Skip to Content

06 . பகுதி - 5

41. கர்மம்

நமது மரபு கொள்கை பிரகாரம், கர்மவினை தவிர்க்க முடியாதது. ஒரு தனவந்தர் தன்னுடைய இளம் பிராயத்திலேயே இரண்டு கண்களின் பார்வையை இழந்துவிட்டார். இழந்த பார்வையைத் திரும்பப் பெறுவதற்கு ஒரு மகானைப் போய் பார்க்கப் போனார். அங்கே அவரைப் பார்ப்பதற்கு ஏராளமானவர்கள் காத்திருந்தார்கள். அந்த மகான் தரிசனத்துக்கு ஒவ்வொருவரும் தங்கள் முறை வரும்வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டியிருந்தது. பார்வை இழந்த தனவானின் முறையும் வந்தது. திடீரென்று அவர் மனதில் ஒரு எண்ணம் தோன்றிற்று. தன் விரலில் அணிந்திருந்த வைர மோதிரத்தை அந்த மகானுக்கு காணிக்கையாகக் கொடுக்க வேண்டியதாக இருக்குமே என்று எண்ணினார். உடனே அந்த மோதிரத்தை கழட்டி தன் துணியில் மறைவிடத்தில் வைத்துக் கொண்டார். அந்த மகான், தனவான் மறைத்ததை ஆன்மீக சக்தியால் அறிந்து கொண்டார். பார்வையிழந்தவரின் பிரார்த்தனையை கண்டு கொள்ளவில்லை. மகான் அவரிடம் சிரித்துக் கொண்டே இங்கே திருடர்கள் யாரும் இல்லை. உங்கள் மோதிரத்தை நீங்கள் தைரியமாக அணிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். உங்கள் பார்வையிழப்புக்குக் காரணம் உங்களது கர்மவினைதான். அதிலிருந்து மீள்வதற்கு ஒரு விமோசனமும் இல்லை என்று சொன்னார்.

நமது பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் கர்ம வினைக்கு தீர்வு இல்லை என்பது உண்மை. இதில் ஆன்மீக உண்மை என்னவென்றால் இந்த பிரபஞ்சம் ஜீவியத்திலிருந்து தோன்றிய சக்தியால் தோற்றுவிக்கப்பட்டது என்பதாகும். இந்த சக்தியானது ஒருவருடைய கடந்த கால கர்ம வினைகளை சேகரித்து வைக்கிறது. அது சக்தி வெளிப்படுத்தும் ஜீவியத்தில் இல்லை. ஜீவியம் என்பது முழுமையானது. அதை பகுக்க முடியாது. அது கர்மத்தை சேகரம் செய்வதில்லை. ஜீவியம் ஆன்மாவிலிருந்து வெளிப்படுகிறது. கர்மம் ஆன்மாவைக் கட்டுப்படுத்தாது. ஏனெனில் அது காலத்தைக் கடந்து நிற்பது. காலத்திற்குள் காரண காரியம் செயல்படுவதால் கர்மா வளர்கிறது. காலத்தைக் கடந்த ஆன்மா தன் இச்சையால் செயல்படுவதால் இங்கு காரண காரியங்களுக்கு இடம் இல்லை. ராமருடைய திருவடி பட்டதால் அகல்யையின் சாபம் நீங்கிற்று. அவர் கடவுளின் அவதாரமானதால் காலத்தின் கடுமையான விதிகளுக்கு உட்பட்டவரல்ல.

ரிஷி தன் தியானத்தில் ஆழ்ந்து காலத்தைக் கடந்த நிலையை அடைகிறார். ஆன்மாவை நம்பும் ஒருவர் ஆன்மாவை அழைக்கும்போது, காலத்தைக் கடந்த நிலை காலத்தின் மேல் செயல்படுவதால் கர்மம் கரைகிறது.

*****

42. ஆன்மாவை அழைக்கும் வழிகள் - I

தவம், தியானம், ஜபம் போன்றவைகள் ஆன்மாவை அழைப்பதற்கான வழிகளாகும். இது, தபஸ்வி, முனிவர், ரிஷி, யோகி ஆகியோர்களுக்கு உள்ள ஆன்மீக ஞானத்தை குறிப்பிடுவதாகும். இது வாழ்விற்கு அப்பாற்பட்டது. நான் ஆன்மா என்று இங்கு குறிப்பிடுவது, வாழ்வில் ஆன்மாவை வெளிப்படுத்துவதாகும். அதை பகவான் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் சைத்திய புருஷன் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த சைத்திய புருஷன்தான் நம் வாழ்க்கையில் நேரடியான பலனைக் கொண்டு வருகிறான். ஆன்மாவை அழைப்பது கடினமானது. ஏனெனில் அது தூய்மையையும், உண்மையையும் எதிர்பார்க்கிறது. திறமையும் வாழ்வில் அதன் வெளிப்பாடும் வேறு வேறு என்பதைப் போல உண்மையும் வாழ்வில் அதன் வெளிப்பாடும் வேறு வேறாகும்.

"வாழ்வில் உண்மையின் அழைப்பினை சைத்திய புருஷன் கேட்கிறான்”.

