Skip to Content

10 . பகுதி - 9

81. ஆன்மா நம் அழைப்புக்காகக் காத்திருக்கிறது -

மனிதன் ஆன்மாவை அழைப்பானா?

ஆன்மாவை அழைப்பது கடினம் என்று பலர் கூறியுள்ளார்கள். இதில் பெரிய இரகசியம் என்னவென்றால், ஆன்மா மனிதனிடத்தில் அதிக அளவில் அன்பு வைத்து, அவன் தன்னை அழைக்கமாட்டானா என்று, ஆர்வமுடன் காத்திருக்கிறது. உண்மையில் அது தன் உயர்ந்த அடிப்பீடத்திலிருந்து எழுந்து வந்து, மனிதனின் வீட்டுக்கதவு அருகில் நின்று கொண்டிருக்கிறது. மனிதன் தன் கவனத்தை ஆன்மா மீது செலுத்துவானா? ஆன்மா மனிதனிடத்தில் வசீகரமாக இருப்பதுபோல், மனிதனும் ஆன்மாவிடம் வசீகரமாக இருப்பானா? ஒருவர், ஏன் ஆன்மா இவ்வளவு தூரம் கீழே இறங்கி வந்து அவனுள் பிரவேசிக்காமல், அவனுடைய அழைப்புக்காகக் காத்திருக்கிறது என்று, கேள்வி எழுப்பலாம்.

ஒரு காலத்தில், ஒருவர் ஆன்மாவின் கடைக்கண் பார்வைக்கு, வருடக்கணக்கில் தியானத்தில் அமர்ந்து இருக்க வேண்டியதாக இருந்தது. இப்பொழுதோ, ஆன்மாவின் சக்தி பூமியின் சூழலுக்கு இறங்கி வந்து, தன்னை மனிதன் அணுகுவதற்கு சுலபமாக்கிக் கொண்டுவிட்டது. மனித குலத்தில் ஏற்புத்திறன் அதிகரித்து வருவதால், மனிதன் ஆன்மாவை அழைக்காமலேயே, ஆன்மாவே அவன் வாழ்வில் வந்து செயல்படும் நேரம் வரும். இதுவரையில் அப்படிப்பட்ட நேரம் இன்னும் வரவில்லை. ஆன்மா இறங்கி வரும் பொழுது, ஏற்புத்திறனை வெளிப்படுத்தக்கூடிய மக்களை அதிக அளவில் உருவாக்கக்கூடிய ஒருவர் அந்த நேரத்தை வரும்படி செய்வார்.

ஆன்மாவை உள்ளே அழைப்பதில், உண்மையில் மனிதனுக்கு எந்தவிதமான கஷ்டமும் இல்லை. எது கடினம் என்றால், மனிதன் இதுவரையில் தன் மனத்தால் போற்றி வளர்த்து வந்த வாழ்வின் வழிமுறைகளான, தேசத்தைவிட குடும்பம் முக்கியம், மக்களிடம் விசுவாசத்தை விட சொத்தின் மீது விடாமுயற்சியுடன் இருப்பது, போன்றவற்றை விட முடியாது என்பதுதான். நாம் இன்றைய நாளில் சமூகத்தின் பண்புகளுக்கு கீழ்ப்படிதலாக இருக்க விரும்புகின்றோம். 38 வயதான நல்ல சம்பாத்தியமுள்ள ஒருவருடைய மகள், தன்னுடைய பெற்றோர்கள் அவள் திருமணத்தில் சிறிதும் அக்கரை காட்டாமல் இருக்கும் போதும், அவள் பெற்றோர்கள் மீது அதிக பாசம் வைத்திருந்தாள். நன்றியில்லாத, கடமை உணர்வு இல்லாத பெற்றோர்கள் மீது பாசம் இருக்கும் வரை, அவளால் ஆன்மாவை அழைக்க முடியாது. உலகத்தின் தாக்கம் நம்மேல் மிக அதிகமாகவுள்ளது. பல ரூபங்களிலும் வருகிறது. மனிதன் தன் வாழ்வை விட ஆன்மாவை அதிகமாக வசீகரிக்கக் கூடியவனாக இருப்பானா?

*****

82. வாழ்வில் ஆன்மா செயல்படுவது

அநேக வாசகர்கள் ஆன்மாவை எப்படி அழைப்பது என்று கேள்வி கேட்டுள்ளார்கள். இந்தக் கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. இதன் வழிமுறைகள் புரிந்துகொள்ள முடியாதது அல்ல. அது ஒருவருடைய ஜீவியத்தை உயர்த்த வேண்டுமென்பதேயாகும். நாம் கேட்பதால் மட்டும் கிடைக்கக்கூடியது அல்ல. ஒவ்வொருவரும் அதை அடைய வேண்டுமென்று, தீவிரமாக முயன்றால், மிகச் சிறந்த முறையில் அடைய முடியும். ஆன்மாவை அழைப்பதற்கு ஒரு நாள் முழுவதையும் ஒதுக்கி இந்த முறையில் உள்ள சக்தி மற்றும் கஷ்டங்களை எல்லா நிலையிலும் ஆராய்ந்து, ஜீவியத்தின் நிலையை உயர்த்திக் கொள்ளும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள, 24 மணி நேரமும் அமர்ந்திருக்க வேண்டுமென்பதே நான் சொல்ல விரும்பும் யோசனையாகும்.

