Skip to Content

03 . பகுதி - 2

11. மூன்று நாள் பிரார்த்தனை

ஆன்மாவை அழைப்பதில் பல முறைகள் கையாளப்படுகின்றன. ஆன்மீக விஷங்களில் அதிக பரிச்சயம் இல்லாதவருக்கு பிரார்த்தனை உகந்ததாகும். அதுவும் மூன்று நாட்கள் பிரார்த்தனையை மேற்கொள்வது பொருத்தமானதாகும். பிரச்சனைகள், தீருவதற்கும் வாய்ப்பை உற்பத்தி செய்து கொள்வதற்கும் இந்த மூன்று நாட்கள் பிரார்த்தனை ஏற்றதாகும்.

பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. சில பிரச்சனைகள் தொந்தரவு உடையனவாகவும், மற்றும் சில அச்சமூட்டுவதாகவும் இருக்கின்றன. வீட்டை விட்டு ஓடிப்போன பையன், நீண்ட நாள் திரும்பி வராத கடன், மின் இணைப்பு புதியதாக கொடுப்பதில் காலதாமதம் ஆவது, போன்றவைகள் வீட்டுப் பிரச்சனைகளாகும். ஒருவர் உத்தியோகத்தில், கஷ்டப்பட்டு உண்மையாக உழைத்தவராக இருந்தபோதிலும், அவர் புறக்கணிக்கப்பட்டு வேறு ஒருவருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டு, இவருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உத்தியோக உயர்வு தடைபட்டுப் போனது, அவருடைய வாழ்வில் கடுமை நிறைந்த பிரச்சனையாகும். ஒரு முறை ஆன்மாவை அழைத்தால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் தீருவதுண்டு. அப்படியானால் 72 மணி நேரம் அல்லது 12 மணி நேரம் தினமும் தொடர்ந்து உட்கார்ந்து ஏன் பிரார்த்தனை செய்ய வேண்டும்? ஏனென்றால் பாமர மனிதனுக்கு தியானம் இயல்பாக அமைவதில்லை. மனதை ஒரு நிலைப்படுத்தி ஆன்மாவை எழுப்புவதற்கு எளிய மனிதனுக்கு போதிய சக்தியும் திறனும் இல்லை. 3 நாள் உட்கார்ந்து தியானம் செய்வதுதான் அவருக்கு பொருத்தமானது. இயல்பானதும்கூட.

உடல் அமைதியாகி மனதில் ஆழ்ந்த மௌனம் ஆட்கொள்ளும் பொழுது ஆன்மா ஒரு முறையோ அல்லது சிற்சில நேரங்களிலோ வெளிப்படும். ஒருவர் 3 நாள் உட்கார்ந்து பிரார்த்தனை செய்ய, நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரு நாளில் உணவு இடைவெளி நீங்கலாக காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை, 12 மணி நேரம் பிரார்த்தனை தொடரலாம். மனதில் ஓடும் நினைவுகளை அகற்றி பிரார்த்தனையை ஆரம்பிக்க முடிவு செய்தால், 3 நாள் இடைவிடாமல் 72 மணி நேரமும் அதன் நினைவாகவே இருந்தால் பிரச்சனை முழுவதும் பிடிபட்டு, புறநிலை மாறி புதிய சூழ்நிலைகள் ஏற்பட்டு, நிகழ்ச்சிகள் விரைந்து செயல்பட்டு தீர்வு ஏற்படுவதைக் காணலாம். பிரார்த்தனையை எளிய முறையில் சொல்லலாம். "ஓடிப்போன பையன் திரும்பி வர வேண்டும்” என்று சுலபமாகச் சொல்லலாம். தாய் மொழியில் மௌனமாக இப்படி திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

3 நாள் இடைவிடாமல் பிரார்த்தனை செய்து தீராத பிரச்சனை ஒன்றை இதுவரை கேள்விப்பட்டது இல்லை. இந்த முறையைக் கடைப்பிடித்து வந்ததில் பலன் அடையாதவர் எவரும் இல்லை. பெரும்பாலும் இப்படி 3 நாள் பிரார்த்தனை முடியும் முன்பாகவே, அவர் ஆர்வத்தால் ஆரம்பித்த அழைப்பு, எதிர்பாராத வகையில் நல்ல சில பலன்களையும் தருவதுண்டு. அப்படி, இடையிலேயே ஒருவருடைய பிரார்த்தனை நிறைவேறிவிட்டால் 3 நாள் பிரார்த்தனையை ஒரு சடங்காக செய்து, அதை பூர்த்தி செய்ய வேண்டுமா? என ஒருவர் நினைக்கலாம். அப்பொழுது அந்த பிரார்த்தனையை தொடர தேவை இல்லை. இன்னும் ஒரு விசேஷம் என்னவென்றால், சிலருடைய குறிப்பாக மூன்று அல்லது நான்கு பேர்களின் அனுபவத்தில் கண்ட உண்மை என்னவென்றால் 3 நாள் பிரார்த்தனையில் உட்காரும் முன்பே அபூர்வமாக பலன் கிடைத்து விட்டது என்ற செய்தியாகும்.

உண்மையான அழைப்பின் குரலைக் கேட்டவுடன் ஆன்மா உடனே மேலே எழுகிறது. ஆன்மாவின் மீது தீவிர நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்தால் அதிக நாட்கள் உட்கார்ந்து பிரார்த்தனை செய்யும் வரை ஆன்மா பார்த்துக் கொண்டிருப்பது இல்லை. உடனடியாக பக்தனுக்குப் பலன் கிடைத்து விடுகிறது.

*****

12. சிறிய கம்பெனியில் விற்பனை

வருடத்தில் 58 லட்சம் ரூபாய் வியாபாரம் நடக்கும் ஒரு கம்பெனியை நடத்தி வரும் நிர்வாகி ஒருவர் கம்பெனியை தரமான உயர்நிலைக்குக் கொண்டுவர கடுமையாக உழைத்து வந்தார். அவர் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடைய தொழில் நிறுவனர். கம்பெனியின் வளர்ச்சிக்கு எவ்விதமான வழி உகந்ததோ அதை தவறாமல் பின்பற்ற விரும்பினார். அவருடைய நண்பர்கள், ஆன்மா மீது நினைவை செலுத்தி பிரார்த்தனை செய்தால், ஆன்மா, வாழ்வில் ஐஸ்வரியம் கொண்டு வரும் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டார். இதற்கு முன்பு இப்படியொரு முறையைப் பற்றி அவர் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அதை எப்படிப் பின்பற்றுவது என்று தெரிந்தால் அதை ஏற்று செயல்பட விருப்பங்கொண்டார்.

மனதாலும் உடல் உழைப்பாலும் பெறும் பலனைவிட நாம் நினைத்ததை ஆன்மா மூலம் சாதிக்க முடியும் என்று ஆன்மாவை முழுமையாக நம்புவதே சிறந்த வழிமுறையாகும். ஆன்மீக முறைகளை நம்புகின்றவர்கள் உற்பத்தி சம்பந்தப்பட்ட எல்லா இடங்களிலும் இம்முறைகளை அமுல்படுத்துவதற்கு வழிவகைகள் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு ஆன்மீக முறைக்கும் பின்னால் விரிவான விளக்கங்கள் உள்ளன. இந்தக் கம்பெனியின் உரிமையாளருக்கு இவ்வான்மீக முறைகள் உண்மையானவையாகவும் அறிவிற்கு உகந்தவையாகவும் இருப்பதாக மனதில்பட்டதால் இவை எல்லாவற்றையும் பின்பற்ற முடிவு செய்தார். இந்த முறையைக் கையாண்டு, விற்பனையை 580 லட்சத்திற்கு உயர்த்த விரும்பி இருக்கலாம். ஆனால் அது அவருக்கு பேராசை என்று தோன்றிற்று. எனவே தற்போதைய விற்பனையை இரண்டு வருடங்களில் இரண்டு மடங்காக அதிகரிக்க எண்ணினார். அதனுடைய பலன் ஒரு வருடத்திற்குள் அல்லது ஒன்றரை ஆண்டுக்குள்ளாக கிடைக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினார்.

