Skip to Content

06. பொன்னான நேரங்கள்

பொன்னான நேரங்கள்

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

சொற்பொழிவாற்றியவர்: N. அசோகன்

சொற்பொழிவாற்றிய தேதி: 24. 04. 2014

எல்லோர் வாழ்க்கையிலும் பொன்னான நேரம் அமைவதுண்டு. தன் கடந்த கால வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்ப்பவருக்கு இது பொருந்தும். தான் பள்ளியில் படித்த நாட்கள் பொன்னான நேரம் என்று ஒருவர் சொல்லுவார். பல ஊர்களுக்கு மாற்றலாகி வாழ்ந்தவர், ஒரு குறிப்பிட்ட ஊரை நினைவுபடுத்தி தான் அங்கு வாழ்ந்த நாட்கள்தாம் தன் வாழ்வில் பொன்னான நேரம் என்று கூறுவார். பல்வேறு தடைகளையும், எதிர்ப்புகளையும் மீறி, தாம் விரும்பிய பெண்ணையே கரம் பிடித்ததுதான் பொன்னான நேரம் என்று ஒருவர் சொல்லுவார். தாம் தொடங்கிய தொழில் பல வருடங்களாக மந்த நிலையில் இருந்து, ஒரு கட்டத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்தபோது அதையே அவர் பொன்னான நேரம் என்று சொல்லுவார். இப்படிச் சாதாரண மனிதர்கள் வாழ்க்கையில் பொன்னான நேரம் என்பது அவரவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது. இப்போது அன்னை பக்தர்களுக்கு வருவோம். அன்னை இருந்தபோது அவரைப் பால்கனி தரிசனம் செய்தவர்கள் அதையே தன் வாழ்க்கையில் பொன்னான நேரம் என்று சொல்லுவார்கள். அன்னை சமாதியானபின் அவரிடம் வந்தவர்கள் அவரைப்பற்றிக் கேள்விப்பட்ட நேரம், அவரைப் பற்றிய புத்தகத்தைப் படித்த நேரம், அவருக்காக உள்ள தியான மையத்திற்கு வந்த நேரம் என்றிவற்றையெல்லாம் பொன்னான நேரமாகக் கருதுவார்கள்.

வாழ்க்கையில் இன்பமான நேரத்தை மட்டும் பொன்னான நேரம் என்று நாம் சொல்வதற்கில்லை. நாம் வாழ்க்கையில் சரியான முடிவை எடுக்கும் நேரமும் அவரவர் வாழ்க்கையில் வரத்தான் செய்கிறது. இப்படி முக்கியமான நேரமாக உள்ள சந்தர்ப்பங்களையெல்லாம் நாம் பொன்னான நேரம் என்று சொல்லலாம். உதாரணமாக, பகவான் அலிப்பூர் சிறையிலிருந்து வெளியில் வந்தார். வந்தவர் மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் உள்ளேயிருந்து அசரீரி ஒன்று எழுந்து, ‘உலகை உய்விக்க புதுவைக்குச் சென்று யோகம் செய்’ என்று கட்டளை இட்டது. அந்த அசரீரியை பகவான் மதித்தார். அதன்படி அவர் புதுவைக்குச் சென்றார். அப்படி அவர் அந்த அசரீரியின் சொற்படி நடந்து கொண்டது அவருக்கு மட்டுமின்றி உலகிற்கே பொன்னான நேரமாக அமைந்தது. அம்மாதிரியே நேரு மற்றும் பட்டேல் இருவரும் வக்கீல் தொழில்தான் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களைச் சந்தித்த காந்திஜி அவர்களின் வக்கீல் தொழிலை விட்டுவிட்டு தாய் நாட்டிற்குச் சேவை செய்ய அழைத்தார். அதை அவர்கள் இருவரும் ஏற்றுக் கொண்டது இந்திய நாட்டிற்கே பொன்னான நேரமாக அமைந்தது. இன்று இந்தியாவில், M.S. சுவாமிநாதன் அவர்கள் உணவுத் துறையில் பிரபல விஞ்ஞானியாக உள்ளார். அவர் இளம் வயதில் I.P.S. தேர்வில் வெற்றி பெற்றார். அவர் அப்பாவோ அவர் போலீஸ் அதிகாரியாக வருவார் என்று நினைத்தார். ஆனால், சுவாமிநாதன் அவர்களோ போலீஸ் துறைக்குப் போகாமல் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் விவசாயக் கலை படித்து, விவசாயத்தில் ஆராய்ச்சியாளராக உருவெடுக்கப் போவதாக அறிவித்தார். அப்படி ஒரு முடிவை அவர் எடுக்காமல் வெறும் காவல் துறை அதிகாரியாகப் போயிருந்தார் என்றால், நாடு ஒரு தலைசிறந்த விஞ்ஞானியை இழந்திருக்கும். ஆனால் அப்படி ஒரு முடிவை எடுக்காமல் விவசாயத் துறைக்கு அவர் வந்தது நாட்டிற்கு ஒரு பொன்னான நேரமாகும்.