ஒரு நாளுக்கு மேல் ஒதுக்குவதற்கு முன்னால், அந்த வழியில் உள்ள ஒவ்வொரு தடைகளையும் அறிந்து அதை அகற்றுவதற்கு மனதை தயார்படுத்திக் கொள்வது முக்கியம். ஆன்மாவுக்கு மாறுவதற்கு வழிமுறைகள் என்னவென்றால், நம்புவது, புரிந்து கொள்ளுதல், மற்றும் மாறுவது என்பதாகும். ஆன்மா மனதைவிட சக்தி வாய்ந்தது என்று நீ ஏற்றுக் கொள்கிறாயா என்று நீ உன்னையே கேள். அப்படி நம்பமுடியவில்லையென்றால், ஆன்மாவிற்கும் மனதிற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து, நம்பிக்கை உண்டாக்கும் வரை அதை புரிந்து கொள்ள முயற்சி செய். எவ்வாறு உடலைவிட மனம் சக்தி வாய்ந்ததோ, அதுபோல் மனத்தைவிட ஆன்மா சக்தி வாய்ந்ததாகும். ஒரு முறை நம்பிக்கை ஏற்பட்டதும் அந்த நம்பிக்கையை தீவிரப்படுத்தினால், ஆன்மாவின் உயர்ந்த தன்மையை உன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளின் மூலம் காணமுடியும்.

சரியாகப் புரிந்து கொள்ளுதல், நம்பிக்கையை வலுப்படுத்தும். அமைதியும் மௌனமும் உள்ளே ஏற்படுவதற்கு, ஏற்கனவே தயாராகிவிட்டது என்பதை அறியலாம். தற்செயலாய் நடக்கக்கூடியது என்று எண்ணாமல், உள்ளே வேலையை ஒரு மனதாய் தீவிரமாக திடமான முயற்சியுடன் ஒவ்வொரு எண்ணத்தையும் அதன் அடுத்த கட்டமான உள்ளுரை உயர்ந்த அமைதிக்கு மாற்றவேண்டும். உள்ளே ஏற்பட்ட அமைதி, நீ உன்னுடைய எண்ணத்தை உயர்நிலைக்கு மாற்ற தயார் நிலைக்கு வந்து விட்டாய் என்பதைக் குறிக்கும்.

வெறுமனே சும்மா உட்கார்ந்திருக்காதே. ஏதாவது ஒன்றில் உன்னை ஈடுபடுத்திக்கொண்டு, அதை முழுமையாக செயல்படுத்து. அப்படி செயல்படும் பொழுது ஒவ்வொரு நிமிடமும் எண்ணத்தை மௌனத்திற்கு மாற்றம் செய். அது நகரும். வாழ்வு உன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப இனிமையாக வளைந்து கொடுக்கும். பொறுமையுடன் காத்திரு. ஒரே நாளில் சூழல் முற்றிலும் மாறி உனக்கு சாதகமாகவும் இனிமையானதாகவும் அமையும். இப்பொழுது உனக்கு எப்படி செயல்பட வேண்டுமென்று புரியும்.

*****

83. ஒருவருடைய ஆன்மாவில் நம்பிக்கை

நம்மில் பெரும்பாலானோர் உண்மையின் மீது நம்பிக்கையிருப்பது போல் ஆன்மாவிடமும் பொதுவாக நம்பிக்கை வைத்துள்ளார்கள். இக்கட்டான நிலையில் பொய்மையைவிட வாய்மைதான் நம்மைக் காப்பாற்றும் என்று எத்தனை பேர் நம்புகிறார்கள்? நாம் உண்மை மீது வைத்திருக்கும் மதிப்பு வெறும் உதட்டளவுதான். ஆன்மா மீது நம்பிக்கையும் அத்தகையதே. நாம் ஆன்மாவின் மீது நம்பிக்கையில்லை என்பதல்ல. ஆனால் அது நம் வாழ்வில் சாதனைகளை புரியும் அளவிற்கு தூய்மையான நம்பிக்கைக்கு உயரவில்லை.

முதலாவதாக ஒருவர், தன்னைத் தானே உண்மையில் மனதைவிட ஆன்மாவின் சக்தி உயர்ந்தது என்பதில் நம்பிக்கை வைத்துள்ளாரா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். ஆன்மாவை நம்புபவராக இருந்தால் அவர் அந்த நிலையிலிருந்து முழுமையான நம்பிக்கையை உயர்த்த வேண்டும். நம்பிக்கையில்லாத பட்சத்தில் அவர் பூரணமான நம்பிக்கைக்கு உயர்த்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். நம்பிக்கையை உயர்த்திக்கொள்ள முடியாதவர்களுக்கு அதை உயர்த்திக் கொள்வதற்கான வேறு வழிமுறைகள் உண்டா? அது கடினமானதுதான். ஆனால் கடின உழைப்புக்கு முடியாதது அல்ல. மனம் சக்தி வாய்ந்தது என்றும் அதைவிட ஆன்மா அதிக சக்தி வாய்ந்தது என்றும் அறிவார். ஆன்மா நம்மில் எல்லோரிடமும் உறங்கும் நிலையில் உள்ளதால், இதை புரிந்து கொள்வதற்கான முயற்சி ஆன்மாவை தூண்டுகிறது. அவர் தனக்குள்ளே தொடர்ந்து சிந்தித்த பின், மனதை விட ஆன்மா அதிக சக்தி வாய்ந்தது என்று உணர்ந்து கொண்டதும், மனம் அதை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்கிறது. ஒரு முறை மனம் இதை புரிந்து கொண்டால், நம்பிக்கை ஏற்படுவது சாத்தியமே. இந்த புதிய அறிவின் தெளிவில் உள்ளே சென்று ஒருமுகப்படுத்த வேண்டும். அது நம்பிக்கை ஏற்படுவதற்கு வாய்ப்பாகும்.

