Skip to Content

11 . பகுதி - 10

91. "நான்” யார்?

இது ஞானயோகத்தின் அடிப்படைத் தத்துவம். "நான்” என்பது உடலோ, மனமோ, உணர்ச்சிகளோ அல்ல. யோக சித்தி அடைந்தவர் அதை ஆன்மா என்றே அறிவார்.

சமூகத்தில் மனிதன் தான் யார், தன்னுடைய உரிமை என்ன என்று அறியாமல் இருக்கிறான். ஒரு நல்ல விழிப்புணர்வு உள்ள முன்னேறிய நாட்டில் அந்த நாட்டு மக்கள் தங்களது சட்ட உரிமை, மனித உரிமை, சமூக உரிமை பற்றி நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். குடிமக்களின் வழிப்புணர்வு ஒரு நாட்டின் சமூக நிலைக்கு சின்னமாகவும் அடையாளமாகவும் விளங்குகிறது. தன்னைப் பற்றி தெரிந்து கொண்டுள்ளவன், ஆன்மாவை, உடனே அதிக பயனுள்ள வகையில் அழைக்கும் சக்தியுள்ளவனாக இருப்பான். "நான்'' என்பது உடலோ, மனமோ, அல்ல. அது ஆன்மா என்று புரிந்து கொள்வதில் பலருக்கு கஷ்டம் இருக்காது. நெருக்கடியான சந்தர்ப்பங்களில் முடிவு எடுப்பதற்கு வாழ்வு நமக்கு அரை நிமிஷம் கொடுக்கும் போது, நாம் உடனே முடிவு எடுத்து செயல்படுகிறோம். அப்படிப்பட்ட வாய்ப்பு திரு.நரசிம்மராவுக்கு பிரதம மந்திரியாவதற்கு வந்த வாய்ப்பாக இருக்கலாம். அல்லது ஒரு திருடன் உன்னை துப்பாக்கி முனையில் உன்னுடைய பணப்பெட்டியின் சாவியைக் கொடுக்கும்படி மிரட்டியதாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில், முடிவு உடனே எடுக்கப்பட்டது என்று நாம் அறிவோம். உண்மையில் இந்த முடிவு பகுத்தறிவால் ஏற்பட்டதல்ல. நல்லது, கெட்டது என்று சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இந்த முடிவு நாம் விழிப்புணர்வுடன் எடுப்பதல்ல. ஆபத்தான கட்டத்தில் அந்தக் கணமே உடனே தானாக எடுக்கப்பட்டதாகும்.

இந்த முடிவு உன் ஆன்மாவால் எடுக்கப்பட்டது. அது ஆன்மீகத்தில் சொல்லப்படும் ஆத்மா அல்ல. அது நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் கடந்ததாகவும், நம்மால் விரும்பப்படும் உணர்ச்சிகளையும் கடந்த ஆன்மாவாகும். ஒருவர் சாதாரணமாக புறச்சூழலின் தீவிர நிர்பந்தத்தாலும், பெரும்பாலும் ஆபத்து ஏற்படும்பொழுதும், எப்பொழுதாவது ஒரு அதிர்ஷ்டம் வரும் போதும் ஆன்மாவை அழைக்கும் நிலைக்குப் போவார். எண்ணத்தின் ஆழத்திலும், தியானத்தின் ஆழத்திலும் சென்று, ஆன்மாவை அழைத்தால், மிகுந்த நற்பயனை அளிக்கக் கூடியதாக இருக்கும். ஏனென்றால் அதுதான் உண்மையான "நான்'' என்ற ஆன்மாவாகும். பிரார்த்தனையின் தீவிரம், எவ்வளவு உண்மையாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு ஆன்மா நிச்சயமாக நம் வாழ்வின் மேலே வருவது உண்மை.

*****

92. விற்பனையாகாத சரக்கு

20 வயது வாலிபன் ஒருவன், 110 வருடங்களாக நடந்து வந்த தன்னுடைய கடையை 1974ல் மூடும் நிலைக்கு வந்துவிட்டான். எந்தத் துறையிலும் புதிய முறையை புகுத்துவது, குறிப்பாக தரமில்லாத பொருள்களை அறிமுகப்படுத்துவது அவ்வளவு சுலபமான காரியம் அன்று. அப்படிப்பட்ட தரமற்ற சரக்குகளைச் சந்தையில் விற்க முடியாத விற்பனையாளர்கள், அலங்காரமான கண்ணாடி டம்பளர்களை பரிசாக எடுத்துக்கொண்டு, கிண்கிணி ஓசையை எழுப்பிய வண்ணம் இந்தப் பையனுடைய கடைக்கு வந்தார்கள். பையனுடைய தகப்பனார் அதனால் மனம் கவரப்பட்டு 50 நாட்கள் விற்பனைக்கு ஈடான சரக்கிற்கு ஆர்டர் கொடுத்தார். ஆறு மாதங்கள் கழிந்தன. சரக்கு ஒரு சிறிதும் கூட விற்பனையாகவில்லை. அதுவே அந்த கடையை மூடுவதற்கு காரணமாய் அமைந்தது. அந்தப் பையன் ஒரு பெரியவரிடம் போய் வருவது பழக்கம். அந்தப் பெரியவர் அந்த வாலிபனின் வருத்தந்தோய்ந்த முகத்தைக் கண்டு, விசாரித்து நிலைமையை உணர்ந்து கொண்டார்.

