Skip to Content

07 . பகுதி - 6

51. கவனம் செலுத்துவதைவிட

வழிபாடு மேலானது

வழிபடுதல் என்பது பக்தி. ஒரு ஆன்மாவின் வழிபாடென்பது எல்லா ஆன்மாக்களையும் உள்ளடக்கிய இறைவனுக்கு போகிறது. கடவுள், அழைப்பவரின் குரலுக்கு விதி விலக்கில்லாமல் செவி சாய்க்கிறார். இறைவனை அழைப்பதின் மூலம் மனம் ஒரு வசீகரிப்பில் கவரப்பட்டு தன்னை இழக்கிறது. ஒரு வாலிபன் ஒரு பெண்ணின் மீது காதல் வயப்படும்பொழுது அவள் நடந்து போகும் பாதையை உணர்ச்சி மேலிட்டால் வணங்குகிறான். அவள் அவன் மேல் காதல் கொண்டோ அல்லது லட்சியரீதியாகவோ அவனுக்கு விசுவாசமாக இருக்கிறாளோ இல்லையோ, அவனுடைய போற்றுதலால் அவள் கவரப்படுகிறாள் என்பது நிச்சயம். தண்ணீரை வழிபட முடியுமா? ஆம், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பொழுது, மனத்தின் உள்ளேயிருந்து எழும் உணர்ச்சிகளால் தண்ணீரை வழிபடுவது அவசியம். ஒரு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி குறுகிய கால கவர்னர் பதவி வகித்த பின், ஒரு பல்கலைகழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அங்கு மாணவர்கள் அடங்காத மூர்கத்தன்மை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒரு பேராசிரியரை வேலை நீக்கம் செய்யும்படி கோரிக்கை எழுப்பினார்கள். தவறினால் அங்கு போடப்பட்டிருந்த ஒரு பெரிய பந்தலுக்கு தீ வைத்து விடுவதாக மிரட்டினார்கள். அவருடைய சமாதானத்தை மாணவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். அவர் சென்னைக்குச் சென்று பார்க்க வேண்டிய அதிகாரிகளைப் பார்த்து, பெறவேண்டிய ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பும் பொழுது, ரயில்வே ஸ்டேஷனில் சந்தித்த பல்கலைகழக ஊழியர்களிடம் கடிதத்தை அவர் பத்திரமாக பாதுகாத்து கொண்டு வந்ததைப் பற்றிப் பேசும்பொழுது, அவர் வாழ் நாளிலே அப்படி வேறெதையும் பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை என்று கூறினார். அக்கரையுடன் தண்ணீரைப் பாதுகாத்து தண்ணீரைப் போற்றலாம். அதை வணங்கவும் செய்யலாம்.

சுயநலமின்றி, தண்ணீருக்கும் ஜீவன் உண்டு என்கிற மனோபாவத்துடன் தண்ணீரை உணர்வால் போற்றுவது நன்று. அப்படி தண்ணீரை உயிருள்ளதாகவும் அன்புக்குரியதாகவும் எண்ணி வழிப்பட்டால், நிச்சயமாக தண்ணீரின் பதில் கிடைக்கும். அந்த நிமிடத்திலிருந்து வீட்டில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது கேள்விப்படாததாக இருக்கும். தண்ணீர் உணர்ச்சிக்குரியது என்பது ஆன்மீக தத்துவம். மிகுந்த உணர்ச்சிக்குட்பட்டவர்கள் கனவில், அலைபுரளும் கடலைக் காண்பார்கள். அந்த அலைகளின் மீது மிதப்பது போன்றும் காண்பார்கள்.

போற்றுதல் என்பது கவனிப்பை உள்ளடக்கியதாகும்.

தண்ணீரை ஒருவர் வழிபடும் பொழுது வழிபடுகின்ற அந்த ஸ்தாபனத்திலும் வீட்டிலும் தண்ணீர் கஷ்டம் குறைவாகவே இருக்கும். தண்ணீருக்கு கவனம் செலுத்துவதால் தண்ணீர் பற்றாக்குறை தற்காலிகமாகத்தான் தீரும். ஆனால் அதைவிட தண்ணீரை வழிபடுவதால் நிரந்தரமான தீர்வு கிடைக்கும். நாம் தண்ணீரை வழிபடுவதால், இப்பொழுது நாம் உபயோகிக்கும் தண்ணீரின் தரத்தைவிட உயர்ந்ததான, சுத்தமான தண்ணீர் கிடைக்கும். கவனிப்பு எப்பொழுதும் பொய்ப்பதில்லை. தண்ணீருக்கு பக்தி செலுத்துவதால், அது அதிகப் பலன் தருவது எப்பொழுதும் பொய்ப்பதில்லை.

*****

52. நகரத்தின் தண்ணீர் பிரச்சனைக்கு

நிரந்தர தீர்வு காணுதல்

மழை, அருள் என்பது ஆன்மீகம். தண்ணீர் உணர்ச்சிக்குரியது. மனம் உணர்ச்சிப் பெருக்கால் நிறைந்திருக்கும் பொழுது, தேவைக்கு மிஞ்சிய அளவில் தண்ணீர் அபரிமிதமாகக் கிடைக்கும். நீர்வளம் உள்ள இடங்களில் இருப்பவர்கள் குடும்பப் பாசத்துடன் இருப்பதைக் காணலாம். தண்ணீர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான இரகசியம் இதிலுள்ளது. உணர்ச்சிகளை நாம் கட்டளையிட்டு வரவழைக்க முடியாது. அப்படி எனில் இவ்வுண்மையை நாமெப்படி நடைமுறையில் பயன்படுத்திக் கொள்வது?