ஒரு வழக்கறிஞர் தன் கட்சிக்காரரின் வழக்கை எடுத்து அதை நல்ல முறையில் வழக்காடுவது முதற்கட்டம். ஆனால் அதையே அவர் தன் சொந்த நண்பரின் வழக்காகக் கருதி உண்மையான ஆர்வத்தோடு வாதாடும்போது, அவருடைய திறமை உயர்ந்ததாகிவிடுகிறது. அவர் கீழ் கோர்ட்டில் வக்கீலாக இருந்தாலும் அவர் வக்கீல் தொழிலில் திறமையாக இருக்கும்பட்சத்தில், மேல்கோர்ட்டில் எப்படி சட்டத்தின் நுணுக்கத்தை வைத்து வாதாடுகிறார்களோ, அதே போல கீழ் கோர்ட்டிலும் இவர் திறமையுடன் வாதாடி வெற்றிபெற முடியும். அந்தத் திறமை, மேல் கோர்ட்டிற்கு அவரை கொண்டு செல்லும். நியாய உணர்வு மனிதனிடம் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் அந்த உணர்வால் உந்தப்படுவதுண்டு. உன் எதிரி கூட அத்தகைய உணர்வு உடையவன். கெட்ட குணம் உடையவனும் வெற்றிபெறும் போது நாம் அவனிடம் முறையிடுகிறோம். கொடுங்கோலனின் நியாய உணர்விற்கு கூட அதன் பயன் எவ்வாறு இருந்தாலும் நாம் முறையிடுகிறோம். திரௌபதி, மானபங்கப் படுத்தப்பட்டபோது அநீதிக்கு எதிராக, பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரர் இவர்களிடம் முறையிட்டும் பயனில்லை. இந்த பெரிய ஆன்மாக்கள் கூட தவறலாம். ஆனால் ஆண்டவன் தவறுவதில்லை. அவருடைய பதில் ஆபத்திற்கு உதவுவதாக மட்டுமிருக்காது. பெரிய நன்கொடையாக இருக்கும்.

கீழ்கோர்ட்டில் வழக்காடும் இந்த வழக்கறிஞர், நீதிபதியின் நீதி உணர்விற்கு முறையிட்டால் அவருக்கு கிடைக்கும் வெகுமதிக்கு அளவே இருக்காது. மேற்கண்டவை ஆன்மாவை அழைப்பதற்கான நான்கு வழிகளாகும். அவை சக்தி, வீரியம், தெய்வ பிரகிருதி மற்றும் சிரத்தையாகும். முதல் மூன்று நிலைகளைக் கடந்ததும் ஒருவன் சிரத்தை அடைகிறான். நம்பிக்கை ஆன்மாவை அழைக்க உதவுகிறது. வாழ்வில் சைத்திய புருஷன் வெளிப்பட்டு அளவற்ற பலன்களைக் கொடுப்பான்.

*****

43. ஆன்மாவை வாழ்வில் அழைக்கும் வழிகள்,

சைத்திய புருஷன் - II

ஒருவர் இப்படியும் நினைக்கலாம். "நான் திரௌபதி அல்ல; கிருஷ்ண பரமாத்மாவும் என் குரலுக்கு ஓடிவந்து காப்பாற்றவும் மாட்டார்''. சாதாரண மனிதர்களின் வாழ்விலிருந்து அனேக உதாரணங்களை எடுத்துக் கூறுவதற்கு முன்பாக, இந்தக் கருத்தைப் பற்றி காரணங்களுடன் விளக்கி நிரூபிக்க வேண்டியுள்ளது. ஒருவர் தன் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது, சக்தி, வீரியம், தெய்வ பக்தியைக் கடந்து சிரத்தையுடன் நம்பிக்கையோடு செயல்படும் பொழுது, அவரது குரல் இறைவனின்  சைத்திய புருஷனின்  செவியில் விழுந்து வெற்றியைக் கொடுக்கும் என்பது இதனுடைய சித்தாந்தம். சக்தி என்பது தெம்பு. சக்தியினால் வேலை செய்வது உடல் வலிமையினால் செய்வதாகும். வீர்யம் என்பது ஒரு வேலையை விருப்பத்துடன் தன் உணர்விலிருந்து எழும் சக்தியை எல்லாம் அதில் செலுத்தி வேலை செய்வதாகும். தெய்வ சக்தியின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுவது தெய்வப் பிரகிருதியாகும். இது எதைக் குறிக்கிறது என்றால் மனிதன் தன் சொந்த சக்தியினால் மட்டும் செயல்படாமல் தான் வணங்கும் தெய்வத்தின் மீது வைத்திருக்கும் ஆர்வத்தாலும், நம்பிக்கையாலும் செயல்படுகிறான் என்பதைக் காட்டுகிறது. இதனால் வேலையின் தரம் அதிகரித்துக் காணப்படுவதோடு, மனிதன் தன்னுடைய பர்சனாலிட்டியும் பின்னுக்குப் போவதைக் காண்கிறான். மேலும் உயர்நிலைக்குச் செல்ல விரும்பினால் மனிதன் தன் திறமைக்குப் பதிலாக அங்கு அன்னை பராசக்தியின் சக்தி செயல்படுகிறது என்பதைக் காண்கிறான். அவனுடைய பார்வையில் வேலையில் தான் கரைந்து தெய்வீக அன்னை மட்டும் இருப்பதை உணர்கிறான். இது கற்பனையோ கருத்தோ அல்ல. மத போதனையின் உணர்வும் அல்ல. அங்கே வேலையில் சாட்சாத் தெய்வீக அன்னையே இருக்கிறார். அன்னை மட்டும்தான் அந்த வேலையில் செயல்படுகிறார். நாம் எல்லோரும் தெய்வீக அன்னையின் கையில் செயல்படும் கருவிகள்தான். இது எப்படி இருக்கிறது என்றால், நாம் இரயிலில் போகும்போது நம்மை இரயில்தான் சுமந்து செல்கிறது. நம்முடைய மூட்டை முடிச்சு பொருள்களையெல்லாம் நாம் சுமக்கவில்லை. இரயில் பெட்டியின் பரண்தான் சுமக்கிறது. அதுபோல நம்மையும் நமது சுமைகளையும் அன்னைதான் தாங்குகிறார். இது ஒரு அறிவு சார்ந்த விவாதமில்லை. நம் அறிவிற்கு தெரிந்த உண்மையாகும். நாம் நம்பிக்கையால் செயல்பட்டால், ஆன்மாவை நம் வாழ்வில் அழைக்க முடியும். அப்படி அழைத்தால் ஆன்மா நம் வாழ்வில் செயல்படவும் துவங்குகிறது.

