Skip to Content

02 . பகுதி - 1

1. நேரம் வந்துவிட்டது

மனிதர்கள், ஒரு தேசத்தை உயர்த்துவதற்கு, அல்லது குடும்பத்தின் நிலையை உயர்த்துவதற்கு, அல்லது நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கம்பெனியை லாபகரமாக மாற்றுவதற்கு நீண்ட நேரம் உழைக்கிறார்கள். அவர்கள் பல முறை வெற்றி காண்கிறார்கள். வெற்றி கிடைக்காதபோது "நேரம் இன்னும் வரவில்லை" என்று சொல்லுகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், மனிதன் நேரத்தை (TIME) வரவழைத்துக் கொள்ள முடியும் என்பது ஆன்மீகத்தின் உண்மை. அப்படிப்பட்ட நேரம் இப்பொழுது உலகத்திற்கு வந்துவிட்டது. இந்தக் கருத்து, மனிதனுக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்வதற்கில்லை. இருப்பினும், அதை விளக்குவது ஒன்றும் கடினமானது அல்ல. நம்மைச் சுற்றிலும், உலக அளவிலும் அநேக நிகழ்ச்சிகள் நிகழ்ந்த வண்ணமாக இருக்கின்றன. அதை சுருக்கமாகச் சொன்னால்,

  1. மனிதன் மனத்தின் மூலம் செயல்படுவதால், நேரம் வரும் வரை காத்திருக்கின்றான்.
  2. ஆனால், ஆன்மா மூலம் செயல்பட்டால், மனிதனால் நேரத்தைக் கொண்டு வர முடியும். 

யாராவது ஒருவர் கேட்கலாம். "சரி நான் அது போன்ற சூழ்நிலையில் உள்ளேன். நான் முழுவதுமாக நம்பிக்கை இழந்தவனாக இருக்கிறேன். இந்த வார்த்தைகள் சிறிது நம்பிக்கையூட்டுவதாக இருக்கின்றன. நீங்கள் இதை புரியும் படியாகக் கூற முடியுமா? என்னுடைய சூழ்நிலையிலிருந்து மீண்டு வெளிவர, நான் நடைமுறையில் என்ன செய்ய வேண்டும் என்று அறிய, உண்மையில் விரும்புகிறேன்”. அதற்கு என்னுடைய உடனடியான பதில் இது தான். "நீங்கள் இந்தக் கருத்தை புரிந்து கொண்டு, அதன் பின்னால் உள்ள சத்தியத்தின் (TRUTH) மீது நம்பிக்கை கொண்டால், உங்களது நம்பிக்கையின்மை, உடனடியாக குறைந்து, தொடர்ந்து முன்னேற்றம் வருவதை காண்பீர்கள்”. இதற்கு வெளிப்படையான உண்மையான உதாரணம் தேவைப்படுகிறது. சாதகமான பலன் கிடைக்கக் கூடிய வாய்ப்பை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம். ஒருவருடைய அனுபவத்தில் உண்மையில் பலன் கிடைக்கப் பெற்றதை ஒரு முறை பார்த்தபின், சிறிய நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். நிகழ்ச்சிகள் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய ஆரம்பிக்கும். பலன் எப்படி ஏற்பட்டது என்ற நடைமுறையைப் பற்றிய விளக்கமானது மிகவும் உதவிகரமாக இருக்கும். அது மனத்தை தெளிவாக்கும். மேலும் மற்றொன்று தேவை. அது, ஒளிமயமான அறிவை இதுவரை கிடைக்காத பலன்களாக மாற்றக் கூடிய தன்னையே செயல்படத் தூண்டுகின்ற உள்ளெழுச்சியாகும் (inspiration).

இன்னும் அதிகமானவை உள்ளன. மனம் தன் சொந்த நிலையிலேயே, மற்ற நிலையைக் காட்டிலும் ஒரு உதாரணம் காண விரும்புகிறது. அப்படி ஒரு (one) கருத்தானது நூற்றுக்கணக்கான நிலைகளில் விவரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் இணையற்றதாக (unique), நடைமுறை அறிவுக்கு (intellect) தெளிவாக விளங்கக் கூடியதாக உள்ளது. மற்றும் எண்ணற்ற கருத்துக்களும் உள்ளன. ஆன்மீகமும் ஐஸ்வரியமும் என்ற கருத்தில் ஆன்மீகம்தான் ஐஸ்வரியம் என்பது கடைசியில் புரிந்து கொள்ளப்படும்.

*****

2. ஆன்மாவிலிருந்து செயல்படுதல்

ஆன்மாவிலிருந்து செயல்படுவதற்கு அறிவிலிருந்தோ உணர்வு அடிப்படையிலான மனோபாவங்களிலிருந்தோ, உடலளவிலான பழக்கங்களிலிருந்தோ செயல்படாமலிருப்பது அவசியம். இதர பகுதிகளில் செயல்படாமல் இருப்பது அவசியம் என்றாலும் ஆன்மாவை செயலில் ஈடுபடுத்துவதற்கு அது போதுமானதாகாது. அதற்கு உள்ளிருந்து வரும் உற்சாகமோ (Inspiration) அல்லது வெளியிலிருந்து வரும் நிர்பந்தமோ தேவைப்படுகிறது. இதில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டுமே இருந்தாலும் ஆன்மா உடனடியாக செயல்படுகிறது. உடனடியாகவும் பலன் கிடைக்கிறது. குறைந்த பட்சமாக விரும்பும் புதிய பலன்கள் சுற்றுப்புற சூழலில் கிடைக்க ஆரம்பிக்கின்றன.

டாம் கூத் (Gooth) என்பவர் ஒரு அமெரிக்கர். அவர் உலகத்தை சுற்றி பயணம் செய்பவர். அவர் மூன்றாவது உலக நாடுகளிலுள்ள ஏழைகளுக்காக உள்ள பொருளாதார திட்டங்களில் அக்கறை கொண்டவர். அவர் தொழில் நுட்பம் கண்டு பிடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். பரவலாக ஊடுருவியுள்ள ஏழ்மையை போக்குவதற்கு அவருடைய தொழில் நுட்பம் எல்லோரையும் சென்ற அடைய வேண்டுமென்பது அவரது நோக்கம். அவர் சைக்கிள் ரிக்ஷாவில் மோட்டாரை பொறுத்துவதில் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அதில் அதிக நேரம் கொல்கத்தாவில் செலவழித்தார். ஆனால் இது மட்டும் அவருடைய முக்கியமான குறிக்கோள் அல்ல. அவர் சென்ற நாடுகளில் ஆன்மீகத்திற்கு பேர்போன எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்தார். பலவித யோகங்களைப் பற்றி தெரிந்து கொண்டார்.

