வேண்டும்.

*****book | by Dr. Radut