Skip to Content

01 . முன்னுரை

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

பாகம் - 1

வாழ்வில் ஆன்மா என்பது என்ன?

ஆன்மா ஆண்டவனை அடைவது மோட்சம். ஆன்மீகம் என்பது மோட்சம் சம்மந்தப்பட்டது, அது வளமான வாழ்வு அல்ல. நமது மரபு வழி வந்த இந்துவுக்கோ அல்லது இந்தியனுக்கோ ஆன்மீகம் வாழ்வில் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்ற புதிய கருத்து நூதனமானதொன்றாகும். குடும்ப வாழ்வில் உள்ளவர்கள், சந்நியாசம் விரும்பத்தக்கது அல்ல என்று கருதி, ஆன்மீகம், யோகம் முதலியவற்றில் நாட்டம் செலுத்தாமல் இருப்பதில் கவனமாக இருக்கிறார்கள். இது மிகவும் துல்லியமாகப் புறக்கணிக்கப்படுகிறது. அவர்கள் குழந்தைகளுக்கும் அவ்வாறே கற்பிக்கப்படுகின்றது. அதில் அவர்கள் நிலை சரியானதே.

ஒரு குடும்பம் 1934ல் ஏழு கிராமங்களில் 1000 ஏக்கர் நிலங்கள் வைத்திருந்தது. அந்தக் குடும்பத்தில் இருந்த ஆறு சகோதரர்களும் அந்தக் கிராமத்தின் வீதிகள் அனைத்தையும் தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து அனுபவித்து வந்தார்கள். திடீரென்று ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு, காவி உடை அணிந்த சந்நியாசி ஒருவர் வந்தார். வீட்டில் உள்ளவர்கள் சந்நியாசியின் வருகையால் மகிழ்ச்சி அடைந்தவர்களாய், அவரை பக்தியுடன் வணங்கினார்கள். அவர் அன்றிரவு அவர்கள் வீட்டில் தங்குவதற்கு விருப்பம் இருப்பதைத் தெரிவித்தார். ஒவ்வொருவரும் மின்சாரம் தாக்கியதுபோல் உணர்ந்தார்கள்.

சகோதரர்கள் ஒவ்வொருவரும், அந்த சந்நியாசியை தங்களில் யாராவது ஒருவர் அழைத்திருந்ததாக எண்ணினார்கள். அவர்கள் தங்களுக்குள்ள அன்பின் கட்டுப்பாட்டின் காரணமாக, பேசாமல் இருந்து விட்டார்கள். அவர்களை, திகைப்புக்குள் ஆழ்த்தும் வகையில் அந்த சாமியார், அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டார். அப்படியே 30 நாட்கள் அங்கே தங்கிவிட்டார். அந்த சந்நியாசியை யாரும் அழைக்கவில்லை என்ற உண்மையை, பிறகு தெரிந்து கொண்டார்கள். சாமியார் வீட்டை விட்டுப் போய்விட்டார். ஒரு சந்நியாசி, ஒரு வீட்டில், ஒரு இரவு தங்கினால் அந்தக் குடும்பம் சீரழிந்துவிடும் என்பது நம்முடைய உண்மையான நம்பிக்கை. அந்தக் குடும்பம் விரைவிலேயே எல்லாச் சொத்துக்களையும் இழந்துவிட்டது. நம்முடைய மரபுவழி நம்பிக்கை உண்மையென உறுதியாகிறது.

மனிதனுக்கு உடல், பிராணன், மனம், ஆன்மா என கரணங்கள் உண்டு. இதில் நான்கு கரணங்களில் ஒன்றான, ஜீவன் தவத்தின் மூலமாக உடலிலிருந்து விடுபட்டு மோட்சத்தை நாடுகிறது. எனவே வாழ்வை விலக்கும் ஆன்மீகத்தை குடும்பஸ்தர்கள் வெறுக்கிறார்கள்.

உபநிஷதங்கள் "சர்வம் பிரம்மம்" என்று அறிவிக்கின்றன. எனவே, நமது உடல், உயிர், மனம், ஆன்மா எல்லாமே பிரம்மம். நமது ஆன்மா ஜீவாத்மா என்று அறியப்பட்ட சாட்சி புருஷன். இதற்கு நம்முடைய ஜீவனின் மற்ற பகுதிகளில் பிரதிநிதிகள் உள்ளன. இப்படி நமது மனம், உயிர், உடல் யாவும் ஆன்மாவை புருஷனாக உடையவை. அவை மனோன்மய புருஷா, பிராணமய புருஷா, அன்னமய புருஷா என்று அழைக்கப்படுகின்றன. இவைகளும் கூட ஜீவாத்மாவின் குணங்களை கொண்டுள்ளன.