ஆன்மா செயல்படும்போது அதன் பலன்கள் பகுத்தறிவுக்கு சவாலாக இருக்கும். நம் வாழ்வின் செயல்பாடு ஒவ்வொன்றும் ஆன்மீக ரீதியில் உயர்ந்து, இறை சக்தியால் ஆசீர்வதிக்கப்பட்டு இன்ப வாழ்விற்கு உரியவராகிறோம்.

*****

44. ஆன்மாவை வாழ்வில் அழைக்கும் வழிகள்,

சைத்திய புருஷன் – III

போர்க் காலத்திற்கு முன்பு திருமண ஏற்பாடுகளை சில மாதங்களுக்கு முன்பாகவே செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏனெனில் நெல்லை உரலில் இட்டு, கையால் உலக்கையால் குத்தி அரிசியாக்கவும், அப்பளம் கடையில் வாங்கக் கூடாது என்று, வீட்டிலேயே செய்வதற்கும் காலம் தேவைப்பட்டது. உணவுப் பொருள்கள் யாவும் உள்ளூரிலேயே வாங்க வேண்டியிருந்தது. சிலவற்றை தன் விளை நிலத்திலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவற்றையெல்லாம் சேகரம் செய்வதற்கு உழைப்பும் காலமும் தேவைப்பட்டது. துர் அதிர்ஷ்டமுள்ளவர்கள் தங்களது ஏழ்மையாலும் சண்டையிடும் சுபாவத்தாலும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள். அவர்கள் எந்தவிதமான உதவியும் இல்லாமல் மிகுந்த பொறுப்புக்களை ஏற்று எல்லா வேலைகளையும் தாங்களே கவனிக்க வேண்டியதாய் இருந்தது. பொதுவாக குடும்பங்கள் திருமண நிகழ்ச்சிகளின் போது வேலையில் பிரியமாக ஒன்று கூடி ஒற்றுமையாக செயல்படுவார்கள்.

திருமண விசேஷத்திற்கு உறவினர்கள் யாவரும் வந்து உதவிபுரிவார்கள். திருமண வேலைகள் மிகவும் கடினமானதாக இருப்பதால் தங்கள் பங்குக்கு வேலை செய்வார்கள். இதனால் வேலை பளு குறையும். போருக்குப் பிறகு குறிப்பாக 1970, 1980க்குப் பிறகு இந்நிலை மாறிவிட்டது. நூறாண்டு காலமாக இருந்துவந்த, ஒன்பது நாட்கள் மணவிழா ஒருநாள் நிகழ்ச்சியாக குறைந்துவிட்டது. திருமணம் நடக்குமிடங்கள் கிராமத்திலிருந்து நகரங்களில் உள்ள திருமண மண்டபங்களுக்கு மாறியது. திருமண மண்டபங்கள் சினிமா தியேட்டர்கள் போல் அதிகரித்து விட்டன. திருமணப் பந்தல் அலங்காரம், ஒளி விளக்குகள் அமைத்தல், விருந்து, சமையல், நாதஸ்வரம் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க, வர்த்தகம் மற்றும் வணிக அமைப்புகள், இது போன்ற சேவையை செய்ய முன்வந்து விட்டன. இதற்கு எல்லாம் நாம் செய்ய வேண்டியது, அவர்கள் சேவைக்கு பணம் மட்டும் செலுத்தி, வசதிகளை பெற்றுக் கொள்ள வேண்டியதுதான். திருமணம் நடத்துவதில் மலை போன்ற வேலை, ஒரு குழந்தை விளையாட்டு போல் ஆகிவிட்டது.

உயர்ந்த நிலையில் உள்ள செல்வந்தர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட செல்வந்தர் ஒருவரின் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால் அவருடைய குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொள்வதை ஒரு கௌரவம் எனக் கருதி பல குடும்பங்கள் அவருடைய சம்மதத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். பணம் என்பது ஒரு பொருட்டல்ல. அப்படி திருமணம் நிச்சயிக்கப்பட்டால், அவரது உறவினர்களும், நண்பர்களும், அவரது கம்பெனியில் பணிபுரிபவர்களும், இந்த திருமணத்திற்காக வேலை செய்வதை பெருமையாகக் கருதுவார்கள். அதில் அவருடைய பங்கு என்னவென்றால், அவர் தன் மகளின் திருமணத்திற்கு அனுமதி அளிக்க வேண்டியதுதான். சக்தி, வீரியம், தெய்வப் பிரகிருதி, நம்பிக்கை என்பனவற்றை தனி மனிதன் செய்யும் திருமணம், கிராமத்தில் செய்வது, நகரத்தில் கல்யாண மண்டபத்தில் செய்வது, செல்வந்தர் நடத்தும் திருமணம் என்பவற்றுடன் ஒப்பிடலாம். மேற்கண்ட சக்தி, வீரியம், தெய்வப் பிரகிருதி மற்றும் நம்பிக்கை என்ற அணுகுமுறைகளை எப்படி அன்றாட வாழ்க்கையில் நாம் கொண்டு வருவது?

