Skip to Content

04 . பகுதி - 3

21. எரி நட்சத்திரம்

எரி நட்சத்திரம் என்று நாம் சொல்வது சில சமயம் வானில் தோன்றி சில வினாடிகளில் மறைந்து விடும். ஐரோப்பாவில் எரி நட்சத்திரம் விழுவது நல்ல சகுனம் என்ற ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது. எரி நட்சத்திரத்தைப் பார்க்கும் ஒருவர், அது மறைவதற்குள் மனத்தில் ஒரு விருப்பத்தைக் கொண்டு வந்து தெளிவாக உணர்ந்தால், அந்த விருப்பம் ஒரு வருட காலத்திற்குள் நிறைவேறும் என்று, ஒரு பரவலான நம்பிக்கை உண்டு. ஒருவர் தம் மனத்தில் உள்ள கருத்தை அந்த சில வினாடிகளில் தெளிவாக நினைவில் கொண்டுவர வேண்டுமெனில், அந்த விருப்பமானது ஜீவியத்தில் எப்பொழுதும் நினைவில் இருக்க வேண்டும். அப்படி அந்த நினைவு ஜீவியத்தில் இருப்பதால், அது உரிய நேரத்தில் தெளிவாகத் தோன்றி அவ்விருப்பம் நிறைவேறியது என்று, நாம் பொதுவாக அறிந்துள்ளோம். இந்த அனுபவ அறிவும் அதற்குப் பின்னால் உள்ள ஆன்மீக உண்மையும் வாழ்வின் பிரச்சனையை தீர்க்கும் ஒரு வழி என்று, உணர்ந்து அந்த முறையை ஆன்மாவை அழைப்பதில் ஈடுபடுத்தினால், வாழ்வின் பிரச்சனைகள் நிச்சயமாகத் தீர்க்கப்படும். எந்த ஒரு பிரச்சனையையும் தீர்த்துக் கொள்வதில் ஒருவர் முயற்சி செய்யும் பொழுது, அப்பிரச்சனையை ஜீவியத்தின் மேல்நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கலாம். ஆன்மாவை மணிக்கு ஒரு முறை அதே குறிப்பிட்ட நேரத்தில் நினைவு கூர்ந்தால், பிரச்சனை விலகும். அப்படி செய்வதற்கு அந்த நினைவு எந்த நேரமும் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு காசநோயாளி வசதி படைத்தவராக இருந்தார். என்றாலும், அவர் உத்தியோகம் வகித்து வந்தார். அவர் நோய் வாய்ப்பட்டிருந்ததால் திருமணம் ஆகாமல் இருந்தார். அவருடைய வியாதியின் கொடுமை, மாதம் ஒருமுறை வாந்தி எடுக்கும் நிலைக்குக் கொண்டு போயிற்று. நீடித்த சிகிச்சை பெற்ற காரணத்தினால், மாதம் ஒருமுறை வாந்தி எடுப்பது குறைந்து, அந்த மோசமான நிலையின் கால இடைவெளி அதிகரித்தது. நோய் குணமாவதற்கு வழிபாடு ஸ்தலத்தில் தஞ்சம் அடைந்தார். அதில் அவருக்கு ஓரளவுக்கு பரிகாரம் கிடைத்தாலும், நோய் பூரணமாக குணமடையவில்லை. அவரால் அதிகபட்சம் 30 அல்லது 50 கெஜ தூரம் தான் நடக்க முடிந்தது. அவருக்கு, ஓடுபவர்கள் அரிய காட்சியாக தெரிந்தார்கள்.

நோய் நிரந்தர குணம் அடைய அவருடைய ஆன்மாவை அழைப்பதில் தான் தீர்வு உள்ளது என்று, அவருக்கு ஒருவர் யோசனை கூறினார். ஆன்மாவை அழைக்கும் முறையை சொல்பவரைக் காண ஒரு மைல் தூரத்திற்கு, ரிக்ஷாவில் ஏறிச்சென்று பார்த்தார். அந்த புதிய முறையைப் பற்றி அவர் கேட்டுக்கொண்டிருந்த பொழுது, அவருக்கு புதிய தெம்பு வந்ததை உணர்ந்தார். நோயாளி, ஆன்மாவை அழைத்து பிரச்சினையை மணிக்கு ஒரு முறை நினைவிற்குக் கொண்டு வந்து உள் இருக்கும் ஆன்மாவை அழைக்கும் முறையை ஏற்றுக் கொண்டார். அவர் அறையிலிருந்து வெளியில் வந்ததும், தன்னால் நடக்க முடியும் என்ற உணர்வு பெற்றார். ரிக்ஷாவை நோக்கி நடக்கலானார். இந்த புதிய முறையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவே, ரிக்ஷாவைப் பின் தொடர்ந்து, ஒரு மைலுக்கும் அதிக தூரத்திலுள்ள, அவருடைய இருப்பிடத்திற்கு நடந்தே திரும்பிச் சென்றார்.

அவர் சரியாக ஒவ்வொரு மணி நேர இடைவெளியில், ஆன்மாவை 24 மணி நேரமும் தவறாமல் அழைத்த பிறகு, இந்த ஒரு அபூர்வ அருஞ்செயலினால் உடனடியாக ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பற்றி, தெரிவிப்பதற்காக, மறுநாள் அவ்வளவு தூரமும் நடந்தே சென்றார். மதக் கோட்பாடு மரபுப்படி, இயல்பாக படிந்துள்ள சுபாவம் மாற்ற முடியாதது என்று சொல்லப்படுகிறது. ஒரு மரபு, யோகப் பயிற்சியின் மூலம் 35 வருடங்களில் சுபாவத்தை மாற்ற முடியும் என்று கூறுகிறது. பிரெஞ்ச்சு பெண் ஓவியக் கலைஞர் ஒருவர், தன்னுடைய ஓவிய அறையிலிருந்து வெளியில் வரும் பொழுது எரி நட்சத்திரத்தைப் பார்த்தார். பார்த்த மாத்திரத்தில் தன் சுபாவம் முழுவதும் மாற வேண்டுமென்ற தன் மனதிலுள்ள கருத்தை, அந்த சில வினாடிகளில் தெளிவாகக் கொண்டு வந்து நினைத்தார். அப்படியே ஒரு வருடத்தில் அவருடைய சுபாவம் மாறிவிட்டது.