அவை எல்லாம் வேறுபாடு இல்லாத மாறாத தன்மை உடையனவாகும். பிரகிருதிக்கும் ஆன்மா உள்ளது. இந்த ஆன்மா வளரும் தன்மை உடையது. அதற்கு சைத்திய புருஷன் என்று பெயர். அது பிரகிருதியின் அனுபவங்களின் சாரத்தை எடுத்துச் செல்கிறது. அதற்கும் நமது பகுதிகளில் பிரதிநிதிகளுண்டு. அவை மனோன்மய சைத்திய புருஷன், பிராணமய சைத்திய புருஷன், உடலின் சைத்திய புருஷன் என அழைக்கப்படுகின்றன.

நம்முடைய மரபு சைத்திய புருஷனைப் பற்றி அறியும். ஆனால் அது வளரும் ஆன்மா என்று நமது மரபு அறிந்து கொள்ளவில்லை. நான் இங்கே குறிப்பிடுவது, வளரும் சைத்தியப் புருஷனைப் பற்றித்தான். நான் வேண்டுவது யாதெனில், இந்த வளர்ச்சி அடையும் சைத்திய புருஷனை வெளிக்குக் கொணர வேண்டுமென்பதே. உடலைவிட மனம் சக்தி வாய்ந்தது. மனத்தைவிட ஆன்மா அதிக சக்தி வாய்ந்தது. இந்த உதார குணம் படைத்த நன்மை தரும் ஆன்மாதான், மனம் அல்லது உயிர் அல்லது உடல் இவற்றை மிக்க வளமையாக்குகிறது.

இந்த சைத்திய புருஷன் பரிணாம வளர்ச்சியுடையது என்ற புதிய தத்துவம், பகவான் ஸ்ரீ அரவிந்தரால், தன் யோகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நூறு கட்டுரைகளின் கடைசிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ள அனுபந்தத்தில் "ஆன்மாவை எப்படி பிரார்த்தனை மூலம் அழைக்கலாம்" என்று விவரிக்கப்பட்டுள்ளது. அந்த ஆன்மாதான்,

  1. கர்மத்தை கரைக்கிறது.
  2. ஒருவருடைய ஆழ்மனத்தில் எழுப்பப்படும் குரலுக்கு உடனடியாக பதில் கொடுக்கிறது.
  3. அன்றாட பிரச்சனைகளில் தீர்வு காண்கிறது, மற்றும்,
  4. உள்ளே உறையும் முழுமையான இந்த ஆன்மாதான் உலகில், வாழ்வை அற்புதமாக்குகிறது. 

ஆன்மாவின் பலதரப்பட்ட அம்சங்களை, அன்னை அன்பர்களின் அனுபவத்தின் உதாரணங்களுடன், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் எழுதி வருகிறேன். கர்மாவின் சுவடு பற்றிய முழு விவரமோ அல்லது காலந்தவறாமை குறித்தோ அதில் விவரிக்க முற்படவில்லை. நீண்டதொரு விளக்கங்கள் தேவைப்படுகின்ற அனேக கேள்விகளை எழுப்பி, வாசகர்கள் எனக்கு எழுதுகிறார்கள். அவர்களுக்கு நான் மூலமான நூல்களைக் குறிப்பிட்டு என் பதிலில் மூலங்களின் சாரத்தை சுருக்கமாக வழங்குகிறேன்.

அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை ஆன்மீக சக்தியால் எப்படி தீர்த்துக் கொள்ள முடியும் என்பதை மட்டும், எக்ஸ்பிரஸ் பத்திரிகை கட்டுரைகளில் வெளியிடுகிறேன். பிரார்த்தனையால் (invocation), ஆன்மா கொண்டு வரும் வாய்ப்புகளைப் பற்றி சிறிதளவே வாசகர்களுக்கு கூறுகிறேன். இந்த புத்தகத்தில் வரும் கட்டுரைகளில், மூலத்தில் பிரசுரிக்கப்படாத வாசகங்களில் சிறு மாறுதல்கள் இருந்தாலும் அதன் உட்பொருளில் முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை.

 

பாண்டிச்சேரி                                                                                                            - கர்மயோகி
20-03-2003
book | by Dr. Radut