நம்பிக்கையின்மையை விட நம்பிக்கை உயர்ந்தது, ஆனால் நம்பிக்கை காரியங்களை நடத்தாது. அவர் மேலும் நம்பிக்கையை சிரத்தையின் நிலைக்கு உயர்த்த முயற்சிக்க வேண்டும். இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நண்பரைப் பார்க்க வேண்டுமென்ற ஒரு சிறு விருப்பமும் நிறைவேறுவதைக் காண்பார். இதுவே அவருக்கு சிரத்தை ஏற்பட்டதற்கு அறிகுறி. ஆன்மாவின் சக்தியைப்பற்றி மேலும் மேலும் அதிக அளவில் தெரிந்துகொள்வது, நம்பிக்கை ஏற்படுவதற்கு சாத்தியமாகிறது. நம்பிக்கை என்பது ஒரு துருப்புச்சீட்டு. அது அங்கு இருக்க வேண்டும் அல்லது உருவாக்கப்பட வேண்டும். அது அங்கு இருந்தால் அதை அதன் உயர்ந்த வெற்றி நிலைக்கு உயர்த்த வேண்டும். விடாமுயற்சி நம்பிக்கையை உருவாக்குகிறது என்று அன்னை கூறுகிறார். நம்பிக்கை பிறக்கும்வரை ஒருவர் விடாமுயற்சியுடன் முயன்று, அதை அதனுடைய முழுசக்திக்கு உயர்த்த வேண்டும். வாழ்வில் சாதனை படைப்பதற்கு, மேலும் வழிகள் உள்ளன. ஆனால் நம்பிக்கை மட்டும் திருப்பு முனையாக வாழ்வின் முக்கிய ஆதாரமாக விளங்கக்கூடியது.

*****

84. பகுத்தறிவை விட ஆன்மா சக்தி வாய்ந்தது

இது வெளிப்படையான உண்மை. இதைப்பற்றி அறிவிக்க வேண்டியது ஒன்றுமில்லை. நாம் செயல்படும்போது அது தெள்ளத் தெளிவாகத் தெரிவதில்லை. நாம் பகுத்தறிவைக் கொண்டு செயல்படுவதாக நினைக்கிறோம். பகுத்தறிவை விட ஆன்மா அதிக சக்தி வாய்ந்தது என்று நமக்குத் தெரியும். ஆனால் செயலில் இறங்கும் பொழுது பகுத்தறிவைத்தான் நாம் சார்ந்திருக்கிறோம். வேறு வழியின்றி அதை நாடுவதையே நினைக்கிறோம்.

நம்முடைய வாழ்வில் சிறந்த சாதனை ஒன்று இருக்குமானால், அதை எண்ணிப் பார்த்தால் பத்து நிகழ்வுகளில், ஒன்பது வகைகள் தன்னாலேயே நிகழ்ந்திருக்க கூடுமேயன்றி, நம்முடைய முயற்சியாலோ அல்லது திட்டமிட்டதின் பலனாகவோ நிகழ்ந்திருக்காது. அந்த ஒரு நிகழ்வும் கூட நமது முயற்சியினால் கிடைத்த பலனாகத் தோன்றினாலும், அது எப்படி நிகழ்ந்தது என்று ஆழ்ந்து ஆராய்ந்துப் பார்த்தால், நெருக்கடியான நேரத்தில் அது தானாகவே நிகழ்ந்தது என்றும், நம்முடைய முயற்சியால் ஏற்பட்டதல்ல என்றும் தெரியவரும்.

இவை உன்னுடைய அனுபவமானால் அதை நீ நம்ப முன்வரவேண்டும். மேலும் ஒவ்வொரு முறையும் நம் மனம் செயல்படும் போது அதை ஆராய்ந்தால், நம் அனுபவ அறிவில், அந்த வேலை சிதறிப் போய்விட்டது என்றும் அல்லது அதன் பலன்கள் தாமதமானது என்றும் தெரியவரும். ஒவ்வொரு முறையும் நாம் நமது மனதை நம்பாமலும், பகுத்தறிவை நம்பாமலும் இருக்கும் போது பலன்கள் ஏற்படுகின்றன. நம் வாழ்வில் இது ஒரு சிறிய உண்மை. ஆனாலும் நாம் அதைக் காணத் தவறுகிறோம். சாதனைகள், பகுத்தறிவால் ஏற்படுவதன்று. அது உள்ளுரை மௌனத்தினால் ஏற்பட்டது என்று தெளிவாகத் தெரிகிறது. உண்மை என்னவென்றால், மௌனசக்தி பலனைக் கொண்டு வருகிறது என்பதாகும். அது பகுத்தறிவினால் அல்ல. மௌனம் என்பது ஆன்மா. ஆன்மா எப்பொழுதும் சாதிக்க வல்லது. மனம் சாதிப்பதைக் கெடுக்கும்.