தன் இலட்சியத்தை ஆன்மாவிடம் சமர்ப்பணம் செய்து, டிசம்பர் மாதம் இறுதியில் ஒரு புதிய முயற்சியில் இறங்கினார். பொங்கல் தினத்தன்று எதிர்பாராதவிதமாக 90 லட்சத்திற்கு ஆர்டர் வந்தது. 20 மாதங்களில் தொடர்ந்து ஆர்டர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருந்தன. அது 9 கோடியை எட்டியது. இப்பொழுது வந்து குவிந்துள்ள ஆர்டர்களுக்கு ஏற்றபடி உற்பத்தியை அதிகரிப்பதே அவருடைய வேலை என்றாகிவிட்டது.

ஆன்மாவுக்கு சிறிய கம்பெனி பெரிய கம்பெனி என்ற பாகுபாடு கிடையாது. 40 கோடி வியாபாரம் உள்ள கம்பெனியிலும், 260 கோடி வியாபாரம் நடக்கும் கம்பெனியிலும் இதைக் காண முடிகிறது. ஆத்மாவின் அபரிமிதமான சக்தி கம்பெனிக்குள் வருவதை எக்காரணம் கொண்டும் தடை செய்யாத வரையிலும், அதனுடைய விரிவுபடுத்தும் அம்சம் குறையில்லாமல் செயல்படும்.

*****

13. தெய்வத்தின் அருளைத் தாங்கி வருவது மழையின் ஸ்வரூபம்

நாம் கேட்காமலே இறைவன் அருள் இறங்கி வருகிறது. அருள் மழையாக இறங்குகிறது. மழை இன்றி எந்த ஜீவராசியும் உயிர் வாழ முடியாது. மழை நமக்கு பெரும் சேதத்தையும் ஆபத்தையும் கூட கொண்டு வருகிறது. நம் ஏற்புத்திறனைவிட அதிகமான அளவிற்கு மழை பெய்யும் பொழுது சேதம் விளைவிக்கிறது. நாம் அருளை நிபந்தனையற்ற உண்மையான நன்றி உணர்வோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். மழை பெய்யும் பொழுது நம் வேலைக்கு இடையூறு ஏற்படுவதால், நாம் மழையை நிந்திக்கிறோம். ஆண்டவனின் அருள் தண்ணீர் ரூபத்தில் மழையாக வருகிறது என்ற விழிப்புணர்வுடன் மக்கள் இருந்தால் மழை பொய்க்காது. இந்த ஆண்டு (2003) தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழையின் சராசரி அளவு குறைந்துவிட்டது. இந்தக் குறையை பருவகாலம் முடிவதற்குள் நிறைவு செய்து கொள்ள முடியுமா?

இவ்வாண்டு (2003) தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இது முடிந்து போன விஷயம். தமிழ்நாடு, தனக்குரிய அளவிற்கு மழையை இந்த ஆண்டில் நிறைவு செய்து கொள்ள முடியுமா? இந்தியாவின் பிற பகுதிகள் மழையை குறைவாக பெற்றதை இந்தியா ஈடு செய்து கொள்ள முடியுமா? இரண்டுமே உடனடியாக நிகழக்கூடிய சாத்தியமாகும். மழை அல்லது தண்ணீரின் ஆன்மாவை அழைத்தால் தவறாமல் மழையைக் கொண்டு வரலாம். அதை யார் செய்வது? அதை எப்படி செய்வது?

ஆன்மாவை அழைக்கும் பொறுப்பை யாராவது ஏற்று அழைத்தால் அவரது உணர்ச்சிக்கு ஏற்ற வகையில் பதில் தருவது போல், மழை, நாடு, நகரம், ஊர் எல்லா இடத்திலும் பெய்யும்.

மழைக்காகப் பிரார்த்தனை செய்வது சுலபமான வழி. இதைவிட செயல் திறன் வாய்ந்தது என்னவென்றால் நாம் தண்ணீரை கவனத்துடன் உபயோகிப்பதில், பக்தி பூர்வமாக அக்கரை காட்டுவதாகும். தண்ணீரை எந்த விதமான முறையில் சேமித்து வைப்பதும் நாம் அதற்கு தெய்வீக கவனம் செலுத்துவதாகும். மழை வரும் பொழுது அதை நாம் வெறுக்காமல் இருப்பது நம்மிடம் இருக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடாகும்.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு ஆன்மீகவாதி கர்நாடகத்தில் உள்ள ஒரு வறண்ட அணைக்கு தன்னுடன் பக்தர்களை அழைத்துக் கொண்டு போய் அங்கே உட்கார்ந்து பிரார்த்தனை செய்தார். நாத்திகர்கள் இது மூட நம்பிக்கை என்று ஆட்சேபித்து ஆர்பாட்டம் செய்தார்கள். அடுத்த மாதமே மழை வந்து அணை நிரம்பியது. நாத்திகர்கள் ஒரு பெரிய நம்பிக்கை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களுடைய அந்த நம்பிக்கை மனித சமுதாயத்தின் நம்பிக்கைக்கு, மதிப்பு கொடுக்கிறது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட நோக்கம்கூட சொர்க்கத்திற்கு வழிவிடும். பிரைடல் கிரீபர் (Bridal Creeper) என்ற மலருண்டு. அந்த மலரின் ஆன்மீக முக்கியத்துவம் தண்ணீர் என்பதாகும். இந்த மலரை கடவுளுக்கு சமர்ப்பித்தால் மழையைக் கொண்டு வரும் சக்தி கொண்டது. இதுவொரு கொடியில் மணி வடிவில் வெள்ளை நிறத்தில் கொத்துக் கொத்தாக கீழிறங்கும் மலர்களைக் கொண்டது.

தண்ணீரை சேகரித்தல் மற்றும் தண்ணீருக்கு கவனம் செலுத்த வேண்டிய முறைகள் :

 1. தண்ணீர் தாராளமாக அபரிமிதமான அளவில் கிடைக்கும் பொழுதும் அதை மிகச் சிக்கனமாக உபயோகிக்க வேண்டும்.
 2. தண்ணீருக்கும் ஜீவன் உண்டு என்ற உணர்வு வேண்டும்.
 3. மழை நீரை, ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
 4. நிலங்களில் தண்ணீர் கசிந்து வீணாகாமல் பயன்படுத்தும் பொழுது தண்ணீரின் உபயோகம் அதிகரிக்கிறது. இதற்கேற்ற முறைகளை பயன்படுத்த வேண்டும். 

*****

14. அன்றாட வாழ்வில் ஆன்மீகம் என்பது என்ன?

ஆன்மீகம் தபஸ்விக்கும், வாழ்வு குடும்பத்தில் உள்ளவருக்கும் உரியது என்பது மரபு. நம்முடைய மரபு மதரீதியானது. முடி ஆட்சியில் அரசாளும் உரிமை அரச குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது போல், ஒருவர், தான் ஆன்மாவில் அறிந்து ஸ்தாபித்ததை பல்லாயிரக் கணக்கானவர்கள் ஏற்றுக் கொள்வது மதமாகும். ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் ஆட்சிக்கு வரும் உரிமை இருப்பதுபோல ஒவ்வொருவரும் தன்னான்மாவை உணரும் உரிமையை கொடுப்பது ஆன்மீகம். மத வழிபாட்டை நடத்திக் கொண்டு தன்னைக் கடவுளின் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு அதிகாரத்தனமாகவும் மக்கள் மத்தியில் நடுவராக இருப்பது போல் செயல்பட்டுக்கொண்டிருந்த பாதிரியாரை நீக்கவும், தனி மனிதனின் ஆன்மீக சுதந்திரத்திற்காகவும் வாதாடியவர் மார்ட்டின் லூதர். நம்மில் ஒவ்வொருவரும் துறவியாக முடியுமா? விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பம் இன்று வழி செய்துள்ளது. அம்மாதிரியே ஆன்மீகத்தின் பலன்களை அனைவரும் பெறும்படி செய்து கொள்ளலாம்.