சில பேருக்கு அவர்களுடைய அற்புதமான குண விசேஷங்கள் வெளிவரும் நேரம் பொன்னான நேரமாக அமைகிறது. தனக்கு வயதாகிவிட்டதால் தன்னை பெண் பார்க்க வந்த வரனுக்கு தன் தங்கையை அலங்கரித்து அனுப்பிய பெண்ணிற்கிருந்த பரந்த மனப்பான்மை அவளுடைய குடும்பத்திற்கே பொன்னான நேரமாக அமைந்தது. ஏனென்றால் விஷயத்தை அறிந்த வரன் அப்படிப் பரந்த உள்ளம் கொண்ட மூத்தவளைத் தான் மணந்து, தன் தம்பிக்குத் தங்கையை மணம் முடித்தான். பெண் பார்க்க வந்த வீட்டிலிருந்த சிறுவனுக்குத் தன் செலவில் பூணூல் சடங்கையும் செய்தான். பொதுவாக தனக்குத் தெரிந்தவருக்கு வாழ்க்கையில் நல்லது நடந்தாலே மனதில் பொறாமை எழுவதுண்டு. அடுத்தவர்களுக்குக் குபே சம்பத்து வந்தபோதும் தன் மனம் பொறாமையால் பாதிக்கப்படாதவரும் உண்டு. அப்படிப்பட்டவருக்கு அந்த நேரம் பொன்னான நேரமாக அமைவதுமுண்டு. பொதுவாக நாம் யாரைத் திட்டினாலும் திட்டினை பெறுபவருக்குக் கோபம்தான் வரும். அதிலும் திருமண வாய்ப்பைக் கொடுக்கும் பொழுது அந்த வாய்ப்பினைப் பெறப் போகின்ற பெண்ணே அவனைக் கண்டபடி திட்டுகிறாள் என்றால், தாங்க முடியாத அவமானமும், ஆத்திரமும்தான் வரும். அப்படி நடக்காமல் அந்த நேரத்திலும் அவள் திட்டியதில் ஒரு உண்மை இருக்கிறது என்று அந்த உண்மையை ஏற்று என் மனதை மாற்றிக் கொள்கிறேன் என்பவனின் உள்ளம் ஒரு பொன்னான உள்ளமாகும். தான் செய்ய வேண்டிய வேலையைத் தனக்காக செலவு செய்து ஒரு உறவினர் செய்யும்போது அந்தச் செலவை தான் ஏற்று உறவினருக்குப் பணத்தைத் திருப்பித் தருகின்ற மனிதர் பொன்னான மனிதராவார். தன்மீது அவதூறு கூறிய காரணத்தினால் தொழில் கெட்டு, நஷ்டத்திலாழ்ந்து, - திவாலாகிப் போனவரைப்பற்றிக் கேள்விப்பட்டு சந்தோஷப்படாமல், அந்தச் சூழ்நிலையிலும் எதிரியை மீண்டும் நிமிர்த்த முயலும் உள்ளம் பொன்னான உள்ளம். அப்படிப்பட்டவர் சாதாரண மனிதரே இல்லை. அவரை ஒரு மாமனிதர் என்றுதான் சொல்ல வேண்டும்.