*****

22. பேச்சு இழந்தபின் இழந்ததை நம்பிக்கை உயிர்ப்பித்தது

உடல்நலக் கோளாறினால் பேசும் உறுப்பு பாதிக்கப்படும்பொழுது பேச்சு வருவதில்லை. உடற்கோளாறினால் புலன்கள் பாதிக்கப்பட்டு பேச்சு இழப்பு ஏற்படும்பொழுது மருத்துவ சிகிச்சை பலனளிக்கும். மனநிலை பாதிப்பால் ஏற்படும் பேச்சு இழப்புக்கு உடல் மருத்துவ சிகிச்சை பலனளிக்காது. அது மேலும் கடினமாக்குகிறது. இதற்கு மனோதத்துவ முறையில் சிகிச்சை அளித்தால்தான் குணமடைய முடியும். ஆன்மாவை அழைக்கும் பொழுது உடலாகிய ஜீவனின் எந்தப் பகுதியிலும் விழிப்பு இருந்தால் ஆன்மா செயல்படுகிறது.

19 வயது சிறுவன் பேச்சு இழந்துவிட்டான். அவன் எப்பொழுதும் அதிகமாக பேசாதவனாக இருந்ததால் வீட்டில் உள்ளவர்கள், அந்த சிறுவன் பேச்சு இழந்ததை சில நாட்கள் கவனிக்கவில்லை. அவனுக்கு பேச்சு திரும்பிவிடும் என்ற நம்பிக்கையில் அவனை மருத்துவமனையில் சேர்த்தார்கள். பையனின் குடும்பத்தினர் இந்த நோய்க்கு சிகிச்சை கிடையாது என்று, பிறகு மெல்ல தெரிந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், கடவுளுக்கு பிரார்த்தனை செய்வதுதான். வீட்டிலுள்ள பெரும்பாலோரும் பிரார்த்தனை செய்தார்கள். பையனுடைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை. பிரார்த்தனையிலிருந்து, உள்ளேயும் மனதில் அமைதியும் கிடைக்கவில்லை.

சிறுவனுடைய சகோதரர் பஸ்சில் பிரயாணம் செய்த பொழுது தனக்கு பழக்கமான ஒருவரைச் சந்தித்தார். அவரிடமிருந்து ஆன்மாவை அழைப்பது பற்றிய செய்தியை கேள்விப்பட்டார். பையன் பேசமுடியாவிட்டாலும் காது கேட்க முடிந்ததால், அவர் தான் கேள்விப்பட்ட விஷயத்தை பையனிடம் தெரிவித்தார். பையனுடைய சகோதரரும் கூட ஆன்மாவை அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இது ஒரு புதுமாதிரியான முயற்சியாக இருந்ததால் யாராலும் இதை சரியான முறையில் பின்பற்ற முடியவில்லை. முதல்நாள் பலரும் தெளிவற்ற முறையில் முயற்சித்தப் பிறகு, பத்து நாட்கள் அனுபவித்த துன்பத்திற்குப் பிறகு, சிறுவன் ஒருவார்த்தை பேசினான்.

இது அவர்களுக்கு பெருமளவில் உற்சாகமாக இருந்தது. ஒவ்வொருவரும் தங்களுடைய முயற்சிகளை அதிகப் படுத்தினார்கள். அது முழு திருப்தி அளிக்காவிட்டாலும், செய்யக்கூடிய சாத்தியமான முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டார்கள். ஆன்மாவை அழைப்பது ஆன்மீகமுறை. அதற்கு மரபு பலவிதமான ஆன்மீக வழிமுறைகளைக் கொண்டுள்ளது. இதில் முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், ஆன்மா இருக்கிறது என்பதையும், அதற்கு சக்தி உள்ளது என்றும் அதை செயல்பட வைக்க ஆன்மாவை மன உறுதியுடன் அழைக்க வேண்டுமென்றும் புரிந்து கொள்ள வேண்டும். அறிவு தன்னுடைய இயலாமையை உணர்ந்து அமைதியடையும் பொழுது ஆன்மா செயல்படத் தூண்டப்படுகிறது. அது சில வினாடிகள் மேலே வெளிப்படுகிறது. ஒரு பிரச்சனையை தீர்த்துக் கொள்ள இது போதுமானது. யோக வாழ்க்கைக்கு, ஆன்மா எப்பொழுதும் மேல் மனத்தில் இருக்க வேண்டியது அவசியமாகுகிறது. வீட்டில் உள்ள அனைவரும் விடா முயற்சியுடன் படிப்படியான முறையில் கடின முயற்சிகளை மேற்கொண்ட பிறகு, மறுநாள் பையனுக்கு முழுபேச்சும் திரும்பிற்று.

நம்பிக்கை என்பது ஆன்மாவின் அறிவாக வர்ணிக்கப்படுகிறது. மனிதனின் அறிவிற்கு போதிய ஞானமில்லை என்றாலும், ஆன்மாவிற்கு அந்த ஞானமுண்டு என்று நம்மறிவிற்கு தெரியும் பொழுது வேலை கூடிவரும் என்று புரிந்து கொள்கிறது. ஆன்மாவின் ஞானம் நம்மறிவிற்கும் வந்தால் நம்மறிவே மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறுகிறது. பூரண யோகத்தில் நம்முடைய உணர்விலிருந்து பிறக்கும் சக்தி "பிராணன்" என்று அறியப்படுகிறது. ஒருவருடைய உணர்வு ஆன்மீக அறிவை பெறும் பொழுது, அவர் வாழ்வில் தோல்விகளைக் காணாத வெற்றிகளை உடையவராகவும், அதிர்ஷ்டக்காரராகவும் இருக்கிறார்.