ஆனால் மனம் என்பது நமக்கு இறைவனால் அளிக்கப்பட்ட மிகப்பெரிய தலைசிறந்த கருவியாகும். மனம் தானாகச் செயல்படும்பொழுது, அது அழிக்கும் தன்மையைப் பெறுகிறது. அது ஆதியான ஆன்மாவுக்கு சரணம் அடைந்தால், பெரிய சிருஷ்டிக்கு உரிய கருவியாகிறது. மனத்தை நம்புவதோ, நமது கருத்துக்களை வலியுறுத்துவதோ, திட்டமிடுவதில் நம் திறமையை நம்புவதோ, நம் காரியத்தைக் கெடுப்பதாகும். நம் உள்ளுரை ஆன்மா ஒப்புதல் அளித்து, மனத்தின் முறையான முடிவுகளுக்கு ஆன்மா சம்மதித்தால், நம்முடைய கருத்துக்கள் சக்தி வாய்ந்ததாகவும், திட்டமிடுவதில் செயல் ஊக்கமுடையதாகவும் இருக்கும்.

  1. பகுத்தறிவை கைவிட்டால் நீ ஆன்மாவை அடைவாய்.
  2. பகுத்தறிவை விடும்போது, நீ மௌனத்தை அடைகிறாய். அது ஆன்மாவின் சூழலாகும்.
  3. அழியாத உண்மையான சக்தி ஆன்மாவின் இருப்பிடம். ஆன்மா என்பது எப்பொழுதும் நிலைத்து நிற்கும். 

*****

85. உள்ளுரை நிறைவு

திருப்தி என்பது ஏமாற்றத்தின் எதிர்மறை என்றும், சந்தோஷம் கவலையின் எதிர்மறை என்றும், நாம் அறிவோம். சந்தோஷம் என்பது, நாம் எதிர்பார்ப்பதை அடையும் பொழுது வரும் மகிழ்ச்சியாகும். சந்தோஷம் வெற்றியினால் ஏற்படுவது. இவை யாவும் உடன்பாடானதாகவும், எதிர்மறையாகவும், நம் வாழ்வில் ஏற்படும் உணர்வுகளாகும். இது ஆன்மாவின் பார்வையில் வாழ்வின் அடிமட்டத்தில் ஏற்படுபவையாகும். ஆன்மா வெளிப்படும் பொழுது நிறைவைத் தருகிறது. அது உள்ளே எழும் முழுமையாகும். உள்ளிருந்து நிறைவு ஏற்படும் பொழுது, மனம் நினைக்க முடியாது. உணர்வு, கவலையையும் தொந்தரவையும் அறிய முடியாது. நம்மைச் சுற்றிலும் தோல்வி என்பதற்கே இடமில்லை என்பதைக் காணலாம். நாம் வெற்றி அடையும் போது, சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் காண்கிறோம். ஆனந்தம் என்பது உணர்வின் சிறந்த முழுமையாகும். ஆனந்தத்தின் முன்னால் சந்தோஷம் மங்கி மறைகிறது.

மனிதப் பிறவி என்பது, ஆன்மா உடம்பு என்ற வடிவத்திற்குள் வருவதாகும். ஆன்மா மட்டுந்தான் உலகில் உள்ள உண்மையாகும். அது அனந்தமானது, காலங்கடந்தது. அது ஆரம்பத்திலிருந்து உள்ளது. நாம் சத்தியம் என்பதை கடவுளைப்போல் வணங்குகிறோம். சத்தியத்தின் முந்தைய நிலை ஆன்மா. இது ஒரு தத்துவ விளக்கம். சத்தியம், மனம் உணர்ச்சிக்கு அப்பாற்பட்டது. சாதாரண வழக்கில் இதைக் கூற வேண்டுமானால், ஆன்மா நம் வாழ்வில் சத்தியம் என்ற தோற்றத்தில் வெளிப்படுகிறது. எனவே நமக்கு சத்தியம் என்பது ஆன்மா. சத்தியம் நமது கடவுள்.

ஆன்மா பூமியில் பிறவி எடுப்பதற்கு விரும்பி, ஒரு உடலைத் தேர்ந்தெடுத்தது. அதை நாம் ஆன்மா உறையும் உடல் என்று கூறுகிறோம். அது மனம் உணர்வைப் பெற்றது. ஆன்மா உறையும் உடலை நாம் நமது சரீரம் என்கிறோம். நமது உடலும், ஆன்மாவின் ஒரு வடிவம் என்பது உண்மைதான். அது மனம் வாழ்வு என்ற வேறு இரண்டையும் உடையது. அதற்கு மேலாக உடம்பிற்குள் ஆன்மாவும் உறைகிறது.