சாதாரணமாக எந்த இடத்திலும் பொய்யும் மெய்யும் கலந்துதான் இருக்கும். அதில் மெய்யை தேர்ந்தெடுத்தல் ஆன்மீகமாகும். எந்த ஒரு வேலையும் உணர்ச்சித் துடிப்போடு ஆர்வத்துடன் செய்து, அதை ஒரு நேர்த்தியான வேலையாக முடிக்கலாம். அல்லது வேலையை சோம்பலுடன் சிரத்தை இல்லாமலும் செய்து முடிக்கலாம். இப்படிப்பட்ட வேலை நேர்த்தியாக இருக்காது. முந்தையது ஆன்மீகம். அடுத்தது ஆன்மீகம் அல்ல. ஆன்மீகம், வாழ:வில் நேர்மை, விசுவாசம், ஒழுக்கம், நேர்த்தி, உண்மை, கடின உழைப்பு, சுறுசுறுப்பு என்ற பண்புகளாக வருகிறது. உழைப்பை வேலையில் அர்ப்பணித்தல், படிப்பில் புத்திசாலித்தனம், உண்மையான நட்பு, குடும்பத்தில் பொறுப்புடன் வேலையை கவனித்தல், பொருட்களை கவனத்துடன் கையாளுதல், மக்களிடத்தில் விழிப்புடனிருத்தல், போன்றவைகளால், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுதல், சுயமரியாதை, தனித்தன்மையை உயர்த்திக் கொள்ளுதல், போன்றத் திறமைகள் மனிதனுக்கு வருகிறது. அப்படிப்பட்டவர்கள் ஆன்மாவை அழைத்தால் ஆன்மா உடனடியாக செயல்படுகிறது.

ஆபிசில் முழு ஈடுபாடுடன் வேலை செய்பவர்கள் சக ஊழியர்களின் பொறாமைக்கு வெகுவாக ஆளாகிறார்கள். பக்தி என்பது ஆன்மீகம். ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள் தங்கள் வாழ்வில் மற்றவர்களால் ஏற்படும் தொந்தரவுக்கு ஆளாகுவது அரிது. அவர்கள் அதிர்ஷ்டம் மிக்கவர்களாக இருக்கும் போதுதான் அவர்களது அதிர்ஷ்டத்தை தடுக்கும் வகையில் சக ஊழியர்கள் அவர்களுக்கு அதிக தொந்தரவு கொடுக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட நிலையில் தொந்தரவுக்கு ஆளானவர்கள் ஆன்மாவை அழைத்தால் ஆன்மா உடனே செயல்படுகிறது. தொந்தரவு விலகுகிறது. இடர்பாடுகளைக் கடந்து வருவதால், அவர்கள் விதிவிலக்கின்றி தற்பொழுதுள்ள பதவியிலிருந்து மேல் பதவிக்கு உயர்த்தப்படுகிறார்கள். இவர்கள் இடையூறுகள் வாய்ப்புக்களாக மாறுவதைப் பார்க்கின்றார்கள்.

ஒரு காலத்தில் நம் வாழ்வில் எல்லோரும் அவர்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் ஆன்மீக நியதியின்படி அமைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு மதமும் கிருஸ்துவ மதமாயினும் அல்லது இஸ்லாமியமாயினும் சரி, தன் மதத்தின் அடிப்படைக் கொள்கையின்படி ஒரு கலாச்சாரத்தை ஏற்படுத்துவதில் ஈடுபடுகிறது. இந்தியாவின் சமய வாழ்வானது, சங்கரர், இராமானுஜர் போன்ற ஆன்மீகவாதிகளுக்கு கிடைத்த சித்திகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த மதங்களின் அடிப்படையான கருத்து கர்மம் என்பதாகும். நம்முடைய வாழ்க்கை முழுவதையும் உள்ளே இருக்கும் ஆன்மாவைப் பின்பற்றும் வழியில் அமைத்துக் கொள்வது ஆன்மீக வாழ்வாகும். குருவின் சித்தியை பின்பற்றும் வகையில் ஆன்மீக வாழ்வை அமைத்துக் கொள்ள முடியாது. நம் சொந்த முயற்சியால் ஆன்மாவை அழைப்பதின் மூலமாகவே ஆன்மீக வாழ்வை அடைய முடியும்.

நூறு வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இப்பொழுது உலகம் ஆன்மீகத்தை அதிகமாக ஏற்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஊனமாக இருந்தாலும் கூட இன்று சமூகம் அவருக்கு வழங்கும் மரியாதை அவருடைய ஆன்மாவிற்கு வழங்கப்படுவதாகும். உடலைவிட மனிதனை ஆன்மா என்று அறிந்து கொள்வதால், சமூகமும் அரசாங்கமும் பலவீனமானவர்களின் வாழ்க்கையின் தரத்தைக் கூட உயர்த்துகிறது.

சமுதாயத்தில் தொன்று தொட்டு ஒரு பழக்கம் உண்டு. எந்தக் காரியமும் நடைபெறும் பொழுதும் இது முடியுமா? முடியாதா? என்று கேள்வியை எழுப்புவது அதன் பழக்கம். நாம் அப்படிக் கேள்வி எழுப்ப அவசியம் இல்லை. வாழ்வில் வெளிப்படும் ஆன்மா அறிவை விட சக்தி வாய்ந்தது என்றுத் தெரியும் பொழுது மனிதனால் சும்மா இருக்க முடியாது.

கடந்த முன்னூறு ஆண்டுகளில் வாழ்க்கை பல வழிகளில் வசதி, மகிழ்ச்சி, பாதுகாப்பு, போன்ற பல சௌகரியங்கள் பெற்று முன்னேறியுள்ளதை நாம் பார்க்கிறோம். அடுத்த முப்பது வருடங்களில் மனிதனின் வாழ்வில் புதிய சக்தி இறங்கி செயல்பட்டு, நினைக்கமுடியாத அளவிற்கு இன்னும் பல வழிகளில் அனேக சௌகரியங்கள் அடைவதற்கு மனிதன் பலப் படிகள் முன்னேறுவான் என்பது திண்ணம். 

 • இந்தியா ஆன்மீகமும் ரிஷிகளும் வாழ்ந்த நாடு.
 • வாழ்வில் சுபிட்சத்தைப் பெற இந்தியா எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.
 • ஆன்மீகத்தை மத சம்மந்தமான சடங்குகளில் எந்த அளவில் ஈடுபடுத்தப்படாமல் இருக்கின்றோமோ, அந்த அளவிற்கு மனிதன் சுபிட்சத்தைப் பெற்றுக் கொள்வான்.
 • ஆன்மாவின் இருப்பிடம் உள்ளே உள்ளது. அது வெளியில் தெரியும் தோற்றமல்ல. 

*****

15. உலக அறிவு

உலக வங்கியின் முன்னாள் தலைவர் ராபர்ட் மக்நமாரா (Robert McNamara) ஒரு முறை ஹார்லன் கிளிவ்லேண்ட் (Harlan Cleveland) என்பவருடைய புத்தகத்தைப் படித்து விமர்சனம் செய்த பொழுது, உலகில் சிந்தனையாளர் இல்லை என்று குறை கூறிய பிரான்ஸ் நாட்டு பிரதமர், இந்த ஆசிரியரைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று கருத்துத் தெரிவித்தார். பேராசிரியர் ஹார்லன் கிளிவ்லேண்ட் (Harlan Cleveland) 12 புத்தகங்களின் ஆசிரியர். அவர் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்புக்கான (NATO) அமெரிக்கத் தூதராக இருந்தவர். அவர் உலக உயர்க்கல்வி, கலை மற்றும் அறிவியல் கழகத்தின் தலைவராகவும், புகழ்பெற்ற கல்வியாளராகவும், சிறந்த நிர்வாகத் திறமை பெற்றவராகவும் விளங்கினார். இந்த பேராசிரியர் தான் எழுதிய ஒரு சிறு புத்தகத்தில் "வாழ்வில் ஏழு வகை மோதல்கள்” என்பதைப் பற்றி எழுதியதில், வாழ்வின் முக்கிய இரகசியங்களை ஐந்து வழிமுறைகளில் சுருக்கமாக விளக்கியுள்ளார். அதில் அவர், பயந்தவர்களுக்கு வாழ்வு இல்லை என்று கூறுகிறார். மேலும், வல்லுனர்களின் கருத்து முரண்பாடாக இருப்பினும் திட்டங்கள் நிறைவேறிவிடும் என்று உறுதியாகக் கூறுகிறார். வாழ்க்கையில் நம் பார்வைக்குத் தெரிந்ததைவிட நிறைய விஷயங்கள் உள்ளன என்கிறார். உண்மையில் வாழ்க்கையில் சாதித்தவர்கள் அனைவரும் அறிந்ததுபோல இப்புத்தகம் வாழ்க்கையின் சாராம்சத்தை உள்ளடக்கியதாகும்.

அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளின் 2000 வருடங்கள் சரித்திரத்தை இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளில் சுருக்கிக் கொண்ட அனுபவத்தைப் பெற்ற நாடு. அவ்வகையில் அந்நாடு சமூகரீதியாக அளவுகடந்த கிரியேட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்தியதோடன்றி செயல்திறன் மிக்க ஸ்தாபனங்களை உருவாக்கி கொள்வதிலும் பெயர் பெற்றுள்ளது. ஹார்லன் (Harlan) அவர்களுடைய கருத்துக்கள் யாவும் அமெரிக்காவின் நீண்ட கால உழைப்பின் சாரமாக பெற்ற அறிவாகும். இவ்வாறு மனிதன் உடலுழைப்பு என்ற தாழ்ந்த நிலையில் துவங்கி வாழ்க்கையின் ரகசியங்களை உணரும் நிலைக்கு வந்துள்ளான். எல்லா நாடுகளும் இப்படி வாழ்க்கைப் பற்றிய உண்மைகளை தெரிந்து வைத்திருக்கின்றன. ஆனால் அதே ஆரம்ப நிலையிலிருந்து வாழ்வைப் புரிந்து கொண்டுள்ளன என்று சொல்ல முடியாது.

இந்தியர்கள் நீண்ட காலத்திற்கு முன்பாகவே தங்களுடைய ஆத்மாவின் மூலம் ஆன்மீகத்தை உணர்ந்திருந்தார்கள். அவர்களுடைய பண்பாடும் சமூக அமைப்புகளும் திறமையுள்ளனவைகளாகவும் சக்தியுள்ளவை களாகவும் இருந்தன. பழங்காலத்தில் இந்தியர்கள் சுபிட்சத்துடன் இருந்ததற்கு அதுவேதான் காரணம். உள்ளே இருக்கும் ஆன்மீகத்தின் அனுபவத்திலிருந்து சுபிட்சம் வந்தது. இன்று கூட நாம் கிராமம் அல்லது நகரங்களில் கூட சாதனை படைத்த வய முதிர்ந்தோர்களிடம் ஆன்மீக அறிவு இருப்பதைக் காணலாம். அமெரிக்காவின் வாழ்க்கை முறையைப் பற்றி மிகத் துல்லியமாக வெளிப்படுத்திய ஹார்லன் கிளிவ்லேண்ட் (Harlan Cleveland) அவர்களின், அறிவு பூர்வமான கருத்துக்கள், இந்தியாவில் பரவலாகவுள்ள எல்லா கிராமங்களிலும் காணப்படுகின்றன. இவர்கள் சொந்தமாக ஏற்பாடு செய்யும் எந்த வேலையும் குறையில்லாமல் இருக்கிறது. இவர்கள் அரசாங்கம் இறக்குமதி செய்துள்ள மற்ற ஸிஸ்டங்களின்படி செயல்பட முயற்சி செய்யும் பொழுது செயல்திறன் குன்றிப் போகிறார்கள். இவ்வுண்மை யாருக்கும் தெரியாமலிருப்பது பரிதாபத்திற்குரிய விஷயமாகும். இன்னும் வருத்தப்பட வேண்டியது யாதெனில், இந்நாட்டின் பாரம்பரிய அறிவை பரம்பரைச் சொத்தாக பெற்றவர்கள் கூட அதைக் கருதுவதில்லை. ஏனெனில் இன்று வாழ்க்கை நகரத்தை நோக்கியிருக்கிறது.

ஒரு வகையில், ஐஸ்வரியத்தை அதிக அளவில் உடனடியாக பெறுவதற்கு உயர்ந்த கருவியாக இதை நாம் ஆன்மீகச் செல்வம் என்று அழைக்கலாம்.

இந்தியா விழித்தெழும் பட்சத்தில் அன்னிய நிர்வாக அமைப்பை சீர்தூக்கிப்பார்த்து அதை கைவிட்டு புதுமையை புகுத்தி புதியன படைத்தலாலும், உள்ளடங்கிய ஆற்றலை முழுமையாக வெளிக்குக் கொண்டு வருவதாலும் இந்த நாடு இடைநிலையைக் கடந்து உடனடியாக அதிக வருவாய் உடைய நாடுகளுடன், சேர்ந்து கொள்ள முடியும். இதை செயல்படுத்துவது திட்டமிடுவோரின் செயலாகும்.

இங்கு நான் எல்லோருக்கும், குறிப்பாக வாழ்வில் அடி எடுத்து வைக்கும் இளைஞர்களுக்கு எழுதுவது யாதெனில், அவர்கள் அவர்களுடைய மதிப்பு மிக்க பாரம்பரிய ஆன்மீகத்திற்கு ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும் என்பதே  இதை நம்புவதற்கு நிரூபணம் வேண்டுமென்றால் சமூகத்தில், சமீபத்தில் சாதனை படைத்தவர் ஒருவரைப் பற்றி நினைத்துப் பார்க்கலாம். அப்பொழுது அங்கே மேனேஜ்மெண்ட் (Management) மேலோங்கியிருப்பதைக் காணலாம். இவர்கள் எல்லோரும் தம்முடைய இயற்கையான ஆன்மீகச் செயல்திறனை பயன்படுத்துகின்றவர்களாவார்கள். இருந்தாலும் இப்பலம் எங்கிருந்து வருகிறது என்பதை இவர்களில் ஒரு சிலரே அறிவார்கள். 

 1. ஒரு தொழிற்சாலையில் ஏற்படும் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக நான் ஆன்மாவை அழைக்க வேண்டுமென்று சொல்லுவதின் பொருள் என்னவென்றால், ஆன்மாவானது ஒரு இழை அளவில் வெளிப்பட்டு க்ஷண நேரத்தில் அற்புதத்தை நிகழ்த்துகிறது.
 2. பிரச்சனையென்று ஒன்று வந்து, அதை ஆன்மாவை அழைத்துத் தீர்வு காண்பதில், யாரேனும் ஒருவர் வெற்றி காண்கிறார் என்றால், மேற்கண்ட ஆன்மீக அறிவை பெற்றார் என்றால் மேலும் செயல்திறன் மிக்கவராக விளங்குவார். 