*****

23. மௌன சக்தி 

  பாகம் - I

. அமெரிக்கன் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் துணைத்தலைவருக்கு (Vice President of the American Management Association) தன்னுடைய ஆறாம் வயதில் புத்தகம் எழுத வேண்டுமென்ற எழுந்த பேரார்வம் அவரது 55வது வயதில் பூர்த்தியாயிற்று. புத்தகம் எழுதுவதற்கு ஏராளமான விபரங்கள் தேவைப்பட்டதால் சியர்ஸ் அண்டு கம்பெனிக்கு நேரில் சென்றார். அந்த கம்பெனியில் எல்லா நிலையில் உள்ளவர்களிடமும் தலைவரிலிருந்து ஆரம்பித்து கடைசி சிப்பந்திவரை ஒரு 12 பேரை நேரில் விசாரணை செய்ய வேண்டுமென்பது இவரது திட்டம். எழுத்தாளர்களின் அத்தகைய முயற்சிகள் கம்பெனிக்கு எரிச்சல் ஊட்டுவதாகும். ஏன் கம்பெனி தமக்கு நேரில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டுமென்பதற்கான அனேக கருத்துக்களைத் தயார் செய்து கொண்டார். ஆசிரியர், தம் புத்தகத்தைப் பற்றியும், அதனால் இந்தக் கம்பெனிக்கு என்ன பலன் இருக்கும் என்றும் விளக்க எண்ணினார். அவர் வைத்திருந்த விளக்கங்களுள்,

(1) சியர்ஸ் கம்பெனி சுடர்விட்டு பிரகாசிக்கும் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்று புத்தகத்தில் அறிமுகப்படுத்தி எழுதப்படும், (2) அவருடைய ஆராய்ச்சி அந்த நிறுவனத்தின் ஆற்றலை தெரியப்படுத்தும் வகையில் அமையும், (3) நிர்வாகம் அதனுடைய வேலையின் திறனை எப்படி அதிகப்படுத்துவது என்று தெரிந்து கொள்ளும் வகையில் அவர் புத்தகம் உதவும் என்பது, (4) கம்பெனியின் நிர்வாக இயக்குனர்கள் கம்பெனியின் வளர்ச்சிக்கு புதிய கருத்துக்கள் தெரிந்து கொள்வதற்கும், மற்றும் இதர ஆறு கருத்துக்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாகும் என்பது. ஆசிரியர் ஒவ்வொரு கருத்துக்கும் தகுந்த காரணங்களுடன் திட்டவட்டமான விளக்கங்களுடன் விவாதிப்பதற்கு, தம்முள் பொதிந்து கிடக்கும் கருத்துக்களை மனதில் பதிய வைத்துக் கொண்டார்.

ஆசிரியர், கம்பெனியின் மக்கள் தொடர்பு அதிகாரியை (PRO) நேரில் போய் பார்த்த பொழுது, அவர் அமைதியுடன் காணப்பட்டார். ஆசிரியருக்கும் அக்கம்பெனியின் 30,000 கோடி டாலர் வியாபாரத்தை நினைத்து பார்த்த பொழுது உற்சாகம் குறைந்தது. தன்னைப் போன்று எண்ணற்ற நபர்களை (PRO) சந்தித்திருப்பார் என்றெண்ணினார். அந்த அதிகாரி இவருடைய கருத்தைக் கேட்க மறுத்தாலும் அதிலும் நியாயம் இருப்பதாக ஆசிரியர் கருதினார். மக்கள் தொடர்பு அதிகாரியின் (PRO) சலனமற்ற முகத்தோற்றத்திலிருந்து எந்த அனுகூலமான நம்பிக்கையும் தோன்றவில்லை. ஆசிரியர் முற்றிலும் நம்பிக்கையிழந்த நிலையில் இருந்தார்.

மௌனத்தின் சக்தி பெரியது என்ற கருத்து நினைவுக்கு வந்ததும், மனம் மௌனத்தில் ஆழ்ந்தது. நம் மனதில் எழும் எண்ணம் நம்முடையது அல்ல. எண்ணங்கள் உலகில் உலவுகின்றன. அவை ஒருவர் மனதில் புகுந்து வெளிப்படுகின்றன என்ற உண்மையினை ஆசிரியர் தெரிந்து கொண்டிருந்தார். ஒருவர் தம் மனதில் தோன்றிய எண்ணத்தை வெளியிட மறுத்தால் அந்த எண்ணம் மற்றொருவர் மூலம் வெளிப்படுகிறது. ஆசிரியருக்கு எந்தவிதமான சிரமமும் இன்றி மௌனம் குடி கொண்டது. அங்கிருந்த சூழ்நிலை அவருக்கு சாதகமாக இல்லாமல் இருந்ததால் அவர் ஏற்கனவே மௌனமாகிவிட்டிருந்தார். மக்கள் தொடர்பு அதிகாரியின் (PRO) முன்னிலையில் அவர் இருந்த இரண்டு நிமிடங்களும் பொறுத்துக் கொள்ள முடியாததாக இருந்தது. இருந்த போதிலும் அவருடைய அரை நூற்றாண்டு குறிக்கோள் நிறைவு பெறும் தருவாயில் இருந்ததால், அவர் எப்படி கோழைத்தனமாக தன் இலட்சியத்திருந்து பின்வாங்க முடியும்? எப்படி இருந்த போதிலும் அவர் மனத்திலிருந்த அனைத்துமே மௌனத்தில் நிலை பெற்றுவிட்டது.