நமது ஜீவனின் எல்லா பாகங்களும், ஆன்மா, மனம், வாழ்வு, உடல் என்று ஆகிய அனைத்துமே ஆன்மாதான். ஏனென்றால் இந்த பிரபஞ்சமே ஆன்மாவால் உண்டாக்கப்பட்டது. அது ஆதியும் அந்தமும், இடைவெளியும் உள்ளடக்கி உள்ளது. அந்த ஆன்மா, மனம், வாழ்வு, உடல் என்றவற்றை வெளிப்படுத்துகிறது. ஆன்மா நம்மில் எழுகிறது என்று நாம் கூறும் பொழுது, ஆதியான ஆன்மா உடல், மனம், வாழ்வு என்ற மேல்மட்டத்திற்கு எழுகிறது என்பதைக் குறிக்கும். அப்படியெழும் பொழுது அது நிறைவு பெறுகிறது. உள்ளே நிறைவு வரும் பொழுது வாழ்வு முழுமையான சுபிட்சத்தை உடையதாக உள்ளது. அந்த முழுமை வெளிப்படும் பொழுது வாழ்வு யோகமாக மாறுகிறது.

*****

86. பாராட்டும் குணம்

ஒவ்வொரு முறையும் முகஸ்துதி இல்லாமல் உண்மையாக பாராட்டும்போது அதற்கு பிரதிபலிப்பு, ஏமாற்றம் தருவதாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பாராட்டும் ஆர்வம், அதை வெளிப்படுத்துவதில் இல்லை. அதை சரியாக வெளிப்படுத்தப்படாமல் இருப்பதிலேயே உள்ளது. இந்தக் கருத்தை ஆராய்ந்து பார்த்து அதில் திருப்தி ஏற்பட்டால், அதை நடைமுறைக்குக் கொண்டுவரலாம். நாம் எதிர்பார்க்கும் பலன் அதன் செயலின் சக்தியால் தீர்மானிக்கப்படுகிறது. அந்த கருத்தை வெளிப்படுத்தும் பொழுது, அந்தக் கருத்தின் சக்தி சிதறடிக்கப்படுகிறது, அதாவது அது பலவீனப்படுகிறது. நிலைமைக்குகந்தவாறு, திறமையைக் காட்டும் நேரம் வரும்பொழுது, அதைப் பயன்படுத்தி பேசுவதில் சக்தியை வெளியில் சிதறடிக்காமல் உள்ளே செலுத்தினால், செயலின் கருத்தும் சக்தியும் வீணாகாமல் பாதுகாக்கப்பட்டு, உள்ளே சக்தி அதிகரிக்கும்.

இந்த சக்தியின் செயல் நிறைவுறுவதை கவனித்துப் பார்க்கும்போது, உன்னுடைய சக்தி அதிகரிப்பதைக் காண்பாய். இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு இது போதுமானது. ஒருவர் தன்னைவிட இளையவரான நண்பரை உண்மையில் நேசித்ததால் அவருடைய நல்ல குணங்களால் கவரப்பட்டு, அவருடைய நல்ல குணங்களைப் பற்றி பாராட்டி பேசுவார். ஆனால் அந்த நண்பரிடமிருந்து இவருடைய பாராட்டுதலுக்கு எந்தவிதமான மறுமொழியும் கிடைக்கவில்லை. ஏனென்றால் அந்த நண்பர் யார் எந்த விஷயத்தைக் கூறினாலும், ஏற்றுக்கொள்ளத் தக்கவராக இல்லாமல், எதிர்மறையான உணர்வுகளைக் கொண்டவராக இருந்தார். இந்த இரண்டு நண்பர்களும் வருடக்கணக்காக ஒருவரை ஒருவர் அறிந்தவர்களாக இருந்தார்கள். பாராட்டை தெரிவித்தவரால், அந்த நண்பரிடமிருந்து எந்தவிதமான பிரதிபலிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை.

இந்த எண்ணம், வயதில் மூத்த நண்பரின் நினைவுக்கு வந்தது. அடுத்த முறை அந்த இளைய நண்பரை சந்திக்கும் சந்தர்ப்பம் வந்தது. அந்த நண்பரை பாராட்ட நினைத்தபோது, அதை வெளியில் தெரிவிக்காமல் அதை தன் உள்ளுக்குள்ளேயே நிறுத்தினார். அவருக்குள் ஒரு மென்மையான மௌனம் நிலைத்ததை உணர்ந்தார். எதிரில் அமர்ந்திருந்த அந்த இளைஞர், மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் புன்முறுவலுடன் இவ்வாறு கூறினார். "நீங்கள் உண்மையிலேயே மற்றவர்களுடைய சக்தியை அறிந்து கொள்வதிலும், அவர்களை உற்சாகமூட்டுவதிலும் வல்லமை படைத்தவராக இருக்கிறீர்கள்” என்று கூறினார். இந்த முழுமையான முறையினால் கிடைத்த வெற்றி, அவருக்கு திகைப்பூட்டுவதாக இருந்தது.