அவர் அந்த பையனிடம் சரக்கை விற்கமுடியும் என்று கூறினார். அவர், ஆன்மாவை அழைத்தால் சரக்கு விற்றுவிடும் என்று கூறினார். அவர் கூறியதில் பையனுக்கு ஏதோ ஒன்று பளிச்சென்று தோன்றியது. அதில் தீவிரமாக கவனம் செலுத்தினான். பெரியவர் அந்த பையனிடம் சரக்கு வைத்துள்ள இடம் சுத்தமில்லாமல் இருந்ததை சுட்டிக்காட்டி, அந்த இடத்தை மாசற்ற தூய்மையாக சுத்தம் செய்யும்படிக் கூறினார். மேலும் அந்த இடத்திற்குச் சென்று மணிக்கு ஒரு முறை அன்னையை அழைக்கும்படி அறிவுறுத்தினார்.

அந்தப் பையன் பெரியவரிடம் தினமும் போய் வந்தான். பிறகு ஒரு வாரம் அவர் வீட்டுக்கு வரவில்லை. கடைசியாக ஒரு நாள் பெரியவர் வீட்டுக்கு வந்து, தான் இவ்வளவு நாட்களாக வராததற்குக் காரணம், தன் கடையில் வியாபாரம் மும்முரமாக நடந்து வந்தது என்று கூறினான். மேலும் கடந்த 7 முதல் 10 நாட்களில் மொத்த சரக்கில் பாதி அளவு விற்றுத் தீர்ந்துவிட்டது என்றும், மீதி பாதியை, மொத்தமாக ஒரு வியாபாரி வாங்கிக் கொண்டார் என்றும் கூறினான். அவனால் அழைக்கப்பட்ட ஆன்மா, விற்க முடியாத சரக்கை விற்றுவிட்டது.

அவன் ஆன்மாவை மட்டும் அழைத்தானே தவிர, பொருளின் ஜீவனை அழைக்கவில்லை. அப்படி அழைத்திருந்தால் பலன் இன்னும் சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கும். அவன் தன் தகப்பனார் முட்டாள்த்தனமாக, ஒரு புத்திசாலியான விற்பனையாளரின், வலையில் வீழ்ந்துவிட்டதிலிருந்து மீட்கப்பட்டதை ஒரு வெற்றியென எண்ணி மகிழ்ந்திருந்தான். அவனுடைய தகப்பனாரோ கடையில் மும்முரமாக வியாபாரம் நடந்து கொண்டிருந்த போதும், தன்னைப் பற்றியே பெருமை பேசிக் கொண்டிருந்தார். விற்பனை அதிகமாக இருந்ததால் இந்த சரக்கை தான் வாங்கியதற்கு பையன் வருத்தப்பட்டதுதான் முட்டாள்த்தனமென்று சொல்லி அதே சரக்கை இரு மடங்கு ஆர்டர் செய்தார்.

*****

93. அகமும் புறமும்

"ஒருவருடைய” புறவாழ்க்கை அவரது அகவாழ்வில் உள்ளதின் உண்மையான பிரதிபலிப்பு என்பது நம்முடைய பழங்கால மரபுகளால் கூறப்பட்டவையாகும். சங்க இலக்கியம் நல்லதும் கெட்டதும் வெளியிலிருந்து வருவதில்லை என்று கூறுகிறது. ஒருவர் தன் வாழ்க்கையை ஆன்மா ஆளவேண்டுமென்று விரும்பினால், இந்த விதி அவருக்கு முக்கியமானது.

ஒரு சாமார்த்தியமான ஏழை, செல்வந்தர் குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளும் அதிர்ஷ்டக்காரராக இருந்தார். அவர் வெட்கமில்லாமல் மாமனார் வீட்டில் தஞ்சம் புகுந்து, மாமனாரின் வீடுகளில் ஒன்றில் குடியேறிவிட்டார். ஐந்து குழந்தைகள் பிறந்த பிறகு, மனைவியை மாமனார் வீட்டிலேயே விட்டுவிட்டு, நகரத்தில் பணக்கார வீட்டு மருமகப்பிள்ளை என்று கர்வமாகக் கூறிக்கொண்டு ஊரை சுற்றிக்கொண்டு இருந்தார். வாழ்வின் சட்டம் என்னவென்றால், ஒரு சிறிய உதவி பெறுபவர், உதவி செய்தவர் மீது, அதிக ஆதிக்கம் செலுத்துவார் என்பதாகும். அவரால் பழிவாங்கப்பட்டவர், அவருடைய மைத்துனரான அந்த செல்வந்தரின் சொத்துக்கு ஒரே இளைய வாரிசு ஆவார்.

அங்கே கடையில் சுவையான விளையாட்டுப் பேச்சுக்களாக ஆரம்பித்து அவையெல்லாம் பரிகாசமான கேலிப்பேச்சாக தரம்குறைந்து, பையன் கடையில் இருக்கும்பொழுதே ஒருநாள் அது உச்சக்கட்டத்திற்கு வந்தது. கேலி செய்து கொண்டிருந்த ஐந்து நண்பர்களும் மருமகனும் சேர்ந்து கொண்டு, பையனை அழவைக்கும் அளவிற்கு துன்புறுத்தினார்கள். பையன் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டான்.