ஆசிரியர் தன்னுடைய மனத்திலிருந்த அரிய கருத்துக்களை விளக்கிச் சொல்வதற்கு, அந்த அதிகாரியை சம்மதிக்க வைக்க தைரியமிழந்தவராக இருந்தார். அதற்கு பதிலாக ஆன்மீகத் தத்துவமான மௌனத்தின் சக்தியை தொடர்ந்து நாடுவதற்கு அவர் மனம் உறுதி பூண்டது. கடைசி நிலைமைக்கு தள்ளப்பட்ட மனிதர்களுக்குக் கூட அவர்கள் மனதில் உள்ளதை நிறைவேற்றித் தருவது மௌன சக்தி. இங்கே இந்தத் தத்துவம் என்னவென்றால் மனம் மௌனமாகிவிட்டாலோ அல்லது மனத்தை மௌனத்திற்குள் செலுத்தினாலோ ஆன்மா விழித்துக் கொள்கிறது. கேட்காமல் இருப்பது ஓர் உயர்ந்த மனத்திண்மையைக் காட்டுவதால் அப்படிப்பட்டவருக்கு வாழ்வு வேண்டியதை அபரிமிதமாக வழங்குகிறது. ஒரு மனிதன் உணர்வுபூர்வமாக தன்மனத்தில் தோன்றிய எண்ணத்தை வெளியிட மறுத்தால், அந்த எண்ணம் வேறொருவர் மூலம் அவருடைய நலனுக்காக அவருக்கு சந்தோஷம் தரும் வகையில் வெளிப்படுகிறது. ஆசிரியர் மௌன சக்தியைப் பற்றிய பல உதாரணங்களை தெரிந்து வைத்துக் கொண்டிருந்தார். மௌன சக்தியை பழக்கத்தில் கொண்டு வருபவருக்கு, அது நன்மைகள் தருகிறது என்பதை ஆசிரியர் தன் சொந்த அனுபவத்தில் கடைப்பிடித்து வெற்றிகண்டார்.

*****

24. மௌன சக்தி

பாகம் - II

அமெரிக்கன் மேனேஜ்மெண்ட் நிர்வாக இயக்குனர், சியர்ஸ் மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) முன்பாக உட்கார்ந்திருந்த பொழுது மௌன சக்தியின் வலிமையை அறிந்து கொள்வதில் முன் அனுபவங்கள் பெற்றிருந்தார். ஒருமுறை தன்னுடைய செயல் முறைகளை விளக்கும் நிகழ்ச்சிக்கு, ஒரு சிறந்த பேச்சாளரை அமர்த்திக் கொள்ள விரும்பினார். அந்த பேச்சாளர் தன்னுடைய ஸ்தாபனத்தில் புகழ் பெற்றவராக இருந்த பொழுதும், உள்ளூருக்குரிய சில காரணங்களால் மதிப்பு இழந்தவராக இருந்தார். எனவே, கடும் எதிர்ப்புக்கு ஆளாகி இருந்த அவரை பேச அழைக்க இயலாது என்பதை உணர்ந்தார். அவரது பெயரை மற்றொருவரால் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் முன்மொழியப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது அவர் நினைவில் தெளிவாகத் தோன்றிற்று. எனினும் சியர்ஸ் ஒரு சாதாரண சந்தர்ப்பமாக இல்லை. அங்கு மௌன சக்தியை கொண்டு வருவதற்கு அவசியம் இல்லாமல் இருந்தது. அவர் மனத்திற்குள் எல்லாம் மௌனமாக இருந்தது.

அவர், மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) பேசுவதற்கு பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அவருடைய கவனமெல்லாம், அதிகாரி என்ன பேசப்போகிறார் என்பதில் இருந்தது. அதிகாரி (PRO) பேசும் பொழுது "கண்டிப்பாக இந்த நேர்முக விசாரணைகளுக்குப் பிறகு (interviews) ‘சியர்ஸ் பிரகாசமான முன்னோடி’ என்று எழுதப்படும்” என்று பேசியதை கேட்டதும், வைஸ் பிரசிடெண்ட்டு ஆச்சரியத்தால் ஒரு வினாடி அப்படியே ஸ்தம்பித்து சிலையாகி விட்டார். அவர் பேசிய வார்த்தைகள் யாவும், அவரால் பல மணி நேரங்களில் ஆராய்ச்சி செய்யப்பட்டவைகளாகும். பிறகு அவர், மௌனத்திலிருந்து வெளிப்பட்ட, மௌன சக்தி செயல்பட்டது என்று எண்ணினார். இப்பொழுது அவர் மனதில் ஏதோ ஒரு உணர்வு தூண்டிற்று. சியர்ஸ் பற்றி எப்படி விமரிசையாக எழுதப்படும் என்பதை விளக்குவதைக் காட்டிலும் மற்றொரு கருத்தைத் தெளிவாக எடுத்துக் கூற விருப்பங்கொண்டார். அப்பொழுது அங்கு மௌனம் இல்லை. எல்லாமே உற்சாகமுடையதாக இருந்தது. இப்பொழுது மௌன சக்தியை நினைவில் நிறுத்துவதே கடினமாக இருந்தது. அப்பொழுது அதிகாரி (PRO) "உங்களுடைய ஆராய்ச்சி எங்களது வலிமையைப் பற்றி தெளிவுப்படுத்துகிறது" என்று பேசியதை ஆசிரியர் கேட்டார். இது நம்ப முடியாததாக இருந்தாலும் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. உள்ளே அவரது கருத்து முந்திக் கொள்ளும் போராட்டமும் மேலிட்டது. தம் கருத்துகளைப் புறக்கணித்ததும் மௌன சக்தியின் வலிமை கூடிற்று. அந்த அதிகாரி (PRO) ஆசிரியரின் எல்லாக் கருத்துக்களையும் உண்மையுடன் ஏற்று தொகுத்துக் கூறியதுடன், அவர் கோரியபடி நேர்முக விசாரணை (interview) தொடங்க அத்தனை பேர்களிடமும் விபரங்கள் கேட்டறிந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி முடித்தார். வைஸ் பிரசிடெண்ட்டு அவருடைய புத்தகத்தை "தி வைட்டல் டிஃபரன்ஸ்'' (THE VITAL DIFFERENCE) என்ற புத்தகத்தை வெளியிட்டார். அது அவருக்குக் கிடைத்த வெற்றி. அந்த புத்தகம் பிரெஞ்ச், ஜபானீஸ், டேனிஷ், ஸ்பேனிஷ், மற்றும் ஜெர்மன், மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

*****

25. மௌன சக்தி 

பாகம் – III

மௌன சக்தி, பற்பல வழிகளில் அனைத்து நேரத்திலும் செயல்படுகிறது.