நம்முடைய ஆன்மாவின் நோக்கங்களை மதித்து அதற்கேற்றாற்பேõல் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அப்படிப்பட்ட வாழ்க்கை சீராக ஆற்றொழுக்காக அமைகிறது. திடீரென்று காரணமில்லாமல் குணம் கெட்டு அந்தப் பாதையைவிட்டு நாம் விலகிச் செல்லும்போது வாழ்க்கை தடுமாறுகிறது. ஒரு கட்டத்தில் விழிப்புணர்வு வந்து, மீண்டும் சரியான பாதைக்குத் திரும்பும்போது அப்படித் திரும்புகின்ற நேரம் பொற்காலமாக அமைகின்றது. எவருமே ஒரு காரியத்தைச் செய்ய முன்வராதபோது தான் மட்டும் தைரியமாக அக்காரியத்தைச் செய்ய முன்வந்தால், அப்படி முன்வருகின்ற நேரம் பொன்னான நேரமாகும். ஹிட்லருடைய விமானப்படை இங்கிலாந்தைத் தாக்க முற்பட்டபோது, இங்கிலாந்து நாட்டு பொதுமக்களும், பெரும்பாலான அரசியல்வாதிகளும்கூட ஹிட்லருக்கு அடிபணியத் தயாராகி விட்டனர். ஆனால், சர்ச்சில் ஒருவர்தாம் ஹிட்லருக்கு சரணடையக் கூடாது. நாம் அவரை எதிர்த்துப் போராடி ஜெயிக்க வேண்டும் என்று வீர ஆவேசமாகப் பேசினார். அதை ஏற்றுக் கொண்டு அந்நாட்டு மக்களும், அரசியல்வாதிகளும் மனம் மாறி ஹிட்லரை எதிர்க்க முன்வந்தனர். அப்படி மனம் மாறிய நேரம் பொன்னான நேரம். அன்பான கணவரை இம்சை செய்து பார்க்கப் பிரியப்பட்ட மனைவி அவரிடம் “ஒரு மணி நேரமாவது உன்னை ஜெயிலில் அடைத்து சந்தோஷப்படாமல் விடமாட்டேன்” என்று சொன்னால், அப்படிப்பட்ட மனைவியிடம்கூட கணவன் பரிவுகாட்டிய நேரம் பொன்னான நேரம்.

உலக வரலாற்றில் ஆயுதம் ஏந்திப் போராடாமல் சுதந்திரம் பெற்ற முதல் நாடு இந்தியாதான். இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இந்தியா பலஹீனமான நாடாக இருப்பதால், அடிமை நாடாகிவிட்டது என்றெல்லாம் நாம் நினைக்கக் கூடாது. பாரதமாதாவின் அடிமைத்தனத்தை, நாம் கற்புக்கரசியின் கற்பிற்குச் சமமாக நினைகின்றோம். கணவருடைய முரட்டுத்தனத்திற்குப் பயந்து, பெண்கள் அடங்கிப் போவதுண்டு. கணவனுக்குக் கட்டுப்பட்டிருப்பதுதான் முறை என்று புரிந்து கொண்டு அதன்படி கட்டுப்படுவதுண்டு. அப்படிப்பட்டக் கற்புக்கரசியின் கற்பின் வலிமை அல்பமான கணவனையும் சிறந்த மனிதனாக மாற்றும். கோயில் குருக்களுடைய பக்தியும், வழிபாடும் எப்படி விக்ரஹத்தைத் தெய்வமாக மாற்றுகிறதோ, அம்மாதிரியே கற்புக் கரசியின் மனவலிமை சாதாரண ஆண்மகனையும் தெய்வ மகனாக மாற்றும். அந்தக் கற்புத்தன்மை உச்சக்கட்டத்தை அடையும் போது எமனிடமிருந்தே தன் கணவனின் உயிரை மீட்கக் கூடிய திறமையை அந்த கற்புக்கரசிக்கு அளிக்கிறது. இதை நாம் சாவித்ரி காவியத்தில் பார்க்கிறோம். இந்திய நாடு தானே ஒன்றுபட முன்வராதபோது அந்நியன் உள்ளே நுழைந்தால், அவன் நாட்டை ஒன்றுபடுத்துவான் என்று பாரத மாதாவிற்குப் புரிந்ததால், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர் களின் வருகைக்குப் பாரத மாதா சம்மதித்தாள். இவ்வாறு அந்நியர், ஆதிக்கம் செலுத்த உள்ளே நுழைந்த நேரம் நாட்டில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நிறைய மக்கள் முஸ்லீமாக மாறினால், சமத்துவம் கிடைக்கும் என்று நம்பி அம்மதத்திற்கு மாறினார்கள். இப்படி இவர்கள் மாறினாலும்கூட இந்தியர்களாக இருப்பதில் அவர்கள் மனதில் வேறுபாடு வரவில்லை. நாட்டை ஆக்கிரமிப்புக்கு ஆளாக்கிய ஆங்கிலேயர்களுக்குதான் இந்துக்களையும், முஸ்லீம்களையும் பிரித்து வைப்பதில் ஆதாயம் தெரிந்தது. ஆங்கிலேயர்கள் மத வேற்றுமையை வளர்த்த போதிலும் 1930-இல் நடந்த தேர்தலில்கூட முஸ்லீம்களுக்கு இந்துக்கள்மேல் துவேஷம் வரவில்லை.