பையன் தனக்கு தீர்வுகாண்பதைவிட, ஆறுதலைநாடி பாதுகாப்புக்காக ஒருவரிடம் ஓடினான். மனித விவகாரங்களில், மனிதனின் கஷ்ட நேரத்தில் தீர்வு காண்பது பலருக்கு சுலபமாக இருக்காது. அவன் ஆறுதல் தேடி வந்ததற்கு, முழு அளவில் பலன் கிடைத்தது. அதன் பிறகு அவனால் சந்தோஷத்தில் சிரிக்கவும் முடிந்தது. ஆறுதல் கூறியவர் சொன்னார். "கேலியினால் துன்பப்படுவது உள்ளத்தில் இருந்தால்தான் வரும். அது வெளியிலிருந்து வருவது அல்ல" என்று கூறினார். இதைக் கேட்டதும் பையன் தனக்கு இத்தகைய சுபாவம் இருந்தது என்று ஒப்புக் கொண்டான். தானே சிறுவயதில் ஒரு மாணவனை இப்படி கேலி செய்து துன்புறுத்தியதின் பலனாக, அந்த மாணவன் பள்ளியை விட்டு நின்று விட்டான் என்று கூறினான். அவன் தன்னைத்தானே ஆழ்ந்து பரிசோதனை செய்து பார்த்ததில், பழைய மனப்பான்மையை மாற்றிக் கொள்ள முடிந்தது.

இருபது நாட்களுக்குப் பிறகு பையன், ஆறுதல் கூறியவரிடம் வந்தான். அவன் தன்னுடைய மாமா எங்கேயோ அடிவாங்கிக் கொண்டு கடைக்கு வந்து, அடக்கத்துடன் கை கூப்பிக் கொண்டு, தன் முன்னே நின்று, இனிமேல் நான் உனக்கு கீழ்ப்படிந்து நடந்து கொள்வேன் என்று என்னிடம் கூறினார் என்று சொன்னான். இதை என் காதுகளால் நம்பமுடியவில்லை என்று கூறினான். பதினைந்து நாட்களுக்கு முன் என் தகப்பனார் காலமாகிவிட்டார். ஒருவேளை இதுவே அவரது மனமாற்றத்திற்கு காரணமாக இருக்குமோ என்றான்.

அகம் புறத்தைக் கட்டுப்படுத்தும் போது, ஆன்மா வாழ்வை கட்டுப்படுத்துகிறது.

*****

94. அபிப்பிராயங்களும் மனப்போக்கும்

சூட்சுமப் பார்வையில் அபிப்பிராயங்கள் ஊசிகள் போன்றவை. மனிதனின் அன்றாட வாழ்வை நிர்ணயிக்கும் சூழலில் அது போன்று லட்சக்கணக்கான ஊசிகள் உள்ளன என்று தெய்வீக அன்னை கூறுகிறார். நீ திறந்த மனத்துடன் உன்னால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட கருத்தை உதறித் தள்ளிவிட முயன்றால், அபிப்பிராயங்களிலிருந்து விடுபடுவது சிரமம் என்று புரியும். உன்னுடைய அனைத்து முயற்சிகளுக்குப் பின்னும் அபிப்பிராயம் இருப்பதைக் காண்பாய். அதுவே நிலைபெற்று இருக்கும்.

மனத்தின் போக்கு அபிப்பிராயங்களைவிட சக்தி வாய்ந்தது. அபிப்பிராயம் உணர்ச்சிகளால் அங்கீகரிக்கப்படும் பொழுது மனத்தின் போக்கு எழுகிறது. மனோபாவத்திற்கு சில உதாரணங்கள், (1) நான் சொந்தக் காலில் நிற்க வேண்டும் (2) என்னுடைய தொழிலின் உயர்வை நான் மதிக்க வேண்டும் (3) என்னைப்பற்றி யாரும் தவறாக பேசக்கூடாது, என்பன போன்றவைகள். இந்த மாதிரியான மனப்போக்குகள் ஒருவருடைய சாதனையை நிர்ணயிக்கும் தீவிர சக்தி வாய்ந்ததாகும். ஆன்மா, அபிப்பிராயம், மனப்போக்கு, இவற்றிற்கு அப்பாற்ப்பட்ட நிலையில் (Plane) உள்ளது. நோக்கம் என்பது, முழு ஜீவனைச் சார்ந்தது. அது அபிப்பிராயங்களையும் மனப்போக்கையும் உள்ளடக்கியுள்ளது. திடமான அபிப்பிராயங்கள் உள்ளவர் மற்றும் அபிப்பிராயங்களை உண்டு பண்ணிக் கொள்ள முடியாதவர் என்றிருவரிடையே தீவிர அபிப்பிராயமுடையவர் நினைத்ததை சாதிப்பவராக இருக்கிறார். தன் சொந்தக்காலில் நிற்க வேண்டுமென்ற மனோபாவம் உடையவர், பிறர் ஆதரவின்றி வாழ முடியாதவர்களை விட மேலானவராக, சாதனை படைப்பவராக இருப்பார்.