 1. நாம் அதைத் தெரிந்தே பழக்கத்தில் கொண்டு வரும் பொழுது.
 2. நம் எண்ணங்களை வெளியிடுவதை சூழ்நிலைகள் தடுக்கும் பொழுது.
 3. மற்றவர் பேசும் பொழுது அவர் பேசி முடிக்கும் வரை பொறுமையுடன் காத்திருக்கும் பொழுது, நாம் தெரிவிக்க விரும்பிய கருத்துக்களை, மௌன சக்தி அவர் வாயால் வெளிப்படுத்துவதைக் காண்கிறோம்.
 4. மரியாதை நிமித்தமாகவோ அல்லது நாகரீகமாகவோ, நாம் பெரும்பாலும் பேசுவதிலிருந்து விலகி நிற்கும் பொழுது, பின்னர் மௌன சக்தியின் வெளிப்பாட்டைக் காண்கிறோம்.
 5. நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதைக் கௌரவம் பார்ப்பதால் கேட்டுப் பெறக்கூடாது என்று தீர்மானிக்கின்றோம். அங்கு நாம் பேச வேண்டுமென்று நினைப்பதை மற்றவர் அவராகவே முன் வந்து பேச முற்படுகிறார்.

குறைந்தபட்சமாக ஒரு சிறு தொழிலதிபர் இந்த முறையை திறமையுடன் பின்பற்றியதன் விளைவாக, தன்னுடைய கம்பெனியை இந்தியாவில் பல மாநிலங்களிலும், தன் வாழ்நாளிலேயே விரிவுபடுத்தி வெற்றி கண்டார்.

 

ஒரு சமஸ்கிருத கவிஞர் ஸ்ரீ ரமண மகரிஷியின் சீடர். அவர் உமா சஹஸ்ரம் பற்றி ஆயிரம் கவிதைகள் எழுத விருப்பம் கொண்டார். குருவின் ஆசிர்வாதத்துடன் அவர்முன் உட்கார்ந்து எழுதினார். எழுதி முடிந்ததும் இவ்வளவு நேரமும் மௌனமாக உட்கார்ந்த மகரிஷி, சீடரிடம் "நான் சொன்னவற்றையெல்லாம் எழுதிவிட்டாயா?" என்று கேட்டார். குருவின் மௌன சக்தி சீடரின் எண்ணத்தில் கவிதையை உருவாக்கியது.

*****

26. முடியாதது முடியும் 

பாகம் - I

முடியாதது என்பது மனிதர்களுக்கு முடியாதவையாகவே இருக்கிறது. இதில் விதிவிலக்கானவர்களுக்கு முடியாதது முடியும். யார் ஒருவர் ஆன்மாவை உண்மையாக நாடிச் செல்கிறாரோ, அவர் அபூர்வமாக விதிவிலக்கானவராக கருதப்படுகிறார். ஒரு ஏழ்மை கடைநிலை ஊழியர் ஓய்வு பெற்றபின், ஒரு வருடம் கழித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிராண வாயு மூலம் அவர் உயிரை நீட்டித்து வைத்திருந்தார்கள். அவருக்கு இது மூன்றாவது முறையாக வந்த இருதய நோயானதால், அவர் பிழைத்துவிடுவார் என்று கருதுவதற்கு முடியவில்லை. அவருக்கும் தான் பிழைக்கமாட்டோம் என்ற எண்ணம்தான் இருந்தது. ஒருவருக்கு சந்தர்ப்ப சூழ்நிலை கை கொடுக்காத நிலையில், முடியாது என்ற நிலை இருந்தாலும், மற்றொருவருக்கு ஒருவரின் உதவியால் சாதகமான சூழ்நிலையில் முடியாததும் முடியும் என்பது சாத்தியமாகிறது.

கிராமத்து ஏர் கலப்பையினால் நிலத்தை 6" அங்குலம் ஆழத்திற்கு மேல் உழ முடியாது. ஆனால் டிராக்டரால் முடியும். ஒரு சக்தி மிகுந்த டிராக்டரினால் மூன்று அடி ஆழத்துக்கு மேல் உழ முடியும். கருவி மாறும் பொழுது, பலனும் மாறுகிறது. கை கால்களாலும் உடலாலும் உழைக்கும் மனிதனுக்கு சட்டத்தைப் பற்றியோ அல்லது மருந்து பற்றியோ புரிந்து கொள்ள இயலாது. ஆனால் கல்வி அறிவு பெற்ற மனிதன் புரிந்து கொள்வான். அறிவு உடலுழைப்பை விட உயர்ந்தது. உடலால் உழைப்பவனால் முடியாதது, அறிவால் உழைப்பவனுக்கு முடியும். மற்ற எல்லாவற்றையும் விட மேலான அதிக சக்தி வாய்ந்த ஆன்மாவினால், மனத்தால் ஆன மனிதனால் முடியாதது முடியும்.

நம்முள் ஒவ்வொருவரிடமும் ஆன்மா உள்ளது. நமது மரபு நமக்கு கடவுள் வழிபாட்டைத்தவிர, அன்றாட வாழ்வில் ஆன்மாமீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கற்பிக்கவில்லை. கடவுள் வழிபாடு அபூர்வமாக சில ஆபத்தான கட்டத்தில் ஆன்மாவைத் தொடும். உள்ளே இருக்கும் ஆன்மாவை நம்புவதானது, அதுவே ஆன்மாவை அழைப்பதற்கு முதற்படி. மனம் ஆன்மாவின் பக்கம் திரும்பும் பொழுது, ஒருவர் அபரிமிதமான சக்தியையும், அகவெழுச்சியின் உற்சாகத்தையும் உணர முடியும். அன்றாட நடவடிக்கைகளில் ஆன்மாவின் அசாதாரணமான சக்தியை காண்பது நமக்கு சாத்தியமாகும்.