*****

45. ஆன்மாவை வாழ்வில் அழைக்கும் வழிகள்,

சைத்திய புருஷன் - IV

சக்தி, வீரியம், தெய்வ சங்கல்பம் இவற்றிலிருந்து அடுத்த கட்டம் நம்பிக்கைக்குப் போவதானது ஆன்மாவை அழைக்கும் வழியாகும். சக்தி, கையில் உள்ள வேலையை செய்வதாகும். வீரியம் என்பது மிக்க ஈடுபாடுடன் செய்வது. தெய்வ சங்கல்பம் என்பது வேலையில் நமக்குள்ள சொந்த ஈடுபாட்டை அடுத்த உயர்நிலைக்கு உயர்த்துவதாகும். அந்த வேலையில் தொழில் திறனை வெளிப்படுத்துவது தெய்வத்தின் அருள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு வேலையை நம்முடைய நேர்மையான திறமைகளுடன், சாத்தியமான எல்லா வழிகளிலும் முயன்று செயல்படுத்த வேண்டும். இதில் ஒன்றுமே குறை இருக்கக்கூடாது. கடுமையான உழைப்பாலும், திறமையுடனும், புத்திசாலித்தனத்தோடும் யார் உழைக்கிறார்களோ, அவர்களுக்கு ஆன்மாவின் பலன் கிடைக்கிறது. இந்த முயற்சிகளுக்குப்பின் அடுத்த கட்டத்திற்குப் போவது நம்பிக்கை. நம்பிக்கையில் செயல்படுவதை இரண்டு மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை மனத்திற்கும் உடலுக்குரியதும், அல்லது மனம் உணர்வு மற்றும் உடலுக்குரியது என்பனவைகளாகும். முதலாவதான மனம், அறிவைக் கொடுக்கிறது. இரண்டாவதான உணர்வு, உற்சாகமான சக்தியை அளிக்கிறது. மூன்றாவதான உடலுக்குரியது, திறனை வெளிப்படுத்தி பலனைத் தருகிறது.

அறிவின் பகுதி மனம்  மனத்தின் திறன் அறிவு. வாழ்வில் நாம் ஆன்மா மீது நம்பிக்கை வைப்பதால், ஆன்மா நினைத்தற்கரிய நல்ல பலன்களைக் கொடுக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கை உயர்ந்து மனம் இந்த உண்மையைத் தெரிந்து கொண்டதும் மனதில் உடனே அமைதி ஏற்பட்டு, நம்முள் சக்தி பெருகுவதை வெளிப்படையாக உணர முடிகிறது. இவ்வாறு உணரப்பட்ட சக்தி ஆன்மீக சக்தியாகும். இதைப் புரிந்து கொள்வது மிகவும் சிறந்தது. இந்தக் கருத்தின் மகிமையை, உணர்ச்சி புரிந்து கொள்கிறது. மனதில் உணரப்பட்ட சக்தி, வெள்ளப் பிரவாகமாக பெருகுகிறது. தெரிந்து கொள்வது சக்தி. ஈடுபாடு காட்டுவது சக்தி பெரு வெள்ளமாவது. ஆன்மாவின் திறனை நம்புவது மூன்றாம் கட்டம். அப்பட்சத்தில் பெருகும் சக்தி, அளவற்ற அனந்தமாய் பெருகி பலன்கள் அளிக்கவல்லது. பக்தர்களின் அனுபவத்தில் பலவகையில் பலன்கள் 24 மடங்காகவும், 365 மடங்காகவும் அதிகரித்துள்ளன. ஒருவருடைய அனுபவத்தில் மட்டும் பலன் 1500 மடங்காக அதிகரித்துள்ளது. மற்றும் ஒருவருடைய அனுபவத்தில், ஒரு குறிப்பிட்ட நிலையில் விவரிக்க முடியாத அளவிற்கு, எண்ணிலடங்கா பலன்களைக் கண்டார்.

*****

46. ஆன்மாவை வாழ்வில் அழைக்கும் வழி,

சைத்திய புருஷன் – V

ஓம் என்பது பிரணவ மந்திரம். ஓம் என்ற சப்தம் மாற்றமில்லாத பிரம்மம் மாற்றமுள்ள பிரம்மமாகிற, இடைவெளியில் உண்டாகிறது. பிரம்மம் எனக் கூறுவது அக்ஷரப்பிரம்மம், க்ஷரப்பிரம்மம் எனப்படுவது. அக்ஷரப்பிரம்மம் க்ஷரப்பிரம்மமாகவும், ஆன்மா பிரகிருதி என்ற இயற்கையாகவும் ஆகிறது. அந்த நிலை (Plane) கடவுள் உறையும் பிரபஞ்சத்தின் ஜீவியமாகும். ‘ஓம்’ என்ற ஒலியை திருப்பித் திருப்பி எழுப்பிக் கொண்டே இருப்பது, நம்மை பிரபஞ்சத்தின் ஜீவியத்திற்கு அழைத்துச் செல்லும் சரியான வழியாகும். ஆனால் உள்ளே உண்மையில்லாமல் வெறும் வாயால் மட்டுமோ அல்லது மனத்தால் மட்டுமோ உச்சரிப்பதால் பயன் ஒன்றும் இல்லை. உள்ளே நாம் தேடுவதில் உள்ள உண்மை தான் ஆன்மீகத்தில் வலிமையான உபகரணமாகும். உள்ளே ஆன்மீக முதிர்ச்சி உள்ளவர் ஓம் என்ற சொல்லை சில சமயம் உச்சரித்தாலே அவருடைய மேல் மனதிற்கு தெரியாமல் கூட, ஓம் அவரை உயர் நிலைக்கு கொண்டு செல்லும். இறைவனை நேருக்கு நேர் சந்திக்கலாம்.