உணர்வு என்பது உயர்வானது என்பது உண்மை. இதுவுமன்றி வேறு ஒரு உண்மையும் உள்ளது. நமக்கு முக்கியமானதொன்று தேவைப்படும் பொழுது, அதை அடைய தீவிரமாக முயற்சிக்கும் பொழுது, நமக்கு உணர்ச்சி பெருகுகிறது. மேலும் குடும்பத்திலுள்ளவர்கள் மீதும், மற்றவர்கள் மீதும் காட்டும் பாசம், தேசபக்தி, நேர்த்தியான வேலை செய்வதில் காட்டுமார்வம் மற்றும் எதன் மீதும் காட்டும் உணர்ச்சியாலும் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும். அந்த உணர்ச்சியை தண்ணீருக்காக செலுத்துவது மிகவும் சிறந்தது. நன்றியுடைமை என்பது, இறைவன் வாழ்வில் செயல்படுவதை உணர்ச்சிப் பூர்வமாக அறிந்து கொள்வதாகும். அப்படி இறைவனுக்கு நன்றி செலுத்தும் பொழுது, உடலில் அதிர்வுகள் ஏற்பட்டு சிலிர்க்கின்றது.

பல நூற்றாண்டுகளுக்கு முன், நூறு வருஷத்திற்கு ஒரு முறைதான் நாட்டில் வறட்சி ஏற்பட்டது. ஆனால் 20ம் நூற்றாண்டில்தான் அதிகபட்சமாக 60 முறைகள் வறட்சிகள் ஏற்பட்டன. வறட்சி அதிகரிப்பது என்பது ஆன்மீக நோக்கில் மனிதன், இறைவனிடமிருந்து விலகிப் போய்க் கொண்டிருக்கிறான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. வெளியில் ஏற்படும் வறட்சி, மனிதனின் இதயத்தில் அன்பின் ஊற்று வறண்டு விட்டதின் பிரதிபலிப்பாகும்.

வறட்சிக்குப் பின்னால் உள்ள ஆன்மீகக் காரணத்தை உணர்ந்து, மக்கள் சிருஷ்டி கர்த்தாவான இறைவனின் கருணை மீது உள்ளம் நிறைந்த நினைவுடன் மனதை செலுத்தினால், பருவ காலம் இல்லாத போதும், தூய்மையான மனத்தோடு மக்கள் யாவரும் இடைவிடாது வருண ஜபம் செய்வது போன்று, அதிக மழை பெய்யும். ஐரோப்பாவில் பிரம்மத்தை அப்சல்யூட் (ABSOLUTE) என்றும் இந்தியர்கள் பரப்பிரம்மம் என்றும் கூறுகிறார்கள். சத்தியத்திற்கு நம் வாழ்க்கையை அர்ப்பணித்தால் மழை இப்படி பருவம் தவறியும் பெய்யும். அரிதானது தண்ணீரில்லை, மனிதனுடைய உணர்வுகள்தான்.

*****

53. தமிழ் நாட்டில் வறட்சி

உலகில் எந்தப் பகுதியிலும் வறட்சி ஏற்படலாம். ஆனால் ஆன்மீகம் நிறைந்த இந்தியாவில் வறட்சி ஏற்படாது. இருந்தபோதிலும், இந்தியாவில் வெள்ளச் சேதமும் வறட்சியும் ஏற்படுகிறது. இக்கூற்றை விரிவுபடுத்தி வறட்சி எந்தப் பகுதியில் நேர்ந்தாலும், தமிழ் நாட்டுக்கு வரக்கூடாது என்று கூற விரும்புகிறேன். ஆன்மீகம் மிகுந்த இந்தியா ரிஷிகளும், தபஸ்விகளும், முனிவர்களும், யோகிகளும் வாழ்ந்த நாடு. தமிழ் நாட்டில் அவதரித்த 63 நாயன்மார்களும், 12 ஆழ்வார்களும் பகவான் ஸ்ரீ அரவிந்தர் வளரும் ஆன்மா என்று வர்ணிக்கும் சைத்திய புருஷனுக்குரிய யோகத்தை செய்தவர்களாவார்கள்.

ஸ்ரீ அரவிந்தரின் பூரணயோகம், வாழ்வனைத்தும் யோகம் என்று கூறுகிறது. மற்ற யோகம் யாவும் வாழ்வை புறக்கணிக்கிறது. இங்கு ஆன்மா என்று குறிப்பிடுவது ஜீவனின் சாட்சி புருஷன் அல்ல. அது சைத்திய புருஷன் என்பதாகும். வாழ்வில் பங்கு கொண்டு செயல்பட்டுக் கொண்டு வருவது, சைத்திய புருஷனாகும். ஸ்ரீ அரவிந்தர், தமிழ்நாட்டில் சைத்திய புருஷனின் வெளிப்பாடு மிகுந்து காணப்படுவதால் இங்கே வந்தாரோ என்று கருத வேண்டியுள்ளது. எந்த விதமான இடர் வந்துள்ள போதும் வறட்சி என்பது தமிழ் நாட்டுக்கு வராது, வரவும் கூடாது. அதற்கு நாம் செய்ய வேண்டியது யாதெனில் நாம், நம்மை ஆன்மீகப் பாரம்பரியத்தில் ஈடுபடுத்திக் கொண்டு செயலாற்ற வேண்டும்.

மேற்கூறிய 75 மகான்களைத்தவிர, பெரிய ஆன்மாக்களான ரமணமகரிஷி, திருவாரூர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள், பட்டினத்தார், ராமலிங்க சுவாமி, போளூர் விட்டோபா, ராகவேந்திரர் மற்றும் பல மகான்கள் அவதரித்த நாடு, தமிழ் நாடாகும். இவர்களில் பலர் சூட்சும உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றும் சிலர் பரப்பிரம்மத்துடன் ஐக்கியமாகி விட்டிருப்பார்கள்.