*****

87. இசைக்கச்சேரியில் உச்ச கட்டம்

நேரு ஆகஸ்டு 15, 1947ல் பேசும் பொழுது, நாம் விதியுடன் செய்து கொண்ட முன்னேற்பாட்டின்படி, இந்தியா விடுதலைப்பெற்றது என்று குறிப்பிட்டார். வாழ்வில் நிகழும் ஒவ்வொரு வெற்றிகரமான செயலும், அது எளிமையானதாக இருந்தாலும் அல்லது இம்மைக்கு வேண்டியதாயினும் சரி, அது அந்த நபரைப் பொறுத்தவரை விதியோடு நிகழுமொரு சந்திப்பாகும். ஒரு வேலையின் ஒவ்வொரு பகுதியையும் வெற்றிகரமாக எந்தச் செயலிலும் வெற்றியை அடைய முடியாது. ஒரு வேலையை வெற்றிகரமாக முடிப்பதற்கும், அதன் உச்ச நிலையை அடைவதற்கும் வெகுதூரம் போக வேண்டியிருக்கும். அதாவது சிறப்பாக அதிகமாக உழைக்க வேண்டியதாக இருக்கும்.

ஒரு பாடகருக்கு எல்லா இசைக்கச்சேரியும் வெற்றிகரமாக அமைவதில்லை. ஒரு பாட்டுக்கச்சேரியில் உச்சகட்டத்தை நோக்கிப் போகும்பொழுது, ஒரு வினாடிக்கு முன் நிறுத்தினால் பாராட்டுக் கிடைப்பது இல்லை. முழுவதும் பூர்த்தியடைந்த நுண்மைமிக்க, உணர்ச்சிப்பூர்வமான நேரம்தான், உச்சக்கட்டத்திற்கு வருவதற்கு சாத்தியமாகும். அப்படிப்பட்ட நேரத்தில், ரசிகர்கள் ஆரவார கைதட்டல் ஒலி எழுப்புவார்கள். இது ஒரு சிறந்த பாடகருடைய தனி உரிமையன்று. எல்லாப் பாடகர்களும் தன்னுடைய கச்சேரியில் அத்தகைய உச்சகட்டத்தை அடையமுடியும்.

எளிமையான சமையல்காரர், கௌரவமான வழக்கறிஞர், வணக்கத்திற்குரிய ஆசிரியர், இவர்கள் யாவரும் தங்கள் தொழிலில் அப்படிப்பட்ட நேரத்தைக் காண்பார்கள். நாம் எல்லோரும் வாழ்க்கையோடு எந்நேரமும் உறவாடிக் கொண்டுள்ளோம். அடிக்கடி சாதிக்கிறோம். பலமுறை வழக்கமான வேலை முறைகளிலும் உச்சகட்டத்தைத் தொடுகிறோம். வேலையில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் தருணத்தில், வேலையின் ஆன்மா விழிப்புற்று, முன்னுக்கு வந்து நிற்கிறது. முக்கியமாக அந்த நேரங்கள்தான் மனித உறவில் முக்கியம் வாய்ந்தது. மேலும் அத்தகைய நேரங்கள் ஆன்மீக சிறப்பு வாய்ந்தவை. அத்தகைய அனுபவங்களை பெற்றவர்கள் இவ்வான்மீக உண்மையை உணர்ந்து ஏற்றால் இப்பொழுது ஆன்மாவை அழைப்பதில் பெரும் வெற்றியைக் காண்பார்கள்.

என்னுடைய வாசகர் ஒருவர் தன்னுடைய தொழிலில் இந்த முறையை வெற்றிகரமாகப் பின்பற்றி வாழ்வில் பெரும் பலனையும் மாற்றத்தையும் கண்டதாக எழுதியுள்ளார்.

*****

88. பரீட்சை ஜுரம்

லண்டனில் ஒரு அனுபவமிக்க டாக்டர், பல தேர்வுகளை நடத்தியவர், தன்னுடைய 50வது வயதில் பதவி உயர்வுக்கு, விதிமுறைகளின்படி பரீட்சை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு, உட்பட்டார். திகைப்பூட்டும் வகையில் அவருக்கு ஜுரம் வந்துவிட்டது. அது பரம்பரைப் பழக்கம், சூழ்நிலை, சமூக நம்பிக்கைகளால் ஏற்பட்ட நம்பிக்கையாகும். மனோதத்துவ நிபுணர்கள், இயற்கையாக வரும் பயத்திற்கும், செயற்கையாக சமூகம் உண்டு பண்ணும் பயங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிவார்கள். தனி நபருடைய நம்பிக்கை மற்றும் சமூகத்தின் கூட்டு நம்பிக்கை என்றவற்றின் காரணமாக பயம் விளைவதுண்டு. சமூகத்திற்குக் கட்டுப்படும் மனிதனுக்கு சமூகம் கடவுளாகிறது.