அந்தத் தேர்தலில்கூட முஸ்லீம்கள் காங்கிரஸிற்குத்தான் ஓட்டுப் போட்டார்கள். இந்த நேரத்தில் ஆங்கில அரசாங்கம் இந்தியன் டொமினியன் ஆக்ட் என்ற ஒரு சட்டத்தை ஆங்கில பார்லிமெண்ட்டில் கொண்டு வந்தது. அப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது நாட்டின் சரித்திரத்தில் ஒரு பொன்னான நேரம். அந்தப் பொன்னான நேரத்தின் அருமையை நாடு உணராமல் உதாசீனப்படுத்தி விட்டது. அப்படிச் செய்தது நம்முடைய துரதிர்ஷ்டமாகும். வாய்ப்பை ஒரு முறை நழுவ விட்டால் அது மீண்டும் வருவது கடினம். ஆனால் ஆண்டவனின் அருள் இந்தியாவிற்கு ஏராளமாகக் கிடைத்துள்ளதால் அதே வாய்ப்பு மீண்டும் 1942-இல் இந்தியாவிற்கு கிரிப்ஸ் கமிஷன் மூலம் வந்தது. “டொமினியன் ஆக்ட்டை முதலில் ஏற்றுக் கொண்டு பின்னர் நாளாவட்டத்தில் சுதந்திர நாடாக மாறிக் கொள்ளலாம், அப்படிச் செய்யும்போது நாட்டின் ஒற்றுமை கெட்டுப் போகாது, ஆகையால் கிரிப்ஸ் கமிஷன் அளிக்கும் சலுகைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று பகவான் காங்கிரஸ் தலைமையிடம் விண்ணப்பம் விடுத்தார். அப்படி பகவான் விண்ணப்பம் விடுத்த நேரம் பொன்னான நேரம் வைரமாக மாறிய நேரமாகும். பகவானுடைய விண்ணப்பத்தை மட்டும் காங்கிரஸ் தலைமை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று இந்தியா, பாகிஸ்தான் என்று நாடு பிளவுபட்டிருக்காது. ஆனால் காங்கிரஸ் தலைமை அறிவில்லாமல் அதை நிராகரித்து விட்டது. காந்திஜி அவர்கள் “அரவிந்தர்தாம் அரசியல் வேண்டாம் என்று துறவறத்திற்குப் போய் விட்டார். இப்போது ஏன் அரசியலில் தலையிடுகிறார்” என்று இடக்காகக் கேள்வி எழுப்பினார். இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் பகவான் உலகின் சூட்சும நிலைமை என்ன என்று ஒரு கணக்கு எடுத்தார். சூட்சும உலகில் நெகட்டிவாக செயல்படக் கூடிய கரிய சக்திகள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்ததைக் கண்டார். இவற்றிக்கு எதிராக பாசிட்டிவ் சக்திகளும் ஒன்று திரள்வதையும் கண்டார். சூட்சும உலகில் இவற்றினிடையே மூண்ட போர் முடிவிற்கு வரவில்லை என்பதையும் அறிந்தார். ஜட உலகில் இதேமாதிரியான போர் நிகழ்ந்தால்தான், இந்தப் போராட்டம் முடிவுக்கு வரும் என்று அறிந்தார். அப்படி நிகழ்ந்த உலகப் போருக்கு அன்னையின் போர் என்று பெயரிட்டார். பாஸிட்டிவ் சக்திகள் போரில் வெற்றி பெறவும், அவர் வழி செய்தார். இந்தச் சமயத்தில்தான் இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் அவர்கள் பிரான்சும், இங்கிலாந்தும் ஒன்று சேர்ந்து ஜெர்மன் தாக்குதலை சமாளிக்கலாம் என்று ஒரு கருத்து தெரிவித்தார். பேசாமல் ஹிட்லருக்குச் சரணடைந்து விடுவோமா என்று பிரெஞ்சுத் தலைவர்கள் யோசித்துக் கொண்டிருந்த நேரம் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார். பிரெஞ்சு தேசத்தின் வாழ்க்கையில் இது ஒரு பொன்னான நேரம் என்று நாம் சொல்லலாம். ஆனால் அசம்பாவிதமாக பிரெஞ்சுத் தலைவர்கள் இந்த யோசனையை ஏற்க மறுத்து விட்டார்கள்.