ஆன்மா, அதனுடைய நிலையில் அபிப்பிராயம், மனப்போக்கு, நோக்கம், இவற்றைக் கடந்த இடத்தில் உள்ளது. யோகியின் ஒரே நோக்கம் மோட்சத்தை அடைவது. ஒருவருடைய தனிப்பட்ட வெற்றிக்கும், அல்லது குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் உழைப்பது, சகஜமானது. வாழ்வில் வெளிப்படும் ஆன்மாவின் மூலம் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தை நாம் ஏற்றுக் கொள்ளலாம். அது நோக்கமாகவும் அல்லது மனத்தின் போக்காகவும் இருக்கட்டும். குறைந்தபட்சம், ஆன்மாவைப் பற்றிய அபிப்பிராயம் ஒன்று ஏற்றுக் கொள்வோம். அதாவது நம் ஆன்மா நம் அன்றாட வாழ்வில், வீட்டிலும் சரி, தொழில் புரியும் இடத்திலும் சரி, நம்மை வழிநடத்தினால் அநேக முன்னேற்றங்கள் வரும் என்ற அபிப்பிராயத்தை நாம் பெற வேண்டும்.

மனிதன் செய்வதைவிட ஆன்மா அதிக பயனுள்ள சாதனை படைக்கும் என்பதைப் புரிந்து கொள்வோம்.

*****

95. கடன் சுமை

மனிதன், கடன் உதவி வழங்கும் ஸ்தாபனத்தைக் கண்டுபிடித்ததும், தன்னுடைய சுயநலமாகிய குறுகிய மனப்பான்மை கூட்டிலிருந்து வெளிப்பட்டு, மற்றவருடைய வாழ்விலும் பங்கேற்க ஆரம்பித்தான். இன்றைய நவீன நாகரீக உலகில், பொருளாதாரம், கடன் என்ற உறுதியான தோளின் மீது நிற்கிறது. கல்வி என்ற ஸ்தாபனம் உலகில் செய்த சேவைக்கு ஈடாக நிதியுதவி செய்வதில் கடன் சிறப்பான சேவை புரிந்துள்ளது. கடன் கொடுப்பவரின் முதலீடு, கடன் வாங்குபவருக்கு சுமையாகிவிடுகிறது. மனிதன் தனக்காக உருவாக்கிய ஒவ்வொரு கருவிக்கும் தான் அடிமையாகிவிடுகிறான்.

இப்படி கடன், கடன் பெற்றவருக்கு, சுமையாகிவிடுகிறது. ஒரு காலத்தில், நகரத்தில் வாழும் இரண்டு நடுத்தர வர்கத்தினர் தங்களுடைய கடன் பத்திரங்களை ஒப்பிட்டுப் பார்த்த நேரம் உண்டு. இப்பொழுது புதிய முறைகள் தோன்றிவிட்டதால், அத்தகையவர்கள் கடனைப்பற்றி பேசுவதை தவிர்த்து, சேமிப்பைப் பற்றி ஆலோசிக்கலானார்கள். நம்முடைய கவலையெல்லாம் கடன் சுமையின் பிடியில் உள்ளவர்களை, எப்படி அவர்களை அதிலிருந்து விடுபடச் செய்வது என்பது தான். ஆன்மா அதற்கு ஓர் வழிகாட்டுகிறது. ஆன்மா, அதனுடைய நிபந்தனைக்கு உட்பட விரும்பியவருக்கு, தீர்வு அளிக்க முன் வருகிறது.

மனிதனுடைய அனுபவம் என்னவென்றால், ஒரு பொருள் தொலைந்துவிட்டால் அது தொலைந்தது தொலைந்ததுதான், அதை மீண்டும் பெறமுடியாது என்பதுதான். ஒரு தவறு நடந்துவிட்டால், அதை மீண்டும் சரியாக்க முடியாது. ஒருவர் தன்னுடைய முட்டாள்தனத்தினால் கடன் பொறியில் வீழ்ந்துவிட்டால், அதற்காக வருந்தினாலும், திரும்பவும் அதிலிருந்து மீளமுடியாது. அந்தச் செயலின் பலனை அவர் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் இதற்கு ஆன்மா என்ன கூறுகிறது என்றால், ஒரு முறை செய்துவிட்ட தவறுக்கு, உணர்ச்சிபூர்வமாக மனம் வருந்தினால், பழைய தவற்றிற்காக இன்று மனநிலையை மாற்றிக் கொள்ள விரும்பினால் உன்னுடைய கடன்கள் யாவும் கரைந்து, நீ எப்பொழுதும் போல் அதன் தலையிலிருந்து நிரந்தரமாக விடுதலைப் பெறுவாய் என்பதாகும்.