*****

16. அனைத்து சக்தியும் ஆய பரம்பொருளும்

சமய சடங்குகளின் சக்தியும்

துரைசாமி அய்யர் பெரும் நாட்டுப்பற்று உடையவராகத் திகழ்ந்தவர். அவர் தன் வக்கீல் தொழிலை துறந்துவிட்டு ஸ்ரீ அரவிந்தர் அடிகளில் அடைக்கலமாக வந்து சேர்ந்து அங்கேயே தங்கிவிட்டார். துரைசாமி அய்யர் ஒரு சமயம் தன் மகனுக்கு உபநயனம் செய்ய விரும்பிய பொழுது, "ஸ்ரீ அரவிந்தர் காயத்திரி மந்திரம்” ஸ்ரீ அரவிந்தரால் இயற்றப்பட்டது. அந்த மந்திரம் ஸ்ரீ அரவிந்தரின் சிஷ்யர்களுக்கும் பரிச்சயமாகிவிட்டது. 90 வயது தாண்டிய துரைசாமி அய்யரின் வீட்டை, ஒரு அமெரிக்கர் கடந்து போய்க் கொண்டிருந்த பொழுது, சாஸ்திரிகள் மந்திரம் ஓதிக் கொண்டிருந்த ஒலியைக் கேட்டார். அமெரிக்கர் இதைப் பற்றி விசாரித்த பொழுது அருகில் இருந்தவர், ஒருவர் மரணத்தருவாயில் இருக்கும் பொழுது வேதமந்திரங்கள் ஓதினால் அந்த ஆத்மா மோட்சத்திற்கு போக உதவும் என்று பதில் சொன்னார். கொஞ்ச நாள் கழித்து அந்த அமெரிக்கர் துரைசாமி அய்யர் கடற்கரையில் ஒரு இளம் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு மிகவும் மெதுவாக நடந்து போவதைப் பார்த்தார். அந்த பெண் அவருக்கு பக்தியுடன் சேவை செய்து வந்தவள். வேத மந்திரம் ஓதுவதால் உயிர் போவதைத் தடுத்து மேலும் சிறிது காலத்திற்கு வாழ்வு நீடிக்கிறது.

ஒரு வைதீகப் பிராமணருடைய பண்ணை நிலத்தில், வைக்கோற் குவியல் தீப்பிடித்துக் கொண்ட பொழுது காற்று, அருகில் இருந்த வைக்கோற்போர் பக்கமாக பலமாக வீசிக்கொண்டிருந்தது. அந்த பிராமணர் ஒரு மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தவுடன் காற்று அதன் வேகத்தை வேறு திசையில் மாற்றிக் கொண்டது.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் மனிதன் தெரிந்து வைத்துள்ள மந்திரம் உண்டு. அப்படி 14,600 மந்திரங்கள் உள்ளன என்று சொல்லப்படுகிறது. பாம்புக்கடி போன்றதிலிருந்து தொலைந்து போன பொருளைக் கண்டுபிடிப்பது வரைக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒரு மந்திரத்தை, மரபு தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறது. மந்திரத்தை உச்சரிக்க வேண்டிய முறையில் சரியாக உச்சரித்தால், அது சக்தி வாய்ந்ததாகவும் உடனடியாக பலன் அளிக்கவல்லதாகவும் இருக்கிறது. ஸ்ரீ இராமானுஜரின் குரு, ஒரு பெண்ணுக்கு கெட்ட ஆவி பிடித்திருந்ததை விரட்ட முடியாத பொழுது, ஸ்ரீ இராமானுஜர் தன் மந்திர சக்தியால் அப்பேயை விரட்டினார். யார் ஒருவர் பரிசுத்தராக இருந்து மந்திரத்தைச் சொல்லுகிறாரோ அவரிடமிருந்து மந்திர சக்தி வெளிப்படுகிறது.

மந்திரங்கள் மட்டும் சக்தி வாய்ந்தவை என்று அல்லாமல், சமயச் சடங்குகளிலும் அத்தகைய சக்தி முழுமையாக உள்ளது. ஒவ்வொரு மதமும் அத்தகைய கருத்துக்களை உச்சரிக்கும் சொற்கள் பெற்றுள்ளது.

ஒரு மனிதன், ஆபிசில் தற்கொலை செய்து கொண்டான். அந்த ஆபிஸ் பேய் நடமாட்டமுள்ள இடமாக ஆகிவிட்டது. சடங்குகள் செய்யும் அர்ச்சகர் வரவழைக்கப்பட்டு அங்கே சமய சடங்குகள் செய்த உடன் பேய் விலகிவிட்டது. அதன் பிறகு பேயின் நடமாட்டம் அங்கு இல்லை. "இப்படிப்பட்ட மந்திரங்களால் நமக்கு என்ன பயன்” என்று வேலைக்கு ஆவலுடன் காத்திருக்கும் இளைஞர் ஒருவர் கேட்கலாம். "எனக்கு அந்த மந்திரம், வேலையில் சேருவதற்கு அட்மிஷன் வாங்கித் தருமா?” என்று வேறொருவரும் சேர்ந்து கொண்டு கேட்கலாம்.

தற்கால நவீன இளைஞர்களின் பிரச்சனைகள் தீர்க்கக்கூடிய மந்திரங்கள் இருக்கின்றனவா, அல்லது சில பழைய மந்திரங்கள் அத்தகைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவுமா என்பது அல்ல என்னுடைய முக்கிய கருத்து. மந்திரம் என்பது என்ன? என்னுடைய பிரச்சனைகள் மற்றும் வாழ்வை சந்திப்பதற்கு அந்த சக்தியை நான் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்?

ஆன்மாவை உணர்ந்தவரின் ஜீவனின் ஆழத்திலிருந்து எழும் வார்த்தைகள்தான் மந்திரம். யார் ஒருவர் தன்னுடைய ஆத்மாவை நம்புகிறாரோ அவர் நினைத்ததை பெறுவதற்கு அவர் அந்த மந்திரத்தை உபயோகிக்கலாம். நான் ஆன்மீகத்தைப் பற்றி பேசிக் கொண்டுவருவது எல்லாம் ஒருவருடைய அழைப்புக்கு ஆன்மா பலன் தரக்கூடியது பற்றித்தான். மற்றொருவர் எழுதி வைத்த மந்திரத்தை உபயோகிப்பது மதம் சம்மந்தமானது. தன்னுடைய ஆத்மாவைக் காண்பதே ஆன்மீகம்.

ஒரு இளம்பெண் தியான மையத்திற்கு பலருடன் வந்தாள். அவள் தியானத்தில் தன்னை மறந்ததால் உடன் வந்தவர்கள் தன்னைத் தனியே விட்டுவிட்டு போனதைக் கவனிக்கவில்லை. அந்த இரவு நேரத்தில் வீட்டுக்குப் போக வேண்டுமென்று நினைத்த பொழுது, தான் தனியே விடப்பட்ட நிலையில் பீதி அடைந்தாள். தன் ஆன்மாவை தீவிரமாக அழைத்தாள். தன்னை இழந்த நிலையில், கண்முன் ஒரு ஒளி தோன்றியது. பீதி மறைந்தது. அவள் தெருவில் நடந்து சென்ற பொழுது, பந்து போன்ற உருண்டையான வெள்ளொளியானது தங்கமயமான ஒளியாக நகர்ந்தது. அவள் வீடு போகும்வரை பாதுகாப்பாக உடன் வந்தது. அவள் வீட்டை அடைந்ததும், அந்த ஒளி மறைந்துவிட்டது.

*****

17. ஒரு மரம் எழுப்பிய குரல்

சர்வம் பிரம்மம் என்பது பழைய கொள்கை. அது உண்மையானால் தீமை கூட பிரம்மம். ஏன் தீமை இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் இல்லை. அந்தக் கேள்விக்கு தத்துவரீதியாக விடை காண்பதும் வாழ்வில் அவ்விளக்கத்தை வெற்றிகரமாக வெளிப்படுத்துவதும் வாழ்க்கையின் அடுத்த புதிய கட்டத்திற்குப் போவதற்குச் சமமாகும். நாம் பிரம்மமானால் ஜடப்பொருளும் பிரம்மமாகும். பரம்பொருள் எல்லா ஜடப்பொருள்களிலும் விழிப்புற்ற ஜீவனாக மறைந்துள்ளது என்று உபநிஷதங்கள் கூறுகின்றன. ஜடமான கல்லில் பிரம்மத்தைக் காண்பதற்கு முன்னால் தாவரங்களில் பிரம்மத்தைக் காணலாம்.