இதனால் இங்கிலாந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. 250 விமானங்கள் கொண்ட ஆங்கிலேய விமானப்படை 750 விமானங்கள் கொண்ட ஜெர்மானியப் படையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் எவரும் போருக்கு அழைத்தாலே பயந்து போவார்கள். ஆனால், சர்ச்சில் இளம் வீரர்களை அழைத்தபோது அவர்கள் சந்தோஷமாக தாய் நாட்டிற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய முன்வந்தார்கள். உயிரைத் துச்சமாக மதித்து வீரர்கள் போரிடும் போது ஒரு அசாத்திய வீரம் வெளிப்படும். அதன் காரணமாகத்தானோ என்னவோ ஜெர்மானியப்படை, ஆங்கிலேயர் படைகளைவிட மூன்று மடங்கு பெரியதாக இருந்தபோதிலும், ஜெர்மானிய வீரர்களால் ஆங்கில விமானப்படை தாக்குதலைச் சமாளிக்கவே முடியவில்லை. வந்த வேகத்திலேயே பின்வாங்கினார்கள். இப்படிச் சரணடைந்தால்தான் உயிர் பிழைக்கலாம் என்ற நிலைமாறி, தாக்க வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்ட நேரம் இங்கிலாந்து நாட்டு வரலாற்றிலேயே ஒரு பொன்னான நேரமாகும். ஒரு தேசத்திற்கே பொன்னான நேரம் அமைவதுபேõல தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையிலும் பொன்னான நேரம் அமையத்தான் செய்கிறது. அதுவும் தேசத்தின் வாழ்க்கையில் திருப்புமுனை வரும்போது தனிநபர் வாழ்க்கையிலும் திருப்புமுனைகள் அமையப் பெற்றால் இரண்டும் ஒன்று சேர்ந்து தேசத்திற்கும் சரி, தனிநபருக்கும் சரி பொன்னான நேரமாக அமைந்துவிடும். இப்படி ஒரு பொன்னான நேரத்தைத் தன் வாழ்க்கையில் அனுபவித்தவர்தாம் கேரளத்தில் பிறந்து, இந்திய அரசாங்கத்தில் சிறப்பாகப் பணியாற்றிய V. P. Menon அவர்கள். கேரள மாநிலம் ஒரு சாதாரண மாநிலமே இல்லை. அத்வைதத்தைப் பரப்பிய ஆதிசங்கரர் அந்த மாநிலத்தில்தான் பிறந்தார். சேர நன்னாட்டிளம் பெண்களுடன் தோணிகள் ஓட்டி விளையாடியதாக பாரதியார் பாடியுள்ளார். கேரள மக்களுக்கு ஆங்கில அறிவு அதிகம். ஏழு, எட்டு வகுப்புகள் படித்த பிள்ளைகள்கூட ஆங்கிலம் நன்றாகப் பேசுவார்கள். மலைநாடு என்பதால் விவசாயம் குறைவு. அடுத்தபடியாக வேலை வாய்ப்பும் குறைவு. வெளிமாநிலங்களுக்குப் பிழைப்புத் தேடிச் செல்பவர்கள் அதிகம். இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கே மலையாள நாயர் டீ கடை ஒன்றிருக்கும் என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட மாநிலத்தில்தான் V. P. Menon பிறந்து வளர்ந்தார். ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை முடித்துக் கொண்டு வெளியூருக்குப் பிழைப்பிற்காகச் செல்ல வேண்டிய நிலை. சிறிது காலம் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்தார். பின்னர் அதுவும் பிடிக்காமல் டெல்லிக்குச் சென்றார். அங்கே சாலையில் எதிரில் வருபவரைத் தடுத்து நிறுத்தி, ‘பதினைந்து ரூபாய் கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன், பெரிய மனது வைத்து நிதியுதவி செய்யுங்கள்’ என்று கேட்டார். அவருடைய அதிர்ஷ்டம் யாரைத் தடுத்து நிறுத்தி நிதியுதவி கேட்டாரோ அவரும் தயங்காமல் அந்தப் பதினைந்து ரூபாயைக் கொடுத்தார். அந்த ரூபாயில் அவர் சிம்லா சென்றார். ஒன்பது வகுப்புதான் படித்தவர் எனும்போது அவருக்கு எப்படி அரசாங்க வேலை கிடைத்தது என்று தெரியவில்லை.