  • வாழ்வில் முட்டாள்தனமாக செய்த செயல்களை மாற்ற முடியாது.
  • ஆனால் ஆன்மா கடந்தகால முட்டாள்தனமாக செய்த செயல்களுக்கு, உணர்ச்சிபூர்வமாக இன்று வருத்தம் தெரிவித்தால் நிலைமையை மாற்றித் தரும்.
  • உண்மையாக, உணர்வுகளில் மாற்றத்தை ஆழத்தில் கொண்டு வரும்பொழுது, ஆன்மாவால் இருப்பதை மாற்ற முடியும்.
  • மலையளவுள்ள கடன், அதே மலையளவுள்ள உணர்ச்சிப் பெருக்கால் மனம் வருந்தும் போது, கடன் கரைந்து கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடும். 

*****

96. மனம், இதயம் மற்றும் ஆன்மா

மனம் சக்தி வாய்ந்தது. நாம் அதை ஒருமுகப்படுத்தும் போது, அது மேலும் சக்திவாய்ந்ததாக உள்ளது. இதயம் மனத்தைவிட சக்திவாய்ந்தது. ஆன்மா இவற்றையெல்லாம் விட அதிகமான சக்தி உடையது. நாம் சிந்தனையை ஒரு நிலைப்படுத்தும் பொழுது அது மனத்திலும் அல்லது இதயத்திலும் பூர்த்தியாவதைக் காண்கிறோம். நாம் ஆன்மாவை எப்பொழுதாவது ஒரு நிலைப்படுத்துகிறோம். ஆன்மா இதயத்திற்குப் பின்னாலும் தலைக்கு மேலே சஹஸ்ரதளத்திலும் இருக்கிறது. சஹஸ்ரதளம் தலையின் உச்சியில் இருக்கிறது. வேதங்கள் சஹஸ்ரதளத்திற்கு மேலுள்ள மையத்திலிருந்து எழுதப்பட்டன. ஷேக்ஸ்பியர் மனத்திற்கு மேலேயும் சஹஸ்ரதளத்திற்கும் கீழேயுள்ள நிலையிலிருந்து எழுதினார்.

ஒருவருக்கு தான் ரூ.55,000/-க்கு வாங்கிய தன் சொத்தின் மீது கடன் தேவைப்பட்டது. அந்த சொத்தின் மதிப்பின் பாதி அளவுதான் கடன் வாங்கமுடியும் என்பதை, அவர் நன்கு அறிந்திருந்தார். அந்த நாட்கள் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதற்கு முந்தைய காலம். விவசாயத்திற்கு வங்கிகளின் ஆதரவு இல்லாத நேரம். அவருக்கு மொத்தத்தில் ரூ.1,75,000/- கடன் தேவைப்பட்டது. அதில் முதல் தவணையாக ரூ.75,000 தேவைப்பட்டது. அதை அவர் மனதில் தீவிரமாக ஒருமுகப்படுத்திய போது, அது சக்தி வாய்ந்ததாக அமைந்ததால், தனக்குக் கடன் கிடைத்து விடும் என்று நம்பிக்கைக் பெற்றார்.

அந்த நிலத்தின் மீது அவர் எடுத்துச் செய்யும் வேலையானது, அந்த நாட்களில் திட்ட அளவில் புரட்சிகரமாக இருந்தது. அவர் அந்த வேலையின் மீது உண்மையான நம்பிக்கை வைத்து வங்கியை அணுகினார். வங்கியில் இருக்கும் பொழுது, அமைதியாக இருந்தார். அமைதி மட்டுமன்றி, அவர் இதயத்தில் அது வரையில் கண்டிராத அதிக அளவிலான அமைதியான மகிழ்ச்சி நிரம்பியிருந்ததை உணர்ந்தார்.

வங்கி அவருக்கு ரூ.4,25,000 கடன் வழங்க முன் வந்தது. அவர், கிடங்கு, சாலை வசதி, டிராக்டர் முதலானவற்றிற்கு கேட்காததால், அவற்றின் உபயோகத்திற்கும் சேர்த்து அதிகமாகவே கடன் வழங்கியது. வங்கி பரந்த மனப்பான்மை மட்டுமின்றி உதாரகுணமுள்ளதாகவும் நடந்து கொண்டது. அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் திகைப்புடன் திரும்பினார். அவருக்கு புரியாதது என்னவென்றால், அவர் தன் எண்ணத்தை ஒருமுகப்படுத்தியது முழுமையடைந்து, இதயத்திற்குப் பின்னால் அமர்ந்திருக்கும் ஆன்மாவின் மையத்திற்குச் சென்றதால்தான், அவ்வாறு நடந்தது. இது கேள்விப்படாத ஆன்மாவின் மறு மொழியாகும்.

*****

97. சூறாவளி

நாம் இந்தியாவில் புயல் வீசுவதைப் பற்றி தெரிந்து வைத்துள்ளோம். இங்கு புயல் சாதாரணமாக மணிக்கு 120 மைல்கள் முதல் 150 மைல்கள் வரை வீசும். ஆனால் மணிக்கு 300 மைல்கள், அதற்கு மேலும் வீசும் சூறாவளியை, நம் அனுபவத்தில் கண்டதில்லை. அமெரிக்காவில் பல பகுதிகள் அத்தகைய சூறாவளியால் பாதிக்கப்படக் கூடியவைகளாக உள்ளன. சூறாவளி அதிக சேதம் விளைவிக்கக் கூடியது. அது சில நிமிஷங்கள் வீசி அடங்கிவிடும். சூறாவளியின் போது, கார்கள் காற்றில் பறக்கும். ரெயில்வே கோச்சுகள், இரயில் பாதையிலிருந்து 100 முதல் 200 கெஜம் தூரம் வரை தூக்கி எறியப்படும். சில நேரங்களில் அவைகளை காற்றில் உயரே தூக்கி வெகுதூரத்தில் போட்டுவிடும்.