இந்த மகான்களுடன் லட்சக்கணக்கான மக்கள் பக்தியுடன் ஈடுபாடு கொண்டுள்ளார்கள். இதைத்தவிர இஸ்லாமிய கிருஸ்துவ மகான்களும் உள்ளனர். மக்கள், தாங்கள் வழிபடும் மகான்களின் மேலுள்ள பக்தியை தீவிரப்படுத்தி அவ்வகையில் பழைய தொடர்பை புதுப்பித்துக் கொண்டால் நாட்டிற்கு ஒரு புதிய முறையான வாழ்வு ஏற்பட்டு, இனி எந்த வருஷத்திலும் வறட்சி என்பதே வராத நிலைமை ஏற்படும். வறட்சி வராமல் தடுக்க மத சம்மந்தமான சடங்குகளும் பின்பற்றப்படுகின்றன. சடங்குகளை விலக்கி மழைக்காக தெய்வீக அன்னையை அழைக்கலாம். அப்படி ஒருமுறை அன்னையை அழைத்தபோது, மழை அதிகமாகப் பெய்தது. மழை, அளவு கடந்து பெய்த பொழுது அதை நிறுத்துவதற்காக வேறொரு பிரார்த்தனை செய்ய வேண்டியிருந்தது.

*****

54. பணத்தை அதிகம் செலவழித்தால்

பண வரவு பெருகும்

பணத்தை அதிகம் செலவழித்தால் பணவரவு அதிகரிக்கும் என்ற தலைப்பின் இந்தத் தத்துவம், பணத்தை சிக்கனமாக குறைந்த அளவில் செலவு செய்தால் பணம் அதிகரிக்கும் என்ற பரவலான நம்பிக்கைக்கு முரண்பாடானது. ஆனால் பணத்தை அதிகமாக செலவழிக்கும் முறையை கையாண்டவர்கள் பணத்தை அதிகமாக சேர்த்தார்கள் என்பது அனுபவபூர்வமான உண்மை. அதுவே நியாயமான ஆன்மீக உண்மையுமாகும்.

இதை நான் ஒரு மெக்கானிக்கல் விதிமுறை என்று கூட கூற விரும்புகிறேன். ஒரு குழாய் மூலமாகவோ, வாய்க்கால் மூலமாகவோ தண்ணீர் பாயும்போது, தண்ணீரின் வரத்து அதிகரிக்க தண்ணீரின் வெளியேற்றத்தை அதிகரிக்கிறோம். இது இயற்பியல் விஞ்ஞானம் என்று அறிகிறோம். அன்னை இப்படி ஒருமுறை பேசியதைக் கேட்டவர்கள் ஆச்சரியத்தால் திகைப்புற்றனர். இந்தப் புதிய கருத்தை ஒவ்வொருவரும் ஏற்றுக் கடைப்பிடித்து, அதன் உண்மையை அறிந்து கொண்ட பின் சிறிது காலத்திற்குள் பழைய முறைக்கே திரும்பினார்கள். பழங்காலத்து தொன்மையான தமிழ் இலக்கண நன்னூலில், நாம் நமது அறிவையும் புலமையையும் பலருக்கு போதிப்பதால், போதிப்பவர் மேலும் அதிக அறிவு பெறுவார் என்று சொல்லப்பட்டுள்ளது.

இசை, கலை, மொழி போன்றவற்றில் ஒருவரின் திறமை அதிகரிக்க அதை அவர் பயிற்சியை மேற்கொள்வதின் மூலம் அடையலாம் என்பது இதில் மறைந்துள்ள உண்மை.

எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் இந்த தத்துவத்தைப் பற்றி விளக்கிய போது, அதை அவர்கள் ஏற்றுக் கொண்டு செயல்பட்டதின் விளைவாக, அவர்களது பணவரவு ஆச்சரியம் தரும் வகையில் தொடர்ந்து அதிகரித்தது. பணத்தை தாராளமாகச் செலவு செய்வது என்பது பணவிஷயத்தில் பிஸிக்கலான அம்சமாகும். பணத்தை செலவு செய்வதில் நாம் காட்டும் ஆர்வம் மற்றும் இந்த உண்மையை நாம் ஆழமாக புரிந்து கொள்வது ஆகியவை பணவரவின் அதிகரிப்பை நிர்ணயிக்கும். செலவழிக்க வேண்டுமென்று சொல்வது, ஊதாரித்தனமாக வீண் செலவு செய்வதல்ல. நியாயமான செலவைத்தான் இங்கு செலவு என்று குறிக்கப்படுகிறது. வீட்டிலோ அல்லது உன்னுடைய வியாபாரத்திலோ நிர்பந்தம் இல்லாத இடத்தில் அவற்றிற்கு செலுத்த வேண்டிய பணத்தை உடனே செலுத்தாமல் தள்ளிப் போடுவதும், நிர்பந்தம் அதிகமாக இருக்குமிடத்தில் உடனடியாக செலுத்தி விடுவதும், சாதாரணமாக பழக்கத்தில் இருந்து வரும் நடைமுறைப் பழக்கமாகும். பணத்தை இவ்வாறு செலவிடுவது சரியான முறையன்று.

பண செலவிற்கு ஒரு முறையான வரிசை உள்ளது. இந்த வரிசையை மூன்று மாதங்கள் சரியாக பின்பற்றுங்கள். அது சம்பளம் கொடுப்பதிலாகட்டும் அல்லது வியாபாரத்தில் சரக்குகளை வழங்குபவர்களுக்கு பணம் கொடுப்பதிலாகட்டும், முன்னுரிமை கொடுத்து இந்த முறையைப் பின்பற்றுங்கள். இதை பின்பற்ற முடிவு செய்தால் இந்த வரிசை கிரமம் ஏன் முக்கியம் என்று உணர்ந்து செயல்படுங்கள்.