ஒரு முறை மெக்சிக்கோவில் வோல்க்ஸ் வேகன் (VOLKS WAGEN) ஓட்டிக்கொண்டு பிரயாணம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் பிற்பகலில் ஒரு ஓட்டலில் மதிய உணவுக்குப் பிறகு ஒரு மணி நேரங்கழித்து, அவருடைய பாஸ்போர்ட் மற்றும் பணம் வைத்திருக்கும் பர்ஸ் அடங்கிய தோள்பை இருக்க வேண்டிய இடத்தில் இல்லாததைக் கண்டார். வண்டியை நிறுத்தி தேடிப்பார்த்தார். ஓட்டலுக்கு திரும்பிச் சென்று, மீண்டும் திரும்பி வந்து அவர் எங்கெல்லாம் ஓய்வு எடுத்து இருந்தாரோ அந்த இடங்களில் எல்லாம் தேடிப் பார்த்தார். ஆனால் பலன் இல்லை. அது உண்மையில் எல்லா நம்பிக்கையும் இழந்த நேரம். அவருக்கிருந்த அறிவுத்திறனெல்லாம் தீர்ந்து விட்டிருந்தன. அத்தகைய சூழ்நிலைக்குரிய, தான் கேள்விப்பட்ட அத்தனை வழிமுறைகளையும் நினைவுபடுத்திப்பார்த்தார். ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை. திடீரென்று அவருக்கு அன்னை சொன்னது மனதில் பட்டது. அது "கடுமையான நம்பிக்கையற்ற நேரம்தான் என்னை அழைப்பதற்கு உகந்த நேரம்''. அந்த நினைவு வந்ததும், அவர் புல்தரையில் பத்மாசனம் போட்டு உட்கார்ந்து அன்னையை அழைத்தார். அவருடைய இதயத்திலிருந்த பாரம் குறைந்து விட்டது. மீண்டும் பிரயாணத்தைத் தொடங்க நினைத்தார். வண்டியை ஓட்ட ஆரம்பிக்கும் முன் அருகிலிருந்த ஒரு புதரின் மேல் அவருடைய பை இருப்பதைக் கண்டார். மனத்தின் உள்ளிருந்து கேள்விகள் எழுப்பப்படவில்லை. மாறாக உண்மையான நன்றி உணர்ச்சி ததும்பியது. அவர் உடல் புல்லரித்தது. ஆன்மா எப்பொழுதும் பொய்ப்பதில்லை. அதற்கு தவறோ அல்லது தோல்வியோ தெரியாது. அது யாரையும் தெரிந்து வைத்திருக்கவில்லை. இருப்பினும், அது எப்படி வருகிறது என்பது குறித்து ஒரு விளக்கம் வரவேற்கப்படுகிறது.

*****

3. கிரைஸ்லர் (Chrysler)

1979ல் அமெரிக்காவில் மோட்டார் கார் வாகனங்கள் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் கிரைஸ்லர் (Chrysler) கம்பெனி இருந்தது. இக்கம்பெனி 1700 மில்லியன் டாலர் கடன் வாங்கியிருந்தது. அச்சமயம் தொழில்ரீதியாக அதையொரு சாதனை என்று சொல்லலாம். 400 வங்கிகளில் கடன் பெற்றிருந்தது. கம்பெனியில் சரியான நிர்வாகத் திறமை இல்லாததால் வெகுவிரைவில் கம்பெனி சரியத் தொடங்கியது. நஷ்டத்தில் போய்க் கொண்டிருந்தது. பாங்க்கில் நாளடைவில் கையிருப்புத் தொகை குறைந்து, 1 மில்லியன் டாலர் பணம் கையிருப்பாக இருந்தது. அன்றாட நிர்வாகச் செலவு மட்டும் 80 மில்லியன் டாலர். மதிப்பீடு செய்பவர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள், பத்திரிகைகள், ஸ்டாக் மார்க்கெட்டு எல்லோரும் ஏகமனதாக கம்பெனி வெகுவிரைவில் வீழ்ச்சி அடைந்து விடும் என்றும், கம்பெனியை வீழ்ச்சியிலிருந்து மீட்க முடியாதென்றும் தெரிவித்தார்கள். ஒருத்தர் கூட சாதகமான நம்பிக்கை தெரிவிக்கவில்லை. அந்த நேரத்தில் அயகோக்கா (IACOCCA) என்பவர் மாதச் சம்பளம் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டாலருக்கு ஒப்புக் கொண்டு சேர்மன் (Chairman) பதவியை ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்ற நாளன்றே கம்பெனியின் மோசமான நிலையை உணர்ந்தார். இது முன்கூட்டியே தெரிந்திருந்தால் காண்ட்ராக்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க மாட்டேன் என்றார்.

தொழிலாளர்கள் வேலை செய்யவில்லை. சீப்ஃ பைனான்ஸ் ஆபீஸரால் (C.F.O) நிதி நிலையைப் பற்றிப் பேச முடியவில்லை. வேலை நிறுத்தம் பெருகியது. கம்பெனிக்குள்ளே சூதாட்டம், கொலை, பாலியல் தொழில் போன்ற வேலைகள் முறைகேடாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இருப்பினும் சேர்மன் (Chairman) மனம் தளரவில்லை. சவாலை ஏற்றுக் கொண்டார். கம்பெனி நல்ல நிலைக்கு திரும்பும் வரையில் ஆண்டுதோறும் 2 டாலர் மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொள்ளப் போவதாக அறிவித்தார். பாங்க்குகளை பொறுத்துக் கொள்ளும்படிக் கேட்டுக் கொண்டார். கம்பெனி நிர்வாகத்திற்குக் கீழ்ப்படியாதத் தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைத்தார். 35 வைஸ் பிரசிடெண்டுகளில் 34 பேரை டிஸ்மிஸ் செய்தார். புதிய மாடல் கார் (K-Car) செய்வதற்கு திட்டம் வகுத்தார். ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் வழக்கத்தை மாற்றி பணம் திரும்பப்பெறும் புதிய திட்டத்தைப் புகுத்தி, உத்திரவாதம் கொடுத்தார். அவரே T.V மூலம் கார்களை விற்பனை செய்தார். கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் மூன்று வருடங்களில் கடன்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் சம்பாதித்தார். பத்து வருட அரசாங்க உத்திரவாதத்தை மூன்றே வருடங்களில் முடிவிற்கு கொண்டு வந்தார். சம்பளம், போனஸ், ஸ்டாக்ஸ் முதலானவைகள் மூலமாக சொந்த வருமானமாக 20 மில்லியன் டாலர் எடுத்துச் சென்றார்.