ஆன்மீக முதிர்ச்சிப் பெற்றவர்கள், மென்மையான நல்ல குணம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களை நாம் நல்லவர்கள் என்று கூறுகிறோம். அவர்கள் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அன்பாகவும் மரியாதையாகவும் இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களோடு பேசும் பொழுதும், அளவோடும் மென்மையாகவும் பேசுவார்கள். அவர்கள் எப்போதும் பொறுமையாக இருப்பார்கள். தனக்கு என்ன நடந்தாலும் எரிச்சல்பட மாட்டார்கள். அவர்களுடைய வேலை, மற்றவர்களுடையதைக் காட்டிலும் திறனுள்ளதாகவும், சிறப்பாகவும் இருக்கும். வேலையில் சிறப்பு என்பது, வேலையில் ஆன்மா செயல்படுவதாகும். ஒருவருடைய வேலை ஒழுங்கற்றதாக இருந்தால் அதை உணர்ந்து கொண்டு, அதை முறைப்படுத்தி செயல்படுத்தத் தொடங்கலாம். இது ஆன்மீகத்தை நோக்கிச் செல்லும் வழியாகும். ஒருவர் உணர்ச்சிவயப்பட்டவராக இருந்தால், எதையும் சிந்திக்காதவராகவும் அல்லது சிந்திக்க திறனற்றவராகவும் இருந்தாலும், சிந்திக்க முயற்சி செய்தால் அவ்வகையில் ஆன்மாவை நோக்கிச் செல்லலாம். வாழ்வு அனைத்தும் ஆன்மீகம் என்பது தத்துவம். அழுக்கும், அசுத்தமும் நிறைந்த வீட்டைச் சுத்தப்படுத்தி, தொடர்ந்து சுத்தமாக வைத்துக் கொள்வது என்ற உறுதியான நிலை, ஆன்மீகத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்பதாகும். எதிர்மறையான நிலையிலிருந்து உடன்பாடான நிலைக்குப் போவதும் ஆன்மாவை நோக்கிச் செல்வதாகும். வாழ்வு அந்த முயற்சிகளுக்கு ஏற்றாற்போல் பலன் கொண்டு வரும். சுத்தம், ஒழுங்கு, உண்மையான நிலை ஆகியவைகளில் சிறப்புடன் முழுமையடைந்தால் அதிக ஆன்மீக விழிப்பு உண்டாகும்.

*****

47. வாழ்வில் ஆன்மாவை அழைக்கும் வழிகள்,

சைத்திய புருஷன் - VI

மனிதனின் உடல் உழைப்பு அவனுக்கு திறமையைக் கொடுக்கிறது. அவன் உணர்வால் செய்யும் வேலை அவனுக்கு சமூகத்தில் மனிதர்களிடையே பரஸ்பர உறவுக்கு வேண்டிய திறமையை அளிக்கிறது. மனத்தினால் செய்யும் வேலையானது, புரிந்து கொள்ளும் ஆற்றல், ஞாபக சக்தி, சிந்திக்கும் திறன், மதிப்பிடும் திறன் போன்ற திறமைகளைக் கொடுக்கிறது. பண்புகள் ஆன்மீக திறமைகளாகும். ஒரு வேலையில் பண்புகளை ஈடுபடுத்துவது அதில் ஆன்மாவை ஈடுபட செய்வதாகும். உலகில் எந்த ஒரு வேலைக்கும் அதற்கென ஒரு தனி பண்பு உண்டு. அவை நம்மால் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கலாம். பொதுவாக நாம் அறிந்துள்ள பண்புகள் யாதெனின் விசுவாசம், நேர்மை, ஒழுக்கம், பாதுகாப்பு, மற்றவர் கருத்துக்கு மதிப்பு அளித்தல், போன்றவைகளாகும். வேலைகளில், காலம் தவறாமை, சுத்தம், ஒழுங்குமுறைப்படுத்துதல், போன்றவை முக்கியமான பண்புகளாகும். வாழ்வின் பண்புகள், இனிய சுபாவம், அன்புடைமை, கவனம், பாசம், சுறுசுறுப்பு மற்றும் மனத்திற்குண்டான பண்புகள் விசுவாசம், நேர்மை முதலானவைகளாகும். ஆன்மீகப் பண்புகள், மௌனம், சூட்சுமம், உள்நோக்குதல் மற்றும் முன்கூட்டியே அறியும் ஞானம் என்பதாகும்.

வேலையின் தரத்தை, உடல், மனம் என்ற நிலைகளிலிருந்து ஆன்மீக நிலைக்கு உயர்த்துவது என்பது, அந்த வேலையில் ஆன்மாவை ஈடுபடுத்துவதாகும். ஆன்மீகப் பண்புகள் எந்த ஒரு வேலையையும் அதன் நிலையிலிருந்து ஆன்மீக நிலைக்கு உயர்த்தும் திறன் கொண்டவைகளாகும். இந்தியாவில் காலந்தவறாமை என்பது வழக்கமாக இல்லாமல் அது விதிவிலக்காக உள்ளது. ஒரு கம்பெனியில் நேரம் தவறாமை இல்லாத போது, அதை எல்லா நிலைகளிலும் நேரத்தோடு வேலை செய்ய வேண்டுமென்று உறுதியை எடுத்து அமுல்படுத்த முயன்றால், அங்கு ஆன்மாவானது அந்த கம்பெனியின் வேலைத் திறனை இரண்டு மடங்காக உயர்த்தும்.