மாணவனுக்கு பரிட்சை, வழக்கறிஞருக்கு வழக்கில் தீர்ப்பு, அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு, தொழில் ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடப்பது, தேர்தல் கூட்டுக்கு உடன்பாடு ஏற்படுவது, சர்வாதிகாரி, போன்ற சக்தியுள்ளவர்களுடன், பலவீனமான இளைய கூட்டாளி இலாபத்தில் கணக்கைத் தீர்த்துக் கொள்வது, சுயநலவாதிகள், தந்திரமாக தலைமறைவாகியுள்ள கடத்தல்காரர்கள், போன்றவர்களுக்கு அநேக நேரங்களில் இதுபோன்ற பரீட்சை ஜுரம் வருவதுண்டு. லட்சியமான காதல் வயப்பட்டவர் தன் பிரியத்திற்கு உரியவர் அதே லட்சியக் காதலை கொண்டிருக்காவிட்டாலும் தன் எண்ணத்தை வெளியிடும் வேலையில் இப்படியொரு ஜுரத்தை அனுபவிப்பார். இருப்பக்கமும் லட்சியம் இருந்தபோதிலும், உண்மையான காதலுக்கு பல இடையூறுகள் ஏற்பட்டு, காதலை சுமூகமாக இருக்கவிடாது. காதலர்கள் முடிவு எடுக்க சந்திக்கும் பொழுது, அவர்களுக்கு காதல் ஜுரம் வருவதுண்டு.

சுருங்கக் கூறின் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஏற்படும் நிகழ்ச்சியும், இந்த ஜுரத்தை ஏற்படுத்தும். வாழ்விலோ வழிபாட்டிலோ, நமக்குத் தெரிந்த வரையில் தீர்வு இல்லை. அதனுடன் வாழ்வதிலேயே பழகிவிடுகிறார்கள். நமக்கு சோதனை வருகின்ற நாளுக்கு பல நாட்கள் முன்னாலிருந்து தினமும் இரவில் படுக்கப்போகும் முன் மனத்தின் ஆழத்திலிருந்து அன்னையை அழைக்க வேண்டும். உன்னுடைய தூக்கம் சுகமாக இருக்கும். மறுநாள் விழித்தெழும் பொழுது, அந்த சோதனைப் பற்றிய எண்ணம் முதலெண்ணமாக வந்து பிரார்த்தனை செய்யலாம். அந்த ஜுரம் இனி இருக்காது. அதனுடைய இடத்தில் ஆன்மாவின் அமைதி ஆட்சி செய்யும். அந்த அமைதி எல்லோரிடத்திலும் பரவும்.

*****

89. சமர்ப்பணம் ஆன்மாவை அழைத்தலாகும்

நாம் நமக்காகவும் நமது குடும்பத்திற்காகவும் வாழ்கிறோம். உயர்ந்த ஆத்மாக்கள் பிறருக்காக வாழ்கிறார்கள். நாட்டுப்பற்று உடையவர் தேசத்திற்காக வாழ்கிறார். ரிஷி கடவுளுக்காக வாழ்கிறார். சமர்ப்பணம் இறைவனுக்காக செய்யப்படுவது. அவர் இறைவனின் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்காகவே பூமியில் வாழ்கிறார். நம்முடைய வாழ்வு தானாக இயங்கக் கூடியது. நடப்பதிலும் தும்முவதிலும் உடல், நம்முடைய விருப்பம் இல்லாமலே, அனுமதியில்லாமலே தானாகவே இயங்குகிறது.

ஒரு உரையாடலில் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு பதிலளிக்க வேண்டாமென்று, நீ தீர்மானித்தாலும் உன்னை அறியாமலேயே அதற்கு பதில் அளிப்பாய். அது தும்முவது போல், ஆழ்மனத்திலிருந்து தன்னிச்சையாக செயல்படுவதால் அதை நீ தடுக்க முடியாது.

நமது செயல்கள் உடலால் செய்யப்படுபவை. நம்முடைய மனவெழுச்சிகள் உணர்ச்சியைச் சார்ந்தவை. நமது எண்ணங்கள் மனதைச் சார்ந்தவை. இவை யாவுமே நமது ஜீவியத்தினுடையது அல்ல. ஒரு ஆன்மீகவாதி இறைவனுக்காகவோ அல்லது ஆன்மாவுக்காகவோ வாழ்கிறார். அதற்காகவே செயல்படுகிறார். இறைவனுக்காக செயல்படுவது சமர்ப்பணம். அவ்வாறு செயல்படுவதில் ஒருவர், ஆன்மாவை நிச்சயமாக அழைப்பவராகிறார்.

பேச வேண்டுமென்ற எண்ணமிருந்தால் பேசாமலிருக்க முயற்சி செய்யவும். வெற்றி கிடைப்பதரிது. கட்டுப்பாட்டை மீறி பேச்சு வருவதைப் பார்க்கலாம். நீ உன் மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் பொழுதோ, அல்லது ஒரு பெரிய ஆர்டர் இதுவரை கிடைக்காததற்கு ஒப்பந்தம் செய்ய, பேச்சுவார்த்தை நடத்தும் பொழுதும் நீ உன் ஒவ்வொரு செயலையும் எண்ணத்தையும் சமர்ப்பணம் செய்தால் நீ எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உன் கற்பனையைவிட அதிகமாக பலன் வருவதைக் காண்பாய்.