பொறுப்புடன் கடமை உணர்ச்சியுடன், நம்பிக்கையிழந்த இக்கட்டான நிலைமையை ஏற்றுக் கொள்வது ஆன்மீகம்.

தைரியம், தியாகம், உறுதி, எல்லாம் ஆன்மீகத்திற்கு இணையானதே. ஸ்தாபனத்தின் ஆன்மா அங்குள்ளவர்கள் எழுப்பும் அழைப்பை கவனத்துடன் கேட்கிறது. சில வருடங்களுக்கு முன்னால் எது முடியாது என்று தோன்றியதோ அதை ஆன்மா பூர்த்தி செய்கிறது. அயகோக்கா (IACOCCA)பிஸிக்கலாக ஆன்மாவை எழுப்பினார். டாம் கூத் (TOM GOOTH)ஆன்மாவை அழைத்து பலன் கண்டார். 

  1. பழைய முறைகளை பின்பற்றக் கூடாது. நம்பவும் கூடாது.
  2. மனதுக்கு எட்டாததும் கண்ணுக்குப் புலப்படாததுமான ஆன்மா மீது முழு நம்பிக்கை தேவை.
  3. இதுவரையிலும் அடையாத ஒரு மனசாந்தியை அடைவது ஆன்மாவை அழைப்பதற்கு முக்கியமான சாதனமாகும். 

மனிதன் களங்கமற்ற பரிசுத்தமான மனதுடன் ஆன்மீகத்தில் நம்பிக்கை வைத்தால், ஆனந்தமான உற்சாகத்துடன் ஆன்மாவை அழைக்க முடியும். அது அயகோக்கா (IACOCCA) பட்ட இரண்டு கஷ்டங்கள் (1) கடினமாக உழைத்தது, (2) தன் சம்பளத்தையே குறைத்துக் கொண்டது), போலல்லாமல், ஆன்மாவால் பலன் அடையலாம்.

வாழ்வு என்பது வெற்றியும் தோல்வியும் கொண்டது. உறுதியான வெற்றி ஆன்மாவின் தனிப்பட்ட உரிமை. அது உண்மை, நம்பிக்கை என்று பொருள்படும்.

*****

4. மனித முயற்சி முடியுமிடமே இறைவன் செயல்படத் தொடங்கும் இடம்

பாகம் - I

ஆத்மா தன் பிரச்சனைகளை மறந்தவுடன் அவை மறைந்து போவதைக் கண்டு அது எத்தகைய விசித்திரமானது என்று ஆச்சர்யப்படுகிறது. கடவுள் அந்த கபடமற்ற ஆத்மாவைப் பார்த்து சிரித்தார் என்று பகவான் ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய நீதி உரைகள் சுருக்கத்தில் (Aphorisms) கூறுகிறார். ஆன்மீக உண்மை என்னவென்றால் மனிதன் தன் துன்பங்களையே நினைத்துக் கொண்டிருப்பதால் அவை வலுப்பெறுகின்றன. இந்த உண்மை நமது அன்றாட வாழ்க்கைக்கு ஏதேனும் ஒரு வகையில் உபயோகமுள்ளதாக இருக்குமா? அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் அதிகமாக இல்லாவிட்டாலும் அவை வழக்கத்தில் இல்லாதது இல்லை. டாக்டர் கைவிட்ட பொழுதும் மனிதன் தீராத வியாதியிலிருந்து குணம் அடைகிறான். அந்த சமயத்தில் அது வியப்பைத் தருகிறது. ஆனால் வியப்பை வெளிப்படுத்துவதைத் தாண்டி நாம் அதை புரிந்து கொள்ள முன்வருவதில்லை. அது எப்படி நடந்தது என்று கண்டறிய மனம் தீவிர முயற்சி எடுப்பதில்லை. நமக்கு நமது மனமே முடிவானது. நாம் நம்முள் இருக்கும் ஆன்மாவைக் கருதுவது இல்லை.

ஒரு வக்கீல் தான் புதியதாக வாங்கிய காரை கிருஷ்ணா நதிக்கரை ஓரம் ஓட்டிக் கொண்டு போனார். எதிர்பாராதவிதமாக கார் தவறி ஆற்று வெள்ளத்தில் விழுந்துவிட்டது. எப்படியோ தப்பித்து காரின் கதவைத் திறந்து நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தார். மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். ஓரிரண்டு நாட்களில் அவர் தன் சுய உணர்வைப் பெற்றார்.

அவரைச் சுற்றியிருந்தவர்கள் யாவரும் அவரது தைரியத்தைப் பாராட்டினார்கள். அவர் எப்படி அந்தத் துணிச்சலான காரியத்தைச் செய்தார் என்று அறிய மிகுந்த ஆவலாக இருந்தார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் சொன்ன பதிலானது, "எனக்கு ஒன்றும் தெரியாது. ஆற்றில் விழுந்ததுதான் தெரியும். இப்பொழுது ஆஸ்பத்திரியில் நான் இங்கு இருப்பதை அறிகிறேன்" என்றார். என்ன நடந்தது எனில், உடலுக்கென்றிருக்கும் ஆன்மா மனம் தன்னை காப்பாற்றாது என்று விழித்துக் கொள்கிறது. ஒரு அபார (Herculean) சக்தியை விடுவித்து அதிமானிட அறிவை வெளிப்படுத்தி உடல் தன்னைக் காப்பாற்றிக்கொள்கிறது.

மனிதன் நம்பிக்கை இழந்த நேரத்தில் வேறு வழி இல்லை என்ற எல்லைக்கு தள்ளப்பட்ட நிலையில், இறைவன் செயலில் இறங்கிக் காப்பாற்றுகிறார் என்பதற்கு இதுவொரு வெளிப்பாடு. நம்முடைய தீர்க்க முடியாத பிரச்சனைகள் உள்ளே இருக்கும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்க்கப்படுவதற்கு இது போன்று பல வழிமுறைகளை நாம் உருவாக்கிக் கொள்ளலாம். தீர்க்க முடியாத பிரச்சனைகளை தானே தீர்த்துக் கொள்ள முடியும் என்று மனிதன் தான் நம்புவதை கைவிட்டுவிட வேண்டும் என்பது இந்த அடிப்படை கொள்கையின் வழிமுறையாகும்.