*****

27. முடியாதது முடியும்

பாகம் - II

45 வயதிலும் என்றுமே வேலை கிடைக்காதவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அல்லது ஒரு பெண்ணுக்கு 38 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் நின்றுபோய் விட்டிருக்கலாம். 60 மாணவர்கள் பயிலும் ஒரு வகுப்பில் எப்பொழுதும் 40வது ரேங்க் மாணவராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் போல் மாணவர்கள் இன்றும் இருக்கிறார்கள். நல்ல உத்தியோகம், தம் அந்தஸ்துக்கு ஏற்ற சம்மந்தம் அல்லது முதல் ரேங்க் கிடைப்பது போன்றவை நடக்காத ஒன்றாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் முடியாதது முடியும் என்று தீர்மானித்து அந்த எண்ணத்தை ஆழ்மனத்தில் கொண்டு வந்து ஆன்மாவை அழைக்க முயற்சி செய்யலாம். அது வெற்றி பெறுமா பெறாதா என்ற கேள்விக்கு இடமில்லை. ஆனால் அத்தகைய ஆராய்ச்சியை இரண்டாவது முறையாக சோதித்துப் பார்க்கக்கூடாது. கிருஷ்ண பரமாத்மா, தான் உண்மையில் கடவுள் அவதாரமா என்று சோதிக்க விரும்பி ஒரு மலையை அசைத்து நகர்த்தினார். முதல் சோதனையில் வெற்றி கண்டபோது ஒருவர் அந்தத் திறனை வேறு எந்தவிதமான சோதனை செய்யாமல் நிரந்தர சக்தியாகப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

முன் அத்தியாயத்தில் கூறப்பட்ட கடைநிலை ஊழியர் உயிர் பிழைத்தெழுந்தார். அவருடைய வீடு கட்டிக் கொள்ள வேண்டுமென்ற நீண்டகால ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டார். அதன்பிறகு 25 வருடங்கள் உயிரோடு இருந்தார். ஆன்மாவில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு இதுபோன்ற உதாரணம் தேவை இல்லை. ஆன்மாவை அழைப்பதற்கு எந்த ஒரு உதாரணமும் ஆன்மாவை அழைக்கத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். ஆன்மாவை செயல்படுத்த அதை எப்படி அழைப்பது?

 

 1. ஆன்மாவில் பூரண நம்பிக்கை வைப்பதுதான் முக்கியமான முதல் தகுதி.
 2. நாம் நம் மனம் போன வழியில் வழக்கமாக செயல்பட்டு வரும் பழக்கங்கள் மீது நம்பிக்கை வைக்கக்கூடாது.
 3. ஆன்மாவின் மேல் நாம் தற்போது இடையறாத நினைவை தீவிரப்படுத்த வேண்டும்.
 4. பலனைப்பற்றி நினைக்காமலும் எதிர்பார்ப்புகளை அதிகமாக வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதாலும் ஆன்மாவை அழைக்கும் தகுதியைப் பெறலாம்.

 

பழமையும், புதுமையும் கலந்து போயிருக்கும் இக்காலத்தில் இரண்டிலும் எதை எந்த அளவில் ஏற்றுக் கொண்டால் நமக்கு நல்லது என்பதில், இப்படியும் அப்படியுமாக பலபேர் பலமுடிவு எடுக்கிறார்கள். இதில் பழமையை விலக்கிவிட்டு புதுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும். புதுமையை ஏற்றுக் கொண்டு புதிய முறையை தீவிரமாக கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆன்மாவை அழைப்பது என்ற புதுமையான முறையை ஏற்றுக் கொள்ளும் பொழுது, இதுவரையில் நம்மிடம் இருந்து வந்த எரிச்சலும் கவலையும் நீங்கி உள்ளே ஆன்மாவில் அமைதி ஏற்பட்டு உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்கும். அது ஆன்மீக மலர்ச்சியாகவும், ஆன்மீக சந்தோஷமாகவும் மலரும். அது, நம்முடைய அழைப்பின் குரலை ஆன்மா ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்கான அறிகுறி. அது உன் வாழ்வின் தன்மையை மாற்றும். மனதில் அமைதி ஏற்படும்பொழுது இதுகாறும் வெளிப்புறச் சூழலில் ஊறிப்போய் உள்ள உயர்வு மனப்பான்மை, மற்றும் தாழ்ந்த பண்புகள் போன்ற சுபாவங்கள் மாறி, மனதிற்கு இதமானதும் இனிமையானதுமான நல்லனவைகளை மட்டும் நாடும் சுபாவமாக மாறும். புறநிகழ்ச்சிகள் உள்ளுணர்வை பிரதிபலிப்பதால் அகவுணர்ச்சியின் மாற்றமே புறநிகழ்ச்சிகளின் மாற்றம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் அதை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டுமேயன்றி அதையே முடிவு என்று ஏற்றுக் கொள்ளலாகாது. ஏனென்றால் அப்படி ஏற்கும் பொழுது அந்நிலையிலேயே அவர் தங்கி விடுவார். அப்படிப்பட்ட மாறுபட்ட நடத்தையை வசதிபடைத்த அண்டை மனிதரிடமும் அல்லது அகந்தையான மேலதிகாரியிடமும் காணலாம்.