சமர்ப்பணம் செய்வது இறைவனை, நம்முள் செயல்படச் செய்வதாகும். அவர் நம்மைவிட திறமைசாலியானதால், பலன் அபரிமிதமாக வரும். நம் திறமையில் அதிகமாக நம்பிக்கை வைத்திருப்பதால், நாம் கடவுளை நம்புவதில்லை. கடவுளை நம்புவது ஆன்மாவை நம்புவதாகும். நம்முடைய செயல்களை அவரிடம் ஒப்படைப்பது ஆன்மாவை அழைப்பதாகும். யோகத்தில் அது சமர்ப்பணம் எனப்படும். யோகம் செய்யும் சாதகருக்கு, சரணாகதி என்பது உயர்ந்த நோக்கமாகும். சமர்ப்பணத்தின் ஆரம்பம் சரணாகதியில் முடிகிறது. அது பூரணமாக முடிவு பெறுகிறது.

*****

90. நன்றியறிதல்

மனித வாழ்வில் இறைவன் செயல்படுவதை மனப்பூர்வமாக உணர்வதே நன்றியறிதலாகும். அப்படி புரிந்து கொள்வது ஒருவருடைய ஜீவியத்தை ஊடுருவி, அவர் ஏற்புடையவராக இருக்கும்பட்சத்தில் அவரை மெய்சிலிர்க்க வைக்கும். கண்ணில் விழுந்த தூசி அது அகற்றப்படும் வரை கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கும். ஒரு வருடமாக என் கண்ணில் தூசு விழுந்ததே இல்லை. அது எப்படி நிகழ்ந்தது என்று நான் அதைப் பற்றி எண்ணிப் பார்க்கவில்லை. கண் எப்பொழுதும் பாதுகாக்கப்படுகிறது என்றும், அது இறைவன் செயல் என்றும் நமக்கு எப்பொழுதாவதுதான் நினைவுக்கு வருகிறது. நமக்கு பல நேரங்களில் நல்லவை நடக்கின்றன. அப்பொழுது "இறைவனுக்கு நன்றி” என்று ஆச்சரியத்தால் கூறுகிறோம்.

சூட்சுமப் பார்வை உள்ள ஒருவருக்கு, தன்னைக் கடவுள் வழிநடத்திச் செல்வது தெரியும். ஒரு சாலையில் ஜீப் போய்க் கொண்டிருந்த பொழுது, குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை தவிர்க்க முயலும்போது, ஜீப் வயலில் இறங்கிவிட்டது. அந்த வளைவில் ஜீப்பின் இரண்டு சக்கரங்கள் பள்ளத்திற்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தன. அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு கீழே குதித்துவிட்டார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்மணி, "நான் அந்த ஜீப்பை அம்மா தன் சேலையின் நுனியில் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்” என்று அலறினார். நாம் ஆபத்திலிருந்து தெய்வாதீனமாக பிழைத்தோம் என்று சொல்லுவோம். ஆனால் நாம் எப்பொழுதும் இறைவனின் பாதுகாப்பில் இருக்கிறோம் என்று நினைப்பது இல்லை.

மனம் உள்ளே முழுமையாக நிறைந்திருக்கும் பொழுது, உன்னுடைய இதயத்தில் நல்லெண்ணம் பொங்கி வரும் நேரத்தில், நீ பிரியமாக நேசிக்கும் சகோதரர், நண்பர், புதல்வர், ஆகியோருக்கு நிரம்பி வழியும் உன் நல்லெண்ணத்தை, உன் இதயத்தில் உள்ளதை மனதால் அனுப்பு. விரைவில் அவர் உன்னை சந்தித்து, நல்லெண்ணத்தை அவருக்கு அனுப்பிய ஏறக்குறைய அதே நேரத்தில், அவருக்கு நல்லது நடந்ததைக் கூறுவார். தான் சந்தித்து சண்டை போடுவதாக இருந்த விற்பனை வரி அதிகாரி எப்படி பழைய நண்பராக இருந்தார் என்பது போன்ற ஏதாவது ஒரு நல்ல செய்தியையும் கூறுவார்கள். இப்படிப்பட்ட நல்லெண்ணம் தவறாமல் பெறுபவர்க்கு அதிர்ஷ்டத்தை உண்டு பண்ணும்.

கடவுள், ஆன்மா, தெய்வீக அன்னை என்று இறைவனை நாம் பலவாறாகப் பெயரிட்டு அழைக்கும் அவர், நம் வாழ்வின் சுமையை அன்புடன் தாங்கிக்கொள்கிறார். இதை உணர்வுபூர்வமாக அறிவதே இறைவனுக்கு தெரிவிக்கும் மனத்தின் நன்றியறிதலாகும்.

நாம் நம் உணர்வில் அதை அறியும் பொழுது, நமது சக்தி கரைபுரண்டு வழிவதை, மனத்திற்கு மகிழ்ச்சி அளிப்பதை உணர்கிறோம். நாம் இந்த அறிவைப் பெறும் பொழுது நமது உடல் சிலிர்க்கிறது. பகவான் ஸ்ரீ அரவிந்தர் இதைத் தாங்கமுடியாத ஆனந்தப் பரவசம் என்று கூறுகிறார். அன்னை இதை இடையறா பேரானந்தம் என்று கூறுகிறார்.

*****book | by Dr. Radut