*****

5. மனித முயற்சி முடியுமிடமே இறைவன் செயல்படத் தொடங்கும் இடம்

பாகம் - II

ஒரு அரசாங்க உத்தியோகஸ்தர் பாண்டிச்சேரிக்கு ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ந் தேதி தவறாமல் வந்து கொண்டிருந்தார். அவர் மிகுந்த பக்தியுடன் அங்கு நடைபெறும் தெய்வீக வழிபாட்டில் கலந்து கொண்டுவந்தார். பிறந்த நாட்களில் தெய்வ அனுக்கிரகம் பெற, ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் அப்படிப்பட்ட வழிபாட்டில் கலந்து கொள்வதை சிறப்பாகக் கருதுகிறார்கள். ஆன்மா, பிறந்த நாளன்று அடுத்த உயர்நிலையில் புதுப்பிறவி எடுக்கிறது என்று நம்பப்படுகிறது. 30 வருடங்களுக்கு முன்னால் இன்று கிடைக்கும் வசதிகள் போல், பஸ் வசதிகள் அன்று இல்லை. அதிகாரி பிப்ரவரி 21ந் தேதி பாண்டிச்சேரிக்கு வருவதற்கு ஆபிசில் 3 நாட்கள் லீவு எடுக்க வேண்டும். அவர் ஒரு கெஜட் பதிவு பெற்ற அதிகாரியாக இருந்த போதிலும் அவருடைய மேலதிகாரி ஆபிசில் இருந்ததால் லீவு எடுப்பதில் சிக்கல் இருந்தது. அவர் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ந் தேதி பாண்டிச்சேரிக்கு பக்தியுடன் வந்து கொண்டிருந்தார்.

அவருடைய பிறந்த நாள் பிப்ரவரி 19ந் தேதி. அவர் பாண்டிச்சேரியில் 19ந் தேதி இருக்க வேண்டுமானால், பிப்ரவரி 21 விசேஷ நாளன்றும் சேர்த்து தங்குவதற்கு குறைந்தது 5 நாட்கள் லீவு எடுக்க வேண்டும். இவரது நிலைமையை அறியாத ஒருவர், அவரிடம் பிறந்த நாளன்று பாண்டிச்சேரிக்கு போவது குறித்து நினைவுபடுத்தினார். அதிகாரி தான் போக முடியாத சூழ்நிலையை வைத்து எப்படி போக முடியும் என்று சொன்னார்.

மார்ச் மாத இறுதியில் அதிகாரிக்கு நடக்கக் கூடாதது ஒன்று நடந்து விட்டது. அவர் ஒரு நிரந்தர கெஜட் பதிவு பெற்ற அதிகாரியாக இருந்தும், அவரை திடீரென்று வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள். அது அந்த டிபார்ட்மெண்டில் இதுவரையில் கேள்விப்பட்டிராத நடந்திராத ஒரு சம்பவம். அதன் பிறகு 110 நாட்கள் கழித்து அவர் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். வேலையில் இல்லாத நாட்களில், அவர் அடுத்த பிறந்த நாளன்று பாண்டிச்சேரிக்கு போக வேண்டுமென்று தீர்மானித்தார். அவருக்கிருந்த அறிவு திறனெல்லாம் தீர்ந்துவிட்டிருந்தன. அதன் பிறகு அவர் பாண்டிச்சேரிக்கு வந்தார். அங்கு முன்பு இவரிடம் பிறந்த நாளன்று பாண்டிச்சேரிக்கு போவதைப் பற்றி நினைவுப்படுத்திய அந்த நபரைச் சந்தித்தார். அந்த நபர் சொன்னார், "உங்கள் நிலைமையில் பாண்டிச்சேரிக்கு பிப்ரவரி 19, 21 தேதிகளில் வரமுடியாது என்பதை நான் நன்கு அறிவேன். நாம் மனத்தால் செயல்பட்டால் முடியாதது உண்மைதான். ஆனால் ஆன்மாவுக்கு கஷ்டமில்லை. மனித முயற்சி முடியுமிடந்தான் இறைவன் செயல்படத் தொடங்குமிடமென்பது உங்களுக்குத் தெரியாதா?'' என்று கேட்டார். அவர் சொன்ன கருத்துக்களை அதிகாரி நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டார். ஒவ்வொரு முறையும் மனம் கேள்வியை எழுப்பிய வண்ணமாக இருந்தது. அந்த நினைவு வரும் பொழுதெல்லாம் அதை ஒதுக்கிவிட்டு மௌனத்தைக் கடைப்பிடித்தார். மனம் அடங்கி ஆழ்ந்த அமைதியில் லயிப்பதை உணர்ந்தார். அந்த வருடம் பிப்ரவரியில் எலக்க்ஷன் வந்தது. அவருடைய ஆபீசில் இருந்த அத்தனை கெஜட் பதிவுபெற்ற அதிகாரிகளையும் இவரைத்தவிர எலக்க்ஷன் பணியில் போட்டுவிட்டார்கள். இவரை மட்டும் அதிசயிக்கத் தக்க வகையில் எலக்க்ஷன் பணியில் போடாமல் விட்டுவிட்டார்கள். அன்றைய தினத்தை அரசாங்கம் விடுமுறை நாளாக அறிவித்தது. இந்த அதிகாரி தன்னுடைய பிறந்த நாளன்று பாண்டிச்சேரிக்கு வந்து பிப்ரவரி 21ந் தேதி வரை அங்கேயே தங்கினார். அந்த நாளிலிருந்து ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 19, 21 தேதிகளில் பாண்டிச்சேரிக்கு வந்து தியான வழிபாட்டில் கலந்து கொண்டார்.

*****

6. மனித முயற்சி முடியுமிடமே இறைவன் செயல்படத் தொடங்குமிடம்

பாகம் - III

மனித முயற்சி தீருமிடத்தில் இறைவன் செயல்படத் தொடங்குகிறான் என்பதை விளக்கும் நிகழ்ச்சிகள் வாழ்க்கையில் அநேகமுள்ளன. நடப்பதை நாமிந்த கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள ஆன்மீக சக்தியை பயன்படுத்துவது ஒரு முறை என்று நாம் கருதுவதில்லை. ஒரு பிரச்சனை ஏற்பட்டால் நம்முடைய முயற்சியால் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நம் மனம் எண்ணுவதை நம்புகிறோம். அதிலிருந்து மீள்வதற்கு நாம் எடுக்கும் முயற்சி நல்லதுதான். ஆனால் நமது முயற்சியால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்ற எண்ணத்தை விலக்கிக் கொள்வது மிகவும் நல்லது. இத்திசையில் நம் சிந்தனையை செலுத்துவதில்லை என்பதோடின்றி, இதுவொரு சரியான அணுகுமுறை என்பதை நாம் ஏற்பதுமில்லை.