*****

28. முடியாதது முடியும்

பாகம் - III

கல்வித்துறையில் குமாஸ்தாவாக இருந்த ஒருவருக்கு ஒரு அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டு, மேலதிகாரிகளின் சிறப்பு கவனிப்பைப் பெற்றார். ஒருசமயம் தற்செயலாய் தன்னுடைய சக ஊழிய நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டு அவரை சந்தித்த பொழுது, அந்த நண்பர் மன அமைதிக்கு ஆன்மாவின் உதவியை நாடுகிறார் என்றும், அவர் வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒரு அபூர்வமான செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் என்பதை அறிந்து கொண்டார். அவருடைய நண்பர் ஆன்மாவை அழைப்பதில் உண்மையான ஆர்வத்துடன் செயல்படுகிறார் என்று அறிந்து, தானும் அந்த புனிதமான நம்பிக்கையில் பங்கு கொண்டு அந்த முறையை ஆர்வத்துடன் பின்பற்றலானார். அம்முறையை பின்பற்றியதும் அவர் ஆழ்மனத்தில் ஆன்மா மலர்ந்ததைக் கண்டார். அடுத்த நாள் ஆபிசில், தான் இதுவரையில் கண்டிராத அளவில் எதிர்பாராத அன்பான வரவேற்பினைப் பெற்றார். அவரை அனைவரும், தொடர்ந்து அன்பாக உபசரித்தார்கள். அவருடைய மேலதிகாரி, ஆபிசில் ஏதோ புதுமை நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து, அவரை அழைத்து வரும்படி சொல்லி அனுப்பினார். ஓய்வு பெறும் தருவாயில் இருந்த அந்த அதிகாரி எப்பொழுதும் கவலை தோய்ந்தவராக, அதிகம் பேசாதவராக இருப்பார். ஆனால் அன்று அவர் முகப்பொலிவுடன் தன் சக அதிகாரிகள் நடந்து கொண்டது போன்று, கனிவாகப் பேசி உபசரித்தார். குமாஸ்தாவுக்கோ சொர்க்கமே மேலிருந்து கீழே இறங்கி வந்ததைப் போன்று தோன்றிற்று. ஒரு வாரத்திற்குள் அவரை ஒவ்வொருவரும் தெய்வீக தன்மையுடையவர் என்று அழைக்கலாயினர். அந்த அன்பருக்கு, தம் நிலையை விட ஓர்நிலை அதிக மரியாதை வந்தது. அதே கட்டிடத்தில் இயங்கி வந்த, அந்தத் துறையின் நிர்வாகப் பகுதியின் தலைமை அதிகாரியிடமிருந்து அந்த குமாஸ்தாவை அனுப்பி வைக்குமாறு செய்தி வந்தது. அவருக்கு அங்கேயும் அதே மாதிரியான உயரிய வரவேற்பு காத்திருந்தது. அந்தத் தலைமை அதிகாரி, "உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சற்று வந்து இங்கே எங்களுடன் கொஞ்ச நேரம் இருந்து விட்டுப் போங்கள்", என்று சொன்னார். இதைக் கேட்ட குமாஸ்தாவுக்கு, இந்த வார்த்தைகள் உயர் அதிகாரியின் வாயிலிருந்து வந்தவையா என்று நம்ப முடியவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருவர் மனநிலையை தடுமாறாமல் வைத்திருப்பது கடினம். வருவது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதுவே இறுதியானது என்று எண்ணாமல் இருக்க வேண்டும். முடிவில் ஆன்மா அற்புதமாக வெளிப்பட்டு செயல்படும். 40வது ரேங்க்கில் இருந்த மாணவனால் முதலாமிடத்திற்கும் வர முடியும். அப்படி ஒரு மாணவன் முதலிடத்திற்கு வந்தான்.

உள்ளே நம்மனம் உறுதியில்லாத நிலையில் இருந்தால், நாம் ஆன்மீகத்தில் இன்னமும் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. எப்போது நமக்கு மனத்தின் உள்ளே பலனை அடைய வேண்டுமென்ற உந்துதல் இல்லையோ, அப்போது நாம் குறிக்கோளை அடைந்து விட்டோம் என்றாகும். நாம் எவ்வளவு காலம் நம் மனதை ஆன்மாவில் நிலைப்படுத்தி ஆன்மாவை அழைப்பதிலேயே நம் கவனத்தை செலுத்துகிறோமோ, அப்பொழுது மனத்தில் அலைபாயும் எண்ணங்கள் எழ வாய்ப்பில்லை. ஒருங்கிணைந்த நமது சக்தி முழுவதும் ஆன்மாவிலேயே இருக்கும்.

ஒருவர் ரூ.500/- சம்பளம் வேலை நீடித்து இருக்காது என்ற அவலநிலையில் இருந்த பொழுது, இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்குள் ரூ.1200/- சம்பளம் வேலை கிடைக்கும் என்று தன் உள் உணர்வில் கண்டார். ஒன்றரை ஆண்டுகள் முடிந்த பொழுது அவர் அமெரிக்காவில் மாதம் 4000 டாலர் சம்பளத்தில் வேலையில் இருந்தார்.

*****

29. முடியாதது முடியும்

பாகம் - IV

இந்தியா, ரிஷிகள் வாழ்ந்த பூமி. அவர்களுடைய ஜோதி நம் உடலில் உள்ளது என்று ஸ்ரீ அன்னை கூறுகிறார். ரிஷிகள் தங்கள் தவத்தால் பெற்ற ஒளியை, தூய்மையும் உண்மையும், நமது வாழ்வின் மேல்மட்டத்திற்கு தவத்தின் மூலம் கொண்டுவரும். அந்த ஒளி நம்முடைய லௌகீக வாழ்க்கைக்கோ அல்லது உத்தியோக வாழ்க்கைக்கோ நேரடியான பலனைக் கொண்டு வரும் என்பதல்ல. உண்மையை ஏற்றுக் கொண்டவரின் வாழ்வில், அந்த ஒளி நிச்சயமாக சாதகமான பலனைத்தரவல்லது. அந்த ஆன்மா என்பது, நமது தினசரி வாழ்விலோ பிரகிருதி என்ற இயற்கையிலோ எழும் சக்தி என்று இங்கு விவரிக்கப்படுகிறது.

 

 • இந்த ஆன்மா வாழ்வை புறக்கணிப்பது அல்ல. மாறாக, வாழ்வில் ஆன்மா செயல்பட விரும்புகிறது.
 • கோயில் வழிபாடோ, மத சடங்கு அல்லது பூஜையை வீட்டில் நடத்துவதாலோ, அல்லது வேறு எந்த முறையினாலோ, ஆன்மாவை அழைக்கவல்லது அல்ல.
 • ஆன்மா வெளிப்படும்பொழுது "முடியாதது முடியும்” என்ற சொற்கள் ஒவ்வொருவருடைய உதட்டிலும் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்.
 • ஆன்மீகம் இந்தியாவின் பாரம்பரியத்தில் உள்ளது. என்னைப் பொறுத்தவரை இப்பாரம்பரியத்தில்தான் இந்நாட்டு மக்களின் ஐஸ்வர்யம் அடங்கியுள்ளது. இந்நாட்டு மக்களின் உடம்பில் இருளிற்கு பதிலாக ரிஷிகளின் ஒளி தங்கியுள்ளது.