ஒரு இந்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அமெரிக்காவில், சொற்பொழிவு ஆற்றும் பணிக்குச் சென்றபோது, தன்னுடைய நண்பர் வீட்டில் ஒரு இரவு தங்கினார். அங்கு மேஜையின்மீது அன்னையின் படத்தை வைத்து பிரார்த்தனை செய்துவிட்டு படத்தை அங்கேயே வைத்து விட்டார். மறுநாள் காலை, அவர் சொற்பொழிவு ஆற்ற வேறு ஊருக்குப் போனார். அங்கு, அவர் முதல் நாள் தங்கியிருந்த பகுதி சூறாவளியால் சேதம் அடைந்து விட்டது என்று அறிவித்தார்கள். பேராசிரியர் நண்பரை போனில் கூப்பிட்டு விசாரித்ததும், நண்பருக்கு ஆபத்தில்லை என்று கேள்விப்பட்டதும் நிம்மதி ஏற்பட்டது.

சொற்பொழிவு முடிந்ததும் பேராசிரியர், நண்பர் இருந்த இடத்திற்கு விரைந்தார். அங்கு அவர் கண்ட கோரக்காட்சி இரத்தத்தை உறைய வைத்தது. அதே சமயத்தில் அந்த இயற்கையின் இடர்பாட்டில் தன்னுடைய நண்பர் உயிர் தப்பியதால் வியப்படைந்தவராய் அன்னைக்கு நன்றி செலுத்தினார்.

அங்கு 60 அல்லது 70 வீடுகள் இருந்த இடத்தில், எல்லா வீடுகளும் தரைமட்டமாகி விட்டிருந்தன. அது ஒரு பேரழிவு. வாயு பகவான் சீற்றத்திற்கு ஆளான இடத்தில் மரங்களைக் காணவில்லை. எலக்ட்ரிக் கம்பங்கள் வளைந்து முறுக்கிக் கொண்டிருந்தன. ஆனால் நண்பருடைய வீடுமட்டும் நிலைகுலையாமல், ஆடாமல் அசையாமல் இருந்தது. அவருடைய காரும் சேதப்படவில்லை. மரக்கிளை ஒன்று ஒடிந்து கார் மீது விழுந்து, கண்ணாடி மட்டும் சேதப்பட்டிருந்தது. நண்பர் வீட்டின் முன்னால் நின்ற மரம், ஒரு கிளை ஒடிந்திருந்ததைத் தவிர அப்படியே இருந்தது. பேராசிரியரை நண்பர் மீண்டும் மீண்டும் "நான் எப்படிக் காப்பாற்றப்பட்டேன்'' என்றுக் கேட்டதற்கு பேராசிரியர் அச்சத்தால் வியப்படைந்தவராய் எதுவும் சொல்ல முடியவில்லை. நண்பருக்கு பதில் சொல்ல முடியாதது மட்டுமல்ல, அன்னையின் அற்புதங்களைப் பற்றி அவர் இதுவரையில் அறியாதவராகவே இருந்தார். அவர், அன்னையின் சக்தி அவர்களுடைய வீட்டை அரண்போல் சூழ்ந்து பாதுகாத்து இருக்க வேண்டும் என்று நினைத்தார். அன்னையின் படம், அவர்கள் வீட்டில் ஒரு இரவு இருந்ததால்தான் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்றுக் கூறி முடித்தார்.

*****

98. இரயிலில் கொள்ளை

பீஹாரில் பணியில் முழுமையாக ஈடுபட்டிருந்த ஒருவர் அலுவலக வேலையாக பிரயாணம் மேற்கொண்டார். அவர் அந்த வேலையில் கடமையின் பங்காக 7 லட்சம் பணம் வசூல் செய்த தொகையை எடுத்துக் கொண்டு இரயிலில் பிரயாணம் செய்தார். அவர் அப்படி பல லட்சக்கணக்கான பணத்துடன் பிரயாணம் செய்வது வழக்கமான ஒன்று. அவர் எப்பொழுதும், தைரியசாலியாக இருந்ததாலும், அவருக்கு எப்பொழுதும் பணத்துடன் பிரயாணம் செய்யும் பொழுது பயம் ஏற்பட்டதில்லை.

ஓடும் இரயிலில் அபாய அறிவிப்பு ஒலி கேட்டதும் ஒரே கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. அவர் அந்த இரயிலில் கொள்ளையர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உடனே புரிந்து கொண்டார். அவரிடத்தில் அவ்வளவு பெரியத் தொகை இருந்திராவிட்டால் அவர் பயப்படுவதற்கு அவசியம் இல்லை. அது அவருடைய பணம் அல்ல. பணம் தொலைந்துவிட்டால், அலுவலகத்திற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர். அந்நிலையில் எண்ணங்கள் கட்டுக்கடங்காமல் ஓடின. ஆனால் பயம் ஏற்படவில்லை. அவர் வணங்கும் தெய்வத்தை அழைத்தார். அது பயனற்றதாக இருந்தது.