ஆன்மீக ஞானம் உடையவர்கள், அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை, உள் இருக்கும் ஆன்மாவால் உணர்வார்கள். சிலர் ஆன்மாவின் குரலையே கேட்கிறார்கள். குழந்தைகள் தெய்வாம்சத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் யாதொரு கட்டுப்பாடின்றி உள்ளத்தில் தோன்றியதை மலர்ச்சியோடு சுதந்திரமாகப் பேசுவதை, ஆன்மீக ஞானம் பெற்றவர்கள், தமக்கு உள்ளே கேட்பதையே குழந்தைகள் பேசுவதாக அறிகிறார்கள்.

நாம் மரத்தை மரமாகக் கருதினால் அது மரமாகும். அதை பிரம்மமாகக் கருதாவிட்டால் அது பிரம்மமாகாது. மரத்தை பிரம்மமாகக் காண முடியுமா? சுத்தம் செய்யப்படாத, வெட்டி எடுக்கப்பட்ட உலோக தாதுப் பொருளை, தங்கமாக எடுப்பதற்கு வழிமுறை உண்டு. அதை பிரித்தெடுத்தல் என்று கூறுகிறோம். ஒவ்வொரு உயிருள்ளவற்றிலும், ஜடத்திலும் பிரம்மத்தைக் காண்பதற்கு வழிமுறை உண்டு. எதையும் பிரம்மமாகக் கருதினால் அதில் நாம் பிரம்மத்தைக் காணலாம். சில சந்தர்ப்பங்களில் பிரம்மம் உள்ளிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

முந்திரி, காட்டில் விளையும் பயிராக இருந்தது. இன்னும் பல இடங்களில் அதே நிலைதான் நீடிக்கிறது. முந்திரி, தரிசு நிலத்தில் பயிரிடப்படுகிறது. அது விவசாய நிலத்தில் பயிரிடப்படுவதில்லை. முந்திரி தோட்டங்களில், பொதுவாக மகசூல் எடுக்கும் காலம் தவிர, மற்ற நாட்களில் அதில் சரியாக கவனம் செலுத்தப்படுவதில்லை. முந்திரிக்கு சிறப்புக் கவனம் செலுத்தினால், அது அதிக லாபம் ஈட்டும் என்று ஒருவர் தன்னுடைய தீவிர ஆராய்ச்சியில் கண்டுபிடித்தார். முந்திரிக்கு உழவு செய்து, எருவிட்டு, நீர்ப்பாய்ச்சுவது விவசாய சரித்திரத்தில் கேள்விப்படாதது. மரங்களுக்குக்கூட இத்தகையச் சிறப்பு கவனம் செலுத்துவது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. மனோதத்துவ ரீதியாகக்கூட "கவனிப்பால் வெற்றி காண்பதைப் போல், வேறு எதிலும் காண முடியாது” என்று உறுதிப்படக் கூறலாம். காட்டில் வேலை செய்பவர்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள். காட்டில் வாழ்க்கை நடத்தும் காட்டுவாசியின் வாழ்வு, அவன் நட்டு வளர்த்த மரங்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும். அவன் மரணத்தை அவன் வாழ்வில் நெருங்கிய தொடர்புடைய சில மரங்கள் அறிவிக்கும்.

1960ல் கேப்பர் குவாரி மலையின் மீது முந்திரித் தோட்டங்கள் அப்படிப்பட்ட சிறப்புக் கவனம் பெற்றன. காட்டில் வேலை செய்தவர் உழவும், நீரும், எருவும், உரமும் இட்டார். ஒரு நாள் அந்தத் தோட்டத்தின் மானேஜர் மரங்களின் நடுவே நடந்து போய்க் கொண்டிருந்த பொழுது, அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிடும் குரல் கேட்டது. அந்தக் குரல் தெளிவாக இருந்தது. எவரும் இல்லாததால் அவர் திடுக்கிட்டார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் மேலே நடக்கலானார். மீண்டும் குரல் கேட்டது. அவர் சற்று நின்று பார்த்து குரல் வந்த திசையை நோக்கி நடந்தார். அங்கு எல்லா மரங்களுக்கும் உரம் இட்டு விட்டு, ஒரு மரத்தை மட்டும் உரமிடாமல் விட்டுவிட்டு போய்விட்டிருந்தார்கள். தன்னை மறந்து விட்டார்கள் என்பதை, மரம் குரலை எழுப்பி அழைத்ததாக உணர்ந்தார். அவர் அந்த மரத்திற்கு உடனடியாக உரம் இட ஏற்பாடு செய்தார்.

வேலையில் கவனம் செலுத்துவது ஆன்மீகம். தாவரங்களுக்கு கவனம் செலுத்துவதால் அவை தெய்வீகத்தை வெளிப்படுத்துகின்றன. தன்னுள் உள்ள பிரம்மத்தைக் கருதினால் பிரம்மம் வெளிப்படுகிறது. பொருள்களின் மீது தீவிர அக்கரை செலுத்தினால் அவை தன்னுள் உள்ள பிரம்மத்தை வெளிப்படுத்துகின்றன.

*****

18. சூட்சுமப் பார்வை

ஆன்மா சூட்சும உலகில் உள்ளது. நாம் ஜடமான உலகில் இருக்கிறோம். நாம் சூட்சும உலகில் உள்ளே சென்று ஆன்மாவை அழைக்கும் பொழுது, ஆன்மா அதன் இடத்திலிருந்து இறங்கி வந்து ஜட உலகில் வெளிப்பட்டு செயல்பட்டு மறைந்து விடுகிறது. நாம் ஐம்புலன்களறிவுகள் பெற்றிருப்பதுபோல், ஆன்மாவுக்கும் பார்வை, கேட்டல், நுகர்தல், போன்ற சூட்சும அறிவு உண்டு.

இரண்டு நபர்கள், வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது, ஒருவர் தன்னுடைய நண்பர் ஒருவர் மதுரையிலிருந்து வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது பஸ்சின் சப்தம் ரோடுக்கு ஒரு மைலுக்கு அப்பால் கேட்டது. அவர்கள் பஸ் நிற்கும் சப்தத்தைக் கேட்டார்கள். அடுத்தவருடைய நண்பர் மதுரையிலிருந்து வந்து, பஸ்சைவிட்டு ரோடில் இறங்கினார் என்று ஒருவர் மற்றவரிடம் சொன்னார். இதைக் கேட்டவர் ஒரு இன்ஜினியர். அவர் இதுபோன்ற விஷயங்களில் நம்பிக்கையில்லாதவர். அவர் அந்த நண்பரின் அசைக்க முடியாத மூட நம்பிக்கையை எள்ளி நகையாடி, வேடிக்கையாக வாய்விட்டு சிரித்தார். அடுத்த 15 நிமிடங்களில் மதுரை நண்பர் வந்துவிட்டார். இந்த விநோதத்தை கண்ட இன்ஜினியர் ஆர்வத்துடன் "நீங்கள் இதை எப்படி அறிந்து இப்பொழுது கூறினீர்கள்” என்று கேட்டார். அதற்கு அவர், அந்த நண்பர் பஸ்சை விட்டு இறங்கியதை சூட்சுமப் பார்வையால் பார்த்தேன் என்றார். இது, குறிப்பாக கிராமத்தில் அறியாதது அல்ல.

பரிட்சைக்கு இரவெல்லாம் கண்விழித்து படித்த மாணவன் களைத்துப் போய்விட்டான். அவன் பரிட்சை ஹாலில் தூங்கிவிடுவான் என்று பயந்து விட்டான். அப்படி அவன் தூங்கவில்லை. ஆனால் அவனுக்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் எழுதும் பொழுது அவன் அகக் கண்முன்னால் புத்தகத்தின் பக்கம் திறந்து தெரிந்தது. அதை புத்தகத்திலிருந்தவாறே எழுதிவிட்டான். சூட்சுமம் வெளியில் தெரியாது. சூட்சுமம் அதிகரிக்கும் அளவிற்கு அந்நிலைக்கு சக்தி கூறுகிறது என்பது ஆன்மீக உண்மை. ஸ்விஸ்நாட்டு (Swiss) உலோகத் தொழிற்கலையியல் நிபுணர் (Metallurgist) அதிக உறுதி வாய்ந்த உலோகங்களைப் பற்றி கூறியது நமக்கு ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறது. "உலோகப் பொருள் எவ்வளவு நுண்ணியதாக உள்ளதோ அவ்வளவுக்கும் அது எளிதில் உடையாதவாறு அதிக கெட்டியானது" என்றார். அவருடைய கருத்துப்படி கனமில்லாதது சூட்சுமம்.