ஒரு சிறிய முனிசிபல் நகரத்தில் அமைந்திருந்த இரண்டு பள்ளிக்கூடங்களில் ஒன்று நகரத்தின் மையப் பகுதியில் இருந்தது. அந்த பள்ளியில் சமூகத்தில் உயர்ந்தோர் குடும்பக் குழந்தைகளே சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இதில் திறமையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். மற்றொரு பள்ளி, நகர எல்லைக்கு வெளியில் இருந்தது. இந்தப் பள்ளியில் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்த ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இந்தப் பள்ளிக்கு ஆசிரியர்கள் நிரந்தரமாக இருப்பதில்லை. ஆனால் இந்தப் பள்ளி நேரந்தவறாமை என்ற உயர்ந்த ஒழுங்குக் கட்டுப்பாட்டை ஒவ்வொரு வேலையிலும் தவறாமல் கடைப்பிடித்து வந்தது. பிரிட்டிஷ் ராஜாங்கம் பிரபலமாக இருந்த காலத்தின் போது, ஒரு சமயம் மாவட்ட கல்வி அதிகாரி பள்ளியில் ஆய்வு செய்வதற்கு ஒரு மணி நேரங்கழித்து தாமதமாக வந்ததால், அவர் அந்த பள்ளியில் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. நகரத்தின் மையப்பகுதியில் இருந்த மற்றொரு பள்ளிக்கூடமோ எந்த ஒரு வேலையையும் நேரத்தோடு செயல்படும் முறையைப் பின்பற்றுவதில்லை. 1950ல் ஏழைக்குழந்தைகள் படிக்கும் பள்ளி 80% தேர்ச்சி பெற்றது. ஆனால் அடுத்த பள்ளியோ இரண்டு இலக்கமிட்ட தேர்ச்சி விகிதத்தை எட்டவே முடியவில்லை.

*****

48. அற்புதங்கள் சர்வ சாதாரணமாக நடந்தன

நான் நாளேட்டில் அவ்வப்பொழுது எழுதிக் கொண்டு வரும் விஷயம் என்னவென்றால், ஒருவர் தன் வாழ்வில் ஆன்மாவை அழைத்து மௌனத்தைக் கடைப்பிடித்து இறைவனை பிரார்த்திக்கும் பொழுது தவறாமல் பலன் கிடைக்கிறது என்பதாகும். வாழ்வானது உள்ளிருக்கும் ஆன்மாவை அழைப்பதில், ஆன்மா அந்த அழைப்பை ஏற்று, இம்மைக்குரியவற்றைப் பெற்றுத் தருவது வாழ்க்கை ஆன்மாவிற்கு பதிலளிப்பதாகும்.

இவைகள் ஒவ்வொருவருடைய வாழ்விலும் அவ்வப்பொழுது நடைபெறும் நிகழ்ச்சிகளாகும். ஆனால் அதை நாம் கவனிப்பது இல்லை. இம்மாதிரியான விஷயங்களின் மீது நம்பிக்கையுடையவர்களுக்கு இத்தகைய நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக அவர்கள் வாழ்வில் நடைபெறத் துவங்கி அதன் பின்னர் அவை குறைய ஆரம்பித்துவிடுகின்றன. நான் ஏற்கனவே எழுதியவைகளைப் பற்றியும் இன்னும் வருங்காலத்தில் எழுதப்போகும் அனேக விஷயங்களையும் கீழே பட்டியலிட்டுள்ளேன்.

ஒருவர் தன் கையில் எந்தவிதமான சேமிப்பும் இல்லாத நிலையில், ஒரு ஏக்கர் நிலத்தை துணிந்து வாங்க முற்பட்டார். அவர் பதின்மூன்று வருடங்களில் 365 ஏக்கர் நிலங்களை வாங்கும் நிலைக்கு உயர்ந்து விட்டார். மற்றொருவர் அகில இந்திய அமைப்பில் தன்னைவிட அனுபவத்தில் மூத்தவர்கள் பதின்மூன்று பேர்கள் புறக்கணிக்கப்பட்டு, தன்னுடைய இளம் பிராயத்திலேயே பதவி உயர்வு பெற்றார். ஒரு வக்கிர குணம் படைத்த குரு, தன்னுடைய பிறந்த நாளுக்கு பணமுடிப்பு வசூல் செய்ய இயலாதவர். அவருடைய சிஷ்யர், குருவின் வக்கிரத்தை தன்னுடையதின் பிரதிபலிப்பாக பாவித்து தானே அந்த குருவுக்காக முயற்சி எடுத்து அதைவிட ஐந்து மடங்கு காணிக்கையை வசூலித்தார். பிறகு 24 மடங்கு அதிக காணிக்கையும் குருவுக்காக வசூலித்தார். மற்றொரு நிகழ்ச்சியில், அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்கள், ஒரு ஊழியருக்கு எதிராக ஆறு வருடங்கள் சதித்திட்டம் தீட்டி, அந்த ஊழியர் விவேகமில்லாமல் செய்த ஒரு சிறிய தவறுக்காக பணிநீக்கம் பெறுமாறு செய்தார்கள். அந்த ஊழியர் தன்னுடைய உயர் அதிகாரி மூலம் அந்த உத்திரவை நான்கே நாட்களில் திரும்பப் பெறுமாறு செய்தார். வேறு ஒன்றில், 1972இல் அரைக் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்த அமெரிக்க தொழில் அதிபருக்கு இந்திய அரசாங்கத்தால் 800 கோடி திட்டம் ஒன்று வந்தது. ஒருவருக்கு முதுகெலும்பில் ஏற்பட்ட கோளாறினால் 15 வருடங்களாக கடுமையான வலியினால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தார். அவர் கனவில் ஒரு வரத்தைப் பெற்றவுடன் அந்த நோய் நீங்கிவிட்டது. சிறிய மற்றும் பெரிய வியாபாரம் இரண்டரை ஆண்டுகளில் 10 மடங்காகவும் பத்து வருடங்களில் 15 மடங்காகவும் அதிகரித்துள்ளன.