திடீரென்று அவர் மனதில், ஒரு வாரத்துக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வந்தது. அதில் சென்னையில் ஒரு பெண்மணி சூறாவளியைப் பற்றி பேசியதை நினைவு கூர்ந்தார். அன்னையின் படம் இருந்த வீடு சூறாவளியிலிருந்து காப்பாற்றப்பட்டது என்றும், அன்னையின் சக்தி மகத்தானது என்றும் அறிந்தார். உடனே அன்னையை அழைக்க எண்ணினார். அதற்குள் கொள்ளையர்கள் அவர் இருந்த பெட்டிக்குள் புகுந்து, ஒவ்வொருவரிடமும் துருவித்துருவிக் கொள்ளையடித்துவிட்டு சேதப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர் மனதில் எந்த எண்ணமும் எழவில்லை. அவர் வைத்திருந்த பணத்தைப் பற்றியும் எண்ணவில்லை. சில வினாடிகளுக்குமுன் மெதுவாக அழைத்த அன்னையை கூட நினைக்க முடியவில்லை. அந்த நேரம், அவர் வாழ்வில் அது ஒரு ஆபத்தான நேரமாக இருந்தது. அவர் தன் உள்ளே ஆழ்ந்து சென்றார். அப்படிப்பட்ட நேரத்தில் ஆன்மா மேலே வெளியே வருகிறது. இப்படி ஒருவர், தன் உள்ளே ஆழ்ந்து போகும் தருணத்தைத்தான் அன்னை விரும்புகிறார். கொள்ளையர்கள் நாசப்படுத்திக் கொண்டிருக்கும்போது தன் உணர்வுக்கு வந்தார். அமைதியாக தெய்வீக அன்னையை அழைக்க முற்பட்டார்.

இரயில் நின்று விட்டது. ஆயுதம் ஏந்திய போலீசார் ரூபத்தில் உடனே உதவி வந்தது. கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்தார்கள். தன் சுயஉணர்வு வந்ததும், தன்னுடைய பணப்பையை பார்த்தார். அது பாதுகாப்பாக அப்படியே இருந்தது.

*****

99. கனவுகள்

கனவுகளினால் நமது சக்தி பெருமளவு குறைகிறது. கனவுகள் இல்லாத உறக்கம், இளைப்பாறுவதாகும். ஆழ்மனத்திலிருந்து வரும் கனவுகள் பயங்கரமாக இருக்கும். அடிமனத்திலிருந்து வருபவை, எதிர் காலத்தைக் குறிக்கும். அக்கனவுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளாக இருக்கலாம். கனவுகள் சூட்சும நிலைகளில் (Planes) இருந்து நீண்டகால நிகழ்ச்சிகளை மிகக்குறுகிய நேரத்தில் உணர்த்துவதாக இருக்கலாம். விடியற்காலையில் காணும் கனவு பலிக்கும் என்பது, நம் பாரம்பரியத்தின் நம்பிக்கை. சில கனவுகள் அர்த்தம் நேர்மாறானதாக இருக்கும்.

சிலர், ஒரு குறிப்பிட்ட மனிதர், தன்னை தாக்குவதாக கனவு காண்பார். அன்னை அதற்கு அர்த்தம் நேர்மாறானது என்கிறார். நான் ஒருவர் மீது கோபப்பட்டு, அவர்மீது கெட்ட எண்ணம் கொண்டிருந்தால், கனவில் அவர் என்னை தாக்குவதைக் காண்பேன். அது தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் வழி. அது உண்மையில், நான், எப்பொழுதும் என்னை கெட்டவன் என்று நினைப்பது இல்லை. மாறாக நான் என்னை நல்லவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆகையால் நான், மற்றவர்கள் மீது கொண்டிருக்கும் கெட்ட எண்ணம், மற்றவர் என்மேல் கொண்ட கெட்ட எண்ணமாக மாற்றிப் பார்க்கிறேன். தன்னைப் பற்றி உணர்ந்தவர்களுக்கு, இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். தன்னை அறிதல், அன்னையை அழைப்பதற்கு அடிப்படை ஆதாரமாகும்.

ஒன்றை அறிகுறியாகக் கருதுவதும், கனவுகளும் வெவ்வேறாக இருந்தாலும் அவை இரண்டும் ஒன்றாகவே வரும். கனவில் தண்ணீரைக் காண்பது உணர்ச்சியைக் குறிக்கும். மயில் வெற்றியைக் குறிக்கும். மழை அருளைக் குறிக்கும். சிங்கம் தைரியத்தையும், வானத்தில் பறப்பது வாழ்வின் உயரிய குறிக்கோளையும் குறிக்கும். அதையே ஆன்மீகத்தில் ஜீவியம் வேகமாக வளர்ச்சி அடைகிறது என்று கருதலாம். ரயில், பஸ்சில் போவதும் ஜீவியத்தின் வேகமான முன்னேற்றத்தைக் குறிக்கும். கனவுகளில் அடிக்கடி, தான் அதிகமாக தாக்கப்படுவதாகத் தோன்றினால், அது அவருடைய தவறான வளர்ப்பு முறையினால் அவருக்கு சமூகவிரோத மனப்பான்மை உள்ளதைக் காட்டுகிறது. கனவில் அன்னையைக் காண்பது சூட்சும உலகில் அன்னையை தரிசனம் செய்வதாகும்.