ஒருபெண் தன்னுடைய சிறிய அறையில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தாள். அந்த அறை சிறியதானாலும் மாசற்ற தூய்மையுடையதாக விளங்கிற்று. அவள் அகர்பத்தி வாங்குவதற்குக் கூட சக்தியற்றவளாக ஏழ்மையில் இருந்தாள். ஒரு நண்பர் அந்த பெண்மணியின் வீட்டிற்கு வந்த பொழுது அந்த அறையில் நறுமணம் கமழ்ந்திருந்ததைப் பற்றிச் சொன்னார். இறைவனின் தூய்மையான சாந்நித்யம், அங்கே வத்தியின் சூட்சுமமான வாசனையைக் கொண்டுவந்தது.

மேற்க்கண்ட நிகழ்ச்சிகள் கேள்விப்படாதவையல்ல. அவை கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கும். அது நம் வாழ்வில், வேலையில் என்ன பலன் கொடுக்கும்? சுவாமி விவேகானந்தர், பாரத மாதாவின் குழந்தைகள் அவள் காலடியில் இருந்த படிந்த நிலையில் இருந்ததைப் பார்த்தார். அவருடைய ஆன்மீக சக்தி, அந்த இருளை விலக்கி பரிசுத்தமானதாகவும் ஒளிபொருந்தியதுமாகவும் மாற்றியது. சில நேரங்களில் நாம் எந்த பக்கத்தைப் பார்க்க விரும்புகின்றோமோ அந்தப் பக்கத்தை புத்தகத்தில் திறப்போம். இது சூட்சும சக்திகள் நிலவுகின்றன என்பதைக் காட்டும் அறிகுறி. அங்கு சூட்சும சக்தி இருப்பதானால் அதை வளர்த்துக் கொள்ளலாம். அப்படி இல்லாவிடில் அதை வளர்த்துக்கொள்ள முனையலாம். மனம், ஒருவன் செய்யும் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளவும், அதிலிருந்து பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளவும் பலமுறை கடினமாக முயற்சிக்கிறது. சூட்சும அறிவு தவறுகளையும் உடலுழைப்பையும் தவிர்க்கிறது. எந்த வேலையையும் உள்ளே இருக்கும் ஆன்மாவுக்கு இடையறாது சமர்ப்பணம் செய்யும் பொழுது ஆன்மா பல வழிகளில் செயல்படுவது போல், சூட்சும அறிவின் மூலமாகவும் செயல்படுகிறது. சூட்சும அறிவில் கவனத்தை செலுத்தி அதை வளர்த்துக் கொள்ள முடியும். கலைஞர்கள், இயந்திரத் தொழிலாளர்கள், இசைப்பாடகர்கள், சமையல்காரர்கள், விற்பனையாளர்கள் சூட்சும அறிவில் கவனம் செலுத்தி, அதை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். சூட்சுமம் என்பது ஆன்மீகம். உயர்ந்த குறிப்பிடத்தக்க சூட்சுமப் பார்வையைப் பற்றி நான் அறிந்தது என்னவென்றால், அன்னை பக்தர் ஒருவர், நவம்பர் 17, 1973ல் கண்ட சூட்சுமப் பார்வை பற்றியதாகும். அவர் பாண்டிச்சேரியிலிருந்து 10 மைலுக்கு அப்பாலுள்ள ஒரு ஊரில் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே வந்த பொழுது, வானத்தில் ஒரு பெரிய பந்து போன்ற ஒரு ஒளியைக் கண்டார். அது உடனடியாக உடைந்து லட்சக்கணக்கான துகள்களாகச் சிதறி, ஒவ்வொரு துகளும் ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்திற்குள் சென்று புகுந்தது. அந்த அன்பர், அவர் அக்காட்சியில் கண்ட அதே நேரத்தில், தெய்வீக அன்னை சமாதி அடைந்தார் என்ற செய்தியை அடுத்தநாள் காலையில் ரேடியோவில் கேட்டார். மற்றொரு நிகழ்ச்சியில், பக்தர்களும் மற்றவர்களும் கூட ஸ்ரீரமண மகரிஷி சித்தி அடைந்த பொழுது, வானத்தில் பெரிய ஒளி ஒன்று போய்க் கொண்டிருந்ததைக் கண்டார்கள். ஆந்திராவில்கூட மக்கள் அதைப் பார்த்தார்கள். சூட்சுமப் புலனறிவுகள் ஆன்மீகமாதலால், அவற்றை நம் வாழ்வில் வளம் சேர்க்க, மேன்மேலும் வளர்த்துக் கொள்ளலாம். எல்லா சூட்சுமமும் நிச்சயமாக ஆன்மீகமில்லை. ஆன்மீகமல்லாத உணர்வு மையத்தினுடைய சூட்சுமம் என்பது நன்கு அறியப்பட்டதாகும்.

*****

19. ஆன்மா என்பது முழுமையான உண்மை

மேதாவித்தனம் என்பது ஒரு சதவீதம் உள்ளெழுச்சியும் மீதம் 99 சதவீதம் உழைப்பும் கலந்தது என்று சொல்லப்படுகிறது. இதற்குப் பின்னால் எல்லா நெறிமுறைகளுக்கும் பொருந்தும்படியான ஒரு மறைமுக உண்மை ஒரு நிகழ்ச்சி அல்லது மனிதனுக்கு பின்னாலிருக்கும் அடிப்படை உண்மைதான் அதனுடைய ஆன்மீக சாரமாகும். வாழ்வில் ஆயிரமாயிரம் சக்தியின் வெளிப்பாடுகள் உள்ளன. அவற்றை நம் வாழ்வு சந்திக்க வைக்கிறது. ஒவ்வொரு வினாடியும் உண்மையை அதற்குண்டான பாணியில் வெளிப்படுத்துகிறது. எந்த ஒரு பேரம் பேசுதலிலும் அந்த நேரம் நமக்கு சாதகமாகவுள்ளதை நாம் பயன்படுத்தக் கூடாது. அதே சமயம் நம்மிடமிருக்கும் பிடியையும் விட்டுத்தர முன்வரவேண்டும். அந்த மரபு, வேதகாலத்து ரிஷி சத்தியகாமாவின் வழியாக, நாம் பரம்பரையாகப் பெற்ற மரபாகும். சத்தியகாமா தன் குருவிடத்தில், தன்னுடைய தாய் பல வீடுகளில் பணிப் பெண்ணாக இருந்ததால் தன்னுடைய தகப்பனார் யார் என்று தாய்க்குத் தெரியவில்லை என்று உண்மையைக் கூறினார்.

வெற்றிகரமாக தொழில் நடத்திக் கொண்டிருந்த ஒரு சிறு தொழிலதிபர், ஆன்மா மீது நாட்டங்கொண்டவராய், ஆன்மா மீதான எண்ணத்தில் அடிக்கடி ஆர்வம் மேலிட்டவராய் இருந்தார். ஒருமுறை அவருடைய நிறுவனத்தில் மூன்று பிரிவுகளில் திடீரென்று தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். அவருடைய தொழில் அனுபவத்தில் முதன் முறையாக ஏற்பட்ட வேலை நிறுத்தமானதால், அதிர்ச்சி அடைந்தார். அதிலிருந்து அவர் மீள்வதற்கு சில நாட்கள் பிடித்தன. ஆன்மா பற்றிய நினைவு அவர் மனத்தில் தோன்றியது. ஆனால் மேற்கொண்டு எப்படி செயல்பட வேண்டுமென்று தெரியவில்லை. தன்னைப் போன்ற தொழிலதிபர்களில் ஒருவருடன், இதைப்பற்றி உரையாடிக் கொண்டிருந்தபொழுது அந்த நண்பர் அவரிடம், மையத்திற்கு தந்தி அனுப்பலாம் என்பதை நினைவுபடுத்தினார். தந்தி அனுப்பியதில் அவர் மனதிற்கு அது நிம்மதியைக் கொண்டு வந்தது.