இந்திரா காந்திக்கு அரசியலில் நெருக்கடி ஏற்பட்டபோது ஆன்மாவை அழைப்பதை ஏற்றுக் கொண்டார். அவர் பார்லிமெண்டில் 250 இடங்களை விரும்பினார். ஆனால் அவருக்கு ஆன்மாவின் மேல் நம்பிக்கை இருந்ததால் 356 இடங்கள் கிடைத்தன. தொழிலாளர்கள் போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருந்த காலத்தில் ஆன்மாவை அழைத்ததின் பலனாக, ஒரு கம்பெனியில் தொழிலாளிகள் வேலைக்கு சீக்கிரமே வந்து, அதிக நேரம் வேலை செய்துவிட்டு நேரங்கழித்தே திரும்பிச் சென்றனர்.

ஆன்மா என்பது ரிஷிகளுக்கு மட்டும் உரியதன்று. ஒவ்வொருவருக்கும், யார் உள்ளே தூய்மையாகவும் செல்வவளத்திற்கு கடினமாக உழைக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கும் ஆன்மா செயல்படும்.

*****

49. சென்னை நகருக்கு தண்ணீர் என்பது

ஒரு பிரச்சனை அல்ல

மெட்ராஸ் (மதராஸ்) என்பது சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாம் உணர்வு பூர்வமாகச் செயல்படும் பொழுது நமது உணர்ச்சிகள் பழைய பெயர்களிலேயே நிலைத்திருக்கும். பிரச்சினைகளுக்கு ஒன்றைவிட ஒன்று மேல் என்ற வகையில் பல நிலைகளில் தீர்வுகள் உள்ளன. ஆனால் எல்லாம் தற்காலிகமானவை என்பதால் ஒவ்வொரு முறை பிரச்சினை தலையெடுக்கும் பொழுதும் நாம் தீர்வு காண வேண்டும். பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு உள்ளது. அது நமக்கு தெரியாத வகையிலும் வரும். ஒரு பிரச்சினையைப் பற்றி நம்மறிவு சிந்தித்தால் அது வளரும் என்றொரு இடமுள்ளது.

பிரச்சனைகளை தீர்க்கும் வழிகளாவன: (1) பிரார்த்தனை, (2) கவனம், (3) பூஜை வழிபாடு, (4) அருளை வழங்கும் மழையை நிந்திக்காமல் இருப்பது. இவைகள் யாவும் ஒரு நேரத்தில் தீர்வு காண்பதாக அமையும். கிருஷ்ணா நதிநீர், அல்லது கடல் நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக்குவதன் மூலமாக தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்பது நம்முடைய இயல்பான நினைப்பாகும். அதில் தீர்வு கிடைத்தாலும் கிடைக்கலாம், அல்லது கிடைக்காமலும் போகலாம். தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு ஒரு வழி உள்ளது. அதை சென்னை மக்கள் தீவிரமாக அணுக வேண்டும்.

ராஜாஜியின் ஆட்சிகாலத்தில் 1952-1954ல் கோயில்களிலும், மசூதிகளிலும், மாதா கோயில்களிலும் மழைக்காக மக்கள் பிரார்த்தனை செய்ததின் பலனாக, அபரிமிதமான மழை பெய்தது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு நாமொரு கூடுதல் பரிமாணம் கொடுக்கலாம். சென்னை நகர வாசிகள் ஒவ்வொருவரும் தண்ணீர் கஷ்டத்திலிருந்து விடுபடவேண்டி, தன் சொந்தத் தேவைக்காக பிரார்த்தனையில் ஈடுபடலாம். நகரவாசி சுயநலமற்ற எண்ணத்தோடு, தானும் சென்னை நகரவாசிகளில் ஒருவர் எனக்கருதி சென்னை மக்களுக்காக, சமூகத்தின் நன்மைக்காக, பிரார்த்தனை செய்தால், அதற்கு மழை வழங்கும் ரெஸ்பான்ஸ் மேலும் பரவலாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். அவர் இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து தண்ணீரின் அருமையையும் புரிந்து கொண்டு, பிரார்த்தனையை தீவிரமாக்கினால், அது நிச்சயமாக அதிகப் பலனைக் கொண்டு வரும்.

தண்ணீர் நமக்கு பல நன்மைகளைக் கொடுக்கிறது. ஜீவனுக்க உயிர் கொடுக்கும் தண்ணீர் இல்லையேல் வாழ்வு இல்லை. தண்ணீர் நகர மக்களுக்கு மட்டுமின்றி, நகரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளுக்கும் பயன்படுகிறது. நகரத்தில் வளரும் தாவரங்களும் தண்ணீரை கணிசமாக பயன்படுத்திக் கொள்கின்றன. மழை பெய்யும் பொழுது மழைத்தண்ணீர் பூமிக்குள் இறங்கி அடியில் படிந்து விடுவதால், பூமி குளிர்ச்சி அடைகிறது. அதனால் மனிதர்கள், விலங்குகள், தாவர வகைகள் யாவற்றிற்கும் பலவிதமான நோய்கள் வருவது தடைபடுகிறது. மழைநீர் பூமிக்கடியில் கடலை நோக்கி ஓடி, கடல் நீரின் மட்டத்திற்கு சமமாக பூமியில் தேங்குவதால், கடல்நீர் பூமிக்குள் புகுந்து வராமல் தடுக்கப்படுகிறது. மழை இறைவனின் கருணை. நாம் மழைக்காகப் பிரார்த்தனை செய்வோம். நாம் பெறுவது மழை என்று மட்டும் நினைக்காமல், இறைவனின் அருளே என்று உணர்வோமாக.