சாதாரணமாக நாம் நம் வேலையில் நம்மால் முடிந்த அளவிற்கு முயற்சி எடுக்கிறோம். அதில் வெற்றி பெற்றால் நம்மை நாமே பாராட்டிக் கொள்கின்றோம். நம் திறமை மீதுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திக் கொள்கிறோம். நமக்கு தோல்வி ஏற்படும் பொழுது நம்முடைய முயற்சிகளை மேற்கொண்டு தொடர வழி ஒன்றும் தெரியாமல் திகைக்கிறோம். அப்படிப்பட்ட நிலைமைகள் ஏற்படுவது கண்கூடு. நாம் நம்முடைய பிரயத்தனத்தைக் கைவிட்ட பின்பு நமது முயற்சிகளில் தோல்வி கண்ட பொழுதும் சிறிது காலத்திற்குள் தானாகவே வெற்றி கிடைத்த செய்தி வருகிறது. பொதுவாக இதுபோன்ற செய்திகள் வருவது அபூர்வம்; என்றாலும் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்பது உண்மை. 

  1. நம்முடைய சாதனை நம்முடைய முயற்சியினால் நடக்கவில்லை என்றும் அது நம் முயற்சியை மீறி நடந்துள்ளது என்பதையும் உணர்கிறோம்.
  2. நமக்குத் தெரியாத மற்றும் நாம் நினைத்துப் பார்க்காத வழியில் பூர்த்தியாவதை உணர்கிறோம்.
  3. பொதுவாக இப்படி பூர்த்தியாகின்றவைகள் அதிகப் பலனைக் கொண்டு வருகின்றன. 

ஒருவர் தனக்குத் தெரிந்த வழியில் செயல்படுவது நல்லது, மற்றும் சரியானதும் கூட. வேலையை முழுமையாகக் கற்றுக் கொள்ளும் வரையிலும்தான் இது உண்மையாகும். அதன் பிறகு வேலையை அதன் முறையில் தானாக நடைபெறுமாறு எந்தவிதமான குறுக்கீடுமில்லாமல் விட்டுவிட வேண்டும். அப்பொழுதுதான் வேலை தன்னை முழுமையாகப் பூர்த்தி செய்து கொள்ளும். மனத்தின் தலையீடு ஒரு தடையாக அமையும். தன்னால் இவ்வேலை முடியாதென்று விட்டுவிடும் பொழுது மனிதன் மேற்கண்ட முறையை எதிராக பின்பற்றுகிறான் என்றாகும்.

ஒருவர் ஒரு பெரிய பிராஜெக்ட்டை எடுத்து நடத்தி எட்டு வருடங்கள் உழைத்தபின் கிடைத்த வெற்றியைக் கண்டு சந்தோஷப்பட்டார். அந்த பிராஜெக்ட் மிகப் பெரியதாக இருந்ததால் அதுவே அவருடைய கடைசி முயற்சி என்று எண்ணினார். இச்சமயத்தில்தான் நம் முயற்சி முடியுமிடத்தில் இறைவன் செயல்படத் தொடங்குவான் என்ற உண்மையை அறிந்தார். எதிர்பாராத வகையில், அவர் நடத்தி வந்த பிராஜெக்ட்டைப் போல் இரண்டு மடங்கு பெரிய பிராஜெக்ட் ஒன்று தானாக வந்தது. இப்பொழுது அவர் புது முயற்சியே எடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் அந்த பிராஜெக்ட் அதன் வேலையைத் தானாகவே எழுபது நாட்களில் அதனுடைய வேகத்தில் பூர்த்தி செய்து கொண்டது. மனிதனுடைய முயற்சி இல்லாமலேயே வேலை தானாகவே தன்னை பூர்த்தி செய்து கொள்கிறது என்பதை, இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

"நிறுவனத்திற்கு ஜீவனுண்டு”.

*****

7. இந்தியாவின் ஆன்மீக சூழல் - மேதை

நல்ல குடும்பம் தலைமுறை தலைமுறையாக புண்ணியம் செய்து வந்ததால் புத்தர், இயேசு, கிருஷ்ணர் போன்ற பெரிய ஆத்மாக்கள் வரை இந்த பூமியில் அவதரித்தார்கள் என்று கருதப்படுகிறது. நம் இந்திய நாடு செய்த தவப்பயனால் காந்தி, நேரு, தாகூர் போன்றவர்கள் கூட இப்படிப் புண்ணியம் செய்த குடும்பத்தில் தோன்றினார்கள் என்பது உண்மை. மற்றுமொரு உண்மை என்னவென்றால், பெரிய அவதாரங்கள் மற்றும் அதற்கடுத்த விபூதிகள் என்று அழைக்கப்படுபவர்கள் பிறந்த குடும்பங்கள் பெரும்பாலும் மறக்கப்பட்டு மறைந்துவிட்டன. ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென்ற தனிப்பட்ட கலாச்சாரமும் பாரம்பரியமும் உண்டு. அப்பாரம்பரியம் அந்நாட்டு மண்ணில்கூட பரவியிருக்கும். ஒரு அமெரிக்கர் இந்தியாவிற்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த பொழுது விமானம் இந்திய விண்வெளியில் நுழைவதாக விமானி அறிவித்த நேரம் தனக்குள் ஒரு எல்லையற்ற அமைதி நுழைவதைக் கண்டார்.

"இந்தியா உலகின் குருவாகும் ஆத்மீகப் பெருமையுள்ள புண்ணிய பூமி”

ஸ்ரீ அரவிந்தரின் தகப்பனார் தன் குழந்தைகள் ஆங்கிலேயர்கள் போல் வளர வேண்டுமென எண்ணி, டார்ஜிலிங் நகரிலுள்ள ஓர் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்தார். ஸ்ரீ அரவிந்தர் அப்பள்ளியில் சேர்ந்தவுடன் ஒரு கரிய இருள் தன்னுள் புகுந்து நிலைத்து விட்டதை உணர்ந்தார். பிறகு ஸ்ரீ அரவிந்தரை இங்கிலாந்திற்குக் கொண்டுபோய் பள்ளியில் அவருடைய தகப்பனார் சேர்த்தார். கேம்பிரிட்ஜ் சர்வகலா சாலையில் படிப்பை முடித்து தன்னுடைய 21வது வயதில் ஸ்ரீ அரவிந்தர் இந்தியா திரும்பினார். அவர் இந்தியாவுக்குத் திரும்பி தாய் நாட்டின் மண்ணில் காலடி வைத்தவுடன், ஒரு பேரமைதி படர்ந்து வந்து தன்னுள் புகுந்து ஜீவனின் ஆழத்தைத் தொட்டு, இறுதிக் காலம் வரை இப்படி நீடித்து நிலைத்து விட்டதை உணர்ந்தார்.