நம் செயல்பாடு சரியான விளக்கத்தின்படி இருக்க வேண்டும். அறிவு விளக்கத்தைத் தாண்டி ஆன்மீக நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படும் கட்டமும் உள்ளது. நாம் மேலும் ஒரு கட்டத்திற்குச் சென்று ஆன்மீக நம்பிக்கையை தெளிந்த ஆன்மீக அறிவாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

*****

55. எப்பொழுதும் பெருகிக் கொண்டு

வரும் வருமானம்

பொருள் ஈட்டுவது தங்கள் கொள்கைப்படி நேர்மையற்றது என்ற நம்பிக்கைக் கொண்ட உயர்ந்த ஆத்மாக்கள் உள்ளார்கள். நான் அவர்களுக்கு என் நிலையைப் பற்றியோ அல்லது அவர்கள் தொன்று தொட்டு கடைப்பிடித்து வந்த ஒழுக்க நெறி முறை தத்துவத்தின்படி வாழ்க்கைக்கு மிகக் குறைந்த பணமே போதுமென்ற நம்பிக்கையைப் பற்றியோ விளக்க முயற்சிக்கவில்லை. என்னுடைய முக்கியமான இரண்டு நம்பிக்கைகள்:

  1. நவீன நாகரீக வாழ்க்கை செலவுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது.
  2. வருடக்கணக்கில் தவத்தில் உட்கார்ந்து இருப்பதை விட நேர்மையாக பணம் சம்பாதிப்பது மிகவும் கடினமானது. தவம் என்பது தூய்மையான உயர்ந்த நிலையில் செய்வதாகும். ஆனால் பணம் சம்பாதிப்பது என்பது சிரமம் நிறைந்த நிஜ உலகில் செய்ய வேண்டியதாகும். 

எவரொருவர் தன் சூழ்நிலை அனுமதிக்கும் அளவிற்கு தன்னுடைய செலவுகளை முறையான வரிசைக்கு ஆட்படுத்துகின்றாரோ அவருடைய வருமானம் அந்த அளவிற்கு பெருகுவதைக் காணலாம். தவிர்க்க முடியாத செலவு என்று தற்பெருமைக்காக செலவிடுவதை தாராள செலவாகக் கருத முடியாது. கொடுக்க வேண்டிய சில கடினமான பாக்கிகளை தாமதப்படுத்துவதும், தனக்கு சேர வேண்டிய பணத்தைக் கேட்காமல் இருக்கும் தயாள குணம் உடையவருக்கு கொடுக்காமல், தனக்கு அவசரமாகத் தெரியும் செலவுகளுக்கு முன்னுரிமை கொடுத்து செலவிடுவதும், ஏமாற்றும் மனப்போக்கை காட்டுகிறது. முறையான வழியில் தாராளமாக செலவழிப்பது, நம்மிடத்திலுள்ள ஏமாற்றுகிற குணத்தின் களங்கத்தைப் போக்குவதாகும். நம்முடைய தேவைதான் முக்கியமென்ற மனப்பான்மையை தவிர்ப்பது, நம்முள் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவரும். இந்த இரண்டு ஆன்மீகக் கோட்பாடுகளும் மிகவும் சக்தி வாய்ந்தவைகளாகும். உடலாலும், மனத்தாலும் பொருள் ஈட்டுவதைவிட ஆன்மா மூலம் அதிகமான பொருள் சம்பாதிக்கலாம்.

நியாயமாக கொடுக்க வேண்டிய பணத்தை நீ தாராளமாக மனமுவந்து கொடுக்கும் பொழுது, அதைப் பெறுபவர் பேரானந்தம் அடைவார். அதனால் அவருடைய ஆன்மாவின் சக்தி வெளிப்படுகிறது. பயனற்ற வகையில் ஆடம்பரமாக செலவழிக்கும் பொழுது அதைப் பெறுபவர், நம்மை ஒரு முட்டாளாக எண்ணுவார். சில சமயங்களில் நாம் கொடுப்பது நம் அகந்தையின் வெளிப்பாடாக கருதப்பட்டு அடுத்தவர் அப்பணத்தை வாங்க மறுக்கவும் செய்யலாம்.

வெற்றிகரமாக நடக்கும் வியாபாரத்தில் செலவிற்கு உரிய இடங்களில் நிறைய செலவாவதையும் காணலாம். அங்கு வியாபாரம் தொடர்ந்து வளர்ச்சியடைவதற்கு அது ஒரு முக்கிய காரணம். தெய்வீக அன்னை இதை வாழ்வின் அடிப்படையான கொள்கை என்று அறிவித்துள்ளார். பணத்தைப்பற்றிய இந்நியதிக்கு ஆன்மீக நிருபணம் தேவை என்று நினைப்பவர்கள் அன்னையின் கூற்றை நிருபணமாக எடுத்துக் கொள்ளலாம்.

*****

56. பணம் உழைத்து சம்பாதிப்பதற்கு

பண்புகள் சக்தி முக்கியம்

பணம் உழைத்து சம்பாதிப்பது, என்பது தேர்தலில் வெற்றி பெறுவது, பரீட்சையில் பாஸ் செய்வது போன்ற நடவடிக்கையைப் போன்றது. ஒரு செயலில் எனர்ஜி, நோக்கம், ஆர்கனைஷேஷன் மற்றும் திறமை என்று நான்கு அம்சங்கள் உள்ளன. எனர்ஜி ஆர்வத்திலிருந்து வருகிறது. நோக்கம் எனர்ஜிக்கு செயல்படும் திசையைக் காட்டுகிறது. ஆர்கனைஷேஷன் எனர்ஜியை சக்தியாக மாற்றுகிறது. திறமை சக்தியை பலனாக மாற்றுகிறது.