 

உங்கள் வாழ்க்கையில் கடந்த கால நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தால் ஏதாவது ஒரு இடத்தில் அத்தகைய தகுதியைக் காண்பீர்கள். இப்பொழுது அந்த புது விவேகம் உங்கள் மனதில் வெகுவாக நிலைத்து நிற்பதைக் காண்பீர்கள். நமது வாழ்வின் பலனைப் பார்க்கும் போது, அந்தப் பலன் எப்படி வந்தது என்றோ அல்லது அந்த நிகழ்சினையைப் பற்றியோ மறந்துவிடுகிறோம்.

ஆன்மாவை அழைத்து நாம் வாழ்வில் நிகழ்த்தும் அற்புதங்கள் தானாகவும் நடைபெறுவது உண்டு. அப்படிப்பட்ட சம்பவங்கள் பின்னணியில் நடந்திருக்கும் பொழுது சாதாரணமாக பேச்சுவாக்கில் சில சமயங்களில் சிலர் இப்படி கூறுவதுண்டு. "எப்படியோ ஏதோ ஒன்று நடந்து ஐ.ஏ.எஸ். கிடைத்தது. இல்லாவிடில் எங்கோ ஒரு மூலையில் ஒன்றுமில்லாதவனாக இருந்திருப்பேன்'' என்று சொல்வதை கேட்கிறோம். அதிர்ஷ்டம் ஒருவரை அடைவதும், துரதிர்ஷ்டம் ஒருவரிடமிருந்து விலகுவதும் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளாகும். உன்னுடைய வாழ்விலும் அப்படிப்பட்ட முக்கிய சம்பவம் இடம்பெற்ற இடம் உண்டு. ஆனால் அதை நாம் சந்தோஷமாக மறந்து விடுகிறோம்.

*****

30. முடியாதது முடியும்

பாகம் - V

அதிர்ஷ்டம் ஒருவரை தேடுவதும் அல்லது துர்அதிர்ஷ்டம் ஒருவரை தாக்காமல் விலகுவதும் ஒவ்வொருவருடைய வாழ்விலும் நடைபெறும் நிகழ்ச்சிகளாகும்.

 

 • தனது 35வது வயது வரை அரிசியும், மோரும் தவிர மற்ற எதையும் ஜீரணிக்க இயலாதவர் ஒருவர் எம்.ஏ. (இலக்கியம்) படிப்பில் சேர்ந்தபோது எதையும் ஜீரணிக்க முடிந்ததைக் கண்டார். ஆனால் அதை அவர் உணரவில்லை.
 • தொடர்ந்து சில மாதங்கள் இடைவெளியில் வலிப்பு நோயினால் அவதிப்பட்ட ஒருவருக்கு புதிய நண்பரின் அறிமுகம் ஏற்பட்டபின் அந்த நோயின் கடுமை கொஞ்சங் கொஞ்சமாக குறைந்து அதிலிருந்து முற்றிலும் விடுபட்டார். ஆனால் அவரும் அதை கவனிக்கத் தவறிவிட்டார்.
 • சிறு தொகை கூட கடன் பெறமுடியாத நிலையில் இருந்தவர்களுக்கு பொது திட்டத்தினால், வீடு தேடி வந்து ஆயிரக்கணக்கான ரூபாய் கடனாக வழங்கப்பட்டது. பத்திரிக்கையாளர் இதைப்பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்த பொழுது, அந்த முன்னேற்றத்தின் விபரங்களை மட்டும் அவர்கள் தெரிவித்ததைக் கேட்டறிந்தார். ஆனால் அது எவ்வாறு நிகழ்ந்தது என்று தெரியாது என்று கூறினார்கள். அதைப் பற்றி குறிப்பாகக் கேட்டபோதும், இது தங்கள் நினைவில் இல்லை என்று தெரிவித்தார்கள்.

 

ஆன்மா எப்படி முடியாததை முடித்துத் தருகிறது என்பதை தெரிந்து கொண்டு அதைத் தன் வாழ்வில் நிரந்தரமாக்கிக் கொள்ள விரும்புகின்றவர் தன் கடந்த கால வாழ்வை ஆராய்ச்சி செய்து இப்படிப்பட்ட நிகழ்வுகளை கண்டுபிடிப்பது நல்ல துவக்க முயற்சியாகும். அப்படிப்பட்ட முயற்சி ஆன்மீக நன்றியறிதலாகும்.

வாழ்வில் செயல்படும் ஆன்மா எப்படி நமக்கு தகுதிக்கு மீறிய பேற்றை கொண்டு வந்தது. எப்படி தவிர்க்க முடியாத துரதிர்ஷ்டத்திலிருந்து நம்மைக் காப்பாற்றியது ஆகியவற்றை உணர்வது ஆன்மீக நன்றியறிதலாகும். நன்றியறிதல் ஆன்மாவின் குணமாகும். இக்குணம் நமக்கு ஆன்மீக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல வாய்ப்புக்களை உண்டு பண்ணி தரக்கூடியது.

நமக்கு நன்றியறிதல் உள்ளதற்கு சிறந்த அடையாளம் ஆழத்திலிருந்து சந்தோஷம் வருவதுதான். பாமர மனிதன் அரசாங்கத்திடமிருந்தும் சமூகத்திலிருந்தும் பெறும் பலன்களை அறியாதவனாக இருப்பது போல் நாமும் ஆன்மா நமக்கு கேட்காமலே கொடுக்கும் எல்லா பலன்களுக்கும் நாமும் நன்றியுள்ளவர்களாக இருப்பதில்லை.

*****book | by Dr. Radut