ஐரோப்பியர் மனத்தினால் செயல்படக்கூடியவர்கள். அங்கே எண்ணற்ற விஞ்ஞானிகள் தோன்றினார்கள். ஒவ்வொரு அமெரிக்கரும் வேலையில் ஈடுபட்டிருக்கும் பொழுது இயந்திர சாதனத்தை எப்படி திறம்பட இயங்க வைக்கலாம் என்று சிந்திக்கிறார். அமெரிக்கர்கள் காரியங்களை முறைப்படுத்தி திறமையாகச் செயலாற்றும் திறனுள்ளவர்கள். அத்தகைய செயலாற்றும் திறமை பெற்றுள்ளதால் எடிசன் (Edison) போர்ட் (Ford), போன்றவர்கள் அங்கே தோன்றினார்கள். இந்தியாவின் ஆன்மீக சூழல் ரிஷிகளை தோற்றுவித்தது. அமெரிக்காவின் அறிவு ரீதியான சூழல் ரிஷிகளை தோற்றுவிக்கவில்லை. அம்மாதிரியே இந்தியாவும் ஐரோப்பாவைப்போல் விஞ்ஞானிகளை தோற்றுவிக்கவில்லை. ஆன்மாவிற்குள் அறிவு அடக்கம் என்பதால் இங்கே சீனிவாச ராமானுஜம் போன்ற மேதை தோன்றுகிறார். இப்பொழுது கணித வல்லுனர்கள் எல்லோரும் சீனிவாச ராமானுஜத்தை 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த கணித மேதை என்று போற்றுகிறார்கள்.

நான் இரண்டு கேள்விகளை எழுப்புகிறேன்.

  1. இங்குள்ள ஆன்மீக சூழலை செல்வமயமான சூழலாக மாற்றக்கூடிய மனோபாவத்தை நாம் வளர்த்துக் கொள்ள முடியுமா?
  2. இந்நாட்டு ஆன்மீக சூழலில் மேதைகள் மறைந்துள்ளார்களா? விழிப்புணர்வு வந்தால் அவர்கள் தலையெடுக்க உதவுமா? 

******

8. இந்தியாவின் ஆன்மீக சூழல் - சக்தி

ஒரு ஏழை ஆப்பிரிக்கரைப் பற்றி ஒரு கதை உண்டு. 19ம் நூற்றாண்டில் தங்கம் பெருமளவில் பூமியில் கிடைக்கிறதென்று கேள்விப்பட்டு அதிக ஆவலுடன் தன்னுடைய நிலத்தையும் குடியிருக்கும் வீட்டையும் விற்றுவிட்டு தென் அமெரிக்காவுக்குப் போய் குடியேறிவிட்டார். இந்த நிலத்தை வாங்கியவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அவர் வாங்கிய நிலத்தில் பூமிக்குக் கீழ் வைரச் சுரங்கம் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். இந்தியா ஆன்மீகப் பொக்கிஷம் உடையது. ரிஷிகள் கடவுளை சச்சிதானந்தம் என்றுக் கண்டார்கள். சென்ற நூற்றாண்டில், விஞ்ஞானிகள் எனர்ஜிதான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்று கண்டுபிடித்ததை ரிஷிகள் ஆதியில் உபநிஷத்துக் காலத்திலேயே கண்டுபிடித்து விட்டார்கள். அதற்கு மேலும் தேடுதலில் ஆன்மாவின் உள்ளே சென்று சக்தி சத் புருஷனிடமிருந்து வெளிவருகிறதென்று கண்டார்கள். அதுவும் முடிவானதல்ல. முடிவற்ற அனந்தம் பிரம்மம் என்றும், அது காலத்தைக் கடந்தது என்றும், சத் புருஷன் அதிலிருந்து வெளிப்படுகிறான் என்றும் கண்டுகொண்டார்கள். அப்படியானால், இந்தியா ஏன் ஏழ்மையில், அதன் வாழ்வு வெறுமையுடன் சாரமற்றதாக இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இயற்கை இறைவனின் ஆட்சியை புவிக்குக் கொண்டு வருவதற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்கட்டமாக வாழ்வின் பல்வேறு அம்சங்களை உலகின் பல்வேறு பாகங்களில் பல்வேறு சமயங்களில் வளர்த்துக் கொண்டு வந்துள்ளது.

இந்தியா அடிமை நாடாக இருந்த பொழுது, அதன் ஆன்மாவும் மனமும் உறக்க நிலையில் செயலற்றுப்போய் இருந்தன. இப்பொழுது ஒரு சுதந்திரமான நாடாக இருந்த போதிலும், சுதந்திரமாக சிந்திக்கும் திறனை இழந்துவிட்டது. அதன் வாழ்வு தாழ்ந்த நிலையில் இருள் சூழ்ந்ததாக ஏழ்மையுடன் இருந்து வருகிறது. பாரதமாதாவை அன்னிய ஆட்சியின் பிடியிலிருந்து தளையை அறுத்தெறிந்து அடிமைத் தனத்திலிருந்து மீட்டதற்கு, பட்ட கஷ்டங்கள் எவ்வளவு முக்கியமாக இருந்ததுவோ, அதே போன்று இப்பொழுதும் இந்தியாவை ஏழ்மையிலிருந்து மீட்பதற்கு உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியமாகும். இந்திய நாடு ஒரு காலத்தில் பெருமையுடன் தலை நிமிர்ந்து நின்றபோது செல்வம் மிகுந்த நாடாகவும், மக்கள் தெய்வ பக்தி, அன்பு, நேர்மை, உண்மை மிக்கவர்களாகவும் இருந்தார்கள்.