பணம் ஈட்டப்படுவது ஒவ்வொரு அம்சத்தின் திறனைப் பொருத்தது. மேலே குறிப்பிட்ட திறன்களின் அம்சம் ஒருங்கிணைந்து செயல்படும் பொழுதுதான், ஈட்டப்படும் பணத்தின் அளவு தெரியும். இதில் ஏதோ ஒரு அம்சம் இல்லாவிட்டாலோ அல்லது அரைகுறையாக செயல்பட்டாலோ, பணம் ஈட்டுவதில், எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. எனவே பணத்தை நல்லமுறையில் ஈட்டுவதற்கு காரணமாக இருக்கும் எந்த அம்சத்தையும், தவறவிடக்கூடாது. ஈட்டப்படும் பணத்தின் அளவு, இந்த அம்சங்களின் பண்புகளால் நிர்ணயிக்கப்படுகிறது. இது ஏன் என்றால் பண்புகள் என்பது ஆன்மீகம் என்பதாகும்.

ஒருவர் மாதம் ரூ.10,000 அல்லது ஒரு லட்சம் சம்பாதிப்பவர் அந்த வருமானத்தை 5 மடங்காக உயர்த்திக் கொள்ள முடியும். அதற்கு அவர் செய்ய வேண்டியது என்னவென்றால் பண்புகளின் நிலையை கொஞ்சங் கொஞ்சமாக உயர்த்தி அதிகபட்ச நிலைக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும். இந்த முறையைப் பின்பற்றினால் ஒரு கம்பெனி மிகக் குறைந்த நஷ்டத்தில் இயங்கி வரும் பொழுது, குறைந்த அளவு இலாபம் ஈட்டும் அளவிற்கு உயர்த்திக் கொள்ள முடியும். இலாபத்தை மேலும் உயர்த்திக் கொள்ள வேண்டுமானால், பண்புகளை உயர்த்திக்கொள்ள வேண்டும். அல்லது செயலை மேலும் சிறப்பாக முறைப்படுத்துவதாலும் கம்பெனியின் முக்கியக் குறிப்பிட்ட தேவைகளுக்கு தேவையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், அதிக லாபத்தை எட்டமுடியும்.

பண்புகள் சம்பந்தப்படாத வேலையே இல்லை. கவனம், செயலை முறைப்படுத்துதல், புரிந்து கொள்ளும் திறன், நேர்மை, உண்மையாக இருத்தல் போன்ற பண்புகள் நாம் அறிந்தவைகளாகும். இதைப்பற்றி அதிகமாக பட்டியலிடலாம்.

ஒரு குடும்பத்தின் தலைவரான தகப்பனாரோ அல்லது தாயாரோ தன்னுடைய சொந்தத் தேவைகளை நாடுவது சுயநலமாகும். அவர் தன் சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குப் பதில் குடும்பத்தில் உள்ள அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்தால் சுயநலமற்றவராக இருப்பார். தனது கடமையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மற்றவர்களின் தேவைகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வதில் முயற்சிப்பார். அப்படி மற்றவர்களுக்கு கவனிப்பு செலுத்துவதால் குடும்பத்தில் வருமானம் திடீரென்று பெருகும். கம்பெனி முதலாளிகள் அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபடும் பொழுது, இது வரையில் வைக்கோற்போரில் ஊசி தேடுவது போன்று, ஆர்டர்களைத் தேடிக் கொண்டு இருக்கும் நிலை மாறி ஆர்டர்கள் தானாகவே வந்து குவியும்.

பண்புகள் ஆன்மீகச் சிறப்புடையது. அவை அபரிமிதமான செல்வத்தைக் கொண்டு வரும் திறன் உடையவை.

*****

57. பண்புகள் 100 மடங்கு

சக்தி உடையவை

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதன் உடல் அளவில்தான் வாழ்ந்தான். அப்பொழுது அவன் வாழ்வு ஆரம்ப நிலையாக எளிமையாக இருந்தது. அந்த நிலையில்தான் அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். இப்பொழுது மனிதன் தன் வாழ்வில் வசதிகளைப் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டான். ஆனந்தம், சௌகரியங்கள், திறமை, வேண்டுபவற்றை அடைதல், போன்றவைகளில் 100 மடங்கு வளர்ச்சியை அடைந்து விட்டான். இந்த முன்னேற்றங்கள் ஆயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட வியக்கத்தகு நிகழ்ச்சிகளாகும். இதற்குக் காரணம் மனிதன் உடல் அளவிலிருந்து மனத்தின் நிலைக்கு உயர்ந்துவிட்டான் என்பதாகும். எனினும் அவன் தன் வாழ்வை முழுமையான மனத்தளவிலான வாழ்க்கையாக, முற்றிலுமாக அமைத்துக் கொள்ளவில்லை. பகுத்தறிவு வாழ்வாகவோ, மனதளவில் உயர்ந்த வாழ்வாகவோ, அமைத்துக் கொள்ள முடியாவிட்டாலும், அவன் உடலளவு நிலையிலிருந்து உணர்வு நிலைக்கு உயர்ந்துள்ளான், என்பது உண்மை. உடலை விட்டு விலகி மனிதன் உணர்வு நிலைக்கு வந்துள்ளான் என்பது உண்மை. அவனுடைய உடலும், உணர்வும் பிஸிக்கல் லெவலில் அறிவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அறிவின் தலையீட்டை ஏற்பதில்லை. இருந்தாலும் மனிதன் அறிவால் செயல்படுகின்றவன் என்று சொல்வதில் தவறில்லை.