தூக்கத்தில் பயங்கரக் கனவுகளைக் காண்பவர்கள் அன்னையை அழைத்தால், உடனே அது மறைந்துவிடும். அது, அன்னை கனவிலும் பாதுகாப்பு அளிக்கிறார் என்பதாகும். எல்லோராலும் கனவில் அன்னையை அழைக்க இயலாது. அன்னையை அழைக்க வேண்டுமென்றும் நினைக்க இயலாது. அது ஆன்மீகத்தின் சிறப்புரிமை.

*****

100. சட்டமும் நீதியும்

கடந்த நூற்றாண்டுகளுக்கு மேலாக நீதிமன்றங்கள் மக்களுக்கு சட்டரீதியான தீர்ப்புகள் வழங்கிக் கொண்டு வருகின்றன. இதற்கு முன்பு மக்கள், ஊரில் உள்ள பெரியவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட, உள்ளூர் ஆலோசனை மன்றங்கள் மூலமாக தீர்ப்பு பெற்று வந்தார்கள். நீதிமன்றங்கள் ஏற்பட்ட பிறகு, இப்பொழுது சட்டரீதியான தீர்ப்பு பெற்று வருகிறார்கள். சட்டரீதியான தீர்ப்பு சாட்சியங்களின் அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் உரிமை கொண்டாடுவதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, நிரூபிப்பதற்கு சரியான சாட்சியங்கள் இல்லாதபோது நீதிமன்றம் உதவியற்றதாக ஆகிவிடுகிறது. ஆகவே நீதியின் உரிமை குறைக்கப்பட்டு பாதிக்கப்படுகிறது. சட்டம் உதவுவதற்கேற்ப, சட்டத்தின் நீதியாக அமைகிறது.

பரந்த சமூகத்தில் நீதிமுறை வழங்குவதில், ஒருவர் நியாயமாகவும் உரிமையை உடையவராக இருந்த போதிலும், அவருக்கு நீதி மறுக்கப்படுகிறது. அது அப்படி தவிர்க்க முடியாத காரணங்களால், நியாயமானதாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், நீதி மறுக்கப்படுகிறது. அவர் ஆன்மாவின் நீதியின் முன்னே முழுமையான நீதியைப் பெறமுடியுமா? முடியும். அதற்கு அவர் ஆன்மாவை அழைக்க முன்வர வேண்டும். அல்லது அவருடைய உரிமையின் ஜீவியத்தை அழைக்க வேண்டும்.

அவருடைய வழக்கு பல காரணங்களினால் தோற்றுப் போய் இருக்கலாம். அது சரியான சாட்சியம் இல்லாததாலும், நீதிபதியின் சரியான கவனம் வழக்கில் செலுத்தப்படாததாலும், சமூகம், அரசியல், பணபலம் போன்ற நிர்பந்தங்களாலும் வழக்கு தோற்றுப்போய் இருக்கலாம். அவருடைய காரணங்கள் இங்கே நியாயமானதுதானா? அப்படியானால், அவர் உயர்ந்த சக்தியை அழைக்கத் தயாராக இருக்கிறாரா? எந்த உயர்ந்த நீதிமன்றத்திலும் அவருக்கு நியாயம் மறுக்கப்பட்டிருந்தாலும், ஆன்மாவின் உயர்ந்த சக்தியினால், அவருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தீர்ப்புக் கிடைக்கும்.

ஒருவருக்கு தனக்குச் சேர வேண்டிய மூன்றில் ஒரு பங்கு சொத்துக்கு சரியான தஸ்தாவேஜுகள் இல்லாததால், அவரது உரிமையைக் குறிக்கும் ஒரு கிறுக்கப்பட்ட சிறிய காகிதம் கூட இல்லாதபோது, நீதிமன்றத்தில் அவரது வழக்கு தோற்றுப்போனது. நீதிமன்றம், அவர்மேல் அனுதாபம் காட்டினாலும் அவருக்குக் கிடைக்க வேண்டிய உரிமையை மறுத்தனர். அவர் தன் ஆன்மாவை அழைத்த பொழுது அடுத்த 15 நிமிடங்களில் சொத்து தன் கைக்கு வந்ததாக உணர்ந்தார். ஆனால் சட்டபூர்வமாக அதை உறுதி செய்ய 6 மாதங்களாயிற்று. சட்டம் கைவிடலாம், வழக்கறிஞர் திறமை போதியதாக இல்லாமல் இருக்கலாம், வாழ்வும் பாரபட்சமாகவும் இருக்கலாம், இயற்கை கூட அவருக்கு எதிராக இருக்கலாம், ஆனால் உன் பக்கத்தில் உண்மையும் நீதியும் இருக்கும் பட்சத்தில், தெய்வீக அன்னையின் பரிபூர்ண ஆசிகள் உனக்கு நிச்சயமாக உண்டு.

*****book | by Dr. Radut