மேற்கத்திய நாடு மனத்தின் திறனால் ஐஸ்வரியம் அடைந்தது. அங்கு மனிதன் உழைப்பாலும், விஞ்ஞானத்தாலும், படிப்பாலும், முயற்சியாலும், முன்னுக்கு வருகிறான். உண்மையில் மனத்தின் திறனைவிட ஆத்மாவின் திறன் அளவு கடந்ததாக இருக்க வேண்டும். இது உண்மையானால் நாம் எப்படி இதை சாதிக்கலாம்? இவ்வியக்கத்திற்கு யார் தலைமை தாங்குவது? அது அரசாங்கமா, அல்லது ஸ்தாபனமா, அல்லது தனிப்பட்ட மனிதனா? ஆன்மீக சக்தியை பயன்படுத்தும் பழக்கம் இந்தியாவில் பரவலாக உண்டு. ஆனால் இந்நாட்டு மக்கள் தமக்குள் இருக்கும் சக்தியை அறியாதவர்களாக உள்ளார்கள். இந்திய மக்களிடமுள்ள இயற்கையான மனோசக்தியை வெளியில் கொண்டுவர, தேசம் அவர்களை விழிப்புறச் செய்ய வேண்டும். ஸ்தாபனங்களின் மூலமாக இத்தகைய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மனித வாழ்வின் சாரத்தில் எங்கு அத்தகைய சக்திகள் எட்டிப் பார்க்கின்றனவோ அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை காண நாம் விழைவோமாக.

*****

9. இந்தியாவின் ஆன்மீக சூழல் - பிரார்த்தனை

நாம் அன்றாடம் பிரார்த்தனை செய்வது வழக்கம். பக்தியும், நம்பிக்கையும் நமது வழிபாட்டின் அடிப்படை. பரீட்சைக்கு போகுமுன், பள்ளிச் சிறுவன் பக்தியுடன் கடவுளை தொழுதுவிட்டுப் போகிறான். திருடன் தான் திருடப் போகுமுன் தெய்வத்தை வணங்குகிறான். கடவுளுக்கு நல்லது கெட்டது என்ற பாகுபாடு இல்லை. தன்னுடைய விருப்பம்போல் வேண்டிய நன்மைகளை எல்லாம் பெறுவதற்கு தெய்வ வழிபாடு சுலபமானது என்று கீதை கூறுகிறது. சாவித்திரியில் பகவான், "இறைவனை அழைத்து பிரார்த்தனை செய்தால் மனிதனின் வாழ்வில் அன்றாடம் அற்புதங்கள் நடைபெறுவதைக் காண்கிறோம்” என்றார். உண்மையான பிரார்த்தனை எல்லாம் தவறாமல் பலிக்கின்றன. ஆபத்துக் காலத்தில் மனிதன் எழுப்பும் குரல் அலறலாகி தெய்வத்தின் காதில் விழுந்து, அற்புதம் என அறியும் வகையில் தெய்வம் அவனைக் காப்பாற்றுகிறது. டாக்டர் கைவிட்டபின், நமக்கு டாக்டர் மீதும் மருந்து எல்லாவற்றிலும், நம்பிக்கைப் போனபின் இறைவன் மீது நம்பிக்கை வந்து பிரார்த்தனை செய்தால் நோய் மின்னல் வேகத்தில் குணம் அடைகிறது. தொழிலில் உற்பத்திப் பொருட்களுக்கு மார்க்கெட்டில் சரிவு ஏற்படும் நேரத்திலும், பிரார்த்தனையால் அற்புதங்கள் நடக்கின்றன. விபத்துக்கள் ஏற்படும் நேரங்களில் கூட தெய்வம் அற்புதமாகக் காப்பாற்றுகிறது. நமது பிரார்த்தனையை இறைவன் கருணையுடன் பூர்த்தி செய்தார் என்று உள்ளம் நெகிழ்ந்து நினைக்கிறோம். நம் இதயத்தில் உள்ளே இருக்கும் ஆன்மாவே இந்த இறைவனாகும்.

கிராமப்புற தனியார் நிறுவனம் (project) ஒன்றில் ஒரு பொறுப்புள்ள மானேஜரை வைத்துக் கொண்டு அதன் தலைவர் நிர்வகித்து வந்தார். அந்த மானேஜர் எல்லா பொறுப்புகளையும் சேவையாக ஏற்றுக் கொண்டவர். அவருக்கு பலனை விட பொறுப்பும் கடமையும்தான் முக்கியம். அந்த பிராஜெக்ட்டில் வேலை செய்யும் அத்தனை ஊழியர்களும் சம்பளத்துக்காக உழைக்கும் மனப்பான்மை இல்லாமல் சேவை மனத்தோடு வேலை செய்தார்கள். திடீரென்று ஒரு நாள் புயல் வீசி அந்த பிராஜெக்டை அடியோடு நாசமாக்கி விட்டது. எல்லா ஷெட்டுகளும் நொறுங்கிவிட்டன. அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு புயலால் ஆபத்து வந்தது. 80 பேர்களின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. அனைவரும் சேர்ந்து செய்த பிரார்த்தனையால் ஆபத்து விலகியது. பிராஜெக்ட்டின் தலைவரும், மானேஜரும் புயல் ஓய்ந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். தலைவர் தன்னுடைய கனவு நிர்மூலமாகிவிட்டதே என்று பதறினார். அவர் நஷ்டத்தை மட்டும் கருதினார். மனிதாபிமானமோ, கடமை உணர்ச்சியோ, பொறுப்போ அவரிடம் சிறிதும் காணப்படவில்லை. மானேஜர் அங்கு வேலை செய்தவர்களின் பரிதாபமான நிலையைக் கண்டு மிகவும் வருந்தினார். அவர்கள் மீது இரக்கங்கொண்டு அவர்களுக்கு ஏதாவது நிவாரணம் வழங்க வேண்டுமென்று விரும்பினார். அதற்கு குறைந்தது ரூ.5,000/- தேவைப்பட்டது. முதலாளியோ தன்னுடைய 2 லட்சம் முதலீடு நஷ்டமாகி விட்டதை மட்டும் கருதினார். ரூ.5,000/- என்பது அவர் 1972ல் அங்கே அந்த பிராஜெக்ட்டுக்காக 10 ஏக்கர் நிலங்களை வாங்கிய தொகைக்கு சமமானதே என்று நினைத்தார். மானேஜர், கையில் பணம் இல்லாதவர். இது போன்ற நேரத்தில் இதற்கு முன் ஆன்மாவை அழைத்துத் தீர்வு கண்டவர். இப்பொழுது இந்த இக்கட்டான நிலையில் செய்வதொன்றும் அறியாது திகைத்தார். சரணாகதி ஒன்று தான் இதற்குத் தீர்வு என்று நினைத்து அதைக் கடைப்பிடித்தார். பிறகு அவர் பணம் கொண்டு வருவதாகச் சொல்லி விட்டு ஒரு தீர்மானத்தோடு சமாதிக்குச் சென்றார். சமாதிக்கு போகும் போது சமர்ப்பணம் செய்து கொண்டே போனார். அப்பொழுது அவர் மனதில் ஒரு எண்ணம் தோன்றிற்று. திரும்பி வரும் பொழுது எதிரே முதன் முறையாக யாராவது தெரிந்தவர் ஒருவர் வந்தால், அவரிடம் ரூ.5,000/- கேட்கப் போவதாக தீர்மானித்தார். அவர் சமாதிக்குள் நுழையும் பொழுது முன்பின் தெரியாத பெரியவர் ஒருவர் இவரை வழிமறத்து உள்ளே போக விடாமல் தடுத்துத் தன் வீட்டிற்கு வரும்படி அழைத்தார். மானேஜர், எவ்வளவோ மறுத்தும் அந்த பெரியவர் விடவில்லை. பிறகு மானேஜர் அந்த பெரியவரிடமே ரூ.5,000/- கடனாகக் கேட்டார். பெரியவர் இவரது நிலையைக் கேட்டறிந்ததும் ரூ.5,000/- அன்பளிப்பாகக் கொடுத்தார். தூய்மையான நல்ல உள்ளத்திலிருந்து செய்யும் உண்மையான பிரார்த்தனைக்கு ஒரு முறை கூட காரியம் தவறாது.