இத்தகைய வியத்தகு பெருக்கம் மனிதன் பிஸிக்கல் லெவலிலிருந்து அறிவு நிலைக்கு உயர்ந்ததால் வந்துள்ளது என்றால், இதே மாதிரியான மற்றொரு பெருக்கம் அறிவு நிலையிலிருந்து ஆன்மநிலைக்கு உயரும் பொழுதும் வரும். அப்படி உயரும் பொழுது வாழ்வு வளமான நிலைக்கு உயர்வதிலும், உள்ளுரை அமைதி ஏற்படுவதிலும், வெளிப்புற பாதுகாப்புப் பெறுவதிலும், பேதமற்ற பூசல் இல்லாத நிலையிலும், மனிதனின் நிலை ஆயிரம் மடங்கு உயரும். குறிப்பாக செல்வ வளம் அதிகமாக பெருகும் என்று ஒருவர் உறுதியாகக் கூறமுடியும்.

ஒளிபொருந்திய ஆன்மாவை அடைவது நமது குறிக்கோளானால், நமக்குத் தெரிந்துள்ள பண்புகளான நேர்மை, விஸ்வாசம், உண்மையைக் கடைப்பிடித்தல், சுத்தம், மௌனம் இவற்றைப் பின்பற்ற வேண்டும். இந்த பண்புகளை ஒருவர் அதிக அளவில் உபயோகப்படுத்தினால், ஆன்மாவின் சக்தியை வாழ்வில் செயல்பட வைக்கமுடியும். இந்தப் பண்புகள் ஆன்மாவின் திறமையானதால், நம் வேலையின் பலன்கள் ஆயிரம் மடங்காக இல்லாவிடினும் நூறு மடங்காக உயர்த்தும்.

நாம், பணத்தை உபயோகப்படுத்தும் பொருளாகக் கருதுகிறோம். ஆன்மீகத்தின் படி, பணம் என்பது இறைவனின் சக்தியாகும். நாம் ஆன்மீகப் பண்புகளை முழு அளவில் உபயோகிக்கும் பொழுது, பண வரத்து இடையறாமல், தடையின்றி வரும். ஆன்மீகப்பண்புகளை உபயோகிப்பதில், சிறப்பாகவும், பூரணமாகவும், முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஆன்மீகப் பண்புகளை பற்றிய நீண்டதொரு பட்டியலை கொடுக்க முடியும். நஷ்டத்தில் போய்க்கொண்டிருக்கும் ஒரு கம்பெனி ஆன்மீகப் பண்புகளின் தன்மையை தெரிந்து கொண்டு, தன் சொந்த தேவைகளைக் கருதாமல் மற்றவர்களின் தேவைக்கு முன்னுரிமைக் கொடுத்து பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தினால், அடுத்த மாதமே கம்பெனி இலாபம் ஈட்டத் தொடங்கும். உள்உணர்வில் உண்மையிருந்தால் ஆன்மீகச்சக்தி வெளிப்பட்டு பலன்கள் அக்கணமே வெளிப்படும்.

*****

58. மேதை என்பது ஆன்மாவின் சக்தி

பண்புகள் என்பது ஆன்மீகமானவை. ஆனால் அவை நமக்கு வியக்கத்தக்க அளவில் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பலன்களை உயர்த்துமா? நாம் ஏன் அவைகளை ஆன்மீகம் என்று அழைக்கிறோம்?

மேதைகள் பிறக்கிறார்கள். ஆனால் அவர்கள் உருவாக்கப்படுவதில்லை. மேதைகள் நூறு வருஷத்தில் சில நேரங்களில் தோன்றுகிறார்கள். மேதைகள் சிலர் இளம் பிராயத்திலேயே அறிந்து கொள்ளப்படுகிறார்கள். மற்றவர்கள் வாழ்நாளில் பிற்காலத்தில் தம்முள் உள்ள, மேதைத் தன்மை வெளிப்படுவதை உணர்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள திறமை, வெளிப்புற சூழல் உகந்ததாக அமையும் பொழுதுதான், அவர்களது மேதாவிலாசம் வெளிப்படுகிறது. மேலும், சாதகமான சூழ்நிலை உருவாகும் பொழுது மேதைத் தன்மை, தற்செயலாக, மனிதன், பொருள்கள், காலம், பிரபஞ்சம் இவைகளில் வெளிப்படுகிறது. ஆன்மீகப் பண்புகள் அத்தகைய சாதகமான சூழ்நிலையை எல்லோருக்கும் அளிக்கவல்லது.

ஒரு காலத்தில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ஒரு நிலைமை இருந்து வந்தது. அது எல்லோருக்கும் கல்வி இல்லாத நிலை, ஒவ்வொருவரும் போர் வீரராக ஆக முடியாத நிலை, நிர்வாகம் ஒரு சிலருக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருந்த நிலை, நாட்டை ஆளும் உரிமை அரச குடும்பத்தினருக்கு மட்டும் உரியது என்ற நிலைமையாக இருந்து வந்தது. இப்பொழுது இவை அனைத்தும் அடியோடு மாறிவிட்டன. எனவே மேதாவிலாசம் பிறப்பால் வருவது என்ற கருத்தை மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஒரு மேதை தன்னுடைய மேதா விலாசத்தை உணராத நிலையில், திடீரென்று ஒரு நாள் அவருள் இருக்கும் சக்தி முழுமையாக மலர்ச்சியடைந்து வெளிப்படுகிறது. திறமையின் பண்புகள், நோக்கத்தின் பண்புகள், மனத்தின் பண்புகள், யாவும் வேலையிலுள்ள ஆன்மாவை வெளிப்படுத்தக் கூடியன. ஆன்மா அப்படி வெளிப்படும் பொழுது அளவற்ற பலன்களை சுபிட்சமாக அளிக்கிறது.