வேலை நிறுத்தம் பிரச்சனையில் தீர்வு காண்பது, பிரதான வேலையாக இருந்தது. இந்த இக்கட்டான நிலையில் அவர் மனதில், ஆன்மாவின் நினைவு வந்தால், அவ்வாறே ஆன்மாவை அழைப்பது தகுதியான வழி என்று எண்ணி, அதன்படி நடக்க மனதில் உறுதி கொண்டார். அப்பொழுது அவருக்கு ஒரு செய்தி வந்தது. வேலை நிறுத்தத்தின் தலைவன் கைக்கடிகாரம் திருடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டான் என்றும், ஸ்தாபனத்தின் தலைவர் அவனுக்கு ஜாமீன் கொடுத்தால் அது போலீஸ் தரப்பில் ஏற்றுக் கொள்ளப்படும் என்று செய்தி வந்தது. ஆபிசில் இருந்த அனைவரும் இதுதான் நல்ல சந்தர்ப்பம், இதை பயன்படுத்தி அவனை, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தலாம் என்று கூறினார்கள். ஸ்தாபனத் தலைவர் அதற்கு மறுத்துவிட்டார். மற்றவருடைய பலவீனத்தை பயன்படுத்தி ஆதாயம் அடையக்கூடாது என்று, சிறையில் இருந்தவனுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் கொடுத்தார். அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும், அவர் ஏதோ மாயத் தோற்றத்தின் அடிப்படையில், மிகவும் விவேகமற்ற முறையில் நடந்து கொண்டார் என்று நினைத்தார்கள்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தலைவன், அடுத்த நாள் தன்னுடன் வேலை பார்க்கும் பத்து தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு வந்தான். அவர்கள் எல்லோரும் வேலையை ராஜினாமா செய்வதாகவும், கம்பெனியை விட்டுப் போய்விடுவதாகவும் கூறினார்கள். அவர்கள், அவர்களுடைய ராஜினாமா கடிதங்களையும் அது சம்மந்தமான எல்லா கடிதங்களையும் தயார் செய்யும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அன்று மாலையில் அவர்கள் எல்லோரும் ராஜினாமா கடிதங்களில் கையெழுத்து போட்டு விட்டார்கள். அத்துடன் வேலை நிறுத்தம் பிரச்சனையும் முடிவுற்றது.

******

20. ஆன்மாவும் சத்தியமும்

ஆன்மாவுக்கு அடிப்படையில் 12 அம்சங்கள் உள்ளன. அவற்றில் சத்தியம் என்பது ஒன்று. மற்ற அம்சங்கள் ஐக்கியம், நன்மை, ஞானம், தெய்வீக அன்பு மற்றும் இதரவைகளாகும். இதில் ஏதாவது ஒரு அம்சம், நம் வாழ்வில் ஆன்மாவுக்கும் மற்றும் அதனுடைய சக்தியைப் பெறுவதற்கும் வழிகோலுகிறது. இதில் சத்தியம் அதிக சக்தி வாய்ந்தது. வேலை நிறுத்தம், சச்சரவுக்குரிய சூழல் போன்றவைகளில் சாதாரணமாக மனித சுபாவம், மற்றவருடைய பலவீனத்தைத் தனக்கு முழுமையாக சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. இப்படி செய்வது நம் வலிமைக்கு உண்டான பலனைத்தருகிறது. சிறு தொழிலதிபர் ஒருவரால் எப்படி, ஆன்மாவை அழைத்து, வேலை நிறுத்தத் தலைவர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது? அந்த தலைவர்கள் முதலாளியைப் போல் தாங்களும் ஆன்மாவை அழைக்கும் முறையைப் பின்பற்றி இருந்திருக்கும் பட்சத்தில், முதலாளியின் போக்கும் அவர்களுக்கு சாதகமான முறையில் மாற்றமடைந்திருக்கும்.

ஒரு தொழிற்சாலையில் 50 பேர்கள் வேலை செய்து கொண்டிருந்த பிரிவை நீக்கிவிட்டார்கள். அந்தப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்த அத்தனை பேரும் ஒருவரைத் தவிர கம்பெனியின் உண்மையான நிலையை உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள். ஒருவர் மட்டும் தன் உள்ளே இருக்கும் ஆன்மாவின் உதவியை நாடினார். அவர் ஒரு தொழில் நுட்ப வல்லுனராக இருந்ததால், அவரைமட்டும் எடுத்துக் கொண்டு, புதியதாக ஏற்படுத்திய பிரிவின் தலைமைப் பதவிக்கு அமர்த்திக் கொண்டார்கள். உள்ளே இருக்கும் ஆன்மா உண்மையானது. அதனுடைய சக்திகள் தடுக்க முடியாதது. மனித சுபாவம் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் தன்மையுடையது. போர்க்களத்தில் நிராயுதபாணியாக நின்ற இராவணனை அன்று, வீடு திரும்பிப் போய் மறுநாள் வரும்படி கூறிய இராமனுடைய செயல் தற்காலிக ஆதாயத்தை பயன்படுத்தாத ஆன்மீக தாராளத்தைக் காட்டுகிறது. அது ஆன்மாவின் சக்தியை வெளிப்படுத்தி சூழ்நிலையை மனநிலை ரீதியாக மாற்றுகிறது.

ஆன்மா விரைந்து செயல்படும் அறிகுறிகள் இவை :

 1. நாம் பிறருடைய கண்ணோட்டத்தில் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில்,
 2. நாம் பிறரால் புண்பட்ட பொழுதும் எதிர் செயல் இன்றி செயல்படும் பொழுது,
 3. நம்முடைய சொந்த நலனைவிட பெரிய லட்சியத்தை கருதும் பொழுது,
 4. நாம் மனத்தின் உள்ளே சென்று அமைதி, அல்லது மௌனம் அல்லது சாந்தியை விழையும் பொழுது,
 5. அறிவீனமான ஒருவர் நமக்குத் தீங்கு இழைத்த பொழுதும் அவர் மீது கருணை காட்டுவது,
 6. நம்முடைய சொந்த நலனுக்காக ஒரு வார்த்தை பொய் சொல்ல மறுப்பது,
 7. தன்னுடைய கட்சியின் ஆதாயத்தைவிட, நம் ஸ்தாபனத்தின் உயர்ந்த நன்மையைக் கருதி ஸ்தாபனத்தின் பக்கம் நிற்பது,
 8. நாம் மனித நிலைப்பாட்டிலிருந்து விலகி உயர்ந்த ஜீவியமடங்கிய இறை இலட்சியத்தை ஆதரிக்கும் நேரங்களில் ஆன்மா விரைந்து செயல்படுவது கண்கூடு. 

ஆன்மாவின் 12 அம்சங்கள். (1) அனந்தம், (2) நித்தியத்துவம், (3) மௌனம், (4) சாந்தி, (5) ஐக்கியம், (6) சத்தியம், (7) ஞானம், (8) சக்தி, (9) தெய்வீக அன்பு (10) அழகு, (11) சந்தோஷம், (12) தூய்மை. இதில் ஏதாவது ஒன்றின் மீது ஓரளவு உயர்ந்த நம்பிக்கை வைத்து, நாம் ஆன்மாவை அழைப்பது, கடவுளுக்கு விடுக்கும் அழைப்பாகும்.

வாழ்வில் அளவு கடந்து இலஞ்சம் பரவியிருந்தாலும் ஆன்மா மீது நம்பிக்கை வைப்பவருக்கு நாலுபேர் போல் நடக்கும் அவசியத்தை ஆன்மா ஒருபோதும் தராது.

 

*****book | by Dr. Radut