*****

10. ஆன்மாவை அழைப்பது

ஆன்மாவை அழைத்தால் அது அற்புதமாக செயல்படுகிறது. அது எப்படி நடக்கிறது? நமது மரபு இதைப் பல வழிகளில் பின்பற்றுகிறது. அதில் ஜபம் செய்வது பிரபலமானது. மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அதை முறைப்படி ஜபிக்க வேண்டுமென்பது வழக்கம். ஜபம் வாயால் எழுப்பும் ஒலி வடிவம். “ஓம்” என்ற சக்தி வாய்ந்த மந்திரத்தை சரியாக உச்சரிக்க வேண்டுமென்பது மரபு. இது சப்த பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது. மாற்றமில்லாத பிரம்மம் படைப்பில் மாற்றமுள்ள பிரம்மமாகிறது. ஒவ்வொரு பிரிவினரும் மந்திரம் ஜபிப்பதில் வெவ்வேறு விதமான முறையைப் பின்பற்றி வருகின்றனர். ஒரு வகையினர் மந்திரத்தை 1½ கோடி தடவை உச்சரிக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள். "ஓம்” மந்திரத்தை முறைப்படி சரியாக உச்சரித்தால், தெய்வ லோகத்திற்கு அப்பாலுள்ள அகண்ட பிரம்மத்தை உணர முடியும்.

நான் எழுதுவது எல்லாம் நேர்மையுடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் அளவுகடந்த ஐஸ்வர்யத்தை எப்படி அடைவது என்பது பற்றியது. வளமை வாய்ப்புகள் மூலம் வருவது. ஆனால் மனிதனோ பிரச்சனைகளின் பிடியில் இருக்கிறான்.

"நான் ஆபீசில் வேலை செய்யும் சாதாரண குடும்பஸ்தன். எனக்கு மந்திரத்தை லட்சம் முறை சொல்வது கஷ்டமான காரியம். குடும்பத்தில் இருந்து கொண்டு, இப்படி அதிக நேரம் மந்திரம் சொல்வது கடினம். நான், என் வாழ்வில் உண்மையைக் கடைபிடித்து வாழ்ந்து வருகின்றேன். என்னுடைய பிரச்சனையிலிருந்து மீள்வதற்கு ஆன்மாவை அழைப்பதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்” என்று ஒருவர் கேட்கலாம். பிரச்சனைக்கு காரணம் எண்ணம் தான். எண்ணம் என்பது மனம். மனத்திற்கு பின்னால் உள்ளது ஆன்மா. பிரச்சனையை நினைவுபடுத்தும் எண்ணத்தை விலக்கி, நினைவை ஆன்மாவுக்கு சமர்ப்பணம் செய்தால் பிரச்சனை விலகும். பிரச்சனையைத் தீர்க்கும் திறன் ஆன்மாவுக்கு உண்டு. சமர்ப்பணம் என்பது மனிதன் தன்னை விலக்கி, அந்த இடத்தில் இறைவனை பிரதிஷ்டை செய்வதாகும். ஒவ்வொரு செயலிலும் இத்தகைய சமர்ப்பணத்தைக் கொண்டு வரலாம். இதையே ஆன்மாவை அழைப்பது என்று சொல்லுகிறோம். நமக்கு இதுதான் “ஆன்மாவை அழைப்பது” என்ற முறையாகும்.

முன்னுக்கு வந்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் ஒருவர் குடிப்பழக்கம் கொண்டிருந்தார். அவர் ஒரு நாள் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடந்தார். அவருடைய சகோதரருக்கு, இந்த குடிகார சகோதரரைப் பற்றி மிகவும் கவலையாக இருந்தது. இவரை எப்படி திருத்துவது என்று தெரியாமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். பிறகு ஒரு தீர்மானத்திற்கு வந்தார். அந்த குடிகார சகோதரரைப் பற்றிய நினைவு வரும் பொழுதெல்லாம் அந்த எண்ணத்தை மனத்திலிருந்து விலக்கி, ஆன்மாவில் சமர்ப்பணம் செய்ய தீர்மானித்து, அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை. என்றாலும் விடாமுயற்சியால் அவர் ஆன்மாவை தீவிரமாக அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இப்படி செய்த நான்காம் நாள் அவருக்கு வெற்றி கிட்டியது. குடிப்பழக்கத்திற்கு மையமாக இருந்த கிளப்பில் இரண்டு கோஷ்டிகள் ஏற்பட்டு இந்த குடிகார சகோதரரை விரட்டிவிட்டார்கள். அவர் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டு, இதுவரையில் குடும்பத்தை மறந்து, மனைவியை கவனிக்காது இருந்த நிலைமாறி, குடும்பத்தில் தானும் ஒருவராக வேலையை கவனிக்க குடும்பத்தில் வந்து சேர்ந்தார். அன்றிலிருந்து குடிப்பதற்கு கிளப்புக்கு போவதை நிறுத்திக்கொண்டார். குடும்பத்தில் ஒருவர் ஆன்மாவை அழைத்ததினால் இந்தக் குடும்பத்திற்கு பலன் கிடைத்தது.

*****book | by Dr. Radut