உடல் உழைப்பு, திறமையை வழங்குகிறது. உணர்வால் செய்யும் வேலை, அதாவது வாழ்க்கை அனுபவங்கள் இதமான, மனோபாவங்களைக் கொடுக்கிறது. மனத்தால் புரிந்து கொள்வது, நன்றாக புரிந்து கொள்ளும் ஆற்றலைத் தருகிறது. ஒருவர் தன்னை ஆன்மாவின் நிலைக்கு உயர்த்திக் கொண்டு வேலையை செய்யும் பொழுது அவர், அமைதி, மௌனம், சாந்தி, உண்மை, நேர்மை, விஸ்வாசம், கடமை உணர்வு ஆகிய பண்புகளை உணர்கிறார். இந்தப் பண்புகளை தெரிந்தே உடல், உணர்வு, மனம் சம்பந்தப்பட்ட வேலைகளில் செலுத்தி செய்யும் பொழுது, அது ஆன்மாவை வெளிப்படுத்த உதவுகிறது. ஆன்மாவின் சக்தி அபரிமிதமானது. எனவே எப்பொழுதும் சுபிட்சம் அதிகரித்த வண்ணமாகவே இருக்கும்.

*****

59. பக்தியுள்ளவர்கள், வைதீகமானவர்கள்,

நல்லவர்கள் ஏன் ஏழ்மையில் இருக்கிறார்கள்?

பக்திமான்கள், வைதீகமானவர்கள், நல்லவர்கள், பெரும்பாலும் அடிக்கடி ஏழ்மையில் உள்ளார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமான மூன்று காரணங்களைக் கூறலாம். (1) பக்தி என்ற சொல்லுக்கேற்ப அவர்கள் உண்மையான பக்தி உடையவர்கள் அல்ல. (2) தானியத்தை உமி, பதர் இவற்றிலிருந்து சல்லடையிட்டு பிரிப்பதுபோல், அவர்கள் நல்லது, கெட்டது என்பதை வேறுபடுத்தி அறியக் கூடியவர்கள் அல்ல. (3) அவர்கள் பூஜிக்கத் தக்க சிவன், விஷ்ணு போன்ற கடவுளர்களின் பெயரில் உணர்வைத் தூண்டக்கூடிய கெடுதலான ஆவிகளை வணங்குகிறார்கள். ஆசாரமென்பது சடங்குகளை கடைபிடிப்பதில்லை. வைதீகத்தன்மை என்பது பரிசுத்தமான மனத்துடன் பேருண்மை மீது நம்பிக்கை வைப்பதும், தூய்மையான தன்னடக்கமுள்ள நிலையாகும். மரபு, கோயில்களில் உள்ள விக்கிரகங்களை வணங்கச் சொல்லவில்லை. இருதயக் குகையில் கட்டை விரல் அளவில் உறைந்துள்ள பிரம்மத்தை வழிபட வேண்டும். ஒரு ரிஷி கோபத்தை வெளிப்படுத்தும் பொழுதும், சிற்றின்ப உணர்ச்சியில் தூண்டப்படும் பொழுதும், அவர் பல வருடங்களில் தவம் செய்து பெற்ற தவவலிமையை இழக்கிறார். அவர் ஒரு சிறிய பொய் சொன்னாலும் இவர் ஒரு வைதீகர் என்ற நிலையை இழக்கிறார். அவர்கள் ஜாதகத்தைப் பார்க்க வேண்டியதில்லை அல்லது சுபகரமான நல்ல நேரத்தையும் அனுசரிக்க வேண்டியதில்லை. இவையெல்லாம் பாமரமக்களுக்கு உரியது.

இறைவனின் ஆன்மா எல்லா நிலைகளிலும் உண்மையில்லாதவைகளிலும் கூட கலந்துள்ளது. ஒருவர் நல்லது, கெட்டது என்பதை சீர்தூக்கிப் பார்த்து நல்லதை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று பாரம்பரியம் கூறுகிறது. அனேக பக்திமான்கள் அத்தகைய உயர்ந்த வேறுபாட்டை பகுத்தறிபவர்களாக இல்லை. அவர்கள் தங்களது சௌகரியத்திற்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ அதுவே வைதீகம் என்று எண்ணி அதைப் பின்பற்றி தீயசக்திகளுக்கு பலியாகிறார்கள்.

ஒரு சமயம் ஒரு காங்கிரஸ் தொண்டர் மகாத்மாகாந்தியின் சிறிய ஒள்பிரபையால் சூழப்பட்டவராகத் தோன்றினார். இப்பொழுது மகாத்மாகாந்தி இல்லை. அவரது ஆத்மாவின் தூண்டுதலும் இல்லை. இன்றைய அரசியல்வாதிகளை மகாத்மாகாந்தியைப் போன்ற புண்ணிய ஆன்மாவாக நினைப்பது அவர்கள் நம்மை ஏய்க்க உதவும். புகழ்பெற்ற பெரிய கோயில்கள், புண்ணிய புருஷர்களால் கட்டப்பட்டவைகளாகும். வழிபாடு தூய்மையாக இருக்கும் வரை கோயில்களில் இறைவனின் சாந்நித்யம் நிலைத்து இருக்கும். தூய்மை கெடும் பொழுது அந்த சூழல் கோயிலிலிருந்து விலகிவிடுகிறது. வழிபடுபவர்களும், நிர்வாகிகளும் அங்குள்ள சூழ்நிலையை தம் வசம் ஆக்கிக் கொண்டு, தங்களுடைய மனநிலைக்கு ஏற்ப செயல்படுவதால் கோயிலின் சூட்சும சூழல் மாறிவிடுகிறது. இரண்டு குறிப்புகளால் தூய்மையான இடத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். (1) மனத்தின் உள்ளே அமைதியும் சாந்தியும் நிலவுவது, ஆன்மீகத்தில் உயர்வடைந்ததைக் குறிக்கும். (2) நம்பூதிரிகள் குருவாயூரப்பன் கோயிலில் பரிசுத்தமான சுத்தத்தை பராமரிப்பது போன்ற சுத்தம் காணப்படுவது. ஆன்மா எப்பொழுதும் சுபிட்சம் அளிப்பதில் பொய்ப்பதில்லை. சுபிட்சம் கிடைக்கவில்லை என்றால் மனிதன் தவறான தெய்வத்தை வணங்குகிறான் என்று கருதலாம்.