*****

50. கவனம் ஆன்மீகமானது

ஒருவர் மீது, பற்றுதலாக இருப்பது உடலுக்குரிய பாங்காகும். கவனம் உணர்வைச் சார்ந்தது. பாசம் மனத்திற்குரியது. தெய்வீக அன்பு ஆன்மீகம். பாசம் மிகுந்த குடும்பங்கள், பாசப்பிணைப்பு இல்லாத குடும்பங்களைவிட உயர்கின்றன என்பதை நாம் பொதுவாக உணர்ந்துள்ளோம். மழைக்காகப் பிரார்த்தனை செய்வதால் அது அபரிமிதமான மழையைக் கொண்டு வரும். ஆனால் தண்ணீருக்கு கவனம் செலுத்துவது மழைக்காகப் பிரார்த்தனை செய்வதைவிட அதிக அளவில் தண்ணீரைக் கொண்டு வரும். இவ்வகையில் கவனம் பிரார்த்தனையைவிட சக்தி வாய்ந்தது. ஒரு அழகிய புதிய கம்பளம், தன் மீது நடப்பவர்கள் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்து, அவர்கள் சற்று நின்று அதை உற்றுப்பார்த்து அதன் அழகைப் புகழ்ந்துவிட்டு போகுமாறு அழைக்கிறது. தெய்வீக அன்னை ஒரு புதிய தரை விரிப்பின் மீது நடந்து சென்ற போது அதைப்பார்த்து அவ்வாறு புகழ்ந்துவிட்டுப் போனார். ஜடப்பொருள்களுக்கு ஜீவன் உண்டு. அவைகளுக்கு கவனம் செலுத்தினால் அவைகளின் ஜீவன் மேலே வந்து அபரிமிதமான செல்வ வளத்தைத் தருகின்றன. ஒருவர் தண்ணீருக்கு அப்படிப்பட்ட கவனம் செலுத்தும் பொழுது, கடுமையான வறட்சி காலத்திலும் தண்ணீருக்குத் தட்டுப்பாடு இருக்காது. ஜடப்பொருளான தண்ணீர் தனக்கு கவனம் செலுத்தப்பட்டதை, எப்பொழுதும் மறவாமல் பிரதிபலனாக அது நமக்கு பலனைக் கொடுக்கிறது. அது நம் நிலைக்கு ஏற்றவாறு செயல்படுகிறது.

தண்ணீரை சிக்கனமாக உபயோகிப்பதும் வீணாக்காமல் இருப்பதும் தண்ணீருக்கு அளிக்கப்படும் கவனமாகும். தண்ணீரை சேமிப்பதும், மழைநீரை ஏரி, குளம், குட்டை, போன்ற நீர்நிலைகளில் நிரப்பிக் கொள்வதும், தண்ணீரை கவனத்துடன் உபயோகிப்பதும் தண்ணீருக்கு நாம் வழங்கும் கவனமாகும். மகாராஷ்ட்ராவில் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர், நிலத்தடி நீரின் மட்டத்தை உயர்த்தி ஒரு கிராமத்தையே சுபிட்சமுள்ள கிராமமாக மாற்றினார். அப்படி செய்வதற்கு அவர் அந்த கிராமத்தின் மறுபுற எல்லையில், ஏரியை உண்டாக்கினார். மண் தடுப்புக்கரைகளை உயரமாக்கி, மண்சரிவை தடுப்பது பழங்காலத்து விவசாய பழக்கம். நகரத்தின் மேற்குப்புற எல்லையில் பத்து மைல் தொலைவிற்கு மண் தடுப்புக்கள் உயர்த்தி, நிலத்தடி நீரின் ஆதாரத்தைப் பெருக்க சட்டம் கொண்டு வந்தால், நகரின் எல்லா இடத்திலும் நிலத்தடி நீர் உயர்ந்து, சென்னை நகருக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. அப்படி செய்வதால் வருடா வருடம் நல்ல மழை பெய்யும்.

நாம் வீடுகளில் தண்ணீரை முக்கியமான தேவைகளுக்கு பயன்படுத்திய பின்பு, மற்ற பல வகையான தேவைகளுக்கு எப்படி பயனுள்ள வகையில் உபயோகிக்க முடியுமென்று சிந்தித்து பார்க்க வேண்டும். அதுவும் தண்ணீருக்கு செலுத்தும் ஒருவகை கவனமாகும். நாம் தண்ணீரை ஒரு நாளில் அநேக தடவைகளில் உபயோகிக்கிறோம். தண்ணீரும் ஜீவனுள்ளது என்று, அதற்கு நாம் உரிய கவனம் செலுத்தும் பொழுது, நாம் தண்ணீருக்குள் இருக்கும் வருண பகவானை அழைப்பதாகும். மாநகராட்சி, ஒவ்வொரு வீட்டிலும் காம்பவுண்டு சுவற்றிற்கும், வீட்டிற்கும் இடையிலுள்ள தரைமட்டத்தை சிமெண்ட்டினால் பூசக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்தால் மழை நீர் வெளியே போகாமல், பூமிக்குள் கசிந்து உள்ளே போகும். அதனால் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும். தண்ணீருக்கு கவனம் செலுத்துவதில் தனிப்பட்ட அமைப்புகளைவிட, அரசாங்கத்தின் கவனிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஏனென்றால் அரசாங்கம் ஒரு முறையான கூட்டமைப்பாகும்.

*****book | by Dr. Radut