சிம்லாவிற்குச் சென்றவர் என்ன செய்தாரோ, ஏது செய்தாரோ ஒன்றும் தெரியவில்லை. எப்படியோ அரசாங்க சர்வீஸில் நுழைந்து விட்டார். அவருக்கு இருந்த ஆங்கிலப் புலமையை நன்றாகப் பயன்படுத்தி அசுர வேகத்தில் அரசாங்கப் பணியில் முன்னேறி I. A. S. Offi cer -ருக்கு இணையாக உயர்ந்தார். ஒரு கட்டத்தில் வைஸ்ராய் பதவியில் இருந்த மௌண்ட்பேட்டன் அவர்களுக்கே காரியதரிசியாகவும், அவருக்குப் பின்னால் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய சர்தார் வல்லபபாய் பட்டேல் அவர்களுக்குக்கூட காரியதரிசியாகவும் செயல்பட்டார். 1947-ஆம் ஆண்டு அக்டோபர் மாத கால கட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பட்டானியர்கள், காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியபோது அம்மாநிலத்தில் அரசனாக இருந்த திரு. ஹரிசிங் அவர்கள் உடனடியாக இந்திய இராணுவ உதவியை நாடினார். ‘இந்தியாவுடன் காஷ்மீர் இணையும் பட்சத்தில் அவ்வுதவியைக் கொடுப்போம். இணைவதா, வேண்டாமா, எது நல்லது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’ என்று மௌண்ட்பேட்டன் அவர்கள் திரு. ஹரிசிங்கிற்குச் செய்தி அனுப்பினார். அந்தச் செய்தியை கொண்டு போனவரே திரு. V. P. மேனன் அவர்கள்தாம். இரவோடு இரவாக காஷ்மீர் மகாராஜாவுடன் அமர்ந்து, நீங்கள் இந்தியாவுடன் இணைவதைத் தவிர வேறுவழியில்லை. தனித்து பாகிஸ்தானை உங்களால் சமாளிக்க முடியாது என்று மகாராஜாவின் மனதில் படும்படி பேசி இந்தியாவுடன் காஷ்மீர் இணைவதற்கான document-களை உடனடியாகத் தயாரித்து அதில் மகாராஜாவின் கையெழுத்துகளையும் உடனடியாக வாங்கி 48 மணிநேரத்தில் காஷ்மீரை இந்தியாவுடன் சேர்த்த பெருமையை அடைந்தவர் V. P. மேனன் ஆவார். இதுமட்டுமின்றி இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இந்தியாவில் சொந்தமாக சமஸ்தானங்கள் வைத்துக் கொண்டு மன்னராட்சி நடத்தி வந்த கிட்டத்தட்ட 540 இந்திய மன்னர்களையெல்லாம் ஒருங்கே சந்தித்து, ‘இந்தியாவுடன் இணைவதுதான் உங்களுக்கு நல்லது. தனித்து செயல்படுவதோ அல்லது பாகிஸ்தானுடன் சேருவதோ நடவாத காரியம்’ என்று அனைவருக்கும் புரியும்படிச் சொல்லி, சிக்கல் இல்லாமல் தகராறு இல்லாமல் காஷ்மீர் மகாராஜா மற்றும் ஹைதராபாத் நிஜாம் ஆகிய இருவரைத் தவிர மற்ற எல்லோரையும் இந்தியாவோடு இணையும் சாசனத்தில் கையெழுத்திட வைத்த பெருமை அவரைத்தான் சேரும்.

தொடரும்...

**********

ஜீவிய மணி
 
விலை மலையையும் மண்ணாக்கும். விலை மதிக்க முடியாத விலை, விதியென சதி செய்யும். பகுதியின் விலை முழுமையின் கொடுமை. முழுமையின் விலை மனிதனுக்குட்பட்ட கர்மம். விலையின் நிர்ணயம் லோக வாழ்வின் நாணயம்.
 



book | by Dr. Radut