*****

60. சோதிடம், எண் கணித சாஸ்திரம்,

சகுனம், வாஸ்த்து, நல்ல நேரம்

சோதிடம் என்பது, அடுத்த வேளைக்கு என்ன சாப்பிடப்போகிறோம் என்பதை துல்லியமாக கணிக்கும் தன்மை உடையது. எண் கணித சாஸ்த்திரமும் எதிர்காலத்தைப் பற்றி தெரிவிப்பதில், திகைப்பையூட்டும் வகையில் உணர்த்தக் கூடியது. வாஸ்த்து சாஸ்திரமும் நல்ல நேரமும் அடுத்து என்ன நடக்கும் என்பதைத் தீர்மானிக்கக் கூடியவை. ஒரு விதத்தில் அவைகள் எல்லாமே சூட்சும அறிவுப்படி சக்தி வாய்ந்தவைகளே. நாம் இவற்றைப் பின்பற்றுவது போல் மேலை நாட்டார்கள் இவைகளை நம்பமாட்டார்கள்.

நீ ஒரு கிராமத்தில் செல்வம் மிகுந்த பாசமுள்ள வைதீக குடும்பத்தில் பிறந்து, அந்தக் குடும்பம் நெல், கேழ்வரகு பயிர்த் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தும் முறையை, சிறந்தது என்று கருதி நீ அதை ஏற்று நடத்துவதே உன்னுடைய இலட்சியமாகக் கருதினால், முடிவில் அன்பான வசதியான பழமைமிக்க குடும்பத்தின் உறுப்பினராய் இருப்பாய். ஆனால் உன் குடும்பம் நவீன குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகி இருக்கும். ஆனால் இந்த வாழ்வு முறையை ஏற்றுக் கொள்வது ஏன் என்று கேட்க முடியாது. ஏனெனில் இது ஒருவர் தெரிந்தே எடுக்கும் முடிவாகும். இப்படிப்பட்ட கிராமியக் குடும்பம், கிராமத்தை விட்டு விலகி நகரத்திற்குச் சென்று, வெளிநாட்டிற்கும் சென்று வந்துள்ள மற்றொரு குடும்பத்துடன் 30 வருடம் கழித்து தன்னை ஒப்பிட்டுப் பார்த்தால், எல்லா வகையிலும் வித்தியாசம் பிரத்யட்சமாகத் தெரியும். நடைமுறை வாழ்விலும் நம்முடைய உணர்விலும் பழமை மற்றும் புதுவை என்றிவ்விரண்டையும் நாம் கலந்துவிடுகிறோம். அப்படி செய்யும்பொழுது இரண்டினுடைய முழுப் பலனும் நமக்குக் கிடைக்காமல் போகிறது. ஏனெனில் இரண்டும் எதிர் எதிரானவைகளாக இருப்பதால் ஒன்றையொன்று முறியடிக்கிறது.

மேற்சொன்ன தெரிந்த காரணங்களைத் தவிர, பழங்கால ரிஷிகளும் இந்நாள் விஞ்ஞானிகளும் அறிந்திராத வேறொரு உண்மை உண்டு. அதையொரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம். முடியாட்சியில் வாழ்வு அரசனுக்குரியதாக இருந்தது. மக்கள் மிகவும் ஏழ்மையாக இருந்தார்கள். ஜனநாயகத்தில் முடி ஆட்சி போய் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை ஆட்சி பீடத்தில் அமர்த்தினார்கள். பாரதியின் வாக்குப்படி எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். ஸ்ரீ அரவிந்தர், நேரம் வந்துவிட்டது, இது இறைவன் வரும் தருணம் என்று கூறினார். ஒவ்வொருவரும் ஆன்மாவை அழைக்கும் திறமை உடையவராக இருந்தால், அவர் அந்த நிலையில் ரிஷியாவார். சோதிடம், எண் கணித சாஸ்த்திரம் போன்றவை சாதாரண வாழ்விற்கு உரியன. அவை நம்மை இயற்கையின் நியதிக்கு கட்டுப்படுத்துகின்றன. மனிதன் ஆன்மாவுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டால், அந்தத் தளையிலிருந்து விடுதலைப் பெற்று, வாழ்வு அவன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. சாதாரணமாக நமது மனப்பாங்கு என்னவென்றால், அவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து பார்க்கிறோம். அவை இரண்டும் வெவ்வேறு நிலைகளில் (planes) இருப்பதால் ஒன்று மற்றொன்றை பயனற்றதாக செய்து விடுகிறது என்பதை நாம் அறிவதில்லை.

மனிதன் இயற்கையினின்றும், சுயமாய் ஏற்படுத்திக் கொண்ட மூட நம்பிக்கையிலிருந்து விடுபட்டது போல தற்பொழுது வாழ்வின் அடிமைத்தனத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, வாழ்வை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும்.

*****book | by Dr. Radut